Monisha Selvaraj

163 POSTS 8 COMMENTS

Paadal thedal – 18

18

காதல்

காலை எழுந்ததும் ஜானவி பரபரவென தம்முடைய அன்றாட வேலைகளில் ஈடுபட தொடங்கினாள்.

சந்தானலட்சுமி மருமகளுக்கு சமையல் வேலைகளில் உடன் இருந்து உதவி புரிந்ததால் இருவரும் சேர்ந்து காலை உணவு மற்றும் பள்ளிக்கு செல்பவருக்கு கட்டி கொடுக்க வேண்டிய மதிய உணவையும் விரைவாக தயார் செய்துவிட்டனர்.

அதன் பின் ஜானவி மூவரின் டிபன் பாக்ஸை எடுத்து சந்தானலட்சுமியிடம் கொடுக்க, அவர் அதினில் மதிய உணவை  கட்டி அவரவர்களில் சாப்பாடு கூடையில் எடுத்து வைத்துவிட்டு, செழியன் உணவை தனியாக அவனின் பேகினுள் வைத்தார்.

பாண்டியன் மறுபக்கம் குழந்தைகளின் பள்ளி சீருடைகளையும் செழியனின் சட்டையையும் தேய்த்து வைக்க, செழியன் மகள்களை எழுப்பி குளிக்க செய்து அவர்களின் பள்ளிக்கு சீருடையை அணிவித்து தயார் செய்தான்.

அதன் பின்னர் அவன் குளிக்க சென்றுவிட சந்தானலட்சுமி பேத்திகளுக்கு காலை உணவை கதை சொல்லி நிதானமாக ஊட்டி கொண்டிருந்தார்.

“அவங்களே சாப்பிடட்டும் விடுங்க அத்தை” என்று ஜானவி சொல்ல,

“என் பேத்திங்களுக்கு நான் ஊட்டிறேன்… அதுல உனக்கென்ன பிரச்சனை?” என்று சந்தானலட்சுமி முறைத்து கொண்டே கேட்டார். ஜானவிக்கு அவரின் முகபாவனை சிரிப்பை வரவழைக்க அங்கே வந்த பாண்டியன்,

“பேத்திங்களுக்கு ஊட்டிறதை விட பாட்டிக்கு வேற என்ன வேலையாம்… ஊட்டட்டும் விடுமா” என்றார்.

சந்தானலட்சுமி கடுப்பாகி,

“என்னை ஓட்டிறதுன்னா முதல் ஆளா கிளம்பி வந்திருவீங்களே!” என்க,

“எனக்கு அதை விட வேறென்னடி வேலை” என்றார் அவர்!

“ஆமா பேத்திங்க ஷுவுக்கு பாலிஷ் போட்டீங்களா?” என்று சந்தானலட்சுமி கேட்க அவர் தலையில் கை வைத்து கொண்டு,

“அச்சச்சோ! மறந்துட்டேனே!” என்றார்.

“பரவாயில்ல மாமா… நான் போடுறேன்” என்று ஜானவி சொல்ல,

“பேத்திங்க ஷுக்கு பாலிஷ் போடுறதை விட தாத்தாவுக்கு வேற என்ன வேலையாம்… விடும்மா செய்யட்டும்” என்று கணவரின் வசனத்தை அப்படியே சூழ்நிலைக்கு தகுந்த மாறி அவருக்கே மாற்றி போட்டார்.

“பரவாயில்ல லட்சு! நீ ரொம்ப தேறிட்ட… செம டைமிங்…” என்று பாராட்டி கொண்டே பாண்டியன் தன் வேலையை பார்க்க செல்ல,

“அய்யோ! இந்த மனுஷனை வைச்சுக்கிட்டு” என்று சந்தானலட்சுமி கடுப்பாக,

“வைச்சுக்கிட்டு… அடுத்த டயலாக்கை சொல்லுங்க பாட்டி” என்று மீனா ஆர்வமாக கேட்டாள்.  சந்தானலட்சுமி எப்போதும் மாமூலாக சொல்லும் வசனம் அது!

அதற்கு மேல் இதுவரை அவர் சொல்லாததால் இம்முறை அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் மீனா கேட்க,

ஜானவிக்கு சிரிப்புதாங்கவில்லை.

“இந்த வாயாடிங்க முன்னாடி எதையும் பேச முடியாது போல” என்று சொல்லி சந்தானலட்சுமியும் சிரிக்க,

அப்போது, “ஜானவி” என்று செழியன் தன்னறைக்குள் இருந்து கொண்டு சத்தமாக அழைத்தான்.

ஜானவி துணுக்குற்றாள். நேற்று நடந்த சண்டையை பற்றி யோசித்து கொண்டே அவள் நிற்க, “அன்பு கூப்பிடுறான் பாரு… போம்மா” என்றார் சந்தானலட்சுமி!

“போறேன்” என்று சொல்லி கொண்டே ஜானவி அறை வாசலில் நின்று, “என்ன செழியன்? சொல்லுங்க” என்றாள்.

அவன் தன் சட்டையை இன் செய்து கொண்டே, “ஏன்? உள்ளே வந்து என்னன்னு கேட்க மாட்டீங்களோ?!” என்று கேட்க அவள் தயக்கமாக அறைக்குள் நுழைந்து,

“என்ன செழியன்?” என்றாள்.

“கதவை க்ளோஸ் பண்ணிட்டு வாங்க… பர்ஸனலா ஒரு விஷயம் பேசணும்” என்று அவன் சொல்ல,

“அத்தை மாமா பசங்க எல்லாம் வெளியே இருக்கும் போது கதவை எப்படி மூடுறது” என்றவள் தயங்கி கொண்டே அவனை பார்த்தாள்.

“எப்பவும் எப்படி மூடுவோமோ அப்படிதான் மூடணும்… போய் மூடிட்டு வாங்க” என்றவன் அலட்டி கொள்ளாமல் சொல்ல,

“எதுவா இருந்தாலும் ஈவனிங் பேசிக்கலாமே… நீங்க இன்னும் டிபன் வேற சாப்பிடல… சாப்பிடிட்டு பசங்கள வேற கூட்டிட்டு போகணும்… லேட்டாயிட போகுது” என்று அவள் படபடவென நின்ற இடத்திலிருந்தே காரணங்களை அடுக்க,

“பேசணும்னு சொன்னா என்ன ஏதுன்னு கேட்கணும்… இப்படி காரணம் சொல்லி பேச விடாம பண்ண கூடாது… நேத்தும் இதேதான் பண்ணீங்க… அதனாலதான் நமக்குள்ள தேவையில்லாம சண்டை வந்திருச்சு… பேசணுங்கிற மூடும் போச்சு” என்றவன் தீவிரமாக சொன்னான்.

“இன்னைக்கு அப்படியெல்லாம் ஆகாது… நான் சீக்கிரமா என் வொர்க்கை முடிச்சிடுறேன்… இனிமே என் லேப்டாப்பை பெட் ரூமுக்கு எடுத்துட்டு வரவே மாட்டேன்… பிராமிஸ்” என்று ஜானவி பயபக்தியோடு சொன்னாலும் அவள் மனதில் அவனிடம் எந்தவித மனத்தாங்கலும் வைத்து கொள்ள கூடாதென்ற
எண்ணமே மேலோங்கியிருந்தது.

அவள் அப்படி தன் தவறை உணர்ந்து விட்டு கொடுத்து பேசுவது செழியனுக்கு வியப்பாக இருந்தது.

இருந்தாலும் அவன் தன்னிலையிலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வராமல், “அதெல்லாம் இருக்கட்டும்… ஆனா இப்ப நான் உங்ககிட்ட பேசணும்… பேச முடியுமா முடியாதா?” என்றவன் தீவிரமாக கேட்க,

அவள் விழிகள் நேராக கடிகாரத்தை பார்த்தது.

“லேட்டாயிட போகுது” என்றவள் மீண்டும் சொல்ல கடுப்பானவன்,

“ஒரு நாள் லேட்டானாலும் ஒண்ணும் ஆகிடாது” என்று சொல்லி கொண்டே கதவை மூடிவிட அவள் திரும்பி பார்த்து உள்ளம் படபடத்தாள்.

‘கதவை மூடிட்டு அப்படி என்ன பேச போறாரு’ என்றவள் யோசிக்கும் போதே செழியன் அவளை நெருங்கி வரவும் ஜானவி முகம் பதட்டத்தை தத்தெடுத்து கொண்டது.

அவள் பின்னோடு விலகி செல்ல பார்க்க, “நில்லுங்க ஜானவி” என்றவன் அவள் முன்னே வந்து நின்று அவள் முகம் பார்க்க,

“என்ன பேச போறீங்க?” என்றவள் படபடப்போடு அவனை கேட்டாள்.

“பேசறது இருக்கட்டும்… அதுக்கு முன்னாடி உங்ககிட்ட நான் ஒரு விஷயம் கேட்கணும்”

“என்ன கேட்கணும்?”

“யார் கோபப்பட்டாலும் நான் மட்டும் உங்ககிட்ட கோபப்பட கூடாதோ” என்றவன் நகைப்போடு கேட்க,

அவள் விழிகள் பெரிதாகின.

‘அய்யய்யோ நம்ம தூக்கத்தில சொன்னதை இவர் கேட்டுட்டாரா?’ என்றவள் யோசிக்கும் போதே,

“நான் தூங்கிட்டு இருந்தேன்னு நினைச்சீங்களோ” என்றான் கல்மிஷமான பார்வையோடு!

பெண்ணவள் அதற்கு மேல் தன்னவனின் முகம் பார்க்க முடியாமல் நாணத்தில் தலை கவிழ்ந்து கொள்ள,

அவள் காதோரம் இறங்கி, “உங்களுக்கு மட்டுமில்ல… எனக்கும் உங்களுக்கு இருக்க மாறி அதே பீலிங்ஸ் இருக்கு” என்றதும் அவள் தலையை நிமிர்த்தி அதிர்ச்சியாக பார்த்தாள்.

“இப்படியெல்லாம் பார்த்தா நெஞ்சு படக் படக்னு அடிச்சுக்குது ஜானவி… ஷாக்கை குறைங்க” என்றவன் சொல்லி சிரிக்க, அவளும் அவனோடு சேர்ந்து புன்னகைத்தாள்.

“கடமையை மட்டும் ஷேர் பண்ணிக்கிட்டா அது கமிட்மென்ட்… காதலோட கடமையை ஷேர் பண்ணிக்கிட்டாதான் அது கல்யாணம்?” என்று அவன் சொல்ல

அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

“இந்த செழியனை நம்பி நீங்க இன்வஸ்ட் பண்ணலாம் ஜானவி… கண்டிப்பா லாஸாகாது”

“எதை?” என்று அவள் புரியாமல் கேட்க,

“காதலை… ” என்றதும் அவள் முகம் நாணத்தில் சிவந்தது.

செழியன் அப்போது, “அய்யய்யோ ஸ்கூலுக்கு லேட்டாகுது…  போய் டிபன் சாப்பிடிட்டு பசங்கள கூட்டிட்டு போகணும்… மிச்சத்தை அப்புறமா ஆரத்தீர பேசிக்கலாம்” என்றவன் பார்வை  இப்போது அவசரமாக கடிகாரத்தின் மீது விழுந்தது.

“ஒரு நாள் லேட்டான ஒண்ணும் தப்பில்ல” என்று ஜானவி கிண்டலாக சொல்ல, செழியன் முகம் மலர்ந்தது.

“இப்ப என்ன சொன்னீங்க?” என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க,

“சும்மா சொன்னே செழியன்… நீங்க கிளம்புங்க” என்றாள்.

அவன் புன்னகையோடு அவளிடம் தலையசைத்துவிட்டு கதவை திறக்க போனவன் திரும்பி நின்று, “அப்புறம்… இன்னொரு விஷயம் சொல்லணும்… மணி இஸ் நாட் எவிரித்திங்… லவ்… லவ் இஸ் எவிரித்திங்… பிலாசபி நம்பரை பார்த்து கரெக்டா குறிச்சு வைச்சுக்கோங்க” என்று  சொல்லிவிட்டு காதலோடு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு செல்ல அவள் உள்ளம் மொத்தமாக அவனிடம் சரிந்தது.

இளமையிலேயே சந்தோஷங்களை தொலைத்துவிட்டு வாழ்க்கை பாரத்தை தனியே சுமந்த பெண்ணவளுக்கு இன்று முதல்முறையாக வாழ்க்கை இனித்தது. வாழ வேண்டுமென்ற ஆசை வண்ணமயமாக அவளுக்குள் மீண்டும் ஜனனமெடுத்தது.

அதுவும் காதல் என்ற உணர்வு அவளுக்கு புதியது. சுவாரிசியமான அந்த அனுபவத்தை ரசிக்க தொடங்கியிருந்தாள் ஜானவி.

வாழ்க்கை மீதான அவள் பார்வை முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு மாறியிருந்தது.

சிறிய விதையாக வீழ்ந்து விருட்சமாக வளர்வது போல அவர்கள் காதல் நின்று நிதானமாக அதேநேரம் ஆழமாக வேரூன்றி வளர்ந்து கொண்டிருந்தது.

உடல் தீண்டாமல் மனதால் சங்கமித்து கண்களால் காதல் செய்யும் அந்த தம்பதிகளுக்கு தாம்பத்யம் தேவைப்படவில்லை. கைகளை பிடித்து  கொண்டு கூட பேசியதில்லை.

ஆனால் மாதங்கள் செல்ல செல்ல காதல் என்ற உணர்வு கண்களை தாண்டி அவர்கள் உணர்வுகளோடு விளையாட செழியன் ஜானவியின் இளமை ஒருவரை ஒருவர் நெருங்க சொல்லியது.

ஆனால் அன்பு மீனாவிற்கு அம்மா அப்பா என்ற எல்லை கோட்டை தாண்ட இருவருக்குமே சங்கடமாக இருந்தது.

அன்று பாண்டியன் சந்தானலட்சுமிக்கு திருமண நாள். செழியனோடு பேத்திகள் இருவரும் பள்ளியிலிருந்து திரும்பியதும் மாலை வேளை எல்லோரும் தயாராகி காரில் கிளம்பி  குடும்பமாக அஷ்டலட்சுமி கோவிலுக்கு சென்றுவிட்டு பெசன்ட் நகர் பீச்சிற்கு வந்திருந்தனர்.

அன்புவும் மீனாவும் அலைகளில் ஆட்டம் போட்டு கொண்டிருக்க, பாண்டியனும் சந்தானலட்சுமியும்தான் அவர்களோடு போராடி கொண்டிருந்தனர்.

செழியன் அலைகளை விட்டு தள்ளி நின்றுவிட ஜானவியும் அவன் உடன் நின்று கொண்டாள்.

“எனக்கு கொஞ்சம் பேலன்ஸ் பண்ண கஷ்டம்… அதான் நான் இங்கயே நிற்கிறேன்… நீங்க போங்க” என்று செழியன் சொல்ல,

“நானும் உங்க கூடவே நிற்கிறேனே” என்று குழந்தைகள் விளையாடுவதை பார்த்து கொண்டு அவன் அருகிலேயே நின்றுவிட்டாள்.

செழியன் அவளை பார்த்து, “அப்படின்னா பசங்க விளையாடட்டும் நம்ம கொஞ்ச தூரம் நடப்போமா?” என்று சொல்ல,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தாள்.

செழியன் தன் தந்தையிடம், “அப்பா! பசங்கள பார்த்துக்கோங்க… நாங்க அப்படியே சும்மா கொஞ்ச தூரம் நடந்துட்டு வரோம்” என்று சொல்ல,

“சரி… ஆனா ரொம்ப தூரம் போகாதீங்க” என்றார் பாண்டியன் அலைகளில் சத்தத்திலிருந்து சற்றே சத்தமாக!

இருவரும் ஒன்றாக மணல்வெளியில் கடலலைகளின் ரீங்காரத்தோடு ஓன்றாகவே தங்கள் பாத தடத்தை பதித்து கொண்டு நடந்து சென்றனர்.

செழியனுக்கு அவள் கரத்தை கோர்த்து கொள்ள வேண்டுமென்று தோன்றினாலும் அதை அவனாக செய்ய என்னவோ போல இருந்தது.

ஜானவிக்கும் அதே நிலைதான். அப்போது  ஜானவி தன் எதிரே வந்தவனை பார்த்து அசூயையாக முகத்தை திருப்பி கொண்டு,

‘ச்சே! சாகிற வரைக்கும் எந்த மூஞ்சியை பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேனோ அந்த மூஞ்சியை திரும்பி பார்க்க வேண்டியதாயிடுச்சே’ என்று வாய்க்குள்ளேயே முனகிவிட்டு,

“செழியன்… வாங்க திரும்பி போலாம்” என்றாள்.

“ஏன்?”

“போலாமே” என்றவள் அழுத்தமாகவும் தவிப்பாகவும் அவள் கூறும் போது செழியன் எதிரே தன்  மனைவியோடு நடந்து வந்து கொண்டிருந்த ராஜனை பார்த்து,

ஜானவியின் மனநிலையை கணித்து கொண்டான்.

“சரி போலாம்” என்று செழியனும் சம்மதித்து அவளோடு திரும்பி நடக்க,

“ஜானு” என்ற ராஜனின் அழைப்பு அவளை கடுப்பேற்றியது.

“இவன் யார் என் பேரை சொல்ல” என்றவள் சீற்றமாக செழியன் ஜானவியின் கரத்தை பற்றி, “பிரச்சனை வேண்டாம்” என்று சொல்ல மறுகணமே அவள் அமைதியானாள்.

ஆனால் ராஜன் அவளை விடுவாதாக இல்லை. வேகமாக  அவர்களை முந்தி கொண்டு வந்து நின்றவன், “என்ன கூப்பிட கூப்பிட கண்டுக்காம போற” என்று கேட்க,

ஜானவி செழியனை பார்த்தாள். அவன் மௌனமாக இருக்க சொல்லி தலையசைக்க ராஜன், “அனு வா… ஒரு முக்கியமானவங்கள இன்ட்ரோ கொடுக்கிறேன்” என்று அவன் உடன் வந்த பெண்ணை அழைக்க,

“ஹெலோ மிஸ்டர்… உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்… ஒழுங்கா வழியை விட்டு போங்க” என்று செழியன் கறாராக உரைத்தான்.

ராஜனின் பார்வை ஜானவியின் முகத்தையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்து, “நினைச்சேன்.. என் பொண்ணு உன்னை அப்பான்னு கூப்பிடும் போதே” என்று ஒருவிதமாக சொல்ல,

“யாருடா உன் பொண்ணு” என்று ஜானவி கேட்கும் போது ராஜன் அருகில் வந்த அந்த பெண்,

“என்னங்க பிரச்சனை? யார் இவங்க?” என்று கேட்க, “என் முன்னாள் பொண்டாட்டி” என்று கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் ஜானவியை காட்டி உரைத்தான்.

அந்த வார்த்தையை செழியன் முன்னே அவன் சொன்னதை கேட்ட ஜானவியின் உள்ளம் கொந்தளிக்க செழியன் முந்தி கொண்டு,

“பொண்டாட்டி அது இதுன்னு சொன்ன கொன்னுடுவேன்” என்று எச்சரிக்கை செய்தான்.

ராஜன் அருகிலிருந்த பெண், “பிரச்சனை வேண்டாம்… போலாம்ங்க” என்று சொல்ல,

ஜானவியை ராஜன் எளக்காரமாக பார்த்து,

“உன் இரண்டாவது புருஷனை பார்த்து கூட்டிட்டு போம்மா… பாவம் கால் வேற நொண்டி” என்று சொன்ன மறுகணம் அவள் அடக்கி வைத்திருந்த மொத்த கோபமும் வெடித்து சிதறியது.

“அடி செருப்பால… யாரடா நொண்டின்னு சொன்ன?” என்று தன் பாதணியை கொண்டு சரமாரியாக அவன் முகத்திலறைந்துவிட,

அங்கே இருந்த மக்கள் கூட்டமெல்லாம் என்ன ஏதென்று விசாரித்து கொண்டே அவர்களை சூழ்ந்து கொண்டது.

செழியன் ஜானவியை கட்டுக்குள் கொண்டு வர அவளை அணைத்து பிடித்து, “ஜானவி வேண்டாம்” என்று கத்தவும் அவள் சற்று அமைதி பெற,

ராஜன் அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தான்.

செழியன் ஜானவியை துணையாகவும் அதேநேரம் துணைவியாகவும்
பிடித்து கொண்டு தன் ஸ்டிக்கால் அவனை தட்டிவிட ராஜன் கீழே வீழ்ந்தான்.

“நான் அப்பவே சொன்னேன்… உங்களுக்கு இது தேவையா?” என்று அந்த பெண் ராஜனிடம் கேட்டுவைக்க,

“நீங்க வாங்க ஜானவி” என்றவன் தன்னவளை அணைத்து பிடித்து கொண்டு அந்த கூட்டத்தை விலக்கி  வெளியே அழைத்து வந்தான்.

ஜானவி அப்போதே கவனித்தாள். செழியனின் கரம் அவள் தோள் மீது அணைத்து பிடித்திருந்தது.

“செழியன் கையை எடுங்க” என்றவள் சங்கடமாக நெளிய அவன் கரத்தை விலக்கி கொண்டு அவளை ஆழந்து பார்த்தான். அந்த பார்வை அவளுக்குள் ஊடுருவி சென்றது.

அப்போது பாண்டியன் அவர்களை நெருங்கி வந்து, “என்னாச்சு அன்பு? ஏதாச்சும் பிரச்சனையா?”  என்று கேட்டார்.

செழியனும் ஜானவியும், “அதெல்லாம் ஒண்ணும் இல்லையே” ஒரே மாதிரியாக மறுத்து தலையசைக்க பாண்டியன் அவர்களை ஆழ்ந்து பார்த்தார். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

“சரி கிளம்பலாம் ப்பா… லேட்டாயிடுச்சு” என்று செழியன் சொல்ல பாண்டியனும் ஆமோதிக்க எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டனர்.  அவர்கள் கார் ஒர் உணவகத்தில் நின்றது.

அன்புவும் மீனாவும் சேட்டைகள் செய்து கொண்டே உண்ண, பாண்டியனும் சந்தானலட்சுமியும் அவர்கள் சேட்டையை ரசித்து கொண்டே உண்டனர்.

ஆனால் ஜானவி அவளுக்கு ஆர்டர் செய்த உணவை ஒரு பருக்கை கூட உண்ணாமல், நடந்த விஷயத்தை நினைத்து வேதனையுற்றாள்.

“பீச்ல நடந்ததை விடுங்க ஜானவி… சாப்பிடுங்க” என்று அவன் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை.

“எனக்கு வேண்டாம்… இதை அப்படியே பேக் பண்ணிட சொல்லுங்க” என்றவள் சொல்ல,

“என்னாச்சு ஜானு?” என்று சந்தானலட்சுமி கேட்க, “தலைவலிக்குது அத்தை… நான் கார்ல போய் உட்கார்ந்துக்கிறேன்… நீங்க சாப்பிட்டு வாங்க” என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டாள்.

“பீச்ல என்னடா நடந்துச்சு?” என்று   பாண்டியன் தனியாக செழியனை அழைத்து கேட்க,

அவன் நடந்த எல்லாவற்றையும் உரைத்தான். அவருக்கும் கோபம் பொங்கி கொண்டு வந்தது.

“என்ன பிறப்போ இவனுங்க எல்லாம்?!” என்று சீற்றமாக சொல்லியர்,

“ஜானு பாவம்… அவளை எப்படியாச்சும் சமாதானப்படுத்து” என்றார்.

“சரி ப்பா” என்று செழியன் சொல்லி சாப்பிட்டு முடித்து ஜானவியை அமர சொல்லிவிட்டு செழியனே காரை ஓட்டினான்.

ஆட்டோமெட்டிக் கீர் என்பதால் அது அவனுக்கு அத்தனை சிரமமாக இல்லை.

அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும் பாண்டியனும் சந்தானலட்சுமியும் பேத்திகளை அவர்கள் அறைக்கு உறங்க அழைத்து கொண்டு  சென்றுவிட,

ஜானவி தன்னறைக்குள் புகுந்து தலையணையில் முகத்தை புதைத்து அழ தொடங்கினாள்.

கதவை மூடிவிட்டு வந்த செழியன், “ஜானவி இப்போ எதுக்கு அழறீங்க?” என்று கேட்க,

“அந்த பொறுக்கி உங்களை பத்தி அப்படி சொன்னதை என்னால தாங்கிக்கவே முடியல… அவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு உங்களை பத்தி பேச… பேசின நாக்கை அறுக்க வேண்டாமா ” என்று படுத்தபடியே தன் வேதனையை சொல்லி அழுதாள்.

“அதுக்காகவா நீங்க இப்படி பீல் பண்ணிட்டு இருக்கீங்க” என்றவன் வியப்போடு கேட்க,

“ஹ்ம்ம்” என்று படுக்கையில்  இருந்தபடி தலையை மட்டும் அசைத்தாள். அதேநேரம் அவளின் விசும்பல் சத்தம் கேட்டு கொண்டே இருக்க, “ப்ளீஸ் ஜானவி அழாதீங்க” என்றவன் கெஞ்சி பார்த்தும் அவள் அழுகையை நிறுத்த முடியவில்லை.

ஓயாமல் அவள் விசும்பல் சத்தம் கேட்டு  கொண்டே இருக்க செழியன் அவளருகில் அமர்ந்து தலை கவிழ்ந்திருந்தவளை தன் புறம் திருப்ப அவன் நெருக்கத்தை கண்டு அவள் திக்குமுக்காடி போனாள்.

பதறி கொண்டு எழுந்து கொள்ள பார்த்தவளை அவன் படுக்கையில் சரித்து அவள் முகத்தருகே குனிந்தான். அவன் செய்கையில் அவள் விழிநீர் அப்படியே உறைந்து நிலையில் நின்றது.

அவள் கருவிழிகள் இரண்டும் அசையாமல் அவனை மிரட்சியோடு பார்க்க, “என்ன ஜானவி உங்களுக்கு பிரச்சனை? எதுக்கு இப்போ அழறீங்க?” என்று அதே நெருக்கத்தோடு கேட்டவனை பார்த்து பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.

அவன் மேலும், “எனக்கென்னவோ நீங்க அந்த ஆள் பேசனதுக்கு அழுத மாறி தெரியல… எனக்கிருக்க குறையை நினைச்சு அழுத மாதிரிதான் இருக்க?” என்று கேட்டதும் அதிர்ந்த பார்வையோடு,

“சேச்சே… நான் போய் அப்படி நினைப்பேனோ… அதுவும் உங்ககிட்ட குறைன்னு” என்றாள்.

“அப்புறம் எதுக்கு அழறீங்க?” என்றவன் நிதானமாக கேட்க,

“தெரியல… உங்களை அந்த ஆளு அப்படி சொன்னதும் எனக்கு உயிரே போற மாதிரி வலிச்சுது” என்று விழிகளில் நீர் தளும்ப தன் மனநிலையை உரைத்தாள்.

செழியன் அவளை வியப்படங்காமல் அப்படியே பார்த்தபடி இருக்க, “செழியன்” என்றவள் அழைப்பு அவன் செவிகளை எட்டவில்லை.

அவள் மீதான காதல் பன்மடங்காக கூடிய அதேநேரம் அவளின் நெருக்கத்தில் தன்னிலை மறந்தான்.

காதலும் காமமும் சரிவிகிதமாக கலந்திருந்த அவன் பார்வை அவளுக்குள் ஒரு சிலாகிப்பு உணர்வை கொடுக்க, “செழியன்” என்று மீண்டும் அழைத்தாள்.

“ஹ்ம்ம்” என்றவன் குரல் எழ,

“நீங்க உங்க இடத்தில போய் படுங்க?” என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

“உம்ஹும்” என்று அவன் மறுக்க அவள் அதிர்ச்சியுற அவனை பார்க்கும் போதே அவள் நெற்றியில் முத்தம் பதித்தான் அவன்.

“செழியன்” என்றவள் குரலை காதில் வாங்காமல் மேலும் அவள் கன்னங்களில் தம் இதழ்களை மாறி மாறி பதித்தான்.

இறுதியாக அவள் இதழ்களை நோக்கி  அவன் உதடுகள் வரவும் அவள் விழிகளை அழுந்த மூடி கொள்ள, அவள் எதிர்பார்த்தது நிகழவில்லை.

அவள் குழப்பமாக தம் விழிகளை திறக்க அவன் அவளை விட்டு விலகி சென்று நின்றிருந்தான். அவளுக்குள் விளைந்த ஏமாற்றத்தை மறைத்து கொண்டு அவள் எழுந்தமர்ந்தாள்.

அவனோ தவிப்போடு தலையை குனிந்து கொண்டு நிற்க, “செழியன்” என்று அவள் அழைப்பு கேட்டு நிமிர்ந்து,

“சாரி ஜானவி… உன் லிப்ஸை பார்த்த போது எனக்கு ரஞ்சு லிப்ஸை பார்க்கிற மாதிரி ஒரு பீல்… அதான் சாரி” என்று மன்னிப்பு கோர அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

“இதுக்கு எதுக்கு செழியன் சாரி” என்று ரொம்பவும் சாதாரணமாக கேட்டு எழுந்து வந்து அவன் அருகில் நிற்க,

“ப்ச்… இல்ல ஜானவி” என்று அவன் பதில் சொல்லவும் முடியாமல் அவன் முகம் பார்க்கவும் முடியாமல் நின்றான்.

“செழியன் பரவாயில்ல விடுங்க… நீங்க ரஞ்சனியை எந்தளவுக்கு லவ் பண்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்… அத்தனை சீக்கிரத்தில அவங்க நினைவுகளை உங்களால மறக்கவும் முடியாது”

“அதெல்லாம் சரி… ஆனா என் சுயநலத்திற்காக உங்க உணர்வுகளோட விளையாடிட்டேனோனோன்னு எனக்கு கில்டியா இருக்கு”

“அட என்ன செழியன் நீங்க… இதுக்கெல்லாம் கில்டியாகிட்டு.. அப்படி பார்த்தா என் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காம என்னை வெறும் உடம்பா மட்டும் யூஸ் பண்ணிக்கிட்டானே… அவன் முன்னாடியெல்லாம் நீங்க கடவுளுக்கு சமானம்”

“என்ன பேசுறீங்க ஜானவி? அதுவும் கடவுள் அது இதுன்னு”

“உண்மையைதான் சொல்றேன்” என்றவள் நிறுத்தி,

“நான் ஒண்ணு சொல்லட்டுமா… நீங்க ரஞ்சனி மேல வைச்சிருக்க லவ்வை பார்த்துதான் உங்க மேல நான் ரொம்ப இம்பிரஸ் ஆனேன்… பொறாமையெல்லாம் இல்லை ஆனா லைட்டா பொறாமைதான்” என்று கிண்டலடித்து சிரிப்போடு சொன்னவளை அவன் இமைக்காமல் பார்த்து கொண்டு நிற்க,

“இந்த மேட்டரை இத்தோடு விடுங்க… நானும் அந்த பீச் மேட்டரை மறந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு அவள் திரும்ப,

அவன் தன் கரத்தால் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

அவள் அதிர்ந்து பார்க்கும் போதே அவன் உதடுகள் அவள் இதழ்களை தொட்டு மீண்டது.

