AOA-2

AOA-2

அவனின்றி ஓரணுவும்- 2

இயற்கையின் படைப்பில் ஓர் இணையற்ற ஆக்க சக்திதான் மரபணுக்கள். அதனிடமிருந்தே பூமியில் உயிர்கள் மலர தொடங்கின.

 அந்த இணையற்ற சக்தியின் ஒரு சிறுபுள்ளி மட்டுமே மனிதன்.

*****

சத்யா. கம்பீரமான உடலமைப்பு கொண்டவன்தான். ஆனால் உடலமைப்பு மட்டுமே ஒருவனை கம்பீரமாக காட்டிவிடுவதில்லை. அதை தாண்டி திடமான மனம் வேண்டும். ஆனால் சத்யாவிடம் இயல்பாகவே அந்தளவு உறுதியான மனநிலை கிடையாது. முழுக்க முழுக்க தன் குடும்பத்தின் சார்பு நிலையில் வளர்ந்தவன் அவன். யாருக்கும் எந்தவித தீங்கும் நினைக்காத விதத்தில் அவன் நல்லவன். அவ்வளவுதான்.

அன்று சத்யா அலுவலகத்தில் வேலை நேரத்தில் அனுசுயாவோடு உரையாடி கொண்டிருக்க, அவன் வேலை செய்யாமல் பேசி கொண்டிருந்ததை ஷெர்லி கவனித்துவிட்டாள். அவனோ அவள் வந்து தன் பின்னோடு நின்றிருப்பதை கவனிக்காமல் தன் உரையாடலிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான்.

வேலை காரணமாக அங்கே வந்ததிலிருந்து அனுவிடம் தனிமையில் பேசும் வாய்ப்பு கிட்டுவதே சத்யாவிற்கு அரிதிலும் அரிதாகியிருந்தது. ஒருபுறம் அவன் உடன் வந்தவர்கள் அவனை தனியாக விட்டப்பாடில்லை. இன்னொருபுறம் அவனின் வேலை. இவற்றையெல்லாம் கடந்து இரு கண்டங்களுக்கான  நேரமாற்றங்கள் வேறு.

ஆதலால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியபடி சத்யா தன்னவளிடம் கதை கதையாக பேசி கொண்டே திரும்ப, பின்னோடு நின்ற ஷெர்லியை பார்த்து அவனுக்கு ஷாக்கடித்த உணர்வுதான்.

ஷெர்லியின் பார்வை அவன் மீதுதான்அழுத்தமாக பதிந்திருந்தது.

அவன் உள்ளம் நடுங்க, “ஃபோனை வை அனு… நான் அப்புறம் பேசறேன்” என்று அவசரமாக சொல்ல அனுசுயாவோ, “என்னாச்சு சத்யா?” என்று கேட்கும் போதே தன் பேசியின் இணைப்பை துண்டித்து உள்ளே வைத்து கொண்டான்.

ஷெர்லியின் பார்வை அவன் மீது கூர்மையாவதை அறிந்து அப்படியே அவள் பார்வையிலிருந்து நழுவிவிட எத்தனித்து அவன் திரும்பிய சமயத்தில், “மிஸ்டர். சத்யா” என்று அழைத்தாள் ஷெர்லி!

‘போச்சு! செத்தேன்’ என்று மனதில் எண்ணி கொண்டே அவள் புறம் திரும்ப, “இப்ப நீங்க என்ன மொழியில் பேசிட்டு இருந்தீங்க?” என்று ஆங்கிலத்தில் சற்றே வேகமாக அவள் கேட்கவும் பதட்டத்தில் அவள் வார்த்தைகள் புரியாமல் விழித்தான்.

அதன் பின் கொஞ்சம் புரிந்தவனாக ஏன் இப்படி ஒரு கேள்வியை அவள் கேட்கிறாள் என்ற எண்ணத்தோடு அவளை ஆராய்ந்து பார்த்து கொண்டிருந்தானே தவிர அவள் கேள்விக்கு பதிலுரைக்கவில்லை. “சத்யா… வாட்? அன்சர் மீ” என்றவள் மீண்டும் அழுத்தி கேட்கவும்தான்,

“இட்ஸ் தமிழ்… மை மதர் டங்” என்று சத்யா பதட்டம் நீங்கி அவளிடம் பதிலுரைத்தான்.

