அன்பின் மொ(வி)ழியில்- 11
நிலவோ மெல்ல மெல்ல நகர்ந்து உச்சியினை அடைந்து கொண்டிருந்தது.
மலைகள் சூழ்ந்த இடத்திற்கே உரிய குளிர்ந்த அந்த இரவில் எதுவும் உணராமல் அமர்ந்திருந்தவளின் மோன நிலையை அப்போது அவளின் மீது வந்து விழுந்த மழை தூரலினால் கூட கலைக்க இயலவில்லை.
மேக மன்னன் நிலமங்கையை அடைய மழைத்துளிகள் போல மாறி பூமாதேவியை அடைந்து தொட்டு தழுவி அவளுடன் இணைந்து எது அவன், எது அவள் என்று சொல்ல முடியாத அளவுக்கு நிலமகளுடன் இரண்டற கலந்து விட்டான்.
மாடத்தில் இருந்து கீழே அமர்ந்திருந்த கயலினை பார்த்துக் கொண்டிருந்த, ராம் தன்னுடைய அறைக்கு செல்ல முடியாமல் தனித்து தவித்திருந்தான்.
இன்னும் வீட்டினுள் செல்லாமல் மழையில் அசையாமல் அவள் அமர்ந்திருப்பதை பொறுக்க முடியவில்லை அவனால்.
வேகமாக மாடியில் இருந்து இறங்கி வந்தவன், கதவினை திறந்து கொண்டு தோட்டத்திற்கு வந்து விட்டான்.
வெளியில் வந்தவன் மீது மழை துளிகள் பட்டு தெறித்தது.
அவ்வளவு விரைவாக வந்தவனால், உடனே அவளிடம் பேச முடியாமல் தடுமாறி நின்றான். மெல்ல நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் நீரில் நனைந்தவாறு நிலவினை வெறித்து நோக்கியவளின் வரிவடிவம் முழுமையாக தெரிந்தது.
இப்படி இருப்பது அவளது உடல்நிலைக்கு நல்லதல்ல என்பதை அறிந்தவன் தன்னுடைய ஆண்மை நிறைந்த கம்பீரமாக குரலினால் மெல்ல ‘கயல்’ என்று அழைத்தான்.
மழையால் கலைக்க முடியாத கயலின் கவனத்தை ராமின் மெல்லிய அழைப்பு திடுக்கிட்டு திரும்ப வைத்தது.
அவனை கண்டவள் கண்கள் இரண்டும் சாசர் போல விரிந்தன, அதோடு அவற்றில் வந்து அச்சம் குடிக்கொண்டது.
அவளின் விழிகளின் மொழியினை துல்லியமாக படித்தவன் மனதில் வேதனை தோன்றியது.
அவனின் தேவதை அவள், காதலுடன் தன்னை காண வேண்டிய அந்த அழகிய கண்களில், தன்னவள் காட்டும் இந்த பயம் கலந்த பார்வை இதயத்தில் ஊசியை இறக்கியது போல் வலியை ஏற்படுத்தியது ராமிற்கு.
அவளிடம் எதையும் தற்போது கேட்க முடியாத நிலைக்கு அவனை தள்ளியது பாவையவளின் அப்பார்வை.
தன் மனதில் உள்ள கேள்விகள் அனைத்திற்கும் விடை தெரிந்தவள் அவள், ஆனால் அதை தற்போது கேட்டு அறிய முடியாமல் அவனை தடுக்கும் அவளில் விழிகளை கண்டு தயங்கியவன், தன்னையே நொந்து கொண்டு “ கயல் ரொம்ப நேரமா மழையில் இருக்கீங்க, உடம்புக்கு ஏதாவது செய்ய போகுது, வெளிய நின்றது போதும், செத்த நேரம் போய் படுங்க” என்றான் கனிவாக .
எதை பற்றியும் கேட்காமல் தன்னுடைய நலத்தினை மட்டுமே மையமாக கொண்டு வெளி வந்த அவனின் வார்த்தைகள் அவளுக்கு அத்தனை நிம்மதியை கொடுத்தது.
