18
மஹா பயந்தது சரி தான்… அகல்யாவுக்கு தன் வாழ்க்கை வீணாகிறது என்ற எண்ணமே அவளை ஒன்றையும் உருப்படியாகச் செய்ய விடாமல் செய்தது. எதையாவது புதியதாய் படிக்கலாம், உருப்படியான பணிகளில் நேரத்தைச் செலவழிக்கலாம், அதை எல்லாம் விட்டுவிட்டு எப்போதும் எதையோ பறிகொடுத்ததைப் போலவே சுற்றிக்கொண்டிருந்தாள்.
எந்த வேலையிலும் கவனம் இல்லை. அவள் தோட்டமும் அவளின் நிலையை எதிரொலித்தது. காயோ, பூவோ எதுவுமில்லாமல் மொட்டையாய் நின்றது அவளின் நந்தவனம்.
கணவனின் வாழ்வில், தனக்கான இடம் அதிகமாக வேண்டும், அவர் தினமும் தன்னுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், தன் மீது அதிகக் காதலை வெளிப்படுத்த வேண்டும், தான் பிஸியாக இருக்கும் நேரங்களிலும் கூட மனைவியுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற பகல் கனவு அகல்யாவுக்கு. எல்லோருக்குமே கனவுகள் இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும் சூழல் வாய்ப்பதில்லை.
கணவன் மனைவி பிரச்சனைக்கும் இந்தக் கனவுகளும் வழிவகுக்குகிறது… அது மட்டும் இல்லாமல், அதிகம் பேசும் வார்த்தைகளும், பேசாமல் விட்ட அதி முக்கியமான வார்த்தைகளும் தான் பிரச்சனைகளுக்கு அடித்தளம்…
அகல்யா அவன் அன்னையைப் பற்றிக் கூறியதை ஏன் சூர்யா அவன் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை? அம்மா அப்படிச் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான் என்றாலும், தன் மனைவி மேல் நம்பகத்தன்மை தனக்குச் சிறிதும் இல்லை என்பது போல் நடந்து கொண்டானே! அவன் செய்ததும் தவறு தானே?
அவளது பக்கமும் உள்ளதைக் கேட்டு அதற்குத் தகுந்தது போல் அவன் நடந்துகொண்டிருந்தால், இந்தக் கால விரயத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்த அகல்யா எதையாவது ஒழுங்காய் சொன்னாளா? அவளும் தன் பங்குக்குத் தவறு செய்து விட்டாள்… தனக்குத் தன் மாமியாரால் இன்ன இன்ன பிரச்சனை என்பதைத் தெளிவாய்ச் சொல்லாமல் சூர்யா கோபப்படும்படியாகப் பேசிபேசி தனக்குத் தானே பிரச்சனையைப் பெரிது படுத்திவிட்டாள்.
சூர்யா வேலை விஷயமாய்ச் சென்னை சென்றிருந்தான்.
பூவிழியின் சித்தி பெண்ணின் திருமணம் என்று அகல்யாவின் அம்மா விட்டிலும் அனைவரும் பெங்களூர் சென்றுவிட்டனர். இவளையும் அழைக்க, சூர்யா இல்லாமல் வரவில்லை என்றுவிட்டாள்…
அவன் கூட இருந்தாள் சண்டை போட வேண்டியது, இப்போது அவன் இல்லாததும் சிரமமாய்… மனம் ஒரு குரங்கு என்பது அகல்யா விஷயத்தில் சரியே…
அந்த வாரம் முழுவதும் உடல்நிலை வேறு சரியில்லை…
எந்தப் பணியும் செய்யாமல், தூக்கத்தில் நேரம் கடத்தினாள். பகலில் தூங்கி பழக்கம் இல்லை, ஆனாலும் இப்போது இது என்ன! ஒரே மயக்கமாய், எந்நேரமும் அசதியாய் அவள் உடல் அவளைப் படுத்தி எடுத்தது.
நேரம் போகாமல் காலண்டரை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு, திடீரென்று ஒரு நினைவு கீற்று… நாள் தள்ளியிருக்கிறதா? மறுபடி பார்த்தவள், ஒத்துக்கொள்ளும்படி இருந்தது… அது தானோ?
