Anal aval 12

                      அனல் அவள் 12

 

 

 

 

மறுநாள் காலை மித்ரனும் விவேகனும் பத்து நாட்கள் அவர்களுக்கு தேவையான துணிமணிகளையும், படிப்பதற்கு தேவையான புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு மித்துமாவிடம் தினமும் வந்து அவரை சந்தித்து செல்கிறோம் என்று கூறிவிட்டு தென்றலின் வீடு வந்து சேர்ந்து இருந்தனர்.

 

அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த நேரம் வழக்கம் போல் அக்ஷா பள்ளிக்கு கிளம்பி கொண்டு இருக்க, தேவகி அனைவருக்கும் தேவையான உணவுகளை சமைத்துக் கொண்டிருந்தார்.

 

அவர்களின் நானா மெக்கானிக் ஷாப்பிற்கு கிளம்பிக்கொண்டிருக்க தென்றல் அவள் அறையை விட்டு வெளியே வந்ததிற்கான தடையமே தெரியவில்லை.

 

வழக்கம்போல் மித்ரன் தென்றலை எழுப்பி வருகிறேன் என தேவகியிடம் கூறிக்கொண்டு அவனும் தென்றலின் அறையில் தஞ்சமடைந்தான்.

 

பிறகு விவேகனிடன் தனியாக பேச வாய்ப்பு கிடைக்குமா என பார்த்து கொண்டிருந்த அக்ஷா,

 

அவனை கண் ஜாடையில் தனியாக அழைத்து நேற்று மாலை அவள் தோழி வீட்டில் இருந்து வரும் வழியில் அவளை சிலர் கேலி செய்தது‌முதல் மித்ரன் அபிநவை அடித்த வரை ஒன்றுவிடாமல் விவேகன் இடம் ஒப்புவித்து விட்டாள்.

 

பிறகு விவேகன், “நீ இன்னைக்கு பயப்படாம ஸ்கூலுக்கு போயிட்டு வா குட்டிம்மா” இன்னைக்கு ஈவ்னிங் நீ உன் பிரண்டு வீட்டுக்கு போ என்ன பண்ணறதுன்னு நான் பார்த்துக்கறேன்” என்றவன் அவளை பள்ளிக்கு அனுப்பி வைத்தான்.

 

பிறகு நானாவும் காலை உணவை முடித்துக்கொண்டு கல்லூரியில் தேர்வுகள் முடியும் வரை விவேகனை கடை பக்கம் வர வேண்டாம் என எச்சரித்து விட்டு அவரும் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

 

பிறகு தேவகி அம்மா மித்ரனுக்கு குடிக்க டீ எடுத்துக்கொண்டு தென்றல் அறைக்கு சென்றவர் அவன் இருந்த நிலையை கண்டு கண் கலங்கி போனார்.

 

தென்றல் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்க அவளுக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தவன்,

 

நேற்று விவேகன் அறைந்த அவளின் ஒரு கன்னத்தை தடவிக் கொடுத்து கொண்டு இன்னொரு கையால் அவளின் தலையை வருடி கொண்டு கண் கலங்கி கொண்டிருந்தான்.

 

இதனை கண்டவர் மனம் வாட பிறகு தன்னை நிதானித்துக் கொண்டு அவனை சமாதானப்படுத்தி டீயை கொடுத்து அவனை வெளியே அனுப்பிவிட்டு தென்றலை எழுப்பி தயாராக சொன்னார்.

 

தென்றல் தயாராகி வெளியில் வந்தவள், மறந்தும் கூட விவேகன் முகத்தை பார்க்கவில்லை மித்ரன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். தேவகியிடம் டீ வாங்கி குடித்தவள் அவர் கொடுத்த பட்டர் பிஸ்கட்டை வேண்டாம் என தவிர்த்து விட்டாள்.

 

விவேகனிடம் தேவகி டீ கப் ஐ நீட்ட அவன் இடது கையால் அதைப் பெற்றுக் கொண்டான்.தேவகிக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.

