Ani Shiva’s Agalya 3

3

மிகப் பிரம்மாண்டம் என்று சொல்லும்படியாக நடந்தது அவர்களின் நிச்சயதார்த்தம்…

சூர்யாவின் ஏற்பாட்டில் மண்டபத்தில் வைத்து நடத்தினர். பெண் மாப்பிள்ளை மோதிரம் மாற்றிக்கொண்டனர், சீதா அகல்யாவின் அருகிலேயே இருந்தாள்…

கூட்டம் குறையவும், சூர்யா அகல்யாவை தனியாக அழைத்தான்…

அகல்யா அவன் பின்னோடு சென்றவள், அவன் மணமகன் அறைக்கு அழைத்துச் செல்வதை மிகத் தாமதமாகவே உணர்ந்தாள்.

“சூர்யா யாராவது பார்த்தா என்னாகும்?” சற்றே பதட்டமாக அவள் கேட்க, அவனோ சற்றும் கவலை இல்லாதவனாக,

“என்ன ஆகும்?” என்று அவன் எதிர்க் கேள்வி கேட்க.

“அது…” அவள் தயங்க,

“நான் சொல்றதை மட்டும் செய்…”

“என்ன செய்யணும்?”

‘அய்யோ என்ன சொல்லுவானோ?’ பதட்டமாக இருந்தது.

“முதல்ல கண்ண மூடு, ரெண்டு கையும் முன்னாடி நீட்டு…”

சங்கோஜமாக இருந்தாலும் அவன் சொன்னபடியே செய்தாள். அவள் கைகளில் எதையோ அணிவித்தான்… அவன் கைப்பட்ட இடம் சிலிர்த்தது…

“இப்போ பாரு…”

மிக அற்புதமான இரண்டு ஜோடி வைர வளையல்கள் அவள் கைகளில் மின்னின…

“பிடிச்சிருக்கா?” ஆர்வமாக அவன் கேட்டான்.

“உங்களையா? இல்லை வளையலையா?”

“இரண்டுத்தையும் தான்…”

“ம்ம்… ரொம்ப”

“அப்போ, வேற வழி இல்லாம தான் ஓகே சொன்னதா சொன்ன?” கேலியாக அவன் கேட்க,

“அது போன மாசம், இது இந்த மாசம்!” கேலியாக இவள் கூற, இருவரின் சிரிப்பும் அடங்க வெகுநேரமானது.

“நான் கிளம்புறேன், அம்மா தேடுவாங்க…”

“எனக்கு ஒண்ணும் கிடையாதா…” அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி அவன் கேட்க,

“ஹய்யோ நான் எதுவும் வாங்கலயே…”

“கடையில் வாங்கறது எல்லாம் வேணாம்” என்றுவிட்டு அவளை நெருங்கினான். சற்றே பின்னடைந்தவள் “சூர்யா விடுங்க நான் போக…”

அடுத்த வார்த்தையைக் கூற அவள் இதழ்களை அவன் விடவில்லை.

எவ்வளவு மணித்துளிகள் சென்றதோ!?

அகல்யா தான் முதலில் பூலோகத்திற்கு வந்தாள். அவனை விட்டு விலகியவளின் கையைப் பிடித்தபடியிருந்தவன் அவள் சற்று நிதானித்தவுடன்…

“அகல்யா என்னால் ரொம்ப நாள் வெயிட் பண்ண முடியாது… இந்த மாசமே கல்யாணத்தை வைக்கணும்…”

அவள் முகம் சிவப்பதை ரசித்தான்…

“எனக்கு இன்னும் நாலு மாசம் காலேஜ் இருக்கு…” அவள் தயங்கினாள்.

“பரவாயில்லை, கல்யாணம் முடிச்சிட்டுப் போய்ப் படி…” அவனது குரலில் உறுதியிருந்தது.

