Anegan 1

Anegan 1

கனவு – 1

 

அதிகாலை பொழுது வீட்டு வாசலில் கிடந்த பால் பாக்கெட்டையும் செய்தி தாளையும் தன் ஒரு கையால் எடுத்துக் கொண்டு, நான்கு அடி எடுத்து வைத்து, அங்கிருந்த மர நாற்காலியில் வைத்த சுப்பு, தன் மறுகையில் பிடித்திருந்த துடைப்பத்தின் உதவியால் வழக்கம் போல அந்த பெரிய காரிடாரை சுத்தம் செய்யத் தொடங்கினாள். அவளை எட்ட நின்னு வேவு பார்த்துக் கொண்டிருந்தது கழட்டி எறியப்பட்ட அந்த ஒற்றை கருப்பு காலணி. 

 

“இந்த பொண்ணுக்கு வேற வேலையே இல்ல.. இதோட செருப்ப கூட நான் தான் எடுத்து வைக்கனுமா..? ஏதோ ஐம்பது ரூபாய் அதிகமா கிடைக்குதே-னு இதெல்லாம் பொறுத்துக்க வேண்டியதா இருக்கு.. எல்லாம் என் தலை விதி..” என்று சுப்புவின் வாய் முணுமுணுத்துக் கொண்ட வேகத்திற்கு ஈடுக் கொடுத்து கையும் தன் துப்புரவு வேலையை செய்துக் கொண்டிருந்தது.

 

அந்நேரம் வாயிற்கதவு திறக்கப் படும் சத்தம் கேட்கவும் தன் வாய் கதவை பூட்டிக் கொண்ட சுப்பு மனதிற்குள்,

 

“நாம பேசினது கேட்டிருக்குமோ..? அய்யய்யோ.. வேலைய விட்டு தூக்கிட்டான்னா வீட்டுல அந்த மனுஷன் என் ஜீவனை அத்துருவானே..! தினம் தினம் குடிக்க கஞ்சி இருக்கோ இல்லையோ அவனுக்கு கவலை இல்லை.. இந்த பொண்ணு கூடுதலா தர்ற ஐம்பது ரூபாயில தான் தினம் ஒரு கட்டிங்-காவது அடிக்கிறேன், அதுல மண்ண அள்ளிப் போட்டுட்டேன் –னு அந்த நாற வாயன் என் தோல உறிக்கப் போறான்.. ஆத்தா மகமாயி.. இந்த ஒரு முறை என்ன காப்பாத்திரு ஆத்தா.. இனி இப்படி அடாவடியா பேச மாட்டேன்..” என்று தொன்னூற்றி எட்டாவது முறையாக தனது நிறை செலுத்தா வேண்டுதலை வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் வேண்டுதலை அந்த மகமாயி இம்முறையும் நம்பி விட்டாள் போலும். கதவுவை திறந்துக் கொண்டு வெளியில் வந்த அம்ரிதா எதையும் கேட்டிருக்கவில்லை. எப்பொழுதும் போல 

 

“குட் மார்னிங் சுப்பு..” என்றாள் ஆஷ்ரிதா.

 

“வணக்கோ மா..” என்று அவளை பார்த்து பல் இளித்த சுப்புவின் உள்ளமும் சேர்ந்தே இளித்தது. அவளை காப்பாற்றிய மகமாயிக்கு நன்றி சொல்ல கூட மறந்துவிட்டவள் அங்கிருந்து சீக்கிரம் கிளம்பினாள் போதும் என பர பரவென குப்பைகளைத் தூற்றுக் கொண்டிருந்தாள்.

 

“என்ன சுப்பு.. நான் சொன்னத மறந்துட்ட போல..?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

 

‘இந்த புள்ள என்னாத்த கேக்குது’ என்று மனதில் எண்ணியவள் “என்ன மா சொன்னீங்க..?” என்று கேட்டாள் தன் வேலைக்கு இடைவெளி கொடுத்த அந்த நிமிடத்தில்.

 

“வணக்கம் சொல்லாத குட் மார்னிங் சொல்லி பழகு –னு சொன்னேனா இல்லையா..? அப்புறம் எப்படி என்கிட்ட இருந்து இங்கிலிஷ் கத்துப்ப..?” – பாசத்துடனும் உரிமையுடனும் கேட்டாள் ஆஷ்ரிதா. 

