Aval throwpathi alla – 10

Aval throwpathi alla – 10

வியப்பிற்குரிய விஷயம்

சாரதி அடிப்பட்டு வீழ்ந்து கிடந்ததை பார்த்த நொடி வீராவின் தேகமெல்லாம் நடுங்க,

அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவள் உள்ளமெல்லாம் பதைபதைத்தது. ஆனால் எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் அவள் சிலையென நின்றிருக்க,

“வா… வீரா போயிடலாம்” என்று பதட்டமாய் அவள் காதோரம் கத்தி கொண்டிருந்தான் சுகுமார்!

சட்டென்று ஏதோ நினைவுவந்தவளாய் அவன் புறம் திரும்பியவள், “உன் போஃனை கொடுக்கிறியா?!” என்று வினவ,

“எதுக்கு?!” பதறி கொண்டு கேட்டான் அவன்!

“போலீஸுக்கு போஃன் பண்ணி சொல்வோம்” என்றவள் சொல்ல,

“பைத்தியம் மாறி பேசாதே… அங்க நிற்கிறானே… அவன்தான் காசிமேடு சங்கர்… இன்னைக்கு சிட்டியையே கலக்கிட்டிருக்க பெரிய ரவுடி… அவனுக்கு மட்டும் நம்ம போலீஸை கூப்பிட்ட விஷயம் தெரிஞ்சிது… நம்மல துண்டா துண்டா நறுக்கி ஊறுகா போட்டிருவான்…. அதுவும் இல்லாம அவனுங்கள பார்த்து ஏதோ பெரிசா பண்ண போறாங்கன்னு தோணுது… ஒழுங்கா வா… ஓடி போயிரலாம்” என்று சுகுமார் தன் குரலை தாழ்த்தி அவளிடம் சொல்லி கொண்டிருக்க,

அவள் பார்வையோ அவர்கள் சாரதியை என்ன செய்ய போகிறார்கள் என்பதிலேயே ஆர்வமாய் இருந்தது.

“வீரா வா” என்று அதற்கு மேல் பொறுமையில்லாமல் அவள் கரத்தை பிடித்து இழுத்து கொண்டு அவன் செல்ல,

அவளோ பின்னோடு நடப்பவற்றை பார்த்து கொண்டே சென்றாள்.

அந்த ரவுடிகளோ கீழே கிடந்த சாரதியை  அவசரமாய் தூக்கி காரின் பின்பக்கம் போட்டு கதவை மூட,

“பெட்ரோலை ஊத்துங்க… காரோட வைச்சி கொளுத்திருவோம்” என்றான் அவர்களில் ஒருவன்!

அந்த வார்த்தை வீராவின் காதிலும் அழுத்தம் திருத்தமாய் விழ  அந்த நொடி அவள் கதிகலங்கி போனாள்.

உடனடியாய் சுகுமாரின் கரத்தை உதறியவள்,

“அந்த ஆளை உயிரோடு வைச்சி கொளுத்த போறாங்களா சுகுமாரு?!” உச்சப்பட்ச  அதிர்ச்சியோடு அவனிடம் அவள் தெரிவிக்க

“அய்யோ வீரா… நாம இங்க இன்னும் கொஞ்ச நேரம் நின்னோம்னா… நம்மலயும் அவனோட சேர்த்து வைச்சி கொளுத்திருவாங்க…?!” என்று சுகுமார் படபடத்தான்.

“போயா” என்று கடுப்பானவள்

எப்படியாவது அவர்களிடமிருந்து சாரதியை காப்பாற்ற வேண்டுமென நகத்தை கடித்து கொண்டு யோசிக்க,

“எப்படியோ போ… நான் வூட்டுக்கு போறேன்” என்று சொல்லி சுகுமார் செல்ல யத்தனித்தான்.

அவளோ அதற்குள் அவன் முன்பேக்கெட்டில் இருந்து பேசியை கைப்பற்றி கொண்டு அவசரமாய் முன்னே நடக்க,

“ஏய் என்ன பன்ற?” என்றவன் கேட்டு கொண்டே அவளை பின்தொடர்ந்தான்.

அதே சமயம் அந்த ரவுடி கூட்டம் காரில் பெட்ரோலை ஊற்ற போக,

அப்போது தூரத்தில் போலீஸ் சைரன் சத்தம் கேட்டு அவர்களை பதறடித்தது.

எல்லோரும் அதிர்ந்து அந்த சாலையை சுற்றுமுற்றும் பார்த்தனர்.