“சூர்யா…” அவள் பேச முயல…

“நோ, நான் பேசிக்கிறேன்… நீ கிளம்பு…”

அகல்யா அவளறைக்கு வந்துவிட்டாள். உணவருந்தச் சென்ற பெரியவர்கள் யாரும் இன்னும் வரவில்லை…

திரும்பத் திரும்பச் சூர்யாவின் பேச்சையே நினைத்தவளுக்கு மனதினுள் ஏக்கமிருக்கத்தான் செய்தது…

அவன் சொல்லிவிட்டான், தான் சொல்லவில்லை…

அவனுடன் சேர்ந்து தன் வாழ்க்கையைத் தொடங்க அவளும் ஏங்கினாள் தான்…

ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சீக்கிரம் மாற்றம் வருமா? வந்துவிட்டதே!

கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிச் சில வாரங்களில், தான் ஏன் இந்த அளவிற்கு மாறினேன்?

எல்லாம் காதல் படுத்தும் பாடு…

ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ… ஒ… ஒ…

ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ

ஆம் அகல்யாவுக்கும் காதல் வந்தேவிட்டது!

சிறிது நேரத்திலேயே சூர்யா வீட்டில் உள்ளவர்கள் அவளிடம் விடைபெற வந்தனர். அனைவரிடமும் சென்று வாருங்கள் என்று கைகூப்பியவளை, ராஜம் நீண்ட நேரம் பார்த்தார். பின்னர்,

“அப்போதே நீ போட்டிருந்த நகையில் இந்த வளையலை நான் கவனிக்கவில்லையே…” குறிப்பாக அவர் கேட்க,

“ஆமா, அப்போ போடலை…” சற்றே யோசித்தாள் அகல்யா…

“இப்போ தான் சூர்யா கொடுத்தார்…” என்று கூற, அவளது பதிலில் ராஜமின் முகம் இருண்டுபோவதை அவளுடன் சேர்ந்து அவள் அம்மாவும் கவனித்தார்.

சட்டென்று சுதாரித்தவர், “போயிட்டு வர்றோம் மா…”

கிளம்பிவிட்டார்கள்…

ராஜத்திற்கு மனசு அடித்துக்கொண்டது. நம்மிடம் கூடக் கூறவில்லையே தன் மகன்? எப்போது வாங்கினான்? இன்னும் திருமணமே ஆகவில்லை… அதற்குள் இப்படியா?

ராஜம் கொடுமைக்கார மாமியாராய் இருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது. தன் பெண்ணைத் திருமணம் செய்து தந்த வீட்டில் கூடச் சில பல பிரச்சனைகள் வந்தபோதும் நிதானமாகவே நடந்துகொண்டவர் தான். ஆனால் ஏனோ இப்போது அவரே அறியாமல் சில குழப்பங்கள்.

இது நாள்வரை தான் நடத்திக் கொண்டிருக்கும் சாம்ராஜியத்தை மருமகள் என்ற பேரில் வருபவள் எடுத்துக் கொள்வாளோ?

எல்லாரும் அவள் பேச்சைக் கேட்கவேண்டுமோ?

தன் மாமியார் தன்னை ஆட்சி செய்தது போல் தானே தானும் இருக்க வேண்டும்?

தன்னிடம் எதையும் மறைக்காத மகன் இன்று தனக்கே தெரியாமல் அவன் மனைவியாய் வரப் போகிறவளுக்குச் செய்ததை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சில இந்திய மாமியார்களின் சராசரி குணம் ராஜமுக்கும் வந்துவிட்டது. அவ்வளவு நேரமும் இருந்த உற்சாகம் ஆவியாய்ப் பறந்தும்போனது.

அடுத்த நாள் காலைத் தாமதமாகவே எழுந்த சூர்யா, அலுவலகத்திற்குப் போன் செய்து வேலைகளைப் பற்றியும் தான் வர மதியம் ஆகும் என்று தெரிவித்தபடி கீழே வந்தான்…

சமையற்கட்டில் அவன் அம்மா, காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்…

“செய்யவேண்டுமென்று சொல்லி இருந்தா சபையில் செஞ்சியிருக்கலாமே, அது என்ன தனியா குடுக்குறது?” குரலில் சூடு தெரிந்தது.

