anbudai 25

anbudai 25

கேத்தனும் அபூர்வாவும் வரவேண்டிய இடத்தின் விலாசத்தை ஷ்ரவனிடம் விளக்கிவிட்டு உடனேயே வீட்டை விட்டு புறப்பட்டிருந்தனர். இந்த கேத்தன் ஆனவரை என்னை வம்பிழுக்கவென்று இல்லாததையெல்லாம் கூறி என்ன சேதி என்று சொல்லாமலேயே தப்பித்து சென்று விட்டான். அவனுடைய ஆள் நாந்தான் என்று நன்றாய் அப்புவும் அவனுடன் சேர்ந்து கொண்டு என்னை டபாய்த்து விட்டாள். என்னை உசுப்பிவிடுவதில் என்னதான் சுகம் கண்டானோ. நான் உதட்டை பிதுக்கி கோவித்து கொண்டதை கண்டு  இவரிடம் என்னமோ முணுமுணுத்து விட்டு கீழே இறங்கிவிட்டான்.

 

என்ன சொல்லியிருப்பான், தெரியவில்லை!

 

அவன் சென்ற பாதையிலேயே கண்களின் ஒளியெல்லாம் குடிகொண்டிருக்க வாசலையே பார்த்திருந்த ஷ்ரவன் கீழுதட்டில் மெல்லிசாய் படர்ந்திருந்த ஒரு குறுஞ்சிரிப்போடே என்னை நெருங்கியிருந்தார்.

 

விவரிப்பு, உவமைகள் எல்லாம் வைத்து சொல்லி மிகைப்படுத்த அவசியமில்லாத மிகவும் இயற்கையான உள்ளத்திருந்து வரும்படியான உல்லாசத்தீற்று அந்த புன்னகை. பார்த்தவரின் முகங்களில் எல்லாம் வாவென்று கேட்காமல், வங்தொட்டிக்கொள்ளும்படியானது. இப்போது கூட பாருங்கள் இத்தனை நேரம் கேத்தனை முறையோ முறையென்று முறைத்துக்கொண்டிருந்தவள் இதோ அந்த தன்னிலையற்ற சிரிப்புத்துகளை கண்டவுடன் உன்மத்தமாகிவிட்டேன்.

 

ஒரு கை லேசாய் கனத்து இழுத்து வலித்த பின்னிடுப்பை பற்றிக்கொள்ள வைத்து, மற்றொன்றை அடிவயிற்றில் பதித்து மெல்ல அந்த இருக்கை தந்த சாய்மானத்திலிருந்து மீட்டுக்கொண்டு நிமிர்ந்தேன். எழ முயற்சிப்பதை கண்டு இரண்டு அடிகளில் என்னிடம் உதவ இறங்கியது அந்தப் பெரிய விறைப்பான உள்ளங்கை. பார்க்கத்தான் விறைப்பு, அதனைப் பற்றிக்கொண்டு எழுந்தால் என்னுடைய சிறிய கையினை அது தன்னுள் புதைத்து அந்த இளஞ்சூட்டினாலும் , மெல்ல வருடும் விரல்களாலும் தாலாட்டும். இதம்.

 

எழுந்து நின்றவுடம் குனிந்து மேசைமேலிருந்த தன் அலைபேசியை சட்டை பையினுள் போட்டுக்கொண்டு, ஷ்ரவன் என்னை பார்த்தார். ”போவோமா?” காரில் தான் செல்வதாய் ப்ளான். அடுத்த ஐந்து நிமிடங்களில் எல்லாம் வீட்டை பூட்டிவிட்டு கிழறங்கினார் ஷ்ரவன். “மெதுவா இறங்கிவா கண்ணம்மா, நான் போய் வண்டிய வெளியில எடுக்கறேன்.”

 

நான் கீழே இறங்கி வாசலிற்கு நடப்பதற்குள் ஷ்ரவன் போர்த்தியிருந்த காரின் உரையை பிரித்து, வெளியில் எடுக்க, பின் அதனை நோக்கி நடப்பதை கண்டுகொண்டு உள்ளிருந்து கதவை திறந்தார். ஏறி அமர்ந்ததும் ஷ்ரவன் காரை செலுத்த, விட்டின் வாசலில் இருந்து கேத்தன் விட்டுச்சென்ற விலாசத்தை அடைய மெட்றாஸ் ட்றாஃபிக்கில் இருபது நிமிடங்கள்.

அவன் குறித்துத் தந்த தெருவிற்குள் நுழைந்த கணம் மூளை மடிப்புகளில் எல்லாம் சட்டென ஒரு நியாபகம் அலை அடித்து முழித்து கொண்டது. இந்த தெருவை இதன்முன்னால் எங்கேயோ கேட்ட நியாபகம் நிழலாடியது.

ஒன்றும் அறியாது இருந்து மனதை குழப்பத்தில் மூழ்கடிப்பது கொடுமையெனில், அதனில் பாதியை அறிந்தோ இல்லை நியபகத்தில் இருந்து மீட்டெடுத்து மீதியை சரிவர செயல்படுத்தி நியாபகம் கொண்டுவர முடியாத நிலை அதைவிட ரணக்கொடூரமானது.

இத்தனை நேரம் ஒரு தவிப்பென்றால் இப்போதிலிருந்து இன்னும் தவிப்போ தவிப்பு. ”ஷ்ரவன், இந்த இடத்தை இதுக்கு முன்னாலேயே கேட்டுருக்கேன், ஆனா என்னன்னு சரியா நியாபகம் வரலை,” கேட்டதும் அவர் முகம் தவழ்ந்த புன்னகை மர்மமாய் விளங்க அதை நீக்க அவரே அதனை விளக்கினார். “கேத்தன் சொன்னான், ஸ்ரீ இந்த அட்ரெஸ்ஸ பாத்ததும் கண்டுபிடிச்சுடுவா அவளே உங்களுக்கு சொல்லுவான்னு. உன்னை நம்பினா நீ என்ன கண்ணம்மா இப்படி பாதி சொல்லி பாதி சொல்லாத காலை வாரற”

”நான் ஒண்ணும் முழுசா தெரிஞ்சு சொல்லாத உங்க தங்கையும், மச்சினனும் பண்ணினா மாதிரி பண்ணலையேம்மா.. எனக்கு நிஜம்போலையே நியாபகம் வரலையே,” என்று இதழ் சுளித்து சொல்லி முடிக்க அதன் முற்றுப்புள்ளியாய் கார் நின்றது.