 

‘என் வீட்டு பொடிசு இங்கிலிஷ் –ல சந்தேகம் கேட்டு சாவடிக்குதுனு தெரியாம வாய கொடுத்துட்டேன்.. இந்த அம்மா என்ன இங்கிலிபிஷ் படிக்க சொல்லி உயிர வாங்குது.. என் மனசு முழுக்க ரேசன் கடைக்கு ஆளுக்கு முன்ன போய் எடை குறையாம பருப்ப வாங்கிட்டு வரனுமே, உடஞ்ச ஓட்டுல இருந்து வீட்டுக்குள்ளாறக் கொட்டுற மண்ண அந்த மனுஷ வாரதுக்குள்ளாற அள்ளிப் போடனுமே-னு கவலை ஓடிக்கிட்டு இருக்கு.. பளிங்கு வீட்டுல இருக்குறவுகளுக்குலாம் அந்த கவலை எங்க தெரிய போகுது..? இப்ப இந்த குட்டு மாரி –ய தெரிஞ்சிக்காம போனதுதான் ஆகாச குத்தமாக்கும்’ என்று எண்ணியவள் “எனக்கு அதுலாம் வராது மா..” என்றாள் இளிப்பு மாறாமல்.

 

சுப்புவுக்கு அங்கு வேலை செய்வதில் கடுப்பை உண்டாக்கியது அந்த பெரிய காரிடாரோ இல்லை கழட்டி எறியப்பட்ட காலணியோ தெரியாது. ஆனால் மொத்த கடுப்பும் சுப்புவின் மனதில் விஸ்வரூபம் எடுப்பது பாசத்தின் உரிமையில் ஆஷ்ரிதா கண்டித்து பேசும் சில பொழுதுகளில் தான்.

 

இவற்றை அறியாத ஆஷ்ரிதாவின் மனதில் இருப்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான். சுப்பு தன் வயதை ஒத்த இளம் பெண். இளமை வயதில் அனுபவிக்க வேண்டிய எந்த ஒரு சுதந்திரத்தையும் அனுபவிக்காது, குடிகார கணவனுக்கு வாக்கப்பட்டு, குட்டிப் போடும் இயந்திரமாய் மட்டுமே இன்று வரை வாழ்ந்து வருகிறவள் அவளிடம் தன்னால் இயன்றவரை அன்பாய், தோழமையாய், உதவியாய் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

 

“நான் வேலையை முடிச்சிட்டேன்.. போயாறேன் மா..” என்று இடுப்பில் சொருகியிருந்த தன் கந்தல் சேலையின் முந்தானையை எடுத்து முகத்தை துடைத்தவாறு விரைவு ரயிலென பறந்து விட்டாள் சுப்பு.

 

“கிரேஸீ கேள்..” என்று சிறிய புன்முறுவலுடன் பால் பாக்கெட்டையும் செய்தி தாளையும் எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்ற ஆஷ்ரிதா தேனீர் தயார் செய்துவிட்டு அவர்களது அறையை அடைந்தாள். நன்கு உறங்கிக் கொண்டிருந்த அவளது தங்கை அம்ரிதாவை பார்த்தாள். 

 

ஆஷ்ரிதா அம்ரிதாவின் அக்கா. இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரின் பெயர்களையும் சுருக்கி அச்சு, அம்மு என்று அனைவரும் அழைப்பர்.

 

அம்முவின் தலையை வருடிவிட்டவள் தன் அலைபேசியை எடுத்து டாக்டர் பிரபாகரனுக்கு அலைப்பு கொடுத்தவாறு வீட்டு வராண்டாவிற்கு வந்தாள்.

 

“ஹலோ.. மிஸ். ஆஷ்ரிதா..”

 

“ஹலோ சார்.. குட் மார்னிங்.. சாரி சார்.. ரொம்ப சீக்கிரமா கால் பண்ணி தொந்தரவு பண்ணுறேனா..?”

 

“நோ மை டியர்.. ஏன் ரொம்ப அஃபீசியலா பேசுற..? நீ எப்ப வேணும்னாலும் எனக்கு கால் பண்ணலாம்.. நான் தான் சொல்லியிருக்கேனே..”

 

“இல்லை சார்.. தங்கச்சி தூங்கிட்டு இருக்கா.. அவ எழுந்துட்டா நாம பேச முடியாதுல.. அதான் அவ எழுந்துக்க முன்னாடியே கால் பண்ணேன்..”

 

“சரி மா.. நேத்து பேசினது போல இன்னைக்கு டென் ஓ க்ளாக்குக்கே க்ளீனிக் வந்திரு..”

 

“சரிங்க சார்.. வந்திடுறேன்..”

 

“ஓகே மா.. டேக் கேர்.. பாய்..”

 

“தேன்க் யூ சார்..”

