இரு தினங்கள் கடந்திருந்த நிலையில்… ஜெய்யிடம் சொன்னது போலவே… மலரை அழைத்துக்கொண்டு… தமிழ் மற்றும்… அவனுடைய பௌன்சர்கள் சூழ… அந்த பிணங்களை அடையாளம் காண்பிக்கவென… அரசு பொது மருத்துவமனையை சார்ந்த… சவ கிடங்கிற்கு வந்திருந்தான் ஈஸ்வர்…

 

செய்தி நிறுவனங்கள்…  தொலைக்காட்ச்சிகள் என ஊடங்கள் ஒவ்வொன்றாக…அங்கே முற்றுகை இடத் தொடங்கியிருந்தன…

 

ஜெய் முன்பாகவே அங்கே வந்து அவர்களுக்காக காத்திருந்தான்…

 

எந்த ஒரு கேள்விக்கும் பதில் கொடுக்காமல்… அனைத்து நிருபர்களையும் தவிர்த்துவிட்டு… நேரே உள்ளே சென்றனர்… ஈஸ்வர் மற்றும் மலர் இரண்டுபேரும்.

 

ஜெய் மற்றும் வேறு சிலரும் அங்கே இருக்க… அந்த பிணங்களை அருகினில் சென்று பார்த்தாள் மலர்…

 

உடல் முழுதும் கட்டுகள் போடப்பட்டு… முகம் மட்டுமே தெரியும்படி வைக்கப்பட்டிருந்தன அந்த பிணங்கள்…

 

எரிந்து போய்… அரைகுறையாக இருந்தாலும் கூட… அதில் ஒருவனுடைய முகம் மட்டும் தெளிவாக இருந்தது… அவனை பார்த்த மாத்திரமே மலருக்கு அவன் வேதாவேதான் என்பது நன்றாகவே விளங்கியது…

 

அதை ஜெய்யிடம் சொல்லி… மற்றொருவன்… அன்று அவனுடன் கூடச்  சென்றவனாக இருக்கலாம் என்றும் சொல்லிவிட்டு… ஈஸ்வருடன்… அங்கிருந்தது கிளம்பினாள் மலர்…

 

ஆனால் யாருமே எதிர்பாராதவண்ணம்… கடத்தல் கும்பலிடமிருந்து குழந்தைகளை மீட்ட அன்று… ஆபத்தான நிலையில் அதே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு… அங்கேயே தொடர் சிகிச்சையில் இருக்கும்… அந்த பெண் குழந்தையை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று அங்கே சென்றான் ஈஸ்வர்…

 

மலரும் கூட அதை எதிர்பார்க்கவில்லை…

 

அங்கே சென்று… அங்கிருந்த மருத்துவர்களிடம் அந்த குழந்தையின் உடல்நலத்தை பற்றி ஈஸ்வர் விசாரிக்க… அங்கே மிரட்சியுடன்… கட்டிலில் அமர்ந்துகொண்டிருந்த… அந்த குழந்தையை நெருங்கி… “செம்ம கியூட்டா இருக்கீங்களே… உங்க பேர் என்ன?” என்று மலர் கேட்கவும்… புரியாதது போல்… பதில் சொல்லாமல் மிரண்டு விழித்தாள் அந்த குழந்தை.

 

அருகே இருந்த செவிலியர்… “இந்த பாப்பாவுக்கு தமிழ் புரியல… அதனாலதான் எதை கேட்டாலும் பதில் சொல்ல மேட்டேங்குது! நாங்களும் எவ்வளவோ கேட்டு பார்த்துட்டோம்… போலீஸ்காரம்மாவும் ட்ரை பண்ணி பார்த்துட்டாங்க… பேரைக்கூட சொல்லமாட்டேங்குது!” என்று அலுப்புடன் சொல்லி முடித்தார்…

 

அந்தச் சிறுமியின் உடல்மொழியில்… ஏதோ தோன்றவும்… மறுபடியும் அவள்புறம் திரும்பி… “பாப்பா! நீங்க ரொம்ப நல்ல பாப்பாவாம்… உங்க பேரை சொன்னால்… நான் உங்களுக்கு சாக்கலேட்… ஐஸ் கிரீம் எல்லாம் வாங்கி கொடுப்பேனாம்!” என்று அவளுடைய ஆசையை கிளப்பும்விதமாக சொன்னாள் மலர்…

 

