AOA-5

AOA-5

அவனின்றி ஓரணுவும்- 5

பிரபஞ்ச விதிகளில் மனிதன் அடங்கியிருப்பது  போல மனித உடலுக்குள்ளும் இயற்கையின்அபரிதமான  சக்தி அடங்கியிருக்கிறது.

அதைத்தான் அண்டதிற்குள் உள்ளதே பிண்டத்தில்; பிண்டத்திற்குள்  உள்ளதே அண்டத்தில் என்று சொல்லப்படுகிறது.

ஷெர்லி கண் விழித்த போது அவள் மருத்துவமனை படுக்கையில் கிடந்தாள். நடந்த அந்த மோசமான நிகழ்வை இப்போது எண்ணினாலும் அவள் தேகமெல்லாம் நடுநடுங்கியது.

அதுவும் மரணத்தை வெகுஅருகாமையில் பார்த்துவிட்டு அவள் இப்போது உயிரும் உடலுமாக இருப்பதை அவளாலேயே நம்ப முடியவில்லை.

இதற்காகவா தான் இந்தியாவிற்கு வந்தோம்? அதுவும் சத்யா அன்று அவள் வீட்டிலிருந்து மிரண்டு ஓடி வந்த பின் அவளுடன் பேச கூட இல்லை.  அவள் இருக்கும் திசை பக்கம் கூட வரவில்லை.

அதேநேரம் அவர்கள் வந்த வேலை முடிந்துவிட்ட காரணத்தால் சத்யாவும் அவர்கள் நண்பர்களும் இந்தியா புறப்பட்டுவிட்டனர். சத்யா இந்தியாவிற்கு திரும்பியதும் நொய்டாவிலிருந்து தன் அலுவலக வேலையெல்லாம் முடித்து கொண்டு அப்படியே தன் திருமணத்திற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து கொண்டு தமிழகத்தில் உள்ள தன் சொந்த ஊரான கடப்பாக்கம் திரும்பினான்.

அவன் அங்கே வந்த மூன்றாவது நாள் ஷெர்லி அவனை தேடி கொண்டு வந்திருந்தாள். அதிர்ச்சியிலும் அதிர்ச்சி பேரதிர்ச்சி சத்யாவிற்கு!

ஷெர்லி என்ன நடந்தாலும் தமிழகம் வர வேண்டுமென்பதில் படுத்தீவிரமாக இருந்தாள். அதற்கு அவளுக்கு சத்யாவின் தயவு தேவையாக இருந்தது. இந்தியா வந்தவள் அவன் வேலை செய்யும் நிறுவனத்தில் விசாரித்து அவன் விலாசத்தையும் பெற்று கொண்டாள். அவன் ஒரு மாதம் தன் திருமணத்திற்காக விடுப்பு எடுத்து கொண்டு என்ற விவரத்தையும் தெரிந்து, அவன் சொந்த ஊரிலுள்ள வீட்டிற்கே வந்து சேர்ந்தாள்.

விக்ரமாதித்யன் முதுகில் ஏறி கொள்ளும் வேதாளம் போல தன்னை விடாமல் இப்படி இவள் துரத்தி வந்து தொல்லை தருகிறாளே என்று எண்ணி அதிர்ந்து நின்றான் சத்யா!

வேறுவழியின்றி சத்யா தன் குடும்பத்தாரிடம் அவளை தன் தோழி என்று அறிமுகப்படுத்தி அவளை அங்கே தங்க வைக்க ஏற்பாடு செய்தான். அவர்கள் குடும்பத்தினருக்கு ஷெர்லியின் மேற்கத்திய பாணியான உடையும் ஆங்கில கலப்புடைய தமிழும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருப்பினும் திருமணதிற்கு வந்திருக்கும் விருந்தாளியாக அவளை பாவித்து, அவள் அங்கே தங்குவதற்கு வேண்டிய வசதிகளை அவர்கள் செய்து கொடுத்தனர்.

அவள் யாரை கேட்டு என்னை தேடி வந்தாள் என்று மிகுந்த கோபத்தோடு சத்யா ஷெர்லியை தேடி அவள் அறைக்கு வர அவளோ சாவகாசமாகப் சிகரெட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தாள்.

அவனுக்கு பகீரென்றது. இந்த காட்சியை மட்டும் அவன் வீட்டில் யாராவது பார்த்து வைத்தால் என்று அஞ்சி கொண்டே அவள் விரலிலிருந்து சிகரட்டை பிடுங்கி கீழே போட்டு மிதித்தான்.

“சத்யா” என்றவள் அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள்.