ஒரு நொடிதான் என்றாலும் அவளுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வில் அவள் ஸ்தம்பித்து அவனை பார்க்க,

“என்ன மாதிரியான காதல் ஜானவி .
உங்களோடது… ” என்று சொல்லி மீண்டும் அவள் இதழ்களில் முத்தம் பதிக்க, இம்முறை அது நொடிகளை கடந்து நீண்ட நேரம் பயணித்தது.

அவன் பிரிந்த மாத்திரத்தில் அவள்  மூச்சு வாங்க அவனை நிமிர்ந்து பார்க்க, “இது என் ஜானவிக்காக” என்றான்.

அவன் அதோடு அவள் இடையை வளைத்து கொண்டு காதோரமாக ஏதோ ரகசியம் பேசினான்.

வெட்கமாக அவனை பார்த்து வேண்டாமென்று தலையசைக்க, “கண்டிப்பா வேண்டாமா?” என்று கேட்டு கொண்டே அவள் இடையை பற்றி இழுக்க நாண மேலிட அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டுவிட்டாள்.

அப்போது, “அப்பா” என்று மீனா கதவு தட்ட ஜானவி அவனை விட்டு விலகி வர, செழியன் அவளை பார்த்து கொண்டே கதவை திறந்துவிட்டான்.

அன்புவும் மீனாவும் ஓடி வந்து எப்போதும் போல் அவர்களிடத்தில் சென்று படுத்து கொள்ள, “இன்னும் நீங்க இரண்டு பேரும் தூங்கலயா?” என்று செழியன் கேட்க,

“தாத்தா விடுற குறட்டை சத்தம் தாங்க முடியல” என்றாள் மீனா!

“தப்பு மீனு… அப்படியெல்லாம் சொல்ல கூடாது” ஜானவி அதட்ட,

“நிஜமாதான் ஜானும்மா… அதான் நாங்க இரண்டு பேரும் எழுந்து இங்க வந்துட்டோம்” என்றாள் அன்பு!

“ரொம்ப நல்ல விஷயம்” என்று சொல்லிய செழியன் ஜானவியை ஏக்கமாக பார்க்க அவன் அடக்கப்பட்ட புன்னகையோடு,

“லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து படுங்க” என்றாள்.

“அப்போ அவ்வளவுதானா?” என்றவன் ஏக்கமாக இழுக்க,

“குழந்தைங்க இருக்காங்க” என்றாள் அவள் விழிகளை சுருக்கி!

அவன் பெருமூச்செறிந்து விளக்கை அணைத்துவிட்டு தன்னிடத்தில் படுத்து கொள்ள ஜானவியும் படுத்து கொண்டு அருகில் படுத்திருந்த அன்புவை தட்டி கொண்டிருந்தாள்.

செழியனின் கரம் எட்டி அவள் கரத்தை பிடித்து கொள்ள, “செழியன் கையை விடுங்க” என்று குரலை தாழ்த்தி சொல்ல, பிடிவாதமாக மறுத்துவிட்டான்.

“அப்பா” என்று மீனா அழைக்க சட்டென்று தன் கரத்தை விலக்கி கொண்டு, “என்ன மீனு?” என்று கேட்டான்.

“என்னை தட்டுங்க ப்பா” என்றவள் சிணுங்கி கொண்டே சொல்ல, “சரி” என்று அவளை தட்டி கொண்டே ஜானவியை பார்க்க, அவள் சிரித்து கொண்டிருந்தாள்.

அவன் கடுப்பாக அவளை பார்க்க,

“தூங்குங்க செழியன் குட் நைட்” என்று சொல்ல,

“எப்பவும் குட் நைட்டாவே இருக்காது ஜானவி” என்று பதலளித்தான்.

“அப்புறம்”

“இந்த அன்புக்குன்னு ஒரு நைட் வரும்” என்று மெலிதாக சொல்ல,

“ஆஹான்!” என்று ஜானவி கேலியாக நகைக்க அவன் அவளையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருக்க அவளும் அவனையே பார்த்து கொண்டிருந்தான்.

எத்தனை நேரம் என்றெல்லாம் தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் விழி அகற்றாமல் பார்த்து கொண்டிருக்க அன்புவும் மீனாவும் தூங்கிய பின்,

செழியன் ஜானவியின் விரல்களோடு தம் விரல்களை கோர்த்து கொண்டான். அப்படியே இருவரும் உறங்கி போயினர்.

YNM – 2

2

பெண் பார்க்கும் படலம்

அந்த தோப்பின் அடர்ந்த இருளில் வெள்ளையாக ஒரு உருவம் ஓடி வருவது மட்டுமே தெரிந்தது. போதாக் குறைக்கு எதிரே பருத்த உடலோடு ஒரு பூனை தெறித்து ஓட, பரிக்கு அச்சம் அதிகரித்தது.  சிகரெட் அவன் விரலிலிருந்து அதுவாகவே நழுவியது.

“பேய் வர்றது சில ஜீவராசிகளுக்கு எல்லாம் தெரியும்பாங்களே… ஒரு வேளை இந்த பூனைக்கு தெரிஞ்சிருக்குமோ?!” என்றவன் யோசிக்கும் போதே அந்த பெண் உருவம் அதிவேகமாய் நெருங்கிவிட,

அந்த உருவம் தன்னைத்தான் அடிக்க வருகிறது என்று எண்ணி,

“ஆஆஆஆஆ” என்று பரி அச்சத்தில் கத்த ஆரம்பித்தான்.

“ஆஆஆஆஆ” என்று அந்த பெண் உருவமும் பரியின் கதறலில் பயந்து கத்த, இருவரின் சத்தமும் அந்த இடத்தையே அதிர செய்தது.

அதே நேரம் அந்த பெண் உருவம் பரி கத்தியதில் பயந்து ஓடிவந்த வேகத்தில் தட்டுத்தடுமாறி பரியின் மீதே விழுந்து வைத்துவிட்டது.

அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் அவன் அவள் தன் மீது விழுந்த வேகத்தில் தரையில் சரிய அந்த பெண் உருவமோ விடாமல், “ஆஆஆஆ” என்று கத்தி அவன் காதை கிழித்துவிட்டது.

பரிக்கு அதிர்ச்சியும் அச்சமும் மறைந்து அந்த பெண்ணின் கத்தலில் அவள் மோகினி இல்லை என்று புரிந்தது.

அவள் கத்தலில் எரிச்சலானவன், “அய்யோ! காது வலிக்குது” என்று சொல்லியபடி அவளை புரட்டி கீழே தள்ளி அவள் வாயை மூட எத்தனிக்க அவன் கரம் எடாகூடாமாக அவள் மீது பட்டுவிட்டது.

“அம்ம்ம்ம்ம்மா” என்று அவள் மீண்டும் கத்தி வைக்க,

“அய்யோ சாரி சாரி சாரி தெரியாம கை பட்டிருச்சு… இவ என்ன இப்படி கூப்பாடு போடுறா… இதுல இவ வாய் வேற எங்க இருக்குன்னு தெரியலயே” என்று அவன் படபடத்த அதே நேரம் சுதாரித்து எழுந்தமர்ந்து கொண்டு தன் பாக்கெட்டில் இருந்த கைப்பேசி டார்ச்சை ஆன் செய்தான்.

அந்த வெளிச்சத்தில் லேசாக கண் கூசி முகம் சிணுங்கிய அதே நேரம் வாயடைத்து அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள் அந்த இளம் காரிகை!

வெள்ளை சுடிதாரில் சிவந்த மேனியோடு உருட்டை உருட்டையாக இருந்த விழிகளிரண்டும் பயத்தை அப்பட்டமாக காட்டி கொடுத்தன.

அவளின் கொழு கொழு கன்னங்களும் இரட்டை ஜடையும் அவள் இளம் கன்னித்தன்மையை அழகுற மிளரச் செய்தது.

அதுவும் அவளின் செம்மாதுளை இதழ்கள் அவன் குடித்த மது போதையெல்லாம் ஒன்றுமே இல்லை என்றளவுக்கு கிறுகிறுக்க செய்ய,

அழுகு தேவதையாக அவன் முன்னே
கிடந்தவளை பேயென்று எண்ணி கொண்டோமா

என்ன ஒரு அறிவீனம் என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான் பரி!

அதோடு அவள் மீதிருந்து பார்வையை எடுப்பேனா என்றிருந்த பரியை தள்ளிவிட்டு நிமிர்ந்த அமர்ந்தவள், “மாமா நீங்களா?” என்று கேட்டாள் வியப்போடு!

அவள் மீது மயக்கத்திலிருந்த அவன் முளை பட்டென சுதாரிப்பு நிலைக்கு வந்தது.

“மாமாவா?!” என்றவன் அவளை ஏறஇறங்க பார்க்க,

“ஆமா… மாமாதான்… எங்க அக்காவை கட்டப்போற நீங்க எனக்கு மாமாதானே?!” என்று சொல்லி கொண்டே அவள் எழுந்து கொள்ள அவனும் எழுந்து நின்றான்.

இருவரும் தங்கள் மேல் ஓட்டியிருந்த மணலை தட்ட பரி யோசனையோடு, ‘சௌந்தர்யாவுக்கு அண்ணனுங்கதானே… தங்கச்சி இல்லையே’ என்று யோசித்துவிட்டு,

“நீ எப்படி சௌந்தர்யாவுக்கு தங்கச்சி?” என்று கேட்க,

“அவங்க என் சொந்த பெரியப்பா மக ன்னா… நான் அவங்களுக்கு தங்கச்சிதானே மாமா” என்றவள் கொடுத்த விளக்கத்தில் அவனுக்கு தெளிவாக புரிந்து போனது.

“அப்போ நீ சுசி மாமா பொண்ணா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்… நான் அவரோட ஓரே மக… அக்கா உங்ககிட்ட சொல்லலயா?” என்று அவள் கேட்கும் போது சுசீந்திரனின் பயங்கரமான உருவத்தை கண்முன்னே நிறுத்தி பார்த்தது.

‘அவருக்கு இப்படி ஒரு மகளா? ஒரு வேளை மாமி அழகா இருப்பாங்களோ’ என்று பரி மனதில் எண்ணி கொண்டான்.

“என்ன மாமா யோசிக்கிறீங்க?” என்றவள் அவன் முகம் பார்க்க,

“உன் பேர் என்ன?” என்று கேட்டான்.

“அக்கா உங்ககிட்ட என்னை பத்தி எதுவுமே சொல்லலயா மாமா?” என்றவன் ஏமாற்றமாக கேட்க,

“ப்ச் நான் உன் பேரை கேட்டேன்?” என்றவன் மீண்டும் அழுத்தி கேட்டான்.

அவள் உடனே, “என் பேர் மகிழினி!” என்றாள் முகமெல்லாம் புன்னகையாக!

“என்னது… மோகினியா?” என்றவன் வேண்டுமென்றே கிண்டலாக கேட்டு வைக்க,

“மோகினி இல்ல மாமா… மகிழினி” என்று அவள் உரக்க சொல்ல, அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அந்த பேரை விட உனக்கு மோகினிதான் பொருத்தமா இருக்கு” என்று சொல்லி சிரித்து கொண்டே முன்னே நடக்க,

“நான் ஒண்ணும் மோகினி இல்ல” என்றவள் நொடித்து கொண்டு
அவன் முன்னே வந்து நிற்க,

“வெள்ளை டிரஸ் போட்டிட்டு வந்து இப்படி இராத்திரல உலாத்தினா மோகினின்னுதான் சொல்வாங்க” என்றான்.

“அப்போ நீங்க என்னை பார்த்து மோகினின்னு பயந்துட்டீங்களா?!” என்று அவள் கேலி பார்வையோடு கேட்க, அவனுக்கு எரிச்சல் மிகுந்தது.

“பயப்படாம என்ன செய்வாங்களாம்… கட்டையை தூக்கிட்டு கத்துக்கிட்டே அடிக்க வந்தா… பேயா பொண்ணான்னு இந்த இருட்டில ஒரு மண்ணும் தெரியல”

“அய்யோ மாமா! நான் ஒரு காட்டு பூனையை துரத்திட்டு வந்தேன்… உங்களால அதை எஸ்கேப்பாயிடுச்சு” என்றவள் படுதீவிரமாக சொல்ல பரிக்கு சிரிப்பு தாளவில்லை.

“பூனையை துரத்திட்டு வந்தியா… அதனாலதான் அது அப்படி தெறிச்சு ஓடுச்சா” என்று அந்த பூனை ஓடியதை எண்ணி சிரித்து கொண்டே,

“எதுக்கு… போயும் போயும் அந்த பாவப்பட்ட ஜீவனை போய் கட்டையை தூக்கிட்டு துரத்தின?” என்று கேட்டான்.

“அது பாவப்பட்ட ஜீவனா? போங்க மாமா… நான் வளர்க்கிற முயல்குட்டியை அது சாப்பிட பார்க்குது தெரியுமா?” என்று குழந்தைத்தனமாக சொன்னவளை பரி சுவாரசியமாக பார்த்து,

“பெரிய வீராங்கனைதான்… ஆனா சத்தியமா உண்மையான பேய் பிசாசு வந்திருந்தா கூட எனக்கு இவ்வளவு பீதியை கிளப்பியிருக்காது” என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“அய்யோ! காட்டு பூனையை தேடி வந்தா இதென்ன காட்டெருமை கூட்டம் வருது” என்று அவளாக ஏதோ சொல்லி கொண்டாள்.

“காட்டெருமையா?” என்று புரியாமல் திரும்பி பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

எதிரே ஐந்தாறு பேர் கொண்ட கும்பல் வெள்ளை வேட்டிகளில் தொப்பையும் தொந்தியுமாக பயங்கரமான தோற்றத்தோடு வந்து கொண்டிருக்க, மகிழினி அவர்களை பார்த்து அஞ்சி பரியின் கையை பிடித்து இழுத்து வந்து ஒரு மரத்தின் மறைவில் நிறுத்தினாள்.

அந்த கும்பலோ, “அண்ணே வேற ஏதோ கத்திற சத்தம் கேட்டுதுன்னு சொன்னாரே…  அது என்னடா சத்தம் இருக்கும்… உண்மையிலேயே மோகினி பிசாசா இருக்குமோ?!” என்று அவர்களும் பயந்து கொண்டு டார்ச் வைத்து தீவிரமாக அந்த இடத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“எதுக்கு இவங்களை பார்த்து நீ பயப்படுற” என்று பரி கேட்க,

“ஷ்ஷ்ஷ்… மெல்ல பேசுங்க… இவங்கெல்லாம் எங்க அப்பா பெரியப்பாவோட ஆளுங்க…

நான் இந்தப்பக்கம் வந்திருக்கேன்னு தெரிஞ்சா இவனுங்க போய் அப்பாகிட்ட வத்தி வைச்சிருவாங்க… அப்புறம் அவர் என்னை தோளை உரிச்சு தொங்கவுட்டிருவாரு” என்று பீதியோடு அவள் குரலை தாழ்த்தி சொன்னாள்.

அவன் அடக்கிய புன்னகையோடு,”அதுக்கு எதுக்கு என்னை இழுத்துட்டு வந்த” என்று கேட்க,

“நான் இங்க இருக்கேன்னு அவங்ககிட்ட நீங்க சொல்லிட்டா” என்றாள்.

அவளின் பதிலை கேட்டு பரி சத்தமாக சிரிக்க அவள், “ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” என்று எட்டி தன் கரத்தால் அவன் வாயை பொத்திவிட்டாள்.

பரிக்கு அத்தனை நேரம் இருந்த சந்தோஷமெல்லாம் காணாமல் போய் சங்கடமாகி போனது.

பரி சத்தியமாக கண்ணியவான் எல்லாம் கிடையாது. பெண்ணின் ஸ்பரிசமெல்லாம் அவனுக்கு புதிதுமல்ல. வேலைக்கு போக ஆரம்பித்த பின் அந்த சுகத்தையும் கொஞ்சம் கண்டவன்தான். மொத்தத்தில் ருசிகண்ட பூனை அவன்.

அதேநேரம் அவனாக எந்த பெண்ணையும் தேடி போக மாட்டான்.
அவன் ரத்ததிலேயே ஊறியிருக்கும் ஆணென்ற திமிரும் கர்வமும் எந்த பெண்ணின் பின்னோடும் போக அவனை அனுமதித்தில்லை. அவனை பொறுத்தவரை அது கௌரவ குறைவு!

அதேநேரம் அவனிடம் மயங்கி நாடி வரும் பெண்களை வேண்டாமென்று மறுக்குமளவுக்கு ஆக சிறந்த நல்லவனும் இல்லை. அப்படியாக அவனை தேடி வந்த ஒன்றிரண்டு பெண்களால் கட்டில் சுகத்தையும் பார்த்தவன்தான்.

அவனின் ஒழுக்கமான நண்பர்கள் சிலர், “இதெல்லாம் தப்புடா” என்று அவனை எச்சரிக்க,

“சேன்ஸ் கிடைச்சா நீங்க யூஸ் பண்ணிக்க மாட்டீங்களா? போங்கடா” என்று அவர்களையே எதிர் கேள்வி கேட்டு அடக்கிவிடுவான். அதுதான் பரி.

வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தி கொள்ளும் சராசரியிலும் சராசரியான ஆண்மகன் அவன்!

அப்படியான பரிக்கு மகிழினியின் அருகாமையும் தீண்டலும் எப்படி இருக்கும்? அதுவும் அவள் அவன் வாயை மூடி கொண்டே எட்டி அவர்கள் போய்விட்டதை கவனிக்க எண்ணும் போது அவள் தேகம் அவனை உரசவும்,
அவன் உணர்வுகள் வெகுவாக தூண்டப்பட்டது. தான் இருக்கும் சூழ்நிலையை சிரமப்பட்டு நினைவில் நிறுத்தி கொண்டவன்,

அவளின் இந்த செய்கையில் தன் ஆண்மையை கட்டுக்குள் வைக்க ரொம்பவும் அவதியுற்றான்.

அந்த கடுப்பில் அவன் உதட்டை மூடியிருந்த அவள் கரத்தை கடித்து வைத்துவிட்டான்.

“ஆஆஆ மாமா… ஏன் கடிச்சீங்க?” என்று அவள் வலியால் கரத்தை உதறி கொண்டே விலகி வர,

“முதல்ல வீட்டுக்கு போ… அவங்கதான் போயிட்டாங்க இல்ல” என்றான் மிரட்டலாக.

“அப்போ நீங்க”

“நான் வருவேன்… நீ போ” என்றவன் அவளை அனுப்ப,

திருதிருவென்று நின்று கொண்டே விழித்தாள்.

“என்ன நிற்கிற போ?” பரி அதிகாரமாக உரைக்க,

“தனியா போக பயமா இருக்கு… நீங்களும் வாங்களேன்” என்றாள் அவள்!

“பூனையை துரத்திட்டு வர மட்டும் பயமா இல்லையா”

“அது ஏதோ ஒரு ஆவேசத்துல” என்று வேகமாக ஆரம்பித்து அவள் குரலில் சுருதி இறங்க அவனுக்கு சிரிப்புவந்துவிட்டது.

அவளிடம் முறைப்பாக பேச அவனே நினைத்தாலும் முடியவில்லை.

“சரியான காமெடி பீஸு… சரி நீ முன்னாடி நட… நான் பின்னாடி வர்றேன்” என்று சொல்ல அவள் ஜோராக தலையசைத்துவிட்டு முன்னே நடக்க அவன் பின்னோடு நடந்துவந்தான்.

அவன் நடந்து கொண்டே ஒரு சிகரெட்டை எடுத்து லைட்டரில் பற்ற வைக்க,

முன்னே சென்றவள் அவனை திரும்பி பார்த்து அதிர்ச்சியாகி, “இந்த பழக்கமெல்லாம் இருக்கா உங்களுக்கு” என்று முகத்தை சுளித்தாள்.

“ஏன் இருந்தா என்ன?” என்று அலட்சியமாக கேட்டு கொண்டே புகைக்க ஆரம்பித்தான்.

“வேண்டாம் மாமா” என்று சொல்லி அவள் பட்டென அவன் வாயிலிருந்த சிகரெட்டை பக்கத்திலிருந்த மரத்தில் தேய்த்து அணைத்துவிட்டு கீழே போட்டுவிட்டாள்.

அவளின் துடுக்கான செயலில் அவன் முகம் கோபத்தில் சிவக்க, “ஏய் அறிவிருக்கா!” என்று கடுகடுக்க,

அவளோ சற்றும் அசறாமல்,

“அறிவு இருக்கிறதாலதான் இப்படி பண்ணேன்” என்று பதிலுக்கு பதில் சொல்லிய அதேநேரம்,

“சரக்கு கூட கொஞ்சமா அடிக்கலாம்… தப்பில்லை…  ஆனா சிகரெட் மட்டும் வேண்டாம் மாமா… அது உடம்புக்கு ரொம்ப கெடுதல்” என்றாள்.

“உன் சைஸுக்கு நீ எனக்கு அட்வைஸ் பன்றியா?” என்றவன் முறைக்க,

“அட்வைஸ் இல்ல… அக்கறை” என்றாள்.

“உனக்கென்ன என் மேல அக்கறை?”

“நீங்க ஆரோக்கியமா இருந்தாதானே எங்க அக்கா சந்தோஷமா இருப்பா… அந்த அக்கறைதான்” என்று தெள்ளதெளிவாக உரைத்தவளின் விழிகளில் அத்தனை நேரம் இருந்த துடுக்குத்தனமும் குழந்தைத்தனமும் தொலைந்து போய் முதிர்ச்சி தெரிந்தது.

அவன் கோபம் மறைந்து மனம் இளகியது.

இத்தனை நாளாக பலரும் அறிவுரை சொல்ல கேட்காத பரிக்கு அவள் அப்படி சொன்னதும் கேட்க வேண்டும் போலிருந்தது.

அவளின் வெள்ளந்தியான புன்னகையும் வெகுளித்தனமான முகமும் அதோடு அவள் வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று விளிக்கும் விதமும் அவனுக்கு ரசனையாக இருந்தது.

நிதானமாக அவளை ஆழ்ந்து பார்த்தவன், “சரி வா போகலாம்” என்று உடன் நடந்து கொண்டே,

“ஆமா… நீ இப்போ என்ன பண்ணிட்டிருக்க?” என்று அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் மிகுதியில் கேட்க,

“நான் ப்ளஸ் டூ முடிச்சுட்டு இப்போ காலேஜ் ஜாயின் பண்ண போறேனே!” என்று சந்தோஷ பொங்க உரைத்தாள்.

“ஓ! அப்போ உனக்கு வயசு ஒரு எய்ட்டீன்தான் இருக்குமா?” என்று கேட்டவனின் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றமும் கலந்திருந்தது.

“உம்ஹும்… ஒரு வயசு கூட” என்று அவள் சொல்ல அவன் முகம் குழப்பமாக மாறியது.

“அதெப்படி?” என்றவன் கேட்கும் போதே அவள் எதிரே பார்த்து,

“அந்த காட்டெருமை கூட்டம் போய் இப்போ ஏதோ கழுதை கூட்டம் வருது” என்றாள்.

“என்னது?” என்று நிமிர்ந்து பார்த்த பரி   சீற்றமாகி,

“உனக்கிருந்தாலும் இவ்வளவு வாய் ஆகாது… அவங்கள எல்லாம் பார்த்தா கழுதை கூட்டம் மாறியா தெரியுது” என்றான்.

“அப்போ இல்லையா? குரங்கு கூட்டமா?” என்று அவள் படுதீவிரமாகவே கேட்க அவளை முறைக்க எண்ணி தோற்று போய் சிரித்துவிட்டான்.

அப்போது பரியை பார்த்த அவன் நண்பர்கள் பாய்ந்துவந்து,

“எங்கடா போன… உன்னைய எங்கெல்லாம் தேடறது… யாரு என்னன்னு தெரியாத ஊர்ல விட்டுட்டு போயிட்டியோன்னு பயந்துட்டோம்… அதுலயும் இங்க இருக்க ஒருத்தன் மூஞ்சை பார்த்தா கூட சரியா படல” என்று பயந்த தொனியில் அவன் நண்பர்கள் உரைக்க,

“அய்யோ மாமா! இவங்கெல்லாம் உங்க பிரெண்ட்ஸா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“இல்ல கழுதை கூட்டமும் குரங்கு கூட்டமும்” என்றவன் கடுப்பாய் பதிலளிக்க,

“டேய்” என்று அவன் நண்பர்கள் கோபமாக பரியை முறைத்தனர்.

அப்போது மகிழினி, “சாரி மாமா! தெரியாம சொல்லிட்டேன்… அப்பா தேடுவாங்க… நான் போறேன்” என்று சொல்லியவள், தலைதெறிக்க அங்கிருந்து ஓடியே விட்டாள்.

பரி அவள் போன திசையே பார்த்து கொண்டிருந்தான். அவன் நண்பர்களோ, “கட்டிக்க போற பொண்ணு பக்கத்தில இருக்கும் போது நாங்கெல்லாம் குரங்காவும் கழுதையாவும்தான்டா தெரிவோம்… ஹ்ம்ம் நீ நடத்து மச்சி” என்றனர்.

அவர்களை அலட்சியமாய் பார்த்த பரி,

“அதுவாவாவது தெரியிறீங்களேன்னு சந்தோஷ படுங்க” என்க,

“அடப்பாவி!” என்ற அவன் நண்பர்கள் மொத்தமாக சேர்ந்த அவரை மொத்தி வைத்தனர்.

“டே விடுங்கடா” என்று கத்தியும் விடாதவர்கள்,

“பரி” என்ற அவன் அம்மாவின் அழைப்பு கேட்டு போனால் போகட்டும் என்று அவனை விட்டுவிட்டார்கள்.

இதற்கிடையில் அவன் நண்பர்கள் மகிழினியைதான் மணமகளாக நினைத்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தும் பரி அதை திருத்தவோ மறுக்கவோ இல்லை.

தாமரை மகனை தேடி கொண்டு வந்து, “உன்னை எங்கெல்லாம் தேடுறது பரி… போய் உடனே டிரஸ் மாத்திட்டு வா… சொந்த காரங்க எல்லாம் வந்திருக்காங்க” என்று பட்டுவேட்டியும் குங்கும சிவப்பில் ஒரு சட்டையையும்  கொடுக்க,

“இதையெல்லாம் என்னால கட்டிக்க முடியாது” என்று தடலாடியாக மறுத்தான் பரி.

“பரி கண்ணா.. ” தாமரை கெஞ்ச

“முடியாதும்மா” என்றான்.

“என் செல்லம்ல”

“முடியாதுன்னா முடியாது”

“சரி போ… உங்க அப்பா உள்ளேதான் இருக்காரு” என்று தாமரை சொன்ன அடுத்த நொடி அந்த வேட்டி சட்டை பரியின் கரத்திற்கு இடம்மாறியிருந்தது.

கலிவரதனிடமும் மட்டும் பரிக்கு கொஞ்சம் பயம்தான். அடி உதையெல்லாம் வாங்கியதில்லை எனினும் எப்போதும் கஞ்சிபோட்ட சட்டை போல விறைப்பாக சுற்றி கொண்டிருக்கும் அப்பாவை பார்த்து அவனுக்கு சிறுவயதில் தோன்றிய அச்சம்தான் இன்னும் மிச்சம் மீதியாக இருந்தது.

ஆதலால் பரி அதிகம் அப்பாவிடம் பேச கூட மாட்டான்.

பரி தம் உடைகளை மாற்ற சென்றிருந்த நேரம் சுசீந்திரன் வீட்டில் ஒரு பெரிய உளவினர் பட்டாளமே அமர்ந்திருந்தது.

சுசீந்திரன் மனைவி வஸந்தியின் முகமோ கடுகடுத்து கொண்டிருந்தது.

“அவங்க வீட்டு பொண்ணுக்குதானே கல்யாணம்… நான் ஏன் இதெல்லாம் செய்யணும்?” என்றவள் முனகி கொண்டேதான் வேலைகளை செய்தாள். இதே வார்த்தையை கணவனிடம் நேரடியாக சொன்னால் அரைதான் விழும். ஆதலால் அவள் தனக்குள்ளெயே புலம்பி கொண்டிருக்க அவர் கடுப்பு புரியாமல், “நான் இந்த புடவையை கட்டிக்கட்டுமா?” என்று கேட்ட மகளை எரிச்சலாக பார்த்தார்.

“எல்லா போட்டிருக்க டிரஸே நல்லாதான் இருக்கு… போடி… என்னவோ இவளுக்கே கல்யாணம் மாறி ஆடிக்கிட்டு இருக்கா?”

“போம்மா… நான் போட்டிருக்க டிரஸ் அழுக்காயிடுச்சு” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே சுசீந்திரன் உள்ளே வந்துவிட்டிருந்தான்.

“என்ன என்னாச்சு?” என்று கேட்க,

“ஹ்ம்ம்… புடவையை கட்டிக்கணுமா உங்க பொண்ணுக்கு… யாருக்கோ விசேஷம்… இவளுக்கு எதுக்கு இந்த சிங்காரிப்பு எல்லாம்” என்று வஸந்தி தன் மனதிலுள்ள எண்ணத்தை மறைமுகமாக சொல்ல சுசீந்திரன் மனைவியை பார்த்து முறைத்து,

“யாருக்கோவா… என் அண்ணன் பொண்ணுக்கு விசேஷம்… நான்தான் எல்லாத்தையும் எடுத்து செய்வேன்” என்றவர் மகளை பார்த்து, “நீ போய் புடவை கட்டிக்கோ” என்றார்.

மகிழினிக்கு அந்த ஒரு வார்த்தையே போதும் என்று ஓடிவிட வஸந்தி கணவனை பார்த்து, “நீங்க செய்ற மாறியே உங்க அண்ணனும் அண்ணியும் செய்வாங்களா உங்க பொண்ணுக்கு?” என்று கேட்டு நொடித்து கொண்டார்.

“வஸந்தி!” என்றவர் குரலையுயர்த்த,

“நான் எதுவும் பேசல சாமி” என்று அவர் கணவனின் கோபத்தை தூண்டிவிட்டு அடி வாங்க அவர் விரும்பவில்லை. ஆனால் உள்ளூர அவர் மனம் ஓயாமல் விமலனையும் அவர் மனைவியையும் நிந்தித்து கொண்டுதான் இருந்தது.

விமலன் போல அல்லாது சுசீந்திரனுக்கு ஒரே மகள்தான். ஆனால் அவர் அமுதன் இளா மற்றும் சௌந்தர்யாவையும் தன் சொந்த பிள்ளைகள் போல்தான் பார்த்தார். அவர்களுக்கு தேவையானதை சுசீந்திரன் பார்த்து பார்த்து செய்ய தன் கணவனின் சாம்பாத்தியமெல்லாம் அண்ணன் குடும்பத்திற்காகவே கரைகிறதே என்று வஸந்திக்கு வருத்தம். அதுதான் தன் மூத்தாரின் மனைவி மீது கடுப்பாகவும் வருத்தமாகவும் மாறியிருந்தது.

சுசீந்திரன் வீட்டில் சொந்த பந்தங்கள் நிறைந்து அந்த இடமே கூச்சலாக இருக்க, விமலனும் அவர் மனைவி மஞ்சுளா ஒரு புறமும் கலிவரதனும் தாமரையும் மறுபுறம் அமர்ந்திருந்தனர்.

வேட்டி சட்டையில் மிடுக்கோடு நுழைந்த பரியை பார்த்து எல்லோரும் வியப்பாகினர்.

