துனி
நேசிக்கும் நெஞ்சமதின் உயிரிசை காதினில் அலைபாய கண்முன் கண்ட காட்சியும், அதனில் கசிந்துருகிய மனதை, கலந்து உறவாடிய காற்றின் ஒவ்வொரு துகளும் மாயையாகவும், காதலாகவும்; முத்தத்தின் தயவில் அள்ளியெடுத்து என் கையில் தந்துவிட்டார் ஷ்ரவன்.
மௌனம் போதுமென, என் கையொன்றை அள்ளி தன்னதுள் இட்டு இதழுக்கு ஏற்றி இதமாய் ஒற்றிக்கொண்டார். பதிலாய் முகத்தை மலரச்செய்த புன்னகை நான் அழைக்காமலே வந்துவிட ஒரு லேசான வாஞ்சை பார்வை பார்த்து, “I don’t know if you’ll be comfortable sitting in here to write, ஆனால் அப்படி நினைச்சுத்தான் இந்த ரூமை இப்படியாக்க சொன்னேன். உனக்கு வசதின்னா இங்க உக்காந்து எழுது, இல்லனா எங்க உனக்கு வசதியோ அங்க உக்காந்துக்கோ, சரியா?” என்று பற்றிய கை விடாது கேட்பவரிடம் இல்லையென சொல்ல யாரால் முடியும்?
பதில் பேசக்கூட முடியாது நிற்கும் என்னால் அது சுத்தமாய் ஆகாது!
கேட்டதன் விடையை மெல்ல வருடிய கண்களில் நேராய் பார்த்து, கூறினேன். “இனிமேல் இங்க தான் உக்காந்து எழுதுவேன்.”
கனா கண்டு தன்னைமறந்து சிரிக்கும் சிறுவன்போல் சோர்வோடு இருந்த முகத்தில் மெலிதாய் புன்னகையின் கிறுக்கல்; பார்த்ததும் அவர் முகம் முளைத்த ரோமங்கள் உள்ளங்கை வருட முகம் பற்றி நெற்றியில் மென்மையாய் முத்தமிட தூண்டியதும், அதனை பார்த்து மனதில் பதிந்த நொடி என்னிலும் அதே. இப்போது இங்கமர்ந்து எழுதுவது ஏன் என்று கேட்டாரானால் இதனை பிடிப்பதற்கு காரணங்களை ஆனந்தமாய் பட்டியலிடும் நிலையில் நானில்லை.
என்ன கேட்டாலும் அவர் நெஞ்சில் தலை கவிழ்த்து கண்களில் தேங்கும் நீரினால் மங்கும் பார்வையோடு மனதில் உள்ள பிம்பம் தெரிவதைப்போல் அப்போது உதட்டில் தொற்றி என்னை தோற்றுவிக்கும் புன்னகையும் அந்த நேரம் மிதமிஞ்சி காற்றில் மிதக்கும் மௌனராகங்களும், ஆசையாய் பார்க்கும் கண்களின் பற்றுதலும் ஆக, இவை மட்டுமே சாத்தியம்.
திறந்து அனுமதி தந்த மாத்திரத்தில் புத்துணர்வோடு கட்டின்றி உள் நுழைந்த கடல் காற்றின் வாசமா, அக்காற்றின் அளவளாவலில் அழகாய் அசைந்தாடி காதல் சம்மதம் தெரிவிக்கும் சின்னஞ்சிறு செடிகளா, இல்லை ஜன்னல் தவழ்ந்து வந்து ஒளிச்சிதறல்தனில் குளித்து மிளிரும் என் புத்தகங்களா, இவ்வறையின் உயிராய் எங்கும் நிறைந்து உள்சென்று சோர்வாற்றும் இந்த வாசனை மெழுகுகளின் மாயமா; இல்லை இவையாவும் மொத்தமாய் தந்துவிட்ட இவரது காதலென்றா; இதனுள் எதனை பிடித்தலுக்கான காரணமென்று தேர்ந்தெடுத்து அவரிடம் நிலைநாட்டுவது.
மூளையில் ருதுவாகி அலையாடிய யோசனையின்கால் புருவம் நெறித்திருந்ததை கண்டவர், சிந்தனையில் குனிந்து இருந்த தலையை தன் கையால் நிமிர்த்தி, மெல்ல என் குழல் வருடியதில் புருவ மத்தியில் இருந்த முடிச்சு அவிழ்ந்து சீராய் பரவியது. “நான் உன்கிட்ட ஏன்னு கேக்கமாட்டேன், உன்ன பார்த்தாலே தெரியுது. உனக்கு இது பிடிச்சுருக்கு. அது போதும்,” என்று அழகாய் என் மனம் கூறி, மனதால் முறுவலித்தார்.
