Anal aval 18

Anal aval 18

அனல் அவள் 18

 

தேவகியை கையில் ஏந்திய விவேகன் அவரை மெத்தையில் படுக்க வைக்க மித்துமா தண்ணீர் கொண்டு வந்து தேவகியின் முகத்தில் ஒத்தி எடுக்க சிறிது நேரத்திற்கு பிறகு தான் அவரிடம் அசைவு தெரிந்தது. சில மணி நேரங்களில் தேவகி கண் விழித்தார்.

 

அவர் கண் விழித்த பிறகே அங்கிருந்த அத்தனைப் பேருக்கும் உயிர் மூச்சு சீரானது. மித்துமா இப்போது ஓரளவுக்கு தேறி இருந்தார்.

 

மித்ராவதி தேவகியின் அருகில் அமர்ந்து அவரை ஆதரவாக அணைத்து கொண்டார்.

 

தேவகியை பார்த்து கொண்டிருந்த லக்ஷ்மி மீண்டும் ஒரு பெரிய கேவலுடன் கண்ணீர் விட தயாராகவும் விவேகனுக்கு மறுபடியும் முதலில் இருந்தா என்றே எண்ணத் தோன்றியது.

 

தன்னை திடப்படுத்திக் கொண்டவன் லக்ஷ்மி இடம் எறிந்து விழுந்தான்.

“ஏய் இங்க பாரு மேகா, எதுக்கு இப்போ சும்மா நீலி கண்ணீர் வடிச்சி எல்லார் உயிரையும் எடுத்துட்டு இருக்க, ஒழுங்கா இவ்ளோ நாளா எங்க இருந்த ஏன் சொல்லாம போன எல்லாத்தையும் சொல்லு இல்லனா, உன் மூட்டை முடிச்சிய கட்டிட்டு கிளம்பு” என அவன் பேசி முடிக்கவும்,

 

விவேகனின் “மேகா” என்ற அழைப்பு மித்ரனுக்கும் தென்றலுக்கும் புதிதாக இருந்தது. “இவன் யார சொல்றான்?” என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள அப்போது தான் அவர்களுக்கு நினைவு வந்தது லக்ஷ்மியின் முழு பெயர்!

 

பிறகு மேலும் விவேகன் லக்ஷ்மியை கடிந்து கொள்வதை பார்த்த மித்ரன், தென்றல், அக்ஷா அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரின் எதிர்ப்பையும் ஒரு கோவ பார்வையில் அடக்கியவன், லக்ஷ்மியின் மீது தன் அழுத்தமான பார்வையை செலுத்தினான்.

 

அந்த பார்வை அவளை பதில் கூறாமல் அந்த இடத்தில் இருந்து நகர விடாது என உணர்ந்தவள் தன் கடந்த காலத்தை நோக்கி பயணிக்க தொடங்கினாள் லக்ஷ்மி எனும் மேகலக்ஷ்மி.

 

Flashback starts…

 

நடுத்தரக் குடும்ப பெற்றோர்களின் ஊதியத்தையும் மீறிய தொகையை பிள்ளைகளின் கல்வி கட்டணமாகப் பெற்றுக் கொண்டிருக்கும் பள்ளிகளில் ஒன்றான அந்த தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி அன்றும் பெற்றோர்களின் உழைப்பை உறிஞ்ச தயாராகி கொண்டிருந்தது.

 

முழு ஆண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. புது மாணவ மாணவிகள் சேர்க்கைக்காக பள்ளி ஆசிரியர்கள் தயாராகி கொண்டிருக்க, பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை பெரிய பள்ளியில் படிக்க வைக்கப் போகும் கனவுகளுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

 

அதில் ஒருவரின் முகம் மட்டும் அத்தனை கனலை கக்கியது. அவரின் கையைப் பற்றிய படி நின்றுக் கொண்டிருந்த அந்த குட்டி தேவதையின் முகத்தில் அத்தனை ஆனந்த பரவசம்.

