19
கோபத்தின் எல்லையைத் தாண்டிவிட்டதால் அந்த வீட்டை விட்டு படியிறங்கினாள் அகல்யா, யாரிடமும் எதுவும் சொல்லாமல்!
லட்சுமி மட்டுமே அவளது வெறித்த பார்வையையும், எதுவும் கூறாமல் வெளியேறிய விதத்தையும் பார்த்தாள்.
ராமானுஜம், ராஜமின் நெஞ்சு வலி கவலையில் இருந்ததால் அகல்யா வெளியேறியது அவருக்குத் தெரியவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகே, மருமகள் வீட்டில் இல்லை என்பதைக் கண்டுபிடித்தவர், சூர்யாவுக்கு போனில் தகவல் தந்துவிட்டார்…
சூர்யா அகல்யாவுக்கு இருநூறு முறையேனும் போன் செய்திருப்பான்…
அவள் எடுத்தபாடில்லை!
அகிலனுக்கு போன் செய்தவன், அகல்யா வீட்டில் இல்லை, போனும் எடுக்கவில்லை… அங்கே ஏதும் இருக்கிறாளா என்று விசாரித்துவிட்டு, அவன் வீட்டுக்கு விரைந்தான்.
அவன் தலையைக் கண்டதும் ராமானுஜம் முதல் முறையாகப் புகார் வாசித்தார்… மருமகளைப் பற்றிச் சற்று கடுமையாகவே,
“என்ன பா, அகல்யா இப்படிச் செய்வான்னு நான் நினைக்கவே இல்லை. அவ அம்மாவை பேசின பேச்சில் அம்மாவுக்கு முடியாமலேயே போச்சு. பாவம் உங்களுக்கு இப்படி ஆயிடிச்சேன்னு நாங்க கவலையில் இருக்கோம், இப்போ என்ன இது புதுப் பிரச்சனை? இந்தக் களேபரத்திலும் அவ பாட்டுக்கு யார் கிட்டையும் எதுவும் சொல்லாமல் கிளம்பி போயிட்டா, நல்ல பொண்ணுன்னு நினைச்சிருந்தேன் பா அவளை…”
ராஜம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் முகத்தை மட்டும் அப்பாவியாய் வைத்திருந்தாள்!
சூர்யாவுக்கு அகல்யாவின் இந்த அலட்சியம், அதிர்ச்சியாய் இருந்தது.
அது என்ன அப்படி ஒரு மனிதாபிமானமற்ற செயல்?
தெரியாதவர்களுக்குக் கூட இரக்கப்படும் அக்லயாவா தன் அன்னை வலியால் துடித்திருந்த சமயம் விட்டுவிட்டுப் போனாள்?
அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் பொய் என்பது அவனது தந்தையால் சொல்ல முடியாத ஒன்று.
என்ன செய்யலாம் இனி என்று சற்றே குழம்பியவன், சில நொடிகளே தயங்கி அதன் பின் அகல்யாவை அழைத்து வரக் கிளம்பிவிட்டான்.
அகிலன் அவள் அவர்கள் வீட்டில் இருப்பதாகச் சூர்யாவுக்கு தகவல் தந்துவிட்டிருந்தான்… அதைத் தன் பெற்றோரிடம் சொல்ல, ராஜம் தான் வாயடைத்துப் போனாள்.
‘இவன் இவளோ தாங்குறதால தான் அவ அந்த ஆட்டம் போடுறா? தானாகப் போனவளுக்கு வரத் தெரியாதா?’ மனதில் மருமகளை வசைபாடினாள்… இதை எதையும் அறியவில்லை சூர்யா.
அகல்யாவை சூர்யா அழைத்துப் போக வந்தான். அவன் மாமனாரின் வீட்டுக்கு… தன்னிடம் சொல்லி விட்டு வரவுமில்லை, அவன் பல முறைப் போன் செய்து பார்த்தும் அவள் எடுக்கவுமில்லை…
வந்தவன், நீண்ட நேரமாகக் காத்துக்கொண்டிருந்தான், ஹாலில் அவள் வருகைக்காக!