 

அலைப்பை துண்டித்தவள் அவளது அம்மாவின் அறைக்கு சென்றாள். அவரது பீரோவை திறந்து இளம் சிவப்பு நிற காட்டன் புடவை ஒன்றை எடுத்துக் கொண்டவள் குளியலறை நோக்கி சென்றாள். பின் தன் முடிவை மாற்றிக் கொண்டவளாய் அம்மாவின் புடவையை இருந்த இடத்தில் வைத்துவிட்டு தன் பச்சை நிற தாவணியை கட்டிக் கொள்ளவதாய் எடுத்த முடிவுடனும் அந்த உடையுடனும் குளியலறை வந்து தண்ணீர் குழாயை திறந்துவிட்டவளுக்கு அப்பொழுதுதான் நியாபகம் வந்தது இன்று புதன்கிழமை என்று.

 

‘அய்யய்யோ.. இன்னைக்கு புதனா..? அம்மா எண்ணெய் வச்சிதான் குளிக்கனும்னு சொல்லியிருக்காங்களே..!’ என எண்ணியவள் “அம்மா சாரி.. நான் உனக்காக எண்ணெய் வச்சிக்கிறேன்.. எனக்காக பூ வச்சிக்கிறேன்.. ஆனா கோவிலுக்கு போறதுலாம் என்னால முடியாது கோவிச்சுக்காத..” என்று ஆசுவாசமாய் நினைத்தவள் சமயலறைக்கு வந்து எண்ணெய் பாட்டிலை எடுத்துக் கொண்டு மீண்டும் குழியலறைக்குள்ளேயே சென்றாள்.

 

பார்ப்பதற்கு டிரெடீஷ்னலாய் இருக்கும் அச்சு, காலையில் சீக்கிரமாக எழுந்துக் கொள்வாள்; சடங்கு சம்பிரதாயம் என வீட்டில் இருந்த படி என்ன செய்ய சொன்னாலும் செய்துவிடுவாள். ஆனால் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் மட்டும் அத்தனை கசப்பு அவளுக்கு.

 

அவளுக்கு அப்படியே நேர்மாறாக இருப்பவள் அம்மு. பக்தியில் நாட்டம் இல்லாவிட்டாலும் கோவில் போன்ற பண்பாடான இடங்களுக்கு செல்வது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆனால் எங்கு சென்றாலும் இடம், பொருள், ஏவல் பார்க்காமல், தான் ஒரு நவ நாகரீக யுவதி என்பதை அவளது உடையிலும் நடையிலும் தான் காட்டுவாள். சூர்யா பாடலில் வருவது போல அவளுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி தான்.

 

சகி.. சகி.. எழுந்திரு சகி.. ப்ளீஸ் எழுந்திரு.. என்று அவள் காதில் கேட்டுக்கொண்டிருந்த அந்த அழுகை குரல் கோபம் நிறைந்த குரலாய் மாறுவதை உணர்ந்தபடியே எழுந்தாள் ஆஷ்ரிதா.

 

கண்களை மெல்ல மெல்ல திறந்து உடலின் சோம்பலை முறித்தபடி கூறினாள் “ப்சே.. இன்னைக்கும் அதே கனவா..?” என்று.

 

கொஞ்சமும் தூக்கம் கலையா முகத்தை தொங்கவிட்டுக் கொண்டு, பாதி கண்களையும் பாதி முதுகு தண்டினையும் குடைசாய்த்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்திருந்தவளது காதுகளை துளைத்தது அடுத்த அழைப்பு.

 

“எவ்வளவு நேரமா கத்திக்கிட்டு இருக்க.. சீக்கிரம் எழுந்திரு டி.. மணிய பாரு 10 ஆகுது.. வர வர உனக்கு ஏந்தான் லீவ் விடுறாங்கனு தோனுது..” என்று அடுப்பங்கறையில் இருந்து குரல் கொடுத்துக்கிட்டு இருந்த அம்மாவை சென்றடைந்தாள் அம்மு.

 

“அம்மா.. காபி கொடும்மா.. தலை ரொம்ப வலிக்குது..” என்றாள்.

 

“இப்படி 10 மணி வர தூங்கினா தலை வலிக்காம என்ன செய்யும்..? பல்ல தேய்சிட்டு வா முதல்ல..” என்ற அம்மாவை பின்புறத்தில் இருந்து அணைத்துக்கொண்டவள், 

 

“அம்மா அதே கனவு இன்னைக்கும் வந்தது மா..” என்றாள்.

 

ஒரு நிமிடம் அமைதிக் கொண்ட அம்மா, “கண்டதையும் உட்கார்ந்து யோசிக்காத.. சீக்கிரம் ரெடி ஆகு, கோவிலுக்கு போய்ட்டு வரலாம்..” என்றார்.

