Ani Shiva’s Agalya 10

10

அகிலன் பூவிழி திருமணம் சிறப்பாக நடந்தது…

தான் ஏதோ உலகச் சாதனை புரிந்தது போல் ஒரு மிதப்பில் இருந்தான் அகிலன்!

பூவிழி எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாத மோனலிஸா ஓவியம்போல் நின்றிருந்தாள்…

அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் தானா இல்லையா என்பதை அவளைப் பார்ப்பவர்கள் கண்ணோட்டம் தான் முடிவு செய்ய வேண்டும்… மோனலிஸா!

ஆனால் கல்யாண சம்பிரதாயங்களை எல்லாவற்றையும் தூண் போட்டுத் தாங்கித் தான் பிடித்தாள் பூவிழி, ஐயர் சொன்னது அனைத்தும் பக்காவாகச் செய்தாள், சில எக்ஸ்ட்ராஸ் வேறு, அகிலன் தாலி கட்டியதும் அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டது, மந்திரங்களை ஒன்றுவிடாமல் சொல்லியது… என்று இதுபோல…

அகிலனை பார்த்துச் சில முறை சிரித்தும் வைத்தாள். அவனது பொண்டாட்டிக்கு சுற்றிலும் ஆட்கள் இருந்தால் தான் சிரிப்பு வரும் என்பதைப் பின்னாளில் தான் அகிலன் புரிந்துகொண்டான்!

எல்லாப் பெரியவர்களையும் காலைத் தொட்டு வணங்கியது என்று பல அகல்யாவுக்கு ஆச்சரியம் தான்… பிராக்டிஸ் ஏதும் பண்ணிருப்பாளோ… இல்லைனா ஒருவேளை பயந்தாங்கோளிகளுக்குத் தான் இந்த மாதிரி விஷயம் எல்லாம் நல்லா வருமோ?!

சூர்யா, அந்தக் குடும்பத்தின் மாப்பிள்ளையாக இருந்து தான் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்தான்… மஹாவும் கிரியும் அவனின் இந்தத் தன்மையை மிகப் பெருமையாக உணர்ந்தனர்…

பூவிழி வீட்டிலும் அனைவருக்கும் திருப்தியே…

வேறு சமூகத்தில் ஏன் பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்றும், நம்பி வியாபாரத்தில் தான் கெட்டி, ஆனால் தன் ஒரே பெண் வாழ்க்கையில் கோட்டைவிடுகிறார் என்றும் பேசியவர்கள் எல்லாம், அவரிடமே வந்து அருமையான சம்பந்தம் என்று புகழ்ந்து விட்டுச் சென்றனர்.

அகல்யா சூர்யா ஜோடி இன்னும் புதுமணத் தம்பதிகள்போல் வளைய வந்தனர். பூவிழியின் உயிர்த்தோழி இன்று தன் தோழியாகவும், நாத்தனாராகவும் அவள் கூடவேயிருந்தாள் அகல்யா…

சூர்யாவின் தம்பி ஜெயந்தும், அகிலன் திருமணத்திற்கு வந்திருந்தான்… அகிலன் திருமணத்தில் ராஜம் ஜெயந்துக்காக ஒரு முக்கியமான பணியைச் செய்தபடியிருந்தார், தன் இரண்டாவது மகனுக்குப் பெண் தேடும் பணி தான்…

ஜெயந்தை பற்றியே பெருமையாகப் பேசினாள், தன் சொந்தங்களிடம்… கல்யாண வயது பெண் பிள்ளை யார் யார் வீட்டில் என்று மும்முரமாக விஷயங்களைச் சேகரிக்கவே அவளுக்கு நேரம் இனிமையாகவே கழிந்தது…

தனக்கு இஷ்டமில்லாத திருமணத்திற்கு வேறு வழி இல்லாமல் வந்திருந்தாலும், அந்தச் சூழ்நிலையையும் தனக்குச் சாதகமானதாய் மாற்றிக்கொண்டாளே!

