அவனவள்

“சாரங்கபாணி ஐயாவுக்கு உடம்பு முடியலன்னு தெய்வானை அம்மா  வந்து சொன்னதும்தான்…. வீராம்மா பதறிட்டு காரை எடுத்துட்டு கிளம்பினாங்க சார்” என்று முத்து சாரதியிடம் தெளிவுப்படுத்த,

அதிர்ச்சி கலந்த கோபத்தில் நின்றிருந்தவன் ஒருவாறு நிதான நிலைக்கு வந்தான். 

“என்னாச்சு அவருக்கு?” என்று முத்துவிடம் அவன் வினவ,

“தெரியலங்க சாரி… ஆனா தெய்வானை அம்மா ரொம்ப பயந்திருந்தாங்க” என்று சொல்ல சாரதிக்கு இந்த வார்த்தைகள் மீண்டும் சினத்தை உண்டாக்கியது.

‘யாருக்கு என்ன வந்தா எனக்கென்ன?யாரை கேட்டு அவ காரை எடுத்துட்டு போனா?’ என்று அவன் தன் பேசியில் இருந்த நேரத்தை பார்த்துவிட்டு பல்லை கடித்து கொண்டு புலம்பிய அதே சமயம், தாமதிக்காமல் தன்னுடைய மற்றொரு காரை எடுத்து கொண்டு கிளம்பினான். 

அவள் எந்த மருத்துவமனைக்கு சென்றிருக்க கூடும் என்று வாயிலில் நின்றிருந்த காவலாளியிடம்  வழியை கேட்டவன் தானாகவே ஒரு யூகம் செய்து கொண்டு வேகமாக தன் காரை இயக்கினான்.

நேரம் ஆக ஆக அவனுக்கு அவள் மீது வெறியேறி கொண்டிருக்க,

கணேஷ் வேறு அப்போது அவன் பேசிக்கு அழைத்து… மீட்டிங்காக டீலர்ஸ் கஸ்டமர்ஸ் எல்லோரும் வந்துவிட்டதாக தெரியப்படுத்தி அவன் டென்ஷனை இன்னும் அதிகரிக்க செய்தான்.

அப்போது சாரதியின் மொத்த எரிச்சலும் கோபமும் வீராவின் மீதே நிலைகொண்டுவிட்டது.

எப்படியோ சாரதி அவள் வந்தடைந்த மருத்துவமனையை சில நிமிட தேடலில் கண்டுபிடித்திருந்தான். வெளியே பார்க்கிங்கில் நின்றிருந்த அவன் காரை பார்த்த பிறகே அவனுக்கு மூச்சே வந்தது.

துரிதமாய்  ரிசப்ஷனில் விசாரித்தவன்… சாராங்கபாணி வைக்கப்பட்டிருந்த சிகிச்சை அறை வாசலை அடைந்தான். 

அங்கே அழுத கோலத்தில் தெய்வானை நின்று கொண்டிருக்க, வீராவோ அவருக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருந்தாள். அப்போது சாரதி அங்கே சென்று நிற்க,

வீரா அவனை பார்த்த மறுகணம் அவனிடம் எதோ சொல்ல எத்தனித்து அவனை நெருங்கினாள்.

  அவனோ அங்கே தெய்வானை நிற்பதை சற்றும் பொருட்படுத்தாமல், வீராவின் கரத்தை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு ஒரு ஓரமாய் நகர்த்தி சென்று நிறுத்தினான்.

அவள் பேசுவதற்கு முன்னதாக அவனின் கரம் அவள் கன்னத்தை பதம் பார்க்க, அவள் புரியாமல் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள். 

அவனோ சீற்றத்தோடு, “யாரை கேட்டு டி… நீ காரை எடுத்துட்டு வந்த” என்றவன் கேட்க, அவள் பதிலுரைக்க வாயெடுக்கும் போதே,

“நீ ஒரு மண்ணும் சொல்ல வேண்டாம்… கார் சாவியை கொடு” என்றவன் தன் கரத்தை அவள் முன்னே நீட்டினான்.

