Anbin mo(vi)zhiyil 23

Anbin mo(vi)zhiyil 23

அன்பின்  மொ(வி)ழியில்  – 23.

 

குறும்பும் கேலியும் மின்னிய ராமின் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தவள், “பரவாயில்லையே… என்னைய கூட பார்க்க உங்களுக்கு நேரம்  இருந்துச்சு போலயே!” என உணவு நேரத்தில் தோன்றிய பொறாமையை  இப்போதும் உணர்வது போல் வெடுக்கென பதிலளித்திருந்தாள்.

 

ராம் உடனான அவளது இந்த ஒரு மாத கால திருமண வாழ்க்கை பல இனிய மாற்றங்களை கயலினுள் ஏற்படுத்தி இருந்தது.

 

சிறிது சிறிதாக அவளின் கூட்டில் இருந்து  கயலை, அவள் அறியாமலேயே, ராம் வெளியே கொண்டு வந்திருந்தான்.

 

அவளும் ராமை போலவே, கேலியாக பேசி,  குறும்புடன் பதில் சொல்லி, அழகாக வார்த்தை எனும் ஜாலம் கொண்டு விளையாட  தன்னவனிடம் சிறப்பாக பாடம் படித்திருந்தாள்…

 

அவர்களின் நடுவே இருந்த கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய திரை மெல்ல விலகத் தொடங்க, இனிமையான அவர்களின் வாழ்வில் அடுத்த அடியை யார் முதலில் எடுத்து வைப்பது என்ற நிலையில் நெய்வாசல் பயணம் அதற்கான சந்தர்ப்பத்தை இருவருக்கும் அழகாக அமைத்துக் கொடுத்தது…

 

ராமுடன் அவனது சொந்த ஊருக்கு வந்த போது…   தான் வாழ வந்த இடத்தின் இயற்கை அழகை கண்டு வியந்தவளின் மனதில், அந்த மண்ணின்  மீது புது வித சொந்தம் தோன்றியது என்றால் மிகையல்ல…

 

ராமின் முறைப் பெண்கள் கேலி பேசியதை எல்லாம் ரசித்துக் கொண்டிருந்தவள்… அப்போது பதில் சொல்லவில்லை என்றாலும் தனிமையில் எந்தவித தளையும் இல்லாமல் அவனிடம்  அவளின் வாய்பூட்டு  உடைந்து, தன்னவனிடம் மெல்லிய கேலி வெளிப்பட்டது…

 

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மெல்ல அருகில் வந்தவன், “அவங்க நம்ம புள்ளைங்க கண்ணம்மா… சின்ன பசங்க  கிட்ட போய் போட்டி போடலாமா குட்டி?, அவங்களுக்கு கொடுக்கிற முத்தத்திற்கு  அர்த்தமே வேற அம்மு..!  ஆனா உனக்கு  நான் கொடுக்கிற முத்தத்துக்கு ஆயிரம் அர்த்தம் இருக்குடா கண்ணு” என்றவாறே… அவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவனின், கைகள் மிகவும் அழுத்தத்துடன் பெண்ணவளை தவிர மற்றவர் யாரும் அறியாத  இடங்களில் எல்லாம் தன் தடத்தை  மிக அழகாக பதித்தது.

 

விழிகள் தேடிய புதையல் கிடைக்காமல் போக, கைகள் அதைத் தொடர அப்போதும் முழுமையாக உணர முடியாமல், அப்பணியில் இதழ்களை ஈடுபடுத்த கலவியின் இன்பம் காளையவனை  மயக்கியது…

 

 

குறும்பு புன்னகையுடன் கயலின் பஞ்சு கன்னங்களில் தன் உதடுகளால் அழகிய ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டே, “உன்கிட்ட சில விஷயங்களை ஆரம்பிச்சா நிறுத்தவே முடியாது அம்மு”  என்றவன் மயக்கத்துடன்… “இப்ப எனக்கு உன்னைய  முழுசா பார்க்க மட்டும் தான்,  நேரம் இருக்கு அப்படின்னு சொன்னா, என்ன பண்ணுவ  செல்லம்” என்று விசமத்துடன் கூறினான் ராம் வில்லியம்ஸ்.