ராஜம் நிஜமாலுமே கெட்டிக்காரி தான்…

கல்யாண சடங்கு எல்லாம் முடிந்து பெண் மாப்பிள்ளையை முதலில் பூவிழி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்… அங்கும் சில கட்டுக்கள் முடித்தபின் தான் அகிலனின் வீடு…

அகிலனின் அறையைப் பூக்களால் அலங்காரம் செய்துகொண்டிருந்தனர் சூர்யாவும் அவன் திருமதியும்… பூவை அடுக்குகிறேன் என்று வந்தவள் அந்த வேலையைச் செய்யாமல், அவள் கணவனின் மேல் பூவைப் போட்டு விளையாடிக்கொண்டிருந்தாள் அகல்யா… “சும்மாயிறேன் டீ” என்றவனை விடாமல் வம்படித்துக் கொண்டிருந்தாள்… பொறுத்துப் பார்த்த சூர்யாவும் அவளைப் போலவே செய்ய ஆரம்பித்தான்…

நீண்ட நேரமானதால் பொறுமையைத் தொலைத்து அகிலனே வந்துவிட்டான் அந்த அறைக்குள்…

“வெயிட் பண்ணிப் பார்த்தேன், நீங்க இரண்டு பேரும் வர மாதிரி தெரியலை, அதான் நானே வந்துட்டேன்…” என்றான் சூர்யாவை பார்த்தபடி…

‘முதலிரவு எனக்கு’ என்பதை மட்டும் சொல்லாமல் விட்டான்…

சூர்யாவும் அகல்யாவும் அசடு வழிந்தபடி வெளியேறினர்…

“இப்போ இதில் லேட் ஆக்கின மாதிரி அவளை அனுப்புறதுலையும் லேட் பண்ணிடாதே அகல்விளக்கு…” சூர்யா போய்விட்டானா என்று பார்த்தபடியே தங்கையின் ஜடையைப் பிடித்து இழுத்துப் பிடித்து மிரட்டினான் அகிலன்…

“டேய் அண்ணா, சும்மா அலை… பறக்காதேடா… பூவிழிய சீக்கிரம் அனுப்ப ட்ரை பண்றேன்…”

தமையனை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றவள், பூவிழியை அலங்காரம் செய்ய வந்தாள் அவளிடம்,

“ஐயோ லேட் ஆயிடிச்சு, சீக்கிரம் கட்டு டீ” என்று பறக்க

மஹா அதட்டினாள் அகல்யாவை, “அகல்யா, இந்த அடி புடிய எல்லாம் விடு, அவ உனக்கு இனிமே அண்ணி, மரியாதையா கூப்பிடு…”

“அத்தை பரவாயில்லை, அவ எப்பவும் போலவே கூப்பிடட்டும்…” என்று மிகப் பணிவாகக் கூறினாள் பூவிழி…

தெரிஞ்சிக்கோங்க என் பெஸ்ட் ஃபிரண்டாக்கும்… என்பது போல் அவள் அம்மாவை ஒரு பார்வை பார்த்த அகல்யா,

‘நண்பேன் டீ’ என்று இறுக்கிக்கொண்டாள் தன் தோழியை…

“வெட்கப்பட்டுகிட்டு என் அண்ணன் டைம வேஸ்ட் பண்ணதெல்லாம் போதும்டீ… இனியாவது ஒழுங்கா இரு…” என்று வாழ்த்திவிட்டு அவளை, அண்ணியை அகிலனின் அறைக்குள் அனுப்பினாள்…

அறைக்குள் வந்த பூவிழி அகிலனை பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டாள்…

“வா பூவிழி, இங்க வந்து உட்காரு” என்று மெத்தையில் அவன் பக்கம் கைவைத்துக் காட்டினான்…

அவனிடம் பேசவே தயங்குபவள், இதைச் செய்து விடுவாளா என்ன!

“எனக்குத் தூங்… தூங்க வேண்டும்” என்று திக்கி திணறிச் சொன்னவளை என்ன செய்ய?

