Anna Sweety’s Kadhalaam Paingili 8

Anna Sweety’s Kadhalaam Paingili 8

 

வேண்டுமென்றே புல் வெளியில் போய் துள்ளி விழுந்த விசாகன் “டேய் சடையா!!!” என உற்சாக கூவல் செய்து முடிக்கும் முன்னும், படுத்திருந்த அவனை தன் நாலு காலாலும் பிடித்தபடி, விசாகனோடு சேர்ந்து உருளாத குறையாக விளையாடத் துவங்கி இருந்தது அந்த கறுப்பு நிற ஜெர்மன் செப்பேர்ட். லிசியின் வீட்டு நாய்.

மிஸ்டர்.சடையர் வந்ததும் வராததுமாக விசாகன் தோளில் கால் போட்டு கூப்பிட்டதே இப்படி கொட்டமடிக்கத்தானே!

மிக மிகவும் நெருங்கியவர்களிடம் மட்டுமே அது அப்படி விளையாடும் என வாணிக்கும் தெரியுமென்றாலும், இதற்குள் தெறித்துப் போய் ஒரு ஓரமாய் நின்றிருந்த அவள்,

“ச்சு ச்சு விடு அவங்கள,” என அந்த சடையனிடமும், 

“கண்ல எங்கயாவது நகம் பட்டுடப் போகுது” என விசாகனிடமும் பரிதவித்தாள்.

ஹ ஹா வாணிப் பொண்ணு பாம்ப கூட கையால பிடிக்கும், அவ்வளவு தைரியசாலிதான், ஆன நாய்னா மட்டும் நாலு பக்கமுமே திறந்தவெளி மட்டும்தான் இருக்ற நட்ட நடு ரோட்ல கூட தலைமறைவாகிடும். பயம்!! பயம்!!

“அதான் நான் அவன…” என எதோ சொல்லியபடி இவள் புறம் திரும்பிய விசாகன் அப்போதுதான் அவள் பயத்தைப் பார்த்தவன்,

“ஹேய் என்னதிது ஒரு சின்னப் பையனப் பார்த்து இவ்ளவு பயப்படுற?” என ஆச்சர்யப் பட,

அதற்குள் என்ன நினைத்ததோ மிஸ்டர். சடையர் இவளை நோக்கி வந்தவர், இவள் முன்னாக அரை வட்டமாக துறுதுறு என சுத்தி சுத்தி நடந்தபடி வாலை சுழற்றி சுழற்றி ஆட்டியது.

வெட்டு வெட்டு என சாப்பாடை வெட்டப் போறவன் அதுக்கு முன்னால சாப்பாடை பார்க்கவும் ரெண்டு கையையும் தேய்த்துக்கொள்ளும் அதே வகை ஆயத்தமாக மட்டுமே அது வாணிக்குப் பட்டது.

“ஹேய் பயப்படாத, அவன் உன் கூட ஃப்ரெண்டாகதான் கேட்கிறான்” என விசாகன் சொல்வதெல்லாம் இவள் காதில் விழவே இல்லை.

“ஐயோ! வே… வேண்டாம்” இவள் மெல்லியமாய் அலறிக் கொண்டிருக்கும் போதே,

ஜிவ் என ஒரு தாவு, இப்போது வாணியின் இரு தோளிலும் தனது முன்னங்கால்களில் ஒவ்வொன்றை ஊன்றியபடி நின்றிருந்தார் அந்த சடையர்.

“ஹ..ஹ..ஹ.. ஹ!!!” என்ற மூச்சின் சத்ததுடன்,

இவள் மூக்குக்கு மிக அருகில் அதன் நாக்கு தொங்க, வால் சுழல, சுழல, அது நின்ற கோலத்தை பார்க்க எப்படி இருக்கிறதாம் இவளுக்கு?

‘வீல்ல்ல்ல்ல்ல்’ என கத்தி இருப்பாள்தான். ஆனால் அதற்குள் இவளுக்கு மிக அருகில் வந்த விசாகன்,

“அவனோட முன்னங்கால் ரெண்டையும் பிடிச்சு கைல எடுத்துக்கணும்” என்றபடி அவள் மீதிருந்த சடையனின் கால்களை பற்றி எடுத்தவன், 

“அப்படின்னாலே கீழ ஊன்றி இருக்கிற மீதி ரெண்டு காலை அவன் பேலன்ஸ் போய்டக் கூடாதுன்னு எடுக்க மாட்டான், சோ நம்ம மேல நகம் படாது. அதோட சடையனுக்கு வீட்ல நெயில் எல்லாம் பக்காவா வெட்டிதான் வச்சுருப்பாங்க” என சொல்லிக்கொண்டே, பின்னிருந்து சடையனை கெட்டியாய் அணைத்து அள்ளிக் கொண்டு,

“வாடா அக்கா ஓவரா பயப்படுறாடா” என்றபடி கிளம்பிப் போனான்.

“என்னது அதுக்கு நான் அக்காவா?” இங்க இருந்து இவள் விரைப்பாய் கத்த,

“பின்னே நீ என் ஃப்ரெண்ட்னா, சடையனுக்கு அக்காவாதான இருக்க முடியும்” என சற்று தள்ளி இருந்து கேட்கிறது விசாகனின் குரல்.

“ஹலோ இதெல்லாம் அநியாயமான ஈக்வேஷன், ஐ கம்ப்ளீட்லி டிஸக்ரி” இவள் கன்னா பின்னாவென முறுக்க,

போன வேகத்தில் திரும்ப வந்திருந்தான் விசாகன் “ஐயையோ என்ன நீ, உனக்கு கொஞ்சமாவது டாக் மேல உள்ள பயம் போயாகணுமே! பின்னால என் வீட்ல கண்டிப்பா நாலு நாயாவது இருக்குமே, வீட்டுக்கு வர்றப்பலாம் இப்படி அட்டென்ஷன்லயா நிப்ப?” என்றவன்,

அதற்குள் இன்னுமே அவன் கைகளுக்குள் இருந்த திருவாளர் சடைய சக்ரவர்த்திகள், குறுகுறுவென வாணியைப் பார்த்தபடி, வாலை சுழற்றிக் கொண்டு மீண்டுமாய் அவள் மீது தன் அதீத கவனத்தை குவிக்கவும்,

“அப்றமா இதப் பத்திப் பேசுவோம், சடையனுக்கு எப்படி அக்காவாகிறதுன்னு அப்ப உனக்கு சொல்லித்தரேன்” என்றுவிட்டு விசாகன் திரும்பிப் போனான்.

‘என்னது நாய்க்கு அக்காவாக சொல்லித் தருவானாமா?!! டேய் என்னங்கடா இது!!’

கல்லூரியில் இன்று இத்தனை நடந்து போனதே! போலீஸ் வழக்கு வேறு! ஆக கல்லூரி நிர்வாகியான லிசியின் தந்தை அதாவது வாணியின் தாய்மாமா சௌந்தர் கல்லூரிக்கு வந்திருந்தார்.

வரும் போது, என்னதான் செக்யூரிட்டி அது இது என ஆட்களை வேலைக்கு அமர்த்தி இருந்தாலும், தன் வீட்டு பெண் பிள்ளைகளோடு தங்களது நாயும் இருப்பது இன்னும் நல்லதாகப் பட சடையனையும் கொண்டு வந்திருந்தார்.

மாமா அங்கு கல்லூரியை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போதே, விசாகனை தேடி விழுந்தடித்து ஓடி வந்திருக்கிறது சடையன்.

நாய்ட்ட கூட சார்க்கு ஃபேன் கிளப் இருக்கும் போலவே என அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டேதான் சமைத்தாள் வாணி.

ஆம் மாமா உடல்நிலைக்கு சாப்பாடு விஷயத்தில் எண்ணெய் உப்பு என எல்லாவற்றிலும் கவனம் பார்க்க வேண்டி இருக்கும். அதனால் பொதுவாக வீட்டு சாப்பாடுதான் அவருக்கு.

சரி இப்படி அடித்து பிடித்து ஓடி வந்திருப்பவரை இன்று ஏன் ஹோட்டலுக்கு அனுப்ப வேண்டும் என இவளே சமைப்பது என முடிவு செய்தாள் வாணி.

அதோடு மாமா இன்று கிளம்பிச் செல்லும் வரையுமே விசாகன் இங்குதான் இருப்பான் என்றும் இவளுக்கு தெரிந்ததால், அவனுக்கும் சேர்த்து சமைப்பது படு உற்சாகமாக இருந்தது அவளுக்கு.

சாப்பாட்டுக்காக பிடித்ததாமே இவளை!! அவன் விளையாட்டுக்குச் சொல்கிறான், அதுவும் அவன் சொல்லிக் கொண்டு வந்த காரியங்களை கேட்டு இவள் கண்ணில் நீர் கோர்த்துவிட்டதை உணரவும் இவளை சிரிக்க வைக்க சொல்கிறான் என அப்போதே இவளுக்குத் தெரியும்.

ஆனால் இவளுக்கு விசாகன் எதை சொல்ல வந்துவிட்டு இப்படி பேச்சை பாதியில் நிறுத்தி விட்டான் என்பது புரியவில்லை.

இரவில் இங்கு சாப்பிடுவான் என்ற வகையில் அப்பொழுது பார்க்கும் போது சொல்ல வந்ததை சொல்லிவிடுவானாக இருக்கும், இல்லாவிட்டாலும் இவளாவது கேட்டுக் கொள்ள வேண்டும்.

நினைத்தவாறே மும்முரமாக சமையலில் ஈடுபட்டாள் வாணி.

சௌந்தர் மாமா இரவில் சப்பாத்தி மட்டும்தான் சாப்பிடுபவர், விசாகனோ கல்யாண விருந்து போலல்லவா ஆசைப்பட்டான்!

இரவு நேரத்தில் சாதம் சாப்பிடக் கொடுக்கவா என முதலில் குழப்பமாய் இருந்தாலும், திரும்பவும் எப்போது அவனுக்கு இப்படி சாப்பிடும் வாய்ப்பு கிடைக்குமோ என்ற கேள்வியில்,

மாமாவுக்கு சப்பாத்தியும், விசாகனுக்கு அவன் கேட்ட வகையில் சொதி, இஞ்சி பச்சடி என சைவ சமையலையும் செய்து வைத்தாள்.

இதில் இவள் வாழை இலை வெட்டவென அருகில் நிற்கும் வாழை மரத்திடம் சென்றால், அதன் அருகில் எங்கோ நின்று மொபைலில் பேசிக் கொண்டிருக்கும் லிசியின் குரல் காதில் விழுகுறது.

“முதல் நாள் வாணிக்கும்தான் என் வ்யூஸ் ஒத்துப் போகல, என் மேல மூட் அவ்ட் வேற, ஆனாலும் சாப்பாடு போல அடிப்படை தேவையான விஷயம்னு வர்றப்ப எப்படி நடந்துக்கிட்டா? என் அம்மாவுக்கும் என் கூட வ்யூஸ்தான ஒத்துப் போகல, இந்த வாணி போல என் அம்மா இருந்திருக்கலாமேன்னு இருக்குன்னு சொல்லிட்டு இருக்கான்” என விசாகனைப் பற்றி ப்ரேமிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் லிசி.

இதுதான் விசாகன் இவளிடம் சொல்ல முனைந்த ‘உன் மாதிரி என் அம்மாவும் மெச்சூர்டா இருந்திருக்கலாம்’ என்பதின் முழு விளக்கம் என்பதும்,

முதல் நாள் அவனை இவள் சாப்பிடச் சொன்னபோது அவன் பார்த்த பார்வையின் பொருள் என்பதும் இவளுக்கு புரிகிறதுதானே! வாணிக்கு தான் எப்படி உணர்கிறோம் என்று மட்டும்தான் புரியவில்லை.

யார் மீதும் உரிமை எடுத்து பழகும் உறவு நிலைக்குள் செல்ல விருப்பமற்றவள் வாணி. ஆனால் காதல் என கண்டுகொள்ளும் முன்பாக கூட விசாகனிடம் அது வசப்பட இந்த விஷயமும் காரணமாய் இருக்கலாம்.