மெல்ல தலையசைத்து நடந்தவளினை அவனிடம் இருந்து வெளிவந்த அந்த உறுதியான வார்த்தைகள் நகர முடியாமல் நிறுத்தி வைத்தது, அந்த குரலை அத்தகைய சூழ்நிலையில் கேட்ட அவளின் மனத்தில் ஏதோ ஒன்று பாரம் போல் அழுத்துவதை உணர்த்தவள் நடை சிறிது தள்ளாடியது.
ராம்- “உண்மைய ரொம்ப நாள் மறைக்க முடியாது அதோட மறைக்கவும் கூடாதுங்க, அது நம்ம புள்ளைங்க எதிர் காலத்துக்கு நல்லதில்லை, நான் இப்போதைக்கு எதுவும் கேட்காததை பார்த்து, இனியும் இப்படியே இருப்பேன்னு நீங்க யோசிக்காதிங்க, அதே நேரத்தில் இனியும் நான் என் பிள்ளைகளை விட்டு விலகி இருப்பது கனவில் கூட நடக்காத ஒன்று, நாளைக்கு நம்ம வீட்டுக்கு வரும் போது கண்டிப்பா எனக்கு உங்க கிட்ட பேசனும்” என்றவன்.
“வாங்க நானும் உங்கக் கூட வரேன் புள்ளைகல இப்பயாவது தொட்டு பார்த்துக்குறேன்” என்றவன் வார்த்தைகள் கரகரப்பாக வெளிவந்தது.
அவன் முதலில் கூறியதை பெரும் அச்சத்துடன், உள்வாங்கியவள், இறுதியாக வெளி வந்த வார்த்தைகளில் மூலம் ஏற்பட்ட குற்ற உணர்வுடன் நிமிர்ந்து அவனின் நீல நிற அழகிய விழிகளை நோக்கியவளின் உள்ளம் உருகி தான் போனது ராமின் ஏக்கம் நிறைந்த பார்வையில், அதுவரை தன்னை பற்றி மட்டுமே யோசித்ததை எண்ணி வருந்தியவள்.
மெல்ல அவளுக்கே கேட்காத குரலில் “சாரி” என்றவள் வாங்க என்று தலையசைத்து அவனுடன் வீட்டினுள் சென்றாள்.
அவளின் பின்னே நடந்தவனின் இதயம் தன் உயிரில் ஜனித்தவர்களை அருகில் காணப் போகும் ஆவலில் தாளம் தப்பி ஒலித்தது.
வீட்டினுள் வந்தவன் கண்களில் மிக எளிமையாக அதே நேரத்தில் நேர்த்தியாக கையாலப்பட்டிருந்த அந்த இல்லத்தை கண்டு சிறு பாராட்டு தோன்றி மறைந்தது.
கயல் அவனை பிள்ளைகள் உறங்கும் அறைக்கு அழைத்து சென்றாள்.
அறை வாசல் வரை வந்தவன் பார்வை மழையில் நனைந்த சிற்பமாய் இருப்பவளின் மீது விழுந்தது.
“ரொம்ப ஈரமா இருக்கீங்க போய் மாத்திக்கோங்க நான் இங்க இருக்கேன்” என்றவன், அமைதியாக சென்று ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
எந்த நிலையிலும் மற்றவரின் நலம் பேணும் அவனின் குணம் கண்டு வியந்து , உள்ளே சென்று தனது உடையினை எடுத்துக்கொண்டு வெளி வந்தவள்.
அவனின் முகம் பாராமல் “நீங்க பசங்க கிட்ட போங்க , நான் இப்ப வந்துடுவேன்” என்று கூறி, ரம்யா இருக்கும் அறைக்குள் சென்று கதவினை அடைத்து கொண்டாள்.
ராமின் முன்பு இயல்பாக இருப்பதை போல் காட்டிக் கொண்டலும், கயலின் உள்ளத்தில் ஏற்பட்ட படபடப்பை அவள் மட்டுமே! அறிவாள்.
