AOA-10

AOA-10

அவனின்றி ஓரணுவும்- 10

பிரபஞ்சத்தின் தோற்றம், பரிமாணம், உருவமைப்பு சம்பந்தப்பட்ட, எல்லா ரகசியத்திற்கும் கேள்விக்குமான விடை அணுக்கள்.  

அந்த அணுக்களுக்குள் பல உபஅணுக்கள் மறைந்திருக்கின்றன. விஞ்ஞானப்படியும் மெய்ஞானப்படியும் அவற்றையெல்லாம் ஒரு கடவுள் அணு நிர்வகிக்கிறது. அதுதான் பிரபஞ்ச இயக்கத்தின் மொத்த சூட்சமம்.

‘திரும்பியும் இவளா!’

ஷெர்லி ஹரிஹரனோடு வருவதைப் பார்த்து பிரபஞ்சன் அதிர்ச்சியுற, அவனுக்குள்ளிருந்த மற்ற கவலை குழப்பங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

இனி இவளை பார்க்கும் தேவையே இல்லை என்று நிம்மதியடைந்த பிரபஞ்சனின் எண்ணத்தில் பெரிய பாறாங்கல்லாக தூக்கிப்போட்டு விட்டார் ஹரிஹரன்.

“கலிபோர்னியா கிளம்புற வரைக்கும் ஷெர்லி நம்ம வீட்டுலதான் இருக்க போறா?” என்று ஹரி சாதாரணமாகச் சொல்ல, பிரபஞ்சனின் முகம் கடுகடுத்தது.

அவனுடைய கருத்தை அவர் கேட்க கூட செய்யாமல், “வா ஷெர்லி… உள்ளே போலாம்” என்று அவளை அழைத்துவிட்டு அவள் பெட்டியை அவரே சுமந்து கொண்டு செல்ல,

“ஹரி… வெய்ட் நான் எடுத்துக்கிறேன்” என்று அவள் சொல்வதைக் காது கொடுத்துக் கூட கேட்காமல் உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்.

ஷெர்லியின் பார்வை அப்போது பிரபஞ்சனின் புறம் திரும்பியது. அவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

‘இவள் எதற்கு இப்போது பெட்டியோடு இங்கே வந்திருக்கிறாள்’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

அவளும் அவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் பார்வையோ வேறுவிதமாக இருந்தது.

யோகா செய்துவிட்டு வந்தபடியால் அவன் இடையில் வேட்டியை மட்டும்  உடுத்திக் கொண்டு மேலாடையின்றி நின்றிருந்தான். அவள் விழிகள் அவனின் அகன்று விரிந்த மார்பினையும் திடகாத்திரமான புஜங்களையும் அளவெடுத்துக் கொண்டிருந்தன.

அதோடு அவள் உதடுகள் அழகாய் வளைந்து புன்னகை செய்ய,

அவனுக்கு சங்கடமாகி போனது. என்ன செய்வதென்று புரியாமல் அவன் விழிக்க, “யு ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட் அன் ஹென்சம்” என்று அவளுக்கே உரிய பாணியில் அவள் சொல்ல, அவன் சற்று திணறித்தான் போனான்.

அவள் இப்படி சொல்லும் போது சிரித்த அவள் கண்கள் அவனுக்கு வேறு சில விஷயங்களை உணரச் செய்தது. அவன் தயங்கி நிற்க அவள் மெல்லிய புன்னகையோடு,

“நான் இங்க ஸ்டே பண்றதுல உங்களுக்கு எதாச்சும் ப்ராப்ளமா?” என்று கேட்டாள்.

‘ஆம்’ என்று சொல்ல தோன்றினாலும் முகத்திற்கு நேராக அவளிடம் அப்படி சொல்ல முடியவில்லை.

“இல்ல ஷெர்லி… அது வந்து… இங்க மேல ஒரே ஒரு ரூம்தான் இருக்கு” என்று அவள் கேட்ட கேள்விக்கான பதிலை வேறு விதமாக உரைத்தான்.

