anima28
anima28
அணிமா 28
ஈஸ்வர் சுபாவிடம் கருணாகரனுடைய விருப்பத்தைச் சொன்ன பிறகு, ‘இந்த திருமணத்திற்குச் சம்மதம் சொன்னால் அது கருணாகரனுக்குத் துரோகம் இழைப்பது போல் ஆகிவிடுமோ?’ என்ற கேள்வி மனதில் எழுந்த்து சுபாவுக்கு.
தான் செய்து வைத்த செயல்களை எண்ணி குற்ற உணர்ச்சியில் உழன்றவள், அந்த எண்ணத்திலிருந்து மீளவே, ஈஸ்வரிடம் ஒரு மாத அவகாசம் கேட்டாள் அவள்.
அதன் பின், ‘உண்மையில் அசோக்கை எப்படி எதிர்கொள்வது, அவனிடமிருந்து எப்படி விலகுவது, அவள் சொன்னால் அவன் இதை அப்படியே எளிதாக விட்டுவிடுவானா?’ என்ற பலவித சந்தேகங்களுடன்தான் பெங்களூரூ திரும்பினாள் சுபா.
நிச்சயமாகக் கேள்விகேட்டு, அவளை குடைவான் என்று சுபா எதிர்பார்த்திருக்க, எதுவுமே நடக்காதது போன்று, அவள் அவனிடம் கோபம் கொண்டுதான் விலகிச்சென்றாள் என்பதையே உணராதவன் போன்று, வெகு இயல்பாகவே அவளை எதிர்கொண்டான் அசோக்.
மிகவும் குழம்பித்தான் போனாள் சுபா.
ஆனால் ஓரிரு தினங்களிலேயே ஒரு முடிவுக்கு வந்தவளாக, இந்த வாழ்க்கை முறையில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை அவனிடம் சொன்னவள், தனக்கு அவனிடம் ஏற்பட்ட உணர்வு காதலே இல்லை என்பதையும், அதைத் தொடரவும் தான் விரும்பவில்லை என்பதையும் தெளிவாக அவனிடம் விளகினாள்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டவன், எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், தோளைக் குலுக்கி, “உனக்கு விருப்பம் இல்லைனா… தென் ஓகே… ஐ ஓன்ட் கம்பல் யூ… லெட்ஸ் கன்டின்யூ அஸ் ஃப்ரெண்ட்ஸ்!” என்றவாறு, அதை இயல்பாக ஏற்றுக்கொண்டான் அசோக்.
‘இந்த கலாச்சார முறையில், யாருமே நட்போ அல்லது காதலோ, எந்த ஒரு பந்தத்தையும் ஆழமாக எடுத்துக்கொள்வதில்லை போலும்!’ என்று எண்ணியவன், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும் அவனுக்கு இது போல் பல சகவாசங்கள் இருப்பதால், அவன் இயல்பாக எடுத்துக்கொண்டான் என்றே நம்பினாள் சுபா.
ஆனால் அவன் இவளை வைத்து ஒரு வலை பின்னிக் காத்திருந்ததை, அந்த சமயத்தில் அவள் அறியாமல் போனது அவளுடைய முட்டாள்தனம்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அவன், இவளை எந்த விதத்திலும் அணுகவும் இல்லை, கடந்துபோன விஷயங்களைப் பற்றிப் பேசவும் இல்லை.
எனவே, அவன் பிரச்சினை செய்யாமல் நாகரிகமாக விலகிவிட்டான் என்ற முடிவுக்குச் சுபா வந்திருக்க, அவளுடைய குற்ற உணர்ச்சியும் கொஞ்சம் மறைந்திருந்தது.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் புத்தி கெட்டு, யோசனையின்றி தவறான வழியில் சென்றுவிட்ட போதிலும், சரியான தருணத்தில் அதை உணர்ந்ததால், கருணாகரனைத் திருமணம் செய்துகொள்வதில் தவறு ஒன்றும் இல்லை, என்ற முடிவுக்கு வந்திருந்தாள் சுபா.
கூடவே, அவளுடைய அப்பாவிடம் அவள் கேட்டிருந்த ஆறு மாத கால அவகாசம் முடிவடையவும், தான் வேலையிலிருந்து விலக விரும்புவதாக, நிறுவனத்தின் ‘ஹெச்.ஆர்’ பிரிவிற்கு மின்னஞ்சல் அனுப்ப, அவள் எதிர்பார்த்ததை விட விரைவாகவே அவளுடைய கோரிக்கை அந்த நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
அவர்களுடைய நிறுவன ஒப்பந்தப்படி, ஒரு மாதத்திற்குப் பிறகு அவள் விடுவிக்கப் படுவதாகத் தகவலும் வந்தது.