 

இருவரும் தயாராகி தாங்கள் வழக்கமாக செல்லும் கோவிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனம் முடிந்தவுடன் அம்மா பிரகாரத்தை சுற்றி வரத்தொடங்கினாள்.  

 

அம்ரிதா வழக்கம்போல் அங்கு விளையாடித் திரியும் குழந்தைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  தூரத்தில் கம்பு ஒன்றின் உதவியுடன் நின்றுக்கொண்டிருந்த ஓர் வயதான பாட்டி தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டாள்.  சிறிது நேரம் அவளும் அந்த பாட்டியை நோட்டமிட, பாட்டி தன் பார்வையை திருப்புவதாய் இல்லை.

 

“என்ன டி.. கிளம்பலாமா..” என்று அம்மாவின் குரல். 

 

“ம்ம்ம்.. போகலாம் மா..” என்று சொல்லி எழுந்து வாசலுக்கு நடந்தாள். செருப்பை காலில் மாட்டுகையில் பளார் என முதுகில் ஓர் அடி. வலி தாங்காமல் ‘ஆஆஆ….’ என கத்திக்கொண்டே அம்மாவை பார்த்து,

 

“ஏன் மா இப்படி அடிக்கிற.. அதுவும் நடு ரோட்டுல.. நான் என்ன சின்ன குழந்தையா..?” என்றாள். 

 

“அதையேதான் டி நானும் கேட்குற.. சின்ன புள்ளையா நீ..? ஒரு இடத்துல இருக்க மாட்டியா..? இவ்வளவு வேகமா எழுந்து எங்க ஓடுற..? கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்.. காது கேட்கலையா..? உன் வேகத்துக்கு என்னால ஓடியாற முடியுமா…??” என்று கோவத்தில் பொறிந்தாள் அம்மா.

 

“நீதான மா போகலாம்னு சொன்ன.. அதனால தான நான் எழுந்து வந்த ..!?” என்று அம்மாவிடம் சிணுங்கினாள்.

 

“நான் எப்ப சொன்ன..? சரி வா வீட்டுக்கு போகலாம்..”  என அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டை சென்றடைந்தாள் அம்மா.

 

வீட்டிற்குள் நுழைந்தவுடன் தன் கைப்பையை படார் என வீசி எறிந்து கதறத் தொடங்கினாள் அம்ரிதா. 

 

“எனக்கு என்ன மா ஆகுது..? நான் என்ன பாவம் செஞ்சேன்..? தூக்கததுல கூட நிம்மதியில்லாத இப்படி ஒரு வாழ்க்கை எதுக்கு எனக்கு கடவுள் கொடுத்தாரு..?” என்று அவள் ஆர்ப்பாட்டம் செய்ய, எதிர் புறத்தில் மயான அமைதி நிறைந்திருப்பதை உணர்ந்தவள் பேச்சை நிறுத்திவிட்டு அழுது வீங்கிய முகத்தோடு கண்ணீர் வடியும் கண்கள் மாறாமது வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தாள்.  யாரும் தென்படவில்லை. பயத்தில் “அம்மா.. அம்மா.. எங்க மா போன..?” என அலறத் தொடங்கினாள்.

 

வீட்டின் அறைகள் அனைத்திலும் தேடினாள்.  வீட்டிற்கு வெளியே தேடலாமென ஓடிச்சென்று தலைவாசல் கதவை திறக்க முயற்சித்தாள்.  திறக்க முடியவில்லை. மறுபக்கம் தாழிடப் பட்டிருப்பதாய் உணர்ந்தவள் கதவை பலமாக தட்டத் தொடங்கினாள்.

 

திறப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. கதவை தட்டி தட்டி ஓய்ந்தவள், தன் உயிரின் ஈரப்பதம் குறைந்து கதவின் அருகிலேயே அமர்ந்துவிட்டாள். சில நிமிடங்களில் கதவு திறக்கப்பட்டது.

 

“ஏய்..! ஏன் டி கதவ போட்டு இப்படி ஒடச்ச..? வரேன் வரேன்-னு கத்திக்கிட்டே இருக்கேன்-ல..” என்று கேட்டபடி வெளியில் வந்த அச்சு, தன் தலையை துவட்டிக்கொண்டே அவர்களது அறைக்குச் சென்றாள்.

 

“என்ன டி இது..? எங்க போய்டு வர இந்த கோலத்துல..? அம்மா எங்க..? வீட்டு கதவ யாரு வெளியில தாழ் போட்டது..?” என்று கேள்விகளை அடுக்கினாள் அம்மு.