என் பிடிப்பை நான் கொண்ட அவஸ்தையில் அறிந்து கொண்டவரிடம் எப்படி சொல்வது, இதனினும் பெரியதான ஒன்றை நேற்றைய நாளுக்கான பரிசாய் தந்துவிட முடியாது என்ற உண்மையை?
ஏதும் பேசாமல் முகத்தில் படர்ந்த புன்னகையை செறிவாக்கி அவரைக் கண்ட மாத்திரம், பதிலாய் முகமேந்தி தன் வடிவான இதழ்கள் கொண்டு காதலாய் நெற்றியில் முத்தமிட்டார்.
அதன்பின் மறுவார்த்தை ஏதுமில்லாமல் இருவரும் மலர்ந்த முகத்தினோடே வெளியே வந்ததை கூடத்தில் இருக்கையில் அமர்ந்திருந்தவள் கண்டதும், எழுந்து என் கைப்பற்றி கண்ணடித்தாள் “எப்படி உங்க புது study room? என்னோட design தான்!”
அதனை வடிவமைத்தது அவள் தானென்று பார்த்த கணம் உணர்ந்து கொண்டேன் நான். சுவற்றில் Harry Potter முதல் பக்கத்தின் பதிவும், ஜன்னலோரத்தில் வரிசையாய் சாய்ந்தாடிய செடிகளிலும், அந்த ஜன்னல் திரையிட்ட beige வண்ண wind-shieldஇலும் அவளது சாயல் அழுத்தமாய் பதிந்திருந்தது. ஒன்றுமில்லாத அறையினுள் கொண்டிருந்த அத்தனை புத்தகங்களின் இருப்பிடமாயும், சாதரணமாய் தென்படும் அத்தனையிலும் உயிர்கொண்டு புன்னகைக்கும் ஜீவனையும் தன் கைவண்ணத்தில் அள்ளித்தந்துவிடும் ஆற்றலெல்லாம் அவளுக்குண்டு.
கைகளை இறுக்கமாய் பற்றிக்கொண்டவளோ இம்முறை மறு கையினால் அவரையும் பற்றி மற்றொரு அறைக்கு பிரையாசையாய் இழுத்தாள். “ஏய், அப்பு, எங்க இழுக்கற?” என்று அவர் கேட்டு, குழப்பமாய் என்னை பார்க்க அதற்கான விடையை என்னால் செயல்படுத்தமுடியவில்லை.
கேட்ட கேள்வியை காதிலேயே வாங்காது, நேராய் ஓர் அறையின் முன்வரை எங்களை இழுத்துச்சென்று கதவை திறந்து உள்ளே துயில்கொண்டிருந்த விளக்குகளை உயிர்பித்தாள். Compactஆய் விரிந்திருந்த அவ்வறையின் எதிர் இரு சுவர்களின் பரப்பில் pastel blueவின் எதோவொரு shade கசிந்து அவைகளை அழகாக்கியிருக்க, மீதியிரண்டு சுவர்களில் அதே நிறங்கள், அதனினும் ஒரு படி darkஆக. விரிந்து, நாற்புறங்களிலும் கடலாழியின் பிம்பமாய் இருந்த அந்த அறையின் மூலையில் ஒரு floor bed, அதனருகில் அதற்கான இணையாய் ஒரு முக்காலி.
படுக்கையின் அருகில், அறையின் நிறங்களுக்கு பொருத்தமாய், சின்னதாய் வடிவாய் ஒரு மரத்தொட்டில்; கர்ப்பம் தாங்கும் சிசுவைத் தன் மடியிலிட்டு தாலாட்ட காத்திருக்க, அதனருகில் பல நிறங்கள் தன்னுள் கொண்டதாய் வெண்மையாய் ஒரு மர அலமாறி. அதனுள் வரிசையாய் கண்ணைக்கவரும் பல நிறங்களில் வரைந்ததுமாய், சின்ன சின்ன புத்தகங்கள். தொட்டிலின் மற்றொரு பக்கம் ஒரு மூங்கிற்கூடையில் அழகாய் கிடத்தப்பட்டிருந்த அச்சிறு பஞ்சு மெத்தையின் சுகம் அரவணைக்க ஒரு யானைக்குட்டி பொம்மை உறங்கிக்கொண்டிருந்தது.
