ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 10
அந்த ப்ளாக் ஆடி வீட்டிற்கு முன்னால் நிற்கவும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த மீரா இறங்கினாள். ராதாவும் இறங்கப் போக அவளைக் கைப்பிடித்துத் தடுத்தான் அபராஜிதன்.
“மீரா!”
“சொல்லுங்க அத்தான்.”
“நானும் ராதாவும் பீச் வரைக்கும் போய்ட்டு வர்றோம்னு அத்தைக்கிட்ட சொல்லிடு.”
“சரி அத்தான். என்ஜாய்!” கட்டை விரலை உயர்த்திக் காட்டிய பெண்ணுக்குப் புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டு காரைக் கிளப்பினான் அபி.
ராதா எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தாள். கண்களில் மறுபடியும் கண்ணீர் கோர்க்கப் பார்த்தது. முயன்று அடக்கிக் கொண்டாள்.
அபியும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இருள் நன்றாகவே பரவ ஆரம்பித்திருந்தது.
ஆள் அரவமற்ற அந்தக் கடற்கரைச் சாலையில் காரை நிறுத்தியவன் அமைதியாக ராதாவைத் திரும்பிப் பார்த்தான். அவன் பார்வை புரிந்து அவளும் திரும்பிப் பார்க்க, அடைக்கி வைத்திருந்த அவள் கண்ணீர் அணையுடைத்தது.
“ஹேய்! ராது…” அவளை இழுத்துத் தன்னோடு இறுக்கமாக அணைத்தவன் கொஞ்ச நேரம் அவளை அழ விட்டான்.
“என்ன நடந்தது?” அதைக் கேட்கும் போது அவன் குரலில் அத்தனை இறுக்கம் இருந்தது.
“திடீர்னு அவங்க வந்தாங்க.” ஸ்வராவின் பெயரைக் கூட அவள் சொல்ல விரும்பவில்லை.
“ம்…”
“எனக்கு யார்னு தெரியலை. பேரைச் சொல்லவும் தான் ஞாபகம் வந்திச்சு.”
“ம்…”
“அவங்களுக்கு… அவ…” மேலே பேசமுடியாமல் கேவலொன்று கிளம்பியது ராதாவிடமிருந்து.
“ராது… என்னைத் தாண்டி எதுவும் நடக்காது. நீ தைரியமாச் சொல்லு.”
“அவங்களுக்கு ஆத்மிகா வேணுமாம்.”
“வாட்! ஹா… ஹா…” ராதாவின் வார்த்தைகளைக் கேட்டவன் ஆச்சரியத்தையும் மறந்து வாய் விட்டுச் சிரித்தான்.
“திடீர்னு என்ன அந்த அம்மாக்கு அவங்க பொண்ணு மேல அக்கறை வந்திருக்காம்?” கேலியாகக் கேட்டான் அபி.
“இது நாள் வரைக்கும் நீங்க தனியா இருந்தீங்களாம். இப்போ… இப்போ…” திக்கியபடி நிறுத்தினாள் ராதா.
“மேலே சொல்லு ராதா.” கர்ச்சனையாக வந்தது அவன் குரல்.
“இப்போ நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாம். நான் எப்படி ஆத்மிக் குட்டியைப் பார்த்துக்குவேன்னு அவங்களுக்குத் தெரியாதாம். அதனால…”
“இதை எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லுற? ஆத்மிகாவோட அப்பாக்கிட்ட போய்ச் சொல்லுன்னு நீ சொல்ல வேண்டியது தானே ராதா.” அவளை முடிக்க விடாமல் குறுக்கிட்டான் அபி.
“எனக்கு என்ன சொல்லுறதுன்னே அப்போ தெரியலைங்க. அவங்க ஆத்மிகாவைப் பத்திப் பேசினப்போ நான் அப்படியே…” இப்போதும் ராதாவுக்கு கண்கள் பனித்தது.
“ராதா! அந்த அம்மாவோட எண்ணம் இன்னும் உனக்குப் புரியலையா?” கணவனின் கேள்வியில் மலங்க விழித்தாள் ராதா.
