AVA- PreFinal2
AVA- PreFinal2
மஹாபாரதம்…
அக்காலத்தில் மாதவிடாய் நேரங்களில் ஒற்றை ஆடையை மேலாகக் கட்டியிருப்பது வழக்கம். அந்தச் சமயங்களில் ஆண்கள் முன்னிலையில் வருவதையும் பெண்கள் தவிர்ப்பர். அப்படி ஒரு நாள்… திரௌபதியின் வாழ்வில்…
மனைவி என்றும் பாராமல் தர்மத்தின் தலை மகன் தன் மனைவியைச் சூதில் பணயமாக்க… துரியோதனன் வென்று … தோற்றது தர்மமோ அல்லது தர்மனோ. ஆனால் சம்பந்தம் இல்லாமல் பணயமானதோ அவள்!
திரௌபதையின் நீண்ட நெடிய அழகிய கூந்தலைப் பற்றி… துச்சாதனன் ஆண்கள் குழுமியிருந்த அந்த பெரும் சபைக்குள் தரதரவென்று இழுத்து வந்தான். அவளை… அதாவது பெண் என்ற அந்தப் பணய பொருளை.
அரசன் தொடங்கி புருஷன்கள் வரை யாரும் துணை நிற்கவில்லை அவளுக்காக. அங்கே அவரவர்கள் நியாயம்.
பாவம் திரௌபதி… குரலெழுப்பினாள். சிரம் தாழ்ந்தாள். கரம் குவித்தாள். மன்றாடினாள். கண்ணீர் சிந்தினாள். தன்னிலைமை உணர்த்தினாள். அப்போதெல்லாம் வராத மாதவன்… அவள் துகிலுறியப் படும்போது கண்ணா என்று கரம் தூக்கிக் கதறிய பின்னரே வந்து சேர்ந்தான். தூணிலும் துரும்பிலும் இருந்தாலும் வெகுதாமதமாய் அவள் மானம் காக்க…!
ஆனால் என்ன காரணமோ ? இந்தக் கலியுகத்தில் தினம் தினம் பல வெறிகொண்ட காமுகன்கள் துச்சாதனன்களாய் மாறிப் பல காரிகைகளின் துகிலுரித்துக் கொண்டிருக்க… ஏனோ காலதாமதமாக கூட எந்த கண்ணனும் இன்று அவர்கள் மானம் காக்க வருவதில்லை.
காப்பிய காலத்தில் நிகழ்ந்த அதே காட்சி, இன்றளவிலும் மாறுபடவே இல்லை. சில வித்தியாசங்கள் என்னவெனில் திரௌபதி போல் வீராவிற்கு நீண்ட நெடிய கூந்தலில்லை. எந்த நாட்டுக்கும் அவள் அரசி இல்லை. ஐந்து புருஷன்மார்களும் இல்லை. அங்கே பகடையும் ஆடப் படவில்லை. அவள் பணயப் பொருளும் இல்லை. ஆனால் அவள் பெண். அவமானப்படுத்த அந்தத் தகுதி ஒன்றே போதுமானது.
இயல்பாகவே மாதவிடாய் நேரங்களில் பெண்ணவளின் மொத்த பலமும் வடிந்து போன நிலையிலிருக்கும். கிட்டதட்ட வீராவின் உடல்நிலையும்அதுதான். அதுவும் அவர்களிடம் போராடி இன்னும் பலமாக காயப்பட்டு அவள் தேகம் வலுவிழந்து விட, பெண்ணாகப் பிறப்பெடுத்ததே பாவமோ என்ற இயலாமையோடு அவள் முடியாமல் அந்தக் கண்ணாடி மேஜை மீது அப்படியே துவண்டு அயர்ந்து கிடந்தாள்.
ஆனால் அவள் நிலைமை புரியாமல் சரத்தும் அரவிந்த்தும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை உதிர்த்து அவள் சினத்தை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
“ச்சே! என்ன மாதிரி ஜென்மங்கடா நீங்க எல்லாம்?” என்றவள் கேட்டு அவர்களை வெட்டும் பார்வை பார்க்க,
“நீதான் சொல்லேன்… என்ன மாதிரி ஜென்மங்கன்னு” என்று சரத் அவளைக் கேலி செய்து சிரித்தான்.