அத்தனையையும் பார்வையிட்டு முடிந்திருந்தாலும், எத்தனை கண்டும் பற்றாததாய் சுற்றும் முற்றும் மீண்டும் மீண்டும் தலையை சுற்றி பார்த்திருந்த என்னையும் அவரையும் அவள் குரல் அவளிருக்கும் திசை நோக்கி நிலைநிறுத்தியது. “ஏய் பசங்களா, anniversay gift காட்டியிருக்கேன் ஒண்ணுமே பேசாம பேந்த பேந்த முழிக்கறீங்க ரெண்டு பேரும். எப்படி இருக்கு?” என்று அவள் கேட்டதும் ஷ்ரவன் தன் முகத்தில் ஒரு சிறு புன்னகை படர, அவளைத்தன் கையினால் அணைத்தார் வார்த்தையேதுமின்றி.
“என்ன அப்பு இது, வீட்டுக்குள்ள நுழைஞ்சதுலேந்து ஒரே supriseஆ குடுக்கறீங்க அண்ணாவும் தங்கையும்,” அந்நேரம் என்னை ஏமாற்றாது வார்த்தைகள் வந்துவிட்டதே பேராறுதல்! ஆனாலும் இவ்வாறாய் இருவரும் போட்டி போட்டு ஆச்சரியங்களாய் அள்ளித்தர, அதனில் ஸ்தம்பித்து இருந்த வேளை முகமெங்கும் புன்னகை ஒளிர தன் அண்ணாவின் தோள்தனில் முகம் சாய்த்தாள் அபூர்வா.
ஒன்றும் பேசிவிடாத படி அவள் அசத்தியிருந்தாலும், பரிகாசமாய், ஷ்ரவனோ பதிலுக்கு, “என்ன நீ வேலைய விட்டு இந்த வேலைய தான் முழுநேரம் பார்த்தா மாதிரி தெரியிது,” என்று கூறி குறும்பாய் நகைத்தார். முகம் சுளித்து அவர் கைத்தசையை தன் விரல்கொண்டு இடித்தவள், “அவன் கெடக்கான், இங்க வாங்க ஶ்ரீ,” என்று என்னை அவள்புறம் அழைத்தாள்.
அழைத்தவள் அந்த புத்தக நிலையில் இருந்த ஒன்றினை கையில் ஏந்தி நான் காண அதனை பிரித்தாள். “இங்க பாத்தீங்களா, என் செல்லம் பார்த்து படிக்க நானே customize பண்ணது. மொதல் மொதலா படிக்க ஆரம்பிக்கறது இதுவாத்தான் இருக்கணும்,” என்று கண்டிப்பாய் கூறியவள் தானாகவே தலையில் குட்டிக்கொண்டாள். “ஆமாம், என்னமோ பொறக்கும்போதே படிக்க போறமாதிரி பேசறேனோ. பரவால்ல, when we read to her இல்ல கொஞ்ச மாசத்துல அவளே when she starts looking at the pictures, இது usefulஆ இருக்கும்ல.”
குழந்தை கிழித்துவிடும் படி இல்லாது அந்த புத்தங்கள் தைத்த பக்கங்கள் அனைத்தும் கனமாய், அட்டையாயும் அதனுள் அபூர்வா இயற்றிய சின்னஞ்சிறு குழந்தைக் கதைகளும் அதற்கான வண்ணமயமான புகைப்படங்களோடு பார்க்கவே கண்களுக்கு புத்துணர்வளிக்கும் விதமாய், ஆசையாய் இருந்தது. குழந்தைக்கென இத்தனையை பார்த்து பார்த்து செய்பவளுக்கு ஒரு குழந்தையை இழந்த செய்தி தெரிந்தால் என்ன விதமாய் துடித்துப்போவாள். அதனை இவளுக்கு தெரியபடுத்தி, அவள் துடிப்பது காண என்மனம் கொண்ட வலிமை போதாது. இதனை முன்னரே மனதினால் அறிந்திருந்ததால் தான் ஷ்ரவன் அப்போதே மறைமுகமாய் குழந்தை இழந்த விஷயத்தை எங்கள் இருவர் தவிர வேறு யாரும் அறிய தேவையில்லை என்று என்னிடம் தெளிவு படுத்தியிருந்தார்.
