Aji Pavi

134 POSTS 126 COMMENTS

UKIK – 18

18

ஹாலில் நுழைந்த அந்த வாலிபன் மீதே கவனத்தை வைத்த சந்த்ருவிடம், “இன்னும் கொஞ்ச நாளுல கொஞ்ச நேரத்துல..ம்… எனக்குத் தோணும் போது..” என்றான் ப்ளாக்..

“கண்டிப்பா…ஐ அம் வெய்ட்டிங்..” என்றவன் அழைப்பைத் துண்டித்து அவ்வறையில் தனக்குத் தேவையானவற்றை எடுத்து கொண்டு தனது அறைக்கு வந்தான்..

கீழே ஒருவன் தன்னைத் தேடி வந்திருப்பதாய் தனசேகர் போன் செய்ய, இரவு உடையில் கீழறங்கியவன், “யார் நீங்க..?” முன்னால் இருக்கும் இருக்கையில் அமரும்படி செய்கை செய்து கேட்டான்…

“சார், ஆனந்த் சார் அனுப்பி வச்சாரு..” எனவும்,

“ம்…” என ஆமோதிப்பாய் தலையசைத்தவன் ஜார்ஜின் வீட்டு முகவரியைக் கொடுத்தனுப்பினான்…

திரும்பி தனது அறைக்குள் வந்த சந்த்ரு, தானெடுத்த வந்த பைலில் பார்வையை ஓட்ட, எதுவோ புரிவது பிடிபடுவது போல இருக்க,

ஆனந்தின் எண்ணுக்கு அழைத்தவன், “நீங்க ரெண்டு பேரும் அங்கயே இருங்க..நான் கிளம்பி வரேன்..” என்றவன் மீண்டும் அவ்வறைக்கு ஓடினான்..

தான் இதுவரையிலும் திரட்டிய தகவல் மற்றும் ட்ராக் செய்தவற்றை ஒரு பென் ட்ரைவில் ஏற்றியவன், உடை கூட மாற்றத் தோன்றாமல் மாலினி அழைப்பதைக் கூட கணக்கில் கொள்ளாமல் காரை எடுத்து கொண்டு விரைந்தான்..

சாஜிக், சஞ்சீவிடம் ஒவ்வொன்றாய் இதுவரை தான் செய்ததை விளக்கி கூற, அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்த ஆனந்த் இவர்களைக் கவனித்து கொண்டிருந்தான்..

உள்ளே வேகமாய் வந்த சந்த்ரு, “சாஜி, இங்க வா..” என்றழைக்க, அவன் வருவதற்குள் அங்கிருந்த கணினியில் தான் கொண்டு வந்திருக்கும் பென் ட்ரைவரை மாட்டி, பைலை ஓபன் செய்தான்..

சாஜிக்குடன் சஞ்சீவ் ஆனந்த் என இருவருமே வந்துவிட, “எல்லோரும் இங்க பாருங்க..” என்றான் மேப்பையும் அவன் குறித்து வைத்துள்ள சிவப்பு நிற இடங்களையும் காட்டி..

“என்ன சார்..?” சாஜிக் கேட்க,

“சாஜி, நாம இதுவரைக்கும் அவன் கால் பண்ணுன சில லொக்கேஷன் ட்ராக் பண்ணுனோம் இல்லையா..அதெல்லாம் வச்சி ஏரியா கண்டுபிடிச்சா இந்தக் கன்ட்ரில வேற வேற இடம் காட்டுது…”

“சார், அவன் ஐபி அட்ரெஸ் மார்பிங் பண்ணிருப்பான் சோ எக்ஸாக்ட் லொக்கேஷன் காட்டாது..” சாஜிக் கூற,

“எக்ஸாக்ட் லொக்கேஷன் தான் காட்டாது பட் கன்ட்ரி காட்டும்..” சஞ்சீவ் முந்திக் கொண்டு பதிலளிக்க, “

“எஸ்..யூ ஆர் கரெக்ட் சஞ்சீவ்..” என்றவன் தொடரும் முன்பே,

“கன்ட்ரி வச்சி ஒண்ணும் பண்ண முடியாது..” என்ற சாஜிக், ‘இன்னைக்கு வந்துட்டு என்னை முந்தப் பார்க்குறீயா..’ என சஞ்சீவை முறைத்தான்…

அதைக் கவனியாத சஞ்சீவ், “இல்ல, அந்த அந்த கன்ட்ரிக்குன்னு ஒரு சர்வர் இருக்கும்…இப்போ அண்ணா சொல்ற கன்ட்ரி ஹைலி செக்யூர்டு கண்டிப்பா அவனால கன்ட்ரி அவுட் பான்ட் மார்பிங் தான் பண்ண முடியும்…”

“அதுக்கு சான்ஸ் இருக்கா..?” சந்த்ரு கேட்க

“அந்த சான்ஸ் ரொம்ப கம்மி தான்..” எனப் பதிலளித்த சஞ்சீவ் யோசிக்கத் துவங்க,

“சார், நாம இப்போ நம்ம ஐபி அட்ரெஸ் மார்பிங் பண்ணுனா அதர் என்ட்டுக்கு தான் மார்பிங் ஆகி போகுமே தவிர்த்து நம்ம கன்ட்ரி சர்வர்ல நம்ம நம்பர் தான ஸ்டோர் ஆகும்..” என்ற சாஜிக்கின் பதிலுக்கு ஆமென சஞ்சீவ் சொல்ல,

“அப்போ அவன் ஐபி லொக்கேஷன் மார்பிங் பண்ணுனாலும் அவனோட ஒரிஜினல் ஐடி தான அந்த சர்வர்ல ஸ்டோர் ஆகும்…அப்போ அந்தக் கன்ட்ரி சர்வர்ல அவன் யாருன்னு தெரிஞ்சுக்கலாமே..” என்றான்.

“கன்ட்ரி சர்வர் ஹேக் பண்ணுறது அவ்வளவு ஈஸி இல்லையே..” என்ற சந்த்ரு தாடியில் ஆள்காட்டி விரல் வைத்து சிந்திக்க,

“கன்ட்ரி சர்வர் தான கஷ்டம் ஆனா அவன் கால் பண்ண அப்ளிக்கேஷன் எதுன்னு கண்டுபிடிச்சா அதை ஹேக் பண்ணிடலாம் தான..” என்றான் சஞ்சீவ்..

“எஸ்…யூ ஆர் கரெக்ட் மேன்…எனக்குத் தெரிஞ்சு இப்போதைக்கு ரொம்ப அதிகமா நெட் கால் பண்ற ஆப் ஹேக் பண்ணி பார்க்கலாம்…லைக் வைபர், டியோ அந்த மாதிரி..”

“அவன் பெரிய ஹேக்கர்னு நீ சொல்ற அப்போ எப்படி அவன் எல்லோரும் யூஸ் பண்ற ஆப் யூஸ் பண்ணிருப்பான்..ஏன் அவனால அதை ஹேக் பண்ணி சேன்ச் பண்ண முடியாதா..?” சாஜிக் கேட்க,

“சாஜி, அவன் அந்த சர்வரை ஹேக் பண்ணி ஏதாச்சும் மாடிபிக்கேஷன் ட்ரை பண்ணுனா அது அந்த கன்ட்ரி செக்யூரிட்டி ப்ராளம் இஷ்யூ கிரியேட் பண்ணும் அவனும் ஈஸியா மாட்டிக்குவான்..சோ கண்டிப்பா அவன் ட்ரை பண்ண மாட்டான்…”என்றான்

“சரி, இப்போ என்ன பண்ணலாம்..?” என சந்த்ரு இறுதியாய் கேட்க,

“ம்…ஃபர்ஸ்ட் அவன் கால் பண்ணுன ட்ராக்கிங் ஐடிலாம் கொடுங்க நான் ட்ரை பண்ணுறேன்..” என்றவன் அங்கிருந்த கணினியில் அமர்ந்து கொண்டு,

“சாஜிக் உங்களுக்கு கமென்ட் கோட் தெரியும் தான..அப்போ வாங்க..” என்றவன் அவனையும் அழைத்துக் கொண்டு மூழ்கி விட்டான்…

சந்த்ரு அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்க்க, இடையில் ஜார்ஜின் குடும்பத்தை அழைத்துக் கொண்டதாய் அந்த வாலிபன் போன் செய்து ஆனந்துக்கு தகவல் கொடுத்திருந்தான்..

“பாஸ்,ஜார்ஜ் சார் பேமிலியை கெஸ்ட் ஹவுஸ் கூட்டி வந்தாச்சு..” என்ற ஆன்ந்த் கொடுத்த தகவலுக்கு தலையாட்டி கணினியின் திரையிலே பார்வை பதித்தான்..

***

இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்த கனிக்கு முன்பே அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர்..

“மம்மி..” என அரசி எழுந்து குதிக்க, அப்போது தான் அனைவரும் திரும்பி பார்த்தனர்..

அரசியிடம் சிரித்தவள், கை கழுவி சாப்பிட அமர்ந்துவிட்டாள்..

சாப்பிடும் போது யாரும் பேசவில்லை, அனைவரும் திருப்தியாய் சாப்பிட்டு முடித்ததும், இதற்காகவே காத்திருந்தது போல,
“பேபி, நாம உன் அம்மா ரூம்க்கு போகலாமா..?” என பரத் கேட்டான்…

பரத் கேட்டதும், கனியின் முகத்தைப் பார்த்தவள், “மம்மி, அங்க போகக் கூடாது சொல்லிருக்காங்க..” என்க,
இப்போது கனி இறுக்கமாய் அமர்ந்திருந்தாளே தவிர எதுவும் சொல்லவில்லை…

“வா கனி..” என்ற பரத்திடம்,

“நீ போய் அவா போட்டோ எடுத்துட்டு வா…நான் அங்க வரல ப்ளீஸ்..” என்றாள் மேஜையில் தலை வைத்து…

நான்கு வருடமாய் வேலை செய்யும் அந்த அம்மா சுவர் ஓரமாய் நிற்க, “வந்து உட்காருங்க ஆன்ட்டி..” என தேவி அழைத்து உட்கார வைத்தது அனுஷிற்கு பிடிக்கவில்லை..

“குடும்ப விஷயம் பேசும் போது..இவங்க எதுக்கு..?” என ஆங்கிலத்தில் அனுஷ் சிடுசிடுக்க,

“அங்களும் நம்ம குடும்பம் தான்..” எனத் திருப்பி பதிலளித்தது தேவி தான்…

இந்த ஒரு வருடத்தில் தேவிக்கு ஆங்கிலத்தை பேசக் கற்று கொடுத்திருந்தான்..

‘நீயே எங்க குடும்பம் இல்ல’ அவள் கொடுத்த பதிலுக்கு திருப்பி கொடுக்க வாய் பரபரத்தாலும் அமைதி காத்தான்..

மேலே இருந்து ஆல்பத்தை எடுத்து வந்த பரத்திற்கு தேவியின் பதில் சின்ன முறுவலைக் கொடுத்தது..இது நாள் வரையிலும் பரத்தும் கனியும் பேசினாலே அவர்கள் குடும்ப விஷயம் என ஒதுங்குபவள் இன்று இப்படி பேசுவதால் எழுந்த சிரிப்பு தான் அது..

ஆல்பத்துடன் கீழே வந்தவன், கனிக்கு அருகே இருந்த சேரில் அமர்ந்து கொண்டு அரசியைத் தூக்கி மடியில் வைத்து கொண்டு ஒவ்வொரு பக்கமாய் திறந்தான்…

“பேபி…இது தான் உன் அம்மா..” என ஒருப்புகைப்படத்தைக் காட்ட,

“மம்மி, நீங்களா என் அம்மா..” எனக் கனியிடம் கேட்டாள் அரசி..

“இது உன் மம்மி…இந்த போட்டோல இருக்காங்களே அவங்க தான் உன் அம்மா கனி மொழி…”
கனிமொழி…

ஹானஸ்ட் க்ரைம் போலீஸ் ஆபிசர் சரவணின் இரட்டை பெண்களில் மூத்தவள்… பரத் பிறந்து ஐந்து வயதில் கடும் காய்ச்சலில் மனைவி மறைந்த பின்னும் ஒற்றை ஆளாய் ஆளாக்கி வளர்த்த தாயுமாணவன் சரவணன்..

கனிஷ்காவிற்கு நேரெதிர் சுபாவம்..பல்லி இருந்தால் அந்த அறைக்கு அன்று முழுவதும் போகவே மாட்டாள்…பிஏ முடித்தவள் சமையல், வீட்டு நிர்வாகம் என அதிலே மனம் செல்ல, மேலே படிக்கமாட்டேன் என்றவளுக்கு வெப்சைட் மூலம் பார்த்த வரன் தான் அனுஷ்…

பிறப்பு வளர்ப்பு அனைத்தும் கனடா தான்..கனடாவில் வாழும் தமிழ் குடும்பம்… ஒற்றை மகன், பார்க்கவும் லட்சணம், பணம் வசதியிலும் ஒரு குறையும் இல்லை எனப் பார்த்து பார்த்து பேசி முடித்து கட்டிக் கொடுத்தார் சரவணன்..

திருமணத்திற்கு முன் வெளிநாட்டிற்கு போகவே பயந்த கனிமொழி திருமணத்திற்கு பின் அனுஷுடன் இருந்த இரண்டே நாளில் கணவனே கண் கண்ட தெய்வம் எனப் பெட்டியைக் கட்டி அவனுடன் சென்றுவிட, கனிஷ்காவும் பரத்தும் அவளைக் கிண்டல் செய்தே ஒரு வழி ஆக்கினர்..

அனுஷிற்கு கனிஷ்காவும் கனிமொழியும் அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரி இருந்த போதிலும் அவனுக்கு கனிமொழி என்றால் மட்டுமே உயிர்.. அவனுக்கு அவளிடம் பிடித்ததே வெட்கமும், பயந்த சுபாவமும் தான்…

கனிமொழியைக் காதல் சொட்டும் விழிகளால் திணறடிப்பவன், ஒரு நாள் ஒரு பொழுது கூட கனிஷ்காவை தவறான வார்த்தையோ பார்வையோ பார்த்ததில்லை…

அவ்வளவு விரும்பினான்… அவர்களது இனிமையான கூடலுக்கு விடையாய் கனிமொழி கர்ப்பம் தரித்திருக்க, ஒன்பது மாதத்தில் அவளை இந்தியா அழைத்து வருவதாய் திட்டமிட்டிருந்தனர்..

முதலில் வரமாட்டேன் எனச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்த கனிமொழி, பின் வருகிறேன் என சரவணனுக்கு அழைத்து சொல்லி விட,
அவளுடனே அனுஷின் பெற்றோரும் இந்தியா வருவதாய் இருந்தது..

அவர்கள் அனைவரும் அனுஷின் வீட்டில் இருந்து கிளம்பி ஏர்போர்ட் வரும் வழியில் தான் அந்த விபத்து…

முன் சீட்டில் இருந்ததால் அனுஷையும் கனிமொழியையும் தவிர அனைவரும் இறந்து போயினர்..

விஷயம் இந்தியாவில் கனிஷ்காவிற்கு மட்டுமே தெரியப்படுத்தியிருந்தார்கள்… அவளும் தந்தையுடன் கனடா செல்ல வேண்டுமென எடுத்த விசா கடைசி நேர வேலையில் அவளை விடுத்து சரவணன் மட்டுமே கிளம்பியிருக்க, தகவலை பரத்திடம் சொன்னவள் அடுத்த ப்ளைட்டில் கனடாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தாள்…

பரத்திடன் கனிமொழிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை மட்டுமே சொல்லி கனடா வந்திருந்தாள் கனிஷ்கா..

அவள் கனடா வந்திறங்கிய அன்றே, கனிமொழியின் உடல் மேலும் மோசமடைய, குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டு அரசியை வெளியெடுத்துவிட்டனர்..

அரசியை முதலில் கைகளில் வாங்கியது கனிஷ்கா தான்…அனுஷ் அபாயக்கட்டத்தை தாண்டி மயக்க நிலையில் இருந்தான்…

அவனது நண்பர்கள் விஷயம் கேள்விப்பட்டு உதவிக்கு வர, இறக்கும் தருணம் தெரிந்தோ என்னவோ கண்விழித்தாள் கனிமொழி..

அங்கிருந்த செவிலியரின் அழைப்புக்கு கனிஷ்கா, பிறந்து ஐந்து நாட்கள் இன்குபேட்டரில் இருந்து வந்த அவளது குழந்தையுடன் உள் நுழைந்தாள்..

வலியில் முகம் கசங்கினாலும் பக்கவாட்டில் கனிஷ்கா படுக்க வைத்த தனது குழந்தையில் தலையை தொட்டு வருடி, ஏதோ சொல்ல வாயெடுத்தவள் சிரித்த முகமாய் குழந்தையின் தலையில் கையிருக்கும் போதே இவ்வுலகைவிட்டு பிரிந்தாள்…

கண் முன்னே தனது சரிபாதி பிரிந்தது…துக்கம் துயரம் நெஞ்சை அடைத்து அழுகை கண்ணை நிறைக்கும் போதே, அனுஷ் கண் விழித்துவிட்டதாய் தகவல் வர, அவனது பெற்றோரின் நல்லடக்க ஊர்வலம் விபத்து நடந்த பதினைந்து நாட்களுக்குப் பின் நடத்தி முடித்தாள் கனிஷ்கா…

அனுஷிடம் முறையாக கையெழுத்து வாங்கி, சரவணன்,கனிமொழியின் பூத உடலுடன் மார்பில் தூங்கி வழியும் அரசியுடனும் இந்தியா வந்திறங்கினாள் கனிஷ்கா..

சொந்தம் பந்தம் அறிந்தோர் தெரிந்தோரென சுற்றம் சூழ வந்தவர்கள் கதறி அழ, சொட்டுக் கண்ணீர் விடாமல் பரத்தும் கனிஷ்காவும் இறுதி சடங்கினை முடித்தனர்..

யாரிடமும் எதுவும் அவர்கள் பேசவில்லை…நடுசாமத்தில் அழும் குழந்தைக்கு உள்ளூர் செவிலியரைத் துணைக்கு வைத்து கனிஷ்கா பார்த்து கொள்ள, அனைத்தும் முடிந்து பல மாதம் கடந்து சிபிஐ ட்ரைனிங் போக நேரும் போது கனிஷ்காவின் மடியில் படுத்து கதறி அழுதான் பரத்…

அவனாவது சோகத்தை பகீர்ந்துவிட்டான்..ஆனால் இன்று இந்த நிமிடம் வரையிலும் திடமாய் நின்று சோகத்தை முழுங்கி நின்ற கனியின் கவனம்,
“இப்போ அம்மா எங்க மாமா..?” என்ற அரசியின் கேள்வியில் நடப்புக்கு வந்தது..

“அம்மா சாமி கிட்ட இருக்காங்க பேபி..” என்ற பரத்திடம்

“அவங்க எதுக்கு மாமா அங்க போனாங்க..”

“அது சாமிக்கு அம்மாவ ரொம்ப பிடிச்சிடுச்சா அதான் சாமி கிட்ட போய்ட்டாங்க..” என தேவி சொல்ல,

“அப்போ அவங்க எப்போ வருவாங்க..?” எனக் கேட்டாள் அடுத்ததாக,

“அது நீ நல்ல புள்ளையா டெய்லி சாமி கும்பிட்டா சாமி உன்கிட்ட அம்மாவ அனுப்பி வச்சிடுவாங்க..” என்றார் அந்த வீட்டின் வேலைக்கார பெண்மணி,

“ஓஹ் ஆயா..அப்போ அதுவரைக்கும் அம்மா வரமாட்டாங்களா..?” எனவும் அவர் அமோதிப்பாய் தலையசைக்க, பரத்தின் மடியில் இருந்து கீழிறங்கி சாமி அறைக்கு ஓடினாள் அரசி…

அவள் ஓடிப் போகவும், திரும்பி அனுஷ் இருந்த இருக்கையைப் பார்க்க, அது காலியாக இருந்தது..

ஆட்டம் தொடரும்…

UKIK – 17

17

ஆனந்துடன் வெளியே வந்த சஞ்சீவ், “இவன் எல்லாம் மனுஷனா..” என வெளிப்படையாக உறும,

“பாஸ அப்படிச் சொல்லாதீங்க..” ஆனந்த் உடனே அவனுக்கு தடையிட்டான்..

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் ஆனந்தின் முகத்திற்கு நேரே சொடக்கிட்டவன், “உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தான்..ம்…” என்க, சிரித்து வண்டியை ஓட்டத் துவங்கினான் ஆனந்த்..

“உங்க கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா ஆனந்த்..?”

“ம்..அதுக்கு முன்ன நான் உங்கள ஒண்ணு கேட்கட்டுமா சார்..”

“சரி ஆனந்த் கேளுங்க…பட் ஒன் கன்டிஸன் என்னை சார்னு கூப்பிடாதீங்க சென்ஷன் ஆகுது..கால் மீ சஞ்சீவ்..” என்றான் பல்லைக் கடித்து,

“ஓகே சஞ்சீவ்..உங்களுக்கு எப்படி ப்ளாக் கோஸ்ட் பத்தி தெரியும்..?”

“எனக்கு அப்படி எவனையும் தெரியாது..” என்றான் எரிச்சலுடன்,

“அப்போ சார் கிட்ட சொன்னது..?”

“அவன் பேரு ப்ளாக் கோஸ்ட்னு எனக்கு தெரியாது ஆனந்த்..நான் அந்த சர்வர ஹேக் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தப்போ என்னை ஒருத்தன் ட்ராக் பண்ணிட்டான்…என்னோட சர்வர் அவன் கன்ட்ரோல் போயிட்டு நான் போலீஸ்னு நினைச்சு பயந்து என்னோட ஹார்ட் டிஸ்க் அப்புறம் சில ஃபைல்ஸ் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்…டூ டேஸ் அப்புறம் தான் தெரிஞ்சது என்னைத் தேடி அந்த ப்ளாட்டுக்கு யார் யாரோ ரெளடிங்க மாதிரி வந்துட்டு போனதா..?”

“அப்புறம்..?”

“அப்புறம் என்ன அங்க இருந்து இங்க ஓடி வந்துட்டேன்..”

“சரி..இப்போ பாஸ் சொன்னதும் எப்படி இவன் தான் அவன்னு கண்டுபிடிச்ச..”

“அதான் உன் பாஸ் சொன்னாரே அன்டர் மார்க்கெட்னு..” எனவும் சரியென சிரித்தான் ஆனந்த்..

“சரி ஆனந்த் நான் உன் கிட்ட ஒன்னு கேட்கட்டுமா..?”

“ம்..”

“எதுக்கு உன் பாஸ் பணம் பணம்னு அலையுறாரே யாருக்கு இப்படி சேர்க்குறாராம்..?” எனக் கேட்டவன் கோபமாய் தலையைக் கோத,

“சஞ்சீவ், இஃப் சப்போஸ் நீ ப்ளாக் கிட்ட மாட்டாம அந்த சர்வரை ஹேக் பண்ணிருந்தா? என்ன ஆகிருக்கும்..?” என்க,

“இப்போ எதுக்கு அதைக் கேட்க..?”

“சொல்லு தெரிஞ்சுக்கலாம்னு தான்..”

“என்ன ஆகிருக்கும்..? பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டிருக்கும் அம்பாணி வீட்டுக்கு மருமகனா கூட போயிருப்பேன்..” என்றவனின் பதிலில் சிரித்த ஆனந்த்,

“அப்போ நீ உன் அப்பா, அம்மா, தங்கச்சி இவங்களுக்காக பணம் தேடல உனக்காக மட்டும் தான் தேடிருக்க அப்படி தானே சஞ்சீவ்..?”

ஆனந்தின் கேள்வியின் அமைதியானவன், “அது…”

“உன் குடும்பத்தோட நீ இருந்தும் இவ்ளோ ரிஸ்க் எடுத்து ப்ளாக் சர்வரை தொட நினைச்சிருக்கன்னா.. உனக்கு எல்லாத்தையும் விட அந்த நேரத்துக்கு பணம் தான பெருசா இருந்தது…”

“நோ…நான் தான் பிரச்சனை’னு தெரிஞ்சு ஒதுங்கிட்டனே..”

“உனக்கு பிரச்சனைனு தெரிஞ்சு நீ ஒதுங்கிருக்க சஞ்சீவ்…”

“ஆமா, எப்படியோ ஒதுங்கிட்டம்ல…ஆனா உன் பாஸ் என் குடும்பத்தை கொன்னு அந்தப் பணத்தை அடையனும்னு நினைக்கிறது கரெக்ட்டா..?” என்க,

“என் பாஸ் எப்போ உன் குடும்பத்தை கொல்லுவேன்னு சொன்னாரு…நீ அவர் பேச்சைக் கேட்கலன்னா தானே..? இதுல எங்க இருந்து பணம் வந்தது..?” என ஆனந்த் கேட்க, இப்போது கோபத்தில் இருந்தவனது மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது..

