anbin mozhi – 20

 அன்பின்   மொ(வி)ழியில் – 20.
  
இரவின் அமைதியான சூழலில் மனம் முழுவதும் நிம்மதியுடன் நிலவினை ரசித்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.
 
சொந்தங்கள் அற்று வளர்ந்தவளுக்கு இப்போது ராமின் மூலம் வரமாய் கிடைத்த உறவுகள் தனி ஒரு பலத்தை அவளுக்கு தந்தது.
 
எப்போதும் போல நிலவு அன்னையை பார்த்திருந்தவளில்  விழிகளில், முன்பு போல் கலக்கம், ஏக்கம் போன்றவை இல்லாமல், அமைதியும்,  நிம்மதியும்  நிறைந்திருந்தது. 
 
மகளின் மனக் குறைகள் நீங்கி,  முகப் பொலிவுடன் நிற்கும் அவளின்  நிம்மதியை கண்டு பூரித்த அன்னையவள், தன்  முன் இருந்தவளை தனது ஒளி பொருந்திய கரங்கள் கொண்டு அணைத்திருந்தாள்.
 
அழகிய நிலவொளியில் அந்த இரவு  நேரத்தில், சற்று தள்ளி இருந்த கயலின் உருவம் கோட்டோவியம் போல  ராமின் கண்களுக்கு தெரிய, தன் உயிரானவளின் அழகிய வதனத்தை அமைதியாக நின்று ரசித்துக் கொண்டே இருந்தவன், தாபம் பொங்க, மெல்ல தன்னவளில் அருகே நெருங்கி, அவளை  மென்மையாக அணைத்துக்  கொண்டான். 
 
“கண்ணம்மா” என்றவனின் உள்ளம் முழுவதும்  கயல் மீதான காதல் மட்டுமே மேலோங்கி இருக்க ஏக்கத்துடன் தன்னவளை அழைத்தான். 
 
கணவனின் குரலில் நிமிர்ந்து தன்னவன் விழிகளை பார்த்தவள், முதல் முறையாக அதன் மொழியினை சரியாக புரிந்துக்கொள்ள, சிறு வெட்கத்துடன் அவளவன் தோள்களில் தலை சாய்த்து,  தன் அன்னையாம், இரவின் இளவரசியை பார்த்துக் கொண்டிருந்தவள், கண்கள் இரண்டும்   மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.
 
ராம் கடந்த சில நாட்களாக அவளிடம் உணர்த்தும் காதல், அதன் மாயத்தை கயலின் மனதில் அவள் அறியாமலே அழகிய மாற்றத்தை கொண்டு வந்திருந்தது.
 
மங்கையவள் மலர்ச்சிக்கு காரணமானவனோ, மனம் நிறைந்த மயக்கத்துடன், கயலின் புன்னகையினால்  தோன்றிய கன்னக்குழியை தன்னை மறந்து, விழி அகல பார்த்து அதில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான்.
 
சில நாட்களாக  அவளிடம் காணப்படும் மாற்றங்கள் எல்லாம்  தங்கள்  வாழ்வு பெறப் போகும் முழுமையை பட்டியம் இட்டு சொல்ல,  வரப்போகும் அந்த இனிய நாளுக்காக, ஒவ்வொரு நொடியும் காத்திருக்க.
 
பெண்ணவளுக்கோ, இந்த ஒரு வாரம் எப்படி போனதென்றால் சொல்ல தெரியவில்லை.
 
திருமணம் நடந்த   இரவில் முதல்  முதலாக, தன் இத்துணை வருட சுமைகளை எல்லாம், கணவனிடம் மனம் திறந்து, அனைத்து விடயங்களையும் கொட்டிய பின்,  கண்கள் கலங்கி, சோர்ந்து போய் கிடந்தவளை, அமைதியாக  தாங்கிக் கொண்டவன் கரங்கள், கயலை தன்னுடன் இறுக்கி கட்டிக் கொண்டது.
 