இந்தப்பெண் யோசித்து செயல்பட்டிருந்த அளவு நானோ அவரோக்கூட செய்யவில்லை என்று மனம் வெதும்ப ஆரம்பிக்க ஷ்ரவன் குரல் ஓசை கேட்டு, தெளிந்தது. “அப்பு, இதெல்லாம் எப்படி பண்ண நீ?”
“ஒரு siteல பாத்தேன் டா, நமக்கும் வேணுங்கறாப்ல kids books customise பண்ணிக்கலாம். அப்போ தான் தோணித்து நம்ம ஏன் துனிக்கு இப்படி கொஞ்சம் செய்யக்கூடாதுன்னு,” என்று பேரார்வத்துடன் தொடர்ந்தவளை, அவள் கூறிய பெயரில் தடுமாறி கண்களில் திகைப்புடன் அவளை இடைமறித்தேன்.
குழந்தையின் பெயரை அவள் இந்நேரம் தேர்வு செய்திருப்பாள் என்று அறிந்திருந்தாலும், இந்நாள் வரை அவள் நிச்சயமாய் யோசித்திருந்த எதையும் எங்களிடம் தெரிவிக்கவில்லை.
பேச்சுவாக்கில் இப்போது வெளிவந்த பெயரைக்கேட்டதும், மனம் கொண்ட ஆனந்த குலைச்சல் தாளாமல் அவளிடம் கேட்டுவிட்டேன்.
என் குழந்தையின் பெயரல்லவா, அதனை அறிந்து கொள்ளும் அவா இருக்காதா?
“அப்பு, துனியா? குழந்தைக்கு அந்த பேர்தானா?” என்று கூறியதை உணர்ந்து, முகம் மலர கேட்ட என்னை பார்த்து தலையில் கைவைத்து கொண்டாள் அவள். “ஐயோ, உளறிட்டேனா,” என்றவாறாய் முணுமுணுத்து. பாவம், குழந்தை மேல் உள்ள அக்கறையில் இவையாவும் செய்தவள், அந்த உயிரின் மேல்கொண்ட அன்பின் மிகுதியில், அது தந்த உற்சாகத்தில் பெயரை முன்பாகவே தன்னையறியாமல் கூறிவிட்டாள்.
அவள் கூறியதின் பின்னிசையாய் சிரித்தவரோ, “ஆஹா, அது என்ன துனி? அப்படின்னா என்ன?” என்று கேட்டார் ஆர்வமாய்.
“ஆமாம், அப்பு அப்படின்னா என்ன? ரொம்ப வித்தியாசமா இருக்கே பேர், ஏன் இதை select பண்ண சொல்லு? தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு,” என்று அப்பாவியாய் முகம்வைத்து கேட்க, அதனைக்கண்டவள் முகத்தில் வரையப்பட்ட குறுஞ்சிரிப்போடே தன் காரணத்தை கூறலானாள். அவள் கூறிய பெயர்க்காரணத்தை கேட்ட மனம் மகிழ்ச்சியில் பௌர்ணமி நிலவாய் ஒளிர்ந்தாலும், அவள் கூறியதின் செறிவில் குரல் தழுதழுத்து, தொண்டையில் காற்று அடைந்து தடுமாறச்செய்து, பற்றுதலுக்கு அவர்வசம் செல்ல வேண்டியிருந்தது.
“Dhuni means river, in Sanskrit! எப்படி வழியில என்ன தடை வந்தாலும் அதையும் தாண்டி கரைபுரண்டு ஓடி, பெரிய அணையானாலும் அதுல கட்டுண்டு இருக்கும் தன்மையும், அணை உடையறப்ப தெம்பா ஓடி, போகற இடம் தேட வேகமும், போற வழி நெடுக கல்லு, மண், வளைவு, நெளிவு, பாறைன்னு எவ்வளோவோ இருந்தாலும் எல்லாத்தையும் கடந்து போகும் நதி மாதிரி, என்ன ஆனாலும் வாழ்க்கைல வர situationஅ தைரியமா face பண்ற flexibility and strengthஓட நம்ம வீட்டு குழந்தை இருப்பா. நம்ம அவள கண்டிப்பா அப்படித்தான் வளர்ப்போம்,” என்று அவள் கூறக்கேட்ட வார்த்தையாவும் காதினில் தேனென தித்திக்க, விழியோரம் பூத்த சிறு ஈரக்கசிவோடே சொற்களை தோற்கச்செய்து நின்ற உணர்ச்சி விழுங்கி, பற்றுதல் வேண்டி நின்றாள் அபூர்வா.