அவளோ ஒன்றுக்கு இரண்டு முறை தமிழ் என்ற வார்த்தையை சொல்லி உறுதி செய்து கொண்டாள். தமிழ் என்ற வார்த்தையை எங்கேயோ கேட்ட உணர்வாக அவளுக்கு தோன்றியது.

அவள் மனம் எதையோ நினைவுப்படுத்தி முயன்று கொண்டிருக்க சத்யா குழப்பமாக அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான். ஷெர்லி அவன் பார்வையை உணர்ந்த நொடி அவனை அனுப்பிவிட்டு தன்னிருக்கையில் வந்து அமர்ந்து ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கினாள்.

சத்யா அவள் அப்படி கேட்டதை தன் நண்பர்களிடம் குறிப்பிட்டு, “நிச்சயம் ஷெர்லியோட ஃபேமிலில யாராச்சும் தமிழ் நாடா இருப்பாங்கன்னு தோணுது” என்க,

அவர்கள் யாருக்கும் நம்பிக்கை இல்லை. “அப்படிங்கிற… அப்போ நீயே அவகிட்ட அதை பத்தி பேச்சு கொடுத்து கேட்டு பாரேன்” என்று சொல்ல, சத்யவிற்கோ எதற்காக இந்த விஷயத்தை அவர்களிடம் தெரிவித்தோம் என்றாகிவிட்டது.

வேலை சார்ந்து பேசுவது தவிர்த்து ஷெர்லி வேறு எதற்காகவும் யாரிடமும் பேசுவது அவளின் வழக்கமில்லை. அப்படியிருக்க தான் அவளிடம் என்னவென்று கேட்பது, எப்படி பேசுவது என்று அவன் தீவிரமாக   யோசித்து கொண்டே வேலை நேரம் முடிந்த பின்னும் தன் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ளாமல் அமர்ந்தபடியே இருந்தான்.

அப்போது அவனை வியப்பில் ஆழ்த்தும் விதமாக ஷெர்லியே அவனிடம் வந்து பேசி கொண்டே போகலாமா என்று கேட்க, பின்னர்  இருவரும்  பேசி கொண்டே அலுவலகத்தின் வெளி வாயிலுக்கு வந்துவிட்டிருந்தனர்.

“வேர் இஸ் யுவர் நேடிவ்?” என்று ஆரம்பித்தவள் சத்யாவின் குடும்பம் தாய் மொழி இவற்றை பற்றியெல்லாம் அவனிடம்  விரிவாக வினவ, முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தட்டுதடுமாறி பதிலுரைத்தான்.

பின்னர் மெல்ல அவன் இயல்புநிலைக்கு திரும்பி அதே கேள்விகளை அவளிடம் கேட்க எண்ணும் போது, அவள் அவனிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாள்.

“நீங்க இங்க இருக்கிற டேஸ்குள்ள எனக்கு உங்க லேங்குவேஜ் பேச டீச் பண்ண முடியுமா?” என்றாள்.

சத்யா அதிர்ச்சியாக அவளை பார்த்து சில நொடிகள் மௌன நிலையில் நிற்க, “கான்ட் யு?” என்று மீண்டும் கேட்டாள். அவன் வேறுவழியின்றி உடனடியாக அவள் கேட்டதற்கு சம்மதமாக தலையசைக்க, “தேங்க்ஸ்… தேங்க் யு சோ மச்” என்று சொன்னவள்,

“வொர்க் முடிஞ்சதும் என் வீட்டுக்கு வந்து அங்கே டீச் பண்ணுங்க” என்று அடுத்த வெடியை போட்டுவிட்டு அவள் அகன்றுவிட அவனுக்கு தலை மேலும் கீழுமாக சுழன்றது.

அவன் உறைந்தபடி நிற்க, அதுவரை தூரத்தில் அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருப்பதை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த  அவனின் நண்பர்கள் கூட்டம் வேகமாக வந்து அவனை சூழ்ந்து கொண்டது.