 

அவனின் தீண்டலில் தன்னை மறந்து கணவனின் கைகளில் உருகி இருந்தவளின் ஒவ்வொரு அணுவும் புது வித இன்பத்தில் திளைத்திருந்தது… மயக்கத்தில் இருந்தவளுக்கு ராம் பேசியது முதலில் புரியவில்லை என்றாலும் பிறகு… அவளவனின் வார்த்தைகளின் அர்த்தம் தெளிவாக உணர்ந்த கணம், கணவனிடம் சிறிது விளையாட எண்ணி, “சரி சீக்கிரம் பார்த்து முடிச்சா நல்லது, என்னமோ தெரியல இன்னைக்கு எனக்கு அப்படி ஒரு தூக்கம் வருது” என்றாள் போலியாக கொட்டாவி விட்டு…

 

அதுவரை தன்னவளின் தேகத்தில் தன்னிதழ் கொண்டு சில பல ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்தவன், திடுக்கிட்டு கயலின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.

 

 “அடிப்பாவி இங்க என்ன நடந்துட்டு இருக்கு? உனக்கு தூக்கம் வருதா… இதுக்கு மேல உன்ன விட்டு வச்சா… இதுவும் பேசுவ..! இதுக்கு மேலயும் பேசுவ..! உன்னைய என்ன பண்றேன் பாரு” என்றவன், அடுத்து பேசிய மொழிகள் எல்லாமே… அவனவளின் அகராதியில் இதுவரை  அறியப்படாத அழகிய பரிபாஷைகலாக..!

 

அவனின் வார்த்தைகளில் ஒன்றும் சொல்ல முடியாது முகம் சிவந்தவள், காதுகளைக் கைகள் கொண்டு மூடி, “ப்ளீஸ் இப்படி பேசாதீங்க,  எனக்கு என்னமோ மாதிரி இருக்கு” என்றாள் உணர்வுகளின் பிடியில் மொத்தமாக தன்னைத்  தொலைந்து..!

 

“இந்த கதை நல்லா இருக்கு புள்ள, சூப்பரா புடவை கட்டி, தலை நிறைய பூ வச்சி, சும்மா பார்க்கையிலே  கும்முனு இருக்கிற மனைவி கிட்ட இது கூட பேசலனா, இந்த சமூகம் என்னைய பத்தி என்ன நினைக்கும் செல்லம்” என்று குறும்பாக பேசிக் கொண்டிருந்தவன் வாயை, அவளின் வளைக்கரம் கொண்டு மூடியவள்.

 

“இப்ப என்ன தான் செய்யணும்னு சொல்றீங்க?” என்றவளிடம்.

 

“நீ எதுவும் செய்ய வேண்டாம் அம்மு, எல்லாம் நானே செஞ்சுக்குறேன்… அதுக்கு என்னோட கண்ணம்மா ஓட சம்மதம் மட்டும் வேணும்” என்றவனின் வார்த்தைகளில் தாள முடியாத அளவுக்கு ஏக்கம் நிறைந்திருந்ததோ..!

 

முதல் முறை அவளின் அனுமதியே இல்லாமல், அவனை அறியாமல்  பெண்ணவளை எடுத்துக் கொண்டது போல் அல்லாமல். அவளின் விருப்பத்துடன் கயலை முழுவதுமாக தன்னுள் நிறைத்துக் கொள்ள நினைத்தான் அந்த முழுமையான கணவனான காதலன்..!

 

அவனின் தாபம் பொங்கும் கேள்வியில், பதில் சொல்ல முடியாமல் திணறியவள், தன்னவனின் நெஞ்சமதில் முகம் மறைத்து சம்மதமாக தலை அசைக்க, அங்கே இனியதொரு சங்கமம் அழகாக அரங்கேறியது அந்த ஏகாந்த இரவில்..!