கேட்டனயாவும் கண்களில் நீரென தேங்கி என் மனம் நிரைக்க, அவர் முகம் கொண்ட வியப்பு கலந்த ஆழ்மன மகிழ்ச்சியும் சேர்ந்து பேச்சிழந்து தன் தங்கை முகம்கண்ட பார்வையில் நான் அறிந்தேன்.
அவரது பார்வையை மெல்ல உணர்ந்தவள் அவரிடம் நடந்து, “என்னடா, நான் சொல்றது சரிதானே? உன் பொண்ணுன்னா அப்படித்தானே இருப்பா, ம்ம்?” என்று கேட்க, விடாது முயன்று இலக்கை அடையும் திடமும், அயறாது உழைக்கும் திறனும், எந்தவிதமான சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன்னை தயார் படுத்தி அதனிலும் வெற்றிபெறுவது அவர் மட்டுமல்ல, அவளும்தான் என்ற சிந்தனை மனதில் எழ, நான் முடித்து வைத்தேன். “உன்னோட பெறாமகள் கூட அப்படித்தான் இருப்பா.”
பேசியன உணர்ந்து பதில் பேச வழியின்றி திகைப்பில் திளைத்தவரின் குரல் வெளிவர மேலும் சில நிமிடங்கள் பிடித்தது. “உண்மையா சொல்லணும்னா நானோ ஶ்ரீயோ கூட இந்தளவு யோசிக்கலை, அப்பு” எவ்வளவு முயன்றும் அவர் கூற வந்ததுள், சொல்ல முடிந்தது இது மட்டுமே. அவர் மனதினுள் ஓடிய மீதியனைத்தும் ஆனந்தமும் தவிப்புமாய் அவர் கண்கள் கொண்ட பார்வை கூறிவிட்டது என்னிடம். தங்கை செயல்களினால் ஆன திகைப்பைத்தாண்டி, அவர் மனம் தாங்கியதெல்லாம் காட்டும் கண்ணாடியாய் அந்தக்கண்கள், பார்த்த நொடி ரணமேதுமின்றி வலி தரும் இன்பமான நோவு, அக்காட்சியானது.
ஷ்ரவன் கூற்றைக்கேட்டு தன் கருவிழிகள் மினுமினுக்க சேர்ந்திருந்த கண்ணீர் யாவும் அவள் கன்னம் வழிவதை கண்டவுடன் அவள் கைப்பற்றி கூறினேன். “அவர் சொல்றது நிஜம்தான் கொழந்த. நாங்க நிஜமாவே இந்தளவு யோசிக்கலை, நீ யோசிப்பன்னும் நினைக்கலை.”
“அது எப்படி யோசிக்காம விடுவேன். அதுவும் நீங்க ரெண்டு பேரும் நான் சொல்ற பேரை வெக்கறதா சொன்னப்பிறகும்?” அவள் கூற அதன்மேல் அங்கு என்னுள் கையாள முடியாதளவு என்வசத்தில் இல்லாது மேலோங்கிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த சில நேரமானாலும், நிலையை சீராய் ஆக்க அவளே முற்பட்டாள். “அதுக்காக குழந்தை கிட்ட கண்டிப்பா நடந்துப்பேன்னு நினைக்காதீங்க. Aunt like mom, only cooler!” என்று குறும்பாய் கூறி கண்சிமிட்டினாள்.
அவள் சொல்லிக்கேட்டதில் இருவருக்கும் கொண்டல் உதிர்க்கும் மழையாய் சிரிப்பு பொங்கி வீழ்ந்திட, அபூர்வா முகம் சுருங்க இருவரையும் ஒரு தரம் கண்டித்தாள். “ரெண்டு பேரும் போய் குளிங்களேன். எனக்கு ஒரே பசியா இருக்கு!”
“குளிக்க போ குளிக்க போன்னுட்டு போகப்போறப்ப எல்லாம் கூப்ட்டு கூப்ட்டு ஒவ்வொரு ரூமா திறந்து காமிச்சா எப்படி போறதாம்!” என்று கேலி பேசியவாறு அறையை விட்டு வெளியேற முன்வைத்தவரை உதட்டில் இருந்து திட்டியவாறே அபூர்வா தன்னிரு கைகளையும் தோளில் வைத்து வெளியே தள்ளினாள்.