சந்தோஷத்தில், தன் எல்லாக் கவலையும், சண்டையும் துக்கமும் காணாமல் போனது… ஒரு பக்கம் தன் மனம் துள்ள… பரபரப்பாகி விட்டாள்… எப்படி இதை உறுதிப்படுத்துவது? தன் அன்னையைத் தொடர்புகொண்டாள். விஷயத்தைச் சொன்னதும், மஹாவுக்கும் சந்தோஷம்,
“இரண்டு நாள் பொருத்துக்கோ, அம்மா அங்கே வந்ததும் டாக்டரை பார்த்துரலாம்”என்றாள் தன் மகளிடம்…
அன்னையிடம் சரியென்றவளுக்கு, தான் உடனே அதை உறுதிப்படுத்தினால் என்ன என்று தோன்ற, கிளம்பிவிட்டாள்… அவசரம்! வாசல் வரை வந்ததும் தான் எப்படி யார் துணை இல்லாமல் போவது? ராஜமை கேட்கலாம் என்றுவிட்டு அவளிடம் போய்,
“அத்தம்மா, என் கூட ஹாஸ்பிடல் வரை வர முடியுமா?” கேட்டவளை, கண்கள் இடுக்கிப் பார்த்த ராஜம்,
“எதற்கு ஹாஸ்பிடல் இப்போ?” அவள் கேட்ட தோரணை அகல்யாவை பின்னடைய செய்தது தான். என்ன இப்போது இதை எல்லாம் பெரிதாக யோசிக்க அவள் இருந்த மனநிலையில் முடியவில்லை, ராஜமின் தயவு தனக்கு இப்போது தேவை, அதனால்,
“எனக்குத் தான், வந்து… நாள் தள்ளிபோயிருக்கு, போய் டாக்டரை பார்த்திடலாம்னு” தயங்கியபடி சொல்லிவிட்டாள்…
சந்தோஷப்படுவாள், பேரன் வரப் போகிறான் என்று முகம் புன்னகை காட்டும் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்த அகல்யாவுக்கு அவள் மேலும் அதே தோரணையில்,
“அது எல்லாம் ஒண்ணும் இருக்காது”என்று சொன்னதை நம்பவே முடியவில்லை…
“நீங்க என்ன சொல்றீங்க?”மறுபடியும் அகல்யா கேட்டாள்…
“இப்போ அடிக்கிற வெயிலுக்குக் கூட உடல் சூடு பிடித்து அது கூட இப்படி எல்லாம் பண்ணும்… அதுக்குள்ள பிள்ளையா, இன்னும் சீதாவுக்கே பிள்ளை இல்லையே!”
அதற்காக?
முதல் குழந்தை ஒரு பெண்ணுக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கும் என்பது தெரியாதவளா ராஜம்? இப்படி ஒரு வாக்கியத்தை அகல்யாவுக்குச் சொல்ல அவளுக்கு எப்படி மனது வந்தது? அகல்யாவுக்கு ராஜமிடம் பதில் பேச பிடிக்கவில்லை “நானே போயிக்குறேன்” என்றுவிட்டு அவர்கள் காரில் கிளம்பிவிட்டாள்…
ஹாஸ்பிடலில் தன் விஷயத்தைக் கூறியதும், சில பரிசோதனைகள் செய்துவிட்டு மருத்துவரைப் பார்க்க சொன்னார்கள்… காத்திருந்த அந்நேரம் குழந்தைக்குப் பெயரே வைத்து முடித்துவிட்டாள்! கற்பனையில் இருந்து மீண்டு, ஆவலுடன் இவள் செல்ல, மருத்துவரோ அவள் எதிர்பார்த்ததையே சொன்னார்…
முதல் குழந்தை என்பது முதல் முத்தம், முதல் காதல் என்பதை விட ஒரு படி மேல் தான்… மூன்றையும் ஒரே அளவுகோலை வைத்துப் பார்க்க அகல்யாவுக்கு முடியவில்லை…
இந்த மகிழ்ச்சிக்குக் காரணமாய் இருந்தவனுக்குப் போன் செய்தாள்.