“யாராச்சும் நீ எங்க வீட்டில ஸ்மோக் பண்றதை பார்த்தா அவ்வளவுதான்” என்று அவன் பதட்டத்தோடு சொல்ல,

“ஒய்? உங்க ஊர்ல ஸ்மோக் பண்ண ரெஸ்டிரிக்ஷன்ஸ் இருக்கா?  ஆனா நான் இங்க வந்துதான் பை பண்ணேன்… ரெஸ்டிரிக்ஷன்ஸ் இருந்தா ஷாப்ஸ்ல சேல்ஸ் பண்ணுவாங்களா என்ன?” என்று அவள் விவரமாக கேட்டு கொண்டிருக்க,

“எங்க ஊர்ல லேடிஸ்லாம் ஸ்மோக் பண்ண மாட்டங்க” என்றான் அழுத்தமாக!

“ஜென்ஸ் மட்டும் பண்ணலாமா?” என்று ஷெர்லி விதண்டாவாதமாக பதில் கேள்வி கேட்க,

“அதெல்லாம் அப்படிதான்… விளக்கம் எல்லாம் கேட்காதே… இங்கே இருக்க வரைக்கும்… ப்ளீஸ் டோன்ட்” என்று கெஞ்சலாக அவளை பார்க்கவும், “ஓகே ட்ரை பண்றேன்… பட் கஷ்டம்தான்” என்றாள்.

மூச்சை இழுத்துவிட்டு கொண்டவன் அவளை எரிச்சலாக பார்த்து, “இப்ப எதுக்கு ஷெர்லி என்னை நீ தேடி வந்த” என்று கேட்கவும், “ஐ செட் யு அல்ரெடி… என்னையும் உன்கூட கூட்டிட்டு போன்னு” என்று அவள் வருத்தமாக சொல்ல,

“ஐயோ! எனக்கு மேரேஜ் ஷெர்லி…. உன்னை எப்படி நான் கூட கூட்டிட்டு வர முடியும்” என்றவன்  பயந்து கொண்டே குரலை தாழ்த்தி சொல்ல,

“அப்போ உனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ண பிறகுதான் என்னை நீ கிஸ் பண்ண ட்ரை பண்ணியா?” என்று கேட்டு அவன் தலையில் இடியை இறக்க அப்படியே அதிர்ச்சியில் வார்த்தைகளின்றி நின்றான்.

அவள் சாதரணமாக சிரித்து கொண்டே, “சத்யா… டோன்ட் வொர்ரி… நீ அன்னைக்கு ட்ரங்க் பண்ணிட்டு என்னை கிஸ் பண்ண வந்ததை நான் உன் பியானிஸி கிட்ட ரிவீல் பண்ணவே  மாட்டேன்… ப்ராமிஸ்” என்று அவள் சொன்ன நொடி,

அதிர்ச்சியில்அவனுக்கு பூமியின் சுழற்சியே நின்றுவிட்டது. அவன் தலையை பிடித்து கொண்டு,

‘ஐயோ! இதென்னடா வில்லங்கமே போச்சு! சொல்ல மாட்டேன்னு சொல்றாளா இல்ல சொல்லிடுவேன்னு மிரட்டிராளா… அதுவும் இவ மேல நமக்கு கொஞ்சமே கொஞ்சம் கிரஷ் இருந்துதுன்னு அனுவுக்கு மட்டும் தெரிஞ்சா’ என்று அவன் தீவிரமாக பயந்து கொண்டிருக்க,

“சத்யா… ஜஸ்ட் ஃபார் பன்… கம்மான் லீவ் இட்” என்று அவன் தோளை தட்டி புன்னகைத்தாள்.

ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.

“இப்ப உனக்கு என்னதான் ஷெர்லி வேணும்” என்றவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க,

“எனக்கு தமிழ் நாட்டை சுத்தி பார்க்கணும்… யாராச்சும் நோன் பெர்சனா என் கூட வந்தா நல்லா இருக்கும்னு… யு ஆர் மை ஒன் அன் ஒன்லி கம்பானியன் ரைட்… தட்ஸ் ஒய்… ஐ கேம் ஹியர்” என்றதும் அவளை சங்கடமாக பார்த்து, “எனக்கு இன்னும் டூ வீக்ஸ் ல மேரேஜ்மா” என்று பரிதாபமாக உரைத்தான்.

“ம்ம்ம்… ஐ நோ” என்று ஷெர்லி முகத்தை தொங்க போட்டு கொள்ள,

‘எனக்கு கல்யாணம்னா இவ ஏன் பீல் பண்றா? எப்படியாவது இவளை இங்க இருந்து துரத்தி விடனும்… அதுவும் அனு கண்ணில இவ பட்டுடவே கூடாது’ என்று மனதில் எண்ணி கொண்டவன் அவள் முகத்தை பார்த்து,

“யு டோன்ட் வொர்ரி… நான் எனக்கு தெரிஞ்ச டூரிஸம் அபீஸ்ல பேசி உனக்கு யாரச்சும் அரேஞ் பண்றேன்” என்றாள்.

