Ani Shiva’s Agalya 15

Ani Shiva’s Agalya 15

15

அகல்யாவுக்கு, காலை ஆரம்பித்த வேலை முடிந்தபாடில்லை, கீரைப் பொங்கல், சாம்பார், வடை என்று அசத்தியவள், எல்லாமும் சமைத்து முடித்துத் திரும்ப அங்குச் சூர்யா அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்…

முன்தினம் இவன் செய்த வேலை, தான் காலையில் எழுவதிலிருந்து அனைத்தையும் தாமதப்படுத்தி விட்டது… அதனால் இப்போது அவனிடம் பதிலுக்கு ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு நகரப்போனவளை…

“எப்படி என்னை விட்டுவிட்டு இவ்ளோ நாள் இருந்த அகல்யா?”அவன் கேட்க…

அவளுக்கும் சட்டென்று முகம் மாற அவனைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றாள், “நீ இல்லாமல் நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? உன்னை மறக்கவும் முடியாமல் உன் கூட வாழவும் முடியாமல்… நீ என்னைப் பத்தி நினைத்துப் பார்த்தியா?”சூர்யா தொடர்ந்தான்…

வந்ததில் இருந்து அவனிடம் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல என்பதை யோசித்து வைத்ததெல்லாம், இப்போது கைகொடுக்கவில்லை…

அவள் கண்களை ஊடுருவியபடி, நிதானமாய்க் கேட்டவனை, எதிர்கொள்ள முடியவில்லை அவளால்…

சட்டென்று அவனை அணைத்துக் கொண்டவள், “நான் செஞ்சது தப்பு தான் சூர்யா, நான் உங்களை விட்டுவிட்டுப் போயிருக்கக் கூடாது…”

விக்கி விக்கி அழுதவளை அவன் என்ன சொல்ல? அதற்கு மேல் அவன் எதுவும் தோண்டி துருவவில்லை… அவள் அழுகையை நிறுத்தும் வரை காத்திருந்தான்… “உனக்கு என்ன பிரச்சனைனாலும் என் கிட்ட சொல்லு, இந்த மாதிரி முட்டாள்தனம் இன்னொரு தடவை செஞ்சிடாதே…”

அவன் தான் நம்பவில்லையே, அதைச் சொல்லவில்லை அவள் அவனிடம்!

நிசப்தம்…

அவன் கேட்டதிலும், இவள் அதற்கு அழுததிலும் சற்றுப் பாரம் குறைந்தது போல உணர்ந்தனர் இருவரும்…

அவள் விலக நினைக்கும் போதெல்லாம், அணைப்பை மேலும் இறுக்கிக் கொண்டவனை, “சீதா வருவார்கள் இப்போ…”என்று கூறி அப்போதைக்குத் தன்னை விடுவித்துக் கொண்டாள்.

அதன் பின் சீதா வந்தாள், கலகலப்பாகப் பேசியபடி காலை உணவருந்தினர் மூவரும்… சூர்யா அன்று ஆபிஸ் சென்றதும், அகல்யா சீதாவுடன் வெளியே கிளம்பினாள்.

நெல்லை டவுனை வலம் வந்தனர் இரு பெண்களும். தேவை என்பதற்குச் சாமான் வாங்குவதெல்லாம் அந்தக் காலத்தோடு போய், இப்போது பார்ப்பது எல்லாமே தேவை தான் என்பதைப் போல் வாங்கிக் குவித்தனர் அவ்விருவரும்…

வீட்டுக்கு வரும் வழியில் அகல்யா “சீதா ஒரு விஷயத்துக்காக உங்களைக் கேட்காமல் முடிவு எடுத்திருக்கிறேன், நீங்க சம்மதிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்…” சீதாவுக்கு ஏற்கனவே புரிந்ததோ என்னவோ, அவளை அகல்யா அழைத்து வந்ததில் ஏதும் காரணம் இருக்குமென்று நினைத்திருந்தாள்… அது உண்மை தான் போல!

அமைதியாய் இருந்த சீதாவை, சம்மதித்ததாக எடுத்துக் கொண்டு அந்தப் புகழ்பெற்ற அந்தப் பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் நம் நாயகி…

நம் வாழ்க்கை பாதையில் நம்பிக்கையை நமக்கு விதைப்பவர்கள் பலர், அனேகமாய் அனைவருக்குமே பெற்றோர் தன்னம்பிக்கை வளர்த்துவிடுவார்கள், சிலருக்கு ஆசிரியர், சிலருக்கு நண்பர்கள்… வெகு சிலருக்கு மருத்துவர்…

அப்படித் தான் அன்று சீதாவுக்கு அமைந்து போனது… மருத்துவர் கூறிய எல்லா டெஸ்டுகளும் சீதாவுக்குச் செய்தனர்… சீதாவின் பிரச்சனையைச் சில மாதங்களில் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையை அந்தப் பெண் மருத்துவர் அவளிடம் விதைத்ததும், சீதா கண் கலங்க அகல்யாவின் கையைப் பற்றிக்கொண்டாள்… மருத்துவரை கலந்தாலோசித்த பின் வீடு திரும்பினர்.

