AVA-39

AVA-39

விரிசல்

சாரதியின் அலுவலகம்

கணேஷ் டென்ஷனோடு சாரதியிடம், “இஷிகா மேடம் உங்க கிட்ட பேசினாங்களா சார்?!” என்று வினவ,

“ஹ்ம்ம்… ஷூட்டிங் கேன்ஸல் பண்ணிட்டு இன்னைக்கு நைட் இல்ல நாளைக்கு சென்னைக்கு ரீச் ஆயிருவா” என்றான்.

“வந்ததும் உங்களைத்தான் மீட் பண்ண வருவாங்க… அப்படி எதாச்சும் நடந்து… உங்க பக்கம் இந்த பிரச்சனை திரும்பிட்டா?!” கணேஷ் அச்சத்தோடு சொல்ல,

சாரதி அலட்சியமாய் முறுவலித்து, “இந்த trap டிராப்பே என்னை சிக்க வைக்கத்தானே கணேஷ்!” என்க,

“சார்… இப்போ இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போறீங்க? கணேஷ் படப்படப்பாய் வினவ சாரதி கூலாய் சிகரெட்டை பற்ற வைத்தபடி,

“இவ்வளோ பெரிய ரிஸ்க் எடுக்கும் போது இப்படியெல்லாம் நடக்கும்னு யோசிச்சிருக்க மாட்டேனா” என்றவன் இடைவெளிவிட்டு தீவிரமான சிந்தனையோடு,

“இப்ப என் யோசனையெல்லாம்… இந்த விஷயத்துக்குப் பின்னாடி யாரு இருக்காங்கிறதுதான் கணேஷ்” என்றான்.

“வேற யாரு சார்… அந்த அரவிந்தாதான் இருக்கும்”

“உஹும்… எனக்கு அப்படி தோணல” என்று சாரதி உரைக்க,

“வேற யாரு சார்… இந்த விஷயத்தில இவ்வளவு பெரிய முடிவு எடுக்க முடியும்… நாராயணசுவாமி சார் இருக்கிற நிலைமையில… அவர்  தனியா இப்படி ஒரு டெசிஷனை எடுத்திருக்க முடியாது” என்றான் கணேஷ்.

“இல்ல கணேஷ்… இது அரவிந்திற்கோ…  இல்ல நாராயணசுவாமி சாருக்கு தெரிஞ்சவங்க… நெருக்கமானவங்க யாராச்சும் பண்ணி இருக்கனும்” என்று சாரதி யோசனையோடு சொல்ல,

“அப்போ இந்த வேலையை செஞ்சது அரவிந்த் இல்லையா சார் ?” என்று அதிர்ச்சியாய் கேட்டான் கணேஷ்.

“நோ… அந்த அரவிந்த் அவசரக்காரன்… கோபக்காரன்…. ஆனா புத்திக்காரன் இல்ல” என்றதும் கணேஷும் தலையசைத்து அவன் சொன்னதை ஏற்று ஆமோதித்தான். அப்போது சாரதியின் கைப்பேசி ஒலித்தது.

எதிர்புறத்தில் இஷிகா அழைத்திருப்பதை அறிந்த சாரதி அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு,

“கணேஷ்… நீ உடனே உன் பர்ஸ்னல் நம்பர்ல இருந்து இஷிகாவுக்கு கால் பண்ணி… நான் பிஸியா இருக்கேன்னு சொல்லு” என்க, கணேஷும் அவன் வார்த்தைப்படி இஷிகாவிடம் பேசினான்.

பின்னர் அவள் சொன்னதை அப்படியே சாரதியிடம் தெரிவித்தான்.

“சார்… அவங்க ரொம்ப டென்ஷனா இருக்காங்க… உங்கள பார்த்தே ஆகணுமாம்… எங்க மீட் பண்றது… மீட்டிங் பிளேஸ் சொல்ல சொன்னாங்க” என்றதும் அவன் சில நொடிகள் யோசிக்க

கணேஷ் அப்போது, “ரீசார்டுக்கு” என்று இழுக்க,

“நோ நோ… பேசாம நாளைக்கு ஈவனிங் இஷிகாவை வீட்டுக்கு வர சொல்லு… ஆனா அவளோட ஓன் கார்ல வேண்டாம்… கொஞ்சம் சீக்ரட்டா வர சொல்லு” என்றான். சாரதி சொன்னதை அப்படியே கணேஷ் தன் பேசியின் மூலமாக இஷிகாவிடம் தகவல் பரிமாற்றம் செய்தான்.