 

 

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே

செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே

உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே

வான் நிலா நாணுமே  முகிலெடுத்துக் கண் மூடுமே…

 

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்

கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்

மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்

தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்.

 

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே சிவந்ததே என் மஞ்சளே.

 

 

 

********************************************* 

 

ரம்யாவிற்கு ஏனோ காலையில் விடியும் முன்பே உறக்கம் கலைந்து விட்டது. கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தவள், அதற்கு மேல் தூக்கம் வராமல் போக எழுந்து பால்கனியில் வந்து நின்றாள்…

 

விடிவதற்கு முன் ஏற்படும் கரும் இருட்டு அந்த அழகிய கிராமம் முழுவதும் பரவி இருக்க, வீட்டு வாசலில் நின்ற அடர்ந்த வேப்பமரக் காற்று,  மெல்ல அவள் சிவந்த மேனியை சுகமாக வருடிச் செல்ல, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி, அந்த இனிமையான பொழுதினை ரசித்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

 

ரம்யாவின் மனதில் ஒருவித அமைதியும் நிம்மதியும் நிறைந்திருந்தது என்றால் மிகையல்ல… ஆம்! இதுநாள் வரை அவளின் உலகமாக இருந்த மனதிற்கு நெருங்கியவர்களான  கயலின் வாழ்வு மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம்  சீர் பெற்ற நிலையில்,  ஜாஸ்ஸின் இல்லத்தில் இருப்பது,

 ஏதோ தாய்வீடு வந்தது போல் அப்படி ஒரு நிறைவை கொடுத்திருந்தது அவளுக்கு..!

 

இரவு மங்கையை அணைக்க எண்ணிய ஆதவன், மெதுவாக கிழக்கிலிருந்து மேலே வர, பறவைகளின் சங்கீதம் அப்பகுதி முழுவதும் பரவத் தொடங்கியது. மனதை மயக்கும் அந்த இனிய காலைப் பொழுதில், பந்தலில் படர்ந்திருந்த மல்லிகை, முல்லை எல்லாம் மலர துவங்க அதன் மணம், தென்றலில் கலந்து வைகறைப் பொழுதில், மிக அருமையான வாசத்துடன் அவளின் நாசியை வருட,  தோட்டத்தில் சிறிது நடக்க எண்ணியவள் இரவு உடையுடனே, தன் நீண்ட கூந்தலை கொண்டையிட்டு, கீழே இறங்கி வந்தவளின் முன்னே,  அப்போது தான்  வயலுக்கு நீர் பாய்ச்சி விட்டு வந்து கொண்டிருந்த செல்வம், பெண்ணவளின் விழிகளில் விழுந்தான்.

 

ரம்யா, அவனைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் தாண்டிச் செல்ல, அதுவரை தன் மனதிற்கினியவளை கண்களால் கொள்ளை அடித்து கொண்டிருந்தவன், அவளின் அந்த செய்கையில் பல்லைக் கடித்தபடி, “இந்தா புள்ள செத்த நில்லு… எதிர்ல கல்லு குண்டு கணக்கா ஒரு மனுஷன் வரேன், பார்த்தும் பார்க்காமல், யாரோ எவரோ மாதிரி முகத்தைத் திருப்பிக் கிட்டு போற…  கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம…” என்றான் கடுப்புடன்.

 

“என்ன சார் ரொம்ப பேசுறீங்க? நீங்க உங்க லிமிட்டை தாண்டி போய்கிட்டு இருக்கீங்க… எனக்கு யார் நீங்க?, நான் எதுக்கு உங்க கிட்ட வந்து பேசணும்? மரியாதை கிலோ என்ன விலைன்னு சொன்னா, கண்டிப்பா உங்களுக்கு வாங்கி தரேன்… காலங்காத்தால வம்ப கட்டி இழுத்துக்கிட்டு…” என்றாள் அவனுக்கு குறையாத கடுப்புடன் நக்கலாக.

