AOA-7

AOA-7

 

அவனின்றி ஓரணுவும்- 7

ஆணிடம் பெண் ஈர்க்கப்படுவதும் பெண்ணிடம் ஆண் ஈர்க்கப்படுவதும்தான் இயற்கையின் நியதி. அதுவே இந்த உலகின் இயக்கத்தின் மூலாதாரமும் கூட.

இந்த நியதிக்கு உலகிலுள்ள எந்த உயிரினங்களும் விதிவிலக்கல்ல!

பிரபஞ்சனை பார்க்க முடியாத ஏமாற்றம் ஷெர்லிக்கு சத்யாவின் மீது கோபமாக திரும்பியது.

ஷெர்லி சத்யாவிடம் தன்னை காப்பற்றியது யாரென்று கேட்டறிந்தவள், முதல் வேலையாக அவனை நேரில் பார்த்து நன்றி சொல்லியே ஆக வேண்டுமென்று பிடிவாதமாக நின்றாள்.

“அதெல்லாம் நெஸசரி இல்ல… பிரபா அதெல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டாரு” என்று அவளை சமாளிக்க பார்த்தான் சத்யா. ஆனால் அவன் சமாளிப்புகள் எதுவும் அவளிடம் எடுப்படவில்லை.

“சாரி… ஐ நீட் டு ஸீ அன் தேங்க் ஹிம்” என்றவள் பிடித்த பிடியில் நிற்க,

“அவங்க வீடு பக்கத்திலதான் இருக்கு… ஆனா நேரில எல்லாம் போக வேண்டாம்… அது கொஞ்சம் பிரச்சனை… நீ வேணா ஃபோனில பேசி தேங்க் பண்ணேன்… நான் நம்பர் தரேன்” என்றான்.

தவளை தன் வாயால் தானே கெடும் என்பது போல் சத்யாவே அவளிடம் வாயை கொடுத்து சிக்கி கொண்டான். பக்கத்தில்தான் அவன் வீடு என்று சொன்னதை அவள் அழுத்தமாக பிடித்து கொண்டு, போய் நேரில் பார்த்து நன்றி சொல்லியே தீர வேண்டுமென்று வம்படியாக நின்றாள்.

“சொல்றதை கேளு ஷெர்லி… எங்க அப்பாவுக்கும் அவங்களுக்கும் கொஞ்சம் பிரச்சனை” என்று தயங்கிய சத்யாவிடம்,

“ஸோ வாட்… எனக்கு மிஸ்டர் பிரபஞ்சனை நேர்ல பார்த்து தேங்க் பண்ணியே ஆகணும்… வில் யு டேக் மீ ஆர் நாட்?” என்று அவள் அவனிடம் முடிவாக கேட்க, சத்யா கோபமானான்.

“சாரி… ஐ கான்ட்” என்று அவன் திடமாக மறுக்கவும், “ஓகே… நானே போயிக்கிறேன்… பட் ஒன் திங்” என்று நிறுத்தி அவன் முகத்தை நேர்கொண்டு பார்த்தவள்,

“எஸ்டர்டே மாதிரி எனக்கு எதாச்சும் ப்ராப்ளம் வந்து ஃஇப் அட் ஆல் அதனால உன் மேரேஜ் நடக்கறதுல எதாச்சும் ரிஸ்க் வந்துச்சுன்னா… சாரி! அதுக்கு நான் ரெஸ்பான்ஸிபல் இல்ல…இப்பவே சொல்லிட்டேன்” என்று ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்தடித்து அலட்டி கொள்ளாமல், அவன் தலையில் ஒரு அணு குண்டை போட்டுவிட்டு அவள் பாட்டுக்கு அவனை கடந்து சென்றாள்.

‘இவ என்ன… எப்ப பாரு என் கல்யாணத்துலயே வந்து நிற்குறா… ஐயோ! இவளே ஒரு பெரிய பிரச்சனை… இதுல வெளியே இருந்து வேற இவ எதாச்சும் பிரச்சனையை கூட்டிட்டு வந்து வைக்கணுமா… பேசாம நாமளே வீட்டுக்கு தெரியாம இவளை கூட கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்திருவோம்’ என்று எண்ணி ஒரு முடிவுக்கு வந்தவன் முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஷெர்லியிடம்,

“ஷெர்லி வெய்ட்” என்று அவளை நிறுத்திவிட்டு, “ரெடியாகு நானே உன்னை கூட்டிட்டு போறேன்” என்றான்.

அவள் அவனை வியப்பாக பார்த்து, “இஸ் இட் ஓகே ஃபார் யு?” என்று கேட்க அவளை கடுப்பாக பார்த்தான்.

‘ஓகே இல்லன்னு சொன்னா மட்டும் விட போறியாக்கும்’ என்று மனதில் எண்ணி கொண்டவன், “ஹ்ம்ம்” என்று தலையசைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

உள்ளே அவன் தமக்கை வேணி சத்யா சிகரெட் பிடித்து கொண்டிருந்ததாக நினைத்து பற்ற வைத்த நெருப்பு அவன் குடும்பத்தில் தாறுமாறாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

அவன் தந்தை லோகநாதன், தாய் சாந்தி, தமையன் பாஸ்கர் என்று மூவரும் மாற்றி மாற்றி, “எப்பதுல இருந்துடா உனக்கு இந்த பழக்கம்… யார்கிட்ட இருந்து கத்துகிட்ட” என்று அவனை கேள்விகளை கேட்டு துவைத்து பிழிந்து காய போடும் சமயத்தில் ஷெர்லி உள்ளே புகுந்து,

“நான் உங்க ஃபேமிலி மேட்டர்ல இன்டரப்ட் பண்றதுக்கு சாரி… பட் நான் ஒன்னு சொல்லணும்” என்றவள் ஆரம்பிக்க சத்யாவின் தமக்கை வேணி இடைபுகுந்து, “நீ எதுவும் பேச வேண்டாம்… நீ உன் ரூமுக்கு போ… இது எங்க குடும்ப விஷயம்” என்று முகத்திலறைந்தது போல் சொல்லிவிட்டாள்.

“ஃபைன்… இது உங்க குடும்ப விஷயம்… ஆனா அந்த சிகரெட் என்னோடது… இட்ஸ் மைன்… நீங்க தேவையில்லாம் சத்யாவை ஸ்கோல்ட் பண்ணிட்டு இருக்கீங்க” என்று சர்வசாதரணமாக சொல்லிவிட்டு அவள் படிக்கட்டில் ஏறி தன்னறை நோக்கி விரைய, சத்யாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர்.

எல்லோரும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னதாக தப்பிவிடலாம் என்று எண்ணி ஷெர்லி பின்னோடு ஓடி வந்தவன், “ஏன் ஷெர்லி இப்படி பண்ண? இதுக்கும் சேர்த்து நான்தான் திரும்பியும் திட்டு வாங்க போறேன்” என்று பல்லை கடித்து கொண்டு அவளிடம் கோபமாக பேசினான்.

அவனை அலட்சியமாக திரும்ப பார்த்த ஷெர்லி, “ஏன் சத்யா… இதுக்கே இப்படின்னா… நீ ட்ரங்க் பண்ண விஷயம் உன் ஃபேமிலிக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாங்க?” என்று கேட்ட நொடி அப்படியே ஜெர்காகி நின்ற சத்யா,

“நீதானே அல்கஹால் பெர்ஸன்டேஜ் லோன்னு எதையோ குடிக்க சொன்ன”  என்றான்.