 

விவேகன் மறந்தும் இடக் கையால் ஒரு பொருளைக் கொடுக்கவோ வாங்கவோ மாட்டான். இது அவன் வளர்ந்த ஆசிரமத்தில் கற்றுக் கொண்ட பழக்கம்.

 

அவனைப் பிறகு பார்த்து கொள்ளலாம் என அவர் மித்ரனிடம் திரும்ப,

 

மித்ரனோ, மீண்டும் அவளின் கன்னத்தை தடவிக் கொடுத்தவாறு, “ரொம்ப வலிக்குதாடா மருந்து ஏதும் வாங்கிட்டு வரட்டுமா” என பக்குவமாக கேட்க.

 

‘வேண்டாம்’ என்று தலையை அசைத்தவள். அவன் தோளில் சாய்ந்து கொண்டு, “விவு-வ பேச சொல்லு மித்ரா ரொம்ப கஷ்டமா இருக்கு அவன் என்கிட்ட பாசமா பேசலனாலும்கூட பரவால்லடா எதுக்கு நான் அங்க போனேனு கேட்க சொல்லேன்.”

 

“நான் ஒன்னும் சாப்பாட்டுக்காக அங்க போல டா” எங்கே நண்பன் தன்னை சாப்பாட்டுகாக தான் போனேன் என தவறாக நினைத்து விட்டானோ என்ற எண்ணத்தில் மீண்டும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.

 

இங்கு நடக்கும் அனைத்தையும் தேவகி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் மேலும் தென்றலின் அழுகை அதிகரித்துக் கொண்டே போக நேற்று வரை அவள் அழுகையை கண்டு மனதை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தவனால் இன்று முடியாமல் போனது, எழுந்து வெளியே சென்று விட்டான் விவேகன்.

 

அவனை பின்தொடர்ந்து சென்ற தேவகி கைகளைஇடையின் குறுக்கே கட்டிக்கொண்டு விவேகனை எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“என்ன டார்லிங் இப்படி முறைக்கிற உன் பொண்ண அடிச்சிட்டேனேனு என் மேல கோவமா” என அவன் கேட்டு முடிக்கவில்லை, விவேகனின் கன்னத்தில் அறைந்திருந்தார் தேவகி.

 

விவேகன் கலவரமாக தேவகியின் முகத்தை பார்க்க,

 

“அவள எந்த கையில அடிச்ச” என அவர் அதே கோபத்துடன் கேட்க.

 

விவேகன் தலைகுனிந்தான் அவன் குனிந்த தலையை அவர் கைகொண்டு நிமிர்த்தி “கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு” என்க. அவன், “ரைட் ஹேண்ட்” என்றான்.

 

“ஓஓ சரிங்க சார் உங்க ரைட் ஹேண்ட கொஞ்சம் காட்டுங்க பார்க்கலாம்” என தேவகி சிறிது நக்கலாகவே கேட்டார்.

 

அவர் கேள்வியில் சற்று பயந்தவன் பிறகு கையை இறுக்கமாக மூடிக்கொண்டு பின்புறத்தில் மறைத்துக் கொண்டான்.

 

அவன் செய்கையில் மீண்டும் கோபம் தேவகியின் தலைக்கேற தொடர்ந்து நான்கு முறை அவன் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தவர், கையை வலுக்கட்டாயமாக பிடுங்கி பார்க்க அதில் தீக்காயம் அப்பட்டமாக தெரிந்தது.

 

வீட்டிலிருந்து கிளம்பிய பிறகு தென்றலை காயப்படுத்தியதற்காக அவனை அவனே காயப்படுத்தி கொண்டிருக்கிறான் என்பது தெள்ளத்தெளிவாக தேவகிக்கு புரிய,

 

அவன் கையை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு தென்றலிடம் சென்றவர்.