அந்நேரம் சூர்யாவும் சென்னையில் அவளைத் தான் நினைத்துக்கொண்டிருந்தான், அவனுக்கு ஒரு ஆர்டர் கைகூடியிருந்தது… அந்த மகிழ்ச்சியில் அவள் அழைப்பை எடுத்தவன்,
“அகல்யா இப்போது தான் உன்னை நினைத்தேன்… ஒரு குட் நியூஸ்” என்றான்…
குறுக்கிட்டு “எனக்கும் ஒரு குட் நியூஸ்” அவனிடம் சொன்னதும், மகிழ்ச்சியில் துள்ளினான்…
“அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டியா? தனியாவா வந்தே?”அவன் கேட்க
“அத்தம்மாவை கூப்பிட்டேன், அவர்கள் வரலை!” சொல்லிவிட்டாள்…
அவனா, “விஷயத்தைச் சொன்னா ரொம்பச் சந்தோஷப்படுவாங்க…” என்று முடித்துவிட்டான்…
‘ஆமா படுவாங்க’… மனதில் ராஜம் கூறியதே ஓடிக்கொண்டிருந்தது…
“சரி பத்திரமா வீட்டுக்குப் போ மா… சீ யூ சூன்…”என்று போனை வைத்தான்…
இவன் இந்த எட்டப்பன் வேலையை மட்டும் பண்ணாமல் இருந்தால், எவ்வளவு நல்லது… அகல்யாவால் சலித்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை…
வீட்டுக்குத் திரும்பியவளை வாசலிலேயே எதிர்நோக்கிய ராஜம்,
“என்ன சொன்னாங்க ஹாஸ்பிடல்ல?” வினவ,
அதுதான் வாழ்த்தி அனுப்பிட்டு, இப்போது என்ன கேள்வி? பதில் சொல்லாமல் உள்ளே செல்ல இருந்தவளை, வழிமறித்து மீண்டும் கேட்டாள் ராஜம்…
“பதில் சொல்லிட்டு போ…” அகல்யாவுக்கு இந்த அராஜகத்தை எல்லாம் சகிக்க முடியவில்லை…
“எல்லாம் நான் நினைத்த மாதிரி தான் சொன்னாங்க”என்றுவிட்டு உள்ளே சென்றவளை தொடர்ந்த ராஜம்…
“சீதாவுக்கு பிறந்த பிறகு நீ பெத்துகிட்டா தான் என்ன?”ராஜம் கேட்க… சகித்துக்கொள்ளவே முடியாத அகல்யா,
“நீங்க என்ன பேசுறீங்கன்னு உங்களுக்குப் புரிகிறதா?” அகல்யாவுக்கு தன் காதுகளை நம்பவே முடியலை…
ராஜமிற்கு கல் நெஞ்சோ என்று எண்ணும்படி அவள்,
“சும்மா நிறுத்து, இந்த வீட்டில் என் பொண்ணு தான் எல்லா விஷயத்துலயும் முதலில் இருக்கவேண்டும், குழந்தையும் அவளுக்கு அப்புறம் தான் நீ பெத்துக்கணும்.”
“அபசகுணமா பேசாதீங்க… இனி என்னால் எதுவும் செய்ய முடியாது…” என்றுவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள்…
இப்படி ஒரு பிறவியா? தன் குலத்தின் முதல் வாரிசை வரவேற்கும் லட்சணம் இதுவா?
அழுகை தான் வந்தது… சூர்யா வேறு இல்லை… யாரிடம் சொல்ல!
