anbin mozhi – 22

அன்பின் மொ(வி)ழியில் – 22.

 

 

                  நெய்வாசல்,    தெருவெங்கும் மின் விளக்குகள் கட்டப்பட்டிருக்க, ஆங்காங்கே வேப்பிலை கட்டிய கொடிகளும் தொங்கவிடப் பட்டிருந்தது.

 

வேந்தன் வீட்டில், தூங்கா அடுப்பு  என்றும் சொல்லும் அளவிற்கு, ஊரில் பெரும் பான்மையானவர்களுக்கு அங்கேயே சமையல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ராமின் திருமணத்தின் சார்பாக  சொந்த பந்தங்கள் அனைவருக்கும் விருந்தும் பட்டு வேட்டி, சேலை எடுத்துக் கொடுத்தார் ஜாஸ்.

 

திருவிழா செலவு முழுக்க ஏற்றுக் கொண்டவர். ஊருக்கு வந்தவுடன் குல தெய்வ கோவிலில் பொங்கல் வைக்க மக்களுடன் சொந்தங்கள் புடைசூழ செல்ல ஊர் எல்லையில் இருந்த அம்மன் கோயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட, அனைத்தும் புதிதாய் இருந்தது கயலுக்கு.

 

 

கயல் வந்து ராமுடன் இறங்கிய போது வியப்பாய் பார்த்த சொந்தங்கள் அனைத்தும் அவர்கள் பின் இறங்கிய இரட்டையர்களை பார்த்ததும் கண்ணிமைக்க மறந்தது. இருக்காதா  பின்னே,  அவர்களின் ஊர் பெரிய வீட்டின் மருமகள்,  தங்கள் மனதுக்கு பிரியத்திற்கு உகந்த ராம் வில்லியம்ஸின் மனைவி என்னும் போது வியப்பாய் பார்த்தவர்கள். அச்சு அசலாய் ராம்,  ராஜ் பிறந்த போது இருந்த உருவத்தை அப்படியே கொண்டு கண்களில் குறும்பு மின்ன  வந்து இறங்கி, அவர்களை பார்த்து  உறவுகள் எல்லாம் வாயைப் பிளந்து தான் நின்றது.

 

அத்தனை பெரிய கூட்டத்தைக் கண்ட பிள்ளைகள் இரண்டும் கூச்சத்துடன் தன் பின்னே  காரில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ரம்யா, பொன்னி இருவர் மீதும் ஏறிக் கொண்டு, ஒன்று போல அவர்களின் கழுத்தில் முகம் புதைத்து கொண்டனர்.

 

 

ஆதி, பொன்னியின் கழுத்தில் முகம் மறைத்த படி “பேபி உள்ள போ, எனக்கு ஒரு மாதிரி இருக்கு, ஏன் இப்படி பாக்குறாங்க எல்லாரும் எங்கள ?” என்றான் கேள்வியாக.

 

கழுத்தில் உதடுகள் உரச தன்னிடம் பேசிக் கொண்டிருந்த ஆதியின் செயலில் கூச்சமாக நெளிந்தவள்.  பிள்ளையின் தவிப்பை புரிந்து கொண்ட அன்னையாய் அவனை தாங்கி கொண்டு,  அவனின் முதுகை வருடியவாறு சிறு புன்னகையுடன்.

 

“இவ்ளோ அழகான குழந்தைகள் அவங்க பார்த்ததே இல்லையா… இத்தனை நாள் அப்பா, பாட்டி எல்லாம் விட்டுட்டு நீங்க அங்க இருந்தீங்க இல்ல, இப்ப புதுசா வந்து இருக்கவும் அவங்க உங்களை பாக்கறாங்க. இவங்க எல்லாரும் நமக்கு சொந்தம் செல்லம். இனி உங்களை அப்படியே சூப்பரா பார்த்துக்குவாங்க பாரேன்” என்று உறவுகளை அழகாய் அவனுக்கு அறிமுகப்படுத்திய பொன்னி,  அவனின் பால் வண்ண  குண்டு கன்னத்தில்  முத்தமிட்டாள்.