“நீ ட்ரிங்  பண்ணது என்ன தெரியுமா?” என்று ஆரம்பித்தவள்,

“வொட்கா… அங்கிருந்ததுலயே அதான் லோ ஏபி லெவல் சத்யா… அதை டிரங் பண்ணிட்டே நீ” என்று அவள் குத்தலாக பார்த்த பார்வையில் அவன் பிபி எகிறியது.

“இன்னும் நீ ரம் விஸ்கியெல்லாம் டிரங் பண்ணியிருந்தா?” என்று வேறு அவள் மேலும் இழுக்க,

“ஒய் திஸ் கொலைவெறி? நான் உனக்கு என்ன பண்ணேன்?” என்று படபடப்போடு அழாத குறையாக கேட்க, அவள் அவன் கேட்ட விதத்தில் சத்தமாக சிரித்துவிட்டாள்.

அவள் சிரிப்பு சத்தம் கீழே கேட்டு விடுமோ என்ற பயத்தில் பதறியடித்து அவளை இழுத்து கொண்டு அறைக்குள் வந்து கதவை மூடிவிட்டான்.

அவனுக்கு தலை கிறுகிறுத்தது. ஒரு நாளுக்குள் அதுவும் ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை அதிர்ச்சியைத்தான் அவளும் தருவாள். அவனும் அதை தாங்குவான். அவனுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.  இப்படியே போனால் அழுதேவிடுவான்.

‘குடியே கெதியா கிடக்கிறானுங்க… நான் ஒரே ஒரு நாள் குடிச்சிட்டு இந்த பாடுபடறனே’ என்று பயத்தோடு எண்ணியவன்,

“ப்ளீஸ் ஷெர்லி… அந்த மேட்டரை மட்டும் எங்க வீட்டில போட்டுவிட்டிராதே… ப்ளீஸ்” என்று பயபக்தியோடு கெஞ்சி குரலை தாழ்த்தி சொல்லவும் அவள் புன்னகைத்தாள்.

“ப்ச்… அதை விடு சத்யா… நம்ம எப்போ மிஸ்டர். பிரபஞ்சனை மீட் பண்ண போறோம்” என்றவள் தன் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு பல்லை கடித்து கொண்டு, “ரெடியாகு கூட்டிட்டு போய் தொலைக்கிறேன்” என்று கடைசி வார்த்தையை  வாயிற்குள் முனக, “ஓகே” என்றவள் முகம் மலர்ந்தது.

சத்யா உடனே, “அதுக்கு அப்புறம் நீ டிக்கட்ஸ் புக் பண்ணி கலிபோர்னியா போயிடுவதானே?!” என்று கேட்க, “ஹ்ம்ம் எஸ்” என்று அவளும் தோள்களை குலுக்கினாள். ஆனால் பிரபஞ்சனை பார்த்த பிறகு அவளுக்கு போக மனம் வருமா என்ன?

சத்யாவோ இதற்காகவே அவளை உடனே அழைத்து சென்றுவிட்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்தோடு அவளை தயாராக சொல்லிவிட்டு தானும் தன் அறைக்கு சென்று புறப்பட தயாரானான்.

ஷெர்லி அவள் சொன்னது போல போக வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டாள். ஆனால் அதற்கு முன்னதாக தன்னை காப்பாற்றிய பிரபஞ்சனை நேரில் பார்த்து ஒரு நன்றியாவது சொல்லிவிட வேண்டுமென்பதுதான் அவளுடைய எண்ணம்.

சத்யா புறபட்டு தயாராக, அவன் வீட்டிலுள்ள யாரும் அவனிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அசூயையாக பார்ப்பதும் தலையில் அடித்து கொள்வதும் என்று மௌன பாஷையிலேயே அவனிடம் வெறுப்பை காண்பிக்க,

“ஷெர்லியோட கல்ச்சர் அந்த மாதிரி… அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்றவன் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தாலும் யாரும் அதை கேட்கும் நிலைமையில் இல்லை. புரிந்து கொள்ளவும் விழையவில்லை.

சத்யா மீண்டும், “ப்ளீஸ்… ஷெர்லி என்னை நம்பி அவங்க நாட்டில இருந்து இங்க வந்திருக்கா… அவகிட்ட யாரும் கோபமா பேசிட வேண்டாம்” என்று அவளுக்காக பரிந்து பேசியவன், “இந்த வீக்குள்ள அவளே கிளம்பிடுவா” என்று முடித்தான்.

அந்த வார்த்தை ஓரளவு சத்யா குடும்பத்தினருக்கு திருப்திகரமாக இருந்ததால் எல்லோர் முகத்திலும் நிம்மதி படர்ந்தது. அதற்கு மேல் அந்த விஷயத்தை பற்றி பேச எதுவுமில்லை என்று அமைதியாகிவிட்டனர்.

அந்த பிரச்சனை தீர்ந்துவிட அவளை எப்படி வெளியே அழைத்து செல்வது என்று யோசிதத்தவன், “ஷெர்லிக்கு நம்ம ஊர் கோவிலை பார்க்கணுமா?” என்று ஒரு பொய்யை சொல்ல,

முதலில் எல்லோரும் முறைத்தாலும் மேலே எதுவும் பேசி கொள்ளவில்லை.

கோவில்தானே என்று அமைதியாகிவிட்டனர். ஆனால் ஹரிஹரன் வீட்டிற்கு செல்கிறார்கள் என்று தெரிந்தால் அது நிச்சயம் பிரச்சனையில்தான் முடியும். ஏனெனில் சத்யாவின் தந்தை லோகநாதனுக்கு ஹரிஹரனை கண்டாலே பிடிக்காது.

லோகநாதனின் குடும்பம் வழிவழியாக அந்த ஊரில்தான் வசித்து வருகின்றனர். ஒரு காலத்தில் அந்த ஊர் முழுக்க அவர்கள் குடும்ப சொத்துக்கள்தான். அவர்கள் குடும்பம்தான் ஊரிலேயே பெரிய குடும்பமாக இருந்தது. பின் அது காலப் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மாறி போனது. அவர்கள் சொத்துக்கள் எல்லாம் அவரின் தாத்தாவின் தாத்தா காலத்தில் கையை விட்டு போனது.

இப்போதிருப்பதோ அன்று இருந்ததில் கால் பங்குதான். இருப்பினும் அந்த ஊரிலுள்ளவர்களுக்கு லோகநாதன் குடும்பத்தின் மீதிருந்த மரியாதை குன்றவில்லை.

இதெல்லாம் ஹரிஹரன் வந்த பிறகு மாறி போனதுதான் பிரச்சனை. மாறி போனது என்று சொல்வதை விட லோகநாதனை விட ஹரிஹரன் மீதிருந்த மதிப்பு கூடிப்போனது என்று சொல்லலாம்.

ஹரிஹரன் குடும்பமும் அதே ஊர்தான். அவர் தன் பள்ளி படிப்பை முடித்த போது அவர்கள் குடும்பத்தோடு சென்னை வந்தனர். அங்கேயே தன் மேல் படிப்பை முடித்த ஹரிஹரன் பின் வியாபாரம் ஆரம்பித்து தன் குடும்பத்தோடு இந்தோனேஸியா சென்றுவிட்டார்.

பின் அவர் குடும்பம் மொத்தமும் இந்தோனிஸியாவில் வந்த பேரலைக்கு பரிதாபகரமாக பலியானது. அதன் பின்பு ஹரிஹரன் வாழ்க்கையே சூனியமாகி போனது. பணம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணமெல்லாம் விட்டு போனது.

