anima-final2

anima-final2

அணிமா-38

சுபாவின் சிகிச்சைகள் முடிந்து, கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறிவந்தாள் அவள்.

இதற்கிடையில், அவர்களைப் பார்க்க ஒரு நாள் அங்கே வந்திருந்தார் சுசீலா மாமியும் மாமாவும்.

அவருடைய கால் ஓரளவிற்குச் சரியாகி இருந்தது.

அன்று விடுமுறையிலிருந்த ஜீவனைப் பார்த்த மாமி, “ஏண்டி சுபா, இவனுக்கு இன்னும் முடி இறக்கலையா?” என்று கேட்கவும், செங்கமலம் பாட்டியும், சாருமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்ன யோசனை உங்களுக்கு?” என்று மாமி கேட்க, “இல்ல அவங்க குல தெய்வம் கோவில் எங்க இருக்குன்னு தெரியாதே!” என்று பாட்டி சொல்ல,

“அதை பத்திலாம் யோசிக்காதீங்க! உங்க குல தெய்வம் கோவிலுக்குப் போய் ஈஸ்வர் மடியில் உட்கார வெச்சு மொட்டை போடுங்க! சுபா நல்லபடியா தேறி வரட்டும்னு, நான்தான் அவனுக்கு ஹேர் கட் பண்ண வேண்டாம்னு சொன்னேன்! ஆனா காடு மாதிரி வளந்துடுத்து பாருங்க!” என்றார் மாமி உரிமையுடன்.

“அதனாலதான் மாமி அவனுக்கு ஈஸியா உச்சி குடுமி போட்டு விட்டான் கடத்தல்காரன்!” என்று சிரித்தாள் மலர், “இப்ப மட்டும் பார்த்தான், பின்னாலே போட்டுடுவான்!” என்றார் மாமி நீட்டி முழக்கி.

“நோ! மாமி பாட்டி! நோ பின்னல்!” என்று அலறினான் ஜீவன். அவனது பாவனையைக் கண்டு அதிர்ந்து சிரித்தனர் அனைவரும்.

***

சில தினங்களிலேயே மாமி சொன்னதுபோல் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து, குல தெய்வ கோவிலில், ஈஸ்வர் மடியில் அமரவைத்து ஜீவனுக்கு மொட்டை அடித்து, பின்பு காது குத்தினர், அவனது ஆறாவது பிறந்தநாளில்.

குமார் குடும்பத்தினர், மலருடைய பிறந்த வீட்டினர் என அனைவருமே அங்கே வந்திருந்தனர்.

அவன் மொட்டை அடித்துக்கொள்ள அழுது புரளுவான் என அனைவரும் நினைக்க, அமைதியுடன் அவன் ஒத்துழைக்கவும் ஆச்சரியமாகிப்போனது அனைவருக்கும். மலர் அதை வாய் விட்டே சொல்லிவிட, “கேர்ல்ஸ் தான் லாங் ஹேர் வெச்சுப்பாங்க ஹனிமா உன்னை மாதிரி!” என்று சொல்லிவிட்டு, தன் தலையைத் தடவிக் காண்பித்தவன்,”ஆனா அம்மாவே இப்படி இருகாங்க இல்ல! அதனால எனக்கு பண்ணிட்டா ஓகேதான்!” என அவன் விளக்கவும், கண்ணீருடன் அவனை அப்படியே அணைத்துக்கொண்டான் ஈஸ்வர்.

அங்கே அனைவருடைய கண்களுமே கண்ணீரில் நிறைந்திருந்தது, அவனது விளக்கத்தால்.

அந்த நேரம் சரியாக அங்கே வந்த கைலாஷ், அந்த சிறுவன் பேசிய அனைத்தையும் கேட்க நேர்ந்தது. அந்த சிறுவன் யார் என ஆராய்ச்சியுடன் பார்த்தவாறு நின்றான் அவன்.

எல்லோரும் ஜீவனிடம் கவனமாக இருந்ததால், அவனைக் கவனிக்கவில்லை.

பல வருடங்கள் கழித்து அங்கே ஈஸ்வரைக் கண்டதும், அவன் செய்த குற்றங்கள் நினைவில் வரவும், அவன் உடல் ஒரு நொடி பயத்தில் அதிர்ந்தது.

அவனது கண்கள் அங்கே சுபாவைத் தேட, அவனுக்கு அவளை அடையாளம் காண முடியவில்லை. சில நிமிடங்கள் பிடித்தது அவனுக்கு அவளைப் புரிந்துகொள்ள.