அவள் என்ன சொன்னாள்? ஏது சொன்னாள்? அவள் குடும்பத்தை பற்றி தெரிந்ததா? அவள் நம் நாட்டவளா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனை குடைந்து எடுத்தனர்.

சத்யா ஏற்கனவே நடந்தவற்றை நம்ப முடியாமல் நின்றிருக்க, அவன் நண்பர்களின் இந்த விசாரணை படலம் அவன் மூளைகுள்ளேயே செல்லவில்லை. அப்படியே ஸ்தம்பித்த நிலையில் நின்றவனை அவன் நண்பர்கள் உலுக்கிய உலுக்கில் அவர்கள் எல்லோரையும் மிரட்சியோடு பார்த்தான்.

பின்னர் ஷெர்லி அவனிடம் சொன்னவற்றை அவர்களிடம் விவரிக்க எல்லோருமே ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த பார்வை பார்த்தனர்.

இறுதியாக எல்லோரும் ஒரு சேர, “உன்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டாளா?” என்று அதிர்ந்து கேட்க ஆம் என்று தலையசைத்தான் சத்யா.

எல்லோரின் மனதிலும் பொறாமை தீ கொழுந்துவிட, சத்யாவையோ அச்சம் பற்றி கொண்டது. ஒரு வேளை அனுசுயாவை அவன் பார்க்காமல் இருந்திருந்தால் ஷெர்லியின் இந்த அழைப்பு அவனை குதூகலப்படுத்தி இருக்குமோ என்னவோ? ஆனால் இப்போது உண்மையிலேயே அவனை கிலி பற்றி கொண்டது.

அதேநேரம் ஷெர்லியிடம் பழக அதுவாக அமைந்த ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட அவனுக்கு விருப்பமில்லை. ஆதலால் அவள் சொன்னபடியே வேலை முடிந்து அவள் வீட்டிற்கு சென்றுவந்தான்.

ஷெர்லி தமிழ் பேச கற்று கொள்ள வேண்டுமென்பதில் அத்தனை தீவிரமாக இருந்தாள். அதற்காகவே ஷெர்லி வேலை முடிந்த மறுகணம் சத்யாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவாள். இதனால் அவனுக்கு அவன் நண்பர்களுக்கும் இடையில் சிறிதாக விரிசல் உண்டானது.

ஆனால் இது எது பற்றியும் ஷெர்லிக்கு அக்கறை இல்லை. சத்யாவிடம்  தமிழ் கற்க வேண்டுமென்ற ஒரே நோக்கம் மட்டுமே அவளுக்கு. அதில் அவள் மும்முரமாக இருக்க, சத்யாவோ இருதலைக்கொள்ளி எறும்பு போல்  இடையில் சிக்கி கொண்டான்.

அதேநேரம் ஷெர்லியின் தமிழ் கற்கும் ஆர்வம் சத்யாவை வியப்படைய செய்தது. அவளுக்கு தமிழ் மொழி ஏற்கனவே பரிட்சயம் என்றே அவனுக்கு தோன்றிற்று. அவன் தினந்தோறும் சில வார்த்தைகளையும் அதனை பிரயோகப்படுத்தும் விதத்தையும் அவன் கற்று கொடுப்பான். அந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி அதன் அர்த்தங்களையும் எழுதி வைத்து கொள்வாள். அதோடு அதனை அவளே வாக்கியங்களாக அமைத்து அவனிடமே பேசி வியப்பில் ஆழ்த்துவாள்.

பல வார்த்தைகளின் அர்த்தங்களை அவன் சொல்லாமலே அவளுக்கு தெரிந்திருந்துதான் அவனின் ஆச்சரயத்தின் உச்சமாக இருந்தது.