“பெத்தவங்க, அவங்க பொண்ணைக் கேட்கும் போது நான் என்னங்க சொல்ல முடியும்?”
“அப்போ நான் யாரு ராதா? எனக்கு ஆத்மிகா சொந்தம் இல்லையா?”
“இப்போ அவங்க பிரச்சினை நீங்க இல்லை, நான் தான்.” மனைவியின் பதிலில் சிரித்தான் அபி.
“எப்பவுமே அவங்க பிரச்சினை நான் தான். உனக்கு அதெல்லாம் புரியாதுடா. புரியவும் வேணாம். உன்னோட அழகான உலகத்துக்குள்ள இதெல்லாம் வர வேணாம்டா.” இதமாக அவன் சொல்ல இப்போது ராதா குழம்பிப் போனாள்.
“வீட்டுக்குப் போகலாமா?” மேலே அவளைச் சிந்திக்க அபி விடவில்லை.
“ம்…”
“ராது… ரெண்டே ரெண்டு நாள், நமக்காக. அதை ஸ்பாயில் பண்ண நான் விரும்பலைடா. புரிஞ்சுக்கோ. என்னைத் தாண்டி எதுவும் நடக்காது. பேபியை உங்கிட்ட இருந்து யாரும் பறிச்சுக்கிட்டுப் போக நான் விடமாட்டேன். சரியா?”
“ம்…” தலையைக் குனிந்து கொண்டு அவள் பதில் சொன்ன அப்பாவித்தனத்தில் அபிக்குச் சிரிப்பு வந்தது.
“ராது… நம்மைச் சுற்றி இருக்கிற இந்த இயற்கை எத்தனை அழகா இருக்கு பார்த்தியா?” அவன் சொல்லிய பிறகு தான் நிமிர்ந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள் ராதா.
ஆள் அரவமற்ற சாலை. ஒன்றிரண்டாக சில தென்னை மரங்கள். காற்று சிலுசிலுவென வீசிக் கொண்டிருக்க வானில் தேய்ந்த நிலா.
பார்வையை அவன் புறமாக அவள் திருப்ப அவன் முகத்தில் காதல் கொட்டிக் கிடந்தது. இதுவரை பேசிய கசப்பான நிகழ்வைத் தூக்கித் தூரப் போட்டவன் அவள் இதழ்களோடு ஐக்கியம் ஆகிப் போனான்.
* * * *
ஊட்டியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது அந்த ப்ளாக் ஆடி. யார் என்ன ஆட்டம் போட்டாலும், உலகமே தலை கீழாக மாறினாலும், எனக்கு நானும் என்னைச் சூழ்ந்தவர்களும் மட்டுமே பிரதானம் என்பது போல நடந்து கொண்டான் அபி.
மாமியார் வீட்டில் கிடைத்த இரண்டு நாட்களையும் கொண்டாடித் தீர்த்தான். ஊட்டியில் தன் வீட்டில் இந்தத் தனிமை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் என்பதால் அவன் இரவுகள் கொஞ்சம் நீண்டு தான் போனது.
ராதாவை அழைத்துக் கொண்டு போய் அவர்களின் சென்னை வீட்டைக் காண்பித்தான். திருத்தங்கள் செய்வதற்காக அவள் சொன்ன ஆலோசனைகளையும் என்ஜினீயருக்குத் தெரியப்படுத்தினான்.
மீரா குறைப்பட்டுக் கொள்ளவும் திரும்பவும் அவளைக் குடும்பத்தோடு ஷாப்பிங் அழைத்துப் போனான். மறந்தும் அவன் ராதாவை எங்கேயும் தனியே விடவில்லை.
‘ட்ரைவர் போடலாமா?’ இது ராதா. ஊட்டிக்கு அவன் திரும்பவும் ட்ரைவ் பண்ணுவது அவளுக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை.
