Aval throwpathi alla – 12

Aval throwpathi alla – 12

சாரதிக்கே சாரதி

சுகுமார் தயக்கத்தோடு வீராவின் வீட்டின் வாசலில் போய் நின்று தேடலாய் பார்வையை சுழற்ற,

அவள் உள்ளே இருந்தபடியே அவன் வருகையை கவனித்தவள்,

“அன்னைக்கு  என்னை அந்த துரத்து துரத்தின… இப்ப நீ இன்னாதுக்கு என் வூட்டு வாசல்ல வந்து நிற்கிற” என்று கேட்கவும் அவன் முகம் சுருங்கி போனது.

“ப்ச்… அன்னைக்கு இருந்த கோபத்தில ஏதோ இரண்டு வார்த்தை பேசிட்டேன்… அது இன்னாத்துக்கு இப்போ… அதை வுடு… நான் வேறு ஒரு முக்கியமான விஷயமா உன்கிட்ட பேசனும்” என்று சுகுமார் ஆர்வமாய் பேச ஆரம்பிக்க,

அவனை ஏற இறங்க குழப்பமாய் பார்த்தவள்,

“உன் பேச்சே ஒண்ணும் சரியில்லையே… இன்னா மேட்டரு?” என்று கேட்டு வாசல் புறம் வந்து அவன் முன்னே நின்றாள்.

“அன்னைக்கு நம்ம ஒருத்தனை காப்பாத்தி ஹாஸ்பெட்டில சேர்த்துக்கனும் இல்ல” என்று சுகுமார் ஆரம்பிக்க,

“ஆமா… அவனுக்கு என்ன?” என்றவளின் முகம் யோசனை குறியாய் மாறியது.

“எனக்கு அவன் போஃன் பண்ணி பேசினான் வீரா” ஆச்சர்யத்தோடு  சுகுமார் உரைக்க,

“பண்ணி” புருவங்கள் சுருங்கினாள்.

“நம்ம அவனை அன்னைக்கு காப்பாத்தினதுக்கு… அவனும் பதிலுக்கு ஏதாவது நமக்கு செய்யனும்னு ஆசைபடிறானாம்… அதான் நேர்ல வாங்கன்னு கூப்பிட்டான்”

“மெய்யாலுமா?!”

“ஆமா வீரா… அட்ரெஸ் கூட கொடுத்துக்கிறான்… வா நம்ம போய் பார்த்துக்குன்னு வந்திடலாம்” என்றவன் ஆர்வமாய் உரைக்க வீரா நம்பாமல் பார்த்தாள்.

“ஏதாச்சும் வில்லங்கமா இருக்க போவுதுய்யா… அவசரபடாதே” என்றவள் சொல்ல சுகுமார் மறுப்பாய் தலையசைத்து,

“அதெல்லாம் ஒரு வில்லங்கமும் இல்ல” என்க,

“ப்ச்… அதெப்படி சொல்ற?! நம்மலதான் அந்த ஆள் பார்க்கவேயில்லையே…  அப்புறம் எப்படி அந்த ஆளுக்கு  நம்மல தெரியும்” அவள் குழப்பமுற கேட்டாள்.

“என் போஃனை நீ அவன் கார்லதான் வுட்டுக்கிற… அதை வைச்சுதான் எனக்கு போஃன் பண்ணிக்கினான்” என்றான் சுகுமார்!

“ஓ!” என்றபடி வீரா லேசாய் தெளிவுபெற,

“வா வீரா! இரண்டு பேரும் பார்த்துக்கினு வந்திருவோம்…  சொல்ல மூடியாது… ஏதாச்சும் நல்ல அமௌன்ட் தேரும்… அப்படியே என் போஃனையும்  வாங்கினு வந்துக்கலாம்… இன்னா சொல்ற?!” வெகுஆர்வமாய் அவன் கேட்கவும்,

அவள் ஆழ்ந்த யோசனையோடு மௌனமானாள்.