எல்லாவற்றின் மீதுமிருந்த பிடிப்பும் அறுந்து போக, அவர் தன் வியாபாரத்தை விட்டுவிட்டுத்தான் இந்தியா திரும்பினார். ஏதோ உயிர் வாழ்ந்தால் போதுமென்றுதான் தன் சொந்த ஊருக்கு வந்தார்.

ஆனால் விதி அவருக்கு அங்கே ஓர் பிணைப்பை கொடுக்கும் என்று அவரே எதிர்ப்பார்க்கவில்லை. ஹரிஹரனின் தந்தையின் சொத்துக்கள் கொஞ்சம் அந்த ஊரிலிருந்தது. அதோடு அவர் தாத்தாவின் பழைய வீடும் தோட்டமும் இருந்தது.

அந்த வீட்டையும் இடத்தையும் ஹரிஹரன் அவர் வசதிக்கேற்ப கட்டமைத்து அங்கேயே தங்கி கொண்டார். அங்கேதான் லோகநாதனுக்கு ஹரிஹரனுடன் முதல் பிரச்சனை உருவெடுத்தது. அந்த இடத்தை அவர் எப்படியாவது விலைக்கு வாங்கிவிடலாம் என்று முயன்று கொண்டிருந்தார்.

அந்த வீடு சிறியதாக இருந்தாலும் தோட்டத்தின் பரப்பளவு மிக பெரியது. முறையாக பராமரித்தால் அங்கே அவர்கள் எதிர்ப்பார்த்தைவிட தென்னை, வாழை என்று பெரிய தோட்டம் போட்டு சம்பாதிக்கலாம். ஆனால் ஹரிஹரன் வருகையால் லோகநாதன் நினைத்தது நடக்காமல் போனதில் அவருக்கு கொஞ்சம் வருத்தம்.

இருப்பினும் ஹரிஹரன் தன் குடும்பத்தை இழந்து அங்கே வந்திருப்பதால் அவர் மீது லோகநாதனுக்கு இரக்கம் பிறந்திருந்தது. இருவரும் ஒரு காலத்தில் பள்ளியில் ஒன்றாக பயின்றவர்கள் என்ற பழக்கமும் இருந்ததால் அவருக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தார்.

அதற்கு பின்னணயில் லோகநாதனுக்கு கொஞ்சம் சுயநலமும் இருந்தது. ஹரிஹரனுக்கு பிறகு அவர் சொத்திற்கு யாரும் வாரிசில்லை என்பதுதான்.  அதை எப்படியாவது விரைவில் தானே வாங்கி கொள்ளலாம் என்று எண்ணியிருந்தார்.

ஆனால் ஹரிஹரன் வாழ்க்கையில் பிரபஞ்சன் வந்தது லோகநாதனுக்கு அடுத்த ஏமாற்றத்தை தந்தது. அவர்கள் நட்பில் விரிசல் உணடானது.

தன் மகனை இழந்த துயரத்தை பிரபஞ்சன்தான் ஈடு செய்ய முடியுமென்று எண்ணினாரோ? அவனை பார்த்த மாத்திரத்தில் அந்த முடிவை எடுத்து செயல்படுத்தியும்விட்டார்.

பிரபஞ்சனை ஹரிஹரன் தத்தெடுப்பதில் லோகநாதனுக்கு துளியும் உடன்பாடில்லை. இருப்பினும் அது நிகழ்ந்தது.

இருண்டு கிடந்த ஹரிஹரனின் வாழ்கையில் பிரபஞ்சன் சூரியக்கதிராக நுழைந்து அவர் வாழ்கையின் இருளை போக்கி பிரகாசிக்க செய்தான். அது பரஸ்பரம் பிரபஞ்சனுக்கும் நடந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக நின்றனர்.

அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த இழுப்புகள் கற்று கொடுத்த பாடத்தில் எதிர்காலத்திற்கு சேர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணமின்றி இருவரும் அவர்கள் ஈட்டும் பணம், பொருள் எதுவாக இருந்தாலும் அவர்களின் தேவைக்கு கொஞ்சம் இருப்பு வைத்து கொண்டு மிச்சத்தை அந்த ஊரிலுள்ள நலிந்த மக்களின் குழந்தைகளின் படிப்பு செலவு, மருத்துவ செலவு மற்றும் அங்கு வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்று வழங்கி உதவி புரிந்தனர்.

அதன்பின் ஊர் மக்களுக்கு ஹரிஹரன் பிரபஞ்சன் மீது பெருமதிப்பு உண்டானது. அவர்கள் எல்லோருமே தங்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் ஹரிஹரன் வீட்டின் வாயிலில்தான் நிற்பர். அதுவும் ஊரில் எந்த விசேஷம் என்றாலும் முதல் பத்திரிக்கை அவருக்குத்தான் என்று வேறு ஆகி போனது.

எங்கிருந்தோ வந்துவிட்டு சொந்த ஊரில் தன் மரியாதையை பறித்து கொண்டானே என்று லோகநாதன் ஹரிஹரன் மீது பகையை வளர்த்து கொண்டார். ஏதாவது விசேஷங்கள் அல்லது பொது இடங்களில் ஹரிஹரனை லோகநாதன் பார்த்தால் இயல்பாக நலம் விசாரிப்பார். ஆனால் அது வெறும் உதட்டளவில்தான். உள்ளுர அவருக்கு கோபம் கனன்று கொண்டிருக்கும்.

அதுவும் சமீபமாக அவர்கள் ஊரில் ஹரிஹரன் வீட்டிற்கு அருகில் விலைக்கு வந்த நிலத்தை லோகநாதன் வாங்க எண்ணிய அதேசமயம் ஹரிஹரனும் அந்த இடத்திற்கு விலை பேசினார். இறுதியில் அந்த இடத்தின் உரிமையாளர் ஹரிஹரனுக்கு நிலத்தை கொடுக்க, அதனை பிரபஞ்சன் பெயரில் வாங்கி போட்டார் ஹரிஹரன்.

லோகநாதனின் அடக்கப்பட்ட கோபம் அங்கே மொத்தமாக வெடித்துவிட்டது. நேரடியாகவே ஹரிஹரன் மீது வெறுப்பை உமிழ்ந்தார். அத்தோடு அவர்களுக்கு இடையில் பேச்சு வார்த்தை நின்று போனது.

லோகநாதன் குடும்பத்திலுள்ள அனைவருமே ஹரிஹரன் பிரபஞ்சனை கண்டாலே பிடிக்காதளவுக்கு அவர்கள் குடும்பத்திலுள்ளவர்களின் மனதில் இவர்களை பற்றி தவறாக கூறி வெறுப்பை ஊன்றினர்.

இதனால் சத்யா குடும்பத்திலுள்ளவர்கள், பிரபஞ்சன் ஹரிஹரன் கண்டாலே அலட்சியமாக முகத்தை திருப்பி கொண்டு சென்றுவிடுவர்.

ஷெர்லியை காப்பாற்றியது பிரபஞ்சன் என்ற காரணத்தினாலேயே முக்கியமாக வீட்டில் அந்த விஷயம் தெரியாதபடி மறைத்தான் சத்யா.

அவர்களின் பெயரை சொன்னாலே லோகநாதன் சீற்றமாகிவிடுவார். இப்போது அவர்கள் வீட்டுக்கு தான் போனால் தன்னிலைமை என்னவாகும் என்று பயந்து கொண்டேதான் ஷெர்லியை அழைத்து வந்தான் சத்யா.

