Ani Shiva’s Agalya 13
Ani Shiva’s Agalya 13
13
கடந்த காலத்தை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு நீண்ட கொடூர வருடங்களுக்குப் பிறகு தான் இல்வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும் என்பது பிரம்மன் எழுதிய விதியோ எனத் தோன்றியது.
இப்போதெல்லாம் சூர்யாவுடன் நிறையப் பேசினாள், பேச்சு மட்டுமே. அவனும் தான். ஆபிஸ், தோட்டம், டீவி நிகழ்ச்சிகள் என்று அவர்கள் பேச நிறையப் பேச விஷயமும் இருந்தது.
சமைக்க ஆரம்பித்திருந்தாள்.
அன்று அவர்கள் இருவருக்காகவும் மதிய உணவுக்காகக் கொத்தமல்லி சாதம், கத்திரிக்காய் பொரியல் செய்து டப்பாக்களில் அடைத்தவள், அவள் மாமனாருக்கு என்று அவர்களுக்கும் ஒரு ஹாட்பேக்கில் எடுத்து வைத்தாள்.
சூர்யா இன்னும் எழவில்லை, இரண்டு முறை எழுப்பிப் பார்த்துவிட்டாள்.
முன்றாம் முறை அவன் மேல் கொஞ்சம் தண்ணியைத் தெளித்து விட்டாள்.
போர்வை எல்லாம் நனைந்து போய் எழுந்தவன், அவளை முறைத்தபடி,
“இப்படிதான் எழுப்புவாங்களா? உன்னை என்ன பண்றேன் பார்”. என்று அவளிடம் நெருங்கி வர ஆரம்பித்தான்.
“சாரி, மன்னிச்சிடுங்க…” கூறியபடியே வீடு முழுவதும் ஓடியவளை அவனும் விடாமல் துரத்தி பிடித்தான். அவன் அவளைப் பிடிக்கவும் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாய் இருந்தது.
“உன்னை அப்புறம் வச்சிக்கிறேன்” என்று அவளைக் கையை விட்டுவிட்டு அழைத்தது யாரென்று பார்க்க, அவன் அம்மா தான்!
அவன் இறங்கி அவளிடம் வரும் முன்னரே சத்தம் போட்டாள் ராஜம், “ஏன் டா கீழே வயசானவர்கள் இருக்கோம்னு கொஞ்சமாவது யோசனை இருக்கா? அது என்ன டா வீட்டுக்குள்ள ஓடி பிடிச்சி விளையாடுறது?”
கொஞ்ச நேரம் அமைதி காத்துப் பார்த்தான், ஆனால் ராஜம் இன்னும் பேச,
சூர்யாவுக்கு எங்கேயிருந்து தான் அவ்வளவு ஆத்திரமோ,
“அம்மா என்ன மா? இப்போ எதற்கு இவ்ளோ கோபம்? வர வர உங்கள் எரிச்சல் கோபமெல்லாம் என் கிட்டையும் காட்ட ஆரம்பிச்சிடீங்க… நீங்க செய்றதுக்கு எல்லாம் நான் பொறுத்துட்டு போயிட்டே இருப்பேனென்று நினைக்காதீங்க… உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தா நாங்க வேற வீட்டுக்கு போயிடுறோம்” என்று கூறிவிட்டு திரும்பிவிட்டான்…
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, பயங்கரக் கோபம் அவனுக்கு.
தன் நல்ல மனநிலையை யாரோ பறித்து விட்டதைப் போல… சில வினாடிகளிலேயே அவர்கள் இருவரும் பணிக்கு கிளம்பவும், அகல்யா அவனிடம், “மாமாகிட்ட நீங்க இதைக் குடுக்கணும்” என்று இழுத்தாள்…
“ஏன் நீயே குடேன்” என்றவனிடம் மேலும் வாக்குவாதம் பண்ணாமல், அவள் சென்று அழைப்பு மணியை அடிக்க, வந்ததோ ராஜம்…
‘போச்சு’ என்று நினைத்தபடியிருந்தவளை காக்கவே, அவள் மாமனாரும் பின்னோடு வந்தார்… கடவுளே காப்பாத்திட்ட! அவரிடம் ஹாட்பேக்கை குடுத்துவிட்டுக் காரில் ஏறிக்கொண்டாள்.
சூர்யா ஏதோ சிரித்தான் போல் தோன்றியதோ! இல்லையே!