சாரதி சொன்னது போலவே இஷிகா அன்று மாலை அவன் வீட்டை அடைந்திருக்க, அவனோ அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்து சேரவேயில்லை. இன்னும் சில நொடிகளில் வந்துவிடுவதாக அவன் அவளிடம்  தகவல் அனுப்பிவிட்டுக் காத்திருக்க சொல்லியிருந்தான்.

இஷிகாசலிப்போடு முகப்பறையில் நுழைய, அவள் உள்ளே வருவதற்கு முன்னதாக சாரதி முத்துவிடம் அவளுக்கு வேண்டியவற்றைக் கேட்டறிந்து அவளை உபசரிக்கும்படி பணித்திருந்தான்.

முத்துவும் அதே போல் அவளை வரவேற்று அமர வைத்துவிட்டு ஜூஸ் எடுத்து வருவதாகச் சமையலறைக்குள் புகுந்து விட, அப்போதுதான்  அமலாவும் நதியாவும் பள்ளியிலிருந்து வீடு திரும்பியிருந்தனர். 

அவர்கள் முகப்பறையின்  சோபாவில் அமர்ந்திருந்த இஷிகாவை பார்த்ததும் அப்படியே ஆச்சர்யத்தில் நின்றுவிட, இஷிகாவும் அவர்கள் யாரென்று குழப்பமாய் நோட்டமிட்டாள்.

  அப்போது அம்மு சந்தேகித்து “இவங்க அந்த துணி கடை விளம்பரத்தில வரவுங்க தானே” என்று நதியாவிடம் காதோடு கேட்டு வைக்க, “எனக்கும்  அப்படித்தான் தோணுது அம்மு” என்றாள் நதியா.

அவர்கள் இருவரின் ரகசிய சம்பாஷனையை கவனித்த இஷிகா,

“ஆமா… நீங்க ரெண்டு பேரும் சாரதிக்கு யாரு ?” என்று கேள்வி எழுப்ப,

அவர்கள் பதில் சொல்வதற்கு முன்னதாக இஷிகாவே மீண்டும் ,

“சாரதிக்குதான் ரீலேஷன்ஸே இல்லையே…அப்படின்னா நீங்க இங்க வேலை செய்ற சர்வன்ட்ஸோட பசங்க யாரச்சும்மா?!” என்றவள் தானாகவே ஒரு யூகத்தை மேற்கொண்டு கேட்கவும்  இருவரின் முகமும் வாடி போனது.

அதற்குள் அங்கே வந்திருந்த முத்து, “என்னமா இப்படி கேட்டீங்க… அவங்க இரண்டு பேரும் சாரதி சாரோட மச்சினிச்சீங்க” என்றான்.

“வாட் ?” என்று இஷிகா அத்ரிச்சியுற, அப்போது அம்மு அவளிடம்,

“எங்க அக்காவைதான் சாரதி மாமா கல்யாணம் பண்ணி இருக்காரு” என்று சொல்ல இஷிகா மேலும் அதிர்ச்சியுற்றாள்.

அந்த சமயம் வீரா மாடி அறையிலிருந்து வெளியே வந்து, “என்னடி வந்ததும் வராததுமா கீழ நின்னு கதையடிச்சிட்டு இருக்கீங்க… முதல வந்து டிரஸ மாத்துங்க” என்று அதிகாரமாய் குரல் கொடுத்துக் கொண்டு எட்டிப் பார்த்தாள்.

அப்போதே வீரா அங்கே  நின்றிருந்த  இஷிகாவை கவனிக்க, அதே சமயம் இஷிகாவின் பார்வையும் வீராவை பார்த்தது.

இஷிகாவின் கவர்சிகரமான உடைபாணி  வீராவை முகம் சுளிக்க வைக்க, இஷிகாவிற்கோ வீராவின் எளிமையைப் பார்த்து…  இவள் போய் சாரதியின் மனைவியா என்ற குழப்பத்தை உண்டாக்கியது.

“இவங்கதான் உங்க அக்காவா?!” என்று இஷிகா… அம்மு நதியாவிடம் கேட்க அவர்கள் ஆம் என்ற ஆமோதித்த அதே சமயம் வீரா கீழே வந்து,

“நீங்க யாரு?” என்று இஷிகாவை பார்த்து கேட்டாள்.