 

 

பார்க்க அந்தக் காட்சி அத்தனை கவிதையாய் இருந்தது. வள்ளி ஆலம் சுற்றி மணமக்களை வீட்டினுள் அழைத்து செல்ல பின் அனைவரும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே சென்றனர்.

 

உண்மையான அன்பு கொண்ட உள்ளங்கள் அனைத்தும். எந்தவித கேள்வியும் இல்லாமல் அப்படியே அழகாக அவர்களை ஏற்றுக் கொண்டது ஆனால் இவ்வுலகம் நல்லவர்கள் மட்டும் கொண்டது அல்ல.

 

 

தங்கள் ஊருக்கு புதிதாய் வந்த மருமகளை பார்க்க ஆட்கள் வந்த நிலையில் இருந்தது ஜாஸ்ஸின் இல்லத்தில்.  கயல் முதலில் இதைப் பார்த்து பயந்த போதும் ராமின் கை வளைவில் சிறிது பலம் பெற்று ஓரளவு நிலைமையை சமாளித்து வந்தாள்.

 

பொறாமையும் வஞ்சம் நிறைந்த உலகம் தானே. சிலர் ஆர்வமாகப் பார்த்தார்கள் என்றால்,  வெளியில் இருந்து புதிதாக  வந்த ஒருத்தி பெரிய வீட்டையும் கரை காண முடியாத சொத்துக்களையும் ஆளப் போவது எண்ணி கோபமாக  பார்வைகள் சில வெறுப்பான பார்வைகள் கூட அவளின் மீது படிந்தது.

 

அதிலும் வஞ்சம் நிறைந்த செல்வியின் பார்வை எல்லார் மீதும் ஒருவித வெறுப்புடன் பதிந்தது. அதுவும் கயல் மீதும் பொன்னியின் மீதும் அதிகமாகவே.

 

யாரும் அறியாமல் மெல்ல பொன்னியின் அருகில் வந்தவள். “என்னலே உங்க மச்சான் வேற ஒருத்தி கட்டிகிட்டு வந்திருக்கார், ஆனா அதைப் பத்தி கவலையே இல்லாமல், அங்க போய் ஒரு மாசத்துக்கு மேல சீராடி வந்தது போதாம,  அவளது பிள்ளைகளை தூக்கி, ஆயா மாதிரி சேவகம் பண்ணிக்கிட்டு இருக்குற,” என்றவள் வார்த்தைகளில் உள்ள  வஞ்சம் முதன் முதலாக  பொன்னியின் கண்ணில் பட்டு கருத்தில் பதிந்தது.

 

செல்வியின் வார்த்தைகளில் பல்லை கடித்துக் கொண்டு,  “நான் எப்பவுமே ராம் மச்சான் மேல ஆசைபட்டது கிடையாது. எதையாவது லூசு மாதிரி பேசாத, பிள்ளையை கையில வச்சு இருக்கேன்,” என்றவள் மனது முதன் முறையாக ‘இவளை நம்பி இருக்கக் கூடாதோ, இவளின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னவனை தவறாய் நினைத்திருக்கக் கூடாதோ!’ என்று  நடுங்கியது பொன்னிக்கு.

 

 

“பார்த்து புள்ள ரொம்ப தான் குடைபிடிக்கிற, உங்க பெரிய மச்சான போல சின்னவரு ஏதாவது புள்ள குட்டியோட வந்துரப் போறாரு, நல்லா பேச வந்துட்ட வக்கணையா ஊர்ல, உலகத்துல இல்லாத மாமா மகன்கள கண்டுவிட்டா,” என்று பொன்னியின் மனதை அறிந்தவளாய் அவள் உள்ளத்தில் தனலை  அள்ளிக் கொட்டினாள்.

 

 செல்வியின் வார்த்தைகளில் கேட்டு துடித்தவன், உடல் தன்னை அறியாமல் நடுங்கியது.  அதுவரை இருவரும் பேசியது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த, ஆதி தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பொன்னியின் கன்னத்தை வருடி, “பேபி ஏன் ஒரு மாதிரி இருக்க? , உனக்கு இந்த ஆன்ட்டி கிட்ட பேச பிடிக்கலைனா வா, உள்ளே போலாம்.”  என்றான் பெரிய மனிதனைப் போல்.

