Ani Shiva’s Agalya 5 & 6

Ani Shiva’s Agalya 5 & 6

5

சிறுவயதிலிருந்து தான் செய்த அட்டூழியங்களை இன்று வரையிலும் ஞாபகம் வைத்திருந்தான் அவள் அண்ணன்… அவளைக் கேலி செய்வதில் அவனுக்கு என்ன ஒரு ஆனந்தம்?

மஹாவும் அடிக்கடி இவர்களுடன் சேர்ந்துக்கொண்டார்…

‘அகிலா எனக்கும் ஒரு காலம் வரும்டா’ கருவிக்கொள்ளத்தான் முடிந்தது அகல்யாவால்…

கல்லூரியில், தான் எவ்வளவு பேரைக் கிண்டல் செய்து அழ வைத்திருப்போம், அதனால் சேர்ந்த பாவமோ? வயிறு வலிக்கச் சிரித்துவிட்டு, ஒன்பது மணியளவில் தான் சூர்யா வீட்டிற்கு திரும்பினர் இருவரும்…

ராஜமின் பார்வையில் என்ன? கோபமா?

அகல்யாவுக்கு மனம் படபடத்தது.

சூர்யா அவளிடம் “அம்மா நாங்க சாப்பிட்டாச்சு… நான் கேட் பூட்டிக்கிறேன், நீங்கப் போங்க…” என்று கூறிவிட்டான்… மிகவும் இயல்பாக!

தண்ணீர் எடுக்கக் கிட்சன் சென்றிருந்த அகல்யா ராஜமிடம் தனியாக மாட்டினாள்…

“ ஏன் மா! ஒரு போன் பண்ணிருக்கலாமில்ல? நான் ராத்திரி சாப்பாடு செஞ்சிட்டேன்…” என்று சாடினாள் ராஜம்… சற்று நேரம் பதில் கூறத் தோன்றாமல் விழித்தவள்,

“இவ்வளவு நேரம் ஆகும்ன்னு நினைக்கலை அத்தம்மா… சாரி” தலை குனிந்துக் கொண்டே கூற, ராஜம் அவளை உறுத்து விழித்தார்.

இன்னும் ஒரு வாரம் தானே இவர்களைச் சமாளிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் அகல்யா… காலம் முழுதும் என்ற நிதர்சனத்தை மறந்து!

முதல் நாளை இப்படி கடத்தியவள்… அடுத்த நாள் அவனுடன் ஆபீஸ் வருகிறேன் என்றாள். அழைத்துக்கொண்டு சென்றவனுக்குத் தான் வேலையே ஓடவில்லை…

ஒரே வேலையைப் பல முறை திருத்தவேண்டியதாய் போயிற்று…

“அகல்யா, உன்னைப் பக்கத்துல வச்சிகிட்டு ஆபீஸ் வேலை எல்லாம் பார்க்க முடியாது டீ…”ஆற்றாமையோடு அவன் கூற,

“ஏன் நான் சும்மா தானே இருக்கேன்!” அலட்டாமல் அகல்யா பதில் கூறினாள்.

“என்னால் சும்மா இருக்க முடியலையே…” ஏக்க பெருமூச்சோடு அவளைப் பார்த்துக் கண்ணடித்தவன்… கண்ணாடிக் கதவு என்பதால் அவளைச் சீண்டாமலிருந்தான்!

அதன் பிறகு சில நாட்கள் பூவிழி அனுப்பியதை படிக்கிறேன் பேர்வழி என்று அவன் வீட்டில் ரூமிலிருந்தே ஓட்டிவிட்டாள்… அந்த வார இறுதியில் அவளை வெளியே அழைத்துச் சென்றான்.

நாகர்கோவில், சுசீந்திரம் என்று நாம் இரண்டு பேர் மட்டும் போகலாம் என்று முடித்து விட்டவனிடம், சரி என்றாள்.

வசந்த காலங்கள் முடிந்தது போலிருந்தது அவளுக்கு! தன் கல்லூரிக்குத் திரும்பும் பயண நாள் நெருங்கியதும்…

கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து அவள் ஹாஸ்டலுக்கு செல்லக் கலங்கியதே இல்லை. ஒன்று பூவிழியுடன் இருப்பதால், மற்றொன்று ஹாஸ்டல் வாழ்க்கை மிகவும் மகிழும்படியாக இருந்ததால்! படிக்கும் நேரத்தில் படித்துவிடுவார்கள்… மற்ற நேரத்தில் பேச்சும், சிரிப்பும், ஆட்டமும் பாட்டமுமாயிருக்கும்.

பெரியம்மா வீட்டிலிருந்து கல்லூரி போயேன் என்று வீட்டில் கூறியதையும் இதற்காகவே அப்போது மறுத்துவிட்டாள்…

இன்று கிளம்ப வேண்டும்… சூர்யாவே அவளைப் பேருந்து ஏற்றிவிட வந்தான். அவள் பெற்றோரின் இந்தப் பொறுப்பை இவன் ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்கும் நிம்மதி.

அகல்யா பத்து நிமிடத்திற்கு ஒரு முறை, “நான் போய்த் தான் ஆகவேண்டுமா?” என்று அவனிடம் கேட்டபடியிருந்தாள்… அவள் மனதின் ஏக்கம் அவனுக்கும் புரியாமலில்லை.

“என்னம்மா பி.ஈ க்கு மேல் ஒரு கோடு இருக்குல்ல, அதை நீ படிச்சு முடிச்சா தானே எடுக்க முடியும்” என்றான் புன்னகையுடன்.

தனக்கும் அவளை அனுப்புவது கஷ்டமே, ஆனால் அதை வெளிக்காட்ட கூடாது என்ற எண்ணத்தில்… அழுதுகொண்டேயிருந்தவளைச் சமாதானம் செய்ய, தானும் கூடிய விரைவில் சென்னை வருவதாகச் சத்தியமே செய்தான்… அதன் பிறகு தான் பஸ்ஸினுள் அவள் ஏறியதே!

