அன்பின் மொ(வி)ழியில் – 17.
ராம் தன் அறையின் ஜன்னலின் ஓரம் நின்று அந்த அழகிய பிறை நிலவை பார்த்துக் கொண்டிருந்தான், அப்போது அவன் காதில் விழுந்த மெல்லிய கொலுசின் சிணுங்கல் ஒலியில் தன் கவனம் கலைந்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை தோன்றியது. எந்த வித சத்தமும் செய்யாமல் மெதுவாக திரும்பியவனின் பார்வை, அவனவளை விழிக் கூட அசையாமல் அவளின் தலை முதல் பாதம் வரை ஒரு இடம் விடாமல் ரசித்தது.
கயலோ, தயங்கி தயங்கி அறையினுள் வந்தவள், கட்டிலின் அருகில் கணவனை காணாது திகைத்து, தன்னுடைய விழிகளை அந்த அறை முழுவதும் அலைய விட்டாள்.
அவளின் கணவன் சற்று தள்ளி ஜன்னலில் சாய்ந்தவாறு தன்னையே பார்ப்பதை உணர்ந்து, ராமின் விழியின் மொழியை உணர முடியாது, அவனது அந்த கூர்மையான பார்வையை எதிர் கொள்ள இயலாது, தனது விழிகளை தாழ்த்திக் கொண்டு அமைதியாக நிற்க.
இப்போது ராமின் மெல்லிய புன்னகை, இதழ் பிரிந்த சிரிப்பாக மாறியது. மெல்ல மெல்ல அவளின் அருகே அவன் வர,
அவளை நோக்கி அவன் வைத்த ஒவ்வொரு அடியிலும் பாவையவளின் இதயத் துடிப்பு அதிகரிக்க, அதன் ஒலி அவளுக்கு துல்லியமாக கேட்டது.
அச்சத்தின் காரணமாக அவளின் கால்களோ, இதற்கு மேல் ஒரு நொடி கூட என்னால் நிற்க முடியாது என்பது போல தொய்ந்து தடுமாற,
கயலின் நிலைக் கண்டு இரண்டே அடியில் அவளை நெருங்கியவன், தன்னவளை தன்னுள் தாங்கிக் கொண்டான்.
ராம் -“ப்ச், என்ன விழி? என் கிட்ட எதுக்கு பயம்?” என்றவன், தன்னவளினை தன்னில் நெருக்கியவாறு கட்டிலின் அமர்ந்தவன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து கயலை பருக வைத்தான்.
அவனின் வார்த்தைகள் என்னவோ அவ்வளவு கண்ணியமாக தான் வந்து விழுந்தன, ஆனால் ராஜின் செயலில், விழிகளில் அது சிறிது கூட வெளிப்படவில்லை.
ராமின் வலிமையான கைகளோ, கயலின் மெல்லிய குளிர்ச்சியான இடையை தன்னுடன் இறுக்கிய படி இருந்ததென்றால், கண்களோ தன்னவளாம், பெண்ணவளின் ஏற்ற, இறக்கங்களை வேட்கையுடன் வெறித்துக் கொண்டிருந்தன.
கணவன் கொடுத்த நீரினை அருந்தி, தன் மனதை சமன்படுத்திய பின்பு தான், கயலுக்கு தன் இருக்கும் நிலையே புரிந்தது.
தன்னுடல் முழுவதும் ராமின் மீது படித்திருக்க அவனின் அணைப்பில் இருப்பதை கண்டு,
தன்னிலை உணர்ந்து அவள் விலக முயல, காளையவன் இரும்பு பிடியில் இருந்து அவளால் அசைய கூட முடியவில்லை.
அதில் திகைத்து கணவனின் முகம் பார்க்க, அங்கே வெளிப்பட்ட சொல்ல முடியாத உணர்வில் அவளில் உடல் ஒரு முறை தூக்கிப் போட்டு, பயத்தில் நடுங்க தொடங்கியது.