அதோடு அவன் வரும் போதே, “வீட்டுக்குள்ள எல்லாம் போக வேண்டாம்… ப்ளீஸ் வாசலிலேயே நின்னு தேங்க் பண்ணிடு” என்றவனை ஷெர்லி, ‘லூசா நீ’ என்றளவுக்கு கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்.

என்று அவன் சொல்வதை அவன் கேட்டிருக்கிறாள்? இப்போது கேட்க?! அவன் சொல்வதை காதில் கூட வாங்காமல் அவள் முன்னே நடந்து சென்றாள்.

லோகநாதன் வீட்டிலிருக்கும் ஒரே சாலையில் கடைசி வீடுதான் பிரபஞ்சனுடையது. ஆதலால் இருவரும் நடந்தே வந்தனர்.

சத்யா சொன்ன வழியை வைத்து ஷெர்லி முன்னே நடந்து கொண்டே, “உங்க ஃபேமிலிக்கும் அவங்க பேமிலிக்கும் என்ன ப்ராபளம் சத்யா?!” என்று கேட்க,

“அதெல்லாம் தெரியாது… எங்க அப்பாவுக்கு அவங்களை பிடிக்காது… அதுவுமில்லாம பிரபஞ்சன் ஹரிஹரன் அங்கிளோட சொந்த மகனெல்லாம் கிடையாது… அடாப்டட் சன்” என்றதும், “ஒ! இஸ் இட்” என்று அவள் விழிகள் பெரிதாகின. அவள் சுவராசியமாக அவன் சொல்வதை நின்று நிதானமாக கேட்க தொடங்கினாள்.

ஹரிஹரன் குடும்பம் சுனாமியில் இறந்து போனதற்கு பின் பிரபஞ்சனை அவர் தத்தெடுத்த கதையெல்லாம் அவன் சொல்ல சொல்ல அவளுக்கு ஆர்வம் மிகுந்தது. பிரபஞ்சனை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் இன்னும் வலுபெற தொடங்கியது.

அவள் ஆவலோடு, “அப்போ பிரபஞ்சன் ஃபேமிலி?” என்று கேட்க,

“அத பத்தியெல்லாம் எங்களுக்கு தெரியாது… ஹரி அங்கிளுக்கு வேணா தெரிஞ்சிருக்கலாம்” என்று முடித்தான். இந்த விடை தெரியாத கேள்விகள் பிரபஞ்சனை பார்க்க வேண்டுமென்ற எண்ணத்திற்கு இன்னும் தூண்டுகோலாக அமைந்தது.

அவளும் ஆவலோடு பிரபஞ்சனை பார்க்க அவர்கள் வீட்டை நெருங்கிய சமயம் சத்யாவின் ஊரிலுள்ள நண்பர்கள் சிலர் அவனை கடந்து சென்ற போது, அவனை நிறுத்தி நலம் விசாரித்தனர்.

அவர்கள் பேச்சு சத்யாவிடம்தான் என்றாலும் பார்வை முழுக்க ஷெர்லியைத்தான் அளந்து கொண்டிருந்தது. அவள் அணிந்திருந்த ஷார்ட் ஸ்கர்ட் அவர்கள் கண்களை உறுத்தியதோ என்னவோ?

ஷெர்லி அவர்களை எல்லாம் திரும்பி கூட பார்க்கவில்லை. சத்யா பேசி கொண்டிருப்பதால் அவள் அங்கே நின்றிருந்தாள். ஆனால் அவள் எண்ணமெல்லாம் பிரபஞ்சன் பற்றித்தான். அவன் பார்க்க எப்படி இருப்பான் என்ற பேராவலில் அவளின் கற்பனை குதிரை தாறுமாறாகப் பறந்து கொண்டிருந்தது.

பார்க்காத ஒருவனை பற்றி சிந்திப்பது இதுவே முதல் முறை என்று தன் எண்ணத்தை எண்ணி தானே வியந்தும் கொண்டாள். இவற்றையெல்லாம் தாண்டி அவன்தான் தான் தேடி வந்த நாயகனோ என்றவள் மனம் விசித்திரமாக யோசிக்க, அது அப்படி இல்லாமல் ஏமாற்றத்தில் முடிந்தால் என்ற கவலையும் உண்டானது.

சத்யா அதற்குள் தன் நண்பர்களின் நலம் விசாரிப்பிற்கெல்லாம் பதில் சொல்லி அவர்களை பெரும்பாடுப்பட்டு அனுப்பி வைத்தாலும் அவர்கள் எல்லோரும் ஷெர்லியை திரும்பி பார்த்து கொண்டே சென்றனர்.

சத்யா தன் நண்பர்களின் தவறான பார்வையை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டான். அவர்களை அதற்காகவே விரைவாக பேசிவிட்டு அனுப்பியவனுக்கு கோபமெல்லாம் ஷெர்லி மீதுதான்.

பிரபஞ்சன் வீட்டின் வெளிவாயிலை அவர்கள் நெருங்கிய சமயம் சத்யா,

“கொஞ்சம் ஃபுல்லா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்று கேட்க, முதலில் அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

பின்னர் அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் ஓரளவுக்கு அவளுக்கு புரியவும் செய்ய, அவனிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தாள்.

உடை என்பது அவள் தனிப்பட்ட விஷயம். அதில் மற்றவர் கருத்து சொல்வதும் தவறாக பேசுவதையும் அவளால் ஏற்க முடியாது. அவள் வளர்ந்த விதமும் சூழலும் அப்படியானது எனும் போது அவன் புறம் எரிச்சலாக திரும்பி, “ஒய்… என் டிரஸிங்க்கு என்ன பிராப்ளம்?” என்று தடாலடியாக கேட்க,

சத்யாவிற்கும் அவள் மீது கோபம் கனன்று கொண்டிருந்தது.

“நேத்து வந்த பிராப்ளம் பத்தாதா?” என்று அவனும் அவளிடம் பதில் வாதம் செய்தான். அவன் வார்த்தைகள் அவளை ரொம்பவும் காயப்படுத்திவிட,

“ஸ்டாப் இட்… பிராப்ளம் இஸ் நாட் இன் மை டிரஸிங்…. இட்ஸ் அன் தெய்ர் மைன்ட்ஸ” என்று சாலை என்றும் பார்க்காமல் பொறிந்து தள்ளியவளின், முகம் இறுக விழிகள் சிவப்பேறின.

அவள் கோபத்தை கண்டு சத்யா மௌனமாகிட, அப்போது அவள் உதடுகள் சில பல ஆங்கில கெட்ட வார்த்தைகளால் நிந்தித்தது. ஆனால் அதெல்லாம் நேற்று அவளிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபர்களை குறிப்பிட்டுத்தான்!

ஆனால் சத்யா அவள் தன்னைத்தான் சொல்கிறாளோ என்று எண்ணி அதிர்ந்து,

“இப்ப என்னை… என்னை பார்த்து என்ன சொன்ன?” என்று சீற,

ஷெர்லி அப்போது அவன் முகத்தை பார்த்து, “டேமிட்… நான் உன்னை என் ப்ரெண்டாதான் நினைச்சேன்… பட் நோ… யு ஆர் நாட்… உன்னை நம்பி நான் இந்தியா வந்திருக்கவே கூடாது… ஐ ஹேவ் டன் எ பிக் மிஸ்டேக்” என்று எரிச்சலோடு அவள் சொன்னாலும் அவள் விழிகளில் நேற்று நடந்த சம்பவத்தின் வலி அதிகமாக இருந்தது.