என்ன தான் நாம் பெண்களுக்கு மட்டும் தான் இந்த உலகத்தில் நிறையப் பிரச்சனை, ஆணாய் பிறந்தால் நல்லது என்று எண்ணினாலும்… சில ஆண்களும் பாவம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை…
சூர்யாவும் அந்த மாதிரி ஒரு பாவப்பட்ட பிறவி தான்…
கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை…
அது ஆண்களுக்கும் பொருந்தும் தானே?
சூர்யா தன் கல்லூரியிலும், பின்னர் வேலைக்குச் சேர்ந்த புதிதிலும் தன் வயதினர் எல்லாம் காசு செலவு கணக்குப் பார்க்காமல் அவர்கள் வாழ்க்கையை அனுபவித்த போது, இவன் மட்டும் நம் வீட்டில் கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்திலேயே அனாவசிய வழிகளில் ஈடுபடாமல் இருந்தான்.
வெளிநாட்டில் வேலைபார்த்த போதும் முதல் சில காலம் அதே நிலையே… சின்னச் சின்ன ஆசைகளையும் நிராசையாக அவனே ஆக்கிக்கொள்வான்…
ஒருவாறாகக் கடன் தொல்லை, தங்கை கல்யாணம், பின்னர் மாப்பிள்ளைக்கு உண்டான செலவுகள் எல்லாம் முடிந்ததும், தன் நீண்ட காலக் கனவான, சொந்த நிறுவனம்… அதற்கும் சேமிக்க… என்று இப்படியே போனது அவனுக்கும்…
அவன் நிறுவனத்தின் வருமானம் பெருகியதும் தான், சற்று மூச்சு வாங்க முடிந்தது… தன் திருமணம் வரைக்கும் சுமாரான லாபம் பார்த்துக்கொண்டிருந்த அவன் கம்பெனி, அகல்யா வந்த நேரமோ என்னவோ, அதன்பிறகு நிறைய ஆர்டர்கள்… ஏகப்பட்ட பிராஜக்ட்டுகள்… அதனால் வேலைப் பளுவும் கூடி விட்டது… அடிக்கடி வெளியூர் செல்வதும் சேர்ந்து கொண்டது…
சூர்யாவுக்கு ஆயாசமாயிருந்தது. திருமணம் செய்து பார் என்று சொல்வார்களே அது இதுதானா?
எவ்வளவு பேரை தன் அலுவலகத்திலும், வெளியிடத்திலும் தான் சமாளித்தாலும் தன் மனைவியைச் சமாளிப்பது பெரிய காரியமாய்த் தோன்றியது…
அம்மா தன்னிடம் பேசுவதைப் பார்த்தால், அவள் தன் மனைவியை நன்றாக வைத்துக்கொள்கிறார் என்றே நம்பிக்கை இருந்தது… அவன் பார்த்த வரையுமே ஒன்றும் வித்தியாசமாய் இல்லை… எப்போதும் அகல்யா மட்டுமே ராஜமை பற்றிக் குறை சொல்கிறாள்…
வெளிநாடு போக வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்தாளோ? ச்சே ச்சே இருக்காது…
தன்னிடம் வேலைக்கு வருகிறேன் என்றவளைத் தான் தான் வரவேண்டாம் என்று விட்டோமோ, அதுவும் தான் கோபமோ? சரி வேலை செய்ய வேண்டும் என்று எண்ணுபவள் அதற்கான ஒரு முயற்சியாவது எடுத்தாளா? அதற்குத் தேவையான திறனை வளர்க்கவில்லையே! செடி கொடி என்று சுற்றிவிட்டு திடீர் என்று ஆபிஸ் வரவேண்டும் என்றால் எப்படி? ஆனாலும், நாம் சற்று விட்டுக்கொடுத்திருக்கலாமோ?
அவர்கள் சொந்த கம்பெனி தானே? அவன் மனைவி கட்டாயமாக வேலைத் தகுதியோடு தான் வரவேண்டுமா என்ன? அங்கேயே ஏதேனும் ஒரு வேலையை ஏற்பாடு செய்திருக்கலாமே அவளுக்கு!