தன் படபடக்கும் நெஞ்சத்தில் கைகளை வைத்து அழுத்தி கொண்டு ரம்யா படுத்திருக்கும் கட்டிலில் அமர்ந்தவள் எண்ணம் முழுவதிலும் அவளின் பயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தது.
‘ராம் அவனுடைய மனதில் தன்னை பற்றி என்னவென்று நினைப்பான்’.
‘தவறான முறையில் தன் மூலம் தான் அறியாத வகையில் பிள்ளைகள் பெற்ற அவளின் நடத்தையை பற்றி தவறாக கேட்டு, பிள்ளைகளை பிரித்து எடுத்து சென்றுவிடுவனோ?, ராஜ் , அன்னை எல்லாருடைய பார்வையில் என் நிலை என்ன?’ என பலவாறு அவளின் கற்பனை குதிரை தரி கெட்டு ஓடியது.
பின் மெல்ல எழுந்தவள், இனி ஓடவும், ஒளியவும் முடியாத தன்னுடைய நிலையினை உணர்ந்து உடையை மாற்றினாள்.
ரம்யாவோ தான் இருப்பது இன்மையோ, மறுமையோ, என்று உணராத அளவில் தூக்கத்தில் கும்பகர்ணனை போட்டிக்கு அழைத்தவள் போல் நித்திரையில் ஆழ்ந்திருந்தாள்.
அவள் தான் தன்னுடைய மண்டையில் கபடி ஆடிய அனைத்து ஜீவராசிகளும் சமாதி கட்டி விட்டாள் அல்லவா! அந்த நிம்மதி ரம்யாவுக்கு.
கயல் சென்ற பிறகு அறையினுள் வந்தவன் கண்டது.
கட்டிலில் இரவு உடையை அணிந்து கொண்டு அருகில் இருக்கும் தன் இரட்டையின் மீது தன் கால்களை போட்டு கொண்டு சிறு புன்னகையுடன் உறங்கி கொண்டிருந்த மகனையும், அந்த ஆழ்ந்த நித்திரையிலும் தன் மற்றோரு மைந்தன் கைகள் அவனின் உடன் பிறப்பின் கழுத்தை சுற்றி வளைத்து இருந்ததை தான்.
அதை கண்டவனுக்கு சிறு வயதில் ராஜும் அவனும் இணைந்து உறங்கிய நிலை கண்ணில் தோன்றி மறைந்தது.
அவர்களின் அந்த பிணைப்பு அழகிய ஓவியம் போல் தோன்றியது ராமிற்கு.
மெல்ல அவர்களின் அருகில் வந்தவன் கரங்களில் சிறு நடுக்கம் வந்தது, பிள்ளைகளின் அருகில் வந்தவன் அவர்களின் உருவத்தை ஆசைதீர பார்த்து தன் விழிகளின் மூலம் மனதில் படம்பிடித்து கொண்டிருந்தான்.
அவனின் இதய துடிப்பு அவனுக்கே துல்லியமாக கேட்டது.படபடக்கும் தன் நிலையை , அதன் ஏக்கத்தை உணர்ந்தவன் விழி எடுக்காமல் தன் உயிர் நீரில் உதித்தவர்களை பார்த்து கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரின் அழகிய முகத்தினை நோக்கியவன் மனது துடித்து பரிதவித்தது, உருவான நிமிடம் தான் உணராத கரு, பிறந்த வேளையில் தன் கையில் வராத பிஞ்சு, தவழ்ந்த போது அவன் மடியில் மலராத பிள்ளைகள், முதல் வார்த்தை உதிர்த்த போது தன்னுடைய செவியில் விழாத மழலை, முதல் அடியினை தனது பாதத்தின் மூலம் இப்பூமியில் பதித்த போது தந்தையவன் விரலை பற்றாத மைந்தர்கள் அவர்களை பார்க்கும் போதே அவனின் இழப்பின் அளவு இந்த பிரபஞ்சத்தை விட அதிகமாய் தோன்றியது ராமிற்கு.