அவளுடைய கனிவான குரலில்… கட்டுண்டு… “ஐஸ்!” என்ற ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு… கண்கள்  மின்ன… ‘யக்கா! மெய்யாலுமே என் பேர சொன்னா… ஐஸ்ஸு வாங்கிக் குடுப்பியாக்கா?” என்று அவள் கேட்க…

 

“ம்ம்… வாங்கிக் கொடுக்கறேன்… நீ உன் பேரை சொல்லு…” என்று மலர் கொஞ்சலாகச் சொல்லவும்…

 

“நயன்தாரா பாப்பா!” என்று தன் பெயரைத் தெளிவாக சொன்னாள் அந்த சிறுமி…

 

‘எப்படி?’ என்பதுபோல் புருவத்தைத் தூக்கி… அருகில் இருந்த செவிலியரை பார்த்த மலர்…

 

“நயன்தாராவா? உன் பேரு மாஸா இல்ல இருக்கு!” என்று குரலில் வியப்பை கூட்டி சொல்லவும் அதில் தயக்கம் கொஞ்சம் விலகி…

 

“எனக்கு குச்சி ஐஸ்லாம் வாணா! எங்கம்மா… துட்டு வெச்சிருந்தா… குச்சி ஐஸ்தான் வாங்கிக் கொடுக்கும்! நீ டக்கரா ஒரு கோன் ஐஸ் வாங்கி குடுக்கிறியா கா?” என்று சென்னை தமிழ் சரளமாக நாவினில் நாட்டியம் ஆட… அவள் கேட்கவும்… ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்… அங்கே இருந்த செவிலியரும்… காவலுக்கு இருந்த ஒரு பெண் கான்ஸ்டபிளும்…

 

அது எதையும் கண்டுகொள்ளாமல்… மலர் ஈஸ்வர் முகத்தை பார்க்க… தமிழிடம் ஐஸ் கிரீம் வாங்கிவரும்படி அவன் ஜாடை செய்யவும்… அங்கிருந்து சென்றான் தமிழ்…

 

“பாருங்க… நம்ம நயன்தாரா பாப்பாவுக்கு… தமிழ் நல்லாவே புரியுது!” என்று அந்த செவிலியரை பார்த்து சொன்ன மலர்… “பாப்பா… உன் அம்மா பேர் என்னடா?” என்று அடுத்த கேள்வி கேட்க… அந்த குழந்தையின் முகம் வேதனையில் வாடிப்போனது…

 

“அம்மா! எனக்கு அம்மாவாண்ட போவணும்! ஒடனே!” என்று அவள் அழத்தொடங்கவும்… “போகலாம் பாப்பா! கோன் ஐஸ் சாப்பிட்டு போகலாம்… சரியா!” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தினாள் மலர்…

 

அந்த குழந்தைக்கு… மயக்க மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக சுவாச கோளாறு ஏற்ப்பட்டு… தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சரியாகி இருந்தது…

 

முந்தைய தினம் வரை… சாதாரணமாக பேசும் நிலையில்கூட இல்லை அவள்…

 

மருத்துவர்… செவிலியர்… பெண் காவலர் என அனைவரையும் கண்டு மிகவும் பயந்த நிலையில் இருந்தவள்… மலரை பார்த்ததும்தான் வாயையே திறந்தாள் எனலாம்…

 

முதலில் தயங்கினாலும்… பின்பு ஒரே ஒரு ஐஸ் க்ரீம் என்ற நிபந்தனையுடன் அவளை உண்ண அனுமதித்தார்… அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்…

 

அதன் பின்பு குழந்தைகளுக்கான அந்த பிரிவில் இருந்து அவர்கள் வெளியேறி வரவும்… அவர்களைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள்… குழந்தைகள் கடத்தல்… மர்ம கொலைகள் எனக் கேள்விகள் கேட்க தொடங்கவும்… “இதற்கெல்லாம்… நம்ம காவல்துறைதான் பதில் சொல்லணும்… இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில்… மற்ற குழந்தைகளின் பேரன்ட்ஸ் அண்ட் கார்டியன்ஸ் மாதிரிதான் நாங்களும்!” என்று ஈஸ்வர் சொல்லிவிட…

 

அடுத்ததாக ஈஸ்வருடைய புதிய திரைப்படங்கள் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்ப… “நான் கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டிய சூழலில் இருக்கிறேன்… வெகு விரைவில்… ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறேன்… அப்பொழுது நீங்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்… அதுவரை பொருத்தருள்க!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல எத்தனிக்க,

 