****

சென்னை என்றாலே பரபரப்பு தானே? அகல்யாவும் அதில் மிகப் பொருத்தமாக மறுபடியும் சிக்கிக் கொண்டாள். ஒரு மாதம் லீவ் எடுத்ததின் பயனாக மலைபோல் குவிந்திருந்த அவளது பிராஜக்ட் வேலைகளைச் செய்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது…

கார்த்தி தான் அவர்கள் பிராஜக்ட் குழுவின் தலைவன். அதனால் இவள் செய்ய வேண்டிய பகுதிகளை யாரையும் செய்ய வேண்டாம் என்றுவிட்டான்…

“கார்த்தி நான் தான் லீவ்ல இருந்தேனே?”

“அதுக்கு?”

“இதை வேற யாரையும் செய்யச் சொல்லிருக்கலாம்ல?”

“அப்புறம் நீ எப்படி கத்துப்பே?” என்று சொல்லி அவளது வாயை அடைத்தவனை என்ன சொல்ல? ‘ஐயோ படுத்துறானே’ என்று புலம்பத்தான் முடிந்தது.

அவள் முடிக்கவேண்டிய பகுதியில் எதுவும் சரியாக வரவில்லை, போராடிக் கொண்டிருந்தாள்…

இரண்டு மூன்று நாட்களாக அவள் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை கார்த்தி…

போனால் அவனை வைத்தே செய்துவிடுவாள் என்ற பயம் வேறு! பூவிழியையும் ‘டாக்குமென்ட்’ அடிக்கச் சொல்லியிருந்தான், அதனால் அவளும் அகல்யாவுக்கு உதவ முடியவில்லை…

நொந்து கொள்ளத் தான் முடிந்தது அகல்யாவால்… அவளைப் பார்த்துக் கார்த்தி ஆணவமாய் சிரித்தது போலவே தோன்றியது…

‘நீ ரொம்ப பெரிய ஆளென்று உனக்கு நினைப்பா?!’

இவனிடம் உதவிக் கேட்கவே கூடாது என்று முடிவெடுத்தவள் மூன்று நாள் அதைப் பற்றியே படித்து, செயலாற்றி, வகுப்பாசிரியரிடம் கேள்வி எல்லாம் கேட்டு ஒரு வழியாக முடித்துவிட்டாள்.

அப்பாடா என்ற நிம்மதி பெருமூச்சு அவளது மனதில்!

“என்ன கார்த்தி, நீ உதவலைன்னா, என்னால் பண்ணமுடியாதா? நமது பிராஜக்ட்லயே பெஸ்ட் என் போர்ஷனா தான் இருக்கும் பார்…” என்று அவனிடம் அகல்யா சவாலாகக் கூறியிருந்தாள்.

அவள் சொன்னது உண்மையே! அவனுக்கும் தெரியும்… ஆனால் இதைச் செய்யவைக்க என்ன பாடு… கடைசியில் அவளைச் சீண்டிவிட்டதும் தானே, வழிக்கு வந்தாள்…

கார்த்தி சிரித்துக்கொண்டான்…

“என்ன சும்மா சிரிச்சா, விட்ருவோமா? ஒழுங்கா நம்ம பிராஜக்ட்ல எல்லாருக்கும் ட்ரீட் தர…”என்றாள்.

அன்று மதியம் எல்லாருக்கும் நல்ல விருந்து… பூவிழி தான் அகல்யாவிடம் உண்மையைச் சொன்னாள்…

“பிராஜக்ட்க்கு மொத்தமா மார்க் வந்தாலும், ஒவ்வொருத்தரும் என்ன பண்றாங்கனு ஹெச்ஓடிக்கு ரிப்போர்ட் போகுமாம்… ஏற்கனவே நீ நிறைய லீவ், இப்போவும் நீ பண்ணாமல் சுத்திட்டு இருந்தா, கட்டாயம் உன் மார்க் கம்மியாயிடும். அப்படி ஆயிட கூடாதென்று தான் அவன் உன்னையே செய்ய வைத்தான்…”

‘அடடா பயபுள்ளைய தப்பா நினைச்சிட்டோமே அகல்யா!’

சூர்யா தினமும் போனில் பேசினான், அவனுக்கு வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லையாம், அவள் அங்கேயில்லை என்பதால்! அகல்யா நினைவாகவே இருக்கிறதாம், நிறுவனத்தில் வேலை அதிகமாம், இன்னும் என்னென்னவோ…

இவள் போனை கையில் எடுத்தாலே இவளைச் சுற்றி ஒரு கும்பல் கூடிவிடும். அந்தப் பக்கம் அவன் பேசும் காதல் வசனங்களைக் கேட்டு ‘கெக்கே பிக்கே’ என்று சிரிப்பாய் சிரிப்பார்கள். ரூமுக்குள்ளே இருந்து பேசலாம் என்றால் சிக்னல் பிரச்சனை… ச்சே இந்த நாட்டில் ஒரு புருஷன் பொண்டாட்டியிடம் நிம்மதியா பேச முடியவில்லையே!

மாதம் ஒரு முறை ஊருக்குச் சென்றாள். மூன்று நாள் அவனுடன் இருப்பது ஏதோ சில மணித்துளிகள்போல் கரைந்துவிடும். அவனுக்காகக் காபியாவது தானே போடலாம் என்று ஆரம்பித்திருந்தாள். அவனும் அவள் போட்ட சுமாரான பானத்தை அமுதம் போல் ரசித்துக் குடித்தான்.

பூவிழி அகிலன் விஷயம் கிணற்றில் போட்ட கல்போல் ஆனது. பூவிழியிடம் தன் அண்ணன்பற்றிப் பேச ஆரம்பித்தாலே அமைதியாகிவிடுவாள்.