‘எதுக்கு?’ மனைவியின் முகத்தையே பார்த்திருந்தவன் ஒரு உதட்டோரப் புன்னகையோடு கேட்டான்.
‘இல்லை… நீங்க…’ அதற்கு மேல் ராதாவால் பேச முடியவில்லை. இத்தனை வெளிப்படையாக அவளுக்குப் பேசவும் வரவில்லை.
மனைவியின் தடுமாற்றத்தை அபி நன்றாகவே ரசித்தாற் போலத் தான் தோன்றியது.
‘சொல்லும்மா, எதுக்கு ட்ரைவர்?’ வேண்டுமென்றே மீண்டும் கேட்டான்.
‘இல்லை… நீங்க டயர்டா… இருக்கீங்க…’
‘அட! என் பொண்டாட்டியோட அக்கறையைப் பார்றா! ட்ரைவர் தடியனை முன்னால வச்சுக்கிட்டு என்னைக் கையைக் கட்டிக்கிட்டு சும்மா வரச்சொல்லுறியா?’
‘இல்லை… கொஞ்ச நேரம் தூங்கலாம்.’
‘அடப் போடீ… ரூமைப் பொண்ணுக்கு நீங்க தானம் பண்ணினப்போவே பால்கனியை வகை தொகையா பயன்படுத்திக்கிட்ட ஆளு நாங்க. காரை விட்டு வைப்போமா என்ன?’ அவன் கேட்கவும் ராதா தான் நிமிர்ந்தும் பார்க்காமல் ஓடி விட்டாள். அவனின் அட்டகாசச் சிரிப்பொன்று அவளைத் துரத்தி வந்தது.
மகேஷ்வரிக்கும் ரங்கராஜனுக்கும் மனம் நிறைந்து போனது. மகள் முகத்தில் சதா வாடாமல் இருந்த புன்னகை அவர்களுக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்திருந்தது.
கிளம்பும் போது மீரா தான் கலங்கி விட்டாள். அடிக்கடி அக்காவை சென்னை அழைத்து வருகிறேன் என்று அபி சூடம் அணைத்துச் சத்தியம் பண்ணாத குறையாக அவளுக்கு வாக்கு அளித்திருந்தான்.
ப்ளாக் ஆடி அளவுக்கு அதிகமாகவே ஆங்காங்கு ஓய்வென்ற பெயரில் கூத்தடித்து விட்டு ஊட்டி வந்து சேர்ந்திருந்தது. காரை அபி பார்க் பண்ண வீட்டுக்குள் அப்போதுதான் நுழைந்தாள் ராதா.
“ஆன்ட்டீ…” கூச்சலிட்ட படி ஓடி வந்து ராதாவைக் கட்டிக் கொண்டாள் சின்னவள். குழந்தை ஓடி வந்த வேகத்துக்கு ராதாவும் அவளை ஆசையோடு தூக்க கொஞ்சம் தடுமாறிப் போனாள்.
நல்லவேளையாகப் பின்னோடு வந்த அபி ராதாவின் தோளை அணைத்து அவளை நிதானப் படுத்தி இருந்தான். ஆத்மிகா ராதாவின் முகத்தை முத்தங்களால் எச்சில் பண்ண,
“அப்போ அப்பாவுக்கு?” என்றான் அபி. கேட்காமலேயே ஆன்ட்டிக்குக் கிடைத்தது, கேட்ட பிறகே அப்பாவிற்குக் கிடைத்தது.
ராதா குழந்தையைத் தூக்கி இருக்க, அவளைத் தோளோடு அணைத்தவாறு அபி நின்றிருந்தான். இவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்த சுஜாதாவிற்குக் கண்கள் கலங்கி விட்டது.
மனம் நிறைந்து போனது அந்தத் தாய்க்கு. அவர் மகன் ஏங்கியது இப்படி ஒரு வாழ்விற்க்காகத் தானே! ஸ்வராவிடம் அவன் எதிர்பார்த்ததும் இப்படியொரு குடும்பச் சூழலைத் தானே.