சினிமா படநாயகன் போல இருக்கிறான் என்று எல்லோருமே அவனின் தோற்றத்தை கண்டு அளவளாவி கொண்டிருக்க விமலனுக்கு ஒரே பெருமை. கலிவரதனுக்கு எப்போதும் போல மகனை வளர்த்த விதத்தில் அடங்கா கர்வம்.

பரியோடு அவன் நண்பர்கள் நுழைய அவர்கள் அமர தனியாக இருக்கை அமைக்கப்பட்டது.

பரி அமர்ந்த பிறகு திருமண பேச்சு வார்த்தைகள் தொடங்க அதில் எல்லாம் அவன் கவனம் துளி கூட செல்லவில்லை. ஏதோ பெயருக்கென்று அமர்ந்திருந்தான்.

அந்த ஏற்பாடு மணமகனையும் மணமகளையும் நேரில் பார்த்து கொள்ள ஏற்படுத்திய ஒரு பெயரளவிலான பெண் பார்க்கும் சடங்கு! அவ்வளவே!

அவர்கள் பேச்சுவார்த்தை முடியும் போது சௌந்தர்யா தழைய தழைய ஒர் தங்க நிற பட்டுசரிகை புடவையை உடுத்தி கொண்டு தலை நிறைய மல்லிகை பூ சூடி கொண்டு அழுகு தேவதையென வெட்கத்தோடு தலைகுனிந்து வந்து நிற்க,

“டே அந்த தோப்பில பார்த்த பொண்ணு பக்கத்தில நிற்குது… அப்போ அது கல்யாண பொண்ணு இல்லையா… அந்த கோல்ட் கலர் சேரி கட்டியிருக்கிறவங்கதான் பொண்ணா?” என்று சமீர் அதிர்ச்சியாக கேட்க அப்போதுதான் தலையை நிமிர்த்தி பார்த்தான் பரி!

அவன் சௌந்தர்யாவை பார்த்த அதேநேரம் அருகில் சிவப்பு நிற சேலையில் ஒற்றை சர மல்லி தோள் மீது தவழ தங்கநிறத்தல் மின்னி கொண்டிருந்த காந்தாள் மலராள் போல் நின்ற மகிழினியை பார்த்தான்.

இரட்டை ஜடை ஒற்றை பின்னலாக மாறியிருந்தது. சற்று முன்பு குழந்தைத்தனமாக பார்த்த அதே பெண்ணிடம் இத்தனை முதிர்ச்சியான அழகா என்று வியக்க தோன்றியது.

சின்ன பெண் என்று கொஞ்சமே கொஞ்சம் இருந்த குற்றவுணர்வு கூட இப்போது சுத்தமாக தொலைந்து போனது.

சௌந்தர்யாவை பார்ப்பது போல
அவன் மகிழினியைதான் பார்த்து கொண்டிருந்தான். மகிழினியை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தான்.

காந்தமாய் அவன் பார்வை அவளிடமே ஓட்டி கொண்டு நிற்க, “டே யாருடா பொண்ணு? நீ யாரடா பார்க்கிற” என்று சமீர் பல்லை கடிக்க,

“எனக்கு யாரை பிடிச்சிருக்கோ அவளைதான் பார்க்கிறேன்” என்றான்.

சமீர் குழப்பமாகி, “பிடிச்சுதானேடா கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்க” என்று  வேதாளம் போல அவனை விடாமல் அவன் கேள்வி கணைகளை தொடுக்க,

“கொஞ்ச நேரம் மனுஷனை நிம்மதியா சைட் அடிக்க விடுறியா” என்று பரி திரும்பி நண்பனை பார்த்து முறைத்தான்.

“சைட் அடிக்கிறியா? யாரை டா?” அவன் மெல்லிய குரலில் கேட்க,

“மோகினியை… சுடிதாரை விட ஸேரி சும்மா அவளுக்கு நச்சுன்னு இருக்கு”

“அய்யோ புரியாமலே பேசுறானே… யாருடா அந்த மோகினி?”

“அவ பேர் மோகினி இல்ல மச்சி… மகிழினி? ரெட் கலர் சேரி”

“அது பொண்ணோட தங்கச்சின்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க”

“ஹ்ம்ம்ம்”

“அடேய்! இதெல்லாம் ரொம்ப தப்புடா… அப்புறம் உன் மாமன்காரனுங்ககிட்ட நீ தர்ம அடி வாங்குவ… பார்த்துக்கோ… ரெண்டு பேரும் பைல்வான் மாறி படுபயங்கரமா இருக்காணுங்க” என்ற சமீரின் வாய்முகூர்த்தம் அப்படியே விரைவில் நம் நாயகனுக்கு பளிக்கத்தான் போகிறது.

ஆனால் பரி அதை பற்றியெல்லாம்  கவலையில்லாமல் தன் நண்பனை அலட்சியமாக பார்த்து, “அதெல்லாம் வாங்கும் போது பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் மகிழினியை சைட்டடிக்க தொடங்கினான்.

யாருக்குமே பரி மகிழினியை பார்ப்பதை யூகிக்க கூட முடியவில்லை. ஆனால் சுசீந்திரன் மட்டும் தெள்ளத்தெளிவாக கவனித்துவிட்டார்.

‘இவ என்ன நம் பொண்ணையே பார்த்துட்டு இருக்கான்’ என்று சந்தேகம் உதித்தது அவருக்கு!

Paadal thedal – 17

17

கண்ணாமூச்சி

சங்கரன் வீட்டிற்குள் நுழைந்ததும் கிரிஜா கணவருக்கு குடிக்க  சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, அதனை ஆவேசமாக தட்டிவிட்டார் அவர்.

கிரிஜா அதிர்ந்துவிட, சங்கரன் கொந்தளிப்பாக மனைவியை முறைத்து கொண்டு நின்றார்.

அந்தளவுக்கு கோபத்தை கணவனிடம் கிரிஜா இதுவரை ஒரு முறை கூட பார்த்ததேயில்லை.

அப்படியே திகைத்து போய் கிரிஜா நிற்க, “என்னாச்சு ப்பா?” என்று மகள் ஜமுனா ஓடிவந்தாள்.

அவர் பதிலேதும் சொல்லாமல் சோபாவில் அமர்ந்து கொண்டுவிட, அவர் விழிகளில் கண்ணீர் தடம்.

“என்னங்க என்னாச்சு?” என்று படபடப்பாக கணவன் அருகில் வந்த கிரிஜாவிடம்,

“பேசாதே… கொன்னுடுவேன்” என்று சீற்றமானார்.

அவரின் வார்த்தை மேலும் கிரிஜாவை அதிர்ச்சிக்குள்ளாக்க, “என்னதான் ப்பா ஆச்சு?!” என்று ஜெகன் பதட்டமாக கேட்டு கொண்டே உள்ளே வந்தான்.

மகனை எரிப்பது போல் சங்கரன் ஒரு பார்வை பார்க்க, அவன் புரியாமல் அம்மாவையும் தமக்கையையும் என்னவென்று கண்ஜாடை செய்தான்.

அவர்களும் ஒன்றும் புரியாமல் குழம்பியபடி நிற்க, யாருக்கும் பதில் சொல்லும் நிலைமையில் சங்கரன் இல்லை.

சுவற்றில் மாட்டியிருந்த மகள்களும் மகனும் ஒன்றாக இருந்த புகைப்படத்தில் ஜானவியின் வெள்ளந்தியான புன்னகை அவர் மனதை குற்றவுணர்வில் ஆழ்த்தியது.

உடைந்து போன மனநிலையில் அவர் அமர்ந்திருக்க, விழிகளில் நீர் தளும்ப  அவர் உள்ளம் அன்று மகளுக்கு செய்த அவமானத்தை எண்ணி ஊமையாக  அழுதது.

கிரிஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை. கணவனின் கண்ணீரை பார்த்தவர் படபடப்போடு,

“என்னதாங்க நடந்தது… ஏதாச்சும் சொன்னாதானே எங்களுக்கும் புரியும்” என்று குழப்பமாக வினவ,

“தப்பு செஞ்சிட்டோம் கிரிஜா… ஜானு மனசை நம்ம ரொம்ப நோகடிச்சிட்டோம்” என்று கண்களில் கண்ணீர் பெருக உரைத்தார்.

கிரிஜா முகம் சிவக்க, “அவ பெயரை கூட சொல்லாதீங்க… குடும்ப மானத்தையே வாங்கிட்டா… படுபாவி” என்று சொல்லி முடிக்கும் போதே சுரீலென்று ஒரு அரை விழுந்தது அவர் கன்னத்தில்.

மகளை நிந்தித்ததை தாங்க முடியாமல் சங்கரன் மனைவியை அடித்துவிட,

“அப்ப்ப்ப்ப்ப்பா” என்று ஜமுனாவும் ஜெகனும் ஆங்காரமாக கத்திவிட்டனர்.

“யாராச்சும் ஜானுவை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசனீங்க” என்று எச்சரிக்கையாக எல்லோரையும் பார்த்து தீவிரமாக சொன்ன சங்கரன் அப்படியே சோபாவில் அமர்ந்தார்.

கிரிஜா கன்னத்தில் கை வைத்து கொண்டு அதிர்ச்சியாக கணவனை பார்த்து கொண்டு நின்றிருந்தார்.

அங்கே ஒரு கனத்த மௌனம் ஆட்கொள்ள, கணவனின் கோபம் தணிந்ததும் கிரிஜா அவரிடம் பொறுமையாக என்னவென்று பேச்சு கொடுத்தார்.

சங்கரன் மனமுடைந்த நிலையில்,

“பாவம்! அந்த பொண்ணுக்கு இருக்க கஷ்டமெல்லாம் போதாதுன்னு… பெரியவ சொன்னதை கேட்டு அவளை நாம சந்தேகப்பட்டு அசிங்கப்படுத்திட்டோம்… தப்பு பண்ணிட்டோம் கிரிஜா… பெரிய தப்பு பண்ணிட்டோம்” என்று வேதனையோடு உரைத்து நடந்த விஷயம் அனைத்தையும் நிதானமாக சொல்லி முடித்தார்.

கிரிஜா இடிந்து போய் தரையில் அமர்ந்து கொண்டு, “அய்யோ!” என்று கண்ணீர்விட்டு கதற,

“வார்த்தையை கொட்டிட்டு இப்ப அழுது என்ன கிரிஜா பிரயோஜனம்… யார் என்ன சொல்லி இருந்தாலும் நாம நம்ம பொண்ணை சந்தேகப்பட்டிருக்க கூடாது” என்று அழுத்தமாக உரைத்தார் சங்கரன்!

“இல்லைங்க… ஜோதிதான்” என்று கிரிஜா அழுது கொண்டே பேச,

“அவ சொன்னா நமக்கு எங்கடி போச்சு புத்தி… என்ன ஏதுன்னு நிதானமா விசாரிக்காம அந்த பொண்ணை என்னவெல்லாம் பேசிட்டோம்” என்று உடைந்து அழுதார் சங்கரன்.

“இல்லப்பா அக்கா தங்கி இருந்த ப்ளேட்ல” என்று ஜெகன் இடையில் பேச,

“பேசாதடா நன்றி கெட்டவனே… அந்த பொண்ணுதானேடா நீ காலேஜ் சேர்ந்த நாள்ல இருந்து உனக்கு பீஸ் கட்டிட்டு இருக்கா… அவ பேர்ல போய் அபாண்டமா பழி போடுறியே… மனசாட்சி இருந்தா அக்காவை பத்தி தப்பா பேசி இருப்பியா டா” என்று சங்கரன் ஆவேசமாக குரலையுயர்த்த ஜெகனுக்கு ஈட்டியாக பாய்ந்தது அந்த வார்த்தைகள்!

நடந்த சம்பவத்தை நினைக்க நினைக்க சங்கரனின் மனம் வெதும்பியது.

“சந்தோஷமா வந்த புள்ளைய நாம  அழ வைச்சி அனுப்பிட்டோமே… எவ்வளவு மனசொடைஞ்சி போயிருப்பா” என்று கண் கலங்கி அவர் சொல்ல கிரிஜாவிற்கு தாரை தாரையாக கண்ணீர் பெருகிவந்தது.

எல்லோருமே இப்போதுதான் தங்கள் தவறின் ஆழத்தை உணர ஆரம்பித்தனர்.

“ஜானுவை போய் பார்த்தீங்களா ங்க?” என்று கிரிஜா கேட்க,

“அவ என் முகத்தை கூட பார்க்க விரும்பல கிரிஜா” என்று வருத்தமாக உரைத்தார்.

“அப்புறம் எப்படிங்க” என்று கேட்கவும் சங்கரன் செழியனின் அம்மா அப்பாவை கோவிலில் பார்த்தது முதல்
அவர்கள் வீட்டிற்கு சென்றது வரை
முழுமையாக சொல்லி முடித்தவர்,

“அவங்க ரொம்ப நல்ல குடும்பமா இருக்காங்க கிரிஜா… மாப்பிள்ளை கூட ரொம்ப நல்ல மாதிரி பேசுனாரு… ஆனா ஜானுதான் ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசல… என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிட்டு போயிட்டா” என்று அவர் கண்கள் கலங்க சொல்ல கிரிஜாவின் விழிகளிலும் நீர் கோர்த்தது.

சில நொடி அமைதிக்கு பின் கிரிஜா, “ஜானுவை பார்த்து மன்னிப்பு கேட்கணும்ங்க” என்று சொல்ல,

“நம்ம என்ன மன்னிக்கிற மாறியான தப்பா செஞ்சிருக்கோம்” என்று சங்கரன் தீவிரமாக உரைத்தார்.

“அவ மன்னிக்கலன்னா கூட பரவாயில்லை… அவளை நேர்ல போய் பார்த்துட்டு” என்று கிரிஜா சொல்லி கொண்டிருக்க,

“வேண்டாம் கிரிஜா… அவ இப்பதான் சந்தோஷமா இருக்கா… அதை கெடுக்க வேண்டாம்… இனிமேயாச்சும் அவ நிம்மதியா இருக்கட்டும்” என்று தீர்க்கமாக சங்கரன் சொல்ல கிரிஜாவால் மறுத்து பேச முடியவில்லை. ஆனால் ஜானவியை அவமானப்படுத்தியதால் ஏற்பட்ட குற்றவுணர்வு சங்கரனோடு சேர்த்து அவர்கள் வீட்டில் உள்ள எல்லோரையும் வாட்டி வதைத்தது.

அவள் முகத்தில் கூட விழிக்க தகுதியில்லாமல் அவர்கள் தவிப்பில் கிடந்தனர்.

இவர்கள் மனநிலை இப்படியிருந்தாலும் ஜானவி பழைய விஷயங்களை எல்லாம் மெல்ல மெல்ல மறந்து சந்தோஷகரமான ஒரு வாழ்க்கையை வாழ தொடங்கியிருந்தாள்.

பாண்டியனும் சந்தானலட்சுமியும் அவளை பெற்ற மகள் போலதான் பார்த்து கொண்டனர். அதே போல மீனாவும் அன்புவும் அவள் வாழ்வில் ஒர் அங்கமாகவே மாறிவிட அக்கறைக்கும் அன்பிற்கும் அவளுக்கு ஒரு குறைவுமில்லை.

ஆனால் காதலென்ற உணர்வு மட்டும் செழியன் ஜானவிக்கு இடையில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தது.

இருவருக்குமே ஒருவர் மீது ஒருவர் விருப்பமிருந்தாலும் அதை வெளிப்படுத்தி கொள்ள முடியாத தடையும் தயக்கமும் இருந்தது.

ஜானவிக்கு ரஞ்சனி மீது செழியன் கொண்ட அழகான காதலை கலங்கப்படுத்த விருப்பமில்லை. அதேபோல் செழியனுக்கு ஜானவி தன் மீது நண்பன் என்று கொண்டிருந்த நம்பிக்கையை குலைக்க மனம் வரவில்லை.

இருவருமே ஒரே மாதிரியான மனநிலையில் வெவ்வாறான காரணங்களால் தள்ளி இருந்தனர்.

மூன்று மாதம் இப்படியே ஓடி போனது.

மகனின் மனதை பாண்டியன் ஓரளவு புரிந்து கொண்டுவிட்டார். அன்புச்செல்வியையும் மீனாவையும் பூங்காவிற்கு விளையாட அழைத்து வந்த செழியனோடு உடன் வந்த பாண்டியன், “உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் அன்பு” என்று சொல்ல,

“சொல்லுங்க ப்பா” என்றான்.

அவர் தயக்கமாக, “நீயும் ஜானவியும் இன்னும் விலகிதான் இருக்கீங்களா?” என்று கேட்டுவிட அவன் தந்தையை அதிர்ச்சியாக பார்த்தான்.

அவனால் பதிலேதும் உரைக்க முடியவில்லை.

“ஜானவியை உனக்கு பிடிச்சிருக்குதானே?” என்றவர் அடுத்த கேள்வியை வைக்க,

“அப்பா” என்று அவன் பேசும் முன்னரே,

“நட்பு அது இதுன்னு மழுப்பாம… நேரடியா எனக்கு பதில் சொல்லு… ஜானவியை நீ மனைவியா ஏத்துக்க உனக்கென்ன தயக்கம்?” என்று கேட்டார்.

சில நொடிகள் யோசித்த செழியன்,

“ஜானவியும் நானும் எங்க குழந்தைகளுக்காகதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்று சொன்ன வார்த்தையில் தெரிந்த தடுமாற்றத்தில் மகனின் மனம் புரிந்தது பாண்டியனுக்கு!

“அப்போ நீங்க இரண்டுபேரும் அம்மா அப்பாவா இருப்பீங்க… ஆனா கணவன் மனைவியா இருக்க மாட்டீங்க… அப்படிதானே?!” என்று கேட்கவும் செழியன் மௌனமாகவே நின்றான்.

பாண்டியன் மேலும், “நல்ல கணவன் மனைவியாலதான் நல்ல அம்மா அப்பாவாகவும் இருக்க முடியும் அன்பு… அதுக்கு நானும் உங்க அம்மாவும்தான் உதாரணம்” என்க,

செழியன் உதட்டில் மெல்லிய புன்னகை தவழ பாண்டியன் அவன் தோளை தொட்டு, “நீ ஜானவியை நேசிக்கிறதானே?” என்று கேட்டதும் அவன் தன்னையறியாமல் தலையசைத்துவிட்டான்.

பாண்டியன் முறுவலிக்க செழியன் தவிப்போடு, “நான் தொலைச்ச சந்தோஷத்தை எல்லாம் எனக்கு தேடி தந்தவாங்க ப்பா ஜானவி… நானும் அவங்கள சந்தோஷமா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன்” என்று தன் மனதை வெளிப்படையாக தந்தையிடம் சொல்லியவன்

“ஆனா ஜானவி மனசுல” என்று தயக்கமாக நிறுத்த பாண்டியன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“நீ ஜானவிக்கிட்ட மனசை விட்டு பேசு அன்பு” என்று அவர் உரைக்க செழியன் நொடித்து கொண்டு,

“ஈஸியா சொல்லிட்டீங்க… ஆனா அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ம்மா?” என்றான்.

“இஷ்டப்பட்டது கிடைக்கணும்னா கொஞ்சம் கஷ்டப்பட்டுதான்டா ஆகணும்” என்று பாண்டியன் கிண்டலாக சொல்ல செழியன் முகம் மலர்ந்தது.

அவன் மனமும் அவர் வார்த்தையை ஆமோதித்தது.

ரஞ்சனியை அவனால் மறக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை ரஞ்சனியால் செழியன் வாழ்வில் உண்டான வெற்றிடத்தை முழுவதுமாக ஜானவி நிரப்பியிருந்தாள் என்பது!

தன் தந்தை சொன்னதை ஆழமாக யோசித்தவனுக்கு ஜானவியிடம் பேசி பார்த்துவிட்டால் என்ன என்று தோன்றியது.

அன்று மாலை வீட்டிற்கு திரும்பியதும் ஜானவியிடம் பேச எண்ணியிருந்தான்.

ஜானவி அவள் முன்பு தங்கியிருந்த வீட்டில்தான் சரவணன் ரேஷ்மாவோடு தம் அலுவல்களை மேற்கொண்டிருந்தாள்.

அவள் வேலை முடிந்து திரும்ப இரவாகியிருந்தது. வந்தவள் லேப்டாப்பை வைத்து கொண்டு தம் வேலைகளில் தீவிரமாக மூழ்கிவிட்டாள்.

இரண்டு நாட்களாக இப்படியே தொடர்ந்து கொண்டிருக்க, செழியனுக்கு ஜானவியிடம் பேசவே சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அன்று எப்படியாவது பேசிவிட வேண்டுமென்று எண்ணி கொண்டுதான் செழியன் பள்ளியிலிருந்து வீடு திரும்பினான்.

செழியன் தம் மகள்கள் இருவரையும் அமர வைத்து பொறுமையாக வீட்டுப்பாடம் சொல்லி கொடுத்து முடிக்கும் போது மணி இரவு எட்டாகியிருந்தது. ஆனால் ஜானவி வீட்டிற்கு திரும்பியபாடில்லை.

அவன் மனம் அவள் வருகைக்காக காத்திருந்த அதேநேரம் சந்தானலட்சுமி, “மணி எட்டாச்சே! ஜானு இந்த நேரத்துக்கு வந்திடுவா… இன்னைக்கு இன்னும் வரலயே” என்று ஆரம்பிக்க,

“வேலையா இருப்பாங்க ம்மா… வந்திருவாங்க” என்ற செழியன் உரைத்தாலும் அவன் மனமும் ஜானவி எப்போது வருவாள் என்று ஏக்கமாக காத்திருந்தது.

மணி ஒன்பதை தொட்ட போதும் ஜானவி வராத காரணத்தால் சந்தானலட்சுமி பேத்திகளுக்கு உணவு கொடுத்துவிட்டு மகனுக்கும் கணவனுக்கும் பரிமாறிவிட்டு அவரும் உணவருந்தினார்.

ஆனால் ஜானவி வராதது எல்லோர் மனதையும் உருத்தி கொண்டுதான் இருந்தது.

“அவங்க ஏதோ பிஸியா இருக்காங்க போல… டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்” என்று செழியன் சொன்னதால் யாரும் ஜானவியை பற்றி பேசி கொள்ளவில்லை.

பாண்டியன் சந்தானலட்சுமியிடம் அவர்கள் அறையிலேயே குழந்தைகளை உறங்க வைத்து கொள்ள சொல்லிய செழியன்,  முகப்பறையில் ஜானவி வேலை முடித்து வருவதற்காக காத்திருந்தான்.

இந்த மூன்று மாதத்தில் அவள் செய்யும் வேலையினால் அவளுக்கு ஏற்படும் மனஉளைச்சலை அவன்  கவனித்து கொண்டுதான் இருந்தான்.  அவளிடம் அது குறித்து அவன் இதுவரை எதுவும் கேட்டு கொண்டதில்லை.

ஆனால் இந்த மூன்று நாளாக அவள் ஒரெடியாக வேலையென்று அதில் மூழ்கியிருப்பது அவன் மனதை வருத்தியது.

அதுவும் இன்று இயல்பை விடவும் நேரம் கடந்து போய் கொண்டிருக்க செழியன் தன் பொறுமையிந்து ஜானவியை காண சென்றான்.

அப்போது ஜானவி சரவணனையும் ரேஷ்மாவையும் வெலுத்து வாங்கி கொண்டிருந்தாள்.

“என்னாச்சு ஜானவி? இன்னும் சரவணனையும் ரேஷ்மாவையும் வீட்டுக்கு அனுப்பல” என்று செழியன் அதிர்ச்சியாக கேட்க,

அவன் முகத்தை பார்த்து ஒருவாறு அமைதி நிலைக்கு வந்தவள் சரவணன் ரேஷ்மாவை பார்த்து, “சரி இப்போ கிளம்புங்க… ஆனா நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்திருங்க” என்று சொல்ல,

அவர்கள் இருவரும் புறப்பட்டுவிட்டனர்.

“சரி வாங்க போலாம்” என்று செழியன் ஜானவியை அழைக்க,

அவள் தன் லேப்டாப்பை கையிலெடுத்து கொள்ள செழியன் கோபமாகி,

“இவ்வளவு நேரம் வேலை செஞ்சது போதாதா? அதை வீட்டுக்கு வேற தூக்கிட்டு வரணுமா… இங்கயே வைச்சிட்டு வீட்டை பூட்டிட்டு வாங்க… சாப்பிடலாம்” என்று உரைத்தான்.

அவன் குரலில் தெரிந்த அதிகாரத்தை அவள் அதிர்ச்சியாக பார்த்தாள். அப்படியே சிலையாக நின்றிருந்தவளிடம், “வாங்க ஜானவி” என்று அவன் அழுத்தமாக அழைக்க,

“எனக்கு வேலை இருக்கு… நான் பார்த்தே ஆகணும்” என்று பிடிவாதமாக சொல்ல செழியன் அவளை முறைப்பாய் பார்த்தான்.

“வேலை வேலை வேலை… என்னங்க அப்படி பெரிய வேலை… காலையில செஞ்சிக்க கூடாதா?”

செழியன் கடுப்பாக கேட்க, “என் வேலையை நான்தான் செஞ்சாகணும்… வேற யாரும் செய்ய முடியாது… புரிஞ்சுக்கோங்க” என்று அவளும் விறைப்பாக பதில் கூறினாள்.

“வேலை செய்யுங்க… வேண்டாம்னு சொல்லல… ஆனா அதுக்குன்னு இப்படியா…. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு” என்றான்.

“நான் வேலை செய்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை செழியன்?” என்று ஜானவியும் கோபமாக கூற,

“எனக்கு என்ன பிரச்சனை… உங்க மேல இருக்க அக்கறையிலதான் கேட்டேன்” என்று தயங்கியவன் இடைவெளிவிட்டு,

“இப்படி சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… இவ்வளவு ஸ்ட்ரெஸ் டென்ஷன் இருக்க வேலை உங்களுக்கு தேவைதானா?” என்று கேட்டுவிட்டான்.

ஜானவிக்கு அதிர்ச்சியும் கோபமும் ஒரு சேர தோன்ற, “என் வேலையை பத்தி பேசாதீங்க செழியன்” என்றவள் சூடாக பதில் கொடுத்துவிட்டாள்.

“ஓ! அப்போ உங்க விஷயத்துல என்னை தலையிடாதீங்கன்னு சொல்றீங்க” என்றவன் புருவங்களை சுருக்கி கேட்டான்.

“இல்ல… நான் அப்படி சொல்லல” என்று ஜானவி பதறி கொண்டு மறுக்க  செழியன் அவள் பேசியதை கவனியாமல் வெளியேறிவிட்டான்.

‘ஏன் இப்போ இவ்வளவு கோபப்படுறாரு?’ என்று அவள் முனகி கொண்டே அவனை தேடி கொண்டு அறைக்குள் நுழைய அவன் மட்டுமே படுக்கையில் படுத்திருந்தான். அதுவும் முதுகை காட்டி திரும்பி படுத்திருக்க,

மெதுவாக படுக்கையில் அவளும் படுத்து கொண்டு, “செழியன் சாரி” என்றாள்.

அவனிடம் எந்த அசைவும் இல்லை. பதிலும் இல்லை.

“செழியன்” என்றவள் அழைக்க,

“உங்க சாரியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்” என்று காட்டமாக பதிலளித்தான்.

“என் பக்கம் கொஞ்சம் திரும்புங்க… உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவள் நிதானமாக உரைக்க,

“நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்னுதான் மூணு நாளா ட்ரை பன்றேன்… ஆனா நீங்கதான் எதையும் கேட்கிற நிலைமையில இல்லையே” என்றவன் அவள் முகத்தை பாராமலே சொல்ல,

“என்ன பேசணும்?” என்று கேட்டாள்.

“அதை நான் இப்போ சொல்ற நிலைமையில இல்லை… நீங்களும் கேட்கிற நிலைமையில இல்லை விடுங்க”

ஜானவி என்னவென்று புரியாமல் யோசித்து கொண்டே,

“சொல்லுங்க… நான் கேட்கிறேன்” என்றாள்.

“வேண்டாம்” என்று செழியன்
மறுக்க, அவளுக்கு கடுப்பானது.

‘ரொம்பத்தான் ஓவரா பன்றாரு’ என்று ஜானவி வாய்க்குள்ளேயே முனக, அது அவன் செவிகளில் விழுந்தது.

அவன் அவள் புறம் திரும்பி படுத்து, “யாரு நானா ஓவரா பன்றேனா?” என்று கேட்டு முறைத்தான்.

“ஆமா நீங்கதான்… ஏதோ நான் வேலை டென்ஷன்ல பேசிட்டேன்… அதுக்கு போய் இப்படி மூஞ்ச தூக்கி வைச்சுக்கிட்டா எப்படி?!” என்றவள் நொடித்து கொண்டு கேட்க,

“அந்த டென்ஷன்தான் வேண்டான்னு சொல்றேன்… வாழறதுக்குதான் வேலை செய்யணுமே தவிர வேலையே வாழ்க்கையாகிட கூடாது… பணம்தான் எல்லாமா?” என்றவன் படபடவென பொறிந்து தள்ளினாள்.

“உங்க பிலாஃசபி எல்லாம் பேச வேணா நல்லா இருக்கலாம்…  ஆனா நடைமுறைக்கு ஓத்துவராது…  நீங்க ஒத்துக்கிட்டாலும் ஓத்துகலனாலும் இங்க பணம்தான் எல்லாம்… அதில்லாம எதுவும் பண்ண முடியாது” என்று அவள் கடுப்பாக பதிலுரைக்க,

அவளின் வார்த்தைகள் செழியனை ரொம்பவும் காயப்படுத்தியது.

“கரெக்ட்… உங்களுக்கு பணம்தான் எல்லாம்… நான்தான் தேவையில்லாம ஏதேதோ யோசிச்சுட்டு இருக்கேன்…

எந்த காலத்துலயும் என் பிலாஃசபி உங்களுக்கு ஒத்துவராது… அதுவும் இல்லாம நம்மிரண்டு பேரும்  ஹஸ்பெண்ட் வொய்ஃப் எல்லாம் இல்லயே… இது வெறும் கமிட்மென்ட்தானே” என்று மனதிலிருந்த ஆதங்கத்தை வார்த்தைகளாக அவளிடம் கொட்டிவிட்டு அவன் மீண்டும் முதுகை காட்டி படுத்து கொண்டான்.

‘என்னாச்சு இவருக்கு? திடீர்னு ஏன் இப்படியெல்லாம் பேசறாரு?’ என்று மனதில் குழம்பி கொண்டவளுக்கு அதற்கான விடைதான் தெரியவில்லை.

இருவரும் வெவ்வேறு மனநிலையில் தங்கள் மனதை வெளிப்படுத்தி கொள்ள முடியாத இயலாமையில் இருந்தனர்.

எப்போது உறங்கினோம் என்று தெரியாமலே இருவரும் உறங்கிவிட என்றுமில்லாமல் ஜானவிக்கு அன்று முதலில் விழிப்பு வந்தது.

விழிகளை திறந்த மறுகணம் துணுக்குற்றாள். அவள் செழியன் அருகில் நெருங்கி படுத்திருந்தாள். உறக்கத்தில் உருண்டு வந்துவிட்டோமா என்று யோசிக்கும் போதே அவன் முகம் அவள் முகத்தருகே இருப்பதை பார்க்க அவள் மனம் ஏதோ செய்தது.

விழிகள் மூடியிருந்த அவனின்  வதனத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது.