அவளோ அவமானத்தில் தலைகவிழ்ந்தபடியே தன் கரத்திலிருந்த சாவியை அவனிடம் நீட்ட,

உடனடியாய் அதனை பறித்து கொண்டவன் தன்னிடமிருந்த சாவியை அவள் கரத்தில் வேண்டா வெறுப்பாய் தினித்துவிட்டு,

“ஒழுங்கா வீடு போய் சேர வழிய பாரு” என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு அகன்றான். 

மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட சாரதியின் கார் வேகத்திலும் வேகம்… அதிவேகமாய் சென்றது. பறந்தது என்று சொன்னாலும் அது மிகையாகாது. அதுவும் அத்தனை மோசமான வாகன நெருக்கடிகளிலும்! 

அந்தளவுக்கு அவன் தன் வியாபாரத்தின் மீதும் பணத்தின் மீதும் பற்றுதல் கொண்டிருந்தான். அதுவும்  அவனின் அப்போதைய பிரதான குறிக்கோள்…   அவன் பார்த்து பார்த்து கட்டிய அந்த வியாபார கோட்டைக்குள் சிறு விரிசலை கூட வரவிட கூடாது. அதாவது எந்த சூழலிலும் தன் வியாபாரத்தில் நஷ்டத்தை பார்த்துவிடவே கூடாது. 

அவன் அலுவலகத்தை சென்றடைந்த நொடியிலிருந்து அந்த ஆர்டரை பெற்றுவிடுவதற்கான செயல்பாடுகளில் மும்முரமானான்.  அவனுக்கே உரித்தான வியாபார யுக்திகள் அவனை கைவிடவில்லை. அவன் எதன் மீது குறி வைக்கிறானோ 

அந்த இலக்கை சரியாய் அடிப்பதில் அவனுக்கு நிகர் அவன்தானே! 

ஆதலாலேயே அவனை சுற்றியுள்ள அனைத்தும் அவன் பார்வைக்கு புலப்படாமல் போய்விடுகிறது. முக்கியமாய் வீராவின் உணர்வுகள்…   துளியளவு கூட வீராவை காயப்படுத்திவிட்டோம் என்ற அவனுக்குள் குற்றவுண்ரவோ… குறைந்த பட்சம் சிறு வருத்தம் கூட இல்லை.    

 சாரதி தன் அலுவலக வேலைகளில் ஆழ்ந்துவிட்டிருந்த சமயம் தன் பேசியில் வந்த அழைப்பை அவன் கவனிக்காமலே ஏற்று காதில் வைத்து, “ஹெலோ” என்க,

எதிர்புறத்தில் மௌனம் குடிகொண்டிருந்தது.  அவன் துணுக்குற்று அந்த அழைப்பின் எண்ணை கவனிக்க, அது ஏதோ புதிய எண்!

சில நொடிகள் யோசித்தவன், அந்த அழைப்பு துண்டிக்கப்படாமல் மௌனத்தை தாங்கியிருப்பதை உணர்ந்து, “வீரா” என்று அழைத்தான். 

அவள் பேசாவிட்டாலும் அது அவளாகத்தான் இருக்கும் என்பது அவன் யூகம். அப்போதும் எதிர்புறத்தில் பதிலில்லை.

ஏதோ ஒரு தயக்கத்தில் அவள் சொல்ல எண்ணியதை சொல்லாமல் அமைதி காக்க, அவன் உறுதியாக தீர்மானித்தான். அது அவள்தான் என்று!

“இன்னும் ஹாஸ்பெட்டில இருந்து வீட்டுக்கு போகலயா நீ?” என்றவன் கேட்க,

“இல்ல… சாராங்கபாணி மாமா பாவம்… ரொம்ப முடியாம இருக்காரு… முதுகெலும்பில இருக்க ஏதோ நரம்பில பிரச்சனையாம் …  ஆப்ரேஷன் பண்ணனுமா…. இல்லன்னா கை காலெல்லாம் விழுந்திருமாம்… அது இதுன்னு இன்னானுவோ சொல்றாங்க… எனக்கு ஒண்ணும் புரியல… மாமி வேற அழுதினேகீறாங்க… நீ உடனடியாய் வாயேன்” அவன் அடித்ததை கூட பொருட்படுத்தாமல் அவனிடம் கெஞ்சலாய் அவள் கேட்க,

“நான் எதுக்கு வரனும்…. அவரு பெத்த பொண்ணுங்க… வருவாங்க…. பார்த்துக்க சொல்லு” என்றான் சாரதி அலட்சியமாக!