அன்று அவர்களின் ஆபிஸில் இவர்கள் இருவரும் உள்ளே செல்ல, அங்கு ஒருவருமே தங்கள் சீட்டில் இல்லை, எல்லாரும் கார்த்தியை தான் சூழ்ந்திருந்தனர். சூர்யா உள்ளே வந்ததைப் பார்த்தும் பதட்டமில்லாமல், “பாஸ் நம்ம கம்பெனில அடுத்த விக்கெட் அவுட்” யாரோ சொல்ல, அங்கே ஒரே சிரிப்பலை…
என்ன விக்கெட், யார் கிரிக்கெட் விளையாடுவது இங்கே என்று அகல்யாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை…
அவள் அறைக்குச் செல்ல திரும்பியவளை, கார்த்தி அழைத்தான். மற்றவர்களை அனுப்பிவிட்டு சூர்யாவுடன் அகல்யாவை நெருங்கிய கார்த்தி,
“அகல்யா எனக்குக் கல்யாணம். நீயும் சாரும் கண்டிப்பா வரணும்…” என்று இருவருக்கும் பொதுவாகத் தன் கல்யாண பத்திரிக்கையை நீட்டினான்…
சூர்யா அகல்யாவிடம் வாங்கிக்கோ என்பது போல் சைகை செய்தபின்னரே அவள் அதை வாங்கினாள், எந்த வித உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் வாங்கியவள், கடமை முடிந்தது போல அந்த இடத்தை விட்டும் அகன்றாள்…
கார்த்தி இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை, தனக்குத் திருமணம் என்றதும், அவளிடமிருந்து ஒரு புன்னகையாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தவனுக்குப் பலத்த ஏமாற்றம்.
இன்னும் தன் மீது அவளுக்குக் கோபம் போகவில்லை போல. அவனின் வாடிக் குழம்பிய முகத்தைப் பார்த்தபடியிருந்த சூர்யா,
“என்ன கார்த்தி உன் ஃபிரண்டு எந்த ரியக்ஷன் குடுக்காம போறா…”
“எல்லாம் உங்களால் தான் பாஸ். புருஷன் பொண்டாட்டி சண்டையில் நடுவில் வருகிறவனுக்கு எல்லாம் என்னை மாதிரி கதி தான். உங்க கிட்ட மட்டும் சமாதானமா போயிட்டா, ஆனால் உங்களுக்கு ஒத்து ஊதிட்டேன்னு என் மேல் இன்னும் அவளுக்குச் செம கடுப்பு” சோகமாய்ச் சொன்னான் கார்த்தி…
சூர்யா சிரித்தபடி, “உங்கள் விஷயத்தில் என் தலையை உருட்டாதே, நீ ஆச்சு அவ ஆச்சு, சீக்கிரம் சமாதானம் பண்ணு, இல்லைன்ன உன் கல்யாணத்துக்கு வருவது எனக்கும் பிரச்சனை ஆயிடும்” என்று மேலும் பீதியை கிளப்பிவிட்டுப் போனான்.
தன் அறைக்கு வந்த அகல்யா, அந்தத் திருமணப் பத்திரிக்கையை ஆவலுடன் பிரித்துப் பார்த்தாள்,
கார்த்தி வெட்ஸ் கமலவேணி என்றிருந்தது…
யார் இந்தப் பெண், நமது கல்லூரியா? யோசித்துப் பார்த்தவள், ஒன்றும் புரியாமல் பூவிழிக்கு போனை போட்டாள்,
“ஹேய் பூ, கார்த்திக்குக் கல்யாணமாம். பொண்ணு பேரு கமலவேணின்னு போட்டிருக்கு… யாரா இருக்கும், உனக்கு ஏதும் தெரியுமா?’
