Ani Shiva’s Agalya 12

12

அகிலன் விஷயத்தைத் தாமதப்படுத்தக் கூடாது… தன் திட்டத்தைச் செயல்படுத்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள் அகல்யா.

அகிலனுக்கு பூவிழி மற்ற எல்லா விஷயத்திலும் நல்ல மனைவியாய் இருந்தாள் தான்… தினமும் காலை வேலைக்குக் கிளம்பும் கணவனுக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தாள்.

மஹாவுக்கு ஏற்ற மருமகளாய் நடந்துகொண்டாள். யாரிடமும் அதிகம் பேச்சுக் கிடையாது. கேட்பதற்கு மட்டுமே பதில்!

அகிலனிடம் அந்தப் பதில் கூடத் தலையசைப்பில் தான்… இரவு அவனுடன் தனித்திருக்கும் சமயம் தான் பூவிழிக்கு மிகவும் கஷ்டமான விஷயம்… இவளைப் பற்றித் தெரிந்ததால் அகிலனும் ஒதுங்கியே தான் போனான்…

இதற்கிடையில் ஒரு நாள் மஹாவும் கிரியும் திடீரென்று வெளியூர் செல்கிறோம் என்று அகிலனுக்கு போன் செய்தனர்…

யாருக்கு என்ன என்பதையெல்லாம் பிறகு சொல்கிறோம், பூவிழி தனியாக இருப்பதால் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடவும் என்று முடித்துவிட்டார் கிரி.

என்ன ஆச்சு இவங்களுக்கு, என்று குழம்பியவன் பின் தன் பணிகளைத் தொடரலானான்.

மாலை ஐந்து மணிவாக்கில் மறுபடியும் போன் வந்தது, வீட்டு எண் தான்… இன்னும் கிளம்பலையோ என்று நினைத்தவாறே போனில் பேசவும், அந்தப் பக்கம் பூவிழி…

“ அகிலன், நான் அம்மாகூடக் கோவிலுக்குப் போகட்டுமா? உங்க கிட்ட வீட்டுச் சாவி இருக்கா?”

ஒரு முழு வாக்கியத்தைப் பேசிட்டாளே என்று மனதில் நினைத்தவன், “சரி போயிட்டு வா… அப்புறம் நான் வர்ற வரை அத்தையை இருக்கச் சொல்லேன் உனக்குத் துணைக்கு…”

சிறு அமைதிக்குப் பின் சரி என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்…

பொண்டாட்டி பேசிட்டான்னு எல்லாம் சந்தோஷப்படுறவன் நீ ஒருத்தனாதான் இருப்பே என்று மனசாட்சி கேலி செய்தது.

இந்த நாள் இனிய நாள் என்று அகிலனுக்கு அந்த நாளைச் சொல்லத் தோன்றியது… பூவிழி தன் அம்மா சுதாவின் முன் அப்படித் தான் அவனைக் கவனித்தாள்.

அகல்யாவிடம் இதனைக் கட்டாயம் சொல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்… என்ன தான் நடந்தாலும், பூவுக்குப் பூ வைத்துவிடும் விஷயம் மட்டும் விடாமல் தொடர்ந்தது!

அகல்யா தன் அண்ணனின் திருமணத்திற்குப் பின் தனக்கு இந்த வீட்டில் இரண்டாம் பட்சம் தான் என்று என்றைக்கோ தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறாள்…

தனக்கு வரும் அண்ணியின் குணத்துக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளலாம் என்ற எண்ணமே அவளுள். ஆனால் தான் எண்ணியது எல்லாம் வீண் என்பது, அகிலன் பூவிழியை தான் திருமணம் செய்வேன் என்று தெரிவித்ததும், அவளுக்குத் தெளிவானது.

பூவிழியின் வருகையால் தன் வாழ்வு முழுவதற்கும் தன் தமையனிடமிருந்து தன்னை யாரும் அந்நியப்படுத்தி விடமாட்டார்கள் என்பதில் திருப்தியடைந்தாள்…

பூவிழிக்கும் அகல்யா என்றாள் உயிர்… தோழிகள் என்றாலே சண்டையிடுவது சகஜம் தானே? அப்படிகூட அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்ததில்லை எனலாம்… பூவிழி அதிகம் பேசமாட்டாள் தான், ஆனால் அகல்யா பேசாமல் இருந்தால் அவளுக்குத் தாள முடியாது.

