anandha bhairavi 13

anandha bhairavi 13

ஆனந்த பைரவி 13

இரண்டு வாரங்கள் ஓடி விட்டன. ஆனந்தன் வேலையில் முழு மூச்சாக இறங்கி விட்டான். வீட்டிற்கு கூட அதிகம் போக முடியவில்லை. எவ்வளவு தடுத்தும் கேளாமல் பாட்டி நேரத்திற்கு சாப்பாட்டை அனுப்பி வைத்து விடுவார்.

பைரவி இரண்டு முறை வந்து போனாள். இருந்தும் நின்று நிதானமாக பேச முடியவில்லை. வேலை நடந்து கொண்டிருப்பதை அவளை அழைத்துச் சென்று காண்பித்தான்.

ரிசோர்ட்டுக்கு பக்கத்தில் சேர்ந்தாற் போல இருந்த நிலம் விலைக்கு வரவே இரண்டு வருடங்களுக்கு முன்பு அதை வளைத்துப் போட்டிருந்தான். அதனால் இப்போது நிலத்துக்குப் பஞ்சம் இருக்கவில்லை.

வேலைகள் எந்தத் தடையுமின்றி மட மட வென்று நடந்து கொண்டிருந்தன. இது அத்தனைக்கும் பின்னே ஆனந்தன் என்ற தனி மனிதனின் விடா முயற்சி இருப்பதை பைரவியால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனந்த், ரொம்பவே ஸ்ட்ரெயின் பண்ணிக்குறீங்களோ?” அவள் அக்கறையோடு கவலைப்படலேசாக சிரித்தவன்,

வேர்க் வைல் யூ வேர்க் பைரவி!” (work while you work) என்றான்.

எல்லாவற்றையும் அசை போட்டபடி ரிவோல்விங் செயாரில் இடம் வலமாக ஆடிக்கொண்டு தனது டேபிளில் இருந்த அந்த சின்ன ஃபோட்டோ ஃப்ரேமை பார்த்தபடி இருந்தான் ஆனந்தன்.

மெல்லிய சிரிப்பு இதழ்களில். ஹோமம் நடந்த அன்று சாதனா எடுத்த ஃபோட்டோ.

பாட்டி எதையோ சொல்லி பைரவியைக் கலாய்க்க அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத போது எடுத்திருந்தாள். ‘ஆனந்தனைப் பார்த்து லேசான வெட்கத்தோடு பைரவி புன்னகைக்க, ஆனந்தன் அதை ஆசையோடு பார்த்திருந்தான்

ஃபோட்டோவில் லயித்திருந்தவனை கலைத்தது இன்டர்கொம். இணைப்பை உயிர்ப்பிக்க ரிஸெப்ஷனில் இருக்கும் லேடி லைனுக்கு வந்தார்.

ஸெர் உங்களை மீட் பண்ண ஒரு லேடி வந்திருக்காங்க

அப்பொயின்மென்ட் இருக்கா?”

இல்லை ஸெர், ஆனா பெயர் சொல்ல சொன்னாங்க

யாரது?”

மிஸ். ஆர்த்தி ஃப்ரொம் திருச்சி

வாட், கம் அகெய்ன்!”

மிஸ். ஆர்த்தி, ஃப்ரொம் திருச்சி

ரிஸெப்ஷன்சிசிடிவியை எனக்கு கணெக்ட் பண்ணுங்க

யெஸ் ஸெர்” 

சிஸ்டத்தை உயிர்ப்பித்தவன் அதில் பார்க்க சந்தேகமேயில்லாமல் அங்கே நின்றது ஆர்த்தி!

இவ எதுக்கு என்னைப் பார்க்க வந்திருக்கா?’ ஆச்சரியமாக இருந்தது ஆனந்தனுக்கு.

வரச் சொல்லுங்கஅனுமதி கொடுத்தவன் தனக்கு முன்னால் இருந்த அந்த ஃபோட்டோவை ஒரு முறை பார்த்துக் கொண்டான்.

கதைவை தட்டும் ஒலி கேட்க, அனுமதி கொடுத்தான். உள்ளே வந்தது சாட்ஷாத் ஆர்த்தியே தான். அலட்டிக் கொள்ளாமல் இருக்கையை காட்டினான்.

சொல்லுங்க மிஸ். ஆர்த்தி

எப்படி இருக்கீங்க ஆனந்தன்?”