அப்போது அந்த ரவுடிகளின் தலைமையாய் இருந்த ஒருவன்,

“போலீஸ் வர்ற மாறி இருக்கு… போங்கடா… எல்லோரும் போய் ஒளிஞ்சிக்கோங்க” என்று ஆணையிட்டுவிட்டு அவனும் ஓரமாய் ஓதுங்கி நின்றான். 

அவர்களை கலங்கடித்த அந்த சைரன் சத்தம் வேறு எங்கிருந்தும் வரவில்லை. சுகுமாரின் கைப்பேசியிலிருந்துதான்.

வீராதான் அத்தகைய வேலையை செய்தாள்.

அது தெரியாமல் அவர்கள் சென்று மறைந்து கொள்ள,

வீராவோ துரிதமாய் அந்த கார் அருகில் ஓடி வந்தாள்.

சுகுமாரும் அப்போது அவளிடமிருந்து போஃனை பறிக்க ஓடிவர,

அவளோ பதட்டமாய் கார் கதவை திறந்து  சாரதியின் நிலையை பார்த்தாள். அவன் தலையில் ரத்தம் வடிய அப்படியே மயங்கி கிடந்தான்.

அந்த நொடி அவள் மனம் அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்றன படுதீவிரமாய் யோசிக்க,

அதை எப்படி செய்வதென்று  புரியாமல் அவள் குழம்பி கொண்டு நின்ற சமயம்

அங்கே மறைந்திருந்ந ரவுடிகள் வீராவையும் சுகுமாரையும்  பார்த்துவிட்டனர்.

அந்த ரவுடிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர்களை நெருங்கி வர,

சுகுமாருக்கு வெலவெலத்து போனது.

“போச்சு… உன்னால நானும் சேர்ந்து சாக போறேன்…” என்றவன் தலையிலடித்து கொண்டு அச்சம் கொள்ள,

அப்போது வீராவின் விழிகள் கார் ஸ்டியரிங்கின் அருகில் தொங்கி கொண்டிருந்த சாவியை பார்த்தது.

அவ்வளவுதான்!

அதற்கு பிறகு தான் என்ன செய்ய வேண்டுமென்பதை தெளிவாக தீர்மானித்து கொண்டவள் காரின் உள் அமர்ந்து கொண்டு,

காரை இயக்க முற்பட

அந்த ரவுடிகள் அவர்களை நோக்கி,

“ஏய்  அவனுங்கள பிடிங்க” என்று பயங்ரமாய் சத்தம் எழுப்பினர்.

அந்த கூட்டத்தினர் காட்டுமிராண்டிகளை போல அவர்களை தாக்க அதிவிரைவாய்  வர,

அந்த நொடி வீரா காரை ஸ்டார்ட் செய்துவிட்டாள்.

சுகுமாரு திருதிருவென விழித்து கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருக்க,

“அடிங்க.. ஏறுய்யா டோமரு” என்று திட்டியபடி கார் கதவை அவனுக்காக திறந்து விட்டாள்.

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அவன் கடைசி நேர பரபரப்போடு காரினுள்ளே ஏறி கதவை மூட,

மறுகணமே அந்த கார் காற்றில் பறந்து கொண்டு அந்த இடத்திலிருந்து விரைந்தது.

தன் உயிரையும் காப்பாற்றி கொள்ள வேண்டிய பதட்டத்தில் அவள் ஏதோ ஓர் படபடப்பில் அந்த காரை இயக்கிவிட,

அது எப்படி நடந்தது என்றெல்லாம் அவளுக்கே தெரியாது. விளையாட்டுதனமாய் அவள் கற்று கொண்ட அந்த விஷயம் அவள் வாழ்கையின் முக்கிய தருணத்தில் பயன்படும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.

எப்படி அந்த காரை இயக்குகிறாள் என்று இன்னும் அவளுக்கு புரியவில்லை. அவளே உணராமல் அவளின் கால்களும் கைகளும் செவ்வனே அந்த செயலை செய்து கொண்டிருந்தன.

எது நம்மை விட்டு சென்றாலும் நாம் கற்கும் திறமைகளும் அறிவும் மட்டும் நம்மை விட்டு விலகாது!

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு 
மாடல்ல மற்றை யவை”

அதைத்தான் பொய்யா மொழி புலவன் கற்பவை தவிர மற்ற ஏனைய செல்வங்கள் யாவும் நிலையற்றது என்றான்.