என்னதான் உயிராய் பழகினாலும், அண்ணி என்ற உரிமை வந்தால் மாறமாட்டார்களா என்ன?

பூவிழி அகல்யாவின் நட்பு எப்படியிருக்கும் என்பது போகப் போக அல்லவா தெரியும்…

இதற்கிடையில் சூர்யாவின் தம்பி ஜெயந்த், சென்னையில் வேலை பார்த்திருந்தவன் திடீரென மும்பை மாற்றலாகிப் போகிறேன் என்றான் ராஜத்திடம் போனில்,

“ஏன் பா, சென்னையில் இருந்தாலே அடிக்கடி உன்னைப் பார்க்க முடியலை, இதில் அவ்ளோ தூரம் போறேன்னு சொல்றே?” எனச் சொல்லிப் பார்த்தாள் ராஜம்.

“இல்ல அம்மா, அவசியம் போய்த் தான் ஆக வேண்டும்… அடிக்கடி வரப் பார்க்கிறேன் ஊருக்கு… அண்ணன் அண்ணி போன் பண்ணா சொல்லிடுங்க. நான் அவர்கள் கிட்ட அப்புறம் பேசுறேன்” என்று முடித்துவிட்டான்…

ராஜமுக்கு இப்போது அடுத்தப் புலம்பலுக்குத் தலைப்புக் கிடைத்துவிட்டது. தன் கணவரிடம் ஆரம்பித்துவிட்டார்…

“இப்ப தான் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்கோம், இவன் இவ்ளோ தள்ளியிருந்தா எப்படி அடிக்கடி வருவான்?”என்று அவள் இழுக்க…

“நீ முதலில் பார், அவன் வர்றானா இல்லையான்னு அப்புறம் பார்த்துக்கலாம்…” என்று அப்போதைக்கு முடித்தார் ராமானுஜம்…

ஆனால் ஜெயந்த் ஏன் திடீரென்று மும்பை செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு…

மஹா இருந்தாலும் இல்லையென்றாலும் அகல்யா தினமும் பூவிழிக்கு போன் செய்வாள்… அப்படிப் பேசப் போய்தான் பூவிழிக்கு அவள் அம்மா சுதா தினமும் துணையிருக்கும் விஷயம் தெரிந்தது.

பூவிழியை பற்றி அதிகம் தெரிந்தவள் அகல்யா தானே. அவளுக்கு இப்படி யாரும் கிடைத்தால் ஒளிந்து கொள்ள வசதி செய்வாள் என்பதை அகல்யா உணர்ந்திருந்தாள். அதனால் அதற்கும் ஒரு வழியையும் கண்டுபிடித்தாள்.

அன்று வெளியிலிருந்து வந்த அகிலன் பூவிழியிடம்,

“மேனேஜர் இரண்டு வாரம் லீவு, எனக்கும் வேலை ஜாஸ்தி, நீ கொஞ்ச நாள் எனக்கு வந்து உதவிப் பண்ணு. வேலை செய்றவங்களுக்குச் சம்பளம் குடுத்திட்டு, சிஸ்டம்ல அப்டேட் பண்ண வேண்டும்… அவ்ளோதான்…” என்றான்.

தன் அம்மா இருந்ததால் சம்மதம் போல் தலையை மட்டும் ஆட்டியவளுக்கு மனதில் கலக்கமே!

இரவு தனியறையில், “நான் வரவேண்டுமா? எனக்கு உங்கள் வேலைப் பத்தி ஒண்ணும் தெரியாதே?”என்று அவள் தயங்க,

“என்ன பூவிழி ! படிச்சிருக்கே, அதுக்கு மேல் என்ன வேண்டும்? நீ வரலைன எனக்கு ரொம்பக் கஷ்டம். நானும் அங்கே தானே இருப்பேன், எதுவும் தெரியலைன்னா கேள்…” என்று கூறிவிட்டு படுத்துவிட்டான்.