ராமின் நிலையோ, கயல் வந்து அவளிடம் பேசியவரை இருந்த அவனின் பொறுமை, நிதானம் எல்லாம் தன்னவளை தீண்டிய பிறகு தறிகெட்டு ஓட தொடங்கியது, அவளின் தற்போதைய மனநிலையையே எண்ணாமல் தாபம் கொண்டவனின் உணர்வுகள் அனைத்தும் அவனவளின் நடுக்கத்தில் ராமிடம் இருந்து விடை பெற, சட்டென அவளின் மீதிருந்த தன் பிடியை விலக்கியவன், எதுவோ தன்னை துரத்துவது போல விரைந்து ஜன்னலின் அருகில் சென்று, கண்களை இறுக மூடியபடி அசையாது நின்று விட்டான்.
அவ்வளவு எளிதில் தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தவன், ஆழ்ந்த மூச்சுவிட்டு தன்னை, தன்னுடைய மனதில் தோன்றிய மோகத்தை எல்லாம் களைந்து, நிலைப்படுத்திக் கொண்டவன் மனதில் இப்போது குற்ற உணர்வு தலை தூக்கியது.
இவையனைத்தும் சில வினாடியில் நிகழ்ந்து விட, கயலுக்கு தான் இவை எல்லாம் விளங்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆனது.
ராமின் மீது நம்பிக்கை மலையளவு இருந்தாலும் கயலால் தன் பயத்தை மீறி அவனை நெருங்க முடியவில்லை, அதே நேரத்தில் அவன் தன் மீது கொண்ட தாபத்தை ஓரளவு புரிந்து கொண்டவள், ராமின் காதலை அப்போதும் அறியவில்லை.
திருமணம் பற்றி முடிவான உடனே அவள் யோசித்தது, தன்னை பற்றியும், மற்றும் ஆதி, ரவி இருவரின் பிறப்பை பற்றி யாரிடம் சொல்லவில்லை என்றாலும் ராமிடம் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தாள்.
கயல் – ‘என்றாவது ஒருநாள் அவன் தன்னை தவறாக நினைத்து பார்த்தால், அது தன் வாழ்வை மட்டும் இல்லாமல் குழந்தைகள் எதிர்காலத்தையும் கேள்வி குறி ஆகி விடும்’ எனவே கணவனிடம் தன்னிலையை தெளிவுபடுத்த முடிவெடுத்தவள்.
தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டு ராமின் அருகே வந்தவள், “ஆதிப்பா நான்… நான்… உங்க கிட்ட பேசணும்…” என்று தயங்கி கூற.
ராமின் மனமோ, முழுவதும் குற்ற உணர்வு கொண்டு தன்னவளின் முகம் காண தயங்கி விழி மூடி திரும்பி நின்றவன் செவியினில், கயலின் அந்த மெல்லிய தடுமாற்றமான குரல் விழவே இல்லை.
கயலோ, எதையும் பேசாமல், முகம் காட்ட மறுத்து, தான் அருகில் வந்து அவனை அழைத்ததை கூட உணராமல் அமைதியாக நிற்பவனை கண்டு புரியாமல் பார்த்தவள்.
அவனின் கைகளின் மீது தன்னுடைய கரத்தினை பதித்து, “ஆதிப்பா” என்று அழைத்த பிறகே விழிகளை திறந்தவன், தன்னவளின் வதனத்தை காண தயங்கி “சாரி விழி நான்…” என்றவன் மேலே பேச முடியாது தடுமாறி நிறுத்த.
அவனின் தவிப்பில், மன்னிப்பு கேட்ட விதத்தில், பெண்ணவளின் மனதில் உள்ள பயம் நீங்க, உறுதியான ஒரு முடிவோடு.
கயல் “ஆதிப்பா நான், உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் தெளிவாக.
அவளின் அழைப்பும், தெளிவான வார்த்தைகளும், தன் கைகளினை பற்றி இருந்த அவளின் கரத்தில் மீதும் பார்வை பதித்தவன், கண்களில் சொல்ல முடியாத அளவுக்கு நிம்மதி தோன்றியது.
