Ani Shiva’s Agalya 16

16

அகல்யா திரும்பிவிட்டாள் ஜப்பானிலிருந்து. ஒரு மாதம் இருந்து விட்டு வந்ததற்கே மேலும் அழகானதை போலிருந்தாள்… சூர்யாவிடம் அங்கேயே இருக்கலாமா என்று ஆரம்பித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சில நாள் சோகமாய் இருந்தவள் பின்னர், சரி பரவாயில்லை என்று அதை அதன்பிறகு அதை மறந்தும் விட்டாள்…

சூர்யா இங்கே ஊரில் இல்லாத சமயம் அவன் நிறுவனத்தில் சில பிரச்சனைகள். அவன் தான் வேலை என்றால் எதைப் பற்றியும் எண்ணமில்லாமல் சுழல்பவனாயிற்றே… ஊருக்குத் திரும்பியதிலிருந்து தன் வேலையில் பிசியாகிவிட்டான்… ஆதலால் இப்போதெல்லாம் பணி முடிந்து வீட்டுக்கு எப்போது திரும்புகிறான் என்றே அகல்யாவுக்கு தெரிவதில்லை.

அவள் அவன் வரவுக்காக இரவு காத்திருந்தால், “ஏன் கண்முழிக்கிற? அவன் வந்தா போன் பண்ணுவான் அப்புறம் கதவை திறந்தா போதும்…”என்னும் ராஜமிடம் என்ன பதில் சொல்ல!

அதற்கு மேலும் அவள் தூங்க செல்லாமல் இருந்தால், ராஜம் உருட்டும் பாத்திரங்களின் சத்தம் அதிகமாகிவிடும். எதற்கு இந்த வம்பு என்று அகல்யாவும் தன் அறைக்குத் தூங்க சென்றுவிடுவாள்.

நாட்கள் செல்ல செல்ல அவனைக் காலையிலும் காண்பது அரிதாயிற்று, அவனுடன் ஒரு மணிநேரம் கிடைத்தாலே ஜாஸ்தி தான். அந்த நேரத்திலும் பேசினால் முத்து உதிர்ந்துவிடும் என்பது போல் பேசுவான்.

அவளுக்குப் புரிந்துவிடும், அவன் மூளை வேறு எதையோ சிந்தித்தபடி இருக்கிறது என்று. ஆனாலும் ஜப்பானில் அவளிடம் எவ்வளவு ஆசையாகப் பேசினான், எப்படியெல்லாம் இருந்தோம் என்பதை அவள் மனம் அசைபோட்டுக் கொண்டே ஏங்கி போய்க் கிடந்தது.

வாழ்க்கையில் உணவுக்கும், இருப்பிடத்துக்குமே பிரச்சனை என்றிருப்பவர்கள் ஏராளம், அவர்கள் அடுத்த வேளை சாப்பிட என்ன செய்யலாம், ஏது செய்யலாம் என்ற சிந்தனையிலேயே தங்களைத் தொலைத்திருப்பர்… புருஷன் தன்னிடம் இன்று பேசவில்லை கொஞ்சவில்லை என்று நினைத்துப் பார்க்க கூட அவர்களில் சிலருக்கு நேரம் கிடையாது, அதெல்லாம் பெரிய விஷயமும் இல்லை அங்கு…

ஆனால் அகல்யா போன்றோருக்கு எல்லாமே இருக்கிறது. அவளை எல்லாரும் தாங்க தான் செய்தனர், ராஜமை தவிர… ஆனால் இப்போது தன் கணவனின் வேலை முக்கியம். தன்னை விட முக்கியம், அவன் அதைக் கவனமுடன் செய்யட்டும் என்ற எண்ணம் ஏன் அவளுக்கில்லை?

அவன் பிசி என்பதால் சற்று விடலாம் என்ற யோசனையில்லாமல் தன்னைக் கவனிக்கவில்லை என்ற குறையை மட்டும் பெரியதாக நினைத்து தன் வாழ்க்கையில் நடக்கப் போகும் எல்லாச் சிக்கல்களுக்கும் அழகான, உறுதியான ஒரு அவசியமில்லாத அடித்தளத்தைப் போட்டுவிட்டாள் அகல்யா…

இதனிடையே அகிலனின் வாழ்க்கை வண்ணமயமாயானதால், பூவிழி அகிலன் காதல் தொல்லையும் நாளுக்கு நாள் பெருகியது.