அவளுடைய தேய்ந்துபோன தேகமும், கொஞ்சமே கொஞ்சம் தலையில் முளைக்கத் தொடங்கி இருந்த கேசமும், உள்ளே போன கண்களும், அவனுக்கு அவளுடைய நிலையைச் சொல்லாமல் சொல்ல, நிலை குலைந்து போனான் கைலாஷ்.

அந்த சூழ்நிலையைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாதவனாக, அப்படியே சுபாவின் கால்களில் வந்து விழுந்தவன், “என்னை மன்னிச்சுடு சுபா! நான் நினைச்சிருந்தால் அன்னைக்கே உன்னை காப்பாத்தி இருக்க முடியும்!

பழி உணர்ச்சியில் என்னென்னவோ செஞ்சுட்டேன்!

அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, மனசாட்சியே இல்லாமல், உங்க வீட்டிலிருந்த நகை, பணம் எல்லாத்தையும் திருடிட்டு, ஈஸ்வர் நிர்க்கதியாய் ஊரை விட்டே போனதைப் பார்த்துச் சந்தோசப்பட்டேன்.

அதுதான் கடவுள் எனக்குக் கொடுத்த கடைசி சந்தோஷம். அதன் பிறகு கல்யாண வாழ்க்கைக் கூட எனக்கு சந்தோசமாய் அமையல.

ஒரே வருஷத்துக்குள்ள டிவோர்ஸ்ல போய் முடிஞ்சது. பெரிய அமௌன்ட் செட்டில் பண்ணேன் அந்த கல்யாணத்திலிருந்து வெளியில் வர.

என்னால வேலைக்கும் போக முடியாமல் போனது. வேற கல்யாணமும் அமையல.

அம்மா, அப்பா என்னை நினைச்சே பாதி உயிரா போயிட்டாங்க.

எல்லாமே உனக்கும் உங்க குடும்பத்துக்கும் செய்த பாவம்தான்” என மனதிலிருந்து சுபாவிடமும், ஈஸ்வரிடமும், அங்கே இருந்த அனைவரிடமும் மன்னிப்பு வேண்டினான் கைலாஷ்.

எதிரே இருப்பவன் பலத்துடன் மோதினால் திரும்பச் சண்டை போடலாம், செத்த பாம்பை எப்படி அடிப்பது?

“பரவாயில்லை விடு கைலாஷ்! போனது போகட்டும்!” என முடித்துக்கொண்டான் ஈஸ்வர். அவ்வளவே!

அவசரமாக அங்கிருந்து கிளம்பிப் போன கைலாஷ், சிறிது நேரத்தில் திரும்ப வந்தான் ஈஸ்வரின் வீடு மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட பத்திரங்களுடன்.

“நியாயப்படி இதெல்லாம் உனக்குச் சேரவேண்டியதுதான்! இதை விடப் பல மடங்கு நீ சம்பாதிச்சு இருப்ப, இருந்தாலும் தயவு செய்து இதை மறுக்காமல் வாங்கிக்கோ!” என அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்தான் அவன்.

அவனுடைய பெற்றோரை நேரில் சென்று சந்தித்துவிட்டு, அங்கிருந்து மன நிறைவுடன் கிளம்பினார் அனைவரும்.

வசதியான மிகப் பெரிய குளிரூட்டப்பட்ட பேருந்தில் அனைவரும் பயணிக்க, இருவர் மட்டுமே அமரும் இருக்கையில் ஜன்னலோரமாக கணவனுக்கு அருகில், அவன் தோள் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் மலர்.

அவர்கள் இருவருடைய மடியிலும் வசதியாகக் கால் நீட்டித் தூங்கிக்கொண்டிருந்தான் ஜீவன்.

கிசுகிசுப்பாக அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில், “ஹீரோ! இன்னும் கொஞ்ச நாளில் ஜீவிக்கு வளைகாப்பு செய்யணும்.

பிறகு டெலிவரி பார்க்கணும்.

சோ இப்பதான் சரியான டைம்! நாம ஒரு ஒன் வீக் சைலெண்டா எங்கேயாவது ஓடி போயிடலாமா? ஹனி மூனுக்கு!” என்று ஆவலுடன் அவள் கேட்கவும், தனது தாடையைத் தடவியபடி கொஞ்சம் யோசித்தவன், “ஓகே… போலாம்தான்… எதுக்கும்…” எனச் சொல்லத்தொடங்க, “தமிழ் கிட்ட கேட்டுட்டு டிசைட் பண்ணனும் இல்ல?” என்றாள் மலர் கிண்டல் கலந்த குரலில்.