“ஹரி சொன்னாரு? பட் எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல” என்றவள் மேலும்,

“ஹரி எனக்கு நிறைய பிளேசஸ் சுத்தி காட்டிரேன்னு சொல்லி இருக்காரு… அன் அல் ஸோ நான் கலிபோர்னியா போற வரைக்கும் இங்கேயே ஸ்டே பண்ணிக்கலாமான்னு” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,

‘சார்ர்ரர்ர்ர்ர்’ என்று பிரபஞ்சன் ஹரிஹரன் மீது உள்ளுக்குள் எரிமலையாக குமுறி கொண்டிருந்தான்.

ஷெர்லியோ அப்போது, “என்ன மிஸ்டர் பிரபஞ்சன்? உங்களுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லைதானே?!” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டு அவனை கடுப்பாக்க, இல்லையென்று சொல்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியே இல்லை. அவன் வலமும் இடமுமாக தலையை மட்டும் அசைத்து வைத்தான். ஆனால் அவனுக்கு அவள் அங்கே தங்குவதில் கொஞ்சமும் விருப்பமில்லை!

இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே, “ஏ பியுட்டி… வாட்? வாட் ஹப்பேன்? கம் இன்சைட்” என்று அழைக்கவும், “யா யா… ஐம் கம்மிங்” என்று அவள் உள்ளே சென்று விட்டாள்.

அவள் பெட்டியை முன்னமே அவர் மேலே இருந்த அறையில் கொண்டு சென்று வைத்துவிட்டார்.

உள்ளே வந்த ஷெர்லியை சோபாவில் அமர சொல்லிவிட்டு அவளுக்காக தொலைக்காட்சி பெட்டியை இயக்கி அவளிடம் ரிமோட்டை தர, “தேங்க்ஸ் ஹரி” என்றாள் அவள்.

“பீல் ப்ரீ… இது உன் வீடு மாதிரி” என்று சொல்லிவிட்டு அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு அவளுக்காக காபி தயாரிக்கச் சமையலறை நோக்கி விரைந்தார் ஹரிஹரன். இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்த பிரபஞ்சனுக்கு கோபம் பீறிட்டு கொண்டு வந்தது.

அவனும் சமையலறைக்குள் நுழைந்து, “நீங்க என்னதான் நினைச்சிட்டிருக்கீங்க உங்க மனசுல… ஒரு பொண்ணை போய் நம்ம வீட்டுல அதுவும் நம்ம ரூம்ல” என்று அவன் மிகுந்த எரிச்சலோடு கேட்க,

“என்னடா புதுசா கேட்குற? நம்ம வீட்டுக்கு வர கெஸ்ட் யாரா இருந்தாலும் அங்கேதானே தங்க வைப்போம்” என்றவர் மும்முரமாக காபி தயாராப்பில் ஈடுபட்டிருந்தார்.

“அந்த பொண்ணு லோகநாதன் சார் வீட்டுக்கு கெஸ்ட்டா வந்த பொண்ணு… அந்த பொண்ணு இங்க வந்து தங்குறதுனால ஏதாச்சும் பிரச்சனை வந்தா” என்று அவன் தனக்கு ஏதுவான காரனங்களை தேடி பிடித்தான்.

“முதல பிரச்சனையே அதுதான்” என்ற ஹரி மேலும்,

“உனக்கு தெரியுமா? நேத்து அந்த பொண்ணு இங்கே வந்ததால அந்த லோகா வீட்டுக்கு வந்த கெஸ்ட்டுன்னு கூட பார்க்காம வீட்டை விட்டு போக சொல்லிட்டானாம்… அவனுக்கு எவ்வளவு இருக்கும்?” என்று கோபமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

பிரபஞ்சன் இதனைக் கேட்டு அதிர்ச்சியாக ஹரி மேலும்,

“அதான் ஹோட்டலில் ரூம் புக் பண்ணி தங்க போறேன்னு சொன்னவளை கையோடு நான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்… இது அந்த லோகாவுக்கு தெரிஞ்சா நல்லா கடுப்பாவான் இல்ல” என்றார்.