ஆனால் அத்தகைய நிலையற்ற செல்வங்கள் மீதி பற்றும் காதலும் கொண்ட சாரதிக்கு அந்த நிதர்சனத்தை அத்தனை சீக்கிரத்தில் புரிய வைத்துவிட முடியுமா என்ன?

அதனை அவன் உணர்ந்து கொள்ள  நீண்ட நெடிய பாதை ஒன்று அவனுக்காக காத்திருக்க,

அவனோ அந்த நொடி தன் உயிரே போனாலும் பரவாயில்லை என்றல்லவா கிடந்தான். அதுவும் எந்தவித தவிப்பும் படப்படப்பும் இன்றி!

அதற்கு காரணமில்லாமல் இல்லை! அவனுக்கே இந்த உலகத்தில் வாழ்வதற்கான எந்தவித அழுத்தமான பிடிப்பும் தேவையுமில்லை. அதனால்தான்!

மரணமே வந்தாலும் அவனுக்கு அதில் ஒன்றும் நஷ்டமில்லை. போராடும் வரை போராடிவிட்டான்.  அவன் விரும்பியமளவுக்கு பணத்தை சம்பாதித்து அவன் ஆசைப்பட்டவற்றை எல்லாம் திகட்ட திகட்ட அனுபவித்துவிட்டான்.

அவனின் இலட்சியமே பணக்காரனாக பிறக்காவிடிலும் பணக்காரனாகவே மடிய வேண்டும் என்பதுதான்!

அதுவுமே விரைவில் நடக்க போகிறதெனும் போது இங்கேயும் அவன் நஷ்டபடவில்லை. அதுவும் முதுமையை காணாமல் இளமையோடு மரணிப்பது கூட ஒருவித வரம்தானே!

ஆதலால் மரணத்தை கூட வா என்று அசாத்தியமாய் வரவேற்று தன் உயிரை கூட துச்சமாய் எண்ணி அதனை விடவும் அவன் தயாராகவே இருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் நம்மை ஆட்டிவிக்கும் விதி என்பது ஒரு சைக்கோவாயிற்றே!

அது யாரையும் அப்படி நிம்மதியாய் இருக்கவும்… இறக்கவும் விட்டுவிடாது.

சாரதிக்கு அவன் உயிரின் மதிப்பை  உணர்த்த,

விதியே வீரா ரூபத்தில் அவன் வாழ்கையில் நுழைந்தது.

காரை ஓட்டி கொண்டே வீரா சாரதியை திரும்பி பார்த்து கொண்டே வர,

அவனோ அசைவற்று ஒர் ஆழ்ந்து மீளா உறக்க நிலைக்கு போய் கொண்டிருந்தான்.

“ஆள் அவுட் போலயே” என்று  சுகுமார் சாரதியின் தேகத்தின் அசைவற்ற நிலையை பார்த்து கூற,

“அப்படியெல்லாம் இருக்காதுய்யா… நல்லா பாரு” என்று காரை ஓட்டி கொண்டே பதறினாள் வீரா!

“ஆளா பார்த்தா தெரியல… பிணமாட்டும் கிடக்கிறான… பூட்ட கேஸு” என்று சுகுமார் அலட்டி கொள்ளாமல் சொல்ல வீரா படபடப்பானாள்.

உயிரின் மதிப்பை ஆழமாய் உணர்ந்தவள் அவள். ஒரு நொடியில் தன் தாயை தவறவிட்டவள். அப்படியிருக்க இத்தனை போராடி அவன் உயிரை காப்பாற்ற முடியாமல் போவதா?!

அதை அவளால் ஏற்கமுடியவில்லை. அப்போது காரில் வைக்கப்பட்டிருந்த  தண்ணீர் பாட்டில் அவள் கண்ணில் பட,

அதனை கையிலெடுத்து “இத திற” என்று அந்த பாட்டிலை ஒற்றை கையில் பிடித்து கொண்டு

சுகுமாரிடம் உரைத்தாள்.

“இன்னா பண்ண போற” என்று  கேட்டு கொண்டே  அதனை திறந்து கொடுத்தான் அவன்!

மறுகணமே அவள் அந்த பாட்டிலின் தண்ணீரை சாரதியின் முகத்தில் சராலென்று அடிக்க,

சாரதி அதிர்ந்து மூச்சை வெளிவிட்டான்.

