Anandha Bhairavi 11
Anandha Bhairavi 11
ஆனந்த பைரவி 11
அருந்ததியும், லியமும் கிளம்பிச் சென்று ஒரு வாரம் ஆகி இருந்தது. பைரவியை தன்னோடு அழைத்துச் செல்ல பிரம்ம பிரயத்தனங்கள் செய்து பார்த்தார் அருந்ததி. எதுவும் வேலைக்காகவில்லை.
சந்திரன் எப்போதும் போல பைரவியின் முடிவிற்கு டெலிஃபோனில் சம்மதம் சொல்ல அருந்ததிதான் தன் முடிவை மாற்ற வேண்டி இருந்தது. அப்பாவிற்கும், மகளிற்கும் அர்ச்சனை செய்தபடியே அவர் கிளம்ப, கமலாவிற்கு அவரை சமாதானம் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
பாட்டியும் வந்திருந்தவர், தான் பைரவியை நன்றாகப் பார்த்துக் கொள்வதாக கற்பூரம் அணைத்து சத்தியம் பண்ணாத குறையாக சொன்ன பின்பே ஓரளவு சமாதானம் ஆனார்.
கால் இப்போது ஓரளவு குணமாகி இருக்கவே பைரவியால் நடக்க முடிந்தது. ஆனந்தைப் பார்க்க முடியாமல் போனாலும் தினம் அவனிடமிருந்து வரும் சின்னச் சின்ன மெஸேஜ்களே பைரவியைப் புதுப்பிக்க போதுமானதாக இருந்தது.
காலையில் ஒரு குட் மார்னிங் தவறாமல் வந்து விடும்… அன்றைய பொழுதே வண்ண மயமாகிவிடும் பைரவிக்கு. மெதுவாக ஸ்கூலுக்கும் போக ஆரம்பித்திருந்தாள்.
வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஆனந்தன் முதலில் அனுமதிக்காத போதும், அவள் நிரம்பவே கவனம் எடுப்பதாக சொன்ன பின்பே சரியென்றான்.
அதுவும் காலையும் மாலையும் பாட்டி வீட்டு கார் வந்துவிடும். இயல்பாகவே எல்லாம் போனது.
லியம் இரண்டு தடவை அழைத்து அவள் உடல் நலம் பற்றி விசாரித்திருந்தான்.
**–**–**–**–**–**
அன்று சனிக்கிழமை. பாட்டி வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கவே, கிளம்பினாள் பைரவி.
காலையிலேயே எழுந்து கால் நனையாத வண்ணம் குளியலை முடித்தவள் சிம்பிளாய் ஒரு க்ரீம் கலர் புடவையை கட்டிக் கொண்டாள். மெரூன் வண்ண போடரும் அதே வண்ணத்தில் ஹெட் பீசுமாக அழகாக இருந்தது புடவை. மெரூன் வண்ண ஜாக்கெட்டில் சின்னதாய் ஜரிகைப் புள்ளிகள். பாந்தமாய் பொருந்தியது பைரவிக்கு.
கார் வந்துவிடவே ஆவலாய்க் கிளம்பினாள் பைரவி. ஆனந்தைப் பார்க்கும் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது அவள் முகத்தில்.
பாட்டி வீட்டை அடைந்த போது சாதனா ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். பின்னோடு வந்த வாசுகியும் அவளை தோளோடு அணைத்து நலம் விசாரிக்க, ஏதோ தன் வீடு வந்த உணர்வு பைரவிக்குள். சாதனாவிற்கு லீவு கிடைக்காததால் அவர்களால் வந்து பைரவியைப் பார்க்க முடியவில்லை. அதனால் பெண்கள் மூன்று பேரும் உட்கார்ந்து அத்தனை கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ஸாரி அண்ணி! என்னால உங்களைப் பார்க்க வர முடியலை. அம்மாவை நான் போகச் சொன்னேன். பாட்டி தான் பைரவியை பாத்துக்க நாங்கெல்லாம் இருக்கோம், நீ சாதனாவை தனியா விட்டுட்டு வர வேணாம்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. எங்கம்மாவுக்குத்தான் மாமியார் சொல் வேதமாச்சே.” அவள் அங்கலாய்க்க வாசுகி சிரித்தார்.
“நீங்க எப்படி அண்ணி? எங்கம்மா மாதிரியா? இல்லை…”
சாதனா வம்பிழுக்க, வெட்கச் சிரிப்பு சிரித்தாள் பைரவி.