நானும் இவரும் இறங்குவதற்கு முன், அந்த வீட்டின் வாயிலில் தன் வண்டியின் அருகில் கேத்தன் நின்றிருந்தான். பக்கத்திலேயே அப்பு. கார் வந்து நின்றதை உணர்ந்தவர்கள் நாங்கள் இறங்கிவிடும் முன், எங்களை நெருங்க கேத்தனின் டூ வீலரை அடுத்த மற்றொரு வண்டி நிற்பதும் கண்ணில் பட்டது.

யாரடா அது என்று மனதின் புதிருக்கு மூளை யோசிக்க துவங்கும் முன்பே, அந்த கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த வீட்டிலிருந்து சிவா வெளிபட்டான். உடன் சல்வார் அணிந்த அப்பு வயதையொத்த ஒரு இளைஞி. நான் எதுவும் பேசும் முன், கேத்தன் இரண்டெட்டில் எங்களை அடைந்து, “ஸ்ரீ, நீ இங்க வந்ததில்லை. ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு வீடு வாங்கினதா அப்பா சொன்னாரே, அது இதுதான். அப்பாக்கும், பெரியப்பாக்கும் ரொம்ப பிடிச்சு வாங்கின வீடு. இதை ரென்யூ பண்ண ஆரம்பிக்கணும்னு ரெண்டு பேரும் பேசினாங்க ஆனா ஆரம்பிக்கற மாதிரி தெரியலை. அதான் நான் ஆரம்பிச்சுட்டேன். இப்போதான் நீங்க ஊருக்கு வரதுக்கு ஒரு பத்து நாள் முன்னாடி ஆரம்பிச்சோம். இன்னும் ஒரு மாசத்துக்குள்ள முடிஞ்சுடும். அப்பா, அம்மாக்கு தெரியாது,” என்று சொல்லி உள்ளே அழைத்துச் செல்லவும், நான் காதினில் கேட்ட யாவும் மனதினில் பதிந்து மூளையை அடைய இரண்டு நிமிடங்கள் பிடித்தது. தன்னிலை பெற்றவுடன் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு நாள் வீடு வாங்கியிருப்பதாய் அப்பா ஃபோனில் சொன்னது நினைவில் ஊர்ந்தது.

’கொஞ்சம் பழைய வீடும்மா.. ஆனா நல்ல விசாலமான இடம். அம்மாக்கும், சித்திக்கும் கூட ரொம்ப பிடிச்சுருக்கு. என்ன இப்போ வாங்கிட்டு எல்லாத்தையும் பழுது பார்த்து சரி பண்ண கொஞ்சம் ஆகும். அது ஒண்ணுமில்லை, மெதுவா பார்த்துப்போம். உன் கல்யாணம் மொதல்ல நல்ல படியா முடியட்டும், அடுத்து உடனேயே இந்த வீட்டை சரி பண்ண வேண்டியது தான். இன்னும் பத்து நாள்ல ரெஜிஸ்ட்ரேஷன்.’

கல்யாணம் முடிந்தது. ஆனால், அப்பா அதன் பிறகு அந்த வீட்டைப் பற்றி என்னிடம் எதுவும் பேசிய நியாபகம் சுத்தமாய் இல்லை. ஏன் என்று கேட்க எனக்கும் தோன்றவில்லை. அவ்வளவு ஏன், இந்த இடம் இப்படி இருக்கும்  வீடு என்று அப்பா சொல்லி கேட்டிருந்தேனே ஒழிய இந்த வீட்டை நேரில் காண்பது இதுவே முதல் முறை.

பார்த்தவுடன் யாருடைய மனதும் கனிய வரவேற்கும் சௌந்தர்யமும், தன் வடிவத்திலும், அமைந்திருந்த விதத்திலும் கலை அழகை அள்ளிப்பூசி கொண்டிருந்தது வீட்டின் முகப்பு. வீட்டின் ஆரம்பத்திலேயே இரு புறமும் அந்த மாலை நேர கடல் காற்றோடு சாய்ந்தாட்டம் கொண்டாடும் வாதாம் மரங்கள் நின்று வரவேற்க, வீட்டின் வாசலில் எல்லாம் நெடுநீள் காலஞ்சென்று உழைத்த தேக்கினால் ஆன கதவுகளின் பாதுகாப்பில் மிளிர்ந்தது.

வீட்டின் முகப்பு ஆழகுர வடிவத்துடனான நேர்த்தி தந்த பிரமிப்பில் பேச்சிழந்ததை உணர்ந்தவன் எங்களை அந்த திகைப்பில் இருக்கச்செய்து மேலெதுவும் பேசாமல் உள்ளே கூட்டிச்சென்றான். வீட்டின் கூடத்திலும், இன்னும் உள்ளிருக்கும் எங்கும் மரத்தூள் மணமும், சுவர்கள் புதிதாய் அணிந்துகொண்ட வர்ணங்களின் வாசனையும் ஆரத்தழுவ அமைந்திருந்தது அவ்விடம்.

வீட்டின் முகத்தில் இருந்து முற்றம் வரை, மேற் கூரையும், சுவர் வர்ணங்களும், சுவர் தாங்கிய அலமாரி கதவுகளும் என அனைத்திலும் வசித்து கொண்டு விஞ்சிய அழகை அள்ளித்தந்தது ஒரு ஆண்ட்டிக் தன்மை.

ஷ்ரவன் எதையோ பிடித்து கேத்தனிடம் விசாரிக்க துவங்க, கால்கள் அனிச்சையாய் தரையை மெதுவாய் அளக்க, கூடத்தினை கடந்து உள்ளிருந்த அறைகளுக்குள் நுழைந்தேன். கிட்டதட்ட பாதிக்கு பாதி யாவும் முடிக்கப்பட்டு இருந்தது அவ்வறை. சுவர்களில் இளநீலப்பூச்சு கொண்டு, பெரிய இரு ஜன்னல்கள் கொஞ்ச, திறந்த அதன் வெளியே வீட்டினை சுற்றி வளர்ந்திருந்த செடிகள் தெரிந்தன.