அவளின் தவிப்பை கூறியபோது தன் செயலை எண்ணி கூனிக்குறுகியவன், மனதளவில் மரித்தே விட்டான்.
 
 அவன் மனத்திற்கினியவள் அடைந்த, அத்தனை மன உளைச்சல் களுக்கும் காரணமானவனே, பெண்ணவளுக்குக் மருந்தான மாயம்  தான் காதலோ!..
 
 தன்னில் புதைந்து கிடக்கும் பெண்ணவளிடம், முதலிரவில் கணவனின் உரிமையை நிலைநாட்ட அவன் துளியும் எண்ணவில்லை.
 
காதல் கொண்டே ராமின் மனது, தன்னவளில் மனதில் இடம் பிடிக்க நினைக்க, அதற்கான அடியை அழகாகவும், மென்மையாகவும், அவளின் உள்ளத்தில் எடுத்து வைத்தான்.
 
கண்ணீருடன் தன் நெஞ்சத்தில் தலை சாய்த்து இருந்தவள், உச்சியில் முகம்  புதைத்தவன்.
 
 “ சாரி… சாரிடா…  என்னை மன்னிச்சுடுமா, எனக்கு உன்னைய பத்தி தெரியல, செஞ்ச பாவமும் நினைவுல இல்ல,  உன் தவிப்பு எல்லாத்துக்கும் மூலக் காரணமான நான், சந்தோஷமா இருக்க, என்னால நீ பட்ட பாடு…  நான்… நான்… யாரையும் குறைவா, தப்பா, மரியாதை குறைவா மனசளவுல கூட நினைக்கல விழி, எப்பவும் பெண்களை உயர்வா தான் நினைப்பேன்… கடவுளே! உன் மனசுல நான்… நான்  இப்படியா பதியனும்” என்று புலம்பியவன்.
 
 கயலின் முகத்தினை கைகளில் ஏந்தி, அவளின் விழிகளில் தன் விழிகளை உறவாட விட்டு, அழுத்தமான குரலில் அவள் மனதில் பதியும் விதமாக, “ நடந்தது எதையும் என்னால மாத்த முடியாம இருக்கலாம், ஆன இனி வர ஒவ்வொரு நாளையும், உனக்கு மறக்க முடியாத ஒன்னா மாத்துவேன், உன்மேல, உன்  மீதான என்னோட அன்புமேல இருக்க உறுதில சொல்றேன் விழி, எதை பத்தியும் யோசித்து  இனி நீ, வெசன படக் கூடாது , நீ பயப்புடுற மாதிரி, யாரும் உன்னைய எதுவும் சொல்ல  நான் விட மாட்டேன். என்னோட மனைவியை பத்தி ஒரு வார்த்தை தவறா பேச ஒருத்தனுக்கு தைரியம் வராது”, என்றான் கம்பீரமான  குரலில்.
 
கணவனின் குரலில் ஏற்பட்ட மாற்றத்தினை உணர்ந்தவள், மெல்ல  கண்களை மூடி திறந்து தன்னவனின் முகத்தினை கண்ட நொடி, ‘இவன் என்னை ஒருபோதும் வருந்த விட மாட்டான்’ என்று எண்ணியவள், கண்களில் விரிய  சிறு புன்முறுவலுடன்  ராமின் மார்பில் முகத்தினை மறைத்து தலை அசைத்தாள்.
 
அவளின் அசைவில், தன்னை உரசிய இதழ் மென்மையில்,  ராமின் தேகம் சிலிர்த்துக் கொண்டது,  அவனுள் அடங்கியிருக்கும், ஏதோ பற்றி திகுதிகுவென  எரிவது போல இருந்தது. 
 