“நான் சாரதியோட க்ளோஸ்ஸ்ஸ்ஸ்  ப்ஃரண்ட்” என்று இஷிகா சொன்ன விதத்தில்… வீராவிற்கு அந்த வார்த்தைக்குக் கொடுத்த அழுத்தத்தின் அர்த்தம் புரிய அவள் முகம் சுணங்கி போனது.

உடனடியாய் தங்கைகளின் புறம் திரும்பியவள் அவர்களை மேலே போக சொல்லி கண் காண்பித்து விட்டு அவளும் செல்ல பார்க்க, “மிஸஸ் சாரதி” என்று இஷிகா அழைக்க, வேண்டா வெறுப்பாய் அவள் புறம் திரும்பினாள் வீரா!

இஷிகா அவளை நெருங்கி வந்து, “ஆமா… எப்போ உங்களுக்கும் சாரதிக்கும் கல்யாணம் ஆச்சு” என்று வீராவிடம் வினவ,

“இரண்டு வாரமாச்சு” என்று வீரா அவள் முகத்தை நேர் கொண்டு பார்க்க விரும்பாமல் எங்கோ பார்த்தபடி பதிலளிக்க, “ஓ!” என்று வியப்பாய் வாயைப் பிளந்தாள் இஷிகா!

மேலும் அவள் வீராவை விடாமல் , “ஆமா… சாரதிக்குதான் மேரேஜ் மாதிரி கமிட்மன்ட்ல எல்லாம் நம்பிக்கை இல்லையே ?! அப்புறம் எப்படி… மே பீ எதாச்சும் கம்பிரமைஸ்காக செஞ்ச அக்ரீமென்ட்… டீலிங் மாதரியா இந்த மேரேஜ்?” என்று குரலை தாழ்த்தி வீராவிடம் ரகசியமாய்  கேட்க… வீராவின் மனம் அவமானத்தில்கொதித்தது.

‘இந்த மனுஷனை கட்டிக்கிட்டு நம்ம இன்னும் என்னலாம் அசிங்கப்படனுமோ… தெரியிலியே’ என்று வீரா வாயிற்குள் முனகி கொண்டிருக்க இஷிகா மீண்டும், “என்ன சொன்னீங்க இப்போ?… எனக்கு கேட்கல” என்றாள்.

“ஹ்ம்ம்… இந்த கேள்வியெல்லாம் உங்க க்ளோஸ்ஸ்ஸ்ஸ்  ப்ஃரண்ட் வருவாரு இல்ல… அவரான்டையே கேட்டுக்கோங்க” என்று சொல்லிவிட்டு வீரா விறுவிறுவென படிக்கெட்டில் ஏறிச் செல்ல, அப்போது சாரதியின் கார் வாசலில் வந்து நின்ற சத்தம் கேட்டது.

வீராவால் அந்தச் சத்தத்தை கேட்ட பின்னும் ஏனோ மேலே செல்ல முடியவில்லை. அவள் அங்கேயே நின்றபடி திரும்பி நோக்க அப்போது இஷிகா ஆர்வமாய் வாசலை நோக்கிச் சென்றாள். அதே நேரம் சாரதியும் உள்ளே நுழைய… இஷிகா அவனை அணைத்துக் கொண்டாள்.

வீராவிற்கு உள்ளுற பற்றி எரிய…  சாரதி பெரிதாய் எந்தவித உணர்வுகளையும் காட்டி கொள்ளாமல் தன் ஒற்றைக் கையால் இஷிகாவின் தோளை அணைத்துப் பிடித்து அவளை நலம் விசாரித்தான். வீராவின் தேகமெல்லாம் உஷ்ணமேறிய உணர்வு!

ஏனோ அந்த காட்சியை… வீராவால் இயல்பாகப் பார்க்கவும் முடியவில்லை. எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை.

அப்போது  சாரதி இஷிகாவிடம், “நம்ம இங்க பேச வேண்டாம் இஷி… ரூம்ல போய் பேசிக்கலாம்” என்க, அவளும் அந்த ஒற்றை வார்த்தைக்காக காத்து கிடந்தவள் போல் தலையை வேகமாய் அசைத்து தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

வீராவின் உள்ளம் அனலாய் தகிக்க சாரதி தன் அறை நோக்கி இஷிகாவை வழிநடத்த, வீரா முகத்தைத் திருப்பி கொண்டு செல்ல பார்த்தாள்.