சனி ஞாயிறு விடுமுறையில் ஊருக்கு வந்த சுபா, ஈஸ்வரை அழைத்து கருணாகரனுடனான அவளது திருமணத்திற்கு, அவளுடைய விருப்பத்தைச் சொன்னாள் உண்மையான மகிழ்ச்சியுடன்.
ஈஸ்வர், விஷயத்தை குமார் மூலம் குடும்பத்தில் சொல்லவும், செங்கமலம் பாட்டி தொடங்கி, ஒவ்வொருவருக்கும் அதில், அளவில்லாத மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டானது.
பெரியவர்களெல்லாம் கூடிப் பேசி திருமணத்தை உறுதி செய்தனர்.
உள்ளாட்சி தேர்தல் காரணமாக, இரண்டு மாதத்திற்குப் பிறகு திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று கருணா சொல்லிவிட, அடுத்து வந்த வாரத்திலேயே எளிமையாக நிச்சயதாம்பூலம் செய்து, இரண்டு மாதத்திற்குப் பிறகு திருமணத்திற்கு நாள் குறித்தனர்.
கருணாகரனின் பெரியப்பா புவி அரசனே முன் நின்று அந்த நிச்சயதார்த்தத்தை நடத்தினர்.
அவர்களுடைய ஊரிலேயே, குலதெய்வ கோவிலில் எளிமையாகத் திருமணத்தை வைத்துக்கொண்டு, புவி அரசனுடைய அரசியல் அந்தஸ்துக்குத் தகுந்தவாறு, மிகப் பிரமாண்டமான வரவேற்பை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தனர்.
ஏதாவது பிரச்சினை வரலாம் என்ற பயத்தில்,திருமணம் சம்பந்தப்பட்ட எந்த செய்தியும், அவளது அலுவலக வட்டத்திற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டாள் சுபா.
நாட்கள் வேகமாகச் செல்ல, மேற்கொண்டு பிரச்சினை ஏதும் ஏற்பட வழியின்றி, வேலையிலிருந்து விலகி, ஊருக்கே வந்துவிட்டாள் அவள்.
கருணாகரன் தேர்தல் வேலைகளில் இரவு பகலாக ஈடுபடவேண்டிய சூழ்நிலையிலிருந்ததால், சுபாவுடன் நேரம் செலவழிப்பதோ, குறைந்தபட்சம் அவளுடன் தொலைப்பேசியில் பேசுவதோ கூட அவனுக்கு இயலாத காரியமாக இருந்தது.
ஈஸ்வரின் முதுகலை படிப்பு முடிந்துவிட்ட காரணத்தினால், மேற்படிப்பிற்காக விண்ணப்பித்திருந்தான்.
திருமணத்திற்கு அதிக நாட்கள் இருந்ததால், செலவுகளைச் சமாளிக்கவென, குமார் மூலம் கிடைத்த வாய்ப்பில், தெலுங்கு படம் ஒன்றில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஒரு மாத தொடர் படப்பிடிப்பிற்காக ஆந்திரா சென்றிருந்தான்.
திருமணத்திற்கு இன்னும் பதினைந்தே நாட்கள் என்ற நிலையில், ஊருக்குத் திருப்பிய ஈஸ்வர், திருமண வேலைகளில், முழுமையாக ஈடுபடத் தொடங்கினான்.
மேலும் அவன் அந்த படத்தில் நடித்ததற்காக அவன் வாங்கிய சம்பளத்தில், சுபா மற்றும் கருணா இருவருக்கும், தங்கத்தாலான இரண்டு ப்ரேஸ்லெட்களை வாங்கிவந்திருந்தான். பரந்தாமனின் அனுமதியுடன்.
அதே நேரம், அமைச்சர் இல்லத் திருமணம் என்பதால், நிச்சய தினத்தன்று கருணாவும் சுபாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன், முழு பக்க அழைப்பிதழ் ஒன்று அனைத்து பத்திரிகைகளிலும், புவி அரசனின் சார்பில், வெளியிடப்பட்டிருந்தது.
