அன்றைய நிகழ்வு அதீத மகிழ்ச்சியைத் தந்திருக்க, பெண் பற்றிய தகவல்களை எண்ணிப் பார்த்தபடியே வந்தவனுக்குள் குழப்பம் கூடுகட்டி மண்டையைக் குடைந்தது.
இத்தனை நாள்கள் இருந்த மனநிலை, பெண்ணிடம் பேசி சில விசயங்களைத் தெரிந்து கொண்டதும் சற்றே மாறத் துவங்கியிருந்தது.
தன்னைவிட வயதில் பாதி குறைந்தவள்.
சிறுபெண்!
நினைப்பிலேயே நெருடல் வந்திருந்தது!
ஆசை முகம் தனக்கு உத்வேகத்தைத் தந்திட்டாலும், அதை தன் வசமாக்கிக் கொள்ள நினைத்தது தவறு என்கிற எண்ணம் நிலைத்திருந்தது.
தோல்வி கண்ட மனம் துவண்டது!
முடிவெடுத்தாலும், அதை ஏற்க முடியாமல் மனம் முரண்டியது!
ஆசை முகம், இனி தரிசனத்திற்கு மட்டுமே!
உடமையாக்கிக் கொள்ளும் எண்ணம் இனி வரவே கூடாது!
அவளை தனது அமைதிக்காக தேடிச் சென்று பார்ப்பதாக இருந்தாலும், உத்வேகத்திற்காகக் காணச் சென்றாலும், துவண்ட மனதை மீட்க சந்தித்துக் கொண்டாலும், அது எந்த விதத்திலும் பெண்ணை, பெண்ணது எதிர்காலத்தை பாதித்து விடக்கூடாது என்பதுதான் அது.
அந்த நினைப்பு வந்தவுடனே ஏனோ சோர்வு வந்தாற் போலிருந்தது.
எதுவும் தனக்கு கைகூடக் கூடாது என்பது விதியோ எனச் சோர்ந்தான்!
அடுத்த கிளைக்குச் செல்லும் வேந்தனது எண்ணம் சட்டென மாறியிருந்தது.
இதே மனநிலையில் தன்னால் மேற்கொண்டு வேலையில் கவனம் செலுத்த இயலாது எனும் நிலை புரிய, வண்டியை வீட்டை நோக்கித் திருப்பினான்.
இந்த நேரத்தில் அவன் வீடு திரும்பியதே இல்லை.
வேந்தனது வண்டியைக் கண்டதும் அனுசியா யோசனையோடு வெளியே வந்திருந்தார்.
வீட்டிற்கு திரும்பியவனை, “என்னப்பா இந்நேரத்தில”, எனும் அனுசியாவின் கேள்விக்குகூட நின்று பதிலளிக்கவில்லை வேந்தன்.
“கொஞ்சம் ரிலாஸ் பண்றேன்மா”, என அறைக்குள் நுழைந்தவன் அங்கிருக்கப் பிடிக்காமல் தனது தளத்திற்குச் சென்று விட்டான்.
பெற்ற மனம் பதறியது.
‘கடவுளே, சீக்கிரமா அவனுக்கு ஏத்தமாதிரி ஒரு பொண்ணை என் கண்ணுல காட்டுப்பா. எம்புள்ளைக்கு ஆறுதல் சொல்லவும், இப்டித் துவண்டு போயி வரும்போது தாங்கிக்கவும் ஒரு தோள் வேணாமா! எம்புள்ளை மேல கருணை காட்டு ஆண்டவா!’, என அனுசியாவின் மனம் இறைவனிடம் மன்றாடியது.
வேந்தனுக்குள் இன்னும் நிறைய கேள்விகள்?
வாணியைத் தொந்திரவு செய்யாமல் ஒதுங்கியிருக்க எண்ணியபோதும், சிலவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆவல் மிகுந்திருந்தது.
தான் கல்லூரியில் படிக்கும்போது கண்ட பெண்ணுக்கும், தற்போது பார்த்த பெண்ணிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
வாணி திண்டிவனம்.
