ATA – 36

குற்றவுணர்வும் ஏக்கமும்

அடி வாங்கி வீழ்ந்தது என்னவோ வீராதான்! ஆனால் காயப்பட்டவனாய் துவண்ட நிலையில் படுக்கையின் மீது அமர்ந்திருந்தான் சாரதி!

  அவளோ தன் அடிப்பட்ட கன்னத்தை தேய்த்துக் கொண்டே எழுந்து நின்று அவனைக் கூர்ந்து பார்க்க, அடிவாங்கியதற்கான எந்தவித தாக்கமும்  வலியும் அவள் முகத்தில் துளியளவும் உணரப்படவில்லை.

“இப்ப நான் தப்பா என்ன கேட்டுட்டேன்னு உனக்கு அப்படியே கோபம் பொத்துகின்னு வந்த்ருச்சு… அவ்வளவு பெரிய மனஸ்த்தானா நீ… சொல்லவே இல்ல” என்று அவள் எகத்தாளமாய் கேட்டுவைக்க,

“வீரா இன்னாஃப்… இதோட நிறுத்திக்கோ” என்றவன் அப்போது எல்லை மீறி கொண்டிருந்த தன் கோபத்தை பிரயாத்தனப்பட்டு கட்டுக்குள் கொண்டுவர முயன்று கொண்டிருந்தான்.

“முடியாது… நான் பேசுவேன்” என்றவள் அழுத்திச் சொல்ல

“அப்படியே இன்னொரு அரை இழுத்துவிடுவேன்” என்றான் மிரட்டலாக!

“போயா… அடிக்கெல்லாம் பயப்படிற ஆள் நான் இல்ல… எங்க அம்மா என்னை நிறைய அடிச்சிக்கிது… எக்கச்சக்கமா வாங்கிக்கிறேன்… சும்மா இந்த சீனெல்லாம் என்கிட்ட ஒட்டாதே”

சாரதிக்கு உண்மையிலேயே அவளை எப்படி கையாள்வெதென்று புரியவில்லை. எதற்கும் அசைந்து கொடுக்காத அவள் உறுதி அவனைக் கொஞ்சம் நிலைகுலைய வைத்ததென்றே சொல்ல வேண்டும்.

அவனோ இயலாமையோடு நிற்க அவள் மேலும்,

“சரி… நான் உன்னை நம்பிறேன்னே வைச்சிபோம் … ஏன் அம்மு ஸ்கூல்ல மயக்கம் போட்ட மேட்டரை எனக்கு நீ சொல்லல… உன்னை யாரு தனியா ஸ்கூலுக்கு  போ சொன்னது… என்கிட்ட சொல்லி இருந்தா நான் போயிருக்க மாட்டேனா?!” என்ற கேட்டாள்.

“உனக்கு தெரிஞ்சா நீ டென்ஷன் ஆவியோன்னு தான் நான் வந்தேன்”

“அவ்வ்வ்வளவு நல்லவனா நீ… சத்தியமா இதை என்னால நம்ப முடியல”

“வீரா ஸ்டாப் இட்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே… நான்  எப்படிவேணா இருக்கலாம்… ஆனா உன் தங்கசிங்களை நான் என் தங்கச்சிங்க மாறிதான் பார்க்கிறேன்” என்றவன் உணர்ச்சி போங்க உரைக்க,

“தங்கிச்சிங்க மாறி… ஹ்ம்ம்” என்றவள் எள்ளலாய் அவனை பார்த்து நகைத்தாள்.

அந்த நொடி, “வீரா” என்று சாரதி கோபமாய் கத்த,

“போயா… இந்த காலத்தில் பெத்த அப்பனே பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்குறான்… இதுல தங்கச்சிங்க மாறின்னு நீ சொன்னா…அப்படியே நான் உருகி உத்திருவேன்னு நினைச்சியா?!” என்று அவள் அவனை நம்பாமல் பார்த்து அலட்சியமாய் பதிலளித்தாள்.