இதில் உணவு பரிமாறும் வேளையில், முதலில் மாமாவை நினைத்து கொஞ்சம் தயங்கி தயங்கிதான் பரிமாறினாள் இவள். இலை போட்டு இத்தனை வகை பதார்த்தங்களோடு இத்தனை மணிக்கு இவள் அவனுக்கு பரிமாறினால் எப்படி எடுத்துக்கொள்வாரோ மாமா?

ஆனால் இவளுக்கு தயக்கமே தேவையில்லை என்ற வகையில் மாமாவோ,

“என்ன விசாகா, எம்ஃபார்ம் படிக்கிறதுக்கு பதில் நம்ம வாணி இப்பவே ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சுதுன்னா, மூனு வருஷத்துக்குள்ள முப்பது இடத்திலயாவது செயின் ரெஸ்ட்டரண்ட் திறந்துடலாம்தானே…” என கலகலப்பாகவே சாப்பாட்டை துவக்கினார்.

விசாகனோ வந்து அமரும் போது வைக்கப்பட்டிருந்த இலையைப் பார்த்ததும் வண்ணங்கள் நிரம்பிய வெண்ணிற பார்வை ஒன்றை மென்மையாய் இவள் புறம் வெளியிட்டவன், தன் வலக்கை விரலிலிருந்த மோதிரத்தை கழற்றி இலைக்கு முன் வைத்துவிட்டு சாப்பாட்டுக்குள் சரணாகதி.

இங்கு வீட்டுப் பெரியவர்கள் மற்றும் மனதுக்கு மரியாதைக்குரியவர்கள் முன்னிலையில் வாலிப ஆணும் பெண்ணும் சகோதர முறை இருந்தாலொழிய பேசிக் கொள்வது கிடையாது என்பது காலகாலமாய் கடைபிடிக்கப்படும் கலாச்சாரமாயிற்றே!

உணர்வுக்குள் உட்கார்ந்திருக்கிறதே இவளுக்கும் அது. அவனோடு சின்னதாய் கூட எதையும் சொல்ல தடுமாறுகிறதே இப்போது.

நிதானமாய் அவன் சாப்பிட்ட விதத்தை பார்க்கவே ஏதோ படு நிறைவாய் இருக்கிறது வாணிக்கு. இருந்தாலும், அவன் ஓரிரு வார்த்தையாவது சொன்னால் நன்றாக இருக்குமே என்றும் ஏங்கியது ஒரு மனது.

சற்று நேரம் மாமாதான் கலகலத்துக் கொண்டிருந்தவர் “என்ன விசாகா, தலைய நிமிரவே இல்ல, உங்க அக்காவும் நீயுமா சமச்சு ஒரு பார்ட்டி வச்சீங்களே அது நியாபகம் வந்துட்டோ” என வம்பிழுத்தார்.

“ஐயோ அப்பா” என சிணுங்கலாய் இப்போது இடையிட்டது லிசி.

“உனக்கு தெரியும்தானே வாணிமா உங்க அண்ணி ப்ராஜக்டுக்குன்னு லண்டன்ல போய் இருந்தாளே, அப்ப பி ஜி படிக்கிறேன்னு இவனும் அங்கதான இருந்தான்…?! ரெண்டு பேருமா சமைக்கிறேன் பேர்வழின்னு ஜெயிலுக்கு போகப் பார்த்தாங்க” அவர் இன்னுமே பெரிதாய் சிரிக்க,

இதற்குள் தன் அப்பாவிற்கு செல்லமாய் ஒரு அடி வைத்திருந்த லிசி, “அதெல்லாம் ஒன்னுமில்ல, அந்த ஊர்காரனுக்கு நம்ம ஊர் சாப்பாட்டோட அருமை தெரியல” என தன் பக்க நியாயத்தை சொல்ல கோதாவில் இறங்கினாள்.

“அம்மாட்ட ரெசிப்பி கேட்டுதான் சமச்சேன் வாணி. என்ன கசகசா இன்னும் இது போல ரெண்டு மூனு விஷயம் எனக்கு அங்க கிடைக்கல, சரின்னு அதுக்கு பதிலா அது போல சில சிந்தெடிக் ஃப்ளேவர் ஆட் செய்தோம்” என லிசி தங்களது ‘மிஷன் சமையல் இம்பாசிபிள்’ கதையை துவங்க,

இங்கு புரையேறியது விசாகனுக்கு.

அவனுக்கு அடுத்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மாமா அவனது தலையை தட்ட, தண்ணீரை அவன் புறமாக நகர்த்தியபடியே லிசியோ,

“டேய் கடுப்பேத்தாத, நிஜமாவே நாம நல்லாத்தான்டா செய்தோம், எல்லாம் அந்த ஃப்ளேவரோட ஃபால்ட்தான்” என அவனுக்கு மிரட்டலாய் ஒரு ஆறுதல் சொல்லிவிட்டு,

“ஆஃப்ரிக்கன் பசங்கதான் அந்த ஃப்ளேவரும் நல்லா இருக்கும்னு சொன்னாங்க வாணி” என சற்றே பரிதாப தொனியில் மீண்டும் கதையை துவங்கினாள்.

“ஆனா அதை சேர்த்துட்டு பார்த்தா, நம்ம ஊர் சிக்கன் க்ரேவிக்கு அந்த ஃப்ளேவர்ஸ் ஒத்துப் போகல போல, சொன்ன ஆஃப்ரிக்காகாரியே வாந்தி செய்துட்டான்னா பார்த்துக்கோ.”

‘ஹான்!!!!’ .

“சாப்பாட்டுல இருந்து செம்ம மோசமான ஸ்மெல், என் ஃப்ரெண்ட் ராகிணி மயங்கியே விழுந்துட்டா, வீட்டுக்குள்ள யாராலும் நிக்கவே முடியல.”

‘ஹ ஹ ஹா’

“சரின்னு அவசர அவசரமா இந்த விசாகன்தான் அத டிஸ்கார்ட் செய்றேன்னு எடுத்துட்டு வெளிய போனான். வீட்டுல உள்ள ட்ஸ்ட்பின்ல போட்டா மட்டும் நாத்தம் எப்படி செட்டில் ஆகும்?”

‘அதானே!!’

“ஆனா வெளிய போன இவன் மேல இருந்து வந்த ஸ்மெல்ல எல்லோரும் ஒரு மாதிரி திரும்பிப் பார்க்காங்கன்னு திரும்பி வந்துட்டு மாடு.”

‘ஐயோ பாவம்’

“வந்து அதை டஸ்ட்பின்ல போட்டு வீட்டு மொட்டை மாடில போய் வச்சுட்டோம்… ஏன்னா வீட்டுக்கு அன்னைக்கு நம்ம ஊர் ஸ்டூடண்ட்ஸ் சிலர சாப்ட வரச் சொல்லி இருந்தோம். அவங்க போன பிறகு இதை என்ன செய்யலாம்னு பார்க்கலாம்னு ஐடியா.”

‘ஓ!!!’

“ஆனா கொஞ்ச நேரத்துல வீட்ல போலீஸ் வந்து நிக்குது. லூசுப் போலீஸ்!! “

‘ஒய் ஒய் ஒய்??????’

“அந்த வீடு அங்க விம்பிள்டென் டென்னிஸ் மேட்ச் நடக்குமே அந்த ஸ்டேடியத்துக்கு அடுத்த அபார்ட்மென்ட்ஸ். அப்ப மேட்ச் வேற நடந்துட்டு இருக்க, இங்க மாடியில இருந்து வர்ற ஸ்மெல்ல அங்க க்ரவ்ட் டிஸ்டர்ப் ஆகிட்டாம். ரொம்பயும்தான் சீன்…”

‘ஈர்க்…’ ‘ஐயோ மம்மீ நான் சத்தமா சிரிச்சுட கூடாதே!’

“இதுல என்கொயரிக்கு வந்த போலீஸ் ஒரிஜினல் அரக் கிறுக்கு போல, இது கெமிக்கல் வெப்பனா இருக்குமோ? இது சாப்பாடு ஐட்டம் போலவே இல்ல, எங்க பீபுள் கூடி இருக்ற இடத்தில் வெளிநாட்டுக்காரங்க நீங்க மொத்தமா சேர்ந்து என்ன செய்யப் பார்க்கிறீங்கன்னு எக்கசக்க கேள்வி வேற..” லிசி சட சடவென பொரிய பொரிய சலித்துக் கொள்ள,

இங்கோ மாமா வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார். விசாகனோ வந்த சிரிப்பை அடக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான்.

“அது கூட பிரவாயில்ல வாணிமா” என்றபடி இப்போது மாமா தன் மொபைலில் தேடி ஒரு ஃபோட்டோவைக் காண்பித்தபடி,

“அந்த ராகிணி அப்பா மெனக்கெட்டு இந்த ஃபோட்டோவ அனுப்பி, இத சாப்பாடு ஐட்டம்னு நம்ம பிள்ளைங்க ஏன் போலீஸ்ட்ட சொன்னாங்க, வேற எதாச்சும் சொல்லி இருந்தா கூட நம்பி இருப்பானே வெள்ளக்காரன்னு ஒரு கேள்வி கேட்டார் பார்” என்க,

குழப்பி வைத்த தார் போல இருந்த அதைப் பார்க்கவும் அதுவரைக்கும் அடைத்து வைத்திருந்த அத்தனை சிரிப்பும் வாணியிடமிருந்து பீறிட்டு பாய்ந்தது.

“ஹ ஹா ஹா… சாரி லிசி ரியலி சாரி, முடில” இவள்தான்.

இதையெல்லாம் லிசி எங்கு கேட்டுக் கொண்டிருக்கிறாளாம்?!

“ஓகோ அப்ப இந்த ஃபோட்டோவ ப்ரேம்க்கு கொடுத்த கல்ப்ரிட் நீங்கதானா?” தன் அப்பா மீது பாயாத குறையாக அவள்.

“பின்ன பொண்ணோட முதல் சமையல் எல்லா அப்பாவுக்கும் ஸ்வீட் மெமரிதான், அதே டைம் மாப்ள பையன் மேலயும் நமக்கு அக்கறை இருக்கணும்ல,

அதான் அவர் ஆசையா பொண்ணு கேட்கவும், இத காமிச்சு, நீங்க ஹோட்டல் பிசினசுல இருக்றதால உங்களையும் பார்த்துகிட்டு என் பொண்ணையும் எந்த ஆபத்தும் வராம பாத்துப்பீங்கன்னு நம்பிதான் பொண்ணு தரேன்னு சொல்லி வச்சேன், அது தப்பா?” என்றார் மாமா.

இந்த சௌந்தர் மாமா எப்போதும் இப்படித்தான். அவர் இருக்கும் இடம் எப்போதும் இப்படி கலகலவெனதான் இருக்கும்.

இவளுக்கு சிறு வயதிலிருந்து அவர் மீது ஒரு மனத்தாங்கல் உண்டு. அவருடைய சில சுபாவம் இவளுக்கு பிடிக்காது. லிசி மீது இவளுக்கும் இருக்கு நல்லெண்ணம் அத்தனை தூரம் மாமா மீது கிடையாதுதான். இருந்தாலும் அவரது இந்த கலகலப்பு எப்போதுமே பிடிக்கும்.

அது மாத்திரமல்ல அவர் விசாகனை மனதளவில் எங்கு வைத்திருக்கிறார் என்பதும் இப்போது வெகுவாக பிடித்திருக்கிறது வாணிக்கு.

லிசி லண்டனில் படிக்கும் போது அவள் கல்லூரி டார்மெட்ரியில் தங்கி இருந்தாள் என வாணிக்குத் தெரியும். விசாகன்தான் அப்படியானால் வீடெடுத்து இருந்திருக்க வேண்டும்.