அப்போதே வீராவிற்கும் மூச்சு வந்தது. நிம்மதி பெற்றவள் காரை கவனமாக இயக்கி கொண்டே அந்த பாட்டில் தண்ணீரை அருந்த,

சுகுமார் அவளை யோசனையாய் பார்த்து,

“தெரியாமதான் கேட்கிறேன்… யாரிவன்னு இவனை போய் காப்பாத்த இவ்வளவு ரிஸ்க் எடுத்துக்கிற” என்று கேட்க,

“யாரா இருந்தா என்ன? அவனுக்கும் பொண்டாட்டி பிள்ளைங்க குடும்பமெல்லாம் இருக்கும்ல…பாவம்! இவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா… அவன் குடும்பத்துக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்… இவன் ஈஸியான செத்திருவான்… ஆனா அவனோட பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு நொடிக்கு நொடி சாவு” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் விழியோரம் நீர் கசிந்தது. அவள் அப்போது தன் தாயின் மரணத்தை எண்ணி வருந்த,

அவளுக்கு அப்போது தெரியாது!

அவள் யார் உயிரை காப்பாற்ற இந்தளவுக்கு போராடிகிறாளோ, அவனுக்காக இந்த உலகத்திலேயே அழ போகிற ஒற்றை ஜீவன் அவள் மட்டும்தான் என்று!

சுகுமாரோ அவள் மனநொந்து பேசிய வசனங்களையெல்லாம் கவனிக்காமல் அந்த ரவுடிகள் அவர்களை பின்தொடர்ந்து வருகிறார்களா என்று பார்க்க,

ஒரு பெரிய கார் அவர்கள் காரை வெறி கொண்டு துரத்தி கொண்டு வந்தது.

“வீரா சீக்கிரம் போ… அவனுங்க வரானுங்க” என்றவன் பதட்டப்பட,

வீரா அப்போது தன் உயிரை கையில் பிடித்து கொண்டு அந்த காரை முடிந்த வரை வேகமாய் இயக்க முற்பட்டாள்.

இரவு நேரம் என்பதால் சாலைகளும் அத்தனை வாகன நெரிசல் இல்லாமல் இருக்க, அந்த இரு கார்களும் காற்றையும் மிஞ்சும் வேகத்தில் பயணித்து கொண்டிருந்தன.

வீரா தன் பார்வையை சுற்றுபுறங்களில் அலசிக் கொண்டே வந்து,

கண்ணில் பட்ட ஓர் பரந்த மருத்துவமனை வளாகத்தில் காரை நுழைத்துவிட்டு பலமாய் ஹாரனை அழுத்தினாள்.

மருத்துவமனை உள்ளிருந்து ஆட்களை வருவதை பார்த்த மாத்திரத்தில் அவள் காரிலிருந்து இறங்க,

சுகுமாரும் உடனடியாய் இறங்கினான். இருவரும்  அவசர அவசரமாய் அந்த இடத்தை விட்டு அகன்று மருத்துவமனை வளாகத்தில் ஓர் ஓரமாய் வந்து மறைந்து கொள்ள,

அப்போது அந்த காரை நோக்கிஓடி வந்த நர்ஸ், காரின் பின் இருக்கையில் அடிப்பட்டு கிடந்த சாரதியை பார்த்து பதறிகொண்டு ஆட்களை அழைத்தாள்.

அதன் பின்னர் அவர்கள் ஸ்டெச்சர்  வைத்து சாரதியை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்ல,

வீராவின் மனம் நிம்மதி பெற்றது. தான் செய்ய நினைத்ததை செய்துவிட்டோம் என்ற நிம்மதி அது!

அதே நேரம் அந்த ரவுடிகள் மருத்துவ வளாகத்திற்குள் வர முடியாமல் வாசலிலேயே தயங்கி நின்று கொண்டிருக்க,

வீராவும் சுகுமாரும் எப்படியோ அவர்களின் கண்களில் சிக்காமல் பின்வாசல் வழியாக சென்று சாமர்த்தியமாய்  தப்பி சென்றுவிட்டனர்.

சுகுமாரோ வீடு வந்து சேரும் வரை  வீராவை வசைபாடி கொண்டே வர,

அவள் வீட்டு வாசலில் அடைந்த போது தன் பொறுமையிழந்து, “இப்ப எதுக்கு என்னை இந்த திட்டு திட்டிற?” என்று கேட்டு கோபமாய் முறைத்தாள்.

“பின்ன… கொஞ்சம் விட்டிருந்தா நம்மல துண்டு துண்டா வெட்டி  போட்டிருப்பானுங்க… எவனையோ காப்பாத்திறன்னு சொல்லி என் உயிரை பணயம் வைக்க பார்த்த… ” என்று புலம்பி தீர்த்தவனை பார்த்து,

“எதுக்கு இப்படி பயந்து சாகிற? அதான் தப்பிச்சிட்டோம்ல” என்று அமர்த்தலாகவே சொன்னாள்.