“வீரா நில்லு” என்று சாரதி அழைப்பு விடுக்க அவளுக்குக் கோபம் ஏகபோகமாய் ஏறியது. ‘இப்ப இன்னாத்துக்கு இவன் நம்மல கூப்பிடறான்’ என்றவள் புலம்பி கொண்டே அவன் புறம் திரும்பச் சாரதி உடனடியாய் அவளை அணைத்தவாறு,

“மீட் மை வொய்ஃப் வீரா” என்று இஷிகாவிடம் அவளைஅறிமுகம் செய்வித்தான்.

“தெரியும் சாரதி… இப்போதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினோம்” என்றாள் இஷிகா.

“ஓ!” என்றவன் பின் வீராவிடம் இஷிகாவை பற்றி அறிமுகம் செய்விக்க அவள் முகம் அஷ்டகோணலாய் மாறியது. அவள் முகபாவனை பார்த்து அவளின் கோபத்தை புரிந்து கொண்டவன்…

இஷிகாவை தன் அறைக்குச் செல்லும்படி  வழி கண்பித்துவிட்டு வீராவிடம் திரும்பி, “வீரா அன்டர்ஸ்டேன்ட்… கொஞ்சம் confidential பேசனும்… அதான் வீட்டுக்கு வர வைச்சேன்” என்று அவன் பொறுமையாக விளக்கமளிக்க,

“பேசனும் சரி… அது ரூம்குள்ள போய் தான் பேசனுமோ ?!” என்று வீரா தன் மனதின் எண்ணத்தை பளிச்சென்று கேட்டுவிட்டாள்.

அவன் முறுவலித்து, “வேற எதுக்காச்சும்னா… அதுக்கு வேற எங்கயாச்சும் வர… சொல்லியிருப்பேனே” என்றவன் சொல்லி அவளை கல்மிஷமாய் பார்த்துக் கண்ணடிக்க, அவனைக் கடுப்பாய் பார்த்துவிட்டு அவள் படியிறங்கி சென்றுவிட்டாள். அவள் கோபமாய் இருக்கிறாள் என்பது புரிந்தாலும் அவளைச் சமாதானம் செய்வதை விட முக்கியம், இப்போதைக்கு இஷிகாவிடம் பேசி நடந்து கொண்டிருக்கும்  பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க வேண்டும். இந்த முடிவோடு சாரதி தன் அறைக்குள் சென்றான்.

அப்போது இஷிகா அவன் அறையைச் சுற்று முற்றும் பார்த்து கொண்டிருக்க, “உட்காரு… பேசுவோம்” என்று கதவை மூடிவிட்டு வந்தான்.

“என்ன சாரதி ? நீயும் உன் வொய்ஃ வும் இருக்க மாறி ஒரு போட்டோ கூட இங்க இல்ல” என்றவள் கேட்க, “தட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்… நம்ம எதுக்காக மீட் பண்ணோமா அத பத்தி மட்டும் பேசுவோமே” என்று சொல்லியபடி  அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“பைஃ ன்… இப்ப நீயே சொல்லு நான் என்ன பண்றது” என்றவள் நேரடியாய் விஷயத்துக்கு வர அவன் அந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஒரு விரிவுரை கொடுக்க, அவள் அவன் தெளிவை கண்டு வியப்பில் ஆழ்ந்தாள். பின் சில நொடிகள் தீவிரமாய் யோசித்துவிட்டு,

“ஹ்ம்ம்… நீ சொல்றதெல்லாம் ஓகே… ஆனா என் இமேஜ்…அது போயிட்டா… அப்புறம் என் ட்ரீம்ஸ் எல்லாம் ஒண்ணுமில்லாம போயிடும்” என்றவள் அச்சத்தோடு சொல்ல, “இதுவும் ஒரு விதமான பப்ளிசிட்டிதான்” என்றான் வெகுஇயல்பாக!

“தெரிஞ்சிதான் பேசிறியா? இப்படி ஒரு பிரச்சனைல இருக்க என்னை எந்த படத்திலயாச்சும் புக் பன்னுவாங்களா?”