‘மோகத்தைக்  கொன்றுவிடு – அல்லாலென்றன் 
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தை சாய்த்துவிடு  – அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு – அல்லாலென்றன்
ஊனை சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே’. 
என்ற பாரதியின் மன குமறல் தனை தானும் உணர்ந்தான் அந்த நொடியில்.
 
கடல் நீரின் நடுவே குடிநீரை தேடும் நிலையில் வைத்த இறைவனை சாடியவன், தன் கைகளை உணர்ந்த பெண்மையின் மென்மையில் கரைய முடியாத நிலையில் கயலை பார்த்தான்.
 
அவனின் தேவதை பெண் அவள்,கடந்த சில ஆண்டுகளாக, ராமின் ஒவ்வொரு இரவையும் தன் ஸ்பரிசங்கள், கூடல்கள், முத்தங்கள்  கொண்டு முழுமையடைய செய்யும்  கனவு பெண்  அவனின், கைகளில் இருக்கும் போதும், அவளை ஆள முடியா நிலையை எண்ணி நொந்து கொண்டவன் மனதில்,  காதல் எந்த அளவுக்கு இருந்ததோ, அதே அளவு அவனவள் மீதான காமமும் இருந்தது.
 
காதல் கலக்காத காமம் என்பது உண்டு…
ஆனால் காமம் தோன்றாத காதல் இவ்வுலகில் இல்லை…
 
மன உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவளின் உள்ளத்திற்கு மட்டுமே, முக்கியத்துவம் அளித்தவனின் மனதில் அப்போது காமத்தை விட காதல் தான் மேலோங்கி நின்றது.
 
 அந்த முழுநிலவினை தன்னவளுடன் ரசித்து கொண்டிருந்தவன், “கயல் வா,  வீட்டுக்குள் போலாம்,  நம்ம பசங்க,  ரமி, பொன்னி கூட படுத்துட்டாங்க, பொழுதாச்சு தூங்கலாம்” என்றான் அமைதியாக.
 
 
“ஹ்ம்ம்… சரி ஆதிப்பா,  மணி என்ன?” என்றாள்.
 
“அதானே கட்டுனவன் அங்க   உனக்காக வருவ வருவனு காத்திட்டு இருக்கேன், நீ என்னன்னா இவ்வளவு நேரம் காத்தாட நின்னு வேடிக்கை பார்த்து விட்டு, சாவகாசமா மணி கேக்குற, ஹ்ம்ம்… என்னைய பத்தின  நினைப்ப காத்துல விட்டுட்ட போல” என்றான் கேலியாக.
 
அவனின் கேலியில் சிணுங்கி,  “அம்மாடி இவ்வளவு பெருசா இருக்க உங்களை, காத்துல விட  முடியுமா?” என்று முணுமுனுப்பாக கூறியவள், வார்த்தைகள் ராமின் காதுகளில் தெளிவாக விழுந்தது.
 
“ஆதிப்பான்னு சொல்லறது நல்லா தான் இருக்கு அம்மு, அப்புறம் ரவி சண்டைக்கு வரலாம், இல்ல புதுசா… ஒண்ணு இல்ல இல்ல ஹ்ம்மம்ம்… அடுத்து இரண்டு, அதுக்கடுத்து இரண்டு…” என்று யோசனையாக கூறிக் கொண்டிருந்தவன் வார்த்தைகளில் கயல் அரண்டு விட்டாள். 
 
“அம்மாடி” என்று நிமிர்ந்து தன்னவன் முகத்தை காண, அங்கு இருந்த கிண்டலினை புரிந்து கொண்டு, நிம்மதியாக மூச்சு விட்டு, மெல்லிய சிரிப்புடன், “வேற எப்படி கூப்புடுறதாம் உங்களை?”.
 
“ தனியா இருக்கும் போது எப்படி வேணா கூப்பிடலாம், ராம் அப்படினாலும் சரிதான், நம்ம ஊரு பக்கம், பேரு சொல்லும் வழக்கம் இல்ல, மாமன் மகனை மச்சான்னும், அத்தை மகனை அத்தான்னும் சொல்லுவாங்க, உனக்கு எப்படி புடிக்குதோ அப்படி கூப்பிடு” என்றவன்.
 