“ஏன் சீதா, இந்தச் சின்னப் பிரச்சனையை எப்போவோ கவனிச்சிருந்தா, இந்நேரம் ஒரு குட்டி சீதா உங்கள் கையில் இருந்திருப்பாளே? அத்தம்மா கிட்டச் சொல்லியிருந்தாலும் போதுமே, ஏன் செய்யலை…” அகல்யா தன் மனதைப் பூட்ட முடியாமல் கேட்டுவிட்டாள்.

ராஜம் ஏற்கனவே அழைத்துச் சென்ற மருத்துவர், பிரச்சனை பற்றிப் பெரிதாக எதுவும் கூறவில்லையாம்… மேலும் அங்கே அடிக்கடி செல்ல சீதாவின் வீட்டில் ஒப்பவில்லை…

சீதா தன் மாமியாரின் மூடநம்பிக்கைகளையெல்லாம் சொன்னாள்… என்ன தான் அறிவியல் முன்னேற்றம் நம்மிடையே இருந்தாலும், மனிதனாய் பார்த்து மாறாவிட்டால் சில விஷயங்களைச் சாதிப்பது சிரமம் தானே…

சீதாவின் மாமியார் படு கறார் பேர்வழி. தன் குடும்பத்துக்கு வாரிசு வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவள், அது கடவுள் விரும்பும் சமயம் தானாகவே நடக்கவேண்டும், என்பதில்அப்படி ஒரு முரட்டு நம்பிக்கை… அதுமட்டுமில்லாமல், சீதாவை ஆளப் பிறந்தவள் போல!

மருமகள் என்ன நிறத்தில் புடவை கட்டவேண்டும் என்பதைக் கூட அவர் தான் தீர்மானிப்பாராம் (அப்படின்னா, உங்க அம்மாக்கு பத்து மடங்கு ஜாஸ்தினு சொல்லுங்க, மனதில் சொல்லிக் கொண்டாள் அகல்யா…)எங்க இருந்து மா வரீங்க நீங்க எல்லாம்!

தனக்கு இஷ்டமில்லை என்றாலும் அதை எல்லாம் கேட்டு தான் ஆக வேண்டிய சூழ்நிலை என்று சீதாவும் அடங்கிய நிலை தான் அவளை இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது…

அகல்யாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை… ராஜம் செய்தது எல்லாம் பிரச்சனையே இல்லையோ?

சீதா தான் பாவம், அவளை இனி என்ன சொல்ல? ஒன்று சீதா போல் அடங்கிப் போகும் பெண்கள் இருப்பர், இல்லையேல் யாரும் தன்னை அடிமைப்படுத்த வேண்டாம் என்று தனித்து வாழ்க்கையை எதிர்நோக்கும் பெண்கள் ஒரு சிலர் இருப்பர். தான் இதில் எந்தப் பிரிவு என்பதை அகல்யா யோசிக்கவில்லை…

இப்போது தான் மீட்டுக் கொண்டிருக்கும் வாழ்வை யாருடைய குறுக்கீடும் இல்லாமல், யாரையும் கஷ்டப்படுத்தாமல் வாழ வேண்டும் என்று எண்ணியபடி சீதாவின் பிரச்சனையை அப்போதைக்கு ஒதுக்கினாள்…

மூன்று நாள் சீதாவின் வரவைக் காரணம் சொல்லி, ஆபிஸ் மட்டம் போட்டாயிற்று… சூர்யாவும்அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான்… மூன்றாம் நாள் முடிவில் அவளே சென்று சீதாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு வந்தாள்… மருந்து மாத்திரை பற்றி யாரிடமும் வாயைத் திறக்க கூடாது என்ற சத்தியத்துடன்…

இன்னும் பத்து நாளில் திருச்சி பயணம் என்று இருக்க நிலையில், அடுத்து சில நாட்களில் ஜெயந்தும் வந்தான், அவன் மனைவியுடன்…