“தெரியலையே டீ… ம்ம்… ஆனால் இவன் காலேஜ்லயே கமல் கமல்னு போனில் பேசி, பசங்க எல்லாம் இவனைக் கிண்டல் பண்ணியிருக்கிறார்கள்…”என்ற பூவிழியின் ஞாபகத்திறனில் அசந்து போனவள்,
“இன்னுமா அதையெல்லாம்ஞாபகம் வச்சிருக்கே? நான் அதையெல்லாம் கவனித்ததே இல்லையே…” என்ற அகல்யாவை,
“நீ எங்க டீ அப்போது உலகத்தோடு ஒட்டி வாழ்ந்த…” என்று வாரினாள் பூ…
“அப்பவே சொன்னேன், அகிலன் கூட ரொம்பப் பழகாதேன்னு, கேட்டியா? அவனை மாதிரியே வாய் பேசுறே இப்போ! சரி நான் அந்தக் கமலவேணி பத்தி கண்டுபிடிச்சிட்டு உனக்குச் சொல்றேன்… பை…”
போனை வைத்துவிட்டு தன் சுழல் நாற்காலியில் திரும்பியவள், அவள் அறைக்குள்ளே கார்த்தி இருப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை…
‘கடவுளே… எப்போது வந்தானோ? எதையெல்லாம் கேட்டானோ’ என்று மனசு தவித்தாலும் அதை வெளிக்காட்டாமல்,
“இப்படித் தான் இண்டீசண்டா இருப்பியா கார்த்தி? கதவை தட்டிட்டு வர வேண்டாம்?”அவள் அவனிடம் எகிற…
அவனோ “கதவை தட்டாமல் வந்ததுக்குச் சாரின்னு சொல்லத் தான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன்…” சிரித்தபடியே சொன்னவன் மேலும்
“கமல் பத்தி என்கிட்ட கேட்டா நானே சொல்வேனே, ஏன் என்னைத் தவிர எல்லார் கிட்டேயும் கேட்கிற?” நிதானமாக அவளைப் பார்த்துக் கேட்டான்…
“ஏன், உன்கிட்ட என்ன கேட்கவேண்டும்? எதற்குக் கேட்கவேண்டும்? எனக்கு ஒண்ணும் தெரிஞ்சிக்க வேண்டாம். முதலில் நீ யார் எனக்கு! போய் உன் வேலை எதுவோ அதைப் பார்…” அவனை விரட்டினாள்…
அதற்கெல்லாம் அசராமல், “அகல்யா என் கூடக் காண்டீனுக்கு வா, உன் கிட்ட கொஞ்சம் பேசவேண்டும்” கார்த்தியும் அவளை விடவில்லை.
“எனக்கு உன் கிட்ட பேச எதுவும் இல்லை கார்த்தி” என்று கணினி பக்கம் திரும்பிக்கொண்டாள்…
“அப்போ எனக்கும் வேற வழியில்லை” என்றுவிட்டு அவள் முன் முட்டிபோட்டு மண்டியிட்டவன், பாவ மன்னிப்பு கேட்பதை போல் கையெடுத்து கும்பிட்டான் அவளிடம்…
“என்னை மன்னிச்சிடு அகல்யா…” முட்டிபோட்டவனுக்கு முத்தி தான் விட்டது…
அகல்யா பதறினாள்!
“கார்த்தி என்னது இது… என்ன பண்றே… டேய் அறிவுகெட்டவனே எழுந்திரிடா…” ஆனால் அவனோ,
“என்னை மன்னிச்சிடு அகல்யா. நான் பாஸ்க்குச் சப்போர்ட் பண்ணது தப்பு இல்ல, உன்னை விட்டுக்கொடுத்துப் பேசினது மட்டும் தான் தப்பு… அதுக்காக என்னைப் பழி வாங்கினது போதும். இத்தோட நம்ம சண்டையை முடிச்சிக்கலாம்…” என்றுவிட்டு அதே நிலையைத் தொடர்ந்தான்…
“முதலில் நீ எழுந்திரு, இது ஆபிஸ்…” என்று அவள் பதறியதை விட்டு,
“மன்னிச்சிட்டேன்னு சொல்லு”என்று அதே பிடியில் பிடிவாதமாய் நின்றவனை என்ன செய்ய.