 

“பாரு டி நல்லா பாரு, இதுக்கு தானே ஆசைப் பட்ட நீ பண்ற ஒரு ஒரு தப்புக்காக என் புள்ள தானடி கஷ்டத்தை அனுபவிக்கிறான் நீ எல்லாம் எப்போ திருந்தி தொலைய போற இப்படி இருந்து, பயந்து பயந்து நீயும் செத்து‌ எங்களையும் சாகடிசிட்டு இருக்குறதுக்கு நீ மொத்தமா போய் சேர வேண்டியது தானே” என கடும் கோபத்தில் தென்றலினை திட்டி தீர்த்து விட்டார்.

 

அவர் இறுதியாக சொன்ன வார்த்தை அங்கிருந்த மூவரையுமே கதிகலங்கச் செய்து விட்டது. தேவகி கோபமாக பேச ஆரம்பித்தபோது எதுவும் புரியாத தென்றல் அவர் இறுதியில் சொன்ன வார்த்தையில் மிகவும் நொறுங்கிப் போனாள்.

 

“டார்லிங் நான் பண்ண தப்புக்கு அவ என்ன பண்ணுவா  நீ இப்ப எதுக்கு இப்படி தேவையில்லாம வார்த்தைய விட்டுட்டு இருக்க டார்லிங். அவளைத் திட்டாதே உனக்கு எவ்ளோ கோவம் வருதோ அவ்ளோ கோபத்தையும் என் மேல காட்டு, எவ்ளோனாலும் என்னை அடி, என்னவேணாலும் பண்ணு ஆனா அவளை எந்த ஒரு வார்த்தையையும் சொல்லாதே டார்லிங்.”

 

“நீ அவள சொல்ற வார்த்தையும் என்னதான் பாதிக்கும்” என விவேகன் கூற அருகில் இருந்த டீ குடித்த கப்பை தூக்கியெறிந்த தேவகி உள்ளறைக்குச் சென்று கதவை ‘டமார்’ என சாத்திக் கொண்டார்.

 

தேவகி கூறிய வார்த்தையை கேட்டு தென்றலின் அழுகை மேலும் அதிகரிக்க கோபமடைந்த மித்ரன்,

 

“ஆமா பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து பேசுறான் போடா இவனே” என விவேகனை திட்டியவன் தென்றலை சமாதனப்படுத்த,

 

தென்றலின் அழுகையை இதற்கு மேல் தாங்க முடியாது என நினைத்த விவேகன். நின்ற இடத்தில் இருந்து தாவி வந்து தென்றலின் அருகே அமர்ந்து அவள் தலையை தடவி கொடுக்க,

 

அவனின் கையை தட்டி விடுவாள் என நினைத்த மித்ரனுக்கு நூறு வாட்ஸ் பல்பு பல பிரகாசமாக எரிந்தது.

 

விவேகன் தலையை தடவி கொடுக்கவும் மித்ரனின் தோளில் இருந்து விவேகனின் மடிக்கு தாவியவள் அழுது கொண்டே அவன் வார்த்தைக்காக‌ காத்திருந்தாள்.

 

“ஏன் டா அந்த வீட்டுக்கு போன” என்று‌ விவேகன் கேட்ட அடுத்த நொடி, மடைத் திறந்த வெள்ளம் என அன்று நடந்த அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டாள்.

 

“நான் அவங்க புடிச்சிட்டு வந்த மீன் எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு அது பேரு என்னனு கேட்டு தெரிஞ்சிக்கிட்டு இருந்தேன் விவு.”

 

“அப்போ அங்க இருந்த ஒரு அய்யா அவரு பொண்ணு என்ன மாதிரியே இருப்பாங்கனும், அவங்களும் அவரு வைஃப் ம் சுனாமில இறந்து பொய்ட்டாங்கனும் அவரு பொண்ணுக்கு மீன் குழம்புனா ரொம்ப புடிக்கும்னும் நான் வந்து சாப்ட்டா அவளே வந்து சாப்ட மாதிரி சந்தோஷ படுவேனு சொன்னாரு.”