அவனின் நிலையினை பார்த்தவாறு வந்த கயலுக்கு அவன் தவிப்பை பார்த்ததும் மனது கேட்காமல் மெல்ல அவன் அருகில் வந்தவள், அசையாமல் படுத்திருந்த ஆதியினை அவனின் துக்கம் கலையாதவாறு தூக்கி, ராமை அமர சொன்னவள் அவன் கைகளில் தந்தாள்.
பூக்குவியலை போல் இருந்தவனை ஏந்திய போது ராமின் உடல் சிலிர்த்து தான் போனது.
அவன் விழிகள் கயலினை நிமிர்ந்து ஒரு நொடி ஆழ்ந்து நோக்கியத்தில் தடுமாறியவள், “இவன் தான் பெரியவன் பேரு ஆதித்யன்” என்றவள், படுக்கையில் ராமின் அருகில் இருந்தவனை காட்டி “இவன் ரவிவர்மன்” என்றாள்.
அதன் பிறகு அந்த அறையில் நிலவியது மௌனம் மட்டுமே.
ராம் தன் மைந்தர்கள் இருவரையும் மெல்ல தொட்டு பார்த்து விட்டு இருவர் நெற்றியிலும் முத்தமிட்ட போது அவனது விழி நீர் பிள்ளைகளின் மீது பட்டு தெறித்தது.
கயலுக்கு அவர்களை பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை, தாய், தந்தை பாசம் அறியாத பேதை அவள்.
அவன் இன்று தான் அறிந்து கொண்ட பிள்ளைகளில் மீது உள்ள அன்பினை கண்டு வியந்து போனாள்.
இந்த அன்பு அவள் அறியாத, அனுபவிக்காத ஒன்றல்லவா!.
தன் மக்களுக்கு அந்த அன்பு கிடைத்ததில் அவளுக்கு மகிழ்வு தான்.
‘அதே நேரத்தில் தன்னுடைய நிலை என்ன?’ என்ற சிந்தனையும் அவள் மனதில் ஓடியது, அதை ஒதுக்கி விட்டு எதிரில் இருந்த மூவரையும் கண்களில் கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ராமின் கண்ணீர் துளி பட்டதும் மெல்லிய சத்தத்திற்கு கூட எழுந்து கொள்ளும் ரவியிடம் அசைவு தோன்றியது.
ரவியின் அருகில் விரைந்து வந்த கயல் மெல்ல அவன் எழுந்து விடாமல் இருக்க தட்டி கொடுத்தாள்.
பிள்ளை மீண்டும் அசைவற்று தூங்கும் வரை அவளின் சிந்தனையில் வேறு எதுவும் பதியவில்லை.
பிள்ளை அசந்து தூங்கிய பிறகு நிமிர்ந்தவளில் விழிகளுக்கு மிக அருகில் இருந்த ராமின் அழகிய கண்கள்.
இதனை நேரம் பிள்ளைகளின் மீது மட்டுமே தன் கவனத்தை வைத்திருந்தவன்.
மகனின் தூக்கம் கலையாமல் இருக்க அருகில் வந்தவளை கண்டவன் அவளின் மேல் உள்ள காதல் அதிகரிக்க மங்கையவளை இமைக்காமல் பார்த்திருந்தான்.
“கயல் கொஞ்சம் இப்படி வந்து உக்காருங்க, சாதாரணமா பேசலாம், உங்களை கஷ்டப்படுத்துற மாதிரி எதுவும் இப்ப பேச மாட்டேன்” என்றவன்.
“கயல் என்னை முன்னாடியே உங்களுக்கு தெரியுமா?” என்றான் ஆவலுடன்.
அவனின் அருகில் சற்று தள்ளி அமர்த்தவள், பிள்ளைகளின் மீது ஒரு நொடி பார்வையை செலுத்தி விட்டு, பின் வெளியில் தெரிந்த இருளை பார்த்தவாறு அவனின் கேள்விக்கு.