“நீங்க ஏன் அவர்கிட்ட போட்டிக்கு நிற்கிறீங்க… அவர்தான் கொஞ்சம் கூட புத்தி இல்லாம இப்படியெல்லாம் பண்றாருன்னா… நீங்களுமா?”

“ஏன்? அவன் செய்யும் போது நான் செய்ய கூடாதா ? அதுவுமில்லாம நான் அவனை கடுப்பேத்த மட்டும் இப்படி செய்யல… எனகென்னவோ அந்த பொண்ணுக்கு உதவி செய்யணும்னு தோணுச்சு”

“நீங்க உதவி செய்யற அளவுக்கு அந்த பொண்ணு கஷ்டப்படுற குடும்பம் மாதிரி தெரியுதா என்ன? அதுவும் நாடு விட்டு நாடு தனியா வந்திருக்கா… ஹோட்டலில் தங்க கூடவா காசு இல்லாம இருக்கும்… நீங்க பன்றது ரொம்ப ஓவராதான் இருக்கு”

“காசா இப்போ பிரச்சனை… அந்த பொண்ணோட பாதுகாப்பு… ஏற்கனவே பாவம்! ஒரு பிரச்சனையில மாட்டி உயிர் போற அளவுக்கு ஆபத்தை பார்த்துட்டு வந்திருக்கா?” என்று ஹரிஹரன் சொன்ன வார்த்தையில் பிரபஞ்சன் பதில் பேச முடியாமல் நின்றான்.

ஹரி மேலும், “நம்ம வீட்டை விட அந்த பொண்ணுக்கு பாதுகாப்பான இடம்னு எனக்கு வேற எதுவும் தோணல” என்றார்.

“ப்ச்… இருந்தாலும் ஒரு பொண்ணை நம்ம வீட்டில” என்று பிரபஞ்சன் தயங்க,

அவனை நேர்கொண்டு பார்த்த ஹரிஹரன், “ஏன் பொண்ணா இருந்தா என்ன?” என்று கேட்க,

அவன் அவரை மௌன கெதியில் முறைத்து கொண்டிருந்தான். தெரிந்துதான் பேசுகிறாரா ? அதற்கு மேல் எப்படி இவருக்குப் புரிய வைப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.

ஹரிஹரன் அப்போது, “உன் பிரமசரியத்துக்குப் பங்கம் வந்துவிட போகிறதோ என்று பயப்படுகிறியா மகனே?! அப்படியிருந்தால் சொல்லு… உடனடியாக அந்த பெண்ணை இங்கிருந்து அனுப்பிவிடுகிறேன் ” என்று கிண்டலாக அதேநேரம் குத்தலாக கேட்டுவிட்டார்.

அந்த கேள்வியில் சற்றே உணர்ச்சிவயப்பட்டவனாக,“நெவர்… என் கண்ட்ரோலை மீறி அப்படியெல்லாம் எதுவுமே நடக்காது… நடக்கவும் முடியாது”

“அந்த பொண்ணு இங்கே எவ்வளவு நாள் வேணா ஸ்டே பண்ணிக்கட்டும்… எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென சமையலறை விட்டு வெளியேறி வேகமாக சில எட்டுகளில் படிக்கட்டு ஏறி தன்னறைக்கு சென்று மறைந்துவிட்டான்

எப்போதும் நின்று நிதானமாகப் பேசும் பிரபஞ்சனிடம் குடிகொண்டிருந்த இந்த பதட்டமும் வேகமும் அவரின் சந்தேகத்தை வலுக்கச் செய்தது.

இவ்விதம் யோசித்துக் கொண்டே ஹரிஹரன் ஷெர்லிக்கும் அவருக்கும் தயாரித்த காபியை தட்டில் எடுத்து வந்தார்.

தன் காபியை எடுத்துக் கொண்ட ஷெர்லி, “தேங்க்ஸ் ஹரி” என்றவள்,

“ஃபார் பிரபஞ்சன்” என்று ஹரியிடம் கேட்டாள்.