‘தூங்றதுக்கு ஏன் டீ அலங்காரம் பண்ணிட்டு வந்தேனு கேட்கவா முடியும்?’

அவளையே பார்த்தவனுக்கு, ‘அகிலா உன் நிலைமை ரொம்பக் கஷ்டம் டா’ எனத் தோன்றினாலும், இன்னிக்கு நமது வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தில் ஒரு வார்த்தையாவது எழுத வேண்டாமா என்ற எண்ணமும் அவனைத் தூண்ட…

எழுந்து அவளிடம் வந்தவன், “தூங்க வேண்டும் அவ்ளோதானே? நான் ஒண்ணு கேட்பேன், அதைக் குடுத்திட்டுத் தூங்குவியாம்” அவள் பதட்டத்தை அறியாமல் என்னென்னவோ சொன்னான்…

பூவிழியின் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது…

அவன் கேட்டதை அவள் தரத் தயங்கவும், அகிலனே அவளை அணைத்து, அவள் இதழ்களில் முத்தமிட்டான்…

காதலன்… இன்று அவள் கணவன், எவ்வளவு காலக் காத்திருப்பு?

இது கூடச் செய்யாமல் விடுவானா?!

அவளை விடுவித்தவன் நிமிர்கையில், மயங்கிச் சரிந்தாள் பூவிழி…

அகிலனுக்கு சகலமும் ஸ்தம்பித்தது!

“பூவிழி, பூவிழி என்று அவள் கன்னத்தில் தட்டியவன், அவள் அசையாமல் இருக்கவும், அவன் அன்னையைத் தேடி சென்றான்…

மஹா, அகல்யா எல்லாம் பதறியடித்து வந்தனர்…

கீழே கிடந்தவளை மடியில் தாங்கிய அகல்யா, அவள் முகத்தில் நீர் தெளித்துவிட்டாள்… மஹாவோ செய்வதறியாது கையைப் பிசைந்தபடி இருந்தார்…

“அம்மா பயப்படாதே மா, இவ சரியான பயந்தாங்கோலி, ஹாஸ்டல்ல வச்சி நிறையத் தரம் பயந்து மயக்கம் போட்டு விழுந்திருக்கா… இப்போ யாரோ அவளை ரொம்பப் பயம் காட்டிடாங்க…” என்ற நிமிர்ந்து தன் அண்ணனைப் பார்த்துச் சிரித்தாள்…

சில நொடிகளில் கண் விழித்த பூவிழி அங்கு அனைவரையும் பார்த்துத் தன்னுணர்வுக்குத் திரும்பினாள்…

“என்னடி ஆச்சு, திடீரென்று இந்த மயக்கம்? பசி மயக்கமா… இல்ல…” என்ற அகல்யாவை பூவிழி நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை

“கீழ எங்கள் கூட வந்து படுத்துகிறாயா பூ?”அகல்யா அவளை மீண்டும் சீண்ட… அகிலன் அகல்யாவை கொலைவெறியுடன் பார்த்தான்.

மஹாவோ, “அது சரி கிடையாது, கல்யாண அலுப்பு தான் மா பூவிழி உனக்கு, அதான் இந்த மயக்கம்… இப்போது பரவாயில்லையா? இந்தத் தண்ணி குடி மா… ஏதும் வேணும்னா எங்களைக் கூப்பிடு…” என்றுவிட்டு அகல்யாவையும் இழுத்துக் கொண்டு வெளியேறினார்…

அகிலன் அதற்கு மேல் எதுவும் வாய்ப்பு இல்லாமல், பூவிழிக்கு உறங்க வழி செய்து கொடுத்தான்…

சிறிது நேரத்திலேயே நித்திரையில் ஆழ்ந்து விட்டவளைப் பார்த்தவனுக்கு ‘இவளுடன் தன் வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணமே மேலோங்கியது…

அவளையே பார்த்திருந்தவனுக்கு உறக்கம் வந்ததோ இல்லையோ, கனவு மட்டும் வந்தது… அந்தக் கனவைக் கூடக் கண் திறந்தபடியே காண ஆரம்பித்தான்…

தன் இளம் வயதிலிருந்தே அவள்மேல் உயிராய் இருப்பவன். பார்த்த முதல் பார்வையிலேயே காதல் எல்லாம் இல்லை… ஆனாலும் அவளின் செய்கைகள் மூலமே ஈர்க்கப்பட்டவன்.