அவளை சேலத்தில் படிக்கும்போது வேந்தன் சந்தித்தது.
இருவரும் உறவாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், அடுத்து காணும்போது வாணியின் தாய், தந்தையின் பெயரைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டான்.
முதலாமாண்டு படிக்கும்போது ஒரு சில நாள்கள் மட்டுமே அவளை கல்லூரியில் பார்த்தது.
அனுசியா பிறந்தது சேலம். அவரின் தாய் வீட்டில் தங்கித்தான் வேந்தன் படித்திருந்தான்.
இன்று வாணியுடன் பேசிய அளவிற்குகூட அவளோடு தான் பேசியது இல்லை என்பது நினைவில் வந்து போனது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அதேபோன்ற தோற்றத்தில் வேறொருத்தியை சந்திப்போம் என வேந்தன் நினைத்துப் பார்த்ததில்லை.
ஆனால் நடந்தது!
அது இன்னும் ஆச்சர்யம்தான்!
ஆனால் உண்மையல்லவா!
நடை கூட அதேதான் என மனம் சொன்னது.
கடந்து போனவள் விட்டுச் சென்றிருந்த தடயங்கள் இன்னும் முழுமையாக ஆறாமல், காயங்களாகவே இருக்க, வாணியைக் கொண்டு சரிசெய்துவிடும் நோக்கில்தான் இதுவரை பின்தொடர்ந்திருந்தான்.
ஆனால் இன்று அவளின் வாய்மொழியாகவே வயதைத் தெரிந்து கொண்டபின் மிகுந்த தயக்கம் வந்திருந்தது.
இன்னொன்றும் நினைவில் வந்தது.
படிப்பைத் தொடர இயலாமல் விட்டுச் செல்லும் நிலைக்கு அப்பெண் ஆளானதற்கு மறைமுகமாக தானும் ஒரு காரணமோ என குற்றவுணர்வு வேந்தனுக்கு இப்போதுவரை இருந்தது.
தற்போதும் அவ்விசயம் மனதில் தோன்றிட, வாணிக்கும் அதே நிலையை தந்துவிடக் கூடாது என எண்ணினான். அதைப்பற்றி யோசித்ததுமே தலையை வலிப்பது போன்றிருந்தது.
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன், நடந்த எதையும் இனி மாற்ற இயலாது எனும் உண்மை சுட, அதைவிட்டு வெளிவர முயன்றான்.
அதேசமயம், மீண்டும் ஒரு முறை அதே தவறைச் செய்து, வாணிக்கும் அதே நிலையை அறியாமல்கூட தந்துவிடக்கூடாது என தீர்மானமாக எண்ணினான்.
வாணி இலகுவாகத் தன்னிடம் பேசினாலும், நெருக்கம் உண்டாகக்கூடிய நிலைக்கோ, வேறு பாதிப்போ ஏற்படாத வகையில் நடந்து கொள்ள முடிவு செய்தான். இயன்றவரையில் நேரில் சந்திப்பதை தவிர்க்க எண்ணினான்.
வாணியைத் தவிர்க்க வேண்டும் என எண்ணியதுமே, மனம் தவித்திட, குரங்கு மனதின் மன்றாடலில், சந்திப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என மாற்றி, இதயத்திற்கு இதம் தந்தான்.
ஆசை முகத்தை பார்க்காமல் தன்னால் இருக்க இயலுமா?
பதினேழு ஆண்டுகள் பார்க்காமல் கடந்தவன்தான்.
ஆனால் வாணியைக் கண்டது முதல் அவனறியாமல் பின்னோடு போகும் மனதை தடுக்க இயலாமல் தடுமாறினான். ஆகையினால் அப்படி இருக்க இயலுமா எனத் தெரியவில்லை.
காலம்தான் அதற்கான பதிலை வைத்திருந்தது.
பெண்ணை எவ்விதத்திலும் பாதிக்காமல், அவளறியாமல் பார்ப்பதோடு மனதை வேறெந்த எதிர்பார்ப்புகளுக்கும் இடையே தத்தளிக்கும்படி விட்டுவிடக்கூடாது என முடிவெடுத்தான்.