சுவப்னா கோதுமை நிறத்தில், சாமி படங்களில் பார்க்கும் அம்பிகையைப் போல் லட்சணமாயிருந்தாள். அழகை விட அவளின் பேச்சை கேட்டதும் தான் விளங்கியது, ஜெயந்த் அவளிடம் வீழ்ந்ததில் ஆச்சரியமில்லை என்பது… அவர்கள் வீட்டில் தங்கியிருந்த அவர்களை அகல்யா நன்றாக உபசரித்தாள்…

ஜெயந்த் மட்டும் அடிக்கடி கீழே சென்று வந்தான், அவன் அப்படிச் செல்லும் சமயம் எல்லாம் ஒரே வாக்குவாதம் போல் சத்தங்கள் தான் கேட்டபடி இருந்தது… சமாதானம் ஆனது போலில்லை… பெற்றவர்கள் பாவம் தான். கட்டிய கோட்டை தகர்வது என்பது அவர்களுக்கும் வேதனை தானே?

அதுவும் ஜெயந்த் இப்படி எல்லாம் சொல்லாமல் செய்வான் என்பதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சூர்யாவுக்கும் இந்த விஷயத்தில் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. சூர்யாவுக்குத் தம்பி மேல் கோபம் தான், ஆனால் இக்காலத்தில் இதெல்லாம் சகஜம் என்று மனதைத் தேற்றிக்கொண்டான்.

பெற்றவர்களோ தம்பியோ, யார் பக்கமும் அவன் சாயவும் இல்லை. ஜெயந்தின் மனைவி முன் தன் தம்பி மேல் தனக்கு இருந்த மனவருத்தத்தையும் காட்டிக்கொள்ளவில்லை.

சீதாவும் சுவப்னாவை பார்க்க வந்திருந்தாள்… சென்னையில் சிறிது காலம் இருந்ததால், தமிழ் நன்றாகவே பேசினாள் சுவப்னா…

சீதாவும் அகல்யாவிடம் சுவப்னா பற்றி நல்ல விதமாகப் பேச, அவர்கள் முவருக்கும் ஒத்துபோகும் என்றே தோன்றியது…

நான்கு நாள் அவர்கள் இருந்த சமயம் படு சுவாரியஸமாய்ப் போனது. கன்னியாகுமரி, பாபநாசம், மணிமுத்தாறு என்று ஊரைச் சுற்றி பார்த்தனர்.

“ஜெயந்த் கம்பெனி பெரிசா ஆயிடிச்சு, நீயும் இருந்தா எனக்கு உதவியா இருக்கும், இங்கேயே வந்திடுறியா?”சூர்யா தம்பியிடம் வினவ

“இல்லை சூர்யா, அவ சென்னையிலேயே இருக்க முடியாதென்று சொல்லிட்டா, அதுக்குத் தான் நான் மும்பை போனதே. அங்க தான் நாங்க இருப்போம் இனி…”

ஜெயந் தெளிவாய்ச் சொன்னான்… சீதாவும் இதைக் கேட்டபடியிருக்க, சூர்யா அசந்து போனான்…

தன் பெற்றோரை விட்டு தனியே ஒரு இட மாறுதலை ஊக்குவிக்க அவன் என்றைக்கும் எண்ணியது இல்லையே, அதன் காரணமாய் அகல்யா தன்னை விட்டுப் போன போதும் கூட! இவனானால் பெற்றோர் பற்றியெல்லாம் சிந்தனை இல்லாமல் சொல்கிறானே!

இன்னொரு புறம் ராஜமிற்குத் தாள முடியவில்லை. தான் வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் எல்லாம், தன் மருமகளுக்கு மட்டும் உறவா? ராமானுஜமிடம் கொட்டித் தீர்த்தாள்,

“இவ என் நிம்மதியைக் கெடுக்கவே திரும்பி வந்திருக்கா! ஜெயந்த் குடும்பத்தைச் சீராட்ட இவ யார்?”

ராமானுஜம் தன் மனைவியைத் தற்சமயம் அடக்க முடியாது என்று பேசவிட்டுவிட்டு, தான் சொல்ல வேண்டியதை தன் மனதில் வரிசைப் படுத்தினார்.