“இன்னாத்துக்கு இப்ப யோசிக்கிற…  அன்னைக்கு எம்மா ரிஸ்க் எடுத்து அந்த ஆளை நாம காப்பாத்துக்கினோம்” என்றதும்,

“எது? நாம காப்பாத்துனுமோ?!” அவனை கூர்மையாய் பார்த்து கேட்டாள்.

“சரி… நாம இல்ல… நீதான்… ஆனா நான் உன் கூடதானே இருந்தேன்”

“கிழிச்ச… உட்டா நீ என்னை விட்டு ஓடி போயிருப்ப” என்றவள் சொல்ல முகம் சுணங்கியவன்,

“என்ன வீரா?  இப்படி பேசிற… நம்ம என்ன… அப்படியா பழகினோம்” என்றான்.

“பார்றா!” என்று அவனை வீரா எகத்தாளமாய் பார்த்து சிரிக்க,

“இப்ப இன்னா சொல்ற… வர்றியா இல்லியா?!” பொறுமையிழந்து கேட்டான் சுகுமார்!

அவள் தாடையை தடவி கொண்டு, “வர்றேன்… ஆனா” என்றவள் இழுக்க,

“இன்னாத்துக்கு இப்ப இவ்வளவு யோசிக்கிற… இப்ப இருக்கிற நிலைமையில உனக்கும் காசு வேணும்தானே!” என்று கேட்டான்.

“ப்ச் வேணும்தான்”

“அப்புறம் என்ன?”

“இல்ல… பொம்பளன்னாலே எல்லாருக்கும்ம் ஒரு இளக்காரம்தான்… இதுல நான்தான் அந்த ஆளை காப்பாத்தினன்னு சொன்னா… அவன் நம்புவானா? கப்ஸா உடுறோம்னு நினைக்க மாட்டான்”

சுகுமாரும் அவள் சொன்னதை பற்றி தீவிரமாய் யோசித்துவிட்டு,

“ஏ வீரா… நீ பேசாம… அன்னைக்கு மீட்டிங்காக போட்டிருந்த கெட்டப்பிலயே வந்திரேன்… நானும் உன்னை வீரான்னுதான் அந்த ஆளுகிட்ட சொன்னேன்” என்க,

“அப்படிங்கிற” அவள் யோசனைகுறியோடு வினவ,

“ஆமா… தலைவரே கண்டுபிடிக்கல… இவன் இன்ன… அசால்ட்டு” என்று சுகுமார் சொல்ல

வீராவுக்கும் அதுதான் சரியென்று பட்டது. ஆதலால் அவளும் ஆண் வேடத்தில் சாரதியின் வீட்டிற்கு செல்ல தயாரானாள்.

அவர்கள் சாரதியின் வீட்டிற்கு வழி கேட்டு கொண்டே நடந்து செல்ல,

அப்போது அந்த சாலை வழியாக அவர்களை கடந்து சென்ற சில நவநாகிரிக உடையணிந்திருந்த கல்லூரி பெண்கள் எல்லாம்  வீராவை பார்த்து கொண்டே சென்றனர்.

அதில் ஒரு பெண் கையசைத்து வீராவை  பார்த்து சமிஞ்சை செய்ய வீராவும் அவர்கள் பின்னோடு செல்ல பார்த்தாள்.

“வீரா… வழி இந்த பக்கம்” என்றான் சுகுமார்!

“இரு சுகுமார்… அந்த பொண்ணு என்னை கூப்பிடுது… நான் போய் பேசிட்டு வந்திடுறேன்” அசடு வழிந்தாள் அவள்!

“இன்னாத்துக்கு அந்த பொண்ணு உன்னை கூப்பிடுது”  என்று சுகுமார் புரியாமல் கேட்க,

“நான் பார்க்க சும்மா ஒசரமா கெத்தா இருக்கேன் இல்ல… அதான்” என்று வீரா பேசி கொண்டே அந்த பெண்களை பார்த்து கண்ணடிக்க அந்த பெண்களுக்கிடையில் பெரும் கூச்சலே எழுந்தது. 