வரவேண்டிய இடத்தில் வண்டியை நிறுத்திய ஆனந்த், “ரொம்ப குழப்பிக்காத சஞ்சீவ்…கம் ஆன்…உனக்கு உன் பேமிலி சப்போர்ட் இருக்கும் போதே தப்பு பண்ணிருக்க அவருக்கு பேமிலி விட பணம் தான் எல்லாத்தையும் கொடுத்திருக்கு சோ அவர் தப்பு பண்ணுறதா உனக்கு தோணினா அந்தத் தப்பு அவரோடது இல்ல..” என்றவனுடன் ஒரு பெருமூச்சை விடுத்து இணைந்தான் சஞ்சீவ்..

***

கனியின் வீட்டு வாசலில் கார் வந்து நிற்க அதிலிருந்து சின்னதாய் ஒரு பேக்குடன் வந்திறங்கினான் அனுஷ்..

வீட்டின் முற்றத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த அரசி அனுஷை பார்த்துவிட்டு வீட்டுக்குள் ஓட, வந்திறங்கிய கேபின் டிரைவருக்கு பணத்தைக் கொடுத்தவன் வீட்டுக்குள் வந்தான்..

பரத், கால் இடைவெளியில் குழந்தையைப் படுக்க வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்க, தேவி சேரில் அமர்ந்து கனியுடன் பேசிக் கொண்டிருந்தாள்..

வெளியில் இருந்து ஓடி வந்த அரசி பரத்தின் அருகே சென்று மெத்தையில் முகம் புதைத்துக் கொண்டு,
“அப்பா வந்தாச்சு..” என்றாள் முகத்தை நிமிர்த்தாமல்..

அரசி சொன்னதும் மூவரும் வெளியே வந்து அவனை வரவேற்க, “ஹாய் டார்லிங், ஹாய் சிஸ்டர், ஹாய் டா மாப்பிள்ளை..” என அனைவரையும் பார்த்தவன், கனிக்கு பின்னால் நிற்கும் மகளை,

“பேபி..” என்றான் இரு கைகளையும் நீட்டி..

கனி, “போ பேபி…” எனவும், ஒருமுறை தலையை நீட்டி எட்டிப் பார்த்தவள் மறுபடியும் மறைந்து கொள்ள,

சட்டென அனுஷிற்கு அவள் தான் நினைவுக்கு வந்தாள்…அவளை மறக்க முடியுமா அவனால்? நினைவுகளை விரட்டியவன், “பேபி வளர்ந்துட்டா..” எனவும்..

“ம்ம்..” என ஆமோதித்த கனிஷ்கா..

“என்ன மாம்ஸ் வெளில நின்னே பேசிட்டு போறீங்களா..உள்ள வாங்க..” என்ற அழைக்க, உள்ளே வந்தவன்..

“என்ன டார்லிங்…பேன்ட் ஷர்ட் தானா எப்பவும்..?” எனக் கேட்டுக் கொண்டே பரத்தின் கைகளில் இருக்கும் குழந்தையை கொஞ்சினான்..

“நம்ம தொழில் அப்படி..என்ன பண்ணுறது மாம்ஸ்..” என்றவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, தனது அறையில் இருந்து அனைத்து பொம்மைகளையும் எடுத்து வந்து தந்தையின் காலுக்கு அடியில் கடைப் பரப்பினாள் அரசி..

“ப்பா…இதப் பாருங்க..”

“ப்பா..இது மாமா வாங்கினது…”

“ப்பா..இது பொம்மை சிரிக்கும் பாருங்க..”

“ப்பா..இது ரைம்ஸ் சொல்லுது…” என்றவள் அந்த பொம்மையுடனே சேர்ந்து பாட்டு பாடிக் காட்ட, அனுஷைத் தவிர மற்றவருக்குப் புரிந்தது,

அரசி தனது அப்பாவை எவ்வளவு தேடியிருக்கிறாள் என..

தன்னைப் பேச விடாமல் தொணதொணக்கும் அரசியின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்த அனுஷ், போ போய் ரூம்ல எல்லாம் வச்சிட்டு வா எனச் சொல்லி,

“டார்லிங்..பேபி கிட்ட எல்லாம் சொல்லியாச்சா..” எனக் கேட்க,

“இல்லையென” மறுப்பாய் தலையசைத்தாள் கனிஷ்கா..

ஏன்? எனக் கேட்க வாய் திறந்தவன், அரசி ஓடி வருவதைக் கண்டு வாயை மூடிக் கொண்டான்..
“மச்சான் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்..” வீட்டாளாய் பரத் முன்னே வர,

“அப்பா, நீங்க என்கூடவே இருங்க..” என அவனின் கைகளைப் பிடித்து கொண்டாள் அரசி..

குழந்தையின் பாசம் நெகிழ வைப்பதற்கு பதில், எரிச்சல் கொடுப்பதாய் இருக்க, அவன் வாயைத் திறக்கும் முன்பே, “பேபி, நீ மம்மி கூட வா நாம பார்க் போகலாம்…அப்பா தூங்கட்டும்..” என்க..

பார்க் என்றதும் தந்தையை மறந்தவள் கனியிடம் ஒன்றிவிட்டாள்…அரசியை அழைத்து கொண்டு கனி பார்க்கிற்கு சென்றுவிட, மேலே பரத் காட்டிய அறையில் தஞ்சம் புகுந்தான் அனுஷ்..

அறைக்குள் வந்ததில் இருந்தே அவனுக்கு மூச்சு முட்டியது, ஏதேதோ நினைவுகள் அனைத்திலும் அவளது நினைவுகள் ஆட்டிப் படைக்க, உண்டு முடித்து அறைக்குள்ளே இருந்துவிட்டான்..

மாலை நேரத்தில் வெளியே வந்தவன் கனியைப் பற்றி கேட்க, “அவா டியூட்டி போயிட்டா மச்சான்..” என்றான் பரத்..

“ம்…பேபி எங்க..?” என்றவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே தேவியின் கைப்பிடித்து ஆடிக் கொண்டே வந்தாள் அரசி..

“பேபி, நீ மாமா கிட்ட வா..” அழைத்தவன் அரசியைத் தனது கைவளைவிற்குள் வைத்து கொள்ள,

“தேவி, ஆப்ரேஷன் பண்ணுன உடம்பு..ப்ளீஸ் போய் ரெஸ்ட் எடு..இங்க நாங்க பார்த்துக்கிறோம்..” என்க

“அய்யோ எனக்கு ஒண்ணுமில்லங்க..” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களது புதல்வன் அழத் தொடங்கினான்..

திரும்பி ஓடத் துணிந்த தேவியின் கைப் பிடித்து இழுத்து தடுக்க, அவனது கைப்பட்டதும் அன்னிச்சையாய் ஒதுங்கி அரண்டு நின்றாள் தேவி…

தான் தொட்டதற்கு பயந்து வெளிப்படையாக நடுங்குபவளிடம், “ஈஸி ஈஸி..நான் போய் டிம்மிய தூக்குறேன் நீ ஓடாத..” என்றவன் அனுஷின் பார்வை தங்கள் மீது வித்தியாசமாகப் படிவதை கண்டுகொள்ளாமல் அறைக்குச்
சென்று மகனைத் தூக்கி வந்தான்..

இவர்கள் சம்பாஷனை நடந்து கொண்டிருக்கும் போதே, அரசி அனுஷின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்…

“பேபி, சாப்பிட்டியா..?” எனவும்,

“ம்..சாப்பிட்டேன் ப்பா..” என்றவள் கையில் வைத்திருந்த பொம்மைக்கு தலைவாற, அமைதியாய் அவளைப் பார்த்து கொண்டு அமர்ந்துவிட்டவனின் மனதில் அவளது நினைவுகளே!

“மணி, ஸ்தமதி கேஸ் முடிஞ்சுதா..?” கோர்ட்டில் பார்த்த கான்ஸ்டெபிளிடம் கனி விசாரிக்க,

“மேடம், குற்றவாளிய நாங்க நெருங்கிட்டோம்..”

“ஓஹ்..எப்படி மணி கண்டுபிடிச்சீங்க..” நக்கல் வழியும் குரலில் அவள் கேட்க,

“அது வந்து மேடம்..”

“எது வந்து மேடம்..இந்த தடவ எந்த அப்பாவி சிக்குனானோ..” என வெளிப்படையாக மணிக்கு பக்கத்தில் நின்ற ஏசிக்கு கேட்குமாறு முனங்கியவள் வெளியேறிவிட்டாள்..

அவளது நக்கலில் மணியை முறைத்த ஏசி, “யோவ் அந்தப் பொம்பளைக் கேட்டா எல்லாத்தையும் சொல்லனுமா யா..?” சிடுசிடுப்புடன் அவர் கேட்கவும் கப்சிபென வாயை மூடிக் கொண்டு ஒதுங்கி நின்றான் மணி..

காரில் ஏறிய கனி, “நாராயணன் வண்டியை எடுங்க..” எனச் சொல்லி, பரத்திற்கு அழைப்பு விடுக்க, அப்போது பரத்துடன் அனுஷுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..

“மச்சான், அக்கா தான் கூப்பிடுறா..” மொபைலைப் பார்த்து கொண்டே அனுஷிடம் சொன்னவன்,

“சொல்லு கனி..” என்க,

“டேய், சிபிஐ’க்கு உங்களால ட்ரான்ஸ்பர் பண்ண முடியலையா..?” என்றாள்.

“எதை..?”

“ஒஹ் அதுக்குள்ள மறந்து போச்சா..? அதான் ஜெஸிஎன் கிட்ட ஸ்தமதி கேஸ் பத்தி பேசச் சொன்னேனே..?” என்றதும்,

“ஹே, கோர்ட்ல இன்னும் போலீஸ்க்கு பதினைஞ்சு நாள் டைம் கொடுத்திருக்காங்க..அதுவரைக்கும் எங்களுக்கு கேஸ் வராது கனி..புரிஞ்சிக்கோ..”

“ஓகே..அது புரியுது..ஆனா இதுல அவர் நினைச்சா பெர்சனலா இன்வால்வ் ஆகலாம் தான..” எனவும்,

“ஜெஸிஎன் அப்படி எல்லாம் கேஸ் எடுக்கிற ஆளா..?”எனத் திருப்பி கேட்டான் பரத்,

“நீ அவன் கிட்ட இதைப்பத்தி பேசுனியா..?”

“ம்..என்னால அவர பார்க்க முடியல..சோ அவரோட அஸிஸ்ட் கிட்டச் சொல்லி பேச சொன்னேன்..”

“ம்ம்..என்ன சொன்னான்..?”

“ஏய் கொஞ்சமாச்சும் மரியாத கொடு டி..அவர் சிபிஐக்கு வராம எடுக்க முடியாது சொல்லிட்டார்..” எனவும்,

“பார்த்தியா..இவனுக்கெல்லாம் என்ன மரியாத..” என்றவள் தொடர்ந்து,

“பரத், அக்யூஸ்ட் ட்ராக் பண்ண முடியலன்னு ஏதோ ஒருத்தன கேஸ்ல லாக் பண்ண பார்க்குறாங்க டா..”

கனியைப் பற்றி தெரிந்தவன், “உன் கேஸ் இல்லல..சோ போய் உன் வேலைய மட்டும் பாரு..இது உனக்குத் தேவையில்ல” என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்..

அழைப்பைத் துண்டித்த பரத்தை முறைக்க முடியாமல், தனது மொபைலை வெறித்தவள், கண் மூடிக் கொண்டாள்..

“என்னவாம் பரத்..?”

“அது ஒரு கேஸ் மச்சான்..”

“அப்போ ஜெசிஎன்..?”

“அது என்னோட ஹையர் அபிஷியல் மச்சான்..அப்புறம் அங்க பிஸினஸ் எப்படி போகுது..?” என்றவர்களது பேச்சு அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது..

***

சஞ்சீவையும் ஆனந்தையும் அனுப்பி வைத்த சந்த்ரு உடைக் கலைந்து வேறு உடைக்கு மாறியவன், தனது பிரத்யேக அறைக்குள் நுழைந்தான்..

அந்த அறை முழுவதும் கண்ணாடியால் பதிக்கப்பட்டிருந்தது, சாதாரணமாக யார் வந்தாலும், எத்திக்கிலும் தங்களது பிம்பம் தெரிவதால் குழம்பி போவார்கள்..

ஒவ்வொரு கண்ணாடிகளுக்கும் பின்னர் எறும்பை விடச் சின்னதாக கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது..

ஹெக்ஸகான் சேப்பில் இருக்கும் அந்த அறையின் தரைக் கூட கண்ணாடிப் பதிக்கப்பட்டிருக்க, சரியாக அதன் மத்தியில் அவன் நிற்க, இப்போது அவனது முன், கைரேகையும், எட்டிலக்க கடவுச்சொல்லையும் கேட்டு கண்ணாடி தட்டி அவனது முன்னே நீண்டது.

கைரேகையை முதலில் பதித்தவன் அவனது எட்டிலக்க கடவுச் சொல்லைக் கொடுக்க, இப்போது அந்த ஹெக்ஸகான் அறையில் ஒரு கதவு கொஞ்சம் திறந்தது..

ஒரு ஆள் நுழையும் அளவு மட்டுமே இடைவெளி அது, அதற்கு முன்னால் வந்து நின்றவன், கதவின் கைபிடியில் இருந்த கீபேடில் நான்கு இலக்க வார்த்தைகளைக் கொடுத்து உள்நுழைந்தான்..

‘சவுன்ட் ப்ரூவ்’ அறை, அந்த அறையின் ஒரு மூலையில் பொருத்தப்பட்டிருந்த டிவி இவன் உள்நுழைந்ததும் ஆன் ஆகி, அவனது பெட்ரூம், அலுவலக அறை மற்றும் ஹாலில் நடப்பவற்றைக் காட்டிக் கொண்டிருந்தது..

அந்த டிவியைத் தவிர்த்து அறை முழுவதும், நீயூஸ் பேப்பராய் ஓட்டி வைக்கப்பட்டிருக்க, நடுவில் போடப்பட்டிருந்த மேஜையில் இரண்டு கணினியைத் தவிர்த்து மற்ற இடங்களில் கோப்புகளாய் இறைந்து கிடந்தன..

மாஸ்டர் சேரும், ஒரு குஷன் சேரையும் தவிர்த்து ஒரு சிறிய கப்போர்ட் குழுவதும் கையடக்க கோப்புகள்..

மூலையில் ஒரு பெரிய பச்சை நிறப் பலகை மாட்டி வைக்கப்பட்டிருக்க அதில் எதையோ கிறுக்கி வைத்திருந்தான் சந்த்ரு…உள் நுழைந்தவன் அந்த சேரில் அமர்ந்து கணினியில் எதையோ தேடிப் பார்க்க,
ஈஸ்வரின் எண்ணுக்கு அழைப்பு வந்தது..

சந்த்ரு எதிர்பார்த்த அழைப்பு அது, “ஹாய் மை லவ்..” எப்போதும் போனை எடுத்ததும் அமைதியாய் இருப்பவன் இன்று ஆர்ப்பாட்டமாய் பேசுகிறான்…

“ரொம்ப சந்தோஷமா இருக்க போல..?” ப்ளாக்கின் குரல்,

“பின்ன, நான் உன்னையே நினைச்சு உனக்காகவே யோசிக்கும் போது நீ கால் பண்ணுனா சந்தோஷமா தான இருக்கும்…”

“என்னோட இத்தன வருஷத்துல, என்னை நினைச்சு சந்தோஷப்பட்டவன் நீயா தான் இருப்ப..”

“பின்ன, நானும் இத்தன வருஷத்துல ஒருத்தன ரசிச்சு, வெயிட் பண்ணி கொல்லப் போறேன்னா அது நீ தான..”

“ஹா ஹா..ப்ளடி **** நீ என்னைக் கொல்லுறதா..வாட் எ ஜோக் மை மேன்..”

“ஜோக்…ம்…சரி உன்னைக் கொல்லும் போது அதைப் பார்த்துக்கலாம்..இப்போ சொல்லு எப்போ என்னைப் பார்க்க வர..?” எனச் சந்த்ரு கேட்டு முடிக்கவும் அவனது வீட்டு ஹாலில் ஒருவன் நுழைந்தான்..

ஆட்டம் தொடரும்..

UKIK – 16

16

ஜார்ஜின் அழைப்பை வைத்த ப்ளாக் கோஸ்ட், தனிச்சையாக லேப்டாப்பில் மூழ்கியிருக்க ஈஸ்வரின் எண் இருக்கும் இடத்தை பச்சை நிற விளக்கெறிந்து அவனுக்கு எடுத்து காட்டியது..

பல யோசனைகளுக்கு இடையிலே சந்த்ருவின் லொக்கேஷனை ட்ராக் செய்திருந்தவனின் கால்கள் சிங்காரச் சென்னையில் இன்னும் மூன்று மணி நேரங்களில் கால் பதிக்கத் தயாராகியது..

ஜார்ஜின் தயக்கமான பேச்சினை சில மணி நேரம் புருவ மத்தியில் முடிச்சுகள் விழ யோசித்த ப்ளாக் கோஸ்ட், பின் ஒரு நம்பருக்கு அழைத்து,

“கில் ஜார்ஜ்..” மேற்கோடிட்டு சொன்னவன் அழைப்பைத் துண்டித்தான்..

பல வருடங்கள் கழித்து வெளியுலகைப் பார்ப்பது போல் இருந்தது அவனுக்கு, பம்பாயில் இறங்கி சென்னை நோக்கித் தனது பயணத்தை தொடர்ந்தவனுக்கு, இந்தியா இவ்வளவு வளர்ந்துவிட்டதா என்ற யோசனையின் போதும் கூட, கண்களில் பட்ட டாஸ்மார்க் கடைகள் இதழில் சிரிப்பைக் கொடுத்தது..

இரண்டு பைகள் நிரம்பிய ட்ராலியை ஏர்போர்ட் முன்பு வரைத் தள்ளி வந்தவன், சற்று தூரம் தள்ளி நிற்கும் கால்டாக்ஸி பக்கம் தனது நடையை எட்டிப் போட்டு அதில் ஏறிக் கொண்டான்..

தமிழகத்திற்கு வந்ததில் இருந்து ப்ளாக்கின் நினைவு முழுவதும் சந்த்ருவே, மீனம்பாக்கத்தில் இருந்து அடையார் பக்கம் வந்தவன் அங்கிருந்த தி ராஜா பேலஸில் தனது ரூமை புக் செய்தான்..

அறைக்குள் வந்து பெட்டியை வைத்து குளித்து வந்தவன், தனது எண்ணில் இருந்து ஈஸ்வரின் எண்ணுக்கு அழைப்பு விடுக்க அது அணைத்து வைக்கப் பட்டிருப்பதாய் தனது பதிலைச் சொல்லியது..

***

சந்த்ரு தனது வீட்டின் வாயிலில் காரை நிறுத்த, கொஞ்சம் தள்ளி தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் சஞ்சீவும் மாலினியும் விளையாடிக் கொண்டிருக்க, கொஞ்சம் தள்ளியிருந்த இருக்கையில் சாந்தியும் ராஜ மூர்த்தியும் அமர்ந்து சிரித்து கொண்டிருந்தனர்..

சில நொடிகள் நின்று கவனித்தவனுக்கு அவர்களின் சிரிப்பு மனநிறைவைக் கொடுப்பதற்கு பதில் மனப் பாரத்தையே கொடுக்க, அழுத்தமான காலடிகளுடன் வீட்டுக்குள் நுழைந்தான்..

சந்த்ருவின் சூ சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க, மாலினி மட்டும் எழுந்து கூச்சலுடன், “அண்ணா வந்தாச்சு..” என அவனை நோக்கி ஓடி வந்தாள்..

மாலினியின் கூச்சல் அவனுக்கு புதுவிதமாய் இருக்க, முன்னறையில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தவன் டீபாயில் காலை வைத்து கொண்டான்..

வெளியில் இருந்து மாலினி ஓடி வருவதைக் கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தவன், “காபி கொண்டு வாங்க..” என்றான் பக்கத்தில் நின்ற வேலையாளிடம்,

அதற்குள் சந்த்ருவின் பக்கம் வந்துவிட்ட மாலினி, அவன் கால் வைத்திருந்த டீபாயில் அமர, சந்த்ரு காலை எடுத்துக் கொண்டான்…

“அய்யோ அண்ணா..சும்மா கால வைங்க..” எனவும் எதுவும் பேசாமல் அவளை மட்டுமே பார்த்தான்..

அதற்குள் அவர்கள் மூவரும் வீட்டுக்குள் வந்துவிட, “எரும கீழ இறங்கி உட்காரு டீ..” என்றான் சஞ்சீவ்.

“யாரு டா எருமை நீ தான்..?” திருப்பி திட்டிய மாலினியை முறைத்த சாந்தி,

“அண்ணன அப்படிலாம் பேசக் கூடாது மாலு..” எனவும்

“இவன் ஒண்ணும் என் அண்ணன் கிடையாது இவன் தான் என் அண்ணன்..” என்ற மாலினியின் ஒருமையான
அழைப்பில் வியப்பில் ஆழ்ந்த சந்த்ரு முகத்தில் எதுவும் காட்டாமல் அப்படியே இருக்க,

“அவன் இவன் சொன்ன பல்லத் தட்டி கைல கொடுத்திருவேன்..” எனச் சாந்தி சொல்லி முடிக்கும் முன்பே சந்த்ருவின் கரங்களுக்கு காபி வந்திருந்தது..

“அண்ணா…” என அழைக்க, நிலையாய் அவளைப் பார்த்து நின்றவன் என்னவென கேட்கவில்லை அதையும் அவள் கண்டுகொள்ளவில்லை..

முன்னே குனிந்து காபி குடித்துக் கொண்டிருந்தவனின் கைகளைச் சுரண்டியதும், ஒற்றைப் புருவத்தை ஏற்றியிறக்க,

“நான் இன்னைக்கு அவல் உப்புமா செஞ்சிருக்கேன்.. எடுத்துட்டு வரேன் கொஞ்சம் சாப்பிடுங்க…” தகவலாய் சொன்னவள் அவன் பதில் எதிர்பாராமல் ஓட,

“வேணாம் அண்ணா..சாப்பிடாதீங்க..” எனக் கடனே என்று காபி அருந்திக்கொண்டிருந்த சந்த்ருவிடம் சொன்னான் சஞ்சீவ்..

இறுதி சிப்பை உறிஞ்சி அருந்தியவன் அறைக்குள் செல்ல படிகளில் ஏற, ஒரு குட்டித் தட்டில் உப்புமா வைத்து கொண்டு வந்தவள், அவன் மேலேறுவதைப் பார்த்து அப்படியே திரும்பி சென்று வைத்துவிட்டாள்..

சஞ்சீவைத் தவிர அனைவருமே பெரூமூச்சை விட, “சாந்தி, அவன் நம்ம கிட்ட பேசவே மாட்டான்..” சந்த்ருவின் அறை வாயிலைப் பார்த்து கொண்டே ராஜ மூர்த்தி சொல்ல,

“நீங்க பார்த்த வேலைக்கு அவன் நம்மல வீட்டுக்குள்ள விட்டதே பெருசு…” சாந்தி குரல் உயர்த்தாமல் தணிவாய் சொல்ல,

“நான் அண்ணன் இடத்துல இருந்தா உங்கள இந்தளவுக்கு கூட விட்டிருக்க மாட்டேன் டாட்..” என்றான் சஞ்சீவ் குற்றம் சுமத்தும் பார்வை பார்த்து..

இருவரிடமும் ஆமோதிப்பாய் தலையசைத்தவர் அறைக்குள் சென்று மறைந்துவிட்டார்..

மேலே அறைக்குள் வந்த சந்த்ரு, ஆனந்துக்கு அழைப்புவிடுத்து,

“ஆன்ந்த் ஹேக்கர் வேணும்னு சொன்னனே..” என்க,

“சார் நான் உங்க ரூம் வரட்டுமா..?”

“ம்…வாங்க..” என சந்த்ரு அனுமதியளித்த ஐந்தாவது நிமிடத்தில் கையடக்க போனுடன் வந்து சேர்ந்தான் ஆனந்த்..

சந்த்ருவின் கைகளுக்கு போனைக் கொடுத்தவன் அமைதியாய் கையைப் பின்னால் கட்டி நின்று கொள்ள,

அதில் குறித்து வைத்திருந்தவற்றில் தனது பார்வையை ஓட்டியவன், “இது உண்மையா…?” எனக் கேட்க,

“எஸ் சார்..” என்றவன் அமைதியாகிவிட்டான்..