அவளுக்கு அந்த விஷயத்தை எண்ணும் போதே அவமானமாக இருந்தது. அதுவும் அவர்களின் அநாகரிகமான நடவடிக்கைக்கு அவள் அணிந்து கொண்டிருந்த உடைதான் காரணமென்று சொல்லும் போது, அவளால் அதே ஏற்க முடியவில்லை.  அவள் உள்ளம் கொதித்தது.

அவள் பிறந்து வளர்ந்த நாட்டில் இதுநாள்வரை இப்படி ஒரு அனுபவத்தை அவள் கடந்து வந்ததில்லை. அதுவும் தனியாகவே வாழ பழகியவள்,  தவறான பார்வைகள் பலவற்றை அவள் கடந்து வந்தாலும் இதை போன்ற அநாகரிகமான அத்துமீறல்கள் அவளுக்கு ரொம்பவும் புதிது. அந்த சம்பவத்தின் தாக்கம் அவள் மனதை ரொம்பவும் பாதித்திருந்தது. அது அவளுக்கு தன் சொந்த ஊருக்கு அப்போதே திரும்பிவிட வேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கியது.

காயப்பட்ட குழந்தை தாய் மடியை தேடி ஓடுவது போல அவள் தன் தாய் நாட்டிற்கு உடனே திரும்பிவிட வேண்டுமென்ற மனநிலைக்கு வந்திருந்தாள். எப்போது தன் தாய் நாட்டிற்கு திரும்புவோம் என்ற ஏக்கம் அவள் விழிகளில் அப்பட்டமாக தெரிந்தது.

சத்யா அவள் மனதின் வலியை உணரந்தானோ தெரியாது. ஆனால் அப்போதைக்கு அங்கே நின்று பிரச்சனை செய்து கொள்ள வேண்டாம் என்று நிதான நிலைக்கு வந்து, “ஷெர்லி ப்ளீஸ்… எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… நம்ம சீக்கிரம் இங்கே பிரபஞ்சனை பார்த்துட்டு கிளம்பணும்” என்று தான் பிரச்சனையில் சிக்கி கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

அப்போதுதான் ஷெர்லியும் தான் பிரபஞ்சன் வீட்டு வாசலில் நிற்கிறோம் என்பதை உணர்ந்தாள். அதன் பின் அவள் மனம் மீண்டும் பரபரப்பான நிலையை எட்டிவிட, அந்த வீட்டின் வாயிலை திறந்து அவள் உள்ளே நுழைய சத்யாவும் அவள் பின்னோடு நுழைந்தான்.

அதே சமயம் பிரபஞ்சன் வெளியேறிவிட்டான். உண்மையிலேயே அது பிரபஞ்சனாக இருக்க கூடும் என்று ஷெர்லி நினைக்கவில்லை. ஆதலால் பைக்கில் சென்ற நபரை அவள் கூர்ந்து கவனிக்கவும் இல்லை.

அவன் வீடு வரை தேடி வந்தும் அவனை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற ஏமாற்றம் சத்யா தன்னிடம் அப்படி பேசியதால்தான் வந்தது என்று அவனை முடிந்த மட்டும் முறைத்து கொண்டு நின்றாள்.

வந்த காரியமே கடைசியில் வீணாகி போனதே. இன்னும் உள்ளே சென்று என்ன செய்வது என்று சத்யாவை முறைப்பதோடு அல்லாமல் அவனை என்ன செய்யலாம் என்று ஆத்திரம் பொங்க அவள் பார்த்து கொண்டு நிற்க,

“ஹாய் பியூட்டி… வெல்கம்” என்று துள்ளலோடு கேட்ட குரல் அவள் கவனத்தை ஈர்த்தது. அவள் திரும்பி பார்க்க ஹரிஹரன் அவளை வரவேற்கும் பாணியில் புன்னகை முகமாக நின்றிருந்தார்.

அவரை பார்த்த நொடி அவள் மனதிலிருந்த கோபம் வருத்தமெல்லாம் மெல்ல மறைந்து அவளும் பதிலுக்கு புன்னகைக்க, “ஐம் ஹரிஹரன்… நைஸ் டு மீட் யு” என்று தன் கரத்தை நீட்டி அவர் அறிமுகம் செய்து கொள்ள,

“ஹெலோ ஹரி… ப்ளீஸ்ட் டு மீட் யு” என்று அவளும் சகஜமாக கை குலுக்கினாள். ஹரிஹரனுக்கு பேரானந்தம் உண்டானது. பிரபஞ்சன் சொல்லிவிட்டு சென்றது போல் அவள் தன்னை ‘அங்கிள்’ என்றோ ‘கிரேன்ட் பா’ என்றோ விளிக்கவில்லை.

ஹரிஹரன் மனம் பிரபஞ்சன் இப்போது இங்கே இருந்திருக்க வேண்டும். பரவாயில்லை! அவன் வந்தால் இதை சொல்லி அவன் மூக்கை உடைக்கலாம் என்று எண்ணி கொண்டது.

சத்யா ஒருபக்கம் அவரை பற்றி, ‘எந்த வயசில இருக்கிறவனும் இவளை பார்த்தா லூசாயிடுவாங்க போல’ என்று வெளியே பார்த்த தன் நண்பர்களில் தொடங்கி ஹரிஹரனும் அப்படித்தான் என்று எண்ணி கொண்டவன், அந்த பட்டியலில் தானுமே அடக்கம் என்று எண்ணினான். அதேநேரம் ஷெர்லியை பார்த்தும் பார்க்காமல் போன பிரபஞ்சன் நினைவுக்கு வந்தான். அவன் எந்த ரகத்தில் சேர்த்தி என்று அப்போது யோசிக்க தோன்றியது.

இதற்கிடையில் ஷெர்லி ஹரிஹரனிடம் பரஸ்பரம் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொள்ள, “ஐம் ஷெர்லி” என்று அவள் ஆரம்பிக்கும் போதே,

“யா பியுட்டி … ஐ நோ… கம் இன்சைட்” என்று அவளை உள்ளே அழைத்தார். அவர் பேசிய தோரணையில் அவள் முகமெல்லாம் மலர்ந்தது. ஆனால் சத்யாவிற்கு, ‘இந்த கிழவனுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல’ என்று கடுப்பானான்.

ஷெர்லியோ அவர் உள்ளே அழைக்கவும் அவள் தயக்கமாக திரும்பி சத்யாவை பார்க்க அவன், ‘வேண்டாம்… திரும்பி போகலாம்’ என்று செய்கை செய்தான்.

சத்யாவின் பார்வையை புரிந்து கொண்ட ஹரிஹரன் ஷெர்லியிடம், “கம் இன்சைட் டார்லிங்” என்று மீண்டும் அழுத்தமாக அழைத்துவிட்டு அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் உள்ளே சென்றுவிட, ஹரிஹரனின் அழைப்பின் தொனி அவளுக்கு அவளின் தாத்தாவை நினைவூட்டியது.

அவரும் அப்படிதான், ‘டார்லிங்’ என்று செல்லமாக அழைப்பர். காரணம் அவள் அவர் காதலின் நினைவு சின்னம். அவள் பார்க்க அப்படியே அவர் மனைவி ‘செல்லா’ மாதிரியே இருந்ததால் அந்த பெயரை ஒத்த ஷெர்லி என்ற பெயரை சூட்டினார்.

அவள் மனம் ஒரு நொடி அவள் தாத்தா கிரிஸ்டோபரை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட அதற்கு மேல் ஹரிஹரன் அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லை.