அவன் ஒருநாளில் பேசும் வார்த்தைகளில் முக்கால்வாசி பூவிழி பெயர் தான் இடம்பிடித்திருக்கும். அன்று ஒரு நாள் அகல்யா, மஹா, பூவிழி அவர்களின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பூவிழிக்கு மனசெல்லாம் எங்கேயோ இருந்ததை அகல்யா கண்டுகொண்டாள். கடிகாரத்தைப் பார்த்தபடியிருந்த பூவிழியை ஒரு ஓரக்கண்ணால் இவளும் ரசித்தாள்…

அகிலனை எதிர்பார்க்கிறாளா…

வந்தான் அகிலன்.

வீட்டினுள் நுழைந்தவன் பூவிழி மடியில் அமராத குறையாக அவளை நெருங்கி அமர்ந்து, அவள் தோளில் கைபோட்டுக் கொண்டான்.

ஆயிரம் வால்ட் பல்ப் எரிவதை அகல்யா அப்போது தான் பார்க்கிறாள், பூவிழியின் முகத்தில்… அடடடா!

மஹா உடனே காபி போடுகிறேன் என்று கிட்சனுக்குள் நழுவிக் கொண்டாள். தன் மனைவியைப் பார்ப்பதிலேயே மூழ்கிபோனான் அகிலன்…

நமது அமுக்குணியா இது என்று அகல்யாவே எண்ணும்படி அவனுக்குச் சற்றும் சளைக்காத பார்வை பார்த்தாள் பூவிழி…

அகிலன் தான் வாங்கி வந்திருந்த பூவை பூவிழியின் தலையில் வைத்துவிட்டு தன் பார்வை ஜாலத்தை மேலும் தொடர்ந்தான்…

அகல்யாவுக்கு இப்போது ஆத்திரம் தாங்கவில்லை,

‘டேய் அந்தப் பூ மாட்டார் இன்னுமா ஃபாலோ பண்றே? தங்கச்சிக்கு முன்னாடி என்னடா இது?’

நினைத்தாளே தவிரப் பார்வை அவர்களை விட்டு விலகவில்லை. பூவிழியை இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க அவ்வளவு இன்பம் அகல்யாவுக்கு.

‘நீயா டீ மயக்கம் போட்டு விழுந்தே?’

அகிலன் எதேச்சையாக அகல்யாவை திரும்பிப் பார்த்தவன்,

“பூவிழி இங்கே கொசுத்தொல்லை ஜாஸ்தியா இருக்கு, நாம் வேற இடத்துக்குப் போலாமா?” என்று எழுந்துவிட்டு அவன் மனைவியைக் கேட்க, அவளும் பூம் பூம் மாடு போல் தலையாட்டிவிட்டு அவன் பின்னோடு ஒற்றிக்கொண்டு இடத்தைக் காலி செய்தாள்…

அடப்பாவிகளா! உங்களைச் சேர்த்து வச்ச நான் கொசுவா!

நீயெல்லாம் நல்லா வருவே டா…

அகல்யாவுக்கு அதற்கு மேல் அவள் வீட்டுக்குச் சென்றால் தேவலை, பேச்சுத் துணைக்கு ராஜமாவது (!) இருப்பாள் என்று கிளம்பிவிட்டாள்… அன்று பார்த்து சூர்யாவும் எட்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவதாகப் போன் செய்திருந்தான். அங்குச் சென்றதும் அவனுக்காக வாசலில் நடைபயின்றபடி காத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் வந்த ராஜம்…

“ஜப்பான்லயே இருக்கலாமென்று சொன்னியாமே. ஏன் எங்கள் பையனை எங்க கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிற? இங்க உனக்கு என்ன குறை? நல்லவேளை அவன் ஒத்துக்கலை. இதை மாதிரி எல்லாம் அவன் கிட்ட சொல்றதை முதலில் நிறுத்து”என்று மிரட்டிவிட்டுச் சென்றாள்.

அகல்யாவுக்கு ராஜம் சொன்னது எல்லாம் மூளைக்குள் ஏறவே வெகு நேரமானது.

இவளுக்கு எப்படித் தெரிந்தது? சூர்யாவிடம் தானே சொன்னோம்? அவன் தான் சொல்லியிருப்பானோ? சொன்னதில் கூடப் பிரச்சனை இல்லை, ஆனால் தன்னிடமே பேச நேரமில்லாதவன் எப்போது தன் அன்னையிடம் பேசுவான்? பேசுகிறானா என்ன? எப்போது? சிந்தித்தபடியே நடையைத் தொடர்ந்தாள்.