“சொல்லுவ… என் உசுருக்கு மட்டும் ஒண்ணுகிடக்கு ஒண்ணாயிருந்தா” என்று தீவிரமான முகப்பாவனையோடு அவன் கோபம் பொங்க, அவள் சத்தமாய் சிரித்தாள்.

“உன்னையெல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா?!” என்றவன் கடுப்பாய் கேட்க இன்னும் அதிமாய் சிரித்தவள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப,

“நீ பெரிய ஆளுதான்…. தலைவரை ஐஸ் வைச்சே சமாளிச்சிட்ட… ரவுடி பசங்கள கூட  அசால்ட்டா ஏமாத்திட்ட…   ஆனா என்னால முடியாதுப்பா…  நான்  பேஜாராயிட்டேன்” என்றவன் மிரட்சியோடு சொல்ல,

“பயந்துக்கிட்டே இருந்தா எதையுமே செய்ய முடியாது சுகுமாரு” என்றாள் வீரா!

“அட போம்மா… உசுரு போனா திரும்பி வருமா?!” அவன் பேச்சில் இன்னும் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட தாக்கம் மிச்சமிருக்க ,

அவளோ அவனை நிதானித்து பார்த்து பேச தொடங்கினாள்

“இத பாரு சுகுமாரு… சாவு எப்போ வேணா எப்படி வேணா வரலாம்… அத இப்பதான் இப்படிதான் வரனும்ல… மலையில இருந்து வுழுந்து பொழச்சவனும் இருக்கான்… ரோட்டில  தடுக்கி விழுந்து செத்தவனும் இருக்கான்…

சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன்.. நீ ரோட்டில நடந்து போயினே இருக்கும் போது வழில ஒரு டிரெயினேஜ்  திறந்திருந்து… நீ பாட்டுக்கு கவனிக்காம உள்ளே தவறி விழுந்துட்டா” என்றவள் சொன்ன நொடி சுகுமார் பதறி கொண்டு

“ஏய்ய்ய்ய்” என்று முறைக்க,

“டென்ஷனாவதே சுகுமாரு… நடக்கிறதைதான் சொல்றேன்… ஏன்… ஒடிற பஸ்ல போயினிருக்கும் போது கூட நீ படார்னு வீழ்ந்து பட்டுன்னு உயிர் போலாம் இல்ல”

“அடிப்பாவி” அவன் அதிர்ச்சியாகி,

“இல்லன்னா நீ சாப்பிடிற சாப்பிட்டில பல்லி விழுந்து”

“ஏய் போதும் நிறுத்து”

“கடுப்பாவதே… அப்படியெல்லாம் கூட சாவு வரலாம்னுதான் சொன்னேன்… ஆனா இதுக்குன்னு ரோட்ல நடக்காம இருப்பியா இல்ல பஸ்ல போவாம இருப்பியா இல்ல சோறுதான் துன்னாம இருப்பியா” என்றவள் பேசி கொண்டே போக,

“அம்மா தாயே… தெரியாம சொல்லிட்டேன்… என்னை உட்ரூ… நீ எக்கேடு கெட்டோ போ… இனி நான்  உன் பக்கம் தலை வைச்சே படுக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு திரும்பியவன்,

“சுகுமாரு… இனி நீ இவ கூட போனே…  உன்னை பொட்லம் கட்டி பரலோகம் அனுப்பிவிடுவா… பீ கேர்புஃல்”  என்றவன் புலம்பி கொண்டே தன் வீட்டை திறந்து உள்ளே புகுந்து கதவை தாளிட்டு கொண்டான்.

வீராவிற்கு அவன் புலம்பல்களை கேட்டு சிரிப்பு தாங்கவில்லை. சில நொடிகள் அங்கேயே சிரித்து கொண்டு நின்றவள் மெல்ல தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டே

தன் பேக்கெட்டில் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து பார்த்தாள்.

ஏதோ பெரிதாய் சாதித்த உணர்வு அவளுக்கு!

கண்களில் நீர் கசிய ஓர் ஆழ்ந்து பெருமூச்சொன்றை வெளிவிட்டு கொண்டாள்.

******
அதே நேரம் சாரதிக்கு மருத்துவர்கள் தீவீரமாய் சிகிச்சை அளித்து  கொண்டிருக்க,

அப்போது அவன் பேக்கெட்டில் இருந்த கைப்பேசியின் மூலமாக அவனின் காரியதரிசி கணேஷிற்கும் மருத்துவமனையில் இருந்து தகவல் சென்றது.