அவள் உள்ளே செல்லும் போதே வராண்டாவிலிருந்த பலகை ஊஞ்சலை பார்த்து ரசித்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.

சத்யாதான் சங்கடமாக என்ன செய்வதென்று புரியாமல்
அடி மேல் அடி வைத்து நடந்து வந்தவன் உள்ளே நுழையாமல் தயங்கி நின்றுவிட்டான்.

ஷெர்லி வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் தன் பார்வையை சுழற்றி பார்த்து கொண்டிருக்க,

ஹரிஹரன் வெளியே நின்ற சத்யாவிடம், “டே சத்யா… உன்னை தனியா கூப்பிடணுமா உள்ளே வா” என்று அழைத்தார்.

“அது வந்து அங்கிள்” என்று தயங்கியபடி காலெடுத்து வைப்பதா வேண்டாமா என யோசிக்க,

“அதான் வந்துட்ட இல்ல… அப்புறம் என்ன… புது பொண்ணு மாதிரி வெட்கப்பட்டு நிற்கிற” என்று அவன் தோளை பற்றி உள்ளே இழுத்து வந்துவிட்டார்.

சத்யாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

‘எல்லாம் இவளாலதான்’ என்று அவன் ஷெர்லியை மனதார வைது கொண்டிருக்க, அவளுக்கோ அது பற்றியெல்லாம் கவலையில்லை. அந்த வீட்டை ஆர்வமாக சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்.

சிறியதாக அழகாக இருந்தது. அவளுக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது.

“பியூட்டிஃபுல் ஹவுஸ் ஹரி” என்றவள் ரசனையாக கூற,

“தேங்க்ஸ் பியுட்டி” என்றார் ஹரிஹரன் பதிலுக்கு.

அவர் பேச்சிலிருந்த இணக்கம் அவளுக்கு இன்னும் சுவாரசியத்தை தந்தது.  பழக்கப்படாத நபரிடம் பேசும் உணர்வே அவளுக்கு ஏற்படவில்லை.

அவள் இதழ்கள் விரிய அவரை பார்க்க சத்யா கடுப்பாகி, ‘அவரு பியுட்டி பியுட்டிங்கிறாரு… இவளும் பல்லை இளிக்கிறா’ என்று அவர்களுக்கு தெரியாமல் தலையிலடித்து கொண்டான்.

அப்போது ஹரிஹரன் அந்த அறையிலிருந்த சோபாவில் அமர சொல்ல, ஷெர்லி அமர்ந்து கொண்ட போது அந்த அறையின் சுவற்றில் மாட்டியிருந்த படத்தை கூர்ந்து பார்த்தாள்.

அவள் அந்த படத்தை சத்யாவிடம் காண்பித்து, “ஹரி கூட… வு இஸ் தட்?” என்றதும், “அவர்தான் பிரபஞ்சன்… நீ வெளிய பார்க்கல” என்றான்.

அந்த படத்தையே ஆழமாக பார்த்திருந்தாள். வித்தியாசமாக அவன் கருமை நிறமும் கம்பீர தோற்றமும் அவளை வெகுவாக ஈரத்தது. அதோடு அவனின் பச்சை நிற விழிகள் சற்றே வித்தியாசமாக இருந்தது.

அவள் அந்த படத்தை பார்த்தபடி இருக்க சத்யா அவளின் காதோரம், “ஆமா… அவர் ஏஜ் என்ன? நீ பாட்டுக்கு அவரை ஹரி ஹரின்னு கூப்பிடுற” என்று கண்டித்தான்.

அப்போது அவர்கள் குடிக்க இளநீர் எடுத்து வந்த ஹரியின் காதில் சத்யாவின் வார்த்தைகள் விழுந்துவிட,

“ஏன்டா… என்னை பார்த்தா அவ்வளவு ஏஜ்டா தெரியுதா…  நீதான்டா பார்க்க ஏஜ்ட் மாதிரி தெரியுற… ஐம் ஆல்வேஸ் யங்” என்றார்.

சத்யாவின் முகம் இருளடர்ந்து போக ஷெர்லி சத்தமாக சிரித்துவிட்டாள்.

“எஸ் ஹரி… யூ ஆர்” என்றவள் புன்னகையோடு ஆமோதிக்க, ஹரியும் சிரித்துவிட்டு அவர் எடுத்து வந்த இளநீரை கொடுக்க, அதனை பெற்று கொண்ட சத்யாவின் முகம் இறுகியது.

ஷெர்லியிடம் கொடுக்கும் போதே, “கோக்கனட் வாட்டர்” என்று சொல்ல,

அவள் புன்னகையோடு, “இளநீர்… எனக்கு தெரியும்” என்றாள் கொஞ்சும் தமிழில்!

“ஓ! தமிழ் தெரியுமா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்” என்றவள் தலையசைத்து கொண்டே இளநீரை பருகினாள்.

“நான்தான் தமிழ் பேச சொல்லி தந்தேன்” என்று சத்யா கர்வமாக மார்தட்டி கொள்ள, “நீயா?!” என்று ஹரிஹரன் கேவலமாக ஒரு பார்வை பார்த்தார்.

“ஆமா… நீங்களே ஷெர்லியை கேளுங்க” என்று சத்யா ரோஷமாக ஷெர்லியை பார்க்க, “எஸ்… சத்யா ஆபிஸ் பிராஜக்ட்க்காக கலிபோர்னியா வந்த போது எனக்கு தமிழ் டீச் பண்ணான்” என்றாள் அவளும்.

ஹரிஹரன் அவளிடம், “தமிழ் பேசறது அவ்வளவு பெரிய விஷயமா என்ன? நான், நீ, வா, போ, இருக்கு, இல்லை… இந்த வார்த்தையோட இங்கிலீஷ் வார்த்தையை சேர்த்து போட்டுகிட்டா நம்மூர் தமிழ் பேசிடலாம்… ஆக்சுவலி இங்க யாருமே தமிழ் பேசறது இல்ல… முக்கால்வாசி ஆங்கில கலப்புதான்… ஸோ இட்ஸ் வெரி ஈஸி டூ ஸ்பீக் அன் அன்டர்ஸ்டண்ட்” என்றதும் ஷெர்லி சிரித்து கொண்டே அவர் சொன்னதை ‘அப்படியே’ என்று ஆமோதித்தாள்.

அப்போது ஹரி சத்யாவை பார்த்து, “இதுல நீ என்ன பெருசா சொல்லி தந்துட்ட” என்று கேலியாக கேட்க, சத்யா முகம் சுருங்கி போனது.

அவன் குடித்த இளநீரை கீழே வைத்துவிட்டு, “ஷெர்லி கிளம்பலாமா?” என்று கேட்கும் போது அவன் கைப்பேசி ஒலித்தது.

அதனை எடுத்து பார்த்தவன் அதிர்ந்த பார்வை பார்த்தான்.

அனுதான் அழைத்தாள். நேற்று பூஜை முடிந்து அழைப்பதாக கூறியிருந்தான். ஷெர்லி செய்த களேபரத்தில் அதற்கு பிறகு அவனுக்கு அவளிடம் பேச வேண்டுமென்பதே மறந்து போனது.

ஷெர்லியால் சத்யா காலையிலும் அனுவிடம் பேச முடியவில்லை. இப்போதும் அழைப்பை ஏற்காவிடில் தன்னிலைமை அதோகெதிதான் என்று எண்ணி கொண்டு அழைப்பை ஏற்றவன், “எக்ஸ்க்யுஸ் மி” என்று சொல்லி வெளியே செல்ல பார்க்க,

“உன் பியான்சியா சத்யா?” என்று ஷெர்லி சத்யாவை கேட்டாள். வேகமாக தலையசைத்துவிட்டு  தனிமையில் பேச அவன் வெளியே தோட்டத்திற்கு சென்றுவிட்டான்.