“கிசு கிசுல வராத ஹீரோய்ன்ஸா…இஷி”

“இப்போ நடிச்சிருக்க படம் இந்த பிரச்சனைல ஓடாம போய்டா?”

“ரிடிகுலஸா பேசாதே இஷி… ஒரு படத்தோட கதையும் நடிப்பும்தான் அந்த படத்தோட வெற்றியை தீர்மானிக்கும்… அப்படி ஆக்டர்ஸோட கேரக்டரை வைச்சிதான் படம் வெற்றி அடையனும்னா நிறைய பேரோட படம் ஓடவே கூடாது” என்றவன் சொல்ல, இஷிகா அவன் சொல்வதில் இருக்கும் யதார்த்தங்களைப் புரிந்து ஒருவாறு சமாதான நிலையை எட்டியிருந்தாள்.

“டோன்ட் வொர்ரி… நான் பாத்துக்கிறேன்… நீ நான் சொன்னதை மட்டும் செய்” என்றவன் இறுதியாய் சொல்ல, “ஓகே” என்று இஷிகாவும் தலையசைத்து ஆமோதித்தாள்.

அவள் எழுந்து கொண்டு, “நான் வர்றேன்” என்றவள் சொல்ல, “ஹ்ம்ம் ஓகே… எதாவது எமர்ஜென்சினா கணேஷுக்கு காண்டக்ட் பண்னு”  என்க,

அவள் தன் புரிதலை தலையசைத்து தெரிவித்தவள் அவனைத் தயங்கி தயங்கிப் பார்த்தபடி, “கிளம்பட்டுமா?!” என்றவள் கேட்க, “ஹ்ம்ம்” என்றபடி அறைக்கதவைத் திறக்க சென்றான்.

இஷிகா அவசரமாய் அவனை வழிமறித்து அணைத்துக் கொண்டு, “ஒரு கிஸ் கூட கிடையாதா?!” என்றவள் ஏக்க பார்வையோடு கேட்க அவன் சங்கடமாய் அவளை ஏறிட்டு, “சாரி டார்லிங்… நவ் ஐம் கமிடட்” என்று சொல்லி அவன் விலகப் பார்க்கும் போதே, “ஸோ வாட்?” என்று கேட்டு கிட்டதட்ட அவன் உதடுகளை நெருங்கியிருந்தாள் அவள்.

சாரதி அந்த நொடியே “நோ” என்று சொல்லி தன் கரம் கொண்டு அவள் உதடுகளை மூடி அவளைத் தள்ளி நிறுத்த… அவள் முகம் சுருங்கி போனது.

இஷிகா அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை திறந்து விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.  வாசலுக்கு வெளியே   வந்தவள்  அப்போது தோட்டத்தில் தனிமையில் அமர்ந்திருந்த வீராவை பார்த்து

என்ன யோசித்தாளோ? நேராய் வீரா அருகாமையில் சென்று நிற்க, அவளோ இவளைப் பார்க்கவும் விரும்பாமல் முகத்தைத் திருப்பி கொண்டாள்.

இஷிகா வஞ்சமாய் முறுவலித்து, “நீ பெரிய ஆளுதான்… அடங்காத குதிரையை கூட இப்படி அடக்கி வைச்சிருக்க” என்று சொல்ல,

வீரா அவளை புரியாமல் பார்த்தாள்.

இஷிகா மேலும், “இந்த மாதிரி குதிரையெல்லாம் ரொம்ப நாள் கட்டி வைக்க முடியாது… ஒரு நாள் கண்டிப்பா கட்டவிழ்த்து ஓடிடும்” என்று கேலியாய் சொல்லிச் சிரிக்க,

வீராவிற்கு அப்போதே இஷிகா சொன்னதன் அர்த்தம் மண்டையில் உறைத்தது. அவள் இஷிகாவை பார்த்து அலட்சிய புன்னகையோடு,

“அது என் பிரச்சனைங்க க்கா… நான் பார்த்துகிறேன்…. உங்களுக்கு வந்த வேலை முடிஞ்சிடுச்சு இல்ல… கிளம்புங்க” என்றதும் இஷிகா அவளை  எரிச்சலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அகல, அப்போது வாசலுக்கு வந்து நின்ற சாரதி இஷிகா வீராவிடம் பேசியதை தூரத்திலிருந்து  பார்த்து சற்றே கலவரமானான்.