தனது பொழுதுகளை வண்ணமயமாக்க வந்தவளாக எண்ணியிருந்தவன், இனி அப்டியொரு எண்ணத்தை வளர்க்கக் கூடாது எனும் முடிவோடு, பெண்ணது புகைப்படத்தையே பார்த்திருந்தான்.
நேரம் சென்றது.
வாணியின் குறுஞ்செய்திக்காக காத்திருந்தான்.
சென்னையில் கூட்ட நெரிசல், வாகன நெரிசல் எல்லாம் மனதில் வர, இன்னும் தனது பொறுமையை இழுத்துப் பிடித்தான்.
பெண் விடுதிக்குச் சென்றதும் செய்தி அனுப்புவாள் என்கிற எதிர்பார்ப்பு தனது அனைத்து செல்களிலும் ஊடுருவி காத்திருக்க அடிக்கொரு தரம் நேரம் பார்த்தான்.
ஆனால் பெண்ணிடமிருந்து எதுவும் வரவே இல்லை.
நேரம் செல்லச் செல்ல மனம் நிலையில் இல்லாமல் தவித்தது.
இரவின் துவக்கம் தொடங்கியிருக்க, ‘இன்னுமா போகாம இருப்பா!’, என தனைமீறி பதற்றம் வந்தது.
விடுதிக்குச் சென்று நேரில் பார்க்கலாமா என்கிற எண்ணத்தை கட்டுப்படுத்தியபடி யோசித்தான்.
இதுவரை தான் எடுத்திருந்த தனது தீர்மானங்கள் அனைத்தும் தவிடு பொடியாகப் போவதை இன்னும் வேந்தன் உணரவில்லை.
நேரம் செல்லச் செல்ல உணர்ச்சிப் பிளம்பாக மாறிக் கொண்டிருந்தான்.
///////////
எழில் விடுதிக்குத் திரும்ப எண்ணி பேருந்தில் வரும்வழியில் இந்துமதியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது.
முதல் அழைப்பு பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலில் வாணியின் கவனத்திற்கு வரவில்லை.
அடுத்த அழைப்பில் எடுத்தவள், இரண்டு நாள்களாகவே சுரம் காரணமாக அறையில் இருந்தவர், இன்று அலுவலகம் சென்றது நினைவில் வர அவசரமாக எடுத்துப் பேசினாள்.
இந்துமதிக்கு உடல்நலம் மேலும் குன்றியிருப்பதால் மதியத்திற்கு மேல் மருத்துவமனைக்கு வந்ததாகவும், உடல் பலவீனமாக இருப்பதைப் பார்த்த மருத்துவர் ட்ரிப்ஸ் போட்டபின், வீட்டிற்குச் செல்லலாமா அல்லது அங்கேயே தங்க வேண்டுமா என்பது பற்றித் தெரிவிப்பதாகவும் கூறியதை வாணியிடம் தெரிவித்தவள், “டோக்கன் போட்டுமே இவ்வளோ லேட்டாயிருச்சு வாணி. இப்பத்தான் ட்ரிப்ஸ் போட்ருக்காங்க. இது முடியவே லேட்டாகும்போல. அதுக்கப்பறமா நான் இந்த ஹெல்த்தோட அங்க கிளம்பி வரதுக்கு, இன்னிக்கு ஒரு நாள் தங்கிட்டு நாளைக்கு வரேன். நீ தேடுவன்னுதான் போன் பண்ணேன்”, என்றதுமே, மருத்துவனை விபரம் கேட்டுக் கொண்டாள்.
அனைத்தும் மறந்து போனது. இந்துமதி மட்டுமே மனதில் இருந்தாள்.
விடுதிக்குச் சென்றவள், கொண்டாட்ட உடையை மாற்றிக் கொண்டு, இந்துமதி உடல்நல விசயத்தை விடுதியில் தெரிவித்ததோடு, சில அவசிய பொருள்களை விடுதியில் இருந்து எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்திருந்தாள் வாணி.