அவளின் அமைதி, அடக்கம், கடின உழைப்பு, தீவிர கடவுள் நம்பிக்கை என்று சின்னச் சின்னக் காரணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டன.

அவளைத் தவிர யாரையும் தன் மனைவியாய் அவன் கற்பனைக்குக் கூட எண்ணியதில்லை.

பூவிழியை காண்பதற்காகவே தன் தங்கையுடன் சேர்ந்து சுற்றுவான்.

பூவிழி கல்லூரிக்கே அகல்யா சென்று சேர விரும்பியதை தனக்கு விரும்பமில்லாததைப் போலக் காட்டிக் கொண்டாலும் அவனுக்கு மகிழ்ச்சியே, அதையும் தனக்கான வாய்ப்பாய் உருவாக்கிக் கொண்டான்.

அடிக்கடி அகல்யாவை பார்க்கப் போகலாம் என்று பெற்றோரைக் கிளப்பி விட்டுச் சென்னை செல்வதும்,

பெரியம்மா வீட்டுக்கு அகல்யாவை வரச் சொல்லி இரண்டு நாள் தங்க வைப்பது மட்டும் தான் அவன் திட்டத்தில் இருக்கும்… ஆனால் ஒட்டிப் பிறந்த ரெட்டை போல, அகல்யா வந்தால் பூவிழியுடன் தான் வருவாள்… அதுவே அவனுக்குப் போதுமானதாக இருக்கும்…

அவன் காதலியை, பூவிழியை பார்ப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்?

அவன் பெற்றோருக்குக் கூட இவன் மனதில் இப்படியொரு எண்ணம் இருக்கு என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே, அவனாகச் சொல்லும் வரையிலும்.

படித்து நல்ல நிலையில் தான் இருந்தால் தான் பூவிழியை கைபிடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டவன், தன் படிப்பில் கவனம் செலுத்தி, இன்று அதனால் நல்லதொரு நிலையும் பெற்றிருக்கிறான்…

எல்லாம் இந்தப் பொல்லாத காதல் படுத்தும் பாடு!

இவ்வளவு முயற்சி எடுத்து, இந்தக் கல்யாணம் மட்டும் கைகூடாமல் போயிருந்தால், தன் நிலை?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை, அவனால்! சரி அப்படியெல்லாம் தான் நடக்கவில்லையே, பின் ஏன் இந்த எதிர்மறை சிந்தனை?

மீண்டும் தன்னிலைக்கு வந்தவன் தூங்கிக்கொண்டிருந்த திருமதி அகிலனை சைட் அடிக்க ஆரம்பித்து விட்டான்!

அடுத்த நாள் காலை, அகல்யா ஆவலுடன் பூவிழிக்காக காத்திருந்தாள்…

முன்தினம் இரவு அவள் சூர்யாவுடன் அவன் வீட்டுக்குச் செல்லவில்லை… காலையில் ரொம்ப முக்கியமான வேலையிருக்கு என்று கூறி விட்டாள்… என்ன வேலை என்று நல்லவேளையாகச் சூர்யா கேட்கவில்லை…

மஹாவுடன் காலை உணவுக்குக் காய் வெட்டும் வேலை செய்தபடியிருந்தாள், நடுநடுவே பூவிழியை வழிமேல் விழி வைத்துத் தேடல்…

மஹா வேறு அதைச் செய் இதைச் செய் என்று அவளைப் படுத்தியெடுத்தாள்…

ஒரு வழியாகப் பூவிழி வந்தாள்… காதலியை எதிர்பார்த்த காதலன் போல் ஓடோடி போனாள் அகல்யா அவளிடம்… அவளைத் தனியே அழைத்துச் சென்று,

“என்னடி, நேற்று என்ன நடந்தச்சு?”

