ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 5
பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ணிக் கொண்டாள் ராதா. மகனுக்குப் புடவை கட்டிப் பூ வைப்பது ரொம்பப் பிடிக்கும் என்று சுஜாதா அன்று சொல்லி இருந்ததால் ஏற்பாடுகள் பலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கோல்ட் நிற ஸாஃப்ட் ஸில்க் சாரி. அடர்ந்த மெரூன் கலரில் ஹெட் பீஸ். கோல்ட்டும், மெரூனும், பச்சையும் கட்டங்கள் போட்ட கண்டாங்கி ஸ்டைல் ப்ளவுஸ். தலையில் மலர்ந்தும் மலராத மல்லிகைப்பூ. லேசாகக் கண்களில் மை தடவி சின்னதாக ஒரு மெரூன் பொட்டு வைத்து இருந்தாள்.
அப்போதுதான் பாத்ரூமிலிருந்து வந்த அர்ச்சனா அப்படியே நின்று விட்டாள். தோழியைச் சுற்றி நடை பயின்றவள்,
“பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ!” என்று பாடினாள்.
“போடி அரட்டை…” அவள் முதுகில் ஒரு அடி வைத்த ராதா கிளம்பி விட்டாள்.
குளிர் காற்றில் கலந்திருந்த தேயிலையின் வாசத்தை அனுபவித்த படி எஸ்டேட்டின் முன்னால் ஸ்கூட்டியை நிறுத்தினாள்.
அன்று சனிக்கிழமை. நிதானமாக ராதாவால் எல்லாவற்றையும் பண்ண முடிந்தது. இருந்தாலும் மனதுக்குள் ஏதோ ஒரு படபடப்பு.
பின்னேரம் ஆத்மிகாவைப் பார்க்கப் போக வேண்டும். சனி, ஞாயிறு பள்ளிக்கூடத்தில் ராதாவைப் பார்க்க முடியாததால் வீட்டிற்குக் கட்டாயம் அழைப்பார் சுஜாதா. இல்லாவிட்டால் ஆத்மிகாவை அவரால் சமாளிக்க முடியாதாம்.
‘உன்னைப் பார்க்கலைன்னா இந்தக் குட்டிப் பொண்ணு என்னைப் படுத்தி எடுக்குது. ஹாலிடேய்ஸுக்கு நீ சென்னை கிளம்பினா நான் என்ன தான் பண்ணப் போறேனோ!’ இது சுஜாதாவின் புலம்பல்.
ஸ்கூட்டியை அந்த ப்ளாக் ஆடிக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள் ராதா. மானேஜர் போலும், ஓடி வந்து வரவேற்றார். ஒரு ரூமைக் கை காட்டியவர்,
“அந்த ரூம் மேடம்.” என்றார். தலையை ஆட்டிப் புன்னகைத்துக் கொண்டாள்.
‘தன் வருகை அறிவிக்கப்பட்டிருக்கிறதா, இல்லை… தான் வந்ததைப் பார்த்தானா…’ மனதுக்குள் அவசரமாக ஒரு பட்டிமன்றம் நடந்தது.
கதவை லேசாகத் தட்டினாள். அந்த ஆழ்ந்த குரல் அவளை உள்ளே அழைத்தது.
“குட்மார்னிங் சார்.”
“குட்மார்னிங்.” அவன் பார்வை அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பிரித்து மேய்ந்தது. பார்ப்பது அபராஜிதன் என்பதால் பொறுமையாக நின்றிருந்தாள் ராதா. இதுவே வேறு யாராவதாக இருந்திருந்தால் கன்னம் பழுத்திருக்கும். பார்வையின் வீரியம் அப்படித்தான் இருந்தது.
“உக்காருங்க.”
“ம்…” லேசான புன்னகையோடு அமர்ந்து கொண்டாள்.
“சொல்லுங்க ராதா?”
“சார்?”