“சாரி சார்… மலர் மேடம் கிட்ட ஒரு சின்னப் பெர்சனல் க்வஸ்டியன்… ப்ளீஸ்” என்று கெஞ்சலான குரலில்… ஒரு பெண் நிருபர் கேட்கவும்… மறுக்க முடியாமல் அவன் மலரை பார்க்க… “என்ன?” என்பது போல் மலர் கேள்வியுடன் அந்த நிருபரை ஏறிட…

 

“நீங்க நிஜத்திலேயே… போல்டா… அத்தனை குழந்தைகளைக் காப்பாத்தி இருக்கீங்க… நம்ம ஜெகதீஸ்வர் சார்கூட உங்களுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுக்கறார்… ஆனால்… சினிமாவில் மட்டும்… அவர் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளைத் தவிர்த்து… ஈஸ்வர் தேவ் மாதிரி நெகடிவ் ரோலில் நடிப்பதில் உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையா?” என்ற அதி முக்கியமான கேள்வியை அவர் கேட்கவும்… நொந்தே போனான் ஈஸ்வர்…

 

‘ஏற்கனவே… ஹீரோ ஒர்ஷிப் அது… இதுன்னு… எதோ சொல்லிட்டு இருந்தாளே… என்ன பதில் சொல்வாளோ?’ என்ற எண்ணம் தோன்ற… ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தான் ஈஸ்வர்…

 

உதட்டில் தவழும் புன்னகையுடன்… “சினிமால… ஹீரோயினை யார் ரொமான்ஸ் பண்ணுவாங்க?” என்று மலர் பதிலுக்கு ஒரு கேள்வியை அந்த நிருபரிடம் கேட்க…

 

சிரித்துக்கொண்டே… “ஹீரோதான்!” என்று அவர் சொன்ன பதிலில்…

 

“ஸோ! அந்தச் சான்ஸெல்லாம் நம்ம வில்லனுக்குக் கிடையாது இல்லையா? அதனால… என் ஈஸ்வர் எனக்கு மட்டும் ஹீரோவா இருந்தால் போதும்… உங்க எல்லாருக்கும் வில்லனாவே இருக்கட்டும்!” என்று கெத்தாகச் சொல்லிவிட்டு… அங்கே கொல்லென எழுந்த அனைவரின் சிரிப்பின் சத்தம் பின்தொடர… ஈஸ்வரின் கையுடன் தன் கையைக் கோர்த்தவாறு… அங்கிருந்து சென்றாள் மலர்…

 

இதில் இப்படி ஓர் உள் குத்து இருப்பது புரியாமல்… ‘அடிப்பாவி! அந்தப் படம் ரிலீஸ் ஆனவுடன்… இவ நம்மள என்ன பாடு படுத்தப் போறாளோ!” என்று மனதுக்குள் பதறியவாறு… அவளுடைய இழுப்பிற்குக் கட்டுப்பட்டு அவளுடன் சென்றான் ஈஸ்வர்… பீதியுடன்…

 

அடுத்து வந்த நாட்களில் படப்பிடிப்பு… டப்பிங் என முழு நேரமும்… ஈஸ்வர் வேலையில் மூழ்கிவிட… அவனைக் கண்களால் காண்பதே அரிதாகிப்போனது… மலருக்கு…

 

இதற்கிடையில்… அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் ஜீவனைச் சேர்த்தனர்… அதைத் தொடர்ந்து… சுபானுவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று… கீமோ கொடுத்து அழைத்துவந்தனர் சாருமதி மலர் இருவரும்…

 

இடையிடையே… நயன்தாராவை… மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு வந்தாள் மலர்…

 

கிட்டத்தட்ட… ஒரு வாரம் கடந்திருந்த நிலையில்… ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தான் ஈஸ்வர்…

 

பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில்… மிக்க எதிர்பார்ப்புடன் ஊடகங்கள் அனைத்தும் குழுமி இருந்தன.

 

அங்கே கூடியிருந்த மற்றவர்களைப் போலவே… ஆவலுடன் அவன் பேசப்போவதை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் மலர்… அவனுக்கு அருகில் அமர்ந்தவாறு…

 

தனது தொண்டையைச் செருமிக்கொண்டு… நேர் பார்வையில்… எதிர் புறமாக உட்கார்ந்திருந்த அனைவரையும் நோக்கி… “நான் நடிக்கும் திரைப்படங்களைப் பற்றியோ… இல்லை திரைப்படத் துறை பற்றியோ பேச… நான் இந்த ப்ரஸ்மீட் கொடுக்கல!”