அடுத்த நாள் அகல்யாவிடம் “பைங்கிளி வரா இன்னிக்கி. யோசனைக்கு நன்றி” என்று குறுந்தகவல் அனுப்ப, அவளும் பதிலில்,

“அண்ணா சூப்பர், பட் பூவிழி ஸ்பெல்லிங் தப்பு”

“பூவிழி தான் என் பைங்கிளி” என்று வழிந்தவனிடம்,

“போதும் ரொம்ப நீளமா போகுது, இத்தோட முடிச்சிக்கலாம்” என்று முடித்துவிட்டாள்அவன் தங்கை.

அன்று முதலே பூவிழி தினமும் அகிலனுடன் அவன் ‘ஃபார்ம்ஸ்க்கு’ செல்ல ஆரம்பித்தாள். அவள் வேலைக்கு வர ஆரம்பித்த இரண்டாம் நாளே அகிலனின் பெற்றோரும் திரும்பிவிட்டனர்.

“என்ன பா, அவசர வேலைனு சொல்லிட்டு ஊட்டிக்கு போயிட்டு வந்திருக்கீங்க?”என்று அகிலன் கேள்வி கேட்க…

“ஆமா டா தம்பி, ஆபிஸ் நண்பன், அவன் பையன் அமெரிக்கால இருக்கான்… ரிசார்ட் மாதிரி ஏதோ கட்டியிருக்கேன்… திறப்பு விழான்னு கூப்பிட்டான், அதான்…” என்றார் கிரி.

“அட நாங்களும் வந்திருப்போம்ல” என்று கேட்ட மகனைப் பார்த்தவர்…

“இப்போது என்ன கெட்டு போச்சு? ஒரு காட்டேஜ் புக் பண்ணிட்டு தான் வந்திருக்கிறோம். நீ எப்போ போறேன்னு மட்டும் சொல்லு…”

அகிலன் பதில் சொல்லவில்லை. பூவிழியை பார்த்தபடி அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டான்…

*****

அகல்யா ஜப்பானில் அடுத்துச் சென்ற இடம் நிகாட்டா… டோக்கியோவிலிருந்து முன்னூற்றி ஐம்பது கிலோமீட்டரில் இருந்தது நிகாட்டா. ஷின்கான்சென் என்னும் அதிவேக ரயிலில் சென்றனர்… ஒன்னரை மணி நேரத்தில் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தே விட்டது.

நமது ஊரிலும் இப்படியெல்லாம் போக்குவரத்து வசதியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை…

நிகாட்டா ஜப்பானின் ஹொன்ஷு பகுதியில் அமைந்துள்ளது. இங்குப் பனிச்சறுக்கு விளையாட்டுகள் மிகப் பிரபலம். வருடத்தில் இந்தப் பனி பொழியும் பருவ நிலைக்காகக் காத்திருந்து இந்த விளையாட்டை இது போல் இடங்களில் வந்து விளையாடுவார்கள் ஜப்பானியர்கள்…

இந்த விளையாட்டு பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும், கற்றுக்கொள்வது கடினமே.

அகல்யாவுக்கு நிரம்ப ஆசை. தானும் விளையாடுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு விழுந்தது தான் மிச்சம்.

சூர்யா ஏதோ கொஞ்சமேனும் செய்தான் தான்.

நிகாட்டாவில் எங்கு நோக்கினாலும் வெள்ளை வெளேர் என்றிருந்தது. மலைச் சரிவுகளும், வீடுகளும், மரங்களும் எல்லாமே வெள்ளை போர்வை போர்த்தியது போல்…

‘புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது’ பாடலை அந்தச் சூழ்நிலைக்கேற்ப அசைபோட்டபடியே இருந்ததுஅகல்யாவின் மனம்… பனிப்பொழிவும் அன்று அதிகமானதால், அடுத்த நாள் தான் டோக்கியோ திரும்பினர்.

இன்னும் எவ்வளவு அதிசயமோ இந்தத் திருநாட்டில்?