இந்துமதியில் உடல்நிலையைக் கேட்டது முதலே எதுவும் நினைவில் வரவில்லை. வேந்தனிடம் தான் கூறியது எல்லாம் மறந்து போயிருந்தது வாணிக்கு.
“தனியா வந்து ஏன்கா இப்டி ரிஸ்க் எடுக்கறீங்க? எங்கிட்ட சொல்லியிருந்தா நான் வந்திருப்பேன்ல!”
“இல்லடா! ஆபிஸ் கொலீக் கூட வந்தாங்க! இப்பதான் கிளம்பினாங்க!”, என சோர்வாக உரைத்தாள் இந்துமதி.
இந்துமதிக்கு வேண்டியதைப் பார்த்து பார்த்துச் செய்தாள்.
வாணிக்கு தன்னைப்போல ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களின் நிலை தெளிவாகவே புரிந்து வைத்திருந்தாள்.
அதனால் தானாகவே வலியச் சென்று தன்னாலான உதவிகளைச் செய்து பழகியிருந்தாள்.
எதிர்பார்த்து என்று கூற முடியாது. தான் உதவியவர்கள் உதவாதபோதும், வேறு யாரேனும் இக்கட்டில் உதவுவார்கள் என்கிற மனப்போக்கு அது.
இந்துமதியுடனான ஆறு மாத கால பழக்கம் அவளை அப்படித் தனியே விட மனம் வரவில்லை.
அதனால் இந்துமதி மறுத்தும், இரவு மருத்துவமனைக்குச் சென்று அவளுடன் தங்கிக் கொண்டாள்.
மாலை வரை இருந்த கொண்டாட்டங்கள் அப்போது நினைவிலில்லை. முழுவதும் இந்துமதி பற்றி சிந்தனை மட்டுமே.
மருத்துவர் கூறிய மருந்துகளை வாங்கி வந்தாள். இரவு உணவையும் வாங்கி வந்து உண்ணச் செய்து மருந்துகளைக் கொடுத்தாள்.
சற்றுநேரம் பேசியிருந்தவள், அன்றைய அலைச்சலில் படுத்ததும் உறங்கியிருந்தாள் வாணி.
குறிப்பாக அலைபேசியை அவசியத்திற்குக்கூட எடுக்க முடியாத அளவிற்கு நேரம் சென்றிருந்தது.
//////////////
வேந்தனுக்கு வேதனையான இரவாகிப் போயிருந்தது.
வாணியைப் பற்றிய யோசனைதான்.
செய்தி அனுப்ப மறந்து விட்டாளா?
நிச்சயமாக மறந்திருந்தால் பிரச்சனையில்லை.
அலட்சியம் செய்திருந்தாலும் ஒன்றுமில்லை!
ஆனால் ஏதேனும் பிரச்சனையில் மாட்டியிருந்தால்… விடுதிக்குச் செல்லத் தெரியாமல் பாதை மாறி எங்கேனும் வழி தவறியிருந்தால்…
இப்படி எண்ணம் எங்கெங்கோ செல்ல அமைதியை முற்றிலும் தொலைத்திருந்தான்.
விடுதியின் பெயரை இணையத்தில் தேடி எடுத்தான். அழைக்க தயக்கமாக இருந்தது.
உறவுக்காரப் பெண் என்றாலும் அவளுடைய எண்ணுக்கு அழைத்துப் பேசாமல், இங்கே எதற்காக அழைத்தீர்கள் என்று கேட்டால்.
அழைப்பு செல்லவில்லை என்று கூறலாமா?
நேரம் பார்த்தான்.
மணி ஒன்பதாகியிருந்தது.
சற்று முன் அலைபேசி எண் கிடைத்திருந்தால் அழைத்திருக்கலாம்.
இந்த நேரத்தில் வேண்டாமென முடிவு செய்தான்.
பெண் என்றால் ஒன்றுமில்லை.
இந்த நேரத்தில் ஒரு ஆடவன் அழைத்தால் பெண்ணைப் பற்றி என்ன நினைக்கத் தோன்றும்.
வேண்டாம் என விட்டுவிட்டான்.