ஷெர்லி அந்த ஒரு மாத காலத்திற்குள்ளாகவே ஓரளவு தமிழ் பேசவும் புரிந்து கொள்ளவும் கற்று கொண்டாள் என்பது சத்யாவால் நம்பவே முடியவில்லை. அவள் பேசும்  தமிழில் ஆங்கில வாடை வீசினாலும்  அவள் ஓரளவு சரளமாகவே தமிழ் பேச பழகியிருந்தாள். அவன் கேள்விகளுக்கு அவளாகவே முயன்று தமிழில் பதிலளிக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தாள்.

ஆனால் இதில் தன் பங்கு ரொம்பவும் குறைவு என்பதை சத்யா நன்கு அறிவான். அவன் கற்று கொடுத்ததை வைத்து ஷெர்லி ஆங்கிலம் வழியாக தமிழ் கற்று தரும் சில இணையத்தளங்களை தேடி அதன் மூலமாக தரப்பட்ட மொழிபெயர்ப்புகளை பார்த்து படித்து அவள் சொந்த முயற்சியின் மூலமாக நிறையவே கற்று கொண்டாள் .

இந்த சூழ்நிலையில் சத்யாவின் நண்பர்கள் ஷெர்லியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டி அவனிடம் அவளின் விவரங்களை கேட்டு நச்சரித்தனர். சத்யா அவர்களிடம் அவளை பற்றி எதுவும்  தெரியாது என்று பதிலளிக்க, அவன் நண்பர்களுக்கும் அவனுக்கும்  இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இந்த மனகசப்பு வெறுப்பாகவும் மாறியது.

அதுவும் சத்யா வேண்டுமென்றே அவளை பற்றிய விபரங்கள் தெரிந்தும் சொல்லாமல் மறைக்கிறான் என்பதே அவர்களின் வெறுப்பிற்கான மூலகாரணமாக அமைந்தது.

ஆனால் சத்யா தன் நன்பர்களிடம் சொன்னதுதான் உண்மை.  ஷெர்லியை பற்றி அவனுக்கு  இப்போதும் எதுவும் தெரியாது. இத்தனை நாள் பழக்கத்திலும் கூட ஷெர்லி  தன் குடும்பம் பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் சொன்னதில்லை.

காரணம் அவள் அவனிடம் தமிழ் கற்பதை தவிர்த்து வேறெந்த தனிப்பட்ட விஷயங்களையும் பேச அவனுக்கு வாய்ப்பை தரவேயில்லை என்பதுதான். அதுவும் ஷெர்லியின் வீட்டில் அவளின் குடும்ப நபர்கள் என்று யாரும் இல்லை. அவள் தன் குடும்பத்தோடு நிற்கும் ஒரு புகைப்படம் மட்டும்தான் இருந்தது. அந்த படத்திலும் அவள் மட்டும் தனித்து தெரிந்தாள். ஒருவேளை அவள் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவள் என்ற சந்தேகம் எழ அவளிடம் அது பற்றி கேட்க எண்ணி,

“இந்த போட்டோல நீங்க மட்டும் வித்தியாசமாக தெரியிறீங்க ஷெர்லி?” என்று கேட்டான்.

“உங்களுக்கு கண்ணில எதாச்சும் ப்ராப்ளமா?” என்று சிரித்து கொண்டே வினவியவள், “நல்லா பாருங்க… என் பேஸ் அப்படியே என் டேடோட சாயல்” என்றாள்.

அவன் உன்னிப்பாக கவனித்த போது அப்படிதான் என்று அவனுக்கும் தோன்றியது. இருவரின் சிரிப்பும் முகதோற்றமும் ஒரே போல இருந்தது.

அவன் சந்தேகமாக, “ஆனா உங்க கலர்? ஹேர் கலரெல்லாம்?” என்று சத்யா தயங்கியபடி கேட்க,

“ப்ச்…லீவ் தட்” என்று அந்த உரையாடலை அதோடு முடித்துவிட்டாள். இப்படிதான் அவன் எது கேட்டாலும் அவள் பதில் சொல்லாமல் மழுப்பி கொண்டிருந்தாள்.

இதுவல்லாது அவள் வீட்டில் அவனுக்கு வேறொரு பிரச்சனை இருந்தது. அவள் வளர்க்கும் செல்ல பிராணி டேனி.