 

“ஒரு முக்கிய அனௌன்ஸ்மென்ட்… கொடுக்கத்தான் உங்கள் அனைவரையும் இங்கே அழைத்திருக்கிறேன்” என்று சொன்ன ஈஸ்வர்… அருகில் நின்றுகொண்டிருந்த தமிழிடம் ஜாடை செய்ய… அங்கிருந்து சென்ற தமிழ்… சில நிமிடங்களில்… பொருளாதார நிலையில்… அடி மட்டத்தில் இருப்பவர்கள் போன்று காட்சி அளிக்கும்… ஒரு இளம் தம்பதியரை அங்கே அழைத்துவந்தான்…

 

அவர்களை அங்கே கண்டதும்… கூட்டத்தில் சலசலப்பு எழ… “இவங்க யாரு ஈஸ்வர் சார்?”

 

“சினிமாவை பற்றி இல்லை என்றால்… நீங்க வேறு எதைப் பற்றி இங்கே சொல்ல போறீங்க?” என அடுக்கடுக்காக எழுந்த கேள்விகளுகெல்லாம்…

 

“இவர் கந்தசாமி… இவங்க இவரோட மனைவி ராசம்மா… இவங்க ரெண்டுபேரும்… வால்-டாக்ஸ் ரோட் அருகில் இருக்கும் பிளாட்ஃபார்ம்ல குடி இருக்கறவங்க…” என அவர்களைப் பற்றிச் சொன்ன ஈஸ்வர்…

 

“ஜஸ்ட்… ரெண்டு நிமிடம் வெயிட் பண்ணுங்க… மீதம் இருப்பதை நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கலாம்!” என்று அவர்களுடைய கேள்விகளுக்குத் தற்காலிக தடை விதித்தான் ஈஸ்வர்!

 

அனைவரும் அங்கே நடக்கவிருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்க… சில நிமிடங்களில் கம்பீர நடையுடன் அங்கே வந்தான் ஜெய்…

 

அவனைத் தொடர்ந்து… ஒரு பெண் காவலரின் கையைப் பற்றியவாறு அங்கே வந்துகொண்டிருந்தாள் குட்டி நயன்தாரா…

 

துரு துருவெனச் சுழன்ற அவள் விழிகளில் அந்தச் ராசம்மா என்ற பெண்ணும் அவளது கணவரும் விழ… அடுத்த நொடி… ‘யம்மா!’ என்ற கதறலுடன்… அந்தப் பெண்ணிடம் ஓடிசென்று… அவள் கழுத்தை இறுக… கட்டிக்கொண்டது அந்த இளம் தளிர்…

 

தாய்… மகள்… இருவரது உடலும் அழுகையில் குலுங்கிக்கொண்டிருந்தது…

 

அருகில் நின்றிருந்த கந்தசாமி… நெகிழ்ச்சியுடன்… தன் மகளை… தன் கைகளில் தூக்க முயல… குழந்தையின் இறுக்கம் மேலும் மேலும் கூடிக்கொண்டே போனது… விட்டால் எங்கே மீண்டும் தன் தாயை தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற அச்சம்… அதில் அப்பட்டமாய்த் தெரிந்தது…

 

கேள்வி கேட்கவும் தோன்றாமல்… பேச்சற்றுபோய்… மூச்சுவிடவும் மறந்து… அங்கே குழுமியிருந்த… நிருபர்கள்… ஒளிப்பதிவாளர்கள்… அந்த விடுதியில் வேலை செய்பவர்கள் என அனைவரும்… கல்லும் கசிந்துருக்கும் அந்தக் காட்சியை… பார்த்துக்கொண்டிருந்தனர்…

 

இரண்டு கைகளாலும்… வாயை பொத்திக்கொண்டு… கண்களில் கண்ணீர் திரையிட… ஈஸ்வரை பார்த்தாள் மலர்… ஆயிரம் நன்றிகளைச் சுமந்துக்கொண்டிருந்தது அவளது அந்தப் பார்வை…

 

அந்த உறைநிலையை ஜெய்தான் கலைத்தான்… தன் உரை மூலமாக…

 

“கிட்டத்தட்ட இருப்பது நாட்களுக்கு முன்பாக… இரவில்… உறங்கும்பொழுது… மர்ம நபர்கள் சிலரால்… இந்தக் குழந்தை கடத்தப்பட்டிருக்கிறாள்!”