அதே நேரம் அரவிந்த், “அந்த சாரதியை விட நாங்க ஒண்ணும் கேவலமான ஜென்மம் இல்ல ?” என்று பதிலடி வழங்க,
அவனைத் தொடர்ந்து சரத், “அதானே… அவனையே ஏத்துக்கிட்ட… அப்புறம் என்னடி எங்ககிட்ட மட்டும் சீன் போடுற?” என்றான்.
“சும்மா அவரைப் பத்தி பேசாதீங்க… அவர் ஒன்னும் உங்கள மாதிரி கேடுகெட்ட ஜென்மமில்லடா” என்று சொல்லி வீரா மெல்ல எழுந்து கொள்ள,
அரவிந்த் கோபாவேசமாய், “யார் ? அவனா… எங்க அப்பாவை அசிங்கப்படுத்தி… எங்க கடையையும் எரிச்சிட்டு… மன்னிப்பு கேட்டா… அவன் நல்லவனாயிடுவானா டி?! இல்ல நான்தான் அவனை மன்னிசிருவேனா” என்றவன் வெறியோடு சொல்லி அவளை முறைத்துப் பார்த்தான்.
“வேணா… மன்னிக்காதே… போய் உன் கோபத்தையும் வீரத்தையும் அவர்கிட்ட காட்டு…. அதை விட்டுட்டு இதுல என்னை ஏன்டா இழுக்கிற… நான் என்னடா பண்ணேன்?”
“என்னை வேணாம்னு உதறிட்டு அவனை நம்பி போன இல்ல… அதுக்குதான்டி உனக்கு இந்த தண்டனை… நீ அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிக்கிறத பார்த்தாதான் எனக்கு சந்தோசம்” என்ற அரவிந்த் படுதீவரமாய் சொல்ல வீராவிற்கு அவன் வார்த்தைகள் வெறியேற்றின.
“கனவில கூட நீ நினைச்சது நடக்காது” என்று தன் வலியையும் மீறி அவள் உஷ்ணபார்வையோடு கூற,
“அப்படியா?!” என்று ஏளனமாய் சிரித்தவன்,
“மாமா உங்க போஃன் கேமராவை ஆன் பண்ணுங்க” என்றான். அதோடு அவன் தன் ஆட்களிடம் திரும்பி கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், “அவ உடம்பில… ஒரு ட்ரஸ்சில்லாம… உருவுங்கடா” என்று வன்மத்தோடும் வக்கிரத்தோடும் கட்டளையிட்டான் .
அந்த வார்த்தையின் வீரியம் அவள் வலியெல்லாம் துவம்சம் செய்து அவள் கோபத்தைக் கனலாய் ஏற்றியது.
அந்த ஆட்களோ அவளை நெருங்க அந்த நொடி உக்கிர நிலைக்கு மாறியவள், “எவனாச்சும் என்கிட்ட வந்தீங்க… உங்க குடலை உருவி போட்டிருவேன்… ஜாக்கிரதை” என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்லி அங்கிருந்த பொருட்களை ஆக்ரோஷமாய் அவர்கள் மீது சகட்டு மேனிக்கு வீச ஆரம்பித்திருந்தாள்.
அவளின் தாக்குதலில் அரவிந்த் தட்டுத்தடுமாற சரத்தும் கூட சற்று நிலைகுலைந்து போன அதே நொடி அவள் தூக்கியடித்த பொருளால் அருகிலிருந்த கண்ணாடி மேஜை வீறல்விட்டு பெயர்ந்து நொறுங்கி விழ, இருவருமே விக்கித்து போயினர். இவள் செய்கை பார்த்து அங்கிருந்த ஆட்கள் அவளைக் கட்டுப்படுத்த பெரும்பாடுபட்டு அவள் கரங்களைப் பிடித்து தடுக்க, “விடுங்கடா என்னை” என்று வீரா ஆவேசமாய் கத்தியபடி அவர்கள் கரங்களிலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தாள்.
