am5

am5

ஆசை முகம் 5

 

வாணி முத்துரங்கனுடன் விடுதிக்கு வந்த முதல் தினத்தன்று, “காலேஜ் திறக்க இன்னும் நாளிருக்கே.  வேற எதனா கோர்ஸ் பண்ண வந்திருக்கியா”, என நட்பாய் பேசிட

“இல்லை மேடம்”, பவ்யமாகவே மறுத்தாள் வாணி.

“பின்ன?”

“இனி ஃபுல்லாவே ஹாஸ்டல்தான்!”

ஏதோ சரியில்லை எனப் புரிந்ததுபோலும்.

அதற்குமேல் தோண்டித் துருவாத இந்துமதியின் மீது மதிப்பும், அதன்பின் நேசக்கரமும் ஒருவருக்கொருவர் நீட்டியிருந்தனர் இருவரும்.

பின்புலம், மூலம் எதையும் அறிந்து கொள்ளாமலேயே அக்கறையோடு இருந்த இந்துமதியை வாணிக்குப் பிடித்துப்போனது.

அதனால் அன்று முதல் எழில்வாணி எனும் டோராவின், மேப்பாக மாறிப் போயிருந்தார் இந்துமதி.

அதனால் இந்துமதிக்கு அழைத்தாள் வாணி.

முதலில் அழைப்பை ஏற்காத இந்துமதி, சற்று நேரம் கழித்து அவரே லைனில் வர, அருகே கோவில் ஏதேனும் செல்வதென்றால், எந்தக் கோவில் அருகாமையில் உள்ளது எனக் கேட்டறிந்தாள் வாணி.

என்னவென்று விசாரித்த இந்துமதியிடம் தனது குழப்ப மனநிலையை மேலோட்டமாகக் கூற, “நானும் ஆபிஸ் முடிஞ்சு நேரா அங்க வரேன்.  நீ நான் சொன்ன மாதிரி கிளம்பி அங்க வந்துரு. ரெண்டு பேருமா கோவிலுக்குப் போயிட்டு அப்டியே கொஞ்ச நேரம் பீச்சில நின்னுட்டு வரலாம்”, என ஐடியா தந்திட, வாணியும் சம்மதித்து சந்தோச மனநிலைக்கு தன்னை மாற்றிக் கிளம்பியிருந்தாள்.

,,,,,,,,,,,,,,,,,,

பெசண்ட் நகரில் இடம் ஒன்றைப் பார்க்க, உண்டதுமே கிளம்பி வந்திருந்தான் வேந்தன். வந்தவனை நீண்ட தூரம் காக்க வைத்து அலைக்கழித்த நபர், அதன்பின் சாவகாசமாய் வந்து நான்கைந்து இடங்களை அழைத்துச் சென்று காண்பித்திருந்தார்.

அபார்ட்மெண்ட் எனும்போது சற்று விஸ்தீரமான இடமாக இருந்தால் நன்றாக இருக்கும் என வேந்தன் எதிர்பார்த்து வந்திருக்க, மிகவும் சிறிய இடங்களாகவே வந்தவர் காட்ட, மிகவும் காட்டமாக உணர்ந்தான் வேந்தன்.

ஆனாலும் அதை வெளிக்காட்டாது பொறுமை காத்தான். இறுதியாக ஒரு இடத்தைக் காட்டி கருத்துக் கேட்டிட, அது மனதிற்கு அத்தனை நிறைவைத் தந்திருக்கவில்லை.

“உங்கட்ட பேசும்போது ரொம்பத் தெளிவா சொல்லியிருந்தேனே சார்”, என தனது மனக்குறையை வெளியிட

“நம்ம கைவசம் இருக்கறதுல உங்களுக்குப் பிடிச்சதப் பாருங்க சார்.  இல்லைனா இன்னொரு நாள் வேற எடத்தைக் காமிக்கறேன்!”. என அலட்டிக்கொள்ளாத பதில் வந்தது.