 

அந்த குட்டி தேவதையின் கண்கள் ஒருவித எதிர்ப்பார்ப்புடன் அந்த பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்தது அப்போது அவளின் பார்வை வட்டத்திற்குள் மூவர் விழுந்தனர்.

 

அந்த மூவரில் இவளைப் போன்றே இருந்த ஒரு குட்டி தேவதை முன்னால் ஓடி வர அவளை இருவர் துரத்திக்கொண்டு ஓடி வந்தனர்.

 

அந்த இருவரில் கருக்கருவென இருந்த ஒரு சிறுவன் அந்த தேவதையைப் பிடிக்க நெருங்கவும் அவன் துரத்திக்கொண்டு வந்த சிறுமி கால் இடறி கீழே விழுந்து விட்டாள்.

 

இதை வரிசையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவதை துரத்திக்கொண்டு வந்தவன் தான் அவளை கீழே தள்ளி விட்டான் என நினைத்துக் கொண்டு தன் கையைப்பிடித்து இருந்த தந்தையின் கையை உதறிவிட்டு ஓடி வந்து அந்த சிறுவனை பிடித்து கீழே தள்ளி விட்டுவிட்டாள்.

 

முதலில் கீழே விழுந்த சிறுமியோ அவள் கீழே விழும்போது அழாதவள் அந்த சிறுவன் விழுந்ததும் அழுது ஒருபெரிய கூட்டத்தையே கூட்டி விட்டாள்.

 

இதனை அந்த சிறுமி குழப்பமாக பார்க்க அதற்குள் அவளின் தந்தை வந்து 

“அப்புடியே அவ அம்மாகாரி மாதிரியே என் உசுர எடுக்க பொறந்து தொலைச்சி இருக்கு” என கடிந்தபடி அவளை இழுத்துக் கொண்டு சென்று விட்டார்.

 

தந்தையின் சுடு சொற்களை கூட கவனியாமல் அந்த மழலை இந்த மூவர் அணியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றது. இந்த மூவரும் அவளைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

 

அந்த மூவர் 

விவேகம், தென்றல், மித்ரன்.

அந்த தேவதை சிறுமி 

மேகலக்ஷ்மி.

 

இவ்வாறாக தான் இவர்கள் நாள்வரின் முதல் சந்திப்பும் தொடங்கியது.

 

ஒரு வாரம் சென்ற நிலையில் லக்ஷ்மி இவர்கள் மூவரும் பயிலும் அதே மூன்றாம் வகுப்பில் சேர்ந்தாள். தென்றலுக்கும் விவேகனுக்கும் ஏனோ லக்ஷ்மியை கண்டதுமே பிடிக்காமல் போனது. அவளுக்கு முதலில் நட்பு கரம் நீட்டியது நம் மித்ரன் தான் அதனாலயே இன்று வரையிலும் லக்ஷ்மிக்கு மித்ரன் ஸ்பெஷல்‌‌.

 

மூன்றாம் வகுப்பில் சேர்ந்த இவர்கள் கூட்டணி இன்று வரையிலுமே தொடர்கிறது.

 

முதலில் லக்ஷ்மியைப் பிடிக்காமல் போன தென்றலுக்குமே நாளடைவில் அவளை மிகவும் பிடித்துப் போனது அதற்கான காரணம் உடன் பயிலும் மாணவிகள் அனைவருக்கும் விவேகனைப் பிடிக்கும் அதனால் அவர்கள் யாரையும் தென்றலுக்கு பிடிக்காது. ஆனால் லக்ஷ்மிக்கும் விவேகனுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான் அதனாலயே தென்றலுக்கு ஒரே ஒரு நெருங்கிய தோழி அது லக்ஷ்மி மட்டுமே.

 

இவ்வாறாக தொடங்கிய இவர்களின் நட்பு சில நேரங்களில் அந்த பள்ளியே மெச்சும் வகையிலும் பல நேரங்களில் மொத்தும் வகையிலும் இருந்தது.