கயலின் கைகளை தன் கைகளுக்குள் கொண்டு வந்து தட்டிக் கொடுத்து, “நீ எதையும், எப்பவும் என்னிடம் மனம் திறந்து பேசலாம் கண்ணம்மா, அந்த அளவுக்கு உனக்கு உரிமை உண்டு” என்றவன், அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டு, “சொல்லு விழி” என்று தொடங்கி வைக்க.
அதுவரை தைரியமாக இருந்தவள், இப்போது நடந்தவைகளை சொல்ல முடியாது தடுமாறினாள்.
“அது வந்து அன்னைக்கு” என்றவள் குரலில் தவிப்பும், தடுமாற்றமும் நிரம்பி வழிந்தது, அவனவள் படும் பாட்டை கண்டவன் அதனை காண சகிக்காமல்.
“எனக்கு உன் மேல கடலளவு நம்பிக்கை இருக்கு அம்மு, நீ எதையும் சொல்ல வேண்டாம்” என்று அவன் முடிப்பதற்குள்,
“இல்லை, நான் இப்ப சொல்லியே ஆகணும்” என்ற அவளின் மெல்லிய குரலில் சிறு கோபமும், பிடிவாதமும் தெரிந்தது.
ராமும், கயலைப் பற்றி இந்த சில நாட்களில் அவன் அறிந்த வரையில், திருமணத்திற்கு அவள் சம்மதம் சொல்லிய போதே அவன் இதை எதிர்ப் பார்த்தான்.
அவனிடம் முதல் முறையாக வெளிப்பட்ட அவளின் சிறு உரிமையான கோபத்தில் மகிழ்ந்தவன்.
புன்னகையுடன் அவளின் தலையை பிடித்து மெல்ல ஆட்டி விட்டு, “சொல்லுறதுனால உனக்கு நிம்மதி கிடைக்குமுன்னு நீ யோசிச்சா, கண்டிப்பா நான் கேக்குறேன் குட்டிமா, ஆனா என்னை உன் கூட்டாளியா நினைச்சு சொல்லுறதுனா சொல்லு அம்மு” என்றவன்.
“என் விழிய பத்தி எல்லாமே தெரிஞ்சுக்க எனக்கு பிடிக்காம போகுமா என்ன?” என்றான் இலகுவாக.
அவன் சொல்லிய தோரணையில் தன்னை மறந்து சிரித்தவளின் கன்னத்தில் அழகாக குழி விழுந்தது.
அந்த கன்னக்குழியில் முத்தமிட்டு, அதில் விழுக துடித்த மனதினை கட்டுப்படுத்த ராம் தான் பெரும் பாடுபட்டு போனான்.
தனது முட்டாள் தனத்தினால், கயல் மீண்டும் தன் மன கூண்டுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளதால், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, ராம் அமைதியாக அவள் சொல்லவதை கவனித்தான்.
கயலோ தன் வளர்ந்தது முதல் அனைத்தையும் அவளவனிடம் சொல்ல துவங்கினாள்.
பெண்ணவளின் மனஉணர்வுகள் மன்னவனை வெட்டி வீழ்த்த தொடங்கியது.
*************************
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான, ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தான் கயல் வளர்ந்தது.
அழகிய பல மொட்டுக்கள் இந்த சமுதாயத்தில் வாழும் மனித மிருகங்களின் புறக்கணிப்பால் அங்கே மலர்ந்திருந்தன.
குறைந்த அளவு மக்களை கொண்டு ஒரு ஓய்வு பெற்ற மிலிட்டரி ஆபீஸ்ர் மூலமாக நடத்தப்படும் அந்த ஆசிரமத்தில் நேர்மை அதிகமாக இருந்தது.
அவர்களால் இயன்ட அளவு நல்ல முறையில் அந்த குழந்தைகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வைத்தனர்.
கயல் மற்ற பிள்ளைகளுடன், அருகில் இருந்த அரசு பள்ளியில் தான் படித்தாள்.