“சரி மன்னிச்சிட்டேன், எழுந்திருச்சி தொலை” அதன் பிறகு தான் எழுந்தான் கார்த்தி. அகல்யாவுக்குக் கண் எல்லாம் கலங்கியது. இது என்ன செயல்? எவ்வளவு நல்ல பதவியில் இருப்பவன் அவன்! அவளின் நட்பை இந்த அளவு மதிப்பதனால் இப்படி எல்லாம் செய்யத் தோன்றியதா…
திரும்பவும் அவளைக் காண்டீனுக்கு அழைத்தவனிடன் மறுப்புத் தெரிவிக்காமல் அவனைப் பின் தொடர்ந்தாள்… அங்குச் சென்று அமர்ந்ததும் கார்த்தியே ஆரம்பித்தான்,
“சூர்யா சாரை இப்போ இப்படி உன்னோடு பார்க்க எவ்வளவோ நல்லாயிருக்கு தெரியுமா? நீ அவர் கூட இல்லாதப்போ எத்தனைக் கஷ்டம் அவருக்கு! வேலையில் கவனம் இல்லை, சிரிப்பைச் சுத்தமா தொலைச்சிட்டார், கோபமே படாதவர் பயங்கர டென்ஷன் பார்ட்டி ஆகிட்டார். அவர் கோபத்தால் கம்பெனில் நல்ல நல்ல ஆளுங்க வேற குறைய ஆரம்பிச்சிட்டாங்க…”
அகல்யா அமைதியாயிருந்தாள், கொஞ்சம் இடைவெளிவிட்டவன்…
“உங்க பிரச்சனை எல்லாம் நீ சொல்லித் தான் தெரியுமே தவிர, அவர் மூலமா எனக்கு எதுவும் தெரியாது. எல்லா விஷயமும் என்கிட்ட சொல்றவர் இதைப் பத்தி எதுவும் பேசவில்லை. உன் கிட்டையாவது அவர் நிலைமையைப் புரிய வைக்கலாம்னு தான் போன் பண்ணேன், நீ என்கிட்ட அவரை எடுத்தெரிஞ்சி பேசினதில் கோபம். அதுனாலதான் உன்னை அவாய்ட் பண்ணேன். சாரி அகல்யா.” என்று முடித்தான்…
எவ்வளவு முறை மன்னிப்பு கேட்பான்?
“சரி விடு கார்த்தி, உன் மேல் கோபம் தான், ஆனால் என் நல்லதுக்குத் தானே செய்தே பரவாயில்லை”
அமைதியானார்கள் இருவரும்… சிறிது நேரத்தில்…
“அப்போ போலாமா?”என்று அகல்யா எழ,
“என் வருங்கால மனைவி கமலவேணி யாரென்று தெரியவேண்டாமா?” நகைத்தபடி கேட்டான்.
தன் நண்பனின் அந்தப் புன்னகை அகல்யாவையும் தொற்றிக்கொள்ள, “சொல்லு சொல்லு, யார் அது? லவ் மேரேஜா? உன்னைப் பார்த்தா லவ் பண்ற ஆள் மாதிரி தெரியலையே” ஆவலாகிவிட்டாள்…
“ம்ம், என் அத்தை பெண் தான், திருச்சில இருக்கா… காலேஜ் டைம்ல இருந்தே பேசிப்போம்… என்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு வீட்டில் ரகளைப் பண்ணி ஒருவழியா சாதிச்சிட்டா… சரியான வாயாடி… கல்யாணத்துக்கு அப்புறம் எப்படித்தான் அவளைநான் சமாளிப்பேன்னு தெரியலை…” சந்தோஷமாய்ச் சொன்னான்…
கல்யாண களை என்பது இது தானா? ஆண் பிள்ளைகளுக்கும் வருமா என்ன? எவ்வளவு பிரகாசம் அவன் முகத்தில், தன் வருங்கால மனைவியைப் பற்றிப் பேசும் போது! அகல்யாவுக்கும் சந்தோஷமாயிருந்தது. அங்கிருந்து வந்தவள் தன் இருக்கைக்குத் திரும்பும் முன் சூர்யாவிடம் சென்றாள்…
“சூர்யா நாம இரண்டு பேரும் கார்த்திக் கல்யாணத்துக்குத் திருச்சி போலாமா?”என்று கேட்க,
கார்த்திக்கு ஆட்களை நன்றாகச் சமாளிக்கத் தெரியும் என்பதைப் பதினோராயிரத்து எண்ணூத்தி தொன்னூத்தி இரண்டாவது தடவையாகச் சூர்யா ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
“ஓ போலாமே அகல்விளக்கு…” என்றவனை விநோதமாகப் பாரத்து, ‘வர வர எல்லாரும் அகிலன் மாதிரியே பேசுறீங்க’ நினைத்தபடி அன்றைய வேலைகளைத் தொடரலானாள்.
சூர்யாவுடன் தன் வாழ்க்கையை மீண்டும் தொடங்கிய அகல்யா, சீதாவிடம் பலமுறை தொலைப்பேசியில் பேசினாள், வீட்டுக்கும் அழைத்தாள். ஏனோ சீதா வரவேயில்லை. சூர்யா மூலம் மறுபடியும் அழைக்க வேண்டும், மனதில் குறித்துக்வைத்துக்கொண்டாள்.