மாலை கேத்தன் எங்கோ செல்ல வேண்டுமென்று சொன்ன போது, இப்படியொரு விஷயத்தை சந்திக்க நேரிடும் என்று சிறிதும் அறிந்திராத மனம் இப்போது அவன் சொன்ன யாவையும் மெல்ல அசை போட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் வாங்கிப்போட்டு, அதன்பின் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இடம். என் கல்யாணத்தின் பின் சரி செய்து, யாவரும் குடி வந்துவிட வேண்டும் என்று முடிவான இடம், முதல் பார்வையிலேயே அப்பா, சித்தப்பா, அம்மா, சித்தி என என் உலகத்திற்கே மிக மிக பிடித்துபோன இடம். அப்பா சொன்னதை போல் இதை சரி செய்து செயல்படுத்த முடியாமல் போனது ஏன்?

கல்யாண செலவுகள் ஓய்ந்த நேரத்தில் மீண்டும் உடனேயே இதனை தொடங்க வேண்டாமென்றா? சற்றே யோசித்ததில் அப்படித்தான் இருக்குமென்று தலை ஆட்டியது மனம்.

அதன் பின் தான் அப்பாவிற்கு உடம்பிற்கு முடியாமல் போனதல்லவா.. அதனால் இதைப்பற்றி யோசிக்காமல் இருந்திருக்கக்கூடும்.

ஆனால், இதனை மனதில் ஏற்றி வைத்து கொண்டு செயல்படுத்தவும் தொடங்கி இருக்கிறானே இந்தப் பையல்.

வேலைகளை ஆரம்பிக்கும் முன்னாலேயே என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தானானால் என்னால் முடிந்த உதவியை செய்திருப்பேனல்லவா. அவன் வயதிற்கும், மனப்பாங்கிற்கும் அப்பா அம்மா ஆசைபட்ட எதையோ ஒன்றை செய்துத் தர வேண்டும் என்று எண்ணியிருக்கிறானே, அதற்காக பிரயத்தனப்பட்டு இதை யாரிடமும் சொல்ல கூட செய்யாமல் கனரகசியமாய் வேலை பார்த்து இருக்கிறானே.

சிறிது காலமாக அவன் அலுவலகத்தில் பட்ட பாடையெல்லாம் சகித்து கொண்டு இந்த வேலைகளையும் கவனித்து கொள்கிறான் எனில் அவன் கொண்ட உறுதியும், சிரத்தையும் பேரளவினதாய் இருக்க வேண்டுமல்லவா! இத்தனை ஆசையாய் செய்யும் பிள்ளையின் வேலையை தெரிந்துகொள்ள போகும் பெற்றோரின் மனம் எப்படி ஆனந்தமடையக்கூடும்.

நினைத்த மாத்திரம் கண்களில் நீர் வாவென்று அழைக்காமல் வந்து நின்றது. கண்ணிடுக்கில் தேங்கி ஒரு வழிப்பாதையாய் வழிந்த நீர்க்கோட்டினை புறங்கையினால் அவசரமாய் தேய்த்துத் தள்ளினேன்.

“ஸ்ரீ, எல்லாரும் அங்க இருக்கோம், நீ இங்க தனியா என்ன பண்ற?” திரும்பினால் புருவ நெறிப்பில் கேள்விக்குறியோடு ஷ்ரவன் நின்றார்.

காணாதவரை கண்டவள் போல் சற்று முன் விரட்டிய கண்ணீர் பிடிவாதமாய் கோர்த்து கொண்டு கண்களில் பளபளக்க அவரிடம் திரும்பினேன். ”ஒண்ணுமில்லை, ஓசை படாம இவ்வளோ பெரிய காரியத்தை லேசுல எடுத்து செஞ்சிருக்கானே இந்தப் பையல்னு யோசனை. பாவம்மா அவன், தனியா இதையும் பார்த்து, அவன் ஆபீஸையும் பார்த்து, அப்பா அம்மாவையும் பார்த்திருக்கான். நான் ஒண்ணுமே செய்யவே இல்லை.”

எதற்கும் எப்போதும் விடையாய் தயாராய் இருக்கும் அந்த புன்னகை.. இப்போதும் வெளிவந்தது என் கூற்றின் சமாதானமாய். “என்ன ஸ்ரீ குழந்தை மாதிரி கண்கலங்கறே? எவ்வளவு பொறுப்பா செய்யறான் கேத்தான், என் தம்பி இப்படி இல்லாத எப்படி இருப்பான்னு பெருமை படாம இப்படி அசடா அழலாமா?”

அவர் கேட்பதில் இருந்த பொருள் ஆகப்பெரும் நியாயமாய் பட்டது. எத்தனை பெரிய காரியம். இதை செய்வதில் பொறுப்பும் கவனமும் நிதானமும் எத்தனை அவசியம். அவரிடம் இருந்த குறும்புன்னகை என்னிடம் தவ்விக்கொள்ள, தன் கரம்கொண்டு என்னை அழைத்து சென்றார் ஷ்ரவன். கூடத்தில் இருந்த அனைவரும் ஷ்ரவனுடன், நான் வருவதை கண்டதும் பார்வை ஒண்டியும் கேத்தனை விட்டு விலகாது இருந்தது.

“எதுக்கு என்ன அப்படி பாக்கற?” கேட்டது கேத்தன் தான்.

“அப்பா, அம்மாகிட்ட எப்போ சொல்றதா உத்தேசம்?” ஒரு சிரிப்பு புகுந்து கன்னத்தை கிள்ளி கொள்ள கேட்டேன்.

“வேலையெல்லாம் முடிஞ்ச மாத்திரத்தில இப்போ உன்னை கொண்டு வந்தாமாதிரி நேர்லையே காட்டிட வேண்டியது தான். எங்க, என்ன, ஏதுன்னு உன் ஒருத்தியையே என்னால சமாளிக்க முடியலை. இன்னும் நாலுபேரை எப்படின்னு தான் புரியலை.” என்று கண்களை உருட்டி கேலியாய் கேட்டதும் வாய்விட்டு சிரிக்கவும், போடா என்று அதட்டி அவன் தோளை தட்டவும் தான் எளிதில் முடிந்தது.