“என்னதான் இருந்தாலும் அவர் உன்னை வளர்த்தவருய்யா” என்று அவள் இறங்கிய தொனியில் சொல்ல,

“யாரு? அவரு என்னை வளர்த்தாரு… நீ அதை பார்த்த” என்று கடுப்பாய் கேட்டான். 

“யோவ்! அந்த மனிஷன் உயிருக்காக போராடினுக்கீறார்” என்றவள் தவிப்பாய் சொல்ல,

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று அவன் வெகுசாதாரணமாய் சொல்ல அதிர்ச்சியில் மௌனமானாள் அவள்!

அவனே மேலும், “அவரை கொண்டு போய் ஹாஸ்பெட்டில சேர்த்துட்ட இல்ல… அதோட விடு… அதுக்கு மேல அவரோட ஆம்படையாளும்… அவர் பெத்த இரண்ட மவளுங்களும் பார்த்துப்பாளுங்க… நீ புறப்படு” என்றவன் நிறுத்தி நிதானமாய் அதே நேரம் அதிகாரமாய் சொல்ல,

அவள் அந்த நொடி அதிர்ச்சியிலிருந்து மீண்டிருந்தாள்.

“சரி… நீ வர வேண்டாம்… ஆப்ரேஷன் கட்டிறதுக்கு பணமாச்சும் கொடுத்த அனுப்பு” என்றவள் சொல்ல,

“பணமா? அதுவும் நான் அனுப்பனுமா?!” என்று ஏளன சிரிப்பு சிரித்தான்.

“அப்போ கொடுக்க மாட்டியா?!” அழுத்தமாய் அவள் கேட்க,

“என்னடி நீ…கொடுத்து வைச்ச மாறி கேட்கிற?” அலட்சியம் அவனின் குரல்!

“ஓ! கொடுத்த வைச்சாதான் உன்கிட்ட கேட்கனுமா? பொண்டாட்டிங்கிற உரிமையல கேட்க கூடாதா?!”

“உனக்கும் உன் தங்கச்சிங்களுக்கு தேவைன்னா சொல்லு… நான் கொடுக்கிறேன்….பட் வேற யாருக்கும்னா… சேன்ஸே இல்ல”

“அப்போ கொடுக்க மாட்ட”

“லூசாடி நீ… அதைத்தானே நான் முதல்ல இருந்து சொல்லிட்டிருக்கேன்”

“சரி விடு… நான் வேற யார்கிட்டயாவது கேட்டுக்கிறேன்”

அவன் மீண்டும் சத்தமாய் சிரித்து, “அதெல்லாம் எவனும் சும்மாலாம் ஒரு நயாபைசா தரமாட்டான்…. ” என்று உரைக்க,

“உன் வேலையை பாரு… எப்படி காசு புரட்டனும்னு எனக்கு தெரியும்”

“உனக்கெதுக்குடி இந்த வேண்டாத வேலை… ஒழுங்கா வீட்டுக்கு போ… அவங்க அவங்க பிரச்சனையை அவங்க அவங்க பார்த்துக்கட்டும்” என்றவன் சொல்ல, 

“மாட்டேன்… இன்னா பண்ணுவ” என்று முடிவாய் உரைத்தாள் அவள்!

“அப்படியா… சரி போய் அலை… ஆனா கண்டிப்பா பணம் கிடைக்காது”

“அதெல்லாம் கிடைக்கும்…. “

“என்ன? ஏதாச்சும் சொத்து கித்து வைச்சிருக்கியோ?  வித்து கொடுக்க போறியோ?!” என்றவன் எகத்தாளமாய் கேட்க,  

“இல்ல… பிராத்தல் தொழில் பண்ண போறேன்” என்றவள் சொல்லி முடித்த மறுகணம், “வீரா” என்றவன் கத்திவிட்டான்.  அவன் வார்த்தைகளே அவனுக்கெதிராய் இப்படி திரும்பும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

