Arthy Ravi’s Vilagiduvena Idhayamei

ஆர்த்தி ரவியின் “விலகிடுவேனா இதயமே?”

அத்தியாயம் 09

துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியது அந்த எமிரேட்ஸ் விமானம். பின்னால் எகானமி க்ளாஸ் பயணியரிடையே ஏதோ சலசலப்பு.

விமானம் தரையைத் தொட்ட நொடியே சில பயணிகள், விமானப் பணிப்பெண் கூறியதையும் மீறி இருக்கையை விட்டு எழுந்தனர். தலைக்கு மேலே இருக்கும் கம்பார்ட்மெண்டில் (லக்கேஜ் ஸ்டோவெர்) வைக்கப்பட்டிருந்த தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேற முண்டியடித்துத் தயாராகினர்.

விமானம் இன்னும் ரன் வேயில் ஓடிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்பு குறிப்படி சீட் பெல்ட் அணிந்து இருக்கையில் அமர்ந்திருப்பது தானே சிறந்தது? அவர்களுக்கு மட்டுமின்றிச் சக பயணிகளுக்கும். ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

இதில் ஃப்ரீயாகக் கிடைக்கிறது எனச் சிலர் ஓவராக மது பானங்களை வாங்கிக் குடித்து நிதானமின்றி இருந்தனர். ஏர் ஹோஸ்ட்ஸ் அவர்களை இருக்கையில் அமரச் சொல்ல, அவர்கள் அவளை அலட்சியம் செய்தனர்.

பிறகு அவர்கள் போதையில் ஏதோ பேச, தன் சகாக்கள் வரும் முன் திண்டாடிப் போனாள். அதற்குள் அருகே இருந்த வேறு பயணிகள் புகுந்து அந்தக் குடிவான்களை அமைதிப்படுத்தினர்.

இந்த மாதிரி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அசௌரியங்களைத் தருவிக்கும் சில பயணிகளால் தான் மத்திய கிழக்கு நாடுகள் ~ சென்னை இடையே பயணிக்கும் விமானங்கள் யாவிலும் நம்மவர்களுக்குப் பெரிய தலையிரக்கம் ஆகிப் போய் விடுகிறது.

உலகத்தில் எங்கிருந்து வேணும் என்றாலும் பயணம் தொடங்கியிருக்கும். நீண்ட பயணம், பல மணி நேரம் காத்திருப்பு எனக் கசங்கி அலுத்துப் போய் வருபவர்களுக்கு, இப்படிச் சென்னை டு அண்ட் ப்ரம் மத்திய கிழக்கு நாடுகள் வழியாகப் பயணிக்கும் போது மனது வறுத்தமாகிப் போய் விடுகிறது.

சிலர் செய்யும் செயல்கள் அநேகமாகமானோருக்குப் பாதிப்பைத் தந்து விடுகிறது.

என்ன செய்வது? நமக்குள் சில பண்புகள், ஒழுங்கு முறைகள் இருக்க வேண்டும். தவறுதல் மனித இயல்பே என்றாலும், அதற்காக இப்படியா? நம் கட்டுப்பாடு நம் கையில்!

எங்கிருந்தாலும், எச்சூழலிலும் நெறி தவறக் கூடாது!

சற்று முன்னால் அமர்ந்திருந்த பார்த்திபன் அத்தனையையும் திரும்பிப் பார்த்திருந்தான். யாரோ லக்கேஜை கீழிறக்க முயல, வேறொரு சிறு பெட்டி அமர்ந்திருந்த நபரின் தலையில் பட்டுக் கழுத்தைப் பதம் பார்த்திருந்தது. அவர் வலியை பொறுக்க முடியாமல் சப்தமிட, ஒரு சிறு புயல் போன்ற நிலை அங்கு நிலவியது.

இது வரை ஓடிக் கொண்டிருந்த விமானம் இதற்குப் பின்னர்த் தான் நிறுத்தத்தில் வந்து நின்றது. அனைத்தையும் பார்த்திருந்தவனுக்குள் மிகுந்த வருத்தம் எழுந்தது. இதை முதல் முறை காண்பவனல்ல.

‘ஏன் நம்ம சனங்களுக்குப் புரிய மாட்டேங்குது? அப்படி என்ன பொறுமை இல்லாம? இந்த அரை மணி நேரத்துல எதைச் சாதிக்க இப்படி அவசரப்பட்டு மத்தவங்களுக்கும் இடைஞ்சலை தர்றாங்க?’

இத்தனை நேரம் இருந்த இனிமை காணாமல் போய் ஒரு பெருமூச்சு எழுந்தது.

அந்நேரம் அவள் இடத்தில் இருந்தபடியே பார்த்திபனை அளவிட்டுக் கொண்டிருந்தாள் நேன்சி. நியூயார்கின் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி புரிகிறாள் இந்த மாடர்ன் யுவதி!

சென்னைப் பெண் தான். மேல் படிப்பு அமெரிக்காவில் படிக்கப் போய் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாள்.