இத்தனையையும் பார்த்து ஓரமாய் நின்றிருந்த சிவா டக்கென்று பாய்ந்து எனக்கு கேத்தனுக்கும் நடுவில் புகுந்தான். “ஏய், ஸ்ரீ அக்கா. தியா இல்லாத போதெல்லாம் தியா எங்கடா, கண்ணுலையே காட்டலை காட்டலைன்னு வைவ. இப்போ தியா இங்க இருக்கா நீ ஒண்ணுமே கேக்கமாட்டேங்கறேயே!” குற்றம் சுமத்தியவனின் அருகில் மலர்ந்த முகத்தோடும், அகல விரிந்து விகசித்த விழிகளோடும் அவனது அவள் நின்றிருக்க, இத்தனை நாளாய் சிவாவின் பேச்சிலும், குறுஞ்செய்தியிலுமே அவன் சொல்ல நான் கேட்டிருந்த தியா, இபோது என் முன்னால்.

அவன் கூறி முடிக்கும் முன்னால் ஓரடி எடுத்து வைத்து என் முகம் காண மந்தஹாஸமாய் புன்னகைத்தவளின் கைப்பற்ற, “நீங்க ஊருக்கு வந்ததிலேர்ந்து உங்களை பார்க்கணும்னு கொள்ளை ஆசை. ஆனா இன்னிக்கு தான் முடிஞ்சுது. எப்படி இருக்கீங்க ஸ்ரீ அக்கா?” பகட்டாய் தூரம் நின்று அலட்டி பேசாது அழகாய் மொழிந்த பெண்ணின் முகத்தில் அவள் மனம் கொண்ட நல்லுணர்வின் அத்தனையுமாய் அந்த புன்னகையில் அடைக்கலம் புகுந்திருக்க கேட்டாள்.

“எப்படி இருக்கேன், நீயே சொல்லேன்..” என்று புருவம் உயர்த்தி கேட்க, சிவா முன்னால் பாய்ந்து என் கன்னத்தை கிள்ளினான். “கொழு கொழுன்னு, குண்டா இருக்க ஸ்ரீ அக்கா,” என்று கண்ணிமைக்க, எதற்கும் முன்னால் கேத்தன் ஆஜரானான். என் காலை வாருவதென்றால் கண்டம் தாண்டியாவது வந்துவிடுபவனல்லவா!

“அப்படி சொல்றா மச்சான்!”

”ஹலோ, ஸ்ரீ அக்கா கேட்டது என்னத்தான். நான் தான் சொல்லணும். அதுங்க சொல்றத எல்லாம் காதுல போட்டுக்காதீங்க ஸ்ரீ அக்கா. எனக்கு இந்த கன்னம் தான் ரொம்ப ரொம்பப்பிடிக்கறது, ஆமாம்,” என்று சொல்லி மீண்டும் அவள் விரல்கள் என் கன்னம் கிள்ள என்னை இத்தனை நேரம் பரிகாசம் செய்த இருவரையும் புறந்தள்ளினாள் தியா.

 

ஸ்டீவிடம் இருந்து வந்திருந்த ஈமெயிலை படித்து அதற்கு பதிலெழுதி அனுப்பி வைத்து போது மணி மாலை மூன்றரை. காலையில் இவரும் அப்புவும் உடன் அமர்ந்து உணவருந்தி அலுவலகம் கிளம்பிய பின்னரில் இருந்து என்ன செய்தேன், இப்போது மதியம் கடந்து மாலை வந்துவிட்டது; ஸ்டீவிடம் பேசியது தவிர ஒரு 2000 வார்த்தைகள் எழுதினது தான் மிச்சம், இன்றைய நாள் ஓடியே விட்டது.

ஒன்றும் செய்யவில்லை என்றாலும் மனதில் பெருக்கெடுத்த இந்த பாழாய்ப்போன சலிப்பிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.

வீட்டில் இருந்து எழுதி தீர்த்து வேலை பார்த்த நேரம் போக மீறும் அத்தனை நேரமும் கொஞ்ச காலமாய் இவளுடன் பேசி விளையாடியல்லவா கடந்து கொண்டிருக்கிறேன். Franchise ஆரம்பித்த புதிதென்பதாலும், இவருடன் அமர்ந்து வேலைகளை சரிவர கவனிக்க அர்ஜுன் மற்றும் ஆதிரா மட்டுமே இருந்ததினாலும் அலுவலக பளு சற்று நிறவாகவே இருந்தது ஷ்ரவனுக்கு. இந்த அப்புவும் கேத்தனும் தான் சிறிது நேரம் ஓய்வு கிடைத்த நேரங்களில் எல்லாம் கூட என்னுடன் அமர்ந்து, கதைத்து கழித்து வந்தனர். எனக்கு வேலை இருக்கும் நேரம் தவிர்த்து நான் தனியே விடப்பட்ட நேரம் என்று இருந்தது இல்லாது போய், இப்போது எவ்வளவோ நேரம் எழுத இருந்தும் சிரத்தையாய் எழுத முடியாமல் சதாசர்வகாலமும் ஒரு அலுப்பும், அசதியும், மனதில் குழந்தையைப் பற்றிய எண்ணமுமாய் அடுக்குகளில் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தன.

இப்படியாக யோசித்து அந்த யோசனை என்னை முழுவதுமாய் உறிந்து கொள்ளும் முன்னறே குழந்தையிடம் பேச ஆரம்பித்து விடுவேன்.

‘அப்பா தூக்கம் முன்னால விட இப்போ ரொம்ப மோசம், தூங்கறதே இல்ல.’

‘என் கண்ணம்மாக்கு ஒண்ணு தெரியுமா? இன்னிக்கு அப்பு அத்தை அபீஸிலேந்து சீக்கிரமா வந்துடறேன்னு சொல்லிட்டு போயிருக்கா.’