பூவிழி அவளை முறைக்கவும்… அகல்யாவா அதற்கெல்லாம் அசறுவாள்? அவளைத் தாஜா செய்தபடியிருந்தாள்…

“ஏய் என்னடி, நாம இரண்டு பேரும் எவ்ளோ கிளோஸ்? அப்படியெல்லாம் முறைக்காம் என் கிட்ட சொல்லுவியாம், என் டொமாட்டோ…” என்னன்னவோ சொன்ன அகல்யாவை அங்கே வந்த அகிலன், மண்டையிலேயே ஒன்று போட்டான்… “என்ன ராகிங் பண்றியா அவளை?”

“டேய்ய்ய்ய், பொம்பளைங்க பேசிட்டு இருக்கும்போது உனக்கு என்ன டா வேலை இங்க?”

அகிலன் நல்ல மூடில் இருந்தான் போலும், அதனால் அகல்யாவை அப்போதைக்கு விட்டுவிட்டான்… பூவிழியை நன்றாகப் பார்க்கும்படியாக ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தவன், தன் புது மனைவியை ரசிக்கத் தொடங்கிவிட்டான், அகல்யா அவனைக் கேலியாகப் பார்த்ததை எல்லாம் சட்டை செய்யாமல்!

பூவிழி அவனைப் பார்க்காமல், அகல்யாவிடம் பேசியபடி, இல்லை அவள் பேச்சைக் கேட்டபடியிருந்தாள்… மஹா வேறு அடிக்கடி அகல்யாவை அழைக்க, அவள் சமையலறை சென்றுவிட்டால் பூவிழி கண் தரை நோக்கும்… தன் தோழியின் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தன் அம்மாவிடம் காட்டிய அகல்யா சிரித்தபடி,

“அம்மா சுத்தம்! பூவிழி என்றைக்கு நார்மல் ஆகிறது, என் அண்ணன் குடும்பம் எப்போது தழைக்கிறது?” அம்மாவும் மகளும் கேலி பேசியபடியிருந்தனர்.

“அம்மா பூவிழிக்காகத் தான் இங்க இருந்தேன். ஆனால் அவ என்கிட்ட ரொம்பப் பேசமாட்றா, அப்போ நான் கிளம்புறேன் மா…” அவள் வீட்டுக்குத் திரும்ப ஆயத்தமானாள் அகல்யா…

பூவிழியிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று போனவளிடம், பூவிழி “அகல்யா உன் கிட்ட ஒண்ணு சொல்ல வேண்டும் டீ” என்று ஆரம்பிக்க…

தன் தோழி மனமிறங்கியதில் சந்தோஷப்பட்ட அகல்யா

“சொல்லு சொல்லு டீ… அதுக்குத் தானே காத்துக்கிட்டு இருக்கேன்” என்றாள் ஆர்வ மிகுதியில்…

“இனிமே நீ அவரை டா ன்னு எல்லாம் சொல்லாதே, பேர மட்டும் சொல்லிக் கூப்பிடு டீ” என்றுவிட்டாள் பூவிழி…

ஆஆஆஆ… நெஞ்சு வலித்தது அகல்யாவுக்கு… அடிப்பாவி… அமைதியா இருக்கிற பிள்ளையை நம்பாதேன்னு எங்க அப்பத்தா அப்பவே சொல்லிச்சே! கேட்டேனா? மோசம் போயிட்டேனே. நேற்று தான் என் அண்ணன் இவளுக்குத் தாலி கட்டினான், இவ இன்னிக்கே எனக்கு டின் கட்டுறாளே?