‘‘அமுக்குணி… வாய திறக்கிறாளா பார்?” என்று மனதுக்குள் அவளை வைது கொண்டிருந்தாள். அகிலன் தினமும் பூவிழியை பற்றித் தங்கையிடம் போனில் கேட்டுக்கொள்வான்…

“டேய் அண்ணா! இவ உனக்கு செட் ஆக மாட்டா டா… என்ன கேட்டாலும் வாய திறப்பேனான்னு இருக்கா டா…”

“விடும்மா ரொம்ப பயந்த பெண்… படிப்பு முடியட்டும் அவ வீட்லயே பேசிக்கிறேன்… அவ கிட்ட இனி இதைப் பத்தி பேசாதே…” சிரித்துக் கொண்டே அவன் கூறிவிட, அடப்பாவி என்ன அக்கறை என்று எண்ணத்தான் முடிந்தது அவளுக்கு!

“அண்ணா அவ தான்னு முடிவே பண்ணிட்டியா? அப்பா கிட்ட சொல்லியாச்சா?”பயத்தோடு அவள் கேட்க, அவன் இயல்பாக

“கூடிய சீக்கிரம் சொல்ல வேண்டும்…”

“ஓகே ப்ரோ… ஆல் தி பெஸ்ட்…” என்று வாழ்த்திப் போனை வைத்தாள். மறு வாரத்தில் சூர்யா அகல்யாவை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்துவிட்டான், அவளுக்குச் சொல்லாமலே!

“அகல்யா, உனக்கு விசிட்டர் டீ…”அவள் தோழி கூற,

“எனக்கா, யாரா இருக்கும்?” யோசிக்க ஆரம்பித்த அகல்யாவின் பின்னாடியே மூன்று பேர் ஓடி வந்து, “ஏய் உன் ஆத்துக்காரர் தான் டீ… ஃபோட்டோல பார்த்ததை விட நேரில் ஆள் செம ஸ்மார்ட்! எங்களுக்கு எல்லாம் இன்ட்ரோ குடு டீ…” என்று நச்சரிக்க, அகல்யாவுக்கு பற்றிக்கொண்டுவந்தது.

“கல்யாணம் ஆன ஆள் கிட்ட என்ன இன்ட்ரோ வேண்டிக் கிடக்கு? வேற வேலையிருந்தா போய்ப் பாருங்க…” என்று அவர்களை அடக்கி, அவனைக் காண விரைந்தாள்.

தன் சூர்யாவை இவர்கள் எல்லாம் ரசிப்பதா என்ற கோபம் வேறு! விசிட்டர் ஹாலில் சூர்யாவை பார்த்தவளுக்கு எல்லையில்லா ஆனந்தம்…

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தாள்…

சில மணிநேரம் தன்னை பார்த்துவிட்டுப் போக வந்துருக்கிறான் போல?

“சரி, நான் கிளம்ப வேண்டும் அகல்யா…” என்று அவன் எழுந்துக் கொள்ளப் பார்க்க,

“இன்னும் கொஞ்ச நேரம் இருங்களேன்?”ஏக்கமாக இருந்தது அவளுக்கு!

“ஆபிஸ் விஷயமா வந்துருக்கேன்… இங்க பக்கத்தில் தான் ரூம்… டூ டேஸ் ஸ்டே, வேணா பெர்மிஷன் கேட்டுட்டு என் கூட வந்து இரேன்…” அவளை எதிர்பார்த்து அவன் கூற, அவளுக்குக் கசக்குமா என்ன?

இரண்டு நாள் அவனுடனே இருந்தாள். காலையில் அவன், அவனது வேலைக்கும், இவள் கல்லூரிக்கும் சென்றுவிடுவார்கள்… மாலை வெளியே அழைத்துச் செல்வான்…

வகுப்புத் தோழிகள் காதுகளில் எல்லாம் ஒரே புகை… அதனை அணைக்கும் பொருட்டு, அவளைப் படுத்தி எடுத்தார்கள்.

“அது என்ன டீ பாட்டு?” ஒருத்தி எதுவும் அறியாதவள் போலக் கேட்டு வைக்க,

“எந்தப் பாட்டு?”

“காலை எழுந்தவுடன்… பாரதியார் பாட்டு டீ…”

பூவிழி உடனே, “காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு- என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா!” என்று மிகவும் சின்சியராகக் கூற, அகல்யாவுக்கு அவர்கள் எங்கே வருகிறார்கள் என்று புரிய அந்த இடத்தை விட்டு ஓடப்பார்த்தாள்…

“அந்தப் பாட்டை இப்போதைக்கு நம்ம அகல்யா தான் கரெக்டா ஃபாலோ பண்றா…” என்று அனைவரும் சிரித்து, அவளைப் பிடித்துவைத்து கண்டபடி பேசிவிட்டு தான் விடுவித்தார்கள்…

அகல்யாவுக்கு காதில் ரத்தமே வந்துவிட்டது… என்ன ஒரு கொடுமை!

பூவிழியை முறைத்தவள், “இரு டீ எங்க அண்ணன் கிட்ட சொல்றேன், பாட்டா எடுத்துக் குடுக்குற?”என்று மிரட்ட,

பூவிழி அன்று ஏனோ பயப்படாமல், ‘ முடிந்ததை பார்த்துக்கோ’ என்பது போல் இவளை ஒரு பார்வை பார்த்தாள்.

‘வேண்டாம் அழுதுருவேன் ‘என்ற நிலையில் இருந்தவளை, சூர்யா வந்து அழைக்கிறான் என்பதால் விட்டனர்… இரண்டு நாள் கனவுபோல் முடித்ததும். மறுபடி ஹாஸ்டல் வாசம்…

இப்படியே மூன்று மாதங்கள் முடிந்தது, அப்பாடா இன்னும் ஒரே மாசம் தான்… படிப்பை முடித்துவிட்டு சூர்யாவுடன் இருக்கலாம் என்ற நிலையில், சூர்யா வெளிநாடு செல்லும் வேலை வந்துவிட்டது.