“அவ கையை கட்டி போடுங்கடா” என்று சரத் சொல்ல,
“ஆமா… கட்டி போடுங்க… இல்லன்னா இந்த பொட்ட பசங்கள… நான் கொன்னு போட்டாலும் போட்ருவேன்” என்று வீரா வெறியோடு சொல்லி அவர்களைக் கேவலமாய் பார்த்தாள்.
அரவிந்த் அவள் வார்த்தையில் சீற்றமாகி, “அடிங்க… எவ்வளவு தெனாவெட்டும் திமிரும் இருந்தா எங்களை பொட்ட பசங்கன்னு சொல்லுவ” என்று தன் கோபம் தீரும் வரை சரமாரியாய் அவள் கன்னத்தில் அறைய,
“போதும் விடு அரவிந்த்” என்று சரத் அவனைத் தடுத்து தள்ளி நிறுத்த வீராவிற்கு முகம் வீங்கிச் சிவந்து உதட்டோரம் குருதி வழியத் தொடங்கியிருந்தது.
அரவிந்த் வெறியோடு சரத்திடம், “நீங்க கேமராவை ஆன் பண்ணுங்க… இவளை நானே நிர்வாணமாக்குறேன்” என்று சொல்லி அவள் பின் கழுத்தைப் பற்றி,
“இன்னைக்கு நீ என் முன்னாடி அவமானப்பட்டு கூனி குறுகி நிக்க போறத எந்த சாரதி வந்தாலும் தடுக்க முடியாது” என்றான்.
“சரிடா… நீ சத்தியமான ஆம்பிளையா இருந்தா… இந்த டோமருங்க எவன் உதவியும் இல்லாம… என் புடவையை மட்டுமாவுது நீ உருவிட்ரா பார்க்கலாம்” என்று வீரா கூர் வாளாய் தன் விழிகளைத் தீட்டிக் கொண்டு அவனைப் பார்த்து பதிலடி கொடுக்க,
“அவ்வளவு திமிரா… பார்த்திரலாம்டி” என்று கட்டுக்கடங்கா கோபத்தோடு அவளைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு அவள் முந்தானையைப் பற்றி இழுத்தான்.
அப்போது வீராவின் கரத்தில் ரத்தம் பீறிட்டது. உடைந்த அந்தக் கண்ணாடி மேஜையின் துண்டு அவளின் வலது கரத்தில் குத்திக் கிழித்திருக்க… அவனோ அவள் நிலையைப் பொருட்படுத்தாமல் தன் காரியத்தில் மட்டுமே கண்ணாயிருந்தான். அவன் இழுத்த வேகத்தில் அவள் முந்தானை அவள் மேலிருந்து நழுவப் பார்க்க அதனை இடது கரத்தால் கெட்டியாய் பற்றி கொண்டு தன் வலது கரத்தை கிழித்த அந்த கூரிய கண்ணாடி துண்டை அவன் வயிற்றில் ஆவேசமாய் பாய்ச்சினாள்.
அரவிந்த் அதிர்ந்து வார்த்தை வராமல் திக்கி நின்றுவிட அவள் வெறியோடு அந்தக் கண்ணாடி துண்டால் வெவ்வேறு இடத்தில் மீண்டும் மீண்டும் ஆக்ரோஷமாய் குத்திவிட்டாள்.
“வீ… ரா” என்று சொல்லி கொண்டே அரவிந்த் பின்னோடு சாய,
“வீரா இல்லடா… வீரமாக்காளி” என்று அழுத்தி அவள் உச்சரிக்க அதனைக் கேட்டபடியே அவன் தன் கடைசி மூச்சை விட்டான். சரத் மற்றும் சுற்றியிருப்பவர்களுக்கு நிலைமை இன்னதென்று புரியும் பொழுது அரவிந்த் உயிரற்றுப் போயிருந்தான். அத்தனை துரிதமாய் அவள் தாக்குதல் நடந்தேறியது.
