ANIMA-2

முந்தைய தினம்… மதியம் தொடங்கிய படப்பிடிப்பு… மறுநாள் அதிகாலை வரை தொடர்ந்தது…

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேறு… வேறு வழியில்லை… முடித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையின்… இரு மடங்கு உழைப்பைக் கொடுக்கவேண்டியதாக ஆகிப்போனது ஈஸ்வருக்கு…

அதுவும்… அந்தப் படத்தின் கதாநாயகன் கால்ஷீட்டுக்கு தகுந்தாற்போல் இவன்தான் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம் வேறு…

அதனால் எழுந்த சலிப்புடன்… தொடர் சண்டைக்காட்சிகளால் ஏற்பட்ட களைப்பும்… தூக்கமின்றி சிவந்த கண்களுமாக… கேரவனில் நுழைந்தவன்… அதில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து… கண்களை மூடி… சாய்ந்துகொண்டான்…

தூக்கத்தில் அப்படியே கண்கள் சொருகவும்… அதைக் கலைப்பதுபோல்… வெளியில் எதோ அரவம் கேட்க… உறக்கம் தடைப்பட்ட எரிச்சலில்… கேரவனின் கண்ணாடியைத் தள்ளி வெளிப்புறம் பார்த்தான்…

அங்கே… அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகளின் வருகை தொடங்கியிருந்தது…

அப்பொழுதுதான்… அவனது கேரவனின் ஒட்டி இரண்டு பெண்மணிகள் நடந்து வரவும்… வேகமாக பைக்கில் வந்தவன் அவர்களை உரசியது போல் நின்றதைப் பார்த்து பதட்டமடைத்தவன்… கீழே இறங்க நினைக்க… அதற்குள் அவனே… இல்லை அவளே தலைக்கவசத்தை கழற்றியிருந்தாள்…

உடல் முழுவதும் மறைக்கும் ஜெர்கின்… ஜீன்ஸ் பான்ட்… ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருந்தாள்… அவளது கூந்தலும் அவள் அணிந்திருந்த ஜெர்கினுக்குள் மறைந்திருந்தது…

அந்த நபர் ஒரு பெண் என்பதை… அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை…

அங்கே சூழ்ந்திருந்த இருளையும்… புகை மூட்டமாய் சூழ்ந்திருந்த பனியையும்… தனது ஆயிரம் கரம் கொண்டு விரட்டப் போராடிக்கொண்டிருந்தான் பகலவன்…

அவன் வாரி இறைத்துக்கொண்டிருந்த கொஞ்சமே கொஞ்சமான ஒளியில்… அவளது விழிகள் இரண்டும்… விண்ணிலிருந்து தெறித்த நட்சத்திரம் போன்று ஜொலித்துக் கொண்டிருந்தன… 

மற்றபடி  அந்த மாமி அவளை விளித்ததைப் போன்றே… முகமூடி கொள்ளைக்காரி போல் அவளது முகம் முழுவதையும் துணியினால் மூடியிருந்தாள்…

முதலில் வேகமாக பைக்கை ஓட்டி வந்து… அந்த மாமியை அதிரவைத்த வீரம்… பிறகு குறும்பு… பின்பு கோபம்… அதைத் தொடர்ந்து… பொய்யான ஒரு பயம்… ஒரே ஒரு நொடி தோன்றி மறைந்த கருணை… மொத்தத்தில் ஆனந்தம்… என நவரசங்களில் பல ரசங்களை சில நிமிடங்களிலேயே… வாரியிறைத்துக் கொண்டிருந்தன அவளது அந்த அழகான விழிகள்…

அவள் அந்த பைக்கை கிளப்பிச்சென்ற லாவகம்… அவளது தன்னபிக்கையின் அளவைச் சொல்லாமல் சொன்னது…

அவள் அங்கிருந்து சென்றபிறகும்… அவள் விட்டுச்சென்ற உற்சாகம் அவனிடம் மிச்சமிருந்தது…

அவனது களைப்பும்… சோர்வும் அவனை விட்டு மொத்தமாகப் பறந்திருந்தது…

அப்பொழுது அவனது உதவியாளன்… அவனது வலது கை… கண்… காது… மூக்கு… எல்லாமுமான தமிழ்க்கதிர்… சுருக்கமாக… தமிழ்… சுடச்சுட காஃபியை கொண்டுவந்து அவனுக்கு முன் நீட்டவும்… புன்னகை முகமாக அதை வாங்கிப் பருகத்தொடங்கினான் ஈஸ்வர்…