“அகல்யா இந்த மாசம் நான் ஊருக்குப் போகணும்… உனக்குக் காலேஜ் முடிஞ்சியிருந்தா உன்னையும் ஜப்பான் கூப்பிட்டு போயிருப்பேன்…” செல்வதற்கு மனமே இல்லாமல் அவன் கூற,

“ம்ம்… எப்போ வருவீங்க?” சுரத்தின்றி அவள் கேட்டாள்.

“தெரியலை… இரண்டு வாரத்திலியிருந்து ஒரு மாசம் வரை ஆகலாம்…”

“அவ்ளோ நாளா? சென்னை வழியா தானே போறீங்க?”

“ம்ம்… இரண்டு நாள் முன்னாடி வர்றேன்… உனக்காக…” காதலோடு அவன் கூறினான்.

“ம்ம்…”

சூர்யாவுக்கு தன் மேல் இருக்கும் பிரியத்தை நினைத்து மனம் கிளுகிளுத்தது.

இரு விழி உனது இமைகளும் உனது

கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்

ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஓஹோ ஒரே ஞாபகம்

ஓஹோ உந்தன் ஞாபகம்!

சூர்யா ஜப்பான் சென்றதும் அகல்யாவுக்கு இந்தப் பாடல் தான் எவ்வளவு உண்மை என்றிருந்தது. ஏனோ ஒரு வெறுமை. படிக்கும் வேலை மட்டும் இல்லையென்றால் நிரம்பக் கஷ்டப்பட்டு போயிருப்பாள்.

அந்த ஒரு மாதமும் அவளுக்கு ஊருக்குப் போகும் எண்ணம் வரவேயில்லை. இதோ இன்னும் இரண்டு நாளில் கல்லூரி முடிந்துவிடும்.

அகல்யா பி. இ

‘அப்பா நானும் ஒரு பொறியியல் பட்டதாரி…’ என்று அவரிடம் கூறி சந்தோஷப்பட வேண்டும். அதை விடவும் இனி முழு நேரம் சூர்யாவுடன் இருக்கலாம் என்பதே அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது…

ஆனால் விதி என்ன நினைத்து வைத்திருக்கிறதோ?

6

விதி-நமது முன்ஜென்ம பிறவிப் பயன்

மதி-விதியை மதியால் வெல்லலாம்

விதி நமது முன் ஜென்ம வினைப் பயனாக இருக்கலாம். அப்படி விதிதான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் எனில் இறைவன் ஏன் மனிதனுக்கு மதியைப் படைத்தான்? விதியை நம்புபவன் வீணன். நமக்கு நம் வாழ்வைப் பற்றிய தெளிவு இருந்தால், எந்த விதியும் நம்மை எதுவும் செய்ய முடியாது…

ஆனால் இன்று தன் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டிருப்பது விதியா அல்லது மதியா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை அகல்யாவால்…

இன்றளவும் தன் மேல் கொண்ட பாசம் குறையாமல் இருக்கும் அன்பான அறிவான அழகான கணவனைப் பிரியத் தூண்டியது எது விதியா? மதியா? சதியா?

அகல்யாவுக்குக் குழப்பமாகவே இருந்தது.

அகல்யா சூர்யா நிறுவனத்துக்கு வர ஆரம்பித்துச் சில வாரங்கள் ஆகிவிட்டன. வேலை எல்லாம் பெரிதாக எதுவும் இல்லை.

தான் கேட்டதற்காக ஒரு வேலையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறான்… அவ்வளவே! இதே வேலையை இரண்டு வருடம் முன் கேட்டதற்கு முடியாது என்று முடித்து விட்டவன் தானே?

அப்போதே வந்திருந்தால், நன்றாகத் தான் இருந்திருக்குமோ? என்று மனம் கேள்வி கேட்டது… எத்தனையோ பிரச்சனைகளிலிருந்து தான் தப்பி இருக்கலாம்… இப்போது அதை நினைத்து ஒன்றுமாகப் போவதில்லை… பழையனவற்றை மறப்பதுதான் நல்லது என்று தோன்றியது!

காலையில் அவனுடன் கிளம்பி அலுவலகம் வந்தால், வேலை நடுவில் அவனுடன் மதிய உணவு, மறுபடியும் ஐந்து மணிக்கு இவள் மட்டும் வீட்டுக்குக் கிளம்பிவிடுவாள்.

வீட்டின் ஒரு பகுதியில் அழகான தோட்டம் அமைக்கும் வேலைகளைத் தொடங்கியிருந்தாள். வீட்டின் வலப்பக்கத்தில் உள்ள தோட்டம் எல்லாம் அகல்யாவுடையது என்று அவளே பட்டா போட்டுக்கொண்டிருந்தாள்.

அதில் முன்பகுதியில், அலங்கார செடிகள் வைக்கலாம் என்றும், பின் பக்கம் முழுதும் காய்கறிகள் போடலாம் என்றும் எண்ணியிருந்தாள்… காய்கறிகளுக்கு நாட்டு விதைகளைத் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பித்தாள்.

அலுவலகத்திலிருந்து வரும் வழியில் ஏதேனும் ‘செடி நர்சரி’ கண்ணில் பட்டால் ஒரு நாலைந்து புதுச் செடிகள் அந்த வீட்டிற்கு புதியதாய் வந்துவிடும்…

இவள் பகுதியில் புதுச் செடி வந்ததும், அடுத்த இரண்டு நாளில் அதே மாதிரி ஒரு செடி அடுத்த பகுதியிலும்(ராஜம் பகுதி) நட்டுவைக்கப் பட்டிருக்கும்!