பெண் உண்மையில் விடுதிக்குச் சென்றாளா? இல்லை இடையில் ஏதும் பிரச்சனையா? அதைப் பற்றிய யோசனையிலேயே படுத்தாலும், உறக்கம் இரக்கமின்றி வெகுதூரம் அவனை விட்டுச் சென்றிருந்தது.
இந்த பிரச்சனைக்கு நேரமாகியிருந்தாலும், அப்போது நீ பேசியே இருக்கலாம் என மனம் சாடியது.
இனி அதைப்பற்றி யோசிக்கக் கூடாது.
விடிய விடிய யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
நேரில் சென்று வாணியை விடுதியில் பார்த்துவிடுவது என்பதுதான் அது!
அது மட்டுமே அவனுக்கான சிறந்த ஆறுதல்!
பெண்கள் விடுதி என்பது நினைவில் வந்ததும், தான் மட்டும் தனித்துச் சென்றால் அது பிரச்சனையாகக்கூடும் எனத் தோன்றியது.
அனுசியாவை அழைத்தால், இன்று இருக்கும் நிலைக்கு வேறு மாதிரியான கேள்விகள் வரும்.
அதைவேறு சமாளிக்க வேண்டும்.
என்ன செய்யலாம் என விடியல் வரை யோசித்து, இறுதியாக மீரா நினைவு வந்தது.
அவள்தான் இதற்கு சரியான ஆள்.
மீராவிற்கு டெக்ஸ்ட் செய்தான்.
எழுந்ததும் வழக்கமாக மீரா மொபைல் பார்ப்பாள் என வேந்தனுக்குத் தெரியும்.
தனக்கு மீராவால் ஒரு அவசர உதவி வேண்டும் என்று செய்தியை அனுப்பிவிட்டு வழக்கத்திற்கு முன்பே வீட்டை விட்டுக் கிளம்பியிருந்தான்.
பதினைந்து நிமிடங்களில் மீரா அழைத்து, என்னவென வேந்தனிடம் விசாரிக்க, தனக்கு மீராவால் ஒரு உதவி அதனால் தற்போது தன்னுடன் வெளியே வரவேண்டும் என்று கூறினான்.
இன்று அவனாகவே உதவி என்று கேட்டதும், “என்னடா என்னாச்சு”, எனப் பதறினாள்.
அனுசியாவிற்கு உடம்பிற்கு ஏதும் என அஞ்சிக் கேட்டாள்.
“வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்க”
“அப்ப வேற என்ன விசயம்?”
“இப்ப பேச நேரமில்லை. நான் வந்துட்ருக்கேன், நேருல சொல்றேன்”, என்றவன்,
இதுவரை வேந்தன்தான், அனைவருக்கும் எதாவது தேவை என்றாலோ, வேறு எந்தப் பிரச்சனை என்றாலும் ஊரில் இருந்தால் முதல் நபராக வந்து நிற்பான்.
அப்படிப்பட்டவன் என்பதால் மீரா மறுக்க யோசிக்கவே இல்லை.
வேந்தனது பதற்றம் மீராவைத் தொற்றிக் கொண்டது.
வேந்தனுக்கு விடுதியில் சென்று பெண்ணைப் பார்த்தால் மட்டுமே நிம்மதி என்கிற நிலை.
சற்று நேரம் பேசினாலும், சென்னையில் அவளுக்கு எந்த இடமும் தெரியவில்லை என்பது புரிந்திருந்தது.
வாணியின் வயதுப் பெண்கள் சட்டென யாரையும் நம்ப முடியாத நகரம் இது!
யோசியாது வந்து தன்னிடம் கேட்டதைப்போல வேறு யாரிடமேனும் கேட்டு, அவர்கள் அதைப் பயன்படுத்தி நல்லது செய்திருந்தால் நன்மை. இல்லையெனில் என்னவாகியிருக்கு என அப்போதே மனம் சுணங்கியிருந்தான்.
ஆண்களே பணம், பொருள், உடைமை என அனைத்தையும் இழந்து நின்றதை நேரில் பார்த்திருக்கிறான்.