“உட்காருங்க ஆனந்த்..” தனக்கு எதிரேயிருந்த இருக்கையைக் காட்டிக் கூறி, தனசேகருக்கு அழைத்து சஞ்சீவை
தனது அறைக்கு வரச் சொல்லுமாறு சொன்னான்..

“ஆனந்த் இந்தத் தகவல் உண்ம தான..?” சந்த்ரு அவன் கொடுத்த மொபைலில் தனது பார்வையைப் பதித்து கொண்டே கேட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தான் சஞ்சீவ்..

“உட்காரு..” ஆனந்துக்கு அருகே இருந்த இருக்கையில் அமரச் சொன்ன சந்த்ரு..

“ஆனந்த், டோர் லாக் பண்ணிடுங்க..” என்றான்..

‘என்னங்கடா இது’ கேள்வியை பார்வையில் தாங்கியவன், சந்த்ரு பார்த்து கொண்டிருந்த மொபைலைப் பார்க்க முயன்று கொண்டிருந்தான்..

“சஞ்சீவ்..” சந்த்ருவின் அழைப்பில் தலைநிமிர்ந்து பார்க்க,

“சாரி சாரி, நேநோ..அம் ஐ ரைட்…?” இவனது கேள்விக்கு திகைத்து விழித்தான் சஞ்சீவ்…

“என்ன நேநோ இவ்வளவு அமைதி…சாரி சாரி என்ன ப்ளடி ப்ளட் இவ்வளவு அமைதி..”என்ற அடுத்தக் கேள்வியின் சஞ்சீவின் இதயம் எகிறித் துடித்தது, இருந்தும் அதை மறைத்து கொண்டவன்,

“என்ன அண்ணா..?” எனக் கேட்க,

“சுத்தி வளைச்சு பேச விரும்பல சஞ்சீவ்..எனக்கு உன்னால சில காரியம் ஆகணும்..” என்றான் தலைக்கு பின்னே கைகளைக் கோர்த்து,

“என்னால என்னப் பண்ண முடியும்..” திக்கித் திணறி அவன் கேட்டதும் சத்தமாய் சிரித்தவன்,

“வேர்ல்ட் மோஸ்ட் வான்ட்டட் ஹேக்கர்..அதுவும் ரெண்டு பேருல வெப்சட்ல விளையாடுற உன்னால எனக்கு எதுவும் பண்ண முடியாதா..?” என்றவன் நிறுத்தி,

“முடியுமா முடியாதா…? சாரி நோ சாய்ஸ் ஃபார் யூ…உன்னால முடியனும்..” என்றான் திடமாய்..

சில நிமிடங்கள் யோசித்த சஞ்சீவ், “எப்படி என்னை கண்டுப்பிடிச்சீங்க..” என்பதற்கு சிரித்த சந்த்ரு..

“அது இப்போ முக்கியமில்ல..ஒரு பதினைஞ்சு நாள் நீ என்கூட இருக்க வேண்டி வரும்…ஃபர்ஸ்ட் உனக்கு என்னென்ன வேணும்னு ஆனந்த்கிட்ட சொல்லு அவன் உனக்கு வாங்கி தருவான்…”

“ஆனந்த், இவனைக் கூட்டிப் போய் சாஜிக் கிட்ட இன்ட்ரோ கொடு..” என்றான் நிதானமாய்..

“அண்ணா ரிஸ்க்கி ஜாப்’ஆ..? பிகாஸ் எனக்கு இப்போ இருக்கிற சிட்டிவேஷன்ல என்னால இதைப் பண்ண முடியுமா தெரியல..” கேள்வியாய் கேட்பவனிடம் மறுப்பாய் தலையசைத்தவன்,

“சஞ்சீவ், உனக்கு அன்டர் மார்கெட் தெரியுமா..?”

“ஏதோ கொஞ்சம் தெரியும்..நான் கூட அதுல பிப்ட்டி தவுஸன்ட் போட்டு ஏமாந்திருக்கேன்” என்றவனிடம்..

“அப்போ அந்த சைட் அட்மின் தெரியுமா..?” கூரிய விழிகளுடன் அவன் கேட்க,

“நோ அண்ணா, அவர பார்க்க ட்ரை பண்ணிருக்கேன் அன்ட் ஆல்சோ ட்ராக் பண்ண…முடியல..” என்றான்..

“ம்…அன்டர் மார்க்கெட்..நம்மளுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா கள்ளச்சந்தை…நம்ம வேர்ல்டுல இருக்கிற மோஸ்ட் டாப் ப்ரான்ட் எல்லாமே இவங்க காப்பி பண்ணி அது போலவே தயாரிப்பு இருக்கும்…அதை நம்ம கிட்ட சேல் பண்ணிடுவாங்க…”

“ஃபார் எகாஸ்ம்பில், இப்போ இந்த ஆப்பிள் வாட்ச் இருக்குல்ல இது மாதிரியே இவங்களும் ப்ரொடக்ஷன் பண்ணுவாங்க..ஆனா அது சாதா வாட்ச் தான் ஸ்டிக்கர் மட்டும் ஆப்பிள் மாதிரி இருக்கும்..இது நம்ம நேர்ல போய் சேல்ஸ் பண்ண முடியாது ஆனா ஆன்லைன்ல சேல்ஸ் பண்ணலாம்…” என்ற சந்த்ரு நிறுத்த,

“இதை நாம என்ன பண்ண போறோம்..?”

“இதை நாம ஒண்ணும் பண்ண முடியாது..இது ஒரு செயின் மாதிரி போயிட்டே தான் இருக்கும் ஆனா இதுக்கு பின்னால இதே மாதிரி போதை மருந்து சப்ளை கமிஷன் ஆல்சோ இருக்கு…போன வாரம் ஒரு நியூஸ் பார்த்தியா சஞ்சீவ்..?”

“என்ன நியூஸ்..?”

“அதான்..**** ஹோட்டல்ஸ்க்கு பக்கத்துல இருக்கிற இடத்துல போதை மருந்து கிடைச்சதா..?”

“ம்ம்…ஆக்சுவலி..இது ஒரு பெரிய வியாபாரம் எப்படின்னா அப்போ சொன்னா டூப்லிகெட் புரொடெக்சன்ல இருந்து இப்போ சொன்ன போதை மருந்து வரைக்கும் எல்லாத்துக்குமே மூல இடம் ஒண்ணு தான்…அந்த அட்மின் யாருன்னு நமக்குத் தெரியாது ஆனா அது எல்லாம் நம்ம கைக்கு ரொம்ப வேணாம் அந்த போதை மருந்து பதுக்கும் இடம் மட்டும் நம்ம கைக்கு வந்தா போதும்..” என்றவன் நிறுத்த

“அண்ணா..இது ரொம்ப ரிஸ்க்..அவன் என்னைவிட வெல் நாலேட்ஜ்டு..வேணாம்..” ப்ளாக் கோஸ்டை மனதில் வைத்து சஞ்சீவ் சொல்ல,

“அப்படியா என்ன பண்ணலாம்..” என்றான் மோவாயில் கையை வைத்து..

“இப்போதைக்கு அவனுக்கு உங்கள யாருன்னு தெரியாது சோ அப்படியே விடுங்க..வேண்டாம்…”

“இன்னைக்கு மிட் நைட் என்னைப் பார்க்க மிஸ்டர்.ப்ளாக் இங்க வரான்…” என்றான் தண்ணீரை அருந்திக்
கொண்டே,

“எப்படி..?” என்றக் கேள்வியை சஞ்சீவ் கேட்க,

“பாஸ், லொக்கேஷன் ஆன் பண்ணி, அவரோட மொபைல் ட்ராக் பண்ணவும் அலோ பண்ணுனார்..சோ அவன் எப்போ வேணும்னாலும் இந்தியா வரலாம்…எந்த நேரத்துலையும் அவன் சார பார்க்கலாம்..” என்ற ஆனந்த் கூறிக் கொண்டிருக்கும் போதே ஈஸ்வரின் எண்ணை சந்த்ரு ஆன் செய்து இருக்கையில் சாய்ந்து அமர..

“அண்ணா, நமக்கு எதுக்கு இந்த வேலை..?” என்றான் சஞ்சீவ்..

“இப்போ முடிவா என்ன சொல்ல வர..?”

“என்னால இது முடியாது..”

“முடியனும்..”

“இப்போ இதைப் பண்ணி என்ன சாதிக்க போறோம்..?”

“கோடி கோடியா பணம்.. யோசிச்சு பாரு..”

“இப்போ மாலினி கல்யாணம் அது இதுன்னு இருக்கு அண்ணா..இந்த நேரம் நாம இதப் பண்ணி மாட்டிக்கிட்டா..?”

“மாலினிக்கு கல்யாணம் ஆனா என்ன ஆகலன்னா எனக்கு என்ன..?” சந்த்ருவின் பேச்சில் கோபம் கொண்ட சஞ்சீவ்,

“ஓஹ்..அப்போ நான் மட்டும் எதுக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்..?”

“சஞ்சீவ்..எனக்கு இந்த அண்ணா பேமிலி சென்ட்டிமென்ட் எதுவுமே பிடிக்காது…உன்னோட வேலை இனி நான் சொல்றத செய்றது மட்டும் தான்..நான் கூட உங்களை இன்னைக்கு இந்த வீட்டை விட்டு கெஸ்ட் ஹவுஸ் அனுப்பலாம்னு தான் நினைச்சேன் ஆனா இப்போ உன்னோட குடுமி என் கைக்கு வரணும்ல..சோ,”

“சோ…”

“அவங்க மூணு பேரும் இங்கயே இருக்கட்டும்..இதுக்கு மேலயும் கேள்வி கேட்டு பண்ண மாட்டேன் வர மாட்டேன்னு ஏதாச்சும் சொல்ல ட்ரை பண்ணுனாலோ இல்ல நினைச்சாலோ உன் அம்மா தங்கச்சி நைனா…” என்றவன் நிறுத்தி கழுத்தில் கைவைத்து

“ஸ்ஸ்…” என்க,

“நீ மிரட்டுற இது நல்லதுக்கு இல்ல..” என இருக்கையை விட்டு எழுந்த சஞ்சீவின் தோள் பற்றி அமர வைத்த ஆனந்த்

“பாஸ் கிட்ட சத்தமா பேசாதீங்க..” எனச் சொல்ல,

“பெரிய பாஸ் இவன்..நான் நினைச்சா இப்போவே உன்னை உன்னோட ப்ரைவெட் செக்டார் எல்லாம் லீக் பண்ணி ஒண்ணுமில்லாதவனா ஆக்க முடியும் தெரியுமா..என் குடும்பத்தையே அழிப்பம்னு சொல்லுவியா..?” என சஞ்சீவ் கர்ஜிக்க,

மெதுவாய் தண்ணீரை அருந்திக் கொண்டே,”ஆனந்த், வீட்டைச் சுத்தி நம்ம ஆளுங்கள நிக்க வை, யாரும் வீட்டை விட்டு போக கூடாது அதே மாதிரி புதுசா வர யாரும் நம்ம அனுமதியில்லாம உள்ள வரக் கூடாது..” என்றவன் சஞ்சீவிடம் திரும்பி,

“இப்போ நீ ஆனந்த் கூட போ…அப்படி போக மாட்டேன் பண்ண மாட்டேன் சொன்னா இன்னைக்கு முதல் பலி உங்கப்பன் தான்..” என்றான் இறுக்கமாய்.

“உனக்கும் அப்பா தான..ச்சீ..காசுக்காக அப்பாவ கொல்லுற உன்னை மாதிரி புள்ளய எங்க அப்பா விட்டு வந்ததுல தப்பே இல்ல..”

“நான் யாருமில்லாம கஷ்டப்பட்டப்போ உங்க அப்பானா வந்து சோறு போட்டான்..இந்தப் பணம் தானே சோறு போட்டுச்சு…மனுஷன் சாகும் போது கூட பணம் வேணும் சஞ்சீவ்..” என்றவன் ஆனந்துக்கு கை காட்டி அவனை அழைத்து செல்ல சொல்லிவிட்டான்..

ஆட்டம் அணிவகுக்கும்…

Un Kannil Inbangal Kanbein – 15

15

சந்த்ருவின் கைகள் அணைத்த வாக்கிலே ஒரு சிறிய மொபைல் கடைக்குள் செல்ல, இவனைக் கண்டதும் எழுந்த நின்ற கடைப் பையன்,

“வாங்க சார்..” என்றான் உள்ளே அழைத்து சென்று..

முன்னே சின்னதாக இருந்த அறையின் மூலையில் ஒரு கதவிருக்க, அதைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால் அதைவிடச் சின்ன அறையும் கீழ் நோக்கி இறங்கு படிகளும் இருந்தன..

ஜார்ஜை முன்னே விட்டவன், “சார் பார்த்து இறங்குங்க..” என்றான்..

கீழே இறங்கி அவர் நின்று கொள்ள, பின்னோடு கீழறிங்கிய இருவரில் கடைப் பையனான சாஜிக் அங்கிருந்த துருப்பிடித்தக் கதவின் பூட்டைத் திறந்தான்..

வெளியில் நின்றுப் பார்க்க குடோன் போல தான் இருந்தது..இங்கே அடைத்து வைக்கப் போகிறானோ? நினைக்கும் போதே ஜார்ஜுக்கு வியர்த்தது..

முன் வழுக்கை உள்ளவரின் வியர்வைத் துளியைத் தனது கைக்குட்டை கொண்டு துடைத்துவிட்ட சந்த்ரு, “அல்லு வுட்டிருச்சி போல…” என்றான் காதின் அருகே குனிந்து.

“சந்த்ரு..டோன்ட் ப்ளே வித் மீ..எனக்கு ஒண்ணும் தெரியாது..” என்றதும்..

தீர்க்கமாய் அவரது முகத்தைப் பார்த்தவன், “சிவனுக்கு கூட மூணு கண்ணு தான் ஜார்ஜ் ஆனா எனக்கு..? என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சும் எப்படி என்கிட்ட ப்ளே பண்ண முடிஞ்சது..” உள்ளே அழைத்து சென்றவன் சாஜிக்கிடன் கண்ணசைக்க, அங்கு அடுக்கி வைத்திருந்த பெட்டிகளை ஒரு இடத்தில் மாற்றியமைத்தான்..

ஜார்ஜை ஒரு சேரில் அமர வைத்தவன் எதிரே தானும் அமர்ந்து இருவருக்கும் முன்னிருந்த பேப்பர் வெயிட்டை சுழற்றத் துவங்கினான்..

“சொல்லுங்க..” மொட்டைக் கட்டையாய் அவன் கேட்க,

“எனக்கு தெரியாது சந்த்ரு..” என்றவரின் கைகளை தனது விரல் இடுக்களுக்குள் வைத்து திருக, வலியில் கத்தினார் ஜார்ஜ்..

“சந்த்ரு, நான் யார்னு தெரிஞ்சுமா..?” வலியில் அவள் குரல் பிசறு தட்ட,

“உன்மேல இருக்க கொஞ்ச மரியாதைக்கு தான் என்முன்னாடி இன்னும் உயிரோட உட்கார்ந்திருக்க..”ஜார்ஜிடம் பேசியவன், கொஞ்சம் தலைசாய்த்து,

“சாஜி..” என்ற அழைக்க,

“ரெடி சார்..” என்றவனின் குரலில் தான் ஜார்ஜிற்கு சுற்றம் உரைத்தது..

மிருதுவான குளிர் காற்று முகத்தில் உரச, ஒரு நீள சுவர் முழுவதையும் அந்த கணினித் திரை அடைத்திருந்தது..

“ஜார்ஜ்…எதுக்கு இவ்வளவு பெரிய துரோகம்..?” எனவும் அவர் அமைதியாய் இருக்க, சந்த்ருவின் கண்ணசைவுக்கு பின் சாஜிக் ஒரு வீடியோவைத் திரையிட்டான்..

கிட்டதட்ட அரை மணி நேரம் ஓடிய வீடியோவுக்கு பின், “ஜார்ஜ், எப்படியும் நீ போகத் தான் போற..போறதுக்கு முன்ன அந்த ப்ளாக் கோஸ்ட் யாருன்னு சொல்லிட்டு போறீயா..?” இகழ்ச்சியாய் கேட்டவனது இதழ் சிரிப்பில் வளைந்தது..

கொஞ்சம் மீதம் இருந்த தைரியத்தை வரவழைத்து கொண்ட ஜார்ஜ்,
“சந்த்ரு, என்னை நீ இப்போ கொன்னா யார் யாருக்கெல்லாம் பதில் சொல்லனும்னு நினைவிருக்கா…”

“நான் இதுவரைக்கும் யாருக்காவது பதில் சொல்லி நீ பார்த்திருக்கியா ஜார்ஜ்..” அப்பட்டமான நக்கல் குரல் தான் அது..

இதற்கு மேல் அவனிடம் பேசி பலனில்லை என்பதை உணர்ந்தவர், “சந்த்ரு ப்ளீஸ் என்னை விட்டிரு…எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிடுறேன்..” எனவும் அவன் சரியெனத் தலையசைக்க, அங்கே நின்ற சாஜிக் வேகமாய் அறை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள மைக்கை ஆன் செய்தான்..

ஜார்ஜ் முழுவதும் கூறி முடிக்கும் வரையிலும் பொறுமையாய் இருந்தவன், “ப்ளாக் கோஸ்ட்ட நீ பார்த்தது இல்லையா..?” தெளிவுப்படுத்தி கொள்ள மறுபடியும் கேட்டான்..

“இல்ல…நான் அவன் வரச் சொன்ன இடத்துக்கு போனேன்.. ஆனா அங்க யாருமே இல்ல…நான் போய் உட்கார்ந்ததும் அங்கிருந்த வெப் டீவில அவன் வந்தான்..முகம் அதுல தெளிவா இல்ல.. ப்ளாக் கலர் மாதிரி முகத்துல மட்டும் ஷேடோ இருந்தது.. வெயிட் கலர் கோட் சூட் போட்டிருந்தான்..”

“நீ அவன மீட் பண்ணுன இடத்தை சொல்லு..” ஜார்ஜ் சொன்ன இடத்தைக் குறித்து கொண்டவன் இப்போது ஜார்ஜின் மொபைலையும் கைப்பற்றி இருந்தான்..

“எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிட்டேன் சந்த்ரு..என்னை விட்டிரு..” பாவமாய் கெஞ்சும் ஜார்ஜின் முன் தன் முழு உயரத்திற்கு எழுந்து நின்ற சந்த்ரு..

“ஜார்ஜ், நான் கொன்னா உன்னை மட்டும் தான் கொல்லுவேன்..ஆனா இவ்வளவு உண்மையையும் என்கிட்ட நீ சொன்னத அவன் கேள்விப்பட்டான்?! உன் ரெண்டு வயசு பேரனைக் கூட கொல்லாம விடமாட்டான்.. சோ பெட்டர் நீயே செத்து போ..” என்றவன் நிறுத்தி..

“தானே தனக்கு கொடுத்துக்கிற மரண தண்டனை எவ்வளவு கொடுமை தெரியுமா…? யோச்சு பாரு சுடுகாட்டுல உனக்கு நீயே கொல்லி சாரி சாரி நீயே குழித் தோண்டி நீயே மண்ணை வைத்து மூடுனா எப்படி இருக்கும்?! பயத்துலயே பாதி சாவு வந்திடும்ல..”என்றவன் எப்படி அவனை அழைத்து வந்தானோ அப்படியே கூட்டிக் கொண்டு காரில் ஏற்றி வண்டியைக் கிளப்பினான்..

இந்த அரை மணி நேரத்தில் ஜார்ஜ் எதுவும் பேசவில்லை.. முகம் வெளிர வியர்த்து விறுவிறுக்க நின்றிருந்தார்.. அவரை அழைத்து வந்த இடத்திலே இறக்கிவிட்டவன் அவரோடு கீழே இறங்கினான்..

“ஜார்ஜ்.. ஒண்ணு கேட்கவா..?” காரில் லேசாக சாய்ந்து நின்று அவன் கேட்க,
என்னவென்பது அவனது முகம் பார்த்து நின்றார் ஜார்ஜ்..

“எனக்கு அந்த ப்ளாக் கோஸ்ட்ட பார்க்கனும்.. அப்படி நீ ஹெல்ப் பண்ணுறதா இருந்தா உன் உயிருக்கு நான் பாதுகாப்பு..” என்றான்..

அது எப்படித் தன்னால் முடியும் என்பதைத் தன் விழிகளில் தாங்கி நிற்க,

“பெருசா ஒண்ணுமில்லை நான் சொல்றத நீ செய்..” எனவும், சரியென வேகமாய் தலையசைத்தார் ஜார்ஜ்..
ஜார்ஜிற்குத் தெரியும் சந்த்ரு வாக்கு கொடுத்தால் பின்வாங்க மாட்டான் என்பது..

“குட்..நீ எனக்கு உண்மையா இருக்கியா இல்லையான்னு எனக்கு எப்படித் தெரியும்..?” யோசனையுடன் அவன் கேட்க,

“சத்தியமா உனக்கு துரோகம் பண்ண மாட்டேன் சந்த்ரு…இனி இந்தத் தப்ப எப்பவும் செய்ய மாட்டேன்..”என்றார் மன்றாடும் குரலில்..

ஒரு நிமிடம் ஆழ்ந்து யோசித்த சந்த்ருவிற்கும் இப்போதைக்கு இவரைவிட்டால் அவனை அடையும் மார்க்கம் இல்லாததால் சரியெனத் தலையசைத்து அவரிடம் எடுத்த மொபைலை அவரிமே கொடுத்தான்..

மொபைலை அவர் கையில் திணித்த சொற்ப நிமிடங்களில் அவருக்கு போன் வர, சந்த்ருவின் முகத்தை வேகமாய் பார்த்தார்..

அட்டென்ட் பண்ணு எனக் கண்ணசைத்தவன், ஸ்பீக்கரை ஆன் செய்ய,

“ஜார்ஜ்..” என்ற கர்ஜனைக் குரலுக்குச் சொந்தக் காரன் ப்ளாக் கோஸ்ட்..

“ப்ளாக்..” என்ற ஜார்ஜின் குரலில் உள்ள வேறுபாட்டில்

“பக்கத்துல யாரும் இருக்காங்களா..?” என ஆங்கிலத்தில் அவன் கேட்க

“இல்ல..நான் மட்டும் தான் இருக்கேன் சொல்லுங்க..” என்றவனிடம்,

“ஜார்ஜ்..நான் இந்தியா வந்திருக்கேன்..சீக்கிரமே உன்கிட்ட ஒரு உதவி வேண்டி வருவேன்.. உனக்குச் சேர வேண்டிய பணம் இன்னைக்கு நைட் உனைக்கு வரும்..” என்றவன் அழைப்பை வைத்துவிட்டான்..

அழைப்பை வைத்ததும், ஆனந்திற்கு அழைத்த சந்த்ரு, “ஆனந்த், இப்போ ஒரு நம்பர்ல இருந்து நான் சொல்ற சிம் நம்பருக்கு நெட் கால் வந்திருக்கு பாஸ்ட் அதை சாஜிக் கிட்ட சொல்லி ட்ராக் பண்ணிட்டே இருக்க சொல்லு..”

வேகமாய் சொன்னவன் அந்த சிம் நம்பரைச் சொல்ல, சாஜிக் ட்ராக் செய்ய பட்டனை அழுத்திய அந்த சொற்ப நேரத்தில் தனது மொபைலை ஆஃப் செய்திருந்தான் ப்ளாக் கோஸ்ட்..

“சார், அந்த நம்பர் ட்ராக் ஆகல..”

“ஆனந்த்..அந்த நம்பர்ல இருந்து இதுவரைக்கும் எத்தன போன் போயிருக்கு பாருங்க…விடாம நான் கொடுத்த பத்து நம்பரையும் ட்ராக் பண்ண சொல்லு… நிமிஷமும் விடக் கூடாது..கண்டிப்பா இன்னைக்கு அவன் லொக்கேஷன் ட்ராக் பண்ணியிருக்கனும்..” திட்டவட்டமாய் சந்த்ரு சொல்லி முடித்தான்..

“ஜார்ஜ்..பிரமிப்பா இருக்கா..?” என்றவன் காரின் மேல் ஏறி உட்கார, அவனருகில் நின்ற ஜார்ஜிற்கு என்ன பதில் சொல்ல வேண்டுமென்பது தெரியவில்லை..

“என்ன ஜார்ஜ், வாயைத் திறக்க முடியலையா..? சரி, நீ இப்போ என்கூட இருக்கிறது ப்ளாக் கோஸ்ட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்..?” தலைக்குப் பின்னால் கரம் கோர்த்து அவன் கேட்க,

“சந்த்ரு, ப்ளீஸ் என்னை விட்டிரு..” என்றவர் கையெடுத்து கும்பிட்டார்..