என்னதான் மற்ற பெண்களுடன்தான் என்றாலும், அவன் வீட்டுக்கு லிசியை சென்று வர மாமா அனுமதித்திருக்கிறார், அதையும் எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லி சிரிக்கிறார் என்றால், விசாகனை மனதளவில் கூட தன் வீட்டில் ஒருவனாக எண்ணுகிறார் என்றுதானே பொருள் எனப் புரிகிறது வாணிக்கு. அப்படி இல்லாமலா இங்கு கல்லூரியில் அவன் வைத்ததுதான் வரிசை என்றிருக்கிறது?!

இதே நேரம் “சின்னதிலயே நம்ம வாணிய விசாகனுக்கு தெரியும்னு இப்ப வரைக்கும் நினச்சுட்டு இருந்தேன்” என விசாரித்தார் மாமா. இவர்கள் இருவரும் அவர் முன் பேசிக் கொள்ளவில்லை என்பதை இயல்பு என அசட்டை செய்யவில்லை அவர்.

“வாணி இங்க பாபநாசத்துல நம்ம வீடிருந்தப்ப ஒரு டைம் வந்திருந்தால்லப்பா, அப்ப மட்டும்தான் ரெண்டு பேரும் பார்த்திருப்பாங்களா இருக்கும்” என லிசிதான் அதற்கு பதில் கொடுத்தாள்.

“அது அவ 6த் முடிச்ச ஹாலிடேஸ்னு நினைக்கிறேன், சின்ன வயசுன்றதால நியாபகம் இல்ல போல, அதோட அவ கதை புக்கே கதின்னு கிடப்பா” லிசி சொல்ல,

“ஓ” என மாமா அதை ஏற்றுக் கொள்ளும் போதே,

‘ஹான்!!! அப்பவே இவன தெரியுமா? எப்படி இருந்தான் இவன்? என அவசர அவசரமாக அப்போதிருந்த விசாகனை வாணி கற்பனை செய்ய முயன்றாள் என்றால், விசாகனோ,

“என்னது? அந்த சாப்ட்ட கைய கூட கழுவாம மணிக்கணக்கா உட்காந்திருக்குமே அந்த லேசி கேளா இது…? நோ நான் நம்ப மாட்டேன்” என அறிக்கையிட்டான். என்ன ஒரு நக்கல் இருந்தது தெரியுமா அதில்? அவனுக்கும் அப்போதுதான் அந்த சிறு வயது வாணியை நியாபகம் வந்திருந்தது.

முழு மொத்தமாய் முறைத்தாள் வாணி. “ஹலோ கைல எடுத்த புக்க முடிக்காம எழும்புறதுல்லன்றதுக்கு பேர் சோம்பேறித்தனம் இல்ல, பைதவே இவ்ளவு நேரம் படிச்சல்ல எனக்கு கதை சொல்லேன்னு படிக்காமலே கதை கேட்ட நீங்கதான் சோம்பேறி” இவளது பதில் இப்படி வந்தது.

“ஏன்? ஏன் சொல்ல மாட்ட? எனக்கு அம்மாவ பார்க்கணும் போல இருக்கு டாடி, இப்பவே வந்து கூட்டிட்டுப் போறீங்களான்னு ஃபோன்ல யாருக்கும் தெரியாம அழுதுட்டு, அப்பவே போய் அப்பாவுக்காக ரோட்ட பார்த்துட்டு நின்ன பொண்ணு அட்டென்ஷன டைவர்ட் செய்றதுக்காக, அப்படி ஒரு பிளேடு கதைய கேட்டு வாங்கின நான் சோம்பேறி இல்லமா தியாகி”

“இதுக்கு பேரு தியாகம் இல்ல, ஒட்டுக் கேட்கிறது! நான் போய் நின்னது மண்வாசனைக்காக, தியாகம்னா, இது நம்ம நாட்ட முன்னால ஆண்டாங்களே பாண்டியர்கள் அவங்க காலகட்ட கதைனு நான் ஆரம்பிக்கவும், ஓ இந்த ஃபைவ் ப்ரதர்ஸ் ஒன்னா இருப்பாங்க அவங்களுக்கு கூட 100 கசின்ஸ் கௌரவாஸ்னு இருப்பாங்களே, அந்த கதையான்னு கேட்ட ஒரு ஜீவனுக்கு, பாண்டி நாடு, நிஷத நாடு, மேலை மங்கலம், சிங்களம்னு விளக்கி நான் கதை சொன்னேனே, அதுக்கு பேர்தான் தியாகம்”

இதற்குள் இவர்கள் பேச்சு சத்தம் இவர்கள் காதிலேயே விழாதவாறு சத்தமிட்டு சிரித்துக் கொண்டிருந்தார் வாணியின் மாமா. லிசியும்தான்.

அதன் பின் சற்று நேரம் இப்படியே கலகலக்க,

“நீங்கல்லாம் வெளிய தொழில், வேலைனு வெளி உலகத்துல எத்தனையோ வித மனுஷங்களை எதிர்கொள்ளனும். அதுல நம்ம வீட்டு ஆட்கள்ட்டயே பேசிப் பழக தெரியலைனா எப்படி? எதுக்கு பேசுறோம்ன்ற நோக்கம் தெளிவா இருக்கப்ப, இதுதான் நல்லா இருக்கு” என மாமா முடிக்கும் போது வாணிக்கு அடிமனதில் அவர் மீதிருந்த மனத்தாங்கல் கூட வலுவிழந்தது.

அதோடு அடுத்து மாமா விடைபெறும் போது, “சமைச்சு சாப்டுறதெல்லாம் சரிதான் வாணிமா, அதுக்காக அடிக்கடி இதையே செய்துகிட்டு படிக்கிற டைம வேஸ்ட்டாக்கிடக் கூடாது, வீக்லி ஒன்ஸ் போல செய்து சாப்டுங்க சரியா?” என அக்கறையாக சொன்னவர்,

கூடவே லிசியிடம் “என் தங்கச்சியயெல்லாம் கல்யாணம் வரையுமே சமையலறைய கண்ல காட்டாம வளத்தோம், நீ அவ பிள்ளைய சமைச்சு தேய விட்றாத, பார்த்துக்கோ” என்றுவிட்டு,

“இப்படி சமைக்கிறப்ப, மறக்காம விசாகனையும் கூப்ட்டுகோங்க” என்றும் சொல்லி வைக்கும் போது,

அவரோடான இவளது விலகலுக்கான காரணம் இப்போது மொத்தமாக கழன்று போனது.

விஷயம் இதுதான்.

வாணியின் தந்தை வழி தாத்தாவின் குடும்பமும் வாணியின் தாய்மாமாக்கள் குடும்பம் போல் செல்வத்திலும் செல்வாக்கிலும் வெகுவாகவே உயர்ந்த நிலையில் உள்ளதுதான்.

அந்த அடிப்படையில்தான் வாணியின் அம்மா அமுதவல்லியை அவரது அண்ணாக்கள் நால்வரும் வெகுவாக விரும்பியே வாணியின் தந்தை கருணாகரனுக்கு திருமணம் செய்து வைத்ததும்.

தன் வீட்டிற்கு மூத்த மகனான கருணாகரன் அப்போது BSNL லில் பணி செய்து கொண்டிருந்தாலும், எப்படியும் முழு மொத்த தொழில் குடும்பத்தை சேர்ந்த அவர் சில வருடங்களில் தன் குடும்பத் தொழிலை பொறுப்பில் எடுத்துக் கொள்வார் என்று எல்லோரும் இயல்பாக எண்ணி இருந்தனர்.

ஆனால் வாணியின் தந்தை கருணாகரனுக்கோ தான் செய்து கொண்டிருக்கும் பணியின் மீது அதீத ஆர்வம், விருப்பம், ஈடுபாடு, வெறி எல்லாம்.

ஆக கருணாகரனின் தந்தை எத்தனை முறையோ சொல்லிப் பார்த்தும் கருணாகரன் தன் பணியை விடவோ, தொழில்களை பொறுப்பெடுக்கவோ மறுத்துவிட்டார்.

ஒரு கட்டத்தில், அதில் மிகவும் எரிச்சலாகிப் போன கருணாகரனின் தந்தை, அதாவது வாணியின் தாத்தா, தனது தொழில்களை மற்ற மகன்களுக்கு மட்டுமாக பிரித்துக் கொடுத்துவிட்டு, ஆனால் அதற்கு சற்றும் குறையாத அளவில் பலவித சொத்து வகைகளை, தன் மூத்த மகனின் மகள் மற்றும் மகனுக்கு எழுதி வைத்துவிட்டார்.

அதாவது வாணி மற்றும் அவளது தம்பி ரவீஷ் பெயரில் இருக்கின்றன அவை.

இதுவே வாணியின் தாய்மாமாக்களுக்கு பலத்த மனவருத்தம் என்றால், அதை இவளது அப்பா கருணாகரன் எதிர்த்து வழக்காடுவார் என்ற அவர்கள் எண்ணத்திற்கு எதிராக, வெகு சாதாரணமாக கருணாகரன் இதை ஏற்றுக் கொண்டதை அவர்களால் தாங்கவே முடியவில்லை.

வாணியின் தந்தை வெகு உயர்ந்த பதிவியில்தான் அப்போது இருந்தார் எனினும், மாதசம்பளம் மாதச்சம்பளம்தானே, இத்தனை வளர்ந்துபட்ட தொழிலில் சம்பாதிப்பதற்கு பக்கத்தில் வருமா அது?

அதோடு வாணியின் அப்பா அவர் அலுவலகத்திலும் கடும் நேர்மையாளர். லட்ச லட்சமாக சுருட்ட வகையுள்ள பதவியில் இருந்தும் பைசா லஞ்சம் வாங்காதவர். தன் எல்லைக்குட்பட்ட யாரையும் ஊழல் செய்ய விடவும் மாட்டார். அதில் அவருக்கு அவ்வப்போது பல எதிரிகளும் எதிர்வினைகளும் கிடைக்கப் பெற,

இந்த விஷயங்களில் வாணிக்கு அவள் அப்பா மீது கர்வமே உண்டு எனில், அதே காரணங்களுக்காக அவளது தாய்மாமாக்கள் அவரை பிழைக்கத் தெரியாதவர், மனநோயாளி என்பது போல் கன்னா பின்னாவெனவெல்லாம் பேசி சண்டையாகி, மூன்று மாமாக்கள் இவர்களோடு பேசுவதே இல்லை.

அந்த வகையில் அப்படி எதையும் சொல்லாமல், இவளது அப்பாவிடம் முழு மரியாதையுடன் பேசிப் பழகிய ஒரே தாய்மாமா இந்த சௌந்தர்தான்.

ஆக இந்த சௌந்தர் மாமா வீட்டோடு மட்டும் வெகு சுமூக உறவு நிலை இருந்து வந்தது.

இதில் இவள் 6ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் முதன் முதலாக தன் தாயோடு இல்லாமல் தனியாக மாமா வீட்டில் தங்கினாள்.

கழுத்தில் ஒரு கெட்டிச் செயின், காதில் அளவான வைரத்தில் சிறியதாய் ட்ராப்ஸ் என்ற அளவிலான நகைகளுடன்தான் அவள் சென்றிருந்தாள்.

வழக்கமாக அணியாத ஒன்றை மாமா வீட்டிற்கு செல்வதற்காக மட்டுமே அணிய வேண்டி இருப்பதே அவளுக்கு சற்று எரிச்சலாக இருந்தது.

‘அப்ப இதப் போடலன்னா மாமா வீட்டுக்கு இவள் வீட்டைப் பிடிக்காதா?’ன்னு ஒரு கேள்வி அவளுக்குள்.

இதில் ஒரு நாள் மதிய உணவு முடிந்த நேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த இவளது சௌந்தர் மாமா, ஒரு ஓரத்தில் அமர்ந்து புத்தகத்தில் மூழ்கிக் கிடந்த இவளை கவனிக்கவில்லையா, அல்லது இவள் இதையெல்லாம் தப்பாக எண்ண மாட்டாள் என நினைத்தாரோ?!

“நம்ம வாணிகுட்டிக்கு வளையல் வாங்கிடனும் இன்னைக்கு, பிள்ள கைய இப்படி மொட்டையா வச்சுருக்கானே இந்த குளத்தூரான், என்னைக்குத்தான் இதெல்லாம் அந்த ஆளுக்கு புரியப் போகுதோ?” என்றுவிட்டார்.