 

“நான் உங்களயும் கூப்புட சொன்னேன் அவரு தான் நீ மொத வா அப்றம் அவங்கள நான் கூட்டிட்டு வரனு சொன்னாரு விவு” என அனைத்தையும் ஒரு வழியாக கூறி முடித்தாள்.

 

அவள் கூறியதை கேட்டு மித்ரனும் விவேகனும் தலையில் அடித்து கொண்டனர்.

 

இவள் இப்போதும் இத்தனை வெகுளியாக இருப்பது அவர்களுக்கு கவலையாக இருந்தது.

 

 

பிறகு தன் மடியிலிருந்த தென்றலை பொறுமையாக எழுப்பிய விவேகன்.

அவள் கண்ணீரை துடைத்து விட்டு,

 

 

“இங்க பாரு தென்றல் இனிமே உன் கண்ணில் இருந்து கண்ணீர் வரதா இருந்தா அது இறந்து கிடக்கிற என்னை எழுப்புவதற்கான மருந்தா மட்டும் தான் இருக்கணும்.”

 

“தேவையில்லாத எந்த விஷயத்துக்கும் இனி நீ அழக்கூடாது இது என் மேல சத்தியம்.” என அவள் கையை பிடித்து அவன் தலையில் வைத்து சத்தியம் பெற்றுக்கொண்டான் விவேகன்.

 

 

தென்றல் இனி கண்ணீர் சிந்த கூடாது என நினைத்த விவேகன் அவளிடம் சத்தியம் பெற்றுக் கொண்டான். அவன் பெற்றுக்கொண்ட சத்தியத்தை வெளியாட்கள் யாரேனும் கேட்டு இருப்பின் அவர்களுக்கு அது முட்டாள்தனமாகவே தெரிந்திருக்கும். ஆனால் அவனை அடிமுதல் நுனிவரை அறிந்து வைத்திருப்பவள் தென்றல் அவளுக்கு அவன் எதனால் அவ்வாறு சத்தியம் பெற்றான் என்பது நன்றாகவே புரிந்தது.

 

 

தான் இறந்த பிறகு என்னை எழுப்புவதற்கான மருந்தாக உன் கண்ணீர் இருக்க வேண்டும் என்று கூறுவது மித்ரனுக்கு முட்டாள்தனமாக தெரிய,அவன் பொங்கி எழுந்து விட்டான்.

 

“லூசா டா நீ?” நீ செத்து போன அப்புறம் உன்ன எழுப்புறேனு இவளும் அழுது அழுது சாகனும்னு இப்படி சத்தியம் வாங்குறியா”? 

 

“உனக்கு தெரியாத டா அவ அழுகைய கட்டுப்படுத்துனா அவளுக்கு நல்லது இல்ல ஃபிக்ஸ் வரும்னு”

 

மித்ரன் சொன்னது உண்மைதான் இருந்தாலும்,அப்படி எதுவும் நடந்து விடாது‌,என்ற நம்பிக்கையில் விவேகன் பேசாமல் இருந்து விட்டான்.

 

ஆனால் தென்றலுக்கு நான் உயிரோடு இருக்கும் வரை நீ அழுக கூடாது என்பதற்காகவே விவேகன் இவ்வாறு சத்தியம் பெற்றான் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.

 

 

இவர்களின் உரையாடல் இவ்வாறு சென்று கொண்டிருக்க தென்றலின் மீது கோபம் கொண்டு அறையினுள் சென்ற தேவகி முதலுதவி பெட்டியுடன் வெளியே வந்தார்.

 

 

வெளியே வந்தவர் அந்த முதலுதவிப் பெட்டியை தென்றலின் கையிலே திணித்து,

 

“இதுக்கப்புறம் உன்னாலே என் பையன் உடம்பில் சின்ன கீறல் இருந்தாலும் உன்னை நான் சும்மா விட மாட்டேன்” என்றவர் அவர்களுக்கு சமைப்பதற்காக சமையலறையில் தஞ்சமடைந்தார்.