 

“உன்னைய தான் கட்டி இழுக்க முடியல… அதுதான் வம்பையாவது கட்டி இழுக்கிறேன்” என்று அவளைப் போலவே கூறியவன், “நான் உனக்கு அத்த மகன்,  அத்தான் முறை, எங்க மாமன் வீட்டுல உன்ன அவுங்க பொண்ணா தானே பாக்குறாக, அப்ப நான் சொல்ற முறை சரி தான்… பாத்து சூதானமா இரு புள்ள, சூறையாடிட போறேன்” என்றவனின் வார்த்தைகளில் வெகுண்டவள் அடுத்த வார்த்தை பேசும் முன்னே, 

 

“பொட்ட புள்ள காலையில இப்படியா வெளியில வரது? மூஞ்சி கை, கால் கழுவி, உடுப்ப மாத்தி, நெத்தி இப்படி மொட்டையா இல்லாம, குங்குமத்த இட்டு வெளியில வரணும்,  இனி பொட்டு இல்லாம உன்னைய பார்த்தேன் நானே அதை வச்சு விட வேண்டியது வரும்”  என்று ஒரு வித அழுத்தத்துடன் கூறியவன், அவள் அதிர்ந்து நிற்பதை உணர்ந்தும் அதை உணராதவன் போல விருட்டென வீட்டின் உள்ளே சென்று விட்டான்.

 

ரம்யா எதுவும் பேச முடியாமல் சிலையென நின்று விட்டாள். நடந்து முடிந்த நிகழ்வுகள் எல்லாம் கண்முன் படமாக ஓட, இறுதியில் அவள் மனம்… தன் மாமன் சேதுவின் முகத்தில் தெரிந்த கள்ளமில்லா அன்பில் நிலைத்து விட்டது.

 

 

 

மனதளவில் எவ்வளவோ தேற்றிக் கொண்ட பிறகும் கூட சில விடயங்களை அவளால் செய்ய முடிந்ததே இல்லை. நவநாகரீக பெண்தான் இருந்தாலும் கணவனை இழந்த பிறகு பூ வைக்க, குங்குமம் இட அவள் நினைத்ததில்லை.

 

சேதுவின் நினைவில் இருந்து விடுபட்டு புதியதொரு வாழ்க்கையை அவளால் எப்பொழுதும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. மறைந்திருந்த தன் ரணங்களை எல்லாம் கீறி  விட்டு செல்பவனின் மேல் இன்னமும் கூட அவளுக்கு வெறுப்பு தான் வந்தது,  மெல்ல தன்னை நிலைப்படுத்திக்  கொண்டவள்,  தன் இயல்பை மீட்டெடுத்து, தன்னிடம் இவ்வளவு திமிராக பேசிச் சென்ற செல்வத்தை நினைத்து பல்லை கடித்துக் கொண்டவள், முடிந்த அளவு விரைவாக பூம்பொழில் சென்றுவிட வேண்டும் என முடிவு செய்து கொண்டு… அவன் சென்ற திசையை பார்த்து,

 

  ‘அடக்கடவுளே!  அதுவரைக்கும் இந்த மூட்டை பூச்சி தொந்தரவு பெருசா இருக்கும் போலவே… இந்த முகர கட்டைய அத்தான்னு  வேற கூப்பிடனுமாம், எவ்வளவு தெனாவட்டா, என்கிட்ட பேசிட்டு போறான், இந்த பக்கி… இன்னொரு வாட்டி பேசட்டும்… பேசுற வாய்க்கு வெத்தலை பாக்கு போட்டு விட்டுட வேண்டியது தான்…’ என தன் மனதோடு  பேசியபடி தோட்டத்தின் பக்கம் சென்று விட்டாள்.