“உங்க மனசுல என்ன இருக்கோ அதைத் தயங்காம நீங்க சொல்லலாம்.”
‘அடப்போடா லூசுப்பயலே! என் மனசுல இருக்கிறதை நான் சொன்னா நீ மிரண்டுருவ!’ மனதுக்குள் நினைத்தவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
அவள் பக்கமாக எதையோ நகர்த்தி வைத்தான் அபராஜிதன்.
‘செக் புக்.’
“ப்ளான்க் செக். சைன் பண்ணி இருக்கேன். அமௌன்ட்டை நீங்க ஃபில் பண்ணிக்கோங்க.” நிதானமாக வந்தது அவன் குரல்.
ராதா குழம்பிப் போனாள். ‘இவன் என்ன பேசுகிறான்?’ குழப்பத்தோடே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“எதுக்கு இது?”
“அதை நீங்க தான் சொல்லணும்.”
“புரியலை.”
“சம்பந்தமே இல்லாத நீங்க என் வீட்டுக்கு வர்றீங்க. என்னோட அம்மாவையும், பொண்ணையும் அக்கறையாப் பாத்துக்கிறீங்க. இதெல்லாம் எதுக்காக? இதுக்காகத்தானே…” அவன் கண்கள் ஒரு நொடி அந்தச் செக் புக்கைத் தொட்டு மீண்டது.
சூடான நீரை முகத்தில் வாரி இறைத்தாற்போல இருந்தது ராதாவிற்கு. துடித்துப் போனாள். அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தான் அபராஜிதன்.
‘சம்பந்தமே இல்லையா? உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையா?’ ஊமையாய் மனது கிடந்து அழுதது.
“இதுல சங்கடப்பட ஒன்னுமே இல்லை ராதா. ஆத்மிகாவுக்கு ஒரு ‘நனி’ ஏற்பாடு பண்ணி இருந்தா நான் இதைப் பண்ணித்தானே இருக்கணும்?”
ராதா என்று அவன் சகஜமாக அழைத்தது அவள் வெட்கம் கெட்ட மனதுக்கு அத்தனை இதமாக இருந்தது. பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டவள் மௌனமாகவே எழுந்தாள்.
“என்னாச்சு ராதா? ஏன் எந்திருச்சுட்டீங்க?” நகரப் போனவளை நிறுத்தியது அந்தக் குரல். கணக்கில் கொள்ளாமல் இரண்டெட்டு எடுத்து வைத்தவளை எழுந்து வந்து வழி மறித்தான் அபராஜிதன்.
“ஓகே! ஓகே! அப்போ உங்க டார்கெட் மணி இல்லை. மணி இல்லைன்னா… அப்போ இதுவா?” அவள் கரம் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன் அந்தச் சின்ன இடையை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
அந்தத் திடீர் அணைப்பை உணர்ந்து கொள்ள ராதாவிற்குச் சில நொடிகள் தேவைப்பட்டது. ஒரு திடுக்கிடலோடு அண்ணாந்து பார்த்தாள் பெண்.
அவன் கண்களில் அத்தனை மயக்கம் தெரிந்தது. இடையை அணைத்திருந்த அவன் கைகள் புதுக்கவிதை ஒன்றை ராதாவிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன.
இன்னும் கொஞ்ச நேரம் அந்த மோன நிலை நீடித்திருந்தால் ராதாவும் மயங்கித் தான் போயிருப்பாள். ஆனால் அபராஜிதனின் வார்த்தைகள் திராவகமாக அவளைப் பதம் பார்த்தது.
“இதுவும் சகஜம் தான் ராதா. பார்க்க நல்லா, பசையோட இருக்கிற பசங்க கிட்ட பொண்ணுங்க இதை எதிர்பார்க்கிறது தப்பில்லை தான்.” அவன் கை அவள் இடையைச் சற்றே அழுத்திப் பிடித்தது.