“இதுல அவசரம் ஒன்னுமில்லாம பாக்கணும்.  இடம் புடிச்சுப்போச்சுனாத்தான் மேற்கொண்டு வில்லங்கம் எதாவது இருக்கானு செக் பண்ணணும். இன்னும் நிறைய புரொசீஜர் இருக்கு.  வைகாசில புராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணா, தைல சேலுக்கு யோசிக்கலாம்னு நினைச்சேன்”, என தாடையைத் தடவியவாறே கூறினான் வேந்தன்.

சில விசயங்களை யாரையும் நம்பி ஒப்படைக்க மாட்டான்.  தனது நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இருந்தாலும், உறவினராக இருந்தாலும், சகோதர, சகோதரி வழிச் சொந்தங்களானாலும், தொழிலில் அதைக் கொண்டு வரமாட்டான்.

அதனால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, நிறைவாய்த் தோன்றினால் மட்டுமே அடுத்த கட்டப் பணியைத் துவங்கலாம் என்கிற நிலை.

இல்லையென்றால் வாங்கிப் போடப்பட்டிருக்கும் வேறு இடங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொண்டு என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும் என சிந்தித்தவாறு இருந்தவனிடம்

“ரொம்ப யோசிக்கீறீங்க சார்”

“இல்லைனா இந்த பிஸினெஸ் நடுத்தெருவுக்கு கொண்டு வந்திரும்”

“அப்டியெல்லாம் செய்வோமா சார்”

“யாரும் வேணுனு செய்யறதில்லை.  கொஞ்சம் கவனக் குறைவும் பெரிய பிரச்சனையில கொண்டு வந்து விட்ரும்.  அதனாலதான் நானே எல்லா இடத்தையும் நேருல வந்து பாக்கற மாதிரி இருக்கு”

“கண்டிப்பா சீக்கிரமா அமையும் சார்”

“எங்க இன்னைக்கு அரைநாள் அலைஞ்சதுல ஒன்னுமே செட்டாகலையே”

“எல்லாம் ஆகும் சார்”

“நேரமாச்சு.  வேற எதாவது இருந்தா இன்னொரு நாள் வந்து பாக்கறேன்”, என வேந்தன் விடைபெற்றிட எண்ண

“வந்தது வந்துட்டீங்க.  பக்கத்திலதான் அஷ்டலெட்சுமி கோவில்.  நான் அங்கதான் அடுத்தாப்புல போறேன்.  நீங்களும் அப்டியே வந்துட்டுப் போங்க சார்”, என வேந்தனை சலுகையோடு அழைக்க

அஷ்டலெட்சுமி கோவிலுக்கு என்றதும், “அடுத்து எனக்கு இன்னொரு வேலை இருக்கு”, எனத் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துத் தயங்கியவனை, “வாங்க  சார்.  இன்னைக்கு ஒரு நாளைக்குத்தான! தினமுமா எங்கூட கோவிலுக்கு வரப் போறீங்க!  ரொம்பப் பக்கந்தான்!”, என்றிட

“நான் போயிருக்கேன்!”, வேந்தன்

“அதனாலென்ன! எங்கூட ஒரு முறை கோவிலுக்கு வந்துட்டு வாங்க! நீங்க நினைச்ச மாதிரி நல்ல இடமா இந்தப் பக்கத்திலயே அமையும் பாருங்க!”, என்ற அவரது இனிப்பான ஆசை வார்த்தையில், மறுக்க இயலாது அரைமனதாக கிளம்பி வந்திருந்தான் வேந்தன்.

தொழில் என்று வந்துவிட்டால் நிறைய பொறுமை அவசியம்.  அதனால் பல்லைக் கடித்துப் பொறுமை காத்த வேந்தனுக்கு நீண்ட நாள் தேடுதலுக்கு தன் கண்ணையே நம்ப முடியாத நிகழ்வு ஒன்று அங்கு காத்திருந்தது.