அவனுக்கோ அவள் பேசியதை கேட்ட மாத்திரத்தில் வெறியேற,

சீற்றமாய் அவள் கழுத்தை பிடித்து நெறித்து,

“நான் தப்பெல்லாம் செய்வேன் தான்…. அம்மா அப்பா அக்கா  தங்கச்சிங்ன்னு சொந்த பந்தத்தோட வளராத அநாதைதான்… ஆனா அதுக்காக… என்னை ஆசையா மாமா மாமான்னு கூப்பிட்டிட்டு சுத்தி வரஅந்த பசங்ககிட்ட போய் ச்சே! கீழ்த்தனமா நடந்துக்கிற தருதல நான் இல்லடி” என்று ஓங்காரமாய் உரைத்தான்.

அவளோ அந்த கணம் மூச்சிவிட முடியாமல் அவதியுற்றாள். அவள் நிலைமையை உணர்ந்து மெல்ல அவள் கழுத்தை அவன் விடுவிக்க அவள் முகமெல்லாம் சிவந்து போனது.  தொண்டை அமுங்கியதில் அவள்  இருமிக் கொண்டே அவனை ஏறிட்டு  பார்த்தாள்.

அவன் முழுதாய் உக்கிர கோலத்தில் நின்றிருந்தான். அவன் விழியில் தெறித்த கோபமும் அவன் உணர்வுகளும் பொய்யில்லை என்றவாறே அவள் உள்ளம் சொல்ல… தான் அவனிடம் அப்படிப் பேசி இருக்கக் கூடாதோ என்று லேசாய் குற்றவுணர்வு எட்டிபார்த்தது.

அவள் மௌனமாய் தரையை பார்த்தபடி யோசித்துக் கொண்டு நிற்க அவன் சினத்தோடு அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி,

“என்னடி? இன்னும் என்னலாம் பேசி என்னை எப்படி அசிங்கப்படுத்தலாம்னு யோசிச்சிட்டிருக்கியா?” என்று கேட்க,

அவனின் அழுத்தமான பிடியில் வலிக்கப் பெற்று, “யோவ் விடுய்யா” என்று அவன் கரத்தை தட்ட முற்பட அவன் விடுவதாக இல்லை. அவனை இன்னும் நெருக்கமாய் இழுத்து,

“சரிடி… நான் தான் கேடுகெட்டவன்… தருதல… பொறுக்கி… அதனால என்கிட்ட இப்படி நடந்துக்கிற …. ஆனா உன் தங்கச்சிங்க… அவங்க என்னடி பண்னாங்க? அந்த பசங்க பேசும்போதெல்லாம் என்கிட்ட மூச்சுக்கு முன்னூறு தடவை அக்கா அக்கான்னு உன்னை பத்திதான் பேசுவாங்க… தெரியுமா?…. நான்  சைக்கிள்  வாங்கி தர்றேன்னு சொன்னதுக்கு கூட அக்காவை  கேட்டுட்டு வாங்கிக்கலாம்னு தான் சொன்னாங்க… ஆனா நீ எதையும் ஒழுங்க கூட கேட்காம” என்று அவன் சொல்லி நிறுத்த

அவள் முகம் இருளடர்ந்து விழிகளில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது.

அந்த நொடி அவன் அவள் கன்னங்களை விடுத்து விலகி நின்று கொண்டு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். அவனுக்குள் இருந்த பதட்டமும் கோபமும் கொஞ்சமும் குறையவில்லை என்பதைப் புகைத்தபடி நடுங்கிக் கொண்டிருந்த அவன் கரம் காட்டிக் கொடுத்தது. அவள் போட்ட பழியை அவனால் இன்னுமும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால் அவள் கோபம் அவன் சொன்னவற்றையெல்லாம் கேட்டுத் தணிய ஆரம்பித்திருந்தது. நடந்தவற்றையெல்லாம் அவள் மூளை மீண்டும் ஒட்டிப் பார்க்க, அப்போதே அவளுக்கு அரவிந்தின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தில்… தான் இவ்வாறு  யோசிக்காமல் நடந்து கொண்டோம் என்பது உறைத்தது.