நான் எங்களுக்கென அபூர்வா மாற்றியமைத்த அறையினிலும், அவர் வெளியிலே இருந்த மற்றொரு குளியல் அறையிலும் குளித்து இரவு உணவுக்கான நேரத்தில் சுவாரஸ்யமான பேச்சுக்கள் நிறைந்திருக்க, உணவை உண்ட பின் அப்பு அரைமணி நேரத்தில் இருக்கையில் இருந்து எழுந்தாள். “எனக்கு தூக்கம் வருது. நான் போய் தூங்கறேன், ரெண்டு பேரும் சும்மா உக்காந்து கதையடிக்காம சீக்கிரமா, சமத்தா தூங்குங்க,” என்று கூறி அவள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவர் உடல் முழுதும் ஓடித்திரிந்த அலுப்பும், அசதியும் அளவுமீறி பெருக்கெடுத்திருந்ததை லண்டனில் கிளம்பும் முன்பாய் அவர் பொருட்கள் அனுப்பியதில் அலைந்ததிலும், அலுவலகத்திற்கு அலைந்ததிலுமே கண்டு கொண்டேன். கொண்டுள்ள அசதியில் கட்டாயமாய் சிரமம் இல்லாமல் உறங்கிவிடுவார் என்றெண்ணி அவர் கைப்பற்றினேன்.
ஓசையின்றி தலை நிமிர்த்தி மிருதுவாய் பார்த்திருந்தவரிடம், பற்றியிருந்த கை வருடி கேட்டேன். “தூங்க போலாமாம்மா?”
“இவ்வளோ வருஷம் அப்புவ இங்க தனியா விட்டு இருந்து கஷ்டப்படுத்திட்டேனோன்னு யோசனையா இருக்கு, ஶ்ரீ,” கேட்டதின் பதிலாய் அல்லாது, சித்தம் ஆழ்ந்திருந்த எண்ணத்தின் வெளிப்பாடாய் குரலில் திராணியின்றி, ஆசை முகம் தொய்வாய், எங்கோ வெறித்து பார்த்து ஒலியின்றி வெறும் வார்த்தைகளாய் ஒலித்தது அவரது குரல். விமான நிலையத்தின் வாயிலில் அவர் கண்ட பார்வையிலேயே, இந்த யோசனை பற்றிய கவலை மேலோங்கும் வாய்ப்புகள் உள்ளதையும் அறிந்திருந்த போதும், அங்கு அப்போது அவர் கேட்ட விநாடி அதற்கான விடையை வாய்திறந்து பேச முடியாது போனது.
பேச வருவதை உணர பேச்சு அங்கே நிஜத்தில் தேவையாய் இருக்கவில்லை. மற்றும் சில நொடிகள் மௌனத்தில் கழிந்திட, மனதில் ஓடிய எண்ணம் வெளிகாட்ட பிரயத்தனப்பட்டு பேச்சை தொடங்கினார் “நான் மொதல் தடவையா லண்டன் போனபோது, offer letter வந்தும் போக வேண்டாம்னு முடிவு பண்ணிதான் இருந்தேன். அப்பு தான் நான் பாத்துக்கறேன், போய்ட்டுவா பாத்துக்கலாம்னு அனுப்பி வெச்சா. அப்ப கூட, நான் தான் அவ்வளோ யோசிச்சேனே தவிர இவன் போனா இங்க தனியா இருக்கணுமேன்னு அவ ஒரு நிமிஷம் கூட யோசிக்கலை, when she was just eighteen. அவ்வளோ ஏன், இத்தனை வருஷத்துல எப்படியும் ஒரு நாளைக்கு ரெண்டு தடவ போன் பேசிடுவோம், இது வரைக்கும் என்னிக்கும் இப்படி கண் கலங்கினது இல்ல,” அது வரை கண்களில் பார்த்து பேசக்கூட இல்லாமல், விழிகளிரண்டும் எதோவொரு இலக்கற்ற பார்வையில் அகப்பட்டு இருந்ததை கண்டு, அவர் கன்னம் ஏந்தி என் பக்கம் திருப்பினேன்.
“அபூர்வா தைரியாமான பொண்ணுதான், ஷ்ரவன். ஆனால் அதுக்காக எல்லாருமே, எப்போதுமே நடக்கறதெல்லாம் endure பண்ணிட்டு இருக்க மாட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு breakpoint உண்டு, தெரியும்ல? இத்தனை நாளா தனியாவே இருந்துட்டு, நம்ம வர போறோம்னதும் நமக்கு இவ்வளோ பண்றதுலையே தெரியல, அவ நம்ம மேல எவ்வளோ ஆசையா இருக்காள்னு,” என்ற என்னை கண்களில் சிரத்தையாய் பார்த்திருந்தவரை நோட்டம் விட்டு ஒரு யோசனை பெருமூச்சின்பின் தொடர்ந்தேன்.