இரண்டு நாளில் வந்தவன் அகல்யாவை தாங்கினான்… நீண்ட நாட்களுக்குப் பின் பழைய சூர்யாவாய் இருந்தான் அவளிடம்…
ராமானுஜமிற்குச் சூர்யா சொல்லும் வரை விஷயம் தெரியவில்லை… ராஜமை பார்த்தவர், இவள் தன்னிடம் சொல்லிவிட்டால் தான் அதிசயம் என்பதைப் போல் பார்த்து வைத்தார் அவளை…
மஹா கிரி அகிலன் பூவிழி வந்து பார்த்துவிட்டு சென்றனர்…
எல்லாருக்குமே மகிழ்ச்சி தந்த விஷயம் ஒரு ஜீவனுக்கு மட்டும் கசந்தது… சூர்யா இருந்த மகிழ்ச்சியில் இதை ஊன்றிக் கவனிக்கவும் இல்லை… அவன் குழந்தையைப் பற்றிப் பேசிய சமயம் எல்லாம் ராஜம் சிரித்தும் வைத்தாள், மகனின் முன் சந்தோஷத்தை காட்டுவது போல…
சீதா போன் செய்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டாள் அகல்யாவிடம்…
இப்படியே சென்றிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்…
ஆனால் அகல்யாவின் பொல்லாத விதி என்னும் மாயை தன் பயங்கர வேலைகளை ஆரம்பித்து விட்டது…
திடீரென்று கடுமையான வயிற்று வலி உண்டாகித் துடி துடித்த அகல்யாவை மஹா ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றாள்…
ஸ்கேனில் குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்று கண்டறிந்து, உடனே கருக்கலைப்பு தவிர வேறு வழி இல்லை என்று கைவிரித்தனர் மருத்துவர்கள்!
சூர்யாவுக்கு தகவல் தந்து மருத்துவமனைக்கு வரவழைத்தனர்…
இரண்டு மாதம் அகல்யா அனுபத்திருந்த சந்தோஷம் எல்லாவற்றையும் அங்குச் சுத்தம் செய்துவிட்டனர்…
மன வேதனையை விட இந்த வேதனை கம்மியாகத் தான் இருந்தது அகல்யாவுக்கு… அழுது ஓய்ந்து போனாள்… மஹா அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று அழைத்துச் சென்றுவிட்டாள்…
அங்கிருந்த சமயம் தான் மஹாவிடமும் பூவிழியிடமும் தன் மாமியார் பேச்சை எல்லாம் சொன்னாள்…
“சூர்யா கிட்ட சொல்லேன் மா, அவர் பார்த்துப்பாரு” என்ற சொன்ன மஹாவிடம் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்…
இரண்டு நாளில் சூர்யா வீட்டுக்கு திரும்பியவளுக்காகக் காத்திருந்தது இன்னுமொரு மோசமான விதி…
சூர்யா ஆபிஸ் சென்றதும் அவளறைக்கு வந்த ராஜம், “இப்போ என்ன பண்ண முடியும்னா என் கிட்ட கேட்ட இல்ல? அந்தத் திமிருக்கு கிடைத்த பலனை பார்த்தியா?”
குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு இருக்கும் பெண்ணிடம் என்ன பேச்சு இது… வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த லட்சுமியின் காதில் ராஜம் பேசுவது தெளிவாகக் கேட்டது.
இவளுக்கு இதயமே இல்லையா என்று கேட்க தோன்றியது லட்சுமிக்கு!
அகல்யாவின் நிலை டிப்ரெஷனுக்கு முந்தைய நிலை என்றிருக்க,
“நீங்க என்ன பேசுறீங்கன்னு உங்களுக்குப் புரிகிறதா?” அகல்யா குரலை உயர்த்த ஆரம்பித்தாள்.
ராஜம் உக்கிரத்தில் இருந்ததால் வாயில் வந்த வார்த்தைகள் பயங்கரமாய் இருந்தது…
“அதெல்லாம் புரிகிறது… நான் சொல்றதை தான் நீ செய்யவேண்டும் இனி… உன் ஆட்டத்தை எல்லாம் இத்தோட நிறுத்திக்கோ… உன்னால் தான், உன் ராசியால் தான், என் சின்னப் பையன் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டான், சீதாவை வேற தூண்டி விட்டு அவ என் கூடப் பேசுறதே இல்லை… என்ன தான் செஞ்சியோ சூர்யாவ, என்கிட்ட சொல்லாமல் எல்லா முடிவும் எடுக்கப் பார்த்தான்! நீ செய்தது எல்லாம் போதும்…” மூச்சு வாங்கப் பேசினாள் ராஜம்…
இவளுக்கு என்னவோ ஆயிற்று!