 

அதிலும் விவேகனையும் லக்ஷ்மியையும் ஒரு இரண்டு நிமிடம் தனியாக விட்டால் போதும் அந்த இடம் போர் களமாக மாறிவிடும்.

 

இவர்கள் வளர வளர இவர்களின் நட்பும் இணைப் பிரியாமல் பலரும் பொறாமை கொள்ளும் படி வளர்ந்து கொண்டே போனது.

 

இவர்கள் எட்டாம் வகுப்பு பயிலும் தருவாயில் தென்றல் வகுப்பறையிலேயே பூப்பெய்து விட விவேகனும் மித்ரனும் என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க லக்ஷ்மி பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டு வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு சூழ்நிலையை விளக்கி தென்றலை பத்திரமாக வீடுக் கொண்டு சேர்த்தாள்.

 

அந்த நாளில் இருந்து விவேகனுக்கும் லக்ஷ்மி மீது சிறு நட்பு தோன்றியது.

 

அந்த நிகழ்விற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் போது விவேகன், தென்றலை கவனித்து கொண்ட விதத்தில் லக்ஷ்மிக்கு விவேகன் மீது நட்புறவு தோன்றியது.

ஆனாலும் தென்றலுக்காக இருவருமே அதனை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

 

எத்தனை தூரம் நெருக்கமாக பழகியும் லக்ஷ்மியின் பெற்றோரை பற்றி மட்டும் அவள் கூறியதே இல்லை.

 

மித்ரன் மற்றும் தென்றலின் வீடு விவேகன் இருந்த அந்த ஆசிரமம் என அனைத்து இடங்களுக்கும் இவர்களுடன் ஊரை சுற்றுபவள் அவளின் வீட்டிற்கு மட்டும் யாரையும் அழைத்தது இல்லை. யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் விவேகனுக்கு ஏனோ அது வில்லங்கமாகவே தோன்றவும் எப்படியோ அதனை கண்டும் பிடித்து விட்டான். அவன் கண்டு கொண்ட விஷயம் அத்தனை நல்லதாக தோன்றாமல் போகவும் உடனே இதனை தேவகி மற்றும் தர்மராஜ் இடம் தெரிவித்தான்.

 

அவர்கள் அதில் இருந்த நன்மை தீமைகளை அவனுக்கு எடுத்து கூறவும் அவனும் அதனைப் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டான்.

 

லக்ஷ்மியின் தந்தை ஒரு பெரும் அரசியல் வாதியின் பினாமி ஆக இருப்பவர். எங்குமே பெரிய பெரிய தலைகள் எல்லாம் அமைதியாக இருக்க வால் ஓவராக ஆடும் அப்படியே லக்ஷ்மியின் தந்தையும்.

 

அவர் அளவுக்கு மீறிய பெண்கள் சவகாசம் உள்ளவர். அப்படி பட்ட ஒரு பெண்ணின் வாரிசு தான் மேகலக்ஷ்மி.

 

எங்கே இதனை வெளியே சொன்னால் தன்னையும் தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சத்திலே அவள் யாரிடமும் தன் பெற்றோரைப் பற்றி பகிர்ந்து கொண்டதில்லை.

 

ஆனால் எப்படியோ விவேகன் இதனைக் கண்டு கொண்டான். இவனுக்கு தெரியும் என்பது லக்ஷ்மிக்கு தெரியாது. 

 

இப்படியே வருடங்கள் ஓட லக்ஷ்மியின் அன்னை வேறோரு நபருடன் தொடர்பில் இருப்பதை அறிந்த அவளின் தந்தை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். அவர் திருமணம் செய்து கொள்ளாமல் பல பெண்களிடம் பழகினாலும் லக்ஷ்மியின் அன்னை மீது மட்டுமே அவருக்கு காதல் என்ற உணர்வு ஏற்பட்டிருந்தது.