உடனடியாய் தன் தங்கைகளை சமாதானப்படுத்த எண்ணி கதவை திறந்து அவர்கள் அறை நோக்கி விரைந்தவள், “அம்மு நதி… நான் கோபத்தில ஏதோ அப்படி லுசுத்தனாமா பேசிட்டேன்… இனிமே அம்மா சத்தியமா இப்படியெல்லாம் பேசமாட்டேன்… கதவை திறங்கடி” என்று கெஞ்சியபடி அவர்கள் அறைக் கதவை தட்டினாள். அவள் அப்படிச் சொன்னதுதான்  தாமதம்.

இருவரும் கதவை திறந்து கொண்டு ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டு, “அக்கா” என்று கண்ணீர் வடிக்க வீரா தன் தங்கைகளின் அன்பில் நெகிழ்ந்து போனாள். அவளாலும் தன உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவர்களை தம் கரங்களில் இறுகி கொண்டு, “என்னை மன்னிசிடுங்கடி” என்க,

“அப்படியெல்லாம் சொல்லாதே க்கா” என்றபடி  அம்முவும் நதியாவும் அவள் முகத்தை ஏறிட்டனர்.

இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த சாரதிக்கு ஆச்சரியமாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் கூட இருந்தது. சகோதரத்துவம் இத்தனை அழுத்தமானதா? என்று தனக்குத்தானே கேட்டு வியப்படைந்தவன் , அது ஏன் தனக்கு கிடைக்கப் பெறவில்லை என்று அதீத ஏக்கமும் கொண்டான்.

உறவுகளின் அழகையும் அவசியத்தையும் அவன் புரிந்து கொண்ட தருணம் அது!

அவர்களுக்கு இடையில் போகாமல் அவன் தன் அறைக்குள் புகுந்து விட,

மூன்று சகோதரிகளும் ஒருவாறு இயல்பு நிலைக்கு வந்திருந்தனர். பேசிக் கொண்டிருக்கும் போது எதச்சையாய் நதியாவும் அமலாவும் சாரதியை பற்றியும் அவன் அக்கறையாய்  நடந்து கொள்ளும் விதத்தைப் பற்றியும் வீராவிடம் புகழ்ந்து பேச ஆரம்பிக்க, அப்போது வீராவின் குற்றவுணர்வு மேலும் வளர்ந்து கொண்டே போனது. 

அந்த அரவிந்தின் பேச்சை கேட்டுத் தான் இந்தளவுக்கு மோசமாய் அவனிடம் பேசியிருக்க கூடாது என்று அவள் உள்ளுர வருத்தப்பட்டாலும், அவனிடம் மன்னிப்பு கோருமளவுக்கு அவளுக்குத் துணிச்சலில்லை.

மறுபுறம் அவளுக்குச் சாரதி இத்தனை குறுகிய காலத்தில் தன் தங்கைகள் மனதில் இடம் பிடித்துவிட்டான் என்பதை எண்ணும் போதே அவளுக்கு  ஆச்சர்யமாகவும் பயமாகவும் கூட இருந்தது. அவனுக்கே உரித்தான இன்னொரு மோசமான முகத்தை அவர்கள் தெரிந்து கொண்டால்… அதுதான் இப்போது அவளுடைய பயமே!

அன்று இரவு உணவைத் தயார் செய்துவிட்டு முத்து அவர்களைச் சாப்பிட அழைக்க, மூன்று சகோதரிகளும் உணவருந்தக் கீழே வர சாரதி மட்டும் வரவில்லை.

“சாரை கூப்பிடலய்யா ண்ணா ” என்று வீரா முத்துவிடம் கேட்க,

“அவரு ரொம்ப என்று” முத்து பேசும் போதே வீரா அவன் என்ன சொல்ல போகிறான் என்பதை கணித்து, “ஒ… வேலையா இருக்காரா?” என்று உரைத்துவிட்டாள்.

அப்போது அம்மு எழுந்து கொண்டு,  “நான் போய் மாமாவ கூட்டின்னு வர்றேன்” என்று அவள் செல்ல பார்க்க,

“வேணா அம்மு … அவர் வேலையா இருக்கும் போது யாரும் டிஸ்டர்ப் பண்ணா  பிடிக்காது” என்று வீரா சமாளிக்க,

“அப்போ சாப்பாடு” என்று நதியா கேள்வி எழுப்பினாள்.