ம் ரொம்ப நல்லா இருக்கேன். என்ன திடீர்னு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க? அரவிந்தன் கூட ஒன்னும் சொல்லலையே.” கொஞ்சம் தடுமாறியவள்,

உங்களை பார்க்கத்தான் வந்தேன்

அப்படியா! சொல்லுங்க, எந்த வகையில நான் உங்களுக்கு உதவ முடியும்?”

ரொம்ப ஒஃபிஷியலா பேசுறீங்க ஆனந்தன்குரல் கொஞ்சம் கலங்கினாற் போல் வந்தது.

வேற எப்படி நான் உங்ககிட்ட பேச முடியும். அரவிந்தனோட தங்கைன்னா?”

அதையும் தாண்டி நமக்குள்ள ஒன்னுமே இல்லையா?” ஆச்சரியமாக அவளைப் பார்த்தான் ஆனந்தன். என்ன சொல்கிறது இந்தப் பெண்?

என்ன சொல்ல வர்றீங்க மிஸ். ஆர்த்தி? நமக்குள்ள அப்படி என்ன இருக்கு?”

நாம ரெண்டு பேரும் நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்திருக்கோம் ஆனந்தன்.”

வந்திருந்தோம். ஆனா அதை ஒன்னுமே இல்லாமல் பண்ணினது நீங்க தானே

என் மேல மட்டும் பழி சொல்லாதீங்க ஆனந்தன். நம்ம ரெண்டு பேருக்குமே அதில பங்கிருக்கு

கண்டிப்பா இல்லை! என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு நான் விட்டுக் கொடுத்தேன். ஆனா அதை ஏத்துக்கிற மனசு உங்களுக்கு இருக்கலை.”

சரி, என்னோட தப்புத் தான். நான் ஒத்துக்கிறேன். நானும் விட்டுக் குடுத்திருக்கனும். தப்புப் பண்ணிட்டேன். ஆனாலும் நடந்த நிச்சயதார்த்தம் நடந்தது தானே ஆனந்தன்?”

அதுக்கு?” ஒரு கூர் பார்வை பார்த்தான் ஆனந்தன்.

இப்படி தடாலடியா பேசினா எப்படி ஆனந்தன்?”

மிஸ். ஆர்த்தி, ரிசோர்ட்ல பில்டிங் வேர்க் நடந்துக்கிட்டு இருக்கு. அப்பொயின்மென்ட் இல்லாம பார்க்க வந்திருக்கீங்க. என்னால ஆற அமர எல்லாம் பேசிக்கிட்டு இருக்க முடியாது. ப்ளீஸ், நீங்க சொல்ல வர்றதை கொஞ்சம் சீக்கிரமா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்

நான் நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன். நடந்த நிச்சயதார்த்தத்தை நாம ஏன் ரீகன்சிடர் பண்ணக் கூடாது?”

அவள் அதைச் சொன்ன மாத்திரத்தில் அத்தனை கோபம் வந்தது ஆனந்தனுக்கு. இந்தப் பெண் என்னை என்ன இவள் வீட்டு நாய்க்குட்டி என்று நினைத்துக் கொண்டாளா? இவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இவள் பின்னாடி போக.

தன் கோபத்தை முயன்று கட்டுப்படுத்தியவன், தனக்கு முன்னால் இருந்த அந்த ஃபோட்டோவை எடுத்து அவள் புறம் திருப்பி வைத்தான். ஆர்த்தியின் பார்வையில் அப்பட்டமான ஆச்சர்யம் தெரிந்தது.

பைரவி!” அவள் உதடுகள் முணுமுணுத்தன. எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ஆர்த்தி.

**–**–**–**–**–**

ஏதோ ஒன்று ஆனந்தனை தொல்லை பண்ணிக் கொண்டிருந்தது. என்ன திண்ணக்கம் இருந்தால் இந்தப் பெண் இப்படி வந்து நிற்பாள். அத்தனை கோபமும் அரவிந்தன் மேல் பாய அவனை தொடர்பு கொண்டான்.

ஹலோ ஆனந்தா, எப்படி இருக்கே?”

நான் இருக்கிறது இருக்கட்டும், உன் தங்கைக்கு எப்படி என் ரிசோர்ட் அட்ரஸ் தெரியும்?”