அகல்யாவின் பூமனம் அழுதது! ஆனாலும் பூவிழியையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அகல்யாவை,

“வீட்டுக்குக் கிளம்பிட்டியா, போயிட்டு வாடீ…” என்றுவிட்டு தன் மாமியாரிடம் சென்றுவிட்டாள் பூ…

மனம் நொந்த அகல்யா அடுத்து அகிலனிடம் விடைபெறச் செல்ல, “இனிமே உங்களை டா போட்டுக் கூப்பிட கூடாதென்று உங்க புதுப்பொண்டாட்டி சொல்லிடுச்சு எசமான்…”என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டாள்…

“ஹேய் அகல்விளக்கு, அவ அப்படியா சொன்னா?” குதித்தான் அவன், அவள் அண்ணன்…

‘பாவி டேய் அவ என்னைப் பார்த்து என் கிட்ட அப்படிச் சொல்லிட்டா டா’ என்ற அகல்யாவின் மனசு கத்தியது அவனுக்குக் கேட்குமா என்ன?

அவள் நிலைமை புரியாமல் அவன் மேலும்,

“அகல்யா நீ தினமும் வந்து என்னை ஏதாவது சொல்லேன், அவ ரியாக்ஷன் என்னன்னு பார்ப்போம்…”

“டேய்” என்றவள் சுற்றிமுற்றி பூவிழி இருக்கிறாளா என்று பார்த்துவிட்டுப் பின்

“அண்ணா நான் தான் உனக்குக் கிடைத்தேனா? அம்மா வீட்டுக்கு நான் வந்து போய்ட்டு இருக்கிறது உனக்குப் பிடிக்கவில்லையா? இதற்கு மேல் என் மனசு தாங்காது டா… இல்ல எசமான். நான் கிளம்புறேன்” என்று கிளம்பிவிட்டாள்…

கிரிதரன் அவரது பண்ணைக்குச் செல்லும் வழியில் அகல்யாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டார்…

சூர்யாவுடன் அடுத்துத் தான் வெளியூர் செல்ல ஏற்பாடாயிருந்ததால், அதற்குத் தயாராகும் வேலையில் கவனம் செலுத்தினாள் அகல்யா, ஆதலால் அவளின் மீதி நாட்கள் வேகமாகச் சென்றன…

சூர்யாவிடம் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ஜப்பானை பற்றிக் கேள்வி கேட்க,

அவனோ ஜாப்பனீஸ் எல்லாம் ரொம்பப் பெர்ஃபெக்ட்… அவர்கள் ஊரு வீடு எல்லாமே அந்தப் பெர்ஃபெக்ட்டா தான் வச்சிப்பாங்க…

இப்போது நமது நிறுவன பிராஜக்ட் விஷயம் கூட, சொன்னா சொன்ன மாதிரி அந்தத் தேதியில் முடிக்க வேண்டும், தாமதமோ ஏதோ ஒரு காரணமோ அது எல்லாம் அவர்கள் ஒத்துக்குறதே இல்ல… எல்லாக் நிறுவனமும் அப்படித் தான், ஆனால் அவர்கள் அதுக்கும் மேல் தான்! இப்படி ஏகப்பட்ட’பில்ட் அப்’ கொடுத்தான் சூர்யா, ஜப்பானியர்களைப் பற்றி…

அகல்யாவால் சில விஷயத்தை நம்பக் கஷ்டமாகத் தான் இருந்தது…

ஒரு மாதம் இந்த வீட்டிலிருந்து விடுதலை என்பதால் இந்தப் பயணத்தில், ஆர்வமாகவே இருந்தாள்…

தினமும் அவளே உருவாக்கிய ஒரு பாட்டைப் பாடி சூர்யாவின் காதுகளே ஓட்டையாகிப் போனது…

ஜப்பானை சுத்தி பார்க்கப் போறேன்

டோக்கியோவில் வீடு கட்ட போறேன்.

மவுண்ட் ஃபுஜில ஏறி நிக்கப் போறேன்

நான் மங்காத்தா ராணி போல வாரேன்.