Ani Shiva’s Agalya 21
Ani Shiva’s Agalya 21
21
அவளின் அந்த மையத்தின் உரிமையாளர் சில சமயம் இதை மாதிரி தான் செய்வான்… இவளை அழைத்து, அவளுக்குச் சற்றும் சம்மந்தம் இல்லாத வேலைகளைச் செய்யச் சொல்வார்… அவள் வேலையைச் செய்யும் சமயம் அவளையே பார்ப்பது…
தேவையில்லாத பேச்சுக்கள் ஜாஸ்தி பேசுவது, அவுட்டிங் போலாமா என்று நேரிடையாகவே கேட்பது இப்படிப் பல பிரச்சனைகள் முளைக்க ஆரம்பித்தன…
பழைய அகல்யாவாய் இருந்தால்,
‘பாதகஞ் செய்பவரைக் கண்டால்-
நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா’ என்று அவனது சட்டையைப் பிடித்து உலுக்கியிருப்பாள்.
உலகத்தில் உள்ள எல்லாத் தைரியமும் தன்னிடம் இருந்ததே! இப்போது எங்கே அது?
சாரி அயம் நாட் இன்டிரஸ்டட் என்று அத்தோடு முடித்து விடுவாள்…
மேலும் சில நாள், அவன் எக்ஸ்ட்ரா வேலைக் கொடுக்க எத்தனிக்க,
“சார், நான் இங்க டியூட்டர் மட்டும் தான், இந்த வேலை எல்லாம் எனக்குச் செய்ய முடியாது”
அகல்யா அவர் முகத்துக்கு நேராகச் சொன்னாலும்… ஏதும் காரணம் சொல்ல வேண்டியது… இவன் பேச்சை மேலும் கேட்பதற்கு அவன் கொடுத்த வேலையே செய்வதே தேவலை! அகல்யாவுக்கு அவன் பேசுவதே நாராசமாய் இருக்கும்!
ஒரு நாள் இதே போல் ஏதோ அவளிடம் அவன் ரம்பம் போட்டுக் கொண்டிருக்க, அந்த அறைக்குள் சற்றும் சம்மந்தமில்லாமல் கார்த்தி நுழைந்தான்… இவன் இங்கே, எப்படி என்று அக்லயா யோசிக்கும் சமயம் கார்த்தியும் இவளைத் தான் பார்த்தான்… ஆச்சரியமாய்ப் பார்த்தானே தவிர அவளைத் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை…
கார்த்தியும் அகல்யாவின் பாஸும் நண்பர்கள் என்பது அவர்கள் இருவரும் பேசியதில் புரிந்தது!
உனக்கு இப்படி ஒருத்தன் ஃபிரண்டா என்று கார்த்தியிடம் மனதால் கேட்டபடி அந்த அறையில் இருந்து வெளியேறி விட்டாள்…
அவள் வெளியேறுவதையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவன், அவள் சென்றதும் கார்த்தியிடம் திரும்பி,
“ரொம்ப நல்ல பொண்ணு மச்சான், இங்க தான் படிச்சா, அப்படியே டியூட்டரா சேர்த்துகிட்டோம்… ரொம்ப நாளா என் லவ்வ அவ கிட்ட சொல்ல முயற்சி பண்றேன், ஆனால் கண்டுக்கவே மாட்றா டா…”
கார்த்தி உடனே “லவ்வா? ஒரு பொண்ணை உனக்குப் பிடிச்சா, உடனே லவ்வா? அந்தப் பொண்ணோட நிலை என்னன்னு யோசிக்கத் தேவை இல்லையா? டேய் அவ ஆல்ரெடி கல்யாணம் ஆனவ! அவ புருஷனுக்கு மட்டும் நீ இப்படிப் பேசினது தெரிஞ்சிது, அருவா வெட்டு தான் டா உனக்கு…”
அரண்டு விட்டவன்…”உனக்கு எப்படி டா தெரியும்?” கேட்க…
“எனக்கு இன்னும் என்னென்னவோ தெரியும்! ஆனால் நீ பேசின விஷயத்தை நான் வெளியே சொல்லாமல் இருக்கணும்னா இப்போ என் கூடக் கீரீன் பார்க் வர!”
இருக்கையில் சாய்ந்து கொண்டு தன் நண்பனிடம் பேரம் பேசினான் கார்த்தி…
இவன் கிட்ட போய் உளறிட்டேனே என்று அவன் நொந்து கொண்டே…
“டேய் அங்க எல்லாம் எதற்கு டா, ரொம்ப காஸ்ட்லி மச்சான்…”என்று பின்வாங்க…
“உன் உயிரை விடவா டா காசு முக்கியம்? இப்ப வருவியா இல்லையா?”கார்த்தி மடக்கினான் அவனை…
வேறு வழியில்லாமல் கார்த்தியுடன் போனவன் ஆயிரக் கணக்கில் தண்டம் அழுது, நொந்து திரும்பினான்…
அவள் திருமதி.அகல்யா என்பதைத் தவிரக் கார்த்தி அவனிடம் எதுவும் சொல்லவும் இல்லை… அகல்யாவிடம் அதன் பிறகு இவன் பேசுவானா?
அகல்யா திருமணம் ஆனவள் என்பது மெதுவாய் அந்த மையத்தில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது… யாரும் அவளிடம் நேரிடையாகக் கேட்கவில்லை என்றபோதும், அவர்கள் பழகுவதில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள் தான்… கார்த்தி ஏதும் சொல்லியிருப்பான் போல என்று எண்ணிக்கொண்டாள்…
தன் மீது மட்டும் தான் தவறு என்பதைப் போலப் பேசாமல் போய்விட்டானே…
நன்றி கெட்டவன்! ஆனால் சாமர்த்தியசாலி! சூர்யாவிடம் இருந்தால் தானே வேலையைக் காப்பாற்ற முடியும்… அதனால் தான் தன்னை வேண்டாதவளாக ஒதுக்கிவிட்டுச் செல்கிறானோ என்று நண்பனை அர்ச்சனை செய்து கொண்டாள்…
கார்த்தியால் அவளுக்கு நேர்ந்த நன்மையை அவளுக்கு யார் சொல்வதோ?
பூவிழியின் தொல்லை அதிகமாகிக் கொண்டே போனது… அகல்யாவை திருநெல்வேலி திரும்புமாறு காலையும் மாலையும் சளைக்காமல் அவளுக்குப் போன் செய்தாள்…
அதற்கேற்றார் போல் பெரியம்மாவும் தன் குட்டி பேத்தியின் முதல் பிறந்தநாள் கொண்டாடச் செல்ல வேண்டும் என்று மறுபடியும் அமெரிக்கப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள்…
அவள் இல்லையெனில் இங்குத் தங்குவது சிரமம், இவ்வளவு பெரிய வீட்டில் தனியாய், அதுவும் சென்னையில், முடியவே முடியாது…
பூவிழி வேறு, “வேலைக்கு எல்லாம் போகாதே டீ, இங்க வா… உன்னை நம்பி தானே இங்க வந்தேன், வந்திடு டீ” என்று சளைக்காமல் போனில் சொல்லி விடுவாள்…
திருநெல்வேலி செல்லவே தோன்றவில்லை அகல்யாவுக்கு…
ஆனால் வேறு வழி இல்லை… லேடீஸ் ஹாஸ்டலில் இருக்கவெல்லாம் சம்மதிக்க மாட்டார்கள்!
ஒருவாராய், கிளம்பிவிடலாம் என்ற முடிவுக்கு அவளை எல்லாருமாய்ச் சேர்ந்து வரவழைத்து விட்டனர்… முதல் வேலையாய், வேலையை விட்டாள்…
தன் பெரியம்மாவின் பயணத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்தவளுக்கு, தன் உடைமைகளை அடுக்கும் போது மட்டும் பெரும் கலக்கம்.
மறுபடியும் அந்த ஊரில் அவனைக் காண வேண்டி வந்தால்? ஒரு நாள் பார்த்ததிலேயே மனம் வசமிழந்து விட்டதே?
யோசனை செய்ய முடிந்ததே தவிர, அதற்கு மாற்று வழி எதுவும் தோன்றவில்லை… அகிலனை வரச் சொல்லி பெரியம்மாவை பிளைட் ஏற்றி விட்டு இவளும் அவனுடன் ஊர் திரும்பினாள்…
விதி வலியது தான் ஆனால் சில நேரம் நன்மையும் செய்கிறது!
அந்த ஊருக்குத் தான் எவ்வளவு மகிமை… சொந்த ஊரின் அருமை, சிறிது நாள் வேறு ஊரில் காலம் தள்ளினால் தான் தெரியும் போல!
சில மாதங்கள் சென்னையில் மூச்சு முட்டுவதைப் போல் உணர்ந்தவளுக்கு, நெல்லை காற்றைச் சுவாசித்ததும் சரி ஆனது. ஆனால் கல்லூரி காலத்தில் சென்னையும் நன்றாகத்தானே இருந்தது?
அவள் மனசாட்சி அவளுக்கு எதிராகப் பேசியது.
அதை அடக்கியவள், கண்டவனுக்காக( சூர்யா தான்…) நான் ஏன் சொந்த ஊரை விட்டுத் தள்ளியிருக்க வேண்டும்? என் ஊர் என் உரிமை! இனி எங்கும் செல்ல போவதில்லை என்பதை, அந்த மண்ணை மிதித்ததுமே முடிவெடுத்துவிட்டாள்!
அகல்யா திரும்பி வந்ததில் பூவிழி தான் அதிகச் சந்தோஷப்பட்டது மஹாவை விடவும்… வீட்டில் பெரிதாய் எதுவும் மாறவில்லை, அகிலனை தவிர!
அகிலன் இப்போதெல்லாம் அகல்யாவிடம் அதிகம் பேசுவதில்லை, எது சொல்வதானாலும் பூவிழி மூலம் தான்… சென்னையில் இருக்கும் போதே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டான்… அண்ணனுக்கும் நம் மீது தான் கோபம் போல என்று அகல்யாவும் கண்டுகொள்ளாமல் விட்டாள்…
அகிலனிடம் நிறைய மாற்றம்… மருந்துக்குக் கூடச் சந்தோஷம் இல்லை அவன் முகத்தில்… பேசுவதே கோபமாகத் தான் பேசினான், முக்கியமாய் மனைவியிடம்…
உருகி உருகி இத்தனை வருடங்கள் பூவிழியை காதலித்த தன் அண்ணன் கூடச் சில மாதங்களில் மாறிவிட்டானே? பூவிழியின் பெயரை மூச்சுக்கு முந்நூறு தடவை இப்போதும் சொன்னான் தான், ஆனால் முன்பு போல் பாசமாய் இல்லாமல் அதட்டல் தூக்கலாக இருந்தது!
அகல்யாவுக்கு அவன் அண்ணனின் செய்கை எல்லாம் வினோதமாய் இருந்தது… அவன் வெளியே சென்றதும், மஹாவிடம் கேட்டாள்,
“அண்ணன் ஏன் மா பூவிழிய இப்படி அதட்டுறான்…”?
மஹா பூவிழி இருக்கிறாளா என்று பார்த்துவிட்டு, சொல்ல ஆரம்பித்தாள்…
“அகிலனுக்கு அவன் லீஸுக்கு எடுத்த இடம் எல்லாம் வாடகை ஜாஸ்தி பண்ணிட்டாங்க, அதனால் சொந்தமா நிலம் வாங்களாம்னு முடிவு எடுத்தான்… பூவிழியோட அப்பாவும் கொஞ்சம் காசு போட்டார்… இடம் முடிக்கவே நிறையத் தடைகள்… சொன்ன தேதில முடியாமல் இழுத்தடிச்சிது… அந்த இடத்து பக்கத்தில் ஒரு பிரைவேட் பால் பண்ணை கம்பெனி வேற வருமென்று சொன்னாங்க… சரி இடத்தோட மதிப்பு கூடுமேன்னு நினைத்தோம்.
ஒரு வழியா பத்திர பதிவு எல்லாம் முடிஞ்சி அங்க விவசாயம் ஆரம்பிக்கலாமென்று நினைக்கிற சமயம், கிணத்தில் தண்ணி எல்லாம் வத்தி போச்சு… போர் போட்டாலும் தண்ணி இல்லை… அந்தக் கம்பெனிகாரன் ஆழமான போர் போட்டதில் பக்கத்து நிலத்தில் எல்லாம் தண்ணி இல்லாமல் போச்சு… அகிலன் நிலத்துலையும் தான்…
நிறையப் பணத்தை வேற அந்த இடத்தில் முடக்கிட்டான்… இது எல்லாம் பத்தாதுன்னு ஃபார்ம்ஸ்லையும் விளைச்சல் குறைவு! இப்போது அதைச் சரி பண்ணத் தான் முயற்சி பண்ணிட்டிருக்கான்… எல்லா டென்ஷனையும் பொண்டாட்டி மேல் காட்டி, அவளைப் பாடா படுத்திட்டான்… பாவம் டீ பூவிழி… அவன் என்ன சொன்னாலும் அமைதியா இருக்கா… அதைச் சாக்கா வச்சி அவனும் ஆட்டமா ஆடுறான்…”
பெருமூச்சோடு முடித்தாள் மஹா…
தன் அண்ணனுக்கு இப்படி எல்லாம் கோபம் வரும் என்பது அகல்யாவுக்கு புதிதாய்த் தெரிந்தது… சூர்யாவை இவளாகச் சீண்டி விட்டால் தானே அவனுக்குக் கோபம் வரும்…
இந்தப் பூவிழி இங்கு நடந்த பிரச்சனை பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட அகல்யாவிடம் போனில் சொன்னதில்லை!
இந்த அமுக்குணி இன்னும் மாறவே இல்லை!
சென்னையிலிருந்து வந்த பிறகு அகல்யாவும் அகிலனுடன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டாள்… அவன் அழைக்கவில்லை என்றாலும், தன்னாலானது எதுவும் செய்ய முடியுமா என்று ஒரு நல்லெண்ணம் தான்… பூவிழி சில நேரம் அவர்களுடன் வருவாள், மீதி நேரம் வீட்டில் இருந்து கொள்வாள்…
அகல்யா பூவிழியிடம் “ஏன் இந்த மாதிரி இருக்க? தப்புப் பண்ணா திட்டு வாங்கு… பண்ணாத தப்புக்கெல்லாம் ஏன் டீ அவன் கிட்ட பேச்சு வாங்குற?”என்றதற்கு
பூவிழியோ, “விடு டீ, என்னவோ டென்ஷன்… என் கிட்டையும் காட்டலைன்ன அவரும் என்ன தான் செய்வார்?”
“ஆனாலும் அண்ணன் பண்றது ஓவர் டீ”
“விடு அகல்யா, அவர் என்ன செய்தாலும் எனக்குக் கோபம் வராது டீ… இது எல்லாம் தற்காலிக பிரச்சனை தான்… சரி ஆயிடும்… கொஞ்சம் அவகாசமும், பொறுமையும் தான் தேவை! உன் அண்ணன் தங்கம் டீ…” பூவிழி நிதானமாய்க் கூற, அவளைப் பெருமையாகப் பார்த்தாள் அகல்யா…
“ஆமா தங்கம் தான்! உன்னை உதைக்கவேண்டும் முதலில்…”
அன்றும் அவன் வேலையிலிருந்து திரும்பியதும் ஏதோ திட்ட பொறுமையாக வாங்கிக்கொண்ட பூவிழியை, பார்க்க இப்போது பெருமை போய்க் கோபம் தான் வந்தது அகல்யாவுக்கு…
சரியான மடச்சி!
நீ எதிர்பார்க்கும் பாசம் ஓரிடத்தில் தடை பட்டால் அதனால் ஏற்படும் வலி அதிகம் தான்… ஆனால் அதை நீ உன்னைப் பக்குவப்படுத்த பயன்படுத்திக் கொள். கடினம் தான் என்றாலும் இதுவே நிதர்சனம், அன்று மஹாபாரதச் சீரியலில் கிருஷ்ணன் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்ட அகல்யா, பூவிழி சரியாகத் தான் செய்கிறாள் என்று அமைதியானாள்… தனக்குத் தான் இந்த மாதிரி யோசனை இல்லை!
கடந்த ஒரு இரண்டு வாரமாகவே பூவிழி அதிகம் பணிக்கு வருவதே இல்லை. தோட்டத்தில் வேறு இப்போதேல்லாம் அதிகம் வேலை… அகிலனுக்கு பூவிழி வந்தாக வேண்டும் என்ற நிலை… அடுத்த நாள் கட்டாயம் வர வேண்டும் என்று பூவிழியிடம் கட்டளையிட்டிருந்தான் அகிலன்…
திருநெல்வேலி வந்ததிலிருந்து ஏனோ அகல்யாவுக்கு தப்பு செய்துவிட்டோம் என்று சிறு சலனம் தோன்றியது… இந்தப் பூவிழியின் செயல்களைப் பார்த்து அது கன்பர்ம் ஆனது…
அகிலன் இப்படி எல்லாம் செய்வான்… பொண்டாட்டியை அடிப்பான் என்று யாரும் சத்தியம் செய்திருந்தால் கூட நம்பியிருக்க மாட்டாள்… ஆனால் கண்கூடாகப் பார்த்து விட்டாளே.
என்ன ஆட்டம் போடுகிறான்?
இதில் லவ்வோ லவ் வேறு…
அறிவுகெட்டவன், மனதில் மட்டுமே திட்ட முடிந்தது… நேரில் முறைத்தாலே இந்தப் பூவிழி சண்டைக்கு வருவாள்… சமயத்தில் அவன் அடிக்கும் சமயம் நானும் இரண்டு போடுறேன் டீ உனக்கு என்று சொல்ல தோன்றும், இவனுக்குப் போய் வக்காலத்து வாங்குகிறாயே என்று நினைப்பதோடு சரி.