ஆனந்தா, கோபப்படாம நான் சொல்றதை கொஞ்சம் கேளு

இன்னும் என்னத்தை பொறுமையா நான் கேக்கணும் அரவிந்தா? நீதான் எல்லாத்தையும் ஆரம்பிச்சே. உன் தங்கை எல்லாத்தையும் முடிச்சு வச்சா. குடும்ப மானமே கப்பலேறிச்சு. இதுவரைக்கும் உன்னை ஏதாவது சொல்லி இருப்பனா? எல்லாத்தையும் தலை முழுகிட்டு நிம்மதியா இருக்கலாம்னா திரும்பவும் உன் தங்கை வந்து நிக்குறா. இதுக்கு நீயும் சப்போர்ட்டா?”

அப்படி இல்லைப்பா. அவளோட மனசை அவளே புரிஞ்சுக்கலைடா. இப்போ அதை நினைச்சு ரொம்ப வேதனைப்படுறா. எத்தனையோ வரன் பார்த்தாச்சு. எதையுமே ஒத்துக்க மாட்டேங்குறா. அவளோட மனசுல நீதான் இருக்க ஆனந்தா. அது அவளுக்கே புரியலை. முட்டாள்தனமா ஏதேதோ கன்டிஷன் போட்டு அவ லைஃபை அவளே நாசம் பண்ணிக்கிட்டா.”

அது உன்னோட பிரச்சினை. அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே?”

ஆனந்தா ப்ளீஸ்டா, இப்படிப் பேசாதடா. தப்புதான் ஆர்த்தி பண்ணினது பெரிய தப்புதான். அதுக்காக அவளை தண்டிக்க நினைக்காதடா

அரவிந்தா! உனக்கு விஷயமே புரியலை. நான் என் லைஃப் பார்ட்னரை டிசைட் பண்ணியாச்சு. இட்ஸ் டூ லேட்.”

ஃப்ரெண்ட்ஸ் ஸர்க்கிள்ள விசாரிச்சேன், வீட்ல இன்னும் எதுவும் டிசைட் பண்ணலைன்னு பசங்க சொன்னாங்க.”

இது நான் டிசைட் பண்ணினது அரவிந்தா.”

சந்தோஷமா இருக்குடா. அது சரி யாரு பொண்ணு? எனக்குக் கூட சொல்ல மாட்டியா?” அத்தனையையும் மறந்து ஒரு நல்ல நண்பனாக அவன் பேச,

எல்லாம் உனக்குத் தெரிஞ்சவங்க தான்.”

அது யாருடா? எனக்குத் தெரிஞ்சவங்க?”

பைரவி

யாரு! ஆர்த்தியோட ஃப்ரெண்ட் பைரவியா?” அரவிந்தன் ஆச்சரியப் பட்டுப் போனான்.

நம்ப முடியலையே ஆனந்தா!”  ஆனந்தன் அத்தனையையும் அறவிந்தனிடம் கொட்ட,

! இவ்வளவு நடந்திருக்கா? நான் படிப்பு முடிஞ்ச கையோட அம்மா அப்பா கூட இருக்கப் போயிருக்கா அப்படீன்னுதான் நினைச்சேன். பைரவி ரொம்ப நல்ல பொண்ணூடா. எனக்கு ஆர்த்தி வேற பைரவி வேற இல்லை. ஹா ஹா, எங்க போனாலும் கடைசியில நீ இந்த அரவிந்தனுக்கு மாப்பிள்ளைதான் ஆனந்தா!” அரவிந்தன் வாய்விட்டு சிரிக்க, அவனோடு ஆனந்தனும் சேர்ந்து கொண்டான்.

வெளியே சிரித்துக் கொண்டாலும் அரவிந்தன் மனம் கனத்துப் போனது. தனக்குக் கிடைத்த நல்ல வாழ்க்கையை இந்தப் பெண் கெடுத்துக் கொண்டாளே என்று அவன் கவலைப்படாத நாளில்லை. ஆனந்தனை அவனுக்கு நன்றாகத் தெரியும். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று நண்பர்கள் கொட்டமடிக்கும் போது அவர்களோடு சேர்ந்து கொண்டாலும் எப்போதும் எல்லை மீறாதவன். அவர்கள் நண்பர் வட்டத்தில் ஆனந்தனுக்கு என்று ஒரு நல்ல பெயர் எப்போதும் உண்டு. அதனால்தான் தன் தங்கைக்கு அவனைப் பார்த்தான். வெண்ணெய் திரண்டு வரும் போது பாத்திரத்தை உடைத்த கதையாக ஆர்த்தி சர்வ நாசம் பண்ணினாள்

அரவிந்தன் எவ்வளவோ பேசிப் பார்த்தான். எதுவும் வேலைக்காகவில்லை. சரி அவள் வாழ்க்கை அவள் இஷ்டம் என்று விட்டு விட்டான். பிரச்சினை அதன் பின்னர் தான் ஆரம்பித்தது.