’கேத்தன் இன்னிக்கு உனக்கும் எனக்கும் ஜிலேபி வாங்கித்தரேன்னு சொல்லியிருக்கான், அவன் வந்தொன்னியும் எங்கடான்னு கேக்கணும், ஆமாம். இல்லைன்னா ஏய்ச்சுடுவான்.’

‘அம்மா இப்போ படிக்கற புஸ்தகம் பேர் காடு. இதை எழுதினவர் பேர் என்ன தெரியுமா? ஜெயமோகன். லண்டன்ல இருக்கும்போது ஒரு நாள் அம்மாக்கு ஒரு முக்கியமான வேலை இருந்ததுன்னு வீட்ல இருந்தே வேலை பார்த்துண்டு இருந்தேனா, அப்போ அப்பா என் பக்கத்தில தான் உக்காந்து இந்த புஸ்தகம் படிச்சிட்டு இருந்தார். திடீர்னு கொஞ்சம் நேரம் கழிச்சு பார்த்த அப்பா கையில் புஸ்தகம் வெச்சிகிட்டே கண்ணெல்லாம் கலங்கி போய் உக்காந்திருந்தாரா! என்னடா இது எப்போவுமே நாம தானே எதையாவது படிச்சுட்டு, அதுக்குள்ள போய் அழுவோம் இன்னிக்கு அதிசயமா புஸ்தகமும் கையுமா உக்காந்து அழறாரேன்னு பாத்து என்னமா ஆச்சு, ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்குன்னு அப்பாகிட்ட கேட்டா, கண் கலங்கினது கூட தெரியாம அப்பா அந்த கதைய படிச்சுட்டு இருந்திருக்கார். எதை படிச்சுட்டுமா இப்படி ஆயிட்டீங்கன்னு கேட்டேனா, அதுக்கு அப்பா சொன்ன கதை தான் இது… அது ஒரு யானை கதை…’ என்று மனதில் தோன்றுவதெல்லாம் சேமித்து வைக்கும் டையரி போன்று ஆகியிருந்தாள் என் மகள். அவளை காணாது கதைப்பேசிய கணங்கள் யாவும் என்னை சுற்றி வளைய வந்த யோசனை தேக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் தோணி.

இதயத்துடிப்பு முழுவதிலுமாய் நிறைந்திருந்த சலிப்பை ஒரு பெரு மூச்சில் வெளியேற்றி விட்டு கிச்சனுள் நுழைந்த கணம் கையோடே அணைத்திருந்த அலைபேசி சிணுங்க, அது கொண்ட திரையில் அப்புவின் முகம் மிளிர்ந்தது.

“ஹலோ ஸ்ரீ, என்ன பண்றீங்க? சாப்ட்டீங்களா?” விநாடி தாமதிக்காமல் கரை புரண்டது காற்றினோடு இயைந்து இசைந்தது.

“இப்போதான் அப்பு ஸ்டீவ்க்கு மெய்ல் அனுப்பினேன். முடிச்சுட்டு காபி சாப்பிட நீ வருவியோன்னு யோசிச்சு பால் காய்ச்ச வந்தேன், நீ கூப்ட்டுட்ட. சொல்லு கொழந்த, நீ சாப்ட்டியா?” பால் பாத்திரத்தை அடுப்பில் நிறுத்தி லைட்டர் கொண்டு பற்ற வைத்து, தோளோடு ஒற்றியிருந்த அலைபேசியை கையினில் வாங்கி நிமிர்ந்தேன்.

“நான் கூட இன்னும் ஒரு அரை மணில கிளம்பிடுவேன் ஸ்ரீ. வரும்போது உங்களுக்கு எதாவது வேணுமா?”

அப்பு இப்படித்தான். மெட்றாஸ் வந்த நாளில் இருந்து வீட்டில் இருந்த படியே வேலை செய்யும் காரணத்தினால் எந்நேரத் தேவையாயினும் அப்புவிடமோ, ஷ்ரவனிடமோ கேட்பது வாடிக்கை ஆகியிருந்தது. வேண்டியதை இருவரில் ஒருவர் அன்று வீடு திரும்புகையில் வாங்கி வந்துவிடுவர். பெரும்பாலும் ஷ்ரவன் வேலைகளை முடித்து கொண்டு, அலுவலகம் பூட்டி வர இரவாகிவிடுகிறதால் அப்புவே மாலைகளில் தேவையானதை வாங்கிவந்து விடுவாள்.

“எதுவும் வேண்டாம் அப்பு. நீ சீக்கிரமா வந்துடு. கார்த்தாலேந்து சுத்த போர்.”

“அடடா, நம்ம ஸ்ரீ வாய்லேர்ந்து வர்ற வார்த்தையா இது? நான் வேலை பார்க்க அலுத்துண்டாலும் என்னை என்கரேஜ் பண்றது நீங்க தானே. இன்னிக்கு என்ன ஆச்சு?”

“என்னமோ சலிப்பா இருக்கு அப்பு,” குரலில் அமிழ்ந்திருந்த சுரத்திலேயே அவள் அறிந்திருப்பாள் என் நிலையை.

“சரி அப்படியே காபி சாப்ட்டு ஒரு பத்து நிமிஷம் கண்ண மூடி உக்கந்திருப்பீங்களாம், அதுக்குள்ள நான் வீட்டுக்கு வந்துடுவேனாம், சரி தானே?” அவளது கொஞ்சல் அச்சலிப்பிலிருந்து உதவ முன்வர, உதட்டில் உரைந்து கொண்ட சிறு புன்னகையோடே பதிலளித்தேன், “சரி அப்பு.”

கலந்து மேடை மீது வைக்கப்பட்டிருந்த காபி கோப்பையை கைவிரல்கள் முழுசாய் தன்னதுள் சுற்றிக்கொண்டு கூடத்திற்கு நடந்து கௌச்சினில் சாய்ந்த நேரம், வயிற்றினில் குழந்தை புரள்வதை உணர்ந்ததும், அனிச்சையான செயலாய் என் உள்ளங்கை வயிற்றில் எல்லாம் ஆக மெல்லினமாய் அரவணைத்து கொண்டது. “என்ன பண்றா என் கண்ணம்மா? அம்மா என்ன பண்றேன் தெரியுமா? காபி சாப்பிட போறேன். கார்த்தாலேந்து எதுவுமே பண்ணாம இருக்கறது என்னமோ போல இருக்குடா. அப்பு அத்தை வந்த உடனேயே எங்கேயாவது நடந்து போய்ட்டு முடிஞ்சா நம்ம பாட்டி, தாத்தாவ பார்த்துட்டு வருவோமா, அப்பு அத்தையும் கூட அழைச்சுண்டு போகலாம்,” காபி அருந்திய இடைவெளியில் பேசியிருந்த நான், வாசற்கதவு தட்டும் சத்தம் கேட்டதும் கோப்பையை டீப்பாய் மீது நிறுத்தி, கதவிற்கு நடந்தேன்.