ஆபிஸில் வேலை செய்வதை விட இந்த வேலை ஏனோ நன்றாகவே இருந்தது அவளுக்கு…

சூர்யாவுடனான பேச்சுக்கள், பேச்சளவிலேயே இருந்தது. அதிகமுமில்லை, குறைவுமில்லை என்ற நிலை.

ஆனால் அவன் அதைப்பற்றி எல்லாம் சட்டைசெய்ததாகக் கூடத் தெரியவில்லை, சாதாரணமாகவே இருந்தான் அவளிடம். நீ எனக்கு மிகவும் முக்கியம் என்பதைப் பல வழிகளில் அவளுக்குக் காட்டிவிட்டான். அகல்யாவுக்கு தான், தப்பு பண்ணிவிட்டோமே, எப்படி சாதாரணமாய் இருக்க முடியும் என்ற ‘ஓவர்’ சிந்தனை.

இந்த மாதிரி தான் பாதிப் பேர் ஊரில் சுற்றிக்கொண்டிருக்கிறோம். தப்பு செய்தால் மன்னிப்பைப் பெற்றுவிட்டு, அதைவிட்டுவிடத் தானே வேண்டும்?

ஆனால் அதை மனதிலேயே வைத்து உரம் போட்டு வளர்க்கிறோம், அப்படி வளர்ப்பதற்கு அது என்ன வாழையா, தென்னையா?

அகல்யா ரொம்ப யோசிக்காதே என்று மனம் அவளுக்குக் கூறியது.

சில சமயம் அலுவலகம் முடியும் நேரம், சூர்யாவும் அவளுடனே சீக்கிரம் வீட்டுக்குக் கிளம்பிவிடுவான். அன்றும் அப்படி தான்.

“அகல்யா நானும் வர்றேன், சேர்ந்து போகலாமா?” என்று வந்து நின்றான்…

“அப்படியா? வந்து… இன்னிக்கு எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு…”

“என்ன வேலை, சொல்லு?”

“அகிலன் குழந்தையைப் பார்க்கப் போகவேண்டும், நிறைய நாள் ஆச்சு… அதனால் அம்மா வீட்டுக்குப் போகலாமென்று இருக்கேன்…” யோசனையோடு அவள் கூற,

“வாவ் குழந்தை பிறந்திருக்கா? என்ன வயசு?” அவ்வளவு ஆவலாகக் கேட்டான் அவன்.

“ஆறு மாசம் முடிஞ்சியிருக்கு…” ஒரு மாதிரியானக் குரலில் அவள் கூற ‘இவள் மட்டும் என்னுடன் இருந்திருந்தால்…’ என்று அவனது மனம் எண்ணுவதை அவனால் தடுக்க முடியவில்லை… ஏக்கம் மனதைச் சுட்டது.

அமைதியாயிருந்தான்…

“நீங்களும் வாங்களேன், நாம இரண்டு பேரும் போலாம்” என்றபடி அவனைப் பார்த்தாள்.

“ஓ போலாமே! முதல் தடவை குழந்தையைப் பார்க்க வர்றேன், அதனால் எதாவது வாங்கிட்டு போலாம்…” என்று கூற,

“சரி” என்று முடித்து விட்டாள்.

இரண்டு பேரும் சேர்ந்து அகிலன் மகன் விஷ்வாவிற்கு, அத்தை காப்பு போட வேண்டும் என்று தங்கத்தில் ஒரு ஜோடி வளையல் வாங்கிக் கொண்டு அகல்யா வீட்டிற்குச் சென்றனர்.

அகல்யாவுடன் சூர்யாவும் வந்திருப்பது அகல்யா வீட்டில் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கிரிதரன் தான் முதலில் சுதாரித்துக் கொண்டு சூர்யாவை வரவேற்றார்.

“வாங்க மாப்பிள்ளை, எப்படி இருக்கிங்க? வீட்டில் அம்மா, அப்பா எல்லோரும் எப்படி இருக்காங்க?” இயல்பாகக் கேட்டார், கிரிதரன்.

“எல்லோரும் நல்லா இருக்காங்க. நீங்க எல்லோரும் எப்படி இருக்கீங்க?” சூர்யாவும் சாதாரணமாகவே கேட்டான்.

இருவருமே கடந்த கால கசப்புகள் எதையுமே முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. மறந்துவிடவே நினைத்தனர்.

அனைவரும் பேசிக் கொண்டே வீட்டிற்குள் சென்றார்கள். நீண்ட நாட்கள் கழித்து தன் மகளையும் மருமகனையும் சேர்த்து பார்த்ததில் மஹாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. தடபுலடலாக இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்தார்.

பூவிழியின் கையில் இருந்த குழந்தையைச் சூர்யா ஆர்வமுடன் பார்த்தான். அவன் பார்வையைப் புரிந்து கொண்ட பூவிழி குழந்தையை அவனிடம் கொடுத்து விட்டு, சூர்யாவின் வரவைச் சொல்வதற்காக அகிலனுக்கு போன் செய்ய அங்கிருந்து அகன்றாள்.

சூர்யாவுக்கு அந்தக் குழந்தையைத் தூக்கி கொஞ்ச அவ்வளவு சந்தோஷமாக இருந்தது, அவனைப் பார்த்துப் பொக்கை வாயில் சிரித்தான் பிள்ளை…

“என்ன பேர்” என்று சூர்யா கேட்க,

“விஷ்வா” என்றாள் அகல்யா… “ரொம்ப க்யூட்…”என்றான் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு!

அகல்யாவுக்கு விச்சு குட்டியை ரொம்ப பிடிக்கும். அவன் பூவிழியின் வயிற்றில் இருந்தபோதும், பின்னர் பிறந்தபிறகும் அவனின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அருகிலிருந்து பார்த்தவளாயிற்றே!