“போதும் உன்னோட வம்பு. நீ சொல்லும்மா, இப்போ கால் எப்படி இருக்கு?” வாசுகி வினவ…
“கொஞ்சம் நடக்க முடியுது அத்தை. வலியெல்லாம் நல்லாவே குறைஞ்சிருச்சு.”
“இன்னும் கொஞ்ச நாள்ல பி ஓ பி யை ரிமூவ் பண்ணிடுவாங்க அண்ணி. சின்ன ஃப்ராக்ஷர்தானே. அதால பயமில்லை“
மருத்துவ மாணவியாய் சாதனா பதில் சொல்ல…
“நீ கத்துக்கிறதுக்கு பைரவிதான் கிடைச்சாளா?” குரல் வந்த திசையில் மூவரும் திரும்பிப் பார்க்க ஆனந்தன் வந்து கொண்டிருந்தான். வந்தவன் நேராக பைரவி அமர்ந்திருந்த இரட்டை சோஃபாவில் அவளுக்கருகே அமர விதிர்விதிர்த்துப் போனாள் பைரவி. என்ன பண்ணுகிறான் இவன்! அவள் முகத்தைப் பார்த்த வாசுகிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“எல்லோருக்கும் டீ கொண்டு வரேன், பேசிட்டு இருங்க” என்று சொல்லி நழுவி விட்டார்.
“ஆமா! நான் கத்துக்க அண்ணிதான் கிடைச்சாங்க. அதுக்கென்னவாம் இப்போ.” அவளும் பதிலுக்கு வார…
“அப்போ ஒத்துக்கிறியா? நீ கத்துக் குட்டிதான்னு, அப்போ இனிமே எங்கிட்ட டாக்டர் பந்தா எல்லாம் காமிக்கக் கூடாது“
அவர்கள் மாறி மாறி அரட்டை அடிக்க அதிசயமாய்ப் பார்த்திருந்தாள் பைரவி. ஒற்றையாய் வளர்ந்திருந்தவளுக்கு சுவாரஸ்யமாக இருந்தது இவர்கள் கூத்து. அதற்குள் கைகளில் டீயோடு வந்த பாட்டி…
“சாதனா பூஜைக்கு நேரமாச்சு. அந்த வேலைகளை கவனி. போ, அம்மாக்கு உதவி பண்ணு. அப்புறமா பைரவி கூட உக்கார்ந்து பேசலாம்” என விரட்ட…
டீயை எடுத்துக் கொண்டு கண்களாலேயே பைரவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு சாதனா நகர… பைரவிக்கும், ஆனந்துக்கும் டீயைக் கொடுத்தார் பாட்டி.
டீயை எடுத்துக் கொண்டவள்…
“என்ன பூஜை பாட்டி? ஏதாச்சும் விசேஷமா?”
“விசேஷம் எல்லாம் ஒன்னும் இல்லைம்மா. கணபதி ஹோமம் பண்ணலாம்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன். இந்த வாரம் என் பையனும் அதிசயமா ஃப்ரீயா இருந்தான். அதான் எல்லாரையும் வரச் சொல்லிட்டேன். மங்கையால வர முடியலை. ஐஷூவையாவது அனுப்புன்னேன். அவளுக்கும் ஏதோ பரிட்சை இருக்காம்“
“ஓஹ்…! அப்படியா“
“நீ சீக்கிரம் டீயைக் குடிம்மா. ஐயர் இப்போ வந்திடுவார். நான் எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு வந்திடுறேன்” பாட்டி நகர… ஆனந்தைத் திரும்பிப் பார்த்தாள். ஃபோனில் எதையோ தீவிரமாக டைப் பண்ணிக் கொண்டிருந்தவன்…
“ஒரு நிமிஷம் பைரவி இதோ வந்தர்ரேன்” என்று சொல்லி நகர்ந்தான். அவர்கள் உட்கார்ந்திருந்த லிவிங் ரூமிற்கு அடுத்ததாக இருந்த ஒரு சின்ன ஸ்பேசில் ஹோமம் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. பைரவி அங்கு வருவதைக் கண்ட சாதனா..
“அண்ணா எங்க அண்ணி?” என… ஃபோன் என கைகளால் சமிக்ஞை காட்டினாள்.
“ஓ…! அப்படியா, அப்போ நீங்க எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுறீங்களா?”