“நோ நெவர்… எனக்கு பிரோப்ஷனல்லா வேண்டாம்… ப்ரெண்ட்லியா யாராச்சும் கூட அக்கம்பைன் பண்ணா இட் வில் பி குட் அன் கம்பர்டபிள்”  என்றவள் சொல்லி கொண்டிருக்க சத்யா எப்படி அவளை துரத்திவிடுவது என்பதிலேயே குறியாக இருந்தான்.

சத்யா அவளிடம் ஒரு நம்பகமான ஆளை அவளுக்கு ஊர் சுற்றி காண்பிக்க ஏற்பாடு செய்வதாக திரும்ப திரும்ப கூறவும், சரியென்று அவளும் சம்மதம் சொல்லிவிட்டாள். இருப்பினும் புது நபரோடு செல்வதா என்று கொஞ்சம் நெருடலாகவே இருந்தது அவளுக்கு.

இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு அவளுக்கு வேறுவழியும் இல்லை. அவள் காரியம் நடக்க வேண்டுமெனில் அப்போதைக்கு யாரையாவது ஒருவரை அவள் நம்பித்தான் தீர வேண்டும்.

சத்யா இப்படியாக ஷெர்லியை ஒருவாறு சமாளித்து விட்டு அவன் வெளியே வந்தால், ஷெர்லி அங்கே வந்து தங்கியிருப்பது பிடிக்காமல் சத்யாவை தனியாக அழைத்து சென்று அவன் குடும்பத்தினர் அவனை வறுத்தெடுத்துவிட்டனர்.

பாவப்பட்ட ஜீவனாக இரண்டு பக்கமும் சத்யாதான் மாட்டி கொண்டு அல்லலல்ப்பட்டு கொண்டிருந்தான்.

சத்யாவின் பெற்றோர் மற்றும் அவனின் தமையன், தமக்கை அவர்கள் துணை மற்றும் குழந்தைகள் என்று அந்த வீடே நிரம்பி வழிந்தது. அதுவுமில்லாமல் சத்யாதான் அவர்கள் வீட்டிலேயே இளையவன். போதா குறைக்கு அந்த திருமண ஏற்பாட்டில் கலந்து கொள்ள அவ்வப்போது வரும் உறவினர்கள் கூட்டம் வேறு. அவர்கள் எல்லோருமே ஷெர்லியை ரொம்பவும் வித்தியாசமாக பார்த்தனர்.  இன்னொரு புறம் ஷெர்லி என்னதான் தமிழில் பேசினாலும் சத்யா குடும்பத்தோடு அவளால் இயல்பாக உரையாட முடியவில்லை. ஒன்றி பழகவும் முடியவில்லை.

அன்று சத்யா குடும்பத்தில் அவர்கள் குலதெய்வத்தை வேண்டி அவன் திருமணத்திற்காக பூஜைகள் செய்ய சொந்தம் பந்தம் என்று அனைவரும் குழுமியிருந்தனர்.

ஷெர்லிக்கு அந்த பூஜை போன்றவற்றில் எல்லாம் அத்தனை ஆர்வம் இல்லை. அதுவும் வந்தவர்கள் எல்லோரின் பார்வையும் கேள்வியாக ஷெர்லியையே சுற்றிவரவும் அந்த கூட்டத்திலிருந்து அப்போதைக்கு தப்பிக்க வேண்டி கால் நடையாக அருகிலுள்ள கடற்கரைக்கு நடந்து சென்றாள்.

அதுவும் அவள் அறையிலிருந்து பார்த்தாலே கொஞ்சம் தொலைவில்  கடற்கரையும் அங்குள்ள மீனவ கிராமங்களும் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியும். அங்கிருந்த மீனவ மக்களை பார்க்கும் ஆர்வத்தில் அவர்கள் வீட்டு பூஜை முடியும் வரை அங்கே சென்றுவிட்டு வரலாம் என்று எண்ணி நடந்தாள்.

அதே போல அங்கே நிறுத்தி வைக்கப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் அங்கிருந்த மக்கள் மீன்வலைகளை லாவகமாக மடித்து வைத்து கொண்டிருப்பதை சுவாரிசியமாக பார்வையிட்டு கொண்டே கடற்கரை மணலில் நடந்தவள் மாலை நேரத்து அந்தி வானம் கடலில் சங்கமிக்கும் காட்சியை பார்த்தபடி அப்படியே அமர்ந்து கொண்டாள்.

அந்த அழகிய காட்சியை பார்த்து கொண்டே அலைகளின் மீது பார்வையை பதித்து அவள் பாட்டுக்கு சிந்தனையில் மூழ்கிவிட அப்போதுதான் அந்த பிரச்சனை வந்தது.

இருவர் குடித்துவிட்டு போதையில் அவளை தூரத்திலிருந்து முற்றிகையிட்டு கொண்டிருந்தனர். அவள் தனியே அமர்ந்திருப்பதை கண்டு அவளை நெருங்கிவந்தார்கள்.