தனக்கு இருந்த வேலைப் பளுவில் இந்த விஷயங்கள் எல்லாம் எங்கே தன்னால் யோசிக்க முடிந்தது?
என்னவானாலும் சமாளித்திருக்கத் தான் வேண்டும்…
இது எல்லாம் போதாது என்று அவர்கள் குழந்தை விஷயம் வேறு இப்படி ஆனது… அவள் வெளியில் சொல்லி அழுகிறாள், நான் உள்ளுக்குள் அழுகிறேன்… இது புரியுமா? அகல்யாவுக்கோ மற்றவர்களுக்கோ?
ஏதேதோ சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது அவனுள்…
இதையெல்லாம் தாமதமாக யோசித்தவனுக்குத் தெரியாது இந்தச் சமயம் அகல்யா அவன் வாழ்வை விட்டு விலகி விட்டாள் என்பது!
அகல்யாவுக்கு அவன் வந்திருப்பது தெரிந்தது தான்… ஆனால், அவள் இருந்த கோபத்தில், வேண்டுமென்றே வெளியே வராமல் தன் அறைக்குள்ளேயே இருந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்தாள்…
அவளின் அம்மா அப்பா கூட வந்து அவளை மிரட்டிவிட்டுப் போனார்கள்,
“என்ன அகல்யா இது? அங்க மாப்பிள்ளை வந்திருக்கிறார், நீ என்ன மரியாதையில்லாமல் இருக்க, இப்போ உடனே வெளியே வர போறியா இல்லையா” என்று கூறியவர்கள் பேச்சையும் கேட்டுக் கொள்ளவில்லை அவள்…
பொறுமையிழந்த சூர்யாவே வந்தான் அவளிடம்…
“என்ன தான் டீ உன் பிரச்சனை? ஏன் சொல்லாமல் வந்தே?”என்று நேரிடையாகவே ஆரம்பித்தான்…
இங்கிதம் கருதி மற்ற அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.
அகல்யாவும் பதில் பேச ஆரம்பித்து விட்டாள்… இவர்கள் குட்ட குட்ட நான் ஏன் குனிய வேண்டும் என்ற எண்ணம் அவளுள்!
“எனக்கு அங்க வர பிடிக்கவில்லை. அவர்கள் என்னை வாழ விட மாட்டார்கள்… உங்க கிட்ட சொன்னா என்னை நீங்க நம்புகிறதே இல்லை… உங்களால் தான் எனக்கு இவளோ கஷ்டம்!”அவனிடம் எகிறத்தான் செய்தாள்…
சூர்யாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை…
சம்மந்தம் இல்லாமல் என்ன பேச்சு இது?
மிகவும் கஷ்டப்பட்டு நிதானமாகவே பேச முயற்சி செய்தான்…
ஆனால் அவள் விட்டாள் தானே?
“நான் அங்க வரலை சூர்யா, நாம தனியா போயிடலாம்…” மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்த கதை போல் மொட்டையாகச் சொன்னாள்.
ஆத்திரமாய் வந்தது சூர்யாவுக்கு, “கோபத்தில் எந்த முடிவுக்கும் வராதே, முதலில் என் கூட வீட்டுக்கு வா, அப்புறம் பேசிக்கலாம்…”
“நான் உங்க கிட்ட நிறையச் சொல்லவேண்டும், ப்ளீஸ் கொஞ்சம் கேளுங்க” என்றுவிட்டு அவன் பதில்கூறுமுன், இந்நாள் வரை ராஜம் அவளைப் படுத்திய பாட்டை எல்லாம் சொல்லிவிட்டாள்…
எதற்கும் பதிலளிக்காமல் கேட்டவனிடம்,
“என்னால் இதற்கு மேல் இவங்க கூட எல்லாம் வாழ முடியாது சூர்யா… சீதா மட்டும் நல்ல இருக்கவேண்டுமென்று நினைக்கிறாங்க. என் அம்மா அப்பாவும் அப்படித் தானே நினைச்சிருப்பாங்க, அந்த எண்ணம் சுத்தமா அவங்களுக்கு இல்லை’’
தன் அம்மா இதை எல்லாம் எப்போது செய்தாள்? அகல்யாவை ஏன் அவளுக்குப் பிடிக்காமல் போனது என்று நினைத்தானே தவிர, சூர்யா அப்போதும் தன் அம்மாவை விட்டுத் தராமல்,
“எதையாவது நினைச்சிட்டு பேசாதே அகல்யா, நீ சொன்ன விஷயமெல்லாம் அவர்கள் வேற கோணத்தில் சொல்லியிருக்கலாமே!”