இங்கு குளத்தூரான் என்பது இவளது அப்பாவை குறிக்கும் சொல். குளத்தூர் இவளது அப்பாவின் பூர்விகம்.

வாணியால் மாமாவின் இந்த வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆக இந்த மாமாவும் இவளது அப்பாவை மதிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.

மற்றவர்கள் முகத்துக்கு நேராக காண்பித்துக் கொள்கிறார்கள், இவர் நடிக்கிறார். அவ்வளவேதானே வித்யாசம்?!!!

அன்றுதான் அப்பா ஃபோன் செய்தபோது அவரிடம் “மாமா உங்கள குறை சொல்றாங்கப்பா” எனக் கூட சொல்ல மனம் தாங்காமல்,

“அம்மாவப் பார்க்கணும்” என ஒரு அழுகை.

என்ன ஏது என புரியவில்லை என்றாலும், அன்று இரவு இவள் தூக்கத்தில் விழிக்கும் போது இவள் அருகில் தூங்கிக் கொண்டிருந்தார் அப்பா. அடித்துப் பிடித்து ஓடி வந்திருந்தார் அவர்.

அன்று கிளம்பி வந்ததுதான். அதன்பின் மாமா வீட்டுக்கு இன்று வரை வாணி சென்றதே கிடையாது.

இதுவும் வாணியின் ஒரு குணம்.

சொல் தாங்கமாட்டாள். அவமதித்துவிட்டார்கள் எனத் தோன்றிவிட்டால், உள்ளொன்று வைத்து புறம் ஒன்றாய் பழகுவதாய் பட்டுவிட்டால், நீ யாராய் இருந்தாலும் எனக்கு வேண்டாம் என்பது அவள் மனம்.

அதற்காக அந்த நபரை வெறுப்பாள் தூஷிப்பாள் என்றால் அதுவும் கிடையாது. இன்றுவரை இவள் மனதில் இப்படி ஒரு தாங்கல் இருக்கிறது. அதனால்தான் அவள் மாமா வீடு வருவதில்லை எனக் கூட யாருக்கும் தெரியாது.

மாமா இவள் வீட்டுக்கு வரும் போதும், முகம் கூட சுண்ட மாட்டாள். இன்றைக்கும் மாமா பாவம் அலைகின்றாரே என சாப்பாடு சமைக்கத்தானே வந்தாள். ஆனால் சேர மாட்டாள். ஒரு துளி தண்ணீர் அந்த நபரிடமிருந்து வாங்கிவிட மாட்டாள்.

இப்போதும் இவள் பி ஃபார்ம் முடிக்கவும், பி ஜி கவர்மென்ட் காலேஜில் கிடைத்துவிடும் என பெரும் நம்பிக்கையில் இருக்க, அதற்கான நுழைவுத் தேர்வு காலங்களில் எதிர்பாரா விதமாய் இவளது நெருங்கிய தோழி ஜெனிஃபருக்கு விபத்து நடந்து அவள் மருத்துவமனையில் விழ,

தந்தையும் உடன் பிறந்தோரும் இல்லாத ஜெனிஃபரை அவளது வயதான அம்மா மட்டுமாய் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால், இவள் மருத்துவமனையிலேயே தங்கி நுழைவுத் தேர்வுகளை தவறவிட,

இறுதியில் பி.ஜி இந்த வருடம் இவள் தொடர வேண்டுமெனில் இங்கு மாமா கல்லூரிக்கு வந்தாக வேண்டிய நிலை.

“மற்ற ஸ்டூடண்ட்ஸ் போல ஒரு ரூபா கூட குறைக்காம எனக்கும் ஃபீஸ் கட்டினீங்கன்னா வேணா போறேன்” என மொட்டைப் பிடிவாதம் பிடித்து,

“ஏல உன்ட்ட ஃபீஸ் வாங்குறதும் நான் லிசிட்ட ஃபீஸ் வாங்குறதும் ஒன்னுல” என வீடு தேடி வந்து கெஞ்சிய மாமாவை நிமிர்ந்து கூடப் பார்க்காமல், அவர் முன் குனிந்த தலையோடே நின்றுவிட்டு,

“அப்ப நான் அடுத்த வருஷமே படிச்சுக்கிறேன்மா” என தன் அம்மாவிடம் முடிவு சொல்லி….

கடைசியில் இவளது அம்மா தன் அண்ணாவிடம் இவளது பிடிவாதத்திற்கு சம்மதிக்க சொல்லி பேசி, அதாவது கெஞ்சி மாமாதான் இறங்கி வர வேண்டியதாகிற்று.

ஆனால் இன்றைய நிலையில் மாமாவின் செயல் இவளுக்கு முற்றிலும் வேறு வகையில் விஷயத்தைப் பார்க்கச் சொல்கிறது.

‘என்ன இருந்தாலும் கடைசில பணம்தான இவங்களுக்கு பெருசா போச்சு, அப்பா இவங்க அளவு வசதியா இல்லைனதும்தான இவங்களால மதிக்க முடியல’ என்பதுதான் இவளது அடிப்படை ஆதங்கம்.

இப்போது பார்த்தால் தங்கை மகளானே இவளே வெளியே பழகத் தெரிந்திருக்க வேண்டும், கட்டுப் பெட்டியாக கிடந்துவிடக் கூடாது என நினைக்கும் மாமா, தன் தங்கைக்காக என்னதையெல்லாம் ஆசைப் பட்டாரோ என்றிருக்கிறது.

சமையல் கூட தெரியாமல் வளர்த்தார்களாமே! இன்று அம்மா முழு நேர ஹவுஸ் வைஃப் என்பது அவருக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கிறதோ?!!.

தங்கைக்கு தன் வீட்டில் இருந்த வாழ்க்கைக்கு நேர் எதிரான ஒரு வாழ்வை உருவாக்கி தந்திருக்கும் அவளது கணவர் மீது ஏமாற்றம் மற்றும் ஆதங்கம் வர பாசமுள்ள ஒரு நபருக்கு அவரது பாசமே காரணமாயிருக்க முடியுமே.

பணம் இல்லை என்பதுதான் விஷயமாக இருக்க வேண்டும் என்று இல்லையே என்றிருக்கிறது இவளுக்கு.

அம்மா கேட்டு இது வரைக்கும் மாமா எதையுமே இல்லை என்று சொன்னது இல்லை என்பதும் இப்போது நியாபகம் வருகிறது.

அதே பாசத்தின் அடிப்படையில்தான், தங்கையின் கணவரை முகம் கோண நடத்திவிடக் கூடாது என, இவர் மட்டும் தன்மையாகவே அப்பாவிடம் நடந்து கொண்டு இருக்கிறார்.

ஆனால் மனதிற்குள் இருக்கும் வலியை தன் வீட்டில் வெளிப்படையாக பேசிக் கொள்வாராக இருக்கும். சொந்த வீட்ல யாரும் இயல்பாக இருப்பதுதானே இயல்பு?!

அதை அந்தஸ்து மோகம், உள்ளொன்று வைத்து முகம் முன்பாக நடிப்பது என பார்ப்பதைக் காட்டிலும், தங்கைப் பாசம் என இவள் பார்த்திருக்க வேண்டுமோ?!!

என்ன இருந்தாலும் அவர் பேசியது தப்புதான், இவளாய் இருந்தால் பிடிக்கவில்லை என்பதை நேருக்கு நேராகத்தானே சொல்லி இருப்பாள். இருந்தாலும் அதற்கு இவள் கொடுக்கும் தண்டனையின் அளவு தப்போ?!

ஒரு பக்கம் விசாகன், லிசி, நின்றிருக்க, மறுபக்கம் மாமாவின் பி ஏ, செக்யூரிட்டி என புடை சூழ, காரில் ஏறப்போன மாமாவை ஓடிச் சென்று கை பிடித்து நிறுத்தினாள் வாணி.

“மாமா உங்கட்ட கொஞ்சம் தனியா பேசணும்”

எல்லோருமே ஒரு கணம் ஒவ்வொருவரையும் பார்க்க,

“இதோ வந்துடுறேன்” என மற்றவர்களிடம் பொதுவாக சொல்லிவிட்டு, கடகடவென இவளுக்கு முன்பாக நடக்கத் துவங்கிவிட்டார் மாமா.

கல்லூரியில் சேர்மன் அறை என ஒன்று உண்டே, அங்குதான் போனார். அறைக்குள் சென்று ஸ்விட்ச் ஆன் செய்யவும், கதவை மூடியபடியே படபடத்தார் மாமா,

“என்னாச்சு வாணிமா? எதுவும் பெரிய ப்ரச்சனையா? புதுசா எதுவும் தெரிய வந்துச்சா? நம்ம ஆட்களே யாரும் எதாவது சரியா நடந்துக்கலையா?” அவர் குரலில் பதற்றம் அக்கறை எல்லாம் அப்பிக் கிடந்தது.

“யாரும் இங்க இப்ப வர மாட்டாங்க, பயப்படாம சொல்லு” அவர் கேட்க,

“அச்சோ மாமா அப்படி எல்லாம் எதுவும் இல்ல” என ஆரம்பித்தவள், அடுத்து அந்த 12 வயது நிகழ்வு, அது சம்பந்தமாக தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் மாமாவிடம் மனம் திறந்து பேசிவிட்டாள்.

“இப்ப கூட நீங்க எங்க அப்பாவ அப்படி பேசினத நான் சரின்னு சொல்ல மாட்டேன் மாமா, எங்கப்பா அளவுக்கெல்லாம் ஒரு நல்லவங்கள நீங்க உலகத்துல எங்க தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது. ஆனாலும் நான் உங்கட்ட நடந்துகிட்டதையும் சரின்னு சொல்ல முடியல, சாரி” என அவள் முடிக்கும் போது,

மாமா கண்களில் தேங்கி இருந்த கண்ணீரில் வருத்தம் தாண்டி ஆனந்தமும் பெருமிதமும் கூட கலந்திருந்தது.

“இவ்ளவு யோசிக்கிற அளவுக்கு எங்க பிள்ள பெரிய மனுஷி என்னல” என்றார். அவர் ‘ல’ போடுகிறார் என்றாலே வெகுவாக உணர்ச்சி வசப்படுகிறார் என்று பொருள் என இவளுக்குத் தெரியும்.

“பெரிய மனுஷின்னு இல்ல மாமா, தப்பு செய்துட்டோம்னு தெரியுறப்ப மன்னிப்பு கேட்கணும்னு பட்டுது” இதை நம்பிக்கையின் சாயை கொண்டு சொன்னவள்,

“உண்மையில் உங்களுக்கு அப்பா மேல என்ன வருத்தம் மாமா?” எனக் கேட்டாள் வெகு தன்மையாக.

அறையிலிருந்த அவருக்கான நாற்காலியை உருட்டிக் கொண்டு வந்து அவர் நின்று கொண்டிருந்த இடத்தில் வைத்தாள் வாணி.

“உட்காந்து பேசுங்க மாமா”

மாமாவுக்கு எதிராக இருந்த ஜன்னலில் போய் சற்றாய் சாய்ந்து நின்று கொண்டாள் இவள். கேட்க தயாராகிவிட்டாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம், கேட்காமல் அவள் வெளியே போக போவதில்லை என்றும் புரிந்து கொள்ளலாம்.

அழகிய பிடிவாதங்கள் பெண் உரு கொண்டால் அது வாணியாகத்தான் வடிவெடுக்கும்.

மாமா சின்ன புன்னகையோடே நாற்காலியில் அமர்ந்தவர்,

‘அமுதிக்கு அவ போற இடத்தில் சொந்தமா ஸ்கூல் வச்சு நடத்தணும்னு ரொம்ப ரொம்ப ஆசை.’ – பல முன்னுரை பின்னுரைகளோடு இதுதான் மாமா சொன்ன முக்கிய விஷயம்.