“என்ன பாப்பா? தனியா வந்திருக்கியா… உன் கூட யாரும் வரல” என்று கேட்டு கொண்டே ஷெர்லியை இடித்தபடி அவளருகில் அமரந்தனர். அவர்கள் மீது வந்த போதை நெடியில் முகத்தை சுளித்து கொண்டு எழுந்து கொண்டவள், “இடியட்ஸ்” என்று முனகிவிட்டு அங்கிருந்து அவள் செல்ல எத்தனிக்க, அவர்களில் ஒருவன் அவள் கையை அழுந்த பற்றி கொண்டான்.

“லீவ் மை ஹென்ட்… ஸ்கவுன்றல்” என்றவள் அவன் கரத்தை உதறி அவனை உக்கிரமாக முறைத்துவிட்டு செல்லவும் அவர்கள் இருவரும் எழுந்து அவள் பாதையை மறித்து நின்று கொண்டனர்.

அவளுக்கு பதட்டமானது. சுற்றிலும் ஆள்அரவமே இல்லை. அந்த இடம் முழுக்க இன்னும் சில நிமிடங்களில் இருள் சூழ்ந்து கொள்ளும். அவள் சத்தமிட்டாலும் அலைகளின் இரைச்சலில் அது கேட்கவும் கேட்காது.

பிரச்சனையின் தீவிரம் புரிந்த அதேநேரம் அவர்களின் தோற்றம் வேறுஅவளை மிரட்சிக்குள்ளாக்கியது. அவர்கள் எதற்காக இப்படி தன்னிடம் வம்பு செய்கிறாகள் என்று சிந்தித்தவள் உடனடியாக தான் கழுத்தில் அணிந்திருந்த பிளேட்டினம் சைனை கழற்றி கொடுத்தாள். ‘ஷெர்லி’ என்று அவளின் பெயர் அந்த செயினுடன் இருந்த டாலரில் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை வாங்கியவன் அலட்சியமாக திருப்பி திருப்பி பார்த்துவிட்டு,

“கவரிங் செயின் மாதிரி இருக்கு… இது என்னத்துக்கு எனக்கு” என்று அதனை தூக்கி எறிந்துவிட்டான்.  அது வீழ்ந்த இடத்தில் கடலலைகள் அதனை அடித்து சென்றது.

“ஒ மை காட்… இட்ஸ் பிளாட்டினம் மேன்… காஸ்ட்லியர் தென் கோல்ட்” என்று அவள் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை. அவன் எள்ளலாக சிரித்து கொண்டே,

“பாப்பாவுக்கு தமிழே வரதா! இங்கிலீஸ்லதான் பேசுமா?” என்க, அவள் விழிகளில் அப்பட்டமாக பயம் தெரிந்தது.

அவசரத்துக்கு அவளுக்கு ஒரு தமிழ் வார்த்தை கூட கிடைக்கவில்லை. அவர்களிடம் என்ன பேசி எப்படி தப்பிப்பது என்றே புரியவில்லை. அதற்குள் அவர்கள் இருபக்கமாக அவள் இரு கைகளையும் அசையவிடாமல் பற்றி கொண்டனர்.

“ப்ளீஸ்… ஐ பெக் யு… லீவ் மீ… ஐ நீட் டூ கோ” என்று அவள் கெஞ்சி கதற, அவர்கள் கொஞ்சமும் இறங்கிவரவில்லை.  அவர்கள் போதையில் ஏதோ குழறியபடி பேசி கொண்டே அருகாமையில் உள்ள தென்னை மரங்கள் வளர்ந்து கிடந்த இருளடர்ந்த அந்த இடத்திற்குள் அவளை இழுத்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவது ஒன்றும் அவளுக்கு தெளிவாக புரியவில்லை.

ஆனால் தான் எதிர்பார்த்திராதளவுக்கான பெரிய விபரிதம் நிகழ போகிறது என்பது அவள் மூளைக்கு உரைத்த நொடி பிறந்த நாட்டை விட்டு பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்த தனக்கு இப்படி ஒரு முடிவு நேரிட வேண்டுமா? என்றவள் மனம், பதட்டத்திலும் பயத்திலும் அவர்களிடம் தப்பிக்க அல்லாடி கொண்டிருந்தது.

அவர்களின் பிடியிலிருந்து  விடுப்பட அவள் ரொம்பவும் போராடி கொண்டிருந்தாள். அவள் எத்தனை முரண்டு பிடித்தாலும் அவர்கள் செய்ய நினைத்த காரியத்திலிருந்து பின்வாங்கபோவதில்லை என்பதை  உணர்ந்து கொண்டவள் அவர்கள் இழுத்து செல்லும் இடத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்று எண்ணமிட்டு,

தன் கரத்தை பற்றியிருந்த ஒருவனின் கையை கடித்துவிட அவன் அலறிய சமயத்தில் இன்னொருவனையும் தள்ளிவிட்டு ஓடினாள்.