குறும்புடன் “வாடா, போடா கூட சொல்லலாம் கண்ணம்மா, நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்றான் சிறிதளவு கிறக்கமாக.
 
கணவனின் வார்த்தைகளில் முகம் சிவந்தவள், அதை மறைக்க அவன் மீதே முகம் புதைத்தாள்.
 
மெல்ல மெல்ல தன் கூட்டை விட்டு வெளியே வரும் அந்த அழகிய கிளியை கண்டு புன்னகைத்தவன், தன்னவளுடன் உறங்கச் சென்றான்
 
**********************
 
 
ஆதவன் உதிக்கும் நேரத்தில்,பூக்கள் பூத்து குலுங்கும் அந்த அழகிய தோட்டத்தில், மென் மலரென நடந்து வந்தவளை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவனின் வழக்கமான குறும்பு எப்போதும் போல துள்ளி குதித்து வெளிவந்தது.
 
ராஜ் தன் வழக்கம் போல பொழுது புலர்வதற்கு சில நிமிடங்கள் முன்பு  உடற்பயிற்சி செய்ய தோட்டத்திற்கு வந்திருந்தான்.
 
பிரிந்தும் பிரியாத அந்த காலையில், பறவைகளின் இனிய ஓசையை ரசித்தவாறு ஓடி கொண்டிருந்தவனின் காதுகளில் கொலுசின் ஒலி கேட்க, தன் கவனம்  களைய திரும்பியவனின் பார்வை வாசலில் அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்த பொன்னியின் மீது விழுந்தது.
 
எத்தனையோ! அழகான பெண்களை வெளிநாட்டில் படிக்கும் போதும் சரி, இப்போது சென்னையில் தொழில் செய்யும் பொழுதும் சரி அவன் நிறைய பார்த்து விட்டான்.
 
பொன்னியிடம் தோன்றும்  ஒரு வகையான உணர்வை, ராஜிற்கு இது வரை யாரும் அவனுக்கு தந்ததில்லை, இத்தனைக்கும் ஆளை அசரடிக்கும் அழகு இல்லை,  பார்ப்பவர்களை மயங்க செய்யும் கலரும் இல்லை, எதோ ஒரு விடயம், அவளை தவிர அவனை யாரையும் பார்க்க விடவில்லை.
 
 
சிறு வயது முதலே பொன்னியிடம்  மட்டுமே ஏற்படும் உரிமை உணர்வு, தன் அண்ணன் கூட அவளிடம் பேசும் போது தலைதூக்கும். தன்னவள் தன்னை மட்டுமே எல்லாமாய் நினைக்க வேண்டும் என்று ஏங்கும் ராஜிற்கு.
 
தன்னவளை கண்டு உணர்வுகளை அடக்கி கொண்டு, பெரு மூச்சு விட்டவன், ‘காலையிலேயே இந்த பிசாசு , மோகினி மாதிரி வந்து மயக்குவா, சரி அப்படின்னு, கிட்ட போன குரங்கு மாதிரி தவ்வி ஓடிடுவா, இருடி இன்னைக்கு இருக்கு உனக்கு, வசம்மா என்கிட்ட மாட்டிக்கிட்ட ’ என்று மனதுக்குள் தன்னவளை அர்ச்சனை செய்தவன் அவளை நெருங்கினான்.
 
கருக்கல் வேளையிலேயே எழுந்து தலைக்கு குளித்து விட்டு, முடியை தளர பின்னி சிறிதளவே பிச்சி பூ வைத்து, அழகாக பச்சை வண்ண பட்டுடுத்தி  வாசல் தெளித்து, தன் ஊர் பழக்கத்தில் கோலம் போட வந்தவளை அந்த மலை பகுதியில் மிகுந்து இருந்த குளிர் கூட ஒன்றும் செய்யவில்லை.
 