வீராவைத் தாக்க அந்த ஆட்கள் அவளை நெருங்க, முன்னே வந்த ஒருவனின் கரத்தில் அவள் ஒரு வெட்டு வெட்டி,
“பேமானி பசங்களா… நீங்கெல்லாம் சேர்ந்து என் புடவையை உருவப் போறீங்களாக்கும்… தில்லு இருந்தா வாங்கடா… இன்னைக்கு உங்க எல்லாரோட குடலையும் நான் உருவிறேன்… அப்போ தெரியும் யார் இந்த வீரமாகாளின்னு” என்று சத்தமாய் சொல்லி ரௌத்திர கோலத்தில் எரிமலை குழம்பாய் அவள் விழிகள் சிவக்க பார்த்த பார்வையில் சரத் உட்பட அந்த அடியாட்களும் அரண்டு ஓரடி பின்வாங்கி கொண்டனர்.
வீராவோ அப்போது சரத்தை நோக்கி முன்னே வந்து,
“அடேய்… இன்னாடா சொன்ன என்னை பார்த்து… கையை மேல தூக்கி… நான் கடவுளைல் கூப்பிடணுமா… மவனே… இப்போ நீ உன் கையை மேல தூக்கி கடவுளை கூப்பிடு… அந்த கடவுள் உன்னை காப்பாத்த வர்றாரான்னு பார்க்கலாம்” என்றவள் சொல்ல சரத் அவளின் ஆக்ரோஷத்தைப் பார்த்து மிரட்சியுற்று தன் ஆட்களிடம், “டேய்… பிஸ்டல் எடுத்து கொடுங்கடா” வியர்த்து கொட்ட அச்சத்தோடு கேட்டான்.
“ஐயோ சார்… ஒத்த பொம்பள புள்ளதானேன்னு… பெருசா பொருளெல்லாம் எடுத்துட்டு வரல” என்று மெலிதாக உரைத்தவனின் குரலிலும் நடுக்கம். அங்கிருந்தவர்கள் பயந்தது அவள் கரத்திலிருந்த அந்த சிறு கண்ணாடி துண்டை பார்த்தல்ல.
ரத்தம் வழிந்தோடிய போதும் நடுங்காத அவள் கரத்தைப் பார்த்து… அவள் பார்வையில் தெரிந்த கொலைவெறியைப் பார்த்து… இன்னும் கேட்டால் அவர்கள் முன்னே மலையளவு விஸ்வரூபம் எடுத்து நின்ற அவள் மனோதிடத்தைப் பார்த்து… உண்மையிலேயே அவர்கள் எல்லோரின் பலத்தையும் அவள் மனோதிடம் ஆட்டம் கண்டிட செய்தது என்று சொன்னால் அது மிகையல்ல!
ஒரு ஆணின் உடல் பலத்திற்கு ஓர் பெண் நிகரானவள் இல்லைதான்… ஆனால் வாழும் போதே மரணத்திற்கு நிகரான தாய்மையின் வலியை விரும்பியே ஏற்கும் ஓர் பெண்ணின் மனோபலத்திற்கு முன்னிலையில் நூறு ஆண்களின் உடல் பலமும் கூட நிகரல்ல என்பதே உண்மை!
சரத் மட்டுமல்ல… யாருமே வீராவை எதிர்த்து நிற்கத் துணியாமல் அவசரமாய் வாயிலைத் தாண்டி செல்ல… சரத்தோ அவளை அந்த வீட்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டான்.
ஆக்ரோஷமாய் நின்றிருந்தவள் அப்படியே சரிந்து அரவிந்தின் உயிரற்ற உடலருகில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள்.
“அடப்பாவி… எத்தனை தடவை சொல்லிக்கினே… என் பின்னாடி வராதே… வராதேன்னு… கேட்டியாடா… நீயும் செத்து… இப்படி என் சந்தோஷத்திலயும் கல்லைத் தூக்கி போட்டுடியேடா பாவி… படுபாவி… இன்னாடா பாவம் செஞ்சேன் நான்… பொண்ணா பொறந்தது ஒரு தப்பா… இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி எங்களை துரத்திகிட்டே இருப்பீங்க… நாங்களும் ஓடிக்கிட்டே இருப்போம்” என்றவள் சொல்லிலடங்கா வேதனையோடு ரத்தம் தோய்ந்த அவன் தேகத்தை பார்த்து கண்ணீர் பெருக்கிக் கொண்டே தன் கரத்திலிருந்த கண்ணாடி துண்டை தவறவிட்டு மேலும் சத்தமாய் அழ ஆரம்பித்தாள்.