 

அவனின் பேச்சை கேட்ட செல்வி, “எங்கேயோ கடந்து புதுசா இங்கே வந்துட்டு, சட்டமா பேசுறத பாரு,  இவ்ளோ நாள் அப்பன் பெயர் தெரியாமல் இருந்தோம் அப்படிங்கற எண்ணமே இல்லாமல், காலங்காலமா என்னமோ இங்கே இருந்து ஆண்டு அனுபவிச்ச மாதிரி பேசுது இந்த புள்ள, அப்படியே சித்தப்பன் திமிர் எடுத்துக்கிட்டு” என்று வார்த்தைகளில் நெருப்பை கொட்டினாள், ஒரு சிறு குழந்தையிடம் பேசுகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இன்றி…

 

அவளின் வார்த்தைகளை புரிந்தும் புரியாமல், ஆதி   செல்வியை பார்த்துக் கொண்டிருந்த போது,  இதுவரை தன்னவளை கண்களால் கொள்ளையடித்துக் கொண்டிருந்த ராஜ்- ன் விழிகள், பொன்னியின் தடுமாறிய முகத்தைக் கண்டு கூர்மையும்   ஆராய்ச்சியுமாக, செல்வி பொன்னி இருவரையும் நோக்கியது.

 

செல்வியிடம் பேசிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் பொன்னியின் முகம் காட்டும் பாவனைகளை  கவனித்த அவனுக்கு, ஏதோ புரிவது போல் இருந்தது.

 

இத்தனை வருடங்கள் தனது நெஞ்சத்தை உணராமல், தன்னை நேசத்தை புரிந்து கொள்ளாமல் இருந்ததற்கு இவ்வளவு ஒரு மட்டமான காரணத்தை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

 

ஆதியிடம் அவள் பேச ஆரம்பித்த உடனே ஏதோ தோன்ற அவர்கள் அருகில் வந்தவனின் செவியில் விழுந்த செல்வியின் வார்த்தைகளில் கோபம் தலைக்கேற வார்த்தைகளை  கொண்டு அவளைக் குத்திக் கிழிக்க நினைத்தவன் கைகளை, அப்போதைய சூழ்நிலை கட்டிப்போட தாழ்ந்த குரலில் தனது அண்ணன் மகன் இடம் பேசுவது போல் வெறுப்பை  அவள் மீது சொல் அம்பு கொண்டு செலுத்தினான்.

 

“ இந்த வீட்டோட குட்டி பிரின்ஸ், அதுவுமில்லாம என்னோட செல்லக்குட்டி.  நம்ம வீட்டுக்கு ஃபர்ஸ்ட் டைம் வரீங்க,  வேகமா உள்ள போய் நிற்கிறது விட்டுட்டு. நீங்க போய் இந்த மாதிரி லூசு ஆன்ட்டி கிட்ட பேசிட்டு இருக்கலாமா?, அவங்க எப்பவுமே இப்படி கிறுக்கு மாதிரி தான் உளருவாங்க,”  என்று பிள்ளையின் முன் சலிப்பாக கூறியவன்.

 

  பின் செல்விக்கு மட்டும் கேட்கும் குரலில்,  “நீ எல்லாம் என்ன மாதிரி ஒரு ஜென்மம். சகுனி கூனி  எல்லாம் கூட உன்கிட்ட  தோத்து விடுவாங்க போல, உன்ன நான் இப்ப சும்மா விடுறேன்.   இனியும் இந்த மாதிரி பேசி கேள்வி பட்டேன், அதுக்கு மேல நான் அமைதியா இருப்பேன்னு எல்லாம் நினைக்காத, எனக்கு மன்னிக்க தெரியாது. நான் ராம் மாதிரி கிடையாது. இனி என்ன முன்னாடி வந்த, அதுக்கப்புறம் உனக்கு இந்த உலகத்துல வாழ்க்கைன்னு ஒண்ணு இல்லாம ஆகிடுவேன். முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்பு”  என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்  கூறி பொன்னியின் கையிலிருந்து அண்ணன் மகனை தூக்கி கொண்டவன்.