 

இன்றைய சூழ்நிலையில் பலரும் தவறு செய்து விட்டு தான் தவறு செய்யவில்லை என நியாயம் பேசும் அந்நியாயவாதிகளில் இவரும் ஒருவர்.

 

இவர்கள் பலருக்கு செய்த தவறை யாரேனும் இவர்களுக்கு திரும்ப செய்தால் தான் அதனின் வலி புரிகிறது. அப்படி பட்ட நிலையில் தான் லக்ஷ்மியின் தந்தை இருந்தார்.

 

பல நாட்கள் தன்னை விட்டு மற்றொருவனிடம் சென்றவரை நினைத்து வருந்திக் கொண்டிருந்தவர். ஒரு முடிவுடன் அவரின் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களையும் தன் மகளின் பெயரிலும் அது அவளுக்கு திருமணம் ஆன பிறகு அவளின் குழந்தைக்கு தான் சொந்தம் என்றும் எழுதி வைத்து விட்டு போனவர் தான் இன்று வரையிலும் அவரைக் காணவில்லை.

 

இந்த நிலையில் லக்ஷ்மி யாரின் உதவியையும் எதிர்பாராமல் தன்னை தானே பராமரித்துக் கொண்டாள்.

 

விவேகனும் சரி லக்ஷ்மியும் சரி சிறு வயதில் இருந்தே மிகவும் பக்குவப்பட்டு வளர்ந்தவர்கள். ஆகையால் எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் அவர்களால் தனியாக தைரியமாக செயல்பட முடிந்தது. ஆனால் மித்ரனும் தென்றலும் அப்படி இல்லை.

 

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் வீட்டிற்கு வந்த லக்ஷ்மியின் தாய் அவளுக்கும் தன் தம்பிக்கும் திருமணம் என அவளை ஒரு வழி செய்து விட்டார்.

எப்படியோ அவரிடம் இருந்து தப்பித்து மித்ரனின் வீட்டிற்கு சென்று விவேகனைத் தனியாக சந்தித்து பேசினாள்.

 

அப்போது அவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்த நேரம்.

 

மித்ரனின் வீட்டு மாடியில் விவேகன் லக்ஷ்மியை முறைத்துக் கொண்டு நின்றிருக்க, அவள் கண்கள் குளமாக நின்றிருந்தாள். இந்த அழுமூஞ்சி லக்ஷ்மி விவேகனுக்கு மிகவும் புதிது.

 

முதலில் லக்ஷ்மி பேசினாள்.

 

‘உன் கிட்ட பேசணும்’.

 

‘என்ன?’

 

‘அவ வீட்டுக்கு வந்து இருக்கா’,

 

‘யாரு?’

 

‘அதான் என் அம்மா’.

 

‘அதுக்கு என் கிட்ட என்ன பேசனும்?’

 

‘எனக்கு கல்யாணம் பண்ண பாக்குறாங்க’

 

‘பண்ணிக்கோ’.

 

‘விளையாடாத’

 

‘உன் கிட்ட நான் ஏன் விளையாடணும்?’

 

‘புரிஞ்சிக்கோயேன் வேகா’!

 

இந்த முறை விவேகன் பதில் கூறவில்லை பதிலாக அவன் பார்வை அவளை ஆராய்ச்சியாக பார்த்தது.

என்றும் இல்லாத பதட்டம் அவளிடத்தில், அசட்டுத்தனத்தை கை விட்டவனாக அவளை அழுத்தமாக பார்த்தான்.

 

‘சரி மேகா என்ன ஆச்சு தெளிவா சொல்லு’. 

 

இத்தனை நாட்கள் யாருக்கும் தெரியாமல் மனதிற்குள் மட்டுமே அழைத்து பார்த்த பிரத்யேக அழைப்பு இருவரையும் மீறி வெளிப்பட்டிருந்தது ஆனால் அதனை கவனிக்கும் நிலையில் தான் இருவரும் இல்லை.

 

அதனை உணரும் போது காலம் இருவருக்கும் கை கூடுமோ?