“ஜார்ஜ், நான் உனக்கு ஒரு நியூஸ் சொல்லவா..?” என்றதும், என்னவென அவன் முகம் பார்க்க,

“இன்னைக்கு நைட் நீ செத்துருவ..” என்றான் இறுகிய குரலில்..

“சந்த்ரு..ப்ளீஸ்..எனக்கு இன்னும் கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு இருக்கா..ப்ளீஸ்..நான் பண்ணுனது தப்பு தான்..”

“வெறும் தப்பில்ல ஜார்ஜ்..ரொம்ப பெரிய்ய்ய்ய்ய தப்பு.. என்னோட அகராதில உனக்குத் தண்டனைக் கொடுத்தா நீ உயிரோட இருக்கவே கூடாது..ஆனா கூடப் பழகுன தோஷத்துக்கு உன்னை அப்படியே விடுறேன்…” என்றவன் சொன்னதும்,

“சந்த்ரு, தாங்க்ஸ்..” என்றவர் அவனது காலில் விழப் போக,

“இரு இரு..இன்னும் நான் முடிக்கல.. நான் தான் கொல்ல மாட்டேன்னு சொன்னேன் ஆனா உன் ஆஸ்தான முதலாளி…” என்றவன் நிறுத்த

“ப்ளாக் கோஸ்ட்..” பயத்துடன் அவர் கேட்டதும்,

“கண்ணுல மரண பயம்..ஒரு பக்கம் பாவமா இருக்கு ஏனா நீ என் குரு ஆச்சே ஆனா நீ சொல்லி கொடுத்த மாதிரி நான் நடந்துக்கணும்னா…” என நிறுத்தியவன்

“குருவ மிஞ்சுன சிஷ்யனா இருக்க வேணாமா “ என்க

“சந்த்ரு…”

“ம்..உனக்கு நான் பட்ட நன்றி கடனுக்காக இன்னும் அரை மணி நேரத்துல உங்க வீட்டுக்கு ஒரு கார் வரும் அதுல உன்னைத் தவிர உன் குடும்பம் மொத்தமும் அனுப்பி விடு…நீ செஞ்ச பாவத்தை நீ மட்டுமே கழுவு ஜார்ஜ்..”என்றவன் அவர் முகம் பார்க்க,

‘சாவு உறுதி’ என்பது தெள்ளத் தெளிவாய் உணர்ந்த நேரம்,

“சந்த்ரு என்னையும்..” என்றவர் ஆரம்பிக்கும் போதே,

“என்கிட்ட நீ கேட்காத…உன் குடும்பத்தோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு..” என்றவன் நிறுத்தி,

“மே யுவர் சோல் ரெஸ்ட் இன் பீஸ் சார்..” இறுக்கமான முகத்துடன் சொன்னவன், காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்..

பரத்தின் மழலையை பார்த்துவிட்டு அரசியை பரத்தின் கைகளில் கொடுத்துவிட்டு திரும்பி வரும் போது, சந்த்ருவைப் பார்த்தாள் கனிஷ்கா..

நுங்கம்பாக்கம் பக்கத்தில் இருக்க வேண்டிய இவனுக்கு இங்கு என்ன வேலை..? யோசித்தவள், நாராயணனிடம் சொல்லி வண்டியை ஓரங்கட்டி இவனைத் தான் பார்த்து கொண்டிருந்தாள்..

ஜார்ஜ் ஏதோ கெஞ்சுவதும் இவன் இறுக்கமாய் பேசுவதையும் தொலைவில் இருந்து கேட்டவள், அவன் கிளம்பு வரையிலும் அவன் மீதே தனது பார்வையைப் பதித்திருந்தாள்..

யூ டர்ன் அடித்து முக்கிய சாலையில் தனது வண்டியைச் செலுத்தியவன் தற்செயலாய் ரிவ்யூ மிரரைப் பார்க்க அங்கே போலீஸ் வண்டியையும் அதன் உள்ளே இருந்த கனிஷ்காவையும் பார்த்துவிட்டான்..

“ஐ யம் வெய்ட்டிங் பேபி..” வாய்க்குள் முணுமுணுத்தவனின் கரங்களில் வண்டி சீறிப்பாய்ந்தது…

ஆட்டம் தொடரும்..

Un Kannil Inbangal Kanbein – 14

15

பரத்துடன் வெளியே வந்த தேவிக்கு, இந்தக் குழந்தை வேண்டாம் என்கிற மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி இந்த வாழ்க்கையே வேண்டாம் என்கிற முடிவுக்கு வர, இவளது புறம் கொஞ்சமும் திரும்பாமல் காரை செலுத்துக் கொண்டிருந்தான் அவன்..

“என்னங்க..” திருமணம் ஆகிய இந்த ஒரு மாதத்தில் தானாய் முன் வந்து அழைக்கிறாள்.. ஆனால் ஏன் எனக் கேட்க பரத்திற்கு விருப்பமில்லை..

அமைதியாய் காரைச் செலுத்தியவன் மருத்துவமனை வாயிலில் வண்டியை நிறுத்த, இப்போது தீர்க்கமாய், “இந்தக் குழந்தைய கொல்ல வேணாம்..நானே சாவுறேன்..” என்றாள்..

அவள் கூறியதைக் கேட்க விரும்பாதவன் போல தலையோடு காதையும் சேர்த்து பொத்தி, கண்களை இறுக்கமாய் மூடி அமர்ந்துவிட்டான்..

சில நிமிடங்கள் அவள் அழுது கரையத் துவங்கவும், “தேவி..” என அதட்டலாய் அழைத்தான்.

கணவனின் அதட்டலில் நிமிர்ந்து பார்த்தவளின் உதடு துடித்து கண்கள் மட்டும் கலங்கியிருந்தது..

பார்க்கவே பாவமாய் இருந்த போதிலும், இன்னும் அவளை நெருங்க அவன் மனம் அறிவுறுத்தவில்லை..

“தேவி, என்மேல உனக்கு நம்பிக்கை இருந்தா..?! கண்ணைத் துடைச்சிட்டு வண்டில இருந்து கீழ இறங்கு..இல்ல வேணாம்..” என்றவன் காரின் கதவைத் திறந்து வெளியே நின்று கொண்டான்..

அவன் கீழிறங்கிய சில நிமிடங்களில் அவளும் இறங்கி அவனுக்கருகே வந்தாள்..

‘முகத்தைத் துடைத்து உடையை சரிப்படுத்தியிருக்கிறாள்’ மனதில் நினைத்து கொண்டவனுக்கு இன்னும் இத்தகைய சூழலை கையாளும் பக்குவம் வந்திருக்கவில்லை..

அவளது கையைத் தனது கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன், “தேவிம்மா..” என அழைக்க,

அவனது தொடுகையை உணராதவள் அவனது அழைப்பில் விழிவுயர்த்தி பார்த்தாள்..

அவளது கண்களை நேருக்கு நேராய் பார்த்தவன், “ப்ளீஸ் என்னை நம்பு..எப்பவும் உன்னை எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்..” தெளிவாய் சொன்னவனின் கைகளுக்கு அவள் அழுத்தம் கொடுத்தாள்..

அவளது பாவனை அழுகை என அனைத்துமே முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தையைப் போலவே இருக்க..அவளது கைகளைப் பிடித்து அருகே இருந்த கல் மேடையில் அமர வைத்தவன் அவளுக்கு முன்
மண்டியிட்டு அமர்ந்தான்..

தன் முன்னே மண்டியிட்ட பரத்தை என்னவென்பது போல பார்க்க, “அம்மு, நாம கொஞ்ச நாள் அப்றம் ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலமா..” என்றான்..

அவனது கேள்வி ஏன் எனப் புரியாமல் அவள் பார்க்க, “நமக்குன்னு இரண்டு குழந்தைங்க..அது போக ஒரு குழந்தைய நாம தத்தெடுத்துகலமா..?” இந்த நேரத்தில் இதைப் பற்றி பேசுவது தவறாக இருந்தாலும், பேசினான்..

வெட்கம் என்ற சாயல் அவளது முகத்தில் கொஞ்சமும் இல்லை..அவனும் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவன் சொன்ன அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தாள்..

“நான் ஒன்னு கேட்டா வாய திறந்து பதில் சொல்லுவியா..?”

“ம்…”

“எதுக்கு இந்தக் குழந்தை வேணாம்..?” எனவும் உதடை பிதுக்கியவள் பாவமாய் பார்க்க,

“சரி வா..” என அழைத்துச் சென்றான் தனது நண்பனான மனநல மருத்துவனிடம்..

அவனுக்குமே அந்த சூழலை எதிர்கொள்ள சில அறிவுரைத் தேவையாய் இருந்தது..

அன்றில் இருந்து வாரம் ஒரு முறை அங்கே அழைத்து சென்றான்…பல அநாதை ஆசிரமம், குழந்தை இல்லாதவர்கள் என ஏகப்பட்டோரைச் சந்திக்க வைத்தான்..

கொஞ்சம் கொஞ்சமாய் அவளிடம் கணவனாய் அல்லாமல் நண்பனாய் நெருங்கியிருந்தவனை தேவியின் அலறல் குரல் இன்றைய நிகழ்வுக்கு கொண்டு வந்தது..

திடுக்கிட்டு எழுந்தவன், ஆப்ரேஷன் தியேட்டரின் வாயிலில் நிற்கும் கனியை நெருங்கி அவளை இறுக அணைத்திருந்தான்..

கனி, பரத்தின் இத்தகைய செய்கையை கொஞ்சமும் எதிர்பார்க்காததால் தடுமாறி அவனது முதுகைத் தடவி கொடுத்தாள்..

“கனி, நான் தப்பு பண்ணிட்டேனா..?”

குடும்பத்தின் ஈடில்லா இழப்புக்கு பின் இன்று தான் பரத்தின் அழுகையைக் காண்கிறாள்..

“இல்லை…” எனத் தலையசைத்தவளையும் அவனது வருத்தம் ஆட்கொள்ள நினைக்க, தலையை சிலுப்பி தனது உணர்வுகளுக்கு விடையளித்தவள்,

“பரத், ஒரு புள்ளைக்கு அப்பா மாதிரியா டா நடந்துக்கிற..இடியட்..தேவிக்கு ஒண்ணுமாகாது..இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டு சிங்க குட்டி வந்திடும் பாரு..” தேவி சொல்லி வாயை மூடவில்லை, ஆப்ரேஷன் தியேட்டரின் முன் எரிந்த விளக்கு அணைந்து டாக்டர் வெளியே வந்தார்..

“ஆப்ரேஷன் சக்சஸ்..பாய் பேபி பிறந்திருக்கு..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க க்ளீன் பண்ணி கொண்டு வருவாங்க..” எனவும் மூச்சை நிம்மதியாக விட்டு இருக்கையில் அமர்ந்தான்…

சின்னசின்ன கால்களுடன் பஞ்சு பொதியாய் கைகளில் ஏந்த வந்த நர்ஸ் பரத்தின் கைகளில் கொடுக்க முயல, கனியை கைக்காட்டியவன், “கனி, தம்பிய வாங்கு..” என்றான்..

பஞ்சு குவியலாய் கைகளில் அள்ளியவளுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் அரசியை கைகளில் தூக்கிய அந்த நாள் நினைவிடுக்கில் வந்து கண்களை கலங்கச் செய்தது..

பரத்துக்கும் அதே நினைவு தான் என்பதைப் போல, கனியைத் தோளோடு சேர்த்தணைக்க, நடப்புக்கு வந்தவள் கண்களை இறுக மூடித் திறந்து குழந்தையை பரத்தின் கைகளுக்கு இடமாற்றினாள்..

“கனி, நம்ம அப்பா..” குழந்தையை கைகளில் வாங்கியவன் முதலில் சொன்ன வார்த்தை இது தான்..

“ம்…”ஆமோதிப்பாய் தலையசைத்தவளின் மனதில் இன்று தான் தனது குடும்பத்தினர் விபத்தில் விழுந்த நாள் என மனம் ஓலமிட்டது..

நாளை பேபியின் பிறந்த நாள் என்பதும் நினைவுக்கு வந்தது..பரத்தை தோளோடு ஒருமுறை இறுக அணைத்தவள்,

“பேபிக்கு ஆறாவது பிறந்த நாள்..” என்றாள் தளீர் குரலில்..

“அவா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாமா..?” பரத் கேட்டு கொண்டிருக்கும் போதே அனுஷிடமிருந்து அழைப்பு வந்தது..

“சொல்லுங்க மாம்ஸ்..” அழைப்பை எடுத்து பரத் பேச,

“பேபியா..? இல்லை ரெளடியா..?” எனக் கேட்க,

“என்னை மாதிரி ரெளடி தான்..” எனச் சொல்லி சிரித்தான் பரத்..

“டேய் கல்யாணம் முடிஞ்சி இன்னும் ஒரு வருஷம் ஆகல அதுக்குள்ள..கலக்கு டா மவனே..” எனக் கலாய்த்த அனுஷுக்கு தேவியைப் பற்றி எதுவும் தெரியாது..

தேவியின் ரகசியங்கள் கனி, பரத்தை தவிர யாருக்கும் தெரியாது..

அனுஷிடம் சிலபல நலவிசாரிப்புகளுக்கு பின் அவன் வீடியோ கால் செய்ய, குழந்தையை கனியின் கைகளுக்கு கொடுத்தவன், கொஞ்சம் தூரமாய் வைத்து அவனிடம் காண்பித்தான்..

கனியின் கைகளில் குழந்தையைப் பார்த்தவனின் மனம் ஏனோ பிசைய, “நான் இந்தியா வந்து சார்ம்’அ பாக்குறேன்..” என்றவன் பல வருடங்கள் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து இந்தியா செல்வதற்கான டிக்கெட் புக் செய்தான்..

****

அன்று காலை எழுந்த சந்த்ரு வழக்கம் போல கீழிறங்கி வர, சோபாவில் உட்கார்ந்திருந்தான் சஞ்சீவ்..

“இவன தான் இங்க வரவேணாம்னு சொன்னோமே..” மனம் அதன் போக்கில் எண்ண,

“அங்கிள்..” எனச் சத்தமாய் அழைத்தான்..

உள்ளறையில் இருந்து அழகாய் உடுத்தியிருந்த புடவையும், மஞ்சள் பூசிய முகமும் வகீட்டில் பளீச்சென வைத்திருக்கும் பொட்டுடன் வந்தார் அவர்..

அவர் சந்த்ருவை நெருங்கும் முன் தனசேகர் தனது அறைக்குள் இருந்து வெளி வந்திருக்க, தனசேகர் வந்த இடது புறத்திலே கவனம் வைத்திருந்தவனுக்கு வலது புறம் வந்து நின்ற சாந்தி தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

“அங்கிள், என்ன இது..?” கருவிழி அசைய சஞ்சீவை சுட்டிக் காட்டி சந்த்ரு கேட்க, தனசேகரோ, ‘இன்னும் பக்கத்தில் நிற்பவனைப் பார்த்தால் என்ன கேட்பானோ?’ என்பதைத் தான் எண்ணியது..

“அது வந்து தம்பி..” தனசேகர் தடுமாறு, விழிகளோ அவனிடமும் சாந்தியிடமும் மாறி மாறி பயணித்தது..

அவரது விழி சென்ற திசையில் அவன் திரும்ப, அங்கே இவனை வைத்த கண் பின்வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார் சாந்தி..

அவரது கண்களில் கனிவு மட்டுமே, சந்த்ருவிடம் அவர் பேச முனையும் போதே பட்டாம் பூச்சியாய் சாப்பாட்டு அறையில் இருந்து ஓடி வந்தாள் மாலினி,

அவளது அரவத்தில் திரும்பி சந்த்ரு பார்க்க, “வாவ் அண்ணா..உண்மையா நீங்க செம சூப்பரா இருக்கீங்க..இதோ
இவன் சொல்லும் போது கூட நான் நம்பல..” என்றவள் அவனது முழங்கையைப் பிடித்துக் கொண்டாள்..

சந்த்ருவிற்கு இதெல்லாம் புதிது, மெதுவாய் தனது கைகளை அவளிடமிருந்து பிரித்து கொண்டவன், ஏதும் பேசாமல் வெளியேறிவிட்டான்..

அவனால் வெளியேறுங்கள் எனக் கத்த முடியவில்லை…ஒரு மனம் அவனைச் சொல்லத் தூண்டினாலும் ஏதுவோ ஒன்று அவனைத் தடுத்தது..

வீட்டை விட்டு வெளியே வந்தவனை, டிடக்டிவ் ரவி அழைக்க, ஸ்பீக்கர் ஆன் செய்து மொபைல் ஹோல்டரில் வைத்தவன் காரை ஓட்டியவாறே அவரிடம் பேசத் துவங்கினான்..

“சார்..”

“ம்..”

“கனிஷ்கா மேடத்தை நீங்க ஃபாலோ பண்ண சொன்னது போல, இன்னொரு ஏஜென்ஸிக்கும் சொல்லிருக்காங்க..”
என்றான்..

“ம்..தெரியும்..”

“சார்..தெரியுமா..?”

“ஆமா ரவி..எனக்குத் தெரியும்…கனிஷ்கா இப்போ எங்க இருக்காங்க..” என்க

“சார், பரத் சாருக்கு பேபி பிறந்திருக்கு.. சோ கனிஷ்கா மேம் பரத் சார் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க…கனிஷ்கா
மேம் பேபி மட்டும் வீட்டுல இருக்கு..” எனவும்,

“ம்..ரவி..நான் பார்த்துக்கிறேன்..வேறெதுவும் முக்கியமான விஷயம் இருக்கா…?”

“சார்..அனுஷ்னு ஒருத்தர் கூட மேடம் போன் பேசிட்டு இருந்தாங்க..”

“ம்..தெரியும்.” என்க,

“சார் எல்லாத்தையும் தெரியும் சொல்றீங்க..அப்போ எதுக்கு சார் நான்..” புரியாமல் ரவி கேட்க,

“ரவி, கனிஷ்கா பத்தி எனக்குத் தெரியாத ஏதாவது உங்க கண்ணுக்கு படும்னு தான்..அதுமட்டும் இல்லாம…நான் சொல்றத நீங்க செய்ங்க காரணம் அப்புறமா சொல்றேன்..” என்றவன், போனை வைத்து விட்டான்..

காரை ஒரு வளைவில் திருப்பிச் செலுத்த, முதல் நாள் ஹோட்டலில் சந்தித்த அதே ஆள், வழியில் ஒரு இடத்தில் நின்றிருந்தார்..

அவரை ஏற்றிக் கொண்டவனின் கார் இப்போது சென்னையின் முக்கிய இடத்தை நோக்கிப் பறந்தது..

ரிச் ஸ்ட்ரீட்..

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாம்ராஜியத்தின் ராஜா என்றால் அது ரிச் ஸ்ட்ரீட் தான்..அதன் பக்கத்து தெருவில் மறைவாய் தனது வண்டியை நிறுத்தியதும்,

“யங் மேன்..இங்க தானா..?” என்றவர் கேள்வியாய் கேட்க,

“எஸ் ஜார்ஜ்..” என்றவனின் மனநிலை குழப்பத்தில் இருக்கிறது எனத் தெளிவாய் புரிந்து கொண்டார் ஜார்ஜ்..

அவனது தோளைத் தட்டிக் கொடுத்தவர் வண்டியில் இருந்து கீழறங்க, அவனும் இறங்கி காரை லாக் செய்துவிட்டு, அந்த ரிச் ஸ்ட்ரீட்டை நோக்கி நடந்தனர்..

“ஒன் சி கைக்கு வந்துட்டா..?”

“இல்லை..”

“அப்போ சரக்கு..” அவரது கேள்விக்கு உதட்டை பிதுக்கியவன்..

“ஜார்ஜ்..நீங்க எப்போ அப்ராட்ல இருந்து வந்தீங்க..” என்றான்..

அவனது கேள்வியில் திகைத்தவர், “நான் அப்ராட் போகலையே..” எனவும்,

“ஓஹோ..” என்பது போல் பார்த்து வைத்தவன், அவரது தோளைச் சுற்றி தனது கையைப் போட்டான்..

சந்த்ருவின் கைத் தனது தோளில் விழவும் திடுக்கிட்டு ஜார்ஜ் நிமிர்ந்து பார்க்க, “ஐ லைக் யூ ஜார்ஜ்..” என்றான் உதட்டில் உறைந்த ஏளனச் சிரிப்புடன்…

ஆட்டம் அணிவகுக்கும்…

Un Kannil Inbangal Kanbein – 13

13

தேவியின் தோளில் பரத்தின் கைகள் ஆழப் பதிந்திருக்க, மூன்று முடிச்சுகளையும் தானே போட்டு முடித்தான் பரத்..

பின்னால் நின்ற கனியைப் பொருட்படுத்தாதவனின் விழிகள் அதிர்ச்சியாய் பார்த்து நிற்கும் தேவியின் தேவியின் கருவிழிகளை விட்டு கொஞ்சமும் அகலவில்லை..

கூட்டத்தினர் கூட அவன் தாலி கட்டி முடிக்க எடுத்துக் கொண்ட அந்த அரை நொடிப் பொழுதில் மூர்ச்சையாகி இருந்தனர்..

அவன் தாலி கட்டி முடித்ததும் அவளது முழங்கையைப் பற்றி கனியைப் பார்க்கத் திரும்ப,
“என்ன டா இது..?” என்ற கேள்வியை விழிகளில் தாங்கி கூர்மையுடன் பார்த்து நின்றாள் கனி..

“அக்கா, இவளை எனக்கு பிடிச்சிருக்கு..” தகவலாய் உரைக்கும் தமையனை முறைத்தவளுக்கு இப்போது என்னப் பேச வேண்டுமென்பது புரியவில்லை..

இருந்தாலும், “இது இப்போ நீ சொல்ல வேண்டிய டைலாக் இல்ல..” எனக் கண்கள் குற்றம் சாட்டியது..

அதிர்ந்து அழ மறந்து நிற்கும் தேவியுடன், அவளது அன்னையின் கால்களில் விழ, தன்னிச்சையாய் விலகியவரின்
விழிகளில், ‘ஏன் இப்படி..?’ என்ற கேள்விகள் இருந்த போதிலும், கையெடுத்துக் கும்பிட்டார்..

அவரது கைகளைத் தடுத்தவன் கனிக்கு அருகே விரைய, கூட்டத்தின் சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாய் கூடியது..

அனைவரில் ஏகபோகப் பேச்சுக்களை உள்வாங்கிய கனி, தனக்கு முன்னே வந்து நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் பரத்தின் கன்னத்தில் சப்பென அரைந்தாள்..

அடுத்த அடி அடிக்க கைகளை ஓங்கும் கனியின் முன் அதே போல நெஞ்சை நிமிர்த்தி நின்றானே தவிர விலகவும் இல்லை, எதிர்த்து பேசவும் இல்லை… அவள் அடித்ததும் பேசிய ஊரார் அனைவரும் வாயடைத்து நின்றுவிட, அவள் அடுத்து அடிக்க கை ஓங்கிய நொடி, இருவருக்கும் குறுக்கே நின்றாள் தேவி..

“மேடம், வேணாம்..என் மேல ஏதோ பாவப்பட்டு இந்த சார் இப்படி பண்ணிட்டாரு…இவரை நீங்க கூட்டிட்டு போங்க..” என்றவள் நிமிர்ந்தும் பரத்தின் முகம் பார்க்காமல் திரும்பி நடக்க முயல, அவளது கரத்தை பற்றி இழுத்து நிற்க வைத்தவன் அவளை விடுவதாய் இல்லை..

“பரத், அவா கைய விடுறா..” கனி கத்த, அவளது கத்தலை புறந்தள்ளியவன்,

“உனக்கு என்ன பிடிக்கலையா..?” என்றான் அவள் விழிகளைப் பார்த்து.

‘எந்த நேரத்துல எப்படிப்பட்ட சூழ்நிலைல இந்தக் கேள்வி கேட்கடா பரத்..’ மனம் தறிகெட்டு கேள்வியெழுப்பவும்,

“சாரி, உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லையா..?” எனவும்,

“இதை நீ எப்போ டா கேட்கனும்..” என அவர்கள் இருவருக்கும் இடையில் கனி குறுக்கிட..

“ஓ…சரி அப்போ உனக்கு பிடிக்கலன்னா தாலிய கழத்தி கொடு..” என்றான் கால்களை அகல் விரித்து, வலது கையை பின்னால் வைத்து இடது கையை அவள் புறம் நீட்டி..

வரிசையான அதிர்ச்சிகளில் சிக்கியிருந்தவளுக்கும் என்ன செய்வது ஏது செய்வதென புரியாமல் அழத் துவங்க, முன்னால் வந்த தேவியின் தாய்,

“மாப்ள, இப்படி பேசுறது நல்லா இல்ல..” என்றார் மறைமுகமாக தனது மகளுக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையை சம்மதித்து..