“நான் உங்ககிட்ட எத்தனை நாள் வருத்தப்பட்டு இருக்கேன், என்னால அப்பா அம்மா கூட இருக்க முடில. என்னால, கேத்தன் அவனுக்கு வர opportunities எல்லாம் விட்டுட்டு இங்கேயே இருக்கணும்னு இருக்கான்னு? இத்தனை நாள் அப்பு தனியா இருந்ததுக்கு எல்லாம் சேர்த்து இனி நம்ம கூட தான் இருப்பா, சரியா? கவலைப்படாதீங்க, அவ இப்போ நார்மல் ஆயிட்டா.. நீங்க தான் குழந்தை மாதிரி,” என்று கூறிக்கொண்டிருக்க, உதட்டில் ஒண்டியிருந்த குறுஞ்சிரிப்பே உயிர்பெற்று கண்களில் மின்னிட, என் கையேந்தி தன்னிதழ் ஒற்றி காதலாய் சம்மதம் தெரிவித்தார்.
வீட்டிற்கு வந்ததில் இருந்த தன் surprise, அப்புவின் surprise என்று ஒரேடியாய் அதனில் மூழ்கிட நான் தரவிருக்கும் பரிசைப்பற்றி நானே மறந்து போனது பெரும் தொல்லை. சட்டென சித்தம் கொண்ட யோசனையில் மாறிய முகத்தை கண்கள் சுருங்க பார்த்தவரை கண்டு மெலிதாய் கேட்டேன். “அசதியா இருக்கு ஷ்ரவன். போய் தூங்கலாமா?”
கேட்டதும் சம்மதமாய் தலை அசைத்து, கரம் பற்றி உள்ளே நோக்கி நடந்தவரை, “உள்ள போங்க, இதோ வரேன்,” என்று அவர் கரம் விலக்கி நடக்க சிரமமாய் இருந்தாலும், அவர் அங்குள்ள படுக்கையின் அருகில் நான் அவருக்காக வைத்திருந்த பிறந்தநாள் பரிசையும், என் மனமும், அது கொண்ட ஆனந்தம் மற்றுமன்றி பேனா மை காகிதம் கசிய, கண்களிலும் ஒருங்கேக் கசிந்தூற்றிய கண்ணீருமாய் என் கிறுக்கலில் அவரை அடைய காத்திருக்கும் காகிதமும் அவர் காண தேவையான அவகாசம் வேண்டி, அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது.
அவர் அறையின் உள்ளே அடைந்த மாத்திரத்தில் நெஞ்சம் தாங்கும் தசை உறுப்பு நிதானம் இழந்து துடிக்க ஆரம்பித்தது. மனம் கொண்ட பதற்றக் குழப்பத்தை கையாள வேண்டி, அங்கிருந்து தளர்ந்த மென்நடையின் பிடியில் சில அடிகளில் சமையல் அறையை அடைந்து அங்கே ஓர் ஓரமாய் ஒரு plastic பேசினில் நிறைந்திருந்த ஈரமணல் பரப்பின் மேல் ஊன்றி அமர்ந்திருந்த மண்பானை திறந்து இரு முறை தண்ணீர் குடித்துவிட்டு, ஆசுவாசமாய் உணர்ந்த பின் படுக்கையறைக்கு நடந்தேன்.
அவரை முன்னே செல்லவிட்டு ஐந்து நிமிடங்களுக்கு பின் உள்ளே நுழைந்த நேரம், படுக்கை அருகில் வைத்திருந்த அந்த சின்ன பெட்டி பிரிந்த நிலையில் விரிந்து, உள்ளிருந்த நரைக்கூடிய கைக்கடிகாரம் முழுத்துடிப்பில் ஓடிக்கொண்டிருக்க, முகத்தில் தன்னையறியாத புன்னகையோடு அவர் கை பிடித்திருந்த கடிதத்தை படித்து கொண்டிருந்ததை, நான் பார்க்க சற்று முன் நடந்து தலை சாய்த்து கவனிக்க வேண்டியிருந்தது.