அவன் அருகிலிருக்கும் அந்த உணர்வை அவள் மனதார விரும்பினாள்.

அதுவும் நேற்று அவன் கோபமாக பேசியதை யோசித்த போது அவள் மனம் கனத்தது.

‘யாரு என்கிட்ட கோபப்பட்டாலும் நீங்க என்கிட்ட கோபப்படாதீங்க செழியன்… என்னால அதை தாங்க முடியல…

இந்த கல்யாணத்தை பண்ணிக்கும் போது நான் கமிட்மன்டாதான் நினைச்சு பண்ணிக்கிட்டேன்… ஆனா இப்போ அப்படி இல்லை… நான் உங்களை நேசிக்கிறேன்’ என்று மெல்லிய குரலில் அவன் உறங்கி கொண்டிருப்பதாக எண்ணி பேசி கொண்டிருந்தாள்.

அப்போது செழியன் மூடிய கருவிழிகள் அசைவதை பார்த்து,

அவன் விழித்து கொள்ள போகிறான் என்ற அச்சத்தில் அவசரமாக விலகி படுத்து கொண்டாள்.

YNM- 1

மோகினி பிசாசு!

‘ஹே எத்தன சந்தோஷம்
தினமும் கொட்டுது உன்மேல..
நீ மனசு வச்சிப்புட்டா
ரசிக்க முடியும் உன்னால…

ரிப்பறிரப்பாரே..
ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே..
ரிப்பரே ரிப்பறிரப்பாரே..
ரிப்பறிரப்பாரே..
ரிப்பப்ப ரபபப்பா..’

நெடுஞ்சாலையில் அதிவேகமாய் சென்று கொண்டிருக்கும் அந்த டஸ்டர் காரின் ஒளிப்பெருக்கியில் ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது அந்த பாடல். உள்ளே வாலில்லாத குரங்குகள் போல ஐந்து பேர் கொண்ட குழு!

நம் நாயகனையும் சேர்த்து…

இளமை ஊஞ்சாலடும் வயது. இருபத்து நாலு முடிந்து இருபத்து ஐந்து தொடங்கியிருந்தது. எதை பற்றியும் கவலை இல்லாமல் வாழ்க்கையை அனுபவிப்பவதாக சொல்லி கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களின் கூட்டத்தில் சேர்த்தி அவன்!

படிப்பு முடித்து உடனே ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஆன்ஸைட் என்று வெளிநாடுகள் எல்லாம் சுற்றி வந்துவிட்டான்.

சம்பாதித்த பணத்தை எப்படியெல்லாம் வீணாக செலவழிப்பது என்று அவனைதான் கேட்க வேண்டும். இந்த உலகின் அனைத்து சந்தோஷங்களையும் இளமையிலேயே அனுபவித்து பார்த்துவிட வேண்டுமென்பதே அவன் எண்ணம்!

அவன்தான் பரிமேலழகன்! பரி என்கிற பரிமேலழகன்!

ஒழுக்கம் என்றால் என்ன விலையென்று கேட்பான்.  அவன் அப்பா கலிவரதன் ஒரு கிரிமினல் லாயர். மனைவி தாமரை கணவனுக்கு அடங்கிய வீட்டையே வலம் வரும் உலகமறியா பெண்மணி!

கலிவரதனின் வசிப்பிடம் சென்னைதான். ஆனால் தாமரைக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி. பெரும் அரசியல் செல்வாக்கு படைத்த குடும்பத்தில் பிறந்தவர்.

தாமரையின் தந்தை மாடசாமி சிறந்த மேடை பேச்சாளர். பேறு பெற்ற அரசியல்வாதி. அதோடு அவர் கொஞ்சம் அதீத தமிழ் பற்றுடையவர். அதன் தாக்கம் மகன், மகள், பேரன், பெயர்த்திகளின் பெயர்களில் நன்றாக தெரியும்.

மாடசாமிக்கு இரண்டு மகன் ஒரு மகள். அதில் பெரியவர் விமலன். சின்னவர் சுசீந்திரன். கடைக்குட்டிதான் பரியின் அம்மா தாமரை.

மாடசாமி இறந்த பிறகு வந்த சொத்து பிரச்சனையில் பரியின் தந்தை கலிவரதனோடு விமலன் மற்றும் சுசீந்திரன் சகோதரர்களிடம் பெரும் மனாஸ்தபாம் உண்டானதில் கிட்டதட்ட பதினைந்து வருடம் மேலாக அந்த ஊர்பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை

எந்த சமாதான பேச்சுக்களும்  கலிவரதனிடம் எடுப்படவில்லை.

அவ்வப்போது தாமரை மட்டும் ஏதாவது குடும்ப விழாவிற்கு…

அதுவும் கலிவரதன் மனம் வைத்தால் வந்து போவார். அப்போதும் அண்ணன்களிடம் பேச கூடாது. வீட்டிற்கு போக கூடாது என்று கண்டிப்போடு சொல்லித்தான் அனுப்புவார்.

இருப்பினும் கணவனுக்கு தெரியாமல்  சில கொடுக்கல் வாங்கல்கள் அந்த பாசமலர்களுக்கு இடையில் இருந்து கொண்டுதான் இருந்தது. சகோதரர்களுக்கும் தங்கை மேல் கொள்ளை பாசம்.

ஆனால் இந்த ஆறு மாதத்தில் நிலைமையே வேறானது. தாமரையின் சகோதரர்களோடு கலிவரதன் இன்று ஒன்றுக்குள் ஒன்றாகிவிட்டார்.

அதற்கு காரணம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு முடிந்து திரும்பும் கலிவரதனை அங்கேயே கொலை செய்ய சிலர் திட்டமிட, இந்த விஷயம் அறிய வந்த சுசீந்திரன் எப்படியோ தங்கை கணவனின் உயிரை காப்பாற்றிவிட்டார்.

பிறகு கலிவரதன் சமாதான புறாவை பறக்கிவிட்டு ஊருக்கு பலமுறை சென்று வந்தார். ஆனால் இப்போதுதான் முதல் முறை தன் தாய் ஊருக்கு செல்கிறான் பரிமேளழகன் என்கிற பரி!

பரி (குதிரை) போல அவனும் வேகமும் துருதுருப்பும் உடையவன். அவன்தான் அந்த காரை தற்போது இயக்கி கொண்டிருந்தான்.

பிரௌன் ஷார்ட்ஸ் அதற்கு பொருத்தமாக கருப்பு நிற டீஷர்ட் அணிந்து கொண்டிருக்க, அந்த உடையில் அவனை பார்க்கும் போதே அவன் தேகத்தின் உடற்கட்டுக்கள் அவனை கம்பீரமாக மிளரச் செய்தது.

அளவான மீசை. அலைபாயும் கேசம் ஹீரோ கெத்தில் ஒரு குறையுமில்லை. ஆனால் இந்த அறிமுகத்தோடு சேர்த்து ஒரு டிஸ்கிளைமர் போட்டேயாக வேண்டும். (புகைப்பழக்கமும் மதுபழக்கமும் உடல்நலத்திற்கு கேடு)

பரி தம் நண்பர்களோடு சேர்ந்து குதூகலத்தோடு பீர் சிகரெட் என்று படுஜோராக தன் பயணத்தை மேற்கொண்டிருந்தான். இதெல்லாம் பரிக்கு ஸ்டைல் என்று நினைப்பு. சில பிரபலமான நடிகர்கள் தொடங்கி அவன் தந்தை வரை எல்லோரிடமும் இந்த பழக்கத்தை பார்த்து தானும் பழக்கப்படுத்தி கொண்டான்.

அவன் கார் சென்னை செக் போஸ்டையெல்லாம் அசால்ட்டாக கடந்து வந்துவிட்டாலும் இப்போது சேலம் மாவட்டத்தின் நுழைவாயிலின் சாலையோரத்தில் நின்றிருந்த  காவலதிகாரியிடம் சிக்கி தொலைத்துவிட்டான். ஆனால் அதுக்கெல்லாம் அசறுபவன் அல்ல பரி!

எப்படியோ பேசி சமாளித்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை பரி நீட்டும் போது அந்த இடத்தை ஓர் உயர்ரக கார் கடந்து சென்று முன்னே நின்றது. முன்புறத்தில் ஒரு கட்சிக்கொடி படுசீற்றமாக பறந்து இப்போது சற்று தணிந்து அமைதி பெற்றிருந்தது.

வெள்ளை வேட்டி  சட்டையோடு பெருத்த மீசை பருத்த உடலோடு கம்பீரமாக நடந்து வந்தவர்  பரியை நெருங்கி, “ஏன் மாப்பிள்ளை… ஏன் இங்க நிற்குறீங்க?” என்று பதட்டமாக கேட்கவும் அவரை குழப்பமாக ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்தான் பரி. அவனுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.

அதற்குள் அந்த வெள்ளை வேட்டி மனிதர் பரி சொல்லாமலே நிலைமையை புரிந்து  காவலாளிகளை படுதீவிரமாக  முறைத்து, “என்ன… என் மாப்பிள்ளைகிட்ட என்ன உங்களுக்கு?” என்று கேட்க,

“அய்யய்யோ! இல்லைங்க ஐயா… தம்பி குடிச்சிட்டு வண்டி ஓட்டின்னு வந்திருக்காப்ல… அதான் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருந்தோம்” என்றதும் அவர் பரியிடம் தன் பார்வையை ஒரு மாதிரியாக திருப்பினார்.

அவன் அலட்சியமாக நின்று கொண்டிருந்தான்.

“குடிச்சிருக்கீங்களா மாப்பிள்ளை?” என்று தாழ்வாக அவன் காதோரம் வினவ,

“ஏன்… நீங்கெல்லாம் குடிக்க மாட்டீங்களா?” என்று எகத்தாளமாக அவரை பார்த்து கேட்டான் பரி!

அந்த மனிதர் முகத்தில் அத்தனை கடுப்பு!

‘வரதன் மாமாவோட ஜெராக்ஸா இருப்பான் போல’ என்று மனதில் தோன்றிய எண்ணத்தை மறைத்து கொண்டு

அங்கிருந்த காவலாளிகளிடம் அவர் கண்ஜாடையால் ஏதோ சொல்ல அவர்கள் பயபக்தியோடு, “நீங்க போகலாம் சார்” என்றனர் பரியிடம்!

அவர் உடனே பரியின் புறம் திரும்பி, “உங்க வண்டியை ஓட்ட நான் நம்ம டிரைவரை அனுப்புறேன் மாப்பிள்ளை” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“அதெல்லாம் வேண்டாம்… ஐ கேன் மேனேஜ்” என்றான் அலட்சிய தொனியில்!

“அப்படின்னா சரிங்க மாப்பிள்ளை… நீங்க என் வண்டியை ஃபாலோ பண்ணி வந்திருங்க” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தார்.

பரி அந்த காவலர்களை பார்த்து ஐநூறு ரூபாயை மீண்டும் நீட்டி, “வைச்சுக்கோங்க” என்க,

“அய்யோ வேண்டாம்… சுசி ஐயா கொன்னுடுவாரு” என்று மிரண்டு ஒதுங்கினர்.

பரி அவர்களை யோசனையாக பார்த்துவிட்டு மீண்டும் தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு, “இவர்தான் சின்ன மாமாவோ?” என்று தனக்குள்ளேயே கேட்டு கொண்டிருக்கும் போதே,

“யாருடா அந்த வெள்ளை வேட்டி? பயங்கரமா இருக்காரு?”  என்று அவன் நண்பர் குழுவில் ஒருவன் கேட்க,

“என் மாமா” என்று சொல்லி கொண்டே காரை எடுத்தவன் வேகமெடுத்து தன் மாமா சொல்வதை கேட்க கூடாதென்றே அவர் காரை முந்தியடித்தான்.

சுசீந்திரனுக்கு அவன் செயல் எரிச்சலை வரவழைத்தாலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலைமை!

பரியின் கார் ஊருக்குள் நுழைந்து அந்த பிரமாண்டமான வீட்டு வாயிலில் வந்து நின்றது.

உள்ளே ஓரே போல இரண்டு வீடுகள் அருகருகே இருந்தது. என்னதான் விமலனும் சுசியும் ஒற்றுமையாக இருந்தாலும் ஓரகத்திகள் அப்படி இருக்க வேண்டுமே!

பெரியவர் விமலனின் மனைவி மஞ்சுளாவும் சின்னவர் சுசீந்திரனின் மனைவி வஸந்தியும் எதிரும் புதிரும். ஆதலால்தான் இருவருக்கும் ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனி வீடு. தனித்தனி சமையல்.

ஆனாலும் சகோதரர்களுக்கிடையில் இன்று வரை எந்தவித பிரிவினையும் இல்லை.

அதேநேரம் விமலன் சுசீந்திரன் ஒற்றுமையை பற்றி அந்த ஊரறிந்தது. அண்ணன் தம்பி என்றால் அப்படி இருக்க வேண்டுமென்பார்கள். அரசியல் அடிதடி மற்றும் சாதி கலவரம் செய்வது. இதுதான் அவர்களின் முக்கிய வேலையே.

சாதிக்காக உயிரையும் எடுப்பார்கள். உயிரையும் கொடுப்பார்கள். தங்கள் சாதியை மட்டும் எக்காரணம் கொண்டு விட்டுத்தர மாட்டார்கள்.

ஆகையால் சாதி பிரச்சனை என்றால் அவர்களுக்கு பெரும்பாலும் வாய் பேசாது. அரிவாள்தான் பேசும். ஊரையே ரத்தகளரியாக்கிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.

பரி வீட்டினுள் காரை நுழைக்க வாழை மர தோரணம் சீரியல் பல்பு அலங்காரம் எல்லாம் படுஜோராக இருந்தது.

“என்னடா மச்சி? வீட்டுல ஏதாச்சும் விசேஷமா?” என்றவன் நண்பன் சமீர் கேட்க,

“ஹ்ம்ம்… எனக்கு கல்யாணம்” என்று பரி அலட்சியமாக சொன்ன விதத்தில் அவன் நண்பர்கள் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டனர்.

சில நொடிகள் தாமதித்து, “என்னடா சும்மா ஊரை சுத்தி பார்க்கலாம்னு எங்களை கூட்டிட்டு வந்துட்டு இப்போ உனக்கு கல்யாணங்கிற… நிஜமாவா டா?” என்றவர்கள் அதிர்ச்சி மாறாமல் கேட்க,

“ப்ச்… இப்போ எதுக்கு இந்த ஷாக் ரியாக்ஷன்? வாங்கடா வீட்டுக்குள்ள போகலாம்” என்று அழைத்துவிட்டு உள்ளே செல்ல, சுசீந்திரன் கார் பின்னோடு சீறி கொண்டு வந்து வாயிலிற்குள் நுழைந்தது.

சுசீந்திரன் வேகமாக இறங்கிவந்து, “மாப்பிள்ளை!” என்றழைக்க,

பரி கடுப்பாக திரும்பி அவரை ஒரு பார்வை பார்த்தான்.

“இப்படியே உள்ளே போகாதீங்க மாப்பிள்ளை… ரூமுக்கு போய் குளிச்சி கிளிச்சி நல்லா” என்றவர் சொல்லி கொண்டே, “வீட்டில சொந்தகாரவங்க எல்லாம் இருக்காவுங்க” என்று தயக்கமாக இழுத்தார்.

அவன் சரியென்று கூட ஒரு வார்த்தை சொல்லாமல் திரும்பி நடக்க, சுசீந்திரன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!

அதேநேரம் பரியை பார்த்துவிட்டு தாமரை ஓடிவந்து மகனை அணைத்து கொண்டார்.

“என்ன ராசா? கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வந்திருக்கலாம்ல” என்று கேட்க, ஒரே மகனென்ற செல்லம் அவர் செய்கையில் நன்றாக தெரிந்தது.

“அதான் வந்துட்டேன் இல்ல” என்று சொன்னவன் தன் நண்பர்களை திரும்பி உள்ளே அழைக்க தாமரையும் முகமன் கூறி அவர்களை மரியாதையாக வரவேற்றார்.

“ம்மா… எங்க பிரைவஸியை டிஸ்டர்ப் பண்ணாத மாறி நானும் என் பிரெண்ட்ஸும் தங்க தனியா ஒரு ரூம் வேணுன்னு சொன்னேனே” என்றவன் அதிகாரமாக கேட்க,

“மாடில கடைசி ரூம்… உனக்காகவே மாமா  கிளீன் பண்ணி வைக்க சொல்லி இருக்காரு” என்றவர் முடிக்கும் போதே மாடி படிக்கெட்டை பார்த்தவன் விறுவிறுவென ஏறி கொண்டே,

“வாங்கடா” என்று நண்பர்களை அழைத்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டான்.

வசதியாக விசாலமாக அவனும் அவன் நண்பர்களும் தங்க ஏற்றவாறு இருந்தது அந்த அறை. அதனை சுற்றும் முற்றும்
பரி பார்வையிட்டு கொண்டிருக்க,

“என்ன மச்சி? கல்யாணம்னு ஒரு வார்த்தை கூட சொல்லல… இன்விடேஷன் கொடுக்கல” என்று மீண்டும் அவன் நண்பன் ஒருவன் கேட்டான்.

“இப்ப அது ரொம்ப முக்கியமா? கம்னு படுங்கடா… லாங்க டிரைவ் பண்ணிட்டு வந்தது ரொம்ப டையர்டா இருக்கு” என்று படுக்கையில் சரிந்தான் பரி!

அப்படியே அவன் உறங்கியும் விட அவன் நண்பர்கள் அவனின் திருமண விஷயத்தை பற்றி தங்களுக்குள் அங்கலாய்த்துவிட்டு அவர்களும் உறங்கிவிட்டனர்.

அந்தி சாய்ந்தது. மெல்ல கண்விழித்த பரி அயர்ந்து உறங்கும் தம் நண்பர்களை தொந்தரவு செய்யாமல் குளியலறையில் புகுந்து அலுப்பு தீர ஒரு குளியலை போட்டு துண்டால் தலையை துவட்டி கொண்டே வெளியே வந்தான்.

வீட்டை சுற்றி உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் கூட்டம். பந்தியில் இரவு உணவு உண்ண பந்தலின் கீழே கூட்டமாக குழுமியிருந்தனர்.  சமையலும் அங்கேயே நடந்து கொண்டிருந்தது.

ட்ரேக் பனியன் அணிந்து கொண்டு அவன் மேலே நின்று கொண்டு அவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருக்க,

அவன் மாடியில் நின்று கொண்டிருப்பதை விசித்திரமாக சிலர் பார்த்தும் வைத்தனர். யாரையும் அவன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

கடைசியாக அவன் அந்த ஊருக்கு வரும் போது ஏழு வயதிருக்கும். உறவினர்கள் யாரையும் அவனுக்கு பெரிதாக நினைவில்லை. ஏன்? அவனின் சொந்த தாய்மாமன்களையே அவனுக்கு இன்று அடையாளம் தெரியவில்லை.

கலிவரதன் தன் மகனோடு தாமரையின் சொந்தங்கள் யார் தொடர்பும் இல்லாமல்தான் வைத்திருந்தான். ஆனால் இப்போது திடீரென்று மச்சான்கள் பாசம் பொங்கிவழிந்தது. அதுவும் அவர்கள் இவர் உயிரை காப்பாற்றியதினால்!

கலிவரதனுக்கு வேண்டாமென்றால் மொத்தமாக யாரும் வேண்டாம். வேண்டுமென்றால் அப்படியே ஓட்டி உறவாடுவர்.

பெரியவர் விமலனுக்கு மூன்று பிள்ளைகள். அமுதன், இளமாறன் கடைசியாக ஒரு மகள் சௌந்தர்யா. கலிவரதன் சௌந்தர்யாவை தன் மகன் பரிக்கு பெண் கேட்க, மாமனிடம் எப்படி முடியாதென்று சொல்ல முடியும். சம்மதிக்க வேண்டிய நிர்பந்தம். அதேநேரம் பரி படிப்பு முடித்து நல்ல வேலை, சம்பளமென்று இருந்ததால் மறுக்க அவர்களுக்கு காரணமுமில்லை.

ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் போது பரி கெனடாவில் இருந்தான். தாமரைதான் மகனிடம்  கைப்பேசியில் கெஞ்சி சம்மதம் வாங்கினர். அதுவும் தன் தாய் வீட்டினர் உறவை தொடர கடவுளாக கொடுத்த அரிய வாய்ப்பு இது. அதை அவர் நழுவ விட்டுவிடுவாரா என்ன?

அதேநேரம் பரியும் சுலபமாக சம்மதிக்கவில்லை. சௌந்தர்யா போட்டோ மற்றும் கைப்பேசி எண்ணெல்லாம் வாங்கி அவளிடம் தெளிவாக பேசிய பின்னே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தான்.

இன்னும் சௌந்தர்யாவை அவன் நேரில் பார்த்ததில்லை எனினும் வீடியோ கால் மூலமாக இருவரும்  பார்த்து பேசியிருக்கிறார்கள்.

அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் விரைவாக நடைப்பெற ஊரிலேயே நிச்சியதார்த்தம் திருமணம் யாவும் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து வைப்பதாக முடிவானது.

அவன் கெனடாவிலிருந்து ஒரு வாரம் முன்னதாகதான் வந்திருந்தான். தாமரையும் கலிவரதனும் இரண்டு நாள் முன்னதாக ஊர் வந்து சேர்ந்துவிட அவன் தன் அலுவல் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்துசேர்ந்தான்.

ஆனால் அவனுக்கு திருமணம் என்றவாறு யாருக்கும் ஒரு அறிவிப்பும் கொடுக்கவில்லை. அவன் முகத்தில் திருமண பூரிப்பு கொஞ்சமும் இல்லை.

அறையிலிருந்து தன் பேசியை எடுத்த பரி சௌந்தர்யாவிற்கு பலமுறை அழைக்க, அவள் எடுக்கவில்லை. யோசனையோடு கீழே  இறங்கி வந்தவன் யார் கவனத்தையும் ஈர்க்காமல் பின்கட்டு வழியாக சென்று பெரிய தோப்பிற்குள் காலார நடக்க தொடங்கினான்.

மாமரம் புளியமரம் தென்னை மரங்கள் என்று சூழ அந்த இடமே இருள் கவ்வியிருந்தது. அந்த தோப்பும் கூட அண்ணன் தம்பிகளுக்கு சொந்தமான இடம்தான்.

பரி அந்த தோப்பிற்குள் நடந்து செல்வதை பார்த்த பெரியவர், “அய்யோ! தம்பி இந்த இருட்டில  தோப்பு பக்கம் போக கூடாது” என்று அஞ்சிய தோரணையில் சொல்ல,

“ஏன்?” என்று புருவங்களை சுருக்கினான்.

“காத்து கருப்பு அடிச்சிடும்… இங்க மோகினி நடமாட்டமெல்லாம் இருக்கு… ஆள் வேற வாட்டசாட்டமா இருக்கீங்க” என்றவர் அஞ்சிய தோரணையில் சொல்ல அவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது.

“எந்த மோகினியும் என்ன ஒண்ணும் பண்ணாது… நான் வேணா அதை ஏதாச்சும் பண்ணலாம்” என்று கேலி செய்து  நகைத்தபடி சொல்லிவிட்டு அவரை கடந்து உள்ளே நடந்தான்.

அந்த பெரியவர் ஏதோ புலம்பி கொண்டே சென்றுவிட கொஞ்ச தூரம் நடந்த பரி சிகரெட்டை பற்ற வைத்து புகைக்க ஆரம்பித்து கொண்டே ஒரு பெரிய மரத்தில் சாய்ந்து நின்று கொண்டான். காற்று பலமாக வீசியது.

அந்த கும்மிருட்டில் வெள்ளை உடையில் ஆக்ரோஷமாக ஒரு பெண் ஓடி வர, அவளின் கால் சலங்கை ஒலி அந்த இடம் முழுக்க அதிர்ந்தது.

“ஹே! உன்னை விட மாட்டேன்” என்று பெரும் கூச்சலிட்டு கொண்டு கையில் கம்போடு ஆவேசமாக ஓடி வந்து கொண்டிருந்த அந்த பெண் உருவத்தை பார்த்து அவனின் சர்வாங்கமும் ஆடியது.

இதய துடிப்பு கூட ஒரு நொடி நின்று போன உணர்வு!

‘ஒரு வேளை அந்த தாத்தாகிட்ட  நம்ம கிண்டலா சொன்னதை இந்த மோகினி பிசாசு கேட்டிருக்குமோ?!’ என்று அவன் அச்சத்தோடு எச்சிலை கூட்டி விழுங்க,

பேய் பிசாசு நம்பிக்கை எல்லாம் சுத்தமாக இல்லாத பரிக்கு ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று எண்ணம் தோன்ற, அரண்டு போய் நின்றுவிட்டான் பரி.

Paadal thedal – 16(2)

 

செழியனின் குரல் கேட்டு அவன் புறம் திரும்பியவள், “ப்ளீஸ் செழியன் அவரை போக சொல்லுங்க” என்றாள்.

“அதெப்படி ஜானவி… வீட்டுக்கு வந்தவரை போய்… அதுவும் அவர் உங்களோட அப்பா” என்று செழியன் தாழ்வான குரலில் சொல்ல,

“அப்பா… அந்த உறவுக்கெல்லாம் அந்த மனுஷனுக்கு அர்த்தம் தெரியுமா?” என்றவள் கடுகடுப்பாய் கேட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

“உங்க கோபம் புரியுது… ஆனா இப்போ அவர்  நடந்ததுக்காக எல்லாம் மனசை வருந்தி உங்ககிட்ட மன்னிப்பு  கேட்கலாம்னுதான் வந்திருக்காரு” என்றவன் பொறுமையாக எடுத்துரைக்க,

“அதெப்படி? என் கனவு சந்தோஷம் சுயமரியாதைன்னு எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கிட்டு… இப்போ மன்னிப்பு கேட்கலாம்னு வந்திருக்காராமா… நான் என்ன மனுஷியா இல்ல ஜடமா?” என்றவள் உச்சபட்ச கோபத்தோடு கேட்ட அடுத்த நொடி உடைந்து ஆழ ஆரம்பித்தாள்.

“ஜானவி ப்ளீஸ் அழாதீங்க” என்றான் அவனும் மனவருத்தத்தோடு!

அவள் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு, “முடியல செழியன்… அன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா வீட்டுக்கு போனேன் தெரியுமா… எல்லோரும் சேர்ந்து என்னை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவமானப்படுத்தி அசங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க… அதுவும் குழந்தைங்க முன்னாடி…

ஏன்… அப்போ இந்த மனுஷனும் அவங்க கூட சேர்ந்துக்கிட்டு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சொல்லி… ச்சே! இப்படி எல்லாம் பேசினவங்கள எப்படி மன்னிக்க சொல்றீங்க… என்னால முடியாது… சத்தியமா முடியாது… நான் சாகிற வரைக்கும் இந்த அவமானத்தை என்னால மறக்கவும் முடியாது… மன்னிக்கவும் முடியாது” என்றவள் தீர்க்கமாக உரைக்க,

செழியன் மௌனமாக அவள் வேதனையை உள்வாங்கினான்.

மனதளவில் அவள் ரொம்பவும் காயப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு அத்தனை சீக்கிரத்தில் அவள் கோபம் சரியாகாது என்பது புரிய மேலே எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே வந்தான்.

முகப்பறையில் பாண்டியன் சங்கரனோடு சோபாவில் அமர்ந்து உரையாடி கொண்டிருக்க செழியன் தயக்கத்தோடு அவர்கள் முன்னே வந்து,

“ஜானவி கோபமா இருக்காங்க”என்று பேச ஆரம்பிக்கும் போதே,

“எனக்கு தெரியும் தம்பி… அவ நிச்சயம் என்னை மன்னிக்க மாட்டா… ஏன்னா நாங்க செஞ்ச காரியம் அப்படி” என்று அவர் தலைகுனிவாய் பதில் உரைத்தார்.

அவர் அருகில் அமர்ந்திருந்த பாண்டியன், “விடுங்க சம்பந்தி… எல்லாம் காலப்போக்கில சரியாகிடும்” என்க,

“அப்பா சொல்றதும் சரிதான்… கொஞ்ச நாள் போனா ஜானவி மனசு மாறும்” என்றான் செழியன்.

சங்கரன் தலையசைத்து அவர்கள் சொன்னதை கேட்டு கொண்டாலும் மனதளவில் அவருக்கு அந்த நம்பிக்கை இல்லை.

அப்போது சந்தானலட்சுமி காபியோடு வர, “இல்லங்க எனக்கு வேண்டாம்… நான் கிளம்பறேன்” என்று சங்கரன் சொல்லி மறுக்க,

“அப்படி எல்லாம் சொல்ல கூடாது… சம்பந்தி நீங்க முதல் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க” என்றார் பாண்டியன்.

அதேசமயம், “எடுத்துக்கோங்க” என்று செழியனும் சந்தானலட்சுமியும் சொல்ல சங்கரனுக்கு சங்கடமாய் போனது.

பாண்டியன் உடனே அந்த காபியை எடுத்து அவர் கையில் திணித்து,

“ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் உறவு விட்டு போகுமா? நீங்க ஜானவியோட அப்பா… எனக்கு சம்பந்தி… அப்படி எல்லாம் எதுவும் சாப்பிடாம உங்களை அனுப்ப முடியாது…  அது மரியாதையும் இல்ல” என்று பாண்டியன் முடிவாய் உரைக்க அதன் பின் சங்கரனும் மறுக்க மனமில்லாமல் வாங்கி பருகினார்.

அதேநேரம் செழியனின் குடும்பம் பழகும் விதத்தை பார்த்து சங்கரனுக்கு பெருமதிப்பு உண்டானது. செய்த தவறு ஒரு புறம் அவரை உள்ளூர வாட்டி வதைத்தாலும் மகள் நல்ல இடத்தில் வாக்கப்பட்டு இருக்கிறாள் என்று மனதில் நிம்மதி உண்டாகியிருந்தது.

சங்கரன் புறப்படும் தருவாயில் ஜானவியை எதிர்பார்த்தபடியே வீட்டின் வாயிலை தாண்டினார். ஆனால் அவள் அறையை விட்டு வெளியேவே வரவில்லை.

செழியன் அவரை வழியனுப்பும் போது, “நீங்க கவலைப்படாதீங்க ப்பா… நான் ஜானவியை எப்படியாவது சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைச்சிட்டு வரேன்” என்று சொல்ல,

சங்கரன் கண்களில் நீர் தளும்பி நின்றது.

“இல்ல தம்பி… அவ என்னை மன்னிக்கலானாலும் பரவாயில்லை… அவ சந்தோஷமா இருந்தா போதும்” என்றவர் செழியன் கரத்தை பற்றி கொண்டு,

“ஜானுவை நல்லா பார்த்துக்கோங்க தம்பி… இனிமேயாச்சும் அவ சந்தோஷமா இருக்கட்டும்” என்று கண்ணீர் மல்க உரைத்தார்.

செழியனுக்கு என்ன பதில் சொல்வதேன்றே தெரியவில்லை. ஒரு நொடி திகைத்து நின்றவன் பின் அவர் முகம் பார்த்து, “நிச்சயம் நான் ஜானவியை சந்தோஷமா பார்த்துப்பேன் ப்பா” என்று உறுதியளித்தான்.

சங்கரன் சென்ற பிறகும் ஜானவி இயல்புநிலைக்கு திரும்பவில்லை. யாரிடமும் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லை. குழந்தைகளிடம் கூட!