திறந்த கதவின் பின்னால் இன் செய்யப்பட்ட சற்றே நலுங்கி போய் இருந்த சட்டை, பாண்ட்டுடன்; ஒரு வார தாடி படர்ந்த முகத்தோடு அர்ஜுன் நின்றிருந்தார்.

காலை முதலே தீவாய் இருந்த மனதிற்கு எதிரில் நின்ற உருவம் கண்டதும் மனதின் ஒரு ஓரம் விடாமல் ஆனந்தம் அள்ளிப் பூசிகொண்டது.

“அர்ஜுன், உள்ள வாங்க! என்ன அபீசர் சார் இப்படி ரெண்டுங்கெட்டான் நேரத்தில வந்திருக்கீங்க, அதிசயமா இருக்கே,” கதவை சாற்றி கூடத்திற்கு நடந்து கேட்டேன். தன் கையில் இருந்த ஹெல்மெட்டை டீப்பாயில் வைத்து என் செய்கையை கண்டு கௌச்சினில் அமர்ந்தவர், எதிரில் நான் அமர்ந்து சாய்ந்து கொண்டதும், “ஒரு ஷிப்மண்ட் பிக் அப், மேடம். ஃபோன் பண்ணினா இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகுங்கறான். சார் வேற இதை காலங்கார்த்தாலேயே வாங்கி வெச்சிகிட்டு முடிஞ்சா வீட்டுக்கு போய் குடுத்துட்டு வந்துடணும்னு சொல்லிண்டே இருந்தார். இப்போ என்ன இதை மேடம் கிட்ட சேர்க்கணும் அவ்வளவுதானே, அடியேன் கிளம்பிட்டேன்; அத்த இப்படி குடுங்கன்னு வாங்கிட்டு வந்துட்டேன்,” என்று குதூகலித்து கூறியவாரே தன் பின்னாலிருந்து சுருட்டி வைத்திருந்த ஆனந்த விகடனை என் கையினில் வைத்தார் அர்ஜூன்.

எப்போதும் பத்து முறை சொன்னாலும் விகடன் வாங்க மறந்து விடும் இவரா இன்று தானாய் வாங்கி வைத்து கொண்டு குடுக்க வேண்டும் என்று ஆகாத்தியம் பண்ணியிருக்கிறார், ஆச்சரியம்! அதிலிருந்து விடுபடுவதற்குள் அர்ஜுன் தன் கையில் இருந்த மற்றொரு பையினை என்னிடம் தள்ள, “என்ன அர்ஜுன் இது?” அதை எடுத்து பார்க்காமல் அவரிடமே கேட்டுவிட்டேன்.

“அட, அதான் குடுத்துட்டேன்ல? பிரிச்சுத்தான் பாக்கறது?” என்று விஷமமாய் அர்ஜுன் கூற, என்னவாய் இருக்கும் என்று சுருங்கிய நெற்றியோடு அந்த பையை பிரிக்க அதனுள் ஒரு ஸ்வீட் பாக்ஸ். அதனை பிரித்தால் வரிசையாய், concentric வட்டங்களில் அதன் அட்டைப்பெட்டியில் எல்லாம் அந்த இளஞ்சூடு கசிந்திருக்க ஜிலேபி. குழப்பம் குழப்பமாய் வளைந்திருந்ததில் அது ஜிலேபி என்று தெளிவானது.

எழுதுவதின் பின் எது மிக பிடிக்குமென்று யாராவது கேட்டால் அந்த கேள்விக்கான கேள்விக்குறி இடைவெளி கூட இல்லாது சொல்லிவிடுவேன் ஜிலேபி என்று. அப்படியானால் ஷ்ரவன் எந்த இடத்தில் என்று கேட்காதீர்கள், ஷ்ரவனுக்கும் எழுத்திற்கும், எதுக்கும் போட்டி கிடையாது.

அதனை கண்டு விரிந்த நகையில் எதையோ புரிந்தவர் போல அர்ஜுன் பேசினார். “சார் சொல்லியிருக்காரே உங்களுக்கு ஜிலேபின்னா ரொம்ப பிடிக்கும்னு. திடீர்னு நியாபகம் வந்ததா அதான்,” என்று தன் அகங்கொண்ட நல்லார்வம் முகத்திலெல்லாம் ஆக.

கையில் விரிந்திருந்த பெட்டியை மூடி மேஜைமேல் கிடத்தி, “ரொம்ப பிடிக்குமே. சரி, சொல்லுங்க காபி சப்பிடலாமா?” என்று அர்ஜுனுக்கும் மிக பிடித்ததை கேட்க, அந்த முகத்தில் என்றும் நிறைந்திருக்கும் தீராக்குறும்பு காற்றாட, “என்ன கேள்வி இது? காபிய வேணுமான்னு கேக்கலோமோ? மொதல்ல காப்பிய போடுங்க பின்ன வாய்ல போட்டுக்கோங்க!” இது என்ன விந்தையாய், நம் மனம் போலவே சுற்றியிருப்போரும் ஒரேயடியான காபி பைத்தியமாய் இருக்கிறார்கள் என்று நினைப்பு மட்டுமாய் அப்போதைய தேறியிருந்த மனதை மேலும் உற்சாகப்படுத்தியது.

அர்ஜுன் காபியை கலந்து கொண்டு வரும் வரையில் ஒன்றும் பேசாது அமர்ந்திருந்தவர், கோப்பையை வாங்கிக்கொண்டு கேட்டார். “இப்போ இந்த புஸ்தகம் தான் படிக்கறீங்களா, மேடம்?” என்று மேஜை மேலிருந்த தொட்டால் தொடரும் புஸ்தகத்தை கண்ணினால் காட்டி.