துபாய் விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் டிரான்சிட். அடுத்தக் கனெக்‌ஷனுக்கு முன்னால் இருக்கும் சிறு இடைவெளியில் பார்த்திபனுக்குத் தன்னை ரிஃப்ரெஷ் பண்ணிக் கொள்ளச் செல்ல வேண்டி இருந்தது.

U. A. E. United Arab Emirates. இவற்றினுள்ள ஏழு அமீரகங்களில் ஒன்று தான் துபாய். அத்தனை ஒழுங்கு முறைகளோடு செயல்படும் இடம். பாலைவனத்தில் எப்படி இத்தனையைச் சாத்தியப்படுத்த முடிந்தது? நம்மை வியப்பில் மூழ்கிட வைக்கும். கண்டிப்பாக ஒரு முறையேனும் காண வேண்டிய இடம்!

ஊரைப் போல விமான நிலையமும் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கி இருப்பதால் பயணிகளுக்கு இங்கு ரொம்பச் சௌகரியம்.

முதலில் அலுப்புத் தீரக் குளித்தான் பார்த்திபன். அந்த வெதுவெதுப்பான நீரோடு, ஒட்டியிருக்கும் கொஞ்சம் மப்பும் இறங்கியது. சிறிதளவு என்ற போதும் அந்த வாட்கா வேலையைக் காட்டியிருந்தது. புத்துணர்வு பெற்று ரெஸ்ட் ரூம் விட்டு வெளியே வந்தவன் தன் தொடுபேசியை இயக்க, சரியாக வந்தது ஶ்ரீபதியின் அழைப்பு.

“டேய்! நீ அடங்கவே மாட்டியா? இப்படி நேரங்கெட்ட நேரத்துல என்னைக் கூப்பிட்டே ஆகணும்னு என்ன கட்டாயம்?”

“ஏன்டா இறங்கின உடனே மெசேஜ் அனுப்ப மாட்ட? இப்போ என்னைக் குத்தம் சொல்லு. எவ்வளவு நேரம் ட்ரை பண்றது?”

“ட்ரை பண்றதுக்கு அத்தனை விசயம் இருக்கு. இவன் பக்கத்திலேயே புதுப் பொண்டாட்டியை வச்சிட்டு, அங்க ட்ரை பண்றதை விட்டுட்டு நடு ராத்திரில எனக்கு ஃபோன் பேச ட்ரை பண்றானாம். வெங்கடேச பெருமாளே!”

“ஏன்டா! ஏன்டா, இப்ப நம்ம திருப்பதி சாமியைக் கூப்பிட்டு அவரை அலர்ட் பண்ற? எப்படியும் இனி ரெண்டு நாள் ஹனிமூனை கொண்டாடப் போறேன்.”

“ஆமா நீ கிழிச்ச! லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணவன் மாதிரியே இல்லடா நீ பண்றது.”

“ஆல் மை டைம்ஸ்டா! நம்ம நண்பனை ஃப்லைட்ல ஏத்தி விட்டோமே, நல்லபடியா ரீச் ஆனானான்னு கேட்கக் கூப்பிட்டா என்னையே வாருரையா?”

“டேய் ஶ்ரீ! நீ ஹனிமூன் பீரியட்ல இருக்க. ஞாபகம் வச்சுக்க. வீணா என் தங்கச்சி கிட்ட செருப்படி வாங்கிறாத! செல்லிப்புட்டேன்!”

“நான் ரம்யா கிட்ட அடி வாங்கிறதை விடு. நீ முதல்ல அங்க போய் ப்ரியா கிட்ட அடி வாங்காம இருக்கியா பாரு. ஹாஹாஹா!”

“நீ இப்படி நேரங்கெட்ட நேரத்துல எங்களைக் கூப்பிடுற வேலையைச் செய்யாம இரு. போதும்! உனக்கும் அடி விழாது. எனக்கும் டேமேஜ் இருக்காது. துபாய்க்குப் பத்திரமா வந்து சேர்ந்துட்டேன். இனி நியூயார்க் போனதும் நானே இன்பார்ம் பண்றேன் ஶ்ரீ. நீ நிம்மதியா உன் ஹனிமூனைக் கொண்டாடு!”

“ம்ம்… பார்த்துக்கோடா. போனதும் உன் கோவத்தை அங்கிட்டு இறக்கிறாதே!”

“ஶ்ரீ… ஐ வில் டேக் கேர் டா. பை!”

நண்பனிடம் பேச்சை முடித்தவன், அப்போது தான் தன் மந்தித்திருந்த பசி உக்கிரமாவதை உணர்ந்தான். ஒரு காஃபி ஷாப் கம் ஃபாஸ்ட் புட் கார்னரில் நுழைந்தான். ஹெவியாக எதையும் பார்த்திபனுக்கு உண்ணப் பிடிக்கவில்லை.