“இப்ப எதுக்கு கத்திற…. அன்னைக்கு நீதானே சொன்ன… பணம் பன்னன்னும்னா என்ன வேணா பண்ணலாம்னு” என்றவள் மேலும் அவன் கோபத்தை தூண்டுவிடுவது போல்,

“போயும் போயும் உன்கிட்ட படுத்ததுக்கு ஒரு பத்து பேர்கிட்ட படுத்திருந்தா… கேட்காமலே இந்த காசு எனக்கு கிடைச்சிருக்கும்” என்று அவள் சீற்றமாய் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அவளின் அந்த வார்த்தைகளில் அவன்  உள்ளம் எரிமலையாக கொந்தளித்து கொண்டிருக்க, அவனோ பதில் பேச முடியாது விக்கித்து போனான்.

 அவள் உதிர்த்த அந்த வார்த்தைகள் அவன் மீது எரிகுழம்பை ஊற்றிவிட்டது போல அவன் தேகத்தில் உஷ்ணமேற்ற, கிட்டதட்ட அந்த வார்த்தை அவனை உயிரோடு கொன்றுவிட்டது.

 உச்சபட்ச கொதிநிலையை அவன் கோபம் தொட்டிருக்க அந்த நொடி…  அவன் முன்னே இருந்த தன் லேப்டாப்பை ஆவேசமாய் தள்ளிவிட்டான். 

 அவனின் வெறி கொண்ட வேகத்தில் அந்த மடிக்கணினி சுக்குநூறாக்கியிருந்தது. 

சாரதி  உடைந்து  தன் இருக்கையில் அமர்ந்து விட, அப்போது கணேஷ் அவன் அறையில் எழுந்த சத்தத்தை கேட்டு அறை வாசல் கதவை தட்டினான். 

சாரதி தலையை நிமிர்த்தி அவனை பார்த்து… உள்ளே வர அனுமதி தந்தான். 

 கணேஷ் சாரதியின் விழிகளில் தாண்டவமாடி கொண்டிருந்த கோபத்தை பார்த்து அஞ்சிய நிலையில் உள்ளே வர, அப்போது தரையில் வீழ்ந்து உடைந்திருந்த லேப்டாப் அவன் பீதியை இன்னும் அதிகரிக்க செய்தது.

“ஸார்” என்றவன் அதிர்ச்சியோடு லேப்டாப்பை கையிலெடுக்க சாரதி அடங்கா கோபத்தோடு நெற்றியை பிடித்து கொண்டு,

“அதெல்லாம் இருக்கட்டும்…. நான் சொல்றதை முதல்ல செய்” என்று சாரதி அதிகாரமாய் சொல்ல,

“சொல்லுங்க சார்?” என்றபடி அவன் முன்னே வந்து நின்றான் கணேஷ்!

சாரதி அப்போது கணேஷிடம் சாரங்கபாணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை பெயர் விவரங்களையெல்லாம் சொல்லி…  அவர் சிகிச்சைக்கு தேவையான மொத்த பணத்தையும் கட்டிவிட்டு வர சொன்னான். 

கணேஷ் முதலில் சாரதியை சந்தேகமாய் பார்த்தாலும் அவன் சொன்னதை செய்ய வேண்டுமென்று கட்டயத்தோடு மருத்துவமனைக்கு அன்றே சென்று… அவரின் சிகிச்சைக்கான பணத்தை மொத்தமாக கட்டிவிட்டு திரும்பினான்.

ஆனாலும் சாரதியின் மனநிலை இயல்பு நிலைக்கு திரும்பவில்லையெ!

‘நீ ரொம்ப ஓவரா பேசிட்ட… அதுக்கெல்லாம் உனக்கு இருக்குடி’ என்று அவள் மீது வெறியோடு அவன் வீட்டுக்கு போய் சேர்ந்திருக்க, அவளோ இன்னும் வீடு திரும்பவில்லை என்ற தகவல் அவனை இன்னும் அதிகமாய் கோபம் கொள்ள செய்தது.