இந்த அளவுக்குக் கணவனிடம் இறங்கிப் போக வேண்டுமா என்று தோன்றும் அகல்யா பூவிழியை மாற்ற வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் நம் அமுக்குணியோ சத்தமில்லாமல் அகல்யாவின் மனதை மாற்றங்களை உருவாக்கினாள்…
அகிலனை விட்டுத்தராமல் சூர்யாவையும் அடிக்கடி பேச்சில் இழுத்துக் கொள்வாள்…
ஒரு நாள் காலையில் அவசரமாகக் கிளம்பி கொண்டிருந்தவனிடம்,
“அகிலன் உங்க கிட்டக் கொஞ்சம் பேசவேண்டும்” தங்கள் அறையில் வைத்து ஆரம்பித்தாள் பூவிழி…
“வேலைக்குக் கிளம்புற நேரத்தில் என்ன பேச்சு, கார்லபோகும் போது பேசிக்கலாம். சீக்கிரம் கிளம்பு, சாப்பாடு ரெடியா?” பரபரத்தபடி கீழே வந்துவிட்டான்…
“ப்ளீஸ் அகிலன் ஒரு அஞ்சு நிமிஷம் கேளுங்க” அவளைச் சட்டை செய்யாமல் போனவனைக் கைபற்றி இழுக்க, அவனுக்கு எங்கேயிருந்து தான் அவ்வளவு ஆத்திரமோ?
கைவைத்துவிட்டான் அவள் கன்னத்தில்…
“அங்க லேபர்ஸ் எல்லாம் வந்துட்டாங்க, நானே லேட் ஆயிடிச்சுன்னு சொல்றேன், கதையா பேசுற”
சத்தம் கேட்டு அங்கே மஹாவும் அகல்யாவும் அங்குக் கூடிவிட்டனர்… கன்னத்தைப் பிடித்தபடி நின்றிருந்த தன் தோழியைப் பார்க்க வேதனையாய் இருந்தது அகல்யாவுக்கு… அடிப்பதை என்ன ஆண் குலத்துக்குக் குத்தகைக்கா விட்டிருக்கிறார்கள்?
அண்ணனை மனதில் வசைபாடியபடி அழுது கொண்டிருந்த பூவிழியை நெருங்கியவளை மகிழ்ச்சியில் துள்ள செய்தது அவள் வார்த்தைகள்…
“அகிலன், நீங்க அப்பா ஆகப் போறீங்க…”பூவிழி அழுகையுடன் நிறுத்தி நிதானமாகச் சொன்னாள்!
நிசப்தம்…
சிலை போல் இருந்தான் அகிலன்!
22
அந்தக் களேபரத்தின் சுவடு தெரியாமல் அனைவரின் முகத்திலும் சந்தோஷம் குடிகொண்டது… மஹா சீனி டப்பாவை எடுத்து வந்தாள்… அகல்யா பூவிழியை அணைத்துக் கொண்டாள்…
அகிலன் நிலையை என்ன சொல்ல?
அசையாமல் நின்றுகொண்டிருந்தான்…
நல்ல விஷயத்தைச் சொல்ல வந்தவளை அடித்துவிட்டோமே என்ற வருத்தம் ஒரு பக்கம், தான் தந்தை ஆகப் போகிறேன் என்ற சந்தோஷம் ஒரு பக்கம்… புவியில் அவன் கால்கள் படாததைப் போலுணர்ந்தவன், மஹா அவன் வாயில் சீனியை போட்டதும் நினைவுக்கு வந்தான்… பூவிழி தோளில் சாய்ந்தபடி நின்றிருந்த அகல்யாவை நெருங்கி,
“கொஞ்சம் என் பொண்டாட்டியை விடுறியா” என்று அவளைச் சற்று தள்ளி நிறுத்திவிட்டு, பூவிழியிடம் திரும்பி,
“சாரி மா, ஏதோ டென்ஷன்… அடிச்சிட்டேன்”என்று அவள் கன்னத்தைத் தடவி விட்டான்…
அகல்யாவுக்கு ஆத்திரம் ஜாஸ்தியானது, “தடவி விட்டா வலி சரி ஆயிடுமா? நீ இப்போ ஒண்ணு வாங்கிப் பாரேன்…” என்றாள்.
திரும்பி அவளை முறைத்தவன் எதுவும் சொல்லாமல், பூவிழியின் கைப்பற்றி அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு அவள் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தவன், “அயம் சோ ஹாப்பி டீ… அடித்ததுக்கு மன்னிச்சிடு பூவிழி… சமயத்தில் இப்படித் தான் ஏதாவது செஞ்சிடுறேன்… அப்புறம் ஃபீல் பண்ணுவேன் தெரியுமா! இன்னிக்கி வேலை முடிச்சிட்டு வந்து உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகிறேன், என்ன” என்றுவிட்டு இன்னுமொரு அவசர முத்தம் கொடுத்து கிளம்பிவிட்டான்…
அன்று முழுவதும் அவன் அறைந்த கைத்தடம் பூவிழி கன்னத்தில் தன் முத்திரையை விட மறுத்தது!
இந்தப் பூவிழி இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது இது தானா?
அடிமைத்தனம் போல் தோன்றினாலும், அவள் கணவனின் தவற்றை அவனே உணரும் படி செய்த விட்டாள் தானே, இப்படி இன்னொரு முறை அவன் செய்வானா? இது அவரவர் கணவரைப் பொருத்தும் உள்ளது… அகிலன் நல்லவன், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதைப் போல் இருக்க ஆரம்பித்திருந்தான்…
எல்லாருக்கும் இது பொருந்துமா? என்னவோ? ஆனால் பூவிழியின் இந்த நிதானம் நம் நாயகியை அசைத்துத் தான் பார்த்தது… சின்னச் சின்ன விஷயத்தைத் தான் எவ்வளவு பெரிதாக்கினோம், அவள் பெரிய விஷயத்தைக் கூட ஒன்றும் இல்லாததைப் போலக் காட்டி விட்டாளே…
தான் செய்தது தான் தப்போ?
அகிலன் பிரச்சனை மெல்ல மெல்லச் சரி ஆகிக் கொண்டே இருந்தது… பிள்ளைதாச்சி என்று மனமிறங்கியிருந்தான் என்றாலும் சில சமயம் எரிச்சல் படத் தான் செய்தான் பூவிழியிடம்… வாந்தி மயக்கம் என்று அவள் பாடாய் பட, இவன் வேறு அவளை ஆபிஸ் வருவியா என்று தினமும் நச்சரித்தான். அகல்யா தான் சண்டை போட்டாள்…
“அண்ணா அவளுக்கே முடியலை, நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்கே? இந்த நேரத்தில் அவ ரெஸ்ட் எடுக்கவேண்டும்… என்ன வேலைன்னு என் கிட்ட சொல்லு நான் செய்றேன்” என்பாள்.
பூவிழி தன் நான்காம் மாதத்தில் இருந்து வேலைக்கு வர ஆரம்பித்தாள்…
சுதா, நம்பி அவளைத் தடுத்தும் கேட்கவில்லை…
‘அவருக்குக் கொஞ்சம் உதவி பண்ணவேண்டும்’ என்று வந்துவிட்டாள்…
அப்படித் தான் அங்கு நிலையும் இருந்தது… ஆர்டர் விவரம் எல்லாமே இவளுக்குத் தான் தெரியும்… அகல்யாவுக்குமே பூவிழி சொன்னால் தான் சிலதை செய்ய முடியும்… இரண்டு மாதங்களில் தன் வேலைகளை எல்லாம் அகல்யாவுக்கு ஒதுக்கிவிட்டு, மேலாளரின் பார்வைக்கும் சிலதை கொடுத்து முடித்ததும், பூவிழி திரும்ப வீட்டில் இருக்க ஆரம்பித்தாள்…
அகிலனின் புது நிலத்தில், குறைந்த அளவு நீரில் விளைவிப்பது போல் சவுக்குத் தோட்டம் அமைத்துவிட்டான்… நாற்று வளரும் வரை நீரை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணம், அதன் பிறகு அதிகம் தேவை இல்லை… அதனால் அந்தப் பிரச்சனை ஓரளவுக்கு முடிந்தது!
நாட்கள் வேகமாய் நகர்ந்தது…
ஏழாம் மாதம் வளைகாப்புச் செய்து பூவிழி அவள் அம்மா வீட்டுக்குப் போக வேண்டும் என்று முடிவானது…
அகிலனா எல்லா விஷயத்திலும் அடம்பிடித்தான்!
வளைகாப்பு விஷயத்திலும் அது தொடர்ந்தது, ஒன்பதாம் மாதம் வைக்கலாம் என்றான்… ஒருவழியாய் உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்பது போல், ஏழாம் மாதம் வளைகாப்பு… ஆனால் ஒன்பது மாதங்களுக்கு மேல் தான் பூவிழி அம்மா வீட்டுக்குப் போவாள் என்று முடிவாயிற்று…
வளைகாப்பு ஏற்பாடுகளில் அகல்யா ஆர்வமுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்…
அவர்கள் வீட்டில் வைத்து நடந்த அந்த விசேஷத்தில் ஓடி ஆடி வேலை செய்த அகல்யாவை அங்கு வேறு பார்வையில் பார்த்தவர்களும் இருந்தனர்…
நான்கு பேருக்கு நம்மைப் பிடிக்குமானால், நாற்பது பேருக்கு நம்மைப் பிடிக்காது… இது நடப்பு தானே? அந்த நாலை எப்படி நாற்பதாக மாற்ற வேண்டும்? ஒன்றும் மெனக்கிட வேண்டாம், நாம் நாமாக இருந்தாலே போதும்…
வளைகாப்பு வீட்டில் சிலருக்கு மட்டுமே தெரிந்த அகல்யாவின் விஷயம் அவர்கள் எல்லாம் பேசி பேசி அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் படி ஆனது… பூவிழிக்கு குங்குமம் வைத்து வளையல் அணிவிக்க அகல்யாவை அழைத்தனர், அவள் செல்கையில் யாரோ அவள் கையைப் பிடித்திழுத்தனர்…
என்னவென்று பார்க்க,
“பூவிழி வாழ்க்கை நல்லா இருக்கவேண்டும் மா, அதனால் நீ அந்தச் சம்பிரதாயம் எல்லாம் செய்யக் கூடாது…” என்றுவிட்டாள் பூவிழியின் அத்தை…
பூவிழி கேட்டிருக்க வாய்ப்பில்லை… ஆனால் அந்தப் பெண்மணியைச் சுற்றியிருந்த அனைவரும் அவளைப் பரிதாபமாகப் பார்த்தனர்… அகல்யாவுக்கு அவ்வளவு பேர் முன்னிலையில் அந்த அம்மாள் அப்படிச் சொன்னது மிகவும் அவமானமாகவும் போனது…
“சரி மா”, என்று அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு ஒதுங்கியவள், மேலே மொட்டை மாடிக்குச் சென்று ஒதுங்கிக் கொண்டாள்… இது புதிதில்லை தான் அகல்யாவுக்கு.
அவள் நெல்லை வந்ததிலிருந்து இதே தொல்லை தான்,
தங்கள் இல்லத் திருமணம், சீமந்தம், கொலு என்று அழைக்க யாரும் வருவார்கள், அச்சமயம் அகல்யாவும் அங்குத் தானிருப்பாள், இவளிடம் நன்றாகப் பேசுவார்கள், ஆனால் குங்குமம் தரும் நேரம் மட்டும் அவளைத் தவிர்த்து விட்டு கிட்சனுக்குச் சென்று மஹாவுக்கும், ஹாலில் பூவிழிக்கும் தருவார்கள்… அறிவு கெட்ட ஜந்துக்கள்!
குங்குமம் பெண்ணின் பிறப்புரிமை, அதைப் பாதியில் பறிக்க யாருக்கும் எந்த நிலையிலும் உரிமை இல்லை… அப்படி ஒரு பெண்ணைத் தவிர்த்து மற்றவருக்குக் கொடுக்கும் போது, அவள் மனம் என்ன பாடு படும்? அது மட்டும் பாவம் இல்லையா? பெண்ணே தான் பெண்ணின் எதிரி என்பது இது போல் விஷயத்தில் உண்மை.
மஹா கவனிக்காமல் விட்டதை, பூவிழி தான் சுட்டிக்காட்டினாள்…
“அத்தை, அவர்கள் யாரும் அகல்யாவுக்கு குடுக்குறதே இல்லை…”
ஒரு தாயின் மனநிலையை எப்படி விவரிக்க?
தங்கள் வீட்டில் இப்படி ஒரு பெண் இருந்து மற்றவர்கள் அவளை ஒதுக்கினால், இவர்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்?
மொட்டை மாடியில் சென்று ஒதுங்கிய அகல்யாவை பூவிழி தேட வைத்தாள், அவளிடம் சொல்லிவிட்டு தான் செல்வேன் என்று விடாப்பிடியாக அதே இடத்தில் நின்றவளை அவள் அத்தை அதட்ட, அகிலனோ தான் போய்ப் பார்க்கிறேன் என்று அகல்யாவை தேடி போனான்…
எல்லா இடமும் தேடியபடி வந்தவன், மாடியில் அவளைக் காண, அங்கு அகல்யா அழுதபடியிருந்தாள்… இவன் அழைத்ததும், அவன் மேல் சாய்ந்தபடி மேலும் அழுத தன் தங்கையிடம்,
“ஏன் மா, என்ன ஆச்சு?”
அழுதபடியே பூவிழியின் அத்தை செய்ததைச் சொல்ல, அவனுக்கு ரொளத்திரம் கூடி விட்டது… “என்ன நினைச்சிட்டு இருக்கிறார்கள், வர்றேன் இரு” என்று கிளம்பியவனைத் தடுத்தவள்…
“நீ வேற ஏதும் பிரச்சனை செஞ்சி அதுக்கும் நான் தான் காரணமென்று பேர் வாங்கித் தராதே அகிலன்… என் தலையெழுத்து படி நடக்கட்டும்…”
அவளைச் சமாதானப் படுத்த வார்த்தைகள் கிடைக்காமல், அவள் சொன்னதுக்கு அடங்கிய அகிலன், “சரி அழாதே விடு, பூவிழி உன் கிட்ட சொல்லிட்டு தான் போவேனென்று நிக்கிறா, கீழ வா…” என்று பூவிழியிடம் அழைத்து வந்தான்…
பூவிழி அகல்யாவின் அழுத முகத்தைப் பார்த்தவள், “என்ன டீ ஆச்சு” என்று தன் கணவனையும், அவளையும் மாறி மாறிப் பார்த்தாள்… அகிலன் பிறகு சொல்வதாக ஜாடை காட்ட, அதை விட்டவள்… அகல்யாவின் கையைப் பற்றி வாசல் வரை வந்தாள்…
அகல்யாவுக்கு பயம், அந்த அம்மாள் மறுபடியும் ஏதும் சொன்னால், தன்னால் தாங்க முடியாது… கையை உருவிக்கொள்ள முயன்றாள் ஆனாலும் பூவிழி விடவில்லை… அவள் பயந்தபடி அந்த அத்தை வந்தாள்,
“பூவிழி என்ன காரியம் பண்றே? சுதா நீ அவ கையைப் பிடி” என்று அகல்யாவை நகர்த்தப் பார்க்க, பூவிழியோ அனைவர் முன்பும்,
“அத்தை, நீங்க உங்க வேலையை பாருங்க, அகல்யாவை விட எனக்கு யாரும் நல்லது நினைச்சிட மாட்டார்கள், “முகத்தில் அடிப்பது போல் சொல்லிவிட்டாள்… அத்தைகாரி கோபம் வந்து ஒதுங்கிக்கொண்டாள்…
அகிலன் மனதில் பூவிழியை மெச்சிக் கொண்டான்… கார் புறப்படும் வரை அகல்யாவின் கையைப் பூவிழி விடவில்லை. இதுநாள் வரை அவர்கள் இருவரின் நட்பை சாதாரணமாக நினைத்திருப்பார்கள் அனைவரும்!
ஆனால் அப்படி இல்லையென்று பூவிழி அன்று காட்டிவிட்டாள்.
*****
சூர்யா சிந்தனையில் லயித்தபடி வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்… மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், நன்றாகத்தானே அமைந்தது… ஆனால் பாதியில் விட்டு அவள் போகவேண்டும் என்பது யார் கொடுத்த வரமோ( ராஜம் தான் என்பது அவனுக்கு விளங்கவில்லை!)
வாழ்க்கை சூனியமாய் இருந்தது…
பணியிடம், இல்லம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா இடமும் நரகம் தான்… அவனாய் இந்தச் சூழலில் இருந்து வெளிநாட்டுக்கு இரண்டு மூன்று முறை தப்பித்துக் கொண்டான். எங்கே போனாலும், அவள் நினைவுகளை மறக்க முடியுமா?
அவன் ஒரு உண்மையை உணர மறந்து விட்டான்…
அவள் சொல்லிய எதையும் அவன் நம்பவில்லை, அவளை மறுபடியும் சென்று அழைக்கவுமில்லை. தான் எதுவும் செய்யாமல், தானாக எப்படி நல்ல விஷயங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்?
எப் எம்ல் வேறு ‘‘நிலாவே வா செல்லாதே வா…’‘‘ என்ற பாட்டு, அவன் நிலையைப் பறைசாற்றியது போல! இந்தப் பாட்டை எப்படி எழுதினார்கள்? எழுதியவருக்கும் இதே போல் பிரச்சனை இருந்திருக்குமோ?
அகல்யாவை நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும், அவள் நினைப்பு அவனை விடுவதில்லை… அதனால் வந்த கோபத்தை எல்லாம் வீட்டிலும் நிறுவனத்திலும் காட்டினான், தன் இயல்புக்கு மாறாக!
பூவிழி இல்லாதது தனிமையாய் தோன்றியது அகல்யாவுக்கு, ஒரு வாரமே இப்படி இருக்கே? அவளுடன் இருந்தால் தேவலை! சூர்யாவை நினைக்காத மனம் இப்போது அவனை நினைப்பதையே வேலையாக வைத்திருந்தது… இப்போதும் அவள் அறையில் என்றோ சூர்யா வைத்து விட்டிருந்த அவன் சட்டையைப் பிடித்தபடி அவனை நினைத்துக்கொண்டிருந்தாள்… கண்ணில் கண்ணீர் குளம் பெருக்கெடுத்தது!