இருவருக்கும் ஏழாம் பொருத்தம்தான். டேனிக்கு சத்யாவை கண்டாலே பிடிக்காது. அவன் வீட்டிற்குள் நுழைந்தாலே அது அவனை குரைத்தபடி வெளியே துரத்திவிடும். சில நேரங்களில் அவனை கடிக்கவும் கூட முயன்றது.

முதலில் டேனி தன் மீது காட்டும் வெறுப்பிற்கு சத்யாவிற்கு காரணம் தெரியவில்லை. பின்னரே தெரியவந்தது.  யார் ஷெர்லியிடம் நெருக்கமாக இருந்தாலும் டேனிக்கு அறவே பிடிக்காது.

பெரும்பாலும் ஷெர்லியிடம் யாருமே நெருக்கமாக இருந்ததுமில்லை என்பதால் டேனி அப்படி யாரிடமும் கோபப்படும் தேவையும் இருந்ததில்லை. ஆனால் சத்யாவோ தினசரி ஷெர்லியோடு வீட்டிற்கு வருகை  தருவதை பார்த்து ரொம்பவும் கடுப்பான டேனி, எப்போது சத்யாவை பார்த்தாலும் வெறியோடு  பாய தொடங்கினான்.

இயல்பாகவே சத்யா பயந்த சுபாவம். டேனியின் இந்த செய்கையில் அவன் மிரள, அதன் பின் ஷெர்லி டேனியிடமிருந்து சத்யாவை  காப்பற்ற வேண்டி அதனை வெளியே கூட்டி சென்று சங்கிலியில் பிணைத்துவிட்டாள். எப்போதும் சுதந்திரமாக சுற்றி திரியும் டேனிக்கு இதனால் சத்யா மீதான கோபம் பன்மடங்காக பெருகியிருந்தது.

இப்படியாக இரண்டு மாதங்கள் உருண்டோடிவிட, இந்தியாவிலிருந்து அவர்கள் குழு வந்த வேலை ஒருவாறு முடிவடைந்திருந்தது. இதனால் அலுவலகத்தில் அந்த ப்ரொஜெக்டில் வேலை செய்த அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. உணவு வகைளை விடவும் குடிக்கும் மதுவின் வகைகள்தான் அதிகமாக இருந்தது.

அந்த விருந்தில் கலந்து கொண்ட ஷெர்லி ஆரஞ்ச் வண்ணத்தில் அணிந்திருந்த அந்த கௌன் அங்கிருந்த எல்லோரின் பார்வையையும் கவர்ந்திழுக்கும் விதமாக இருக்க, அந்த உடையில் அவள் வானிலிருந்து இறங்கி வந்த தேவதையின் அம்சம் போல காட்சியளித்தாள். இதனால் எல்லோரின் பார்வையும் அவளை மட்டுமே சுற்றிவந்தது.

ஆனால் ஷெர்லி தன்னிடம் நெருக்கமாக பேச வந்தவர்களிடம் எல்லாம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு நழுவி கொண்டாள். அவர்கள் எல்லோரின் தேவையும் என்னவாக இருக்கும் என்பதை அவள் அறியாதவள் அல்ல.

அங்கே நடந்த கொண்டாட்டங்கள் ஆண்பெண் பேதமின்றி ஆடும் நடனங்கள் என்று இது எதிலும் பெயரளவில் கூட ஷெர்லி பங்கேற்க விழையவில்லை. ஒதுங்கியே  நின்றாள்.

ஷெர்லியின் இந்த குணம்தான்  சத்யாவை ரொம்பவும் கவர்ந்தது. அங்கிருந்த பெண்களிடமிருந்து அவள் தோற்றத்தில் மட்டுமல்ல. நடவடிக்கையிலும் தனித்து தெரிந்தாள். பல நேரங்களில் அனுசுயா தன் வாழ்வில் வாராமல் இருந்திருந்தால் என்று நடக்காத ஒன்றை சத்யாவின் மனம் ஏக்கத்தோடு எண்ணி கொண்டது.