 

தன் அன்னை எதற்கு தன் கையில் முதலுதவி பெட்டியை திணித்து சென்றார் என்பது புரியாமல் தென்றல் முழித்துக் கொண்டிருக்க,

 

விவேகன் சிரித்தவாறு அவன் வலது கையை தென்றலின் முன் நீட்டினான். அதனை கண்டவளுக்கு அது எதனால் ஏற்பட்ட காயம் என புரிய கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது.

 

பிறகு சிறிது நேரத்திற்கு முன் விவேகன் பெற்றுக்கொண்ட சத்தியம் நினைவு வர கண்ணீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவள்.

 

அவனின் காயத்திற்கு சிரித்தவாறு மருந்திட்டாள் அவளிட்ட மருந்தை விட அவள் முகத்தில் படர்ந்த புன்னகையே பெரும் மருந்தாக அமைந்தது விவேகனுக்கு.

 

பிறகு வழக்கம் போல் அவர்களின் சேட்டைகள் அங்கு தொடர நேரம் சென்றதே தெரியவில்லை மாலை பள்ளி முடிந்து அக்ஷா வீட்டிற்கு வந்து சேர அவள் வந்த அரைமணி நேரத்தில் தமிழும் தென்றலின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

 

நேற்று விவேகன் தென்றலிடம் பேசாமல் இருந்தது தமிழுக்கு சந்தோஷத்தை வாரி வாரி வழங்கியது குழம்பிய குட்டையில் தெளிவாக மீன் பிடிக்கலாம் என்று நினைத்து இருந்தான் அவன்.

 

மித்ரன் எத்தனை எடுத்து கூறியும் அவனுக்கு தென்றலுடன், விவேகன் போல் உரிமையுடன் உறவாக பழக வேண்டும் என்று அத்தனை ஆசை இருந்தது. அது ஏன் என்று அவன் யோசிக்கவெல்லாம் இல்லை.

 

வயதில் வளர்ந்து இருந்தாலும் குணத்தில் குழந்தையாக இருப்பவளை,

அவன் மனம், அவன் அறியாமலே அவள் மேல் விருப்பம் கொண்டது.

 

இதனைக் கண்டதும் காதல் என்று எல்லாம் சொல்லிவிட முடியாது. அந்த டீன் ஏஜிர்க்கே உண்டான ஒரு வகையான ஈர்ப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.

 

 

தென்றலும் விவேகனும் சமாதானம் அடைவதற்கு முன்பே தென்றலிடம் தன் விருப்பத்தைக் கூறி அவளின் நட்பை இன்றே பெற்றுவிட வேண்டும் என நினைத்து மன கோட்டை கட்டிக் கொண்டு தென்றலின் வீடு வந்து சேர்ந்தவனுக்கு தரிசனம் தந்த காட்சியோ.

 

தென்றல் விவேகனுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். 

 

இக்காட்சியை கண்டு இவ்வளவு நேரம் ஐஸ்கிரீமாக குளு குளுவென இருந்த அவன் வயிற்றில் லாரி லாரியாக நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் ஆனது.

 

அவன் கடுகடுத்த முகத்துடன் வீட்டின் உள் நுழைவதை இந்த முறை மித்ரனுடன் சேர்ந்து விவேகனும் நன்றாகவே கவனித்துவிட்டான். இன்று இரவு மித்ரனிடம் பேசி தமிழின் மனதில் என்ன உள்ளது என்பதை கண்டறிய வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டான் விவேகன்.

 

பிறகு அக்ஷா தமிழிடம் வந்தவள்,

“தமிழ் இன்னைக்கு எனக்கு படிக்கிறதுக்கு எதுவும் இல்ல நான் என் பிரண்டு வீட்டுக்கு போறேன். நீங்க உங்களுக்கு எதுவும் இருந்தா படிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பிடுங்க அதனால் எந்த பிராப்ளமும் இல்லை” என கூறியவள் விவேகனிடம் கண்ணசைத்து விட்டு அவள் தோழியின் வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.

 

…………………………………..

 

அக்ஷா சென்ற இரண்டு மணி நேரம் கழித்து விவேகனும் அவள் தோழியின் வீட்டு தெருவில் சென்று அக்ஷாவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.