 

“தன் புடவை முந்தானையில்… குழந்தையின் கையில் முடிச்சுப் போட்டுக்கொண்டுதான் உறங்கியதாக… அவருடைய தாய் சராசம்மா… விசாரணையின்போது எங்களிடம் சொன்னார்!”

 

“குழந்தை காணாமல் போனதை பற்றி… அவர்கள் இதுவரை புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரிய செய்தி!”

 

“எங்க டிபார்ட்மென்ட் மூலமாக… இந்தக் குழந்தையின் பெற்றோரை தேட… பலவித முயற்சிகள் எடுத்து வந்தோம்…”

 

“இந்த நயன்தாரா பாப்பா… வாயை திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசாத சூழ்நிலையில்… எங்களுக்கு ஒரு க்ளூ கூடக் கிடைக்கவில்லை!”

 

“அந்தச் சமயத்தில்தான்… திருமதி மலர் ஜெகதீஸ்வரன்… இவளிடம் பேசும்பொழுது… இவள் பதில் பேச தொடங்கினாள்!”

 

“தொடர்ந்து… அவங்க இந்தக் குழந்தையிடம் பேச்சு கொடுத்ததில்… இவள் சொன்ன சில அடையாளங்களை வைத்து பார்க்கும் பொழுது… இவளோட பேரன்ட்ஸ்… பிளாட்ஃபார்ம்ல வசிக்கறவங்களோன்னு ஒரு சந்தேகம் வந்தது…”

 

“அவங்களைக் கண்டுபிடிக்க… எங்க டிப்பார்ட்மென்டுக்கு… மிஸ்டர்.ஜெகதீஸ்வரன் அதிகம் உதவி செய்திருக்கிறார்…”

 

“அவருடைய… ரசிகர்கள் மற்றும் சில தனியார் துப்பறியும் நிறுவனங்களையும்… இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தி… அவர்… இவ்வளவு குறுகிய நாட்களுக்குள்… இந்தக் குழந்தையைப் பெற்றோருடன் சேர்க்க உதவி செய்திருக்கிறார்…”

 

“அவருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்!” என்று… அனைத்தையும் விளக்கி முடித்தான் ஜெய்…

 

“இன்னும் சில குழந்தைகள்… பெற்றோரிடம் சேர்க்கப்படாமல் இருக்காங்களே… அவங்க நிலைமை என்ன?” என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்ப…

 

“அந்தக் குழந்தைகள்… பாதுகாப்பு இல்லத்தில் பத்திரமாக இருக்காங்க… அவங்க எல்லாருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகள்… அவங்களைப் பற்றிய தகவல்களை எல்லா இடங்களுக்கும் அனுப்பியிருக்கோம்…”

 

“இதைப் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாத நிலையில் இருக்கிறேன்… ஸோ… கைன்ட்லி… எக்ஸ்க்யூஸ் மீ!” என்று கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து… நயன்தாரா மற்றும் அவளது பெற்றோருடன் அங்கிருந்து சென்றான் ஜெய்…

 

அவன் சென்றதும்… ஒரு நிருபர் ஈஸ்வரை நோக்கி… “எல்லாரும்… நமக்கென்ன என்று போய்க்கொண்டிருக்க… உங்களுக்கு… இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய செயலில் ஈடுபடும் ஆர்வம் எப்படி வந்தது!” என்று கேட்க…

 

“கண் எதிரில் பார்த்த பிறகும்… எப்படிச் சார் நம்ம வேலையை மட்டும் பார்த்துட்டு போக முடியும்?”

 

“நம்ம நாட்டின் பொக்கிஷங்கள் சார்… நம்ம குழந்தைகள்!”

 

“போயும் போயும்! பணத்துக்காக…அவங்களைப் பெத்தவங்க கிட்டேயிருந்து பிரித்து… உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்… கடத்தறாங்க!”

 

“மொழி கூடத் தெரியாத ஒரு புதிய இடத்தில் விட்டு… பிச்சை எடுக்க வெக்கறாங்க…”

 

‘கொத்தடிமைகளாக… நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத வேலைகளிலெல்லாம் ஈடுபடுத்தறாங்க!”

 

“பெண்குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசம்…”

 

“ஈரானில் நடந்த… ஒரு தற்கொலை படை தாக்குதலில்… குழந்தைகளை  உபயோக படுத்தி பாம் வெடிக்க வெச்சிருக்காங்க!”