“முத்த ண்னே அப்புறமா ரூம்லயே எடுத்துட்டு போய் கொடுத்திருவாரு” என்று சொல்லி வீரா முத்துவை பார்த்து சமிஞ்சை செய்ய,

“ஆமா ஆமா” என்று முத்துவும் உணவு பரிமாறி கொண்டே தலையசைத்தான்.

அவர்கள் மூவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்கள் அறைக்குச் செல்ல, வீரா  அவர்கள் படுத்து கொள்ளப் படுக்கையை சரி செய்து கொண்டிருந்தாள்.

அம்மு அப்போது தன் தமக்கையிடம், “நான் ஒண்ணு கேட்டா… நீ கோபப் பட கூடாது” என்க,

“என்னடி?” என்று வீரா அவளைக் கூர்ந்து பார்த்தாள்.

“உனக்குதான்… நாள் முடிஞ்சிருச்சு இல்ல… அப்புறமும் நீ ஏன் எங்க ரூம்லேயே படுத்துக்கிற?” என்று அம்மு தயக்கத்தோடு கேட்க,

“எனக்கும் அதே டௌட்தான்” என்று நதியாவும் அவளோடு சேர்ந்து கொண்டாள்.

இன்று என்ன காரணம் சொல்வதென்று வீரா யோசிக்கும் போதே நதியா அவளிடம்,  “உங்க இரண்டு பேருக்கும் இன்னாவோ பிரச்சனை… நீ மாமாகிட்ட சரியா கூட பேச மாட்டிற… இன்னும் கேட்டா… அவரை சம்பந்தமே இல்லாத ஆள் மாறிதான் நீ  நடத்திற… எதோ தப்பா இருக்கு” என்று சந்தேகிக்க அம்முவும் அதனை ஆமோதித்தாள்.

வீராவோ என்ன பதில் சொல்லி அவர்களை சமாளிப்பதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

“உண்மையை சொல்லு க்கா… உனக்கு மாமாவ பிடிக்கலையா” என்று அம்மு கேட்க,

“யார் சொன்னா… அப்படியெல்லாம் இல்லயே ?” என்று வீரா பதறியபடி மறுத்தாள்.

மேலும் அவள், “வயசு பசங்க உங்கள இப்படி தனியா விட்டுட்டு நான் எப்படி … உஹும்… அதெல்லாம் சரியா வராது”என்க ,

“இல்லக்கா… நீ சமாளிக்கிற… இது பொய்” என்றாள் நதியா.

“இல்லடி” என்று வீரா பேசும் போதே அம்மு இடையிட்டு,

“அப்படின்னா நீ போய் மாமா ரூம்ல படுத்துக்கோ… எங்களுக்கெல்லாம் தனியா படுத்துக்க தெரியும்… ஏன்? நீ நைட்டு வீட்டுக்கு வராம இருந்த போதெல்லாம் நாங்க தனியா படுத்துக்கல” என்று சொல்ல,

“ஏன்டி என்னை இப்படி படுத்திறீங்க?” என்று வீரா கடுப்பானாள்.

“அப்போ மேட்டரை சொல்லு… நீ ஏன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட?”என்று நதியா கேட்டு அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

வீரா சில நொடிகள் அப்படியே மௌனமாய் அமர்ந்துவிட,

“என்னாச்சு க்கா? எதாச்சும் பெரிய பிரச்சனையா?” என்று அம்மு அவள் கரத்தை பற்ற, எந்த காரணத்தை கொண்டும் தன பிரச்சனையை சொல்லி அவர்கள் நிம்மதியை குலைத்துவிட கூடாது என்பதில் வீரா தெளிவாய் இருந்தாள்.