“நீ என்ன லூசா?” சுகுமார் தாங்க முடியாத கடுப்போடு கேட்க,

“அங்க பாரு சுகுமாரு! எல்லா செம ஹை கிளாஸ் பிகரா இருக்கு… நான் போய் பேசி ஒரு பிட்ட போட்டு  வந்திருவா” என்றதும் சுகுமார் தலையிலடித்து கொண்டு கோபமாய் முறைத்தவன்,

“பிட்டை போட்டு வர்றியா? நீ என்ன கேரக்டராவே மாறிட்டியா?!” என்று கேட்க

“பின்ன….நான் எந்த கேர்க்டர் பன்றேனோ அந்த கேரக்டராவே மாறிடுவேன்… அது வீரா” என்று காலரை தூக்கிவிட்டு தன்னைத்தானே மெச்சி கொண்டாள்.

“நீ பன்றது உனக்கே கொஞ்சம் ஒவரா இல்ல”

அவனை எரிச்சலாய் பார்த்தவள்,

“பொறாமை ய்யா உனக்கு… எல்லா பொண்ணுங்களும் என்னையே பார்க்குதுன்னு” என்க,

“சத்தியமா உன் கூட என்னால முடியல… இன்னும் இரண்டு நாள் உன் கூட நான் சுத்தின.. என்னை லூசாக்கி சட்டையை கிழிச்சிக்கின்னு ரோடு ரோடா அலைய விட்டிருவ” என்று கடுப்பானான் சுகுமார்!

“தோடா! என் கூட சுத்துக்கின… உனக்கு கிறுக்கி பிடிச்சிருமா?… இல்லன்னா மட்டும் சார் ரொம்ப தெளிவு”

இவர்கள் இப்படி ஏறுக்கு மாறாய் பேசி கொண்டே,

சாரதியின் வீட்டை அடைந்தனர்.

சுகுமாரோ அந்த பங்களாவின் வெளிபுறத்தை பார்த்தே பிரம்மித்து   நிற்க,

“என்ன சுகுமாரு… இந்த பங்களாவா?!” என்று வீராவும் வியப்போடு வினவினாள்.

கதவருகில் இருந்த தங்க நிற பலகையில் ‘சாரதி இல்லம்’ என்றிருப்பதை பார்த்த சுகுமாரு அதனை உறுதிபடுத்தி கொண்டு காவலாளியிடம் பேச்சு கொடுக்க,

“சத்தியமா இந்த பங்களாதானா சுகுமாரு?” என்று வீரா வியப்பு அடங்காமல் மீண்டும் கேட்டாள்.

“இந்த பங்களாதான்” என்றவன் உறுதிப்படுத்த,

அதற்குள் காவலாளி விவரங்களை கேட்டறிந்து அவர்களை உள்ளே விட சொல்லி உத்தரவு வரவும்,

வாயிற் கதவை திறந்து அவர்களை  அனுமதித்தான்.

இருவரும் அந்த வீட்டின் முழு கட்டமைப்பை பார்த்து பிரமித்தபடியே உள்ளே நடக்க,

“ரொம்ப வாய பிளாக்காதே… ஈ உள்ளே போயிட போகுது” என்று வீரா சுகுமார் முகபாவனை பார்த்து நக்கலடித்து  சிரித்து கொண்டே நடந்தாள்.

அவள் சொல்வதை கவனியாதவனாய் அந்த பங்களாவை தன் பார்வையாலயே விழுங்கி விடுவது போல் பார்த்து கொண்டு வந்தவன்,

“எம்மா பெரிய பங்களா … தோட்டம்… நீச்சல் குளம்… யம்மா… இன்னா வாழ்கைடா… ப்ச்… நம்மெல்லாம் வாழ்றது பேரு வாழ்கையா… வாழ்ந்தா இப்படி வாழனும்” என்றவன் சொல்லி முடிக்க வீராவின் முகம் கோபமாய் மாறியது.