சூர்யாவிடம் சென்றுவிட்ட இந்த இரண்டு வாரத்தில் அவள் இங்கு, தன் அம்மா வீட்டுக்கு வரவேயில்லை. மஹா தான் பதறிபோனாள், போன் செய்து,

“அகல்யா, அம்மா பேசுறேன் மா… நல்லா இருக்கியா?” என்று கேட்க, “நல்லா இருக்கேன் மா…” என்று அமைதியாகப் பதில் கூறினாள்.

“என்ன மா எப்போதும் ஒரே குழப்பம் உனக்கு? எவ்வளவு தெளிவான பொண்ணா இருந்த… நானும் அப்பாவும் நிறையவே நம்பியிருந்தோம்…”

“இப்போது என்ன மா ஆச்சு?”

“ஒண்ணும் ஆகலை டீ… சொல்லாம வர, சொல்லாம போற… அது கூடப் பரவாயில்லை, ஆனால் இப்போ போன் கூடப் பண்ண மாட்ற?” மஹாவால் அழுகையை மறைக்க முடியவில்லை.

“அது எல்லாம் ஒண்ணும் இல்ல மா… நான் நல்லா இருக்கேன், நானே வீட்டுக்கு வரவேண்டுமென்று இருந்தேன்… அதான் போன் பண்ணலை, இன்னிக்கு வர்றேன் மா… நேரில் நிறையப் பேசலாம்…”என்று முடித்து விட்டாள்… அதற்காகதான் இந்த வருகையும்.

சூர்யா குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்க அகிலனும் வந்துவிட்டான்… எல்லாரும் சூர்யாவிடம் சாதாரணமாகவே நடந்து கொண்டார்கள்… கிட்சனில் தன் அன்னைக்கு உதவி செய்து கொண்டிருந்த அகல்யாவிடம் வந்த பூவிழி, “என் மேல் இன்னும் கோபம் போகலையா? அதான் வீட்டுக்கு வரலையா டீ? விச்சு உன்னை ரொம்ப தேடினான் தெரியுமா?” கண் கலங்கியபடி சொல்ல, அகல்யா பதறி விட்டாள்.

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை, நீ எனக்கு நல்லதுதானே பண்ணே?” கொஞ்ச நேரத் தயக்கத்திற்கு பிறகு சாதாரணமாகவே இருந்தனர் இரு தோழிகளும்…

இந்த இரண்டு வருடக் கதையை யாரும் பேசிக்கொள்ளவில்லை… அவன் நினைத்திருந்தால் தனிக்குடித்தனம் வந்திருக்கலாமே… இத்தனை வருட பிரிவைத் தடுத்திருக்கலாமே என்று அவர்களது மனதில் ஆயிரம் சிந்தனைகள்… ஆனாலும் ஒன்றுமே நடக்காததைப் போலவே நடந்துகொண்டனர்…

அகல்யாவும் சூர்யாவும் சேர்ந்து தாம் வாங்கி வந்ததை குழந்தைக்குப் போட்டு விட்டனர்… அகிலனுக்கும் பூவிழிக்கும் சந்தோஷம்… குழந்தையைப் பற்றிய பேச்சிலேயே இரவு உணவும் ஆனது.

அடுத்த மாதம் ‘முதல் சோறூட்ட’ கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்றும், அதற்குக் கேரளாவில் குருவாயூர் கோவிலுக்குச் செல்லப்போவதாகவும் கூறினர்… சூர்யாவிடம் வர வேண்டும் என்று அழைக்க அவன் உடனே சம்மதித்து விட்டான்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரின் மனநிலைமையும் நிறைவாக இருந்தது…

கிரிதரன் சூர்யாவிடம் தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றார்… என்ன பேசினாரோ?

சூர்யாவும் அவன் திருமதியும், மற்ற அனைவரிடமும் விடைபெற்று காரில் ஏறியது தான் அகல்யாவுக்கு தெரியும்… கண்ணசந்து விட்டாள்… அவ்வளவு சோர்வு!

வண்டி ஆட்டம் இல்லாமல் இருக்கிறதே என்று விழித்துப் பார்க்கச் சிவந்திபட்டி மலையடிவாரம் தெரிந்தது.

‘இன்னும் வீட்டுக்குப் போகலையா’ என்பது போல் அவனைப் பார்த்தாள்…

காரைச் சாலையோரமாக நிறுத்தியிருந்தான்…

கண் திறந்து வைத்தே தூங்கி விட்டானோ? அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்… உறக்கத்திலிருந்து விழித்ததால் அகல்யாவுக்கும் ஒன்றும் புரியவில்லை…

“சூர்யா…”

அதே நிலையில் இருந்தான்…

மறுபடியும், “சூர்யா” என்று அவனை உலுக்கினாள்…

“ஏன் டீ ஏன் என்னை விட்டுவிட்டு போனே?” தாள முடியாமல் அவன் கேட்க,

“ம்ம்…”

“பிரச்சனை யாருக்குத் தான் இல்லை? உடனே விட்டுவிட்டு போயிடுறதா?” விட்டால் அவளை உலுக்கும் கோபம் வந்தது… ஆனால் அடக்கிக்கொண்டு அவன் கேட்டான்… ஆனால் அவள் பதில் கூறவில்லை.

“இப்போ சொல்றியா இல்லையா?”

“பழசை எல்லாம் பேசாதீங்க…”ஒரே வார்த்தையில் அவள் முடிக்க…

“எது பழசு? நமது கல்யாணமா? உன்மேல் நான் வச்சிருந்த காதலா?” என்று கேட்டவன், “சொல்லு டீ…” என்று அவளை மீண்டும் உலுக்க,

“சூர்யா இப்போ என்னால் எதுவும் சொல்ல முடியாது… ஆனால் என்னால் மட்டுமில்லை எல்லாம்… இப்போ இந்தப் பேச்சை விடுங்க… நேரம் வரும்போது நான் எல்லாத்தையும் சொல்றேன்…” முடிவாக அவள் கூறிவிட்டு இதற்கு மேல் கேட்காதே என்று திரும்பிக்கொண்டாள்.