பள்ளிப் படிப்பை முடித்த அந்த அழகிய பட்டாம்பூச்சி, கல்லூரியில் சேர்ந்து சிறப்பான முறையில் பட்டம் பெற்ற உடன், ஆசிரம விதிப்படி தனது வாழ்க்கையினை எதிர் கொள்ள வெளியே வரவேண்டிய சூழ்நிலை, அதுவரை முட்டையில் இருந்த கருவைப் போல் பாதுகாப்பாக இருந்தவள், வஞ்சம் கொட்டி கிடக்கும், இந்த கொடிய விஷம் நிறைந்த உலகில் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட, தன்னுடன் பயின்ற கல்லூரி தோழிகளின் உதவியுடன் வேலை செய்யும் மகளிருக்கான விடுதியில் சேர்ந்தாள்.
கெட்டதிலும் ஒரு நல்லது போல, திறமையான கயலுக்கு கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டிலே கேம்பஸ் மூலம் வேந்தன் கம்பெனிசில் வேலை கிடைத்திருந்தது.
வாடிக்கையாளர்களின் குறைகளை நிர்வாக உதவியுடன் சரி செய்யும் சாதாரண வேலையில் தான் பணிபுரிந்தாள்.
இந்த நவீன உலகம் கயல் போல் வளர்ந்த ஒரு பெண்ணிற்கு ஏகப்பட்ட வியப்பையும், பயத்தையும் தந்தது.
அடிப்படை வசதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப் பட்டவளுக்கு, தன்னுடன் விடுதியில் தங்கி இருக்கும் பெண்களும், வேலையிடத்தில் இருப்பவர்கள் செய்யும் ஆடம்பர செலவுகளை கண்டு அதிர்ச்சி தான்.
அதிலும் நாகரிகமாக இருப்பதாக கூறிக்கொள்ளும் அவர்களின் வார்த்தைகளில் சிறிது கூட நாகரிகம் இல்லை என்ற தோன்றும் கயலுக்கு.
ராஜ் வில்லியம்ஸ் மற்றும் அவனது அண்ணனை பார்க்கும் போது அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வும், பணக்காரனை மணந்தால் சுலபமாக கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கையை பற்றி கின்டலில் ஈடுபடுவது, கயலை பார்த்து ‘நீயும் முயற்சி செய்’ என்று விளையாட்டாக கேலி செய்வது அனைத்தும் இவளுக்கு அருவெறுப்பை தர … அவர்களுடன் அவளால் ஒரு அளவுக்கு மேல் ஒட்ட முடியவில்லை.
விளையாட்டுப் பேச்சுக்களை, சரியான முறையில் புரிந்துக் கொள்ள கயலால் முடியாது போனது, விதி தான் போல, அதனால் வாழ்வில் தயங்காது செயல் பட வேண்டிய முக்கியமான நேரத்தில், மற்றவர்களின் வார்த்தைக்கு அஞ்சி ஓடும் நிலை ஏற்படும் என்பதை அந்த வெளியுலகை புரிந்து கொள்ள முடியாத சிறு பெண் அறியவில்லை.
யாரிடமும் நெருங்கி பழக முடியாத கயல், தனது படிப்பு, வேலையென நேரத்தை செலவிட, அது அவளை சாதாரண பணியில் இருந்து எம். டி யின் செயலாளர் என்ற உயரம் வரை கொண்டு சென்றது.
ராஜிற்கு, எந்தவித பாசங்கும் செய்யாமல், அனாவசிய பேச்சு வார்த்தை இன்றி, தன்னுடைய வேலையை மட்டும் சிறந்த முறையில் செய்யும் கயல் விழி மீது நல்ல மதிப்பு இருந்தது.
அவளிடம், நம்பி பல வேலைகளை ஒப்படைத்திருந்தான்.
*************************
ராம் வில்லியம்ஸ் முக்கியமாக தேவைப்படும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேந்தன் குரூப்ஸ் பக்கம் வரவே மாட்டான்.
வேலை தொடர்ப்பாக படித்திருந்தாலும், அவனின் விருப்பம் என்னவோ தனது, தாத்தா, மற்றும் தந்தையை போல் விவசாயம் செய்வது தான்.