“சொல்லு சாதனா“
“அண்ணா ரூம்ல ஹோமத்துக்கு வாங்கின பொருட்கள் கொஞ்சம் ஒரு பேக்ல போட்டமாதிரி இருக்கும். அதை கொஞ்சம் எடுத்துட்டு வர்ரீங்களா?”
“அண்ணா ரூமா? நான் எப்படி சாதனா, அங்க…” பைரவி தயங்க…
“ப்ளீஸ் அண்ணி.” அதற்கு மேலும் தயங்குவது சரியில்லை என்று பட மெதுவாக நடந்தாள் பைரவி. ஏற்கெனவே தனக்கு அறிமுகமான இடம்தான். இருந்தாலும் ஏனோ மனது படபடத்தது.
பெரியவர் எல்லாரும் வீட்டில் இருக்கும் போது இது நாகரிகம் இல்லை என்று பட்டாலும் சாதனாவையும் புறக்கணிக்க முடியவில்லை.
எல்லாப் பட்டிமன்றமும் அந்த ரூம் கதவைத் திறக்கும் வரைதான். உள்ளே நுழைந்த போது அத்தனை பரவசமாக இருந்தது பைரவிக்கு. அன்றொரு நாள் வந்தபோது இல்லாத உரிமை உணர்வு இன்று வந்தது. சிரித்துக் கொண்டே சாதனா சொன்ன பேகைத் தேடினாள். அப்படி ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை பைரவிக்கு.
எதைச் சொன்னது இந்தப் பெண். யோசித்தபடி நின்றவளைக் கவர்ந்தது அந்த ஃபோட்டோ. அன்று அவள் பார்த்து மயங்கி நின்ற அதே ஆனந்தின் ஃபோட்டோ.
பார்த்த மாத்திரத்தில் அத்தனையையும் மறந்து அதன் அருகில் சென்றவள், தன் கைகளால் அதன் வரி வடிவத்தை அளந்து பார்த்தாள். தன்னை மறந்த மோன நிலையில் ஃப்ரேமிற்குள் இருந்த ஆனந்தைத் தீண்டிப் பார்த்தாள்.
நெற்றியில் ஆரம்பித்த அவள் சுட்டு விரல் பவனி புருவங்களை நீவி… கன்னத்தில் கோலமிட்டு… நாடியில் முடிந்தது. அந்த, செதுக்கினாற் போல் இருந்த இதழ்களை தீண்டிப் பார்க்கும் தைரியம் பைரவிக்கு இருக்கவில்லை.
ஏதோ அரவம் கேட்க திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தாள். மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு கதவின் மேல் சாய்ந்தபடி அவளையே பார்த்திருந்தான் ஆனந்தன். ஏனோ பைரவிக்கு வெட்கமாகப் போய்விட்டது. சங்கடத்தில் நெளிந்தபடி…
“இல்லை… சாதனாதான்… ஏதோ பூஜை சாமான்கள் இருக்கு… எடுத்துட்டு வாங்கன்னு…” அவள் திணற, இதழ்க்கடை ஓரம் சிரித்தவன்…
“எடுத்தாச்சா?” என்க, மானம் போனது பைரவிக்கு. தலையைக் குனிந்தவள் இடம் வலமாகத் தலை ஆட்டினாள், இல்லை என்பதாய். சிரித்தபடியே நடந்து வந்தவன் வோட்ரோபைத் திறந்து அதிலிருந்து இரண்டு பைகளை எடுத்துக் கொடுத்தான்.
“இதைச் சொல்லி இருப்பா” முகம் மலர்ந்தவள்…
“ஓ…! ரூம்ல இருக்குன்னு சொன்னா. ஆனா எங்கேன்னு சொல்லலை. குடுங்க நான் குடுத்திடுறேன்” என்று கையை நீட்ட, இல்லை எனத் தலை ஆட்டியவன்…
“இது உனக்கு பைரவி.” என்றான் ஒருமையில்.
“எனக்கா…?” ஆச்சர்யப்பட்டவள் கைகளில் அதை வைத்தவன்…
“பிரிச்சுப் பாரு” என்றான்.
பை கொஞ்சம் கனக்கவே கட்டிலில் வைத்தவள், பிரித்துப் பார்த்தாள்.
பட்டுப் புடவை! புடவையின் கனம் சொல்லாமல் சொன்னது அதன் விலை என்னவென்று.