எடுத்தவுடன் அதைப் பற்றிக்கூறி பெண்ணை பயமுறுத்த வேண்டாம் என நினைத்திருந்தான்.
உடன் வந்த மாணவர்களை தவிர்க்க எண்ணியே தன்னிடம் வந்து பேசினாள் என்பதையும் அவளின் பேச்சின் வழியே தெரிந்து கொண்டிருந்தான்.
அதனால் எழுந்த பதற்றம் பெண்ணை நேரில் சந்தித்தாலேயொழிய குறையாது என்பது திண்ணம்.
தான் கிளம்பிய பிறகு அங்கிருந்தவர்களால் பெண்ணுக்கு வேறு ஏதேனும் பிரச்சனையோ என்றுவேறு மனம் பதறியது.
அடுத்தடுத்த மீராவின் கேள்விக்கு மிகவும் யோசித்து தலையசைப்பு, ம்ஹ்ம். இல்ல என ஒட்டாத ஒறறைப் பதில்கள்.
மீராவிற்கு வேந்தனது செயலில் மனம் சுணங்கியது.
“என்னை வீட்ல விட்டுட்டு நீ சித்திக்க உங்கூட கூட்டிட்டுப்போ!”
“இல்ல…!”
“சொன்னாக் கேளு!”, என அதட்டல்
“ம்ஹ்ம்!”
மீரா இறங்கியதுமே, கேசுவல் உடையில் இருந்த சித்திக்கை வேந்தனோடு அனுப்பியிருந்தாள் மீரா.
என்ன ஏது என தலை, வால் எதுவும் புரியாமல் மனைவியின் பேச்சில் கிளம்பியவனிடம், “இப்ப கிளம்பு சித்திக்.. நான் விசயம் என்னானு சொல்றேன்!” என சித்திக்கின் போனைத் தேடி எடுத்து வந்து கையில் திணித்திருந்தாள் மீரா.
ஏறியதுமே ஒன்றுவிடாமல் பகிர்ந்திருந்தாள்.
பேசி முடித்து வைத்துமே “யாருடா அது?”
“யாரு”, ஒன்றுமே தெரியாததுபோல வேந்தன் கேட்க
“அதான் இப்ப பாக்க போனீங்களே அது!”
“அது தெரிஞ்சவதான்!” தன்னிடம் அதற்குமேல் பேச விரும்பாதது சித்திக்கிற்குமே புரிந்தது.
///////
மருத்துவமனை காலை நேர பரபரப்பில் இருந்தது.
ஒன்பதரை மணிக்குமேல் மருத்துவர் ரவுண்ட்ஸ் வந்தபிறகு உடல்நிலையை பரிசோதிக்குக் கொண்டு கிளம்பலாம் எனத் காத்திருந்தனர் இந்துமதி மற்றும் வாணி இருவரும்.
முந்தைய தினத்தைவிட சற்று தெம்பாக உணர்ந்ததால் காலையில் விடுதிக்குச் சென்றுவிடுவேன். நீ கிளம்பு என்றிருந்தாள் இந்து.
வாணி, “டாக்டர் என்ன சொல்றாங்கனு பாத்துட்டு சேந்தே போலாம்”
“காலேஜ் போகணுமுல்ல”
“இல்ல இன்னிக்கு நான் போகலை”, என பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதே நேரம், ரிசப்சனில் இந்துமதி பெயரைச் சொல்லி, அறை எண்ணைக் கேட்டுக் கொண்டு அறையை நோக்கி வந்தனர்.
அப்போதுதான் இந்துமதிக்கு வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு, முந்தைய தினம் எடுத்து வந்திருந்த பொருள்களை எடுத்து உரிய இடத்தில் வைத்துக் கொண்டிருந்தாள் வாணி.
கதவு தட்டும் ஓசையில் நர்ஸாக இருக்கலாம் என எண்ணி கதவைப் போய்த் திறந்தாள் வாணி.
வேந்தனைக் கண்டதும் என்ன செய்தாள்?
…………
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss