Arthy Ravi’s Vilagiduvena Idhayamei

ஆர்த்தி ரவியின் “விலகிடுவேனா இதயமே?”

அத்தியாயம் 11

ஒருவரை நம் மனம் மிகவும் தேடும் போது என்ன செய்வோம்? நேரில் பார்க்க முடியவில்லை எனும் போது, குரலையாவது கேட்க மாட்டோமா என்று ஏக்கம் பிறக்கும். அதனால் பேசியில் பேச முனைவோம். அப்புறம் புகைப்படங்கள்! நேரில் பார்க்க முடியாத குறையைத் தீர்ப்பவை இவை.

ப்ரியா அப்படித்தான் நேற்று பார்த்திபனை அழைத்தது. இத்தனை மாதங்கள் பிரிவின் பிறகு, முதன் முதலாகத் தோன்றியிருந்த ஆவல். வேகத்துடன் வெளியேறி இருந்தது. கணவனுடன் பேசியே ஆக வேண்டும் என்கிற ஏக்கப் பித்து அவளின் தலைக்கேறிய போது, அவன் இவளைப் பார்க்கவே வந்து கொண்டிருந்தான்.

துபாய் டு நியூயார்க் வந்த விமானம், வான்மகளுடன் ஒட்டி உரையாடிக் கொண்டிருந்த நேரம் தான் பல முறை ப்ரியா பார்த்திபனுடன் பேச முயன்றது. விமானம் வானில் ஏற இருக்கையில் பேசியோடு அனைத்து மின் இயக்கக் கருவிகளையும் அணைத்து வைக்க வேண்டும்.

விமானம் வானில் போய் நிதானத்திற்கு வந்த பிறகு மடிக்கணினி மற்றும் பேசியை உபயோகித்துக் கொள்ளலாம் என்கிற போதும் பேசியை ஏரோப்ளேன் மோடில் மட்டுமே வைக்க வேண்டும். அதனால் எந்த விதமான அழைப்புகளும் வானில் இருக்கும் போது சாத்தியமில்லை.

இருந்து இருந்து ப்ரியா, அந்நேரம் அழைப்புகளைத் தொடுத்தால்? பேசக் கிட்டுமா? நொந்த மனநிலையில் உறங்கி எழுந்திருந்தவள், ஒரு மாதிரியான அலங்கோலமான நிலையில் தான் இருந்தாள். தான் தான் அப்படி இருந்தாளென்றால், அறையையும் அலங்கோலப்படுத்தி வைத்திருந்தாள்.

படுக்கை முழுவதும் புகைப்படங்கள் இரைந்து கிடந்தன. நிறையப் படங்கள் கிடந்தாலும், பெரும்பான்மையாகப் பார்த்திபனின் படங்கள் தாம் அல்லோலப்பட்டுப் போய்ச் சோர்ந்து இருந்தன.

கணவனைப் பேசியில் பிடிக்க முடியவில்லை எனச் சோர்ந்து போயிருந்த ப்ரியா, அவனின் புகைப்படங்களை எடுத்துப் பார்த்து தன் ஏக்கங்களைப் போக்கிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் டோர் பெல் அடித்தது. ப்ரியா, யோசனையினூடே கதவை நோக்கிப் போனவள், நிதானித்துச் சேஃப்டி வியூயரில் யாரென்று பாராமலே கதவைத் திறந்தாள். திறந்த நொடியில் அதிர்ந்து போய் நின்று விட்டாள்.

பார்த்திபனும் ப்ரியாவும் நீண்ட பிரிவிற்குப் பிறகு சந்தித்துக் கொண்ட வேளை, அவர்கள் இருவருக்கும் ஓர் அற்புதம் தான். ஆனால், அதனைத் தாண்டி வந்திருந்த அதிர்ச்சியால் இருவரின் உணர்வுகள் யாவும் அதிர்ந்து கொண்டிருந்தன.

நிச்சயமாகத் தன் மணாளனை இந்நேரம் அவள் அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை. அவளின் விழிகளில் அப்பட்டமான அதிர்ச்சி மட்டுமே!

எப்படி வந்தான்? எப்போது கிளம்பினான்? யாரும் கூப்பிட்டுச் சொல்லவேயில்லை!

‘என் கண் முன் நின்றிருப்பது பாவாவா? நான் காண்பது நிஜம் தானா?’

பாதிக் கதவை திறந்தபடி நின்றவளுக்கு அதிர்ச்சியுடன் உணர்ச்சி மிகுதியால் நெஞ்சம் படபடத்துப் போனது. வலது கையால் கதவின் கைப் பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவள், இடது கையை நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டாள்.

பார்த்திபன் மனைவியைப் பார்க்க எத்தனை ஆவலுடன் வந்தான்… விழிகளில் வழிந்து கொண்டிருக்கும் ஆவல், ஏக்கம், ஆர்வம், எதிர்பார்ப்பு அத்தனையும் அவளைப் பார்த்த நொடியில் சிதறித் தெறித்தன. அங்கே மொத்தமாக அதிர்ச்சி குடியேறியது!

என்ன கோலத்தில் நின்றிருக்கிறாள்? முட்டாள்! மனதினுள் எழும்பிய குரல் வெளியேறவில்லை! ஆனால் அவன் அகன்ற விழிகள் அவனின் அதிர்ச்சியைக் காட்டிக் கொண்டு தான் இருந்தன.

இருவரின் விழி இமைகளும் தங்கள் ஜோடியை அணைக்க மறந்து ஸ்தம்பித்து இருக்கையில், இருவரின் இருதயங்கள் விரைந்து சென்று அணைத்து நலம் விசாரித்துக் கொண்டன.

ஆங்ங் என்று தன் இதழ்கள் பிளந்த நிலையில் நின்று கொண்டிருந்தவளைப் பிரட்டி எடுத்திட வேகம் வந்திருந்தது பார்த்திபனுக்கு!

உருண்டு கொண்டிருக்கும் மணித்துளிகளில் கணவனும் மனைவியும் விழிகளால், உணர்வுகளால் பிணைந்து கிடந்த நேரம், அந்த மோனத்தைத் தன் கரகரப்பில் கலைத்தான் இளமாறன்.

“ம்க்கும்… டேய்!”

எத்தனை நேரம் தான் இப்படி ஓரமாக ஒதுங்கி நிற்பான்? அவனும் காலையிலிருந்து அலைந்திருக்கிறான். ஏர் போர்ட் வரை போனது, வந்தது, காத்திருந்தது… நேன்சி மற்றும் ரச்சனா இருவரிடம் பட்டு நொந்து போனது எனச் சேர்ந்து இப்போது அலுப்பாக இருக்க, அவர்களிடமிருந்து சீக்கிரம் விடைபெற நினைத்தான் இளமாறன்.

ப்ரியாவிற்கு ஒரு ஹலோ சொல்லிச் செல்லலாம். இருவருக்கும் தனிமை கொடுத்து பிறகு வரலாம் என நினைத்தான்.

“கொஞ்சம் இருடா!”

நிலைமை புரியாமல் பார்த்திபன் வேறு சாவகாசமாக அவனுக்குப் பதில் கொடுத்தான். அவனைச் சிறிது நேரம் கீழே போய் வரச் சொல்லலாம் என்ற யோசனை வந்திருந்தாலும், சொல்லவும் இல்லை. (வொய் திஸ் கொலைவெறி டோய்!)

பார்த்திபனுடன் யாரோ வந்திருக்கிறார்கள் என உணர்ந்தவளாக ப்ரியா, யார் வந்திருப்பது எனக் கணவனுக்கு விழிகளால் கேள்வி எழுப்பி நோக்க, அவள் மீதே தன் கண் பதித்திருந்தவன், நீயே பார் எனப் பதில் பார்வையைக் கொடுத்தான்.

எட்டி அவனைத் தாண்டிப் பார்க்க முயன்றவள் அதற்கு முன் அவசரமாகத் தன்னை ஒரு முறை ஆராய்ந்து கொள்ள, அதில் தான் பார்த்திபன் ரொம்பவும் நொந்து போனான். அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அவளது தோற்றம் தானே!

முதல் அதிர்ச்சி, அவளின் கூந்தல்!

இடுப்பா இல்லை அதை முட்டிப் படுத்தும் கருங்கூந்தலின் நுனிச் சுருள்களான்னு குழம்பித் தவித்து, விரல்களை முதலில் அத்தனை சுருள்களில் அலைந்து, பின் இடையைப் படுத்தி எடுப்பானே! இனி?

‘இடுப்பைத் தாண்டிப் புரண்டு கொண்டிருந்ததை என்னடி செஞ்சு வச்ச? பாவி!’

ஆமாம்! ப்ரியதர்ஷினியின் கரு கரு கூந்தல் அத்தனை அழகு! அமெரிக்காவிலும் இப்படி முடி வளர்ப்போம் என்று பறைசாற்றுவது போல் அடர்த்தியும் நீளமும் கண்களைக் கவரும் வண்ணம் முன்பு வைத்திருந்தாள்.

அடர்ந்த அலைகளின் முடிவில் மட்டுமே மிக அழகாக, அடர்ந்திருக்கும் குட்டிச் சுருள்களுடன் விளையாடப் பிரியப்படுகின்ற இவன் உறுதியான விரல்கள் படும் பாட்டை மறந்தவளாக, அக்கூந்தலை வெட்டி விட்டுருந்தவளை வெட்டவா குத்தவா எனப் பார்த்திபனால் நோக்க முடியவில்லை.

தற்போது அவளின் செயலால் வந்திருக்கும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் போட்டிப் போட்டுக் கொண்டு முட்டி மோதினாலும், தோளைத் தொட்டுச் சற்று கீழே சறுக்கி விரைப்புடன் தோற்றமளிக்கும் அந்த முடிக்கற்றைகளை மட்டுமே முறைக்க முடிந்தது.

வேறொரு சமயமாக இருந்திருந்தால் கண்டிப்பாக வைதிருப்பான். மேலும் இப்போது அவன் கண்களில் பட்ட அவளின் அழகிய பெரிய விழிகளில், அதிர்ச்சி கொஞ்சம் விலகி நேசக் கலவை வந்திருந்தது.

அதனைக் கண்டு திருப்தி கொண்டவனைச் சட்டென முறுக்கிப் போட்டது, அடுத்ததாக அவன் பார்வை பதிந்த இடம்! அடுத்த அதிர்ச்சி!

விழிகளின் கீழ் கன்னங்கள் வற்றிப் போய்க் கன்னத்து எலும்புகள் மேலெழும்பித் தெரிய, அங்கு முன்பு அரங்கேறியிருந்த உறவாடல் நினைவிற்கு வரவே, பார்த்திபன் கடுத்துப் போனான். எத்தனை முத்தங்கள்! செல்லக்கடிகள்! அவை யாவும் ரசனையான அவர்களின் காதல் பரிமாணங்கள் அல்லவா!

‘எப்படிடி உன்னால் என்னைவிட்டு இப்படி விலகி வர முடிஞ்சது? இப்போ பார், எப்படி நிற்கிறாய்? தேவையா? உம்! இது தேவையா? மெல்லுடல் கொண்டிருப்பது அழகு தான். ஆனால், இந்த ஒட்டடைக் குச்சித் தோற்றம்? சகிக்கலைடி!’

ஒரே நிமிடத்தில் ப்ரியதர்ஷினியின் பழைய தோற்றப் பொழிவிற்காக ஏங்கிப் போனான் பார்த்திபன்.

மனைவியை மேலிருந்து கீழ் வரை இவன் ஆராய்ந்து கொண்டு நிற்க, இளமாறன் ப்ரியாவின் முன் வந்து நின்றான். அதற்கு மேல் அவனால் அங்குப் பொறுமையாக இருக்க இயலவில்லை.

(அச்சோ! மக்களே! இப்போது நீங்கள் விழி விரித்து, கையால் வாயை‍ மூடுகிறீர்கள் எனத் தெரியுது. ஹ்ஹாஹாஹா! டவல் சீனை எதிர்பார்த்து ஏமாந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை! நோ கல்லெறிதல்! மீ வெரி பாவம்.)

அவனைப் பார்த்ததும் ப்ரியா முழித்தாள்.

இவ்வளவு நேரம் இளமாறன் பக்கவாட்டில் வெளியே சுவற்றில் சாய்ந்து ஒதுங்கி நின்றிருந்ததால் இவளின் பார்வை வட்டத்தில் வந்திருக்கவில்லை. சட்டென அவனைப் பார்த்ததும் இவளால் அடையாளம் காண இயலவில்லை.

ப்ரியா இதுவரை இரு முறையே இளமாறனைப் பார்த்திருந்தாள். ஒன்று அவர்களின் திருமணம். மற்றொன்று அவளின் அப்பா தவறிய சமயம். நேரில் பார்த்து அவ்வளவாகப் பேசியிறாவிட்டாலும், அவன் பேசி அழைப்புகளை ஏற்றிருக்கிறாள்.

“என்னம்மா ப்ரியா எப்படி இருக்க? இந்த அண்ணனை மறந்து போச்சா?”

“ஹையோ! இளமாறன் அண்ணா! நீங்களா? உள்ளே வாங்க. சாரிண்ணா! உங்க வாய்ஸ் ஞாபகம் இருக்கு. பட் ஃபேஸ்… நம்ம பார்த்துக்கிட்ட சமயங்கள் அப்படி… அதான் சட்டுன்னு தெரியலை. ரொம்ப சாரி!”

கதவை விரியத் திறந்து உள்ளே வர வழி விட்டாள்.

“சுத்தம்!” பார்த்திபன் அவளை முறைத்து விட்டு, “தாலி கட்டிக் குடும்பம் நடத்துனவனையே மறந்துட்டாளாம். இதுல அவன் ப்ரெண்ட எங்கிட்டுக்கூடி ஞாபகம் வப்பா. நீ அவட்டப் போய் இந்தக் கேள்வியைக் கேட்டுட்டு இருக்க. உள்ள வாடா!” என மனைவியைப் பார்வை பார்த்து, குத்திக் காட்டிப் பேசியபடி நண்பனை அழைத்தான்.

ப்ரியா ஒன்றும் பேசவில்லை. கணவனை அழுத்தமாக ஒரு பார்வை மட்டுமே பார்த்தாள்! எப்போதும் எதெற்காகவும் சண்டைச் சச்சரவு, பதிலுக்குப் பதில் வாயாடுதல் என்பது இவளிடம் இருக்காது. ஆனால், தன் எண்ணங்களை எப்படியும் கணவனுக்குக் காட்டி விடுவாள்.

“அம்மாடித் தங்கச்சி! டேய்ப் பார்த்தி! உங்க விவகாரமெல்லாம் உடனே தீருமா? ம்கூம்! மெதுவா பேசித் தீர்த்துக்கோங்க. இப்ப நான் வந்த ஜோலியை முழுசா முடிச்சிக்கிட்டுக் கிளம்பிக்கிறேன். லக்கேஜ்ஜ முதல்ல உள்ள வைப்போம். வாடா! உன் முறைப்பை எல்லாம் அப்புறம் வச்சுக்கோ!”

மூவரும் உடைமைகளை உள்ளே எடுத்து வைக்க, இளமாறன் பார்த்திபனிடம் ஒரு கைபேசியைக் கொடுத்தான்.

“இந்தா மச்சான். உனக்கொரு புது நம்பர் வாங்கியிருக்கேன். யூஸ் பண்ணிக்க. இந்தியா காலிங்க்கு வானேஜ் ஆப் இருக்கு. லாகின் பண்ணி வச்சிருக்கேன். என் அகௌண்ட்ல இருந்து கூப்பிட்டுக்கலாம்.”

ப்ரியா இப்போ இளமாறனை முறைத்தாள்.

“இதை நான் பண்ண மாட்டேனாண்ணா?”

“அச்சோ! நீ தப்பா எடுத்துக்காதமா. அவன் வர்றது உனக்குத் தெரியாதில்லையா. அதான் நானே வாங்கிட்டு வந்தேன். வந்த உடனே அவனுக்குத் தேவைப்படும். அவன் வேலைக்கு வேணும்ன்னு தான் நான் வாங்கி வச்சது. மச்சான் சிரமப்பட வேண்டாமில்ல.”

“நீங்களாவது பாவா வரப் போறதை சொல்லி இருக்கலாமே அண்ணா! ஏன் என்கிட்ட சொல்லலை? நான் யு. எஸ் வந்ததுக்கப்புறம் இதுவரை என்கிட்ட நீங்க பேசவேயில்லையே!”

“நீ எங்க இருக்கன்னு அவன் கிட்ட சொல்லி வச்சியாக்கும். அவன் உன்னைக் கூப்பிட்டுச் சொல்ல. விடுடி!”

“சாரி ப்ரியா! உன் அண்ணனா வந்து உன்னைக் கண்டிப்பா பார்த்துப் பேசி இருக்கணும். தப்புத்தேன்! ஆனால், பார்த்தி உன்னைத் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாப்ல.”

“அதுக்காக என் கூடப் பேசாம, என்னை ஒரு தடவை கூடப் பார்க்க வராமலேயே இருந்துட்டீங்களே!”

சோகமாக ஒலித்த ப்ரியாவின் குரலைக் கேட்டு மற்ற இருவருக்கும் சங்கடமாகப் போயிற்று.

“இல்லைமா… நீ நினைக்கிற மாதிரி…”

‘இவனைப் பேச விட்டால், நம்ம அவளை ஃபாலோ பண்ணச் சொன்னது, விசாரித்தது, பார்த்துக்கிடச் சொன்னது எல்லாத்தையும் சொல்லிப்புடுவான்.’