அதுவே மிகப்பெரிய ஆபத்திற்கும் வழிவகுத்தது!
திருமணத்திற்கு முந்தைய தினம், அவர்களுடைய வீட்டிலேயே, உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து, சுபாவிற்கு நலங்கு வைத்தனர்.
அதன்பின் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, கருணாவிற்கும் நலங்கு வைக்கப்பட, அவன் வாங்கி வந்திருந்த ப்ரேஸ்லெட்டை இருவருக்கும் அணிவித்தான் ஈஸ்வர்.
மகிழ்ச்சியும், சிரிப்பு, கிண்டல், கலாட்டா என, திருமணத்திற்கு முந்தைய அன்றைய சடங்குகள் இனிதே முடிந்தது.
உண்டு முடித்து, அனைவரும் ஓய்வாக உறங்கச்சென்ற பிறகு, அணிந்திருந்த எல்லா நகைகளையும் கழற்றி, அதன் பெட்டிகளில் வைத்து விட்டு, ஈஸ்வர் அணிவித்த பிரெஸ்ட்லெட்டை மட்டும் கழற்ற மனம் இல்லாமல், அதை மற்றொரு கையால் வருட, சுபாவின் மனதில், அண்ணனைப் பற்றிய எண்ணங்களே மேலோங்கி இருந்தது.
இந்தத் திருமணம் நல்ல முறையில் நடக்க, எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுச் செய்து கொண்டிருதான் ஈஸ்வர்.
ஒட்டி பிறந்த இரட்டையர்கள் தான், ஆனால் அவன் அவளைவிட அதிக உயரம் என்பதினால், ஈஸ்வரை யாராவது அண்ணன் என்று குறிப்பிட்டுவிட்டால், “அவன் எனக்கு அண்ணனெல்லாம் இல்ல. ஏன் என்னை அக்கான்னு சொல்ல மாட்டிங்களா?” என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்குப் போவாள் சுபா.
மென்பொருள் துறையில் வேலை செய்வதைக் காரணம் காட்டி, தனக்கென்று தனிப்பட்ட முறையில், உயர் ரக கைப்பேசி, மடிக் கணினி, மேலும் ஆடம்பர உடைகள், அழகு சாதனங்கள் என தனது தேவைகளை மட்டுமே நினைத்தவள், சகோதரனின் அக்கரையில் மனம் நெகிழ்ந்து, தனது படிப்பு செலவிற்குக் கூட தந்தையை வருத்த விரும்பாத அவனை எண்ணி மனம் வெட்கி போனாள்.
அவள் வெளியே எங்கேயாவது கிளம்பினாள் என்றால், அவன் ஊரில் இருக்கும் பட்சத்தில், அவளுக்குத் துணையாகக் கிளம்பிவிடுவான் ஈஸ்வர்.
அது அவளை அதிகம் எரிச்சல் படுத்தும் செயலகவே இருக்கும்.
“ஏன் எனக்கு பாடிகார்ட் வேலை எல்லாம் பார்க்கணுமா? தனியா விட்டால், அப்படியே எங்கேயாவது போய்விடுவேனா?” என அவனிடம் காய்வாள்.
அதற்கு “காலம் கெட்டு கிடக்கு சுபா… இப்படி உன்னைத் தனியா விட வேண்டிய அவசியம் என்ன? நான் உனக்குத் துணையா வந்தால் உனக்கு என்ன பிரச்சினை?” என்று கோபமாகவே அவன் பதில் சொன்னாலும், அதில் அவனது அக்கறையே மேலோங்கி இருக்கும்.
அவன் அவளுடன் செல்லும் பட்சத்தில், அவளைத் தலை நிமிர்ந்தது பார்க்கவே அஞ்சி, விலகிச் செல்லும் ஆடவர்களைப் பார்த்திருக்கிறாள் அவள்.
இருவருக்குமே ஒரே வயதுதான், ஆனாலும் அவனுடைய மனப் பக்குவம், குடும்ப அக்கறை எல்லாவற்றையும் பார்க்கும் பொழுது, ஈஸ்வர் அவளை விட எங்கோ உயரத்தில் இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. அந்த கணம், ஈஸ்வர் வெறும் அண்ணனாக இல்லை, மற்றொரு தந்தையாகவே தோன்றினான் அவளுக்கு.