ஆவேசமாகத் தன்னோடு நெருங்கி நின்றிருந்தவனைத் தள்ளி விட்டவள் கதவை நோக்கிப் போனாள். அவள் கதவை நெருங்கும் போது அபராஜிதனின் கை அவனது வலது கன்னத்தைத் தடவிக் கொடுத்தது.
‘ராதா அபராஜிதனை அறைந்திருந்தாள்.’
கதவின் அருகில் போனவள் மீண்டும் திரும்பி வந்தாள். எதுவும் பேசவில்லை. ஆனால், பல்லைக் கடித்தபடி சுட்டு விரலை உயர்த்திப் ‘பத்திரம்’ காட்டினாள். கண்கள் கலங்க மறுத்து அவனைக் கோபமாக உறுத்து விழித்தன.
எப்படி ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் பெருக கட்டிலில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
******
அர்ச்சனா அவள் எதிரே அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள். ராதாவின் ஃபோன் திரும்பத் திரும்ப இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. அர்ச்சனா எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்திருந்தாள்.
மனதின் காயம் சிறிது ஆறும் வரை அழுதவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழும்பி உட்கார்ந்தாள்.
“அழுது முடிச்சாச்சா ராதா?” தோழியின் கேள்விக்குப் பதிலேதும் சொல்லவில்லை ராதா.
“இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழுது கரையுற?”
“இன்னும் என்ன ஆகணும் அர்ச்சனா? அவருக்கு இப்படியொரு முகம் இருக்கும்ன்னு நான் நினைச்சே பார்க்கலை.” சொல்லும் போதே குரல் கம்மியது.
“இப்படியொரு முகம்னா… எப்படி? பார்க்க நல்லாத்தானே இருக்கார்?” அர்ச்சனாவின் கேலி ருசிக்கவில்லை ராதாவிற்கு. அவளை முறைத்துப் பார்த்தாள்.
“சரி… சரி… கோபப்படாத. அந்த சுஜாதாம்மா ரெண்டு தடவை கூப்பிட்டுட்டாங்க. நீ முதல்ல அவங்களுக்கு கால் பண்ணிப் பேசு. மத்ததை அப்புறமாப் பார்த்துக்கலாம்.”
“வேணாம் அர்ச்சனா. நான் இனி அங்க போறதா இல்லை. அப்புறம் எதுக்கு வீணாப் பேசிக்கிட்டு.”
“ராதா! அவசரப்பட்டு நீ எந்த முடிவுக்கும் வராத. நான் விசாரிச்ச வரைக்கும் அபி அப்படிப்பட்ட ஆள்ன்னு கேள்விப்படலை. டிஸிப்பிளின், டிக்கோரம் னு வாழுற மனுஷன்னு தான் எல்லாரும் சொல்லுறாங்க.”
“மண்ணாங்கட்டி… அதெல்லாம் இருக்கிற ஆள்தான் இப்படிப் பேசுவாங்களா?” பொங்கி வெடித்தாள் ராதா.
“நான் அப்படிச் சொல்லலை ராதா. அபி ஏதோ ப்ளே பண்ணி இருக்கார்னு தான் எனக்குத் தோணுது. உனக்கு அவர் மேல நம்பிக்கை வைக்க ஒரு நொடி போதுமா இருந்துது. ஆனா அவருக்கு அப்படியில்லை. வாழ்க்கையில ஏற்கனவே ஒரு முறை சறுக்கி இருக்காரு. எல்லாத்திலயும் ஒரு நிதானம் இருக்கத்தான் செய்யும்.”
“அதுக்காக இப்படியா?” மீண்டும் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“எப்படி? காசுக்காக நீ வர்றியோன்னு அவருக்குத் தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கு, கேட்டிருக்காரு. ரெண்டாவது பண்ணினது கொஞ்சம் ஓவர் தான். இருந்தாலும் நான் தப்புன்னு சொல்லமாட்டேன். இந்தக் காலத்துல சில பொண்ணுங்க பண்ணுற வேலைகளைப் பார்க்கும் போது அபியைத் தப்பா நினைக்கத் தோணலை.”