எவ்வளவு நேரம் அழுதிருப்பாளோ? திடீரென நினைவுக்கு வந்தவள் யாரும் பார்த்துவிடுவார்கள், என்று கண்ணைத் துடைத்தபடி கட்டிலில் இருந்து எழ, அங்குப் பூவிழி நின்றிருந்தாள், இவளைப் பார்த்தபடி…
அவளைப் பார்த்ததும் அகல்யா கையில் இருந்த சூர்யாவின் சட்டையை மறைக்க முயற்சிக்க…
“அகிலன் சட்டையா டீ, இங்க எப்படி வந்தது?” பூவிழி கேட்க…
“இல்லை அது வேற” என்று திரும்பிய அகல்யாவை… “அது சூர்யா சட்டையா?” நேரிடையாக மடக்கினாள்…
அகல்யா ஆமா… ஆனால் இல்லை என்பது போல் தலையை ஆட்டி வைத்து… சட்டென்று,
“நீ இங்க என்ன பண்றே? எப்போ வந்த? இன்னும் கொஞ்ச நாள் அம்மா வீட்டில் இருக்கலாம்ல?”என்று பேச்சை மாற்றி விட்டாள்…
பூவிழியை வளைகாப்பு முடிந்ததும் அழைத்துக் கொண்டு போனார்கள். ஆனால் அவள் இல்லாமல் வீடு நல்லாவே இல்லை என்று மறுபடியும் அழைத்து வந்துவிட்டானாம் அகிலன்… பூவிழியும் தன் அன்னையிடம் இங்கேயே இருக்கிறேன் என்று வந்து விட்டாளாம்!
மூடிக்கேற்ற ஜாடிதான்!
மாடியிலிருந்து வந்தவர்கள், ஹால் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, பூவிழி அவள் மேடான வயிற்றில் கையை வைத்தபடி சிரித்துக்கொண்டாள்… என்னவென்று அகல்யா தோழியைப் பார்க்க அவள் கையைத் தன் வயிற்றின் மேல் வைக்கச் சொல்ல, குழந்தை துள்ளியது தெரிந்தது… எல்லாப் பக்கமும் அசைவு தெரிந்தது… அகல்யாவும் ஆசையாகத் தோழியின் வயிற்றைத் தடவினாள்…
“குழந்தை உன் குரலை கேட்டதும் குதிக்கிது டீ, அம்மா வீட்டில் ரொம்ப அசைவே இல்லை தெரியுமா? அத்தையைத் தான் என் குட்டிக்கும் பிடித்திருக்கிறது போல, என்னை மாதிரியே” பெண்மையின் முழுப் பரிமாணத்தில் இருந்த தன் தோழியை மெய்சிலிர்த்துப் பார்த்தாள் அகல்யா…
இவர்கள் பேச்சில் அகிலனும் சேர்ந்து கொண்டான்… பூவிழியின் வயிற்றின் மேல் ஆறு கைகளும் தொட்டுக் கொண்டிருக்க, அசதி ஆன குழந்தை அப்போதைக்கு அசைவதை நிறுத்திக் கொண்டது…
அதையும் விடாமல், “டேய் கண்ணா, தூங்கிட்டியா? அப்பா டா செல்லம்”என்று வயிற்றுப் பக்கம் சென்று அகிலன் பேசிக்கொண்டிருக்க, பூவிழியும் அகல்யாவும் நகைத்துக்கொண்டனர்…
கூட்டுக்குள் எவ்வளவு நாள் இருக்க முடியும்? வெளியே என்றேனும் வரத் தானே வேண்டும்? அதே போல் அகல்யாவும் தன் கூட்டிலிருந்து வெளியே வந்துவிட்டாள்… சூர்யாவின் பேச்சை எடுத்தாழொழிய, பழைய அகல்யாவாய் இருந்தாள்…
இப்போதும், “எங்களைத் தொந்தரவு பண்ணது பத்தாதுன்னு, இப்போ குட்டியை வேற பண்றியா? தள்ளிப் போ அகிலன்…” அகல்யா சொல்ல, அவன் விடுவானா?
“ஐயோ என் பொண்டாட்டி சோர்ந்து தெரியுறா பார், போ அவளுக்கு மாதுளை ஜூஸ் போட்டுக் கொண்டுவா, போ டீ” தங்கையை விரட்டினான்…
அகிலன், குழந்தையால் மாறினான் என்பதை விடக் குழந்தையாகவே மாறிவிட்டான்… வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொஞ்சுகிறேன் பேர்வழி என்று பூவிழியை தான் அதிகம் கொஞ்சினான்… அம்மா தங்கை இருப்பதெல்லாம், அவன் கண்ணில் படுவதே இல்லை!
23
அவள் பழச்சாறு தயாரித்து எடுத்து வரும்போது, அகிலன் பூவிழியிடம் பேசிக்கொண்டிருந்தது கேட்டது…
“உன்னை ரொம்பப் படுத்திட்டேன் பூவிழி, ஏன் எனக்கு அப்படிக் கோபம் வந்ததுன்னே தெரியலை… அதை எல்லாம் மனசில் வச்சிக்காத என்ன?” என்றதற்கு,
பூவோ, “மறப்போம் மன்னிப்போம்” என்று முடித்துக்கொண்டாள்…
தொண்டையைக் கனைத்தபடி அகல்யா அங்குச் சென்று அவர்கள் இருவருக்கும் பழரசத்தைக் கொடுத்துவிட்டு தன் அறையில் அடைந்து கொண்டாள்…
அகிலன் சொல்லிவிட்டான், அவளோ சொல்லவேண்டும் என்று நினைக்கிறாள்…
யாரோ ஆரம்பித்து வைத்த தப்புக்கு, நானும் சூர்யாவும் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? சூர்யா அகிலனை போல் என்னை என்றேனும் அடித்தானா இல்லை திட்டத்தான் செய்தானா?
அவன் அப்படிச் செய்த சமயம் எல்லாம் நானே உண்டாக்கிய சூழ்நிலைகள் தானே? அவன் வந்து அழைத்ததற்கு வரமுடியாது என்று விட்டேனே, இனியும் என்னை அழைக்க வருவானா?!
கேள்விக்குறியாய் இருந்தது அவள் வாழ்க்கை!
இதற்கிடையில் சுதா, தன் மகள் பூவிழியை அவர்கள் வீட்டுக்குச் சீக்கிரம் வரச் சொல்லி கட்டாயப்படுத்த, அதையே மஹாவும் சொல்ல, அகிலன் தாமதப்படுத்தி, பின் ஒரு வழியாய், ஒன்பதாம் மாதத்தில் தன் மனைவியை அவள் அன்னை வீட்டுக்குச் செல்ல சம்மதித்தான்…
அதன்பிறகு இவனும் பாதி நாள் அங்கே சென்றுவிடுவான்… இப்படியே சென்று கொண்டிருக்க, ஒரு நல்ல நாளில் தன் பிஞ்சு பாதங்களால் பூமியில் இறங்கி வந்து அந்தக் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி நிம்மதி எல்லாவற்றையும் கொண்டு வந்தான் விஷ்வா, அகிலன் பூவிழியின் சிரேஷ்ட புதல்வன்!
சூர்யா அன்று கம்பெனிக்குத் தாமதமாகச் செல்ல எத்தனிக்க, மெதுவாகக் கிளம்பி கீழே சாப்பிட வந்தான்… உணவு மேஜையில் ராமானுஜமும் இருந்தார்… மகனை பார்த்த ராமானுஜமிற்கு வேதனையாக இருந்தது… திருமணம் ஆனதே தாமதம் இதில் இப்படி வேறு ஒரு சோதனை… மகனிடம் மெதுவாக ஆரம்பித்தார்…
“சூர்யா எவ்வளவு நாள் தான் இப்படியே இருப்ப? சண்டை வருவது எங்கையும் நடக்கிறது தான். நீ போய் மருமகளைச் சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வா பா…”
அவன் பதிலேதும் சொல்லவில்லை. சமீப காலமாக அவனும் அதையே தான் எண்ணிக்கொண்டிருந்தான்… ஆனால் அவள் வர மறுத்துவிட்டால் தன் நிலை?
அதைச் சிந்தித்ததால் வந்த தயக்கம் அவனைச் செயல்படாமல் வைத்தது… ஆனால் எண்ணம் எல்லாம் அகல்யாவுடன் சேர்ந்து வாழவேண்டும் என்பதிலேயே இருந்தது…
எண்ணங்கள் போல் தான் வாழ்க்கை அமையும் என்பது உண்மை தான் போல! அவன் எண்ணப்படி அகல்யாவின் மனமும் அவன் பக்கம் சாய ஆரம்பித்திருக்கிறது என்பதை அவன் அறியவில்லை…
சூர்யாவும் அவன் அப்பாவும் அமைதியாகச் சாப்பிட்டிருந்த சமயம் பின்கட்டில் ராஜம் காதில் ராமானுஜம் பேசியதெல்லாம் விழுந்தது.
இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சு? சூர்யா ஏன் போய்க் கூப்பிடவேண்டும்? ஏன் அவ இறங்கி வர மாட்டாளா? அதே எரிச்சலில் இருந்தவள் வீட்டு வேலை செய்யும் லட்சுமியிடம், எரிந்து விழுந்தாள்…
சிவனே என்று பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவளை திட்டினால் விடுவாளா? அதிலும் மருமகளை எப்படியெல்லாம் படுத்தி வைத்தால் என்பதைக் கண்கூடாகப் பார்த்த ஒரே ஜீவனுக்கு அதையும் நினைத்துக் கோபம் வந்துவிட்டது.
தப்பு செய்து திட்டினாலே இந்தக் காலத்தில் யாருக்கும் பிடிப்பதில்லை! அப்படியிருக்க ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்தவளை ராஜம் காரணமேயில்லாமல் ஏதோ சொல்ல, அவளுக்கு அன்று பற்றிக்கொண்டது… கண்டபடி பேச ஆரம்பித்தாள் ராஜமை…
“நீ எல்லாம் ஒரு பொம்பளையா? ஒருத்தர் ஒழுங்கா இருந்தா உனக்குப் பிடிக்காதே” குரலை உயர்த்த ஆரம்பித்தாள்… ராஜமும் விடவில்லை,
“ஏய் மரியாதையா பேசு”
“உனக்கு என்ன மரியாதை? இப்போ நான் என்ன தப்பு பண்ணேன்னு என்னைக் கத்துன? நீ சம்பளம் குடுத்தா, என்ன வேணாலும் பேசுவியா? அதான் பேசி பேசி வீட்டுக்கு வந்த மருமகளை அனுப்பிட்டியே, அது பத்தாதா?”
“ஏய்… என்ன பேசற நீ?” ராஜத்திற்கு லட்சுமி பேசுவது இருவர் காதிலும் விழுந்துவிடக் கூடாதே என்ற தவிப்பிருந்தது…
ஆனால் சூர்யாவுக்கும் ராமானுஜத்திற்கும் லட்சுமி பேசியது எல்லாம் தெளிவாய் கேட்டது…
“நானென்ன இல்லாததையா சொல்றேன்? அந்தப் பொண்ணை நீ படுத்தின பாட்டைத் தான் நான் கண்டு இருக்கிறேனே… கொஞ்சமாவது மருமக பொண்ணுன்னு வெச்சு பார்த்தியா நீ? ஓட ஓட விரட்டின… எனக்கென்ன ஒன்னும் தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கியா?” என்று லட்சுமி ராஜத்தை கன்னாபின்னாவெனப் பேச, ராஜத்தின் முகம் வெளுத்தது… தன் சாயம் வெளுத்து விடுமோ என்று அஞ்ச, லட்சுமி சூர்யா இருந்த திசையை நோக்கி,
“தம்பி, உன் பொண்டாட்டி மேல் ஒரு தப்பும் இருந்திருக்காது பா, உங்க ஆத்தாகாரியோட இருந்தா யாராலையும் சமாளிக்க முடியாது, விட்டுவிட்டு தான் போயிருப்பாங்க… நான் இருக்கும்போதே அந்தப் பொண்ணை நிறையத் திட்டியிருக்கு இது!” என்று இடைவெளி விட்டவள், அன்று நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினாள்.
“ அந்தப் பொண்ணு இதுகிட்ட இருந்து தப்பித்து தோட்டமே கதியா இருக்கும்… பாவம் ப்பா உன் பொண்டாட்டி… இந்தப் பொம்பளையோட மல்லுக்கட்டி பார்த்துட்டு சமாளிக்க முடியாமல் தான் போய்டுச்சு… சரியான ராட்சசி, நடிப்புக்காரி… பெற்றவளை நம்பறதுக்கும் ஒரு வரைமுறை இருக்குப்பா…” என்று பலதும் கூறிவிட்டு மட மடவென்று போய்விட்டாள்…
சூர்யா ராமானுஜமை ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்… அவர்கள் இருவருக்குமே அதிர்ச்சி!
ராமானுஜத்திற்கு குற்ற உணர்வு!
ராஜத்தை அழைத்தார் ராமானுஜம்!
ராஜம் வருவாளா இவர்கள் முன்னால்?
வரவேயில்லை… தன் அம்மா தான் தன் பிரச்சனைக்குக் காரணமா? இந்தளவு அவளைப் படுத்தியிருக்கிறாரா? கண்ணிருந்தும் இதையெல்லாம் நான் பாராமல் விட்டுவிட்டேனா?
இவர்கள் அவளை எதுவுமே செய்யாமல், அகல்யா அவ்வளவு தூரம் தன்னிடம் சொல்வாளா?
நான் தான் விசாரிக்காமல், இப்போது இழந்து நிற்கிறேனா?
தன்னிடம் சம்பளம் வாங்கும் லட்சுமிக்கு இருக்கும் அறிவும் கூடத் தனக்கு இல்லையே? என்னுடையவளை நம்பவில்லையே!
ராமானுஜம் விடவில்லை, மறுபடியும் கோபமாய் அழைத்தவரின் முன் வந்து நின்றாள் அவர் மனைவி…
“லட்சுமி சொன்னது உண்மையா? நீ மருமகளை ஏதும் கஷ்டபடுத்தினியா?”
சூர்யாவும் மெளனமாகத் தன் தாயை பார்த்துக்கொண்டிருந்தான்…
“ஏங்க ஒரு வேலைக்காரி சொல்றதை போய் நம்புறீங்க? நான் அப்படி என்னைக்காவது செஞ்சிருக்கேனா?” ராஜம் தனக்குத் தானே ஆஜர் ஆனாள்…
“அதான் சீதா இருக்கும் போது ஒரு நாள் அந்தப் பொண்ணை வசை பாடுனியே? இன்னும் என்னவெல்லாம் செய்தே? நம்ம பையன் வாழ்க்கையைக் குழி தோண்டி புதைச்சிட்ட இல்லையா?”
“நான் அந்த மாதிரி செய்வேனாங்க?”
“அப்ப லட்சுமி சொன்னதெல்லாம் பொய்யா?” ராஜத்தை கூர்மையாகப் பார்த்த ராமானுஜம் கோபமாகக் கேட்க, ராஜத்தினால் பதில் கூற முடியவில்லை.
பதட்டத்தில் ராமானுஜத்திற்கு மூச்சு வாங்கியது…
சூர்யா சட்டென்று எழுந்தவன், தன் அம்மாவை நோக்கி அனல் பார்வை வீசியபடி,
“அப்ப நெஞ்சு வலி வந்தது? அதான் எவ்ளோ கெஞ்சியும் ஆஸ்பத்திரிக்கு வரலையா?”
எந்த உணர்வும் இல்லாமல் கேட்க, ராஜம் வேறு புறம் பார்த்தாள்.
“நான் உனக்கு என்னம்மா பாவம் செய்தேன்? அவ என்ன செய்தா? என்னை நம்பி இந்த வீட்டுக்கு வந்தவ!” என்று கேட்க, அதற்கும் அவள் பதில் கூறவில்லை.
“உன்னை நம்பினது தான் மா என் தப்பு…”
அவள் பதில் கூறுமுன் அந்த இடத்தை விட்டு அகன்றான்…
சில எதிர்பாராத விஷயங்களை ஏற்றுக்கொள்ளச் சிரமமாக இருந்தது… அவன் தந்தை தன் அன்னையை வசைபாடுவதை எல்லாம் கேட்டபடி அலுவலகம் கிளம்பிவிட்டான்!
அன்று அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை சூர்யாவுக்கு…
தன் அன்னையும் அவன் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறாள்! வேறு யாரிடம் கேட்கலாம்… ராமானுஜமுக்கும் இந்த விஷயம் புதிது என்று தெரிந்தது… சீதாவுக்கு தெரிந்திருக்குமா?
சொல்ல வந்த தன்னவளின் பேச்சை சரியாகக் கவனிக்காமல், இப்போது யாரிடம் கேட்கலாம் என்று யோசிக்கிறேன்! இது என்ன வேலை? நொந்து போய், சீதாவுக்கு தொலைபேசியில் அழைத்தான். நேரிடையாக விஷயத்துக்கு வந்தான்…
“அம்மாவுக்கும் அகல்யாவுக்கும் என்ன பிரச்சனை சீதா? உனக்குத் தெரியுமா? உண்மையைச் சொல்லும்மா… நான் அம்மா கிட்ட நீ சொன்னதா காட்டிக்க மாட்டேன்…”
“ஏன் அண்ணா… அகல்யா எதுவும் சொல்லலையா?” அவளும் நேரடியாகக் கேட்க
“நீ சொல்லு சீதா…”
சீதா ஆரம்பித்தாள்… “அகல்யா மேல் எந்தத் தப்பும் இருக்காது. அம்மாவுக்கு ஏனோ அகல்யாவை முதலில் இருந்தே பிடிக்கவில்லை! அவர்கள் அடக்கி வைக்கவேண்டுமென்று நினைத்தது அவ கிட்ட நடக்கலை… நீ வேற அவ பக்கம் சாயுறேன்னு அவங்களுக்குக் கவலை… இதுதான் விஷயம்!” என்று அவள் இடைவெளி விட,
“அதுக்காகவா இந்தளவு பிரச்சனை வளர்ந்தது?” அவனுக்கு உண்மையில் புரியவில்லை. ஆண்களின் புரிதலும் பெண்களின் புரிதலும் வேறு என்பதை அவன் நிரூபித்தான்.