அத்தையின் பேச்சில் சிரித்தவன் கனியின் புறம் திரும்பி, “மேடம், என் மனைவிய காணும்னு கொடுத்த கம்ப்ளைன்ட் அப்புறம் இவங்க பேருல கொடுத்த எல்லாத்தையும் வாபஸ் வாங்கிக்கிறோம்..” என்றவனது பதிலில் கூட்டத்தில் மறுமுறையும் சலசலப்பு கூடி,

“என்ன மேடம்..உங்க தம்பிய வச்சி கல்யாணம் முடிச்சிட்டு மேல் சாதிகாரனுக்கு கும்புடு போடுதியலா..?” தேவியின் சொந்தம் சத்தமிட,

முன்னால் வந்தவன், “மேடம், என் குடும்ப விஷயத்தை நானே தீர்த்துக்க நினைக்கிறேன்…கேஸை வாபஸ் வாங்க என் மனைவி கையெழுத்து போடுவாங்க..” பரத்தின் விழிகளில் இருந்த தீர்மானத்தில் அவனை முறைத்த கனி, தேவியின் பக்கம் குனிந்து,

“தேவி, உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லனா சொல்லு இவனை அரெஸ்ட் பண்றோம்..” கனியின் கேள்விக்கு தேவி குனிந்தே நிற்க, திமிராய் நிற்பது போல பரத் காட்டிக் கொண்டாலும் பரத்தின் மனதில்,
‘தாயே பரதேவதை வாயைத் தொறந்து சொல்லிடுமா..’ என அவளிடம் வேண்டல் வைத்தது..

குனிந்து அழும் தேவியின் நாடியைப் பிடித்து நிமிர்த்தியவள், “உனக்கு விருப்பமா இல்லையா மா..” என மறுபடியும் கேட்க, அழுதாளே தவிர வாயைத் திறக்கவில்லை..

பக்கத்தில் நின்ற இன்ஸ்பெக்டரை அழைத்தவள், “சார், பரத் க்ருஷ்ணா சரவணன் அவங்க பேருல கேஸ் ஃபைல் பண்ணுங்க…இப்போ கூட்டிட்டு போங்க..” என்றுவிட்டாள்..

கைது செய்யுமாறு சொன்னப் பின்பும் நிமிராமல் அழுது கொண்டே தேவி நின்றுவிட, ஒரு நிமிடம் யோசித்த இன்ஸ்பெக்டரிடம், “நீங்க அரெஸ்ட் பண்றீங்களா இல்ல நான் பண்ணனுமா..?” என கனி அதட்டினாள்..

அப்போதும், பின்னால் கைகளைக் கட்டி திமிராய் நின்றானே தவிர வாயைத் திறந்து பரத் பேசவில்லை..

இன்ஸ்பெக்டர் பரத்தின் கைகளைப் பற்றி அழைத்து செல்ல, ஓரக் கண்ணால் அழும் தேவியையே பார்த்து கொண்டிருந்தானே தவிர வேறெதுவும் சொல்லவில்லை..

பரத்தைக் கைது செய்துவிட்டனர்..அவனுக்கெதிராக கனியே கேஸ் கொடுத்திருந்தாள்..தேவியின் அம்மா எவ்வளவோ கெஞ்சியும்,
“தேவி சொல்லாம கேஸை வாபஸ் வாங்க மாட்டேன்..” எனச் சொல்லிவிட்டவள், அன்று மாலையே தேவியின் வீட்டுக்கு முறையாய் அரசியுடன் வந்தாள்…

இனிப்பு, பூ, பழங்களுடன் வந்தவள், தேவியைத் தங்களுடன் அழைத்து கொள்ள விரும்புவதாகச் சொல்ல, சுற்றத்தாருக்கு அவளைப் பார்க்க விசித்திரமாக இருந்தது..

தேவியின் தாய், “அம்மா, மாப்பிள்ளைய நீங்க தான் அரெஸ்ட் பண்ணச் சொன்னீங்க இப்போ நீங்களே தேவியையும் முறையா கூப்பிட வந்திருக்கீங்க..” என்க..

“அம்மா, பரத்தை அரெஸ்ட் பண்ணுனது விருப்பம் கேட்காம ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுனதுக்காக.. இப்போ தேவியை என்கூட கூட்டி போறது என் தம்பி மேல எனக்கு இருக்குற நம்பிக்கையால.. நீங்க என்னை நம்பி உங்க பொண்ண அனுப்பத் தேவையில்ல ஆனா கண்டிப்பா என் தம்பிய நம்புங்க..” என்றவள் கூடுதல் தகவலாய் அவனும் போலீஸ் தான் என்பதில் தொடங்கி தங்களது குடும்பக் கதை மொத்தமும் சொல்லி முடித்தாள்..

அவளிடம் சரியென்ற தாயையும் மகளையும் உடன் அழைத்து வந்தவள், அன்று இரவே தேவியின் அன்னையை அவரது மகனுடன் அனுப்பி வைத்தாள்..

கனியின் வேகம் விவேகம் என அனைத்தையும் கண்டு ஒரு நாளில் பிரமித்து போனாள் தேவி… அதட்டலாய் மட்டுமே கனி பேசினாலும் அதில் இருக்கும் பாசம் தேவிக்கு இனித்தது..வந்த அன்றில் இருந்தே அரசியும் ஒட்டிக் கொள்ள, வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள் பரத்தை விட்டுவிடுமாறு தேவியே கனியிடம் சொன்னாள்..

“அண்ணி..”

“தேவி, கனினு சொல்லு..”

“கனி, அவங்கள எப்போ வீட்டுக்கு கூட்டி வருவீங்க..?”

“எவங்கள..?”

“உங்க தம்பி..” என்றவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்த கனி,

“நீ உண்மைய தான் சொல்றீயா…” எனக் கேட்க,

“அவங்க ஒரு தப்பும் பண்ணல..” தேவியின் வார்த்தைக்காக தான் காத்திருந்தேன் என்பதைப் போல, ஸ்டேஷனுக்கு அழைத்தவள் அவனை விடச் சொல்லிவிட்டாள்..

FIR என எதுவும் மூன்று நாட்களுக்குப் போட வேண்டாமென கனிச் சொல்லியிருந்ததால், அவள் போன் செய்துவிட்டு வைத்த அரை மணி நேரத்தில் பரத் வீட்டுக்கு வந்துவிட்டான்..

வாசலில் பரத்தின் செருப்பு சத்தம் கேட்கவுமே, “மாமா..” என அரசி ஓடிவர, தேவிக்கு நெஞ்சம் அடித்துக் கொண்டது..

ஓடிவந்த மருமகளை கைகளில் ஏந்திக் கொண்டவன் வீட்டுக்குள் நுழைய..

கைகளில் அமர்ந்திருந்த அரசி,”எங்க மாமா போன..?” எனக் கேட்டாள்..

“ம்..ஜெயிலுக்கு..” பதில் சொன்னவன் சோபாவில் அமர, கனி அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தாள், தேவி சுவருக்குப் பின்னே நின்றிருந்தாள்..

“அது எங்க மாமா இருக்கு..?”

“ம்..என் மாமனார் வீட்டுக்கு பின்வாசல்ல..”

“மாமனார் வீடுனா என்ன மாமா..”

“உங்க அத்தை வீடு..”

“தேவி அத்தை வீடா இல்ல தாரா அத்தை வீடா மாமா..?” அரசி கேட்டதும் கனி பக்கென சிரித்துவிட தேவி அதிர்ந்து விழித்தாள்..

இருவரையும் நிமிர்ந்து பார்த்து முறைத்த பரத், “உங்க தாரா அத்தை இனி கிடையாது..உனக்கு இனி தேவி அத்தை மட்டும் தான்..” என்றதும், அவனது கன்னம் தடவி,

“ஏன் மாமா..?”எனக் கேட்க,

“எத்தன பேருக்கு தான் நான் வாழ்க்கை கொடுப்பேன்..ஒன்ன கட்டுனதுக்கே ஜெயிலுக்கு போயிட்டு வந்தாச்சு இதுல இன்னொன்னு வேறையா..?” அலறலாய் பரத் சொன்னதில் கனி சிரிக்க, தேவியோ வந்தச் சுவடு தெரியாமல் அறைக்குள் சென்றிருந்தாள்..

கனியின் ஒதுக்கத்தைக் கவனத்தில் கொண்ட கனி, “பரத் போதும் நீ போய் தேவி கிட்ட பேசு..” எனவும்,

“என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா கனி..” என்றான் அடிப்பட்ட பாவனையில்..

“உன்மேல நம்பிக்கை இருக்க போய் தான் தேவி இந்த வீட்டுல இருக்கா..” என்றவள் அரசியை தூக்கி கொண்டு உள்ளே சென்றுவிட, தனது அறைக்கு தேவியைக் காணச் சென்றான் பரத்..

உள்ளே வந்தவன் திரும்பி நின்ற தேவியிடம், “தேவி, என்மேல கோபமா..” என்க,
பரத்தை நோக்கித் திரும்பியவள், ‘இல்லையென பதிலளித்தாள்..

“என்மேல உனக்கு நம்பிக்கை இருக்கான்னு நான் கேட்க மாட்டேன்..ஆனா என்னைவிட என் அக்கா கனிய நம்பு..” என்றவனிடம் சரியெனத் தலையசைத்தாள்..

தேவி இருக்குமிடத்தில் வந்து வந்து பேச்சு கொடுத்தான் பரத்..இந்தச் சம்பவம் முடிந்த பத்து நாட்களுக்குள் மறுபடியும் கனியை சென்னைக்கே மாற்றிவிட, விடுமுறை முடிந்ததால் பரத் மட்டும் அவர்களுக்கு முன்னே சென்னை சென்றிருந்தான்..

அமைதியே உருவாய் இருப்பாள் தேவி..பரத்திடம் ஆம் இல்லையென்ற தலையசைப்புகள் மட்டுமே..இருவரும் ஒரே அறையில் தங்கினாலும் கூட கட்டிலில் தேவி தூங்குவாள், தரையில் மெத்தை விரித்து பரத் தூங்குவான்..

அவர்கள் அனைவரும் சென்னை வந்த பதினைந்தாம் நாளில் தேவிக்கு உடல் சுகமின்மையாகி இருந்தது..கனி, சென்னையின் வெயில் மற்றும் தண்ணீர் தான் அவளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என நினைத்திருக்க, அன்று காலை குளித்து முடித்து வெளியே வந்தவள் அங்கு நின்ற பரத்தை பார்த்து சிரிக்க, பதிலுக்கு அவனும் சிரிக்க முற்படும் போது மயங்கிச் சரிந்தாள்..

“கனி..கனி இங்க வா..” தேவியை கட்டிலில் கிடத்தி பரத் கத்த,

என்னவோ ஏதோவென ஓடிவந்த கனியிடம், “கனி..இவா மயங்கிட்டா..” எனச் சொல்ல,

அவளது முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள் கனி, கருவிழிகள் இமைக்குள் அசைந்தாலும் கண் திறக்கவில்லை அவள்..

“என்ன டா ஆச்சு..” டாக்டருக்கு அழைத்து கொண்டே கனி கேட்க,

“தெரில கனி…அவா சிரிச்சா நானும் சிரிச்சேன் மயங்கிட்டா..” என பரத் சொல்ல,

“இதுக்கு பேரு தான் அழகுல மயங்குறதா டா மாமா..” என இடுப்பில் கைவைத்து கேட்டாள் அரசி..

அரசி சொன்னதும் மோவாயைத் தட்டியவன், “பேபி, ஒருவேள அப்படி இருக்குமோ..” என அவளை கைகளில் தூக்கிக் கொண்டு பரத் கேட்க, அதற்குள் பக்கத்து வீட்டில் வசிக்கும் டாகடர் சாரதா வந்திருந்தார்..

வந்தவர், தேவியின் உடல்நிலையைச் சோதனை செய்து அவள் கர்ப்பம் தரித்திருப்பதாய் சொன்னவர், பரத்தின் கைகளைப் பிடித்தும் வாழ்த்து தெரிவித்தார்..

டாக்டர் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தையில் தேவி ஸ்தம்பித்து நின்றுவிட, தொடர்ந்த டாக்டர், “50 டேஸ் அப்புறம் ஆஸ்பிட்டல் கூட்டி வாங்க ஸ்கேன் பண்ணனும்..” என்றவர் கிளம்பிவிட்டார்..

இந்தச் சூழலை எதிர்பாராத பரத்திற்கு இதை எப்படி முன்னெடுக்க எனத் தெரியவில்லை..கனியும் கூட ஒரு நிமிடம் குழம்பினாள்..தேவி அதிர்ந்து சமைந்து உட்கார்ந்துவிட, பரத்தின் கைகளில் இருந்த அரசி மட்டும்,
“அத்தைக்கு என்ன ஆச்சு..? டாக்டர் என்ன சொன்னாங்க..” என அவனிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள்..

நிலைமையை எதிர் கொள்ளத் துணிவில்லாத பரத், இயலாமையுடன் கனியை நோக்கியவன், மறந்தும் தேவியைப் பார்க்காமல் அரசியைக் கீழேவிட்டு வெளியேறிவிட்டான்..

பரத் வெளியேறியதும் தேவி உடைந்து அழ, கனிக்கு எப்படி சமாதானப்படுத்த வேண்டுமென்பது தெரியவில்லை..

இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்த பரத்தின் காதுகளில், “எனக்கு இந்தக் குழந்தை வேணாம் கனி..” என தேவி அழுவது அச்சரம் பிசுகாமல் காதில் விழ,
அவனது அறைக்குள் நுழைந்தான்.

பரத் வந்ததும், அவனிடமும் அதையே சொல்ல, “சரி ஆஸ்பிட்டலுக்கு கிளம்பு..” என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான்..

வேண்டாமென சொல்லிவிட்டாள் தான், ஆனால் ஒரு பிஞ்சை அழிக்க வேண்டும் என்றதும் தேவியின் உடல் வெளிப்படையாக நடுங்க எழுந்து கிளம்பிவிட்டாள்..

“என்ன ஆனாலும் திரும்பி இங்கே வரக் கூடாது..” என்ற முடிவோடு..

“பரத்.. என்ன டா இது..” கனி அதட்டவும்

“அக்கா இதுல நீ தலையிடாத..” கத்தரித்தது போல முடித்து கொண்டவன் தேவியை அழைத்துச் சென்றுவிட்டான்..

ஆட்டம் தொடரும்…

Un Kannil Inbangal Kanbein – 12

12

ஒன்பது மாதங்களுக்கு முன்,
புளியரை கிராமம்..

தென்காசியை அடுத்து செங்கோட்டை அருகேயிருக்கும் புளியரை கிராமத்தின் வளமையைக் காண நமக்கு இரு கண்கள் போதாது.. தமிழகம் வழியே கேரளா செல்லும் பாதையில் அமைந்திருக்கும் இக்கிராமும் மலையடிவாரமே..

கிராமம் எனச் சொல்லிய பிறகு ஜாதியம் இல்லாமல் இருக்குமா..?அல்லது ஜாதி சண்டை தான் இல்லாமல் இருக்குமா..?

மேல் ஜாதியினர் தெருவிற்கு போகும் வழியில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர்..

அங்கே, கீழ் ஜாதியினர் எனச் சொல்லப்படுபவர்கள் கத்தி, அருவாளோடு அங்கே குழுமியிருக்க, மேல் ஜாதியினர் எனத் தங்களை முதன்மை படுத்துவோரும் அவ்வாறே கோபத்துடன் கூடிய தெனாவெட்டுடன் இடையிலும் முதுகிலும் சொருகிய அருவாளோட நின்றும் அமர்ந்தும் இருந்தனர்..

இக்கூட்டத்திற்கு நடுவே இருந்த அம்மன் கோவிலின் முதல் படியில் நின்றிருந்தாள் கனிஷ்கா சரவணன்..

இரண்டு நாட்களுக்கு முன், மேல் ஜாதியில் இருந்து ஒரு பெண்ணை,கீழ் ஜாதி பையன் இழுத்து கொண்டு ஓடியிருந்தான்.. ஓடியவனைக் கண்டுபிடிக்க முடியாததால் ஓடிப் போனவனின் தங்கையை அப்பெண்ணின் அண்ணன் தூக்கி வந்துவிட்டான்..

ட்ரான்ஸ்பர் மூலம் தென்காசியில் பொருப்பெடுத்த முதல் மாதத்தில் இப்பிரச்சனை..ஓடிப் போன இருவரும் கனிஷ்காவின் பாதுகாப்பில் தான் இருந்தனர்.. ஆனால் அது ஊராருக்கு தெரியாது..

கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு நின்றவள், வீதியில் நின்ற கூட்டத்தினரைப் பார்த்து,

“எதுக்கு வெளில நிக்கிறீங்க..? உள்ள வாங்க..” என அழைக்க,

“இது எங்க கோவில்..எங்க இனத்தான தவிர யாரும் உள்ள வரக் கூடாது..” என ஒரு இளைஞன் சத்தமிட, ஆமோதிப்பாய் பல இளைஞர்கள் கூச்சலிட்டார்கள்..

சபையில் அமர்ந்திருந்த பெரியவர்களிடம் திரும்பியவள், “அவங்க கோவில் உள்ள வரலாமா..?” எனத் தணிவாய் கேட்பது போல இருந்தாலும், குரலில் கொஞ்சம் திமிர் இருந்தது..

முன்னே நிற்பவள் போலீஸ் என்பதால் அவளைப் பகைத்து கொள்ள விரும்பாதவர்கள், “சரி..” எனத் தலையசைக்க,

“உள்ள வாங்க..” என அனைவரையும் அழைத்தவள் அமரச் சொன்னாள்..

அவர்கள் அனைவரும் அமர்ந்ததும், தூரமாய் நின்ற போலீஸ் அதிகாரிகளை அருகே அழைத்தவள் காதில் ஏதோ கூறி முடித்து,

“என்ன பிரச்சனை..?” எனக் கேட்டாள்..

இவள் பேச ஆரம்பித்தது முதல் ஒரு அதிகாரி அனைத்தையும் வீடியோ எடுக்கத் துவங்கினார்..

“மேடம் எங்க வூட்டு பொண்ண அந்த சாதிகார பய தூக்கிட்டு போயிட்டான்..” கீழே அமர்ந்திருந்த ஒருவன் சொல்ல,

“சரி, எங்க கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்துட்டிங்களா..?” என்றதும் வாயை மூடிக் கொண்டனர்..

“இவங்க பொண்ணு எதுக்கு நீங்க கடத்துனீங்க..?” மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி அவள் கேட்க,

“இவங்க பொண்ணு எந்த சாதிகாரப்பய கூட ஓடிப் போனாவளோ..? எங்க கிட்ட கேட்டா எப்படி..?” ஓரமாய் நின்ற ஒருவன் எகிற,

“சரி, ஆனா இவங்க உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்கலே அப்போ எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிடலாமா..?” ஆணித்தரமாய் அவள் கேட்டதும்,

“ஏலே எங்க வந்து யாரு கிட்ட பேசுறவ..? சிதச்சிடுவோம் பார்த்துக்க..”கனியின் முன் விரல் நீட்டி எச்சரித்தவன்,

கூட்டத்தில் நின்ற சகாக்களிடம், “நம்ம சாதி பவர் தெரியாம பேசுறா மாப்ள..பயபுள்ளைக்கு நம்மள பத்தி தெரியாதுல..” என்க..

கை நீட்டியவனை அடித்துவிடும் வேகமிருந்தாலும், கைகளை மடிக்கி அமைதி காத்தவள்,

“ஐயா, எங்க சைட்ல நாங்க சொல்ல வேண்டியத சொல்லிட்டோம்..இன்னைக்கு சாய்ந்திரத்துக்குள்ள அவங்க பொண்ணு வீடு போகலன்னா அரெஸ்ட் பண்ண சொல்லி மேலிடத்து உத்தரவு..இதுக்கு மேல நீங்க தான் முடிவு பண்ணனும்..” எனவும்,

“என்ன மா அரெஸ்ட்னு சொன்னதும் அப்படியே அடங்கிருவோம்னு நினைச்சுட்டியா..? வீரப் பரம்பறை எங்களோடது..” என்றவர்களை விடுத்தவள் அங்கிருந்த பெண்கள் கூட்டத்திடம் திரும்பி,

“ஏமா, இங்க இருக்க ஆம்பளைங்க எல்லோரும் வெளிநாடு போயிட்டு வந்துட்டு இருக்கவங்க தான்..வீனா, எல்லார் மேலயும் கேஸ் பதிவாச்சுன்னா அடுத்து அவங்க உள்ளூர விட்டு எங்கயும் போக முடியாது..நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்..” என்ற கனியிடம்,

“மேடம், நாங்க கீழ் சாதிக்காரங்கன்னு நாங்க கொடுத்த கம்ப்ளைன்ட்ட எடுத்துக்காம, அவங்க கிட்ட சமரசம் பேசுதியலா…?” என்றான் ஒருவன் எழுந்து..

“கொஞ்சம் அமைதியா இருங்க..” என்றவள்,

“இன்னும் ஒரு மணி நேரம் தரேன் ஐயா..அதுகுள்ள புள்ளைய இங்க வந்து விடச் சொல்லுங்க..” என அப்படிக்கட்டிலே அமர்ந்துவிட, கூட்டத்தில் சலசலப்பு கூடியது..

அவள் அமர்ந்த பத்து நிமிடங்களில் சரம் சரமாய் போலீஸ் வண்டி ஊருக்கு வெளியே வந்து நின்றது..

அங்கே நடக்கும் சலசலப்புகளைக் கடந்து நடுநாயகமாய் அமர்ந்திருக்கும் தனது சகோதரியை நாடி வந்தான் பரத்..
சகோதரியை பார்க்க வேண்டி நேற்று தான் ஊரில் இருந்து வந்திருந்தான்..

பரத்தைக் கண்டதும் என்னவென புருவம் உயர்த்த, ஒன்றுமில்லை எனத் தோள் குலுக்கியவன் அவளுக்கு அருகே கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்..

இப்போது ‘போ’ எனச் சொன்னாலும் போக மாட்டான் என்பதை அறிந்த கனிஷ்காவும் அவனைக் கண்டு கொள்ளாமல், தனது அலைபேசியில் இருந்து சில மெசேஜ்களை வாயிலில் நின்ற அதிகாரிகளுக்கு அனுப்பியவள்,

“பரத், வீட்டுக்கு போ..” எனச் சொல்ல, காது கேளாதவன் போல அமர்ந்து கொண்டான்..

அவள் கொடுத்த அவகாசத்தில் அரை மணி நேரம் கடந்திருக்க, கோவிலுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது..

கான்ஸ்டபிள் ஒருவன் உள்ளே ஓடி வந்து, “மேடம், எம்.எல்.ஏ உங்களை வரச் சொன்னார்..” அவன் சொன்னதும் கூட்டத்தினரிடம் பார்வையை ஓட்ட, மேல் ஜாதியினரின் முகத்தில் எக்காளப் புன்னகை..

“வரேன்..” எனப் பதிலுரைத்தவள், வெளியே சென்று அவருக்கு வணக்கம் வைத்தாள்..

“ஏமா, ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு மாசம் ஆகல, அதுக்குள்ள எதுக்கு மா இந்தக் கேஸை எடுத்த..?”

அவரது அதட்டலைப் புறம் தள்ளியவள் மென்மையான குரலில், “சார், நீங்க வந்து பேசுங்க பிரச்சனை கொஞ்சம் முடிஞ்சிரும்..” என்ற கனிஷ்காவை முறைத்த எம்.எல்.ஏ

“என்னால முடியாது..? இங்க நிக்கிற போலீஸ் காரப் பயலுங்க எல்லாம் கிளம்புங்க..எங்க சாதிக் காரனுங்க அதைப் பார்த்துப்பானுங்க..” என்றதும்

“அந்தப் பொண்ண இப்போ விட்டுட்டா பிரச்சனை முடிஞ்சது சார்..” என்றவளும் தான் பிடித்த பிடியில் நிலையாய் நின்றாள்..