‘என்னத்த பேசிறா?’ என்றவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, இஷிகா காரில் புறப்பட்டுவிட்டாள். அதே நேரம் வீரா வாசலில் நின்ற  சாரதியை கடந்து செல்ல,  அவள் பார்வை அவனை அப்படியே எரித்து விடுமளவுக்கு அத்தனை உஷ்ணமாய் அவனைத் தாக்கி சென்றது.

“வீரா நில்லு” என்று அவன் குரல் கொடுக்க, அவள் வேண்டுமென்றே  அவன் அழைப்பைக்  கவனிக்காமல் அகன்றுவிட ஏனோ அந்த நிராகரிப்பை அவனால் தாங்கவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.  அதே நேரம் வீராவின் தங்கைகள் முன்னிலையில் அதனைக் காட்டவும் முடியாமல் அவன் அவதியுற, அவளுக்கும் அதே நிலைமைதான்.

இரவு உணவின் போது கூட அம்மு நதியாவிடம் பொதுப்படையாய் இருவரும் பேசுவது போல் நடித்தனரே ஒழிய அவர்கள் மனத்தாங்கல் தீரவில்லை. சாரதி அவள் அறைக்கு வந்த பிறகு எப்படியாவது அவளிடம் பேசி சமாதானம் செய்துவிடலாம் என்று அவன் காத்திருக்க, அதற்கான வாய்ப்பை கூட வீரா அவனுக்குத் தரவில்லை.

இரவு தன தங்கைகள் அறையிலேயே அவள் படுத்து உறங்கியிருக்க, கிட்டதட்ட இரவு முழுக்க அவள் வருவாள் என்று காத்திருந்து காத்திருந்து சாரதி ரொம்பவும்  கடுப்பிலிருந்தான்.

அவளைத் தானே சென்றுஅழைக்கவும் அவன் ஈகோ ஒத்துக்கொள்ள மறுத்திருக்க, இரவெல்லாம் அந்த அறையே புகைமண்டலம் ஆகியிருந்தது.  விடிந்ததும் அவள் எதார்த்தமாய் அந்த அறைக்கு வர ஆங்காங்கே சிகரெட் துண்டுகள் கன்னாபின்னாவென்று சிதறிக் கிடப்பதை பார்த்து அவள் சீற்றமாய் அவளைப் பார்க்க… அவனோ அவள் முறைப்பிற்கு அலட்சியமாய் ஒரு பதில் பார்வையைக் கொடுத்துவிட்டு அவன் பாட்டுக்கு தன் பேசியில் அளவளாவிக் கொண்டிருந்தான்.

அவள் அந்த அறையை மீண்டும் ஒரு பார்வை சுழற்றிப் பார்த்துவிட்டு அங்கே நிற்கக் கூட பிடிக்காமல் முகத்தைச் சுளித்துவிட்டு சென்றாள். அவனும் அவளிடம் எந்தப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை. அவன்  அலுவலகம் பசெல்வதில் மும்முரமாய் இருக்க, அம்முவும் நதியாவும் அவர்களிடம் விடை பெற்று கொண்டு பள்ளிக்கு தயாராகிச் சென்று விட்டனர்.

சாரதியும் அலுவலகம் செல்வதற்காக அவனின் லேப்டாப் பேக்… சில பைல்களை காரின் இருக்கையில் வைத்துவிட்டு… பர்ஸை மறந்துவிட்ட யோசனையில் மீண்டும் தன் அறைக்கு அதனைத் தேடி கண்டெடுத்துவிட்டு அவன் கீழே வர, நிறுத்தப்பட்ட இடத்தில் கார் இல்லை.

அவன் புரியாமல் சுற்றுமுற்றும் தேடலாய் பார்த்து கொண்டிருக்க, “வீராம்மாதான் கார் எடுத்துட்டு போயிட்டாங்க” என்றான் முத்து. சாரதிக்கு பேரதிர்ச்சி!

நேரத்திற்குப் போய் சேரவில்லை என்றால் முக்கியமான ஒரு ஆர்டர் கையைவிட்டுப் போய்விடும். அது சமந்தப்பட்ட பைஃல்கள் யாவையும் காரில் வைத்துவிட்டுத்தானே… அவன் தன் பர்ஸை எடுக்க அறைக்குச் சென்றான். அந்த நொடி கோபத்தின் உச்சத்தை எட்டியிருந்தான்.

error: Content is protected !!