கயல்- “ஹ்ம்ம் தெரியும், நான் வேந்தன் குரூப்ஸ்ல தான் 3 வருஷம் வேலை பார்த்தேன்” என்றவளிடம்.
“நான் உங்களை அங்கே பார்த்த ஞாபகம் இல்லை” என்றவன் வார்த்தைகளில் கயலுக்கு சிரிப்பு வந்தது.
‘யாரையாவது நிமிர்ந்து பார்த்துருந்தால் தானே ஞாபகம் வரும்’ என்று நினைத்தவள் உள்ளம் சில வருடங்களுக்கு பின் சென்றது.
கயல் அவனை முதல் முறையாக பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, ஒரே உருவத்தை கொண்ட இருவரை அவள் காண்பது அதுவே முதல் முறை.
ராஜ் எல்லாரிடமும் நன்கு பழக்கக் கூடியவனாக இருப்பான். ராம் சில சமயங்களில் மட்டுமே கம்பெனிக்கு வருவான் அந்த சமயங்களில் யாரையும் பார்க்கவோ, பழகவோ எண்ண மாட்டான்.
குதிரைக்கு கடிவாளம் இட்டது போல் இருக்கும் அவனது கவனம் அனைத்தும்.
கயல் உடன் பணி புரியும் பெண்கள் அனைவரும் ராமிற்கு பெண்கள் பிடிக்காது, அவர்களிடம் பேசினால் அவனிடம் அட்டை போல் அவருக்கு எண்ணம் என்று தங்களுக்குள் பேசிகொண்டு இருப்பார்கள்.
விளையாட்டாய் பேசிய அந்த வார்த்தைகள் கயலின் மனதில் பதிந்து விட்டது. அதன் காரணமாக அவளால் அந்த கொடிய நாளில் நடந்த சம்பவம் குறித்து அவனிடம் சொல்ல முடியாமல் மற்றவர்களின் வார்த்தைக்கு அஞ்சி தன்னை மறைத்து கொண்டாள்.
தான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்தவளின் முகத்தினை பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் அவளது சிரிப்பும், பின் ஏற்பட்ட குழப்பமும், இறுதியாக தோன்றிய வேதனையும், ராமின் மனதை நெகிழ வைத்தது.
அருகில் இருந்தவளின் கரங்களை மெல்ல பற்றியவன் அதில் சிறு அழுத்தம் கொடுக்க, அவ்வழுத்தில் தன்னுணர்வு பெற்றவள் ராமின் முகத்தினை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளின் முகத்தில் என்ன கண்டானோ, மெல்லிய பெரு மூச்சு விட்டு “ எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம் … எதையும் போட்டு யோசிக்காமல் தூங்குங்க” என்றவன் மனமே இல்லாமல் அவன் கைகளுக்குள் சிறையிருந்த மலரை விட மென்மையாய் தோன்றிய அவளின் கரங்களுக்கு விடுதலை தந்தான்.
அவன் தன் கரங்களினை விட்ட பிறகு ஏன் என்று புரியாத ஏமாற்றம் வந்து தழுவியது பேதையவளை.
அவன் அருகில் அவனின் தொடுகையில் அவள் உணர்த்த பாதுகாப்பை பிறந்த நிமிடம் முதல் இதுவரை யாரும் அவளுக்கு தந்ததில்லை.
அன்னையிடமிருந்து பறிக்கப்பட்ட குழந்தை போல் இருந்த அவளின் தோற்றம் கண்டவன் எதை பற்றியும் யோசிக்காமல் அவனவளை இழுத்து இறுக கட்டி அணைத்து கொண்டான்.
அந்த அணைப்பில் துளி அளவு கூட காமமோ, காதலோ இல்லை.
ஒரு அன்னை தன் பிள்ளையிடம் காட்டும் அளவு கடந்த அன்பு மட்டுமே மேலோங்கி இருந்தது.