 

பொன்னியின் மீது அழுத்தமான பார்வையை செலுத்தி “அறிவு இருக்க யாருமே, போயும் போயும் இந்த மாதிரி ஒரு பொண்ணோட பேச்சை நம்ப மாட்டாங்க” என்றான் கூர்மையாக.

ராஜின் கூர்மையான பார்வையும், அழுத்தமான வார்த்தைகளும் பொன்னியில் மனதிற்கு ஒரு சிறு பயத்தைக் கொடுத்தாலும். அமைதியாகவே அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

 

செல்வி தன்னை ஒரு புழுவை விட கேவலமாக பேசி விட்டு சென்ற ராஜினை கண்களால் எரித்தவள், ஏதும் செய்ய முடியா தன் நிலையை எண்ணி வெதும்பி, விருட்டென்று அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்.

 

************************

 

அந்த வீட்டை பார்க்க பார்க்க கயலுக்கு பிரமிப்பாய் இருந்தது. இதுவரை இவ்வளவு பிரம்மாண்டமாய் ஒரு வீட்டை, வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று சொல்லுமளவிற்கு இருந்த அந்த இல்லத்தை அவள் கண்டதில்லை, கயல்  வியப்பாய் தன் பெரிய விழிகளை விரித்து பார்க்க,   “என்ன என்னோட அம்முவுக்கு  இந்த வீடு புடிச்சிருக்கா?” என்றான் ராம். அவளின் காதோரமாய் குனிந்து மெல்லிய குரலில் கேலியாக.

 

சுற்றிலும் இத்தனை பேர் இருக்க, யாரும் அறியா வண்ணம் தன் காது மடலில் இதழ் உரச ரகசியம் பேச எண்ணும், கணவனை செய்கையில் முகம் சிவந்தவள், அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து கொண்டாள்.

 

அவளது நாணம் அவனை குதூகலப்படுத்த மேலும் அவன் அவள் புறம் குனியும் போது , ராமின் முறை பெண்கள்  எல்லாம் அவர்களை சுற்றி விட்டனர், கேலியும் கிண்டலும் கிராமத்துக்கே உரிய நயத்துடன் அங்கு துள்ளி விளையாடியது.

 

 அதில் குறும்புக்கார பெண்ணொருத்தி,  “சும்மாவே மச்சானுக்கு நாம எல்லாம் கண்ணுல தெரிய மாட்டோம், இப்ப அவங்க வீட்டம்மா வேற வந்துட்டாங்க, இனி அவங்க பார்வை  இங்கிட்டு அங்கிட்டு பதியும்மா? ஹ்ம்ம் “  என்று போலியாக பெருமூச்சு விட்டு,  “ஏனுங்க  மச்சான் முந்தி எல்லாம் காடு, கழனி  அப்படின்னு ராப்பகலா சுத்திக்கிட்டே இருப்பீங்க, இனி செத்த நேரமாவது வீட்டை விட்டு வெளியில் வருவீங்களா?” என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டாள்.

 

 

அருகில் இருந்த மற்றொரு முறைப்பெண் “வீட்டை விட்டா  நீ ஏண்டி, முதல்ல மச்சான் ரூமை விட்டு  வெளிய வரவே யோசிப்பாங்க,  இதுல நீ வயலுக்கு வரச்சொல்லி,  அவங்க கைய புடிச்சு இழுக்குற” என்றாள் கண்களில் குறும்பு மின்ன.

 

அதற்கு அவள் “ஹ்ம்ம்,  இப்ப நீ வேற, என்னோட வயிற்று எரிச்சலை கிளப்புற, கண்ணாலத்துக்கு முன்னாடியே, மச்சான் கைய புடிச்சி இழுக்க முடியல, இதுல புள்ளை குட்டி யோட நிக்கிறப்ப, கையை புடிச்சு இழுக்க முடியுமா?” என்று போலியாக பெருமூச்சு விட்டு, “இனி அதெல்லாம் அவுக மனைவி தான் செய்வாக,  இல்லையாக்கா?” என்றாள் கேலியாக.

 

இவர்களின் பேச்சில் மற்றவர்கள் கொல்லென சிரித்து விட, ராமின் முகத்தில் கூட வெட்கத்தின் சாயல் சிறிது தெரிந்தது.