கார்த்தித் திருமணத்திற்குச் செல்ல முடிவானதால், என்ன புடவை கட்டலாம் என்று தன் பட்டுப் புடவைகளை எல்லாம் பரப்பிவைத்து ஆராய்ந்து கொண்டிருந்தவளிடம் வந்த சூர்யா…
“என்ன நடக்கிறது இங்கே?’
தன் யோசனையைச் சொன்னவளிடம்,
“அகல்யா இதில் இருக்கிற ஒண்ணைத் தான் கட்டபோறேன்னு மட்டும் சொல்லாதே!” அவனைக் கேள்வியோடு பார்த்தவள்.
‘என் கிட்ட இது எல்லாம் தான் இருக்கு சூர்யா”என்றவளை உடனேயே கிளப்பிக் கொண்டு போய் மிக அற்புதமாய் ஒரு பட்டு சேலை வாங்கித்தந்தான். பிளவுஸ் இரண்டு தினங்களில் கிடைக்கும்படி ஒரு தையலகத்தில் கொடுத்த பின் அவன் அடுத்துச் சென்றது, நகைக்கடை.
கார்த்திக்கு ஏதும் அன்பளிப்பு வாங்கப் போகிறான் போல என்று இவள் எண்ணிக்கொண்டிருக்கையில், அவன் ‘ஆண்டிக்’ கலெக்ஷன்ஸையெல்லாம் அவளுக்கு வைத்துப் பார்க்க தொடங்கிவிட்டான்,
“என் கிட்ட நிறைய இருக்கு சூர்யா, இப்ப எதற்கு” என்று அவள் கேட்டதையெல்லாம் அவன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. ஒரு பெரிய ஆரம் அதற்கு ஏற்ப கம்மல், வளையல் எல்லாம் வாங்கித்தந்தான். விட்டால் ஒட்டியாணம் கூட வாங்கியிருப்பான் போல!
வீட்டுக்கு வரும் வழியில் அவளுக்குப் பூ… அகல்யா அவளின் நிலையிலேயே இல்லை. இவ்வளவு நாளும் பேச்சு அளவில் இருந்தது இன்று வேறு கட்டத்திற்குப் போகும் போல என்று சிறு சலனம் கூட அவள் மனதில் தோன்றியது. தான் எதை விரும்புகிறோம்? அவளுக்குத் தெளிவில்லை…
இரவு உணவை முடித்தபின் பாத்திரம் கழுவ, சமையலறை சுத்தம் செய்ய என்று மேலும் அவளுக்கு உதவினான்.
‘என்னடா என்னென்னவோ பண்றே?’
தூங்கச் செல்லும் முன் அவளை நெருங்கியவன், இவ்வளவு நாளும் அவர்கள் விட்டு வைத்திருந்த ஒரு பழக்கத்தை ஆரம்பித்தான்.
“குட்நைட் அகல்யா” என்றுவிட்டு, அவளின் முன்னெற்றியில் முத்தமிட்டுவிட்டுத் தூங்க சென்றுவிட்டான்.
இவ்வளவுக்குப் பிறகும் அகல்யாவுக்கு உறக்கம் வருமா?
அடுத்த நாள் காலை, வேண்டுமென்றே செய்தானோ என்று எண்ணும்படி இருந்தது அவனின் செயல்கள் எல்லாம். அது எங்கே, இது எங்கே என்று அவளை அறைக்குள் வரவழைத்துக் கொண்டேயிருந்தான்…
“சூர்யா உங்களுக்குத் தேவையான எல்லாம் இங்கே தான் இருக்கு, எதுக்கு என்னைச் சும்மா கூப்பிடுறீங்க, வேலையிருக்கு…” என்று சிணுங்கியவளிடம்…
“எனக்குத் தேவையானது எல்லாமே உன் கிட்ட தான் இருக்கு, அதுக்கு தான் நானும் ரொம்ப வருஷமா வெயிட்டிங்…”அவளைப் பார்த்து ஏக்கமாய் அவன் கூற…
“எனக்குக் கொஞ்சம் டைம்…” ஆரம்பித்தவளின் வாயை அடைப்பது போல்தன் ஒற்றை விரலை அவள் உதடுகளில் வைத்தவன், எதுவும் பேசாதே என்பது போல் தலையசைத்தான்…
தயக்கமாகப் பார்த்தவளை இவனும் சளைக்காமல் பார்த்தபடியிருந்தான்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்துக் கொண்டன.