“அட என்னடி, அவன் கையால போட்டு விடணும்னு நினச்சிருப்பான், இது ஒரு குத்தமா?” என்று ராமானுஜம் சமாதானம் செய்ய,

சூர்யா சிரித்துக்கொண்டான் ‘ஒரு ஆண் மனசை இன்னொரு ஆணால் தான் புரிந்துகொள்ள முடியும்!’

“இல்லைங்க நாத்தனார் முறைன்னு ஒண்ணு இருக்குல்ல?” விடாப்பிடியாக அவர் கூற,

“விடு அவனுக்கு எப்படி தோணுதோ செஞ்சிருக்கான், எனக்கு ஒண்ணும் தப்பா தெரியலை…” அவர் முடிக்க நினைக்க,

“இது என்ன சின்ன விஷயமா?” ஆதங்கமாக ராஜம் கேட்டார்.

“ராஜம் உனக்கு இப்பொ என்ன பிரச்சனை? போட்டாச்சு வந்தாச்சு, விட்டுடு…”

சூர்யா அனைத்தையும் கேட்டபடியிருந்தான், சட்டென்று கிட்சனில் நுழைந்தவன், அவன் அம்மாவிடம் எதுவும் கூறாமல்,

“அப்பா உங்க கிட்ட தனியா பேசணும்…” என்று கூறிவிட்டு பின்னால் தோட்டத்திற்கு அவரை அழைத்துச்சென்றவன்,

“என் கல்யாணத்தை சீக்கிரம் வைக்கணும்…” சட்டென்று அவன் கேட்டதில் ராமனுஜத்திற்கு சிரிப்புதான் வந்தது… அவரும் இந்த வயதை கடந்தவர் தானே?

“என்னப்பா அவசரம்? அந்தப் பொண்ணுக்கும் இன்னும் படிப்பு முடியலையே?”

“இல்ல, கல்யாணம் முடிச்சிட்டு படிப்பா…” பிடிவாதமாக அவன் கூறினான்.

“நல்லா யோசிச்சிக்கோ…”

“நல்லா யோசிச்சிட்டேன் பா, எனக்கும் ஜப்பான் போற வேலை வர மாதிரி இருக்கு, இப்போ விட்டா இன்னும் ஆறு மாசம் தள்ளிரும் அதான்…” தகப்பனிடம் சொல்ல ஒரு நல்ல காரணம்.

“ம்ம், அப்பச் சரிதான் பா…”

“நீங்க ஜோசியரை பார்த்திட்டு சொல்லுங்க…”

“சரிப்பா”

“அம்மா ஏதோ கோபமா இருக்காங்க போல?” நூல் விட்டுப் பார்த்தான்.

“ஆமா! நீ ஆபிஸ் போல?”

“கிளம்பறேன்…”

சென்றுவிட்டான்.

ராமானுஜத்திற்கு இந்த விஷயத்தில் அதிக உடன்பாடு இல்லை என்றாலும் மகன் ஆசைப்படுகிறான், கடமையை முடிப்போம் என்று நினைத்துக்கொண்டார்…

‘இப்போதைக்கு அவளிடம் சொல்ல வேண்டாம்’

அன்றே நாள் பார்த்தாயிற்று, அவர் சூர்யாவிடம் போனில் பேசும்போது தான் ராஜமிற்கு விஷயமே தெரியும்…

“அதுக்குள்ள என்னங்க அவசரம்?” அதிருப்தியாக அவர் கேட்க,

“உன் பையன் கிட்டேயே கேளு…” அவன் புறம் அவர் சாட்டிவிட்டார்.

“இது அவன் எடுத்த முடிவு தானா?”

“பின்ன?”

“யாரோ அவனுக்கு கீ குடுக்குறாங்க…” அவரது குரலில் கசப்புக் கூடியிருந்தது.

“மாமியார் ஆயிட்டல்ல? இனி உனக்கு அப்படி தான் தோணும்… நான் பொண்ணு வீட்டுக்குப் போகணும், நீயும் வரியா?” அவர் அழைக்க, அவளோ மறுத்துத் தலையாட்டினாள்.

“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு…”

‘தெரியுமே’ என்று அவருக்குத் தோன்றியது.