“ப்ச்! வேற என்னடீ செய்ய சொல்ற! நாளைக்கு மீண்டும் உயிர்த்தெழு படத்தோட முதல் டீசர் வேற வெளியிட போறாங்க.

படத்தோட ஷூட்டிங் அண்ட் ப்ரோமோன்னு ஏகப்பட்ட வேலை இருக்குடீ!

லக்ஷ்மி பிலிம்ஸ் கார்த்திகேயன் வேற பெர்சனலா என்னை மீட் பண்ணனும்னு கேட்டிருக்காரு!

நம்ம ப்ரோக்ராம் பத்தி நான் டூ டேஸ்ல சொல்றேன்!” என்றான் ஈஸ்வர்.

“வேற வழி!” என்றவாறு தோளைக் குலுக்கி அதை ஏற்றுக்கொண்டாள் மலர்.

***

அடுத்த நாள் ‘மீண்டும் உயிர்த்தெழு’ படத்தின் முதல் டீசெர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

ஈஸ்வர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதுபோல், பிரான்ஸ் நகரில் படமாக்கப்பட்டிருந்த கட்சியும், அவன், “உங்க வாழ்க்கையையே நான் வேற லெவலில் மாத்தி காட்றேன் மிஸ்டர்.அபிமன்யு!” எனக் கெத்தாக ஈஸ்வர் பேசும் வசனமும்,

தொடர்ந்து, நீச்சல் குளத்தின் பின்னணியில் “நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சிருக்கிற காதல் சூர்யா! அது எல்லாத்தையும் சாத்தியப்படுத்தும்!” எனக் கதாநாயகியிடம் காதல் ததும்ப அவன் வசனம் பேசும் காட்சியும் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சமூக வலைத் தளங்களில் அந்த காணொளியை ஒரே நாளில் பல லட்சம் பேர் பார்த்திருந்தனர்.

மேலும் அவன் குறிப்பிட்ட மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் எடுக்கவிருக்கும் திரைப்படத்தில், அவனைக் கதாநாயகனாக முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட அடுத்த தினம் அவனை அழைத்திருந்தனர்.

அந்த நிறைவுடன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தான் ஈஸ்வர்.

உணவு இடைவேளையின் போது கேரவேனில் வந்து அமர்ந்தவன் கைப்பேசியைப் பார்க்க, பூக்கள் மற்றும் இனிப்புக்கள் என சில இமோஜிக்களுடன், ‘கான்செல் தி ஹனிமூன் பிளான்! இனிமேல் ஒன்லி பேமிலி டூர்தான்!’ என குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் மலர்.

‘என்ன பிரச்சினைனு தெரியலியே! ஏன் இப்படி மெசேஜ் அனுப்பியிருக்கா இந்த பூக்காரி? ஒரு வேளை டீசரை பாத்துட்டுதான் இந்த ரியாக்ஷனா?” என உள்ளுக்குள் குறுகுறுத்தவாறே படப்பிடிப்பு முடிந்து, வீட்டிற்கு வந்தான் ஈஸ்வர். மணி இரவு ஒன்பதை நெருங்கி இருந்தது.

அங்கே வீட்டின் வரவேற்பறையில், அவனுடைய அம்மா, மலருடைய அம்மா,அப்பா, தாத்தா, இரண்டு பாட்டிகள், பிரபா, ஜீவி, சுபா என அனைவரும் குழுமி இருக்க, ஜீவன் பிரபாவின் மடியில் தலை வைத்து உறங்கியிருந்தான்.

அவனைக் கண்டதும், அனைவரும் மகிழ்ச்சியுடன், “கங்கிராட்ஸ் ஈஸ்வர்!” “வாழ்த்துக்கள் மாப்பிள்ளை!” “ஹாப்பிடா ஜகா!” “கங்கிராட்ஸ் அண்ணா!” என அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்த…

அவனுடைய வரவிற்காக வீட்டில் அனைவருமே காத்துக்கொண்டிருந்தது புரிந்தது அவனுக்கு.