அன்றொருநாள் அகல்யா தன்னிடம் கூறி அழுததை எல்லாம் ஒன்று விடாமல் தன் தமையனிடம் கூறினாள் சீதா.
இவ்வளவு நடந்திருக்கிறதா? அவனால் பேச முடியவில்லை. எதுவும் பேசாமல் சீதா கூறியவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டான்.
“அம்மா சொன்னாங்கன்னு அகல்யா ஏதும் சொல்லியிருந்தா நீ அதை நம்பித் தான் ஆகவேண்டும்… நாம் பார்த்து வளர்ந்த அம்மா இப்ப இல்லை! இவங்க ரொம்ப மாறிட்டாங்க, என் மாமியாரே பரவாயில்லைன்னு …”
சூர்யாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது… அதிகம் பேசாத தன் தங்கையே இன்று தங்கள் அன்னையின் மறுபக்கத்தைச் சொல்கிறாளே?
“ஏன் இவ்வளவு நாள் இதை நீ என் கிட்ட சொல்லலை?”
“உனக்குத் தெரியாதென்று எனக்குத் தெரியாது… அகல்யா உன் பொண்டாட்டி தானே, அவ உனக்குச் சொல்லலையா?” என்று கேட்க,
“ம்ம்ம் சொல்லிருக்கா… ஆனால் நான் நம்பலை… வேணும்னே சொல்றான்னு நெனச்சுட்டேன்…” குரல் உள்ளே சென்றுவிட்டது அவனுக்கு… அவனது தவறுதானே!
“அவ வார்த்தையில் உனக்கு நம்பிக்கை இல்லையா? என்ன ண்ணா சொல்றே நீ? நீயா இப்படி இருக்கே?”
ஒரு வார்த்தை கேட்டாலும் திருவார்தையாய் கேட்டாள் சீதா.
சூர்யா பேச்சிழந்தான்!
“ஆமா அவளை நம்பாமல் தன் இன்னிக்கி என் வாழ்க்கை தொலைச்சிட்டு நிக்கிறேன்…” என்று குரல் கம்ம கூறியவன்…
“வச்சிடுறேன்…” என்று வைத்துவிட்டான்.
போனை வைத்தவன், அவன் மேஜையில் தலைகவிழ்ந்து கொண்டான்… மனம் ஏமாற்றத்தில் ஆழ்ந்தது!
தாயை நம்பியதற்கு இப்படி ஒரு நிலையா?
இனி எப்படி இதைச் சரி செய்யப் போகிறேன்? தான் கொஞ்சம் நிதானமாக யோசித்திருந்தால், இதை வேறு மாதிரி கொண்டு சென்றிருக்கலாம்…
அகல்யாவும் சின்னப் பெண்… அவள் புறமும் தவறுகள் இருக்கலாம்… ஆனால் தான் அல்லவா இதை நிதானமாகக் கையாண்டிருக்க வேண்டும்…
எனக்கு நீ வேண்டும் அகல்யா…
மனதில் மட்டுமே அழ முடிந்தது… ஆண்பிள்ளைகள் அழுதால் தப்பாயிற்றே!
அவன் அறைக்குள் நுழைந்த கார்த்தி ‘பாஸ், பாஸ்’ என்று பல முறை அழைத்த பிறகே நிமிர்ந்து பார்த்தான்… கண்கள் கலங்கியிருந்ததைக் கார்த்தியிடம் மறைப்பது பெரும் பாடாகிப் போனது…
அவன் நிதானிக்கும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி, “இன்றைக்கு ஒரு கிளையன்ட் மீட்டிங் இருக்கு, அதான் வந்தேன்” என்றான்…
சூர்யா அன்றிருந்த நிலையில், அவனால் எதுவும் முடியாது! ஆனாலும் அவனுடன் கிளம்பிவிட்டான்… வழியெங்கும் எதுவும் பேசவில்லை, கார்த்திக்கு புரிந்தது சூர்யாவின் கவலை… அவன் வெளியே சொல்லா விட்டாலும் அவன் செயல்கள் காட்டிவிடுகின்றன!
தன்னால் இந்தப் பிரச்சனையில் எதுவும் செய்ய முடியுமா?
யோசித்தான் கார்த்திக்!
****
அகிலனும் பூவிழியும் தங்கள் குழந்தையைப் பற்றிப் பேசுவதைத் தவிர, அகல்யாவின் வாழ்வைச் சீராக்க வேண்டி ஆராய்ந்ததும் பேசியதுமே அதிகம்!
அதன் முதல் முயற்சியாக, தான் நடந்து கொண்ட விதத்துக்குச் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று அவனது நிறுவனத்துக்கு சென்றிருந்தான் அகிலன்… தாமதமாகக் கேட்பதே ஆனாலும் சொல்லாமல் விடுவதற்கு இது எவ்வளவோ மேல் என்று வந்து விட்டான் அங்கே…
தாடி எல்லாம் வைத்துச் சூர்யா பார்க்க தேவதாஸ் போல் தான் இருந்தான்… இருவருக்கும் ஒருவரையொருவர் கண் நோக்கிப் பேசுவதே தயக்கமாய் இருந்தது! அகிலனுக்கு மனசு கேட்கவில்லை… ஒரு மனைவியின் பிரிவு ஒரு மனிதனை இந்த அளவுக்குப் பாதிக்குமா?
பகையை எல்லாம் காட்டாமல் அகிலனை வந்து தன்னறைக்கு அழைத்துச் சென்றவன் அமைதியாக இருக்க, அகிலனே ஆரம்பித்தான்…
“என்னை மன்னிச்சிடுங்க சூர்யா, நான் உங்க கிட்ட நடந்துகொண்டது தப்பு… அகல்யாவை எங்க வீட்டில் யாரும் அடித்ததே இல்லை, நீங்க அப்படிச் செய்ததும் என்னால் பார்த்திட்டு சும்மா இருக்க முடியலை!” என்று இறங்கிய குரலில் மன்னிப்பு கேட்க,
சூர்யாவும், “நானும் அப்படிச் செஞ்சியிருக்கக் கூடாது, சாரி…” சற்று தயங்கியவன் “அகல்யா எப்படியிருக்கா?” என்று அவனிடம் கேட்டான்.
தன் தாயின் செய்கைகள் அனைத்தும் தன் கண் முன் வந்து போனாலும் அவரை விட்டுத்தர அவனால் முடியவில்லை. பெற்றவராயிற்றே!
அகிலன், சூர்யாவின் அந்தக் கேள்வியால் ஏனோ உள்ளுக்குள் திருப்தியாக உணர்ந்தான். தங்கையின் வாழ்வு சீராகிவிடும் என்றா?
“ஏதோ இருக்கா… எதையோ பறிகொடுத்த மாதிரி…” என்றவன்,
“நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழவேண்டும், நாங்க எல்லாருமே அந்த நாளுக்குத் தான் காத்துகிட்டு இருக்கிறோம்! யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வாங்க…” அகிலன் தன் கடமையாகச் சொல்வதைச் சொல்லிவிட்டு, அத்தோடு கிளம்பி விட்டான்…
சூர்யா அறையில் இருந்து வெளியே வந்த அகிலனை கண்ட கார்த்தி அவனைப் பின்தொடர்ந்து, நீண்ட நேரம் பேசிய பிறகே இருவரும் விடைபெற்றனர்…
அகல்யாவுக்கு விச்சு குட்டி வந்ததும் நேரம் நன்றாகச் சென்றது… முதல் இரண்டு மாதங்கள் மட்டுமே பூவிழி தன் அன்னை வீட்டிலிருந்தாள், இல்லை அகிலன் விட்டுவைத்தான்…
அதன் பிறகு ஜாகை எல்லாம் இங்கே தான், சுதா இங்கு வந்துவிடுவாள், இரவு வரை பேரப்பிள்ளையுடன் இருப்பாள்… தன் தந்தை நம்பியின் சிரிப்பை ஆச்சரியமாகப் பார்த்தாள் பூவிழி… பேரக்குழந்தை என்றால் கல்லும் கரையும் போல இருந்தார்…
பிள்ளைக் குப்புற விழுந்த சமயம் வீடே ஆர்ப்பாட்டமாய் இருந்தது! ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கமிருந்து உற்சாகப்படுத்தினார்கள்…
இவர்களின் தொல்லையை அந்தப் பிஞ்சு எப்படித் தாங்கியதோ?!
அகிலன் இப்போதெல்லாம் தோனி போல் கூல் ஆகிவிட்டான்… தன் மனைவி, தன் மகன் தான் உலகம் அவனுக்கு இப்போது…
அகல்யாவிடம் பழைய மாதிரி இருந்தான், வேலை ஏவுவதைச் சேர்த்துக் கொண்டான்… புல் டைம் அவனது பிள்ளைக்கும் மனைவிக்கும் சேவை செய்தே அகல்யா மெலிந்து போனாள்… பிறந்த குழந்தை இருக்கும் வீட்டில் கேட்க வேண்டுமா, ஆளாளுக்கு வேலை பார்த்தாலும், வேலை எப்போதும் இருக்கும்…
இதனிடையில் பூவிழியுடன் அடிக்கடி வெளியே செல்லும் வேலை அகல்யாவுக்கு வந்தது… சில சமயம் மஹா, சுதா குழந்தையை வீட்டில் பார்த்துக் கொள்வார்கள்… அகிலன் பூவிழி பிரிந்த தம்பதியினரைச் சேர்த்து வைக்கும் முயற்சியை ஆரம்பித்தனர்.
ஒரே ஊரில் இருந்துகொண்டு ஒருவர் கண்ணில் படாமல் இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல… வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை… இப்படி வெளியில் வரும் சமயம் நடக்கத் தானே செய்யும்? அகல்யாவும் அப்படிச் சூர்யாவை சில முறை பார்த்திருக்கிறாள்… கோவில் கடை என்று இவள் செல்லும் சமயம் எல்லாம் கண்ணில் பட்டுவிடுவான்!
அவனைப் பார்க்காத போது அவனை வசை பாடிய நெஞ்சம், அவனைக் காணும் சமயம் எல்லாம் அவன் பக்கம் உள்ள நியாயங்களை மட்டுமே யோசித்தது… ஏற்கனவே ஆட்டம் கண்டிருந்த அகல்யாவின் மன திடம், சூர்யாவை பார்த்ததும் மந்திரத்தில் கட்டுண்டது போல் நடந்து கொண்டது.
பூவிழியிடம் மறுமுறை தான் எங்கும் வரவில்லை என்றாலும் விட மாட்டாள்…
அகிலனிடம் இருந்த அனைத்து முசுட்டுத்தனமும் தனது தோழியிடம் தஞ்சம் புகுந்து விட்டது! அவள் சொல்லை மீற முடியாமல் வந்ததன் விளைவு தான் தன் கணவனைப் பார்க்க நேர்ந்தது!
அவனை இப்போதெல்லாம் பார்ப்பது அகல்யாவுக்கு பெரும் சோதனையாக இருந்தது… எப்போதும் அவள் மனக்கண்ணில் அவன் முகம் தான்…
அவர்கள் பிரிவு அவனைப் பாதித்திருக்கிறது என்பதை அவனைப் பார்த்ததும் புரிந்தது…
இதனிடையே ஒரு நாள் கிரி அகல்யாவிடம் பேச வேண்டும் என்றார்!
“உனக்கும் அகிலனுக்கும் விவரம் புரியாத வயசில் எல்லாம் நானும் அம்மாவை மனசு நோக பல முறை பேசியிருக்கிறேன், என் கூட உள்ளவர்கள் பேச்சைக் கேட்டு அவளைப் பாடாய்ப் படுத்தியிருக்கிறேன்… ஆனால் அம்மா எல்லாத்தையும் நிதானமா இருந்து சமாளிச்சா… நீயும் அம்மா மாதிரி, பூவிழி மாதிரி சமாளிக்கப் பழகு… வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது, இன்று நாங்க இருக்கோம், ஆனால் என்றைக்குமே உனக்குச் சூர்யா தான் வாழ்க்கை… உன்னை இப்படித் தனிமரமா என்னால் பார்க்க முடியலை…”
என்றுமே அதிகாரமாக மட்டுமே பேசும் தந்தை இந்த அளவுக்குச் சொன்னது அகல்யாவின் யோசனையைத் தீவிரப் படுத்தியது…
ஆனால் இந்த எதேச்சையான சந்திப்பு விஷயத்தில் அகல்யாவுக்கு சந்தேகம் தான், நாம் போகும் இடத்திற்கு எல்லாம் இவன் எப்படிச் சரியாக அதே நேரத்தில் வருகிறான்?
24
தானாக அமைந்தது போல் இருந்ததெல்லாம் அகிலன் பூவிழியின் திட்டம்.
எங்குச் செல்கிறாளோ அதைக் கார்த்திக்கு தெரியப்படுத்தவேண்டியது… ஆபிஸில் இருந்து அவனைக் கிளப்ப கார்த்தி, வீட்டில் இருந்தால் கிளப்பி விடச் சீதா என்று ஒரு டீம் வேலை செய்தது…
இவர்கள் சந்தித்துக் கொண்டாலாவது ஏதும் முன்னேற்றம் இருக்குமா என்ற நப்பாசை தான்.
நித்தமும் ஏதாவது காரணம் சொன்னார்கள் சூர்யாவிடம்.
அவன் எரிச்சல் பட்டாலும் சீதா கேட்கிறாள் என்று சில முறை வெளியே வந்தான் அவளுடன்…
தங்கை ஏதும் கடையில் பார்த்துக் கொண்டிருக்க இவன் குனிந்த தலை நிமிராமல் போனை நோண்டிக் கொண்டிருப்பான்… இப்படித் தான் அகல்யாவை அவன் காணாமல் விட்டது… இந்த மொபைல் போனினால் எவ்வளவு பிரச்சனை மனுஷன் வாழ்க்கையில்?
கார்த்திக்கு தான் சூர்யாவை ஆபிஸில் இருந்து கிளப்புவது பெரும் பாடு. அவன் நம்பும் படியான காரணங்களை அவன் தேடி அலசவேண்டும்…
இப்படியாக எல்லாரும் சேர்ந்த அகல்யா கண்ணில் சூர்யாவை விழ வைத்தனர்… ஆனால் இதன் மூலம் மட்டும் அகல்யா சூர்யாவிடம் வந்து விடுவாளா என்ன?
கிளம்புகிற வழி தெரியவில்லை… கட்டாயம் போயே ஆக வேண்டும் என்று அவள் நினைக்க வேண்டுமே! அப்படி நினைக்க வைக்கப் பூவிழி ஒரு வழி கண்டுபிடித்தாள்…
அவள் நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்று…
மதுரையில் உறவினர் வீட்டுத் திருமணம் என்று அனைவரும் சென்றிருந்தனர்… தான் வரவில்லை என்று அகல்யா சொல்லியும் பூவிழி அவளைக் கட்டாயப்படுத்தினாள்.
“நீ இருந்தா தான் டீ நல்லாயிருக்குது. குழந்தையையும் நாம் இரண்டு பேரும் பார்த்துக்கலாம்… வா டீ…” என்று இழுத்து வந்துவிட்டாள் மதுரைக்கு…
“வர வர என்னைப் புல் டைம் ஆயாவாக்கிட்ட டீ… போன வாரம் போத்தீஸ்ல இந்தக் குட்டியை இரண்டு மணிநேரம் தூக்கி வச்சி என் கை எல்லாம் வலி டீ… குண்டு குட்டி…”
“கண்ணு போடாதே டீ…” என்று ஒரு அடி கொடுத்து விட்டுப் போனாள் பூவிழி…
இப்போதும் என் கிட்ட விட்டுவிட்டுப் போயிட்டா பார் என்று மனதில் நினைத்தபடி பிள்ளையை வைத்துக்கொண்டு தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாள் அகல்யா…
எந்தக் கூட்டத்திலும் இல்லாமல் தனித்து இருந்தவளை விஷ்வா பிசியாக வைத்திருந்தான்… அவனது சேட்டைகளும் குறும்புத்தனங்களும் அவ்வளவு ரசிக்கும் படியாக இருந்தது…
தனக்குப் பிள்ளை பிறந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பானோ?
நினைக்கும் போதே நெஞ்சம் வலித்தது… கண்களில் நீர் சூழ்ந்தது!
தான் தவற விட்ட பொக்கிஷத்தினை நினைத்து உள்ளுக்குள் மனம் குமைந்தாள். தனது பிள்ளையை விஷ்வாவின் மூலமாகப் பார்த்தாள் அகல்யா…
பிறந்திருந்தால் இந்நேரம் தத்தி தாவி நடை பயின்று இருப்பானே!
கடவுள் தனக்கு அந்தக் கொடுப்பினையைக் கொடுக்கவில்லையே என்ற நினைவில் கண்களில் நீர் சூழ பார்த்தது.
சுற்றியுள்ள சுற்றத்தினை வலுக்கட்டாயமாக மனதுக்கு உணர்த்திக் கலங்க தவித்த கண்களுக்கு அணையிட்டாள்.
கண்களுக்கு அணையிட்டாலும் மனதுக்கு அணையிட முடியாதே! ஒரு நொடியில் அது உலகத்தையே சுற்றி விடுமே!
சொல்லாமல் கொள்ளாமல் கணவனை நினைத்து ஏங்க ஆரம்பித்தது… திருமணத்திற்கு ஜோடியாக வந்திருந்தவர்களைப் பார்த்து!
இடையிடையே சொந்தக்காரர்களைப் பார்த்தாலும் பார்க்காதது போல் நடிக்க வேண்டிய வேலை வேறு சேர்ந்து கொண்டது… பேச ஆரம்பித்தால் அவள் பிரச்சனையில் வந்து நிற்பவர்களிடம் என்ன பேச?
இப்படியே எவ்வளவு நேரம் தான் தூக்கி வைத்திருக்க முடியும்?