 

தன்னவளிடம்  வம்பு வளர்த்து விட்டு வந்து கொண்டிருந்த செல்வத்தின் முகம் முழுவதும் சந்தோஷமே நிறைந்திருந்தது… இந்த நாளின் தொடக்கத்திலேயே  ரம்யாவிடம்  பேசியது, அதுவும் அப்பொழுது பூத்த மலரென எந்தவித ஒப்பனையும் இல்லாது தன் அடர்ந்த கூந்தலை அள்ளி முடிந்து, மிகவும் சாதாரணமான உடையில், தன் எழிலை பற்றி அறியாதவளாய் நடந்து வந்தவளை கண்டு, தன்னை மறந்திருந்தவனை சுட்டது என்னவோ… அவளின் நெற்றியின் தென்பட்ட வெறுமை தான்…

 

அதை எண்ணி மனம் வருந்தியவன், “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் நான் மாத்திடுவேன்” என மனதை அமைதிப்படுத்தி கொண்டான்.

 

 

**********************  

 

 

தூங்கச் சொல்லி கெஞ்சிய மனதினை அதட்டி மெல்ல விழிகளை திறந்த கயலின் முகத்தின் வெகு அருகே, தன் மூச்சுக் காற்று படும் தூரத்தில் சிறு புன்னகையுடன் தன்னை பார்த்தவாறு விழிகளை அசைக்காமல் படுத்திருந்த ராமை கண்டு வெட்கம் மேலிட, முகம் சிவந்து, சட்டென கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

 

அவளை அப்படியே கண்களினால்  அள்ளிக் கொண்டவனின் மனம் சிறு கவிதை ஒன்றை அவசரமாய் வடித்தது…

 

“குங்குமமும் சிவக்கும் இவள் கண்ணக்குழிச் சிரிப்பில்..!

 

மழைத் துளிகளும் குளிர்ந்துப் போகும் இவள் குளுமையில்..!

 

புன்னகைக்கே புன்னகை பூக்கச் செய்யும்

புன்னகை பூ இவளே..!

 

இவள் காதலில் தோற்றுதான் போகும் ஏனைய உறவுகளும்..!

 

இவள் உடன் இருக்கையில்,

 

தாண்டலாம் ஏழு மலைகளை..!

 

நீந்தலாம் ஏழு கடல்களை..!

 

பிளக்கலாம் பூமியை..!

 

வெல்லலாம் இப்புவியை..!”

 

ராமிற்கு தான் வடித்த கவிதையை நினைத்து சிரிப்பாக இருந்தது… அசாத்தியமான ஒன்றைக் கூட சாத்தியமாக நம்பி கற்பனை செய்ய தூண்டும், மாயவித்தையான காதலை எண்ணி நகைத்தவன், அருகிலிருந்த கயலை மொத்தமாக தூக்கி தன் மீது போட்டுக் கொண்டு, “ஏய்… பொண்டாட்டி… அதான் முழிச்சிட்ட இல்ல… அப்புறம் என்னடா?  என்னை பாரு அம்மு” என்றான் சிரிப்புடன்.

 

தன் முகத்தை அவனது மார்பில் மறைத்துக் கொண்டவள், ‘முடியாது’ என்பது போல் தலையசைக்க, வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவளை தன் கீழ் கொண்டு வந்து தண்டால் எடுப்பது போல் கயல் மீது முழுவதும் படராமல் தன்னை நிறுத்திக்  கொண்டவன், “இப்ப மட்டும் நீ கண்ணைத் தொறக்கலை… இன்னைக்கு முழுக்க நீ கீழே போக முடியாது , எனக்கு ஒன்னும் இல்ல, நைட் தூங்காமல் செஞ்ச வேலைய, இன்னொருமுறை ஆரம்பிச்சுடுவேன்”  என்றான் அவளின் நெற்றியில் முட்டி…

 

“ஐயோ இன்னைக்கு முழுக்க வா..!” என அலறியவள், தன் விழிகளை பட்டென திறந்து தன் எதிரே குறும்பாக கண்களை சிமிட்டி சிரிப்பவனை கண்டு முறைத்தவாறு,

 

 “ப்ளீஸ் ராம், முதல்ல நகருங்க… ஆதி,   ரவி இரண்டு பேரும்  தூங்கி எழுந்ததும் என்னைய தேடுவாங்க,” என்று அவன் மார்பில் தன் கரங்களை பதித்து கணவனை தள்ள முயன்றவள், அவனை அசைக்கக் கூட முடியாமல் இருக்கவே, பொறுத்துப் பார்த்தவள், தன்னவனின் முகத்தின் வெகு அருகே தன் முகத்தினை கொண்டு சென்றாள்.