அதே நேரம் அம்முவும் நதியாவும் கவலை தோய்ந்த முகத்தோடு, “அக்கா அவ போஃனை கூட எடுத்துட்டு போகல மாமா… லேட்… ஆக ஆக ரொம்ப பயமா இருக்கு” என்று அவர்கள் சொல்ல,

“எங்கே போயிட போறா… எல்லா வந்திடுவா… நீங்க சாப்பிட்டு போய் படுங்க” என்றவன் கடுப்போடு சொல்லிவிட்டு படியேறி செல்ல,

“மாமா ப்ளீஸ்… நீங்க போய் அக்காவை  கூட்டின்னு வந்திருங்களேன்” என்றாள் நதியா!

அந்த நொடியே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 

“அவதான் கொழுப்பெடுத்து போய் அங்கே போய் உட்கார்ந்திட்டிருக்கான்னா… நான் எதுக்கு போனும்… போனவளுக்கு வர வழி தெரியாதா என்ன?” என்று அவன் மிகுந்த சீற்றத்தோடு கத்திவிட்டான்.

அவர்கள் இருவருமே மிரட்சியுற்று அதிர்ச்சியாய் அவனை நோக்க, அவனோ அவர்களின் மனநிலையை பொருட்படுத்தாமல் தன் அறை நோக்கி நடந்தான். 

அப்போது அம்முவின் விசும்பல் சத்தம்  அவன் காதில் விழ, அவனால் மேலே செல்ல முடியவில்லை. 

அவன் திரும்பி அவர்களை பார்க்க, அப்போது அம்மு நதியாவின் தோள் மீது சாய்ந்து கொண்டு அழ தொடங்கியிருந்தாள். 

அதனை கண்டு சாரதியின் மனம் இளக… அதே சமயம் அவர்களிடம் கோபப்பட்டு தான் பெரிய தவறு செய்துவிட்டோம் என்றும் உணர்ந்தது. 

மீண்டும் திரும்பி அவர்களிடம் வந்தவன்

“அம்மு!” என்று அழைக்க அவர்கள் அவனை அச்சத்தோடு ஏறிட்டனர்.

“ஏதோ ஆபிஸ் டென்ஷன்ல கத்திட்டேன்… தப்புதான் சாரி” என்க,

“என்ன மாமா நீங்க போய்” என்று பதறினர் இருவரும்!

“சரி… நான் போய் அக்காவை கூட்டிட்டு வர்றேன்…. நீங்க கவலைப்படாம சாப்பிட்டு படுங்க” என்று சொல்லி அம்முவின் தலையை தடவ, 

அவர்களின் இருவர் முகத்திலும் அச்சவுணர்வு மறைந்து ஒருவித நம்பிக்கை ஏற்பட்டது.

சாரதி தன் காரில் மருத்துவமனைக்கு புறப்பட்டான்.  

வீராவை கண்ட மாத்திரத்தில் இன்னொரு அறை விட வேண்டும் என்ற எண்ணத்தோடே சென்றான். ஆனால் அங்கே அரங்கேறிய காட்சிகள் வேறு!

மருத்துவமனையில் அவன் விசாரத்ததில் சாரங்கபாணியின் ஆப்ரேஷன் முடிவுற்று அவரை அறைக்கு மாற்றியிருப்பதாக தெரிவிக்க, விரைந்து அவன் அங்கே சென்றான்.  

அவன் எதிர்பார்ப்புக்கேற்றாற் போல வீரா அறை வாசலிலேயே நின்றிருந்தாள். 

அவளை பார்த்ததும் அவன்  உள்ளடக்கியிருந்த கோபத்தை அவள் மீது காட்டிவிட துடித்தது.

அவனை பார்த்ததுமே அவளுக்குள் அச்சம் பரவ, தான் பேசிய பேச்சிற்கு அவன் இப்போதைக்கு எத்தகைய மனநிலையோடு இங்கே வந்திருப்பான் என்பதை அவளால் உணர முடியாதா என்ன?

ஆனால் சாரதி அவளை நோக்கி வந்த சமயம் தெய்வானை அவனை வழிமறித்து நின்றார். அதோடு அவர்…  அவன் கரங்கள் இரண்டையும் சேர்த்து பிடித்து கொண்டு கண்ணீர் வடிக்க, அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 

அவரோ கண்ணீர் மல்க, 

“இதுநாள் வரை ஒரு சித்தியா நான் எந்த நல்லதையும் நோக்கு செஞ்சதில்ல..  ஏன் ஒரு கவளம் சாதம் கூட ஊட்டினதில்ல.. ஆனா நீ” என்று அவர் சொல்லி அவன் கரங்களை அப்படியே தன் கண்களில் ஒத்தி கொண்டார். அவரின் கண்ணீர் அவன் கரங்களை நனைக்க, அவன் தேகம் சிலிர்ப்படைந்தது. 