“அவன் காபியெல்லாம் குடிக்க மாட்டான்… மோர்னிங்ல கிரீன் டீ… இவனிங்கல லெமன் கிரேஸ் டீ… சரியான ஃப்ட்னஸ் ப்ரீக்” என்றார் கொஞ்சம் கடுப்போடு!

“தட்ஸ் ஒய் ஹி லுக்ஸ் ஸோஓஓஓஒ ஹென்சம்” என்று வாய்விட்டு இரண்டாம் முறையாக, அதுவும் லயித்துக் கூறி அவன் மீதான ஈர்ப்பை அவள் அப்பட்டமாக வெளிக்காட்டிவிட்டாள்.

ஹரிஹரன் சில நொடிகள் வியப்போடு அவளை பார்த்தவர், “ஏன் பியுட்டி? நான் ஒரு விஷயம் கேட்டா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே?!” என்று பீடிகை போடவும்,

“கேளுங்க ஹரி” என்று காபியை பருகிக் கொண்டே அவர் முகத்தை பார்த்தாள்.

“உனக்கு பிரபா மேல ஸ்பெஷல் அட்ரேக்ஷேன் இருக்குபோல?!” என்று அவர் கேட்ட நொடி அவள் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது. அவள் மௌனமானாள்.

அந்த மௌனமே அவர் வார்த்தைகளை ஆமோதித்தன. சத்யா வீட்டிலிருந்த அவள் புறப்பட்ட போது அந்த பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த ஹரி ஷெர்லியிடம் பேச்சு கொடுத்து சத்யா வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று யூகித்துவிட்டார். அதன் பின்னர் ஷெர்லியை உடன் வந்து தங்க சொல்லி அவர் கேட்ட போது அவள் பெரிதாக பிகுவெல்லாம் செய்யாமல் சம்மதித்துவிட்டாள்.

அப்போதே அவருக்கு இந்த சந்தேகம் உதித்தது. ஆனால் அது தன் மீது கொண்ட மதிப்பால் கூட இருக்கலாமே என்ற ‘லாமில்’ அந்த எண்ணம் தளர்ந்தது.  ஆனால் வீட்டிற்குள் நுழைந்து பிரபஞ்சனை பார்த்த நொடி தாமரை போல் மலர்ந்த ஷெர்லியின் முகமும் அவனைப் பற்றிப் பேசும் போது அவளுக்கு ஏற்படும் உற்சாகமும் அவர் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்துவிட்டது.

ஆனால் இப்போது அவள் மௌனமாக இருப்பதைப் பார்த்தால் இந்த கேள்வி அவளைச் சங்கடப்படுத்திவிட்டதா என்று அவரை யோசிக்க வைக்க, அந்த சமயம் மாடியிலிருந்து இறங்கி வந்தான் பிரபஞ்சன்.

அவன் உடைகள் மாற்றி பார்மல்ஸ் அணிந்திருந்தான். எங்கேயோ அவசரமாகப் புறப்படுகிறான் என்பது அவன் நடையின் வேகத்திலேயே தெரிந்தது.

அவன் இறங்கி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரின் முகத்திலும் வித்தியாசமான மாற்றங்கள்.

ஹரிஹரனுக்கு பயம். தான் ஷெர்லியிடம் கேட்ட கேள்வி இவன் காதில் விழுந்து தொலைத்திருக்குமோ?! என்று

ஷெர்லிக்கோ தவிப்பு.  அவள் கடந்த வந்த பலதரப்பட்ட ஆண்மகன்கள் போல் அல்லாது அவன் அவளை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்கிறானே! ஒருவகையில் அவன் அப்படியிருப்பதால்தான் அவனிடம் அவள் ஈர்க்கப்படுகிறாள் போலும். அது அவளுக்கே புரியவில்லை.

ஆனால் இவர்களின் எண்ணவோட்டங்களை படிக்கும் நிலைமையில் பிரபஞ்சன் இல்லை. அவனின் எண்ணவோட்டங்களோ காட்டாற்று வெள்ளமாக வேறு திசையில் பயணித்து கொண்டிருந்தது. அதே வேகத்தில் அவனும் அங்கிருந்த புறப்பட ஆயத்தமானான்.