“ஆமாம்பா. பொழுது போறதே இதாலதான். வேலை பார்க்கற நேரம் தவிர மீதி எல்லாம் நேரமும் இப்படித்தான் போறது,” என்று பதிலளித்து சட்டென்று மனதில் தோன்றியதை கேட்டேன்.

“ஆமா அர்ஜுன், கேக்கணும்னு இருந்தேன். உங்களுக்கு ஆபீஸ்ல வேலையெல்லாம் எப்படி போகுது. உங்க சார், நீங்க, ஆதிரா மாத்திரமா சமாளிக்க முடியுதா? கஷ்டமில்லே? ஷிப்மெண்ட் தூக்கறது எறக்கறது கூட நீங்களும் அவரும் தான் பாக்கறீங்க போலிருக்கே. கொஞ்சம் கஷ்டம் தானில்ல?” அடுத்த வார்த்தை யோசிக்காது படபடத்த என்னையே செறிவாய் பார்த்தார் அர்ஜுன். என் கேள்விக்கான பதில் யாவும் அதிலேயே தந்துவிட்டதாய் தான் தோன்றியது.

’நம்ம அர்ஜுன் இந்த விளையாட்டு, பேசறது, எவ்வளோ கேர்-ஃப்ரீயா இருந்தாலும் வேலைன்னு வந்துட்டா அதுல ரொம்பச் சரியா இருக்கான் ஸ்ரீ. அவனுக்கு வாயொடத்த கை, கையொடத்த வாய்.’ ஷ்ரவன் சிலாகித்து பேசியது நினைவில் வந்து போனது.

நினைவிலிருந்து நிஜத்திற்கு மீட்டது அர்ஜுனுடைய குரல். “கஷ்டம் தான் மேடம் ஆனா கஷ்டப்படாம எதுவும் கிடைக்காதே. ஈவ்னிங்க்ஸ்ல ஷிப்மெண்ட் ஏத்தி இறக்கறது நான், சார், அப்புறம் அந்த ட்ரைவர் ராம் கொஞ்சம் ஹெல்ப் பண்றார். நான் கூட சார்கிட்ட சொன்னேன், இப்படி சாய்ங்காலத்தில ஒண்டியுமா வேலை செய்ய யாரையாவது பாக்கலாமான்னு….” தயக்கம் எட்டிப்பார்க்க, நானே தொடர்ந்தேன். “அதுக்கு உங்க சார் என்ன சொன்னார்?”

“கொஞ்ச நாள் போகட்டும்பான்னுட்டார். நானே அவர்கிட்ட வேலை பாக்கறவன், அவரும் எனக்கு சமமா இறங்கி வேலை பாக்கறத பார்க்க கஷ்டமா இருந்தது மேடம், அதான் சொன்னேன்,” குரலில் இருந்த வேகம் கொஞ்சம் நாழியில் எல்லாம் ஒன்றும் இல்லாது ஆனது. அந்த பலம் இறங்கியக் குரல் மனதை உறுப்போடத் தொடங்க, அர்ஜுனை பார்த்தேன். அவர் முகத்திலும் குரலில் ஆனாப்போல் என்னமோ சொல்லத்தெரியாத ஒரு ஆதங்கம்.

“இதை மனசு கேக்காம அவர்கிட்டக்கையே கேட்டுட்டேன் மேடம்..” நான் அடுத்ததாய் கூற இருந்ததை அர்ஜுன் கூறியேவிட்டார். ஷ்ரவன் கஷ்டப்படுவதை இத்தனை யோசனை பண்ணும் மனிதர் அதனை அவரிடமே கேட்டுவைத்தால் என்ன என்பதை நானே சொல்லும்முன் அவரே அதற்கு வந்திருந்தார்.

“நான் சொன்னதுக்கு நானும் அங்கேர்ந்து வந்தவன் தானேடா; சும்மா எதோ இன்னிக்கு ஒரு சேர் போட்டு உக்காந்துட்டா தானா எல்லாம் நடந்துடுமா. எல்லாத்துக்கும் சிரத்தையா வேலை பார்த்தாத்தான் முடியும். சும்மா நீ தேவையில்லாம இவ்வளோ யோசிக்காதே, ஆமாம். தவிர, இப்போ இன்னொரு ஆளுக்கு சேர்த்து சம்பளம் தர்ற அளவுக்கு என்கிட்ட சக்தியில்லப்பான்னு சொல்லிட்டார், மேடம்.” நான் ஊகித்து வைத்திருந்தது தான். மற்றுமொரு ஆளுக்கு தரவியலாத சம்பளமெல்லாம் அர்ஜுனுக்கும், தன்னையே கேள்வி கேட்கும் தன் மனதிற்கும் அவர் கூறிக்கொள்ளும் சமாதானங்கள். அர்ஜுன் சொல்வது போல் ஓரமாய் கைகட்டி அமர்ந்து வேடிக்கை பார்க்க ஷ்ரவனால் முடியாது.

“ஒண்ணுமே சொல்லாத சிரிச்சா என்ன அர்த்தம்? உங்களுக்கு அவர் இப்படி கஷ்டப்படறது, இம்சிக்கலையா?” அந்த புருவ நெறிப்பில் அதை கோவம் என்று வரையறுத்த முடியாத படியான ஒரு சாதுவான கோவத்தோடு அர்ஜுன் கேட்க, எனக்கு ஷ்ரவனுக்கும் மனைவி நானா இல்லை அர்ஜுனா என்று பெரியதாய் சிரிப்பே வந்துவிட்டது.

”அட, பதில் சொல்லுங்கன்னா!” என்று அர்ஜுன் பலமாய் கோபித்துக்கொள்ள, அந்த யோசனையில் பெருமூச்செறிந்து கொண்டேன்.