கண் தன் வேலையை ஆரம்பிக்க, அவனின் கையும் தனக்கு உரிமையானவள் என்று அவளை வளைத்துக் கொள்ள… அதற்குமேல் பொறுமையில்லாத சூர்யா அவள் உதடுகளைச் சிறைசெய்தான்…
முதலில் தயங்கி, பின் அகல்யாவும் ஒத்துழைத்தாள்… தான் தொலைத்த எல்லாமே மறுபடியும் தனக்குக் கிடைத்தது… எத்தனை வருடப் பிரிவு?
அன்று இருவருமே ‘வர்க்ஃப்ரம்ஹோம்!’
சீதாவின் பாராமுகம் அகல்யாவை மிகவும் நோகடித்தது.
சீதாவும் முன்பு சில முறை, அவர்கள் பிரிவின் சமயம், அகல்யாவுக்குப் போனில் பேசிப்பார்த்தாள் தான். அகல்யா சமாதானமாய்ப் போகத் தயார் இல்லாத நேரம் அது… பிடிக்குடுக்காமல் அகல்யா இருக்கவும், நாளடைவில் சீதாவும் அவளிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள்.
அகல்யா இப்போது அவர்களின் தோழமையைப் புதுப்பிக்கும் முயற்சியாக மறுபடி மறுபடி சீதாவை தொடர்புகொண்டாள்…
அடுத்த நாள் வேலையிலிருந்து திரும்பும்போது, சூர்யாவிடம் சீதா வீட்டுக்கு போலாமா என்று கேட்டவளை, நமுட்டுச் சிரிப்புடன், “எனக்கு இப்போ நம்ம வீட்டுக்கு மட்டும் தான் போகவேண்டும் போல இருக்கு” என்றான்…
ஆனால் அவனிடம் கெஞ்சி கூத்தாடி சீதா வீட்டுக்கு அழைத்துப் போனாள்…
அங்கு யாரும் இல்லை போல என்றெண்ணிக் கொண்டே அழைப்பு மணியை அடிக்க, நீண்ட நேரம் களித்துக் கதவு திறந்தது சீதா தான்…
சீதாவா இது என்று சந்தேகப்படும் அளவில், மெலிந்து ஜீவனே இல்லாமல் இருந்தாள்… அகல்யாவும் சூர்யாவும், என்ன ஆயிற்று இவளுக்கு என்றபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அகல்யா சீதாவின் கையைப் பற்றி அழைத்துச் சென்றவள், “நீங்க ஒரு மூன்று நாள் எங்க கூட வந்து தங்குறீங்க…” என்றுவிட்டு அவளின் உடைகளுடன் வந்தாள்…
“யாரிடமும் சொல்லாமல் எப்படிப் போறது” என்று சூர்யா வினவ, “அது எல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம்”என்ற அகல்யாவை முறைத்துக் கொண்டே, “இப்படிச் சொல்லாமல் போறது தப்பு, அது சத்தியமா உனக்குப் புரியாது… நம்ம வீட்டுக்குத் தானே போகப் போறோம், சீதாவுடைய அத்தை கிட்ட சொல்லிட்டே போகலாம். அவர்கள் வரட்டும்…” அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து காத்திருந்தான்…
சீதா மாமியார், ஒரு மணி நேரத்தில் வந்தார், அவளிடம் இரண்டு நாள் சீதாவை அழைத்துச் செல்கிறோம் என்று விட்டு, மாதவன் போன் செய்தால் சொல்லிவிடுமாறு கூறிவிட்டு, தன் தங்கையுடன் கிளம்பினான்… அந்த அம்மாள் ஏதோ அன்று எந்தத் தடையும் சொல்லவில்லை…
வீடு வந்ததும் சீதா, தான் கீழே ராஜத்தோடு தங்கிக்கொள்கிறேன் என்றுவிட, நாளைக் காலை எங்களுடன் தான் சாப்பிட வேண்டும் என்ற சொல்லிவிட்டுத் தங்கள் கூட்டுக்குள் திரும்பினாள் அகல்யா.
அவளது மனமும் பழைய நினைவுகளை நோக்கி நகர்ந்தது.
நன்றி சசி
Hi super ud oruvaliya serthu vaitaithu vittarkal .