“சாப்பிட்டு போடா” என்று ஹரி குரல் கொடுக்க,

“இல்ல இல்ல… லேட்டாயிடும்” என்று சொல்லிவிட்டு அவன் விரைவாக தன் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

இப்போது அந்த கனவு மட்டுமே அவன் எண்ணங்களின் பிரதானமாக இருந்தது. சில தூரங்கள் வேகமாக பயணித்த அவன் பைக் சாலையோரத்தில் நின்றிருந்த ஒரு ஆடவன் அருகில் போய் நின்றது.

“நீ ஃபோன் பண்ணலன்னா நான் காலேஜ் பஸ்ல ஏறி போயிருப்பேன்” என்று அந்த ஆடவன் சொல்ல,

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… அதான் கால் பண்ணேன்… பைக்ல ஏறு சேது” என்றான் பிரபஞ்சன்.

சேது பயோகெமிஸ்ட்ரியில் முதுகலைப் பட்டம் முடித்துவிட்டு ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து கொண்டிருந்தான். சேது மீனவ குடும்பம். ஹரிஹரன் உதவியால்தான் அவன் படித்ததே! சுருக்கமாகப் பிரபஞ்சனும் சேதுவும்  இந்த காரணங்களினால் நல்ல நண்பர்கள்.

“என்ன விஷயம் பிரபா?”

பிரபஞ்சன் சுற்றி வளைக்காமல், “நான் ஒரு கனவு கண்டேன்” என்று அவன் கண்ட கனவை விவரமாக உரைத்தான்.

சேதுவிடமிருந்து பலமான சிரிப்பு சத்தம். “இப்ப எதுக்கு சிரிக்குற” என்று பிரபஞ்சன் கோபம் கொள்ள,

“இப்படியெல்லாம் கூடவா கனவு காணுவாங்க… சை” என்று அவன் முகம் சுளித்தான்.

“கனவெல்லாம் நம்மல கேட்டா வருது” என்று பைக்கை ஒட்டி கொண்டே கடுப்பானான் பிரபா.

“கேட்டா வரும்… ஒரு நயன்தாரா அமலாபால் கூட டூயட் பாடுற மாதிரி டைட்டா ஹக் பண்ணி ஒரு லிப்-லாக் பண்ற மாதிரி… இப்படியெல்லாம்” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே பைக் சாலையோரமாக நின்றது.

“முதல நீ இறங்கு கீழே” என்று பிரபஞ்சன் சீற்றமாக சொல்ல,

“ஏன்? நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்… ஒரு கல்யாணம் ஆகாத இளைஞனுக்கு இப்படியெல்லாம்தான் கனவு வரணும்… இல்லன்னா பயோகெமிஸ்ட்ரிப்படி அவனுக்கு உடம்புல ஏதாச்சும் டிபஃக்ட்” என்று அவன் படித்த படிப்பையும் சாட்சிக்கு உடன் அழைத்துக் கொண்டான்.

பிரபஞ்சனின் கோபம் அதிகரித்தது. கூடவே ஷெர்லியை பற்றிக் கண்ட கனவு வேறு அவனுக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.

“நீ ஒழுங்கா இறங்கு சொல்லிட்டேன்… நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன்கிட்ட போய் சொன்னேன் பாரு” பிரபஞ்சன் எரிச்சலாக,

“ரொம்ப சீரியஸான மேட்டரா பிரபா?” என்று சேது அப்போதுதான் ஓரளவு அவன் மனம் புரிந்து பேச, பிரபஞ்சனின் கூர்மையான பார்வை அவனைத் துளைத்து கொண்டிருந்தது.

“முறைக்காதே… வண்டியை ஸ்ட்ராட் பண்ணு பேசிக்கிட்டே போவோம்” என்று சேது சொல்ல, பிரபஞ்சன் பைக்கை இயக்கினான்.