 

‘என் அப்பா’ என ஆரம்பித்தவள் தன்னைப்பற்றி முழுவதும் கூறி சொத்திற்காக தன் அன்னை இப்போது கட்டாய கல்யாணம் பண்ண நினைப்பது முதல் அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

 

அனைத்தையும் கேட்டு கொண்டவன் அவளிடம் என்ன உதவி வேண்டும் என்று கூட கேட்காமல் ‘என்னால் எதுவும் பண்ண முடியாது. உன் அம்மா சொல்லும் படி கல்யாணம் பண்ணிக்கோ இல்லானா, எங்கனா போயிடு’ என கூறிவிட்டு சென்று விட்டான்.

 

அவள் அடுத்து பேசுவதற்கு கூட அவகாசம் கொடுக்காமல் செல்பவனை ஆற்றாமையோடு பார்த்தவள் கண்களில் அவளையும் அறியாது கண்ணீர் ஊற்று பெருகியது.

 

பிறகு ஒரு முடிவுடன் வீட்டிற்கு சென்றவள் தன் அன்னையிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து நடித்து அனைவரையும் ஏமாற்றி விட்டு,

நடு சாமத்தில் தான் சாகப் போவதாகவும் தன் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் அனாதை இல்லத்திற்கு எழுதி விட்டதாகவும் ஒரு கடிதத்தை எழுதி வைத்தவள், வீட்டில் இருந்த சொத்து பத்திரங்கள் நகைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டாள்.

 

மறுநாள் காலை லக்ஷ்மியின் கடிதத்தை பார்த்த அவளின் படிப்பறிவு இல்லாத அன்னையும் அவளின் கடிதத்தை உண்மையென நம்பி சொத்து பறிபோய் விட்டதை எண்ணி வருந்தினாலே ஒழிய பெற்ற மகளைப் பற்றி அவர் ஒரு சொட்டு கூட கண்ணீர் சிந்தவில்லை.

 

அதன் பிறகு லக்ஷ்மி தஞ்சையில் உள்ள ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்தவள் தன் அனைத்து அடையாளங்களையும் மறைத்து அழித்து தலைமறைவான வாழ்க்கையை வாழ பழகிக் கொண்டாள்.

 

அனைத்தையும் அழுதப் படியே கூறி முடித்தவள் விவேகனை தான் முதலில் நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவனோ மாபெரும் குற்றம் செய்த குற்றவாளி போல் தலை குனிந்து நின்றிருக்க, அங்கிருந்த அனைவரும் அவனை குற்றவாளியை போல் தான் பார்த்து கொண்டிருந்தனர்.

 

அங்கிருந்த அனைவரும் அவனைக் குற்றம் சாட்டும் பார்வைப் பார்க்க என்றும் போல் இன்றும் அவனை நம்பும் ஒரு ஜீவனான தென்றல் அவன் அருகில் சென்று அவன் தலையை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவள்,

 

“யாரு உன்ன நம்புறாங்களோ இல்லையோ விவு? நான் உன்ன முழுசா நம்பறேன். உன் தரப்புலயும் கண்டிப்பா நியாயம் இருக்கும்னு எனக்கு தெரியும். அத இவங்களுக்கும் சொல்லு விவு இப்புடி பேசாம நின்னு எல்லா பழியையும் நீ மட்டுமே ஏத்துக்காத”.

 

தென்றல் கூறியதை கேட்டவன் உள்ளுக்குள் எப்படி உணர்ந்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். அத்தனை நேரம் அவனுள் இருந்த இறுக்கம் தளர்ந்திருந்தது.

 

தன் முகத்தை தாங்கி நின்றிருந்த தென்றலின் கையை ஒரு கையால் இறுக பற்றி கொண்டு பேசத் துவங்கினான்.

 

“அன்னைக்கு லக்ஷ்மி வந்து என் கிட்ட எல்லாத்தையும் சொல்லி அழும் போது எனக்கு என்ன பதில் சொல்லணும்னே தெரில?”