//////////////

இந்துமதி கூறிய பேருந்து வழித்தடத்தில் வாணி சென்று குறிப்பிட்ட இடம் வந்ததும் இறங்கவும், இந்துமதி அவளுக்காக அங்கு காத்திருந்தார்.

சுற்றிலும் திரும்பிப் பார்த்தாள்.  விடுமுறை தினம் என்பதால் கோவிலைவிட, அருகே இருந்து பீச்சை நோக்கி ஒரு கூட்டம் அலைமோதியது.

இருவருமாக முதலில் கோவிலுக்குள் சென்று தரிசனம் முடித்து வருவதற்கே ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

“அப்டியே பீச்சுக்கு போயிட்டுப் போவோம்!”, இந்துமதி

“கண்டிப்பா.  கோவில்ல கொஞ்ச நேரம் உக்காந்திருந்திட்டு அப்டியே பீச்சுக்கு போகலாம்”, என ஆமோதித்தவள் பிரகாரத்தில் ஓரிடத்தில் சென்று அமர்ந்தாள்.

பாட்டி இருக்கும்வரை தொடர்ந்த பழக்கம். அவரது மறைவிற்குப்பின் அப்டியே நின்றிருந்தது. நீண்ட நாளுக்குப் பிறகு நிறைவான தரிசனம்.

பெண் ஆலயத்திற்குள் நுழைந்தது முதலே தங்களையே கவனித்துக் கொண்டிருந்த விழிகளுக்குச் சொந்தக்காரனை கவனிக்க இயலாத நிலையில் வந்த வேலையில் கவனம் செலுத்தியிருந்தனர்.

///////////////

வேந்தனோடு வந்தவர் கோவிலுக்குள் அழைக்க, இல்லை நீங்க போயிட்டு வாங்க.  நான் வயிட் பண்ணறேன்”, என காருக்குள்ளேயே அமர்ந்துவிட

‘இப்டி வெளியில இருக்கறதுக்கு அப்டியே போயிட்டுருந்திருக்கலாம்’, என உடன் வந்தவன் நினைத்தபடியே

“சரி, நான் உடனே சாமி கும்பிட்டு வந்திரேன் சார்”, என உள்ளே சென்றிட, அலைபேசியில் கவனம் செலுத்தியிருந்தான் வேந்தன்.

அப்போது வந்த பேருந்து சந்தத்தில் நிமிர்ந்தவன், அதிதிலிருந்து இறங்கியவளைக் கண்டு நம்ப முடியாமல், தானறியாமலேயே வண்டியில் இருந்து கீழே இறங்கியிருந்தான்.

திருப்தியாய் தரிசனம் முடித்துத் திரும்பிவந்து உடன் வந்தவன் அழைக்கும் வரை ஆராய்ச்சியில் நின்றிருந்தான் வேந்தன்.

………

கூலரை கழட்டிவிட்டு தன்னை நிதானித்து உண்மையில் அவளா? என்று பார்த்துவிட்டு, மீண்டும் மாட்டிக் கொண்ட வேந்தனை, இந்துமதியும், வாணியும் கவனிக்கவில்லை.

பெண்ணது சாயலைக் கண்டதுமே மனம் பைசா நகரத்துக் கோபுரம்போல செல்பவளின் பின்னே சாய்ந்திருக்க, சுதாரித்தவன் தனது கூலரை மாட்டிக் கொண்டே, அவள் சென்ற திசையில் விழியால் தொடர்ந்தான்.

சற்று தூரத்தில் தெரிந்த உருவம், அஷ்டலெட்சுமிகளைச் சுற்றி வரும்போது, சற்று தெரிவதும், மறைவதுமாய் இருந்த செய்கை, உண்மையிலேயே சிறுவயதில் விளையாண்ட கண்ணாமூச்சி விளையாட்டை நினைவுறுத்தியது என்னவோ உண்மை.

சளைக்காமல் காத்திருந்தான்.

வருடங்கள் காத்திருந்தவனுக்கு, இது ஒன்றுமேயில்லை என்கிற எண்ணம்தான்.