“இப்ப உனக்கு என்ன தெரியணும் பிரபா?”

“அது நான் கனவு கண்ட மாதிரி சிம்ப்டம்ஸ்… எப்படி எதனால வரும்?”

சேதுவிடம் ஓர் பலத்த மௌனம். பின் அவன் ஆழ்ந்து யோசித்துவிட்டு,

“மூக்கில வாயில எல்லாம் ரத்தம் வருதுன்னு நீ சொன்னாதை பார்த்தா கமல் நடிச்ச தசாதவதாரம் படத்தில வர சீன் மாதிரி இருக்கு… பயோ வார் மாதிரி எதாச்சும் வருமோன்னு பயப்படுறியா?” என்றவன் மேலும்,

“ஆமா… இதுக்கு முன்னாடி நீ கனவு கண்டு எதாச்சும் பலிச்சிருக்கா என்ன?” என்று கேட்க பிரபஞ்சனால் பதில் சொல்ல முடியவில்லை.

அவனுக்கு அந்த மாதிரி இன்டியுஷங்கள் வரும் என்பதும் அது பலிக்கும் என்பதும் ஹரிக்கும் சிறுவயதில் அவனைக் குணப்படுத்திய அந்த யோகாசன பயிற்சி மையத்தில் உள்ள பெரியவருக்கு மட்டும்தான் தெரியும்.

வேறு யாரிடமும் அவனால் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஒன்று அவன் முட்டாளாகப் பார்க்கப்படுவான். அல்லது சாமியாராகப் பார்க்கப்படுவான். பிரபஞ்சனுக்கு இரண்டிலுமே உடன்பாடில்லை. அவன் நண்பனிடம் பதிலேதும் சொல்லாமல் பைக்கை ஒட்டிக் கொண்டிருந்தான்.

சேது அப்போது, “எனக்கு நீ என்ன சொல்ல வரேன்னு சத்தியமா புரியல” என்ற போது அவன் வேலை செய்யும் கல்லூரி வளாகம் வந்தது.

பிரபஞ்சன் வண்டியை நிறுத்த, சேது இறங்கினான்.

“நான் சொல்றதை கொஞ்சம் சீரியஸா யோசி… இப்படி ஒரு டிசேஸ்டர் நடந்தா அதுக்கு என்ன காரணமா இருக்க முடியுன்னும் யோசி… பதில் கிடைச்சா உடனே எனக்கு கால் பண்ணு” என்று பிரபஞ்சன் சொல்லிவிட்டு தன் பைக்கில் புறப்பட்டு விட,

“இவனுக்கு என்ன ஆச்சு… ஏன் இப்படியெல்லாம் பேசிட்டு போறான்” என்று நினைத்துக் கொண்டே சேது கல்லூரிக்குள் சென்றுவிட்டான்.

பிரபஞ்சனுக்கு மனம் பதட்டத்திலேயே இருந்தது. அவனுக்குத் தெரிந்த மற்றும் பழகிய எல்லோரிடமும் இது பற்றி சொல்லி எல்லோருடைய கருத்தையும் கேட்டான். யாருடைய பதிலும் அவனுக்குத் திருப்திகரமாக இல்லை.

உண்மையில் யாருக்குமே அந்த பிரச்சனையின் தீவிரம் புரியவில்லை. கடைசியாக அவனைக் குணமாக்கிய யோகாசன பயிற்சி மையத்திற்கு சென்றான். தூண்கள் எல்லாம் அமைத்து ஓர் பழைய வீட்டின் வெளிவாயில் அது.

குணபாலன் என்ற வயதான பெரியவர்தான்  அங்கே யோகா பயிற்சிகள் தந்து கொண்டிருந்தார். மன உளைச்சலோடு வந்த பலரின் வாழ்க்கை அந்த இடத்தில்  குணபாலனின் வார்த்தைகள் மற்றும் யோகா பயிற்சியின் மூலமாகச் செழிப்பாக மாறி இருக்கின்றன.