“என்னவோ உங்கள விட்டிட்டு போய் அந்த ரூம்ல படுத்துக்க சங்கடமா இருக்கு… கஷ்டமாவும் இருக்கு… அம்மா இருந்தா கூட பரவாயில்ல… ப்ச்… அதான்!” என்று வீரா தயக்கமாய் சொல்ல,

“நீ சரியான லூசு க்கா… தேவையில்லமா இன்னான்வோ யோசிச்சிக்குன்னு… நாங்க என்ன சின்ன பாப்பாவா” என்று நதியா ஆரம்பித்து அமலா அவள் வயசுக்கு மீறி சில அறிவுரைகளை வழங்க,

“பெரிய மனிஷிங்க மாறி பேசாதீங்க டி… கம்னு படுங்க”

“அப்போ நீ மாமா ரூம்ல போய் படு” என்றனர் இருவரும்!

வீராவின் நிலைமையோ பரிதாபகரமாய் மாறியது. அவர்களிடம் கெஞ்சி பார்த்தாள். கோபப்பட்டுப் பார்த்தாள். ஆனால் வீராவின் யுக்திகள் எதுவுமே அவர்களிடம் அப்போதைக்கு வேலைக்காகவில்லை.

நதியாவும் அமலாவும்  தாங்கள் பிடித்த பிடியில் உறுதியாய் இருக்க வீரா வேறு வழியில்லாமல்,

“சரிம் மா தெய்வங்களே… நான் போறேன்” என்று சம்மதித்துவிட்டாலே ஒழிய, அவளுக்கு  அதில் துளியும் உடன்பாடில்லை.

அதுவும் தான் பேசிய பேச்சுக்கு இப்போது தான் அவனிடம் போய் சிக்கினால் தன்னை உண்டு இல்லையென்று செய்து விடுவானே என்று யோசித்துக் கொண்டே அவள் அவன் அறை நோக்கி நடக்க,

“மொள்ள மொள்ள…. தரைக்கு வலிக்க போவுது” அம்முதான் பின்னிருந்து அவளைக் கேலி செய்தாள்.

“அடிங்க… போய் படுங்கடி” என்று வீரா கோபமாய் திரும்ப,

“முதல நீ உள்ள போவியாம்… அப்புறமா நாங்க உள்ள போவோமா? என்ன அம்மு?” என்று நதியாசொல்ல, “ஆமா” என்று அம்முவும் ஒத்து ஊதினாள்.

“எல்லா என் தலையெழுத்து… எனக்கு மாமியார் நாத்தனார் இல்லாத குறைய இவளுங்களே தீர்த்து வைசிச்ருவாளுங்க போல… இதுல…  உள்ள வேற ஒருத்தன் இன்னா நிலைமையில இருக்கானோ தெரியலையே” என்று யோசித்துக் கொண்டே அவள் கதவை தட்டி பார்க்க அதுவோ பட்டென  திறந்து கொண்டது.

குப்பென்று சிகரெட் புகை நாற்றத்தோடு மது வாடையும் கலந்து வீச, அவளுக்கோ  அந்த அறைக்குள் சில நொடிகள் கூட தாக்கு பிடிக்க முடியுமென்று தோன்றவில்லை. அவள் வெளியேறிவிடலாம் என்று திரும்பிய சமயம்,

“இப்ப எதுக்குடி என் ரூம்குள்ள  வந்த… இன்னும் பேசறதுக்கு எதாச்சும் மிச்சம் மீதி விட்டு வைச்சிருக்கியா?” என்று ஆக்ரோஷமாய் கேட்க,

அவள் அதிர்வோடு திரும்பினாள்.

சாரதி அந்த அறையின் பால்கனி கதவின் வழியே சிகரெட்டை புகைத்தபடி உள்ளே நுழைந்து கொண்டே அவளை நோக்கி நடந்து வர,

அவள் பதட்டத்தோடு,  

“எனக்கு புரியுதுய்யா… நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது… தப்புதான்… ஆனா என் நிலைமையில இருந்து நீ யோசிச்சி பார்றேன்” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அவளை நெருங்கி வந்து நின்றவன்,

“தப்பு… ஹ்ம்ம்… அப்புறம்” என்றவன் கேட்ட தொனியில் அவளுக்கு அப்போதே கதவை திறந்து ஓடிவிடலாமா என்று தோன்றியது.

அந்தளவுக்கு அவன் பார்வையிலும் முகத்திலும் போதையின் தீவிரம்!

உடனடியாய் அந்த அறையை விட்டு வெளியேறிவிடலாம் என்று அவள் எண்ணித் திரும்பும்போதே,

“உன்னால எப்படிறி என்னை அந்தளுவுக்கு கீழ்த்தனமா யோசிச்சிப் பார்க்க முடிஞ்சிது” என்று நிதானமாகவே அவன் கேட்க,

அவள் அப்படியே சிலையாய் நின்றுவிட்டாள்.

“நான் அப்படி நடந்துக்க கூடியவன்தான்னு உன் மனசை தொட்டு சொல்லு” என்று  மேலும் அவன் உருக்கமாய் கேட்க அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

அவன் கோபமாய் கேட்டால் கூட அவள் பதில் சொல்லி விடுவாள். ஆனால் அவனின் இந்தப் பரிமாணம் அவளை ரொம்பவும் கலவரப்டுத்தியது.

சில நொடிகள் அவளை ஆராய்ந்து பார்த்தவன் அவள் தோள்களை பற்றிக் கொண்டு, “நான் உன்கிட்ட ஒண்ணும் கேட்கட்டுமா ?” என்க,

அவள் நெளிந்து கொண்டே, “இன்னாது?” என்றாள் அச்சத்தோடு!

“உண்மைய சொல்லு…. நான் உன்னை கட்டாயப்படுதினதால மட்டும்தான் நீ என்னை கல்யாணம் பன்னிக்கிட்டேன்னு ?”  என்றவன் அவளை ஆழ்ந்து பார்த்தபடி வினவினான்.

‘குடிச்சா எல்லா லூசாட்டும் உளருவானுங்க… இவன் என்ன ? இப்பதான் ரொம்ப தெளிவா இருக்கான்’ இவ்விதம் எண்ணிக் கொண்டவள் அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு நின்றாள்.

அதீத போதையின் விளைவோ என்னவோ? அவனின் ஆழ்மனதின் ஏக்கத்தை அவளிடம் வெளிக்கொணர ஆரம்பித்தான். அதுவும் தன்னை காயப்படுத்தியவளிடமே அதற்கான மருந்தை எதிர்பார்க்கும் அவன் மனநிலை கொஞ்சம் விந்தையாக இருந்தாலும்,  இத்தனை வருடங்களில் அவன் மனம் நெருக்கமான உறவை உணர்ந்தது அவளிடம் மட்டும்தானே!

*********

சாரதியின் செல்பேசியின் அழைப்பு அந்த அறையின் நிசப்தத்தைக் கிழித்து கொண்டு கேட்க, அவன் முகத்தைச் சுருக்கி கொண்டு விழிக்க முற்பட்டான்.

கழுத்து லேசாய் வலிக்கத் தலையை நிமிர்த்த முடியாமல் சற்று சிரமப்பட்டு நிமிர்த்திக் கொண்டு விழிகளைத் திறக்க, அவன் அதிர்ந்தான்.

வீரா அவன் அருகில் இருந்தாள்.அதுவும்  இருவருமே அருகருகே அமர்ந்தபடியே உறங்கியிருக்கின்றனர்.

சாரதிக்கு அதிர்ச்சி தீர்ந்தபாடில்லை. இரவெல்லாம் அவள் தோள் மீது சாய்ந்தபடியா தான் உறங்கிக் கொண்டிருந்தோம்?

இந்தக் கேள்வி எழுந்த மறுகணம் கொஞ்சம் ஆச்சரியம் குழப்பம் என எல்லாமும் சேர்ந்து அவனை ஆட்டுவிக்க விழிகளைப் பலமுறை தேய்த்து பார்ப்பதுநிஜம்தானா என உறுதிப்படுத்திக் கொண்டான்.

பொய்யில்லை. அவள் இன்னும் அவன் அருகில் அமர்ந்துதான் உறங்கிக் கொண்டிருந்தாள்.  அதுவும் அவள் மிருதுவான தோளை அவன் தலை சாய்க்கக் கொடுத்தபடி!