“சரி நான் கிளம்புறேன். கல்யாண மண்டபம், அய்யர் எல்லாம் முடிவெடுக்கணும், “

“ம்ம்… சரி…”

அகல்யா வீட்டில் ராமானுஜம் திருமண தேதிபற்றிச் சொல்லியதும் அவர்களுக்கும் யோசனையே!

ஆனால் சூர்யாவின் முடிவு என்றதும் மறுத்துப் பேசவில்லை…

கல்யாணத்திற்கு இன்னும் முப்பது நாட்களே இருந்தது…

ராஜம் புலம்பித் தீர்த்தார்.

“முகூர்த்த புடவை எடுக்கணும், நகை வாங்கணும், தாலி செய்யணும், எவ்ளோ வேலையிருக்கு… அவன் தான் சொன்னான்னா உங்களுக்கு யோசனை வேணாம்?”

தலையில் கைவைத்துக்கொண்டார் ராமானுஜம்.

‘அம்மாவும், பையனும் என்னைப் பாடா படுத்துறாங்களே!’

என்ன புலம்பினாலும், வேலை என்று வந்துவிட்டால், வெள்ளைகாரி தான் ராஜம்…

மட மடவென நடந்தது திருமண வேலைகள்…

அகல்யா தன் திருமணத்திற்க்கு ஒரு மாதம் ‘மெடிக்கல் லீவ் ‘ எடுத்துக்கொண்டாள். வகுப்புத்தோழர்கள் அனைவருக்கும் திருமண பத்திரிக்கை கொடுத்தாயிற்று… திருமணத்திற்கு ஒரு வாரம் முன் ஊருக்கு வந்தாள்…

பார்லர், டைலர் என அவள் வேலைகளை மஹாவுடன் சேர்ந்து முடித்தாள். நடு நடுவே சூர்யாவுடன் போன்…

பூவிழி, அகிலன் அனேக நேரம் அவளுடனே இருந்தனர்.

அகிலனுக்குள் ஒரு விஷயம் ஓடிகொண்டிருந்தது, அவன் பூவிழியை காதலித்தான்!

ஆனால் அவளிடம் சொல்ல ஒரு தயக்கம். பூவிழி அவன் செயல்களில் மாறுபாட்டை உணர்ந்தாலும், புரியாததை போலவே நடந்துக்கொண்டாள்…

அகிலன் பொறுமையிழந்தான்…

பத்திரிக்கை கொடுக்க என்று அகல்யா வீட்டில் அனைவரும் வெளியே சென்றிருந்தனர்… அகல்யாவுக்கு துணையாக அகிலனை விட்டுச் சென்றனர்…

இது தான் சமயம்…

“அகல்விளக்கு…”

“என்ன?”

“அகல்விளக்கு, நீ தான் என் வாழ்க்கையில் ஏத்தணும் குத்துவிளக்கு…” என்று கூறியவனை கிண்டலாகப் பார்த்தாள் அகல்யா.

“பார்றா… என்ன அண்ணா கவிதையெல்லாம் சொல்ற?”

“உன் பெஸ்டீ பூவிழியை நான் காதலிக்கிறேன் டீ, ‘ஸ்கூல் டேஸ்ல’ இருந்து…”

“அடப்பாவி, உன்னைப் போய் நல்லவன்னு இந்தக் குடும்பம் நம்புதே, கலிகாலம்!” தலையில் கை வைத்துக்கொண்டாள்.

“லவ் பண்ணா கெட்டவனா… அப்போ சூர்யா?” மடக்கிவிட்டான்… அவள் தனது சிரிப்பை மறைத்துக்கொண்டு,

“சரி சரி… உன் கதைய சொல்லு… இது அந்தக் கண்ணழகிக்கு தெரியுமா?” என்றவள் தொடர்ந்து “ம்ம்ஹூம் எனக்கே இப்போ தான் தெரியுது, அவ என்னைவிட டியுப்லைட்… கண்டிப்பா தெரிஞ்சிருக்காது…” என்றவளிடம், இடைவெளிவிட்டு அகிலனும், “என்னால கண்டுபிடிக்க முடியலை” என்று சோகமாகச் சொன்னான்.