சூர்யா திரும்பினான்.

அவனைச் சாப்பிட வரச் சொல்லி இவள் முதலில் சென்று அவர்கள் இருவருக்கும் சாப்பிடுவதற்காக எல்லாம் எடுத்து வைத்தபடியிருந்தாள்… அங்கு வந்த ராஜம், “அவன்மட்டும் முதலில் சாப்பிடட்டுமே”என்று இரண்டாவதாக அவள் எடுத்து வைத்த தட்டை பார்த்தபடிசொன்னாள்.

இவளுக்கு ஏன் இந்த வம்பு என்று தோன்ற,

“எனக்கும் பசிக்கிது” என்றுவிட்டுச் செய்துகொண்டிருந்த வேலைகளைத் தொடர்ந்தாள் அகல்யா… சூர்யா வந்ததும் அவனுக்குப் பரிமாறியவள், அதன் பிறகு தனக்கும் எடுத்து வைக்க முனைய, ராஜம் சூர்யாவிடம்,

“அந்த ஆல்பம் கேட்டேனே பா, இன்னும் தரலையே!” என்று இழுக்க… அவன் அகல்யாவிடம், அம்மா ஒரு வாரமாய்த் தன்னிடம் கேட்பதாகவும் தங்கள் அறையிலிருந்து இப்போது எடுத்து வருமாறு கூறினான்… அவள் என்ன சொல்ல?

அகல்யா ராஜமை பார்த்தபடி செல்ல, ராஜமுக்கு தான் சாதித்து விட்டதைப் போல் ஒரு பெருமை… ஆல்பமை அறை முழுவதும் தேடி பார்த்தவளுக்கு, ஒன்றும் கிடைக்கவில்லை…

தேடுவதிலேயே ஒரு அரைமணி நேரமும் சென்றிருக்கும். கீழே வந்து பார்க்க சூர்யா சாப்பிட்டே முடித்திருந்தான்… அவனிடம் கிடைக்கவில்லை என்றுவிட்டாள்… நீண்ட நாளுக்குப் பிறகு இன்று தன் கணவனோடு சேர்ந்து உணவருந்தலாம் என்றிருந்தவளுக்கு அது நடக்காமல் போனது எரிச்சலானது…

தூங்கலாம் என்று தங்கள் அறைக்குச் சென்றவள், அவன் ஏதோ வாசித்தபடியிருந்ததைப் பார்த்து, பால்கனியில் போய் நின்றுகொண்டாள்… ஏனோ ஒரு வெறுமை… தன்னால் ராஜமின் இந்த ஆட்டத்தைத் தாங்க முடியுமா! கண் எல்லாம் கலங்க, இருட்டை வெறித்துப் பார்த்திருந்தவளை, பின்னாலிருந்து அணைத்தவன், “என்னை அங்க தனியா விட்டுவிட்டு இங்கே என்னடி வேடிக்கை?” முத்தமிட்டான்…

அது என்ன அவன் அணைப்புக்கும், இந்த முத்தத்துக்கும் அவ்வளவு வலிமை? அவள் மனக்கலக்கம் எல்லாம் கரைந்தது போல ஒரு மாயை… அவன்புறம் திரும்பியவள், அவனை அணைத்தபடி,

“சூர்யா எப்போ நீங்க நார்மல் டைம்ல வருவீங்க? ரொம்ப மிஸ் பண்றேன் உங்களை…” அவனும் அவள் தலையை வருடியபடி.

“நான் இங்க இருந்திருந்தால் இந்த ஆபிஸ் பிரச்சனையை இவ்வளவு தூரம் வளர விட்டிருக்க மாட்டேன், எப்போவோ சரி பண்ணிருப்பேன்… இப்போ ரொம்பக் கைமீறி போச்சு. இன்னும் ஒரு மாசமாவது ஆகும் அகல்யா, இதில் சரியா பண்ணலைனா எனக்கு ரொம்பக் கஷ்டம்… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மா…” என்றவனிடம் சண்டையா போட முடியும்?

அவனைப் பார்க்கவும் பாவமாய்ப் போனது அகல்யாவுக்கு.