வார்த்தைகளின்றி அவன் மௌனமாய் அவரை பார்க்க, அப்போது தெய்வானையின் மகள்கள் இருவரும் அவன் முன்னேவந்து,

“எங்களை மன்னிச்சிடுங்க ண்ணா…. இப்ப வரை உங்களை அண்ணாவா நாங்க பார்த்ததும் இல்ல… நடத்தினதும் இல்ல… ஏன் பலமுறை… உங்களை உதாசீனப்படுத்தியிருக்கோம்… ஆனா நீங்க அதையெல்லாம் மனசில வைச்சிக்காம… பணம் கொடுத்து அப்பா உயிரை காப்பாத்தியிருக்கீங்க” என்று அவர்களும் அவனிடம் நெகிழ்ச்சியாய் கண்ணீர் பெருக்கி மன்னிப்பு கோரினர்.  

தெய்வானை அப்போது தன் முகத்தை நிமிர்த்தி சாரதியிடம், “நோக்கு செஞ்ச பாவத்துக்கு… நேக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மோட்சமே கிடையாது… ஆனா நீ புண்ணியம் செஞ்சிருக்க பார்த்தா… அதான் நோக்கு இப்படி ஒரு ஆம்படையாள் வாச்சிருக்கா” என்றவர் சொல்லும் போதே சாரதியின் பார்வை வீரா மீது திரும்ப அவளோ அவர்களின் சம்பாஷணைகளை திகைப்பாய் பார்த்து கொண்டிருந்தாள்.

மேலும் தெய்வானையும் அவர் மகள்களும் அவனிடம் நன்றியுரை வாசித்து கொண்டிருக்க, சாரதி மௌனமாகவே இருந்தான். அவர்கள் பேச பேச அவன் உணர்வுகள் தளும்பி பெருக கண்கள் கண்ணீரை உதிர்த்துவிடும் நிலையை எட்டியிருந்தன.

“சரி… இப்போ சித்தப்பா நல்லா இருக்காரு இல்ல” என்றவன் தன் இறுக்கத்தை தளர்த்தி கொண்டு கேட்க,

“உன் புண்ணியத்தில… அவர் இப்போ நன்னாயிட்டாரு” என்று தெய்வானை உரைக்க, “சரி பார்த்துக்கோங்க…. வீராவோட தங்கச்சிங்க வீட்டில தனியா இருக்காங்க… நாங்க கிளம்பிறோம்” என்று சொல்லி சாரதி வீராவை பார்த்தான். 

வீரா தயக்கமாய் தெய்வானையை பார்த்து, “சரிங்க மாமி… மாவை பார்த்துக்கோங்க” என்று சொல்லவும்,

தெய்வானை நெகிழ்ச்சியோடு  வீராவை கட்டியணைத்து, “நீ வயசில என்னை விட சின்னவாளா இருந்தாலும்  மனசில ரொம்ப ஒசந்து நின்னுட்டடி ம்மா” என்றார்.

“மாமி!” என்று வீரா அவர் முகத்தை பார்க்க, “சரி சரி… நேரமாயிடுத்து… நீ புறப்படு” என்று தன் கண்ணீரை முந்தானையில் துடைத்து கொண்டு அவளை வழியனுப்பி வைத்தார் தெய்வானை!

சாரதி விறுவிறுவென முன்னே நடந்து மருத்துவமனை வாசலிலிருந்து தன் காரில் ஏறி அமர, அவள் தயக்கத்தோடு, “அந்த காரை நான் ஓட்டிட்டு வந்திடுறேன்…” என்றாள். 

“அது இங்கேயே இருக்கட்டும்… நாளைக்கு எடுத்துக்கலாம்… நீ என் கூட வா” என்று ஸ்டியரிங்கை பிடித்தபடி அவளை பாராமலே  உரைத்தான்.