 

“எனக்கு என்ன தான் வயசுக்கு மீறுன முதிர்ச்சி இருந்தாலும் அன்னைக்கு இருந்த சூழ்நிலையில நான் வெறும் பதினாறு வயசே ஆன சின்ன பையன் தானே, லக்ஷ்மிக்கும் அப்போ அதே வயசு தான இருந்து இருக்கும். தன்னோட வயசுல இருக்க ஒருத்தன் கிட்ட போய் இவ்ளோ பெரிய விஷயத்துக்கு உதவி கேக்குறோமேனு யோசிக்காத அவள தப்பு சொல்லாம எல்லாரும் என்னை குற்றவாளி மாதிரி பாக்குறீங்களே” என கூறியவனின் அடிப்பட்ட பார்வை தேவகியை நேரடியாக தாக்கியது.

 

அத்தனை நேரம் தென்றலின் கையை தடவிக் கொடுத்தவாறு அவளின் கையைப் பார்த்து கொண்டே பேசியவனின் பார்வை இப்போது நேரடியாக தேவகியைத் தாக்கியது. அதில் அந்த தாயின் உள்ளம் சிறிது குற்றவுணர்வை தாங்கி தான் நின்றது.

 

கண்கள் கலங்க விவேகனைப் பார்த்த தேவகி அவனைத் தன் அருகில் அழைத்து மடி சாய்த்துக் கொண்டார். விவேகனின் தலையை தேவகி ஆதரவாக கோதி விட அவன் மேலும் தொடர்ந்தான்.

 

அன்று,

 

லக்ஷ்மி அவளின் பிரச்சனைகளைக் கூற துவங்கிய சில நொடிகளிலே அந்த சிக்கலின் மைய புள்ளியை ஒருவாறு யூகித்த விவேகன் வேகமாக மனதிற்குள்ளாக திட்டங்களைத் தீட்டிக் கொண்டு இருந்தான்.

 

‘இது உண்மையாவே லூசா இல்ல லூசு மாதிரி நடிக்குதா! எவ்ளோ பெரிய சிக்கல கொண்டு வந்து என் தலைல போடுதே. இத வீட்ல இருக்க பெரியவங்க கிட்டதான சொல்லி இருக்கணும்?’ என விவேகனின் ஒரு மனம் யோசிக்க, மற்றொரு மனமோ இவ வீட்ல சொல்லாததும் நல்லது தான் என நினைத்தது.

 

லக்ஷ்மி அவள் நிலையைக் கூறி முடிக்கவும் விவேகன் அதற்கான முடிவை கண்டு பிடிக்கவும் சரியாக இருந்தது.

 

“எப்புடியும் இவ நம்ம சொல்லுறத கேக்க மாட்டா எதை செய்யாதனு சொல்லுறோமோ அது தான் செய்வ”

என மனதில் நினைத்தவன்,

லக்ஷ்மியிடம் கடுமையாகவே கூறினான். அப்போது தான் அவள் அதை செய்ய மாட்டாள் என தவறாக நினைத்து கொண்டு.

 

“என்னால் எதுவும் பண்ண முடியாது உன் அம்மா சொல்லும்படி கல்யாணம் பண்ணிக்கோ இல்லானா எங்கனா போயிடு” எனக் கூறியவன், தன் திட்டத்தை செயல்படுத்த விடியலை நோக்கி காத்திருந்தான்.

 

மறுநாள் காலை விவேகன் சென்ற இடம் காவல் நிலையம் அங்கு இவர்களின் நானாவிற்கு தெரிந்த ஒரு கான்ஸ்டபிள் இடம் லக்ஷ்மியை பற்றி கூறியவன் அவரை அழைத்து கொண்டு லக்ஷ்மியின் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது அவனை லக்ஷ்மி எழுதிய கடிதத்துடன் அவளின் அன்னை தான் வரவேற்றார்.