“நானும் கேட்கிறேன், நீதான் எல்லாத்துக்கும் நியாயம் பார்க்கியே, நீயே சொல்லு? உங்கப்பா லட்சியம் கனவு எல்லாம் அவருக்கு முக்கியம்னா அமுதியோடது முக்கியம் இல்லையா? அவரோட லட்சியத்த அமுதி மேல எப்படி திணிக்கலாம்?” – மாமாவின் ஆதங்கம் வெகு நியாயமாகவே பட்டது வாணிக்கு.

“எங்கம்மா சந்தோஷமா இருக்காங்களான்னு அவங்கட்ட கேட்டீங்களா மாமா?” – வாணி தீர்வை தேடத் துவங்கினாள்.

“கேட்டா, இல்ல கஷ்ட்டப் படுறேன்னா சொல்லிடப் போறா? என் முகத்துக்காக சந்தோஷமா இருக்கேன்னு தான சொல்வா.” – பதில் இப்படி வர,

“கொஞ்ச நேரம் நீங்க அமைதியா மட்டும் இருங்க மாமா ப்ளீஸ்” என்ற வாணி, அறையிலிருந்த தொலை பேசியில் தன் அப்பாவை அழைத்தாள். ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்தாள்.- ஒரு முடிவிற்கு வந்திருந்தாள் அவள்.

அப்பாவின் “வணக்கம், கருணாகரன் ஹியர்” காதில் விழவும்

“ஹலோ ஹீரோ சார், எங்கயாவது நீங்க டவர் மேல ஏறி நின்னீங்கன்னாலும் பிரவாயில்ல, கீழ இறங்கிட்டுதான் பேசணும்னு இல்ல, இப்படியே பேசலாம்” என இவள் துவங்க,

வாணியின் அப்பாவுக்கு மகள் ஏதோ வாக்குவாதத்துக்கு வருகிறாள் என தெளிவாகவே புரிந்து போயிற்று. ஹீரோ சார் என அவள் அழைத்தாளே அதற்கு அர்த்தம் அதுதான்.

“என் மேல என்ன ப்ராதுங்க நாட்டமை?” அப்பா நிலமையை சுமூகாக்கவே விரும்பினார்.

“சாரிடா அப்ப இருந்து உனக்குத்தான் பேச நினச்சுட்டே இருக்கேன், இங்க ஒன்னு மாத்தி ஒன்னு,… சொல்லுமா அப்ப எதுக்கு கால் பண்ண?” அப்பாவுக்கு இன்னும் கல்லூரியில் நடந்த கலாட்டாவே தெரியாதே!

“ப்ச் அது எல்லாம் சின்ன விஷயம் டாடி, அத அப்றம் பார்த்துப்போம் முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க” என்றவள்,

“மேரேஜுக்கு முன்னால உங்க கேரியர், லட்சியம் இதெல்லாம் அம்மாட்ட போய் சொல்லி சம்மதம் வாங்கினீங்களா இல்லையா? எங்க காலத்துல எல்லாம் பொண்ண பார்க்கவே விடமாட்டாங்க, இதுல எங்க பேசண்ணு எல்லாம் நொண்டி சமாதானம் சொல்லக் கூடாது” என நேரே விஷயத்துக்கு வந்தாள்.

“ஹ ஹா இன்னைக்கு வாணிட்ட மாட்டினது எங்க கல்யாணம் போலயே” அப்பா மகளையா அல்லது அவரது கல்யாண கால நினைவுகளையா இல்லை இரண்டையுமேவா, ரசிப்பது அவர் குரலில் தெரிந்தது.

“ஹீரோ சார் பேச்ச மாத்தாதீங்க” இவள் பொங்க,

”ம்..என்ன செய்யலாம்? உன்ட்ட இதெல்லாம் சொல்லலாமா கூடாதா?” சற்றாய் விளையாட்டு போல வாய்விட்டு யோசித்த அப்பா,

“சரி உனக்கு 20 வயசு ஆகிட்டு அதனால எங்க கல்யாண கதைய சொல்லாலாம்தான்” என்றபடி அவரது கல்யாண காலத்துக்குள் ப்ரவேசித்தார்.

“கண்டிப்பா பொண்ணுட்ட பேசி முடிவு செய்துதான் கல்யாணம் செய்யணும்னு உறுதியா இருந்தேன் வாணிமா. உங்க மாமாக்கள்ல சௌந்தர்க்கு ரொம்ப நிதானமான சுபாவம்.

அதனால அவர்ட்டயே நான் உங்க தங்கைய பார்க்காம கல்யாணத்தை முடிவு செய்துக்க மாட்டேன்னு வெளிப்படையா சொல்லிட்டேன். அவரும் கண்டிப்பா வந்து பாருங்கன்னுட்டார்.

நான் பெண் பார்க்க போறப்ப அப்படியே பெண்ட்ட பேசிடனும்னு என்னலாமோ திட்டம் போட்டு போனா, எங்க பூர்வீக கிராமத்துலதான் வந்து பெண் பார்க்கணும்னு கூட்டிட்டு போனவங்க, போன பிறகு சொல்றாங்க, அதோ அந்த கிணத்துக்கு பொண்ணு தண்ணி எடுக்க வருவா, நீங்க இந்த தோப்புக்குள்ள நின்னு பார்த்துக்கோங்கன்னு,

அதாவது நான்தான் பொண்ணப் பார்க்கலாம், பொண்ணுக்கு இப்படி நாங்க பார்க்கிறோம்னே தெரியாதாம்.” அறிவாளி என இவள் கொண்டாடும் அப்பாவிற்கே அல்வா கிடைத்த கதையை அவர் சொல்ல,

“ஹ ஹ ஹா செம்ம பல்ப்… ஆனா கொஞ்சம் ரொம்பவே ரொமான்டிக்கா இருக்குல்ல டாடி” மகள் ரசித்தாள்.

“சரி அப்றம் என்னாச்சு? அம்மாட்ட பேசீனீங்களா இல்லையா?” ஆர்வப்பட்டாள்.

“இல்ல, பேசல” அவர் ஆரம்பிக்கவும்,

“அதெப்படி அப்பீயர்ன்ஸ வச்சு எதையுமே முடிவு செய்ய கூடாதுன்னு சொல்லுவீங்களே டாடி, அப்றம் கல்யாணத்த எப்படி வெறும் அப்பீயரன்ஸ வச்சு முடிவு செய்தீங்க?” வெட்டினாள் பெண். அழுகை வரும் போல இருக்கிறது இவளுக்கு.

அவளது அப்பா அவரது வார்த்தையிலிருந்து அவரே எப்படி முரண்படலாம்?!

“இல்ல வாணிமா, அப்பீயரன்ஸ்னு இல்ல, உங்க அம்மா அங்க வர்றப்ப ஒரு சின்ன இன்சிடென்ட் நடந்தது. அத வச்சு இந்த கல்யாணம் எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகும்னு தோணிச்சு” அப்பாவை இப்போதும் முடிக்கவிடவில்லை பெண்.

“வாவ் வாவ், அது என்ன கதை?” குதிக்காத குறைதான் பெண். அப்பாவாவது தவறுவதாவது?!

“அம்மா கிணத்துக்கு வர்றப்ப, இன்னொரு பொண்ணு ஒன்னும் தண்ணி எடுக்க வந்துச்சு, கூலி வேலை செய்றவங்க போல, கால்ல செருப்பு இல்லாம வந்துது, இந்த வெயில்ல எவ்ளவு நேரம் செருப்பு இல்லாம வேலை செய்வீங்கன்னு சொல்லி, தன் செருப்ப கழட்டி கொடுத்துட்டா உங்க அம்மா”

“ஓஹோ, இப்படி அடுத்தவங்களுக்காக செருப்ப தியாகம் செய்து வெயில்ல நடந்து போற பொண்ணு நமக்காகவும் தியாகம் செய்யட்டும்னு ஹீரோ சார்க்கு தோணிட்டு போல” வாணிக்கு அவளது அம்மாவின் செயலை பிடித்த அளவிற்கு தன் அப்பாவின் காரணத்தை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

“ஹ ஹா, என்ன இன்னைக்கு நாட்டாமை என் மேல இவ்ளவு காயுறீங்க? அப்டில்லாம் உங்க அம்மா வெயில்ல எங்கயும் போகவே இல்லையே, அவ பாட்டுக்கு ஒரு நிழல்ல போய் உட்காந்துகிட்டா எப்படியும் எங்க அண்ணங்க என்னை தேடி வந்துடுவாங்கன்னு சொல்லிட்டு”

“ஹி ஹி கல்யாணத்துக்கு முன்ன என் மம்மியும் புத்திசாலிதான் போலயே!”

“கழுத! அப்ப என்ன கல்யாணம் செய்துதான் உன் அம்மாவுக்கு புத்தி இல்லாம போய்ட்டுன்றியா?”

“அத நான் வேற என் வாயால சொல்லணுமா டாடி?”

“போதும் போ, உனக்கு கதை சொன்னது, நான் ஃபோன வைக்கிறேன்”

“ஐயோ டாடி, மீதிய சொல்லிட்டுப் போங்க.. ப்ளீஸ் ப்ளீஸ்”

“மீதி என்ன மீதி? உங்க அம்மா போய் உட்காரவும் உங்க சௌந்தர் மாமா என்னைப் பார்த்து திருதிருன்னு முழிக்க, நான் நீங்க உங்க தங்கச்சிட்ட போங்க, நான் இங்கயே வெயிட் செய்றேன்னு சொல்ல, அவர் போய் தன் செருப்ப தங்கச்சிக்கு கொடுத்தார்.

உங்க அம்மா ‘இன்னும் கொஞ்சம் நேரம் இங்கயே வெயிட் செய்வோம்ணா, எப்படியும் ரவி அண்ணா காரோட வருவான் பாரு, நீன்னா நான் வர லேட்டாச்சுன்னா செருப்பு பிஞ்சிருக்கும், இல்ல குடம் உடஞ்சிருக்கும்னு எதாவது யோசிப்ப, அவன் ரேஞ்சே வேற! பெரிய லெவல்லதான் யோசிப்பான், கிணத்துக்குள்ள விழுந்துருப்பேன், கால் உடஞ்சிருக்கும், தலை வெடிச்சிருக்கும்னு அடிச்சு பிடிச்சு வருவான் பாரு’ன்னு ஓட்ட,

அதே நேரம் உங்க ரவி மாமா காரோட கரெக்ட்டா வந்து நின்னார், ‘என்னடா ஆச்சு? யாருக்கும் எதுவும்…?… அது.. எல்லாரும் நல்லாதான இருக்கீங்கன்னு கேள்வி வேற!

உங்க அம்மா சிரிச்சுகிட்டே, ‘என்ன ரவிணா ரேடியோ ஸ்டேஷன்க்கு கால் செய்துட்டியா? ஓ நெகடிவ் ப்ளட் க்ரூப் என் தங்கச்சிக்கு உடனடியா தேவைப்படுதுன்னு சொல்லிட்டு வந்திருப்பியே’ன்னு கேட்டுகிட்டே போய் கார்ல ஏறிட்டா. அவ்ளவுதான் கதை.

அவளோட ஹெல்ப்பிங் நேச்சர், எந்த சிச்சுவேஷனையும் கேஷுவலா ஹேண்டில் செய்ற விதம், உறவுகள புரிஞ்சு வச்சுருக்கதுன்னு இது போல சிலத வச்சு எங்களுக்கு ஒத்துப் போகும்னு தோணிட்டு. அப்பாவுக்கு வேலை இருக்குடா வாணிமா” அப்பா வேலை நேரத்தில் இவ்வளவு பேசியதே அதிகம் என வாணிக்கும் தெரியாமல் இல்லை.

“ஹான்…அது… எப்படின்னாலும் நீங்க அம்மாட்ட பேசல?” அப்பா சொன்ன விஷயம் பிடித்தாலும் கூட, இது இவள் கேள்விக்கு பதில் ஆகாதே. வாணிக்கு இன்னுமே திருப்தி வந்தபாடில்லை.