குட்டிச் சிணுங்க ஆரம்பிக்க, பூவிழி கண்ணில் படுகிறாளா என்று பார்த்தபடி வெளியில் வந்த அகல்யா, அங்கு யாரோ ஒருவருடன் பூவிழி பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தாள்…
அவளை நெருங்கிய அகல்யாவை அவர்கள் பேச்சு நிற்க வைத்தது…
“டைவர்ஸ் ஆயிடிச்சா இல்லையா? என் நாத்தனார் பையனுக்கும், மறு கல்யாணத்துக்குப் பெண் தேடுறோம், அதான் கேட்டேன்… அந்தப் பையனுக்கும் மியூடுவல்ல தான் போட்டு வாங்கினார்கள்… அந்த மாதிரி செய்யலாமான்னு உன் மாமியார் வீட்டில் கேட்டு சொல்லு மா… மேல் பேசுவோம்” என்று சொல்ல,
அதற்குப் பூவிழி என்னதான் பதில் சொல்கிறாள் என்று அகல்யா பார்த்துக்கொண்டிருக்க, அவளோ,
“சரி நீங்க ஜாதகம் அனுப்புங்க… நான் எங்க அத்தை கிட்ட பேசுறேன்…” என்று பதிலளித்தவளை பார்க்கப் பற்றிக்கொண்டு வந்தது அகல்யாவுக்கு…
என்னாயிற்று இவளுக்கு? என் வாழ்க்கையை இவள் எப்படி முடிவு செய்யலாம்?
அவளை நெருங்கியவள் அழுது கொண்டிருந்த குழந்தையை அவளிடம் கொடுத்து அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்… பூவிழி தன் குழந்தையின் பசியாற்றி அமைதியாக்கும் வரை காத்திருந்து,
“என்ன ஆச்சு பூவிழி உனக்கு? எனக்குக் கல்யாண ஆசைன்னு உன்கிட்ட நான் சொன்னேனா?”
பூவிழி பதிலளிக்கவில்லை. கோபம் எல்லையை மீறப் பார்த்தது… அதே கோபம் ஆற்றாமையாக மாறி… தன்னைக் குறித்தே பரிதாபம் தோன்ற,
“நீ ஒருத்தி தான் எனக்கு ஆதரவா இருந்தே? இப்ப நீயும் இப்படிப் பேசுற? ஏன் அவங்க கிட்ட அப்படிச் சொன்ன?”அகல்யா கேட்டாள்.
குரல் கனக்க துவங்கி, கண்கள் கலங்க துவங்கியது.
“அகல்யா, என்னால் உன் அண்ணன் கஷ்டப்படுறான்னு என்னை நீ திட்டியிருக்கியே, அதே மாதிரி தான் இதுவும்…” பூவிழி நிதானமாகச் சொன்னாள்…
“அது உன் வாழ்க்கை நல்ல இருக்கவேண்டுமென்று சொன்னது பூவிழி…”
“இதுவும் நான் என் வாழ்க்கைக்காகச் செய்ற ஏற்பாடு தான்…” பூவிழி அகல்யாவை நேருக்கு நேர் பார்க்காமல் பேசினாள்…
என்ன? அவள் வாழ்க்கைக்காகச் செய்யும் ஏற்பாடா? என்ன உளறல் இது? இவளது வாழ்க்கைக்காக இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடியுமா?
உள்ளுக்குள் மனம் வெதும்பியது… எப்போதிருந்து இந்தப் பூவிழி இப்படிச் சுயநலமாக யோசிக்க ஆரம்பித்தாள்? தான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு ஒரு வரைமுறை வேண்டாமா? இதென்ன தான்தோன்றித்தனம்?
அப்போது நீ செய்ததற்குப் பெயர் என்ன அகல்யா? என்று மனசாட்சி அவளைக் கேள்வி கேட்டது!
அவள் செய்வது தான்தோன்றித்தனம் என்றால் சூர்யா போன்ற கணவனை அற்ப காரணங்களுக்காக விட்டுக்கொடுத்து விட்டு இருக்கும் உன்னுடைய இந்தச் செய்கை எத்தகையது?
மனசாட்சி கேட்ட கேள்விக்கு அவளால் விடை தர முடியவில்லை. பூவிழி தொடர்ந்தாள்…
“நான் வந்த ராசி தான் நீ உன் புருஷனை விட்டு வந்துட்டேன்னு என் காது படவே பேசுகிறார்கள் தெரியுமா? உனக்குச் சூர்யா தானே வேண்டாம், வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்கோ… உனக்கென்று ஒரு குடும்பம், அங்க நீ சந்தோஷமா இருந்தா தான் உன்னை வச்சி நாங்க எல்லாரும் நிம்மதியா இருக்க முடியும்… நீ சீக்கிரம் வேறு கல்யாணம் பண்ணிக்கோ”
“பூவிழி வாயை மூடு…” அகல்யா அதட்டினாலும், அவள் அசரவே இல்லை…
“வீட்டில எல்லாருமே அந்த முடிவில் தான் இருக்கிறார்கள்… உனக்குப் பிடிக்காத வாழ்க்கை வாழவேண்டுமென்று அவர்கள் கட்டாயப்படுத்தலை. ஆனால் வேறு ஒரு புது வாழ்க்கையை உனக்கு அமைச்சு தர வேண்டுமென்று இருக்கிறார்கள்…”
“நீங்களா முடிவு பண்ணா? என்னால் முடியாது…” கோபமாக மறுத்துக் கூறினாள்!
“தனியா வரவேண்டுமென்று நீயா தானே முடிவு பண்ணே, அதை மட்டும் நாங்க ஒத்துகிட்டோமே… தனியா வந்தா இந்த வீட்டில் உனக்கு இடமில்லைன்னு சொல்லியிருந்தா நீ என்ன பண்ணியிருப்பே?”
தன்னுடைய குடும்பம் இது என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள் பூவிழி!
தான் அந்தக் குடும்பத்தின் அங்கம் போலவும், அகல்யா வேறு குடும்பத்தைச் சேர்ந்தவள் போலவும் கூறினாள் பூவிழி. தனக்காகவென வாழ்நாள் முழுவதுக்கும் இவளிருக்கிறாள் என்ற அகல்யாவின் நம்பிக்கையை ஆட்டம் காண செய்துவிட்டாள்!
“ஏன் வேண்டாமென்று சொல்றே, ஒழுங்கான காரணத்தைச் சொல்லு…”
“இதற்குக் காரணம் வேறு வேண்டுமா பூவிழி…
“கண்டிப்பா… சூர்யாவை வேண்டாமென்று சொல்லிட்ட… அப்ப வேறு கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்ல…” இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் கூற,
“எல்லாரும் முட்டாள்தனமா வேலை பார்க்க நினைச்சா நானும் ஒத்துக்குவேனா?”
“உனக்கு வேறு சாய்ஸ் கிடையாது அகல்யா… காரணத்தைச் சொல்லு… ஏதாவது ஒரு பக்கம் போய்தான் ஆகவேண்டும் நீ…” பூவிழி விடவில்லை…
அகல்யா தன்னை வலிந்து கட்டுப்படுத்திக்கொண்டு எங்கோ வெறித்தாள்… மனமெங்கும் வலி! தன்னால் சூர்யாவை விட்டுக்கொடுத்துவிட முடியுமா? அது தன்னால் முடிந்த காரியமா என்ன?
அதிலும் அவனை விடுத்து இன்னொருவனை? நினைத்துப் பார்க்க முடியவில்லை!
அது இவளுக்குப் புரியவில்லையா?
அவனிடமும் போக முடியாமல், தாய் வீட்டிலும் இருக்க முடியாமல்… தனக்கு மட்டும் ஏன் இப்படி? சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் சமாளித்து இருக்கலாமோ? ஆனால் அனைத்தையும் தாண்டி வந்த பிறகு இந்த யோசனை வந்தென்ன ஆகப் போகிறது?
அகல்யா நீண்ட யோசனைக்குப் பிறகு,
“ஏன்னா என்னால் சூர்யாவை மறக்க முடியலடி… நான் அவர் கூட வாழவேண்டும்…”
சொல்வதற்குள்ளாகவே குரல் தழுதழுக்க, கதறி அழ ஆரம்பித்து இருந்தாள் அகல்!
பூவிழிக்கும் கண் எல்லாம் கலங்கியது…
அதை வெளிக்காட்டவில்லை…
மௌனமாக அவளைப் பார்த்தாள் பூவிழி!
இது தட்டி கொடுக்கும் சமயம் இல்லை… அடித்துப் புரியவைக்க வேண்டும், கணவனுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு, இவ்வளவு பாசத்தையும் வைத்துக்கொண்டு எப்படித்தான் உன்னால் இப்படி மறைத்துக்கொண்டு வாழ முடிகிறதோ பாவி!
கட்டிய கணவனிடம் என்ன ஈகோ வேண்டி இருக்கிறது இவளுக்கு என்று நினைத்தவள், இருடி நீயே அவரைத் தேடிப்போகும் வழியை நான் சொல்லித்தருகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டு,
“அதெல்லாம் பழைய கதை. சூர்யாவுக்கும் வேறு பெண் பார்க்கிறார்களாம்… நீ பாட்டுக்கு வந்திடுவே, உனக்காக வருஷ கணக்கில் காத்துகிட்டு இருப்பாங்கன்னு நினைச்சியா? நடக்கிறதை பார் அகல்யா… சூர்யாவோட உன் அத்தியாயம் முடிந்தது”
பூவிழியின் தொனியே மிரட்டுதலாக இருந்தது, குழப்பத்தில் இருந்த அகல்யாவும் அதில் அழகாகச் சிக்கிக்கொண்டாள்…
“நீ பொய் சொல்லாதே… அவர் இன்னொரு பொண்ணை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்…”
“நினைச்சுட்டே இருடீ… அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ண உன் மாமியார் பார்த்துட்டு தான் இருக்கிறார்கள்…”
கடைசியாக அவள் சொன்ன வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்த அகல்யா, பூவிழியை முறைக்க, அந்த இடத்தை விட்டு அகன்றாள் பூ, தன் பிள்ளையுடன்!
அவசர புத்திக்காரியான அகல்யா இன்றும் அவசரமாகத் தன் உடைமைகளை ஒரு பையில் அடைத்துக் கொண்டாள்… பூவிழி பேசிய பேச்சில் இக்கணம் தன் நிலை என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவள், தன் பையை எடுத்துக்கொண்டு ஊர் போய்ச் சேர கிளம்பி விட்டாள், யாருக்கும் சொல்லாமல்!
மண்டபத்தில் இருந்து அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள் சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்த பூவிழி, கண்களில் நீருடன்!
அன்று ஏனோ அகல்யாவின் நினைவாகவே இருந்தது சூர்யாவுக்கு.
சீதாவும் அகல்யாவும் அவர்களாகவே சொல்லிவிட்டனர், ராஜம் இவன் இல்லாத சமயங்களில் செய்த கூத்தை… அவனும் நேரிடையாகச் சிலதை கேட்டாயிற்று.
இப்படி எல்லாம் மாறிவிடுவார்களா, மாமியார் ஆகிவிட்டால்?
அகல்யாவுக்கும் சீதாவை பிடிக்கும், அதைப் பாராமல் இந்த அம்மா அவளிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறாள்?
எந்த மகளுக்காக அகல்யாவை அந்தப் பாடு படுத்தினாளோ, அவளே இப்போது அம்மாவை வெறுக்க ஆரம்பித்து விட்டாள்! அகல்யா இதையெல்லாம் சொன்னபோது நானும் நம்பவில்லை.
குழந்தையையும் பறிகொடுத்து, என் அம்மாவும் ஒரு பக்கம் பிரச்சனை செய்ய, நானும் அவளைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டது, எங்கள் பிரிவு எல்லாம் சேர்ந்து அவளை என்ன பாடு படுத்தியிருக்கும்?
பெண் பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டேனே! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்தப் பாவத்தைச் சரி செய்ய முடியுமா?
சரி இனி என்ன செய்யலாம்? எப்படி அவளை அணுகுவது?
தன் அன்னையின் வேஷம் தெளிவாய் புரிந்ததற்குப் பிறகு தன் மனைவியின் பிரிவு அதிகம் தாக்கியது சூர்யாவை…
செய்யாத குற்றத்திற்கு அவளுக்கு இது அதிகபட்சம் தானே?
அவள் மேல் தவறில்லை எனும் போது யார் இறங்கி வருவார்?
போதாக்குறைக்குக் கையை வேறு நீட்டியிருக்கிறேன்! வேறு வழியே இல்லை, இவ்வளவு நாளும் வராதவள் இனியும் தானாக வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கில்லை… நாம் சென்று அழைத்து வந்துவிட வேண்டும்.
மழை வேறு வரும் போலிருந்தது… துரிதமாக உடையை மாற்றிக் கொண்டு கிளம்பிவிட்டான் அகல்யா வீட்டுக்கு. வழி நெடுகிலும் என்னோடு வந்துவிடு அகல்யா என்று மனம் அவளிடம் ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டது.
எப்படி அவளை எதிர்நோக்க என்று எண்ணிய படி அவள் வீட்டை அடைந்து விட்டான்… ஆனால் அங்கு இருந்த பூட்டு தான் அவனை வரவேற்றது… யாரும் இல்லை வீட்டில்…
காத்திருக்க ஆரம்பித்தான்… மழையும் ஆரம்பித்துவிட்டது…
நீண்ட நேரம் நின்றிருந்தவனை அகல்யாவின் பக்கத்து வீட்டு அம்மையார் பார்த்துக் குடை ஒன்றை எடுத்து வந்தார் அவனுக்காக,
“அவங்க இல்லை தம்பி, மதுரைக்குப் போயிருக்கிறார்கள், வர இரண்டு நாள் ஆகும்…” என்றபடி அவனிடம் குடையை நீட்ட…
“ஓ அப்படியா? சரி மா, நான் அப்போ கிளம்புறேன்…”அவளிடம் நன்றி உரைத்துவிட்டு, நொந்தபடி வீடு திரும்பினான்…
ச்சே நாம் நினைத்தாலும் மேல இருக்கிறவனும் நினைக்கவேண்டும் போல!
மனம் அடித்துக் கொண்டது…
‘போடா ஆண்டவனே உன் பக்கம் தான் இருக்கிறான், என்று விதி இடியின் சத்தத்தில் உரைத்தது அவனுக்குக் கேட்டிருக்கவில்லை!
அதே மழை நாளில் மதுரையிலிருந்து நெல்லைக்குப் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தாள் அகல்யா.
மனமெல்லாம் சூர்யாவை பற்றிய சிந்தனை தான்… ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடந்தது என்ற கழிவிரக்கம் தோன்ற அதைக் கஷ்டப்பட்டு ஒதுக்கி… கணவன் சரியில்லை என்றாலும் எத்தனைப் பேர் காலம் தள்ளுகிறார்கள்… ஆனால் அவன் அவ்வளவு நல்லவனாயிற்றே!
தன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வந்தாயிற்று…
ஆட்டோ பிடித்து வந்துவிட்டாள் பேருந்து நிலையத்திலிருந்து தன் அன்னையின் வீட்டுக்கு… வீட்டினுள் நுழைந்தவளை தன் ஜன்னல் வழியாகப் பார்த்த அந்தப் பக்கத்து வீட்டு அம்மையார், அகல்யா வீட்டுக்கு உடனே டெலிபோன் செய்தாள்…
போன் அடித்ததும் அகிலனாக தான் இருக்கும் என்று போனை எடுத்த அகல்யாவிடம்,
“உன் வீட்டுக்காரர் வந்திருந்தார் மா, எவ்ளோ நேரம் மழையில் நின்றிருந்தார் தெரியுமா? நான் தான் நீங்க ஊரில் இல்லாத விஷயத்தை அவர் கிட்ட சொன்னேன்… இப்ப பார்த்தா நீயே வந்துட்டியே? தனியாவா வந்தே?”அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதிலை வாங்கியபின் தான் வைத்தாள் போனை…
அகல்யாவுக்கு மனம் துள்ளியது… வந்தானா? எனக்காகவா?
அவன் மேலிருந்த வருத்தம் எல்லாம் காணாமல் போனது… இந்த நொடி அவனைப் பார்த்துவிடத் துடித்தாள்… இங்கு இருப்பதை விட அவனுடன் இருப்பதே சால சிறந்தது… உடனே கிளம்பிவிட்டாள், அவன் இருப்பிடத்திற்கு!
சூர்யா மட்டுமே நம்பி அங்குத் திரும்பப் போகிறேன்… இருப்பானா? எப்படி அவன் முகத்தில் விழிப்பது? ஐயோ இன்றைக்கென்றா மழை பொழியவேண்டும்?
இரவு மிகத் தாமதமாகிவிட்டது… ஒரு ஆட்டோவை பிடித்து அவன் வீடு வந்து சேர்ந்து விட்டாள்…
ஒரு வேகத்தில் வந்துவிட்டாளே தவிர அழைப்பு மணி அடிக்கவே சில நிமிடங்கள் யோசனை…
‘திரும்பப் போய் அந்தப் பூவிழியிடம் பேச்சு வாங்க போறியா?’ என்று மனசு ஒரு அதட்டல் போட்டதும் கை தானாக அழைப்பு மணியை அழுத்தியது…
நீண்ட நேரம் யாருமே வரவில்லை…
சூர்யா இல்லை போல!
திரும்பத் தான் வேண்டுமோ?
எண்ணி முடிக்கும் முன்பே தன்னவன் சொர்க்கவாசலைத் திறப்பது போல் கதவை திறந்தான்… தன்னைப் பார்த்தது இன்ப அதிர்ச்சி என்று அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது…
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க, நேரம் நகர்ந்தது…
எவ்வளவு நொடிகள் சென்றதோ?
குளிர் காற்றில் தன் உடல் நடுங்கிய பின்னரே,
“கொஞ்சம் வழி விடுகிறீர்களா” என்றாள் அவனிடம்… என்னடீ உரிமைக்காரி மாதிரி பேசுற? என்று மைண்ட் வாய்ஸ் அவளிடம் கேட்டதும் அதை ‘இனிமேல் இப்படிதான், வேடிக்கை மட்டும் பார்’என்று அடக்கினாள்.