“வாம்மா ராதா. அம்மா, அப்பா, மீரா எல்லாரும் சௌக்கியமா?” பழைய கசடுகளைத் தூக்கித் தூரப் போட்டவர் நிகழ்காலத்தோடு இணைந்து கொண்டார்.
“ம்… நல்லா இருக்காங்க அத்தை.” ஆன்ட்டியிலிருந்து அத்தைக்கு அவள் இலகுவாக மாறி இருந்தாள். ஆனால் ஆத்மிகாதான் இன்னும் அந்த ஆன்ட்டியையே பிடித்துக் கொண்டு நின்றாள். ராதாவும் வற்புறுத்தவில்லை. விட்டு விட்டாள்.
வீடு இவர்கள் வருகையின் பின் கலகலப்பாகிப் போனது. அபராஜிதனின் தம்பியும் மனைவியும் அவ்வளவாக வீட்டில் தங்க மாட்டார்கள். அதனால் அவர்கள் இருந்தாலும் ஒன்றுதான். இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
ஆத்மிகாவைத் தான் அன்று கையில் பிடிக்க முடியவில்லை. ஆன்ட்டி ஆன்ட்டியென்று ராதாவை ஒரு வழி பண்ணி விட்டாள். ஆயிரம் கதைகள் இருந்தது அவளுக்கு ஆன்ட்டியிடம் சொல்ல.
பெண்கள் இருவரும் தங்கள் ரூமில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அம்மாவின் ரூமிற்கு வந்தான் அபி.
சுஜாதா கொஞ்சம் கட்டிலில் சாய்ந்த படி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அபியைக் காணவும் எழுந்து உட்கார்ந்தார். அத்தனை சீக்கிரத்தில் அப்படி வருபவனல்ல அவன்.
“வா அபி.”
“தூங்குறீங்களாம்மா?”
“இல்லைப்பா சும்மாதான். நீ சொல்லு.”
“சென்னைல ஷாப்பிங் போயிருந்த போது ஆத்மியோட அம்மா ராதாவைப் பார்த்துப் பேசியிருக்கா.”
“என்னப்பா சொல்ற?” அபி சாதாரணமாகத் தகவல் தான் சொன்னான். ஆனால் சுஜாதா ஆடிப் போய் விட்டார்.
“எதுக்கும்மா அதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? உங்களுக்கும் இது தெரிஞ்சிருக்கணும் எங்கிறதுக்காகத் தான் நான் இதைச் சொன்னேன். வருத்தப்படுத்த இல்லை.”
“அபி! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஆண்டவனுக்கு நன்றி சொன்னேன். எம் புள்ளை முகத்திலயும் அந்தப் பிஞ்சோட முகத்திலயும் இப்போதான் சந்தோஷத்தைப் பார்க்கிறேன்னு நினைச்சேன். அதுக்குள்ள அந்தப் பொண்ணுக்கு மூக்கு வேர்த்திடுச்சா?”
“ம்… விட்டுத் தள்ளுங்கம்மா. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.”
“நீ ஏன்பா ராதாவைத் தனியே விட்ட? நீ கூட இருந்திருந்தா அந்தப் பொண்ணுக்கு அவ்வளவு தைரியம் வந்திருக்காது.”
“இந்தளவுக்கு இறங்குவான்னு நான் எதிர்பார்க்கலை ம்மா. ராதா எப்போ தனியா மாட்டுவான்னு பார்த்திருந்து காய் நகர்த்தி இருக்கா. அப்போ நம்ம மேல இன்னும் ஒரு கண்ணு வெச்சுக்கிட்டுத் தான் இருக்கா.”
“அவளாத்தானே டைவர்ஸ் கேட்டா. அதுக்கப்புறம் இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கிட்டா. இன்னும் என்னப்பா வேணுமாம் அவளுக்கு?”
“ஆத்மிகா வேணுமாம்.”
“என்ன? ஆத்மிகாவா? எதுக்கு?”