“நானும் கொஞ்சம் நல்லவன்தான வாணிமா, நம்மளப் பிடிக்கும்னு நம்ம மேலயும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கலாம்தானே” அப்பா இப்போது அதகளமாய் பதில் கொடுக்க,

எதிர்பாரா இந்த பதிலில் இங்கு கேட்டுக் கொண்டிருந்த மாமா சிரிப்பை அடக்க படாதபாடு படுவதைப் பார்த்தவள், பை டாடி என ஃபோனை வைத்துவிட்டாள்.

இன்னும் பேச்சை வளர்த்து இப்பவே அப்பாட்ட மாட்டிக்க கூடாது. அவளுக்கு அம்மாட்டயும் பேசி ஆகணும்.

அடுத்த கால் அம்மாவுக்கு.

முதல் கேள்வியே, “எதுக்குமா அப்பாவ கல்யாணம் செய்தீங்க?” என்பதுதான்.

“இது என்னடி இப்படி ஒரு கேள்வி இப்ப?” என அதை எதிர்க் கொண்டார் அம்மா.

“ப்ச் பதில் சொல்லுங்கம்மா” சிணுக்கம் வந்துவிட்டது பெண்ணிடம்.

“அதெப்டிமா முன்ன பின்ன தெரியாத ஒரு நபரோட, வீட்ல சொல்றாங்கன்ற ஒரே காரணத்துக்காக, கூட போய் முழு வாழ்க்கையும் வாழ்ந்துடலாம்னு தோணிச்சு உங்களுக்கு?” வாணியின் வழக்கமான கிடுக்கிப் பிடி விசாரணை இப்படி துவங்கியது

“இல்லையே உங்க அப்பாவ முன்னமே தெரியுமே” சாதாரணமாக மறுத்தார் அம்மா.

சர்வ நிச்சயமாய் இப்படி ஒரு பதிலை வாணி எதிர்பார்க்கவில்லை என்றால் மாமாவே கூட கொஞ்சம் ஜெர்க் வாங்கினார்.

“ஹான்?!! எப்படி மம்மி?? குற்றாலத்தில நீங்க, அப்பா சென்னைல, இதுல எப்போ? ஹவ் இஸ் தட் பாசிபிள்?”

“ஏன் பாசிபிள் இல்ல? என் க்ளாஸ்மேட் அஞ்சுவோட அண்ணாவோட காலேஜ்மேட் உன் அப்பா”

“அடடே இன்டர் நெட்க்கே காம்படிஷன் கொடுத்துருக்கும் போலயே உங்க நெட் வர்க்…!! சரி அப்றம்?”

“அப்றம் என்ன அப்றம்?! எங்களால சால்வ் செய்ய முடியாத சம்ஸ, அஞ்சு அவ அண்ணாட்ட சொல்லுவா, அடுத்த ஒரு கோழிக் கிறுக்கல் கையெழுத்தில் அதெல்லாம் சால்வ் செய்து நோட்ஸ் வரும் எங்களுக்கு. அவ அண்ணா ஃப்ரெண்ட் எதோ ஒரு கருணாகரன் சால்வ் செய்து ஃபேக்ஸ் செய்றதா அஞ்சு சொல்லுவா.”

“அஹம் அஹம், எங்கப்பா ஹேண்ட் ரைட்டிங் கொஞ்சம் அப்படித்தான், பைதவே அந்த கோழிக் கிறுக்கல மட்டும் பார்த்துதான் நீங்க மேரேஜ் செய்துருக்கீங்கன்னு மறந்துடாதேள்”

“அப்படின்னு யார் சொன்னா? உங்க அப்பாவையே பார்த்துருக்கனே”

“என்னது??!!”

“ஆமா எங்க காலேஜுக்கு வந்தாங்களே உங்க அப்பா!”

“ஆத்தி !! தூக்கத்துல கனவு கண்டுட்டு இருந்தவங்கள எழுப்பி விட்டுட்டேன் போலயே?”

“ஏன்டி? லேடீஸ் காலேஜ்னா செமினாரே இருக்காதுன்னு எதாவது இருக்கா? இல்ல அதுக்கு கூட மென் வர மாட்டாங்கன்னு இருக்கா? எங்க டிபார்ட்மென்ட்ல இருந்து ஒரு பெரிய செமினார் அரேஞ்ச் செய்திருந்தோம், அதில் கொஞ்சம் வித்யாசமா எதாவது ப்ரெசென்ட் செய்ய வர சொல்லலாம்னு உங்க அப்பா நேமை ரெக்கமென்ட் செய்திருந்தாங்க எங்க மக்கள். சரின்னு ஹெச் ஓ டி. இன்வைட் செய்திருந்தாங்க.”

“வாவ் செம்ம!! அப்போ உங்க காலேஜ்ல எங்கப்பாவுக்கு ஃபேன்ஸ் கிளப்பே வந்திருக்கும்?”

“ஆமா நினைப்புதான்… உங்கப்பாவப் பத்திதான் உனக்கு தெரியுமே, வீட்டாள்கள் தவிர மத்தவங்கட்ட அவசியம்ன்றத தவிர அரை வார்த்தை பேச மாட்டாங்களே! அங்கயும் வந்து அப்படித்தான் நின்னார். தன் ரிசர்ச் அதோட ஃப்யூச்சர் பத்தி பேசினதோட சரி. எங்க பொண்ணுங்கல்லாம் பயங்கர திமிர்னு, ஹெட் வெயிட்னு உங்கப்பாவ ஆளாளுக்கு காய்ச்சினதுதான் மிச்சம்”

“ஹான்!! கொடும”

“அவங்களுக்கு என்ன தெரியும் போறாங்க விடு”

“ஹலோ, நான் அத சொல்லல, அப்பா அந்த செமினார்ல அவங்க ரிசர்ச் ஃப்யூசர் ப்ளான் பத்தியும் பேசினாங்கன்னீங்கல்ல”

“ஆமா அதுக்கென்ன?”

“அப்போ அதெல்லாம் தெரிஞ்சுதான நீங்க மேரேஜ்க்கு சம்மதிச்சுருப்பீங்க?”

“ஆமா, உங்க அப்பா ஃபோட்டோவ வீட்ல காமிக்கவுமே எல்லாம் தெரிஞ்சுருக்கும்தானே எனக்கு. இதிலென்ன கொடுமை இருக்கு?”

“அது அப்பாவுக்கும் புரிஞ்சிருக்கும்தான?”

“ஆமா நான் எங்க படிச்சேன், எந்த இயர்னு உங்கப்பாட்ட முதல்லயே சொல்லி இருப்பாங்களே, அதிலயே செமினார்ல நான் அவங்களப் பார்த்துருப்பேன்னு அப்பாக்கு புரிஞ்சிருக்குமே? ஆனாலும் நான் செமினார் அட்டென் செய்யாமலும் இருந்திருக்கலாமேன்னு ஒரு தாட் இருந்ததாம்,

பெண் பார்க்க வந்தப்ப நான் ரேடியோ ஸ்டேஷன்க்கு ரத்தம்கேட்டு கால் செய்றத பத்தி எதோ சொன்னேன் போல, அது கம்யூனிகேஷன் மீன்ஸ எமர்ஜென்சில எப்படி பயன்படுத்தலாம்னு செமினார்ல உங்கப்பா பேசின ஒரு விஷயம், அதனால கன்ஃபார்மா எனக்கு உங்கப்பாவத் தெரியும்னு யோசிச்சுட்டேன்னு அப்பாவும் சொன்னாங்க”

“அதைத்தான் கொடுமைன்றேன், உங்கட்ட அப்பவே சொல்லிட்டு, நான் இப்ப அப்படி குடஞ்சு குடஞ்சு கேட்டதுக்கு கூட உங்க ஆத்துக்காரர் சொல்லல”

“ஹா ஹா அது என் விஷயம் இல்லையா, அத நானா சொல்ல விரும்பினா மட்டும்தான் சொல்லலாம்னு யோசிச்சுருப்பாங்க. அப்பா அப்படித்தான் சின்னதோ பெருசோ என் விஷயம் எதிலயும் நான்தான் முடிவெடுக்கணும்னு நினைப்பாங்க”

சட்டென அமைதியானாள் வாணி. திரும்பி மாமாவை ஒரு பார்வை பார்த்தாள்.

“என்ன பேச்சக் காணோம். சரி போதும் இந்த இன்டர்வ்யூ வாணிமா. நேரம் ஆகுது பாரு?” அம்மாவும் பேச்சை முடிக்க முனைய,

“மீ.. மீ முக்கியமானத நீங்க சொல்லலையே?” அவசரமாய் இடையிட்ட வாணி,

“என்னதுடி?” என்ற அம்மாவின் அரை நொடி அவகாசத்தில்,

“அந்த கோழிக் கிறுக்கல் ஹெட் வெயிட் கருணாகரன உங்க தலைல கட்டிட்டாங்களே அதப் பத்தி ஒரு வருத்தமும் இல்லையா உங்களுக்கு?” என சீண்டினாள்.

“என்ன உத வேணும்ங்குதா உனக்கு? எனக்கு உங்க அப்பா கிடச்சது போல ஒருத்தர் உனக்கும் அமையணுமேன்றது மட்டும்தான் இப்போதைய என் ஒரே வேண்டுதல். என்னவிடல்லாம் நல்ல மேரேஜ் லைஃப் யாருக்கும் கிடச்சுருக்கும்னு எனக்கு தோணல” அம்மா சொல்ல,

“பார்ரா” இவள் ஆச்சர்யம் போல் திருப்ப,

அம்மா இப்போது சின்னதாய் சிரித்தார்.

“என் அண்ணா யார்ட்டயும் பேசின போல” என விஷயத்தை புரிந்து கொண்டார்.

“என்ன சொன்னாங்க?” விசாரித்தார்.

வாணி மறுக்கவும் இல்லை, விளக்கவும் இல்லை.

“எதுக்கு மம்மி நீங்க ஸ்கூல் ஆரம்பிக்கல? பணப் ப்ரச்சனையோ?” என விசாரித்தாள்.

“இதென்ன கேள்வி, ஆரம்பிக்கிறேன்னு சொன்னா தாத்தா தராமலா இருந்திருப்பாங்க? அப்படில்லாம் எதுவும் இனிஷியேட்டே செய்யலைன்றதுதான அவங்க கோபமே?”

“அப்றம் ஏன் மம்மி?”

“ஏன்டி புரியாத மாதிரியே கேட்கிற? அப்பாக்கு இப்படி ட்ரான்ஸ்ஃபர் ஆகிட்டே இருக்றப்ப எப்படி நான் ஆரம்பிக்க? அப்பா ஒரு இடத்திலும் நீ ஒரு இடத்திலும் இருக்கணும்னா அப்பல்லாம் நீ ஒத்துகிட்டு இருப்பியா?”

“ம்ஹூம்”

“அதேதான். நானும் இருந்துக்க மாட்டேன். அப்பா கூட ஒரு டைம் லைட்டா சொல்லிப் பார்த்தாங்க. அன்னைக்கு முழுக்க நான் சாப்டல, அதோட அதப் பத்தி அவங்க வாயே திறக்கிறது இல்ல”

“வெரிகுட் நேரே எமோஷனல் ப்ளாக்மெயில்தான்.”

“ஓஹோ நாங்க அழுதா அது ப்ளாக்மெயில், நீங்க அழுதா மட்டும் எக்க்ஷ்ப்ரெஷன் ஆஃப் எமோஷன் போல”

“அச்சச்சோ நான் இந்த ஆட்டத்துக்கு வரல, அது சரி ஏன் மம்மி இதெல்லாம் நீங்க மாமாட்ட சொல்லலையா?”

“சொல்லாம எங்க போனேன்? விம் போட்டு விளக்கோ விளக்குன்னு விளக்கியாச்சு, அவங்க ரொம்ப சிம்பிளா அப்பா வேலைய விட்டுட வேண்டியதுதானன்றாங்க.