அதீதமான கடவுள் பக்தி, சக மனிதர்களிடம் அன்பு என்று தன் வாழ்க்கையை இறை வழியில் செலுத்தி மனிதனின் பல பிரச்சனைகளுக்குத் தான் கற்ற யோகா மூலமாகத் தீர்வு கண்டவர் குணபாலன்.

ஆனால் இப்போது குணபாலன் வீடே வெறிச்சோடி இருந்தது. யோகா பயிற்சிகள் எதுவும் நிகழ்வதில்லை. தொனுற்றாறு வயது நிரம்பிய குணபாலன் சில மாதம் முன்பு உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாகிப் போனதால் அங்கே யாரும் வருவதில்லை.

குணபாலனுக்கும் தனிப்பட்ட முறையில் மனைவி மக்கள் என்று இல்லாததால் அவரின் தம்பியின் பேத்தி வித்யாதான் அவரை உடனிருந்து கவனித்து கொண்டிருந்தாள். பிரபஞ்சனை வாயிலில் காலணிகளைக் கழற்றி கொண்டிருப்பதைப் பார்த்த வித்யா,

“வாங்க பிரபஞ்சன்… தாத்தா உங்களை பத்திதான் கேட்டுகிட்டே இருப்பாரு… உங்க நம்பர் இல்லாம என்னால உங்களை கான்டேக்ட் பண்ணவே முடியல” என்று பரபரப்பாக பேசி கொண்டே அவனை உள்ளே அழைத்து வந்தாள்.

“ஐயாவுக்கு என்ன?” என்றவன் குழப்பமாகக் கேட்க,

“ம்ம்… தாத்தாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியல” என்று அந்த பெண் வருத்தத்தோடு சொல்லி முடிக்கும் போதே அவன் விழிகளில் நீர் கோரத்தது.

“இப்ப எங்க இருக்காரு?” என்றவன் கேட்கவும், அவள் அவர் இருக்கும் அறையை கை காண்பித்தாள்.

பிரபஞ்சன் அந்த அறைக்குள் நுழையும் போதே அவன் இதயமெல்லாம் அதிவேகமாகப் படபடத்தது. கம்பீரமாகப் பார்த்த மனிதரை மரண படுக்கையில் பார்ப்பது பெரிய கொடுமை.

அவர் அந்த அறையின் படுக்கையில் விழிகள் மூடி படுத்து கொண்டிருக்க, பிரபஞ்சன் அருகில் சென்று நின்றான். அவன் விழிகளலிருந்த நீர் வெளியே வந்து விழுந்தது.

“ஐயா!” என்று ரொம்பவும் மெல்லிய குரலில் தன் துக்கத்தை அடக்கி கொண்டு அவன் அழைத்தான்.

அவரின் கருவிழிகள் இமைகளுக்குள் அசைய சில நொடிகள் தாமதித்து விழிகளை திறந்தவர் அருகில் நின்ற பிரபஞ்சன் கரத்தை தம் கரங்களைக் கொண்டு பற்றிக் கொண்டார்.

“ஐயா” என்றவன் குரல் தழுதழுக்க,

“என்ன பிரபஞ்சன்? பார்க்கக் கூட எதையோ பார்த்த மாதிரி மிரண்டு நிற்குற” என்றவர்  கேட்ட நொடி அவனுக்கு தூக்கிவாரி போட்டது.

“அது” என்றவன் பேச ஆரம்பிக்கும் போதே, “யாருடைய முடிவையும் யாரும் தடுத்து நிறுத்த முடியாது… விதிப்படிதான் எல்லாம் நடக்கும்” என்றார்.

சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தவன்,“அப்போ நான் கண்ட கனவு பளிச்சிடும்னு சொல்றீங்களா ஐயா!” என்று படபடப்போடு கேட்க,

“கனவா?” என்று அவனை புரியாமல் பார்த்தார்.