 ராஜோ, பூனை போல, மெல்ல மெல்ல அவனவள் அருகினில் வந்தவன் பின் பக்கம் நின்று கொண்டு செல்லில் பாடலை சப்தமாக ஒலிக்க விட்டான்.
 
“நேத்து ராத்திரி யம்மா… துக்கம் போச்சுடி யம்மா… 
நேத்து ராத்திரி யம்மா… துக்கம் போச்சுடி யம்மா… 
 
ஆவோஜி ஆவ் அனார்கலி அச்சா அச்சா பச்சக்கிளி…” 
 
திடீரென கேட்ட பாடலில், அதிர்ந்து திரும்பியவள் தன்னை நிலைப்படுத்த முடியாமல், அருகில் இருந்த கலர்கோலப் பொடி கிண்ணத்தின் மீது அப்படியே விழுந்து விட்டாள்.
கோலம் போட வந்தவளின் கோலம்  அத்துணை வண்ணமயமாக இருந்தது.
 
அதுவரை மெல்லிய புன்னகையுடன் பொன்னியை பார்த்து கொண்டிருந்தவன், அவளில் வண்ண முகம் கண்டு சத்தமாக சிரிக்க ஆரம்பிக்க, அவனின்  கண்களில் டன் கணக்கில் குறும்பு வழிந்தது.
 
‘வெவஸ்த கெட்ட மனுஷன்,  அறிவே இல்ல, யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க, லூசு மாதிரி, வெல்லன போடுற பாட்ட பாரு’ என்று மனதிற்குள் அவனை பற்றி பெருமையிலும் பெருமையாக , பொருமியவளின் இன்னொரு மனமோ, கள்ளத்தனமாக அவனே அறியா வண்ணம், தன் மனதில் இருப்பவனின் உருவத்தை கண்டு ரசித்தது, அதிலும் அந்த குறும்பான கண்கள் வெளிப்படுத்தும் பாவனைங்களில் தன் மாமன் மகனிடம் ரகசியமாக சரணடைந்தது பொன்னியின் உள்ளம்.
 
எழுந்து நின்று எதிரே முகம் கொள்ளா சிரிப்புடன் இருப்பவனை கண்டு ஒரு நொடி தடுமாறினாலும், சுதாரித்துக் கொண்டு தன் முறைப்பை பரிசாக தந்தாள்.
 
“ஆஹா!  சூப்பர் ஆஹ் இருக்க பொன்னி செல்லம் நீ, இப்ப உன்னை பார்த்து மச்சான் அப்படியே மயங்கிட்டேன் போ” என்றான் கேலியாக. 
 
தலை முடியெல்லாம் பச்சை வண்ணத்தில் மின்ன சிவப்பு நிறம் அவளின் முகத்தில் பூசி இருக்க, கைகள் இரண்டும் வண்ணம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நிறம் மாறி விட்டது.
 
“அப்பாடி சூப்பர், என் செல்லகுட்டி,  தங்கம் நீ இப்போ பார்க்க, மல்டி கலர் ஏஞ்சல் போல இருக்க” என்றான் குறும்புடன்.
 
 “எதையாவது சரியா செய்றீங்களா?, இப்ப பாருங்க, செத்த நேரம் முன்னதான்   இந்த குளிருல குளிச்சுட்டு  வந்தேன், இப்ப ஒரு வேலையை ஒன்பதா கிட்டிங்க” என்றாள் கோபமாக.
 
“எந்த வேலையை இப்ப நான் சரியா  செய்யலை?, ஹ்ம்ம் என்ன பொன்னி?, சரிசரி  நீ ஒன்னும் செய்யாம சும்மா இரு, நான் குளிச்சு விடுறேன் உன்னைய… அப்ப குளிரவும் குளிறாது, வேலையும், குறையும் அதே நேரத்தில்,  உனக்கு மச்சான் கை வேலைப் பத்தியும், தெரியும்”  என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.
 