“நீயே இன்னாத்துக்கு நம்மல குறைச்சி பேசிக்கிற… எங்க இருந்தா என்ன? நம்ம நிம்மதியா சந்தோஷம் வாழுறோம்ல… அது மேட்டரு” என்றவள் சொல்ல

“நீ என்ன சொன்னாலும் சரி… ஹை கிளாஸ் ஹை கிளாஸ்தான்… லோ கிளாஸ் லோ கிளாஸ்தான்” என்றான் சுகுமார் ஏக்கபெருமூச்செறிந்து!

இவ்விதம் பேசி கொண்டே அந்த வீட்டின் நுழைவாயிலை கடந்து உள்ளே வந்தவர்கள்

முகப்பறையின் நடுவில் நின்று  அந்த வீட்டை மொத்தமாய் அளவெடுப்பது போல் சுற்றி பார்த்தனர். இருவருக்குமே கொஞ்சம் தலைசுற்றிதான் போனது அந்த வீட்டின் ஆடம்பர தோற்றத்தை பார்த்து!

அந்த நொடி படிக்கெட்டில் ஸ்டிக்கை ஊன்றியபடி இறங்கி வந்த சாரதி அவர்களை நோக்கி, “வாங்க உட்காருங்க” என்று உபசரணையாய் அழைக்க,

வீரா சுகுமாரின் பார்வை அப்போதே சாரதியின் புறம் திரும்பியது.

சாரதி முன்னே நடந்து வர பின்னோடு கணேஷும் அவனிடம் சில தகவல்களை சொல்லி கொண்டே நடந்து வந்தான்.

இருளில் அன்று அவன் மயக்கத்தில் கிடந்த போது அவள் பார்த்த முகம்!

ஆனால் அன்றைய தினம் அந்தளவுக்கு ஆழமாய் அவன் முகம் அவள் நினைவில் பதியவில்லை. இன்றுதான் அவனை நிதானித்து தெளிவாய் பார்த்தாள்.

அவள் வாழ்கையையே முற்றிலுமாய் மாற்ற போகும் அவனை!

ஸ்டிக்கின் உதவியோடு நடந்து வந்தாலும் அவன் நடையிலிருந்து கம்பிரமும் நிமர்வும் கொஞ்சமும் குறையவில்லை. அதுவும் அவனின் மிடுக்கான தோரணையும் கட்டுடலான தேகமும்  பெண்களை இயல்பாகவே கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது எனும் போது வீரா மட்டும் விதிவிலக்கா என்ன?

சராசரியான பெண்களின் ஆசபாசங்களை உணர்வுகளை கொண்டவள்தானே அவளும்! லேசாய் அவள் மனமும் நிலைதடுமாற

“ஆளு சும்மா செமயா இருக்கான்” என்று சற்றே பொறாமை தொனியில் சுகுமார் அவள் காதோடு உரைக்கவும் வீரா சுதாரித்து கொண்டாள்.

அதற்குள் சாரதியும் படியிறங்கி வந்திருந்தான். அவனுக்கும் அவர்களின் தோற்றத்தையும் வயதையும் பார்த்து அளவில்லாத ஆச்சர்யம்!

இவர்கள் செய்த செயலுக்கும் இவர்களுக்குமே சம்பந்தமில்லை என்ற எண்ணத்தோடு இருவரையும் பார்த்தவன்,

“உங்க இரண்டு பேர்ல சுகுமார் யாரு? வீரா யாரு?” என்று சந்தேகித்து கேள்வி எழுப்ப சுகுமார் முகமலர்ந்து,

“நான்தான் சார் சுகுமாரு… இவ வீரா சே! இவன் வீரா” என்று பதட்டத்தோடு அறிமுகம் செய்ய வீரா சுகுமாரை பார்த்து ஒரு முறை முறைத்தாள்.

சாரதி முறுவலித்து, “நான் சாரதி” என்று இயல்பாய் தன் கரத்தை நீட்ட இருவருமே வியப்படைந்தனர்.