அந்த இடம் முழுக்க அவள் அழுகை சத்தம் மட்டுமே எதிரொலிக்கச் சட்டென்று கதவு திறக்கும் அரவம் கேட்டது. வீரா வேகமாய் தன் விழிகளை துடைத்துக் கொண்டு அந்தக் கண்ணாடி துண்டைக் கையில் மீண்டும் ஏந்திக்கொள்ள, அப்போது காக்கி சீருடையில் நுழைந்தவரைப் பார்த்து அவள் முகம் இருளடர்ந்து போனது.
அவள் பின்வாங்க, “வீரா” என்ற காவலாளிகளை விலக்கிக் கொண்டு சாரதி வந்தான். அவனின் அழைப்பு கேட்டு தளர்ந்து துவண்டு போயிருந்த அவளின் தேகத்தின் அணுக்கள் யாவும் புத்துயிர் பெற்றது.
“வீரா” என்று மீண்டும் அவன் அழைத்த சமயம் தாயைக் கண்ட பிள்ளையைப் போல் அவன் தேகத்தில் அடைக்கலம் புகுந்தாள் அவள். அவளின் நிலையையும் அந்த இடத்தையும் சுழற்றி பார்த்தவனுக்கு அங்கே என்ன நிகழ்ந்திருக்கும் என்று அவள் சொல்லாமலேயே புரிந்தது.
சாரதி தன் அலுவலகத்தில் வருமான அதிகாரிகளிடம் பேசிய விதமும் காட்டிய கோபமும் அவர்கள் மனதை சற்று உலுக்கிவிட்டது. அவனுக்கு ஒரு மணி நேரம் கொடுத்து உடன் ஒரு காவல் துறை அதிகாரியையும் அனுப்பி வைத்தனர்.
ஒருவாறு சாரதி இதற்குக் காரணம் அரவிந்தாகவே இருக்க முடியும் என்பதைக் கணித்து அவனின் செல்பேசியின் சிக்னல் மூலமாக இடத்தைக் கண்டறிந்து வந்து சேர்ந்திருந்தான். அந்தச் சமயத்தில்தான் சரத் அவன் அடியாட்களோடு வெளியேறப் பார்த்து வகையாக அவர்களிடம் சிக்கிக் கொண்டான்.
அந்த போலீஸ் அதிகாரி சரத்தை அழைத்து வந்து அங்கே என்ன நடந்தது என்று விசாரிக்கத் தொடங்கியிருந்தார்.
“அந்த பொண்ணுதான் அரவிந்தை தேடி வந்தா சார்” என்றவன் அப்பட்டமாய் பொய்யுரைக்க, “எதுக்கு?” என்று கேட்டு அந்த அதிகாரி துணுக்குற்றார்
வீராவிற்கு சீற்றமாக, சாரதி கண்ணசைத்து அவளை அமைதியாக இருக்கச் சொல்லி அவள் மீதான பிடியை அழுத்தமாய் மாற்றினான்.
சரத் அப்போது, “இவளுக்கும் அரவிந்துக்கும் படிக்கும் போதே ஏதோ கனெக்ஷன் இருந்திருக்கு… நாளைக்கு இவளுக்கு கல்யாணம் வேறயா… அரவிந்த் ஏதோ சொல்லி இவளை மிரட்டி இருக்கான்… ரெண்டு பேரும் தனியா சந்திச்சுக்கலாம்னு இங்க வந்து… என்னாச்சு ஏதாச்சுன்னு தெரியல… ரெண்டு பேருக்குள்ள வாக்குவாதம் முற்றி போய் அவனை இவ கொன்னுட்டா… எதேச்சையா வந்துதான் நானே பார்த்தேன்… அதான் அவளை உள்ள வெச்சி பூட்டிட்டு உங்களுக்கு போஃன் பண்ணலாம்னு யோசிச்சேன்… அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க” என்று சாமர்த்தியமாய் ஓர் கதையை புனைந்தான்.