“யாருக்குத் தெரியும். நீ என்னோட குழந்தையை நல்லாப் பார்த்துக்க மாட்டேன்னு ராதாக்கிட்ட சொன்னாளாம்.”
“ஆண்டவா! இது அந்த ஆண்டவனுக்கே பொறுக்காதே. ராதா வந்ததுக்கு அப்புறம் தானே ஆத்மிகா அத்தனை சந்தோஷமா இருக்கா.”
“அந்தம்மாவோட பிரச்சினை இப்போ அது இல்லைம்மா. அதை நான் டீல் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க. உங்களுக்கு நடக்கிறது என்னன்னு தெரியணும் இல்லையா, அதனால தான் சொன்னேன்.”
“அபி! அந்தப் பொண்ணு இதோட விடும்னு எனக்குத் தோணலைப்பா.”
“விடமாட்டா. அதே நேரம் நானும் இதைச் சும்மா விடமாட்டேன். நல்லா இருந்தா மட்டும் தான் அபியும் நல்லவன். மோதிப் பார்க்கத்தான் போறாங்கன்னா நானும் ரெடிம்மா.”
“பார்த்துப்பா. சின்னக் குழந்தை. பெரியவங்க போடுற சண்டையில அதோட மனசு பாதிக்கப்பட்டுறக் கூடாது. ராதா என்ன சொன்னா?”
“ஓ ன்னு அழுகை. சமாதானம் பண்ணுறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆகிடுச்சு.” அபியின் முகத்தில் இப்போது லேசான புன்னகை அரும்பியது.
தன் மகனின் முகத்தில் தோன்றிய அந்த நிறைவான புன்னகையில் அந்த அன்னையின் மனம் கனிந்து போனது. அந்த முகத்தை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தவர்,
“ராதா வீட்டுல எல்லாரும் உன்னோட நல்லா நடந்துக்கிட்டாங்களா அபி?” என்றார்.
“ம்… அவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க ம்மா.”
“பின்னே! ராதாவைப் பார்த்தாலே தெரியலையா? அவளைச் சார்ந்தவங்க எப்படி இருப்பாங்கன்னு. ராதா மனசுல எந்தக் குறையும் வந்திரக்கூடாது அபி. நம்மளை நம்பித்தான் அவங்க பொண்ணு குடுத்திருக்காங்க. ஆர்ப்பாட்டமா கல்யாணம் பண்ணுறது பெரிய விஷயமில்லை. அந்தப் பொண்ணை சந்தோஷமா வெச்சுக்கிறதுல தான் எல்லாமே இருக்கு.” அம்மாவின் கவலையில் அபி புன்னகைத்தான்.
“சரிம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க.” சொல்லிவிட்டு தங்கள் ரூமை நோக்கிப் போனான் அபி. ஆத்மிகாவின் ஆர்ப்பாட்டம் இங்கேயே கேட்டது அவனுக்கு.
* * * *
இரவு நன்றாக ஏறியிருந்தது. இரண்டு நாட்கள் பிரிவின் ஏக்கத்தைக் கொஞ்சம் தணித்துக் கொண்டு, ஆத்மிகா அப்போதுதான் கண்ணயர்ந்திருந்தாள்.
அபி பால்கனியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ பேப்பர்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். சின்னவளுக்கு அணைவாகத் தலையணை ஒன்றை வைத்து விட்டு ராதாவும் வெளியே வந்தாள்.
ராதாவின் வரவைக் கூட அபி உணரவில்லை. நல்லவேளையாக அதை ராதா கவனிக்கவில்லை. மனம் மிகவும் சந்தோஷத்தில் மிதந்ததால் சுற்றுப்புறத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அமைதியான இரவு. அருகே காதல்க் கணவன். மனது பொங்கி வழிய அவன் அருகில் அமர்ந்து தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
அப்போதுதான் சட்டென்று நிஜத்துக்கு வந்த அபி கையிலிருந்த காகிதங்களை அப்பால் வைத்தான். இதுவரை இப்படியொரு இணக்கத்தை ராதா காண்பித்ததில்லை. மனதிலிருந்த சஞ்சலத்தைத் தள்ளி வைத்தவன் தன் தோள் சாய்ந்திருந்த மனைவியின் தலையில் முத்தம் வைத்தான்.