அவனது முகத்தில் தோன்றியிருந்த புன்னகையைப் பார்த்து… மயக்கம் வராத குறைதான் தமிழுக்கு…

“அண்ணா! என்ன மாஜிக் நடந்தது இங்க?” வியப்பு மாறாமல் தமிழ் கேட்கவும்…

“என்னடா… உளர்ர!” கோபமின்றி… மிகவும் குழைந்தே ஒலித்தது ஈஸ்வரின் குரல்…

“ஐயோ! சிட்டி சிரிக்குது… எல்லாரும் பாருங்க இந்த அதிசயத்த!” உண்மையிலேயே ஈஸ்வரது மகிழ்ச்சி தமிழையுமே தொற்றிக்கொண்டது…

கனவிலிருந்து விழித்தவன் போல் அங்கிருந்து சென்றான் அவன்…

அந்த மாமி சொன்னதுபோல்…  அந்த சில நிமிடங்களில்… அவன் மனதில் வர்ணஜாலங்களை அள்ளித்தெளித்துச் சென்றிருந்தாள் அந்த மலர்காரிகை…

அந்த இதம் அந்த வாரம் முழுதும் உற்சாகமாக அவனைத் தொடர்ந்தது என்றால் மிகையில்லை…

அதைத்தான் அன்றைய தினம்…  அந்தத் தொலைக்காட்சி நிருபர்… மொத்தமாகக் குலைத்திருந்தான்…

‘வீட்டிற்கு வந்த பிறகும்… அவனது மனம் அமைதி பெறாமல் தவிக்கவும்… ஏனோ அந்த முகம் அறியா பெண்ணின் நினைவு வந்து அவனை மொத்தமாக ஆட்கொண்டது… 

அன்று அவன் அடைந்த உவகை… தனக்குக் காலம் முழுதும் கிடைக்காதா? என ஏங்கவே தொடங்கியிருந்தான் ஜெகதீஸ்வரன்…

அவனையும் அறியாமல் ‘அணிமா மலர்’ அவளது பெயரை ஒரு முறை சொல்லிப் பார்த்தான் ஜெகதீஸ்வரன்…

********************

ஜெகதீஸ்வரன் வில்லனாகவும்… பிரபல நடிகர் அனுபவ் கதாநாயகனாகவும் நடித்த… படத்தை கோலாகலமாக வெளியிட்டிருந்தனர்…

பலவித சர்ச்சைகளுக்கிடையே… அன்றைய தினம்… அதிகாலை ஐந்து மணிக்கு அந்தப் படம் திரையிடப்பட்டது.

பிரபல திரை அரங்கில்… நண்பர்கள் புடைசூழ அந்தப் படத்தை காண வந்திருந்தாள் மலர்…

முந்தைய நாள் இரவு… அவள் அந்தப் திரைப் படத்திற்கு அதிகாலையிலேயே செல்ல வேண்டும் என்று சொல்லவும்… சூடாமணி அவளை வசைபாடத் தொடங்கினார்…

“ம்மா… மலரைப் பத்தி உங்களுக்கே தெரியும் இல்ல? அவளால… தொடர்ந்து மூணு மணிநேரமெல்லாம் ஒரே இடத்துல உட்கார்ந்து… படமெல்லாம் பார்க்கவே முடியாது… ஏனோ அவளே ஒரு படம் பார்க்கணும்னு சொல்றான்னா… விடுங்க பார்த்துட்டு வரட்டும்…”

“நானே அவளை ட்ராப் செய்யறேன்… நோ ஒற்றீஸ்…” என்று பிரபாகர்தான் தங்கைக்காக… அன்னையிடம் ஆஜர் ஆனான்…

வெங்கடேசன் வேறு… மகனுடன் சேர்ந்து… மகளுக்காகப் பரிந்து கொண்டு வரவும்…  அதற்கு மேல் அவளைத் தடுக்கவில்லை சூடாமணி…

“நீங்க ரெண்டு பேர் கொடுக்கும் சப்போர்ட்லதான் அவ இந்த ஆடு ஆடுறா… இன்னும் எங்க அம்மாவும்… அப்பாவும் வந்தாங்கன்னா… சுத்தம்… அவளை ஒரு வார்த்தை கூட சொல்ல விடமாட்டாங்க…” என்று வாய்க்குள்ளாகவே முனகியபடி அடுக்களைக்குள் புகுந்துகொண்டார் அவர்…