அவனின் வார்த்தைகளில் வெளிப்பட்ட அர்த்தத்தை புரிந்துக் கொண்டவள், திடுக்கிட்டு முகம் சிவக்க, பேச முடியாமல்  அப்படியே நின்று விட,  
 
பொன்னியின் வெட்கத்தில் சிவந்த முகம் கண்டு, அவளை அணைக்க அவளவன் நெருங்க…
 
 
பொன்னியோ, ராஜ் தன்னை நெருங்குவதை கண்ட, அடுத்த நொடி அங்கிருந்து  ஓடி விட்டாள்.
 
சில நொடி மட்டுமே என்றாலும் கூட பொன்னியின் விழிகளில் தோன்றிய அவனுக்கான மயக்கத்தையும்,  காதலையும் கண்டு கொண்டவன், உல்லாசமாக  தன் அன்பிற்கினியவள் சென்ற திசையை பார்க்க,
 
பேய், பிசாசு தன்னை துரத்துவது போல,   அரண்டு போய்  ஓடியவளை கண்டு சிரிப்புடன் திரும்பியவனின் கண்களில் விழுந்தது, அந்த மலைக் கிராமத்திற்கு துளி அளவுக்கு கூட சம்மந்தம் இல்லாத அந்த விலை உயர்ந்த வெளிநாட்டு கார்.
 
சிறு நொடி புருவம் சுருங்க செல்லும் அந்த வாகனத்தை பார்த்தவன் இதழ்களில் விஷம புன்னகை  தோன்றியது.
 
 
‘ஆஹா எலிதானா வலைக்குள்ள வந்து மாட்டிக்கொண்டு படாத பாடு படப்போகுது போல, எல்லாம் அவன் செயல்’  என்று மேலே பார்த்தவன்,  சற்று முன் இந்த இடத்தில் தன்னவள் உருவாக்கிய வெட்க சிதறல்களை எண்ணி உல்லாசமாக, விசில் அடித்தவாறே வீட்டினுள் சென்றான்.
 
உள்ளே வந்தவன் மீது “சித்துது…”  என்ற அழைப்புடன், பஞ்சு பொதி என மோதின அந்த  அழகிய சிட்டுக்கள் இரண்டும்.
 
தன்மிது விழுந்த மகன்கள் இருவரையும் கைகளில் ஏந்தி கொண்டவன், “ என் வைரகுட்டிங்க,  ஏன் இவ்வளவு வேகமா ஓடி வரீங்க?, மெதுவா அடிபடாம விளையாடனும் சரியா” என்றவன் முடிக்கும் முன்னே, 
 
 ஆதி –  “சித்து,  எங்களை ரமியும், பட்டுவும் அடிக்க வாராங்க” என்றான் ஒன்றும் தெரியாதது போல்.
ஆதியின் கண்களில் மின்னிய குறும்பை கண்டவன் ரவியிடம் “என்ன செஞ்சீங்க நீங்க?” என்றான் ரகசியமாக.
 
அவனின் ரகசிய பேச்சு வார்த்தையில் தன் தெத்து பல் தெரிய சிரித்தவன், ராஜ் தன்னிடம் கேட்டது போலே, அதே குரலில், தாங்கள்  செய்ததை கூற, 
“ என்னடா… பார்க்க தான் என்னை மாதிரின்னு இருந்தா, ஹ்ம்மம்ம்…  குறும்புலையும்மாட?” என்று சிரித்தவன்.
 “யாரும் என் செல்ல பசங்கள ஒன்னும் பண்ண முடியாது, வாங்க நான் அடிக்கிறேன் அவுங்களை” என்றவன் பிள்ளைகளுடன் ஹாலிற்கு வர, தன் எதிரே கோபமாக ஆதி, ரவி இருவரையும் முறைத்துக் கொண்டு நின்ற தங்கைகளை கண்டவன், தன் சிரிப்பை அடக்க  முடியாமல் தவித்தான்.
 