செழியனும் அவள் மனமறிந்து தன் தந்தை தாயிடம் இது குறித்து ஜானவியிடம் பேச வேண்டாமென்று சொல்லியிருந்தான்.

எப்போதும் போல் உறங்கும் முன்னர் அன்புவும் மீனாவும் தங்கள் அரட்டைகளை செய்துவிட்டு உறங்கி போயினர்.

ஆனால் ஜானவி அவற்றையெல்லாம் கண்டும் காணாதவளாக திரும்பி படுத்து கொண்டிருக்க, குழந்தைகள் உறங்கிவிட்டனர் என்பதை உறுதி செய்து கொண்டு செழியன்,

“ஜானவி” என்று மெதுவாக அழைத்தான். பதிலில்லை.

அவன் மனதிற்கு என்னவோ அவள் உறங்கியிருக்க மாட்டாள் என்றே தோன்றியது.

அந்த அறையே மௌனத்தை சுமந்து கொண்டிருந்த போதும் மெலிதாக அவள் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது.

“அழறீங்களா ஜானவி” என்று அவன் வினவ அப்போதும் அவளிடமிருந்து பதிலில்லை. ஆனால் அவள்  படுத்திருந்தபடியே தன் விழிகளை அவசரமாக துடைத்து கொண்டாள்.

“ஜானவி” என்றவன் அழுத்தமாக அழைக்க,

அவள் முகத்தை துடைத்து கொண்டு எழுந்தமர்ந்து, “சொல்லுங்க” என்றாள் கம்மிய குரலில்.

இருவரும் படுக்கையில் அவரவர்கள் இடத்தில் அமர்ந்து கொண்டு, “என்னாச்சு ஜானவி?” என்றவன் கேட்க,

“உம்ஹும் ஒண்ணும் இல்லயே” என்று தலையசைத்து மறுத்தாள் அவள்!

“அப்புறம் ஏன் அழறீங்க?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இல்லையே” என்று அவள் மீண்டும் தன் முகத்தை துடைத்து கொள்ள,

“என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?” செழியன் இறக்கமாக கேட்டான்.

“என்ன சொல்லணும்?”

“என்ன கஷ்டமா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க… ஏன் உங்களுக்குள்ளயே எல்லா கஷ்டத்தையும் போட்டு புழுங்குக்கிறீங்க” என்றவன் கேட்கவும் அவனை மௌனமாக பார்த்துவிட்டு அவள் தலையை திருப்பி கொண்டாள்.

“சந்தோஷத்தில மட்டும் பங்குப்போட்டுக்கிறது இல்ல நட்பு… கஷ்டத்திலயும் பங்கு போட்டுக்கிறதுதான் உண்மையான நட்பு” என்று இடைவெளிவிட்டவன்,

“அதுவுமில்லாம நான் உங்க பெட்டர் ஹாஃவ் இல்லையா ஜானவி?!”  என்று அவன் மெல்லிய புன்னகையோடு வினவ ஜானவி அவன் புறம் அதிர்ச்சியாக திரும்பினாள்.

“இல்ல…  நம்ம பொறுப்புகளையும் கடமைகளையும் பங்குப்போட்டுக்கிட்ட விதத்தில நாம இப்போ பெட்டர் ஹாஃவ்தானே… அதை சொன்னேன்” என்று செழியன் சொல்ல,

ஜானவி சலிப்பாக முகத்தை திருப்பி கொண்டு, “ப்ச்… எனக்கு எந்த கஷ்டமும் இல்ல… நான் இங்கே சந்தோஷமாதான் இருக்கேன்…  மாமாவும் அத்தையும் என்னை அந்தளவுக்கு நல்லா பார்த்துக்கிறாங்க… இன்னும் கேட்டா முன்ன விட நான் ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கேன்…” என்றவள்  சொல்லும் போதே செழியன் முகத்தில் புன்னகை அரும்பியது.

ஜானவி மேலும், “இந்த மனுஷன் அதை கெடுக்க வந்துட்டாரு” என்று பல்லை கடித்து கொண்டு உரைத்தாள்.

“அப்படி சொல்லாதீங்க ஜானவி… என்னதான் இருந்தாலும் அவரு உங்க அப்பா”

“உங்களுக்கு தெரியாது செழியன்… அவராலதான் என் வாழ்க்கையை நாசமாகிடுச்சு” என்று ஜானவி வெறுப்பாக பதிலுரைக்க,

“தப்பு ஜானவி… எந்த அப்பாவும் பொண்ணோட வாழ்க்கையை நாசமா போகணும்னு நினைக்க மாட்டாங்க… ஏதோ சூழ்நிலை… அப்படி ஒருத்தரை நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு… அவரு மட்டும் என்ன தெரிஞ்சா அப்படி ஒரு கல்யாணத்தை உங்களுக்கு செஞ்சி வைச்சாரு” என்று பொறுமையாக எடுத்துரைத்தான்.

“சரி… எனக்கு நடந்த கல்யாணத்தை என் தலைவிதின்னு நான் நினைச்சுக்கிறேன்… ஆனா பெத்த பொண்ணை அப்பாவும் அம்மாவும் சந்தேகம் படலாமா செழியன்?” என்று அவள் நிதானமாக கேட்க,

“அது தப்புதான்… நான் இல்லைங்கல… ஆனா அதுக்காக அவங்க உறவே வேண்டாம்னு சொல்றதெல்லாம்” என்றவன் பேசி கொண்டிருக்கும் போதே இடைமறித்தாள்.

“வேண்டாம் செழியன்… எனக்கு அவங்க யாரும் வேண்டாம்… எனக்கு என் பசங்க மட்டும் போதும்” என்று சத்தமாக உரைக்க அன்புச்செல்வி தூக்கத்திலிருந்து சிணுங்கி,

“ஜானும்மா” என்றாள்.

“ஒண்ணும் இல்லடா நீங்க தூங்குங்க” என்று ஜானவி அவளை தட்டி மீண்டும் உறங்க வைத்தாள்.

செழியன் மௌனமாக அமர்ந்திருக்க, “படுங்க செழியன்… அன் ப்ளீஸ் இனிமே நாம இதை பத்தி பேச வேண்டாம்” என்றாள்.

“சரி பேச வேண்டாம்… ஆனா ஒரு விஷயம்” என்றவன்,

“ப்ளீஸ் உங்களுக்கு என்ன கஷ்டம்னாலும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கோங்க… இப்படி தனியா ஆழாதீங்க” என்றான்.

ஜானவி திகைப்போடு அவனை பார்க்க

செழியன் அவளை ஆழ்ந்து பார்த்து, “உங்களுக்கு பசங்க மட்டும் போதுமா இருக்கலாம்… ஆனா எனக்கு நம்ம பசங்களோட சேர்த்து நீங்களும் வேணும் ஜானவி…

இதுவரைக்கும் உங்க வாழ்க்கையில நீங்க பட்ட கஷ்டமெல்லாம் போதும்…  இனிமே நீங்க சந்தோஷமா இருக்கணும்… நான் உங்க கூட இருக்கிற வரைக்கும் உங்களை சந்தோஷமா பார்த்துப்பேன்… நீங்க தண்ணியை குடிச்சிட்டு நிம்மதியை படுத்து தூங்குங்க” என்றான்.

அவன் பேசி முடிக்கும் வரை இமைக்காமல் அவனையே பார்த்திருந்தவள் அவன் சொன்னது போல தண்ணீரை அருந்திவிட்டு படுத்து கொண்டாள்.

செழியன் அவளை பார்த்து மெல்லிதாக புன்னகைத்துவிட்டு படுத்து விழிகளை மூடி கொள்ள ஜானவிக்கு உறக்கம் வரவில்லை. வெறும் நட்போடு மட்டும் சொன்ன வார்த்தைதானா என்ற யோசனை அவளுக்குள்!

அவன் முகத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். தனிமையும் வெறுமையும் அவளுக்கு பழகி போன ஒன்றுதான். ஆனால் திடீரென்று துணையாகவும் ஆதரவாகவும் அவன் நிற்கிறேன் என்று சொன்னது அவள் மனதை நெகிழ செய்தது.

‘எப்பவும் என் கூடவே இருப்பாங்களா செழியன்’ என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் அளவுக்காய் கேட்டு கொண்டாள்.

அவன் காதல் ரஞ்சனிக்கு மட்டுமே உரியது என்று தீர்க்கமாக தெரிந்த போதும் அவள் மனம் அவன் மீது காதல் வயப்படுவதை அவளால் தடுக்க முடியவில்லை.

ரஞ்சனியின் இடத்தை பிடிக்க முடியாமல் போனாலும் மனைவி என்ற ஸ்தானத்தோடு  அவனுடன் இருப்பதே தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று மனதை தேற்றி கொண்டு கண்ணயர்ந்தாள்.

//கண்ணே கனியே உன்னை கைவிடமாட்டேன்…

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

மாலை சூடிய காலை கதிரின் மேலே

சத்தியம் சத்தியம் இது சத்தியமே

குழந்தை போல ஒரு வைரம் போலே

தூய்மையான என் சத்தியம் புனிதமானது.//

Paadal thedal – 16(1)

16

இணக்கம்

விடியற்காலையிலேயே எழுந்து எப்போதும் போல் பள்ளிக்கு ஆயுத்தமானான் செழியன்.

ஆனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இரவு அவன் மனம் ஜானவியிடம் தடுமாறியதை இப்போது எண்ணும் போதே வலித்தது. அதை ஏற்க முடியாமல் அவன் ரொம்பவும் மனதளவில் அவதியுற்றான்.

இரு வாரங்கள் இப்படியே கடந்து சென்றுவிட்டன.

அப்போதும் செழியனுக்கு ஏனோ  அவள் முகம் பார்த்து பேச சஞ்சலமாக இருந்தது.

அவளின் நட்பை தான் கலங்கப்படுத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வா அல்லது அவளை மீண்டும் ஒரு தடவை அப்படி ஒரு  கோணத்தில் பார்த்துவிடுவோமா என்ற பயமா?

ஏதோ ஒன்று அவனிடமிருந்து அவளை விலகி நிற்க செய்தது. நேருக்கு நேராக முகம் பார்த்து  பேசாமல் முடிந்தவரை அவளை தவிர்த்தான்.

அதுவும் இரவு நேரங்களில் குழந்தைகளை அவர்களோடு உறங்க வைத்து கொள்வதில் கறாராக இருந்தான். ஏதேனும் ஒரு காரணம் சொல்லி மீனாவையும் அன்புவையும் அவர்களோடே படுக்க வைத்துகொண்டான்.

அவன் மீதே அவனுக்கு உண்டான அவநம்பிக்கையின் வெளிப்பாடுதான் அது.

ஆனால் ஜானவி தான் சங்கடப்படுகிறோம் என்பதால் அவன் அப்படி செய்கிறான் போலும் என்று எண்ணி கொண்டாள்.

செழியனின் மனநிலை ஜானவிக்கு தெரியவில்லை. அவன் விலகி நிற்க முயன்றாலும் அவள் அவனிடம் எப்போதும் போலவே இயல்பாக நடந்து கொண்டாள். பேசினாள்.

இந்த இரண்டு வாரத்தில் ஜானவி செழியன் வீட்டில் ரொம்பவும் இயல்பாக பழகிவிட்டிருந்தாள். பாண்டியனும் சந்தானலட்சுமியும் அந்தளவுக்கு அவளிடம் நெருக்கமானதும் கூட ஒரு காரணம்.

அதேநேரம் அவள் அலுவலக வேலைகள் செய்ய எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டி, அவள் முன்பு குடியிருந்த எதிர்வீட்டில் சரவணனையும் ரேஷ்மாவையும் வைத்து தம் அலுவல்களை பார்த்து கொண்டாள்.

அன்று சனிக்கிழமை செழியன் பள்ளிக்கு போய்விட்டு திரும்ப, கதவு திறந்திருந்தது. வீட்டின் வாசல் கேட் மட்டும் பூட்டியிருந்தது.

அதுவும் வீட்டில் ஆள்அரவமே இல்லை.

“அன்புக்குட்டி…. மீனும்மா…” என்று அவன் அழைக்க பதில் குரலே இல்லை.

செழியன் புரியாமல், ‘என்ன? வந்ததும் இரண்டு பேரும் எகிறிட்டு ஓடி வருவாங்க… எங்கே போனாங்க? என்று யோசித்து கொண்டே அவன்,

“ம்மா” என்று அழைத்தான்.

ஜானவி சமையலறையிலிருந்து, “இதோ வரேன்” என்று குரல் கொடுத்துவிட்டு சாவியை எடுத்து வந்து பூட்டை திறக்க,

“எங்க? வீட்டில யாரையும் காணோம்” என்று வினவினான்.

“எல்லோரும் பக்கத்தில  பெருமாள் கோவில் போயிருக்காங்க… அவங்க தாத்தா பாட்டி கிளம்பினதை பார்த்ததும் இந்த வாலுங்களும் கூடவே கிளம்பிடுச்சு” என்று சொல்லி கதவை திறந்துவிட்டு அவள் உள்ளே செல்ல  பின்னோடு வந்தவன்,

“அப்போ வீட்டில யாருமே இல்லையா?” என்று அழுத்தமாக கேட்டான்.

“என்னை பார்த்தா ஆளா தெரியலயா உங்களுக்கு?” என்று ஜானவி திரும்பி நின்று புருவத்தை உயர்த்த,

அவள் முகம் பார்க்காமல் தவிர்த்தபடி, “சேச்சே…. அப்படி இல்ல…. பசங்க இல்லையான்னுதான்… அவங்க இல்லாம வீடே அமைதியா இருக்கே” என்று சமாளித்தான்.

“அதென்னவோ உண்மைதான்… அவங்க இரண்டு பேரும் கிளம்பனதும்… எனக்கே இது நம்ம வீடான்னு சந்தேகம் வந்திருச்சு” என்று அவள் முறுவலித்து சொல்ல,

செழியன் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“டீதான் போட்டுட்டு இருக்கேன்… உங்களுக்கும் போட்டு எடுத்துட்டு வரேன்… இரண்டு பேரும் ஒண்ணா குடிக்கலாம்” என்று சொல்லி கொண்டே அவள் உள்ளே சென்றுவிட செழியனுக்குதான் உள்ளூர தடுமாற்றம்!

என்னதான் அவளை விட்டு விலகி நிற்க அவன் நினைத்தாலும் அவளின் இயல்புத்தன்மையும் அவள் அந்த வீட்டையும் அவனையும் ஒரு குடும்பமாக பாவித்து பேசும் விதமும் நாளுக்கு நாள் அவளை மனதளவில் அவனிடம் நெருக்கமாக்கி கொண்டே இருந்தது.

ஜானவி இரண்டு கோப்பையில் தேநீரை நிரப்பி கொண்டு அறை வாசலில் வந்து, “செழியன்” என்று அழைக்கவும்,

“வாங்க ஜானவி” என்று அழைத்தவன் ஃபார்மல்ஸிலிருந்து டிரேக்ஸுக்கும்  டீஷர்ட்டுக்கும் மாறியிருந்தான்.

அதோடு மேஜையில் அமர்ந்து கொண்டு தேர்வு தாள்களை திருத்த அவன் கையிலெடுத்து கொள்ள,

“வந்ததும் வேலையா? இரண்டு பேரும் சேர்ந்து ஒண்ணா டீ குடிக்கலாம்னுதானே சொன்னேன்” என்று ஜானவி முகத்தை சுருக்கினாள்.

“இல்ல ஜானவி… பேப்பர் கரெக்ஷன்ஸ்… நாளைக்கே முடிக்கணும்… பசங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ள கொஞ்சமாச்சும் முடிக்கலாம்” என்று அவன் காரணங்கள் சொல்ல,

ஜானவி தேநீர் கோப்பையை அவன் அருகில் வைத்தபடி, “முன்ன மாதிரி நீங்க என்கிட்ட பேசறது இல்ல செழியன்… ஏதோ மாதிரி நடந்துக்கிறீங்க… முகத்தை கூட பார்த்து பேச மாட்டிறீங்க… உங்களுக்கு என்னதான் ஆச்சு…  நான் ஒருவேளை ஏதாச்சும் தப்பு செஞ்சிட்டேனா? இல்ல உங்க ப்ரைவஸிக்குள்ள நான் அத்துமீறி நுழையறேனா” என்று
அவள் வருத்தத்தோடு பொரிந்து தள்ளினாள்.

“சேச்சே அப்படி எல்லாம் இல்ல ஜானவி” என்று அவன் பதறி கொண்டு மறுக்க,

“நீங்க பொய் சொல்றீங்க” என்று சொல்லி அவனுக்கான தேநீர் கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு அவள் திரும்ப,

“ஜானவி ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று செழியன் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து ஸ்டிக்கை ஊன்றி எழுந்து கொள்ளும் போது அது தடுமாறி கீழே விழுந்தது.

ஜானவி அந்த சத்தத்தில் பட்டென திரும்பியவள் அவன் நிற்க தடுமாறுவதை பார்த்து

வேகமாக தன் கையிலிருந்து ட்ரேயை கீழே வைத்துவிட்டு, “பார்த்து செழியன்” என்று பதறியபடி அவனிடம் நெருங்கி வந்து பிடித்து கொள்ள,

அவனும் தடுமாற்றத்தில் அவள் தோள் மீது தன் வலது கரத்தை தாங்கி கொண்டு நின்றான்.

ஆனால் அடுத்த நொடியே அவன் கரத்தை விலக்கி கொள்ள பார்த்த போது, அவள் கரம் அவன் இடையை வளைத்து பிடித்து கொண்டு அவனுக்கு துணையாக அவள் தாங்கி நின்றதை!

மனம் நெகிழ்ந்து அவள் முகத்தை பார்த்தான்.

தனக்காக பதறிய அவள் விழிகளிலிருந்த தவிப்பு அவனுக்கு பிடித்திருந்தது.

துணைவியாக அவள் உடன் நின்று விதத்தில் இப்படியும் அப்படியுமாக ஊசலாடி கொண்டிருந்த அவன் மனது அவளிடம் மொத்தமாக சாய்ந்திருந்தது.

“செழியன்” என்றவள் அழைப்பை அவன் செவிகள் கேட்டறிந்தாலும்  அவன் மனமும் விழிகளும் அவளை விட்டு நகர்ந்தபாடில்லை.

“செழியன்” என்றவன் அழுத்தம் கொடுத்த அழைக்க அவன் தன்னிலை மீட்டு கொண்டு அவள் தோள் மீதிருந்த கரத்தை மேஜை மீது ஊன்றி கொள்ள,

ஜானவியும் தன் கரத்தை விலக்கி கொண்டு குனிந்து அவன் ஸ்டிக்கை எடுத்து கொடுத்தாள்.

அதனை அவன் பெற்று கொண்டு மௌனமாக அவள் முகத்தை பார்த்தான்.

இத்தனை நாளாக தனக்கென்று ஒரு துணை தேவையென்று அவன் மனம் கருதியதேயில்லை.

ஆனால் மனம் இன்று அவள் துணையை விரும்பியது. அவள் தனக்காக பதறி நின்றது பிடித்திருந்தது. அவள் மீது அவன் கொண்ட நட்புணர்வு தகர்ந்திருந்தது.

“பார்த்து எழுந்திருக்க கூடாதா?” என்று அக்கறையாக கேட்டாள் அவள்!

“நீங்க கோபப்பட்டு போகாம இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது” என்று அவன் அவளை பார்த்து சொல்லவும்,

“என் கூட நீங்க ஒரு டீ குடிச்சிருந்தா… இப்படி எல்லாம் நடந்திருக்காது” என்று சொல்லி அவனை பதில் பார்வை பார்த்தாள்.

அவன் சிரித்துவிட்டு, “சரி குடிப்போம்” என்று சொல்ல இருவரும் பால்கனி கதவை திறந்து கொண்டு தேநீர் அருந்த,

“நீங்களும் அவங்க கூட கோவிலுக்கு போயிருக்கலாமே” என்று இயல்பாக கேட்டான் செழியன்.

“நீங்க வீட்டுக்கு வர நேரமாச்சா…  அதான் போகல” என்றவள் சொல்ல,

அவன் பார்வை என்னவோ இம்முறை அவளையே பார்த்து கொண்டிருந்தது. இவளுக்கு தன் மீது இருப்பது வெறும் நட்புணர்வு மட்டும்தானா என்ற கேள்வி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

அவனுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அவளுக்குள்ளும் ஏற்பட்டிருக்குமா என்ற எதிர்பார்ப்புதான்.

“செழியன்” என்றவள் அழைக்க, “ஹ்ம்ம்” என்றான்.

“உண்மையிலேயே உங்களுக்கு எதுவும் என் மேல வருத்தம் இல்லையே?” என்றவள் வருத்தமாக கேட்க,

“அப்படி எல்லாம் இல்ல ஜானவி” என்று அவன் ரொம்பவும் சாதாரணமாக கூற,

“நிஜமா?” என்றவள் அழுத்தி கேட்கவும் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அவர்கள் இருவருமே அறியாத வண்ணம் அவர்கள் இருவருக்குமிடையில் ஓர் இணக்கம் உருவாகியிருந்தது.

தேநீரை பருகி முடித்த பின்பும் அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்க,

வெளியே மீனா, அன்புக்குட்டியின் குரல் ஒலித்தது.

“வந்துட்டாங்க போல… சரி நீங்க கப்பை கொடுங்க” என்று அவன் கரத்திலிருந்த தேநீர் கோப்பையையும் வாங்கி கொண்டு வெளியேறினாள்.

‘வரவங்க இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வர கூடாதா?’  செழியனுக்கு அவளுடன் இன்னும் சில நிமிடங்கள் தனிமையில் பேசி கொண்டிருக்க கூடாதா என்ற எண்ணத்தின் எதிரொலி!

ஜானவி வேகமாய் சென்று வாசல் கேட்டை திறந்துவிட்டு கொண்டே, “சாமியெல்லாம் கும்பிட்டாச்சா?” என்று குழந்தைகளிடம் கேட்டாள்.

அப்போது பாண்டியன் சந்தானலட்சுமியை முந்தி கொண்டு மீனா உள்ளே வந்து, “ம்மா… தாத்தா” என்க,

“தாத்தாவுக்கு என்னடி ?” என்று கேட்டு கொண்டே ஜானவி பாண்டியனை பார்த்தாள். அப்போது அவர்கள் பின்னோடு சங்கரன் நுழைந்தார்.

அவரை பார்த்ததும் ஜானவிக்கு சீற்றம் உண்டாக அவள் அவரை பார்த்த கணமே விறுவிறுவென படுக்கையறைக்குள் சென்றுவிட்டாள்.

உள்ளே இருந்து வெளியே வந்து கொண்டிருந்த செழியன் அவள் கோபத்தையும் வேகத்தையும் புரியாமல் பார்த்தான்.

அவன் வெளியே வந்த போது சங்கரன் முகப்பறையில் நிற்க,

“ஜானவியோட அப்பா” என்று அவரை அறிமுகப்படுத்தினார் பாண்டியன்.

ஜானவியின் கோபம் இப்போது புரிந்தது செழியனுக்கு!

அவன் புன்னகையான முகத்தோடு, “உட்காருங்க ப்பா” என்று சங்கரனிடம் சொல்ல பாண்டியனும் அவரை அமர சொன்னார்.

சந்தானலட்சுமி, “நான் போய் காபி எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே செல்ல சங்கரன் ரொம்பவும் சங்கடமான நிலையில் நின்றிருந்தார்.

சங்கரன் கோவிலில் இறைவனை தரிசித்துவிட்டு தனியே ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த சமயத்தில் பாண்டியன் சந்தானலட்சுமியோடு வந்த மீனா அவரை கண்டறிந்து, “தாத்தா” என்று அவரிடம் ஓடி செல்ல,

பேத்தியை பார்த்து அவருக்கு அத்தனை ஆனந்தம்.

பாண்டியனுக்கும் சந்தானலட்சுமிக்கும் அப்போதுதான் அவர் ஜானவியின் அப்பா என்றே தெரியும்.

சங்கரன் மீனாவை தூக்கி கொண்டு அவர்களை புரியாமல் பார்க்கும் போது பாண்டியன் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அதேநேரம் செழியனுக்கும் ஜானவிக்கும் நடந்த திருமணத்தை பற்றி சொல்லி அனைத்து விஷயங்களை விவரமாக விளக்கினார்.

அப்போதுதான் சங்கரனுக்கு மகளின் மீது அவதூறாக அவர்கள் பழிப்போட்ட விஷயமே தெரியவந்தது. மனமுடைந்து குற்றவுணர்வோடு மகளை பார்த்து மன்னிப்பு கேட்கவே அவர் அங்கே வந்திருந்தார். ஆனால் ஜானவி அவரை பார்க்க கூட விருப்பமின்றி அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.

“ம்மா தாத்தா வந்திருக்காரு” என்று மீனா அழைக்க,

“அவரு உனக்கு தாத்தா… அவ்வளவுதான்” என்று ஜானவி கோபித்து கொண்டு முகத்தை திருப்பி கொள்ள, “ம்மா” என்று அழைத்தாள்.

“போடி” என்று ஜானவி மீனாவிடம் கோபம் மாறாமல் சொல்ல, அங்கே செழியன் வந்து நின்றான்.

மீனா அவனிடம், “அம்மா திட்டிறாங்க” என்க,

“கோபத்தில இருக்காங்கடா… நான் பார்த்துக்கிறேன்… நீங்க போங்க” என்றான்.

Paadal thedal – 15(2)

 

இரவு தன் பெற்றோரின் அறையில் அம்மாவின் மடியில் தலைசாய்த்து படுத்து கொண்டிருந்தான் செழியன்.

“என்னை விட்டுட்டு போய் நிம்மதியா எல்லா சாமியும் தரிசனம் செஞ்சிட்டு வந்துட்டீங்களா?” என்று அவன் வருத்தமாக பேசி கொண்டிருந்தான்.

அப்போது சந்தானலட்சுமி பின்னோடு கணவன் செய்த செய்கையை பார்த்து ஏதோ கண்ணசைத்து மறித்து பேசினார்.

செழியன் அதை கவனித்துவிட்டு தன் அப்பாவின் புறம் திரும்ப, அவரோ சமாளிக்க வேண்டி காற்றில் படம் வரைந்து கொண்டிருந்தார்.

உடனடியாக பார்வையை தன் அம்மாவின் புறம் திருப்பியவன், “என்னவாம் அவருக்கு… ஏதோ உன்கிட்ட அக்ஷன்லயே சொல்றாரு?” என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்க,

சந்தானலட்சுமி மகனிடம், “உங்க அப்பா ஒரு இடத்தில கூட என்னை நிம்மதியா சாமி கும்பிட விடலடா… பையன் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்… பேத்தி வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு புலம்பி தீர்த்துட்டாரு…

ப்பா முடியல… ஏன் டா இந்த மனுஷனோட தனியா போணோம்னு ஆகிடுச்சு” என்று அப்படியே கணவனை போட்டு கொடுத்து கோவிலுக்கு போன தன் அனுபவத்தை அத்தனை கடுப்பாக
கூறினார்.

செழியன் சிரித்து கொண்டே தன் தந்தையை பார்க்க,

“என்ன லட்சு நீ? என் இமேஜை இப்படி டேமேஜ் பண்ணிட்டியே” என்றவர் மனைவியை பார்த்து சொல்ல செழியன் சத்தமாக சிரித்து கொண்டே,

“உங்களுக்கு எதுக்கு இந்த வீணான வீராப்பு… நானும் கூட வரேன்னுதானே சொன்னேன்” என்று சொல்ல,

சந்தானலட்சுமி அப்போது, “அவருக்கும் மட்டும் என்னடா உன்னை விட்டு போகணும்னா… ஏதோ இந்த மூணு நாள் நீயும் ஜானவி ஒண்ணா ஒரே வீட்டில இருக்க போறீங்க… நாங்க இல்லன்னா சங்கடம் இல்லாம நீங்க தனியா பேசிக்கவும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கவும் சந்தர்ப்பம் கிடைக்கும்னுதான்” என்று உரைக்க செழியன் அதிர்ச்சியாய் பார்த்தான்.

சந்தானலட்சுமி மேலும்,

“எப்படியிருந்தாலும் நீயும் ஜானவியும் கண்டிப்பா வேறெந்த சடங்குக்கும் ஒத்துக்கவும் மாட்டீங்க… அதுவும் இந்த கல்யாணத்தை நீங்க இரண்டு பேரும் மனசார ஏத்துக்கிட்டும் பண்ணல” என்று சொல்லி அவர் தயக்கத்தோடு தன் பேச்சை நிறுத்தினார்.

செழியன் மௌனமாக அமர்ந்திருந்தான். ஜானவியும் மீனாவையும் விட்டு கொடுக்க மனமில்லாமல் இந்த திருமணத்தை செய்து கொண்டான். அவ்வளவுதான்.

அதேநேரம் இந்த நொடி வரை ஜானவியிடம் நட்பை தாண்டி வேறு எந்தவித உணர்வும் அவனுக்கு தோன்றவில்லை. தோன்றவும் தோன்றாது.

அப்படியிருக்க இவர்களின் இந்த முயற்சி வீண்தான் என்று அவன் எண்ணி கொண்டிருக்கும் போதே,

“நம்ம நினைச்சது ஓரளவு நடந்திருக்கு” என்றார் பாண்டியன்.

செழியன் அவரை புரியாமல் நிமிர்ந்து பார்க்க அவரோ, “நானே சொல்லணும்னு நினைச்சேன்… பரவாயில்ல ரஞ்சனி போட்டோஸ் எல்லாம் நீயே புரிஞ்சிக்கிட்டு கழடிட்ட” என்றதும் அவனுக்கு கோபமேறியது.

“ப்பா என்ன நடந்ததுன்னு புரியாம நீங்க பாட்டுக்கு எதாச்சும் கற்பனை பண்ணிக்காதீங்க” என்றவன் நடந்தவற்றை மறைக்காமல் அனைத்தையும் உரைத்தான்.

ஜானவியிடம் கோபப்பட்டதையும் சேர்த்து. அவர்கள் இருவர் முகம் வேதனையாக மாற, “என்ன இருந்தாலும் நான் ஜானவி மேல
யோசிக்காம கோபப்பட்டிருக்க கூடாது” என்று குற்றவுண்ர்வோடு சொல்லி முடித்தான்.

“என்ன காரியம் பண்ணி வைச்சிருக்க அன்பு… பாவம்டா அந்த பொண்ணு” என்று ஜானவிக்காக வருந்தி சந்தானலட்சுமி கண்கள் கலங்கிவிட்டார்.

“அப்போ உன் சுயநலத்துக்காகதான் அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று பாண்டியன் கோபத்தோடு சற்றே அழுத்தமாக மகனிடம் கேட்க,

“என்னப்பா பேசுறீங்க? அப்படி எல்லாம் இல்ல” என்று மறுத்தான் செழியன்.

“பொய் சொல்லாதே அன்பு… ஜானவியும் மீனாவும் அவங்க வீட்டை விட்டு போயிட்டா உன் பொண்ணு மனசொடைஞ்சி போயிடுவா… இன்னொரு இழப்பை நம்ம அன்புக்குட்டியால தாங்கிக்க முடியாது… அதனாலதான் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க” என்று சொல்லி மகனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார்.