குணத்தில் ராஜ் வில்லியம்ஸ் தனது தாய் வழி தாத்தாவை கொண்டிருந்தான் என்றால், ராம் வில்லியம்ஸ் தந்தை வழி பாட்டனை கொண்டிருந்தான்.
இருவருமே தான் விரும்பி ஏற்ற பணிகளில் சிறப்பாகவே செயல் பட்டனர்.
ராஜிற்கு இளம் தொழில் அதிபருக்கான விருது, அவன் தொழில் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் அவனின் திறமைக்கு பரிசாக அவனை தேடி வர, அதே நேரத்தில் ஒரு பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தமும் வேந்தன் குழுமத்திற்கு கிடைத்தது.
அதன் காரணமாக ராஜ் வில்லியம்ஸ் கண்டிப்பாக ஜெர்மன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட, விருது வழங்கும் அமைப்பிடம் தன்னிலையை தெளிவு படுத்தியவன், அவன் சார்பாக நிறுவனத்தின் இன்னொரு இயக்குனரான தனது சகோதரன் ராம் வில்லியம்ஸ் பெற்று கொள்ளுவார் என்று கூறியவன் அடுத்து போய் நின்றது ராமிடம் தான்.
ராஜ் சொல்வது அனைத்தையும் பொறுமையாக கேட்ட ராம், “இது உன்னோட கஷ்டமான உழைப்புக்கு கிடைச்ச பரிசுலே, நீ நேரடியா வாங்குறது தான் சரியா வரும், இதுல என்னோட முயற்சி கொஞ்சம் கூட இல்லை ராஜ், நான் எப்படி இதை வாங்க முடியும்?” என்றவனின் வார்த்தைகள் சிறு அளவு கூட பொறாமை இன்றி, தனது உடன் பிறந்தவனின் வெற்றியை எண்ணி பூரிப்பாக வெளிவந்தன.
பார்ப்பவர்கள் எளிதில் அடையாளம் காண முடியாத அளவுக்கு தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பவர்களின் குணம், தனித்தன்மை வேறு வேறாக இருந்தாலும் அன்பு என்னும் மந்திர கயிறு இருவரையும் அழகாக இணைத்திருந்தது.
ராஜ் – “இல்லை ராம் இந்த காண்ட்ராக்ட் எனக்கு ரொம்ப முக்கியம், இது மூலமா நான் என் தொழிலை வெளிநாடு வரை விரிவு படுத்த முடியும். என்னால இதை தள்ளிப் போடவோ, தட்டிக் களிக்கவோ கண்டிப்பா முடியாது, இது என்னோட கனவுடா, உனக்கே தெரியும் கிட்டத்தட்ட மூணு மாசமா நான் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தது, ப்ளஸ் ராம்” என்றவனின் குரலில் இருந்த இரஞ்சலை புரிந்து கொண்டவன்.
ராம் “சரி ராஜ், நான் போறேன் விருது வாங்க, ஆனா வராது நீ இல்ல, இன்னொன்று போர்ட் ஒப் டைரக்டர் அப்படின்னு இன்போர்ம் பண்ணிட்டு” என்றவன் வார்த்தை முடியும் முன்னே ராஜ் தன் இரட்டை சகோதரனை அனைத்துக் கொண்டான் மகிழ்வாக.
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் ராம்” என்று குதூகலமாக கூறியவன் அறியவில்லை.
தன்னால் முடிவு செய்யப்படும் இந்த நிகழ்வு ராமின் வாழ்வில் செய்யப் போகும் மாற்றத்தினை.
தன் மீது வஞ்சம் கொண்டுள்ள ஒருவனால் தன் தமையன் படப்போகும் பாடு, அதனால் ஏதும் அறிய ஒரு அனாதை பெண்ணுக்கு, ராம் தான் அறியாமல் செய்யப்போகும் பாவமும்.
இதை மட்டும் அறிந்திருந்தால் ராஜ் இவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்க மாட்டான்.