மோகினி பிசாசு
வீரா சாரதியை பார்வையிட்டபடியே காரை ஓட்டி கொண்டு வர,
அவனின் சிந்தனையோ பார்வையோ அங்கில்லை. மாறாய் எங்கேயோ தூரமாய் வெறித்தபடி சிலையாய் சமைந்திருந்தான்.
அப்படியென்ன ஆழமான சிந்தனை அவனுக்கு என்று அவள் யோசித்தபடி அவனை பார்க்க,
அப்போது அவன் கரத்திலிருந்த சிகரெட் துண்டு கரைந்து அவன் விரலை பதம் பார்க்க காத்திருந்தது.
“சார்… சார்… சார்” என்றவள் பதட்டமாய் அழைக்க,
அவன் கவனம்தான் அங்கில்லையே!
அவள் அழைப்பிற்கு அவன் துளிகூட செவிசாய்க்கவில்லை.
அவனுக்கு எடுத்துரைக்க நேரமில்லாமல் அவளே அவன் கரத்தை தட்டிவிட,
அந்த சிகரெட் துண்டு ஜன்னல் வழியாக வெளியே விழுந்தது.
அவன் அவள் செய்கையில் காரணம் புரியாமல் சீற்றமாய் அவள் புறம் திரும்பி,
“யாரை கேட்டு நீ என் சிகரெட்டை தட்டிவிட்ட… என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசில ?” என்று ஆக்ரோஷமாய் கேட்டான்.
“டென்ஷனாவுதீங்க சார்… சிகரெட் எரிஞ்சி உங்க கையை சுட்டிர போதுன்னுதான்” என்றவள் சொல்ல அவன் கோபம் சரசரவென இறங்கியது.
அவளின் அக்கறையில் நெகிழ்ந்து அவளை அவன் வியப்பாய் பார்க்க
அவள் விழிகளோ சாலை மீது பதிந்திருந்தது.
அவனும் அப்போதுதான் கார் செல்லும் வழியை கவனித்து,
“இப்ப எங்க போயிட்டிருக்க?” என்று சந்தேகமாய் வினவ,
“உங்க வீட்டுக்குதான் சார்” என்று சொல்லி அவனை தயக்கமாய் பார்த்தாள்.
“நான் உன்னை வீட்டுக்கா போக சொன்னேன்”
“இல்ல சார்… எங்கேயாச்சும் போன்னு… சொன்னிங்களா… அதான்!” என்றவள் தயக்கத்தோடு உரைக்க,
“அப்படியா சொன்னேன்” அவன் நெற்றியை தேய்த்து கொண்டு குழம்பினான்.
“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள்
காரை ஓட்டி வந்து அவன் வீட்டின் பிரமாண்டமான வாசலிற்குள் கொண்டு வந்து நிறுத்தினாள்.
அவன் மறுகணமே விறுவிறுவென எதுவும் பேசாமல் இறங்கி சென்றுவிட,
தெய்வானை அவன் வருகையை பார்த்து ஓதுங்கி நின்று கொண்டார்.
வீரா காரிலிருந்து இறங்கி, ‘என்னாச்சு இந்த ஆளுக்கு?’ என்று சிந்தித்தபடி நிற்க,
“டே தம்பி! இங்க வா” என்று தெய்வானை வீராவை ரகசியமாய் கையசைத்து அழைத்தார்.
“இன்னா மாமி?” என்று கேட்டு கொண்டே அவர் அருகில் வீரா வரவும்,
“ஏன்டா அம்பி! அவன் மூஞ்சி ஏன் இஞ்சி தின்ன குரங்காட்டுமா இருக்கு?” என்று கேட்டுவிட,
“அய்யோ மாமி! சும்மா இருங்க” என்றவள் மிரட்சியோடு அவன் சென்றுவிட்டானா என்ற திரும்பி நோக்கினாள்.