“ஐயோ! சத்தியமா இல்லப்பா… நான் அன்புக்குட்டி மாதிரி மீனாவையும் என்னோட பொண்ணாத்தான் பார்க்கிறேன்… அதேபோல ஜானவியை ஒரு நல்ல ப்ரெண்டாத்தான் பார்க்கிறேன்… அதை தாண்டி” என்றவன் நிறுத்தி கொள்ள பாண்டியன் அவன் முன் வந்து நின்று, “நல்ல நட்போட பார்க்கிறன்னா எப்படிறா அவ ரஞ்சனி போட்டோவை கழட்டி இருப்பேன்னு சந்தேகப்பட்ட” என்றதும் செழியனை அந்த வார்த்தை ஆழமாக குத்தி கிழித்தது. மௌனமாக பதில் பேச முடியாமல் அவன் தலையை கவிழ்ந்து கொள்ள,

செழியனின் தோளை ஆதரவாக தொட்ட சந்தானலட்சுமி, “உனக்கு தெரியுமா அன்பு? ஜானவி அன்னைக்கு ரஞ்சனி போட்டோ பார்த்து என்ன சொன்னானு” என்று ஆரம்பித்து வார்த்தை மாறாமல் ஜானவி அன்று ரஞ்சனியின் புகைப்படம் பார்த்து வேதனையோடு சொன்னவற்றை அப்படியே உரைக்க அவன் அதிர்ந்து தன் அம்மாவின் முகத்தை பார்த்தான்.
அவர் சொன்னவற்றை கேட்டு அவன் விழிகளில் நீர் கோர்த்து நின்றது.

“எந்தளவு மனசு வெறுத்து போயிருந்தா ரஞ்சனி போட்டோ பார்த்து அப்படி ஒரு வார்த்தையை அந்த பொண்ணு சொல்லியிருப்பா… அதுவும் அவ குடும்பமே அந்த பொண்ணுக்கு துணையா நிற்கல… புருஷனும் சரியில்ல… தனியா ஒரு பொம்பள புள்ளையோட… பாவம்டா அந்த பொண்ணு…
இந்த சின்ன வயசுல வாழ்க்கையில எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காம போராடிட்டே இருக்கா” என்று தன் குரல் இறங்கி அவர் மகனிடம் சொல்லி கொண்டிருக்க தன் தாயின் முகத்தை பார்க்க முடியாமல் அவன் மனவேதனையோடு அவர் சொல்வதை கேட்டு கொண்டிருந்தான்.

ஜானவியின் நிலைமை அவனுக்கு தெரியும். அவள் வாழ்க்கையையும் அதன் வலியையும் அவன் அறிந்ததுதான். ஆனால் அதெல்லாம் தாண்டி நம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் உதாரணமாகத்தான் அவளை பார்க்கிறான். ஆனால் தன் தாய் சொல்லும் போதுதான் அவளின் மனவலி புரிந்தது. மனதளவில் அவள் ரொம்பவும் உடைந்திருக்கிறாள் என்று உணர்ந்தான்.

அந்த நொடியும் அவள் மீது அவனுக்கு வந்தது கரிசனம் மட்டுமே. மனைவி என்ற ஸ்தானத்திற்கு கரிசனம் மட்டும் போதாதே. இன்னும் கேட்டால் அந்த கரிசனம் கொண்டு அவளை ஏற்று கொள்வது நியாமான ஒன்றாகவும் இருக்காது.

செழியன் குழம்ப சந்தானலட்சுமி மகனின் கன்னங்களை தாங்கி, “ஜானவிகிட்ட நீ அவளை நல்லா பார்த்துப்பன்னு அவகிட்ட நம்பிகையா சொல்லி இருக்கேன் டா” என்று சொல்ல,

“கண்டிப்பா நான் ஜானவியை நல்லா பார்த்துப்பேன் ம்மா… அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று உறுதி கூறினான். ஆனால் அப்போதும் ஜானவியை மனைவியாக ஏற்க முடியுமா என்ற மனதில் கேள்வியும் குழப்பமும் எழுந்தது.

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே தடதடவென கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அத்தனை சுவாரசியமாக வெளியே விளையாடி கொண்டிருந்த மீனாவும் அன்புவும்,

ஜானவி அதட்டி தூங்க வேண்டுமென்று அழைக்கவும் அவளிடமிருந்து தப்பிக்க வேண்டி அவர்கள் ஓடி வந்து தன் தாத்தா பாட்டியின் அறையை தட்டினர்.

பாண்டியன் கதவை திறந்துவிட்டு, “இப்பதான் நினைச்சேன் எங்கடான்னு…. என் பேத்திங்களுக்கு
ஆயுசு நூறு” என்றார்.

அவர்கள் இருவரும் துள்ளி குதித்து தன் தாத்தா பாட்டியின் படுக்கையில் வந்து படுத்து கொள்ள, “நாளைக்கு காலையில ஸ்கூல் இருக்கு… தூங்கனும்… பாட்டி தாத்தாவோட நாளைக்கு ஈவனிங் வந்து விளையாடலாம்” என்று அவள் சொல்ல,

“நாங்க இங்கதான் படுத்துக்க போறோம்” என்று கோரஸாக பதிலளித்தனர் இருவரும்!

இதனை கேட்டு ஜானவிக்கு தூக்கிவாரிப்போட்டது.

“ஒன்னும் வேண்டாம்… நீங்க அவங்கள தொந்தரவு பண்ணுவீங்க… அதுவும் இன்னிக்குத்தான் அவங்களே பாவம் ஊர்ல இருந்து வந்திருக்காங்க… ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றவள் குரல் படபடக்க அழைக்க அவர்களா கேட்பார்கள்.

முயலுக்கு மூன்று கால் என்று தாங்கள் பிடித்த பிடியில் அழுத்தமாக நிற்க ஜானவியின் கெஞ்சலும் மிஞ்சலும் அங்கே ஒன்றும் பலிக்கவில்லை. இதற்கிடையில் சந்தானலட்சுமி வேறு, “படுத்துக்கட்டுமே ம்மா… எங்களுக்கு என்ன தொந்தரவு… என்னங்க?” என்று அவர் கணவனை பார்க்க,

“எங்களுக்கு பேத்திங்களை கூட படுக்க வைசுக்கணும்னு ஆசையா இருக்கு” என்று பாண்டியன் இறக்கமாக கேட்க ஜானவியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் போனது.

அவள் பாவமாகவும் தவிப்பாகவும் செழியன் முகம் பார்க்க அவனோ தான் என்ன செய்வது என்பது போல் அசட்டையாக ஒரு பார்வை பார்த்தான். அந்த நொடி அவன் மீதுதான் அவளின் மொத்த கோபமும் திரும்பியது. விடுவிடுவென எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறி தன் அறையினுள்ளே நுழைந்துவிட்டாள்.

செழியன் அவள் பின்னோடு நுழைந்தான். ஜானவியின் மனமோ குழந்தைகள் இல்லாத வெறுமையாக இருந்த படுக்கையை தவிப்போடு பார்த்தது.

“பசங்க இல்லாம இந்த ரூமே என்னவோ போல இருக்கு இல்ல… சத்தம் போடாதீங்கன்னு அதட்டுவேன்… ஆனா இப்ப அவங்களோட அந்த கலாட்டாவும் சத்தமும் இல்லாம” என்றவள் வருத்தப்பட்டு கொண்டிருக்க அவன் அவள் தவிப்பை பார்த்து லேசாக நகைத்து கொண்டான்.

அதுவும் அவர்கள் பக்கத்து அறையில்தான் இருக்கிறார்கள். எனினும் அவள் இந்தளவு சஞ்சலப்படுகிறாள். தன்னுடைய வேதனை வலி என எல்லாவற்றையும் மனதில் புதைத்து கொள்ளும் ஜானவி குழந்தைங்கள் என்று வந்துவிட்டால் மட்டும் ரொம்பவும் உணர்வுப்பூர்வமாக நடந்து கொள்கிறாள்.

இப்படி அவன் ஜானவியை பற்றி யோசித்து கொண்டிருக்கும் போதே அவள் செழியனை தயக்கமாக பார்த்து, “இப்போ எப்படி படுத்துக்கிறது?” என்று கேட்க, அவன் முகம் மலர்ந்தான்.

“இத்தனை நாளா எப்படி படுத்தோமோ அப்படித்தான்… நான் அந்தப்பக்கம் நீங்க இந்தப்பக்கம்… நடுவுல இந்த தலகாணியை வைச்சிடுவோம்” என்றான் இயல்பாக!

தயங்கியபடி அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கவும், “நம்பிக்கை இல்லன்னா நான் வேணா கீழ படுத்துக்கிறேன்” என்றான்.

“நம்பிக்கை இல்லன்னு நான் சொன்னேனா… கொஞ்சம் அன் ஈசியா இருக்கும்” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே, “அதனாலதான் நான் கீழே படுத்துக்கிறேன்” என்றான்.

“நீங்க மேல படுங்க… நான் கீழ படுத்துக்கிறேன்”

“இல்ல ஜானவி… நான் கீழ படுத்துக்கிறேன்”

“உங்களுக்கு கஷ்டமா இருக்கும் வேண்டாம் நான் கீழ படுத்துக்கிறேன்”

“அதெல்லாம் ஒரு கஷ்டமா இல்ல… நான் கீழ படுத்துக்கிறேன்”

“செழியன் ப்ளீஸ்”

“நீங்க மேலே படுங்க ஜானவி” என்றவன் மிரட்டலாக கூற,

“யாரும் கீழ படுத்துக்க வேண்டாம்… நீங்க முதல சொன்ன மாறியே இரண்டு பேரும் படுத்துக்கலாம்”

“உங்களுக்கு அன் ஈசியா” என்றவன் ஆரம்பிக்க,

“இப்ப நீங்க படுக்க போறீங்களா இல்லையா?” என்று அவள் கண்டிப்பாக கூற, அதற்கு பின் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் நடக்கவில்லை.

இருவரும் அவரவர்கள் இடத்தில் மௌனமாக படுத்து கொண்டனர்.

செழியனுக்கு ஏனோ உறக்கமே வரவில்லை. அவன் புரண்டு புரண்டு படுக்க ஜானவியோ சில நிமிடங்களில் சத்தமில்லாமல் உறங்கி போனாள்.

அவன் திரும்பி படுக்கும் போதே உறக்கத்திலேயே அவள் அவன் புறம் திரும்பி படுத்திருக்க, அவளை இறக்க உணர்வோடு பார்த்தான்.

அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்திருக்க கூடாதா என்று உறங்குபளை பார்த்து அவன் பரிதாபமாகப்பட்டு கொண்டிருக்க,

அந்த அறையின் மங்கலான வெளிச்சத்திலும் அவள் முகமும் அவன் கட்டிய தாலியும் அவளின் கழுத்தில் சரிந்து தொங்கி கொண்டிருந்தது.

இனி அவள் வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு என்று சொல்லாமல் சொல்லி காட்டி கொண்டிருந்தது அவன் கட்டிய தாலி!

அதனை பார்த்த நொடி குற்றவுணர்வு பற்றி கொள்ள தன் சுயநலத்திற்காக அவளை பயன்படுத்தி கொண்டுவிட்டோமோ என்ற அவன் அப்பாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தது.

ஆனால் எந்தவித சலனமுமின்றி அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். தன் அறையில் தன் படுக்கையில் அதுவும் தன் அருகாமையில் அவளால் எப்படி இத்தனை இயல்பாக உறங்க முடிகிறது. வெறும் தன் மீது அவள் கொண்ட நம்பிக்கையும் நட்பும் மட்டும்தான் காரணமா?

பதில் தெரியாத கேள்வியோடு அவள் முகம் பார்த்தான்.

கணவனிடம் ஒரு பெண் உணரும் பாதுக்காப்பு உணர்வு! அது அவனிடம் அவளுக்கு நிரம்ப இருந்தது. ஆதலாலேயே அவனருகில் அவள் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள். அது போதாதா?

மனதளவில் அவளை கணவனாக அவள் ஏற்று கொண்டால் என்பதற்கு!

ஆனால் அந்த விஷயம் ஜானவிக்கே புரியாத போது செழியனுக்கு எங்கனம் புரியும்?

அவள் உறங்குவதை விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான். அவள் முகம் மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தது.

அவனேயே அறியாமல் ஜானவியின் உதட்டின் மீதிருந்த மச்சத்தை ரஞ்சனியின் மச்சதோடு ஒப்பிட்டு பார்த்தான். கொஞ்சமும் வித்தியாசம் இல்லாமல் அப்படியே அச்சிட்டு வைத்தார் போல அதே அளவில் இருந்தது.

ரஞ்சனியின் அந்த மச்சத்தின் மீது அவனுக்கு தனிப்பட்ட ஓர் ஈர்ப்பு. அந்த அழகை கண்கொட்டாமல் ரசித்திருக்கிறான். பல முறை அவள் உறங்கும் போது தொட்டு பார்த்திருக்கிறான். கணக்கில் அடங்கா முறை அந்த மச்சத்தை தம் இதழ்களால் ரசித்து ருசித்தும் இருக்கிறான்.

இந்த எண்ணமெல்லாம் வரிசையாக தோன்ற அவன் அப்போதே உணர்ந்தான். ரஞ்சனியை எண்ணி கொண்டே ஜானவியின் இதழின் மீதான மச்சத்தை தன் கரம் கொண்டு தீண்ட பார்க்க விழைந்ததை.

அந்த நொடியே பதறி துடித்து எழுந்து கொண்டவன் ஜானவியை ரஞ்சனியாக எண்ணி கொண்ட தன் அறிவீனத்தை எண்ணி அசூயையாக உணர்ந்தான்.

ஒரு நொடி ஜானவியின் நம்பிக்கையை உடைக்க பார்த்தோமே என்று தவிப்புற்றவன் அதற்கு பிறகாக அவளருகில் படுக்கவில்லை. தன்னைதானே ஆசுவாசப்படுத்தி கொள்ள அறைக்குள் நடந்தவன் பின் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து படிக்கும் மேஜை மீது தன் தலையை தாங்கி பிடித்து கொண்டு அமர்ந்து கொண்டான்.

உறக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தவன் நடுநிசி கடந்த பின்னே அந்த மேஜை மீது தலை சாய்த்து உறங்கியும் போனான்.

நட்பு என்ற பிணைப்பு லேசாக அறந்து போன உணர்வு. ஆனால் அதற்கு பதிலாக வேறொரு பிணைப்பு அவளிடத்தில் அவனுக்கு உருவாகியிருந்தது.

காதலும் அல்லாது காமமும் அல்லாது ஒரு ஆணாக ஒரு பெண்ணின் மீது உண்டாகும் ஈர்ப்பு. அதுவும் ஜானவியை ரஞ்சனியாக பார்த்த பிறகு அவனால் இனி இயல்பாக வெறும் நட்புணர்வோடு ஜானவியை பார்க்க முடியுமா?

Paadal thedal- 15(1)

15

கரிசனம்

கண்ணும் கருத்துமாக கடமை உணர்வோடு மூன்று நாட்கள் கழிந்து செல்ல, அதுவரை சுமுகமாகத்தான் அவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் செழியனக்குத்தான் அவன் தந்தை தாய் இல்லாமல் வீடு என்னவோ போலிருந்தது.

அன்புவுக்கும் மீனாவுக்கும் விடுமுறை அன்று. ஆனால் மேல் வகுப்புகளுக்கு பள்ளி இருந்ததால் அவன் மட்டும் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பினான்.

மாலை நேரம் வீட்டிற்கு திரும்பிய செழியன் தன் கைபேசியில் உரையாடி கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல… இரண்டு நாள் மூணு நாள்னு ஒரெடியா நாளை கடத்திட்டு இருக்கீங்க… நீங்க சாமி எல்லாம் பார்த்தவரைக்கும் போதும் ஒழுங்கா வீடு வந்து சேர்ற வழியை பாருங்க… சொல்லிட்டேன்” என்று கண்டிப்பாக தன் தாயிடம் பேசி கொண்டே உள்ளே வந்தான்.

செழியனின் வருகையை பார்த்து அன்புவும் மீனாவும் உற்சாகமாய் துள்ளி குதித்து கொண்டு, “அப்பா” என்று அவன் காலை கட்டி கொண்டனர்.

வாஞ்சையாக தம் மகள்களை பார்த்து புன்னகை புரிந்தவன் இருவரின் தலையை கோதி கொண்டே, தன் பேசியில் உரையாடலை தொடர்ந்தான்.

“வீட்டுக்கு வந்துட்டேன் ம்மா… உங்க பேத்திங்க கிட்ட பேசுறீங்களா?” என்று கேட்டுவிட்டு,

“இந்தாங்க… பாட்டி தாத்தா கிட்ட பேசுங்க” என்று தன் பேசியை அவர்களிடம் கொடுக்க இருவரும் ஆர்வம் பொங்க அதனை வாங்கி,

நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு பேசினர். அதுவும் இவர்கள் பாட்டுக்கு நடந்த கதையெல்லாம் ஒன்றுவிடாமல் அளந்து கொண்டிருக்க,

செழியன் அவர்கள் பேசுவதை பார்த்து சிரித்து கொண்டே தன் அறைக்கு போக ஜானவி டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தாள்.

ரேஷ்மாவும் சரவணனும் அவளிடம் சரமாரியாக திட்டு வாங்கி கொண்டிருந்தனர். அதிலும் சரவணனுக்குத்தான் அதிக பட்ச திட்டு!

ஜானவி செழியன் உள்ளே வருவதை பார்த்து, “என்ன செழியன்… இன்னைக்கு ஸ்பெஷல் க்ளேஸா… ரொம்ப நேரம் ஆகிடுச்சு?” என்று கேட்க,

“க்ளேஸ் இல்ல… டீச்சர்ஸ்கெல்லாம் மீட்டிங்” என்றான் அவன் சோர்வோடு!

“உங்க பிரின்சிபால் ரம்பம் போட்டிருப்பாங்களே?” என்று கேட்க,

“ஹ்ம்ம்… ஆமா ஹெட் ஹேக் வந்திருச்சு… ஒரு காபி கிடைக்குமா?” என்றான்.

“நீங்க போய் ஃப்ரெஷ் ஆகுங்க… நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி கொண்டே அவள் எழுந்து கொள்ள, ரேஷ்மாவும் சரவணனும் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தனர்.

“என் மூஞ்சில என்ன இருக்கு… வேலையை பாருங்க” என்று அவள் சொல்ல,

“இல்ல க்கா… சார் வந்ததும் உங்க சீரியஸ் பேஸ் ஸ்மைலிங் பேஸா மாறிடுச்சே… அதான் பார்க்கிறோம்” என்றான்.

சரவணனை பார்த்து முறைத்த ஜானவி, “என்ன… இப்படியெல்லாம் பேசி தப்பிச்சிக்கலாம்னு பார்க்குறியா… அதெல்லாம் என்கிட்ட நடக்காது… ஒழுங்கா வேலையை முடிசிட்டுத்தான் போகணும்” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு சமையலறை நோக்கி விரைய,

“இன்னைக்கு மார்க்கெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு இல்ல ரேஷு” என்றான்.

“ஆமா… உன்னை மாதிரியே படு மொக்கை போடுது” என்று அவனிடம் திரும்பி கூட பாராமல் ரேஷ்மா சொல்ல,

“நான் மொக்கையா… இருக்கட்டும் உன்னை அப்புறமா வைச்சுக்கிறேன்” என்றான் சரவணன் கடுப்போடு!

“அக்கா வரட்டும்… நீ பேசிகிட்டே இருக்கேன்னு சொல்றேன்” என்று ரேஷ்மா சொல்ல,

“நர்ஸரி க்ளேஸ் படிக்கிற மாறி… மிஸ் மிஸ் இவன் பேசிக்கிட்டே இருக்கான்னு… சொல்ல போறியாக்கும்” என்று சரவணன் கிண்டலடித்து சிரிக்க ரேஷ்மா தன்னிடத்திலிருந்து கோபமாக எழுந்து கொண்டாள்.

“ஐயோ உட்காரும்மா தாயே! தெரியாம சொல்லிட்டேன்” என்று பயபக்தியோடு அவன் படுபவ்யமாக கெஞ்சிய பிறகு போனால் போகிறதென்று அவனை மன்னித்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள் ரேஷ்மா. சரவணனும் முடிந்தும் முடியாமல் தன் வேலையை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அந்தச்சமயம் சமையலறை விட்டு காபி கோப்பையோடு வெளியே வந்த ஜானவி அன்புவும் மீனாவும் பேசியில் இன்னும் விடாமல் உரையாடி கொண்டிருப்பதை பார்த்தாள்.

“இன்னுமாடி ரெண்டு பேரும் ஃபோன் பேசிகிட்டு இருக்கீங்க… போதும் பேசினது… ஒழுங்கா ஃபோனை கொடுங்கடி இங்க” என்று அவர்களை மிரட்டி அந்த பேசியை வாங்கி கொண்டு அறை வாசலில் சென்று நின்றவள், “செழியன்” என்று அழைத்தாள்.

“உள்ளே வாங்க ஜானவி” என்று அவன் அழைக்கவும் அவள் உள்ளே நுழைந்தான்.

ஒன்றாக ஒரே அறையில் தங்கினாலும் அவன் இருக்கும் போது இவளும் இவன் இருக்கும் போது அவளும் அனுமதியின்றி உள்ளே நுழைவதில்லை.

காபி கோப்பையோடு ஜானவி உள்ளே நுழைய செழியன் தன் முகத்தை துண்டால் துடைத்து கொண்டிருந்தான்.

அவள்,”காபியை இங்கே வைக்ககிறேன்” என்று சொல்லி அதனை படுக்கை அருகிலிருந்த மேஜை மீது வைக்க, “ஹம்ம் ஓகே” என்று தலையசைத்து படுக்கையில் அமர்ந்து காபியை எடுத்து பருக தொடங்கியவன் அதிர்ந்தான்.

“ஜானவி” என்ற அழைத்து கொண்டே காபியை மேஜையில் மீண்டும் வைத்துவிட்டு எழுந்திருக்க,

“என்ன செழியன்?” என்று வெளியே போக இருந்தவள் திரும்பி வந்தாள்.

“ஏன் ஜானவி இப்படி பண்ணீங்க?” என்று அவன் அழுத்தமான சீற்றத்தோடு கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன காபில எதாச்சும் கம்மியா இருக்கா? நான் எல்லாம் கரெக்டாதானே போட்டேன்” என்று புரியாமல் கேட்டாள்.

“அது இல்ல… ரஞ்சனி போட்டோஸ் எங்கே? எங்க கழட்டி வைச்சீங்க?” என்று அவன் அவளை முறைத்து கொண்டே கேட்க, அவளும் வெறுமையாக இருந்த சுவற்றை பார்த்து அதிர்ந்து நின்றாள்.

“ஜானவி… உங்களைத்தான் கேட்கிறேன்… போட்டோஸ் எங்கே? என்றவன் மீண்டும் அழுத்தமாக கேட்க அவள் தனக்கு தெரியாது என்று சொல்லி திரும்ப,

அவனோ,”வாட்ஸ் ராங் வித் யு? ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கேட்டான்.

அவன் முகத்தில் அந்தளவு டென்ஷனை அவள் அப்போதுதான் பார்க்கிறாள். எந்த சூழ்நிலையிலும் அவன் நிதானமாக பேசியே பார்த்தவளுக்கு அவன் அப்படி கடுமையாக பேச அவள் அதிர்ச்சியோடும் கலக்கத்தோடும் நின்றாள்.

அதுவும் ரஞ்சனி படங்கள் அங்கே இல்லாமல் போனதற்கு அவள்தான் காரணம் என்று அவன் முடிவு செய்துவிட்டு பேசுவது அவளுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.

ஜானவி மெளனமாக நின்று யோசிக்க செழியன் கடுப்பாகி, “ஜானவி உங்ககிட்டதான் நான் கேட்கிறேன்” என்று அவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“ப்ளீஸ்…. கொஞ்சம் அமைதியா இருங்க செழியன்” என்று அவனிடம் நிதானமாக சொல்லிவிட்டு,

“ஏ ! அன்பு மீனா” என்று அங்கேயே நின்றபடி சத்தமாக அழைத்தாள்.

செழியன் குழப்பத்தோடு அவளை பார்க்கவும், “என்ன ம்மா… என்ன ஜானும்மா” என்று இருவரும் முந்தியடித்து கொண்டு அவள் அழைப்பிற்கு வந்து நின்றனர்.

அவர்கள் இருவரையும் ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள்,

“எங்க இங்கே இருந்த ரஞ்சு ம்மா போட்டோ?” என்று கேட்க அவர்கள் இருவரும் திருதிருவென்று விழித்து கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

“அன்பு மீனா… உங்ககிட்டதான் கேட்கிறேன்” என்று ஜானவி மிரட்டியதும்,

“மீனாதான் கழட்டினா” என்று அன்பு சொல்ல ஜானவியின் விழிகள் சீற்றமாக மாறி மீனாவை படையெடுத்தது.

மீனா உடனே, “அன்புதான் கழட்ட சொல்லிச்சு” என்று இவள் அவளை போட்டு கொடுத்தாள்.

“அவ கழட்ட சொன்னா நீ உடனே கழட்டிடுவியா… அதுவும் உயரத்தில ஏறி… விழுந்து கிழுந்து வைச்சேனா… உன்னை” என்று ஜானவி மகளிடம் கை ஓங்க,

“ஜானவி வேண்டாம்” என்று செழியன் பின்னிருந்து குரல் கொடுத்தான்.

மௌனமாக தன் கரத்தை இறக்கி கொண்டவள் நிதானமாக அவர்களிடம், “சரி ரஞ்சு ம்மா போட்டோஸ் கழட்டி எங்கே வைச்சீங்க?” என்று கேட்கவும் அன்பு ஓடிச்சென்று அங்கிருந்து கப்போர்ட் ஒன்றை காண்பித்தாள்.

செழியன் அப்போது இறங்கிய குரலில், “சாரி ஜானவி” என்று சொல்லவும்,

அவன் புறம் திரும்பியவள், “தப்பு என் பேர்லதான்… மதியம் ரெண்டு பேரும் உள்ளே விளையாடிட்டு இருந்தாங்க… நான்தான் என்ன செய்றாங்கன்னு கவனிக்காம கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்… சாரி” என்றாள் அவளும் பதிலுக்கு.

செழியன் மனம் வேதனையுற்றது. விசாரிக்காமல் தான் அப்படி பேசி இருக்க கூடாது என்று அவன் உள்ளம் வருந்தி நின்றான்.

ஜானவி அப்போது குழந்தைகளிடம்,

“ரெண்டு பேரும் இந்த மாறி வேண்டாத வேலை செய்றது இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்… அதுவுமில்லாம மேலே ஏறி விழுந்தா என்ன ஆகுறது… கை கால் அடிப்படாது” என்று கண்டிப்பாக சொல்லி அவர்களை எச்சரிக்கையும் செய்தாள்.

அதோடு அவள் மௌனமாக நின்ற செழியனிடம் திரும்பி, “கையால அடிச்சா கூட தாங்கிக்கலாம் செழியன்… ஆனா வார்த்தையால அடிச்சா அது தாங்கிக்க முடியாது… அது ரொம்ப பெரிய வலி… எனக்கு அதுல நிறைய அனுபவம் இருக்கு… ஆனா நீங்க இப்படி யோசிக்காம பேசனதுதான் என்னால தாங்கிக்க முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்ல,

“ஜானவி” என்று செழியன் அவளை குற்றவுணர்வோடு பார்த்தான்.

அவள் மீண்டும் அவன் முகத்தை நேர்கொண்டு பார்த்து,

“கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தீங்களா? நான் எதுக்கு செழியன் அவங்க போட்டோவை கழட்டனும்… அதுவும் உங்ககிட்ட கேட்காம” என்று அவள் நிறுத்த செழியனால் அவள் முகத்தை ஏறிட்டும் பார்க்க முடியவில்லை.

ஜானவி அவனிடம் மேலே எதுவும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

ரஞ்சனியின் படங்கள் திடீரென்று இருந்த இடத்தில் இல்லாமல் போனதில் செழியன் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான். அந்த சூழ்நிலையில் அவனையும் அறியாமல் ஏதோ ஒரு வேகத்தில் அவளிடம் அப்படி கேட்டுவிட்டான்.

ஆனால் இப்போது நிதானமாக யோசிக்கும் போதுதான் அவன் செய்த தவறு அவனுக்கு புரிந்தது.

எத்தனை பொறுமைசாலியாக இருந்தாலும் உணர்ச்சிவசப்படும் போது அவர்களின் நிதானமும் யோசிக்கும் திறனும் அடிப்பட்டு போகும். செழியன் மட்டும் அதில் விதிவிலக்கா என்ன?

செழியன் ஜானவியிடம் அப்படி பேசியதை எண்ணி வருத்தப்பட்டு தலையை பிடித்து கொண்டு படுக்கையில் அமர்ந்திருக்க,

அன்புவும் மீனாவும் மெளனமாக அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தனர். அவர்கள் முகத்திலும் வருத்தம் குடிகொண்டிருந்தது.

செழியன் அவர்கள் முகபாவத்தை பார்த்துவிட்டு மெளனமாக தலையசைத்து அருகில் அழைக்க,

அவர்கள் அதே சோக உணர்வோடு அவன் அருகில் வந்தனர்.

“ஏன் நீங்க ரஞ்சும்மா போட்டோவை கழட்டி வைச்சீங்க?” என்று தம் மகள்களிடம் அவன் நிதானமாக கேட்க,

“அன்புதான் ப்பா கழட்ட சொன்னா?” என்றாள் மீனா.

செழியன் பார்வையை அன்புச்செல்வியின் புறம் திருப்பி,

“ஏன் அன்பும்மா?” என்ற கேட்கவும் அவள் அவனை பார்த்து தயக்கத்தோடு,

“இனிமே ஜானும்மாதானே எங்களுக்கு அம்மா… அப்போ அவங்க போட்டோதானே மாட்டனும் இங்கே” என்று குழந்தைத்தனத்தோடு அவள் சொன்ன பதிலில் அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

ஜானும்மாதான் அம்மா என்று அன்புச்செல்வி முழுமனதாக ஏற்று கொண்டதை எண்ணி சந்தோஷம் கொள்வதா இல்லை ரஞ்சனி தன் மகளின் நினைவிலிருந்து அகன்றுவிட்டதை எண்ணி வேதனை கொள்வதா என்று அவனுக்கு புரியவில்லை.

அந்த நொடி செழியன் தம் மகள்கள் இருவரையும் சேர்த்து அணைத்து கொண்டான்.

ஜானவியை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவன் மனம் ஏற்குமா?

அவன் மனம் என்ன சுவரா? சுலபமாக ரஞ்சனியின் படத்தை எடுத்துவிட்டு அங்கே ஜானவியின் படத்தை மாட்ட?

செழியனின் மனம் நடந்த விஷயங்களை எண்ணி கலக்கமுற்றிருந்தது.

இரவு ஜானவி எல்லோருக்கும் உணவு தயார் செய்துவிட்டு செழியனை உணவு உண்ண அழைத்தாள்.

“சரவணனும் ரேஷ்மாவும் போயிட்டாங்களா?” என்று அவள் முகம் பார்த்து அவன் கேட்க அவள் ரொம்பவும் இயல்பாக, “இப்பதான் போனாங்க… சரி நீங்க வாங்க… சாப்பிடலாம்” என்றாள்.

அவளிடம் சற்று முன்பு நடந்த சம்பவத்தின் தாக்கம் என்று எதுவுமே இல்லை. ரொம்பவும் இயல்பாகத்தான் இருந்தாள்.