இப்போது சிரித்தால்  உடன் பிறப்புகள்  இரண்டுக்கும், அவனை எரிகிற நெருப்பில்  தந்தூரி போல் வாட்டி விடும் உத்தேசம்   தெரிவதை கண்டு தன்னை அடக்கிக் கொண்டவன்.
 
“வாவ் சூப்பர்…  எவ்வளவு நாள் எனக்கு ஒரு தம்பி இல்லன்னு வருத்தப் பட்டிருப்பேன் தெரியுமா?” என்று கைகளில் இருந்த மகன்களை கீழே இறங்கி விட்டு வராத கண்ணீரை துடைத்து கொண்டு, “ இப்ப உங்க இரண்டு பேரையும் பார்த்த பிறகு தான்  என்னோட அந்த  நீண்ட நாள் கவலை  ஒரே ஓட்டமா ஓடியே போச்சு” என்றவன்  அவர்களின் கரத்தில் மாட்டாமல் மக்களை  தூக்கிக் கொண்டு சிட்டாகப் பறந்து விட்டான்.
 
 
முகத்தில் கருப்பு மை கொண்டு அழகாக முறுக்கு மீசையும் தாடியும் வரைந்திருக்க, எழில் பொருந்திய வில் போன்ற அவர்களின் புருவங்களிலும் தனது கை வரிசையை காட்டி  இருந்தனர்கள் அந்த வீட்டின் குட்டி இளவரசர்கள் இருவரும்.
 
 
ஜாஸ்ஸிற்கு தன் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்கும் இந்த  சமயம் அளவிடமுடியாத மகிழ்ச்சி பொங்க ரமி, நிலாவிடம்  வந்தவர்.
 
“இரண்டு பேரும், குழந்தைங்க வரைந்து முடிக்கும் வரை  உசாரு இல்லாம தூங்கினது மட்டுமில்லாம, காலைல இவ்வளவு லேட்டா எழுந்து, குழந்தைகளை போய் தொரத்திட்டு இருக்கீங்க, போங்க போய் குளிங்க முதல்ல” என்றார் சிறு கண்டிப்புடன்.
 
அன்னையின் குரலில் முகம் சுருங்கியவர்கள், “சரிம்மா” தன் அறைக்கு செல்ல படியேற, சரியாக அதே நேரத்தில் செல்வம் விசில் அடித்தபடி மேலே இருந்து இறங்கி வர இருவரையும் கண்டவன் தன் சிரிப்பை அடக்கி,  தன் மீசையை தடவியவாறு, “நானும் என்ன என்னவோ எண்ணெயை போட்டு தடவி தான் பார்க்குறேன், ஆனா உங்க அளவுக்கு முறுக்கு மீசை வைக்க முடியல” என்று வருத்தப் படுவது போல  நக்கலாக கூறியவன்.
 
நிலாவின் “அத்தான்”  என்ற  சலுகையான குரலில்,  புன்னகைத்தவனின் பார்வை மட்டும் ரமியின் மீதே இருந்தது.
 
இந்த பத்து நாட்களாக அவனும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான் எல்லாரிடமும் கலகலப்பாக பேசி, இருக்கும் இடத்தில் எல்லாரையும் சிரிக்க வைத்து துள்ளலுடன் சுற்றி திரிபவள் அவனிடம் காட்டும் ஒதுக்கத்தை. 
 
தன் அன்னையர் இருவரிடம் கூட தயக்கமின்றி பழகுபவள், அவனை தவிர்ப்பதே செல்வத்திற்கு சந்தோஷத்தை தந்தது.
 