சொன்னபோதெல்லாம் காது கொடுத்துக் கேட்காமல் இப்போது மட்டும் கேட்டால்? தானென்ன சொல்வது என்று தோன்றியது அவளுக்கு!

காரை எடுத்தவனுக்கு அவ்வளவு வேகம்… வளைத்து, நெளித்து, பள்ளத்தில் போட்டு, எடுத்து ஓட்டினான்…

இன்று ஹாஸ்பிடலில் தான் இருவரும் இருப்போம் என்ற முடிவுக்கே அகல்யா வந்துவிட்டாள்… ஒரு வழியாக அப்படி ஏதும் ஆகாமல் வீடு வந்து சேர்ந்தார்கள்… அம்மா வீட்டிலிருந்து புறப்படும்போது ஒரு சந்தோஷ மனநிலை இருந்தது… இப்போது அது முற்றிலுமாக மாறிக் கெட்டிருந்தது…

இப்போது அதைப் பற்றிப் பேசாவிட்டால் தான் என்ன என்று கேட்கத் தோன்றியது.

அவனிடம் ஒன்றும் பேசவில்லை…

அவர்கள் அறைக்குச் சென்றவள், தூங்கலாம் என்று படுத்துவிட்டாள்… புரண்டு படுத்தவள் மீது திடீரென்று அவன் கை விழுந்தது…

தெரியாமல் போட்டுவிட்டான் போல என்று எடுத்துவிட்டவள், அது மறுபடியும் விழவும், அவனைத் திரும்பிப் பார்த்தாள்…

“சூர்யா என்னது இது?”

“என்ன என்னது?”

“கைய எடுங்க, நான் தூங்கணும்…”

அவளைத் தன்புறம் திருப்பியவன்,

“நாம எப்போ டீ குழந்தை பெத்துக்கலாம்?” என்று கேட்டே விட்டான்.

அவள் எதிர்பார்த்திருந்தாள்… அவன் கேட்பான் என்று… அகிலன் குழந்தையை அவ்வளவு ஆசையாகக் கொஞ்சும் போதே தெரியும். ஆனால் அவனது அந்தக் கேள்வி அவளது கடந்த கால கசப்புக்களை மேலெழச் செய்தது.

ஆனால் இப்போது என்ன பதில் கூற?

“எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க சூர்யா…”

“எதற்கு?”

இது என்ன? மறக்க முடியாமல் தவிக்கும் விஷயங்களை ஒரே நாளில் மறந்துவிட முடியுமா என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவள் மறந்த ஒன்று, கடவுள் மனிதனுக்கு மறதி என்ற ஒன்றைக் கொடுத்ததே கசப்பானவற்றை மறக்கத்தானே என்பதுதான்!

“சூர்யா நானும் மனுஷி தானே? சட்டுசட்டுனு என்னால் எதையும் முடிவு எடுக்க முடியாது, கொஞ்சம் யோசிக்கணும்…”

சட்டென்று அவளை விட்டவன், மறுபுறம் திரும்பிக்கொண்டான்…

அவனுக்குக் கோபம் போல!

சூர்யா மிகவும் பொறுமை… கோபப்படுவது அதுவும் அகல்யாவிடம் மிக மிக அபூர்வம். சின்னப் பிள்ளைத்தனமாக அவள் ஏதும் செய்தால் கூட, பிடிக்கவில்லை என்றால், ‘அகல்யா போதும்’ இது தான் அவனின் உச்சக்கட்ட கோபமே!

ஒரே ஒரு தடவை அறை வாங்கியிருக்கிறாள் தான்!

அவன் அம்மாவிடமும் அவன் அப்படித்தான். கோபத்தைக் காட்ட மாட்டான். அம்மாமேல் பாசமாய் இருக்கும் மகன்கள் பொண்டாட்டியை தாங்குவார்கள் என்ற உண்மையைச் சூர்யா மூலம் அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அன்று இரவு நடந்தவற்றுக்கு பின் மிகவும் கோபமாயிருந்தான்… அவளை நேருக்கு நேர் பார்ப்பதேயில்லை. ஆபிஸிலில் வேலை என்று சாக்கு சொல்லிக் காலையில் சீக்கிரமே கிளம்பிவிடுகிறான்… மதிய உணவுக்குக் கூடக் கண்ணில் படுவதில்லை…

‘அய்யோ… நல்லா தானே போய்ட்டுயிருந்தது!’ என்று மனம் அடித்துக்கொண்டது.

அன்று மாலை கூட வீட்டில் அவன் பெற்றோரிடம் கோபமாய் பேசியது மாடியில் இருந்த அவள் வரை கேட்டது…

அகிலன் மகனைப் பார்த்துவிட்டு வந்ததை சூர்யா அவர்களிடம் சொல்லியிருப்பான் போல…

ராஜம் கேட்டாள், “இப்போ என்ன டா கேட்டேன்? தங்கமான்னு தானே கேட்டேன்?”

அதற்கு அவன், “பின்னப் பித்தளைலயா போடுவாங்க?” என்று கேட்க, அவர் மெளனமாக இருந்தார்.

“அம்மா ஆபிஸ்ல நிறையப் பிரச்சனை, நீங்க வேற கேள்வி கேட்காதீங்க…” அவனது குரலில் அவ்வளவு சலிப்பு!

ராமானுஜம் நடுவில் சமாதானப்படுத்த முயற்சிக்க… ராஜம் அடங்குவேனா என்பது போல் பேசினாள்…

“எனக்குத் தெரியாது டா, சீதாவுக்கு குழந்தை பிறந்ததும் பத்து பவுன் போட்டுறணும், சொல்லிட்டேன் ஆமா…”

“ராஜம், முதலில் குழந்தை பிறக்கட்டும்…” என்று ராமானுஜம் அடக்க…

“அப்போ அவளுக்குக் குழந்தை பிறக்காதென்று சொல்றீங்களா?”