ஒரு வாழைப்பழம், சிறிய சாக்லேட் க்ரசோண்ட், ஒரு கஃபே டிலைட் என வாங்கியவன், தினசரியைப் பார்வையிட்டுக் கொண்டு உண்டு முடித்தான். சிறிது நேரம் மடிக்கணினியை இயக்கி, அலுவல் வேலைகளில் ஆழ்ந்தான்.

அடுத்து விமானம் ஏறும் முன் இளமாறன், அர்ஜூன், மற்றும் தன் வீட்டிற்கும் தகவல் அனுப்பினான். பதிலுக்கு அவர்களும் குறுஞ்செய்திகளை அனுப்பினர்.

துபாய் ~ நியூயார்க். விமானம் மேலே வான் தொட்ட நொடியே தூங்கிப் போனான் பார்த்திபன். அந்தோ பரிதாபம்! பிஸினஸ் க்ளாஸ் சிறப்புகள் முற்றிலும் அனுபவித்தானில்லை!

தானாக, தனக்காக இப்படி மூன்று மடங்கு நான்கு மடங்குப் பணத்தைச் செலவளிக்கவே மாட்டான் பார்த்திபன். அத்தியாவசியமான செலவுகள் போக அவனின் ஆர்வம் வண்டிகளில் மட்டும் தெரியும்.

மற்றபடி மிகச் சிக்கனமானவன். சேமிப்பு, முதலீடு என்று இருப்பவன் தான். விவசாயம் செய்வதால் உழைப்பின் மேன்மையை உணர்ந்தவன். வானம் பொய்த்து சதி செய்யும் கட்டங்களைக் கடக்கச் சேமிப்பு தானே உதவுகிறது?

பரம்பரை செழிப்புடன் பிறந்து வளர்ந்தவனுள் இத்தகைய பண்புகள் இருப்பதைக் கண்டு ப்ரியா வியந்திருக்கிறாள். அவள் மட்டுமே அவனின் நிறையக் கோட்பாடுகளுக்கு விதிவிலக்கு.

இதோ, இப்போது கூட அவளுக்காகத் தான் இந்த அவசரப் பயணம். இல்லையென்றால், அவர்களின் திருமண நாளை ஒட்டித் தான் பயணித்திருப்பான்.

கடைசி நிமிடம் செய்த பயண ஏற்பாடு. முன்னும் பின்னும் பயணச் சீட்டை மாற்றியது வேறு. இத்துடன் ஹாலி டே சீசன் எனச் சேர்ந்து கொள்ள, கடைசியில் எகானமி ப்ளஸ், பிஸினஸ் க்ளாஸ் எனப் பணத்தை வாரிக் கொடுக்க வேண்டியதாகிப் போச்சு!

இம்முறை பயணம் இன்னும் சிறப்பாக அமைந்தது. இன்னும் பதிநான்கு மணி நேரத்தில் மனைவியைக் கண்டு விடும் ஆவல் இருந்தது தான். சொகுசு சீட்டு உபயத்தால் மட்டுமல்ல, அதற்கு மேல் உடம்பும் இடம் கொடாததால் முக்கால்வாசிப் பயணத்தைத் தூக்கத்தில் கழித்தான் பார்த்திபன்.

மிச்சத்தை அலுவலகப் பணி சம்பந்தமான டாக்குமென்டேஷன் வேலையிலும் வாசிப்பதிலும் மூழ்கி இருந்தான்.

இந்தச் செக்டரில், நேன்சி இவன் பார்வையின் சமீபத்தில் தான் அமர்ந்திருந்தாள். பார்த்திபன் இப்போதும் அவளைப் பார்த்திருக்கவில்லை.

தொலைக்காட்சியில் அவளின் பரிச்சயம் இருந்த சிலர் அவளைப் பார்த்துப் புன்னகைக்க; பேச விழைய, இவன் மட்டும் அவ்வாறு இல்லாது போனது ஒரு பக்கம்; மறு பக்கம் இவனின் வசீகரம்! நேன்சியைக் கவர்ந்து தொலைத்தது.

ஒருவனின் பார்வையில் கண்ணியம் நிறைந்து, வேறு எங்கும் மேயாமல் கட்டுப்பாடுடன் தென்படும் போதே புரிந்து கொள்ள வேண்டும். அவன் மனம் எங்கோ நிலைத்து விட்டது. இல்லை யாரும் தன்னை அணுகுவதற்கு அவன் அனுமதிப்பது கடினம் என.

தமிழகப் பெண் என்ற போதும் அமெரிக்க வாசம், மீடியா உலகம் அவளை மாற்றியிருந்தது. ஏற்கெனவே அவுட் கோயிங் கேரக்டர் வேறு. இவையெல்லாம் பயணத்தின் முடிவில் அவளை ஒரு காரியம் செய்ய வைத்தது.

பார்த்திபா! என்னத்தைச் சொல்ல? நோ கமெண்ட்ஸ் ஃப்ரம் மீ நௌ! ஐ’ம் இன் டெரிபிள் ஷாக்! இனி அடுத்து நிகழ்வுகள்… ஆக்‌ஷன்ஸ் ரியாக்‌ஷன்ஸ்?