வந்த வரன்களை எல்லாம் ஏதாவது ஒன்று சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள். சரி அவளுக்குப் பிடிக்கவில்லை என்று சாதாரணமாகத்தான் நினைத்தான். ஆனால் குடும்பத்தில் அத்தனை பேரும் நல்லதாக நினைத்த வரன்களை எல்லாம் மறுத்த போது அரவிந்தனுக்கு மணி அடித்தது

ஆர்த்தியை ஒரு நாள் வெளியே அழைத்துச் சென்று மனம் விட்டு பேசினான். மீண்டும் ஆனந்தன் பேச்சு வந்த போது தான் ஆர்த்திக்கே தன் மனம் புரிந்தது. தான் எத்தனை பெரிய முட்டாள்தனத்தை பண்ணி இருக்கிறோம் என்று தெரிந்தது. ஆனால் இன்னும் காலங் கடக்கவில்லை என்றே இருவரும் முடிவெடுத்தார்கள். ஆனால் அவர்களுக்காக காலம் காத்திருக்கவில்லை என்று அப்போது அவர்களுக்குப் புரியவில்லை.

**–**–**–**–**–**

முற்று முழுதாக மூன்று நாட்கள் இன்டீரியர் டிசைனரோடு கழிந்தது ஆனந்தனுக்கு. மூன்று நாட்களும் வீட்டிற்குக் கூடப் போகவில்லை. பைரவியும் ஏனோ தொடர்பு கொள்ளவில்லை. இவனுக்கும் நேரம் கிடைக்காததால் கூப்பிட முடியவில்லை. இன்று அழைத்துப் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஃபோன் சிணுங்க, அதை எடுத்தபோது பாட்டி என்றது.

சொல்லுங்க பாட்டி

ஆனந்தா, நேத்து ராத்திரியே உன்னைக் கூப்பிடலாம்னு நினைச்சேன். நீதான் ரொம்ப பிஸியா இருக்கேன், ரெண்டு நாளைக்கு என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லிட்டியே.”

சரி இப்ப சொல்லுங்க பாட்டி.”

நான் வேற என்னத்தை கேக்கப் போறேன். பைரவி உன்னைக் கூப்பிட்டு பேசினாளா? போய் சேந்துட்டாளா என்னன்னு ஒரு தகவலும் இல்லை. அதான் உன்னைக் கேக்கலாம்னு எடுத்தேன்

பாட்டி என்ன சொல்கிறார்? பைரவி எங்கே போனாள்? என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே? ஆனந்தனுக்கு தலை பாரமாக இருந்தது. இவன் மௌனம் பாட்டியை சங்கடப்படுத்த,

உன்னையும் கூப்பிடலையாப்பா? சரி விடு. பாவம் அவளும் தான் என்ன பண்ணுவா? அம்மாக்கு உடம்பு சரியில்லை, ஹாஸ்பிடல்ல இருக்காங்கன்னு சொன்னா பதறாதா? அதுவும் இவ்வளவு தூரத்துல இருக்கும் போது? எங்கிட்ட சொல்லும் போதே அழுதுட்டா. எவ்வளவு வேலை இருந்திருந்தாலும் நீ எயார்போர்ட் வரைக்குமாவது போயிருக்கனும் ஆனந்தா.”

அருந்ததிக்கு உடம்புக்கு என்னவானது? ஏன் பைரவி என்னிடம் எதுவும் சொல்லவில்லை? அழைப்பு கிடைக்காவிட்டாலும் நேரில் வந்திருக்கலாமே? ஒரு சின்ன மெஸேஜ் வைத்திருக்கலாமே? ஆயிரம் கேள்விகள் படை எடுக்க ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தான் ஆனந்தன்.

ஆனந்தா, என்னாச்சுப்பா? ஏன் ஒன்னும் பேச மாட்டேங்கிற?” சட்டென்று சுதாரித்தவன்,

நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன் பாட்டிஅணைப்பைத் துண்டித்தான்.

தலை வெடித்தது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது? ஏதோ ஒரு நியாயமான காரணம் இல்லாமல் பைரவி சொல்லாமல் கொள்ளாமல் போக மாட்டாள் என்று மட்டும் நிச்சயமாக புரிந்தது. தலையை கைகளால் தாக்கிப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் தன்னை அமைதிப் படுத்தினான்.