 

கான்ஸ்டபிள் சென்று அவரை விசாரிக்க அவரோ அப்படி எதுவும் இல்லை எனக் கூறி சாதித்தே விட்டார்.

 

அந்த காவலரும் விவேகனை தான் கடிந்து விட்டு சென்றார். அன்றைய சூழ்நிலையில் விவேகனுக்கு அனைத்துமே வில்லனாக மாறி இருந்தது.

 

எந்த வித ஆதாரமும் இல்லாமல் அவனால் வீட்டில் கூட அதைப் பற்றி கூற முடியவில்லை. அவன் வயது அதற்கொரு காரணமாக கூட இருக்கலாம்.

 

தேர்வுகளில் மதிப்பெண் குறைந்து விட்டாலே, வீட்டில் சொல்ல பயந்து மதிப்பெண் சான்றிதழில் பெற்றோரின் கையெழுத்தை திருட்டு தனமாக போட்டு கொள்ளும் வயது அல்லவா அது!

 

அந்த சிறிய விஷயத்திற்கே அப்படி என்றால் தன்னால் ஒரு பெண் மாயமாகி விட்டாள் என்பதை யார் தான் தைரியமாக வீட்டில் சொல்லுவார்கள்?

 

அதன் பிறகு விவேகனும் அவனால் முடிந்த வரை அவர்கள் இருக்கும் உள்ளூரிலே தேடிப் பார்த்தான் பயன் தான் கிடைக்கவில்லை.

 

இன்று…

 

அன்றைய நாளின் ஏமாற்றத்தில் இருந்து வெளிவந்த விவேகன் மீண்டும் தன்னை குற்ற குறுகுறுப்பிற்குள்  ஆழ்த்திக் கொண்டான்.

 

ஆனால் இப்போதும் தேவகியின் குழப்பம் தீர்ந்ததாக இல்லை. அதை விவேகனிடமே கேட்டும் விட்டார்.

 

“ஏன்டா எங்க கிட்ட சொல்லுறதுல அப்படி என்ன சிக்கல நீ கட்டுண்ட?”

 

“சிக்கல் உங்களுக்கு வராது டார்லிங் ஆனா தென்றலுக்கும் குட்டிமாக்கும் கண்டிப்பா ரொம்ப பெரிய சிக்கல் வந்திருக்கும். ஏன்னா?  மேகா அம்மா ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்ட ஆள் அப்படி” என விவேகன் கூறவும் லக்ஷ்மி வெகுண்டு எழுந்து விட்டாள்.

 

“அத கல்யாணம்னு சொல்லாத” -லக்ஷ்மி

 

“வேற எப்படி சொல்லணும்?” – விவேகன்

 

“அது கல்யாணம் இல்ல கண்றாவி” -லக்ஷ்மி

 

“உனக்கு புடிக்கலங்கிற காரணத்துக்காக எல்லாம் என்னால புனிதமான ஒன்ன தப்பா சொல்ல முடியாது” -விவேகன்

 

“அது புனிதம்னு நீ பார்த்தியா?” -லக்ஷ்மி

 

“அது கண்றாவினு நீ பார்த்தியா?” என விவேகன் எதிர் கேள்வி கேட்க,

 

“ஆமா கட்டுன புருஷன் உயிரோட இருக்கும் போதே வேற ஒருத்தன் கூட போறது புனிதமா?” -லக்ஷ்மி

 

“யோசிச்சி பேசு மேகா அப்புறம் உனக்கு தான் கஷ்டம்” -விவேகன்

 

“நான் ஏன் யோசிக்கனும் தப்பு பண்ண அவங்களே யோசிக்கல, நான் ஏன் யோசிக்கனும்? அது கண்றாவி தான் கண்றாவி தான் கண்றாவி தான்” லக்ஷ்மி ஆக்ரோஷமாக கத்தத் துவங்கினாள்.

 

விவேகனின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது. அவன் மேலே பேசும் முன் அவன் பேசப் போவதை யூகித்த தென்றல் அவன் வாயை அடைத்து விட அப்போது தான் அவன் கூற வந்த வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தான் விவேகன்.