அந்தளவுக்கு சத்யாவிற்கு ஷெர்லியின் ஒவ்வொரு செய்கையின் மீதும்  ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவளின் புகைபிடிக்கும் பழக்கும் மட்டுமே அவனுக்கு உறுத்தலாகவே இருந்தது. அவள் மது அருந்தவும் செய்வாள். ஆனால் அது ஒரு கலாச்சாரமாகவே மேற்கத்திய நாடுகளில் இருப்பதால் அது அவனுக்கு அத்தனை பெரிய விஷயமாக தெரியவில்லை.

ஆனால் அவள் புகை பிடிப்பதை பார்த்தால்தான் அவனுக்கு எரிச்சலாக வரும். அவள் பொது இடங்களில் அதை செய்ய மாட்டாள் எனினும் அவள் வீட்டிலிருக்கும் போது பல நேரங்களில் அதனை செய்வதை பார்க்கும் போதே அவனுக்குள் அவள் தமிழ் பெண் என்ற எண்ணம் அடிவாங்கும்.

அதுவும் சத்யாவிற்கு குடி பழக்கம் கூட கிடையாது. அன்றைய விருந்தில் கூட அவன் நண்பர்கள் எல்லோரும் எவ்வளவோ கட்டாயபடுத்தியும் அவன் குடிக்க மறுத்துவிட்டான். அதுவே அவனுக்கு வினையாக முடிந்தது.

அப்போது அங்கே இருந்த ஷெர்லி சத்யாவிடம், “இதுல அல்கக்ஹால் பர்சன்டேஜ் ரொம்ப கம்மிதான் சத்யா… ஹேவ் இட்” என்க, அவள் சொல்லி ஒரு கோப்பையை தரவும் அவனுக்கு மறுக்க மனமில்லை.

மது போதையை விட மாது போதை ஆபத்தானது. அவனுக்குள் இருந்த  ஷெர்லியின் மீதான போதை அந்த கோப்பையிலிருந்த மதுவை குடிக்க செய்தது.

அதன் சுவை அவனுக்கு பிடித்தமாக, அந்த வகை மதுவை அவன் மீண்டும் கேட்டு வாங்கி அருந்த, “நம்ம கொடுத்தா குடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப அவ குடுத்தா மட்டும் குடிக்கிறான்… பாருடா” என்று  பொறிமிய அவன் தோழர்கள் மனதில் ஏற்கனவே அவன் மீதான வஞ்சம் வேர்விட்டு வளர்ந்திருந்தது.

சத்யா குடித்த மது வகையில் அவனுக்கு தெரியாமல் வேறு சில மது வகைகளை கலந்து அவனுக்கு தெரியாமல் கொடுத்துவிட்டனர்.

முதல் முறை குடிப்பதால் அவன் தன் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாட்ட நிலைக்கு சென்றுவிட்டான். இந்த சூழ்நிலையில் அவன் நண்பர்கள் எல்லோரும் அவனை வேண்டுமென்றே அங்கேயே விட்டு சென்றுவிட, ஷெர்லிக்கு மனம் கேட்கவில்லை.  அன்றிரவு அவனை தன் வீட்டிற்கு அழைத்துவந்தாள்.

தள்ளாடி கொண்டிருந்த அவனை அவள் தாங்கி பிடித்து கொண்டே வீட்டிற்குள் நுழைய, ஒரு நிலைக்கு மேல் அவன் பாரத்தை தாங்க முடியாமல் அங்கிருந்த சோபாவில் அவனை படுக்க வைக்கும் போதும் அவளும் தடுமாறி அவன் மீது விழுந்தாள்.

அந்த நொடி சத்யா முகத்தில் சரிந்த ஷெர்லியின் கூந்தலின் வாசம் அவனை தன்னிலை மறக்க செய்த அதேநேரம் அவன் தேகத்தோடு ஒட்டி கொண்ட அவள் தேகத்தின் மென்மை அவனை மேலும் கிறங்கடித்தது.

அதன் பின் அவன் மீள முடியாத வேறொரு போதை நிலைக்கு சென்றான். சிவந்த அவள் உதடுகள் மீது பார்வையை பதித்தான்.