மதியம்போல தாய் விளையாட்டாய் கூறும்போதுகூட,  நடக்கும் என்று தோன்றியிருக்கவில்லை.

விசயம் நடந்தபோது, நம்ப முடியாத நிலைதான். அதே சாயல், ஆனால் சற்று கூடுதல் உயரம். நிறம்கூட கூடுதலாகவே உணர்ந்தான். முடி ஏறத்தாழ அதேபோல நீண்டு கருமையாகவே காட்சியளித்தது.

எட்டு வித்தியாசத்திற்கு வாய்ப்பில்லை.

ஆனால் ஆடை உடுத்தியிருக்கும் பாங்கு, நிச்சயம் பெண் சென்னைக்குப் புதிது என்பதை கூறாமல் கூறியிருந்தது.

அறைத் தோழிகள் இருவரும் கோவிலை விட்டு, பீச்சை நோக்கி நடக்கத் துவங்கினர்.

அதேநேரம், ‘காருக்குள்ள உக்காந்திருந்தவரு அப்டி என்னத்தை பாத்திட்டு நிக்குறாரு’, என எண்ணியபடியே, “சார் கிளம்புவோமா!”, எனக் கேட்டபடி அருகே வந்து நின்றிருந்தார்.

“நீங்க கிளம்புங்க! நான் கொஞ்ச நேரம் பீச்ல நின்னுட்டு கிளம்பறேன்”, என நகர்ந்திட

வித்தியாசமாகப் பார்த்தான் உடன் வந்தவன்.  ‘இவ்வளவு நேரம் வெளியில நின்னிட்டு இருந்ததுக்கு பேசாம அங்க போயி நின்னிருந்திருக்கலாமே’, என்றது அவரது பார்வை.

வேந்தன் இருக்கும் மனநிலையில் எதையும் யோசிக்கத் தோன்றவில்லை. எப்படியோ தன்னை தனித்து விட்டால் சரி என்பது மட்டுமே.

“நீங்களும் வரீங்களா?”, என ஒப்புக்கு வேந்தன் கேட்க

“இல்லை சார்.  இன்னொரு தபா சேந்து போலாம். இப்ப நாங்கிளம்பறேன்”, என்று கிளம்பியிருந்தார்.

அதன்பின் நிதானமாக கடற்கரையோரம் சென்ற வேந்தனுக்கு, அடர்நீல வண்ணத்தில் ஆங்காங்கே கண்ணாடி பதிக்கப்பட்டு அதைச் சுற்றி ஆரஞ்சு வண்ணத்தில் எம்ப்ராய்டரியில் பூக்கள் போடப்பட்ட டாப்பும், ஆரஞ்சு நிற பேண்ட்டும், அதே நிறத்தில் ஷாலும் அணிந்து பளிச்செனத் தெரிந்தவளை விரைவிலேயே அடையாளம் கண்டு கொண்டான்.

சற்று தூரத்தில் நின்றபடியே தனது கையில் இருந்த அலைபேசியினை எடுத்தவன், பீச்சை ரசிப்பதுபோல பெண்ணை படமெடுத்திருந்தான்.

மனம் தேடியவளோடு, உடன் வந்திருந்த பெண்மணி கடற்கரையில் கையை நீட்டிக் காட்டி ஏதோ பேசிட, அதை ஆமோதிப்பதும், அடுத்து ஏதோ கேட்பதுமாய், பிறகு சற்று தூரம் நடப்பதுமாய் பெண்கள் இருவரும் இருந்தார்கள்.

தெவிட்டாத தித்திப்பான மாலை வேளை வேந்தனுக்கு!

இந்துமதியோடு, அவள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கத் திரும்பிய வேளையில் எழில்வாணியை அலைபேசியில் படம் எடுத்திருந்தான். ஒரு பக்கமாக திரும்பி இருந்தபடி இருந்த தனது வாழ்நாளின் உந்துகோலாக இருந்தவளின் அந்தப் படம் நன்கு வந்திருந்தது.