‘அவனிடம் மனம் விட்டுப் பேசியிருந்தால், தேவை இல்லாத குற்ற உணர்ச்சியில் சிக்கியிருக்கமாட்டோமே!’ என்று அவளது மனது அவளைக் குத்திக் காண்பிக்க, அப்பொழுதே கடந்த ஆறு மாதங்களில் நடந்தவை எதையும் மறைக்காமல், அவனிடம் சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியது.
இப்படி பலவாறான சிந்தனையில் அவள் இருக்கும் சமயம், சுபாவின் கைப்பேசி, எதோ குருந்தகவல் வந்திருப்பதற்கான ஒலியை எழுப்ப, அதை எடுத்துப் பார்த்தாள்.
அதில் அவளுக்குத் தான் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலைப் பார்க்கச்சொல்லி அசோக் ஒரு குறுந்தகவலை அனுப்பியிருந்தான்.
அவளுடைய கைப்பேசியிலேயே அதற்கான வசதி இருந்ததால், அதை அவசரமாகச் சுபா பார்க்க, அசோக்குடன் அவள் நெருக்கமாக இருப்பது போன்ற சில புகைப்படங்களை அதில் இணைத்திருந்தான் அவன்.
அனைத்தும் அவனுடன் அவள் இணக்கமாக இருந்த சமயம், பார்ட்டிகளில், மால்களில் என்று எடுக்கப்பட்டவை. ஆனால் அவை அனைத்தும் அவளுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டிருந்தன.
அப்படியே நிலை குலைந்து, பயத்தில் முகம் வெளிரிப் போனாள் சுபா!
அதிலிருந்து அவள் மீள்வதற்குள்ளாகவே, அவளுடைய மடிக் கணினி, பாஸ்போர்ட் மற்றும் கல்வி சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு, உடனே அவளை வீட்டை விட்டு வெளியில் வரச் சொல்லி அடுத்த குறுஞ்செய்தியும் அவனிடமிருந்து வந்த்து.
அதில் பதறியவளாக வேறு வழி இன்றி, பீரோவை குடைந்து, அவன் சொன்னவற்றை எடுத்துக்கொண்டு, அதைக் கேள்வியுடன் பார்த்துக்கொண்டிருந்த ஜீவிதவையும் புறக்கணித்துவிட்டு, கைப்பேசியை குடைந்தவாறு, சிக்னலுக்காக வெளியே செல்வதைப் போல,வீட்டை விட்டு வெளியேறி வந்தாள் சுபா.
அவர்கள் வீட்டை விட்டு சற்று தள்ளி, ஒரு புதரில் மறைத்தாற்போன்று, அவன் வந்திருந்த கரை நிறுத்திவிட்டு சுபாவிற்காகக் காத்திருந்தான் அசோக்.
பயத்தில் நடுங்கியவாறு, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே, அவன் நின்றிருந்த இடத்திற்கு வந்தவள், “நான்தான் எல்லாத்தையும் முதலிலேயே சொல்லிட்டேனே! நீங்களும் ஒதுங்கித்தானே போனீங்க!? இப்ப திடீர்னு வந்து ஏன் இப்படி பிரச்சினை செய்யறீங்க?” என்று அவனிடம் நடுக்கத்துடன் கேட்டாள் சுபா.
அவளது மனநிலையை நன்கு உணர்ந்தவனாக, “என்னை பார்த்தல் எப்படி தோணுது உனக்கு? நீ பிடிக்கல… வேண்டாம்னு சொன்னா… அப்படியே விட்டுட்டு போயிடுவேன்னு நினைச்சியா?!
யாரோ என்னைப் பத்தி தப்பா சொன்னதை கேட்டுட்டு, நீ ஏதோ புரியாம பேசுற… கொஞ்ச நாள் விட்டு பிடிக்கலாம்னு பார்த்தால், இப்படி கல்யாணம் வரைக்கும் வந்து நிக்கற!
பணத்தை பார்த்து, உன்னோட புத்தி கெட்டு போச்சா?” என்று சாதுரியமாக அவளைக் குற்றம் சாட்டியவன் தொடர்ந்து,
“நீ எப்படி வேணா இருந்துட்டு போ! என்னால உன்னை மறக்க முடியாது! உன்னை விடவும் முடியாது!
ஏன்னா அந்த அளவுக்கு நான் உன்னை லவ் பண்றேன்!