“தேவை இல்லாமல் என் வயித்தெறிச்சலை கொட்டிக்காதே… உனக்கு இப்ப கிடைத்த பலனை என்றைக்குமே மறந்துடாதே…” ராஜம் நிதானத்தில் இல்லை…
துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பது போல், அகல்யா அவளருகில் நில்லாமல் தள்ளி வந்தாள்…
ஆனாலும் அவள் பின்னாலேயே வந்த ராஜம் “சூர்யா கிட்ட வத்தி வைப்பியா என்ன. அவன் உன்னை நம்பிடுவான்னு மட்டும் நினைக்காதே…”
சவால் விடுவதைப் போல் சொன்னாள் தன் மருமகளிடம்…
இங்கே என்ன போட்டியா நடக்கிறது? அகல்யாவுக்கு அமைதியாக இருக்க முடியவில்லை…
அகல்யா ராஜமை பார்த்தபடி நின்றிருந்ததால், அவள் பின்னே அவள் மாமனார் வருவதைக் கவனிக்கமுடியவில்லை… ஆனால் ராஜம் அவரைப் பார்த்ததும் தன் வாயை மூடிக்கொண்டாள்…
அகல்யா ராஜமை வசை பாடினாள், “உங்களை மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை… என்னை எதற்கு எல்லாத்துலையும் சம்மந்த படுத்துறீங்க? உங்க பையன் ஓடிபோனா அதுக்கு நான் எப்படிக் காரணமா இருக்க முடியும்? நீங்க இப்போ போடுற ஆட்டம் எல்லாம் நிலைக்காது… கடவுள் பார்த்துப்பார் உங்களை” என்றவளை அங்கு வந்துவிட்ட ராமானுஜம் அதட்டவும் தான் திரும்பிப் பார்த்தாள்…
“என்ன அகல்யா, பெரியவர்கள் கிட்ட இப்படித் தான் பேசுறதா? உங்கள் வீட்டில் இது தான் சொல்லி குடுத்தாங்களா? என்ன பிரச்சனை உங்க இரண்டு பேருக்கும்…” ராமானுஜம் முறைத்தபடி அகல்யாவை அதட்டி கேட்க, அவள் பதில் சொல்லுமுன்…
ராஜம் நெஞ்சை பிடித்துக் கொண்டு, இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமிக்கு எண்ணமாக நடிக்கிறாள் இவள் என்று நினைக்கத் தோன்றியது.
அகல்யாவை பார்க்கும் போது பரிதாபமாகக் கூட இருந்தது. ஆனால் இது அவர்களது வீட்டுப் பிரச்சனை, தன்னுடைய இருப்பைக் கூட உணராமல் மருமகளை இப்படிச் செய்யத் துணிந்தவளுக்கு எதுவும் சுலபமே என்று எண்ணிக்கொண்டாள்.
“அய்யோ அம்மா. என்ன பேச்சு பேசுறா, எனக்கு நெஞ்சு வலிக்குதே. ஐயோ அம்மா…” என்று அரட்ட ஆரம்பித்துவிட்டாள்…
அகல்யாவும் பதறித் தான் போனாள்… பேசாமல் வாயை மூடியிருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா? ராமானுஜம் தன் மனைவியைத் தாங்கிய படி ஹாஸ்பிடல் போகலாம் என்று பதற, அவளோ அங்குப் போனால் உண்மை தெரிந்துவிடுமே என்று தன் நெஞ்சை நீவியபடி…
“வேண்டாம்ஙக, ஹாஸ்பிடல் போகிற அளவுக்கு இல்லை… கொஞ்சம் படுக்கவேண்டும், தண்ணி தண்ணி குடுங்க…” என்று மேலும் சொல்ல, சரோஜாதேவி சாவித்திரி எல்லாம் தோற்றார்கள்… ராமானுஜம் பதறி உள்ளே ஓட, ராஜம் ஒரு வெற்றி புன்னகையை அகல்யாவிடம் உதிர்த்தாள்…
பதட்டத்தில் இருந்த அகல்யாவுக்கு அது வரையிலும் அது நடிப்பு என்று தெரியவில்லை, ராஜமின் செய்கையைக் கண்டதும் அதிர்ச்சி ஆற்றாமை எல்லாமே மையம் கொண்டுவிட்டது அவளிடம்…