சற்று நேரத்தில் இருவரும் பேருந்தில் கிளம்பிவிட, தானும் இடைவெளிவிட்டு தொடர்ந்தான் வேந்தன்.

மகிழ்ச்சியில் உடனே மீராவுக்கு அழைத்தான்.

மீரா பள்ளிப் பருவத்து முதலே வேந்தனோடு பயின்றவள்.  ஆகையினால் மற்ற பெண்களைவிட உரிமையோடு பேசிக் கொள்வான்.

மனதில் உண்டான மகிழ்ச்சியில், உல்லாச எண்ணம் தோன்றியிருக்க, யாரிடமாவது பேசவேண்டும்போல இருந்தது.

பெண்டிங் இருந்த பணிகளில் அலைபேசியில் செய்துவிடக்கூடியதை நினைவுக்கு கொண்டு வந்தவன், முதலில் மீராவிற்கு அழைத்துவிட்டான்.

“இந்த வகேசனுக்கு எங்கனு டிசைட் பண்ணிச் சொல்லுங்க. டேட் சொன்னா டிக்கெட் போட்ருவேன்”, என வேந்தனது குரல் கேட்டவளுக்கு, பதில் பேசுமுன் துண்டிக்கப்பட்ட அழைப்பு கேலி செய்தாற்போலிருந்தது.

அதைப்பற்றிய எந்த லஜ்ஜையுமின்றி, அடுத்தடுத்து சில பணிகளை உரியவர்களுக்கு அழைத்துப் பணித்தபடியே வண்டியில் பின்தொடர்ந்தான்.

மீரா அழைத்துப் பார்த்துவிட்டு, இது எப்போதும் நடப்பதுதான் என அடுத்தகட்டப் பணியைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.

தலைக்கு மேலே வேலைகள் கிடக்க, அனைத்தையும் இத்தனை நேரம் கிடப்பில் போட்டுவிட்டு, இந்த மாலை வேளையில் இப்படி மாறுவான் என யார் வந்து கூறியிருந்தாலும், வேந்தனை அறிந்தவர்கள் மட்டுமல்லாது, அவனே நம்பியிருக்க மாட்டான்.  தான் அப்டிச் செய்பவனல்ல என்று.

ஆனால் எல்லாம் மாறி, முறை மீறிப் போய்க் கொண்டிருந்ததோ!

இதழில் எப்போதும் குடிகொண்டிருந்த புன்னகைக்கு உயிர்ப்பு மேலும் கூடியிருக்க வசீகரம் வந்திருந்தது.

இதழுக்கு மேலே இருந்த மீசையின் நுனியை சற்றே முறுக்கி கார் கண்ணாடியில் சரி செய்தான்.

வேந்தனது உருவம் அவனுக்கே சிரிப்பைத் தந்தது.

‘டீனேஜர் மாதிரி என்னடா வேந்தா’, எனத் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

ஆனாலும் சிரிப்பு பீறிட்டு வந்தது.

அது மிகையாய் எழுந்த சந்தோசத்தால் அலைபோல  மேலெழுந்து வந்தது.

தொடர்ந்து பின்னே வர இயலா நிலை.  ஆனாலும் விடுதிக்கருகே இருந்த நிறுத்தத்தில் இறங்கியவளை சற்று தூரத்தில் வண்டிக்குள் இருந்தபடியே பார்த்தான்.

இருவருமாக விடுதிக்குள் சென்றதைப் பார்த்தபிறகே அடுத்த பணிகளில் கவனத்தைச் செலுத்த இயன்றது வேந்தனால்.

இவள் யார்?

எங்கிருந்தாள்?

எங்கிருந்து வந்திருக்கிறாள்?

எவ்வளவு நாளாக இங்கிருக்கிறாள்?

எப்டி அச்சு அசலாக ஒருத்தியைப் போல இன்னொருத்தி?

ஏழு பேர் ஒரே மாதிரியாக இருப்பது உண்மைதானோ?