“சரி இப்போ நான் என்ன செய்யணும்? அவ கிட்ட சொல்லவா?” என்று அகல்யா கேட்க,

“வேணாம், நான் தான் சொல்லணும்…”குரலில் சற்று கலவரத்தோடு,

“அதுக்கு?”

“அவளை இப்போ இங்க வரச் சொல்றியா, இதை விட்டா எனக்கு வேற வழி கிடைக்காது டீ, உன் கல்யாணத்துக்கு அப்புறம் அவளைப் பார்க்கவும் முடியாது… என் தங்கம்ல?”

“டேய், என்னடா இது?”

“ப்ளீஸ் மா…” என்று அவன் கெஞ்ச,

“சரி சரி, எனக்கு ஒரு ஆப்பிள் ஜுஸ் போடு, நான் போன் பேசிட்டு வர்றேன்…”

‘நேரம் டீ…’ என்று நினைத்துக்கொண்டவன், அதை வெளியில் சொல்ல முடியுமா? சொன்னால் தன் காரியம் என்னாவது?

பூவிழி வந்துவிட்டாள், பத்து நிமிடத்தில்… ஆர்வமாக அவளை வரவேற்ற அகல்யா,

“ஹேய் வா டீ, மெஹந்தி டிசைன் பார்க்கணும், மேலே என் ரூம்ல புக் இருக்கு எடுத்திட்டு வாயேன்…”

“மாடி ஏறி எடுக்க என்னைப் போன் பண்ணி வரச் சொன்னியா?” என்று ஒரு அடி குடுத்துவிட்டுச் சென்றாள்.

மேலே சென்ற பூவிழி அந்தப் புத்தகத்தை அனைத்து இடங்களிலும் தேடிக்கொண்டிருக்க, கதவு மூடப்படும் சப்தத்தை கேட்டுத் திரும்பியவள், அகிலனைக் கண்டதும் திடுக்கிட்டாள்…

“அகிலன் என்ன பண்றீங்க?”

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்…”

“கதவைத் திறங்க முதல்ல…”

“நான் சொல்றதை கேளேன்…” அவளை நெருங்கினான்… பூவிழிக்கு வியர்த்தது… “என்ன இது, வழி விடுங்க, நான் கீழே போகணும்…”

“கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?” அதட்டியவன்… அவள் பாவமாய் விழிப்பதைக் கண்டு…

“அயம் இன் லவ் வித் யூ பூவிழி…” என்று சற்று தணிந்த குரலில் கூற பூவிழி அதிர்ந்து விழித்தாள்… “ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன், இன்னைக்கு தான் அதுக்கான வாய்ப்பை நானே உருவாக்கிக்கிட்டேன்…”

“எனக்கு இதெல்லாம் பிடிக்காது” வேறு புறம் திரும்பிக்கொண்டு பூவிழி கூற,

“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்”

“என் அப்பா அம்மா யாரை சொல்றாங்களோ அவங்களை தன் நான் கல்யாணம் பண்ணிப்பேன்” ஒட்டாமல் அவள் கூறியது அவனைப் பாதித்தது.

“அவங்க கிட்ட நான் பேசுறேன். அதுக்கு முன்னாடி உன் சம்மதத்தை தெரிஞ்சிக்கனும்… உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” அவள் முன் நின்று அகிலன் கேட்க, பதிலளிக்காமல் தலைகுனிந்து கொண்டாள்.

“ஆமாவா? இல்லையானு மட்டும் சொல்லு?”

“எனக்குத் தெரியலை… நான் போகணும்…”

அகிலனுக்கு அதுவரையில் நிம்மதி தான், பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால் என்ன செய்திருக்க முடியும்? கீழே சென்றவள் அகல்யாவை மொத்திவிட்டாள்.