 

அக்ஷா தூரத்தில் வருவதை கவனித்துவிட்டவன், அங்கு அவளை தொந்தரவு செய்வது யார் என கவனித்துக்கொண்டிருந்தான்.

 

பிறகு சிறிது தூரம் வந்த பிறகு ஒரு நான்கு பேர் கொண்ட அணி அவளை சுற்றி வளைத்து தவறான வார்த்தைகளை கொண்டு அவளை கேலி செய்ய அவர்களின் அருகில் சென்றான் விவேகன்.

 

விவேகன் அக்ஷா அருகில் வந்து நிற்கவும்,நால்வரில் ஒருவன்,

“பாரு டா பாப்பாவுக்கு இந்த வயசுலயே தினம் ஒருத்தன் கேக்குது” என்றது தான் தெரியும்,

 

விவேகன் அவன் வாயிலே ஓங்கி ஒரு குத்து விட்டவன்,

 

அவன் கையை வேகமாக உதற அவன் கையில் இருந்து சிதறிய ஒரு துளி இரத்தம் அக்ஷாவின் முகத்தில் பட,

அவ்வளவு தான் அவள் துடித்து விட்டாள்.

 

“அய்யோ அண்ணா ரத்தம் ரத்தம்” என கத்தியவள்.

 

அவள் கையிலிருந்த கைகுட்டையில் அவன் கையில் வழிந்த ரத்தத்தை துடைக்க,அவன் கையில் அடிப் பட்டத்திற்கான தடயமே இல்லை.

 

அவள் கேள்வியாக விவேகனின் முகத்தை நோக்க, அவன் சிரித்தவாறு எதிரில் இருந்தவனை கை காட்ட,

 

அக்ஷா திரும்பி பார்த்தாள், இவளிடம் வம்பு வளர்த்தவன் முன் பல் நான்கும் உடைந்து. இரத்தம் கொட்ட கொட்ட நின்றிருந்தான்.

 

அவனைப் பார்த்து ஆனந்தமாக சிரித்தவள். விவேகனிடம் திரும்பி “சூப்பர் அண்ணா” என அவனை அணைத்து கொண்டாள்.

 

அவள் அண்ணா என்று அழைத்ததைக் கேட்க கூட அந்த நாள்வரும் அங்கு நிற்கவில்லை.

 

இருவரும் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.

 

விவேகனுடன் வீட்டிற்குள் நுழைந்த அக்ஷா, தென்றலும் மித்ரனும் புத்தகத்தை வைத்து தலையில் முட்டிக் கொண்டு இருப்பதை பார்த்தவள்.

 

“என்ன தமிழ் இந்த முட்டாள்களுக்கு சொல்லிக் கொடுத்து அதுங்களுக்கு புரியலையா தலையில அடிச்சிட்டு இருக்குங்க” என்றவள் சிரித்தவாறே அறையினுள் சென்று விட்டாள். அவள் கூறிய வார்த்தை தமிழை அதிர்ச்சி அடைய செய்தது.

 

உடன் பிறந்தவளையும் அவளின் உயிர் தோழனையும் அக்ஷா இவ்வாறு மட்டமாக பேசுவது ஏன் என தெரிந்து கொள்ள நினைத்தான் தமிழ்.

 

ஆனால் மித்ரனும் தென்றலும் இது எப்போதும் நடப்பதுதான் என்பது போல் சாதாரணமாக இருந்தனர்.

 

விவேகனும் தென்றலும் எதைப் பற்றியோ மிகவும் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்த கேப்பில் மித்ரனின் அருகில் வந்த தமிழ் அக்ஷாவின் இந்த நடவடிக்கைக்கான காரணத்தைக் கேட்டான்.

 

மித்ரனுக்கு மிகவும் கடுப்பாக போய்விட்டது,

 

“ஏன்டா தமிழ் நீ சந்தேகத்த கேக்குறதுலயே இருப்பியாடா, இப்போதான் தெரியுது நீ கிளாஸ் அட்டென்ட் பண்ணலனா கூட உன் சார் ஏன் உன்னை எதுவுமே கேட்க மாட்டாறாங்கனு.”