 

“இதையெல்லாம் கேள்விப்படும்பொழுது… உயிர் வரை வலிக்குது”

 

“எப்படிச் சும்மா இருக்க முடியும்?” கொதிப்புடன் வந்தன ஈஸ்வரின் வார்த்தைகள்…

 

“என்னதான் நீங்க ஒரு பிரபல நடிகராக இருந்தாலும்… இது போன்ற பிரச்சினைகளை… உங்க ஒருதரால சரி செய்ய முடியுமா?” என்று மற்றொருவர் கேட்கவும்…

 

“தெரியல… பட்… முயற்சி செஞ்சா தப்பில்லைனு தோணுது!”

 

“ஏன்னா… நம்ம ஆட்சியாளர்களை நம்பிட்டு நாம சும்மா இருந்தால்… குழந்தைகளாய்க் காணாமல் போனவர்கள்… கிழவர்களாய்கூடக் கிடைக்கமாட்டாங்க!” என்று சொல்லிவிட்டு,

 

இறுதியாக, “இதன் முதல் கட்டமாக… நயன்தாரா பாப்பாவைப்போல… கேட்பாரின்றி… இருக்கும் குழந்தைகளுக்கு… ஒரு நல்ல ஷெல்டர் ஏற்படுத்திக் கொடுக்க… ‘அன்னை ஜீவன்’ என்கிற பெயரில்… ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கப் போகிறேன்!” என்று பொதுவாக ஒரு அறிவிப்பை கொடுத்து… தனது பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டான் ஜெகதீஸ்வரன்…

 

அனைத்தும் முடிந்து… உணவு உண்டு… வீடு வந்து சேரும் வரையிலும் கூட ஏதும் பேசவில்லை அணிமாமலர்… அந்த அளவிற்கு… உள்ளுக்குள்ளே மொத்தமாக நெகிழ்ந்துபோயிருந்தாள் அவள்.

 

இருவரும்… அறைக்குள் நுழையவும்… என்ன பேசுவது என்று புரியாமல்… தயக்கத்துடன்… மலர் ஈஸ்வருடைய முகத்தைப் பார்க்க… அடுத்த நொடி… அவனுடைய வலிய கரங்களில் கட்டுண்டிருந்தாள் மலர்…

 

“என்ன மேடம்… நொடிக்கு நூறு வார்த்தை பேசுவீங்க… இப்ப சொல்ல ஒரு வார்த்தைகூடக் கிடைக்கலையா?” என்றான் ஈஸ்வர் கிண்டல் தொனிக்க…

 

அவன் மார்பினில் தலை சாய்த்தவாறு… “ஹாஸ்பிடல்ல… அந்த நயன்தாரா பாப்பாவை பார்க்க போனோமே… அன்றைக்கு… அவள் அம்மாவை பார்க்கணும்னு சொல்லி அழுத போது… எப்படியாவது அவங்க அம்மாவை கண்டுபிடிக்கணும்னு தோணிச்சு… ஆனால்… அதை நீங்க இவளவு சீக்கிரம் செஞ்சுமுடிப்பீங்கன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல…”

 

“அதையும் தாண்டி… என்னென்னவோ செஞ்சிருக்கீங்க…”

 

“நீங்க உண்மையிலேயே ஹீரோதான்… ஹீரோ!” என்றாள் மலர் குரல் தழுதழுக்க…

 

“என்னோட அதிரடி அணிமா ராணி… இப்படிலாம் எமோஷனலா பேசினா… எனக்கு ரொம்ப டவுட் வருதே?”

 

“உண்மையிலேயே… நீ அணிமாமலர்தானா? இல்ல வேறு யாராவது மாறி வந்துட்டாங்களா?” என்று அதற்கும் ஈஸ்வர் அவளை வாற…

 

அதில் இயல்பு நிலைக்குத் திரும்பியவளாக மலர்… “ம்ஹும்… வேணா என் ஸ்டைலில் ஒரு கும்ஃபூ பன்ச் ஒண்ணு கொடுக்கட்டுமா… நான் யாருன்னு ப்ரூவ் பண்ண?” என்று அதிரடியாய் கேட்க…

 

“நீ செஞ்சாலும் செய்வ தாயே!” என்று பயந்தவன் போல் சென்ன ஈஸ்வர்… “ப்ரூவ் பண்ண நீ பன்ச்செல்லாம் கொடுக்க வேண்டாம்… நச்சுன்னு… ஒரு இச் கொடு… அது போதும் எனக்கு!” என்றான் கிறக்கமாக…

 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!