அவள் பேச்சிலும் பார்வையிலும் எதிலுமே அந்த கோபம் துளி கூட இல்லை. உண்மையில் அதுதான் அவனை ரொம்பவும் காயப்படுத்தியது.

இரவு உணவு முடிந்து படுக்கையில் எல்லோரும் எப்போதும் போல் படுத்து கொண்டாலும் செழியனுக்கு உறக்கம் வரவில்லை. மீனாவும் அனபுவும் உறங்கியதும் அவன் எழுந்து பால்கனி கதவை திறந்து வெளியே சென்று நின்று கொண்டான்.

ஜானவி அவன் எழுந்து செல்வதை பார்த்து பின்னோடு வந்து, “இன்னும் அந்த விஷயத்தையே நினைச்சிட்டு இருக்கீங்களாக்கும்” என்றவள் கேட்க அவன் முகத்தில் அழுத்தமான குற்றவுணர்வு!

“விடுங்க செழியன்… நான் அதை அப்பவே மறந்திட்டேன்… வாங்க வந்து படுங்க” என்றாள் ஜானவி!

” என்னை கோபமா இரண்டு வார்த்தையாச்சும் திட்டிடுங்க ஜானவி ப்ளீஸ்… நீங்க எதுவுமே நடக்காத மாதிரி என்கிட்ட பேசறது எனக்கு ரொம்ப ஹர்டிங்கா இருக்கு” என்று வருந்தி சொல்ல,

“திட்டவா? எதுக்கு … அப்படி என்ன நீங்க தப்பு செஞ்சிட்டீங்க” என்று இயல்பாக புன்னகைத்து கேட்டாள்.

“கொஞ்சமும் யோசிக்காம நான் உங்ககிட்ட அப்படி பேசி இருக்க கூடாது”

“பேசி இருக்க கூடாதுதான்… ஆனா உங்க பாயின்ட் ஆஃப் வியுல இருந்து பார்த்தா உங்க கோபம் ஒன்னும் தப்பில்ல… அந்த நேரம் டென்ஷன்ல யாருக்கா இருந்தாலும் அப்படிதான் கேட்க தோணும்… ஐ அண்டர்ஸ்ட்டேண்ட… விடுங்க செழியன்” என்று சுலபமாக சொல்லி முடித்தாள்.

செழியன் அவளை ஆழ்ந்து பார்த்து, “நம்பமுடியல… நான் முதல் முதல பார்த்த ஜானவியா இது… நம்ம பர்ஸ்ட் மீட்ல நடந்த மாறி இன்னைக்கும் பெருசா எதாச்சும் சண்டை நடக்கும்னு எதிர்பார்த்தேன்” என்று மிதமான புன்னகையோடு சொல்ல,

அவள் சிரித்து விட்டு, “அப்போ செழியன் எப்படின்னு தெரியாது… ஆனா இப்ப தெரியுமே… அப்புறம் எப்படி கோபப்படுறது” என்று சொன்னவளை இமைக்காமல் சில நொடிகள் அப்படியே பார்த்து கொண்டு நின்றான்.

“தேங்க்ஸ் ஜானவி” என்று மனம் நிறைந்து அவன் சொல்ல அவள் அவனை நக்கலாக பார்த்து, “என்ன சொன்னீங்க என்ன சொன்னீங்க? திரும்ப சொல்லுங்க” என்றாள்.

“நான் ஒன்னும் சொல்லல” என்று அவன் உதட்டை கடித்து கொள்ள,

“அது” என்று ஜானவி புன்னகைத்து கொண்டே அவனை எச்சரிக்கை பார்வை பார்த்தாள்.

“சரி வந்து படுங்க செழியன்… லேட்டாயிடுச்சு” என்றவள் சொல்லவும் அவன் உள்ளே வந்து கதவை மூட ஜானவி வெறுமையாக இருந்த சுவற்றை பார்த்து, “நான் நாளைக்கு அந்த போட்டோஸ் எல்லாம் மாட்டி வைச்சிடுறேன்” என்றாள்.

“வேண்டாம் ஜானவி” என்று செழியன் சொல்ல அவனை ஜானவி அதிர்ச்சியாக திரும்பி நோக்கி, “ஏன் அப்படி சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“இல்ல… ஏதோ ஒரு வகையில அன்புக்குட்டி மனசுல நீங்கதான் அவ அம்மான்னு ஆழமா பதிவாயிட்டீங்க… அது அப்படியே இருக்கட்டும்… ரஞ்சனியோட பிம்பம் எந்த விதத்திலயும் அவ மனசுல இனி பதிவாக வேண்டாம்… அது இன்னைக்கு இல்லனாலும் என்னைகாச்சும் அவ மனசுல குழப்பத்தை உண்டாக்கலாம்” என்று அவன் தீர்க்கமாக யோசித்து பேச, “ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிறீங்க… அதெல்லாம் ஆகாது” என்றாள்.

“இல்ல ஜானவி… நான் தெளிவா யோசிச்சுத்தான் சொல்றேன்”

“குழந்தைகளுக்காகன்னா கூட உங்களுக்கு கஷ்டமா இருக்காதா?”

“அந்த போட்டோ அங்க மாட்டி இருந்தாத்தான்… என் ரஞ்சனியோட நினைவு எனக்குள்ள இருக்கும்னு அர்த்தமா என்ன? அவ முகம் எனக்குள்ள எப்பவும் இருக்கும்… அது போதும்” என்றவன் தெளிவோடு சொல்ல ஜானவி வியப்போடு அவனை பார்த்தாள்.

அதன் பின் இருவரும் அமைதியாக அவரவர்கள் இடத்தில் படுத்து கொள்ள ஜானவி அவள் இடத்தில் படுத்து கொண்டாள்.

ஆனால் அவள் மனம் உறங்காமல் செழியன் தன் மனைவி பற்றி பேசியே வார்த்தைகளுக்குள்ளேயே சுற்றி சுழன்று கொண்டிருந்தது.

அவளையே அறியாமல் அவள் மனம் அவன் தூய்மையான காதல் மீது காதல் கொண்டது.

******

இருள் மெல்ல மெல்ல விலகி ஆதவன் தலையெடுத்தான். எப்போதும் போல் பொழுது புலர்ந்து அவர்கள் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அன்று மாலை பாண்டியனும் சந்தானலட்சுமியும் வீடு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த சில நொடிகளில் மீனாவும் அன்புவும் பள்ளியில் இருந்து செழியனோடு வந்துவிட,

அவர்களுக்கோ பாட்டி தாத்தாவை பார்த்த மாத்திரத்தில் அத்தனை குதூகலம். அவர்கள் எடுத்து வந்த பையில் கோவில் பிரசாதங்களோடு சேர்ந்து விதவிதமாக விளையாட்டு பொருள்கள். அதனை எடுத்து அன்றே சோதித்து பார்த்தால்தான் அன்புவிற்கும் மீனாவிற்கும் நிம்மதி. ஆதலால் உடனடியாக அந்த விளையாட்டு பொருள்களையும் எடுத்து கொண்டு விளையாட துவங்கிவிட்டனர்.

சந்தானலட்சுமி கோவிலில் வாங்கி வந்த பிரசாதகங்களை மகனுக்கும் மருமகளுக்கும் தந்தவர் ஆசையாக பேத்திகளுக்கும் வைத்துவிட்டார்.

செழியனுக்கு தன் பெற்றோர்களை பார்த்து அளப்பரிய சந்தோஷம். மூன்று நாட்கள் என்பதே அவனுக்கு ரொம்பவும் சிரமமாக இருந்தது.

அவன் அவர்களை விட்டு வெளியூர் வேலை மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா என்றெல்லாம் சென்றிருக்கிறான்தான். ஆனால் அவர்கள் அவனை விட்டு எங்கேயும் இதுவரை சென்றதே இல்லை. அதுதான் அவன் மனதை ரொம்பவும் அழுத்தியது.

அவன் தன் தவிப்பை வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை என்றாலும் அவர்கள்

இல்லாத ஒரு வெறுமையை அவன் உணர்ந்தான்.

இன்று அவர்கள் திரும்பி வந்த பின்தான் அவன் மனம் ஒருவாறு அமைதி பெற்றது.

மீனாவும் அன்புவும் அந்த விளையாட்டு பொருள்களோடு மொத்தமாக ஐக்கியமாகிவிட,

paadal thedal- 14

14

முதல் நாள்

பாண்டியனும்  சந்தானலட்சுமியும் சென்ற பிறகு அந்த வீடே அமைதி கோலம் பூண்டது. ஜானவி சோபாவில் அமர்ந்து கொண்டிருக்க, செழியன் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தான். அவர்கள் இருவரையும்  இணைக்கும்  பாலமான அன்புவும் மீனாவும் இப்போது  உறங்கி கொண்டிருந்தார்கள்.

இருவருக்குமே இயல்பாக முகம் பார்த்து பேசி கொள்ள என்னவென்று புரியாத சங்கடமான உணர்வு. அவர்களுக்கு இடையில் தனிமையோடு கூடிய வெறுமை உருவாகியிருந்தது.

அதுவும் இருவரும் இன்னும் அதே மணகோலத்தில்தான் இருந்தனர். தான் செழியனுக்கு மனைவியாகிவிட்டோம் என்று ஜானவியால் ஏற்க முடியாததை போல செழியனாலும் மனைவி என்ற ஸ்தானத்தில் ஜானவியை வைத்து பார்க்க முடியவில்லை.

அதுவும் இத்தனை நாள் நல்ல நண்பர்களாக மட்டுமே இருந்துவிட்டு திடீரென இந்த மாற்றத்தை ஜீரணித்து கொள்ள சற்று சிரமமாகவே இருந்தது. ஜானவி அவனிடம் திருமணத்திற்கு பின்னும் நாம் நண்பர்களாவே இருக்கலாம் என்று வார்த்தைகளால் சுலபமாக சொல்லிவிட்டாள். ஆனால் அது எதார்த்தத்தில் அடிவாங்கியது.

நண்பர்கள் கணவன் மனைவியாகலாம். ஆனால் கணவனும் மனைவியும் நண்பார்களாக மட்டுமே இருந்துவிட முடியாது. அதுவும் கணவன் மனைவி உறவு என்பது மற்ற எல்லா உறவுகளையும் விடவும்  சற்றே ஆழமானது.

அந்த நொடி இருவருக்குமிடையில் சஞ்சரித்தது… மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே!

அன்று இருவரின் உணர்வுகளை புரிய வைத்து நண்பர்களாக மாற்றிய  அதே மௌனம் இன்று இருவரையும் விலகி நிறுத்தி வைத்தது. எத்தனை நேரம் இந்த மௌனத்தை சுமந்து கொண்டிருப்பது என்று யோசித்த ஜானவி எழுந்து அவன் அருகில் வந்து, “என் டிரஸ் எல்லாம் அந்த வீட்டில இருக்கு…  நான் போய் ட்ரஸ் சேஞ் பண்ணிட்டு மீனாவுக்கும் எனக்கும் இப்போதைக்கு கொஞ்சம் தேவையான டிரஸ் திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்திடுறேன்” என்றாள்.

செழியன் அவள் முகம் கூட பாராமல், “சரி” என்றான்.

ஜானவி அதன் பின் அவள் வீட்டிற்கு சென்றாள். சௌகரியமாக இருக்க வேண்டி ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு தேவையான துணிகள் யாவையும் ஒரு பெட்டியில் எடுத்துவைத்து அடுக்கினாள்.

அவள் பாட்டுக்கு அந்த வேலையை செய்து கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நன்றாக இருட்டிவிட்டிருந்தது. வீட்டிற்கு வந்தால் மீனாவும் அன்புவும் உடையெல்லாம் மாற்றி கொண்டு தொலைகாட்சியில் ஐக்கியமாகி இருந்தனர்.

“என்ன? எழுந்ததுல இருந்து இரண்டு பேரும் டிவிதான் பார்த்துட்டு இருக்கீங்களா?” என்றவள் முறைப்பாக கேட்க,

மீனா உடனே, “உஹும்… எழுந்து மூஞ்சி கழுவி டிரஸ் மாத்தி படிச்சிட்டு… இப்பதான் டிவி பார்க்கிறோம்” என்றாள்.

“ம்ம்கும்… வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லடி உனக்கு… சரி எங்க உங்க அன்பப்பா?” என்று அங்கே செழியன் இல்லாததை கவனித்து கொண்டே மகளிடம் வினவினாள்.

“அன்பப்பா இல்ல… அப்பா” என்றாள் மீனா. இனி தன்னை அன்பப்பா இல்லை. அப்பா என்று அழைக்க வேண்டும் என்று செழியன் அவளிடம் சொல்லியிருந்தான். ஒருமுறை சொல்லிவிட்டால் அதை அப்படியே பிடித்து கொள்ளும் வழக்கம் மீனாவிற்கு!

அவள் அப்படி சொல்ல ஜானவி பல்லை கடித்து கொண்டு, “சரி அப்பா எங்கே?” என்று கேட்க,

“எனக்கு தெரியாது… நான் டோரா பார்க்கிறேன்… போம்மா” என்றாள்  மீனா.

“உன்கிட்ட போய் கேட்டேன் பாரு” என்றவள் அன்புச்செல்வியிடம் திரும்ப ஜானவி கேட்பதற்கு முன்னதாகவே அவள், “அப்பா உள்ளே சமையல் செய்றாங்க ஜானும்மா” என்றாள்.

“சமையல் செய்றாரா?” என்றவள் வியப்பாக கேட்டுவிட்டு உள்ளே செல்ல பார்த்தவள் மீண்டும் திரும்பிவந்து, “அன்பும்மா… நாம உள்ளே போய் அப்பா என்ன சமைக்கிறாருன்னு பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்டாள். தனியாக அவள் மட்டும் உள்ளே போக என்னவோ சற்று தயக்கமாக இருக்க துணைக்கு அன்புவை அழைத்தாள்.

ஆனால் அன்பு முகம் சுருங்கி,  “நானும் டோரா பார்க்கிறேனே” என்று சிணுங்கினாள்.

“எனக்காக வாங்க” என்று ஜானவி கெஞ்சலாக கேட்க அன்பு மீனாவை பார்த்தாள். அவளுக்கு எழுந்து வர விருப்பமில்லை என்பதை உணர்த்தும் விதமாக!

ஜானவி கடுப்பாகி,  “தினைக்கும் ஒன்னையே பார்த்தாலும் உங்களுக்கு அலுக்காதுடி” என்று கடிந்து கொள்ள

மீனா உடனே, “நான் வேணா அப்பாவை கூப்பிடவா?” என்று எழுந்து போகாமல் இருந்த இடத்திலிருந்தே, “அப்ப்ப்பாஆஆ” என்று அவனை உச்சஸ்ததியில் கத்தி அழைத்து விட்டாள்.

“ஐயோ! உன்னை யாருடி இப்ப கூப்பிட சொன்னது?” என்றவள் கடுப்பாக கேட்கும் போதே, “என்ன மீனு?” என்று கேட்டு கொண்டே செழியன் சமையலறை விட்டு வெளியே வந்தான்.

மீனாவோ, “அம்மாதான் கூப்பிட சொன்னாங்க” என்று தெளிவாக போட்டும் கொடுத்துவிட செழியன் ஜானவியை பார்த்து, “என்ன ஜானவி?” என்றான்.

“ஒன்னும் இல்ல… எங்கன்னு கேட்டேன்… அதுக்குள்ள கூப்பிட்டுட்டா” என்று மகளை ஒரு பக்கம் முறைத்து கொண்டே சொல்ல,

“ஒ! நான் கிச்சன்ல் குக் பண்ணிட்டு இருந்தேன்… ஹ்ம்ம்… உங்களுக்கு  எதாச்சும் வேணுமா?” என்று கேட்க, “அதெல்லாம் இல்ல… நீங்க எங்கன்னுதான்” என்று அவள் பேசி கொண்டே,

“ஏன்? நீங்க சமையல் பண்ணிக்கிட்டு…  நான் வந்திருப்பேன் இல்ல” என்றாள்.

“பரவாயில்ல… நீங்க வேலையா இருந்தீங்க… அதுவும் உங்களுக்கு எங்க வீட்டு கிச்சனல எது எங்க இருக்குன்னு தெரியுமா? கொஞ்ச நாளாச்சும் பழக வேண்டாமா?!” என்றவன் சொல்லி கொண்டே சமையலறைக்குள் நுழைந்துவிட,

“செஞ்சா… தானாவே பழகிக்க போறேன்” என்றாள்.

“ஹ்ம்ம்… பொறுமையா பழகிக்கலாம்… என்ன அவசரம்… அதுவுமில்லாம எனக்கும் குக்கிங் நல்லா தெரியும்… அதுவுமில்லாம குக் பண்ண எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அவன் வாணலியில்  வதக்கி கொண்டே சொல்ல அந்த வாசனை வேறு முக்கை துளைத்தது.

“நிஜமாவா?” என்று அவள் வியப்படங்காமல் கேட்டு கொண்டே அவளும் உள்ளே வர,

“ஹ்ம்ம்… நான் நிறைய வெரைட்டி பண்ணுவேன்… நீங்க டேஸ்ட் பண்ணி பாருங்களேன்… அப்ப தெரியும் என் சமையல் எப்படின்னு” என்று பெருமிதமாக அவளை பார்த்து அவன் சொல்ல அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவள் பார்த்து இதுவரை அவள் வீட்டு ஆண்கள் யாரும் சமையலறை பக்கம் போனதே இல்லை. டிவியில்தான் ஆண்கள் சமைத்து பார்த்திருக்கிறாள். இருப்பினும் அவர்களும் வீட்டில் மனைவிக்கு சமைத்து கொடுப்பர்களா என்ன என்று எண்ணி கொள்வாள்.

செழியன் ரொம்பவும் பழக்கமாக சமையல் செய்வதை பார்த்து பார்க்காத ஒன்றை பார்ப்பது போல் அதிசயித்து நின்றுவிட்டாள்.

இப்படி யோசித்து கொண்டே நின்றவள் இயல்பு நிலைக்கு தாமதமாகவே வந்து, “நான் எதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று அவனிடம் கேட்கவும்,

“ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு… நீங்க பிளேட்ஸ் எடுத்துட்டு போங்க… நான் டிஷ்சை எடுத்துட்டு வரேன்… எல்லோரும் சாப்பிடலாம்” என்றான்.

ஜானவியும் அவன் சொன்னது போல் தட்டுக்களை எடுத்து வந்து உணவு மேஜையில் வைத்துவிட்டு மீனாவையும் அன்புவையும்  அழைத்தாள். அவர்களோ டிவி பார்க்கும் ஆர்வத்தில் சாப்பிட வரமாட்டேன் என்று அடம் பிடிக்க, ஜானவி அதட்டவும் அடிபணிந்து உணவு உண்ண வந்தார்கள்.

அவன் எடுத்து வந்த உணவை குழந்தைகளுக்கு அவள் பரிமாற, அவர்கள் இருவரும்  உணவை ருசி பார்த்துவிட்டு முதலில் அன்புச்செல்வி, “சூப்பரா இருக்கு ப்பா” என்று புகழ்ந்தாள்.

“உனக்கு மீனு” என்று செழியன் மீனாவின் கருத்தை ஆர்வமாக எதிர்பார்க்க, அவளோ சாப்பிடுவதில் மும்முரமாக உள்ளார்ந்து இறங்கி விட்டாள்.

சில நொடிகள் தாமதித்த பின்னே அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன.

“எங்க ம்மா சமையல் மாறி இல்ல… நல்லா இருக்கு… சூப்பர்” என்று ஒரே வார்த்தையில் ஜானவியையும் வாரி செழியனையும் பாராட்ட, அவன் சத்தமாக சிரித்துவிட்டான்.

“இப்ப என் சமையலை பத்தி கேட்டாங்களாடி உன்கிட்ட” என்று ஜானவி ஒருபுறம் கடுப்பானாள்.

அவர்கள் இருவரும் திருப்தியாக உண்டு முடித்த பின் செழியனும் ஜானவியும் உண்ண ஆரம்பிக்கவும், “டேஸ்ட் எப்படி இருக்குன்னு சும்மா எனக்காக சொல்ல கூடாது… உண்மையா சொல்லணும்” என்றான்.

அவள் அந்த உணவை ருசி பார்த்துவிட்டு உச்சு கொட்டி மெச்சுதலாக அவனை பார்த்து, “ஹ்ம்ம்… சான்சே இல்ல… உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு செழியன்” என்று பாராட்டி கொண்டே,

“எனக்கெல்லாம் இவ்வளவு நல்லா சமைக்கவே வராது” என்றாள்.

“அதான் மீனு சொன்னாளே” என்று செழியன் நகைக்க,

“ஒருவிதத்தில அவ சொன்னது உண்மைதான்… எனக்கு எதுவும் உருப்படியா வராது” என்றாள்.

“அதென்ன அப்படி சொல்லிட்டீங்க… ஷேர் மார்கெட் மாறி ஒரு ரிஸ்கான பிரொஃப்பஷன்ல அசாலட்டா நின்னு சாதிக்கிறீங்க… அதுவும் இன்டிபெண்டண்டா பிஸ்னஸ் ஆரம்பிச்சு ரெண்டு பேருக்கு வேலை குடுத்து… தோ இப்ப கார் வேற வாங்கிட்டீங்க… இதைவிட உருப்படியா நீங்க வேற என்ன செய்யணும்… இந்தளவு தன்னம்பிகையை நான் யார்க்கிட்டயும் பார்த்ததே இல்ல… யு ஆர் அன் ஐடல் உமன் ஜானவி” என்று செழியன் அவளை புகழ்ந்து முடிக்கும் வரை அவள் இமைக்கவே இல்லை.

அந்தளவு அவள் திறமையை கண்டு வியந்து அவள் குடும்பத்தில் உள்ள யாருமே பாராட்டியதே இல்லை. பொறுப்பே இல்லாதவள் என்று அவள் வாங்கிய திட்டுக்கள்தான் அதிகம். என்னதான் அவள் நன்றாக படித்தாலும் அது அத்தனை வியப்புக்குரிய மதிப்புக்குரிய விஷயமாக அவளை சுற்றி இருந்தவர்கள் பார்வைக்கு படவில்லை. அவள் குறையை மட்டுமே திரும்ப திரும்ப சுட்டி காட்டி அவளை காயப்படுத்தியவார்கள்தான் அதிகம்.

அதுவும்  குழந்தையை சுமந்து கொண்டே அவள் போராடி படித்து தேர்வு எழுதிய போது கூட எதற்கு உனக்கு தேவையில்லாத வேலை என்று எதிர்மறையாக பேசி அவள் நம்பிக்கையை உடைதவர்கள்தான் பலரும்.

கார் வாங்கி கொண்டு பெருமையாக அவள் வீட்டிற்கு சென்ற போது கூட அவளுக்கு அதற்கான பாராட்டோ அங்கீகாரமோ கிடைக்கவில்லையே. அவமானம் மட்டுமே மிஞ்சியது. ஆதலாலேயே ஜானவி இதுவரை தன்னை  தோற்று போனவளாகவே அடையாளப்படுத்தி கொண்டாள்.

ஆனால் இன்று செழியனின் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் நேர்மறை பக்கங்களை அவளுக்கே காட்டியது. வெற்றியும் கூட பிறரால் பாரட்டப்படும் போது மட்டும்தான் மதிப்பு.

ஜானவிக்கு மனம் நெகிழ்ந்து போனது. அதற்கு பிறகு ஒரு வார்த்தை கூட பேசாமல் உண்டு முடித்தாள். சந்தோஷத்தில் வார்த்தைகள் வருவதில்லை அல்லவா?

அவன் உண்டபடி, “என்னாச்சு ஏன் சைலன்ட் ஆகிட்டீங்க?” என்று கேட்க,

“ம்ச்… சாப்பாட்டோட டேஸ்ட் அப்படி?” என்று அவனை மெச்சிவிட்டு,

“எப்படி உங்களால இவ்வளவு டேஸ்டா சமைக்க முடிஞ்சுது செழியன்?” என்று அவள் ஆர்வமாக கேட்டாள்.

“சிம்பிள்… எந்த வேலை செஞ்சாலும் அதை ரசிச்சு நேசிச்சு செஞ்சா அது நல்லா வந்திட போகுது” என்றவன் சொல்ல அவனை சீரியஸான முகபாவத்தோடு ஏறிட்டு பார்த்து,

“பிலாசஃபி நம்பர். இருநூற்றி முப்பதி எட்டு” என்றாள்.

“இது பிலாசிஃபியா?” என்று செழியன் முறைக்க,

“பின்ன… சமையல் எப்படி செஞ்சீங்கன்னு கேட்டா… அதை இப்படி கத்துக்கிட்டேன்… இப்படியெல்லாம் செஞ்சேன்னு சொல்வீங்களா? அதை விட்டுவிட்டு நேசிச்சேன்… ரசிச்சேன்னு சொன்னா… கடுப்பாகாது…

இன்னைக்கு மிஷின்ஸ் கூட சமைக்குது… அதெல்லாம் கூட நல்லாத்தான் இருக்கு… இதுல என்ன ரசிக்கிறதுக்கும் நேசிக்கிறதுக்கும் இருக்கு… சத்தியமா உங்க பிலாசஃபி எனக்கு புரிய மாட்டேங்குது” என்றாள்.

“கரெக்ட்! என் பிலாசபி உங்களுக்கு புரியாது… அதே போல உங்க மெட்டீரியலிஸ்டிக் மென்டாலிட்டி எனக்கு வராது… இதுல ரெண்டு பேரும் வாழ்க்கை பூரா எப்படி சேர்ந்திருக்க போறோமோ?” என்றவன் கடுப்பாக கேட்டு கொண்டே உண்டு முடித்து எழுந்து கொள்ள,

“சிம்பிள்… நம்ம குழந்தைகளுக்காக” என்று ஜானவி வெகுஇயல்பாக பதிலளித்தான். சட்டென்று அவள் வார்த்தைகளை கேட்டு செழியன் நின்று திரும்பினான். அவளை ஆழமாக ஊடுருவி பார்த்து,

“இப்ப என்ன சொன்னீங்க?” என்று கேட்டான்.

“நம்ம குழந்தைகளுக்காகன்னு” என்று அவள் சொல்லும் போதே அவனின் வித்தியாசமான பார்வையும் அந்த வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தமும் புரிந்து லேசாக அவளின்  குரலில் சுருதி இறங்க,

செழியன் அவளை பார்த்து மென்னகை புரிந்துவிட்டு பதிலேதும் பேசமால் அங்கிருந்து அகன்றான்.

‘நாம நார்மலாத்தானே… அதுக்கு என்ன நின்னு ஒரு சிரிப்பு’ என்று தனக்குதானே கேட்டு கொண்டபடி  மேஜையை சுத்தம் செய்தாள். வேலையெல்லாம் முடிந்தது.

ஜானவிக்கு இப்போது அடுத்த நிலை சங்கடம் உருவாகியிருந்தது. ஒரே அறையில் படுத்து கொள்ள வேண்டுமா? பேசாமல் அவள் இருந்த வீட்டிற்கு மீனாவை அழைத்து கொண்டு அங்கே போய் படுத்து கொள்ளலாம் என்று ஒரு யோசனை எழுந்தது.

செழியனிடம் சொன்னால் அவன் மறுப்பு தெரிவிக்க மாட்டான் என்று எண்ணி கொண்டிருக்க, அன்புவும் மீனாவும் சேர்ந்து அவள் எண்ணத்தை முறியடித்துவிட்டார்கள்.

அவர்கள் இருவரும் சேர்ந்து தூங்க போகும் அந்த இரவை அத்தனை ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆர்பாட்டம் கலாட்டா என்று அந்த அறையே கத்தலும் கூச்சலுமாக அதகளப்பட்டு கொண்டிருக்க, செழியன் அவர்களின் அந்த சேட்டைகளை ரசித்து கொண்டிருந்தானே ஒழிய கட்டுபடுத்த எந்தவித முயற்சியும் செய்யவில்லை.

இன்னும் கேட்டால் அவர்களோடு அவனும் சேர்ந்து கொண்டான்.

ஜானவி குழந்தைகளுக்கு குடிக்க பால் எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தவள் அவர்களின் சத்தத்தில் எரிச்சலாகி, “இப்ப எதுக்கு இவ்வளவு சத்தம்… நீங்க கத்தறது இந்த அப்பார்ட்மெண்ட் முழுக்க கேட்கும் போல… ஒழுங்கா பாலை குடிச்சிட்டு படுங்க” என்று அதட்டினாள்.

அத்தோடு இருவரும் கப்சிப்பென்று ஜானவி கொடுத்த பால் டம்ளரை வாங்கி அருந்த அவள் செழியனை பார்த்து, “என்ன செழியன்? நீங்களும் இவங்களோடு சேர்ந்துக்கிட்டு” என்று கேட்க,

“ஹேப்பியா இருக்கிறது தப்பா? நீங்க ஸ்ட்ரிக்ட் ஆபீசரா இருந்துட்டு போங்க… நான் ஜாலியா இருந்துட்டு போறேன்” என்றான் சாதரணமாக.

அதற்கு மேல் அவனிடம் என்ன பேச என்று முடித்து கொண்டு, “சரி… உங்களுக்கும் பால் எடுத்துட்டு வரவா? நீங்க குடிப்பீங்களான்னு தெரியல” என்று அவள் சந்தேகமாக இழுக்க,

“உஹும் வேண்டாம்… நான் குடிக்க மாட்டேன்” என்று அவன் மறுத்துவிட்டான்.

அதேநேரம் மீனாவும் அன்புவும்  பாலை அருந்திவிட்டு டம்ளரை திரும்ப தரவும் அதனை வாங்கி கொண்டு வெளியேறிய மாத்திரத்தில்  மீண்டும் சத்தம் எழுந்தது.

அவள் திரும்பி வர மூவரும் ஒன்றாக அமைதியாகிவிட்டனர். ஜானவி சிரித்து கொண்டே அவர்கள் படுத்திருப்பதை பார்த்தாள்.

மீனாவும் அன்புவும் இடையில் படுத்து கொண்டிருந்தனர். அதுவும் அந்த வாண்டுகள் இடவாரியாக ஒதுக்கீடு செய்துவிட்டுத்தான் படுத்திருந்தார்கள்.

மீனு செழியன் அருகில் என்றும் அன்பு ஜானவி அருகில் என்றும் பேசி முடிவெடுத்திருக்க, ஜானவியும் அவர்கள் சந்தோஷத்தை கெடுக்க விருப்பமில்லாமல் அன்புச்செல்வி அருகில் படுத்து கொண்டுவிட்டாள். அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அவளும் எதையும் செய்ய விழையவில்லை. அந்த படுக்கையும் அகலமாக இருந்ததால் அவர்கள் நால்வருக்கும் அது போதுமானதாக இருந்தது.

 

இருப்பினும் செழியன்,  “உங்களுக்கு இடம் பத்துதா ஜானவி?” என்று அவள் சௌகரியத்தை கேட்க,

“ஆன்… இருக்கு” என்று அவளும் பதில் சொல்ல அந்த அறையில்  அமைதி சூழ்ந்தது.

சில நிமிடங்களில் எல்லோரும் உறங்கிவிட ஜானவிக்குத்தான் அந்த இடமாற்றம் சற்றே பழக்கப்படாத உணர்வை கொடுத்தது. அவள் உறங்க வெகுநேரம் பிடித்தது. இயல்பாகவே தாமதமாக எழுந்திருப்பவள் அடுத்த காலை மிகவும் தாமதமாக எழுந்து கொண்டாள்.