ஏன் ஜப்பான் விஷயத்தை ராஜமிடம் சொன்னான் என்று சண்டையிட நினைத்தவள், அதை எல்லாம் மறந்து போய் அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்… அவன் அணைப்பில் இருக்கும் சமயம் எல்லாம் தான் பாதுகாப்பாக இருப்பதைப் போல் எத்தனையாவது முறை உணர்கிறோம், எண்ணியபடியே நித்திரையில் ஆழ்ந்தாள்.

அவளின் கெட்ட நேரம் அதன் வேலையைச் சிறப்பாகச் செய்ய ஆரம்பித்துவிட்டது… தினமும் காலை அவன் கிளம்பியதும், கோவிலுக்குப் போகிறேன் என்று கிளம்பி தப்பிவிடுபவள், பின்னர் முழுநேரமும் கொத்துவது, பாத்தி பிடிக்க, நீர் பாய்ச்ச என்று அந்த வீட்டின் தோட்டத்திலேயே பொழுதைக் கழிப்பாள்.

சூர்யாவிடம் என்றைக்காவது மிகவும் கெஞ்சினால், அன்று மட்டும் மதிய உணவுக்கு என்று வீடு வருவான்… அதன்பின் மீதம் உள்ள நேரம் எல்லாம் மிகக் கொடியது… ஒரே வீட்டில் ராஜமின் கண் பார்வையில் படாமல் மறையத் தோன்றும் அகல்யாவுக்கு…

அகிலன் பூவிழி இருந்த நிலையில் அவர்களிடம் தன்னைப் பற்றிக் கூற விருப்பமில்லை அவளுக்கு…

என்ன டா இது வாழ்க்கை என்றிருந்தது… இந்தக் கழிவிரக்கம் தன்னை அழித்துவிடும்… இதை நீடிக்க விடக் கூடாது என்று முடிவெடுத்தாள். அதற்கான விடையை யோசித்துவிட்டாள்…

சூர்யா அன்று சீக்கிரம் வரவும் வெளியே சாப்பிட போகலாம் என்று பிடிவாதம் பிடித்து அழைத்துச் சென்றுவிட்டாள். அவன் அலுவலகத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றித் தான் அதிகம் பேசினான்… மீண்டும் தான் வெளியூர் செல்ல நேரலாம் என்றும்

சேர்ந்து போகலாம் என்றும் பேசியபடி இருந்தான். வேலையைப் பற்றிப் பேச்சு வந்ததும், அந்தச் சந்தர்ப்பத்தை விடாமல், தானும் அவன் கம்பனிக்கு வருகிறேன். வீட்டில் நேரம் போகவில்லை என்று கேட்டுப் பார்த்தாள்…

“இல்ல மா, சரிவருமென்று தோணலை… ஏற்கனவே புதுசா நிறையப் பேர் வந்து இப்போது தான் அவர்கள் ட்ரெயினிங் முடிச்சாங்க. நீ இப்போது வந்தா உனக்கு வேலைச் சொல்லி தர ஒருத்தரை ஒதுக்கவேண்டும்… கம்பெனி இருக்கிற நிலைமையில், நிறைய வேலைகள் நடந்திட்டு இருக்குறதுனால், எனக்கு இப்போது அதுக்கு ஆள் அசைன் பண்றது கஷ்டம் மா. கொஞ்ச நாள் போகட்டுமே!”

இன்றைக்கு ஏற்கனவே இரண்டு விஷயத்துக்கு இவன் கிட்ட அடம்பிடிச்சாச்சு, இந்த வேலை விஷயத்துக்கும் ஆரம்பிச்சா கோபப்பட்டாலும் படுவான்… இப்போதைக்கு விடுவோம் என்று சும்மா இருந்துவிட்டாள்…

ராஜமை பற்றி யோசித்து, மெல்ல ஆரம்பித்தாள்,

“அத்தம்மா தினமும் என்னை ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க சூர்யா… அதனால் தான் எனக்கு வீட்டிலேயே இருக்க யோசனையா இருக்கு…”

“அம்மாவா, உன்னையா? அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்களே!”

‘நான் என்ன பொய்யா சொல்றேன்’ என்று கேட்க தோன்றியது அவனுக்கு. மேலும் பேசி அவளைக் கடுப்பேற்றினான்…

“என் பொண்டாட்டியை அவங்க பெத்த பொண்ணு மாதிரி பார்த்துப்பேன்னு என்கிட்ட சொல்லியிருக்காங்க!”