அப்போதும் கூட அவர்கள் அவளை விடாமல் துரத்தி கொண்டு வந்தனர். கடற்கரையோரம் ஓடி கொண்டிருந்தவளை முன்னேறி போக விடாமல் ஒருவன் முன்னே சென்று வழி மறிக்க பின்னோடு ஒருவன் அவளை பிடிக்க தட்டுதடுமாறி ஓடி வந்து கொண்டிருந்தான்.

இடது பக்கமாக ஓடினால் அந்த இருளடர்ந்த தென்னை மரங்களின் வழியாகத்தான் ஓடியாக வேண்டும். வலது புறமோ கடல். அந்த அலைகளோ அவளுக்கு அடைக்கலம் தர தன் பல்லாயிரம் கரங்களை நீட்டி வாவென்று  என்று அழைப்பது போலவே தோன்றியது.

சில செயல்கள் காரண காரியங்களின்றி நடைபெறும். ஆனால் அது பெரிய பெரிய நிகழ்விற்கு வித்தாக அமையும். ஷெர்லி கடலை நோக்கி ஓடியதும் அப்படித்தான். எந்த விதி அவளை கடலை நோக்கி இழுத்ததோ அந்த விதிதான் ஒரு முக்கியமான சம்பவத்திற்கு ஆரம்ப புள்ளியாகப் போகிறது என்பதை அவள் அறிந்திருக்க மாட்டாள்.

நொடி நேரத்தில் அவள் பாதங்கள் கடலை நோக்கி ஓட தொடங்கின. பின்னோடு அவர்கள் துரத்தி கொண்டு வருகிறார்களா என்று கூட பார்க்காமல் வேகமாக அவள் உள்ளே இறங்கிவிட்டாள். ஆழம் அதிகமான பகுதி என்பதால் சட்டென்று அவள் கால்கள் கரைகளை கடந்து மிதக்க தொடங்கின.

அவளுக்கு நீச்சல் தெரிந்திருந்தால் அவர்களிடமிருந்து தப்பிக்க சில நொடிகள் சமாளிக்கலாம் என்று எண்ணினாள். ஆனால் நடந்தது அனைத்தும் அவள் எண்ணங்களுக்கு எதிராகவே இருந்தன. அவள் இறங்கிய இடத்தில் அழுத்தம் அதிகமிருந்த காரணத்தால் அந்த அலைகள் அவளை உள்ளே ஆழமாக இழுத்து கொண்டிருந்தது.

அதேநேரம் திடீரென்று ஏற்பட்ட அலைகளின் சீற்றத்தில் அவள் திக்குமுக்காடி போனாள். அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவள் கரங்களால் நீந்தி கரையேற முடியவில்லை. மரணத்தை கண்கொண்டு பார்த்த அந்த கணத்தில் எல்லாமே முடிந்து போனது என்று அவள் அவநம்பிக்கை கொள்ள, அப்போது அவளை யாரோ காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததுவரை அவளுக்கு நினைவிலிருந்தது.

அதன் பின் மருத்துவமனையில் அவள் விழித்த போது சத்யாதான் அவளருகில் நின்றிருந்தான். அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவளுக்கு மட்டும் ஏதாவது நடந்திருந்தால், ரணகளமாகியிருக்கும். ஏன் அவன் திருமணமே கூட நின்று போயிருக்கலாம்.

தன் வாழ்க்கையையே இப்படி இவள் கெடுக்க பார்த்தாலே என்று சத்யா அவள் மீது அதீத கோபத்திலிருந்தவன் சரமாரியாக அவளை திட்டி முடித்து,

“உனக்கு சூசைட் பண்ணிக்கனும்னா அதை நீ கலிப்போர்னியாவிலேயே பண்ணிக்க வேண்டியதுதானே… என் ஊருக்கு வந்து பண்ணிக்கிட்டு… இப்படி என் லைஃப்யே நாசம் பண்ண பார்த்தியே” என்றான்.

ஷெர்லி சீற்றமாகி, “ஷட் அப் சத்யா… நான் சூசைட் பண்ணிக்க போனேன்னு உனக்கு தெரியுமா? நான் என்ன மாதிரி பிராப்ளத்தை பேஸ் பண்ணனேன்னு கூட கேட்டு தெரிஞ்சிக்காமா… நீ பாட்டுக்கு ரபிஷ்ஷா ஏதேதோ பேசுற

உனகென்ன… நான் இங்கிருந்து போகணும்… அதானே… ஐம் கோயிங்… எனக்கு இந்த பிளேசே வேண்டாம்” என்று அவள் சொன்ன போது சத்யாவிற்கு கொஞ்சமாக வருத்தமாக இருந்தாலும் அவள் போகிறேன் என்று சொன்னதில் ரொம்பவும் நிம்மதியாக இருந்தது.