தான் ஏதோ ஒரு விதத்தில் அவளை பாதிக்கின்றோம் என்பதே அவனுக்கு போதுமான இருந்தது.
 
எந்த வித ஒப்பனையும் இல்லாமல் தூங்கி எழுந்த அந்த அசங்கிய தோற்றத்தில், மீசை தாடியுடன் இருப்பதை கண்டவன் கண்களில் குறும்புடன் ரமியின் மீது பதிந்திருந்த தன் பார்வையை விலக்காமல், நிலாவிடம்.
 
“அதுலயும் உன் பக்கத்துல இருக்க புள்ளக்கி இந்த அலங்காரம் சும்மா அள்ளுது போ பட்டு!” என்றவன் குரலில் உள்ள கிண்டலை உணர்ந்தவள்.
 
சிலிர்த்துக் கொண்டு அவனை போலவே நிலாவிடம், “இதோ பாரு பட்டு, இந்த ஜாடை பேச்சு எல்லாம் என் கிட்ட வேணாம், வேற யார்கிட்டையாவது வச்சுக்க சொல்லு உன் அத்தானை” என்று சொல்லியவள் வெறுப்பான பார்வை ஒன்றை செல்வத்தின் மீது வீசிவிட்டு, வேகமாக படியேறி அவனை கடக்கும் போது “வேற யாரையும் வச்சுக்குற  உத்தேசம் இல்ல புள்ள, கட்டிக்கிட்டாலும், வச்சுக்கிட்டாலும் உன்னைய தான்” என்றான் ரம்யாவுக்கு மட்டும் கேட்கும் விதமாக.
 
அவனது பேச்சுக்கு சூடாக பதில் குடுக்க திரும்பியவள், கண்டது படியை விட்டு விரைவாக இறங்கி வாசல் புறம் செல்லும் செல்வத்தின் முதுகை தான்.
 
எரிமலையாய் பொங்கும் கோபத்தை அடக்கிக் கொண்டு பல்லை கடித்து ‘என் கிட்ட  ஒருநாள் இல்ல ஒருநாள் கண்டிப்பா மாட்டுவ, அப்ப தெரியும் உனக்கு இந்த ரமி யாருன்னு,பொறுக்கி பேச்ச பாரு, சுசிலா அத்தை குணத்துக்கு, இப்படி ஒரு குரங்கா வந்து பொறக்கனும்’ என்று தன் கேவலமாக நினைத்து, அன்னையை எண்ணி பரிதாபப்படும் ரமியின் எண்ணத்தை உணராதவனாய், கீழே தோட்டத்தில் காலை வேளையில் வீசிய குளிர்ந்த காற்றினை தன்னுள் நிரப்பிக் கொண்டிருந்தான் அந்த அ(ட)ப்பாவி.
 
 
*************************
 
வீட்டில்  இத்தனை கலவரங்கள் நடக்க, இதை எதையும் தெரியாமல் கணவனின் கை சிறையில் பாதுகாப்பாக  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ராமின் விழி.
 
தன்னவள் தூங்கும் அழகை கண்டு, தான் எழுந்தால், அவனின் மனைவி உறக்கம் கெடும் என்று எண்ணி கடந்த மூன்று மணி நேரமாக அசையாமல் படுத்து, எந்த வித அச்சமும் இன்றி தன் தோளில் தலை சாய்த்து நித்திரையில் இருக்கும், தன்னவளில்  முகத்தினை ரசித்து கொண்டிருந்தான் ராம் வில்லியம்ஸ்.
 
அதே நேரத்தில் பிள்ளைகளுடன் கட்டிலில் படுத்து ஆதி, ரவியை மேல தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்த, ராஜின் செல் தன் ஒலியை எழுப்ப, அதை  எடுத்து பார்த்த ராஜின் நீல நிற விழிகள் இரண்டும் வேட்டையாட காத்திருக்கும், வேங்கையை போல் மின்னின..