நேரத்தை எப்போது போல அதிர்ச்சியாக பார்த்துவிட்டு,

“அலாரம் அடிச்சாலே நம்ம எழுந்திருக்க மாட்டோம்… இப்ப அதுவும் இல்ல” என்று அவள் புலம்பி கொண்டே செழியன் அங்கே இல்லாததை பார்த்து, “எப்போ எழுந்திருச்சிருப்பாரு” என்று எண்ணியபடி குளியலறையிலுக்குள் சென்று முகம் கழவி ஒரு துண்டை எடுத்து துடைத்து கொண்டே வெளியே வந்தாள்.

செழியன் சமையலறையில் இருந்தான். அவனே குழந்தைகளுக்கும் அவனுக்கும் காலை மற்றும் மதிய உணவையும் பள்ளிக்கு  செல்ல வேண்டி தயார் செய்து வைத்திருந்தான்.

“இந்த மனுஷன் ஏன் இவ்வளவு பொறுப்பா  இருக்காரு? நமக்கும் இவரோட பொறுப்புணர்ச்சிக்கும் கொஞ்சமும் ஒத்து போகாது” என்று எண்ணி கொண்டே,

“என்ன செழியன்… என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல” என்றவள் கேட்க,

“நீங்க புது இடம்… லேட்டா தூங்கியிருப்பீங்க சோ உங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு” என்று அவன் சொல்ல,

“நீங்க சொன்ன லாஜிக் சரிதான்… ஆனா நான் எப்ப தூங்கினாலும் இந்த டைமுக்குத்தான் எழுந்திருப்பேன்… பேஸிக்காவே எனக்கு மார்னிங் சீக்கிரம் எழுந்திருக்கிற பழக்கமே இல்ல” என்றாள்.

“அதான் மீனு எப்பவும் லேட்டோ?”

“அதெல்லாம் அப்போ… இப்ப இல்ல… அந்த பிரின்ஸ்பல் டிச்ப்ளின் டிக்னிடி டெகோரம்னு எப்போ கிளேஸ் எடுத்து அட்வைஸ் பண்ணியே என்னை கொன்னாங்களோ அன்னைக்கே திருந்திட்டேன்… எல்லாத்துக்கும் மேல ஏதோ உலக மகா தப்பை செஞ்ச மாறி லெட்டர் வேற எழுதி கொடுக்க சொன்னாங்க பாரு” என்றவள் கடுப்பாக சொல்ல செழியன் சிரித்து கொண்டே அவள் சொல்வதை கேட்டான்.

ஜானவியோ பேசி கொண்டே டென்ஷன் நிலைக்கு மாறி,

“ஐயோ! டைம் ஆச்சு நான் போய் பசங்கள குளிக்க வைச்சு யூனிபார்ம் போட்டு ரெடி பண்றேன்… நீங்களும் போய் ஸ்கூலுக்கு குளிச்சிட்டு ரெடியாகுங்க… அப்பதான் டைமுக்கு போக முடியும்” என்று படபடப்பாக சொல்லி கொண்டே அவள் வெளியேற போனாள்.

“இருங்க ஜானவி… காபி குடிச்சிட்டு போங்க” என்றவன் அவளுக்காக தயாரித்த காபியை நீட்ட,

“இல்ல டைமாச்சு… நான் அப்புறம் குடிக்கிறேன்” என்று பரபரத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகல… நீங்க குடிங்க” என்று சொல்லி அவள் கையில் காபி கோப்பையை அவன் திணிக்கும் போதே,

“தேங்க்ஸ்” என்றாள்.

அவன் அந்த காபி கோப்பையை எடுத்து கொண்டு, “தேங்க்ஸ் சொன்னா காபி கட்டு… போய் பசங்கள ரெடி பண்ணுங்க” என்றான்.

“சரி தப்புதான் சொல்லல… அதுக்காக கொடுத்ததை இப்படி திருப்பி வாங்கினா எப்படி?” என்று அவள் பரிதபமாக கேட்க,

“இனிமே இந்த தேங்க்ஸ் சொல்ற பிசினஸே வேண்டாம்… சொல்லிட்டேன்” என்று கண்டிப்பாக சொல்லி அந்த காபி கோப்பையை அவன் திருப்பி தர,

அவள் அதனை வாங்கி பருகி கொண்டே, “ட்ரை பண்றேன்” என்று சொல்லி வெளியேறிவிட்டாள்.

அதன் பிறகு எப்போது போல பரபரப்பு சற்றும் குறையாமல் அந்த வாண்டுகளை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்து அவர்களுக்கு காலை உணவு தந்து செழியனோடு பள்ளிக்கு அனுப்பிவைப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றானது .

அவள் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டு கொண்டே உள்ளே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டு எப்போதும் போல் செய்திதாளில் வரும் பொருளாதார பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்.

செழியன் ஜானவியின் இரண்டாவது திருமணத்தின் முதல் நாள் காதலோடு அல்லாமல் கடமைகளோடு தன் பயணத்தை செவ்வனே தொடங்கியது.

 

paadal thedal- 13

13

திருமணம்

அவர்கள் ஏரியாவிலேயே உள்ள பிரசித்தி பெற்ற அந்த பெருமாள் கோவிலில் ரொம்பவும் சாதாரணமாகத்தான் அவர்களின் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோவிலின் கருவறைக்கு வலதுபுறத்தில் உள்ள அந்த மண்டப்பதில்தான் ஜானவியும் அன்புச்செழியனும் தம்பதிகளாக மனையில் அமர்ந்திருந்தனர்.

ஜானவி மணமகளுக்கே உரித்தான அலங்காரங்களோடு  ஏகபோகமாக நகைளெல்லாம் ஆடம்பரமாக பூட்டிக் கொண்டு இல்லாமல்  அளவான நகைகளும் ரொம்பவும் இயல்பான ஒப்பனையோடுமே திகழ்ந்தாள். இருப்பினும் அவள் கொண்டிருந்த அந்த மணமகள் கோலமே அவள் அழகிற்கு மேலும் அழகு சேர்த்து மெருகேற்றியிருந்தது.

ஆனால் அவள் மனமோ அந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் ஒட்டவில்லை. ஏதோ கோபத்தில் சவாலெல்லாம் விட்டு அப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாள்.

செழியன் சம்மதம் சொல்லும்வரை அந்த முடிவின் தீவிரம் அவளுக்கு புரியவில்லை. ஆனால் அவன் சம்மதம் சொன்ன அடுத்த நொடி அவள் மனம் ஒருவித அச்சவுணர்வை தத்தெடுத்து கொண்டது.

செழியனை நன்றாகவே அவளுக்கு தெரியும் என்றாலும் அப்போதைய அவளின் மனதின் அல்லாட்டம் அது. மீண்டும் ஒரு புது வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்க போகும் பெண்மைக்கே உரித்தான தவிப்பு.

நண்பனாக செழியினிடம் அவள் நன்றாக பேசி பழகியிருந்தாலும் மணமேடையில் அவன் அருகில் அமர்ந்திருப்பதில் கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள்.

அதுவும் இரண்டாவது முறையாக அப்படி மணமேடையில் அமர்ந்திருப்பதே அவளுக்கு கத்திமேல் நிற்பது போல் அத்தனை சங்கடமாக இருந்தது. எப்போது அந்த சடங்குகளெல்லாம் முடியும் என்று அவள் தவிப்பில் கிடந்தாள்.

செழியனுக்கும் ஒருவகையில் அதே மனநிலைதான் என்றாலும் அவன் முகம் அதை காட்டிகொடுத்து கொள்ளவில்லை. வேட்டி சட்டையில் ஆண்மைக்கே உண்டான கம்பீரமும் மிடுக்கும் சற்றும் குறையாமல் அமர்ந்திருந்தான்.

சந்தானலட்சுமி பரபரப்பாக திருமண சடங்களுக்கு வேண்டியவற்றை பொறுப்பாக எடுத்து வைத்து கொண்டிருந்தார். பாண்டியனோ அங்கே  வந்தவர்களை வரவேற்பதில் முனைப்பாக இருந்தார்.

செழியனின் தந்தை தாயாக அந்த திருமணம் நடப்பதில் அவர்கள் முகத்தில் கல்யாண பரபரப்போடு சேர்ந்து நினைத்தது நடக்க போகிறது என்ற சொல்லிலடங்கா இன்பமும் பூரிப்பும் இருந்தது.

அதுவும் செழியனே ஜானவியை திருமணம் செய்து கொள்வதாக சொன்ன பின் அவர்களுக்கு வேறு என்ன வேண்டாம். அவனின் முடிவை கேட்டு அவர்களுக்கு இன்ப அதிர்ச்சிதான். அவர்கள் உடனடியாக அடுத்து வந்த மூகூர்த்த தேதியிலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து ஏற்பாடுகள் செய்ய தொடங்கிவிட்டனர்.

சாதரணமாகவே நடத்தினாலும் அவர்களின் திருமண ஏற்பாடுகளை பாண்டியனும் சந்தானலட்சுமியும் ரொம்பவும் சிறப்பாகவே செய்தனர். அவர்களுக்கு துணையாக சில முக்கிய சொந்தங்களும் உதவிக்கு இருந்து எல்லாவற்றையும் நடத்தி கொடுத்து கொண்டிருந்தனர்.

இரண்டாவது திருமணமாகவே இருந்தாலும் முறைப்படி எல்லாமுமே நிகழ வேண்டும் என்பதில் சந்தானலட்சுமி தீர்க்கமாக இருந்தார். அதோடு திருமணம் செய்விக்கும் புரோகிதரிடம் அனைத்து சடங்குகளையும் ஒரு குறைவும் இல்லாமல் சிறப்பாக நடத்தி கொடுக்கும்படி கேட்டு கொண்டிருந்தார்.

செழியனுக்கு இந்த வாழ்வாவது நிலைக்க வேண்டுமே என்ற ஒரு தாயின் பரிதவிப்போடு சேர்த்து இந்த திருமணத்தின் மூலம் தங்கள் வாழ்வில் அவர்கள் இருவரும் சகல இன்பங்களும் பெற்று சிறப்பாக வாழ வேண்டுமே என்ற அவாவும் அதில் அடங்கியிருந்தது.

திருமணத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் என்று ஒரு சிலரை மட்டுமே அழைத்திருந்தனர்.

அந்த விடியற் காலை பொழுதில் ரம்மியான கோவிலின் சூழ்நிலையோடு கெட்டி மேள சத்தம் மங்களாமாக ஒலித்து கொண்டிருந்தது. ஆனால் இவையெல்லாவற்றையும் விட அந்த திருமண வைபவத்தின் தனித்துவமாக தெரிந்தது மீனா அன்புக்குட்டியின் குதூகல கொண்டாட்டங்கள்தான்.

அந்த சின்ன வாண்டுகளின் அதகளம்தான் அந்த திருமணத்தின் அழகான சூழ்நிலையை  இன்னும் அழகாக மாற்றியிருந்தது என்று சொல்ல வேண்டும். அங்கே வந்திருந்த எல்லோரின் கவனத்தையும் அவர்களின் சேட்டை வெகுவாக கவர்ந்திழுக்க, ஜானவி மட்டும் அச்ச உணர்வோடே அவர்கள் சுற்றி திரிவதை பார்த்து கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் அவள் மணமேடையில் மட்டும் அமர்ந்திருக்காமல் இருந்திருந்தால் மகளுக்கு பல அதட்டல்களும் அதோடு ஒரு அடியாவது நிச்சயம் விழுந்திருக்கும். மீனா தன்னோடு அன்புவையும் சேர்த்து கொண்டு அந்தளவு அட்டகாசம் செய்து கொண்டிருந்தாள்.

சந்தானலட்சுமி எல்லா பொறுப்புகளையும் சேர்த்து அந்த வாண்டுகளையும் கவனமாக பார்த்து கொள்வது நிச்சயம் சிரமம்தான். பாண்டியனும் கூட வந்தவர்களை பார்பாரா இல்லை இவர்களை பார்த்து கொண்டிருப்பாரா?

புரோகிதர் சொல்லும் சடங்குகளையும் மந்திரங்களையும் செழியன் முனைப்பாக செய்து கொண்டிருக்க,  ஜானவியின் கவனம் கொஞ்சமும் அந்த சடங்குகளை செய்வதில் முனைப்பு காட்டவில்லை. பெயருக்குத்தான் அவள் மணமேடையில் அமர்ந்திருந்தாளே ஒழிய அவள் கண்ணிலும் கருத்திலும் அன்புவும் மீனாவும் மட்டும்தான் நிறைந்திருந்தனர்.

“இங்கே கொஞ்சம் கவனிங்கோ” என்று புரோகிதர் ஜானவியிடம் சொல்ல,

செழியன் அவள் காதொரம் நெருங்கி, “கவலைபடாதீங்க ஜானவி… அம்மா குழந்தைகளை பார்த்துப்பாங்க” என்றான்.

“ஹ்ம்ம்” என்று பெயருக்கு தலையசைத்து வைத்தாலும் அவள் கவனத்தை அங்கு இழுத்துவர ரொம்பவும் பிரயாத்தனப்பட்டாள்.

அதற்குள் மீனா ஓடி விளையாடுகிறேன் பேர்வழி என்று விழுந்து வைத்துவிட்டாள். அவ்வளவுதான். ஜானவி உள்ளம் படபடக்க அப்போது அவள் நினைப்பில் மகள் விழுந்துவிட்டால் என்ற எண்ணம் மட்டுமே. தான் மணமேடையில் மணகோலத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதையும் மறந்து அவள் எழுந்து கொள்ள பார்க்க,

அவள்  எண்ணத்தை முன்கூட்டியே உணர்ந்தவனாய்  செழியன் அவளை எழுந்திருக்கவிடாமல் தன் கரத்தால் அவள் கரத்தை அழுந்த பற்றி கொண்டான். சட்டென்று அவனின் அந்த பிடி அவளை என்னவோ செய்தது.

அப்போதே அவள் தான் செய்ய நினைத்த காரியத்தின் முட்டாள்தனத்தை உணர்ந்தாள்.

மேலும் செழியன் அவள் புறம் திரும்பி இமைகளைமூடி அவளை மௌன மொழியில் அமைதியாக இருக்க சொன்னான். அந்த சமயத்தில் மீனாவும் விழுந்து அவளாகவே எழுந்து கொண்டுவிட்டாள். அதேநேரம்  பாண்டியனும் மீனா அருகில் வந்து தூக்கி கொண்டார்.

ஜானவி மனம் ஆசுவாசப்பட செழியன் தன் தந்தையிடம் செய்கையால் ஏதோ சொல்ல, அவர் மீனாவை மணமேடை அருகில் அழைத்துவந்தார்.

செழியன் மீனாவிடம், “அப்பா பக்கத்தில் உட்காருங்க வாங்க” என்று சொல்ல அவளும் உற்சாகமாகி அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“கொஞ்ச நேரம் கூட உன்னால சும்மா இருக்க முடியாதா?” என்று ஜானவி மகளிடம் கடிந்து கொள்ள,

“சும்மா இருந்தா அவ என்  மீனு குட்டியே இல்லயே” என்று செழியன் சொல்லி முறுவலித்தான். அந்த வார்த்தைகளை கேட்டு ஜானவி முகத்திலும் புன்னகை அரும்பியது.

அதற்குள் அன்புச்செல்வி இந்த காட்சியை பார்த்துவிட்டு, “நானும் நானும்… ஜானும்மா பக்கத்தில” என்று அவள் ஓடி வந்து ஜானவியின் அருகில் அமர்ந்து கொள்ள மனையில் வேறு வழியில்லாமல் ஜானவி செழியனை இடித்து கொண்டு அமரவேண்டியதாக போயிற்று.

ஆனாலும் ஜானவியின் மனதில் அத்தனை நேரம் இருந்த தவிப்பு இப்போது நீங்கியிருந்தது. அவர்கள் குழந்தைகளோடு மணமேடையில் அமர்ந்திருக்க, முற்று பெற்றதாக அவர்கள் எண்ணி கொண்ட அவர்கள் வாழ்வின் சந்தோஷங்கள் யாவும் மீண்டும் புதிதாக மலர போகிறது.

வேத மந்திரங்கள் ஓத இறைவனின் ஆசியோடு அங்கு வந்திருந்த நல்ல உள்ளங்களின் ஆசிர்வதமும் ஒருசேர, செழியன் ஜானவியின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி அவள் வகுட்டில் குங்குமமும் இட்டுவிட்டான்.  விதியின் வசத்தால் அவர்கள் இருவரும் தம்பதிகளாக மாறிய அதேநேரம் ஓர் அழகான குடும்பமாகவும் ஒன்றிணைந்தனர்.

அதன் பின் திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் ஜானவியையும் செழியனையும்  வாழ்த்திவிட்டு செல்ல, அங்கே ஜானவியின் சொந்தம் என்று யாருமில்லை. பாண்டியனும் சந்தானலட்சுமியும் தாங்கள் சென்று அவளின் பெற்றோரை அழைப்பதாக ஜானவியிடம் எவ்வளவோ முறை கேட்டு பார்த்தனர். ஆனால் அவள் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டாள். அவள் பட்ட அவமானம் அத்தகையது.

ஜானவியை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று செழியனும் சொல்லிவிட அதற்கு மேல் அவள் வீட்டாரை அழைக்கும் எண்ணத்தை அவர்கள் விடுத்தனர்.

அதேநேரம் ஜானவி சார்பாக அங்கே வந்தவர்கள் என்றால் அவளிடம் வேலை செய்யும் சரவணனும் ரேஷ்மாவும் மட்டும்தான். சமீபமாகத்தான் அவர்கள் அவளுக்கு அறிமுகம் என்றாலும் அவர்கள் அவளிடம் ரொம்பவும் நெருக்கமாக பழகியிருந்தனர்.

ஜானவியை வாழ்த்தும் பொருட்டு சின்ன பரிசு பொருளோடு வந்தவர்கள் அதனை தந்துவிட்டு, “இன்னும் ஒரு வாரத்துக்கு லீவ்தானே க்கா” என்று கேட்க,

“உதைதான் இரண்டு பேருக்கும்… நாளைக்கு வந்து சேருங்க” என்றாள் ஜானவி கண்டிப்போடு.

“நாளைக்கேவா?” என்று சரவணன் அதிர்ச்சியாக,

“ஆமா நாளைகேத்தான்… ஒழுங்கா ரெண்டு பேரும் வரீங்க” என்றாள்.

“இருந்தாலும் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபீசரா இருக்க கூடாது க்கா நீங்க” என்று சரவணன் சொல்ல செழியன் சத்தமாக சிரித்துவிட்டாள்.  ஜானவி  அவர்களை முறைத்து பார்க்க எண்ணி தோற்று போய் அவளும் புன்னகையை உதிர்த்துவிட்டாள்.

அத்தனை நேரம் அவர்களுக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்து ஒருவித இலகுத்தன்மை வந்தது.

அப்பொழுது ஒரு பெரியவர் தன் குடும்பத்தோடு வந்து செழியனை வாழ்த்தி அவன் கையில் ஒரு மோதிரத்தை கொடுத்து ஜானவி கரத்தில் அணிவித்துவிட சொன்னார்.

அந்த மோதிரத்தை பெற்று கொண்ட செழியனன் அவர் முகத்தை விழிகளில் நீர் நிரம்ப பார்த்தான்.

“முடிவுன்னு நாம நினைக்கிறதெல்லாம் முடிவாகிடாது செழியன்… அதை தாண்டி வேற ஒரு அழகான தொடக்கம் இருக்கும்… உனக்கு இன்னும் ரொம்ப கால வாழ்க்கை இருக்கு… வயசு இருக்கு… உன்னை நான் என் மருகமகனா பார்க்கல… மகனாத்தான் பார்க்கிறேன்… உங்க அப்பா நடந்த எல்லா விஷயத்தையும் உன் சூழ்நிலையும் பத்தி என்கிட்ட சொன்னாரு… எல்லாம் நல்லதுக்கே… உன்னோட இந்த புது வாழ்கையில் எல்லா சந்தோஷமும் நிறைவா கிடைக்கணும்… ஹேப்பி மேரிட் லைஃப்” என்று அவர் செழியனிடம் சொல்ல, அவன் கண்ணீர் பெருக அவரை அணைத்து கொண்டு, “தேங்க்ஸ் ப்பா” என்றான்.

அவர்களின் உரையாடலை ஜானவி திகைப்பாக பார்த்து கொண்டிருந்தாள்.

“மோதிரத்தை போட்டு விடு செழியன்” என்றதும் செழியன் ஜானவியின் புறம் பார்வையை திருப்பி அவள் கரத்தை நீட்ட சொல்லி சமிஞ்சை செய்தான்.

அவள் தயக்கமாக அவனை பார்த்து கொண்டே அவள் விரல்களை நீட்ட செழியன் அந்த மோதிரத்தை அவள் விரல்களுக்கு ஏதுவாக பொருத்தினான்.

“நீயும் என் மக மாறிதான் ம்மா…. உனக்கும் வாழ்த்துக்கள்” என்று சொல்லி அவளிடமும் அவர் வாழ்த்து தெரிவித்துவிட்டு அகன்றுவிட ஜானவி, “யாரு செழியன் இவரு?” என்று வினவினாள்.

“ரஞ்சனியோட அப்பா” என்று அவன் சொன்ன கணம் அவள் வியப்போடு விழிகள் ஸ்தம்பிக்க அவனை பார்த்து, “இப்படியும் கூட மனுஷங்க இருப்பாங்களா?” என்று கேட்டாள்.

“ஏன்இருக்க மாட்டாங்க? நம்ம பார்த்த சிலரை மட்டுமே வைச்சுக்கிட்டு உலகமே இப்படிதான்னு ஒரு முடிவுக்கு வந்திர கூடாது… நம்மல சுத்தி நிறைய நல்லவங்க இருக்காங்க… எல்லாமே நம்ம பார்க்கிற பார்வையிலதான் இருக்கு” என்று அவன் சொல்லி முடிக்கும் போது அவனை கடுப்பாக பார்த்தவள்,

“இருநூற்றி முப்பத்தி ஏழு” என்றாள்.

“என்ன நம்பர் இது?” என்று அவன் அவளை புரியாமல் பார்த்து கேட்கவும், “அது நீங்க இதுவரை சொன்ன பிலாஃசபியோட எண்ணிக்கை” என்றாள்.

“ஏ! இதெல்லாம் போங்கு… அவ்வளவெல்லாம் கிடையாது” என்று செழியன் சொல்ல,

“உண்மையாத்தான் சொல்றேன்” என்று அழுத்தமாக கூறி அவனை பார்த்தவள் பெருமிதத்தோடு, “நான் கணக்குல கரெக்டா இருப்பேன்… தெரியுமா? ” என்றாள்.

“ஹ்ம்ம் அப்படியா? இனிமே வாழ்க்கை பூரா இப்படி நிறைய கேட்க வேண்டியிருக்கும்” என்று எகத்தாளமாக சொல்லி அவன் சிரித்தான்.

“உஹும்… என்னால முடியாதுடா சாமி” என்றவள் அதிர்ச்சியான பார்வையோடு அவனை பார்த்தாள். அந்த நொடி இருவருக்குமே அவர்கள் சம்பாஷணையில் அவர்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

திருமண பந்தத்தை நட்போடு வழிநடத்தி செல்வது ஒரு கலை.

அதுவும் நட்பு என்ற நூல் காதல் என்ற நூலோடு பிணையும் போது அந்த உறவு இன்னும் பலமானதாக மாறிவிடும்.

********

திருமண சடங்குகள் முடிவுற்று அவர்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்தனர்.  மதிய உணவு முடித்த பின் எல்லோருமே கிட்டத்தட்ட திருமண களைப்பில் இருந்தனர்.

அப்போது செழியன் ஜானவியிடம், “குழந்தைகளும்  நீங்களும் உள்ளே  படுத்துக்கோங்க” என்று அவளிடம் அவன் அறையை சுட்டிக்காட்டினான்.

ஜானவி மீனாவையும் அன்புவையும் அழைத்துவந்து அவன் அறையில் படுக்க வைத்தாள். அவர்கள் இருவரும் விளையாடி கொண்டே சில நிமிடங்களில் உறங்கி போயினர். ஆனால் ஜானவியின் விழிகளை உறக்கம் தழுவவில்லை.

அதுதான் முதல் முறை. செழியன் அறையில் அவள் நுழைந்திருப்பது. பார்க்க அத்தனை அழகோடும் நேர்த்தியோடும் இருந்தது. அவன் மனம் போல!

அந்த அறையே சுற்றிலும் பார்த்து கொண்டிருந்தாள்.

ஒரு அலமாரி முழுக்க அவன் வாங்கிய கப் ட்ராஃபிகள் நிரம்பி இருந்தது. வியப்பாக அவற்றை எல்லாம் பார்த்தவள் ரசனையாகவும் அழகாகவும் சுவற்றில் மாட்டியிருந்த ரஞ்சனியின் பலவிதமான புகைப்படங்களையும் பார்த்து அதிசயித்து கொண்டிருந்தாள்.

அவையெல்லாம் செழியன் ரஞ்சனி மீது கொண்ட ஆழமான காதலை சொல்லாமல் சொல்லிற்று.

அவற்றை எல்லாம் பார்க்க பார்க்க மனம் என்னவோ செய்தது.. அதுவும் ஜானவிக்கு தன் முன்னாள் கணவன் தான் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்து கொண்ட நினைவு வந்து விழிகளில் நீர் எட்டி பார்த்தது

அந்த நாட்களை எண்ணி தனக்குள் அசூயையாக உணர்ந்த அதேநேரம் செழியன் ரஞ்சனி மீது கொண்ட காதலை பார்க்க அவளுக்கு கொஞ்சம் பொறாமையாக கூட இருந்தது. சில வருடங்களே வாழ்ந்தாலும் ரஞ்சனி போல் ஓர் உண்மையான காதலோடு தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவனோடு வாழ்வதல்லவா வாழ்க்கை. வாழ்ந்தால் அப்படி வாழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டவள்,

“நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி ரஞ்சனி… அந்த கடவுள் உங்களுக்கு பதிலா என்னை கொண்டு போயிருக்கலாம்… எனக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்காம வாழ வைச்சி… எல்லா சந்தோஷத்தையும் குடுத்து அதை உங்களை அனுபவிக்கவிடாம உங்க உயிரை பறிச்சி… அந்த கடவுளை என்னன்னு சொல்ல… சரியான சேடிஸ்ட்” என்று அவள் மனநொந்து ரஞ்சனியின் புகைப்படத்திடம் தன் வேதனையை கொட்டி தீர்த்து கொண்டிருக்கும் போதே  சந்தானலட்சமி உள்ளே வந்திருந்தார்.

“அப்படியெல்லாம் சொல்ல கூடாது ஜானவி… கடவுள் எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் காரியம் இருக்கும்” என்றார்.

ஜானவி மெளனமாக அவரை பார்க்க, “ரஞ்சனி விதி முடிஞ்சு போச்சு … அது பத்தி இனி பேசி என்ன செய்ய… உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கு ஜானவி… நீ இப்படியெல்லாம் பேச கூடாது… அதுவும் முத்து முத்தா குழந்ததைங்க இருக்கு… செழியன் உன்னை இனிமே நல்லா பார்த்துப்பான்” என்று சொல்லி அவள் தோளை தட்டி கொடுத்தார்.

ஜானவி முறுவலிக்க சந்தானலட்சுமி, “குழந்தைங்க நல்லா தூங்கிட்டாங்க போல” என்றவர் கேட்க, “அவங்க எப்பவவோ தூங்கிட்டாங்க ஆன்ட்டி” என்றாள்.

“இன்னும் என்ன ஆன்ட்டி… அத்தைன்னு கூப்பிடு” என்றார்.

ஜானவி முகம் மலர்ந்து தலையசைக்க அவர் அப்போது, “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம்தான் வந்தேன்” என்று ஆரம்பிக்க,

“சொல்லுங்க ஆன்ட்டி” என்றதும் நாக்கை கடித்து கொண்டு, “சாரி சொல்லுங்க அத்தை” என்று கேட்டாள்.

“அது வந்து ஜானவி… நானும் அவரும் திருப்பதி கிளம்பறோம்…  வர இரண்டு நாள் ஆகும்” என்று உரைக்க,

“இன்னைகேவா?” என்றவள்அதிர்ச்சியாக கேட்க, “ஆமாம்மா… சாமியை பார்த்துட்டு ரெண்டு மூணு நாளில வந்திருவோம்” என்றார்.

ஜானவியால் மேலே எதுவும் பேச முடியவில்லை. இந்த விஷயத்தை கேட்டு செழியன்தான் வெளியே தன் தந்தையோடு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.

“இப்ப என்ன நீங்க மட்டும் தனியா போகணும்… போறதுன்னா எல்லோரும் ஒண்ணா போகலாம் இல்ல” என்றவன் தன் தந்தையிடம் கோபமாக சொல்ல,

“ஏன்டா…  புருஷன் பொண்டாட்டியா தனியா இப்போதான் போறோம்… அது பொருக்கலயா உனக்கு… இருபது இருபத்தைந்து வருஷமா எங்க போனாலும் உன்னையும் கூட கூட்டிட்டுத்தானே சுத்திறோம்… இப்பயாச்சும் எங்களை தனியா நிம்மதியா போக விடேன்” என்று பாண்டியன் உரைக்க ஜானவி இதை கேட்டு சிரித்துவிட்டாள்.

அப்போது சந்தானலட்சுமி அங்கே வந்து, “உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்ல… பையன்கிட்ட இப்படியா பேசுவாங்க” என்று கேட்டு தலையிலடித்து கொள்ள,

“உண்மையைதானே லட்சு சொன்னேன்” என்றான் பாண்டியன் இறங்கிய குரலோடு!

“ம்ம்கும் நல்லா சொன்னீங்க” என்று சந்தானலட்சுமி நொடித்து கொண்டு அவர்களின் பையை புறப்பட ஆயுத்தமாக எடுத்து வைக்க,

“வர ஒரு நாலைஞ்சு நாள் கூட ஆகும் டா… பக்கத்தில திருத்தணி பழனி எல்லாம் போயிட்டுதான் வருவோம்… நீ பாட்டுக்கு போஃன் பண்ணி போஃன் பண்ணி எப்போ வருவீங்கன்னு… கேட்டு எங்களை தொல்லை பண்ணாதே சொல்லிட்டேன்” என்றார் பாண்டியன் கண்டிப்பாக.

“முடியலடா சாமி… ஒழுங்கா கிளம்பிடுங்க… என் தொல்லை இல்லாம  இரண்டு பேரும் தனியா நிம்மதியா போய் எல்லா சாமியையும் தரிசனம் செஞ்சிட்டு வாங்க… நான் போஃனே பண்ண மாட்டேன்” என்றான்.

ஜானவிக்கு  அவர்களின் உரையாடல்களை கேட்டு சிரிப்பு தாங்கவில்லை. ஒரு வழியாக அவர்கள் புறப்பட, “பார்த்து போயிட்டு வாங்க ப்பா… பை ம்மா” என்று அனுப்பிவிட்டான்.

“சரி… அன்பு பார்த்துக்கோ… போயிட்டு வரேன் ம்மா” என்று அவர்கள் ஜானவியிடமும் சொல்லி விடைபெற்று கொண்டு புறப்பட்டனர்.

 

 

error: Content is protected !!