 

அச்சு அதிர்ச்சிக்குள்ளானாள். வேகமாக வந்து வீட்டு வாசலை பார்த்துவிட்டு, “கதவ யாரு டி தாழ் போட்டுருக்கா..? திறந்து தானே இருக்கு..! நீ பாத்ரூம் கதவ தட்டுன தட்டுல எங்கையோ கிளம்பப் போறியோனு அவசர அவசரமா காக்காய் குளியல் போட்டுட்டு வெளியில வந்தேன்.. வந்து பார்த்தா மேடம் ஏற்கனவே குளிச்சி கிளம்பி அலங்காரத்தோட நிக்குறீங்க..!”  என்று தன் அதிர்ச்சி கலந்த கவலை உணர்வினை மறைத்து பொய் சிரிப்பின் முகம் காட்டி கேலி செய்தாள்.

 

இதை கேட்டு குழம்பிப் போன அம்மு குளியலறை கதவையும் வாசல் கதவையும் ஒன்றுக்கு இரண்டு முறை திரும்பி திரும்பி பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

 

சத்தம் கேட்டு ஓடி வந்த அச்சு, “ஏய்.. என்ன டி ஆச்சு..?” என பதற,

 

“தலை வெடிச்சிரும் போல இருக்கு டி.. அம்மாவை கூப்பிடு பிளீஸ்..” என்று கத்தினாள் அம்மு.

 

அவள் நிலையை கண்டு நொந்துப்போன அச்சு செய்வதறியாது “என்ன டி கனவு கண்டியா..?” என்று குறுகிய குரலில் கேட்டாள். 

 

மேலும் மேலும் கேட்கப்படும் கேள்விகள் அம்முவின் தலைக்குள் நூறாயிரம் பூராண்கள் கடிப்பது போன்ற உண்ர்வினை கொடுக்க “அம்மாவை கூப்பிட போறியா இல்லையா..?” என ஆங்காரமாய் கர்ஜித்தாள் அம்மு.

 

அச்சு, அம்முவை சமாதானப்படுத்த முடியாமல், “பொன்னம்மா.. இங்க கொஞ்சம் வாங்க..” என்றாள் தன் சிரசை மேலே உயர்த்தி.

 

மொட்டை மாடியில் துணிக் காயப்போட்டுக் கொண்டிருந்த வேலைக்கார பாட்டி பொன் லெட்சுமி வேகமா கீழே இறங்கி வந்தார்.

 

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக இவர்களது வீட்டில் வேலை செய்கிறார் பொன்னம்மா. நீண்ட காலமாக இவர்களுடனேயே இருப்பதாலோ என்னவோ அறுபது வயதைத் தொட்டிருக்கும் இவர் சுப்பு மாதிரி இல்லை. குழந்தை இல்லா பொன்னம்மாவுக்கு அம்மு மற்றும் அச்சு மீது அதீத பாசம் உண்டு.

 

தினமும் காலை ஒன்பது மணிக்கு வரும் பொன்னம்மா காலை உணவு தயாரிப்பதில் தொடங்கி இரவு ஏழு மணிக்கு இரவு உணவை தயார் செய்து வைப்பது வரை எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு எட்டு மணிக்குள்ளாக தன் வீட்டிற்கு சென்றுவிடுவார். 

 

ஒரு வருடத்திற்கு முன் தன் கணவனை இழந்த பிறகு இங்கேயே தங்கிவிடுமாறு கூறிய அம்முவின் பேச்சுக்கு பொன்னம்மாவால் மறுப்புக் கூற முடியவில்லை. வயது முதிர்ந்த காலத்தில் மானம் ரோசம் பார்க்காமல் அன்புக்கும் பாசத்துக்கும் மட்டும் தானே ஏங்கும் இந்த பேதை நெஞ்சம்.

 

அச்சுவின் அலைப்பு சத்தம் கேட்டு கீழே இறங்கி வந்த பொன்னம்மா “என்ன பாப்பா..?” என்று கேட்க அம்மு -வின் கோபம் உச்சிக்கு ஏறியது.

 

“நான் சொன்னது புரியுதா புரியலையா….? நான் என்னோட அம்மா-வ கேட்ட.. இந்த வேலைக்கார கிழவிய இல்லை..!” என்று அச்சுவிடம் கத்தினாள் அம்மு.

 

கோவத்தில் பளார் என அச்சு அடிக்க அங்கேயே மயங்கி விழுந்தாள் அம்மு.

 

(களவாடுவான்)

 

error: Content is protected !!