 புரட்சியாளர்கள் என்னதான் இந்த சமூகத்தில் சமுத்துவத்தை பற்றி  பேசினாலும் மேல்தட்டு மக்கள் அடித்தட்டு மக்களை தீண்டதகாதவர்களாக பார்ப்பது இன்றும் மாறாது ஒன்று!

அப்படியிருக்க சாரதி அவர்களிடம் கைகுலுக்க இயல்பாய்  தன் கரத்தை நீட்டவும் அவர்கள் தட்டுதடுமாறி சற்று யோசித்தனர்.

சாரதி தன் முறுவல் மாறாமல் சுகுமாரிடம் கரத்தை நீட்டி கொண்டு காத்திருக்க வீரா சுகுமாரிடம், “யோவ் கை கொடுய்யா” என்று மெலிதாய் உரைக்க,

சுகுமார் வியர்த்து சில்லிட்டிருந்த தன் கரத்தை சட்டையில் அழுந்த துடைத்து கொண்டு சாரதியிடம் கை குலுக்கினான்.

வீராவிடமும் சாரதி தன் கரத்தை குலுக்க அந்த நொடி அவனின்  உணர்வுகள் வேறெதோ சொல்லியது.  அவன் மூளை ஒன்றையும் பார்வையும் ஒன்றையும் முரண்பட்டு சொல்ல அவன் சந்தேகமாய் அவள் தோற்றத்தை ஊடுருவி பார்த்தான்.

வீரா ஒருவாறு அவன் எண்ணத்தை கணித்து கொண்டவள்,

“பரவாயில்ல சார்… இவ்வளவு சீக்கிரம் நல்லாயிட்டீங்க… அன்னைக்கு நீங்க இருந்த நிலைமை பார்த்து பிழைச்சுக்குவீங்களா சந்தேகமா இருந்துச்சு” அவள் கனிரென ஆண் குரலில் பேசிய விதத்தில் சாரதிக்கு அவன் சந்தேகம் அர்த்தமற்றது என்று  தோன்ற அந்த சந்தேகத்தை ஒதுக்கி வைத்து

இயல்பு நிலைக்கு திரும்பினான்.

சாரதி இருவரையும் பார்த்து புன்னகையிதத்து, “சரி வாங்க… உட்கார்ந்து பேசுவோம்” என்று சோபாவில் அமர போனவன் அங்கிருந்து டீபாயில் அவன் ஸ்டிக் இடிப்பட்டு தடுமாற,

“பாத்து சார்” என்று அவன் கரத்தை பற்றி கொண்டாள் வீரா!

கணேஷிற்கு இந்த காட்சியை பார்த்ததும் தன் பாஸ் வீராவை என்ன சொல்ல போகிறாரோ என்று அச்சம் ஏற்பட்டிருக்க,

சாரதிக்கு அந்த நொடி கோபமோ வீம்போ தலைதூக்கவில்லை.

மாறாய் யாரென்றே தெரியாத தான் தடுமாறி விழ போனதும் பதறி கொண்டு தாங்கி கொள்ள வந்த வீராவின் குணநலனை பார்த்து அவனுக்கு மரியாதையே பிறந்தது.

“தேங்க்ஸ்… நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லியபடி அவன் தன்னை நிலைப்படுத்தி கொள்ள,

வீரா விலகி வந்து நின்றாள். கணேஷ் ஆச்சர்யம் குறையாமல் சாரதியை பார்க்க,

அவன் அமர்ந்து விட்டு தயக்கமாய் நின்றிருந்தவர்களை,

“ஏன் இப்படி நிற்கிறீங்க? உட்காருங்க” என்றான்.

ஆனால் வீராவும் சுகுமாரும் தயங்கியபடி, “இருக்கட்டும் சார் பரவாயில்ல” என்க,

“இப்ப நீங்க உட்காரலன்னா… நானும் எழுந்து நின்னுக்குவேன்…. பரவாயில்லையா?!” என்றவன் இறுக்கமாய் கேட்கவும் இருவரும் உடனடியாய் சோபாவின் முனையில் சற்றே தயக்கமாய் அமர்ந்து கொண்டனர்.