 

கயலின் நெருக்கத்தை கண்ட, ராமின் நீல நிற விழிகளோ எதிர்பார்ப்புடன் மின்னின.

 

அதைக் கண்டு, கயலின் கண்கள் குறும்புடன் நகைக்க, அவன் அதை உணரும் முன்னே தன்னவனின் இடையில் கிள்ளி, கணவன் தடுமாறிய வினாடியில் ராமினை தள்ளி விட்டு, குளியலறையில் புகுந்து கொண்டு, அவளவனை கண்டு நாக்கை துருத்தி பழிப்பு காட்டி விட்டு அவனின் கைகளில் சிக்காமல் கதவை அடைத்துக் கொண்டாள்…

 

 

 

***********************

 

 

ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி

பஞ்சு திரி போட்டு பசு நெய்தனை ஊற்றி

குங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள்தானமிட்டு

பூமாலை சூட்டி வைத்து பூஜிப்போம் உன்னை திருமகளே

திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக…

 

 

மனதிற்கு இனிமையான பாடல்கள் எல்லாம் வரிசையாக ஆங்காங்கே உள்ள மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கியின் மூலம்.   ஊரிலுள்ள மூலை முடுக்கு முழுவதும் ஒலிக்க…

 

அமைதியான ஊர்,.  திருவிழா கோலம் கொண்டு ஆர்ப்பாட்டமாக திகழ்ந்தது.

 

வேந்தன்  குடும்பத்தின் சார்பாக திருவிழா தொடங்கிய பதினான்கு நாட்களும் கோவிலில் மூன்று வேளையும் அன்னதானம் ஏற்பாடாகி இருக்க, அம்மன் உலா வரும் இறுதி நாள், தேர் பவனி வர திருவிழா கொண்டாட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.

 

 

பலூன், பாத்திரம், பொம்மை, வளையல், பூ, என அனைத்து கடைகளும் சாலையில் இருபுறமும் நிறைந்திருக்க…

 

சிறிய குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரையும், அன்றைய தினத்திற்காக நிறுவ பட்டிருந்த பெரிய ராட்டினம் தன் பக்கம் கவனத்தை ஈர்க்க, ஆசையாக அதில் விளையாடினர்.

 

 

ஊர் முழுவதிலும் ஆங்காங்கே மக்களின் தாகம் தீர்க்க  ஏதுவாய்  தண்ணீர், மோர்ப் பந்தல் போடப்பட்டு இருந்தது.

 

வயது பெண்கள் எல்லாம் பாவாடை தாவணி உடுத்தி பவனி வர… அதை ரசித்த படி வளைய வந்த  இளவட்ட  கூட்டம் .

 

 

  கன்னிகளின் கவனத்தை தங்களின் பக்கம் திருப்ப,  இல்லாத சேட்டைகளை  யெல்லாம் செய்து கொண்டு, அந்த திருவிழாவை களைகட்டும் பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்தனர்.

 

வெண் பட்டு அணிந்து, காதுகளில் வைரங்கள் மின்ன கம்பீரமாக  ஒரு  அரசியின் தோரணையுடன்  ஜாஸ் நடந்துவர… அவரின் இருபுறமும் சற்றுப் பின்னே ராம் வில்லியம்ஸ், ராஜ் வில்லியம்ஸ் , இருவரும் தங்கள்  புதல்வர்களை தூக்கிக் கொண்டு வர…    

 

கணவனின் அருகில் அழகே உருவாய்..! மாம்பழ வண்ண பட்டுப் புடவையில், தங்கள் குடும்ப பரம்பரை நகைகளை பூட்டி சிற்பங்கள், தோற்று விடும் வடிவுடன் அமைதியாக  நடக்க…

 

ராஜின் அருகில் பொன்னி பெண்மையே  வடிவாய்..!    பாவாடை தாவணி உடுத்தி, நிமிடத்திற்கு ஒரு முறை தன்னவனை, ஓரப் பார்வையில் களவாடி கொண்டிருந்தாள்.