ஒருவாறாக… அதிகாலையிலேயே அவளைத் திரை அரங்கில்… விட்டுச் சென்றான் பிரபா…

படம் தொடங்கி… அந்தக் கதாநாயகனின் பிம்பம் திரையில் தோன்றவும்… வண்ண காகிதங்கள்… மலர்கள் என வாரி இறைக்கப் பட…

அவளது தோழர் படை… குதூகலத்துடன்… படத்தை காணத் தொடங்கினர்…

எந்தச் சுவாரசியமும் இன்றி… மலர் அந்தப் படத்தை பார்க்கவும்… “பாவி… உன்னால வேற வழியில்லாம… என் பாய் ஃபிரெண்ட கட் பண்ணிட்டு வந்திருக்கேன்… நீ எதுக்குடா வந்தோம்ன்ற மாதிரி இருக்க!” என்று எண்ணிய லாவண்யா… பலவாறாக மலரை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.

அனைவரும்… அந்த நாயகனின் புகழ் பாடிக்கொண்டிருக்க… மலர் மட்டும் ஈஸ்வரை பற்றியே எண்ணிக்கொண்டிருந்தாள்…

அதுவும்… சண்டைக்காட்சிகள் தோன்றும்போதெல்லாம்… ‘ஐயோ’ என்று இருந்தது அவளுக்கு… இத்தனைக்கும்… கதாநாயகனுக்கு நிகரான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது ஈஸ்வருக்கு…

இடைவேளையின் பொழுது… அனைவரும் எழுந்து வெளியில் வரவும்… அவளது தோழிகள் அனைவரும் அனுபவ் புகழ் பாடவும்… ஒருத்தி… அந்தப் படத்தின் வில்லனான ஈஸ்வரை திட்டத்தொடங்கினாள்…

அதற்குமேல் பொறுமையை இழுத்துப்பிடிக்க முடியவில்லை மலரால்…

“என்னங்கடி… பெருசா அனுபவ்… அனுபவ்னு…  அவன் புராணம் பாடிட்டு இருக்கீங்க… தேவாங்கு மாதிரி இருக்கான்…”

“பார்த்தீங்க இல்ல… ஈஸ்வரை… என்ன ஹைட்டு… சிக்ஸ் பேக்ஸ் வெச்சிட்டு… என்ன ஃபிஸிக்… எல்லாத்துக்கும் மேல… நிஜத்தில் அவர் செம்ம டிசிப்ளின்ட் பெர்சன் தெரியுமா?”

“நடிப்புக்காகன்னாலும்… போயும்… போயும்… அந்த தேவாங்கு கிட்ட… அவர் அடி வாங்குறத பார்த்தால்… எனக்கு அப்படியே பத்திட்டு வருது…”

“நிஜத்தில் அவர் ஒரு அடி அடிச்சா… அந்த அனுபவ்… தாங்குவானா?”

“என்னைப் பொறுத்தவரையில் அவர்தான் என்னோட நிஜ ஹீரோ…” திரைப்படத்தையும்… நிஜத்தையும் குழப்பிக்கொண்டு… கோபத்தின் உச்சியில்… கொஞ்சம் கத்தவே தொடங்கியிருந்தாள் மலர்…

அங்கே… அவர்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த…  தமிழ் அவளை யோசனையாகப் பார்க்கவும்… அதைக் கவனித்த அவளுடைய நண்பன் நரேன்… சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு… ரகசியமாக…

“மலர்! இங்கே நின்னுட்டு… நீ இப்படி பேசுவது… ஆபத்து… FDFS வந்திருக்கோம்… அனுபவ் ரசிகர்கள் நிறைய பேர் வந்திருக்காங்க… பிரச்சினை ஆகிடும்… ப்ளீஸ்… புரிஞ்சிக்கோ!” என்கவும்…

அப்பொழுதுதான் சுற்றுப்புறம் உரைத்தது மலருக்கு… தான் ஏன் இவ்வாறு பேசினோம்… என்று யோசித்தவள்… ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு… “சாரி!” என்றுவிட்டு அவளது இயல்பிற்குத் திரும்பியிருந்தாள்…

எல்லோரும்… அவர்களுக்கு தேவையான உணவுப்பனடங்களை வாங்கிக்கொள்ள… அவளுக்கு காஃபி அருந்தும் எண்ணம் தோன்றவும்… அதை வங்கச் சென்றாள்…