அகல்யா, தான் வளர்ந்த வீட்டில் கற்றுக்குட்டி… தன் சின்ன வயதிலிருந்தே அவள் சொல்வதைத் தான் வீட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது போல் அதிகாரம் செய்து அதில் முக்கால்வாசி நடத்தியும் இருக்கிறாள்… அகிலன் மூத்தவன், இவளிடம் விட்டுகொடுத்துவிட்டு போட்டிக்கு வர மாட்டான். அகல்யாவுக்கு அம்மாவிடம் செல்லம், அப்பாவிடம் மட்டும் தான் பயம்… ஆக மொத்தம் ராணி வாழ்வு தான் அகல்யாவுக்கு…

சூர்யாவும் அவளை அப்படித் தான் தாங்கினான்…

சூர்யா வீட்டிலும் சீதா, ஜெயந்த், மாமனார், என்று எந்தப் பிரச்சனையுமில்லை…

இதில் விட்டுபோனது ராஜம் மட்டும் தான்…

ராஜமிடம் அல்லல் பட்டுக்கொண்டிருந்த அகல்யாவுக்கு இந்த வெளிநாட்டுப் பயணத்தால், தான் மீண்டும் தன் பழைய சுகந்திரத்திற்குத் திரும்பியது போலிருந்தது… அதை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்ற எண்ணமும் தோன்றியது…

சூர்யாவின் நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தனர் அவர்களை… நண்பரின் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு மெட்ரோ ரயிலில் சென்று சேர முப்பது நிமிடங்கள். அந்த இடத்தில் இறங்கியதிலிருந்தே இந்தியர்கள் நிறையப் பேரை காண முடிந்தது. ஏகப்பட்ட இந்திய குடும்பங்கள் அங்கு வசிப்பதாக அந்த நண்பரும் சொன்னார். அவரின் மனைவி மிக மிக எளிமையானவர். நீண்ட நாள் பழகியது போல் அகல்யாவிடம் நிறையப் பேசினாள்…

“இந்த ஊர் ரொம்ப நல்லாயிருக்கு இல்லையா”என்ற அகல்யாவிடம்,

“ஆமா ரொம்ப நல்ல ஊர் தான். ஆனால் எனக்கு ரொம்பத் தனிமையா இருக்கிற மாதிரியிருக்கு. ஊரில் அம்மா அக்கா எல்லாரையும் விட்டுவிட்டு இங்க இருக்கோமேனு சில சமயம் தோணும்”என்று பதிலளித்தாள்.

வெளிநாட்டு வாழ்க்கை ஒரு மாயை. சில பெண்களைப் பொறுத்தமட்டில் யாரும் அதிகாரம் செய்ய இல்லை, அவர்களாய் செய்யும் வேலை எல்லாமும் சுலபம், சுத்தமான இடம், போக்குவரத்து வசதி எனக் குறை சொல்ல எதுவும் இருக்காது.

ஜப்பானை பொருத்தவரை அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம் எல்லாம் தடையில்லாமல் இருக்கும். அதன் முக்கியத்துவம் உணர்ந்த நாடும் கூட… இந்த மாதிரி சில வசதிகளை எல்லாம் பழகினால் பிறகு நம் நாட்டில் கொஞ்சம் சிரமமாய்த் தானே இருக்கும்? அகல்யாவுக்கு இப்போது கிடைத்த இந்த மாறுதல் மகிழ்ச்சியைத் தருவதால், அவளுக்கு ஏன் நாமும் இப்படி இருக்கலாமே எனத் தோன்ற ஆரம்பித்திருந்தது…

நீண்ட நாளைக்குப் பிறகு அன்று அந்த நண்பரின் வீட்டில் ஒரு ருசியான தமிழ்நாட்டு உணவை முடித்துவிட்டு வயிறும் மனதும் நிரம்பிய பின் விடைபெற்றனர், அகல்யாவும் சூர்யாவும்…

அந்த நாளின் இதமான மனநிலை அகல்யாவை தான் நேசிக்கும் தன் தாய்நாட்டை விட்டு இங்கு வந்து இருந்தால் தான் என்ன, என்று மீண்டும் மீண்டும் எண்ணும்படி செய்தது…

வருவாளா? இல்லையா?