அவன் பேசி கொண்டிருந்ததைக் கேட்டபடியே சாரதி தன் கைக்குட்டை எடுத்து வீராவின் உதட்டில் வழிந்த குருதியைத் துடைத்துவிட்டு அவள் கரத்தில் கட்டுப் போட,
“சீ… எப்படியெல்லாம் பேசுறான் பொறுக்கி நாய்… என்னய்யா… நீயும் கேட்டுகின்னு சும்மா நிக்கிற” என்றவள் தாளமுடியாத சினத்தோடு தன்னவனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க அவன் விழகளோ வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல் குமுறிக் கொண்டிருந்தது. அவள் மிரண்ட அடுத்த நொடி அங்கே நடந்த நிகழ்வு எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சரத் தொண்டை குழியில் இறங்கியிருந்தது அந்த கண்ணாடி துண்டு. அவன் எப்போது அவள் கரத்தில் இருந்து அதனை வாங்கினான் என்பதை அவள் உணரவும் இல்லை. அது எப்போது வீசப்பட்டது என்பதையும் அவள் கவனிக்கவில்லை. அவள் மட்டும் இல்லை. அங்கிருந்த யாருமே…
சரியாய் குறி பார்த்து லாவகமாய் இலக்கைத் தாக்கியிருந்தான் அவளின் அவன்.
சரத் அப்போது அம்மா என்று கூட கத்த முடியாமல் வலியில் துடித்து அவதியுற்றான். அந்த போலீஸ் அதிகாரி அதிர்ச்சியான அதே சமயம் கான்ஸ்டபிளை அழைத்து சரத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பின்னர் அந்த அதிகாரி சாரதியிடம் கோபமே ரூபமாய், “நான்தான் விசாரிச்சிட்டு இருக்கேன் இல்ல… அதுக்குள்ள என்ன அவசரம் மிஸ்டர்… நீங்களே எல்லாம் செய்றதுக்கு சட்டமும் கோர்ட்டும் எதுக்கு இருக்கு?” என்று ஆவேசமாய் கேட்க,
“எனக்கும் அதே டவுட் தான்… எந்த குற்றத்தையும் தடுக்க முடியாத அந்த சட்டம் எதுக்கு இருக்கு?” என்று நிறுத்தி நிதானமாய் கேட்டான் சாரதி. அந்த அதிகாரி அவனை ஏறஇறங்க பார்த்து,
“உங்களையும் உங்க வொய்ஃபையும் அரெஸ்ட் பண்ணனும்” என்க,
“ஒ எஸ்… பண்ணுங்க… ஆனா அதுக்கு முன்னாடி என் வொஃய்பை… ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்… ஷி இஸ் ப்ளீடிங்” என்றவன் சாதாரணமாய் சொல்ல வீரா அடங்கா வியப்போடு அவனையே பார்த்திருக்க, அந்த அதிகாரி முகத்தில் ஈயாடவில்லை.
சாரதி கேட்டு கொண்டபடி மருத்துவமனைக்கு வீரா அழைத்துவரப்பட்டாள். அவளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருக்க சாரதி அவளருகிலேயே நின்று கொண்டிருந்தான். அவன் விழிகள் கலங்கி கண்ணீர் வெளியே எட்டிப் பார்க்க… அவன் பார்வையில் இருந்த வலி அவள் வலியை மறக்கடித்திருந்தது.
சிகிச்சை அளித்துவிட்டு அந்த மருத்துவர் அவர்களை தனியேவிட்டு விலகிச் செல்ல அந்தத் தருணத்திற்காக காத்திருந்தவன் அவள் கன்னங்களை தன் கரத்தில் ஏந்தி,
“என்னை மன்னிச்சிடு வீரா… எல்லாத்துக்கும் நான்தான் காரணம்… என் கெட்ட புத்திதான் காரணம்… நீ சொல்லும் போது தெரியலடி… ஆனா இப்போ புரியுது… நான் செஞ்ச தப்புக்களோட ஆழம் என்னன்னு” என்றவன் குற்றவுணர்வோடு சொல்லி கண்ணீர் வடித்தான்.
அவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, “சரி… இன்னைக்கு நடந்ததுக்கு நீ காரணம்… இதுக்கு முன்னாடி எனக்கு நடந்ததுக்கெல்லாம்” என்றவள் அவன் அருகில் சென்று அவன் கண்ணீரைத் துடைத்துவிட அவனோ அவளை இறுக்கமாய் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“என் வாழ்கையில நான் எவ்வளவோ கஷ்டத்தை பார்த்திருக்கேன்… ஆனா இன்னைக்கு மாதிரி நான் என்னைக்குமே பயந்ததில்ல… ஏன் ? சாகப் போற நிமிஷத்தில கூட நான் பயப்படலடி… ஆனா நீ இல்லாத இந்த ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு என்னாயிடுமோ ஏதாயிடுமோன்னு… செத்து செத்து பிழைச்சேன்… இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா செத்தே போயிருப்பேன்” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கண்ணீர் அவள் தோளினை நனைக்க வீராவின் விழிகளிலும் நீர் கசிந்தது. தனக்கான அவன் கண்ணீரும் பரிதவிப்பும் அவளை நெகிழ்ச்சியுறச் செய்திருந்தது.
இருவரின் மனவேதனைகளின் பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரி உள்ளே நுழைந்து சிகிச்சை முடிந்துவிட்டதை அறிவுறுத்தி… அவர்களை அழைத்து விட்டுச் சென்றார்.
வீரா சாரதியின் முகத்தைத் தயக்கமாய் ஏறிட்டாள். அவள் தவிப்பை உணர்ந்தவன்,
“ஏன் இப்போ டென்ஷனாகிற… ரிலாக்ஸ்… நீ செஞ்சது கொலை இல்ல… self defence… தற்காப்பு”
“அப்போ நீ அந்த நாதாரிய குத்தினது” என்றவள் அச்சத்தோடு வினவ,
“அவனை நான் ஒண்ணும் கொலையெல்லாம் செய்யல… ரொம்ப மைல்டாதான் அவன் தொண்டை குழில இறக்கியிருக்கேன்… அவன் குரல் மட்டும்தான் போகும்… உன்னை தப்பா பேசின அந்த நாக்கு திரும்ப பேசவே கூடாது… அதுக்குதான்”என்றவன் அவள் முகத்தில் குறையாமல் இருந்த பதட்டத்தைப் பார்த்து,
“கம் ஆன் வீரா… ஹாஸ்பிடல் வர்ற வழியில நான் லாயருக்கு மெசேஜ் அனுப்பிட்டேன்… வந்திருவாரு… ஆல் இஸ் வெல்” என்று கூலாக அவன் பேசியதை கேட்டு அவள் ஆச்சரியப்பட்டாள்.
“எப்படியா நீ இப்படி இருக்க?”.
“அதான் சாரதி” என்றவன் சொல்ல அவளோ அப்போதும் சமாதானம் அடையாமல்,
“அது சரி… ஆனா நம்ம கல்யாணத்துக்காக நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?! இப்போ அதெப்படி நடக்கும்?” என்றாள் ஏக்கமாக!
அவள் முகத்தை நிமிர்த்தியவன், “ஏன் நடக்காது… நடக்கும்… இந்த சாரதி அதை நடத்தி காட்டிறேன்… காட் இட்” என்று தீர்க்கமாய் உரைக்க அவன் வார்த்தை அவளுக்கு நம்பிக்கை புகட்ட, அவன் தோள் மீது ஆதரவாய் சாய்ந்து கொண்டாள். அத்தனை நேரமாய் அவளுக்குள் இருந்த வேதனை வலியெல்லாம் அவனுடன் இருந்த அந்த சில நொடிகளில் மாயமாய் மறைந்து மனம் லேசானது.