“அம்மா… தேவை இல்லாமல் சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ணாதீங்க… ச்செ… வர வர ரொம்ப மாறீட்டீங்க மா…” கூறியவன் படிகளில் ஏறும் சத்தம் கேட்டபிறகு தான் அகல்யா, தன் காதுகளைக் கதவிலிருந்து தள்ளி எடுத்தாள்.

அடுத்த நாள் ஆபிஸில்,

ஏனோ தானோ என்று கணினியைத் தட்டி கொண்டிருந்த அகல்யாவின் காபினுக்கு கார்த்தி வந்தான்.

“என்ன மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா?” அவ்வளவு கோபம் அவனது முகத்தில். என்ன என்பது போல் அவனைப் பார்த்தவளிடம்…

“பாஸ் ரொம்ப மூட் ஆஃப்ல இருக்காரு…”எங்கோ பார்த்தபடி அவன் கூற,

“அதை ஏன் என்கிட்ட சொல்ற?”என்று அவனை முறைத்தாள்.

“நீ தானே காரணமா இருக்க முடியும்…”பதிலடி கொடுத்தான் கார்த்தி…

இவன் என்னை என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறான் என்று கடுப்பாக இருந்தது. அகல்யா பொங்கிவிட்டாள்,

“கார்த்தி, திஸ் இஸ் டூ மச்… எல்லா விஷயத்துக்கும் என்னைச் சம்மந்த படுத்தாதே…” என்றவள், “அதுவும் இல்லாமல் புருஷன் பொண்டாட்டி விஷயத்தில் ஒரு மூணாவது மனுஷன் உள்ள வரக் கூடாது…”காயப்படுத்திவிட்டாள் அவனை… தன் நண்பனை!

‘அகல்யா உனக்கு வாய் ஜாஸ்தி டீ…’ என்று மனசாட்சி சண்டை போட்டது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி, பின்னர்,

“பேசிமுடிச்சிட்டியா? இப்படி எல்லாம் சொன்னா? நாங்க விட்டுருவோமா?”

‘அதானே நீ யார்… விடாக்கண்டன்’ என்று நினைத்துக்கொண்டாள்.

“இந்த மாசம் கம்பெனிக்கு முக்கியமான ஆர்டர்ஸ் வர மாதிரி இருக்கு, ஸோ பாஸ் மனநிலை ரொம்ப முக்கியம்… அவர் கிட்ட ஒழுங்கா இருக்குற, இல்லேனா நடக்கிறதே வேற!” கையை நீட்டி அவளை மிரட்டிவிட்டுப் போனான்… என்ன தைரியம்?

‘ஆள் வைத்து அடிப்பானோ?’ என்று நினைத்தவளுக்குத் தனது நண்பனின் செய்கை புலம்ப வைத்தது. இல்லை இவன் என்ன என் அண்ணனா? இல்லை அப்பாவா? சூர்யாவுக்கு அவன் முக்கியமான ஆளாக இருக்கலாம், அதனால்?

இவனைச் சும்மா விடக் கூடாது… என்ன செய்ய? புலம்பத்தான் முடிந்தது…

சூர்யாவை விட்டுப் பிடிக்கலாம் என்று எண்ணியிருந்தவளுக்கு மூன்று நாளைக்கு மேல் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.

காலையில் கிளம்பி கொண்டிருந்தவனிடம்,

“உங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டும்” என்று ஆரம்பிக்க,

“லேட் ஆயிடிச்சு” கதவைத் திறக்கப் போனான்.

“பாவா ஒரு நிமிஷம்…” என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்… ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் மட்டுமே அவன் மனைவி ‘பாவா’ என்றழைப்பாள் என்பது அவர்களின் நியதி…

“சில விஷயம் பேசணும் உங்க கிட்ட…”கையைப் பிடித்தபடியேயிருந்தாள்…

அவன் என்ன என்பது போல் அவளைப் பார்த்தான்…

“வீட்டில் நான் சமைக்கிறதே இல்ல… எனக்கு… ம்ம்… நமக்கென்று ஒரு கிட்சன், ஹால் எல்லாம் இந்த மாடி போர்ஷனில்… ஒரு தனி வீடா செட் பண்ணி தரீங்களா?” அவனது கண்களைப் பாராமல் அவனிடம் கேட்க,

‘மனுஷன் நான் என்ன கேட்டேன்? இவ என்ன சொல்றா?’ சூர்யாவின் மனம் கடுப்பிலிருந்தது…

“வாரக்கணக்கில் ஹோட்டல்ல சாப்பிட்டாச்சு… வெயிட் வேற போட்டுவிட்டேன்…” பாவமாக அவள் கூறினாள்.

“அப்படியா?” கண்களாலேயே அவளை அளவெடுத்தான்…

‘இப்ப கோபம் போயிருக்குமே!’ என்றது அகல்யாவின்  மைண்ட் வாய்ஸ்…

“ம்ம்… கிட்சன் இருந்தா போதுமா? உனக்குச் சமைக்க தெரியுமா?”

“சமைப்பேன்… கத்துக்கிடேன், உங்களுக்காகத் தான்…” என்று சிறிய குரலில் அவள் கூறவும் ‘நல்லா பேசவும் கத்துக்கிட்ட டீ’ என்று நினைத்தான் சூர்யா.

“ஓகே… டன்… செஞ்சி தர்றேன்… ஆனால் உனக்குத் தெரியுமே நான் சும்மா எதுவும் செய்ய மாட்டேன்னு…” என்று மெல்லிய புன்னகையோடு அவன் கூற, ‘ஞே’ என்று அவளைப் பார்த்தாள்.

இந்த ஒரு வசனத்தை எப்போவுமே சொல்லிடுங்க பாஸ்! ஐயோ என்ன கேட்பானோ?!

6 thoughts on “Ani Shiva’s Agalya 5 & 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!