அப்போது ஷெர்லி முகம் பார்த்து ஹரிஹரன், “ஏன் பியுட்டி? உனக்கு இந்த மாதிரி யாராச்சும்” என்று அவர் கேட்கும் போதே,

ஷெர்லி புரிந்து கொண்டு, “நோ… ஐம் சிங்கள்” என்று உதட்டை பிதுக்கி வருத்தமாக பாவனை செய்ய, “ஏ! மீ டூ சிங்கள்” என்று ஹரி குதுகலாமாக சொல்ல, இருவரும் சிரித்து கொண்டே ஹைப்பை கொடுத்து கொண்டனர்.

ஷெர்லிக்கு ஹரியுடன் பேசி கொண்டிருந்ததில் ரொம்பவும் உற்சாகமாக இருந்தது. அவளை அழைத்து கொண்டு தோட்டத்தையெல்லாம் சுற்றி காண்பித்தபடி மரத்திலிருந்த கொய்யா கனிகளை பறித்து அவள் ருசி பார்க்க கொடுத்தார்.

இருவரும் ஊஞ்சலில் அமர்ந்து கொள்ள ஷெர்லி ரொம்பவும் விருப்பமாக அந்த கொய்யா கனிகளை ருசித்து உண்டு கொண்டிருக்க, சத்யா எப்படியோ அனுவிடம் பேசி சமாதானம் செய்துவிட்டு அங்கே வந்தான்.

ஷெர்லி முகத்தில் அத்தனை பிரகசாம். அவளுக்கு அந்த இடமும் ஹரிஹரனையும் ரொம்பவும் பிடித்திருக்கிறது என்று அவள் அவரிடம் பேசி கொண்டிருந்த விதத்திலேயே புரிந்துபோனது.

இது பிரச்சனையாயிற்றே என்று எண்ணி கொண்ட சத்யா ஷெர்லியிடம் போகலாம் என்று கண்ணசைக்க,

“ஓகே ஹரி பை” என்று ஷெர்லியும் எழுந்து கொண்டாள்.

ஹரிஹரன் புன்னகையோடு, “ஓகே பியுட்டி” என்று சொல்லவும் அவள் தயங்கியபடி, “மிஸ்டர். பிரபஞ்சனை எப்போ மீட் பண்ணலாம்?” என்று தான் வந்த காரியத்தை மறவாமல் கேட்க,

“பிரபஞ்சனை பார்க்கத்தான் வரணுமா? என்னை பார்க்க வர கூடாதா?” என்று ஹரிஹரன் கிண்டலாக வினவினார். ஷெர்லி அப்போது, “நான் அவரை பார்த்து தேங்க் பண்ணனும்” என்று தயங்கவும்,

“பண்ணலாமே… நாளைக்கு இதே டைமுக்கு வந்தா பண்ணலாம்” என்றார் அவர் முகமெல்லாம் புன்னகையாக!

ஷெர்லி சிரித்து கொண்டே தலையசைக்க, சத்யா வேண்டாமென்று தலையசைத்ததை அவள் பார்க்கவே இல்லை. அதற்கு பிறகு அங்கிருந்து புறபட்ட இருவரும் வாக்குவாதமும் சண்டையுமாக வீடு போய் சேர்ந்தனர்.

இரவு நேரம் வீடு வந்து சேர்ந்தான் பிரபஞ்சன். உணவு உண்ணும் போது ஹரிஹரனிடம், “ஆமா அந்த பொண்ணோட சைனை கொடுத்துட்டீங்களா?” என்று கேட்கவும்,

“ஐயோ! மறந்துட்டேன் பிரபா” என்று தலையிலடித்து கொண்டார் ஹரிஹரன்.

“உண்மையிலேயே மறந்துட்டீங்களா?” என்று அவரை கூர்மையாக பிரபஞ்சன் பார்க்க,

“சத்தியமா மறந்துட்டேன்” என்று ஹரிஹரன் தலையை பிடித்து கொண்டார்.

“ஹ்ம்ம்” என்று அப்போது பிரபஞ்சன் நம்பாமல் பார்க்க,

“இல்ல பிரபா! அந்த பொண்ணு கிட்ட இன்ட்ரெஸ்ட்டா பேசிக்கிட்டு இருந்ததுல மறந்துட்டேன் டா” என்றார்.

“அப்படியென்ன பேசுனீங்க?”

“உனக்குதான் அந்த பொண்ணு சம்பந்தமில்லாத பொண்ணு இல்ல… அப்புறம் ஏன் கேட்குற?” என்று எகத்தாளமாக பதிலுரைத்தார் .

அதோடு அவர், “ஷெர்லி நாளைக்கு என்னை மீட் பண்ண வருவா… நான் அப்போ சைனை கொடுத்துடுறேன்” என்று சொல்ல பிரபஞ்சன் குழுப்பமாக பார்த்து,

‘எதுக்கு நாளைக்கு வரணும்?’ என்று யோசனையோடு உணவை முடித்து கொண்டான்.

பின் இருவரும் வாராண்டாவில் பாய் விரித்து படுத்து கொள்ள பிரபஞ்சன், “ஆமா… நாளைக்கு ஏன் அந்த பொண்ணு வரணும்” என்று சற்றே தயங்கி அந்த கேள்வியை கேட்க,

“அவ ஒண்ணும் உன்னை மாதிரி சாமியாரை பார்க்க வரல… என்னை மாதிரி எங்ஸ்டாரை பார்க்க வரா” என்றார்.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்” என்று அவர் பதிலை கேட்டு கடுப்பாக பிரபஞ்சன் திரும்பி முதுகை காட்டி படுத்து கொள்ள,

“எதுடா ஓவரு… காலையில அந்த பொண்ணை பார்த்தும் பார்க்காத மாதிரி போனியே… அதான்டா ஓவர்… ஒரு நிமிஷம் அந்த பொண்ணுகிட்ட நின்னு பேசிட்டு போயிருந்தா குறைஞ்சா போயிடுவ” என்றார்.

பிரபஞ்சன் அவர் புறம் விருட்டென திரும்பி, “நான் எதுக்கு அந்த பொண்ணுகிட்ட பேசணும்?” என்று கேட்க,

“அப்புறம் எதுக்கு அந்த பொண்ணை பத்தி நீ என்கிட்ட இவ்வளவு ஆர்வமா கேட்கிற” என்றார் ஹரிஹரன்.

“ஆர்வமா எல்லாம் இல்ல… ஜஸ்ட் சைனை கொடுத்தீங்களான்னுதான் கேட்டேன்”

“நீ அதுக்காக மட்டும்தான் கேட்டியா?” என்று ஹரிஹரன் அவனை ஆழ்ந்து பார்த்து கேட்டு புருவத்தை உயர்த்தினார். “ஆமா” என்று அவன் சொல்லி மீண்டும் திரும்பி படுத்து கொள்ள,

“நம்பிட்டேன்” என்றார் ஹரி!

“நீங்க நம்பாட்டியும் அதான் உண்மை” என்றான் பிரபஞ்சன்.