 

லேசாக சிவந்திருந்த கயலின் முகமும், ரத்த நிறத்திற்கு மாற, ஆர்வம் தாங்க மாட்டாமல் கணவனை ஓர கண்ணால் பார்த்தவள் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது. 

 

கயல் தன்னை பார்ப்பதை உணர்ந்த அவன் அவளைப் பார்த்து கண்களை சிமிட்ட, நாணம் மேலிட தலையை குனிந்து கொண்டாள்.

 

அன்றைய தினம் சில சடங்குகளும், விருந்தும் தடபுடலாக நடக்க, கயல் முன்பு அவள் நோகும்படி எந்தவித பேச்சுக்களும் வரவில்லை.  வரவிடாமல் பார்த்து கொண்டனர்.

 

அவள் முன்பு எந்த பேச்சும் நடக்கவில்லையே தவிர, முதுகுக்குப் பின்னால் பேசும் மக்களும் இருக்கும் உலகம் தானே இது, ஊர் வாயை அடக்க முடியுமா?, வேந்தன் குடும்பத்திற்கு உரிய செல்வாக்கு அத்தனை எளிதில் அவர்கள் வீட்டு மருமகளை பேச விடவில்லை. பின்னால் பேசுபவர்களை பற்றி இவர்களுக்கும் கவலை இல்லை உண்மையான நேசம் கொண்ட உள்ளங்களே போதுமானதாக இருந்தது ஜாஸின் குடும்பத்திற்கு.

 

 

ராமின் அத்தைகள் இருவரும் சேர்ந்து அனைத்து சம்பிரதாயங்களையும் செய்து முடித்தபின் பூஜை அறைக்கு சென்று ராம், கயலை விளக்கேற்ற சொல்ல, ராமன் பின்னே சென்று அங்கு இருந்த சுவாமி படங்களுக்கு மலர்களை ஈட்டு, விளக்கேற்றி கரம் குவித்து வணங்கிய இருவர் மனதிலும் சொல்ல முடியாத அளவிற்கு அமைதி நிறைந்து இருந்தது.

 

அவர்களின் கூடவே ஆதி, ரவி இருவரும் விழுந்து வணங்க. அந்த தருணம் அத்தனை கவிதையாய் இருந்தது.

 

 

ராம் மட்டும் தந்தையின் படத்தை பார்த்து சிறிது கண்கலங்க நின்றிருந்தவன், தன்னை தேற்றிக் கொண்டு தன் மனைவி மக்களுடன் வெளியே வந்தான்.

 

இரவு விருந்து அன்றைய தினத்தில் அனைவரும் சேர்ந்து உண்ண தானும் சாப்பிட்டுக் கொண்டே அழகாக தன் பிள்ளைகளுக்கும் பொறுமையாக உணவு ஊட்டிக் கொண்டிருந்தான் ராம் வில்லியம்ஸ்.

 

கயலுக்கு அந்த காட்சி மகிழ்ச்சியாக இருந்த போதும். சிறிதளவு மனதின் ஓரம் பொறாமை துளிர்விட்டது. புதிதாய் கணவன் மீது தோன்றியிருந்த காதல், ‘இவருக்கு பிள்ளைகளுக்கு அப்புறம் தான், நான் கணக்கு தெரிவேன் போல, பக்கத்துல உட்கார்ந்து இருக்க என்னைய ஒரு பார்வை பாக்கல பிள்ளைங்களுக்கு உருகி உருகி ஒவ்வொன்னும் செய்றாரு,’  என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே.

 

ரவி ஏதோ, அவன் தந்தையிடம் சொல்லி சிரிக்க, ராமு கண்கள் மின்ன தன் மகனின் நெற்றியில் முத்தமிட கயலின் விழிகளில் சிறிய ஏக்கம் தோன்றி மறைந்தது.

 

சரியாக அதே சமயம் கயலை பார்த்தவன் அவளின் விழிகளின் மொழியை துல்லியமாக புரிந்து கொள்ள, அவனின் இதழ்கள் குறும்புடன் நகைத்தன.