அவன் வா என்று அழைத்தது சந்தோஷத்தை கொடுத்தாலும் முகத்தில் எதையும் காட்டாமல் மாடிக்கு விரைந்துவிட்டாள். அவன் பார்வை அவளைத் தொடருவதை உணரமுடிந்தது அவளால்…
அறைக்கு வந்தவள் அவன் வருமுன் ஈரப் புடவையை மாற்றிவிட்டு என்ன கேட்பானோ என்று எண்ணியபடி சோபாவில் அமர, கீழே ராஜமின் பேச்சுச் சத்தம் வேறு கேட்டுத் தொலைத்தது!
சூர்யா வந்ததும் ஏதும் கேட்பானோ? என்ன சொல்ல? ஏன் சூர்யா என்னைச் சாதாரணமாக எதிர்கொண்டான்? எந்தக் கணவனுக்கும் தான் தப்பே செய்திருந்தாலும், மனைவியால் பட்ட துன்பம் எல்லாம் எளிதாக மறக்க முடியுமா? நானாய் அவனிடம் வருவேன் என்று நம்பியிருந்தானா?
‘நீ வந்தாயென்று தெரிந்து தான் நானும் வந்தேன்! இல்லையென்றால் …’
மானசீகமாய்ச் சூர்யாவிடம் சண்டை போட…
இல்லையென்றாலும் வந்திருப்பாய் தானே என்று உள்ளுக்குள் கேலி!
‘இத்தனை வருடங்களில் சூர்யா அவன் அன்னையைப் பற்றித் தெரிந்திருப்பானா? தெரிந்ததால் தான் என்னை அழைக்க வந்தானா?
உணர்ந்தானோ இல்லையோ, எனக்கு அவன் வேண்டும், அவன் மனைவியாய் என் மீதி காலங்கள் நான் வாழ வேண்டும், அதில் எந்தத் தடைகளும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அது என்னால் முடியும்.
பட்ட அடிகள் அந்த மனத்திடத்தை வரவழைத்து விட்டன!
என் தனிமை நிலை மாற வேண்டுமானால் இப்போது நான் நினைத்தபடி என் கணவனுடன் சேர்ந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை…
யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் வந்தான்.
எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான் அவளிடம்!
ஆரம்பத்தில் அகல்யா விலகியிருந்தாலும், அவன் அன்பால் ஈர்க்கப்பட்டாள். இச்சமயம் அவர்களிடத்தில் காதல், ஊடல், கூடல் எல்லாமே மையம் கொண்டிருந்தது…
அகல்யா சூர்யாவின் செகண்ட் இன்னிங்ஸ் அன்றிலிருந்து இனிதே ஆரம்பமானது…
25
நம் முந்தைய தலைமுறை பெண்கள் பட்ட துன்பங்களை போலவா நாம் பட்டுக்கொண்டிருக்கிறோம்? தன் வீட்டு பெண்களை ஒரு பொருட்டாவாவது மதித்தார்களா, நம் தாத்தணும் பூட்டணும்? பெண் சுயமாய் ஒரு முடிவெடுக்க முடியுமா? தான் நினைத்த மாதிரி ஒரு நாளாவது தன் வாழ்க்கையை வாழ முடியுமா? வாழதான் விட்டுவிடுவார்களா? ஆனால் இன்றைய யுகத்தில் படிக்கிறோம், சுயமாய் முடிவெடுக்கிறோம், நம் வாழ்க்கையை நாம் நினைத்தபடி கொண்டு செல்ல எல்லா வாய்ப்புகளும் நம்மிடம் இருக்கிறது, நம்மில் பெரும்பான்மையினருக்கு!
அகல்யா மாதிரி பெண்களால் அந்த பழைய வாழ்க்கை முறையை வாழ முடியுமா? இந்த ‘மாமியார்’ பிரச்சனையே அவளை மனசு ஒடிய செய்து விட்டதே! அவள் செய்தது சரிதானா? இல்லை! மாற வேண்டும்!
நல்லவேளை மாறினாள்…
அகல்யா போல் சில சமயம் தடுமாற்றம் வரும் வாய்ப்புகள் அதிகம் தான், ஆனால் அதை எல்லாம் தாண்டி வாழ்க்கையை நல்லபடியாகக் கொண்டு செல்வது நம் கடமை!
அகல்யா இதை பிரிவின் சமயம் உணர்ந்திருந்ததால் திரும்பி வந்தாள் தன் கணவனிடம்…
சூர்யாவுக்கும் ஏறத்தாழ அதே நிலை தான், மனைவியைக் கஷ்டப்படுத்திவிட்டோம் என்ற குற்ற உணர்வு!
எல்லா ஆண்பிள்ளைகளும் இப்படி இருக்க முடியாது! இருந்து விட்டாலும் சுற்றம் அவர்களிடம், நீ ஏன் இறங்கிப் போக வேண்டும், நீ ஆண்பிள்ளை என்று அவனுக்கு இல்லாத ஆணாதிக்கக் கொம்புகளைச் சீவிவிட்டு அவனது வாழ்க்கையைக் கெடுக்கும் வாய்ப்பே அதிகம்!
வாழ்க்கையின் தாரக மந்திரம், இருப்பதை வைத்துச் சிறப்புடன் வாழ்வது தான். அதைச் சூர்யா ஜோடி, காலம் கடந்திருந்தாலும் இப்போது உணர்ந்திருக்கிறார்கள்…
இனிமையாக ஆரம்பித்த ஒரு காலை வேலையில், சீதா போன் செய்து தனக்கு விசேஷம் என்றாள்… அகல்யாவுக்கு அளவற்ற மகிழ்ச்சி!
“அத்தம்மாவுக்குச் சொல்லியாச்சா சீதா? நாங்க எல்லாரும் உங்களைப் பார்க்க வர்றோம்…”அந்தச் சந்தோசம் குரலிலும் பிரதிபலித்தது… எத்தனை நாட்களான வேண்டுதல் இது? அந்தத் தவம் பலித்ததில் மகிழ்ச்சி அவளுக்கு! தனக்கில்லையே என்ற ஏக்கமெல்லாம் இல்லை அப்போது… சீதாவின் இன்பத்தில் உடன் பங்கெடுக்க வேண்டும் என்ற நிறைவு மட்டுமே…
எப்படி இருந்தாலும் இனி தனது வாழ்க்கை நன்றாகி விடும் என்ற நம்பிக்கை அவளுள் ஆழமாக வேர்பிடித்து இருந்தது… அவளது இந்த நம்பிக்கையும் சந்தோஷமும் அவளது வீட்டினருக்கும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வாரிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவளுக்குத் தெரிந்ததுதான்…
அவளுடைய வாழ்க்கைக்காகத் தவித்துக் கொண்டிருந்த தமையனும் தோழியும் இப்போதுதான் சற்று நிம்மதியான சுவாசத்தோடு தங்களது மகனை கவனிக்கின்றனர் என்பதையும் அறிவாள். தன் ஒருத்திக்காக எத்தனைப் பேர் பாடுபட்டிருக்கின்றனர் என்பதை நினைத்து அவள் பூரிக்காத நாள் இல்லை…
“உனக்குத் தான் முதலில் சொல்றேன்… இப்ப அவங்களுக்கும் சொல்லிடுறேன்…”என்று சீதா கூறியபோது மனதில் ஏனோ சிலிர்ப்பு… அனைவரையும் தாண்டி தன்னை முதன்மையாகக் கருத சீதா இருக்கிறாளா?
சற்று நேரம் எதுவும் பேசவே தோன்றவில்லை…
“சீதா…”மெல்லிய குரலில் அவள் அழைக்க… அவளது உணர்வை உள்வாங்கிக்கொண்ட சீதாவும், மேலும் வளர்க்காமல்,
“சரி வாங்க… நேரில் பேசலாம்…”என்று கூறிவிட்டு வைத்தாள்…
தூங்கிக் கொண்டிருந்த சூர்யாவை எழுப்பினாள் அகல்யா…
“சூர்யா…”
“ம்ம்ம்…”அவன் விழிக்காமல் ம் கொட்ட,
“சூர்யாஆஆ…”சற்று சப்தமாக அழைத்த அகல்யாவை அரைப்பார்வையாகப் பார்த்தவன்,
“ம்ம்ம்… சொல்லுடி…”என்று உறக்கமும் விழிப்புமாகக் கேட்க,
“சூர்யா… ப்ளீஸ்… எழுந்திருங்க… ஒரு குட் நியுஸ்…”என்று சந்தோஷ பரபரப்பில் அவள் கூறினாலும் அவன் காதுகளில் விழுந்தால் தானே?
“ம்ம்ம்… சொல்லுடி…”என்றவன் அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக்கொண்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர, அவனிடமிருந்து தன்னைப் பிரித்துக்கொள்ள அகல்யா பெரும் முயற்சி செய்ய வேண்டி இருந்தது.
“ம்ஹூம்… முடியாது…”கண்களை மூடிக்கொண்டே அவன் அகல்யாவை இறுக்கமாகக் கட்டிக்கொள்ள,
“விடுங்க சூர்யா… இப்பதான் குளிச்சேன்…”என்று சிணுங்க…
“இன்னொரு தடவை குளிச்சுக்கோ…”என்று அவன் அவளது கழுத்து வளைவில் முகத்தைத் தேய்த்தான்… ஷேவ் செய்யாத கன்னம், வரவரவென அவளது கழுத்தை உராய, அவளுக்குச் சிலிர்த்தது… இவனை இப்படியே விட்டால் காலை காட்சி ஓட்டியே தீருவான் என்று நினைத்துக்கொண்டவள், அவனது முகத்தை வலுக்கட்டாயமாகப் பிரித்து,
“சூர்யா… என்னன்னு கேட்கவே மாட்டீங்களா? ஒரு குட் நியூஸ்… ப்ளீஸ் என்னன்னு கேளுங்க…”
“என்னவா இருந்தாலும் இன்னொரு அரைமணி நேரம் கழிச்சு தான் கேப்பேன்… அதுக்கு முன்னாடி எனக்குக் காது கேக்காதுடி பொண்டாட்டி…”என்றவன், அவளை வாகாக இழுத்துக் கொண்டு தனது வேலையை ஆரம்பித்தான்.
சொல்ல வந்தது சொல்ல மறந்தே போனது அகல்யாவுக்கு…
கள்ளன்… நினைத்ததைச் சாதித்துக் கொண்ட பிறகுதான்,
“என்னம்மோ குட் நியுஸ்… குட் நியுஸ்ன்னு சொன்னியே அகல்விளக்கு… அது என்னதான் குட் நியூஸ்? இப்பவாச்சும் சொல்லேன்…”என்று அவளது காலை வாரியவனை, பொய்க் கோபத்தோடு முறைத்தாள் அகல்யா.
“பாவி… நான் சொல்ல வந்தப்ப எல்லாம் எனக்குக் காது கேக்காதுன்னு சொல்லிட்டு இப்ப சீனா போடறீங்க?”என்று கேட்க,
“எனக்குக் காது அப்ப மட்டும் தானே கேக்காதுன்னு சொன்னேன்…”என்று அவன் கண்ணைச் சிமிட்ட, அவனது கை வளைவில் அகப்பட்டுக் கொண்டிருந்தவள், அவனைத் தள்ளிவிட்டு எழுந்துகொள்ள முயற்சிக்க,
“விட்டுவிட்டு ஓடறததுலையே குறியா இரு…”என்று அவளைக் கிண்டலடிக்க,
“இது என் புருஷன் வீடு… நான் ஏன் விட்டுவிட்டு ஓடவேண்டும்?”அவளொன்றும் பழைய அகல்யா இல்லையே… பிரிவுத்துயரின் முழுப் பரிமாணத்தையும் கண்ட புதிய அகல்யா அல்லவா இவள்!
“சரி என்னதான்டி குட் நியூஸ்… இப்பவாச்சும் சொல்லேன்…”என்று குறும்பாக அவன் கேட்க, அவனது மீசையில் விளையாடிக் கொண்டே,
“குட் நியூஸ் என்னன்னா…”என்று இடைவெளி விட்டு அவனைப் பார்க்க, அவன் புருவத்தை ஏற்றி என்னவெனக் கேட்டான்… அந்தச் செய்கை அவளை வசீகரிக்க, அவனது கண்களைப் பார்த்துக்கொண்டே,
“சீதாவுக்கு விசேஷம்…”என்று கூற, அவனுக்குப் புரியவில்லை… புரியாத பார்வையோடு,
“அப்படீன்னா என்னடி?”என்று கேட்க,
“ம்ம்ம்… இது தெரியாதா… சீதா உண்டாகி இருக்கிறாளாம்…”என்று அவனது காதில் கிசுகிசுக்க… முதலில் விளங்கிக் கொள்ளாதவனுக்கு, அவள் கூறிய செய்தி புரிய, மகிழ்ச்சியில் முகம் விகசித்தது…
ஆனாலும் அவனுள் ஏக்கம்!
தன்னுடைய பிள்ளை தங்கியிருந்தால், இப்போது அதுவும் வளர்ந்திருக்கும் அல்லவா! பாதியில் போன பிள்ளை திரும்பக் கிடைக்குமா? மனம் ஏக்கத்தில் தவித்ததை அகல்யாவுக்கு காட்டிக்கொள்ளாமல்,
“ம்ம்… என்னை விடச் சின்னப் பசங்க எல்லாருக்கும் குழந்தை வந்திடிச்சு…”என்று மீண்ட குறும்போடு வராத கண்ணீரை துடைத்து விட…
“அதுக்கு அவங்க அவங்க உழைக்கறாங்க ஆபீசர்…”என்று குறும்பாகக் கூற,
“அடிப்பாவி… என்னோட ஹார்ட் ஒர்க் உனக்குத் தெரியலையா?”என்று கிண்டலாக அவன் கேட்க,
“ம்ம்ம்… ஆனா பத்தலைன்னு நினைக்கறேன்…”என்றவள், அவனிடமிருந்து தப்பிக்க முயல, அவளை விடாமல் பிடித்துக்கொண்டவன்,
“ஓஹோ… பத்தலைன்னு உன் வாயாலேயே சொன்னதுக்கு அப்புறமும் விட்டா சரிப்படாது…”என்று அவளை மீண்டும் தன் கைவளைவுக்குள் கொண்டு வர முயல, அவனுக்குப் போக்கு காட்டி அழகு காட்டியவள், அவனிடமிருந்து தப்பிச் சிரித்துக் கொண்டே குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
தன் மனைவியின் குழந்தைத்தனத்தை நினைத்துச் சிரித்துக்கொண்டான் சூர்யா… எப்படியும் சீக்கிரம் தனக்கும் ஒரு குழந்தை பிறந்து, இந்த வீட்டில் தவழ்ந்து விளையாடத்தான் போகிறது என்று நம்பினான்.
****
சூர்யாவும் அகல்யாவும் அவனது பெற்றோருடன் சீதாவை காண சென்றனர். சீதா மாமியாரின் வாயெல்லாம் பல்… சீதா பார்ப்பதற்கே பலவீனமாய்த் தெரிந்ததாள்…
மாதவனிடம் சொல்லிவிட்டு சீதாவை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்… மகள் தன்னுடன் தன் இல்லத்திற்கு வந்ததிலிருந்து ராஜத்தின் மகிழ்ச்சி அவளுடைய ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.
பெண்ணைத் தங்கத் தட்டில் தாங்கினார்… மருமகள் இதே மாதிரி இருந்த சமயம் வேடிக்கை பார்த்தவள் இன்று மணிக்கொரு தரம் எதையாவது சாப்பிட கொடுத்தாள் சீதாவுக்கு.
அகல்யாவும் ராஜமிற்கு சற்றும் சளைக்காமல் தன் நாத்தனாருக்குச் சேவை செய்தாள்… தன் மகளை அக்கறையாகக் கவனித்துக்கொண்ட அகல்யாவின் செயல்களைக் கண்டு ராமானுஜமிற்கு மனசு ஆறவில்லை…
“இந்தப் பிள்ளையைப் போய் இவள் என்ன பாடு படுத்திவிட்டாள்…”என்று ராஜத்தை மனதுக்குள் கரித்துக் கொட்டினார்.
தன்னால் முடிந்தவரை அகல்யாவிடம் அன்பாகவே நடந்து கொண்டவர், ராஜமிடம் தன் மிரட்டலை ஜாஸ்தி செய்திருந்தார்.
“இன்னொரு தடவை சூர்யா விஷயத்தில் ஏதும் ரகளைப் பண்ணனும்னு கனவுல கூட நினைச்சிடாதே. என் மகன் நல்லபடியா வாழவேண்டும் அதுக்குப் பெத்தவங்க நாம உதவியா இருக்கவேண்டுமே தவிர உபத்திரவம் பண்ண கூடாது…”
மற்ற நாட்கள் எப்படியோ, அவள் இருந்த சந்தோஷ மனநிலையில் அவர் சொல்வதைக் கேட்டு அதன் படி செய்கிறேன் என்று சத்தியம் செய்தாள் ராஜம்!
தன் தவறை உணர்ந்தாளா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்…
சீதாவின் அடுத்த மருத்துவப் பரிசோதனை செல்லும் போது ராஜம்மாவின் பாவச் செயல்கள், அதன் பலனை ‘இன்ஸ்டண்டாக’ காண்பித்தன, எதுவும் செய்யாத சீதாவின் மூலம்!
மருத்துவர் சீதாவின் கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதாகவும், குழந்தையைத் தாங்கும் சக்தியில்லை, குறைபிரசவத்திற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறிவிட்டார்.
பெட்ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!
இது ராஜமிற்கு பேரிடி… தன் நீண்ட வருடத்தின் தவத்திற்குக் கிடைத்த பலன் தான் இது என்று மகளை நினைத்து மகிழ்ந்திருந்த நேரம் இப்படி ஒரு செய்தி!
அழுது தீர்த்தாள்…
சீதா சொன்னது உண்மை தான், தேவை இல்லாமல் பாவத்தைச் சேர்த்துகிட்டேன்! இப்போ அது என் பொண்ணைத் தான் பாதிக்குது…
கடவுளே நான் என்ன தப்புப் பண்ணியிருந்தாலும் என்னைத் தண்டிச்சிடு, என் பொண்ணை எதுவும் கஷ்டபடுத்திடாதே என்று ஆண்டவனை வேண்டிக் கொள்ளத் தான் முடிந்தது ராஜம்மால்…
சீதாவின் முன் தைரியமாய்த் தன்னைக் காட்டிக் கொண்டாலும், ராமானுஜமிடம் அழுதாள்.