“எல்லா அந்த கடன்காரன் போயிட்டான்… நீ விஷயத்தை சொல்லு!” என்றவர் கேட்க,
“எனக்கும் ஒண்ணும் தெரியல மாமி… ஆனா ஏதோ பிரச்சனை… அது மட்டும் தெரியுது” என்றாள்.
“அவன்தான் எல்லோருக்கும் பிரச்சனை கொடுப்பான்… அவனுக்கே பிரச்சனையா?!” தெய்வானை களிப்படைய,
“உங்களுக்கு ஏன் மாமி அவர் மேல இவ்வளவு காண்டு… அதுவும் அவர் வீட்டிலேயே இருந்துக்கின்னு” என்றவள் கேட்கவும் அவர் உக்கிரமானார்.
“ம்க்கும்… எனக்கென்ன ஆசையா இங்க இருக்க… அவன்தான் நாங்க இருந்த வீட்டை எழுதி வாங்கிட்டான்… கடன்காரன்” என்று தெய்வானை விரல்களை மடக்கி அவனுக்கு சாபம் கொடுக்க தொடங்க,
வீரா சாரதியை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
எல்லா உறவுகளும் இருந்தும் தனக்கு யாருமில்லை என்றவன் சொன்னதை அப்போது நினைவுகூர்ந்தவளுக்கு அவனின் உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவே முடியவில்லை.
வீரா மௌனமாயிருப்பதை தெய்வானை சாதகமாக எடுத்து கொண்டு சாரதியின் பழக்கங்கள் குறித்து தாறுமாறாய் விமர்சிக்க,
அவளோ அவற்றையெல்லாம் கேட்டு வியப்படையவோ அதிர்ச்சியடையவோ இல்லை.
அவள்தான் அவன் சுயரூபத்தை அவள் கண்ணெதிராகவே பார்த்துவிட்டாளே!
ஆனால் அவனை குறித்து அவள் அறிய முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது. அவன் தனிமைக்கும் இறுக்கத்திற்கு பிண்ணனியில் ஏதோ அழுத்தமான காரணம் இருக்கும் என்றவள் எண்ணி கொள்ள,
தெய்வானையோ நிறுத்தாமல் இதுதான் வாய்ப்பென்று சாரதியை தன் இஷ்டத்திற்கு கடித்து துப்பி கொண்டிருந்தார்.
அப்போது உள்ளிருந்து சாரங்கபாணியின் அழைப்பு வர,
“நான் நிம்மதியா இருந்தாலே இந்த மனுஷனுக்கு பிடிக்காதே… சரிடா அம்பி… நாம அப்புறமா பேசுவோம்” என்று சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட,
அவளை அறியாமலே அவளின் எண்ணம் சாரதியையே சுற்றி வந்து கொண்டிருந்தது.
யோசனையோடு வெகுநேரம் காத்து கிடந்தவள் நேரம் கடந்து செல்ல,
கார் சாவியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டுவிடலாம் என்ற எண்ணத்தோடு வீட்டிற்குள் நுழைய
முகப்பு அறையோ வெறிச்சோடி இருப்பதை பார்த்தாள். அவன் தன் அறையில் இருக்க கூடும் என்று யூகித்தவள்,
“முத்த ண்ணே” என்றழைக்க,
“சொல்லு வீரா” என்றபடி சமையலறையில் இருந்து முத்து வெளியே வந்தான்.
“நான் சாவியை மாட்டிட்டு கிளம்பிறேன்… சார் வந்தா நீங்க சொல்லிடிறீங்களா?!”
“நீயே சொல்லிட்டு போயிடு பா… அப்புறம் சாரதி சார் வந்தா என்னதான் கத்துவாரு” என்று முத்து சொல்ல,
“சொல்லிட்டு போயிடுவேன் ண்ணே… ஆனா அவர் ஏதோ டென்ஷல இருக்காரு… அதான் தேவையில்லாம அவரை போட்டு கடுப்பாக்க வேணான்னு” என்று சொல்லி கொண்டே அவள் சாவியை மாட்ட யத்தனிக்கும் போது,
“வீரா” என்று மாடியிலிருந்து சாரதியின் அழைப்பு கேட்க,
அவள் பதறி கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
“வெளியே போகனும்… போய் காரை ஸ்டார்ட் பண்ணு” என்றவன் சொல்ல, அவளுக்கு உள்ளூர படபடத்தது.