 

‘ஆஹா இப்பதான், என் பொண்டாட்டிக்கு என்னைய சைட் அடிக்கனும்னு தோனி இருக்கு போலயே?, ஹே ராம் இன்னைக்கு உன் காட்டுல மழ  தான்’ என்று அவன் மனசாட்சி கேலி செய்ய சில நொடி கண்களில் கனவு மின்ன அவனவளை  பார்த்தவன் முகம் புன்னகையில் நிறைந்திருந்தது.

 

 

உணவு வேலை நிறைவாக முடிந்ததும், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவரவர் உறங்கச் சென்றுவிட ராமின் அருகில் வந்த அவனின் அன்னை.

 

” சரிப்பா, நீங்க போய் கொஞ்ச நேlரம் உங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க, காலைல பாக்கலாம் சரியா, புது இடம் கயலை பாத்துக்கோ ராம்” என்றவர் அவர்களுக்கு தனிமை அளித்து விடைபெற்றார்.

 

*************************

 

மெல்லிய புன்னகையுடன் கயலின் கரங்களை பற்றியவன் “ஆதி, ரவி” என்றழைக்க அதுவரை எங்கோ விளையாடிக் கொண்டிருந்த இருவரும், ராமின் ஒரே குரலில் தந்தை முன் வந்து நின்றனர்.

 

“என்னோட செல்ல குட்டிங்க ரெண்டு பேருக்கும் தூக்கம் வரலையா என்ன?, இந்த ஆட்டம் போடுறீங்க, வாங்க போய் படுக்கலாம்” என.

 

ராஜ் தன் அண்ணனிடம்  “அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு என் கூட படிக்கட்டும் ராம்” என்று கூறியவன் உடன் பிறப்புக்கு மட்டும் கேட்கும் குரலில், “இன்னைக்கு காலையிலிருந்து ஒவ்வொரு சம்பிரதாயமாக செஞ்சுட்டு தானே வந்தத, அப்ப நைட் சடங்கு இருக்குமுனு உனக்கு தெரியாதா?” என்று கண்களை சிமிட்டி, 

 

“நீ ஒரு தயிர் சாதமுனு தெரியும் அதுக்குன்னு இப்படியாடா, கால கொடுமை, இந்த உலகம் எனக்கு மட்டும்  இப்படி ஓர வஞ்சனை செய்ய கூடாது”, என்றவன் விழிகள் தங்களை நெருங்கி வந்து கொண்டிருந்த பொன்னியின் மீது ஏக்கத்துடன் படிந்தன.

 

தமையனின் கேலியில் அவனின் முதுகில் ஒன்று போட்ட ராம், சிறு  புன்னகையுடன், “இதெல்லாம் ஒரு விஷயமாலே, அத்த பொண்ணு என்னைக்கும் உனக்கு தான், இதுக்கு போய் வெசன படலாமா” என்றான் ராஜின் பார்வையில் உள்ள அர்த்தத்தை அழகாய் புரிந்து கொண்டு.

 

பொன்னி அருகில் வரவும் கயல், அவளுடன் பேச நகர்ந்து விட, சிறிய குட்டிகள் இரண்டும் அவர்களை உரசிக்கொண்டு சென்று விட,  இரட்டையர்கள் இருவராலும் மனம் திறந்து பேச முடிந்தது.

 

“ஹ்ம்ம்” என்று பெருமூச்சு விட்டு,  “இவளுக்கு நூல் விட்டு கரெக்ட் பண்றதுக்கு,  அத்தையை ஈஸியா கரெக்ட் பண்ணிடுவேன்” என்றவன் வார்த்தைகளில் ராம், “அடப்பாவி” என்று போலியாக அலற.

 

“அடச்சே, வாய மூடு. அவளுக்கு, எனக்கும் கல்யாண ஏற்பாடு பண்ற விஷயத்துல. அத்தையை கரெக்ட் பண்ணி ஓகே பண்ணி இருப்பேன்னு சொல்ல வந்தேன், நீ இருக்கியே” என்று கடுப்பாக கூறியவன்.