இன்டர்கொம் சிணுங்கியது. எடுத்துப் பேச

ஸெர், கமலான்னு ஒரு லேடி உங்களை அவசரமா பாக்கணும்னு சொல்றாங்க

உடனே உள்ள அனுப்புங்க.” அவசரமாய் சொன்னான். கமலாக்கா தன்னைத் தேடி வருகிறார் என்றால் நிச்சயம் ஏதோ நடந்திருக்கிறது. எழுந்து சென்று கதவைத் திறக்க எதிரே கமலா மிரண்டபடி நடந்து வந்து கொண்டிருந்தார். உள்ளே அழைத்து வந்து அமரச் செய்தவன்

சொல்லுங்கம்மாஎன்றான்.

தம்பீ…” தடுமாறியவர் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க

எதுவானாலும் நீங்க எங்கிட்ட தயங்காம பேசலாம், சொல்லுங்க

பாப்பா மனசுல ஏதோ சங்கடம்னு என் மனசுக்கு பட்டுது தம்பி

எதை வெச்சு அப்படி சொல்லுறீங்க?”

இதை நான் உங்ககிட்ட பேசுறது சரியா தவறான்னு தெரியலை. ஆனா என்னால சொல்லாமலும் இருக்க முடியலை.”

எதைப் பத்தியும் கவலைப்படாம சொல்லுங்க

தம்பி, பாப்பாக்கு உங்க மேல ஒரு நாட்டம் இருக்குன்னு எனக்குத் தெரியும். ஆனா அது உங்களுக்கு தெரியுமான்னு எனக்குத் தெரியாது.”

எனக்குத் தெரியும்மா. எங்க வீட்ல அத்தனை பேருக்கும் தெரியும், அதோட பைரவியை அவங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். நீங்க மேல சொல்லுங்க.”

கமலாவின் முகம் மலர்ந்து போனது.

அப்படியா! அப்போ எதுக்கு தம்பி அந்த ஆர்த்திப் பொண்ணு குழப்பம் பண்ணுது?”

ஆனந்தன் அதிர்ந்து போனான். இது என்ன கூத்து. இந்த ஆர்த்தி என்ன காரியம் பண்ணி வைத்திருக்கிறாள்?

என்னம்மா நடந்தது?”

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஆர்த்திப் பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்துது. பாப்பாவோட ரொம்ப நேரம் பேசிச்சு. என்ன பேசினாங்கன்னு தெரியாது. ஆனா உங்க பெயர் அடிபட்டுது.

அதோட பாப்பா முகம் சரியில்லை. இந்தப் பொண்ணு கிளம்பிப் போனது தான் தாமதம் சந்திரன் ஐயா கூப்பிட்டாங்க. அருந்ததி அக்காக்கு உடம்புக்கு முடியலை, ஹாஸ்பிடல்ல சேத்திருக்கேன்னு

ம்…”

ஏதோ ரத்தக் குழாயில சின்னதா ஒரு அடைப்பாம். பயப்படும் படி பெரிசா ஒன்னுமில்லை அப்படீன்னு தகவல் சொன்னாங்க. ஆனா பாப்பா உடனேயே புறப்பிட்டு போயிடுச்சு. எனக்கு என்னவோ அம்மாவுக்கு உடம்புக்கு முடியாம போனதால பாப்பா போனமாதிரி தெரியலை தம்பி. இந்த ஆர்த்தி பொண்ணு ஏதோ சொல்லியிருக்கு. நானும் எவ்வளவோ பாப்பாகிட்ட கேட்டுப் பாத்தேன்.ஒன்னும் இல்லைன்னே சாதிச்சிடுச்சு.” ஆனந்தன் கைகளால் நெற்றியை தடவிக் கொண்டான்.

தம்பி, ஏதும் பிரச்சனையா?” தவிப்புடன் கமலா கேட்க,

இல்லைம்மா, என்னண்ணு நான் பார்க்கிறேன். இவ்வளவு தூரம் நீங்க வந்து தகவல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. ட்ரைவர் கிட்ட சொல்றேன் உங்களை வீட்ல விடச் சொல்லி.”

இல்லை தம்பி, நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன். பாப்பாவும் இல்லாம தனியா இருக்க முடியாது. இந்தாங்க வீட்டோட சாவி.” மேசை மேல் அதை வைத்தவர் கிளம்ப அதை வெறித்துப் பார்திருந்தான் ஆனந்தன்.

பைரவியின் ஆனந்த்!

 

error: Content is protected !!