 

திருமணம் எனும் பந்தத்தை உருவாக்காமல் ஒரு பெண்ணை தாய்மை அடைய செய்தது மட்டும் புனிதமா? என்று தான் விவேகன் கூற வந்தது ஆனால் தென்றல் தடுத்து விட்டாள்.

 

இல்லை என்றால் அங்கிருந்த அனைவருக்கும் அவன் வில்லன் ஆகி போயிருப்பான்.

 

ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்த லக்ஷ்மியை சமாதானம் செய்வதில் மற்றவர்கள் இருந்ததால் விவேகன் செய்யவிருந்த தவறு அவர்களுக்கு தெரியாமலே போனது.

 

விவேகனிடம் ஆக்ரோஷமாக கத்தியவள் அழுதவாறே மயங்கி விட, இப்போது மித்துமா அவளுக்கு மருத்துவம் பார்த்து கொண்டிருந்தார்.

 

லக்ஷ்மி, மித்துமா, அக்ஷா, தென்றல் இவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அந்த அறையை விட்டு வெளியே வந்திருந்தனர்.

 

“இப்போ ஆச்சும் முழுசா சொல்லித் தொலைடா” என மித்ரனே சற்று கோவமாக கேட்டு விட்டான்.

 

“லக்ஷ்மி அம்மா கல்யாணம் பண்ணி கிட்ட ஆளு ஒரு ரௌடி. பணத்துக்காக கொலை, கொள்ளை, ஆள் கடத்தல்னு எல்லாம் பண்ணுவான். ரொம்ப பெரிய க்ரிமினல். ஆனா. இது வெளிய யாருக்கும் தெரியாது” என விவேகன் கூற,

 

“வெளிய யாருக்கும் தெரியாது ஆன உனக்கு எப்படி தெரியும்?” என மித்ரன் கேட்க,

 

“அந்த ஆளோட அடி ஆள் நம்ம கடை கஸ்டமர்” என பதில் தர்மராஜ் இடம் இருந்து வரவும், தேவகி அவரை முறைக்கவும் இப்போது விவேகனின் பின் பம்முவது அவர் முறை ஆனது.

 

மீண்டும் விவேகனே தொடர்ந்தான்.

 

“நீங்க லக்ஷ்மிக்கு உதவி இருந்தா கண்டிப்பா அந்த ஆளால தென்றலுக்கும் அக்ஷாக்கும் தான் பிரச்சினை டார்லிங். அதான் உங்க கிட்ட சொல்லாம குழந்தை திருமணம்னு போலிஸ் கிட்ட கம்ப்லெய்ன்ட் கொடுக்க முடிவு பண்ணேன்”.

 

“ஆன அதுக்குள்ள இந்த லூசு ஊர விட்டு பொய்டுச்சு. நான் எதை செய்யாதனு சொல்லுறேனோ அத தான் செய்வா, அதுக்கு தான் நான் அன்னைக்கு அப்படி சொன்னேன்”.

 

“எனக்கு தெரியும் அவ நான் சொன்ன அதை செய்ய மாட்டானு அன்னைக்குனு பார்த்து சரியா தப்பான நேரத்துல என் பேச்ச கேப்பானு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்” என விவேகன் பாவம் போல கேட்க, அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

 

அப்போது அறையில் இருந்து மித்துமா வெளியே வர, “ஏன் மித்து நீ கூட அன்னைக்கு லக்ஷ்மி வீட்டுக்கு வந்தத சொல்லவே இல்லையே” என தேவகி கேட்க,

 

“இல்ல தேவா அது எதோ எப்போதும் போல வந்து போனானு தான் நான் இன்னைக்கு வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன். இப்போதான் தெரியும் அதுல இவ்ளோ சிக்கல் இருக்குனு”என மித்துமா கவலைப்பட்டு கொண்டார்.

 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!