 

 “சரி சரி பச்ச புள்ள மாதிரி நிக்காம,  அங்க போயி ஆக வேண்டிய காரியத்தை சட்டுபுட்டுன்னு செய்யப் பாரு” என்று நக்கலாக கூறி அண்ணனிடம்  இன்றைய இரவின் முக்கியத்துவத்தை சொல்ல,  ராஜின் தலையில் கொட்டியவன். “ இப்போ நீ வாயை மூடுலே,  கிறுக்கு பயலே  பேச்சைக் குறை,.  அண்ணன் கிட்ட பேசுற மாதிரியா பேசுற,” என்றவன் முகம் சிவக்க கயலை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். இதற்கு மேல் நின்றால், பிறப்பின் கேலி, கிண்டல் தொடும் எல்லையை அறிந்து.

 

அவர்கள் சென்ற அடுத்த நொடி ராஜின் குறும்பு பார்வை பொன்னியின் அருகிலிருந்த அண்ணன் மைந்தர்கள் மீது விழுந்தது.

 

“வாங்கடா செல்லக்குட்டி ங்களா நாம போய் படுக்கலாம், நமக்கு யாரும் துணைக்கு வர மாட்டாங்க போல இருக்கு” என்றான் கேலியாய்.

 

 அவனின் கேலின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டவள். பிள்ளைகளிடம் “ஓ…. நீங்க என்கூட தூங்கலையா?, உங்க சித்து கூட வா உறங்கப் போறீங்க” என்றாள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கேள்வியாக.

 

அவளின் முகத்தையும் குரலையும் நம்பிய அடுத்த நிமிடத்தில் பொன்னியின் இடையை கட்டிக்கொண்டு, “நோ பேபி , உன் கூட நான் தூங்க போறேன் .சித்து வேணாம்” என்றான் கிளிப்பிள்ளை போல் உடனேயே.

 

ஆதி பொன்னியை அணைத்திருந்த விதம் கண்டு பல்லைக் கடித்தவன் “ஏன்டா ஏன், இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் உனக்கும் வேணுமா? எது எதில் போட்டிக்கு வராதுன்னு அளவில்லாமல் போச்சுடா,  சரி பேபி நானும் உங்க கூடவே தூங்க வரேன்” என்றான் சாதாரணமாக.

 

 

 

அவன் பேசியதை கவனிக்காதவள் “சரி வாங்க” என்று முன்னே செல்ல அவளின் அருகில் சென்று  கன்னங்களில் தன்னிதல் உரசும் அளவிற்கு குனிந்தவன், அணுவளவு இடைவெளி விட்டு “இன்னைக்கு உன் கூட தூங்க வரவா பேபி?” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

“அடப்பாவி”  என்று வாய்விட்டு அலறியவள், ஆதி, ரவி இருவரையும் அழைத்துக்கொண்டு, ஒரே ஓட்டமாக ஓடி  அறைக்கதவை சாற்றிய பின்பே ஒழுங்காக மூச்சு விட்டாள்.

 

 

அவளின் திகைப்பை எண்ணி சிரித்தவாறே உறங்க சென்றவனின் முகத்தில் புன்னகை நிறைந்திருந்தது.

 

*****************************

 

மெல்லிய நறுமணம் அறை எங்கும் வீச, தலையில் நெருக்க கட்டிய பூவினை சூடி,  கட்டிலிலே ராமின் அருகில்  அமர்ந்திருந்தவள் இதயம் படபடவென்று துடிக்க,   சிறு நடுக்கம் தேகம் முழுதும்  ஓட,  தலை குனிந்தவாறு அமர்ந்திருந்தவளின் தவிப்பை,  காதலும்,  மோகமும்  நிறைந்த  தன் நீல நிற விழிகளால் வருடியவன்.

 

“ கொஞ்ச நேரம் முன்னாடி, டைனிங் டேபிள்ல யாரோ, என்னைய குறுகுறுன்னு, பார்த்து  ஏக்கமா, ஏதோ  யோசிச்ச மாதிரி இருக்கே?,  அது யாருன்னு, உனக்கு தெரியுமா அம்மு?” என்றவன் வார்த்தைகள் அவளை திடுக்கிடச் செய்ய நிமிர்ந்து கணவனின் விழிகளை நோக்கினாள்.