 

“அவங்களயும் இப்படித்தான் கேள்வியா கேட்டு கொன்னு இருப்ப அதான் அவங்க நீ க்ளாஸ் ல இல்லனாலும் பரவாயில்லைனு கும்பிடு போட்டு வெளியே அனுப்பிட்றாங்க” என்றவன் அவன் கேட்ட கேள்விக்கான பதிலைக் கூறினான்.

 

“தென்றல் பிறந்ததிலிருந்தே அவள் அப்பா அம்மா பக்கத்து வீட்டுக்காரங்க அப்புறம் அவளோட ஃப்ரெண்ட்ஸ்னு வீட்டுக்கு போற வர எல்லாருக்குமே அவதான் செல்லம்.”

 

“தென்றலுக்கு அப்புறம் அக்ஷா பொறந்தாலும் அவ சின்ன பொண்ணா இருந்தாலும், தென்றல் என்னைக்குமே எல்லாருக்குமே ஒரு பிடி ஸ்பெஷலா தான் தெரியுவா. அதனால அக்ஷாவுக்கு தென்றலை பிடிக்காது.” என்று மித்ரன் கூறி முடிக்கவும்.

 

தமிழை தேடி தென்றலின் வீட்டிற்கு வந்தான் அபிநவ்.

 

பிறகு தமிழும் அபினவும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றுவிட, தென்றல் விவேகனின் மடியில் படுத்தவாறு உறங்கிப் போய் இருந்தாள். அவள் உறக்கம் கலையாதவாறு அவள் தலையை தலையணைக்கு மாற்றியவன் மித்ரனுடன் எழுந்து மாடிக்குச் சென்று விட்டான்.

 

மாடிக்கு சென்ற மித்ரனும் விவேகனும் தமிழைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மித்ரன் தமிழ் அவனிடம் கேட்ட அனைத்து சந்தேகங்களையும் அதற்கு மித்ரன் வழங்கிய பதில்களையும் விவேகனிடம் கூறினான் அவை அனைத்தையும் பொறுமையாக கேட்ட விவேகன்.

 

“இவன பார்த்தா, பார்த்த கொஞ்ச நாள்ல இப்படி எல்லாம் ஃபீல் பண்றான்னா நம்ப முடியலையேடா?, அவன பத்தி விசாரிச்சே ஆகணும்.”

“நான் கூட காலேஜ்ல அவனுடைய கேரக்டரை மட்டும் தானடா  விசாரிச்சேன் இதுக்கு அப்புறம் கொஞ்சம் டீப்பா இறங்கி விசாரித்தால்தான் பயபுள்ள ஏன் தென்றல ஃபாலோ பண்ணுதுனு கண்டுபிடிக்க முடியும்” என்றான் விவேகன்.

 

பிறகு சிறிது நேரம் நண்பர்கள் இருவரும் இணைந்து பொதுவாக கதை அளந்து விட்டு மாடியிலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

தென்றலின் வீட்டிலிருந்து கிளம்பிய தமிழும் அபிநவும் அவர்களின் வீட்டை சென்றடைந்தவர்கள் அவர்களின் மன அலைகளில் மூழ்கி இருந்தனர்.

 

“மித்ரன் சொல்றது எல்லாம் கேட்டா விவேகனுக்கும் தென்றலுக்கும் ஏதோ ஒரு பிரிக்க முடியாத உறவு இருக்க தான் செய்யும் போல அவங்க உறவை மீறி என்னால தென்றல் கிட்ட நெருங்க கூட முடியாது.”

 

 

“நான் தென்றல் கிட்ட நெருங்கனும்னா தென்றல் கிட்ட இருந்து விவேகன பிரிக்கணும் முதல்ல அதற்கான வேலைகளை செய்யலாம்” என மனதில் சுயநலமாக பல மனக்கோட்டைகளை கட்டிக் கொண்டான் தமிழ் அவை எல்லாம் இடிந்து விழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை தமிழ் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

………………………………..