“பேசிமுடிச்சிட்டியா? இதில் எல்லாம் இவ்ளோ சிந்தனையைச் செலுத்துறவ, நீ பெத்த பொண்ணு சந்தோஷமா இருக்காளான்னு பார்த்தியா? நேற்று வந்தவன்னு சொன்னியே, அவ தான் சீதாவுடைய குழந்தை பிரச்சனைக்கு வழி கண்டுபிடிச்சிருக்கா!” ஸ்ருதி ஏறியது அவர் குரலில்…

ராஜம் அடங்குவது போல், “நானும் தானேங்க சீதாவைகூப்பிட்டுப் போயிருக்கேன். டாக்டரும் ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு தானே சொன்னாங்க, “

“நடுவில் பேசாதே. எங்கேயோ இருந்து வந்த பொண்ணுக்கு சீதா மேல் இவ்ளோ அக்கறை இருக்கும் போதே உனக்குத் தெரியலையா? இவ தான் நம்ம பையனை நம்ம கிட்ட இருந்து பிரிக்கிறவளா?” நடு மண்டையில் நச்சென்று குட்டியது போல் சொன்னார்…

ராஜமுக்கு உரைத்தாலும், வெளியே எதுவும் காட்டிக்கொள்ளவில்லை.

ராமானுஜம் தொடர்ந்தார், “நீ செய்தது எல்லாம் போதும். இது தப்பு. அகல்யாவுக்கும் சூர்யாவுக்கும் ஏதோ நல்ல நேரம், நம்ம பையன் வேணும்னு அவளும் வந்திருக்கா, இவனும் பழசை எல்லாம் மறந்து விட்டு வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கான்… இதில் ஏதும் குழப்பம் பண்ண நினைச்ச, நான் மனுஷனா இருக்க மாட்டேன்.”

அவர் பார்வையைச் சந்திக்கும் தைரியம் ராஜமிற்கு இப்போது இல்லை…

வெளிப்படையாக இருப்பவர்களை விட வேஷம் போடுபவர்களுக்கு இந்த உலகில் மதிப்பு அதிகம். அகல்யா வெளிப்படையாக இருந்து இதுநாள் வரை இழந்தது அதிகமாயிருந்தாலும், இப்போது அவளின் அதே தன்மை அவளை மற்றவர்களுக்கு உணரவும் வைத்திருக்கிறது, சிறிது தாமதமாக…

சீதா, ஜெயந்த் இப்போது ராமானுஜமும். ராஜம் கொஞ்சம் அசைந்திருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ள இஷ்டமில்லை.

அகல்யாவுக்கு இந்த நல்ல புத்தி லேட்டாக வந்திருந்தாலும், லேட்டஸ்டாக அவளுக்கு நில நன்மைகளைச் செய்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் யார் யார் கட்சி தாவுகிறார்கள் என்று…

கார்த்தித் திருமணத்திற்காகத் திருச்சி பயணத்தைத் தொடர்ந்தனர் சூர்யா தம்பதிகள். டிரைவரை வேண்டாம் என்று விட்டு சூர்யாவே வண்டியெடுத்தான்…

ஐந்து மணிநேர பயணம், மேலும் இரண்டு மணிநேரம் நீடித்தது சூர்யாவின் செயலால்… அவன் சாலையைப் பார்த்து ஓட்டினால் தானே? அகல்யா கூட, தான் பின் சீட்டுக்குப் போவதாகச் சொல்லிப்பார்த்தாள்,

“நான் என்ன உனக்கு டிரைவரா, ஒழுங்கா இங்கேயே உட்காரு” என்று சொல்லிவிட்டு தன் பணியைச் செவ்வனே செய்தான்! ஒரு வழியாக அவர்கள் திருச்சியில் தங்கள் ஹோட்டல் அறைக்கு வந்து சேர இரவானது…

அடுத்த நாள் காலையில் முகூர்த்தம்… அகல்யாவுக்குச் சூர்யா வாங்கித் தந்திருந்த பட்டுப்புடவை, நகைகள் அம்சமாய்ப் பொருந்தியது… சூர்யாவை பத்தி சொல்ல வேண்டுமா,

“புடவை சூப்பரா கட்டுற அகல்யா… கிட்ட வா இன்னும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்றேன்”என்று நெருங்க…

“ஒண்ணும் வேண்டாம், நான் கட்டின வரை எனக்குப் போதும்… தங்கள் உதவிக்கு என் நன்றி… இப்போது கிளம்பலாமா?” கையை நீட்டி மிரட்டும் படி சொன்ன தன் மனைவியின் பேச்சை கேட்டு நமுட்டு சிரிப்புடன் தயாரானான் சூர்யா.

கார்த்தித் திருமணம், அவர்கள் உள்ளே சென்றதும் மேடையில் இருந்தவன் அவர்களை எழுந்து நின்று வரவேற்றான்…

அவன் தாலி கட்டி முடித்ததும், மேடையேறிய தன் நண்பர்கள் இருவரையும் கமலவேணிக்கு அறிமுகப்படுத்தினான்… அகல்யாவை தன் உயிர்த் தோழி என்று சொல்ல, கமலவேணி அகல்யாவின் கைபற்றி, “நீங்க வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி… உங்களைப் பத்தி கார்த்தி என்கிட்ட நிறையச் சொல்லியிருக்கிறார்”என்றாள்.