அவன் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் தகவல், அதற்கும் அனைவர்க்கும் எப்படித் தெரியவந்திருக்கும் என அவன் யோசித்தவாறு காரணம் புரியாமலேயே அனைவருக்கும் நன்றி தெரிவித்தான் ஈஸ்வர்.

அவனுடைய கண்கள் மலரைத் தேடிச் சுழன்றது.

அதற்குள் அவனுக்காகச் செய்த பாதாம் அல்வாவைக் கொண்டுவந்து அவனுக்கு ஊட்டினார் சாருமதி.

“அம்மா உங்க எல்லாருக்கும் எப்படித் தெரியும்?” என அவன் கேட்க, சிரித்த முகமாக, “இது என்னப்பா கேள்வி? மலர்தான் சொன்னா?” என்றார் மதி எதார்த்தமாக.

“என்ன மலர் சொன்னாளா? அவளுக்கு எப்படித் தெரியும்?” என்று அவன் கேட்கவும், ‘லூசாப்பா நீ!’ எனும் வகையில் அவனை ஒரு பார்வை பார்த்தவர், “அதைப் போய் அவ கிட்டேயே கேளு!” என்றார் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

“எங்கம்மா அவ… எல்லாரும் இங்கே இருக்கும்போது தனியா போய் என்ன செய்யறா?” என்று மகன் அடுத்த கேள்விக்குத் தாவவும்…

“இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தா… இப்பதான் எதையோ எடுக்க ரூமுக்கு போனா… இனிமேல் நீ எதை கேக்கணும்னாலும் அவ கிட்டேயே போய் கேளு!” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் மதி.

அவனுடைய அறைக்குள் நுழையவும், அவன் வந்ததை கூட உணராமல் தீவிரமாக ஏதோ ஒரு கோப்பை கையில் வைத்துக்கொண்டு, அதில் மூழ்கி இருந்தாள் மலர்.

அவளுடைய அருகில் நெருங்கியவன், அவளது காதின் அருகில் சென்று ‘மலரே மௌனமா! மௌனமே வேதமா’ என மெல்லிய குரலில் பாடவும், அதில் திடுக்கிட்டுத் திரும்ப, அவளுடைய முகம் வாட்டமாக இருப்பது புரிந்தது அவனுக்கு.

அவள் சுபாவின் மருத்துவ அறிக்கையைத்தான் படித்துக்கொண்டிருந்தாள் என்பதும் புரிந்தது.

எழுந்த பதட்டத்தை மறைத்தவாறு, “இன்னைக்கு சுபாவை செக் அப் கு கூட்டிட்டு போனீங்க இல்ல. அவளுக்கு ஒண்ணும் இல்லையே?” என அவன் கேட்கவும்…

“ஹகூனா மத்தாதா ஹீரோ! அவங்க பர்பெக்ட்லி நார்மல்!” என்று சொல்லிவிட்டு, “எனக்கு கொஞ்சம் டவுட்டா இருந்தது, அவங்க கூட ஹாஸ்பிடல் போன போது… அங்கேயே எனக்கும் செக்அப் பண்ணிக்கிட்டேன் ஹீரோ! ரிசல்ட் பாசிட்டிவ்னு!” என்று திக்கித்திணறி நாணத்துடன் அவள் சொல்லிக்கொண்டிருக்க, அவளுடைய தவிப்பை உணராமல், அவளை முடிக்க விடாமல், “ஐயோ என்ன ஆச்சு!” எனப் பதறினான் ஈஸ்வர்.

அவனிடம் உடைத்துச் சொல்லத் திணறியவளாக, ஒரு காகிதத்தையும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த சிறிய கருவியையும் அவனுடைய கையில் திணித்தாள் மலர்.

“ப்ரக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ்!” என அதில் தெளிவாக அச்சடிக்கப்பட்டிருக்க, அந்த கருவியில் இரண்டு கோடுகள் தெரிந்தது.

அவனுடைய வாழ்க்கை முழுமை அடைந்த மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் திரை இட, தன்னை மறந்து நின்றவனிடம், “என்ன ஹீரோ! இனிமேல் நாம பேமிலி டூர் போலாமா?!” என குறும்பு குரலில் கேட்டாள் மலர்.

அடுத்த நொடி மனைவியை இறுக அணைத்த ஈஸ்வர், ஆயிரம் நன்றிகளால் அவளை அர்ச்சித்துக் கொண்டிருந்தான் இதழ் மலர்ந்து! வார்த்தைகள் இல்லாமலேயே!

error: Content is protected !!