குத்து மதிப்பா படிச்ச நான் ஆசைப்பட்டேன்றதாலயே ஸ்கூல் ஆரம்பிச்சே ஆகணுமாம், ஐஐடில படிச்சுட்டு, இன்னைக்கும் எத்தன நாட்ல இருந்து உன் அப்பாக்கு ஆஃபர் இருக்கு தெரியுமா? அவங்க வேலைய விட்டுட்டு வரணுமாம்.” சற்றாய் அங்கலாய்த்த அம்மா,

“அடிப்படை காரணம் இதெல்லாம் இல்ல வாணிமா, நம்மள பார்க்க ஃபினான்ஸ்ஷியலி அவங்களவிட கஷ்டபடுறது போல தெரியுது என் அண்ணாக்கெல்லாம், அத தாங்க முடியாமதான் இப்படில்லாம் எதிலயாவது காமிக்கிறாங்க, எல்லாம் பாசம்தான் விஷயம்.

அதனால அப்பாக்கோ எனக்கோ அவங்க மேல வருத்தம் எதுவும் இல்ல. நீயும் என்னயவோ அப்பாவையோ அவங்க எதாச்சும் குறையா சொன்னாங்கன்னா கூட பதிலுக்கு அன்பாதான் பேசணும் பழகணும். சரியா?“ எனும் போது,

“அமுதி” என இப்போது இடையிட்டார் சௌந்தர் மாமா. வாணி எழுந்துவிட்டாள்.

“ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்பவும் நிம்மதியா இருக்கேன்” இப்படித்தான் மாமா எதோ சொல்லத் துவங்கினார் தன் தங்கையிடம்.

வாணி அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்துவிட்டாள்.

வந்தவளுக்கு ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில் அங்கு சுவரில் சாய்ந்து, ஒரு காலை சுவரில் மடக்கி ஊன்றியபடி நின்று கொண்டிருந்தான் விசாகன்.

இவளைப் பார்க்கவும் “நிஜமா சொல்றேன் வாணி, உன்ன அப்படியே தூக்கிட்டுப் போய் எங்க வீட்ல வச்சுக்கலாம் போல இருக்கு” என்றபடி அவன் இவளருகில் வரவும் செய்தான்.

ஏற்கனவே தூக்கியடித்த தேகத்தை இவள் அனிச்சையாய் பின்னோக்கி நகர்த்த முயன்றபடி அவன் வார்த்தைகளை அர்த்தம் கொள்ள,

அவள் விழிகளில்தான் தன் வரியின் வீரியத்தை அறிந்து கொண்டான் போலும் விசாகன், அதன் பின்தான் உணர்ந்தவனாக,

“ஐ மீன்.. நீ மட்டும் எங்க வீட்ல இருந்திருந்தன்னா அங்க எல்லாமே சரியா இருந்திருக்கும்” என தன் வார்த்தைகளை திருத்தினான்.

அதுவுமே போதாதென உணர்ந்தவனாக “சாரி…” ஒன்றை உதிர்த்தான். சற்றாய் அவளைவிட்டு விலகியும் கொண்டான்.

“உன்னைப் போல வீட்டுக்கு ஒருத்தர் இருந்தா போதும் வாணி, குடும்ப தகாராறே வராது” தான் சொல்ல வந்ததை இப்பொழுது முழு திருத்தமாக திரும்பவும் ஒரு முறை வெளியிட்டான்.

அவன் சொன்ன அதே நேரம்,

“அதெல்லாம் பேசுற விதமா பேசினா எல்லாவனும் புரிஞ்சுப்பான், லிசி கல்யாணத்துக்கு பாரு, அத்தன பேரும் வந்து மாப்ளைட்ட பேசுறாங்களா இல்லையான்னு” அறையில் சௌந்தர் மாமா மற்ற மாமாக்களைப் பற்றி வாணியின் அம்மாவுக்கு இப்படி வாக்குறுதி கொடுப்பது காதில் விழுகிறது.

கேட்டியா என்பது போல் கட்டை விரலை வைத்து சைகை காண்பித்தான் விசாகன். அதைத்தான் குறிப்பிட்டேன் என கூறாமல் கூறினான்.

“ஆக வழக்கம் போல ஒட்டுக் கேட்டாச்சென்ன?” இன்னுமே அவன் அருகாமையில் தடுமாறிக் கொண்டிருக்க விருப்பமின்றி இப்படியாய் கேட்டு வைத்தாள் வாணி.

அவன் இப்போது என்னதை என்னதாய் சொல்லி வைத்தான் என்பது அடுத்த விஷயம். இது வரையிலும் இவள் குடும்ப விஷயத்தை அல்லவா கேட்டுவிட்டான் என ஒரு தர்மசங்கடமும் அவளுக்குள் உருளுவதாலும் இப்படி கேட்டு வைத்தாள்.

“ஹேய், இங்க வந்து நிக்க சொன்னது உன் சௌந்தர் மாமா, லிசிக்காவ ரூம்ல விட்டுட்டு இங்க வான்னு கண்ல சைகை காமிச்சுட்டுதானே வந்தாங்க.” சூழலை விளக்க முயன்ற விசாகன்,

“கூப்ட்டு வச்சு கேட்க சொல்றத ஒட்டுக் கேட்கிறதுன்னு யாரும் சொல்றது கிடையாது” என்றும் சிரித்தான்.

அவனுக்கு இதாவது தன் வார்த்தைகள் உண்டு செய்த வசதியற்ற உணர்வை நீக்கிப் போடாதா என்ற எதிர்பார்ப்பு.

வாணிக்கோ தான் எதோ பாதுகாப்பு குறித்த ப்ரச்சனை பற்றி சொல்லப் போகிறேனோ, அதிலும் மாமாவுடன் இருக்கும் நபர் பற்றியே எதுவும் சொல்லப் போகிறேனோ என்று நினைத்துதானே மாமா இங்கே வந்தார் என்பது நியாபகம் வருகிறது.

ஆக அப்படி கூட இருக்கும் நபர் மீது சந்தேகம் என்றால் லிசியை விசாகனிடம் தான் ஒப்படைப்பாராமா மாமா? அடுத்தும் இவர்கள் பேசுவதை மற்றவர்கள் கேட்டுவிடக் கூடாதென அதற்கும் காவலாக விசாகனைத்தான் வரச் சொல்வாராமா? அவளின் சிந்தனை இப்படி செலவாகியது.

அதே நேரம் விசாகனோ தன்னை தயார் படுத்த என்பது போல், தன் கண்களை ஒரு முறை இறுக மூடி திறந்து கொண்டவன்,

“இதைத்தான் வாணி அப்பவே சொல்ல ட்ரைப் பண்ணிணேன். என்னமோ உன் விஷயத்தில் நான் கொஞ்சம் அதிகமாவே உரிமை எடுத்துக்கிறேன், அப்றம் யோசிச்சாதான் அது உன் வ்யூல எப்படி இருக்கும்னே புரியுது… ப்ளீஸ் நான் உன்ட்ட பழகுறது எதையும் தப்பா எடுத்துக்காத” என்றான்.

அவன் முன்பு பாதியில் விட்டுப் போன பேச்சைக் குறிப்பிடுகிறான் என வாணிக்கும் புரிகிறதுதானே!

“அப்போ பேசுறப்ப கொஞ்சம் அதிகமா பழச பேசிட்டனோன்னு தோணிச்சு, ஆனா அதெல்லாம் சொல்லாம நீ எனக்கு முக்கியம், ரொம்ப ரொம்ப முக்கியம்னு மொட்டையா சொன்னா எப்படி இருந்திருக்கும்?” அவன் தொடர,

‘அநேகமா கன்னத்தில் நாலு விழுந்திருக்கும்’ இப்படி ஓடிக் கொண்டிருந்தது இவள் மனது.

“எனக்கு உன் ஃப்ரெண்ட்ஷிப் வேணும், அதே நேரம் அதை நீ சரியாவும் புரிஞ்சுக்கணும்னு ரொம்ப இருக்குது.” என இதையே இப்போது ஒரு கேள்வி போல் முடித்தான்.

‘உன்ட்ட அட்வான்டேஜ் எடுக்க நினைக்கிற பொறுக்கின்னு யோசிச்சுடாதன்றான்.’

அவனது அத்தனை முரட்டுத்தனத்துக்கும் முசுட்டு பேச்சுக்கும் உள்ளே இருக்கும் மென் இதயத்தின் அழகிய வெளிப்பாடாக மட்டுமே இது அப்போது வாணிக்கு புரிந்தது. அது அவனை இன்னுமே இவளை நேசிக்கவே தள்ளியது.

“கம்மிங் சார்ட்டர்டே லஞ்சுக்கு வந்துடுங்க” என வாணி அவனுக்கு பதில் கொடுத்தாள். உன் பயம் எதுவும் அவசியமற்றது என புரியவைக்க இந்த வார்த்தைகளே போதும் எனப் பட்டது அவளுக்கு.

“வெஜ் ஒன் வீக், நான் வெஜ் ஒன் வீக்னு மாத்தி மாத்தி வச்சுக்கலாம். வெஜிடெபிள்ஸ் இங்க நாங்களே பார்த்துப்போம், ஆனா நான்வெஜ் வேணும்னா கொஞ்சம் சீக்கிரமா நீங்கதான் வங்கிட்டு வரணும்” எனச் சொல்லி ‘நமது நட்பில் இந்த அளவுக்கு நீ உரிமையும் எடுத்துக் கொள்ளலாம் என்பதை அவனுக்கு தெரியப் படுத்தினாள்.

மாமா சொல்லி இருக்கிறாரே, அதுவும் கூட அவளின் இந்த வீக்லி லன்ச் முடிவுக்கு காரணமாயிருக்கலாம்.

மறுநாள் காலையில் வழக்கத்தைவிட வெகு சீக்கிரமே வாணி கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள். அவசர அவசரமாக என்றாலும் துள்ளலும் துடிப்புமாக கிளம்பிச் சென்று கொண்டிருந்தாள். இன்னைக்குத்தான் ஃப்ரெஷர்ஸ் டே ஆச்சே!

முன்பு பாபநாசத்தில் இருந்த விசாகனின் தந்தை இப்போது சென்னையில் குடியேறிவிட்டாராம். விசாகனைத் தவிர அவனது அனைத்து சகோதரர்களும் மருத்துவர்கள்தானாம்.

இப்போது இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் பெரிய பெரிய மருத்துவமனைகளை அமைத்து அதை இயக்கிக் கொண்டிருக்கிறார்களாம் அவர்கள். யாரும் தமிழகத்தில் இல்லை.

அதற்கு முன்பு, தமிழகத்தின் பல சிறுநகரங்களில் ஓரளவு பெரிய மருத்துவமனைகளை அமைத்திருந்தார் போலும் விசாகனின் அப்பா. அந்த மருத்துவமனைகளை பொறுப்பெடுத்து இயக்கும் பணியை இப்போது விசாகனிடம் கொடுத்திருக்கிறாராம் அவர்.

அதில் ஒன்றுதான் இங்கு பாபநாசத்தில் இருப்பதுமாம். இது அவர்களது முதல் மருத்துவமனை போலும். அதில்தான் ஒரு அறையில் அவன் தங்கி இருப்பதாம்.

பெரும்பாலும் விசாகன் இந்த மருத்துவமனை அலுவலகத்தில்தான் இருப்பான் என்றாலும், அவ்வப்போது அவன் பொறுப்பில் இருக்கும் மற்ற மருத்துவமனைகளுக்கும் சென்று வருவானாம்.

ஆக இன்று அவன் வருவானா மாட்டானா என வாணிக்கு தெரியாது. அதோடு இதுக்கெல்லாம் வந்து நின்றால் அவன் எப்பதான் தன்னோட வேலைய பார்க்கிறதாம்?

என அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டு காரிடாரில் திரும்பினால் சற்று தொலைவில் ஒரு காலை தரையில் சற்றாய் உதைந்தபடி தலை குனிந்து நின்றிருந்தான் அவன். அஃப் கோர்ஸ் எதிரில் லிசி. குற்றம் ஒப்புவிக்கும் படலம் போலும்.