“ஏய் விடு டீ, நான் கல்யாண பொண்ணு…”

“நான் வீட்டுக்குப் போறேன்…” கோபித்துக்கொண்டு அவள் கிளம்ப,

“இரு டீ, அகிலனை விடச் சொல்றேன்…”

“உதை வாங்க போற… இனி நீ கூப்பிட்டா வர்றேனா பாரு…” என்று சென்றுவிட்டாள் பூ…

அகிலனை பார்த்த அகல்யா…

“என்ன டா, பட்சி என்ன சொன்னா…” சிரித்துக் கொண்டே அகல்யா கேட்க,

“அவங்க வீட்ல பார்க்கறவனைத் தான் கல்யாணம் செய்வாளாம், பூவிழி இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்லை…” வெளிப்படையாக அவனது துயரம் தெரிந்தது… மனம் நொந்திருக்கிறான் போல, அகிலன் இந்த அளவிற்கு தன் தோழியைக் காதலிக்கிறானா?

தான் எப்படி இதைக் கவனிக்காமல் போனோம்? பூவிழி தனக்கு அண்ணியாய் வந்தால் நல்லதே என்று நினைத்தவள்…

“ப்ரோ… சியர் அப்… என் கிட்ட சொல்லிட்டல்ல, இனி நடக்குறத மட்டும் பாரு…” என்று அவனுக்குத் தைரியம் கொடுத்தவள், தன் திருமணம் முடிந்ததும் இதைப் பற்றித் தன் பெற்றோரிடம் பேச வேண்டும் என்று மனதில் குறிப்பெடுத்துக்கொண்டாள்.

******

திருமண வேலைகள் மட்டும் கடைசி நிமிடம்வரை இருந்து கொண்டே இருக்கும்… நாங்க எல்லாம் ஒரு நாள் முன்னமே முடித்து விட்டோம் என்று இந்த விஷயத்தில் மட்டும் யாரும் மெச்சிக்கொண்டிருக்கவே மாட்டார்கள்… அவ்வளவு வேலைகள் கடைசி நிமிடம்வரை நீண்டுக்கொண்டேயிருக்கும்.

அந்தச் சமயத்தில் அனேகமாய் சும்மா இருப்பது மாப்பிள்ளையும், பெண்ணும் தான்… சூர்யாவும் அப்படித்தான், இவ்வளவு நாளும் பரபரப்பாக இருந்தவனுக்கு இப்போதைக்கு வேலையே இல்லை…

ஆனால் அவனால் திருமணம்வரை அகல்யாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை…

அகல்யாவோ வெளியே எங்கேயும் வர முடியாத சூழ்நிலை… ஆதலால் அவனே சென்றான்…

சூர்யாவின் தம்பி ஜெயந்த் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தான். சும்மா இருந்தவனிடம்,

“டேய் தம்பி, நீ அண்ணிய பார்க்கணும்னு சொன்னல்ல?”

“நான் எங்கே சொன்னேன்?” அவனுக்கே ஒன்றும் புரியவில்லை.

“நீ சொன்ன டா, மறந்திருப்பே… போய்ப் பார்த்திட்டு வரலாம் வா…”

“கல்யாணத்துல பார்த்துக்கறேனே…” என்று சொன்னவனையும் விடாமல் அழைத்துக்கொண்டு வந்துவிட்டான் அகல்யா வீட்டுக்கு.

இதுபோல் தினமும் ஏதோ ஒரு காரணம்.

இவன் தொல்லை தாங்காமல், கல்யாண நாளும் சீக்கிரமே வந்தது…

சுபயோக சுபதினத்தில் சூர்யா அவளுக்குத் தாலியை கட்டி, அகல்யாவை திருமதி அகல்யா சூர்யாவாக மாற்றினான்!

ஜோடி பொருத்தம் பிரமாதமாயிருந்தது.

சூர்யா அகல்யாவின் எக்ஸ்ட்ரா அழகில் சொக்கிதான் போனான். அவன் நண்பர்கள், அவள் கல்லூரி தோழிகள், சொந்தம், பந்தம் என்று களை கட்டியது அவர்களின் திருமணம். பெரியவர்களிடம் ஆசி வாங்கிவிட்டு, திருமண பதிவு வேலைகள் எல்லாம் முடிந்த பின், பெண் மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.