அகல்யாவுக்கு என்ன சொல்வது இதற்கு மேல் என்று வெறுத்து விட்டது. தன்னை நம்பவே மாட்டேன் என்கிறானே… அது என்ன கோணல் மாணல்? உண்மையிலேயே இவனுக்குப் புரியவில்லையா?
“அங்க வந்தா என்னை வாழ விடமாட்டாங்க… நான் அங்க வரலை…”
பிரசவத்திற்குப் பிறகு வரும், “போஸ்ட்பார்ட்டம்” என்னும் காலம் அந்தப் பெண்ணைக் கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்… குழந்தையைக் கண்டு மகிழ்ந்தாலும், தன் உடல் உபாதைகள், ஹார்மோன் மாற்றம் எல்லாம் அந்தப் பெண்ணை ஒரு டிப்ரெஷன் நிலையில் தள்ளிவிடும்…
இன்றைய நவீன காலத்தில் இதற்கெல்லாம் மருத்துவ உதவி இருக்கிறது என்றாலும், அந்தப் பிரசவித்த சமயம் பெரும் சிரமமே, எந்தப் பெண்ணுக்கும்!
அப்படியிருக்கும் போது, குழந்தையைப் பறிகொடுத்த அகல்யாவின் மனநிலை? விவரிக்க முடியுமா? காலக் கொடுமையால், விரக்தியில் இருந்தாள்…
ராஜம் இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் அவளை மேலும் சீண்டிவிட்டது, அதுவேறு இப்போது சூர்யாவுக்கு தலைவலியாக மாறிவிட்டது…
சூர்யா அப்போதும், “பெரியவங்க அப்படி இப்படித் தான் இருப்பாங்க, நாம தான் அனுசரித்து போகவேண்டும், அதுக்காக வீட்டை விட்டு வருவியா? அதுவும் அம்மாவை அந்த நிலைமையில் விட்டு…” நிதானத்தை வரவழைத்துக் கேட்டான்…
“அவங்க நடிக்கிறாங்க சூர்யா… உங்க அம்மா பண்ணினது எனக்குச் சுத்தமா பிடிக்கலை… சீதாவுக்கு பிள்ளை வந்ததும் தான் நான் பெத்துக்கணும்னு சொன்னாங்க சூர்யா…”
ராஜம் சொன்னது சரி தான்… அகல்யா என்னதான் குற்றப்பத்திரிக்கை வாசித்தாலும் சூர்யா அதை எல்லாம் நம்பவில்லை…
“என்ன உளறல் இது? எந்த அம்மாவாவது அப்படிச் சொல்லுவார்களா? நானும் அவங்க மகன் தான்…”
சூர்யா எதிர்வாதம் செய்தான்…
அகல்யாவுக்கு இவனுடன் வாழ்வதே வீண் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது…
சனி அவள் நாக்கில் அன்று உச்சத்தில் இருந்தது போல்…
“அப்ப என்னை விட்டிருங்க… அம்மாவையே கண்மூடித்தனமா நம்புற உங்களை எனக்குப் பிடிக்கலை சூர்யா… எனக்கு நீங்க வேண்டாம்…”என்று கூச்சலிட்டாள்…
சூர்யா அதற்கு மேல் அவன் சுயமில் இல்லை…
“அகல்யா நீ என்ன சொல்றேன்னு உனக்குப் புரிகிறதா?”
“ஆமாம் நான் புரிஞ்சி தான் பேசுறேன்”
“எங்க என் கண்ணைப் பார்த்து என்னைப் பிடிக்கலைனு சொல்லு. நான் இல்லாமல் உன்னால் வாழ்ந்திட முடியுமா சொல்லு… சொல்லு டீ?” என்று திரும்பத் திரும்பக் கேட்டவனை அலட்சியப்படுத்தியவள், அவனிடம் முதுகுகாட்டி நின்று கொண்டாள்.