எதுக்கு இத்தனை காலைலயே வந்து வாங்கிக்கட்டிக் கொண்டு இருக்கிறான் என்றிருந்தாலும் நடையில் வந்துவிட்ட ஓட்டத்தை வெளிப்படுத்தாமல் போய் சேர இவள் படாதபாடு பட்டாள்.

இவள் அருகில் போகும் போது, “ஸீ சமீக்கு அவ மூக்குவரைக்கும்தான் வளந்திருக்கு. எனக்கு நாடி வரை வளந்துட்டு, நாங்க பெட் வச்சு நான் ஜெயிச்சுருக்கேன், இதுலலாம் கண்ணு வைக்காத” என சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த மூக்கு வரை, நாடிவரை என்பது முடியின் நீளம் என்பது அவன் முன் நெற்றி முடியை பிடித்து இழுத்து வைத்து காண்பித்துக் கொண்டிருப்பதிலேயே இவளுக்கு புரிந்தது.

“என்னது அந்த ஜடா முடிய ஜெயிச்சுட்டியா?” லிசி நெஞ்சில் கை வைத்தபடி விசாரிக்க,

“அட அக்கா முன் பக்க முடிய மட்டும் சொல்றேன், பைதவே என் சமீ செல்லத்துக்கு இப்படி ஜடாமுடின்ற நேம்லாம் சூட்டாகவே இல்ல. ஷி இஸ் மை ஏஞ்சல், டார்லிங், லட்டு பேபி” விசாகன் சொல்லிக் கொண்டு போன வகையில் உண்மையில் வாணிக்கு வாய்விட்டு சிரிக்க வருகிறது.

அவன் லிசியை எரிச்சல் படுத்த மட்டுமே இப்படி பேசுகிறான் என்று புரிகிறதுதானே!

“டேய்!!! எதாவது சொல்லிடப் போறேன்!” என லிசி அங்கு ரியாக்ட் செய்து கொண்டிருக்க,

இங்கு வாணிக்கோ ‘இருந்தாலும் சாருக்கு பொண்ணுங்கதான் க்ளோஸ் சர்க்கிள்ள அதிகம் போலயே” என ஓடுகிறது ஒன்று.

“எதோ நேரத்துல யாரோ எப்படியோ கேட்டு ப்ரச்சனை ஆகிடக் கூடாதுடா” லிசி இப்போது கொஞ்சம் சீரியஸ் டோனுக்கு வர முயல,

“கேட்கட்டும், ப்ரச்சனை வரட்டும், சோ வாட்? என் செல்லம்ஸ் அது. சமீ டியர் ஐ லவ் யூ டி” கூவாத குறையாக முடித்தான் விசாகன். முழு மொத்தமாய் லிசியை கடுப்பேத்தினான்.

தன்னை மீறி தனியாக சிரித்துக் கொண்டே நடந்தாள் வாணி.

வாணி தங்கள் விடுதியிலிருந்து கல்லூரிக்கு செல்லும் காரிடாரில் சென்று கொண்டிருக்கிறாள். இதில் விடுதி மாணவிகள் மட்டுமே செல்ல முடியும். இதன் முடிவில் மற்ற மாணவ மாணவிகளும் கல்லூரிப் பகுதிக்கு நுழைய என ஒரு பொது வாசல் இருக்கும்.

அதற்கு அருகில் ஆனால் இவர்கள் விடுதிப் புறமாகத்தான் லிசியும் விசாகனும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் அந்த பொது வாசல் அருகில் பைக் ஒன்று வந்து நிற்கிறது.

“லேட் ஆகிடும்னு நினைக்கிறேன்பா, எப்ப வரணும்னு நானே கால் பண்றேன்” என கேட்கிறது சற்றே கொஞ்சலான ஒரு பெண் குரல்.

வாணி வந்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து அந்த குரலுக்குரியவள் தெரியவில்லை எனினும், அக் குரல் வரவும் சட்டென அட்டென்ஷனுக்கு வரும் விசாகனின் உடல்மொழி படு தெளிவாக காணக் கிடைக்கிறது இவளுக்கு. அவன் முகத்தில் ரசனை, ஆண் வெட்கம், ஆசை, கர்வம் இன்ன பிற.

இவள் வயிற்றில் ப்ரளய பீதி.

சற்று முன் அவன் எதோ சமீயை சொல்லிக் கொண்டிருந்ததற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளது. அது முழு விளையாட்டு. இது முழுக்கவும் இயல்பாய்… நிஜமாய்…இவளுக்கு ரணமாய்.

“ஸ்ஸ்ஸ்… இன்னைக்கே வராளா இவ?” மிக மிக ரகசிய குரலில் லிசியிடம் கேட்டபடி அந்த பெண் படியேறிக் கொண்டிருக்கும் நுழைவு வாயிலுக்கு முதுகுகாட்டி அவசர அவசரமாக சுவர் புறமாக பார்த்து நின்று கொண்டான் இங்கு விசாகன்.

வாணிக்கு வலிக்க வலிக்க திடும் திடும் என இதயத்தில் இடிக்கிறது இடி.

“ச்சு அக்கா, போய்ட்டாளா அவ?” வாணி விசாகனை அடையும் போது விசாகன் இப்படித்தான் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் புறம் சற்றும் திரும்பாமல் அந்த பகுதியை கடந்து சென்றிருந்தாள் அந்தப் பெண்.

“போய்ட்டாடா எரும, இப்ப எதுக்கு இவ்ளவு சீன்? லவ் பண்றன்றது அடுத்த விஷயம், முதல்ல உனக்கு அவ சின்னதுல இருந்து ஃப்ரெண்ட்டுடா” லிசி எரிச்சலுடன் கடிக்க,

வாணிக்கோ வயிற்றுப் பகுதி இல்லாது போனது போல் உணர்வு.

“ப்ச், முடியும் அதுவுமா நான் சிம்பன்சி போல இல்லையா?, ரெண்டு நாள் கழிச்சுதான வருவா, அதுக்குள்ள வெட்டிடலாம்னு பார்த்தேன்” அவன் விளக்கிக் கொண்டிருக்க,

ஏனோ வாணிக்கு விசாகனிடமோ லிசியிடமோ கூட எதுவும் சொல்லப் பிடிக்கவில்லை. அமைதியாகவே அவர்களை கடக்க முயன்றாள்.

“ஹேய் உனக்கும் என்ன தெரியலையா, நான்தான்மா நான்” என இப்போது இவளுக்கு குறுக்காக வந்து நின்றான் விசாகன்.

“சே இந்த முடியால வாணி த ஜீனியஸ்கே என்னை தெரியலைனா, இனி இத வெட்டாம விடுறது தப்பு” சொல்லிக் கொண்டவன்,

“எனக்கு பின்னால போறால்ல அந்த பொண்ண நல்லா பார்த்துக்கோ வாணி, அவதான் ரவளி” என்றான் அத்தனை அத்தனை ஆர்வம் மின்ன.

இவளுக்குள் ஏனோ கொப்பரை கொப்பரையாய் கொதி நிலை திரவம் கொட்டி கொட்டிக் கவிழ்கிறது. உச்ச ஜுரத்தை தான் ஒரே நொடியில் அடைந்திருப்பதை அர்த்தமின்றி உணர்ந்தாள் வாணி.

“நம்ம கேங்கல அவதான் அடுத்த மெம்பர், எனக்கே எனக்கான குடும்பத்தோட முகம் தெரிந்த ஒரே நபர், அதாவது மிசஸ் விசாகனா வரப்போற ஜீவன்” கண்கள் மாத்திரம் சிரிக்க, சுந்தர சுகங்கள் மெல்லிய மெல்லியதாய் துலங்க, இவள் என்ன சொல்லப் போகிறாளோ என அதீத ஆர்வத்தில் இவளை அவன் பார்த்தபடி சொல்ல,

இவள் ரத்தமற்ற நரம்புகளில் எதேச்சதிகாரம் செய்கிறது ஆட்கொல்லி வகை வெறுமை. அவன் கண்களைக் காணுவதைக் காட்டிலும் அவனைத் தாண்டி அவனுக்கு பின்னாக சென்று கொண்டிருக்கும் அந்த ரவளியை பார்த்துவிடுவது உத்தமம்.

சின்னதாய் சாய்ந்து எடையற்ற உயிரோடு எட்டிப் பார்த்தாள் வாணி.

“நேத்தே உன்ட்ட சொல்லணும்னு நினச்சேன், டைமே அமையல” அவன் சொல்பவைகளை செவிக்குள் செலுத்தவிடாமல் தடுக்க தெய்வமே எதாவது வழி இருக்கிறதா?!

பால் ஊதா வண்ண பாவாடை தாவணியில், இயல்புக்கும் சற்று குறைவான உயரத்தில் தேவைக்கு மேல் வெகுவான சதைப் பிடிப்புடன் சென்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் முதுகுப் பகுதிதான் இவளுக்கு காணக் கிடைக்கிறது.

‘அழகின் அடிப்படையில் வந்ததல்ல இந்த காதல் என்றால், அதை குறையென நினைக்க இவள் யாராம்?’ வார்த்தையற்ற இவள் குரல் வளையை நெருக்கிப் பிடித்து நியாயம் பேசுகிறது இவளது மனசாட்சி.

கூடவே காணக் கிடைக்கிறது, இவளுக்கு எதிரில் இவளைப் பார்த்து நின்றிருக்கும் விசாகன், திரும்பாதது போல் தலையை மட்டுமாய் சற்றாய் திருப்பி, ஒற்றை விரலால் புருவத்தை தேய்த்துக் கொண்டு, கடைக் கண்ணால் அந்த ரவளியை பார்க்கும் பார்வை.

செத்தழலில் இவள் மென்தேகம் நின்றிருந்து எரிந்தாலும் என்றேனும் மறந்திடுமா இந்த ஒரு காட்சி?!

இரும்பாய் இறுகி இருந்த உதடுகளை எப்படி இழுத்துப் பிரிக்க? என்னவென எதைச் சொல்ல எனத் தெரியாமல் இவள் விழித்த நொடியில்,

“ப்ச் ப்ச், நீ கிளம்பு, இங்க நின்னு பேச வேண்டாம்” என இவளை விசாகன் கிளம்பவும் சொன்னான்.

அப்படியே அவனை கடந்தாள் வாணி.

“நம்ம ரவளிப் பிள்ளைக்கு நல்ல முடில்ல” விசாகன் லிசியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறானாய் இருக்கும்.

வாணியின் கண்கள் அனிச்சையாய் அந்த ரவளியின் இறுகிப் பின்னப்பட்ட நீண்ட சடைப் பின்னலில் போய் சிக்குகிறது என்றால், இங்கு இவள் கையோ என்ன செய்கிறோம் என்பதையே எண்ணாமல் இழுத்து முன்னால் போட்டுக் கொள்கிறது இவளது சடைப் பின்னலை.

குனிந்து ஒரு முறை தன் சடையப் பார்க்கும் போதுதான், தனது இத்தனைப் பரிதவிப்புக்கும் காரணம் தான் விசாகனை தன்னவனாய் உணர்ந்து வைத்திருப்பதுதான் என்பதே புரிகின்றது வாணிக்கு.

விசாகனும் வாணி தன் சடைப் பின்னலை இழுத்துப் போட்டு பார்த்துக் கொள்வதை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவனுக்கு மட்டும் இது புரியாதாமா? அகோர ப்ரளயம் அவனுக்குள்ளும்தான்.

தொடரும்…

Friends கதை எங்கோ தொடங்கி எங்கல்லாமோ போவது போன்று தோன்றலாம், இதுதான் நீங்கள் வாசிக்கும் எனது முதல் கதையாக இருந்தால் நிச்சயம் நான் இதை சொல்லியே ஆக வேண்டும். அனைத்தும் ஒரு புள்ளியில் வந்து முழு அர்த்தமுடன் இணைத்து விடும். அதோடு கதையின் முடிவு சர்வ நிச்சயமாக Happy Ending தான். ஆக சந்தோஷமாகவே தொடருங்கள்.

கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். மேலிருக்கும் வாக்கு பதிவில் வாக்கும் பதியுங்கள்.

கருத்துக்களை பதிய  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!