 

அவளை சுற்றி இருந்த சந்தேக மேகங்கள் விலகிவிட, ராஜ்- ன் காதல் தெளிவான வானில் உலா வரும் பவுர்ணமி நிலவை போல் ஒளிவீச, இப்போது எல்லாம் காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படும் இரும்பை போல் அவளின் மனது தன்னவனின் வசம் மயங்கிக் கிடந்தது.

 

நிலா, ரம்யா, செல்வம்,  விஷ்ணு என்ன அனைத்து உறவுகளும் சூழ, திருவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது…

 

தன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு இருந்த ரவிக்கு ராட்டினதை பார்த்ததும் ஒரே குதூகலம், “ஐ… அப்பா…  அதோ இருக்க வீல் ல சுத்தனும்” என்றான் குஷியாக.

 

அவனைப் போலவே கைகளில் இருந்த ஆதியும் ,  “’சித்து… நானும், நானும்…” என்றான் கொண்டாட்டமாக.

 

பிள்ளைகளின் ஆசையை கண்ட ராம்,  “ வாங்கலே, சின்ன வயசுல இதுல சுத்துனது, பசங்களும் விருப்ப படுறாங்கே, எல்லாரும் ஒரு முறை ராட்டினத்தில் ஏறிற வேண்டியது தான்” என்றான் சிரிப்புடன்.

 

“அய்யோ… அத்தான் நான் வரல, எனக்கு பயமா இருக்கு, தலை சுத்தும்… அப்புறம், வாந்தி வரும்… அம்மம்மா   என்ன விட்டுடுங்க!” என்று பயதில் அலறினாள் பொன்னி.

 

 

ராஜ் அவளின் தலையில் வலிக்காமல் கொட்டியவன், “நீ அதுக்கு தான் சரிப்பட்டு வரமாட்ட அப்படினா, எதுக்குமே சரிப்பட்டு வர மாட்ட போல இருக்கு…” என்றவன் கிண்டிலில் “சும்மா, இருங்க ராஜ்அத்தான்” என்று  சினுங்கியவள், ஆசையாக தன்னவன்  முகத்தை பார்க்க.

 

அந்த இடத்தில் வெளிப்பட்ட அழகான குடும்ப சூழல் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு இருந்தது.

 

இவர்களின் கண்ணில் படாத தொலைவில், இதனை கண்டு கொண்டிருந்த விஜய்யின் கூர்மையான விழிகளில், அவர்களிடம் வெளிப்பட்ட பாசம், சந்தோஷத்தை பார்த்த போது கோபத்தை விட, அதில் ஏக்கமே நிறைந்திருந்தது.

 

பணம் படைத்த குடும்பத்தின் ஒற்றை வாரிசாக பிறந்தவன், இதுபோன்ற மகிழ்வுகள் எல்லாம் அனுபவிக்கவில்லை… உயிரை கூட துச்சமாக என்னும் சகோதர பிணைப்பை தெரியாத முரடன்.

 

பணத்தை தேடி ஓடிய, அளவுக்கு பாசத்தின் தேவையை அவ்வளவாக அவனின் பெற்றோர் விஜய்க்கு உணர்த்தவில்லை, படிக்கும் போதே மது, மாது என்று செல்வதை தட்டி கேட்டு,  தோள் கொடுக்க நல்ல தோழமை அமையாதது விதியின் செயலோ…?

 

 

கிடைத்த நட்புகள் கூட ஏதோ ஒரு தேவைக்காகவே பழக… உள்ளார்ந்த அன்பு  என்பதை  விஜய்  அறிய முடியாமல் போனது காலத்தின் கட்டாயமோ…?

 

 

வாழ்க்கை அனைவருக்கும் மலர்களை மட்டுமே பரிசாக தருவதில்லை சிலருக்கு  முட்களையும்  தருவதுண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!