நல்ல வேளையாக ஷெர்லியின் கைப்பையில் சத்யாவின் கைபேசி எண்ணும் விலாசமும் இருந்தது. அதன் மூலமாக சத்யாவை தொடர்பு கொண்டு ஷெர்லிக்கு ஆபத்து என்று தெரியப்படுத்தவும் பூஜை முடிந்த கையோடு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அவள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

ஷெர்லிக்கு நினைவு தப்பியிருந்தது. மற்றபடி அவளுக்கு ஒன்றுமில்லை என்று மருத்துவர் சொல்லிவிட, அவள் கண்விழித்ததும் அவளை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்துவிட்டான். வீட்டில் உள்ளவர்கள் அவனை குடைந்து குடைந்து கேள்விகள் கேட்டாலும் அவன் விவரமாக எதுவும் சொல்லி கொள்ளவில்லை.

ஷெர்லி பக்கத்திலிருந்த கடற்கரைக்கு போயிருந்தாள். அவள் அங்கிருந்து வழிதவறிவிட்டதால் தான் சென்று அழைத்து வந்தேன் என்று அவன் சமாளித்தாலும் யாருக்கும் அவன் சொல்லும் காரணம் எதுவும் நம்பும்படியாக இல்லை.

சத்யா எங்கே அவர்கள் இது பற்றி கேள்வி கேட்டு குடைய  போகிறார்கள் என்று பயந்து தன் அறைக்கு சென்று உறக்கம் வருவது போல் பாவனை செய்து தப்பி கொண்டான்.

ஷெர்லியோ இரவு உறக்கமில்லாமல் அங்கிருந்து தெரியும் கடலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். இன்னும் அவளுக்குள் இருந்த பயமும் நடுக்கமும் விலகவில்லை. கலிபோர்னியாவில் இருக்கும் போது தமிழ் நாட்டுக்கு வர வேண்டுமென்பது அவள் வாழ்நாளின் ஒரு பெரிய கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது நடந்த அந்த சம்பவத்தின் தாக்கம் அவளுக்கு அங்கே இருக்க வேண்டுமென்ற ஆசையே விட்டுப்போனது.

பல்லாயிரம் மைல்கள் தொலைவிலிருந்து அவள் தமிழ் நாட்டை பற்றி கற்பனை செய்து கொண்ட காட்சியெல்லாம் எதார்த்தத்திற்கு முன் சுக்குநூறாகி போனது. உடனடியாக தன்னுடைய பேகிலிருந்து லேப் டாப்பை எடுத்து கலிப்போர்னியா புறப்படுவதற்கான விமான பயணச்சீட்டின் விவரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அதற்குள் அவள் உடல் களைத்து கண்களை சொருகி கொண்டு உறக்கம் வரவும் அப்படியே லேப் டாப்பை திறந்து வைத்து கொண்டே உறங்கி போய்விட்டாள். அவளே இனி நினைத்தாலும் அவளால் இங்கிருந்து போக முடியாது.

ஷெர்லி அப்போதைக்கு உறங்கியிருந்தாலும் அவளால் நிம்மிதியான உறக்கத்தில் ஆழ முடியவில்லை. விடிவதற்கு சில மணி நேரம் முன்பாகவே உறக்கம் களைந்து விழித்தெழுந்தாள். எழுந்ததும் அவள் லாப் டாப் முகத்தில்தான் விழித்தாள். விமான பயணங்கள் மற்றும் அதன் தேதி நேரம் என்று ஒரு பெரிய பட்டியலிருந்தது.

மீண்டும் எழுந்து அவற்றை பார்வையிட்டு கொண்டிருந்தவளுக்கு காலை பொழுதின் கடலலை இரைச்சல்கள் அவள் செவிகளில் தூரத்திலிருந்து ஒலிக்க, நடந்த அந்த மோசமான விபத்தை எண்ணி உடல் கிடுகிடுத்தது. அப்போதுதான் அவள் சிந்தனையில் சட்டென்று தன்னை யார் காப்பாற்றினார்கள் என்ற கேள்வி எழ, மற்ற எண்ணங்கள் யாவும் பின்னுக்கு தள்ளப்பட்டன.

இது பற்றி சத்யாவிடம் கேட்க வேண்டுமென்று உடனடியாக தன் அறை கதவை திறந்து வெளியே சென்றவள் எல்லோரும் உறங்கி கொண்டிருப்பதை பார்த்து மீண்டும் தன் அறைக்கே திரும்பிவிட்டாள்.

சத்யா எழுந்து கொள்ளும் வரை அவளுக்கு பொறுமை இல்லை. அது பற்றியே அவள் சிந்தனை சுற்றி சுழல தன் லேப் டாப்பை மூடி மீண்டும் தன் பையிற்குள் திணிக்க போகும் போதுதான் கவனித்தாள். அதிலிருந்து அவள் தாத்தாவின் டிசேஸ்டர் ஃபைலை.