பளிச்சென்ற மாம்பழ மஞ்சள் கலர். அடர்ந்த சிவப்பில் அன்னமும் மாங்காய் டிசைனுமாக த்ரெட் வேர்க் செய்த போடர். முந்தானையும் போடரைப் போலவே பெரிய சைசில் இருக்க, அத்தனை அழகாக இருந்தது புடவை.
“பிடிச்சிருக்கா?” அவன் கேட்க, நிமிர்ந்து பார்த்தவள்…
“யாரு செலக்ட் பண்ணினா?” அவன் புன்னகைக்க…
“நீங்களா…? ரொம்ப நல்லாருக்கு” என்றாள்.
“மத்ததை பிரிச்சுப் பாக்கலையா?” என, அதை எடுத்தவள் உள்ளிருந்ததை வெளியே எடுத்தாள். வெல்வட் பெட்டி. நிமிர்ந்து அவனைப் பார்க்க… ‘பிரித்துப் பார்‘ என்பதாய் தலை ஆட்டினான்.
ஒற்றை வரிசையில் முத்துக்கள் கோர்த்திருக்க, ஒவ்வொரு முத்தின் முடிவிலும் ‘S’ வடிவத்தில் வேலைப்பாடுகள் இருந்தது. ஒவ்வொரு ‘S’ வடிவத்தின் முடிவிலும் மூன்று முத்துக்கள் கோர்க்கப் பட்டிருந்த ‘நெக்லேஸ்‘ (necklace).
அவ்வளவு அழகாக இருந்தது. இதுவும் அவன் தெரிவு என்பது சொல்லாமலே புரிந்தது பைரவிக்கு. ‘இதெல்லாம் எதற்கு இப்போது?’ என்பதாய் அவள் பார்க்க… தோள்களை குலுக்கியவன்…
“தோணுச்சு, வாங்கினேன்.” என்றான் அவள் மனதைப் படித்தது போல.
“நான் ஒன்னும் வாங்கலையே உங்களுக்கு.”
“வாங்கித்தான் குடுக்கணும்னு ஒன்னும் சட்டம் இல்லை.” என்று அவன் வம்பிழுக்க, குறும்பாய் புன்னகைத்தவள்…
“ஆமாம் இல்லை.” என்றபடி அவன் பக்கத்தில் வர… ஆச்சர்யப் புன்னகையுடன் பார்த்திருந்தான்.
பக்கத்தில் வந்தவள், தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அவன் கரத்துக்காக கை நீட்ட… அவன் புன்னகை விரிய தன் இடக் கரத்தை நீட்டினான். அவன் சின்ன விரலில் அவள் மோதிரத்தை அணிவித்தவள்…
“இந்த விரலுக்குத் தான் சைஸ் சரியா இருக்கு” என்றாள்.
ஒற்றை வளையமாக சற்றுத் தடிமனாக இருந்த அந்த மோதிரத்தில் இரு சின்ன வைரங்கள் வெளித் தெரியாதவாறு பதிக்கப்பட்டிருந்தது.
“இது நியாயமில்லை பைரவி“
“என்னாச்சு ஆனந்த்?” அப்பாவியாக அவள் விழி விரிக்க…
“குடுக்கல் வாங்கல்ல நியாயமா இருக்கணும் பைரவி. கணக்கை நேர் பண்ணு” என்று அவன் சட்டமாக நிற்க… புன்னகைத்தவள் அவன் அருகே நெருங்கி அவன் ஒற்றைத் தோளில் தன் கரம் வைத்து லேசாக எம்பினாள்.
அவள் நோக்கம் புரிந்தவன், வேண்டும் என்றே லேசாக தன் தலையை பின்னோக்கி சாய்க்க…
“ஐயோ… ஆனந்த்!” சிணுங்கினாள் பைரவி. வாய் விட்டு சிரித்தவன் அவள் இடையில் கை கொடுத்து லேசாகக் தூக்க… அவன் கன்னத்தில் லேசாக முத்தம் வைத்தாள்.
அந்த மென்மையான இதழ் ஸ்பரிசத்தில் தன்னை ஒரு நிமிடம் தொலைத்தவன், சட்டென தன்னை மீட்டுக் கொண்டு…
“சீக்கிரம் ரெடியாகலாம் பைரவி. எல்லாரும் நமக்காக காத்திருப்பாங்க.” சொல்லிவிட்டு மட மடவென வெளியேறினான் ஆனந்தன்.
பைரவியின் ஆனந்த்!