 

 

விவேகன் மித்ரன்   வீடு வந்து பார்க்கையில் தென்றல் இப்பொழுதும் துயில் கொண்டிருக்க தமிழைப் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியை இப்பொழுதே துவங்கினர் விவேகனும் மித்ரனும்.

 

தமிழின் வீடு இருக்கும் தெருவிற்கு சென்றவர்கள் தமிழை அவர்களின் நண்பன் என கூறி அங்கிருந்த சிலரிடம் அவனின் குடும்பத்தை பற்றி ஒளிவு மறைவாக விசாரித்ததில் தமிழைப் பற்றி யாரும் தவறாக கூறவில்லை.

 

அதேபோல் அபிநவை பற்றியும் தவறாக யாரும் கூறவில்லை. ஆனால் அபிநவ் மற்றும் தமிழின் தாயைப் பற்றி தவறாக கூறாதவர்கள் யாரும் இல்லை.

 

“அவ எல்லாம் ஒரு பொம்பளையா ப்பா அவ உயிரோட குத்துக்கல்லாட்டம் நல்லா இருக்கா ஆனா அவ புருஷன் தங்கமான மனுஷன் அந்த ஆளு அல்பாயுசுல போய் சேர்ந்துட்டான் இந்த பொம்பளையே கூட வெசம் வைத்துக் கொன்னாலும் கொன்னு இருப்பா” என இவர்கள் கேட்ட அனைவர் வாயிலிருந்தும் தமிழின் அன்னையான அருணாவை பற்றி எதிர்மறை கருத்துக்களே பெறப்பட்டன.

 

அவர்களின் விசாரணை படலத்தை முடித்தவர்கள் தென்றலின் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கும் போது மித்ரனின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.

 

“ஏண்டா டேய் அந்த வீணாப்போன தமிழே இன்னும் தென்றல் கிட்ட சரியா பேசல  அவன் உன்னை தாண்டி பேசி, தென்றல் அதுக்கு உன்னை தாண்டி ரெஸ்பான்ஸ் பண்ணனும்.”

 

“எல்லாமே உன்னை தாண்டி தான் நடக்கனும் அப்போ உனக்கு தெரியாம இருக்காது. தமிழும் அவ்ளோ ஒன்னும் கெட்டவன் மாதிரி எனக்கு தெரியல”

 

“இவ்ளோ ப்ராஸஸ் இருக்கும்போது நீ ஏன்டா அவன் குடும்பத்தைப் பத்தி இவ்வளவு வரலாறு சேகரித்துக் கொண்டு இருக்க” என்று கேட்டான் மித்ரன்.

 

அவன் கேள்வியை கேட்ட  விவேகன்,

“நீர் மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒருமுறை நிருபிக்கிறீர்” எனக்கூறி சிரித்தவன்.

 

“இந்த கேள்விய நீ வீட்டிலிருந்து கிளம்பும்போதே கேட்டு இருந்து இருக்கனும் டா. எல்லாம் வரலாறையும் சேர்த்து முடிச்சதுக்கு அப்புறம் கேக்குறியே உனக்குத்தான் எவ்வளவு அறிவு படைச்சி இருக்கான் ஆண்டவன்.” என்ற விவேகன் மீண்டும்  அவனை கேலி செய்து சிரிக்கத் துவங்கி விட்டான்.

 

அவன் சிரிப்பதை கண்ட மித்ரன், “எனக்கு எல்லாம் ஆண்டவன் அறிவு நல்லாதான் படைசான் உன் தென்றல் அடிச்சி அடிச்சி தான் என் மூள மழுங்கி போச்சு” என்றவன் விவேகனுடன் சேர்ந்து அவனும் சிரித்து விட்டான்.

 

அன்றைய இரவு விவேகனுக்கு தூங்கா இரவாகி போனது….

 

 

(தொடரும்)