எழுந்து கொள்ள போனவளை விடாமல் அவள் இடையை வளைத்து பிடித்து கொண்டு அவள் இதழ்களில் முத்தமிட அவன் நெருங்கியவரைதான் அவன் நினைவில் பதிவாகியிருந்தது. அதற்கு பிறகு நடந்த எதுவும் அவன் நினைவில் பதிவாகவில்லை. எப்படி அவள் அறைக்கு வந்தோம். எப்போது தன் உடைகளை களைந்தோம்? என்று எதுவுமே அவன் நினைவிற்குள் இடம்பெறவில்லை.

இருப்பினும் சத்யா விடாமல் என்ன நடந்திருக்கும் என்று படுக்கையில் அமர்ந்து கொண்டு தீவிரமாக யோசித்து பார்த்தான். ஒன்றும் உபயோகமில்லை. தலைவலி வந்ததுதான் மிச்சம்.

அனுசுயா வேறு அழைத்து கொண்டேயிருக்க அவள் அழைப்பை ஏற்று பேச முடியாமல் தன் கைப்பேசியை அணைத்து வைத்தான்.

இறுதியாக வேறு வழியே இல்லை. ஷெர்லியிடமே கேட்டுவிடலாம் என்ற அறையிலிருந்த ஒரு துண்டை தன் மேல் போர்த்தி கொண்டு வெளியே வந்தான். அந்த வீட்டின் கீழ்த்தளத்திலிருந்தது அந்த அறை.

அதன் கதவை திறந்து கொண்டு வந்தவன், “ஷெர்லி” என்று அழைக்க அவளை அங்கே காணவில்லை.

அவன் பார்வையை சுற்றிலும் சுழலவிட அங்கே யாரும் இருக்கும் தடம் கூட இல்லை. அவளை தேடி கொண்டு அந்த முகப்பறையின் பின்புற கதவினை அவன் திறக்க, அதன் வழியே நுழைந்த குளிர் காற்று அவனை நடுக்கமுற செய்தது. மேலாடை வேறு இல்லாமல் அவன் உதடுகள் தந்தியடிக்க, அவன் வந்ததை கொஞ்சமும் உணராமல் ஷெர்லி அங்கிருந்த படிகட்டின் மீது அமர்ந்து கொண்டு சிகரெட்டை புகைத்து கொண்டிருந்தாள்.

எங்கேயோ தூராமாக நிலைத்திருந்தன அவள் விழிகளும் சிந்தனைகளும்!

சாதரணமான  ஒரு நைட் பேன்ட் ஷர்ட்டே அவள் அணைந்திருந்த போதும் அந்த குளிரின் தாக்கம் அவளை ஒன்றுமே செய்யவில்லை. அவள் அந்த உணர்வுக்கு பழகிவிட்டாளா அல்லது அவள் அதை உணர மறந்தாளா என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

ஆனால் சத்யாவிற்கு அந்த குளிரை தாங்கி கொள்ள முடியவில்லை.

அவன், “ஷெர்லி” என்று நடுக்கத்தோடு அழைக்க, அவள் அவன் குரலுக்கு செவிமடுக்காமல் அப்படியே சலனமின்றி அமர்ந்திருந்தாள்.

சத்யாவோ அந்த குளிரில் அதற்கு மேல் நிற்க திராணியற்று அவசரமாக அவள் தோளை தட்டி, “ஷெர்லி” என்று அழைக்க, அவனை அவள் நிமிர்ந்து பார்த்த கணமே அதிர்ந்தாள்.

சத்யா நடுக்கத்தில் பேச கூட முடியாமல் அவளை உள்ளே வர சொல்லி செய்கையில் காட்டிவிட்டு அவன் உள்ளே சென்று கதவை மூடிவிட்டான்.

ஷெர்லியின் மனதில் அச்சம் படர தொடங்கியது. அவன் இப்போது கேட்கும் கேள்விகளுக்கெல்லாம்  தான் என்ன சொல்லி சமாளிப்பது?! என்ற தயக்கத்தோடு அந்த கதவினை திறந்து மெல்ல நுழைந்தாள்.

 

error: Content is protected !!