அசைவின் ஓசையின்றி மெல்ல முன்னேறி செய்த வேளையில் சித்தம் ஆழ்ந்து படித்திருந்தவர், படித்து முடித்தவராய் கடிதத்தை மடிப்பதை உணர்ந்த நேரம், சத்தமில்லாமல் பின்னாலிருந்து அணைத்து, அவர் கொண்ட காதலே உருவமாய் இருந்த குழந்தைத் தாங்கும் வயிற்றின் தடுப்பில் அவர் முதுகில் முகம் புதைக்க ஏதுவாய் சரிசெய்து, அவ்வாறே சாய்ந்து கொண்டேன்.
ஓசை இல்லாமல் நடந்த போதும் நான் வருவதை அறிந்தே இருந்தவர், பின்னாலிருந்து அணைத்ததை எதிர்பார்க்காத நிலையில் அங்கணம் உறைந்து நின்றார்.
முகத்தில் தவழ்ந்த மனதினால் சிரித்த முறுவலோடு என் கைப்பற்றி இலகுவாய் தன் புறம் இழுத்துக்கொண்டவர், கண்ணினால் மெத்தை மீது வீற்றிருந்த கைக்கடிகாரத்தை காட்டி குரலில் ஒண்டிய லேசான தழுதழுப்போடே பேசினார். “அப்பாவோட thingsலையே எனக்குன்னு நான் எடுத்து வெச்சது இந்த watch தான். அதை சரி பண்ணி திருப்பி தந்துட்ட கண்ணம்மா, thank you,” என்று முகமேந்தி கூறி, ஆசையாய் அவர் இதழ்கள் கன்னத்தில் ஒரு ஏகாந்த முத்தம் கிறுக்க முன்வர அதனை கண்கள் சொறுக நின்றவளாய் ஏற்று கொண்டேன்.
அந்த கைக்கடிகாரம் பழுதடைந்த நாளிலிருந்து எங்கெங்கோ கேட்டு பார்த்தும் பழமையான அந்த கருவிக்கு மாற்று பாகம் கிடைக்காததால், சரிசெய்ய முடியாமல் வைத்திருந்தார் ஷ்ரவன். பழையதாய் இருந்த போதும் அதன் விலைமதிப்பும், அதன்மேல் அவருக்கு இருந்த பிடிப்பும் தன் அப்பாவின்மேல் கொண்ட அன்பும் சற்றும் குறைந்தவையல்ல. கிட்டதட்ட ஒன்றரை வருடங்களாய் உபயோகிக்காமல், சரிசெய்யவும் முடியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் ஷ்ரவன். லண்டன் வீட்டில் கையில் அகப்பட்ட அதனை அவரிடம் காட்டி கேட்டபோது முகம் வாட அவர் கூறியதும், ஊரில் அப்பாவின் நண்பர் ஒருவரிடம் தந்து சரிசெய்ய முயற்சி செய்து பார்த்ததில் கண்ட வெற்றியே இன்று அவர் முகத்தில் மகிழ்ச்சியாய் வெளிபட்டது.
என் இடைப்பற்றி இதமாய் கன்னம் வருடியவரோ, “அப்றம், லெட்டருக்கு பதில் வேண்டாம், முத்தம் வேணும்னு கேட்டிருந்தியே; நீ கேட்டு எதாவது இல்லன்னு சொல்லிருக்கேனா கண்ணம்மா,” என்று சீரியசாய் பேசிக்கொண்டிருந்தவர், அதைக்கேட்டு என் முகம் பூரிப்பதை கண்டு கண்சிமிட்டினார்.
“ஆஹா, அதான் அப்போவே அந்த ரூம்ல தந்தாச்சுயில்ல?” என்று படபடவென பேசி, நழுவ முயன்றவளை, “அது அந்த ரூம்ல,” என்றவாறாய் கைவளைய்த்தினுள் நிறுத்தி விஷமச்சிரிப்போடு கூறினார்.
“இது என்ன கூத்தா இருக்கு, அப்போ ஒவ்வொரு ரூம்ல ஒவ்வொரு முத்தமா..” என்று கண்களை உருட்டி கேட்டதும், மீண்டும் மிக சீரியஸாய் பதில் வந்தது. “முத்தத்தயெல்லாம் எண்ணவே கூடாது, எத்தனை தடவ சொல்லிருக்கேன்.” அதற்கு மேல் பதில் பேச வாய்திறக்கும் நேரம், முகமேந்தி மெதுவாய் இதழ் பொருத்தினார்.