“ஆமா, நீங்க இல்லாமல், என்னால் வாழ்ந்திட முடியும். நீங்க வேற யாராவது ஒரு நல்ல பொண்ண, உங்க அம்மாவுக்கு ஏத்த மாதிரி பார்த்து கல்யாணம்…”
பளார்ர்ர்ர்…
முரட்டுத்தனமாய் அவளைத் தன்புறம் திருப்பியவன், அவள் கன்னத்தில் கொடுத்தான் அவனின் முதல்… அறையை! ! !
ஸ்தம்பித்துப் போனாள் அகல்யா.
அவள் கண்களில் அவன் கோப முகம் தெரியாத அளவுக்குக் கண்ணீர் நிரம்பி வழிந்தது.
“என்ன நினைச்சிட்டு இருக்கே? என்னவெல்லாம் பேச்சு பேசுற? உனக்கு என்னைப் பார்த்தா எப்படி இருக்கு? அகல்யா என்னை மிருகமாக்காதே, முடிவா கேட்கிறேன், என் கூட இப்போ நம்ம வீட்டுக்கு வர்றியா இல்லையா?”
அகிலன், கிரி, மஹா இவர்கள் இருவரின் உரத்த சத்தத்தைக் கேட்டு அங்கே கூடிவிட்டனர்…
“சொல்லு அகல்யா…” மறுபடியும் அதட்டினான்…
“நான் அந்த வீட்டுக்கு வரலை…” என்றவளை என்ன தான் செய்ய என்பது அவனுக்கு விளங்கவில்லை…
இன்னொரு தரம் அவளை அடிக்கக் கை ஓங்கியவனை அகிலன் தடுத்துவிட்டான்…
அவர்கள் இருவருக்கும் கைகலப்பு ஆரம்பிக்க, கிரி, மஹா, அகல்யா என அனைவரும் அந்த இரு ஆண்மகன்களைத் தடுத்து பார்த்தும், அவர்கள் இருவரும் விலகவில்லை…
கடைசியாக அவர்கள் இருவரின் நடுவில் புகுந்த அகல்யா,
“அண்ணா அவரை விடு, ப்ளீஸ், விடுன்னு சொல்றேன்ல? அவர் போகட்டும்… அகிலன் அவரை விடு…” கத்தத் தொடங்கியதும் தான் ஒருவன் மற்றவன் சட்டை காலரை விட்டான்…
சூர்யாவை அப்படி ஒரு முகபாவனையுடன் அகல்யா குடும்பத்தில் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள்… அகல்யாவை சாம்பலாக்குவது போல் பார்த்துவிட்டு,
“அகல்யா தப்பு பண்ணிட்ட… அதை உணர்ந்து நீயா என்கிட்ட வருவ, வந்தே தீருவ…” என்று விட்டு வெளியேறிவிட்டான்…
கிரி அவன் பின்னோடு போனார், அவன் யாரையும் சட்டை பண்ணாமல் போயே விட்டான்…
இவள் தானே அவன் வேண்டாம் என்றாள், ஆனால் அவன் அப்படிச் சொல்லிவிட்டுப் போனதும் அகல்யாவின் கண்ணும் மனமும் சேர்ந்து அழுதது… தன் பாதி உயிர் தன்னை விட்டுப் போய்விட்டது போல் உணர்ந்தவளுக்கு… அவன் பின்னே ஓடிவிடலாமா என்றிருந்தது?
ஆனால் ‘ஓடினால் மட்டும் வாழ விட்டுவிடுவார்களா?’ என்றெண்ணிக் கதறிய தன் மனதை அடக்கினாள். யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. தன் குடும்பத்தினரை அந்த அறையை விட்டு வெளியேற்றிவிட்டவள், கதவைப் பூட்டி கொண்ட கதறி கதறி அழுதாள், தொலைந்துபோன தன் வாழ்க்கைக்காக…