“இங்க பாரு நான் சொன்னா என் சாதிகாரனுங்க பொண்ண விட்டிருவாங்க தான்…ஆனா என்னால சொல்ல
முடியாது..” ஸ்திரமாய் மறுப்பவரிடம்,

“ஏன் சார்..” என்க

“இங்க இந்த நாற்காலில சும்மா உட்கார்ந்திருக்கம்னு நினைக்கிறீயா..? சாதி இல்லனா அரசியல் இல்ல..அந்த அரசியல் இல்லனா எங்க பொழப்ப நாங்க எப்படி ஓட்டுறது..இன்னைக்கு இந்த நாய்களுக்காக என் சாதிக்காரனா நான் பகைச்சுகிட்டா நாளைக்கு யார் எனக்கு ஓட்டு போடுவா….நாலு பேர் வெட்டிட்டு செத்தா ஒண்ணும் ஆகிடாது..நீங்க எல்லோரும் இங்க ஆட்டுனது போதும் கிளம்புங்க..” அசிங்கமாய் பேசுபவனை முறைத்தவள்,

“சார் அவ்வளவு தானா..?” என்றதும்,

தனக்குப் பின்னே நின்றவனை அருகே அழைத்து சப்பென ஒரு அறை வைத்த எம்.எல்.ஏ,
“இந்த அறை உனக்கு விழுறதுக்கு முன்னாடி கிளம்பு..நான் என் காருல தான் உட்கார்ந்திருப்பேன்.. புரிஞ்சுதா..” படபடப்பாய் மொழிந்தவர் காரில் ஏறி அமர, அவரிடம் அடி வாங்கியவன்,

“ஏமா, ஐயா சொன்னா சரியா தான் இருக்கும்…சும்மா அவரை பகைச்சிட்டு ட்ரான்ஸ்பர் வாங்கி ஊர் ஊரா சுத்தாம போய் சொல்றத பண்ணு மா..” கன்னத்தை தடவிக் கொண்டே அட்வைஸ் கொடுத்தான்..

நிதானமாய் கண் மூடித் திறந்தவள், தனது கையடக்க மொபைலை வெளியெடுத்து, காருக்கு அருகே சென்றாள்..
கண்ணாடியை மேலேற்றி ஏசியில் அமர்ந்திருக்கும் எம்.எல்.ஏவின் புறம் குனிந்து,

ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் மடக்கி கண்ணாடியயைத் தட்ட, வின்டோவை இறக்கிய எம்.எல்.ஏவிடம் பேச ஏதுவாக, கதவு மீது கைகளை மடக்கி வைத்தாள்..

“என்ன நீ கிளம்புறீயா இல்ல, வேற யாரையாவது விட்டு உன்கிட்ட பேச சொல்லனுமா..?” என்றவரின் கேள்விக்கு தனது மொபைலை எடுத்து படமாய் ஓடவிட்டவள்..

அதில் இவ்வளவு நேரம் அவன் பேசியவை அனைத்தும் படமாய் ஓட, “டியூட்டியில இருக்கிற போலீஸ் அதிகாரிகளை அவங்க வேலை செய்ய விடாம தடுத்துட்டீங்க, கலவரத்தை வாலன்ட்டியரா உண்டு பண்ணி ஊரோட அமைதிய கெடுத்ததுக்காக..” மேலே பேசிக் கொண்டே சென்றவளை இடைமறித்தவர்,

“பொட்டக் கழுத…என்ன மிரட்டி பார்க்குறீயா..?” எனக் கேட்க,

“மிரட்டல் எல்லாம் அல்லு சில்லரைங்க பண்ற வேலை..” என நிறுத்தியவள், கைகளை நன்றாக ஊன்றி, “ நான் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்.. டிப்பார்ட்மென்ட்ல என்னைப் பத்தி விசாரிச்சிட்டு இந்த மாதிரி சிரிப்பு காமி.. வீடியோ வெளியே வுட்டேன் மவனே நடுரோட்ல நாயா தான் அலையனும்..” பொடியவள் மிரட்டியதும் பார்வையை அவள் பின்னே ஓட்டியவன்,

“அந்தப் படிக்கெட்டுல இருக்கிறது தான் உன் தம்பியா..உனக்கு ஒரு குழந்தை கூட இருக்காமே..” என்றதும்,

நக்கலாய் இதழ் வளைத்தவள், “உன்னால முடிஞ்சா அவனோட சுண்டு எப்படி சுண்டு விரல அசைச்சு பாரு.. எவிடென்ஸ் இல்லாம சிதச்சிருவேன்.. அப்புறம் என்ன சொன்ன என் குழந்தைய..ம்…மன தைரியம் இருக்க மனுஷனா இருந்தா இல்ல இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்ன பொட்டக் கழுதன்னு சொன்னல்ல ம்ம்..நீ ஒரு ஆம்பளையா இருந்தா என் பொண்ண தூக்கிப் பாரு..” அவரது கண் முன்னே சொட்டக்கிட்டு பதிலுரைத்தாள்..

மேலும் அவர் புறம் குனிந்தவள், “நீயே வந்து பேசி அந்த பொண்ண இப்போவே இங்க விடச் சொல்லு, இல்லனா ஒரே தட்டு தான் எங்க எங்க இந்த வீடியோ போகனுமோ அங்க அங்க போயிடும்..” தெனாவெட்டாய் உரைத்தவள் காரின் கதவைத் திறந்து வைத்து, அவரை வெளியே வரச் சொன்னாள்..

வசமாய் மாட்டிக் கொண்டோம் என்பதை உணர்ந்தவரும் தனது மிடுக்கை விட்டுவிடாமல், அடுத்து பேச வாயைத் திறக்கும் முன் அங்கே பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர்..

வாயை மூடிக் கொண்டு கனியின் பின்னே விரைந்தவர் தங்களது சாதியினருக்கு அருகே சென்று சன்னமான குரலில், “நிலமை நம்ம கைமீறி போச்சு அந்த புள்ளைய இங்க கொண்டு வந்து விடுங்க..” எனச் சொல்லியதும், கூட்டத்தினரின் கால் மணி நேர சலசலப்புக்கு பின், அப்பெண் அழைத்து வரப்பட்டாள்..

மூன்று ஆடவன்கள் கோவிலின் வாசல் வரைக்கும் கொண்டு வந்துவிட, கனியின் கழுகுப் பார்வை அவர்கள் யார் யாரென பார்த்து வைத்து கொள்ள,

“அதானே மா உங்க பொண்ணு..?” நடந்து வருபவளை கைநீட்டி கனி கேட்டதும், அப்பெண்ணின் தாய் ஓடிச் சென்று அனைத்து கொள்ள, அவர்களை விழியசைவில் தனது வண்டியில் ஏற்றியவள் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தாள்..

அனைத்திலும் வேகம்..பத்திரிக்கையாளர்கள் அப்பெண்ணை படம் பிடித்து விடக் கூடாது என்ற வேகம் அவளுக்குள்.. பின் வாழ வேண்டிய பெண் அல்லவா..?

கீழ் சாதியினர் எனச் சொல்லப்படுபவர்கள் இப்போது சண்டைக்குத் தயாராய் நிற்க, இதர போலீஸ்களில் உதவியோடு அவர்களை அங்கிருந்து அகற்றியவளின் பார்வை இப்போது மேல் சாதியினர் மீது விழுந்தது..

தேவியை அனுப்பியதும், பின்னோடு பத்திரிக்கையாளர்களும் விரைந்திருக்க, அங்கிருந்த சொற்ப போலீஸிடம் தனது பார்வையை பதித்து கொண்டே அங்கிருந்து கூட்டத்திற்கு பின்னால் நின்ற மூவரின் அருகே சென்றவள், நிதானமாய் ஒரு பார்வை பார்த்தாள்..

இவளின் அமைதியைத் தொடர்ந்து அந்தக் கூட்டமும் அங்கிருந்து சென்றிருக்க, வெளியேறிய எம்.எல்.ஏவின் பின்னோடு வந்து சொடக்கிட்டு அழைத்தாள்..

சொடக்கு சத்தத்தில் திரும்பிய எம்.எல்.ஏவின் கன்னத்தில் சப்பென ஒரு அறை வைக்க அனைவருமே அங்கு அரை நொடிகள் பேச்சற்று நின்றுவிட்டனர்..

இவளது நல்ல நேரமோ அல்லது அவரது நல்ல நேரமோ இன்றைக்கென்று தொண்டர்கள் யாருமில்லாது வந்திருந்தார்..

வாங்கிய அடியில், “ஏய்..” என கர்ஜிக்க,

“என்ன ஏய்..? பொம்பளைங்கன்னா உனக்கு கேவலமா போச்சா..கொன்னு குழில இறக்கிடுவேன்..” என்றவளின் கண்களில் சிவப்பேறியிருக்க, வலுக்கட்டாயமாக அவ்விடம் விட்டு அவளை இழுத்து வந்தான் பரத்..

பரத் இழுந்து வந்து காரில் ஏற்றும் வரையிலும் அதே முறைப்புடன் இருந்தவளிடம்,
“கனி, உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது..” என்றான்.

அவனுக்குப் பதிலுரைக்காமல் இருக்கும் கனியிடம், “ம்ச்ச்” என வெளிப்படையாக சலித்தவன்,
“நாளைக்கு திதி கொடுக்கனும்” என்றாள் அறிவிப்பாய்..

அவனது பதிலில் கண்களை ஒருமுறை அழுந்த மூடித் திறந்தவள், “ம்ம்..” எனச் சொல்ல,

“தயவு செஞ்சி உன் கோபத்தை குறைச்சுக்கோ கனி..இப்போ எனக்கும் பேபிக்கும் நீ மட்டும் தான் இருக்க..ப்ளீஸ்..” வளர்ந்த குழந்தையாய் வண்டியை ஓட்டும் தனது தம்பியின் தலைக் கோதியவள்,

“ம்ம்…” என மறுமுறையும் சொல்ல,

“பேபிய கூட்டிட்டு போகனுமா..?” எனக் கேட்டான்..

அவனது கேள்விப் புரிந்தவள், வேண்டாமென தலையசைத்து தனது தாய் தந்தையின் நினைவுக்குச் சென்றாள்..

இரண்டு வருடம் முன்பு இந்த நாள் மட்டும் அவள் வாழ்வில் இல்லாமல் போயிருந்தால், அந்த ஆக்ஸிடென்ட் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் நினைக்கும் போது நெஞ்சம் படபடத்தது..

அழக் கூடாது ஆயிரமாவது முறையாக தனக்குள் சொல்லிக் கொண்டவள் ஒரு ஆழ்ந்த பெருமூச்சைவிடுக்க, தனது தமக்கையின் மனநிலை புரிந்தவன் போல, அவளது கைகளில் அழுத்தம் கொடுத்தவன்,

“கனி, எப்பவும் உனக்கு நான் இருப்பேன்..” என்றான்..

காவல் நிலைய வாசலில் நின்ற பத்திரிக்கையாளர்களைக் கடந்து உள்ளே நுழைய, தனது அறையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அந்த பெண்ணுடன் இன்னும் மூன்று பெண்கள் இருந்தனர்..

கனியின் பின்னோடு நுழைந்த பரத், அங்கிருந்த சேரில் அமர்ந்து கொள்ள, ‘இவன் அடங்கமாட்டான்’ பரத்தை மனதால் கனி திட்டினாலும்,

வெளியே நின்ற ஏட்டை அழைத்தவள், “அந்த ஊருக்கு ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கு..ரவுன்ட்ஸுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லாம் இருக்கணும்னு சொல்லுங்க..அப்புறம், நான் சொல்ற வரைக்கும் யாரையும் உள்ள விட வேண்டாம்..” என்றவள் அந்தப் பெண்ணுடன் அவளது அம்மாவை மட்டும் இருக்க வைத்து மற்றவரை வெளியே அனுப்பினாள்..

அழுது ஓய்ந்த விழிகளுடன், தலை முடிக் கலைந்து பாவமாய் இருக்கும் அந்தப் பெண்ணுக்கு மிக அருகே தனது இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் கனி..

அவளது தோற்றம் ஏதோ போல இருக்க, காதில் வெறும் ஹெட்செட்டை மாட்டி மொபைலை நோண்டுவதைப் போல நடித்து கொண்டிருந்தான் பரத்..

“உன் பேரு என்ன மா..?” கனி கேட்கவும், மெல்லமாய்

“தேவி..” என்க, அவர்கள் பேசுவதைத் தான் உன்னிப்பாய் கேட்டுக் கொண்டிருந்தான் பரத்..

“தேவி, அழகான பேரு..என்ன ஆச்சு மா..?” என மேற் கொண்டு கேட்க, இவ்வளவு நேரமும் வாய்க்குள் விழுங்கி வைத்த அழுகை பீறிட்டது..

அவளது இடைவிடாத அழுகை பல மணி நேரமும் தொடர, வெளியே நின்ற கான்ஸ்டெபிளை அழைத்தவள்,
“இவங்களை அவங்க வீட்டுல கொண்டு போய் விடுங்க..ஏமா, நாளைக்கு உங்க பொண்ண கூட்டிட்டு..வேணாம் நாங்களே உங்க வீட்டுக்கு வரோம்..” என்றவள் அனுப்பி வைக்க, இதையெல்லாம் கவனித்தும் கவனியாமல் அமர்ந்திருந்தான் பரத்.

“பரத், பேபி தேடுவா..இன்னைக்கு ஒரு நாள் நீ சமாளி..” எனவும்,

“ம்..நான் பேபிய தூங்க வச்சிட்டு உன்கூட வரேன்..” என்றவனிடம் வராதே எனச் சொன்னாலும் வருவான் எனப் புரிந்தவள் சரியெனத் தலையசைத்தாள்..

அன்று இரவு ரவுன்ட்ஸில் இருந்தாள் கனி, தேவியின் வீட்டுக்கு ஐந்தடி தூரத்தில் தான் காரை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்..

எப்போதும் போல இடுப்பில் துப்பாக்கி இருக்கிறதா எனச் சரிபார்த்து கொண்டவள், காரின் மேலே ஏறி படுத்திருக்கும் பரத்தின் மீதும் அங்கிருந்த பிரதான சாலையின் மீதும் ஒரு பார்வை வைத்திருந்தாள்..

நடு சாமத்தைக் கடந்த வேளையில், திடீரென, “அம்மா” என்ற அலறலுடன் சத்தம் கேட்க, தேவி வீட்டில் தான் விளக்கெறிந்து கொண்டிருந்தது..

படுத்திருந்த பரத் அடித்துபிடித்து எழுந்தமர, வேகமாய் அந்த வீட்டின் கதவைத் தட்டி உள்ளே நுழைந்தாள் கனி..
தேவியின் அம்மா அங்கிருந்த ஒரு ஜன்னலின் வழியே, “ஏம்மா எங்கள வுட்டு போயிராத தாயி..” எனக் கெஞ்ச, அவளது அப்பாவோ தள்ளாத வயதில் அந்தக் கதவை இடித்துக் கொண்டிருந்தார்..

அவரை ஒதுங்குங்க எனச் சொன்னவள், பின்னே நின்ற பரத்திடன் கண்ணசைக்க, வேகமாய் பின்னிருந்து ஓடி வந்தவன் இடித்த இடியில் தகரக் கதவு கீழே விழுந்தது..

மூச்சுக்குத் திணறுபவளின் கால்களை கனிப் பிடித்து உயர்த்த, அங்கிருந்த ஸ்டூலில் ஏறி முடிச்சுகளை விடுவித்தவன், அவளைத் தூக்கி கட்டிலில் கிடத்தினான்..

முகத்தில் தண்ணீரைப் பீய்ச்சியடித்ததும், லேசான மயக்கமும் முற்றிலும் வடிய எழுந்தமர்ந்த தேவி, “எதுக்கு என்னை காப்பாத்துன..சொல்லு…” என்றாள் கனியின் கைகளைப் பிடித்து உலுக்கி..

“ரிலாக்ஸ் தேவி..” தனது கைகளைப் பிடித்து சட்டையைப் பிடித்தும் புலம்பும் தேவியின் முதுகை வருடியவள்,

“இப்போ எதுக்கு இப்படி பண்ணுன..”என்றதும்,

“நான் எதுக்கு உயிரோட இருக்கனும் சொல்லு…என்கிட்ட ஒண்ணுமே இல்லையே நான் எதுக்கு இருக்கனும்..” அழுது சத்தமிடுபவளின் அர்த்தம் புரிந்ததும் அவளது அன்னை மார்பில் அடித்துக் கொண்டு அழ, தந்தை நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்துவிட்டார்..

கனிக்கு அந்த சூழல் மிகப் புதிது, பரத் அந்தப் பெரியவரைத் தாங்கி முகத்தில் தண்ணீர் தெளிக்க,

“அப்பா அப்பா..நான் பாவி பா…என்னால முடில ப்பா…திருப்பி சண்டை போட முடில பா…” என்ற தேவி தந்தையின் காலைப் பிடித்து கதற,

மயக்கத்தில் இருந்து எழுந்தவர், “உன் அண்ணனே உனக்கு எமனா வந்துட்டானே..” கத்தி அழுதவர் அடுத்த வார்த்தை பேசும் முன் உயிரை விட்டிருந்தார்..

சொற்ப நிமிடத்தில் தனது கண்முன்னே ஒரு உயிர் போய்விட்டது, பரத்தும் கனியும் அதிர்ச்சியுடன் ஒருவரின் முகத்தை மற்றொருவர் பார்த்து நிற்க, அதற்குள் அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டனர்..

அடுத்த நாளே தகனம், ஊர் முழுவதும் தேவியின் கதை தான் ஓடிக் கொண்டிருந்தது..

அதே ஊரம்மன் கோவிலின் வாயிலில் நடமாடும் பிணமாய் தேவி நிற்க, அவளைத் தாங்கி பிடித்து கொண்டு அவளது அன்னை..

அதே போன்ற சாதி வெறி கூட்டம், அனைவரையும் கொன்று குவிக்கும் கோபத்துடன் கனி..

“கெடுத்தவனுக்கே புள்ளைய கட்டி வைங்க மேடம்..”என்றவர்கள் சத்தமிட,

“யவனோ கெடுத்துட்டு எங்க சாதிக் காரன் மேல பழிய போடுதீயளா..?” என அவர்கள் பங்கிற்கு எகிறிக் கொண்டிருந்தனர்..

“மேடம், நாளைக்கு எங்க புள்ள வாழ்க்க என்ன ஆகுறது..?” தேவியின் உறவினர் தாலி கயிறை கனியின் கையில் கொடுத்து,

“கல்யாணத்த முடிச்சு வைங்க மேடம்..” எனக் கூச்சலிட, கனிக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை..

“தேவி, உள்ள வா மா..” என்றதும் அவளது அன்னையுடன் பதுமையாய் உள்நுழைய,

“யாரு..” எனக் கூட்டத்தினரை தேவியிடம் காட்டி கேட்டவளுக்கு எப்படி அந்தக் கேள்வியை முடிக்கவெனத் தெரியவில்லை.

அங்கிருந்த அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை ஒருவனில் நிலைத்து நின்று உடல் வெளிப்படையாக நடுங்க, அடுத்தக் கேள்வியை கனி கேட்கும் முன், அவளது கையில் இருந்த தாலியை பறித்து தேவியின் கழுத்தில் கட்டினான் பரத்..

ஆட்டம் அனல் பறக்கும்..

Un Kannil Inbangal Kanbein – 11

11

பேசிக் கொண்டிருக்கும் போதே போனில் விசில் அடித்து தொடர்பைத் துண்டித்த சந்த்ருவை நினைக்கும் போதே
பத்திக் கொண்டு வந்தது அவனுக்கு..

‘கருப்பு’ அவனுக்கு மிகப் பிடித்த நிறம், எதிர்ப்புகளின் நிறம் கருப்பு என்பதால் அவனுக்கு பிடிக்கும் என்பதெல்லாம் அல்ல, அவனறிந்த, அவன் செய்யும் தொழில்களுக்கு ஏற்ற நேரமும் நிறமும் இருள் என்பதால் அவனுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து கருப்பு அவனது பிடித்தம்..

உலகில் ஒரு மூலையில் இருந்து கொண்டு மற்றொரு மூலையை கிடுகிடுக்கச் செய்ய ஒருவனால் முடியுமா..? முடியும் என்பதற்கு சான்று இவனே…

“தி ப்ளாக்”, “தி ப்ளாக் கோஸ்ட்” என அழைக்கப்படுபவனது மற்றொரு பெயர், “ஸ்டுப்பிட் மேன்”..

அனைத்து நாடுகளும் வலைவீசித் தேடும் கார்பரேட் கிருமினல், ஹேக்கர் ஆப் தி வேர்ல்ட் …இவனை அறிந்தவர்கள் யாருமில்லை..!

இருபது அடி கொண்ட விசாலமான இருட்டு அறைக்கு நடுவே இளமஞ்சள் நிறத்தில் விளக்கொளி வீச, இரண்டு இருக்கைகள் போடப்பட்டதற்கு நடுவே செஸ் போர்ட் இருந்தது..

சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மேஜை முழுவதும், ஃபைல்களாய் குவிந்திருக்க, மற்றொரு சுவரில் 56” இன்ச்சில் டிவி பொருத்தப்பட்டு இன்றைய ஷேர் மார்க்கெட் நிலவரம் ஓடிக் கொண்டிருந்தது.

மற்றொரு சுவரில் புரொஜெக்டர் பொருத்தப்பட்டிருக்க, அதில் இந்தியாவின் வரைப்படம் காணப்பட்டு ஆங்காங்கே பச்சை நிற விளக்குகள் ப்ளிங்க் ஆகின..

அதன் மற்றொரு சுவரில் ஹிட்லரின் ஆளுயற புகைப்படம் மாட்டி வைக்கப் பட்டிருக்க, அனைத்திலும் கடுவன் பூனையாய் இருக்கும் ஹிட்லர் கூட அவன் மாட்டி வைத்திருந்த புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்தார்..

ஹிட்லரின் அறையை ஒட்டி சின்னதாய் ஒரு வாயில் இருக்க, அது ஆறு அடி கொண்ட சின்ன சமையல் அறை, அந்த அறையில் ஓரத்தில் ஆறடிக்கும் கூடிய உயரத்தில் முறுக்கேறிய புஜங்களை தனது இடுப்பில் கை வைத்து மெருக்கேற்றி காட்டிக் கொண்டிருந்தான் அவன்..

முட்டிக்கு மேலாய் சிக்கென இருந்த ஹாவ் பேன்ட்டும், கையில்லாத பனியனும் அணிந்திருந்தவனின் நெற்றியில் அமெரிக்க கொடியை போன்ற கர்சீப்பை கட்டியிருந்தான்..

இதழின் ஓரத்தில் புகையை கக்கி எரிந்து கொண்டிருந்த கிராம்பு மனம் கொண்ட ப்ளாக் சிகிரெட்டை விரல் தொடாமல் புகைத்து கொண்டிருந்தான் அவன்…திரும்பி நின்று கெட்டிலில் வெந்நீரை சூடாக்கியவனின் கைகள் கடுங்காபியை போட்டு முடிக்க, ஒரு கையில் காபியுடனும் மறுகையில் ஐபோனுடனும் நடந்து வந்தவனது முகத்தில் இருக்கும் இறுக்கத்தை மீறி கண்களில் ஒரு திமிர் குடி கொண்டிருந்தது..

இதழின் ஒரு பக்கத்தில் புகைந்த சிகிரெட்டை நாக்கைச் சுழற்றி மறுபக்கம் கொண்டு சென்றிருக்க, அதன் ஆயுள் முடியப் போகும் தருவாயில் கையில் எடுத்து ஆஸ்ட்ரேவில் வைத்து அழுத்தியவனின் உதடுகள்,
“மை லவ்..” என்றது சந்த்ருவை நினைத்து..

இவனது விரலின் அழுத்தத்தால் சிதைந்த போன சிகிரெட் துண்டினை ரசித்து பார்த்தவனின், இடக் கை வாய்க்கு அருகே ப்ளாக் காபியை கொண்டு செல்ல, சர்க்கரை இல்லாத அந்த காபியை இரசித்து குடித்தான் அவன்..

க்ளாஸின் கடைசி சொட்டு வரையிலும் நிதானமாய் குடித்தவனின் வலக் கையில் இருந்த போன் இப்போது அலற,
“வாஹ் கோன் ஹே..?” ஹிந்தியில் அவன் யார் என்பதை மட்டும் இவன் கேட்க,

“சாப்..அவன் சென்னைல இருந்து உங்க கிட்ட பேசிருக்கான்..” என்பதை மட்டும் சொன்னவனிடம்,

“தெரியும்..அவனை நான் பார்க்கனும்..”

“சார்..அவன் லோகேஷன் எதையும் ட்ராக் பண்ண முடியாத மாதிரி ப்ராக்ஸி பண்ணிருக்கான்..”

“அவனோட லாஸ்ட் லொக்கேஷன் நுங்கம்பாக்கம்…நான் முத்துனு ஒருத்தனோட அட்ரெஸ் அனுப்புறேன் அவன் இப்போ எங்க இருக்கான் என்ன பண்ணுறான்னு எல்லாம் எனக்குத் தெரியனும்..முடிஞ்சா அவனைத் தூக்கிடு..” என்றவன் ஆணையிட,

“முத்து யாரு..”