அவன் தழுவிய அடுத்த நொடி இதனை வருடங்கள் அவள் மனதில் உள்ள வேதனை, ஏக்கம், பயம் எல்லாம் வெளிப்படும் வகையில் அவளின் அழுகை கதறலாக வெளிவந்தது.
அவளின் அழுகையினை கண்டவன் இனி எதற்கும் அவளை கலங்க விட கூடாது என்று எண்ணியவன், இதழ்கள் கயலின் உச்சியில் பதிந்தன.
அன்று காலை முதல் ஏற்பட்ட தொடர் மன உளைச்சல் காரணமாக அழுது கொண்டே இருந்தவள் ராமின் மார்பில் சாய்ந்து அப்படியே உறங்கி விட்டாள்.
தன் மீது சிறு பிள்ளையை போல் தூங்கியவளை மனமே இல்லாமல் மெல்ல கட்டிலில் படுக்க வைத்து அவளில் அழகிய விழிகளில் முத்தமிட்டவன் உள்ளம் ‘கயல் தன் மீது நம்பிக்கை வைத்து நடந்தவைகளினை சொல்லும் வரையில் அவளிடம் எதையும் கேட்டு வேதனைப்படுத்த கூடாது’ என்ற முடிவை எடுத்தது…
பிள்ளைகள், மற்றும் தன்னவள் உறக்கம் கலையாத வண்ணம் சப்தமின்றி அங்கிருந்து கிளம்பி தன் வீட்டுக்கு வந்து விட்டான்.
வீட்டினுள் நுழையும் போது ராஜ் அங்கு இருட்டில் அமர்ந்திருப்பதை கண்டவன் அவன் அருகில் சென்றான்.
“என்ன ராஜ் நீ இன்னுமாலே தூங்கல? போய் படு எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம்” என்றவனிடம்.
ராஜ்- “ அண்ணியை பார்த்தியா ராம்?, எனக்காக விரித்த வலையில் நீயும், ஒரு பாவமும் அறியாத அவுங்களும் மாட்டிக்கிட்டிங்கன்னு நினைக்கிறேன்” என்றவன் வார்த்தைகளை கேட்ட அவனின் அண்ணன் ராஜின் குற்ற உணர்வை புரிந்து கொண்டு அவனை அணைத்து கொண்டவன்.
“எதையும் உறுதியா சொல்ல முடியாது ராஜ், எது எப்படியோ இனி நடக்கிறது நல்லதா இருந்தா போதும், விடு பாத்துக்கலாம்” என்றவன்.
“இப்ப எதையும் அவுங்க கிட்ட பேச முடியல ரொம்பவும் பலவீனமா இருக்காங்க, பொறுமையா தான் பேசணும்” என்று சொல்லிக்கொண்டு வந்தவன்.
கண்களில் சிறு மின்னலுடன் “பசங்கள பாத்தியாலே ராஜ், நம்ம மாதிரியே இருக்காங்க இல்ல?” என்றவன் கேள்வியில் ராஜின் முகம் மலர்ந்து விட்டது.
ராஜ்- “ஆமா! ரவிகுட்டி இந்த வயசுல எவ்வளவு பொறுப்பா, அக்கறையா இருக்கான் உன்னை மாதிரி, அப்புறம் அந்த செல்ல குட்டி ஆதி பேசும் போது அவன் கண்ணுல அவ்வளவு குறும்பு” என்று சொல்லி கொண்டே வந்தவனின் வார்த்தைகளை “அப்படியே உன்னை மாதிரி” என்ற ராமின் வார்த்தைகள் புன்னகையுடன் நிறைவு செய்தது.
அந்த நேரம் வரை அவர்கள் இருவரையும் வேதனை செய்த விடயங்களை ஒதுக்கி, அவர்களுக்கு கிடைத்த மழலை செல்வங்களை நினைத்தவர்களின் முகமும், அகமும் மகிழ்ச்சியில் மலர்ந்து விட்டன.