‘இன்னேத்துக்கி போய் எங்க கிளம்புது இந்த பக்கி’ என்றவள் எண்ணி கொண்டு நிற்க,
“வீரா போய் காரை ஸ்டார்ட் பண்ணு… ரிஸார்ட்டுக்கு போகனும்” என்றான்.
‘ரி.. ஸா.. ர்.. ட்டா’ அவள் அதிர்ச்சியுற,
அந்த கணமே முகமெல்லாம் வெளுத்து போனது அவளுக்கு!
“என்ன அப்படியே சிலையாட்டும் நின்னுட்டிருக்க? போய் காரை ஸ்டார்ட் பண்ணு” என்றவன் சொல்லி கொண்டே படியிறங்க,
அவள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு,
“சார்… நான் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போனோம்” என்றாள்.
சாரதி படிகெட்டில் நின்றபடி அவனை அழுத்தமாய் முறைக்க, “இல்ல சார் அது” என்றவள் முகம் தவிப்பாய் அவனை ஏறிட்டு பார்க்க,
“சரி சாவியை கொடுத்திட்டு நீ கிளம்பு” என்றான்.
‘தப்பிச்சோன்டா சாமி’ என அவள் நிம்மதி பெருமூச்சுவிட்டு கொள்ள,
சாரதி படியிறங்கி வந்து கொண்டிருக்க அவள் கீழே நின்று கொண்டு சாவியை கொடுக்க காத்திருந்தாள்.
அப்போது சாரதி கடைசி படிகெட்டில் கால் வைக்கும் போதே,
சற்று தடுமாறி விழ போக அவள், “சார்” என்று தன் கரத்தை நீட்ட அவனோ அவள் தோள்களை பிடித்து கொண்டு நிலைப்பெற்றான்.
அவள் அதிர்ந்து நிற்க,
அவன் நொடி பொழுதில் அவளை விட்டு விலகி, “தேங்க்ஸ்” என்றுரைத்தான்.
அவன் நெருங்கி அவளை தொட்ட போதே, அவன் மீது வீசிய வாசம் அவன் மிதமிஞ்சிய போதையில் இருக்கிறான் என்பதை அவளுக்கு காட்டி கொடுத்திருந்தது. அதனாலேயே அவன் தடுமாறி இருக்கிறான் என்பதும் அவளுக்கு புரிய,
அவள் பேச்சற்று அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“சாவியை கொடு” என்று சாரதி தன் கரத்தை நீட்ட,
அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
“வீரா சாவி” என்றவன் மீண்டும் அழுத்தமாய் கேட்க,
“வேண்டாம் ஸார்! நீங்க குடிச்சிருக்கீங்க… இப்போ காரை ஓட்டினு போறது நல்லதுக்கில்ல” என்றவள் சாவியை தராமல் தயங்கி நின்றாள்.
“அது உனக்கு தேவையில்லாத மேட்டர்… சாவியை கொடுத்திட்டு போயிட்டே இரு”
“இல்ல ஸார்… இந்த மாதிரி நேரத்தில நீங்க காரை ஒட்டினிங்கன்னா… உங்களுக்கும் ஆபத்து… எதிர்க்க வர்றவங்களுக்குமே ஆபத்து… அதான்”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… ஜஸ்ட் கிவ் மீ த கீ” என்றவன் இறுக்கமாய் சொல்ல,
அவள் அப்போதும் சாவியை கொடுக்காமல் தவிப்பாய் அவனை பார்த்தாள்.