கார்த்திக்கு அவர்கள் வந்ததில் மகிழ்ச்சி என்பது அப்பட்டமாய் அவன் முகத்திலேயே தெரிந்தது…

சூர்யாவும் அகல்யாவும் திருமண வீட்டிலிருந்து கிளம்பியதும், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் என்று சுற்றி பார்த்து விட்டு ஊர் போய்ச் சேர்ந்தனர்.

அடுத்து இரண்டு வாரம் நிறுவனத்தில் கார்த்தி இல்லாததால் அவன் வேலைகள் சிலதை அகல்யாவுக்கு ஒதுக்கிவிட்டான், சூர்யா…

அகல்யா தானும் சளைத்தவளில்லை என்பதை நிறைய இடங்களில் தான் செய்யும் பணியின் மூலம் நிரூபித்துவிட்டாள்…

ஒரு சிலதை சந்தேகங்கள் சூர்யாவிடம் கேட்டும் வேலைகளை முடித்தாள்…

இதற்கிடையில் ஒரு நாள், சீதா வந்தாள்… தன் கணவருடன் தானும் சென்று இருக்கப்போவதாகவும், மாமியாரிடம் பேசி சரிக்கட்டி விட்டேன் என்றும் மிக மகிழ்வுடன் சொன்னாள்… எப்படிச் சரிக்கட்டினாள் என்று அகல்யா வினவவில்லை, எப்படியோ சரி கட்டினால் சரிதான் என்று விட்டுவிட்டாள்… அந்த விஷயத்தை, சூர்யா வந்ததும் அவனிடம் சொல்ல,

“ம்ம் எல்லாப் பொண்ணுங்களும் புருஷன் மேல் எவ்ளோ அக்கறையா இருக்காங்க! எனக்கும் ஒருத்தி இருக்காளே!?”

வம்பு செய்வதே இவனுக்கு வேலை என்று பேசாமல் இருந்தவளை…

மேலும் சீண்டும்படி ஏதேதோ சொன்னான்… காது கேட்காததைப் போல் “நான் தூங்க போறேன்” என்று கிளம்பியவளின் இடுப்பை பற்றித் தூக்கியவன்,

“என்ன டீ, நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்…” மீசைக் குறுகுறுக்க அவளை ஏதேதோ செய்தவனிடம், தன்னை விடுவித்துக்கொண்டு ஓடப்பார்த்தாள்…

அவன் விடுவானா? மறுபடியும் சிறைபற்றியவனிடம்…

“விடுங்க சூர்யா, என்ன வேலை இது? சத்தம் கேட்கும்… அத்தம்மா கீழேயிருந்து திட்ட போறாங்க…”என்றவளை விட்டவன் அடுத்து தன் சொற்பொழிவை ஆரம்பித்தான்…

“அகல்யா இன்னும் எவ்ளோ நாளைக்குத் தான் எங்க அம்மாகிட்ட முகம் திருப்புவே? நாம தான் இனி அவங்களைக் கவனிக்கிற நிலையில் இருக்கோம், அதனால் அவங்க கிட்ட ஒழுங்கா பேசி வச்சியிரு…”கனிவாகவே சொல்ல

அகல்யாவுக்கு இதைக் கேட்டதில் கோபமில்லை. அவன் திடீரென்று சொன்னது போலவும் இல்லை… யோசித்திருப்பான், அதிலும் சரியாகத் தானே சொல்கிறான்…

இந்தப் பகைமையை இன்னும் எவ்வளவு காலம் வளர்க்க முடியும்? தான் சிறிது இறங்கித் தான் போகவேண்டும்… அப்படிப் போனால் தான் என்ன? ராஜமை வழிக்குக் கொண்டு வரும் வேலையைச் செயல்படுத்துவோம்…

எவ்வளவோ செஞ்சிட்டோம், இதைச் செய்ய மாட்டோமா… ஸ்டார்ட் மிஷன் ‘ஆர்’… என்று மனதில் குறித்துக்கொண்டாள்… மிஷன் இம்பாஸிபில் இது என்று மனசாட்சி சொல்லியதை தடுக்க முடியவில்லை…

இரவு படுக்கையில் ஓய்வாகச் சரிந்த போது அவளது மனம் சொல்லாமல் கொள்ளாமல் பழைய நினைவுகளை அசைபோட துவங்கியது…

2 thoughts on “Ani Shiva’s Agalya 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!