‘அதெப்படி இங்கே?’ என்றவள் யோசிக்கும் போதுதான் புறப்படுவதற்கு அவள் தன் பொருட்களை எடுத்து வைக்கும் போது தன் படுக்கையறை மேஜை மீது வைத்திருந்த ஃபைலையும் மறந்து உள்ளே திணித்துவிட்டிருக்கிறோமோ என்று எண்ணி கொண்டாள்.

ஆனால் எதுவுமே இயல்பாகவோ தவறுதலாகவோ நிகழ்வதில்லை. எல்லாவற்றிற்க்கும் பின்னணியில் ஓர் அழுத்தமான காரணம் இருக்கிறது. ஷெர்லி மீண்டும் தன் தாத்தாவின் இரத்த கரை படிந்த அந்த பைலை தன் பையில் நுழைத்துவிட்டாள்.

அவள் எண்ணமெல்லாம் அப்போதைக்கு அவளை யார் காப்பாற்றி இருக்க கூடும் என்பது பற்றித்தான். அத்தனை ஆபத்தான சூழலில் தன்னை காபற்றியவருக்கு ஒரு நன்றி கூட உறைக்கவில்லையே என்று யோசித்தவள் விடிந்ததும் சத்யாவிடம் அது பற்றி கேட்க வேண்டுமென்று யோசித்து கொண்டாள்.

அவள் தீவிரமாக சிந்திக்கும் போது சிகரெட் பிடிப்பது அவளுக்கு வழக்கம். அதே போல அந்த அறையின் ஜன்னலோர திண்டில் அமர்ந்து கொண்டு சிகரட்டை பற்ற வைத்து புகைத்து கொண்டிருந்தாள். வந்த அன்று சத்யா சொன்னதை அவள் மறந்து இப்படி செய்து கொண்டிருக்க, மெல்ல இருள் விலகி வெளிச்சம் பரவியது.

சத்யா எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தவனுக்கு ஷெர்லி  ஜன்னோலாரமாக அமர்ந்திற்கும் காட்சிதான் முதலில் பட்டது. அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவன் தமக்கை வேணி அந்த சமயம் பார்த்து வெளியே வந்து, “ஏ! சத்யா கொஞ்சம் உன்கிட்ட பேசணும்” என்று இறுக்கமான பார்வையோடு சொல்ல, தன் தமக்கையை பார்த்து திடுக்கிட்டு அவசரமாக அவள் கரத்தை பிடித்து உள்ளே இழுத்து வந்தான்.

“இப்ப எதுக்கு டா என் கையை பிடிச்சு உள்ளே இழுத்துட்டு வந்த” என்றவள் புரியாமல் பார்க்க, “வெளியே ஒரே பனியா இருக்கு க்கா… அதான் கல்யாணம் நேரத்துல உனக்கு ஜலதோஷம் பிடிச்சிகிட்டா” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறி கொண்டிருந்தவனை மேலும் கீழுமாக பார்த்தாள்.

சத்யாவோ அவளை அங்கிருந்து துரத்த எண்ணி, “போய் காபி எடுத்துட்டு வரியா க்கா… குடிச்சிட்டே பேசலாம்” என்று சொல்ல அவனை கோபமாக முறைத்தவள்,

“நேத்துல இருந்து உன் முழியே சரியில்ல… எது பேச வந்தாலும் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்கிற” என்றாள்.

‘இப்பன்னு பார்த்து இவ வேற லெக்சர் அடிக்கிறாளே… அங்கே அவ செய்ற வேலையை யாரச்சும் பார்த்து வைச்சா’ என்றவன் உள்ளுர பயந்து நடுங்க அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்த வேணி,

“சரி… நான் போய் காபி எடுத்துட்டு வரேன்… எங்கயாச்சும் ஓடிடாதே” என்று சொல்லிவிட்டு சமையலறைக்கு அவள் செல்ல எத்தனிக்க,  சத்யா வேகமாக ஷெர்லி அறை நோக்கி செல்ல பார்த்தான்.

உடனே வேணி அவன் புறம் திரும்பி, “இப்ப எங்கடா போற?” என்று கேட்க, “அது ஷெர்லி ரூமுக்கு” என்று சொல்லிவிட்டு, ‘ஐயோ! உளறிட்டோமே’ என்று உதட்டை கடித்து கொண்டான்.

“இப்ப எதுக்கு அவ ரூமுக்கு… அதுவும் காலையிலேயே” என்று வேணி சீறி கொண்டு அவனை நெருங்க,

“இல்ல சும்மா… வாக்கிங் போக ஒரு கம்பனிக்கு ” என்று சொல்லி கொண்டிருந்தவன் அக்காவின் முறைப்பை பார்த்து, “நான் தனியாவே போறேன்” என்று திரும்பி நடந்தான்.