“அது உனக்குத் தேவையில்லாதது..நான் சொன்ன வேலைய உன்னால முடிஞ்சா செய் இல்லனா நான் வேற ஆள் பார்த்துக்கிறேன்..” என்றவனின் குரலில் இருந்த அழுத்தத்தில்,

“இல்ல சார், நான் பார்த்துக்கிறேன்..” என்பதை மட்டும் சொல்லி வைத்துவிட்டான்..

இங்கே கண் மூடி இருக்கையில் சாய்ந்தவனுக்குத் தெரியும், சந்த்ருவை நெருங்குவது சுலபம் அல்ல என்பது..

அங்கே கட்டிலில் குப்புற படுத்து யோசித்துக் கொண்டிருந்தவனுக்கும் ப்ளாக் கோஸ்ட் பற்றியே எண்ணமே,
சந்த்ருவிற்கு தெரியும் தான் தன்னைச் சுற்றிப் போட்டு வைத்திருக்கும் பாதுகாப்பு வளையத்தைவிட்டு கொஞ்சம் வெளியே வந்தால் மட்டுமே ப்ளாக் கோஸ்ட்டைக் காண முடியும் என்பது..

மூளை எவ்வளவு வேகமாக கணக்கிட்டாலும், அவனை நெருங்கும் மார்க்கம் என்னவோ பூஜ்ஜியத்திலே நிற்க,
ஆனந்தை தனது அறைக்கு வருமாறு அழைத்தான்..

கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழையும் ஆனந்திடம், “ஆனந்த், எனக்கு ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கர் வேணும்..” எனச் சொல்ல,

“சார்..” திடுதிப்பென கேட்கும் சந்த்ருவிடம் புரியாத பார்வையை இவன் செலுத்தினான்..

“ஆனந்த், டூ யூ ஹியர் மீ..?”

“எஸ் சார்..”

“எனக்கு இந்த உலகத்துலயே பெஸ்ட் கம்ப்யூட்டர் ஹேக்கர்ஸ் லிஸ்ட் வேணும்..” என்றவன் அவ்வளவு தான் என்பதை போல கண்களை இறுக்க மூடிக் கொண்டான்..

ஆனந்த் அவ்வறையை விட்டு வெளியேறும் சத்தம் கேட்டதும், எழுந்து கதவினை உள்தாழ்ப்பாள் போட்டவனின் கால்கள் அங்கு இடது புறத்தின் ஓரத்தில் மூன்று ஆளுயற கண்ணாடியில் கை வைக்க, முதல் கண்ணாடியிலிருந்து,

“பின் ப்ளீஸ்..” என்ற வாக்கியம் மிளிர்ந்து பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்பது வரையில் உள்ள எண்கள் மிளிர்ந்தன..

தனது ஐந்தடக்க குறியீட்டு எண்ணை அழுத்தவனின், கைகள் மறுபடியும் அக்கண்ணாடியில் பதிந்தெழ, கண்ணாடியில் பிம்பம் மாறி கதவினைக் காட்டியது..

தனது எதிரே தெரிந்து கதவின் நம்பர் லாக்கை நீக்கியவன் உள்ளறைக்குச் சென்றுவிட, திறந்த கதவுகள் மறுபடியும் மூடிக் கொண்டது..

***

இன்னும் தேவியின் பிரசவத்திற்கு பத்து நாட்கள் மீதமிருந்த நிலையில், அன்று அதிகாலையில் இருந்தே முதுகு தண்டில் லேசான வலி இருந்து கொண்டேயிருந்தது..

காலையில் பேப்பர் படித்து கொண்டிருந்த பரத்தின் முன்னால் டீயை வைத்தவளின் முகம் வலியில் சுருங்க, ஓரக்கண்ணால் இவளைப் பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவளது வலி புரிந்தது..

அவ்விடம் விட்டு நகரப் போனவளின் கரம் பிடித்து சேரில் அமர வைத்த பரத்திடம் இருந்து அந்த வலியிலும் கூட தனது கைகளை வேகமாய் இழுத்து கொண்டவளிடம்,

“என்ன ஆச்சு தேவி..?” என்றான்..

“ஒண்ணுமில்லையே..” அவசரமாய் பதில் சொன்னவளிடம்,

“இல்ல, உன் முகம் சரியில்லையே..வலி இருக்கா..?” என கேட்டு கொண்டிருக்கும் போதே கனி வீட்டினுள் பிரவேசித்தாள்..

இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கனி அறியாத போதிலும், தேவியின் முகம் வலியில் சுருங்குவதைக் கண்டவள்,

“ஏய் தேவி, என்ன ஆச்சு..?” என்றாள்.

இவ்வளவு நேரமும் பரத்திடம் ஒன்றுமில்லை என்றவள்,கனி கேட்டதும்,

“தெரில கனி..பெயின் இருந்துட்டே இருக்கு..” என்பதை மட்டும் சொன்னாள்..

தன்னிடம் சொல்லவில்லையே என பரத்தின் மனம் முரண்டிய போதும், அதை விடுத்தவன், “எப்போ இருந்து வலிக்கு..?” என விடாமல் கேட்க,

“ஒரு மூணு மணில இருந்து..” என்றவள் அவனது முகம் பார்க்காமல் தலை குனிந்து கொண்டாள்..

“கனி, ஆஸ்பிட்டல் போகலாமா..?” என்ற பரத்தின் பரபரப்பிற்லு,

“டேய் சூட்டு வலியா இருக்க போகுது..காமாட்சி அம்மா தேவிக்கு கஷாயம் வைங்க..” என்றவள் உடைமாற்றி
எதற்கும் இருக்கட்டுமென, மருத்துவமனைக்குத் தேவையான உடையெடுத்து வைக்க,
அதற்குள் வீட்டின் வேலையாள் காமாட்சி கொடுத்த கஷாயத்தையும் மீறி முன்பிருந்ததைவிட வலிக்க ஆரம்பித்தது..

வலியில் அவள் முனங்கவும், பதறி எழுந்த பரத்,

“என்ன டி பண்ணுது..?” எனத் தவிப்பாய் கேட்க, வலி அதிகரிக்கவும் தன்னையுமறியாமல் பரத்தின் சட்டையைக் கொத்தாய் பற்றி அவனது நெஞ்சில் முகம் புதைத்திருந்தாள்..

தேவியின் சத்தத்தில் காமாட்சியிடம் அரசியைப் பார்த்து கொள்ள பணித்துவிட்டு, நாராயணனை கார் எடுக்கப் பணித்தவள், பரத்திடம் தேவியைத் தூக்கி காரில் ஏற்றும் படி சொல்லிவிட்டு அவள் காரின் முன்னிருக்கையில் ஏறிக் கொண்டாள்..

பிரசவத்தில் வலி முதுகுதண்டினை யாரு ஒடிப்பது போல, எழும்புகள் மொத்தமும் நொறுங்குவதைப் போல கூடிக் கொண்டே போக, தான் இனி உயிருடன் இருக்க மாட்டோம் என்பதைப் போன்ற பிரம்மைத் தோன்றியதும்,
“என்னங்க..” என்ற அழைத்தாள் தேவி..

தேவியின் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவளது மெல்லிய அழைப்பு பிடிபட, “இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டல் போயிடலாம் மா..கொஞ்சம் பொறுத்துக்கோ..” என்றான் சமாதானமாய்..

அவனிடம் அதுஅல்ல என்பதைப் போல மறுப்பாய் தலையசைத்தவள், “எனக்கு ஏதாவது ஆகிட்டா…பாப்பாவ ஆசிரமத்துல விட்டிருங்க..” என்று சொல்ல, வலியில் புலம்புகிறாள் என நினைத்தவன் அமைதியாய் இருந்தான்..

“நானும் பாவம் இந்தப் புள்ளையும் பாவப்பட்ட புள்ளை தான்..இரண்டையும் நீங்க சுமக்கனும்னு எந்த தலையெழுத்தும் இல்ல..” என்றவளின் கரம் அவனது கரத்தை அழுத்த,

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தேவி..ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு..” என்றவனின் கண்கள் கலங்கியது,

“ஏதாச்சும் ஆகிட்டா..?” கேள்வியின் நிறுத்தியவள் இப்போது ‘அம்மா’ என சன்னமாய் கத்த,

“ஹே வாயை மூடிட்டு வா டி..” என்றவன் அதட்ட,

“வேற கல்யாணம் பண்ணுங்க..” என்றவளின் வார்த்தை முடியும் போது மருத்துவமனையில் வண்டி நின்றது..

கனி வேகமாய் சென்று நர்ஸை அழைக்க, இருவரது உதவியுடன் ஸ்ட்ரக்சரில் ஏற்றப் பட்டவளின் அலறல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது..

லேபர் வார்டுக்கு கொண்டு சென்ற பின்பும், குழந்தைப் பிறப்பதில் தாமதம் ஏற்பட, நாம சி செக்சன் போகலாம் என்ற மருத்துவரிடம் மறுப்பாய் தலையசைத்த தேவி,

“இல்ல டாக்டர், நார்மல் தான் வேணும்..” என்றாள் உறுதியாய்

அவளின் உறுதியில் சில நிமிடங்கள் மருத்துவர் தயங்க இவள் போட்ட கூச்சலில் நர்ஸின் பேச்சைக் கேட்காமல் உள்நுழைந்த பரத்,

“ஏன் டி…ஆப்ரேட் பண்ணி பேபி எடுக்கலாம்..ப்ளீஸ் சரின்னு சொல்லு..” என்றவன் கெஞ்சிய போதும் மறுப்பாய் தலையசைத்து வலியில் கத்தினாள் தேவி,

மேலும் சில நிமிடங்களில் இதற்குமேல் காத்திருக்க முடியாது என்பதை முடிவாய் சொன்ன மருத்துவர், தேவியிடம்,

“இதுக்கு மேல வெயிட் பண்ணுனா பேபிக்கு ரொம்ப சிக்கலா போயிடும் மா…” எனவும், வேறு வலியில்லாமல் சரியென்றாள்..

பரத்தை அழைத்து விவரம் தெரிவிக்க முற்பட்ட மருத்துவரிடம், “நீங்க எதுவும் சொல்ல வேணாம்..எனக்கு என் குழந்தையும் தேவியும் சேஃப்பா வந்தாலே போதும்..” என்றவன் வேகமாய் கையெழுத்திட்டான்..

அடுத்த நிமிடம் தேவியை ஆப்ரேஷன் தியேட்டருக்கு மாற்றியிருக்க, சுவாசத்திற்காக முற்றிலும் தவித்த தேவிக்கு ஆக்சிஜன் பொருத்தப்பட்டது..

பரத்திடம் முடிந்தவரையில் இரு உயிரையும் காப்பாற்ற முயற்சிக்கிறோம் என மருத்துவர்கள் சொல்லி சென்றுவிட, ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் பரத் வேண்டுதல் வைக்கும் போது கூட தளராமல்,

“டேய், அவா பத்ரமா வருவா..உன் பையனும் தான்..” என பரத்தை தேற்றினாள் கனி.

ஆப்ரேஷன் தியேட்டரில் சுவாசமில்லாமல் தவித்த தேவிக்கு, ஆக்சிஜன் செலுத்தி அனஸ்தீசியா கொடுக்கப்பட்டதும் அவள் ஆழ்மயக்கத்திற்கு சென்றுவிட, முழுவதாய் ஒரு மணி நேரத்திற்கு பின் பாவத்தைக் கடந்த வரமாய் பிறந்தான் அவன்..

வெளியில் அமர்ந்திருந்த பரத்தின் நடுக்கம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டே போக, மனக்கண்ணில் தேவியைத் திருமணம் முடித்த சூழல் படமாய் ஓடியது…

ஆட்டம் தொடரும்..

Un Kannil Inbangal Kanbein – 10

10

சந்த்ருவின் கைகளுக்குள் இருக்கும் அரசியை தன்பக்கம் இழுத்து கொண்டவள், “இன்னொரு டைம் என் பேபி பின்னாடி உன்னைப் பார்த்தேன் தூக்கிட்டு போய் லாடம் கட்டிருவேன்..ஜாக்கிரதை..” வார்த்தைகளைக் கடித்து துப்பியவள், அரசியுடன் அவ்விடம் விட்டு சென்றுவிட்டாள்..

கடுப்புடன் வீட்டுக்குள் நுழையும் கனியையும், அவளுக்கு அருகே மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு வரும் அரசியையும் கண்டவள்,

“என்ன அதுக்குள்ள வந்தாச்சு..?” தனது மேடிட்ட வயிற்றில் ஒற்றைக் கையை வைத்து கொண்டு வந்து கேட்டாள் தேவி.

“அத்த..எனக்கு ஜூஸ் வேணும்..” தன்னுடைய சூவை ஓரமாய் கழற்றி வைத்துவிட்டு வந்து கேட்கும் அரசியிடம்,

“இந்த டைம்ல ஜூஸ் குடிக்க கூடாது பேபி..” கனி கண்டிப்பாய் சொன்னாள்..

“அத்த..நான் உங்க கிட்ட தான் பேசுவேன்..” கோபமாய் பதிலுரைத்த சின்னவளும் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

கோபமாய் போகும் அரசியைத் திரும்பி பார்த்தபடி நிற்கும் தேவியிடம், “அவன் யாரு..?” எனத் திடுமென வினவ,
யாரிடம் கேட்கிறாள் எனப் பேந்த பேந்த விழித்தாள் தேவி..

அவளது முழியைப் புரிந்து கொண்டு, “உன்னைத் தான் கேட்கிறேன் அவன் யாரு..?” என்க

“எவன் யாரு..?” என்றவளிடம்,

“அதான் ஹைட்டா நல்ல கலரா, முடியைக் கூட ஏத்தி சீவி, கண்ணை உருட்டி உருட்டி முழிக்கிறானே அவன் தான்..அவன் யாரு..?” என்ற கனியின் விழி போன திசையில் ஹிருத்திக் ரோஷனின் புகைப்படத்தை தேவி ஒட்டி வைத்திருக்க,

“ஓஹ் அவரைக் கேட்குறீங்களா..?” என்ற தேவியிடம்

“அது என்ன அவர்..அவனுக்கெல்லாம் அவ்ளோ மரியாதை தேவையா..?”

“என்ன இப்படி சொல்லீட்டிங்க அவர் எவ்ளோ பெரிய ஆளு..?” என்றவளின் பார்வையும் தனது ஹிருத்திக்கை தொட்டு மீண்டது..

“என்ன பெரிய ஆளு..?சில்லறைத் தனமா பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனெல்லாம் பெரிய ஆளா..?” எனக் கேட்க,

‘இவங்க என்ன இவ்ளோ சீரியஸா பேசுறாங்க’ என மனம் இடித்த போதும்,

“ச்சீ..அவர் அப்படிலாம் கிடையாதே..” எனவும்

“அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றீயா..?” கோபத்துடன் கேட்டவள் தொடர்ந்து,

“ஆமா அவனை எதுக்கு பேபி டாடின்னு கூப்பிடுறா..?” என்க

“இல்லையே டாடி சொல்ல மாட்டாளே மாமான்னுலா சொல்ல சொல்லிருக்கேன்..” என்ற தேவியிடம்..

“ம்..குட்…டாடின்னு கூப்பிட கூடாதுன்னு ஸ்ட்ரிட்டா சொல்லிடு பேபி கிட்ட..ஆமா அவனை எப்படி பேபிக்கு தெரியும்..?” என கனி சந்த்ருவை மனதில் வைத்து கேட்க,

“நான் தான் சின்ன புள்ளையில இருந்தே காமிச்சிருக்கேனே..” என்றவளிடம்

“வாட்..” என கனி அதிர, சரியாய் அவளது மொபைலும் சினுங்கியது..

முக்கியமான அழைப்பு என்பதால் தேவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கனி நகர, தனது வயிற்றைத் தள்ளிக் கொண்டு அரசியின் அறைக்குள் சென்றவள் அங்கே நோட்டில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்த அரசியிடம்,

“ஏன் தங்கம் ஹிருத்திக் ரோஷனை டாடின்னு சொன்ன..?” ஆத்திரமாய் கேட்கும் அத்தையிடம்

“நான் எப்போ அவரை டாடின்னு சொன்னேன்..?” எனச் சின்னவள் கேள்வி கேட்க,

“அப்போ கனி சொல்றாங்க நீ இன்னைக்கு டாடின்னு சொன்னதா..?” தேவியின் பதிலில் தலையில் அடித்து கொண்ட சின்னவள்,

“லூசு அத்த..மம்மி மாமாவ கேட்கல அவங்க சந்த்ரு டாடியை பத்தி கேட்குறாங்க..” எனச் சொன்னவள் மறுபடியும் நோட்டில் கிறுக்கத் தொடங்கிவிட்டாள்..

எப்போதும் அரசி லூசு எனச் சொன்னாள் அடித்து ஆர்ப்பாட்டம் செய்யும் தேவி, இன்று, ‘ஙே’ என விழிக்க, அறையின் வாயிலில் நின்ற பரத் சத்தமாய் சிரித்தான்..

பரத்தின் சத்தத்தில் திரும்பிய இருவரில், “மாமா, பைக்ல ஒரு ரவுன்ட்..” என அரசி எழுந்து நிற்க,

‘போயும் போயும் இவன் முன்னாடி அசிங்கப்பட்டுட்டோமே’ என முரண்டிய மனதை அடக்கியவள்,

“ஹி ஹி..வாங்க..டி..டிபன் டிபன் எடுத்து வைக்கிறேன்” என அவ்விடம் விட்டு ஓடியே விட்டாள்..

தனது முகத்தை ஆவலாய் பார்த்து நிற்கும், அரசியிடம் கை நீட்டி வா என்றழைக்க ஓரே எட்டில் தாவி அவனது கழுத்தை பிடித்து தொங்கினாள்..

சின்னவளை அழைத்து கொண்டு பைக்கில் பரத் சென்றதும் உள்ளே நுழைந்த கனி, சமையல் அறையில் இருக்கும் தேவியிடம்,

“அவன் யாரு..?” என்க

“அவங்க பேரு சந்த்ரு..”

“உனக்கு எப்படி அவன தெரியும்..?”

“அது வந்து பேபி ஒரு நாள் பார்க்ல ரோட் க்ராஸ் பண்றேன்னு ஓடி கீழே விழப் போனா அப்போ தான் அவங்க வந்து தூக்கி பேபி கிட்ட பேச ஆரம்பிச்சாரு..”

“ம்ம்..அவன எதுக்கு பேபி டாடின்னு கூப்பிடுறா..?”என்க

“அது அவரு அனுஷ் அண்ணா மாதிரியே பேபிய கொஞ்சுனதுன் பேபி அப்பான்னு சொன்னா உடனே நான் அப்பா கூப்பிட கூடாதுன்னு சொன்னேன்..இவா ஒரே அடம் அதான் அவரு டாடி சொல்லுன்னு சொன்னாரு..அதுல இருந்து..”

“அவனை எத்தனை நாளா தெரியும்..?”

“ஒரு ஆறு மாசமா..” எனவும்

“இப்படி தான் தெரியாதவங்க கிட்ட பேபிய பழகவிடுறதா தேவி..” என அதட்ட

“சாரி..” எனத் தலை குனிந்த தேவியிடம்

“இனி பேபிய பார்க் கூட்டி போக வேணாம்..எனக்கோ பரத்துக்கோ எதிரிங்க ஜாஸ்தி..யாரச்சும் பேபிய கடத்துனா சேஃப் இல்ல..காட் இட்..” என்றவள் அவ்வளவு தான் என்பது போல திரும்பி,

“அவன் கிட்ட இனி பேபிய பேச விடாத எனக்குப் பிடிக்கல..” என்றவள் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்..

மழையடித்து ஓய்ந்தது போல் இருந்தது தேவிக்கு, எப்படி திருடன கேட்குற மாதிரி கேள்வி கேட்குறாங்க, நெஞ்சு கூடு விம்மி தனிய, அரசியை அறையில் விட்டுவிட்டு சமையல் அறைக்கு வந்தவன் தனது மனைவியின் நிலையறிந்து அவளை நெருங்கினான்..

பரத் கிட்டே வந்ததும், “ஏதும் வேணுமாங்க..” எனக் கேட்க,

“என்ன ஆச்சு..?” என்றான் அவளின் விலகலைப் பொருட்படுத்தாமல்..

“ஒண்ணுமில்லங்க..” என்றவளிடம் முழங்கைத் தொட்டுத் தன்னைப் பார்க்கத் திருப்பியவன்…

“பேபி சேஃப்க்காக அக்கா பேசுனாங்க..நீ வொர்ரி பண்ணாத..” எனவும்..

“ம்ம்..” எனத் தலையசைத்தவள் அமைதியாகிவிட,

“என்ன ஆச்சு..” எனவும்

“கனி என்னைக் கொன்னு போட்டாக் கூட நான் கவலைப்பட மாட்டேன்..” எனச் சிரித்தாள் தேவி..

தேவியின் தலையை மிருதுவாய் வருடியவன், அவளது விலகலை மனதில் வைத்து தனதறைக்குச் சென்றுவிட்டான்..

தேவி இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கைக்கு காரணமே கனி தானே!

வித்யாவை வைத்து பரத்தும் கனியும் போட்ட ஸ்தமதியின் கேஸ் சிபிஐ’க்கு மாற்றப்பட வேண்டும் என்ற கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது..

இரண்டு நாளில் தனது மனதை திசைத்திருப்பி, அந்தக் கேஸில் இருந்து முழுமையாய் வெளி வந்தவள் இப்போது சென்னையின் மற்றொரு பகுதிக்கு மாற்றலாகியிருந்தாள்..

இருந்தாலும் மனதின் ஓரம் ஸ்தமதியின் நினைவு எழுந்து கொண்டேயிருக்க, அன்று தனது எவிடென்ஸ் ஃபைலை பரத்திடம் தனிப்பட்ட முறையில் கொடுத்து ஜெசிஎன்’னிடம் அதை ஒப்படைத்து அதற்கு ஒரு வழி செய்து தருமாறு கேட்கச் சொன்னாள்..

****

கனி, தன்னை மரியாதையில்லாமல் பேசிச் சென்றதில் இருந்தே அவளை எப்படியாவது அடக்க வேண்டுமென்ற எண்ணம் துளிர்த்து நின்றது சந்த்ருவிடம்..

ஆனாலும் வேறு சில வேலைகள் அவனை உள்ளிழுத்து கொள்ள, அறையில் வந்து அமர்ந்தவனின் கதவு படபடவெனத் தட்டப்பட்டது..

“வெயிட்..” அதட்டலாய் கத்தியவன், மேஜை மேலிருந்த இரு போன்களையும் ட்ராவின் எடுத்து வைத்து, ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்வையை ஓட்டியவன் இப்போது அறையைத் திறந்தான்..

வெளியே சஞ்சீவ் வாசல் நிலையில் கை வைத்து நிற்க, கதவைத் திறந்த சந்த்ரு அவனைவிட கொஞ்சம் உயரமாய் இருந்தான்..

“என்ன..?” வாயால் கேட்காமல் புருவத்தை ஏற்றி இறக்கும் அண்ணனை முறைக்க முடியாமல்,

“எனக்கு இந்த சொத்து எதுவும் வேண்டாம்..” எனத் திடுமெனச் சொல்ல,

‘எனக்குத் தெரியும்’ என்பதைப் போல பார்வை பார்த்த சந்த்ரு, “வேற என்ன வேணும்..” என வாயைத் திறந்து கேட்க,

“எங்களுக்கு இந்த சொத்து வேணாம்..” என மறுபடியும் சொல்பவனிடம் மேலே சொல் என்பது போல கையசைக்க,

“நாங்க இந்தக் குடும்பத்தை சேர்ந்தவங்கன்னு அங்கீகாரம் தான் வேணும்..” எனத் தனது கோரிக்கையை முன்வைக்க, அசராமல் பார்த்து நின்ற சந்த்ரு ஒற்றைப்புருவத்தை ஏற்றி இறக்கினான்..

இப்போது வாயைத் திறக்காமல் விழிகளால் பேசும் அண்ணனை வெளிப்படையாக முறைத்தவன், “நம்ம தங்கச்சியோட வாழ்க்கை இதுல தான் இருக்கு..அவளோட கல்யாணம் முடியனும்…இப்போ இருக்கிற நிலையில நான் சொல்றது புரியுதா..?” எனக் கேட்கும் சின்னவனை ஏனோ சந்த்ருவிற்கு பிடித்திருந்தது..

கதவை வெறிக்கத் திறந்தவன், “உள்ள வா..” எனச் சொல்லி அவன் மெத்தையில் அமர, உள்ளே வந்தவனை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான்..