“பேபி தூங்கிட்டாளா ராதா?”
“ம்…”
“அத்தைக்கு ஃபோன் பண்ணினயா?”
“ம்…” வார்த்தைகள் அதிகம் வரவில்லை.
“என்ன சொன்னாங்க?”
“ரொம்ப சந்தோஷமா இருக்காங்களாம். அவங்க மாப்பிள்ளை அவங்க பொண்ணை ரொம்ப நல்லாவே பார்த்துக்கிறாராம்.” குரல் குழைந்திருந்தது.
“அப்படியா சொன்னாங்க?”
“ம்… போதாக்குறைக்கு மீரா. பத்து நிமிஷம் பேசினா. அதுல எட்டு நிமிஷம் அத்தான் புகழ்தான் பாடினா.” லேசாகச் சலித்துக் கொண்ட குரலில் அளவிலடங்காக் காதலைத் தான் உணர்ந்தான் அபி.
“மீரா புகழ்ந்தா சரி. அவங்க அக்கா என்ன சொல்லுறாங்க? மீராவோட அத்தான் பத்தி அவங்க அபிப்பிராயம் என்னவாம் ராதா?” கணவனின் கேள்வியில் இன்னும் முகத்தை அவன் கழுத்து வளைவில் புதைத்துக் கொண்டாள் ராதா.
காதலித்திருந்தாலும் இப்படியெல்லாம் அவள் அபியிடம் மனந்திறந்து பேசியதில்லை. ‘சிட்டியில வளர்ந்த பொண்ணாம்மா நீ?’ இப்படித்தான் அடிக்கடி அவளைக் கலாய்ப்பான் அபி.
“என்ன? சத்தத்தையே காணோம்?” அபி மீண்டும் சீண்டவும் மெதுவாக வாய்திறந்தாள் பெண்.
“மீராவோட அத்தான் ரொம்ம்ம்ப நல்லவங்க.” அந்த ‘ரொம்ப’ இல் அதிகமாக அழுத்தம் கொடுத்தாள்.
“ம்…”
“பார்க்கத்தான் கரடுமுரடு. ஆனா மீரா அக்கா மேல ரொம்பப் பாசம் அவங்களுக்கு.”
“இங்கப்பார்ரா! பாசம் மட்டும் தானாமா?”
“தெரியலையே. அதை மீராவோட அத்தான் தான் சொல்லணும்.”
“மீராவோட அக்காக்கிட்டச் சொல்லு ராதா. அவங்க அத்தானுக்கு மீரா அக்கா மேல பாசம் மட்டும் இல்லை. காதல், அன்பு, பரிவு, அக்கறை எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாமே இருக்குன்னு சொல்லு ராதா.” சொல்லி முடித்தவன் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அபியின் பக்கத்தில் இருந்த கட்டுத் தபாலில் ஒன்று மட்டும் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. அதைச் சற்றுத் தள்ளி வைத்தவன் மனைவியைக் கவனிக்கத் தொடங்கினான்.
இவ்வளவு நேரமும் மனதில் இருந்த பாரத்தை இப்போது அவனால் ஒதுக்க முடிந்தது. மனைவியின் மனது இன்று சந்தோஷத்தில் மூழ்கி இருப்பதைப் புரிந்து கொண்டவன் பிரச்சினைகளைத் தற்காலிகமாக ஆறப்போட்டான்.
தானாக நெருங்கிய பெண்மையில் அதன் மென்மையில் திளைத்தவன் அதன் பிறகு வேறாகிப் போனான்.
சைவ முத்தம் கொடுத்தா
ஒத்துப்போக மாட்டேன்…
சாகசத்தைக் காட்டு
செத்துப்போக மாட்டேன்…
கொஞ்ச நேரம் என்னைக் கொல்லைய்யா…