“உன் உண்மையை நீயே வைச்சிக்கோ… என் பியுட்டி நாளைக்கு வருவா… நான் அவளுக்கு ஸ்பெஷலா என்ன டிஷ்ஷெல்லாம் செஞ்சு தர்றதுன்னு யோசிக்க போறேன்… என்னை டிஸ்டர்ப் பண்ணாதே” என்று மல்லாந்து படுத்து மேலே பார்த்து யோசனையில் மூழ்கினார் ஹரிஹரன்.

“எப்படியோ போங்க… எனக்கு தூக்கம் வருது” என்று பிரபஞ்சன் திரும்பி படுத்து கொள்ள,

“உன்னை மாதிரி சாமியாருக்குதான் படுத்ததும் தூக்கம் வரும்… என்னை மாதிரி யங்க்ஸ்டருக்கு படுத்தா கனவுதான் வரும்… கனவுல என் பியுட்டி வருவா” என்றவர் சொல்லவும் அவன் தலையிலடித்து கொண்டு, “ஒரே நாள் பார்த்துட்டு… சத்தியமா  முடியல டா சாமி” என்றான்.

“உனக்கு ஏன் டா முடியல… போடா” என்று அவர் திரும்பி படுத்து கொண்டார். இப்படியான கேலிகளும் கிண்டல்களும் அவர்களுக்கு இடையில் எப்போதும் சகஜம்தான்.

இருவரும் தங்களுக்குள்ளாகவே சிரிப்பை அடக்கி கொண்ட போதும் அந்த இருளின் அமைதியில் அந்த சிறு சத்தமும் தெள்ளதெளிவாக ஒலித்தது. அதன் பின் மெல்ல இருவருமே உறக்கநிலையை எய்தினர்.

ஹரிஹரன் நன்றாக உறங்கிவிட பிரபஞ்சனின் கனவில் ஷெர்லி செவ்விதழ்களை வெகுஅருகாமையில் அவன் நெருங்குவது போல ஒரு காட்சி உண்டாக, அவன் பதறி துடித்து எழுந்து முகத்தை துடைத்து கொண்டான்.

அப்போது சரசரவென மழைத்துளி காற்றோடு வந்து அவன் முகத்தில் சில்லிட்டு வீச, எழுப்பியது மழை சாரலோ அல்லது அவள் சாரலோ?

பிரபஞ்சன் அவசரமாக, “சார்… எழுந்திறீங்க மழை வருது” என்று ஹரிஹரனை எழுப்ப, கும்பகரணனுக்கு அண்ணன் போல உறங்கி கொண்டிருந்த ஹரிஹரன் அத்தனை சுலபத்தில் எழுந்திருக்கவில்லை.

“அந்த பொண்ணை பத்தியே பேசி என் தூக்கத்தை கெடுத்துட்டு இவர் மட்டும் நல்லா தூங்கிறாரு” என்று கடுப்பாகிவிட்டு, “சார்” என்று அவரை எழுப்ப வேண்டி நன்காக உலுக்கவும்.

“என்னடா பிரபா?” என்று அரை தூக்கத்தில் எழுந்தவரிடம், “மழை வருது சார்… சாரல் வரும்… வாங்க உள்ளே போய் படுக்கலாம்” என்று தூக்க கலகத்தில் தள்ளாட்டமாக நடந்தவரை மாடியிலிருந்த தங்கள் அறைக்கு கை தாங்கலாக அழைத்துவந்து படுக்க வைத்தான்.

ஹரிஹரன் படுத்ததும் மீண்டும் உறங்கிவிட, பிரபஞ்சன் விழிகளை உறக்கம் தழுவவில்லை. எந்த பெண்ணிடமும் அசறாத தன் மனம் அவளிடம் மட்டும் ஏன் இப்படி சஞ்சலப்படுகிறது. ஒருவேளை அவள் நேரடியாக நாளை வந்துவிட்டாள்… என்று அவனுக்குள் ஓர் புரியாத தவிப்பு உண்டானது.

அவன் வாழ்க்கையின் இலட்சியம் வேறு. எந்த பெண்ணும் அவன் தேடலுக்கு ஒத்துவர மாட்டாள். அப்படியிருக்க அவன் வாழ்க்கையின் அத்தியாயத்தில் ஒரு பெண் வருவதை அவன் விரும்பவில்லை. ஆனால் அவனுக்கு தெரியாது. ஷெர்லிதான் அவன் தேடலின் தீர்வு!

சரியாக உறங்காவிடிலும் விடிந்ததும் தன் யோகாசன பயிற்சிகளை எப்போதும் போல செய்து முடித்தவன் தோட்ட வேலைகளில் ஈடுப்பட தொடங்கினான்.

பிரபஞ்சனுக்கு வெளியே செல்லும் வேலை இல்லையென்றால் அன்று பிரதானமாக தோட்ட வேலையில் இறங்கிவிடுவான். அப்படி இறங்கிவிட்டால் உணவு உண்பது மற்றும் நேரமெல்லாம் கூட மறந்து போய்விடும் அவனுக்கு. அன்றும் அப்படிதான்.

ஹரிஹரன் அவனை காலை உணவு உண்ண வர சொல்லி அழைத்து அழைத்து ஓய்ந்து போய்விட்டார். ‘வரேன் வரேன்’ என்று சொல்லிவிட்டு அவன் வேலையில் படுமும்முரமாக இருந்தான்.

“பிரபா… இப்போ நீ சாப்பிட வரல… அப்புறம் நான் என்ன செய்வனே தெரியாது” என்று உள்ளிருந்து ஹரிஹரன் மிரட்டவும், “ஆன் தோ… முடிஞ்சுது வரேன்” என்றவன் மரங்களுக்கு உரம் வைக்கும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.

அப்போது வாயிற் கதவு திறக்கும் ஓசை கேட்டு அவன் நிமிர்ந்து பார்க்க, ஷெர்லி தன் உடலோடு இறுகியது போல் ஓர்  பேன்ட் ஷர்ட் அணிந்து  கொண்டு அவளுக்கே உண்டான மேற்கத்திய பாணியில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

தூரத்திலிருந்தே அவளை அடையாளம் கண்டு கொண்ட பிரபஞ்சனுக்கு அவன் இதயம் காரணமில்லாமல் அதிவேகமாக துடித்தது.

அவளோ சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே நடந்தவள் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த பிரபஞ்சனை கண்டுகொண்டாள்.

வியர்த்த வடிய கழுத்தில் துண்டும் இடையில் மடித்து கட்டிய வேட்டியும் அணைத்திருந்தான். அவனை அப்படி ஒரு கோலத்தில் பார்ப்போம் என்று அவள் கற்பனை கூட செய்யவில்லை.

ஆனால் அந்த கோலத்தில்தான் அவனின் கம்பீரமான உடலமைப்பும் உரமேறிய தோள்களும் கட்டமைப்பான புஜங்களும் திண்ணமாக தெரிந்தன. ஒரே ஒரு முறைதான் அவனை புகைபடத்தில் பார்த்தாள். ஆனால் அதென்ன அவளுக்கு மறக்க கூடிய முகமா?

அவனை அவள் ஆழ்ந்து பார்க்க அவனாலும் அவன் விழிகளை அவளிடமிருந்து அகற்றமுடியவில்லை.

யார் யாரை வசீகரிக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருவரும் மெய்மறந்து நின்றிருந்தனர்.

பல்லாயிரம் மைல்கள் தாண்டி பூமியின் இருவேறு திசைகளிலிருந்த இருவரின் வாழ்க்கையும், ஓர் நாளின் இரவு பகல் போல் சரி பாதிகளாக ஒன்றென கலக்கபோகிறது. அதுதான் இயற்கையின் நியதி!

error: Content is protected !!