கணேஷ் பதறி கொண்டு மருத்துவமனையை வந்தடைய, சாரதிக்கு சிகிச்சை முடிந்து அன்றிரவு முழுவதும் மயக்கத்தில் கிடந்தவன் அடுத்த நாள் காலையில்தான் விழித்து கொண்டான்.

விழிப்பு வந்த மறுநொடியே இரவு நடந்த நிகழ்வுகளை பற்றி அவன் மனம் சிந்திக்க,

காரில் வந்து கொண்டிருந்த சமயம் அவனை ஒரு கூட்டம் வழிமறித்து தாக்கியது நினைவுக்கு வந்தது. அவர்களிடம் அவனும் தன்னால் இயன்றவரை போராட,

அப்போது  பின்மண்டையில் யாரோ அவனை தாக்கிய உணர்வு!

அந்த நொடி வலியோடு கீழே விழுந்த வரைதான் அவன் நினைவில் பதிவாயிருந்தது.

அதற்கு பிறகு யார் தன்னை அந்த ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி கொண்டு வந்து மருத்துவமனையில்  சேர்த்திருக்க கூடும் என்றெண்ணி குழம்பியவன்,

“ஏன் கணேஷ்?! யார் என்னை இந்த ஹாஸ்பெட்டில அட்மிட் பண்ணது” என்று வினவ,

“தெரியல சார்… யாரோ இரண்டு பேர் உங்கள காரோட கொண்டு  வந்து ஹாஸ்பெட்டில நிறுத்திட்டு ஒடிட்டாங்க” என்றான்.

“அப்படியா?! யார் அந்த இரண்டு பேர்?”  அதிர்ச்சியானான்.

“சரியா தெரியல.. சீசிடிவி புஃடேஜில பார்த்த போது இருபது இருபத்திரண்டு வயசு பசங்க மாறி தெரிஞ்சிச்சு” என்றதும் சாரதியின் புருவங்கள் நெறிந்தன.

அவன் ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்க, “சார்” என்று கணேஷ் அழைத்து அவன் சிந்தனையை தடைப்படுத்த

“சொல்லு கணேஷ்” என்று கேட்டபடி அவனை நிமிர்ந்து பார்த்தான் சாரதி!

“யார் உங்களை இப்படி ஆள் வைச்சி அடிச்சிருப்பா?” என்று கணேஷ் சந்தேகமாய் வினவ,

“தெரியலயே கணேஷ்… யாரா வேணா இருக்கலாம்… நம்ம என்ன ஒருத்தர் இரண்டு பேர் கிட்டயா நம்ம வேலையை காட்டியிருக்கும்… அது பெரிய லிஸ்ட்டே இருக்கும்… அந்த லிஸ்ட்ல இருக்கிற யவனாச்சுமா இருக்கும்… நீ நம்ம சைமன் கிட்ட விசாரிக்க சொல்லு… எவன் என்னை கொல்றளவுக்கு துணிஞ்சிருக்கான்னு நானும் தெரிஞ்சிக்கனும்… அப்பதான் அவனுக்கு நான் அதையே இரண்டு மடங்கா திருப்பி செய்ய முடியும்” என்று அமர்த்தலாகவே சொன்னாலும் அவன் கண்களில் ஆழமான வெறியிருந்தது

“ஒகே சார்… நான் சைமன்கிட்ட பேசிடுறேன்”

“அப்புறம் கணேஷ்… என்னை காப்பாத்தின அந்த இரண்டு பேர்… அவங்கள பத்தியும் விசாரிக்க சொல்லு… அவங்கள நான் பார்க்கனும்” என்றான் ஆவல் ததும்பிய விழிகளோடு!

“ஒகே சார் கண்டுபிடிச்சிடலாம்” என்று கணேஷ் சொல்ல

சாரதி அந்த முகம் தெரியாத நபரை எண்ணி மனதளவில் ரொம்பவும் ஆச்சர்யப்பட்டு கொண்டிருந்தான்.

பணம் மட்டுமே பிரதானம் என்று எண்ணி கொண்டிருந்தவனுக்கு இந்த உலகத்தில் பிரதிஉபகாரம் பார்க்காமல் உதவுபவர்களும் கூட இருக்கிறார்கள் என்பது 
வியப்பிற்குரிய விஷயம்தானே!

error: Content is protected !!