“ஹம்ம்… அது கனவா என்னன்னு எனக்கு சொல்ல தெரியல… ஆனா அது நடந்திர கூடாதுன்னு எனக்கு பயமா இருக்கு” என்றவன் படபடக்க,

அவர் உடனே அவனை கையமர்த்தி அருகே இருந்த இருக்கையில் அமர சொல்லிவிட்டு, “என்ன கனவு பிரபஞ்சன் ?”என்று கேட்டார்.

அவனும் அவரருகில் அமர்ந்து கொண்டு நிதானமாக அனைத்தையும் விளக்கியவன், “எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே தெரியல… எப்ப எங்கே என்ன நடக்குமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்கு” என்றான்.

சில நொடிகள் மௌனமாக அவனைப் பார்த்தவர், “அவனின்றி ஓரணுவும் அசையாது” என்று ஒரே வாக்கியத்தில் அவனுக்கு பதில் தந்தார்.

அவர் வழமையாகச் சொல்லும் வாக்கியம்தான். ஆனால் இப்போது அந்த வார்த்தைகள் அவனுக்கு வேறொரு அர்தத்ததை புகுத்தியது.

அங்கிருந்த புறப்பட்டதிலிருந்து அவன் மூளை பலநூறு முறை அந்த வாக்கியத்தைத் திரும்பச் திரும்ப சொல்லிப் பார்த்துக் கொண்டது.

‘அவனின்றி ஓரணுவும்’

மனம் முழுக்க வேதனையும் குழப்பமும் அவனை மூழ்கடித்து கொண்டிருக்க, அவன் வீடு வந்து சேர்வதற்குள் நன்றாக இருள் சூழ்ந்து கொண்டது.

பிரபஞ்சன் வீட்டு வாயிலில் காலிங் பெல்லை அழுத்தினான். ஒன்று இரண்டு மூன்று என்று அழுத்திப் பார்த்து கதவு திறவாமல் போகவும் அவன் தன் பேசியில் ஹரிக்கு அழைத்தான்.

அந்த அழைப்பை ஏற்றதும், சார் கதவை திறங்க” என்றவன் சொல்ல,

“யா கமிங்” என்று ஷெர்லி பதிலுரை தந்தாள்.

‘ஷெர்லி ஏன் ஃபோனை எடுத்தா… சார் என்ன பண்றாரு?’ என்று அவன் குழம்பி நிற்கும் போதே ஷெர்லி கதவைத் திறந்தாள்.

அவன் உள்ளே காலடி எடுத்து வைத்ததுமே ஹரிஹரன் போதை மயக்கத்தில் சோபாவில் வீழ்ந்து கிடப்பதைக்  கவனித்தான்

ஒரு முழு பாட்டில் காலியாகி இருந்தது. அவ்வப்போது இது அவருக்கு வழக்கம்தான். அவனிருந்தால் அவரை இரண்டு கோப்பைகளுக்கு மேல் குடிக்க விட மாட்டான். ஆனால் உடனிருந்தது ஷெர்லியாயிற்றே!

அந்த நொடிதான் அவனுக்கு இன்னும் அதிர்ச்சியானது.

ஐயோ! ஒரு பெண் வீட்டிலிருக்கும் போது இப்படி யாராவது செய்வார்களா? என்று மனதில் எழுந்த கோபத்தோடு ஹரிஹரனை முறைத்துவிட்டு, ஷெர்லி இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொண்டிருப்பாள் என்ற கவலையோடு அவள் புறம் பார்வையை திருப்பினான்.

கதவைத் திறந்து விட்டவள் அந்த கதவை விடாமல் கெட்டியாகப் பிடித்து கொண்டிருந்தாள். விட்டால் அவள் கீழே விழுந்துவிடுவாளே!

அவன் புரியாமல் பார்க்க அவளோ, “ஹாய் ஹென்சம்!” என்று வெகு இயல்பாக அவனை வரவேற்கக் கையை உயர்த்தி புன்னகை செய்ததில் அவள் பிடி கதவிலிருந்து நழுவியது.

“ஷெர்லி பாத்து” என்று தடுமாறி விழப் போனவளை அவன் அணைத்து பிடித்துக் கொண்டான்.

error: Content is protected !!