“இல்ல நான்” என்று மீண்டும் அவள் தயங்க அவன் அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து வைக்கவும், அவள் மௌனமாய் அந்த காரிலேயே ஏறி கொண்டாள்.

அவர்கள் கார் வீட்டை அடையும் வரை இருவருமே கனத்த மௌனத்தோடே வர,  அவன் காரை நிறுத்தியதும் அவள் வேகமாய் தன் தங்கைகளின் அறை நோக்கி சென்றுவிட்டாள். 

அப்போது அம்முவும் நதியாவும் வீராவை எதிர்நோக்கி காத்திருந்ததால் அவளை பார்த்ததும் அவர்கள் முகம் பிரகாசிக்க, அவளை ஓடிவந்து கட்டிகொண்டனர். 

“சாப்பிட்டீங்களாடி இரண்டு பேரும்?!  என்றவள் வினவ, “நீயும் மாமாவும் வராம எப்படிக்கா?!” என்றனர் இருவரும்!

அவர்களை யோசனையாய் சில நொடிகள் பார்த்துவிட்டு, “சரி… நீங்க இரண்டு பேரும் கீழே போங்க… நான் அவரை கூட்டின்னு வர்றேன்” என்றதும்

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு அவள் சொன்னதை கேட்டுவிட்டு கீழே சென்றனர். 

வீரா தயக்கத்தோடு தங்கள் அறைக்குள் புகுந்தாள்.

சாரதியோ படுக்கையில் அமர்ந்து சிகரெட்டை தன் விரல்களுக்கிடையில் பிடித்து கொண்டிருந்தானே ஒழிய அதனை பற்ற வைக்க கூட இல்லை.

நிச்சயம் அவன் கோபமாய்தான் இருப்பான் என்று அவள் மனம் உறுதியாய் சொல்ல 

அவன் முன்னே வந்து நின்றவள், “எனக்கு தெரியும்…. நீ என் மேல செம கோபத்தில கீறன்னு… அதே போல நானும் உன் மேல செம கடுப்பிலதான் இருக்கேன்… ஆனா… அதெல்லாம்  அப்புறம் பேசிக்கலாம்… இப்போ தங்கச்சிங்க நமக்காக சாப்பிடாம காத்திருக்காங்க… வா போய் சாப்பிட்டு வந்திரலாம்” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே,

அவன் எழுந்து நின்று அவள் முகத்தை ஆராய்ந்து பார்த்தான். அவன் பார்வையின் ஊடுருவலில் அவள் துணுக்குற்றாள்.

வெறுமையாயிருந்த அவன் முகத்தில் அவளால் எந்த உணர்வையும் கண்டறிய முடியவில்லை. 

“இத பாருங்க… சண்டையெல்லாம் அப்புறம் போட்டுக்கலாம்… தங்கச்சிங்க நமக்காக கீழே காத்திட்டிருக்காங்க” என்று வீரா படப்படப்போடு சொல்லி கொண்டிருக்கும் போதே,

சாரதி அவளை இறுக்கமாய் அணைத்து கொண்டான்.

முதலில் அவனின் அணைப்பில் அவள் அதிர்ந்ததாலும்… பின்னர் அவள் உணர்ந்து கொண்டாள். அந்த அணைப்பில் அவனுக்கிருந்தது காதல் மோகத்தை தாண்டிய ஓர் ஆறுதல். அவனால் சொல்ல முடியாத ஏதோ ஓர் வேதனை!

அவளை தவிர்த்து வேறு யாரிடமும் அவனால் அந்த உணர்வை பகிர்ந்து கொள்ளவும் முடியாது. காட்டிக் கொள்ளவும் முடியாது. 

ஏனெனில் அவள் மட்டுமே அவனவள்!

அவனுக்கானவள்! 

தன் ஆண்மையையும் ஆணவத்தையும் மறந்து அவளுக்குள் அவன் சரண்புகுந்த தருணம் அது!

அவளை அவன் இறுக்கமாய் அணைத்திருந்தாலும் உண்மையிலேயே அவளுக்குள்ளாக தன்னை… தன் உணர்வுகளை 

புதைத்து கொள்ள அவன் முயன்று கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

error: Content is protected !!