அந்த வீடும் அந்த வீட்டின் ஆடம்பரதன்மையும் என்னவென்று சொல்ல முடியாத பதட்டத்தை அவர்களுக்கு புகுத்தியிருக்க,

சாரதியும் அவர்களின் எண்ணங்களை ஒருவாறு கணித்து கொண்டான்.

“ஏன் இப்படி இரண்டு பேரும் சங்கோஜ படறீங்க? கொஞ்சம் நார்மலா இருங்க” என்றவன் சொல்ல,

“எங்களுக்கு இப்படியெல்லாம் பார்த்தே பழக்கமில்ல சார்? அதுவும் இந்த வூடு… நீங்க… அல்லாத்தையும் பார்த்ததும் கொஞ்சம் மெர்ஸலாயிட்டும்” என்று மனதில் உள்ளதை சுகுமார் அப்படியே வெளிப்படுத்த,

சாரதி முறுவலித்து அவன் பேச்சை கேட்டு  கொண்டிருந்தான்.

அதே நேரம் சாரதியின் பார்வை வீராவை நோக்க அவளோ அங்கே மாட்டியிருந்த சாரதியின் கம்பீரமான புகைப்படத்தை புருவங்கள் நெறிய பார்த்து கொண்டிருந்தாள்.

அதுவும் அவன் தோற்றத்தில்  தனித்து ஆளுமை செய்த அவனின் கூரிய பார்வையில் அவள் காந்தமாய் ஈர்க்கப்பட்டிருக்க,

‘என்ன கண்ணுய்யா !!’ மனதிற்குள் சொல்லி வியந்து கொண்டவளுக்கு என்னதான் ஆணின் ரூபத்தில் இருந்தாலும் அவளின் பெண்மை அவளையும் மீறி எட்டி பார்த்து கொண்டிருந்தது.

அதே நேரம் சாரதி கோபமாக, “முத்த்த்த்த்து” என்று சமையல்காரனை தன் கனிர் குரலில் கத்தி அழைக்க,

அந்த நொடி வீராவின் எண்ணங்கள் அதிர்ச்சியில் தடம் புரண்டன.

முத்து திணறடித்து கொண்டு அவன் முன்னே வந்து நிற்க,

“வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்கன்னு தெரியல… காபி கூட போட்டு கொண்டு வராம… அப்படி என்ன கிழிச்சிட்டிருக்க உள்ள… வந்தவங்களுக்கு காபி கொடுத்துட்டு டிபன் ரெடி பண்ணு” என்று சாரதி சீற்றமாய் பேசி முத்துவை மிரட்டிய விதத்தில்

வீராவுக்கு அவன் மீது கொண்டிருந்த அபிப்பிராயம் லேசாய் தாழ்ந்து போனது.

வீரா அப்போது சாரதியிடம், “அதல்லாம் இன்னாத்துக்கு சார்… வேணாம்… நாங்க கிளம்பிறோம்” என்க,

“நோ… நீங்க இரண்டு பேரும் இருந்து சாப்பிட்டுதான் போகனும்” என்று அதிகாரமாய் உரைத்தான்.

அவனின் வார்த்தைகளை மறுத்து பேச முடியாமல் வீராவும் சுகுமாரும் தயங்கி ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,

“சரி… நீங்க இரண்டு பேரும் என்ன பன்றீங்க?  உங்க பேஃமிலி மெம்பர்ஸ்… இதை பத்தியெல்லாம் சொல்லுங்களேன்” என்று சாரதி ஆர்வமாய் வினவ,

“இன்னாத்த பேஃமிலி… சின்ன வயசிலயே அம்மா ஓடி போச்சு… அப்பன் என்னை உட்டு வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கின்னு போயிட்டான்… என் ஆயாதான் என்னை வளர்த்துச்சு… அப்புறம் அதுவும் ஒருநாள் செத்து போச்சு… இப்போ ஏதோ கிடைக்கிற வேலையில வர காசுல துன்னுக்குனு கிடக்கிறேன்… அப்படியே போவுது” என்று சுகுமார் சலித்து கொண்டு அவன் வாழ்கையை பற்றி சொல்லவும்

சாரதிக்கு அப்போது அவனின் இளமை காலம் கண் முன்னே நிழலாடியது.