நீ இப்ப… இந்த நொடி… இப்படியே என்னுடன் கிளம்பி வரலன்னா… இந்த போட்டோஸ் கூட சேர்த்து, இன்னும் மோசமான போட்டோஸ்லாம் உங்க வீட்டுல இருக்கறவங்க எல்லாருக்கும் ஹார்ட் காப்பியா அனுப்பி வைப்பேன்.
பிறகு உங்க வீட்டுல இருக்கறவங்களோட நிலைமையை நினைச்சு பாரு!
உன்னை கல்யாணம் பண்ணிகிட்டானா, அந்த மினிஸ்டர் பையனோட நிலைமையை நினைச்சு பாரு!
அதுக்கு பிறகு அவன் உன்கூட நல்ல படியா குடும்பம் நடத்துவான்னா நினைக்கிற!?
அதைவிட நாம இப்படியே போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னா, உங்க வீட்டை பொறுத்தவரைக்கும் பொண்ணு ஓடி போயிட்டா என்கிற ஒரே துன்பத்தோட முடிஞ்சிரும்!” என்று அவளை மிரட்டும் விதமாக சொல்லி முடித்தான் அசோக்.
பயத்தில் கைகள் சில்லிட, முகம் வியர்த்துப் பேச முடியாமல் சில நொடிகளைக் கடந்தவள், சிறிதே தைரியம் வரப்பெற்றவளாக “வேற போட்டோஸ் இருக்க சான்ஸே இல்ல! நீங்க பொய் சொல்றீங்க” என்று அவள் குரல் நடுங்கச் சொல்லவும்…
கொஞ்சமும் தயங்காமல், “ஆமாம்! இல்லைதான்! ஆனா நான் பக்காவா மார்பிங் செஞ்சு ரெடி பண்ணி வெச்சிருக்கேன்!
இந்த போட்டோஸ்லாம் உண்மைன்னா, அதையும் உண்மைன்னுதான் நம்புவாங்க!” என்றவன், அவனுடைய கைப்பேசியின் திரையைக் காண்பிக்க, அதில் அவன் போலியாக மிக மோசமாக உருவாக்கிவைத்திருந்த புகைப்படங்களைப் பார்த்தவள், கதி கலங்கிப் போனாள்.
முதலில் அவன் அனுப்பியிருந்த ஒரு சில புகைப்படங்களே போதும், அவளுடைய குடும்பத்தினரைக் கலங்க வைக்க.
மேலும் அவன் இப்பொழுது காண்பித்த புகைப்படங்களை அவளுடைய பெற்றோர்கள் பார்க்க நேர்ந்தால், அடுத்த நொடியே அவர்களுடைய உயிர் பிரிந்துவிடும் என்பது உண்மை.
“என்ன… இப்ப என் கூட வருவ இல்ல?” கொஞ்சமும் இளக்கமின்றி, அவள் வந்தே தீரவேண்டும் என்ற பிடிவாதத்துடன் ஒலித்தது அவனது குரல்.
செய்வதறியாமல் அவள் தவித்துக்கொண்டிருக்க, சரியாக அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தை கடந்து மிதமான வேகத்தில், பைக்கில் சென்றுகொண்டிருந்தான் கைலாஷ்.
வண்டியில் ஹெட்லைட் வெளிச்சத்தில் அவர்களை அவன் நன்றாகப் பார்த்துக்கொண்டே சென்றது, திகிலைக் கிளப்பியது சுபாவிற்கு.
மேலும் மேலும் பயம் கூடிக்கொண்டே போக, மூச்சடைப்பதுபோன்று தோன்றியது அவளுக்கு. உடல் துவண்டு மயக்க நிலைக்குச் சென்றுகொண்டிருந்தாள் அவள்.
அந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு, அவளது கையை பற்றி, முன் பக்க இருக்கையில் அவளைத் தள்ளிவிட்டு, சுற்றி வந்து காரில் ஏறிய அசோக், அதை வேகமாகக் கிளப்பிக்கொண்டு போனான்.
வாகனம், வேகம் எடுத்தபின்தான், நிலைமையின் தீவிரம் புரிந்தது சுபாவுக்கு. அதன் பின் அவளது கெஞ்சல்களுக்கும், மிஞ்சல்களுக்கும் அவனிடம் எந்தவித எதிர்வினையும் இல்லாமல் போனது.
சலனமே இல்லாமல், அவளிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல், வண்டியைச் செலுத்தினான் அசோக்.