அல்லது, உறவினர்களாக இருக்கக் கூடுமோ?

பணி புரிகிறாளா?

எங்கு?

கேள்விகள் குன்றுபோலக் குவிந்து, மனம் குமைந்தது.

இரவு உணவிற்கு அமர்ந்தவனுக்கு உணவில் நாட்டமில்லை.  நினைவுகள் மாலை வேளையில் சந்தித்தவளோடு, இணைந்திருக்க மகனின் செயலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து பார்த்திருந்தார்.

‘என்னாச்சு.  வயசிலகூட பய இப்டி இருந்தது இல்லையே’, என அனுசியா பார்த்திருந்ததை வேந்தன் கவனிக்கவே இல்லை.

ஒரே யோசனை!

தனது தளத்திற்கு வந்தவன், கையில் இருந்த அலைபேசியை எடுத்து பெண்ணை சூம் செய்து பார்ப்பதும், யோசிப்பதுமாய்!

இரவு உறங்கா இரவாகிப் போயிருந்தது.

அங்கிருந்த படங்களில் இன்று எடுத்ததுடன் சில ஒப்பீடு!

படுக்கையில் படுத்தபடி! புத்தகத்தோடு அமர்ந்தபடி! பாலைக் காய்ச்சியபடி! நின்றபடியே! டைனிங்கில் அமர்ந்து தலையைத் தாங்கியபடி! பால்கனியில் நின்றபடி! அங்கிருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்தபடி! அறையைச் சுற்றி வந்தபடியே! ட்ரட்மில்லில் ஓடியபடி! குளியலறையில் யோசித்தபடி! மறுநாள் விடிந்திருந்தது.

தனது ஒரே நோக்கம் அவள் யார்? எங்கிருந்து வந்திருக்கிறாள்? எதற்காக வந்திருக்கிறாள்? பெயர் என்னவாக இருக்கும்? அணுகலாமா? சரியென்றால், எவ்வாறு அணுகுவது?

என்னை ஒரு பொருட்டாக நினைக்க என்ன செய்ய வேண்டும்?

இப்படி கலவையான எண்ணங்கள்!

நிச்சயம் அதில் கவலையில்லை!

கலைந்து போன நினைவுகள் மட்டுமே பல வண்ணங்களில் மீந்திருந்தது!

ஆணுக்கு வயது ஒரு பொருட்டே அல்ல! வாலிபமும் அதற்கு அவசியமே இல்லை! நினைத்தால் போதும்!

பெண்ணை அறிய ஆசைப்பட்டால், அது நிறைவேறும்வரை, வேறு எதையும் சிந்திக்கத் தோன்றாத சிங்கங்கள்!

தன்வசம்  பெண் வரும்வரை, சிந்தை முழுவதிலும் அவளே!

பெண் வசப்பட்டுப் போனால், மீண்டிடுவான் பழைய நிலைக்கு!

அதே நிலைதான் தற்போது வேந்தனுக்கும்!

ஆனால் வசப்பட்டாலும் மீளுவானா என்பது வேந்தனது விசயத்தில் கணிக்க முடியாத நிலை!

தனிப்பிறவியாக அல்லவா இருக்கிறான்!

எதையும் அறியாதவள் விடுதி அறையில் இயல்பாய் இளைப்பாறியிருந்தாள்!

நுண்கலை சார்ந்து மேற்படி மேற்கொள்ள வேண்டியதைப் பற்றி தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தாள்.

ஆனால் வேந்தன்! முடிவுக்கு வர முயன்று கொண்டிருந்தான்!

பெண்ணைப் பற்றிய விசயங்களை சேகரிக்க முடிவு செய்துவிட்டான்.

மறந்து போனதாய் எண்ணியிருந்த உணர்வுகள், உயிரோட்டம் பெற்றிருக்க, உல்லாசமாகவே கிளம்பியிருந்தான்.

உல்லாசம் தொடருமா?

—————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!