தமிழ் குறுக்கே… நின்றவாறு கைப்பேசியை குடைந்து கொண்டிருக்கவும்… வழிவிடுமாறு அவனிடம் சொல்லும் பொருட்டு… “எக்ஸ்கியூஸ் மீ” என்ற மலரின் வார்த்தை அவனை எட்டவே இல்லை… எனவே கொஞ்சம் சத்தமாக…

“வெள்ள சட்டை போட்ட அண்ணா! கொஞ்சம் நகருங்க… நான் காஃபி வாங்கிட்டு போறேன்” என்று அவள் சொல்லவும்… அவன் பதறி வழியை விட்டு விலகினான்…

“தேங்க்ஸ்” என்ற வார்த்தையுடன் காஃபியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றாள் மலர்…

“ஏன் மலர்… இவ்ளோ டென்ஷன் ஆன… அது உன்னோட டிசைன்லயே இல்லையே…  ம்?” லாவண்யா கேட்கவும்…

“ம்ப்ச்… விடு…” என்று விட்டுப் படத்தை தொடர… உள்ளே சென்றாள் மலர்… அதன் பிறகு யாருடனும் அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை…

அந்த சூழ்நிலையும்… அதிகப்படியான சத்தமும் சேர்ந்து… அவளுக்கு தலை வலிக்கத் தொடங்கியிருந்தது…

அந்த படத்தின் இறுதிக் காட்சியைக் காண மனமின்றி… எழுந்து வெளியே வந்துவிட்டாள் மலர்…

சிறிது நேரம் கிடைத்தாலும்… கீ போர்டை எடுத்துக்கொண்டு… அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்து விடுவாள் மலர்…

அங்கே சூடாமணி பராமரித்து வரும் தோட்டம் தான் அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம்… மனது ஒன்றி படல்களைப் பாடுவது மட்டுமே அவளது ஒரே பொழுதுபோக்கு…

கூடவே அவளது ராசாவும்… ரோசாவும் சேர்த்துக்கொண்டால்… அவளது நேரம்… அவளிடம் இருக்காது…

அதுவும் சில நாட்களாக அவள் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு சில பொறுப்புகளால்… பொழுதுபோக்கு என்ற ஒன்றே அவளுக்கு இல்லாமல் போயிருந்தது…

அவள் நேரம் செலவு செய்து… இதுபோல் படம் பார்ப்பது என்பதெல்லாம்… மிகவும் அபூர்வம்…

திரையை விட்டு வெளியில் வந்து… காஃபி ஒன்றை வாங்கிக் கொண்டு… அதைப் பருகியவாறு…… அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தாள் அணிமா மலர்…

அப்பொழுதுதான்… பௌன்சர்ஸ் முன்னே வர… ஆறடி உயர்தத்தில்… மா நிறத்திற்கும் சற்று அதிகமான நிறத்தில்… சிவப்பு நிற முழுக் கை சட்டையும்… அடர் நீல ஜீன்சும்… அதற்கு பொருத்தமான ஷூ அணிந்து… ஒருகையால் அணிந்திருந்த  ரேபானை கழற்றியவாறு… மறு கையால் தலையை கொத்திக்கொண்டு… அந்த மிகப்பெரிய அரங்கமே நிரைவதுபோல்… உள்ளே நுழைந்தான்… ஜெகதீஸ்வரன்…

எதிர்பாராத அந்த நேரத்தில்… அவனை நேரில் கண்டதும்… ஒரு நொடி திகைத்து… எழுந்து நின்றுவிட்டாள் மலர்…

படம் முடியாத நிலையில்… அங்கே ஒரு சிலரே இருக்க… அவன் மனம் கொண்ட மலர்க்காரிகை என அவன் கற்பனையில் வடித்த உருவம்… நேரில் நிற்கவும்… அவனும் கூட ஒரு நொடி அதிர்ந்துதான் போனான்…

நல்ல நேர்த்தியான உயரத்தில்…  அவளது ரோஜா நிறத்தை எடுப்பாகக் காட்டும்… கருநீலத்தில் பூக்கள் போட்ட சல்வார் உடுத்து… பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுடன்… எளிய நகைகள் அணிந்து… ஒப்பனை என்பதே சிறிதும் இன்றி… களைப்பினால்… கொஞ்சம் சொக்கிய கண்களுடன்… சம்பங்கிப் பூப்போன்ற விரல்களில்… காஃபி கோப்பையை பிடித்துக்கொண்டு… நின்றவளைக் காணவும்…