“மிஸ்டர்.சஞ்சீவ்” அண்ணனின் அழைப்பிற்கு,

“சஞ்சீவ்னே கூப்பிடுங்க..” எனச் சொல்ல,

மறுப்பாய் தலையசைத்தவன், “நீ சின்ன பையன்..உனக்கு என்னோட மனநிலை புரிய சான்ஸ் இல்ல..இருந்தாலும் என்னால இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியல..கொஞ்சம் டைம் கொடு..இன்னும் அவங்களுக்கு கல்யாண பண்ண வருஷம் இருக்கே..” என்றவன் கீழே குனிந்து புருவத்தை நீவி விட,

“நான் உங்க கிட்ட இப்படி கேட்குறதே தப்பு தான்..இருந்தும் என்னோட நிலமை..”

“ம்…லீவ் இட்..” என்ற சந்த்ரு அமைதியாகி விட,

“நான் நாளைக்கு ஜாயின் பண்ணனும்..இங்க எனக்கு யாரையும் தெரியாது எங்க தங்கிக்க..?” எனக் கேட்கும் சஞ்சீவிடம் ‘என் கண் முன்னே இருக்காதே’ எனக் கத்த துணியும் மனதை அடக்கியவன்..

“நீ அவுட் ஹவுஸில் தங்கிக்க..எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்..” என நிறுத்த

“சொல்லுங்க அண்ணா..” என்ற சஞ்சீவின் வார்த்தையில் வெளிப்படையாக சலித்தவன்,

“சஞ்சீவ்…எனக்கு இதெல்லாம் ஏத்துக்க கொஞ்சம் டைம் கொடுங்க..நானா உங்களை கூப்பிடுற வரைக்கும் இஃப் யூ டோட் மைன்ட் என் முன்னாடி வர வேணாம்..” சந்த்ருவின் தன்மையான பதிலுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவன்,

“சரி அண்ணா..” என அவ்விடம் விட்டு அகன்றான்..

சஞ்சீவ் அங்கிருந்து சென்றதும், தனசேகருக்கு அழைத்தவன்,
“அங்கிள், நான் அவரோட பையனை நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்க சொல்லிருக்கேன்..கொஞ்சம் ரெடி பண்ண சொல்லுங்க..அதே போல சாப்பாடுக்கு வேலைக்கு எல்லாத்துக்கும் அங்கேயே ஆள் ஏற்பாடு பண்ணி தனியா போடுங்க..” என்றவன் அழைப்பை அணைத்துவிட்டான்..

பல மணி நேரங்களாய் யோசனையில் ஆழ்ந்தவன், இரவு உணவு உண்ண எழ, சரியாக முத்துவின் போனிற்கு அழைப்பு வந்தது..

இரு நிமிடம் அழைப்பு வந்த எண்ணில் தனது பார்வையைப் பதித்தவன், டேபிளில் இருக்கும் மைக்கை உயிர்பித்து போனை ஸ்பீக்கரில் போட்டு அருகே வைத்தான்..

இவன் அமைதியாக இருக்க, அந்தப் பக்கத்தில், “முத்து..” என அழைத்தது அக்குரல்..

இது ப்ளாக் கோஸ்ட்டின் குரல் மூளை அவசரமாய் கணக்கிட,
“ஹூ இஸ் திஸ்..?” எனத் தனது கனீர் குரலில் கேட்டு சந்த்ருவின் கணிப்பு சரியென உறுதி செய்தான் அவன்..

“ஹாய் மை லவ்..” சந்த்ருவும் தனது ஆண்மையான குரலில் அழைத்து சிரிக்க,

அந்தபக்கம் பலத்த அமைதி, சில நொடிகள் ஓட,

“உன்னோட சாவு நாள நான் குறிச்சுட்டேன்..” என அவன் சொல்ல,

“மை லவ் நீ ரொம்ப லேட் பிக்கப்..இன்னும் ஒரு மாசத்துல எப்படி ஒரே மாசத்துல நீ..” நிறுத்தியவன் சீட்டியடித்து போனை வைத்தான்..

ஆட்டம் தொடரும்..

UKIK – 9

9

ஈஸ்வரிடம் எடுத்திருந்த மொபைலையும் நேற்று முத்துவிடமிருந்து எடுத்து வந்த மொபைலையும் தனது மேஜை மீது வைத்தவனுக்கு, தலை வின்னென்று வலித்தது..

சந்த்ருவிற்கு இன்னும் சரக்கு வைத்திருக்கும் இடம் தெரிந்திருக்கவில்லை, அதே சமயம் போன முறை சரக்கு எடுக்கவென கொடுத்த ஒரு கோடி ரூபாயும் திருப்பி வந்திருக்கவில்லை..

தனது சாய்விருக்கையில் அமர்ந்தவன் கைகளை கொஞ்சம் எக்கி சிகப்பு நிற ஃபைலை எடுக்க, அவனது பரம்பறைத் தொழிலும் இப்போது அவன் திறம்பட நடத்திவரும் ஐந்து நட்சத்திர ஹோட்டலான “தி ராஜ நாராயணா பேலஸின்” கணக்கு வழக்கு கோப்புகளில் பார்வை பதித்தான்..

இதுதான் இவர்களது பரம்பறைத் தொழில், இருபத்தி மூன்றாம் வயதில் இவனது கைக்கு வந்த போது இந்தியாவில் மொத்தம் ஐந்து இடங்களில் இருந்த ஹோட்டல், இப்போது பதினைந்து இடங்களில் தலைநிமிர்ந்தது மட்டுமல்லாது ஆசிய கண்டங்களிலும் கால் பதித்திருந்தான்..

குடும்பத்தை எமன் எடுத்துக் கொண்ட பின்பு இவன் பாதுகாப்பு கருதி, இவனது தந்தை மகனது புகைப்படத்தையும் அவன் சமந்தப்பட்ட அனைத்தையும் பாதுகாக்க உத்தரவிட, இப்போதுவரை அதன் முதலாளி யாரென உலகம் அறிய முற்பட்டாலும் விடைகிடைக்காத பதிலாய் தானிருந்தது..

தனசேகரையும் அவனது தந்தையும் முன்நிற்பது போல அனைவருக்கும் காட்டிக் கொண்டவன் தனது புத்திசாலித் தனத்தால் மொத்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும் திரும்பி பார்க்க வைத்திருந்தான்.

ஒரு மணி நேரத்தில் கணக்கைப் பார்த்து முடித்தவன், அதில் இருக்கும் தனது சந்தேகத்தை தந்தை பெயரில் மெயில் செய்து வைத்தான்..

கீழறையில் இருக்கும் தனசேகரை அழைத்தவன்,
“அங்கிள்..ஆபிஸ் ரூம் வாங்க..” என்பதை மட்டும் உரைத்து, படிகெட்டு வழியே ஆபிஸிற்குள் நுழைந்தான்..

தனக்கு முன்னே வந்து அமர்ந்திருக்கும் தனசேகரையும் அவருக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருக்கும் தனது தந்தையான ராஜ மூர்த்தியையும் கண்டவன் புருவம் சுருங்க கேள்வியாய் பார்த்து கொண்டே அவர்களுக்கு எதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்தான்..

தந்தையின் முகத்தில் இருந்த சோகத்தைக் கண்டு புருவம் நெறித்தவன் அதைக் கேட்கும் விருப்பமில்லாததால், தனசேகரிடம் தனது பார்வையைத் திருப்பினான்..

அவரது முகத்திலும் குழப்பம் மிதமிஞ்சியிருக்க, ‘என்னவென’ மனம் கேள்வியெழுப்பினாலும், தானாய் வாய் திறந்து கேட்க மனம் ஒப்பவில்லை..

“அங்கிள்…பெங்களூர் ப்ரான்ச்’ல இருந்து இன்னும் அக்கவுன்ட்ஸ் டீடெய்ல்ஸ் வரல..?”

“அது வந்து தம்பி..” தனசேகரின் வார்த்தையில் கவனத்தை வைத்தவனின் முகமோ கேள்வியாய் தனது தந்தையைப் பார்க்க அவரும் அவஸ்த்தையாய் தான் முழித்துக் கொண்டிருந்தார்..

“எப்போ வந்தாரு..?” தந்தையின் மீது பார்வை வைத்து தனசேகரிடம் கேள்வி கேட்க,

“ஐயா வந்து ரெண்டு நாள் ஆச்சுங்க..” என்றவருக்கு சரியெனத் தலையசைத்தவன்,

“சொல்லுங்க..” என்றான் தான் முன்பு கேட்ட கேள்விக்கு பதில் கேட்கும் விதமாய்..

“தம்பி, அந்த ப்ராஞ்ச்ல உங்க தம்பி..” சந்த்ரு முறைத்த முறைப்பில் வாயை கப்சிப் என மூடிக் கொண்டவரைத் தொடர்ந்தவன்,

“அவனை வரச் சொல்லுங்க..” என்பதை உரைத்து மேஜையின் மீதிருந்த பேப்பர் வெயிட்டைச் சுழற்ற, தனசேகர் வெளியே சென்றார்..

“சந்து..” கிட்டதட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தந்தையிடமிருந்து தனது பெயர் உச்சரிப்பை கேட்கிறான், பதிலேதும் சொல்லாமல் பேப்பர் வெயிட்டை மட்டும் உருட்டிக் கொண்டேயிருக்க,

இவ்வளவு வருடமாய் பார்க்க கூட விரும்பாதவனின் அமைதியைத் தனக்கு சாதகமாய் எடுத்துக் கொண்டவர், “சஞ்சீவ் பெங்களூர் ப்ராஞ்சை பார்த்துக்கிறேன்னு சொல்றான்..” என்றார் தகவலாய்..

அதற்கும் மறுமொழி கூறாமல் அமர்ந்திருந்தவனிடம், “அவன் ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் லன்டன்ல MBA முடிச்சான்..அதனால அவன்கிட்ட கொடுத்தா நல்லபடியா பார்த்துப்பான்..” என்றதற்கும் அமைதியாய் அவர் இருக்க,

“உங்க சித்தி உன்னைப் பார்க்கனும்னு..” இதற்கு மட்டும் சுட்டெரிப்பதைப் போல முறைத்தவன், பேப்பர் வெயிட்டை இப்போது வேகமாய் சுழற்ற,

அவனது கைகளுக்கு மேல் தனது கைகளை வைத்தவர், “என்னை மன்னிச்சிடு சந்த்ரு..” என்றவருக்கு பதிலுரைக்காமல் அவரது கைகளுக்குள் இருக்கும் தனது கையை எடுத்து கொண்டான்..

அவன் கைகளை எடுக்கவும், தனசேகர் வெளியிலிருந்து கதவை மெல்லமாய் தட்ட, இவன் பதிலுரைக்கும் முன்னே கதவினைத் தள்ளி கொண்டு உள்நுழைந்தான் சஞ்சீவ்..

தனக்கு முன்னே வந்து நிற்கும் சஞ்சீவை வெறுமையான பார்வை பார்த்தவன், உட்காருமாறு இருக்கையைக் காட்ட, மூர்த்திக்கு பக்கத்தில் அவன் அமர்ந்ததும், அதற்கு பின்னிருந்த இருக்கையில் தனசேகர் அமர்ந்தார்..

சில நிமிடங்கள் அமைதியாய் கண்மூடியிருந்த சந்த்ருவின், உயரத்தையும், கொஞ்சமும் சிரிக்க மாட்டேன் என இறுக மூடியிருந்த இதழையும் அவனது இமைத் தாண்டித் தீண்டும் கற்றை முடிகளை அவன் கோதி விடுவதைக் கண்ட சஞ்சீவ், ஆறடி உயரமும், கோதுமை நிறமும் என ரன்வீர் கபூரைப் போல இருந்தான்..

கண்களை இறுக்கமாய் மூடித் திறந்தவன் ஏதோ முடிவெடுத்து விட்டதைப் போல, “வாட்ஸ் யுவர் நேம்..?” என்றான் தனது கனீர் குரலில்..

‘உனக்குத் தெரியாதா’ என்ற கேள்வியினை விழிகளில் தாங்கி, “சஞ்சீவ் அண்ணா..” சின்னவன் அண்ணன் என அழைத்ததை புறந்தள்ளியவன்,

“உனக்கு நாளைல இருந்து நான் சொல்ற வரைக்கும் இங்க இருக்குற நம்ம ப்ரான்ச்ல ட்ரெய்னிங்…உனக்கு அங்க சூப்பர்வைசர் வேலை தான்…எந்த இடத்துலையும் நீ யாருன்னு சொல்லக் கூடாது..நீ ட்ரெய்னிங் முடி அதுக்குள்ள உனக்கு ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணித் தரேன்..” என்றவனை இடைமறித்த சஞ்சீவ்..

“ஏன் அண்ணா நான் இந்த ஹோட்டல் பிஸ்னஸ் பார்த்துக்க கூடாதா..?இல்ல தகுதியில்லன்னு வேற பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணித் தரேன்னு சொல்றீங்களா.. இல்ல நான் தான் உங்க குடும்பம் இல்லன்னு சொல்றீங்களா..?” படபடப்பாய் ஆங்கிலத்தில் கேள்வி தொடுப்பவனிடம்,

‘ஆமா..நீ என் குடும்பம் இல்ல தான்’ எனக் கத்த வேண்டும் போல இருந்தாலும், கைகளை மடக்கி உணர்வுகளை அவன் கட்டுக்குள் கொண்டு வரவும்,

“டேய் யார் கிட்ட எப்படிபேசனும்னு உனக்குத் தெரியாது..?” எனக் கன்னடத்தில் சஞ்சீவை பொறிந்தார் மூர்த்தி..

“நீங்க சும்மா இருங்க டாட்..உங்களால தான் நானோ என் அம்மாவோ உரிமையில்லாம இருக்கோம்..இன்னும் இது இப்படியே இருந்தா நாளைக்கு மாலினியை பொண்ணு கேட்டு வரவங்க கிட்ட நாம தல குனிஞ்சு தான் நிக்கனும்..” தன்கண் முன்னே தனது தந்தையிடம் எகிறுபவனை உறுத்து விழித்தவனுக்கு அறையும் வேகம் வந்தாலும்,

‘மூர்த்தி அவனுக்கும் அப்பா தான்..’ மனதின் ஓலத்தில் வாயை மூடி அமர்ந்து கொண்டான்..

அவன் எகிறி முடித்து அமைதியானதும், “அங்கிள், இவனோட ரெஸ்யூம் எல்லாத்தையும் சரிபார்த்துட்டு இந்த ப்ரான்ச் எம்.டி கிட்ட சொல்லி வேலைக்கு சேர்த்து விடுங்க..அப்றம் இவனோட ரெஸ்யூம் வெளில யார் கைக்கும் போக கூடாது..” திடமாய் உச்சரித்தவன் எழுந்து கொள்ள,

‘தான் இவ்வளவு கேட்டும் வாயை மூடி திமிரமாய் தான் உரைத்ததில் நிலையாய் நிற்பவனை முறைத்தான் சஞ்சீவ்..

சின்னவனது முறைப்பை பொருட்படுத்தாதவன், விறுவிறுவென தனது அறைக்குச் சென்றுவிட்டான்..

சந்த்ரு அந்தப்பக்கம் சென்றதும், “சஞ்சீ, உன் அண்ணன நீ இப்படி தான் எதிர்த்து பேசுவீயா..?” அதட்டலாய் மொழியும் தந்தையிடம்,

“அவன் எனக்கு அண்ணன்னு நீங்க தான் சொல்றீங்க..ஆனா அவன் எங்களுக்கான உரிமைய இன்னமும் எங்களுக்கு கொடுக்கல..” இவனது பதிலில் தனசேகருக்கே கோபம் வர, அவ்விடம் விட்டு அகன்று விட்டார்..

“உரிமைய அவன் எதுக்கு உனக்கு கொடுக்கனும்னு நினைக்க சஞ்சீ..?!”

“அவன் கொடுக்கனும்னு நான் நினைக்கல…ஏன் எங்கள உரிமை எடுக்க விடலன்னு தான் கேட்குறோம்..?”

“என்மேல மட்டும் தான் உங்களுக்கு உரிமையிருக்கு, இந்த சொத்து மேல உரிமை இருக்கிறது அவனுக்கு மட்டும் தான்..புரிஞ்சதா..? எனக்கே இதுல உரிமையில்ல…” எனவும்..

“ச்சை..” எரிச்சலாய் மொழிந்த சஞ்சீவ் அவ்வறையை விட்டு வெளியேற, மூர்த்தி அங்கிருந்த ஆளுயர சந்த்ருவின் புகைப்படத்தை வருடினார்..

நடந்தவற்றை தனது அறையில் உள்ள சிசிடிவில் பார்த்து கொண்டு தான் இருந்தான் சந்த்ரு..

முன்னுக்கு இப்போது இறுக்கம் கூடிக் கொண்டே போக, ஆனந்த் அழைப்பு விடுத்தான்..

அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தவன் அமைதியாய் இருக்க, “பாஸ், இவனுக்கு..ம்… முத்துக்கு மயக்க மருந்து கொடுத்து இன்னைக்கே அங்க விடவா..?”

“வேணாம்..அவனை அவனோட வீட்டு பக்கம் கொண்டு போய் விடச் சொல்லுங்க…யார் கடத்துனா எதுக்கு கடத்துனாங்கன்னு எதுவும் அவனுக்குத் தெரிய கூடாது..” என்றவன் அணைப்பை கத்தரித்து, தனக்குத் தெரிந்து டிடெக்டிவிற்கு அழைப்பு விடுத்தான்..

“சார்..” எதிர்பக்கம் ரவியின் குரல் கேட்டதும்,

“ரவி..நான்..”

“ம்..தெரியும் சார்..”

“எனக்கு ஒரு சின்ன வேலை ஆக வேண்டியிருக்கு..”

“சொல்லுங்க சார்..”

“எனக்கு ஒருத்தங்கள நான் சொல்ற வரைக்கும் ஃபாலோ பண்ணி டீடெய்ல்ஸ் கொடுக்கனும்..” என்றதும்

“யாருன்னு சொல்லுங்க சார்..?”

“நம்ம ஏரியா ஏசி கனிஷ்கா சரவணன்..அவங்களை ஃபாலோ பண்ணனும்..இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது..ஜஸ்ட் அவங்க எங்க எங்க போறாங்கன்னு எனக்குத் தகவல் சொல்லிட்டே இருந்தா போதும்..”

“சரிங்க சார்..எதுவும் பிரச்சனையா..?”

“நோ நோ..இது வேற விஷயம்..இன்னைக்கு நைட் உங்களுக்கு வரவேண்டிய பேமென்ட் வந்திடும்..” என்றவன் அதற்குமேல் ஒன்றுமில்லை என அணைப்பை வைத்துவிட்டான்..

அவன் அழைப்பை வைத்த நேரம் கதவு டம்டமென்று தட்டப்பட்டது..

****

அதிகாலையில் ரவுன்ட்ஸை முடித்து கொண்டு எப்போதும் வீட்டுக்கு வரும் கனிஷ்கா, அன்று வீட்டுக்கு வராமல் நேரே ஸ்டேஷன் சென்றுவிட்டாள்..

சிசிடிவியில் கிடைத்தவனையும், தான் குறித்து வந்து சுவரின் நீள அகலங்களையும் வைத்து குறிப்பெடுத்தவளுக்கு, முதல் சிசிடிவியில் பதிந்தவன் தான் கொலைகாரன் என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்தது..

ஆனால் இரண்டாம் சிசிடிவியில் தெரிந்த உருவம் முதல் உள்ளவனைப் போல கிட்டத்தட்ட இருந்தாலும், உயரம் குறைவானவன் என்பதைக் கண்டு கொண்டவள், இப்போது முதல் சிசிடிவியில் பதிவானவனை பிரின்ட் அவுட் போட்டு குறித்து கொண்டாள்..

அதன் பிறகு அவன் குதித்த திசைக்கு நேரில் சென்று அவள் அலசி ஆராய, இப்போது கனிஷ்காவின் அடுத்தடுத்த செய்கை கமிஷ்னர் உட்பட அனைவரையுமே அச்சுறுத்தியது, இன்னும் ஒரு நாள் கழித்து மாற்றிவிடலாம் என நினைத்திருந்தவர்கள்,

தங்களது எண்ணங்களை மாற்றிக் கொண்டு அன்றே தனது அலுவலகத்துக்கு கனிஷ்காவை வரப் பணித்து, அவளை இந்தக் கேஸில் இருந்து விடுவிடுத்து வேறு ஒரு ஏரியாவிற்கு மாற்றினர்..

அவர்களின் அதிரடியான மாற்றலில் ‘இப்போது தான் சரியான பாதையில் செல்கிறோம்’ எனப் புரிந்து கொண்டாள் கனிஷ்கா..

முதன்முறையாக தனது கையைவிட்டு ஒரு கேஸ் செல்கிறது..ஏமாற்றமாய் இருந்தாலும் இதை மாற்றியே தீர வேண்டுமென நினைத்தவள் அந்த விடுமுறை நாளை மொத்தமாய் அரசிக்கென செலவழித்தாள்..

அரசியுடன் தனித்திருந்த அம்மாலை பொழிதில் தன்னைவிடுத்து இன்னொருவனை, “டாடி..” என அழைத்து அரசி ஓட..
‘மாமவ அப்பானு தான கூப்பிடுவா..?’ என்கிற யோசனையோடு திரும்பியவளுக்கு..

அரசியை அணைத்து கொண்டு நின்ற சந்த்ரு விடையாய் கிடைத்தான்..

‘இவனா..?’ அதிர்ந்து விழித்தவள் கோபமாய் இருவரையும் பார்த்து முறைத்து,

“ஏய் அரசி..” எனக் கோபமாய் கூப்பிட்டாள்.

“என்ன மம்மி..” அசூசையாய் கேட்டாள் சின்னவள்.

சின்னவளை விடுத்து சந்த்ருவை முறைத்தவள்,”ஹலோ மிஸ்டர்…யார் நீங்க…?” ஒற்றை விரலை நீட்டி அவள் கேட்க,

“மம்மி..இது தான் டாடி..” எனச் சொல்லி கொஞ்ச நஞ்ச பிபியையும் எகிற வைத்தாள் அரசி..

“நீ வாயை மூடுடி..” அரசியைப் பார்த்து கத்தியவள்..

“யாரு யா…குழந்தை கிட்ட அப்பா கிப்பான்னு ம்ம்..”

“அப்பா இல்ல மம்மி டாடிஇ..” மறுபடியும் அழுத்தமாய் சொல்லும் அரசியை முறைத்தவள்..

“பேபி..அடி வாங்கமா ஓரமா போய் விளையாடு..” என்றதும் பெரியவளை முறைத்து கொண்டே,

“டாடி..நான் அங்க இருக்கேன் நீங்க வாங்க..” சந்த்ருவிடம் உரைத்தவள் கொஞ்சம் தள்ளியிருந்த ஊஞ்சலில்
அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள்..

திரும்பி அரசி விளையாடும் இடத்தைப் பார்த்தவள், இப்போது சந்த்ருவிடம் திரும்பி, “உன்கிட்ட தான் மிஸ்டர்..” எனக் கேட்க,

“உனக்கு மரியாதையாவே பேசத் தெரியாதா..?” என்று தன் அதிமுக்கிய கேள்வியைக் கேட்டான் சந்த்ரு..

அவனது கேள்விக்கு பதிலளிக்காமல் அவனை முறைத்தவள், “பேபிய உனக்கு எப்படித் தெரியும்..?” எனக் கேட்க,

“அதை நீயே உன் பேபி கிட்ட கேட்க வேண்டியது தான..?” என்றவனின் பார்வை அவளிடமிருந்தாலும் பின்னால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடமும் தஞ்சமிருந்தது..

“யோவ், உன் கிட்ட கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு யா..?” மரியாதை கொஞ்சம் கொஞ்சமாய் தேய்வதைக் கண்டவன்,

“எப்போதும் நான் பொறுமையா இருக்க மாட்டேன்..மரியாதை கொடுத்து பேசு..” என்றவன் தொடர்ந்து,

“தேவி கிட்ட போய் கேளு..பேபி எதுக்கு என்னை டாடின்னு கூப்பிடுறா’ன்னு..” மிதப்பாய் சொன்னவனுக்கு அவள் பதில் சொல்ல கண் மூடித் திறப்பதற்குள், அவளைவிடுத்து பின்னே கீழே விழவிருந்த அரசியை பிடித்திருந்தான்..

கண் இமைக்கு நொடிகளுக்கு பதினைந்து அடியை அசால்டாய் கடந்தவன் அரசியை பிடித்து நிறுத்தியிருந்தான்..

அவனது வேகத்தில் ஒருமுறை இதயம் நின்று அடித்து துடிக்க அவளும் அரசியிடம் விரைந்திருந்தாள்..

கண்கள் இன்பங்களைத் தேடும்…

error: Content is protected !!