“என்கிட்ட காபி கேட்டுட்டு இப்ப நீ வாக்கிங் போக போறியா?” என்று வேணி விடாமல் அவனை படுத்தி எடுக்க, “வெளியே எல்லாம் போகல… நம்ம வாசலியேதான்… நீ காபி எடுத்துட்டு வா” என்று சொல்லிவிட்டு அவளிடமிருந்த தப்பிக்க  விரைவாக நடந்து வெளியே வந்தான்.

வேணி உள்ளே சென்றுவிட்டதை உறுதிப்படுத்தி கொண்டவன் ஜன்னல் வழியாக ஷெர்லிக்கு சிக்னல் கொடுத்தான். அவள் கவனிக்கவில்லை. கீழே கிடந்த சிறு கல்களை எல்லாம் பொறுக்கி எடுத்து அவள் மீது அடிக்க பார்த்தான். ஒன்றாவது அவள் மீதுதான் விழுந்ததால்தானே. அவளோ சிந்தனை வயப்பட்டபடி அமர்ந்திருந்தாள்.

அவன் அவள் கவனத்தை திருப்ப செய்த ராஜத்தந்திரங்கள் அனைத்தும் வீணாக போனது. அவன் என்ன செய்வதென்று புரியாமல் தவிப்போடு நின்றிருந்தான்.

ஆனால் அவன் நல்ல நேரம். அவளாகவே அவன் கீழே நிற்பதை பார்த்துவிட்டாள். உடனடியாக அவள் இறங்கி அவனை நோக்கிவருவதை பார்த்தவன்  முதலில் அவள் கரத்திலிருந்த சிகரட்டை பிடுங்கி கொண்டு அவளை முறைக்க, அப்போதே அவள் தன் தவறை உணர்ந்தாள்.

அப்போது பார்த்து வேணி காபியோடு வந்து நிற்க சத்யா கையில் சிகரெட்டுடன் நின்றிருந்தான். “அடப்பாவி! எப்பத்துல இருந்துடா இந்த பழக்கம் உனக்கு” என்று அதிர்ச்சியாக கேட்க,

“ஐயோ! நான் இல்ல க்கா” என்று அதனை தூர எறிந்தான். ஷெர்லி இதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் வேணி சத்யாவை கழுவி ஊற்றுவதை மௌனமாக பார்த்து கொண்டிருந்தாள். சத்யாவாலும் எதுவும் பதில் பேச முடியவில்லை.

‘இது ஷெர்லியோடது’ என்று தப்பி தவறி அவன் தன் குடும்ப குத்துவிளக்கு அக்காவிடம் சொன்னால் அவனை குத்தியே கொன்றுவிடுவாள். இப்படியெல்லாம் தரங்கெட்ட தோழி உனக்கு தேவையா என்று! அதற்கு இந்த திட்டுக்களே பரவாயில்லை என்று அவன் எண்ணி கொண்டான்.

வேணி அவனை துவைத்து காயப்போட்டதோடு விடாமல் சத்யாவை கடித்து துப்புவதற்கு  அடுத்த சுற்றுக்கு வீட்டிலுள்ள மற்றவர்களை தயார் செய்ய உள்ளே செல்ல போனவளிடம் ஷெர்லி, “சிஸ்டர்” என்று அழைக்க,

வேணி திரும்பி ஒரு முறை முறைத்தாள்.

“காபி ப்ளீஸ்” என்று அவள் கரத்திலிருந்த காபியை சுட்டி காட்ட, வேணி சத்யாவிற்கு எடுத்து வந்ததை ஷெர்லியிடம் கடுப்பாக ஒரு பார்வை பார்த்து கொடுத்துவிட்டு அகன்றுவிட,

“தேங்க்ஸ்” என்று அதனை பெற்று கொண்டாள்.

சத்யா அவளை உக்கிரமாக பார்க்க, “நைட் சரியாவே தூங்க முடியல… ஹெட் ஹேக் வேற” என்று காரணம் கூறி விட்டு அந்த காபியை பருக,

“இதுக்கு மேல நீ எனக்கு செய்றதுக்கு ஏதாவது இருக்கா?” என்று கடுப்பாக கேட்டான்.

“நோ” என்று கூலாக சொல்லிவிட்டு, “ஆனா நீ எனக்கு ஒரு ஃபேவர் பண்ணனும் சத்யா” என்றவள் காபியை பருகி கொண்டே கேட்கவும் , ‘திரும்பியும் முதல இருந்தா?!’ என்றவன் ஏகபோக அதிர்ச்சியில் நின்றான். அவள் எது கேட்டாலும் அவனுக்கு அதனால் ஏதேனும் பூகம்பம் கிளம்புகிறது. இப்போது அவள் என்ன கேட்டு வைக்க போகிறாளோ என்று அவன் உள்ளம் படபடத்தது.

error: Content is protected !!