“டேய்! விடு! வீணா எதுக்கு நீ அவளுக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு. ப்ரியா, இப்ப உனக்கு என்ன பிரச்சனை? நான் வந்ததா? சும்மா அவனை நிக்க வச்சுக் கேள்வி கேக்காமா எதையாவது சாப்பிடக் கொடுத்துக் கவனிச்சு அனுப்பு!”

‘எதுக்கு இவர் இப்படிப் பேசுறார்?’

புரியாமல் சில நொடிகள் அமைதியாக நின்றாள்.

“பார்த்தி, ஏன்டா வந்ததும் வராததுமா தங்கச்சிய இப்படிக் கடுப்படிக்கிற? தங்கச்சி, ஒரு கிளாஸ் தண்ணி இல்லை ஜூஸ் ஏதாவது தாம்மா. போதும்! சாப்பிட வேற ஒன்னும் வேணாம்.”

அதன் பிறகு சில நிமிடங்கள் இருந்து உரையாடி விட்டு இளமாறன் தன் வேலையைப் பார்க்கப் போனான்.

ப்ரியா, காலையில் தான் கலைத்துப் போட்டிருந்த புகைப்படங்களைத் தான் இப்போது திரட்டி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். ஓர் ஒழுங்கு முறையில் அனைத்தையும் கவனமாகப் பார்த்துப் பார்த்து எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தவளை, ஒரு மெச்சுதலுடன் ஓரப் பார்வை பார்த்தவாறே குளியலறையில் நுழைந்து கொண்டான் பார்த்திபன்.

எப்போதும் ப்ரியதர்ஷினி இருக்கும் இடம் ஓர் ஒழுங்கு முறையில் தான் இருக்கும். வெரி ஆர்கனைஸ்ட் பெர்சன். ஓர் இடத்திலிருந்து எடுக்கும் பொருளை உபயோகித்த பிறகு அதே இடத்தில் மறுபடியும் வைத்து விட வேண்டும் என்பது அவள் பாலிசி.

அப்படி வைப்பதால் மீண்டும் மீண்டும் எடுத்து வைத்து அடுக்கிக் கொண்டிருக்கும் வேலை மிச்சமாகிறதோடு, நேர விரயத்தைத் தடுக்கலாம் என்பது ஒரு புறம். ஆனால் ப்ரியா இவற்றை விட மிக முக்கியக் காரணத்தைச் சொல்வாள்.

இவ்வாறு ஆர்கனைஸ்டாக இருந்தால், வீட்டின் உள்ளே நுழையும் போதே மனதில் இதம் பரவுவது நிச்சயம் என்பாள். பார்த்திபன் அதை உணர்ந்து இருக்கிறான்.

ஆனால், அடிக்கடிப் பொருட்களை மாற்றி மாற்றியும் வேறு லுக் கொடுத்து அடுக்கி வைப்பாள்.

“ஏன் ப்ரியா பொழுது போகலையா? இப்படி இழுத்துப் போட்டு நல்லா இருக்கிறதையும் மாத்தணுமா?” என்று கேட்டால்,

“சேன்ஜஸ் ஆர் ப்யூட்டிஃபுல்! எல்லா விசயத்திலும் அப்பப்போ ஒரு மாற்றம் இருக்கணும். அப்படி இருந்தா லைஃப் போர் அடிக்காது.” என்பாள்.

இத்தனை யோசனைகளையும் அசை போட்டவாறு குளித்துக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு, வேற ஒரு ஞாபகமும் வந்தது. அப்போ, இதை ப்ரியா சொன்ன போது மிக ரகசியமாக அவள் செவியில் இவன் மேட்டரைப் பேசி வைத்தது, அதன் தொடர்பில் அடுத்த நடந்தவை என எல்லா நினைவும் கூடவே அணிவகுக்கத் தொடங்கியது.

அந்த நினைவு மலரலில் அழகான புன்னகை இதழோரம் சொருகிப் போக, குறும்பு அறும்பியது பார்த்திபனிடம்!

இப்போ உடனே அவளை அழைத்து விட்டான்.

“ப்ரியா! டவல் ப்ளீஸ்!”

துவாலையை மறந்து வைத்துவிட்டா குளிக்கப் போனான்? இந்த ப்ளீஸ் எதற்காகவாம்! வெறும் துவாலைக்காக மட்டும் தானா?

பார்த்திபனின் குரல் வர, அவசரமாக ஒரு துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறை பக்கம் சென்றாள் ப்ரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!