“………………..”
“எல்லாத்துக்கும் மேல நீ அவரைக் கை நீட்டி அடிச்சிருக்க. அவர் நினைச்சிருந்தா உன்னை மாறி அடிச்சிருக்கலாம் இல்லை? பண்ணலியே! ”
ராதா மௌனமாகி விட்டாள். அர்ச்சனா பேசுவதைக் கேட்கும் போது ‘அப்படியும் இருக்குமோ’ என்று நினைக்கத் தோன்றியது.
“கொஞ்சம் பொறுமையா இரு ராதா. எல்லாத்துக்கும் அவசரப்படாத. முதல்ல எழும்பி ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வா. சாப்பிட்டு வரலாம். இன்னும் லேட் ஆனா டைனிங் ஹாலை துடைச்சு வெச்சிட்டு போயிடுவாங்க.”
உடுத்தியிருந்த புடவையைப் பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது ராதாவிற்கு. எத்தனை ஆசையாகப் பார்த்துப் பார்த்து அலங்கரித்தாள். எல்லாம்…
அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்க்கவும் அர்ச்சனாவிற்கு கோபம் வந்தது.
“ராதா!” என்றாள் அதட்டலாக.
சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டவள் எழுந்து உடையை மாற்றிக் கொண்டாள். அர்ச்சனாவிற்காகப் பெயருக்கு உணவைக் கொறித்தாள்.
எவ்வளவு முயன்றும் அன்றைய நிகழ்வை ஓரங்கட்ட முடியவில்லை. பள்ளிக்கூட வேலைகள் ஒன்றிரண்டை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து பார்த்தாள். அதிலும் மனம் லயிக்கவில்லை.
“ராதா! அந்த ஆன்ட்டியோட ஒரு தரம் பேசிடு.”
“வேணாம், விடு அர்ச்சனா.”
“வயசானவங்க. பாவம் அவங்க என்ன பண்ணினாங்க? யாரோ செஞ்ச தப்புக்கு நீ ஏன் யாரையோ தண்டிக்க நினைக்கிற?”
“ம்ப்ச்… விடு அர்ச்சனா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் ஃபோன் அலறியது. ஆனால் இப்போது புது நம்பர்.
‘யாராக இருக்கும்?’ சிந்தித்த படியே ஃபோனைக் காதுக்குக் கொடுத்தாள் ராதா.
“ஹலோ.”
“ஆன்ட்டி…” அழுகையோடு வந்தது அந்த மழலைக் குரல்.
“ஆ… ஆத்மி… ஆத்மிக் குட்டி?” திகைத்துப் போனாள் ராதா.
“ம்… நீங்க ஏன்… இன்னைக்கு என்னைப் பார்க்க வரலை?”
“அது… அது இன்னைக்கு எனக்கு ஃபீவரா இருந்துச்சு டா. அதான் என்னால வரமுடியலை.”
“ஓ… ஆனா நான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன்.” குழந்தையின் குரலில் இப்போது குதூகலம் வந்து ஒட்டிக் கொண்டது.
“என்ன சொல்றீங்க? நீங்க இப்போ எங்க இருக்கீங்க?”
“உங்க ஹாஸ்டல் முன்னாடி தான் நிக்கிறோம் ஆன்ட்டி.” ஆத்மிகா சொல்லி முடிக்கவும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் ராதா. ‘நிற்கிறோம்’ என்றால் இன்னும் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?
“ஏய் ராதா! எங்க போறே?” அர்ச்சனா அழைத்தது அவள் காதிலேயே விழவில்லை. ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள்.
ஹாஸ்டலுக்கு முன்பாக அந்த ப்ளாக் ஆடி நின்றிருந்தது.