அப்படியா டா?

“இப்போதும் உன்னைப் பத்தி என் கிட்ட குறையா எதுவும் சொன்னதே இல்லை… உன் செயல் எல்லாமே அவங்களுக்குப் பிடிக்குமாம்”

அகல்யாவுக்கு அதற்கு மேல் அவன் அம்மா புராணம் கேட்க முடியாமல் அமைதியாகிவிட்டாள்…

என்ன தான் சூர்யா அவளைக் கடுப்படித்தாலும், நீண்ட நாள் கழித்து அவனுடன் நேரம் செலவழித்தது ஒரு நல்ல மாற்றம்…

அந்த மாறுதல் மேலும் ஒரு இரண்டு நாள் தொடரவும் செய்தது… அன்றும் எப்போதும் போல் தோட்டத்தில் எதையோ செய்து கொண்டிருந்தவளிடம் வந்த ராஜம்,

“வேலைக்கு வர்றேன்னு சொன்னியாமே? நானே, சீதா படிப்புக்கு ஏதும் சின்ன வேலை அங்க கிடைக்குமான்னு எவ்ளோ முயற்சி பண்ணேன் அதுவே கிடைக்கலை… ஜெயந்தையும் வெளியே வேலை பார், ஒரே கம்பெனி எல்லாம் சரிவராதென்று சொல்லிட்டான், ஆனால் இப்போது நீ மட்டும் போயிடுவியா?”

‘என்ன முட்டாள்தனம்?’ பதில் கூற விரும்பாமல் ராஜமையே பேச விட்டாள்…

“அதான் காய்கறி, தோட்டம்னு இருக்கியே. இதையே செய்… சும்மா வேலைக்குப் போறாளாம்”

திஸ் இஸ் தி லிமிட்… இவள் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்… இவள் எண்ணுவதை மட்டும் செய்ய நான் என்ன இவள் அடிமையா? செய்து கொண்டிருந்த வேலை எல்லாம் அப்படியே போட்டவள், சூர்யாவுக்கு உடனே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டாள்,

“சூர்யா நான் வேலை விஷயமா கேட்டிருந்தேனே என்ன ஆச்சு.”

அவன் மெல்லிய குரலில்,

“நான் மீட்டிங்ல இருக்கிறேன், அப்புறம் பேசலாமா?” கேட்க,

இவள் விடாமல், இப்போதே தெரியவேண்டும் என்றாள்…

“அதான் சொன்னேனே மா, இப்போது முடியாதென்று…” கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னான்…

“என்னால் வீட்டில் இருக்க முடியாது, ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க…” நேரம் காலம் தெரியாமல் வாயை விட்டாள்…

தக்க நேரம் வரும் வரை காத்திருந்து எவ்வளவு பேர் என்னவெல்லாம் சாதிக்கின்றனர்… அகல்யாவோ அது எல்லாம் யோசியாமல் தனக்கு இருந்த எரிச்சலை அப்பட்டமாய்ச் சூர்யா மேல் காட்ட போய் அது அவளுக்கே வினை ஆனது…

“அகல்யா என்னது இது ஆபிஸ் நேரத்தில் சின்னக் குழந்தையா நீ… வீட்டில் பேசிக்கலாம்… இப்போ போனை வைக்கிறியா!”

சூர்யா சத்தம் போட்டுவிட்டுப் போனை வைத்துவிட்டான்.

அதன் பிறகு அவளிடம் பேசவுமில்லை… அவ்ளோ தூரம் கம்பெனி பிரச்சனை பற்றிக் கூறியும் சமயம் தெரியாமல் என்ன வேலை செய்கிறாள் என்று கோபம் அவனுக்கு…

அகல்யாவுக்கு சோதனைக்காலம் போல. சூர்யாவிடம் ஒழுங்கான பேச்சவார்த்தையில்லை, மாமியார் தொல்லை ஒருபுறம் அத்துமீறிக் கொண்டிருக்கிறது…

அம்மா அப்பாவிடமும் அண்ணனிடமும் சொல்ல இஷ்டமில்லை…

திருமணம் முடிந்துச் சில மாதங்களிலேயே இவ்வளவு துன்பம் வருமா? ஆனால் எதுவும் சில காலம் தான்… இதை அகல்யாவுக்கு யார் புரிய வைப்பது?