சாரதி பின்னர் வீராவை பார்த்து, “நீ வீரா” என்று கேட்க,

“எங்க வூட்ல… நான் இரண்டு தங்கசிங்க… அவ்வளவுதான்” என்று சுருக்கமாய் அவள் சொல்லி முடிக்க,

“அப்பா அம்மா இல்லையா?!” என்று சாரதி தயக்கமாய் கேட்டான்.

வீராவின் விழிகள் அந்த நொடியே கண்ணீரை தேக்கிவிட பட்டென துடைத்து கொண்டவள்,

“அ.. ம்.. மா… இருந்துச்சு… மூணு மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்ஸிடென்ட்ல செத்து போச்சு” என்று வேதனை நிரம்ப சொல்லி கொண்டிருந்தவள் மேலும்,

“அப்… ****” அந்த வார்த்தையை சொல்ல பிடிக்காமல் நிறுத்தி கொண்டவள் பின் அவளை அறியாமல் ஒரு இழிவான சொல்லை வாய்க்குள்ளேயே முனகினாள்.

அவள் வாயசைவை உணர்ந்து அதிர்ச்சியான சாரதி, “என்ன?” என்று கேட்கவும்,

“அது… அம்மா செத்ததும் அந்த மனுஷன் சொல்லிக்கா கொள்ளிக்காம எங்கேயோ போயிட்டாரு” என்று சமாளித்துவிட்டாள்.

வீரா சொல்ல முடியாததை எல்லாம் அவள் விழிகள் அப்பட்டமாய் பிரதபலிக்க அவள் வெகுசாமர்த்தியமாய் தலையை குனிந்து தன் முகத்தை மறைத்து கொள்ள,

ஏனோ சாரதிக்கு அவனின் வாழ்கை துயரங்களோடு அவர்கள் வாழ்கையையும் ஓப்பிட்டு பார்க்க தோன்றியது. அதனாலேயே அவன் மனதின் ஓரத்தில் அவர்களின் மீது கரிசனம் பிறந்துவிட்டது.

அவர்கள் மூவரும் பேசி கொண்டிருக்கும் போது முத்து காபியை எடுத்து வந்தவன் பின் உணவும் தயாரித்து எடுத்து வந்தான்.

வீராவும் சுகுமாரும் மறுதலித்தும் சாரதி விடாமல் அவர்களை சாப்பிட அமர வைத்தவன் அவர்களோடு பேச்சு கொடுத்து கொண்டே அவனும் உணவருந்தினான்.

“ஏன் சுகுமார்?… பேசாம நீ டீ நகர்ல இருக்க என்னோட சாரதி டெக்ஸ்டைல் ஷாப்ல வேலைக்கு சேர்ந்திறியா?” என்றவன் கேட்க,

சுகுமாருக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.

அவன் வீராவை பார்க்க, அவளும் பதில் பேச முடியாமல் வியப்புற்றிருக்க,

சாரதி மேலும், “என்ன சுகுமார் ஒகேதானே?!” என்று கேட்டான்.

“சார்! அந்த கடை உங்குள்தா ?!” என்று சுகுமார் அதிசயித்து கேட்கவும்  கணேஷ் அவனிடம்,

“அது தெரியாமலா இவ்வளவு நேரம் சார்கிட்ட பேசிட்டிருந்தீங்க” என்றான். 

“சத்தியமா தெரியாது சார்” என்று சுகுமார் சொல்ல,

“அதெல்லாம் பரவாயில்ல… சுகுமார்… நீ வேலைக்கு சேர்ந்துக்கிறியா?!” என்றதும் சுகுமார் வியப்போடு,

“நான் என்னவோ நினைச்சு இங்கே வந்தேன் சார்… ஆனா நீங்க அதுக்குமேல செஞ்சிட்டீங்க… தேங்க்ஸ் சார்” என்றான்.

“நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்… அன்னைக்கு அத்தனை ரவுடிங்களுக்கு மத்தியில உங்க உயிரை பணயம் வைச்சி என்னை காப்பாத்தியிருக்கீங்க… அதுவும் நான் யார் என்னன்னு தெரியாம பிரதி பலம் எதிர்பார்க்காம… இன்னைக்கு காலகட்டத்தில அதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்… அதுக்கு பணமா கொடுக்கிறதை விட வேலையா கொடுத்தா உங்களுக்கு பயன்படும்னு யோசிச்சிதான்… இப்ப உங்க தேவையும் அதுதானே!” என்றவன் விவரமாய் சொல்ல சுகுமார் நெகிழ்ச்சியோடு,

“அன்னைக்கு நான் எதுவுமே செய்யல சார்… எல்லாம் வீராதான்” என்றவன் அவள் புறம் கைகாட்டினான்.

சாரதி அப்போது வீராவின் புறம் திரும்பி யோசித்தவன்,

“உனக்கு சம்மதம்னா… நீ என் பெர்ஸன்ல்
டிரைவரா வேலைக்கு சேர்ந்திரு” என்றவன் சொல்ல,

அத்தனை நேரம் வியப்பு குறியோடு இருந்த… சுகுமார் வீராவின் முகங்கள் இப்போது அதிர்ச்சி குறியோடு மாறியது.

அப்போது சாரதி உணவு முடித்து கைகளை அலம்பி கொண்டே,

“ஒண்ணும் யோசிக்காதே வீரா… நல்லா ஸேலரி தர்றேன்… உன்னை மாதிரி ஒரு தைரியசாலியான துருதுருப்பான ஆள்… என் கூட இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று சாரதி தன் முடிவை வீராவிடம் அழுத்தமாய் புரிய வைக்க,

“வீராவால?!” என்று சுகுமார் ஏதோ பேச  வந்த சமயம் வீரா இடைமறித்து,

“சரிங்க சார்… நான் செய்றேன்” என்று தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

கடலில் தத்தளிக்கும் ஒருவனுக்கு சிறியதாய் ஒரு மரகட்டை கிடைத்தாலும் அதை பிடித்து கொண்ட உயிரை காப்பாற்றி கொண்டுவிட மாட்டோமா என்று தோன்றுமில்லையா?

அந்த நிலையில்தான் இப்போது வீராவும் இருந்தாள்.

அப்படியிருக்க அதுவாக தேடி வரும் வாய்பை அவள் எந்த காரணம் சொல்லியும் தட்டுகழிக்க விரும்பவில்லை.

அதுவும் அவள் மனதை பாதித்த விஷயங்கள் இந்த சமூகத்தில் பெண்ணாய் வலம் வருவதை விடவும் ஆணாய் வலம் வருவதில் பாதுகாப்பு என்ற ஒரு எண்ணம் அழுத்தமாய் அவளுக்குள் பதிவாகியிருக்க,

அவள் எடுத்த அந்த முடிவினால் வர போகும் எந்தவித எதிர்வினை பற்றியும் அவள் அப்போது யோசிக்கும் நிலையில் இல்லை.

அவள் வாழ்கையையே புரட்டிபோட போகும் அந்த முடிவை நொடி நேரத்தில் எடுத்து விட்டாள் என்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

சாரதிக்கே சாரதியாய்

இன்று சாரதிக்கு ஓட்டுநராக பணிப்புரிய போகிறவள் நாளடைவில் அவன் பாதையையும் மாற்ற போகிறவளாய் மாற போகிறாள்.

(இந்த ஸ்டோரியோட முதல் இன்ட்ரோல What is sHe ன்னு ஒரு வரி கொடுத்திருப்பேன். அந்த வார்த்தையின் சூட்சமம் வாசகர்களுக்கு இப்போது பிடிபிட்டிருக்குமே!)

error: Content is protected !!