“கஷ்டமா இருக்கு இல்லைன்னு ஒண்ணுமில்லே அர்ஜுன். வேலை ஜாஸ்திதான், எல்லார் வேலையையும் இவரும் செய்யறார்தான், விதி இல்லாட்டியும் அவர் தன்னோட மனசுக்காக உழைக்கறார் இதை வேணாம்னு சொல்லறதுல அர்த்தம் உண்டா, சொல்லுங்க?” நான் கேட்க அர்ஜுன் புருவ நெறிப்பு அவிழ்ந்த முடிச்சைப்போல் விடுபட்டு கொண்டன. “இப்ப, என்கிட்ட வந்து நீ எழுதக்கூடாதுன்னு கையை புடிச்சா எனக்கு கோவம் தானே வரும்? அப்படித்தான் அவருக்கும். எனக்கு கஷ்டமாயில்ல அர்ஜுன், அவர் தன் மனசுக்கு சரின்னு படறத, சந்தோஷம் தர்றத செய்யறார். சந்தோஷம் தானே தவர, சர்வ நிச்சயமா கஷ்டமில்ல.” உண்மை தான். இது பற்றி நானும் ஷ்ரவனும் பேசுவதன் முன்னே அர்ஜுன் கேட்டது ஆச்சரியமாய் இருந்தாலும், அர்ஜுன் அவர் மனதில் இருந்ததை வெளியில் சொன்னது ஆறுதல்.

“என்ன அப்படி பாக்கறீங்க, நான் சொல்றது சரிதானே?” அமைதியாய் உட்கார்ந்து என்னை கண்ணில் ஒருவித விம்மித ஆழப்பார்வை பார்த்தவரை கேட்டேன்.

”Hashtag couple goals!”  என்றார்.

அவர் சொன்னதை கிரகித்துக்கொண்டு சிரிக்காது இருக்க முடியவில்லை. “அட, போங்க அர்ஜுன் சும்மா,” பேசியிருந்த மாத்திரத்தில் வயிற்றில் குழந்தை உதைப்பதை உணர, உள்ளங்கையை மேற்பதித்து அவள் இருத்தலை உணர்ந்து கொண்டேன். “இங்க பாத்தியாடா இந்த அர்ஜுன் அண்ணாவ.. சும்மா அசடாட்டமா என்னத்தையோ பேசறார்!”

குழந்தையிடம் குனிந்து பேசிய என்னை கண்ட அர்ஜுன், “வரேவா, இப்படித்தான் பொழுது போகுதா உங்களுக்கு?” என்று விசாரிக்க, அது தந்த புன்னகையால் வார்த்தை இல்லாது வெறுமன தலையை அசைத்தேன்.

“சர்ரைட்டு, உங்க காபி சாப்பிட விகடன் குடுக்கற சாக்குல வந்துட்டேன், கிளம்பறேன் மேடம். மணி ஆச்சு, நான் போய் ஆகற வேலையை பாக்கறேன்.”

“ஜிலேபிக்கும் விகடனுக்கும் ரொம்ப நன்றி அர்ஜுன், பாத்து போய்ட்டுவாங்க.”

அன்று அர்ஜுன் வீட்டிலிருந்து கிளம்பிய நெடு நேரம் நாங்கள் மதியம் பேசிக்கொண்டதை என் மனதில் நினைவுருத்தி கொண்டே இருந்தார். அர்ஜுன் ஷ்ரவனிடம் வேலைக்குச்சேர்ந்து அப்படி ஒன்றும் பிரமாதமாய் வருடங்கள் ஆகிவிடவில்லை. சேர்ந்த சில நாட்களிலேயே எந்த வித எல்லையுமின்றி ஷ்ரவன் அர்ஜுனோடு பழகியதினாலேயே, ஒருவருக்கொருவர் மீது உள்ள யோசனைகளும், கவலை எண்னங்களும் கூடுதல். வெறும் அலுவலக உறவைத்தாண்டிய அக்கறை அக்ஞானமும் ஒரு வித நட்பும் வளர்ந்திருந்தது தெளிவாய் ஆனது.

இப்படியாய் அர்ஜுன் ஷ்ரவன் இருவரும் வெறும் ஃபார்மல் ரிலேஷன்ஷிப்போடு பழகாது ஆத்மார்த்தமாய் இருந்தது அவ்வப்போது ஷ்ரவனை நினைத்து வருத்தம் கொண்டு விசனப்பட்ட என் மனதினை வருடும் தென்றல் போலானது.

அர்ஜுன் இவரைப்பற்றி பேசிப்போனதில் அர்ஜுனுக்கு இவர் மீதிருந்த மதிப்பையும், நல்லுணர்வையும் காட்டியதோடு எனக்கு நானே கூறிக்கொண்டிருந்த, அதாவது ஷ்ரவன் இவ்வாறு கடினப்பட்டு உழைப்பதில் அவருக்கு ஏற்படும் திருப்தி என்கிற உண்மையை வாய்விட்டு கூற முடிந்தது சொற்களில் கொண்டுவர முடியாத ஒரு சுகத்தை அள்ளித்தந்தது.

அதனை நினைத்து யாருமில்லா பொழுதுகளிலும் உதடுகளுக்குள் சிரித்துக்கொள்ளும் அந்த மனமிகுந்த களி அந்த புரிதலினும் தேனாய் இனித்தது.

அர்ஜுன் கிளம்பிச்சென்று கொஞ்ச நேரத்தில் எல்லாம் அப்பு வீடு வந்து சேர்ந்து, அவளோடு அருகில் இருந்த கோயிலுக்குச் சென்று வந்தாகிவிட்டு பின் அவள் அலுவலக வேலையை செய்து கொண்டும், அவ்வப்போது என்னுடனும் என் கர்ப்பம் தாங்கிய பிள்ளையோடும் பேசிக்கொண்டிருந்ததில் அந்த மாலை தீர்ந்து போனது.

இரவு உணவிற்கு பின், அப்புவிடமிருந்து எங்கள் அறைக்குள் நுழைந்த நேரம் ஷ்ரவன் மடியில் கட்டிக்கொண்ட தன் கணினியோடு, சிரத்தையோடு சுருங்கி செறிவாய் திரையின் பதிந்திருக்க என்னமோ பண்ணிக்கொண்டிருந்தார். கதவை சாற்றிய பின் அமைதியாய் போய் அவரருகில் உட்கார்ந்து கொண்டேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!