“என் பொண்ணுக்கு குழந்தை நல்லபடியா பொறக்கணும்…”என்பதுதான் அவரது தினசரி ஜெபமாக இருந்தது…
அவரும் அதே நிலையில் இருந்தார். மனைவியைச் சமாதானப் படுத்தவே முனைந்தார்…
“கண்டிப்பா நல்ல படியா நமக்குப் பேரனோ பேத்தியோ பிறக்கும்… நீ ஏன் ராஜம் இந்தளவு புலம்பற… எல்லாம் அவன் விட்ட வழி…”என்று பலவாறு கூறினாலும் ராஜத்தை சமாதானப்படுத்த முடியவில்லை.
சூர்யாவும் அகல்யாவும் வேறு சில மருத்துவர்களிடமும் சீதாவின் ரிப்போர்ட்டை காட்டினார்கள்… அவர்களுமே எதுவும் செய்ய முடியாத பிரச்சனை தான் என்பதை உறுதிப்படுத்தி விட்டனர்!
ஆனால் இவர்கள் எல்லாருக்குமே ஆச்சரியம் சீதாவின் மனத்திடம் தான். அவ்வளவு திடமாகத்தான் அவள் இருந்தாள்… அவளது உடல் வேண்டுமானால் தளர்ந்து இருக்கலாம்… ஆனால் மனம் தளரவே இல்லை… தன் குழந்தை தனக்குத்தான் என்ற அதீத நம்பிக்கை வேறு!
“நீங்க எல்லாம் பயப்படாதீங்க, கண்டிப்பா என் குழந்தை நல்லபடியா பிறக்கும். எனக்கு நம்பிக்கையிருக்கு…”
மனவலிமை தானே எந்தப் பிரச்சனைக்கும் முதல் மருத்துவம். அது அவளிடம் கொட்டிக்கிடந்தது!
ராஜமிடம் அகல்யா இப்போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்வதில்லை. ஆனால் பேசினார்கள் என்றும் சொல்லமுடியாது… சூர்யாவிடம் ஒத்துக்கொண்டிருந்தமையால் அகல்யாவால் அவ்வாறாக இருக்க முடிந்தது… ராஜமின் செய்கைகள், பேச்சுக்கள் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியுமா அவளால்? முயன்று கொண்டிருந்தாள்!
ஆனால் அவளுக்காகக் கேள்வி கேட்க அவள் கணவன் தயாராக இருந்தான்…
ஒரு தரம் சூர்யாவிடம் ராஜம், சீதாவின் உடல்நிலையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள்… தன் அன்னையைத் தெரிந்து கொண்டவன் அவளிடம் அதன் பிறகெல்லாம் அதிகம் பேசுவதில்லை. ! பேசினாலும் சண்டைகள் தான் அதிகமிருந்தது…
ஆனால் இப்போது அவள் சொல்லும் விஷயத்தைக் கேட்டு முகம் திருப்ப முடியாதே! முதலில் தன் அன்னைக்குச் சமாதானம் சொன்னவன், அவள் மீண்டும் புலம்ப, தன் மனதிலிருந்ததைக் கேட்டுவிட்டான், நேரிடையாகவே,
“அகல்யாவும் இந்த மாதிரி ஒரு நிலையில் தானே மா இருந்தா? அப்போது நீங்க இந்த அளவுக்குத் துடித்திருக்க வேண்டாம், அவளை உங்க பேச்சால் காயப்படுத்தாமலாவது இருந்திருக்கலாமே?”
ராஜம் பதில் பேசவில்லை, நான் எதுவுமே சொல்லலையே பா என்று சொல்ல அவள் மூளை நினைத்தாலும் அவளால் மகனின் முன் பேச முடியவில்லை… தன் மகன் அனைத்தையும் அறிவான் என்பதைக் கூட இத்தனை நாட்களில் உணரவில்லை… அவனும் பெரிதாக உணர்த்தவில்லை… ஆனால் தன் மகன் அறிந்து கொண்டான் என்ற செய்தி அவளை உள்ளுக்குள் நடுங்கச் செய்தது.
“நீங்க சொன்ன மாதிரி எல்லாம், சீதா மாமியார் அவ கிட்ட சொல்லியிருந்தா, நீங்க ஒத்துப்பீங்களா?”
சாட்டையடியாய் இருந்தது அவன் கேள்விகள்… ராஜம் பேச்சற்று நின்றாள். அதிலும் எப்படியெல்லாம் அகல்யாவை பேசியிருக்கிறாள். தன் வினை தன்னை மட்டுமே சுடும் என்பது இதுதானா?
“நீங்க இப்படிச் செஞ்சியிருப்பீங்கன்னு இன்னமும் என்னால் நம்பவே முடியலை மா… ஏன்? ஏன் இப்படியெல்லாம் செஞ்சீங்க?”என்று இடைவெளி விட்டவன்,
“எங்களுக்கு மட்டும் குழந்தை வேண்டாமா? எப்படி நீங்க அப்படிச் சொல்லலாம்? நானும் உங்க மகன் தானே? குழந்தையை வேண்டாம் வேண்டாமென்று சொல்ல உங்களுக்கு நாக்கு கூசலையா? அப்படிச் சொல்லி சொல்லியே தான் அந்தக் குழந்தை நிற்காமலே போய்டுச்சு… உங்க எண்ணத்துக்குத் தகுந்த படிதான் இப்போதும்…”என்று ஆரம்பித்தவன் முடிக்கவில்லை…
அவன் கண் எல்லாம் கலங்கிவிட்டது… ராஜமின் முகத்தைப் பார்த்தவன் அதற்கு மேலும், உங்களால் தான் என் வாழ்க்கை கெட்டது என்பதைச் சொல்லாமல் விட்டுவிட்டான்…
உலகத்தில் எல்லா வகையிலும் கெட்டவர்கள் இருப்பார்கள், கெட்ட நண்பன், கெட்ட மாமியார் மருமகள், ஏன் கெட்ட தகப்பன் கூட… ஆனால் ஒரு கெட்ட தாய் இருக்கவே முடியாது…
ராஜம் தன் மருமகளிடம் பேசிய பத்தில் ஒரு வார்த்தையைக் கூடத் தன் மகனிடம் அவளால் பேச முடியவில்லை. தன் தவறை உணர்ந்தாள் என்று சொல்வதை விட, அவள் மகனின் கண்ணீர் அவளைச் சாய்த்து விட்டது…
தாயிடம் தன் மனக்குமுறலை கொட்டிவிட்டவன் அந்த இடத்தை விட்டு போக எழ, அவனது கையைப் பற்றிய ராஜம்,
“புத்திகெட்டுப் போய்ச் சிலதை செஞ்சிட்டேன்!”என்று இடைவெளி விட்டாவள், “இனிமேல் என்னால் உங்க இரண்டு பேருக்கும் தொந்தரவு வராது பா…”அவனது கண்களைப் பார்க்காமல் வேறு புறம் பார்த்துக்கொண்டு கூறினாள்.
மகளுக்கு ஒரு பார்வையும் மருமகளுக்கு ஒரு பார்வையும் இருப்பது எவரானாலும் உண்மை தான். ஆனால் வீட்டிற்கு வருபவளும் மகள் தான் என்று மஹாவை போல எல்லோரும் நினைத்துக்கொண்டால், எங்குப் பிரச்சனை வந்துவிடப் போகிறது? ராஜம் இதை இனிமேல் பின்பற்றுவாள் என்று நம்புவோம்!
இந்தச் சம்பாஷனைகள் எல்லாவற்றையும் அகல்யா கேட்டுவிட்டாள்… சூர்யா தன் பேச்சை நம்பியிருக்கிறான் என்பதே அப்போது தான் அவளுக்குத் தெரிந்தது.
அகல்யா தன் அன்பாலும் அரவணைப்பாலும் தன் மாமியாரின் எதிர்மறை எண்ணங்களை மாற்றிக்காட்ட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை முடிவெடுத்தாள்.
ராஜம் தன் மகனிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவாள் என்று நம்பத் தோன்றியது…
அன்று இரவு அவர்கள் அறையில் சூர்யா அவளிடம் அதிகம் பேசாமல் ஒதுங்கியிருந்தான், எதையோ பற்றிய சிந்தனையில்! அகல்யா அவனை நெருங்கி,
“என்ன யோசனை பலமா?”
சூர்யா அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் சிந்தனையைத் தொடர்ந்தான்…
அவன் சீதாவை பற்றித் தான் கவலைப்படுகிறான் போல என்றெண்ணி அகல்யா, “கவலை படாதீங்க, சீதாவுக்கு ஒண்ணும் ஆகாது. நல்லபடியா குழந்தை பிறக்கும்…”
அவனை ஆதரவாய் அணைத்தபடி அவள் கூற, நெகிழ்ந்துபோனான்…
அவளையே பார்த்தபடி, “உன் குணத்தைப் புரிஞ்சிக்காம உன்னைக் கஷ்டப்படுத்திட்டாங்களே எங்க அம்மா…”
அவள் முகத்தைக் கையில் ஏந்தி, அவளது கண்களைப் பார்த்தபடி அவன் கூற,
அகல்யா நிதானமாக, “துரை மட்டும் என்னை முழுசா புரிஞ்சிகிட்டீங்களா, என்ன?”அவள் கேட்க, அவனால் பதில் கூற முடியவில்லை! என்னதான் இப்படிப் பேசக்கூடாது என்று நினைத்திருந்தாலும் தன்னையும் மீறி வெளிவந்தது அந்தக் கசப்பான வார்த்தைகள்.
அவள் சொல்வதில் தவறென்ன? நான் புரிந்து கொண்டிருக்கிறேன் என்பதை இதுவரை நான் என் செயல்களில் காட்டவில்லையே!
“என்னை மன்னிச்சிடு டீ… நான் உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்”
அகல்யா எதுவும் பதில் பேசவில்லை… சூர்யா தொடர்ந்தான்…
“நீ இல்லாத வாழ்க்கையில் நான் வெறும் ஜடம் தான் அகல்யா… நான் வந்து கூப்பிட்டும் நீ வரலைன்ற கோபமே மறுபடியும் உன்னைத் தேடி என்னை வராமா தடுத்திடிச்சு!”
பழைய விஷயங்களைப் பேச ஆரம்பிப்பது ஒரு நோய் தொற்று போல்…
ஒரு விஷயத்தில் ஆரம்பிப்பது படிப்படியாக எங்கேயோ போய் முடியும்! இப்போதும் அது தான் நடந்தது… அவளை விட்டு விலகி ஜன்னல் பக்கம் போய் நின்று கொண்டான், இரவின் கருமையை வெறித்தபடி!
அகல்யாவுக்கு இந்த விஷயத்தைப் பேச சற்றுத் தயக்கம். அனைத்தையும் மறந்து ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வில், இந்தப் பழையதை பேசி பிரச்சனை வர வேண்டுமா?
ஆனால் தன் கணவனின் அமைதி அவளைத் தாக்க, அவனிடம் சென்றவள், “என் பேர்லயும் தான் தப்பு சூர்யா, நான் கொஞ்சம் நிதானமா போயிருக்கலாம்…”
இறங்கி போனாள் அவனிடம்…
“ஆனா நீ இங்க வந்தன்னைக்குத் தான் நானும் உன் வீட்டுக்கு வந்தேன் அகல்யா… உன்னை எப்படியாவது இங்க அழைச்சுட்டு வந்துடனும்ன்னு நினைச்சேன்….” என்று கூற,
“ம்ம்ம்… தெரியும் சூர்யா… நீங்க வந்தது தெரிஞ்சவுடனே என்னால அங்க இருக்கவே முடியல…” என்று அவள் கூறவும் அவனது கண்கள் கலங்கியது.
“என்னவா இருந்தாலும் இங்கயே இருந்து சண்டை போடு டீ… விட்டுட்டு மட்டும் போய்டாதே… அது நரகம்…”
அதைக் கேட்டதில் அவளது கண்களும் கலங்கின.
“நீங்க இல்லாத வாழ்க்கை எனக்கும் நரகம் தான். பூவிழி இல்லைன்னா என்ன ஆகியிருப்பேன்னு எனக்குத் தெரியலை…”
தான் சென்னையில் இருந்தது, வேலை பார்த்தது, அங்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் சொன்னாள்…
நிதானமாகக் கேட்டவனிடம், “உங்களைச் சென்னையில் ஒரு தடவை பார்த்தேன்… வடபழனி மால்ல… ஒரு வருஷமிருக்கும்!”
“அப்படியா?”அவனுக்கு என்ன விஷயத்துக்குச் சென்றிருந்தான் என்பது கூட ஞாபகம் இல்லை…
“ம்ம்… திருநெல்வேலி பக்கம் வராமா ஒதுங்கியிருந்தேன், பெரியம்மா அமெரிக்கா கிளம்பியதும், வேற வழி இல்லாம இங்க வந்துட்டேன்!”
அமைதியாயிருந்தனர்…
“என் கண்ல படாம இருக்கவா ஒதுங்கியிருந்தே? என் மேல உனக்கு அவ்ளோ வெறுப்பா அகல்யா?”
சூர்யாவின் குரல் உடைந்தது போலிருந்தது… முகம் எல்லாம் சிறுத்துவிட்டது. தன்னை எந்தளவு ஒதுக்கி இருந்தாள் என்பதை அவளது வாயால் கேட்கும் போது வலித்தது.
அவன் நிலையைக் கண்டு பதறியவள்…
“ஐயோ அப்படி எல்லாம் இல்லை பாவா, உங்களைப் பார்த்ததிலிருந்து உங்க கிட்ட வந்திடணும்னு துடிச்ச என் மனசை என்னால கட்டுப்படுத்த முடியலை… அதுக்காகத் தான்…”அகல்யா வெளிப்படையாகத் தனது மனதை கூறினாள்.
“ஏன் கட்டுப்படுத்தணும்? என் அம்மாவாலையா?”சூர்யா தோண்டி துருவினான்…
பின் அவனே, “அவங்களால் உனக்கு, இல்ல நமக்கு எந்தத் தொந்திரவும் இனி இருக்காது அகல்யா, பொண்ணு மேல உள்ள அதி அக்கறை அவங்க குணத்தை மாத்திடிச்சு. அவங்க அந்த மாதிரி ஆள் கிடையாது…”
வாதாட விரும்பவில்லை அகல்யா, “அவங்க உங்க கிட்ட பேசினதை கேட்டேன்…”
சூர்யாவுக்கு புரிந்தது, தான் சற்று முன் பேசியதை கேட்டிருக்கிறாள்…
“உங்களை மட்டுமே நம்பி உங்க கிட்ட திரும்பி வந்திருக்கேன்… நீங்களும் நான் பேசுவதைக் கொஞ்சமாவது நம்பணும்…”
“சரிங்க மேடம்” கும்பிடு போட்டு சொன்னவனின் தோரணையில் மயங்கி அவனை அணைத்து முத்தமிட்டாள்… அவனிடமிருந்து விலக நினைத்தவளை அவன் விடவில்லை, விடியும் வரை!
சீதாவின் உடல்நிலை காரணமாக மருத்துவப் பரிசோதனைக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருந்தது.
“அகல்யா எனக்கு இன்னிக்கி கண்டிப்பா ஆபிஸ் போயாகணும். டிரைவர் வேற இன்னிக்கி லீவ், நீ கொஞ்சம் சீதாவையும் அம்மாவையும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடுறியா, ப்ளீஸ்?”சூர்யா அவளிடம் கேட்க,
“நான் சும்மா எல்லாம் எதையும் செய்ய மாட்டேன்…”என்றவள், அவனைக் குறும்பாகப் பார்க்க…
“சரி நான் ஆபிஸ்ல இருந்து வரும்போது உனக்குக் கடலைமிட்டாய் வாங்கிட்டு வர்றேன்… என்ன!” கேலிசெய்தான்…
அவனுக்கு ஒரு அடி வைத்தவள், அவனை நெருங்கி தன் கன்னத்தை அவனிடம் காட்டினாள்… சூர்யாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, மனைவியின் செய்கையைக் கண்டு,
“மை அகல்விளக்கு இஸ் பேக்…”என்று கேலி செய்து விட்டு அவள் கன்னத்தில் ஒன்று வைத்துவிட்டுக் கிளம்பினான்…
அகல்யா மற்ற இருவருடன் மருத்துவமனை செல்ல, அன்று இரத்த பரிசோதனை செய்தனர் சீதாவுக்கு… மருத்துவர் சீதாவுக்கு இரத்த சோகை படுமோசமான நிலையில் இருப்பதாக ஒரு குண்டை போட்டார்!
26
“என்ன மா, இவ்ளோ குறைவா இருக்கு? பிள்ளைதாச்சி பொண்ணுக்கு சத்தான ஆகாரம் எல்லாம் குடுக்குறீங்களா இல்லையா…” என்று ராஜமை வசைபாடினார் மருத்துவர்…
அகல்யா தான் பதிலளித்தாள்,
“டாக்டர், அயர்ன் டேப்லட் போடத் தான் செய்றாங்க, ஆனால் எப்படி?”
டாக்டர் படு டென்ஷனில் இருந்தார்,
“போட்டுமே கம்மியா இருக்கே? ஏற்கனவே காம்பிளிகேஷன்ஸ் இருக்கு… இதுவும் சேர்ந்தா குழந்தைக்கு ஆபத்து… சோ பிளட் டிரான்ஃபியுஷன் கண்டிப்பா பண்ணவேண்டும்!”உறுதியாகச் சொல்லிவிட்டார்…
ராஜத்திற்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. பெண்ணை நினைத்து அப்போது அழத்தான் முடிந்தது.
அகல்யா விரைவாகச் செயல்பட்டாள்.
சீதாவை தைரியப்படுத்தியவள், அவளின் பிளட் குரூப்பை ரிபோர்ட்டில் பார்க்க, அது தன்னுடையதாகவே இருந்தது ஒரு நிம்மதி!
உடனே இரத்த தானம் செய்யத் தயாரானாள்!
ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குத் திரும்பியிருப்பார்கள் என்றெண்ணி அகல்யாவை செல்லில் சூர்யா தொடர்புகொள்ள, அதை எடுத்த ராஜம் அங்கு உள்ள நிலவரத்தைக் கூறியபின்…
“சூர்யா, அகல்யா எந்த ஒரு சின்னத் தயக்கமும் காட்டலைப் பா, உடனே அவளே இரத்தம் தர்றேன்னு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டா…” என்று இடைவெளி விட்டவள்,
“ரத்தம் கொடுக்கறது சாதாரண விஷயம் இல்லப்பா… கொடுக்க மனசு வேண்டுமே… இத்தனைக்கும் அவளை எத்தனை பேச்சுப் பேசிருக்கேன்… அத்தனையையும் மனசில் வெச்சுக்காம எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கறா? அவ அளவு எனக்குப் புத்தி இல்லாம போச்சு சூர்யா…” என்று நிறுத்தியவள்,
“இவ்வளவு நாளும் நான் தான் அவளைத் தப்பா புரிஞ்சிகிட்டேன்…” நிஜமான வருத்தத்துடன் தன் மகனிடம் கூற, அவனுக்குத் தன் அம்மா இப்போதாவது உணர்ந்தாளே என்று நிம்மதியானது.
மாறிவிட்டாள் என்ற நம்பிக்கையும் வந்தது! அதாவது முதலில் இருந்தளவு கடுமையாக இருக்கவாவது மாட்டாள் என்ற நம்பிக்கை!
இரத்தம் கொடுத்ததால் மயக்கமாயிருக்குமோ என்றெண்ணி அவளை வண்டி எடுக்க வேண்டாம் என்று சூர்யாவே வந்து அழைத்துச் சென்றான் அவர்களை… அன்றிலிருந்து வீட்டில் சீதாவுக்கு இருந்த கவனிப்பு அகல்யாவுக்கும் கிடைத்தது, யார் மூலம்?
எல்லாம் நம் ராஜம் தான்!
ஒரு சில மாதங்களில் அகல்யா, ராஜம் கவனிப்பில் சீதாவுக்கு நல்லபடியாகக் குழந்தை பிறந்தது… ராஜம் ஒரு ஃபுல் டைம் பாட்டியாக, பிசியாகி விட்டாள் தன் பேத்தியுடன்…
எந்நேரமும் சீதாவின் குழந்தையைச் சுற்றி சுற்றி வந்த தன்னவளை முதலில் எல்லாம் ரசித்தாலும், பொழுதன்னைக்கும் அதையே அவள் செய்யக் கடுப்பாகிபோனான் சூர்யா…’இவளுக்கு இதே வேலையா போச்சு’ என்று மனதில் நினைத்தவன், அன்றும் ஐந்தாவது முறையாக அவளை மாடிக்குப் போகலாம் என்று அழைத்தான்…
சீதா கூடக் கேலி செய்தாள்,
“போயேன் அகல்யா, அண்ணன் எவ்ளோ நேரமா கூப்பிடுறாங்க…” நமுட்டு சிரிப்புடன் சொன்னவளிடம்,
“உங்களுக்குக் குட்டியை பார்க்கிற நைட் டீயூட்டி இருக்கே பாவம்ன்னு உதவிப் பண்ணா, என்னை விரட்டுறீங்களா? இந்தாங்க…” குழந்தையை அவளிடம் கொடுத்தாள்… ஆனாலும் கிளம்பிய பாடில்லை…
ஒன்பது மணியாகியும் அசையாமல் இருந்தவளின் பக்கம் சென்றவன்,
“நீயா வர்றியா? இல்லை இங்க எல்லார் முன்னாடியும் உன்னைத் தூக்கிட்டு போகவா” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னதும் தான், செய்தாலும் செய்துவிடுவான் என்று பயந்து அவன் பின்னே கிளம்பிவிட்டாள்…
அவள் வருவதற்கு முன்பே, அவர்கள் போர்ஷனுக்குப் போய் விட்டிருந்தான் சூர்யா… இவளும் வீட்டுக்குள் நுழைய, வீடே இருட்டாய் இருந்தது… ‘வந்தவங்க லைட்டை போடாமல் என்ன பண்றாங்க’ என்று எண்ணியபடி லைட்டை போட போனவளை அலேக்காகத் தூக்கினான் சூர்யா…
“ஐயோ என்ன பண்றீங்க? கீழ சத்தம் கேட்க போகுது… விடுங்க”
திமிறியவளை விடுவேனா என்பது போல் பற்றியிருந்தவன், தங்கள் அறைக்குச் சென்றதும் தான் இறக்கி விட்டான்…
“நானே வர மாட்டேனா, எதற்குத் தூக்குனீங்க?”தன் மனைவியின் சிணுங்கலை ரசித்தபடி, அவளை இடையோடு அணைத்தவன்,
“ஆசையாய் இருந்தது! பொண்டாட்டி கிட்ட எல்லா ஆசையையும் நிறைவேத்திடணும்ல?” கண்ணடித்தபடி கூறியவன்,
“ஒண்ணே ஒண்ணு தான் ரொம்ப நாளா பெண்டிங்!”என்றும் ஏக்கமாக முடிக்க…
அது என்னவென்று தெரியாதவளா அகல்யா,
அவன் சட்டை பட்டனை திருகியபடி நின்றிருந்தவளை,
“என்ன டீ அகல்விளக்கு? இந்நேரம் நீ பதில் சொல்லியிருக்கவேண்டுமே? அதிசயமா அமைதியாயிருக்க…” சூர்யா அவளைப் பேசத் தூண்ட, அவள் தயக்கமாய்
“நாமளும் குழந்தை பெத்துக்கலாமா சூர்யா?” என்றவள்… சிறிது நேரம் அவனிடம் பதிலில்லாமல் நிமிர்ந்து அவனைப் பார்க்க,
“நல்லா யோசிச்சு பார் டீ, எவ்வளவோ நாளா நான் இதைக் கேட்குறேன்னு தெரியும். உனக்கு இப்ப தான் மனசு இறங்கிச்சா?” விட்டால் அடித்துவிடுவான் போல…
“நான் வேற குழப்பத்தில் இருந்தேன், புரிஞ்சிகோங்க சூர்யா… எனக்கு முதல் தடவை மாதிரி ஆகிடுமோன்னு பயமாயிருக்கு. என்னால் இன்னொரு இழப்பைத் தாங்க முடியாது…”அவள் கலங்கினாள்
அவளை மேலும் அணைத்து அவள் தலை கோதிவிட்டவன்,
“பைத்தியமா நீ? ஊருக்கெல்லாம் உபதேசம் பண்றே, உனக்கென்று வந்தா எதுவும் பாசிடிவாகவே தோணாதா?”அவள் விழிப்பதைக் கண்டு மனமிறங்கியவன்,
“பயப்படாதே அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது” என்று சமாதானப்படுத்த…
நீண்ட நேரம் யோசனைக்குப் பின் “நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்!” என்று அவனது வார்த்தையை ஒப்புக்கொண்டு,
“நமக்கும் சீதா மாதிரி பொண்ணு தான் பொறக்கணும்… அப்போ தான் நிறைய நகை போட்டு அழகு பார்க்க முடியும், இல்ல?” ஆமோதிப்பான் என்று நினைத்து அவள் கூற, அவனோ,
“சாரி என் சாய்ஸ் பையன் தான்!”
பையனா பொண்ணா என்ற இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது…
அடேய் முதல்ல அதுக்கு ஏற்பாட்டை பண்ணுங்க என்று இருவரின் மைண்ட் வாய்ஸ் கத்தியது அந்தக் களேபரத்தில் கேட்கவில்லை…
சூர்யா வாக்குவாதத்தை நிறுத்த வழி தேடி, வேறு ஒரு வழியாய் அவள் வாயை அடைத்தான்!
எண்ணங்களே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன, என்பது மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆனது அகல்யாவின் வாழ்க்கையில். குழந்தையை நினைத்து ஏங்கிய அகல்யாவுக்கு அது கிடைத்தே விட்டது… அதுவும் விரைவில்…
அலுவலகத்திலிருந்த சூர்யாவுக்குப் போன் செய்தவள்,
“சூர்யா, இப்ப பேசலாமா?” என்று அனுமதி கேட்க,
“சொல்லு மா, அதிசயமா எனக்குப் போன் பண்றே? சீதா குழந்தை தூங்குதா என்ன?” கேலி செய்தவனிடம்
“ரொம்பப் பேசுனீங்க, நான் சொல்ல வந்ததைச் சொல்லமாட்டேன்…” அதட்டியவள்…
“சரி சரி கோபப்படாதே… சொல்லு…” அடங்கிவிட்டவனைக் குதிக்கச் செய்தது அவள் வார்த்தைகள்…
“பிரக்னென்சி ஹோம் டெஸ்ட் பண்ணேன், பாசிடிவ்னு காட்டுது…” சிரித்தபடி சொன்னவளிடம் பதிலளிக்கக் கூட அவனுக்கு வாய் வரவில்லை…
சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான்… அவளோ,
“பூவிழி, அம்மாவை கூடக் கூப்பிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வரட்டுமா?” என்று மேலும் கேட்க…
நினைவுக்கு வந்தவன், தன் ஆபிஸிலிருந்து வெளியேறிவிட்டான்…
அவள் அவன் பதிலுக்காகக் காத்திருக்க,
“நான் காரில் ஏறிட்டேன், நானே வந்து உன்னைக் கூப்பிட்டு போகிறேன்” என்று போனை வைத்தவன், அவள் முன்னால் பத்தே நிமிடத்தில் நின்றான்!
அகல்யாவுக்கு அவனைப் பார்த்ததும் மகிழ்ச்சி, அவனும் மனைவியைக் கண்டதும் முகம் எல்லாம் புன்னகை சிந்த, அவளை நெருங்கி அவளின் மணிவயிற்றில் முத்தமிட்டான்!
இருவரின் வாழ்விலும் இன்னும் எட்டு மாதங்களில் ஒரு புது ஜீவன் வரப்போகிறான் என்பதை அன்றே மருத்துவரும் உறுதிப்படுத்தினார்…
அதன்பிறகு வந்த நாட்கள் எல்லாம் சொர்க்கம் தான் அகல்யாவுக்கு…
உடல் உபாதைகள் ஜாஸ்தியானதால் தன் அன்னை வீட்டுக்குச் சென்றுவிட்டாள், ஒரு மாதத்திற்கு!
பிள்ளை வயிற்றில் இருந்தால் என்ன ஒரு கவனிப்பு?
அப்படி ஒரு அக்கறையான கவனிப்பை எந்தப் பெண்ணும் மற்ற நாட்களில் தன் அன்னையிடம் பெற்றிருப்பாளா என்பது சந்தேகமே…
பூவிழி வேறு இதில் தன் மாமியாருடன் கூட்டு சேர்ந்து கொண்டாள்… தனக்கான அக்கறை என்று தோன்றினாலும் அது பிள்ளைக்கானது என்பது அகல்யாவுக்கு தெளிவு…
அவர்கள் இல்லத்துக்குத் திரும்பி வந்த பின், சூர்யா ஒரு படி மேல் போய், எந்த வேலையையும் அவளைச் செய்ய விடுவதில்லை!
பொழுதன்னைக்கும் அவளுடன் நேரம் செலவழித்தான்… ஆபிஸ் எல்லாம் கார்த்தி வசம் ஒப்படைத்தாயிற்று…
கார்த்தி போனில் அகல்யாவிடம் தன் வாழ்த்தினைத் தெரிவித்துவிட்டு, “பாஸ் ஆபிஸ் வருவதே அதிசயம், வந்தாலும் இப்போ எல்லாம் ஃபுல் டைம் ‘பேபி சென்டர்’ சைட் ல தான் இருக்கார்… வயிற்றில் வளரும் குழந்தையைப் பத்தி நீ என்ன சந்தேகம் கேட்டாலும் சரியா அதுக்கான விடையைச் சொல்லிடுவாப்ல, அந்த அளவுக்கு மேதாவி ஆகிட்டார்…”என்றான்.
ஜெயந்த்தும், அவனது மனைவியும் போனில் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்!
இப்போதும் ஜெயந்துக்கும் ராஜத்திற்கும் இன்னமும் எதுவும் சரியாகவில்லை… எதிர்காலத்தில் எப்படியும் சரியாகிவிடும் என்று சீதாவும் அகல்யாவும் பேசிக்கொள்வதுண்டு.
சூர்யா வீட்டில் வளைகாப்பு முடிந்து இவள் அம்மா வீட்டுக்கு வர, அடுத்த நாள் சூர்யாவும் அவன் பெட்டியுடன் மாமனாரின் வீட்டுக்கே வந்துவிட்டான்…
அகிலன் அகல்யாவை பழிவாங்கினான்,
“என்னவோ நான் மட்டும் தான் பொண்டாட்டி தாசனென்று சொன்னே? பார்த்தியா இப்போ? ரொம்ப அதிகமா பேச கூடாதென்று இதற்குத் தான் பெரியவர்கள் சொல்கிறார்கள்…” சிரித்துக்கொண்டே தன் தங்கையை வார, என்ன பதில் சொல்வாள் தன் தமையனிடம்!
அகிலனுக்கும் பூவிழிக்கும் இவர்கள் இருவரையும் கேலி செய்வதிலேயே பொழுது போனது!
“போங்க போய்ப் பிள்ளை குட்டியை படிக்க வைங்க…”என்று அகல்யா சொன்னாலும், ம்ம்ஹும்…
‘இனிமை இதோ இதோ’ என்று பாட வேண்டியது ஒன்று தான் பாக்கி, அகல்யாவுக்கு… தாய்மையின் பூரிப்பில் மிதந்து கொண்டிருந்தாள்…
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னால் தன் கணவனும், பெற்றோரும், அண்ணன் குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு மனநிறைவாய்… நீ அனுபவித்த துன்பத்திற்கு இந்த மகிழ்ச்சி குறைவு தான், இரு உனக்கு மேலும் தருகிறேன் என்று கடவுள் நினைத்தார்.
அதற்கேற்றார் போல் ஒரு இனிய நாளில், சூர்யாவின் எண்ணப்படி, அகல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது! அகல்யாவின் பக்கத்தில் ஒரு குட்டி ஜீவன் வீரிட்டு அழ, அதைச் சுற்றியிருந்த அனைவருக்கும் அது அழுகையாய் தெரியவில்லை…
ஆனந்தம், மகிழ்ச்சி, நிம்மதியின் ஒலி வடிவம் என்றே தோன்றியது அந்தப் பிஞ்சின் அழுகுரல்…
சில வருடங்களுக்குப் பிறகு,
சீதா தான் எல்லாவற்றிலும் முதன்மை என்பதை ராஜமுடன் சேர்ந்து அகல்யாவும் இப்போதெல்லாம் ஒத்து ஊதினாள், அதில் ஏனோ அவளுக்குக் கஷ்டம் தெரியவில்லை…
அப்படிச் செய்ததால் ராஜம் கொஞ்சம் அகல்யாவிடம் தன் தோரணையைக் காட்டாமல் இருந்தாள்!
அகல்யாவுக்குத் தன் அன்னை வீட்டில் பூவிழியையும் தன்னையும் சமமாகக் கொண்டு செல்கையில், இங்கே தானே, இறங்கிப் போனாள் தான் என்ன, என்றிருந்து கொண்டாள்! அதன் பலனா, இல்லை பேர பிள்ளைகளின் வரவோ, எதுவோ ராஜமின் ‘சேஷ்டைகள்’ வெகுவாகக் குறைந்திருந்தது. சீதா என்றுமே அகல்யாவுக்குப் பூவிழியை போல் ஒரு நல்ல தோழியாகவும் மாறிவிட்டிருந்தாள்.
‘மாமியார் மெச்சிய மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியாரும் இல்லை’
என்ற நியதியை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு புரிந்து கொண்ட அகல்யா, தன் வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் நீந்தத் தொடங்கிவிட்டாள்…
அகல்யா தன் மூன்று வயது சின்னக் குட்டி ஹரியை துரத்திக் கொண்டிருந்தாள்.
“டேய் நில்லு டா, சேட்டை பையா…”
ஷப்பா என்ன ஓட்டம் ஓடுகிறான்? சூர்யா அவர்கள் ஓட்டத்தை வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க,
“பார்த்திட்டே இருக்கீங்களே? அவனைப் பிடிங்களேன் பாவா…”என்று அதட்டிய பிறகே பிள்ளையைப் பிடித்தான்… குட்டியின் தலையில் எண்ணெய் வைக்க ஆரம்பித்தவளை நோட்டமிட்டவன் அவளைச் சீண்டலாம் என்று,
“நமது அடுத்தப் பிராஜெக்ட் ரிலீஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணவேண்டும், இன்றைக்கு நைட் மீட்டிங் வச்சிக்கலாமா?” தன் மனைவியை அணைத்தபடி கேட்க அவனை முறைத்தவள்,
“இருக்கிற பிராஜக்ட்லயே ஏகப்பட்ட பக் இருக்கு மிஸ்டர், சாப்பாடு சேட்டைன்னு! அதை முதலில் ஒழுங்கா சரி பண்ற வழியைப் பாருங்க… சும்மா சும்மா எதையாவது கேட்டுகிட்டு…”
“அலுத்துகிட்டாலும் அழகா தான் டீ இருக்கே! ம்ம்… நேற்று வந்த இந்தப் பொடிப்பய உன்னையே புலம்ப விட்டுட்டானா? எதற்கும் அசராத என் பொண்டாட்டியை! முதலில் அவனைச் சரி பண்றேன்… டேய் ஹரி குட்டி இங்க வா டா…” ஒரே நாளில் சரி செய்யும் விஷயம் போல் அவன் பிள்ளையைச் செல்லம் கொஞ்ச ஆரம்பித்திவிட்டான்…
மகிழ்ச்சியை நாடித் தேடுவதே வாழ்க்கையின் ஒரே நோக்கம் என்று போதித்தது புத்தமதம்.
அகல்யாவும் அதை உணர்ந்து விட்டாள்!
வாழ்க வளமுடன்!
Nice ani. Agal manasu maruma????