அவளைத் தாண்டி அவனது கண்களை… போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனத்தைப் போல்… வேறெங்கும் திருப்ப முடியவில்லை அவனால்…

இருவருக்குமே தங்களை நிலைப்படுத்திக் கொள்ள சில நொடிகள் பிடித்தது…

அந்தப் படத்தின் முதல் காட்சி திரையிடப் படவும்… அந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் நோக்கத்தில்… அதில் நடித்த நடிகர் நடிகையர் என ஒவொருவரும்… ரசிகர்களை ஊக்குவிக்கும் விதத்தில் சென்னையின் முக்கிய திரை அரங்குகளுக்குச் செல்ல…  ஜெகதீஸ்வரன் அங்கே வந்திருந்தான்…

சில நொடிகளில் தன்னிலைக்குத் திரும்பிய மலர்… தனது கைப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தவாறு… சில எட்டுகளில் அவனை நெருங்கி… அந்த புத்தகத்தைப் பிரித்து… பேனாவுடன்… அவனிடம் நீட்டி… “ஆட்டோக்ராப் ப்ளீஸ்” என்க…

அந்தப் புத்தகத்தை பார்த்தவனுக்குச் சிரிப்பே வந்துவிட்டது… அது குழந்தைகள் படிக்கும்… ‘ஹான்செல் அண்ட் க்ரீட்டால்’ கதை புத்தகம்…

மிகவும் முயன்று சிரிப்பை அடக்கிய ஈஸ்வர்… அதில் கையெழுத்திட்டுக்கொண்டே… “இந்த புக்கெல்லாமா படிக்கிறீங்க… உங்களைப் பார்த்தால்… குட்டி பாப்பா மாதிரி இல்லையே!” என்று கிண்டல் குரலில் கேட்க…

கொஞ்சமும் தயங்காமல்… “உங்களைப் பார்த்தால் கூடத்தான் வில்லன் போல இல்ல… இருந்தாலும் நீங்க வில்லனா நடிக்கறீங்க இல்ல… அது மாதிரித்தான்…” என்று மலர் திருப்பிக்கொடுக்கவும்…

அந்தப் புத்தகத்தை அவளிடம் திரும்பக் கொடுத்தவாறு… “ஆஹான்! நான் வில்லனோ இல்லையோ… நீங்க சரியான வில்லிதான் போங்க!” என்று அவனும் பதில் கொடுக்க…

அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழுக்கு… கொஞ்சமும் நம்பமுடியவில்லை… இப்படியெல்லாம் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது ஜெகதீஸ்வரன்தானா என்று…

தமிழ் அவர்களை நெருங்குவதற்குள்… அவனுடன் ஒரு செல்ஃபீயும் எடுத்து முடித்திருந்தாள் மலர்…

பிறகு அவனைப் பார்த்த ஈஸ்வர்… “என்ன தமிழ்… படம் எப்படி வந்திருக்கு… மக்கள் என்ன சொல்ராங்க?” என்று கேட்க…

“என்ன சொல்றது அண்ணா… வழக்கம்போல எல்லாரும் உங்களை… கழுவி… கழுவி ஊத்தறாங்க… வேற என்ன…”

“ஆனா ஒண்ணு தெரியுமா… ணா… இங்க உங்களுக்காக ஒருத்தங்க… ஒரு கூட்டத்தோட சண்டையே போட தொடங்கிட்டாங்க!” என்று மலரைப் பார்த்துக்கொண்டே சொல்லவும்…

விழி விரித்து அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தவள்… சொல்ல வேண்டாம் என்பதுபோல் அவனிடம் ஜாடை காட்டவும்…

அதைக் கவனிக்காமல்… “இவங்கதான் அது!” என்று அவளைக் காண்பித்து… சொல்லி முடித்திருந்தான்… தமிழ்… 

ஆயாசத்தில்… “அட ஈஸ்வரா!” என்று மலர் சொல்லிவிட…

அதைக் கேட்டு சத்தமாகவே சிரிக்கத்தொடங்கினான் ஜெகதீஸ்வரன்…

அதற்குள் படம் முடிந்து மக்கள் கூட்டமாக வெளியில் வரத்தொடங்கவும்… “மீ எஸ்கேப்… பை! பை! பை! ஹீரோ” என்று சத்தமாக சொல்லியவாறு… அங்கிருந்து பறந்து சென்றாள் அணிமாமலர்…