“வீரா” என்றவன் அழுத்தமாய் அழைக்க
அவன் சொல்வதை கேட்கமாட்டான் என்பதை உணர்ந்தவள்,
“இல்ல சார்… நானே ஒட்டின்னு வர்றேன்” என்றபடி அவன் கரத்திலிருந்த பேகை வாங்கி கொண்டு முன்னேறி சென்று அவள் காரை இயக்க
அவனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அப்படியென்ன இவனுக்கு தன் மீது அக்கறை என்றவன் எண்ணி கொண்டு வாசலில் வந்து நிற்க,
வீரா காரை அவன் முன்னே நிறுத்திவிட்டு,
“வாங்க ஸார் போலாம்” என்றாள்.
“வீட்டுக்கு சீக்கிரம் போகனும்னு சொன்ன”
“அதெல்லாம் பரவாயில்ல சார்… நீங்க வாங்க” என்று அவள் சொல்ல,
நூலளவில் மெலிதாய் ஓர் புன்னகை மலர்ந்தது அவன் உதடுகளில்!
தன் மீது கூட அக்கறை கொள்ள இந்த உலகத்தில் ஓர் ஜீவனிருக்கிறதா என்ற எண்ணத்தில் அவனுக்கு விளைந்த புன்னகை அது!
நீண்டு கொண்டிருந்த அந்த பயணத்தில் வீராவின் உறுப்புகள் யாவும் காரை இயக்குவதில் மும்முரமாய் இருந்தாலும் மனம் மட்டும் தங்கைகளை பற்றிய கவலையில் இருந்தது.
ஏற்கனவே ஒருமுறை இரவு அவள் வீட்டிற்கு போக முடியாத காரணத்தால் அவள் மீது படிந்த சில அவசொற்களை பற்றி எண்ணியவளுக்கு,
மீண்டும் தானே சென்று அதே மாதிரியான சூழலில் சிக்கி கொண்டோமே என்று கோபமாயிருந்தது. அதே நேரம் அவளால் அதனை தவிர்க்கவும் முடியவில்லை.
இவற்றையெல்லாம் எண்ணும் போதே
அவளின் விழியோரம் நீர் கசிய
அதனை அவசரமாய் துடைத்து கொண்டாள்.
இவளின் மனநிலை இப்படி இருக்க சாரதியின் எண்ணங்கள் அரவிந்த் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில் நின்று போயிருந்தது.
சிறு வயதிலிருந்தே தனக்கென்று யாருமில்லை என்று அவனுக்கு அவனே நொந்து கொள்ளாத நாட்கள் இல்லை.
ஆனால் நாளடைவில் யாரும் இல்லையென்றாலும் தன்னால் இந்த உலகில் சஞ்சரிக்க முடியும் என்ற கோபத்தோடும் கர்வத்தோடும் வளர்ந்தவனுக்கு,
தனிமை மட்டுமே துணையாயிருந்தது. ஆனால் எத்தனை நாளைக்கு இந்த தனிமையோடு? இந்த கேள்விதான் இப்போது அவன் ஆழ்மனதை துளைத்து கொண்டிருந்தது.
இவர்கள் இருவரும் இவ்வாறாக வெவ்வேறு மனநிலையில்
பயணித்து கொண்டிருக்க,
அவர்களுக்கிடையில் அழுத்தமான ஓர் மௌனம் ஆளுமை செய்து கொண்டிருந்தது.
காரும் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க சடாரென்று ஒரு பிரேக்!
சாரதி அதிர்ந்து, “ஏன் காரை நிறுத்தின?” என்று வீராவை வினவ,
“இல்ல சார்! அதுவே நின்றுச்சு” என்றபடி அவனை பதட்டமாய் பார்த்தவள் காரை ஸ்டார்ட் செய்ய பலமுறை முயன்று பார்த்தாள். ஆனால் அது ஸ்டார்டாகாமல் இப்போது பார்த்து அவளை பழிவாங்கி, அவனை அவள் தயக்கமாய் ஏறிட்டாள்.
“என்னை எதுக்கு பாரு ? ஸ்டார்டாக மாட்டேங்குதுன்னு போய் என்ன பாஃல்டுன்னு பாரு” என்றவன் சொல்ல,
“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள் காரின் முன்புறம் மூடியை திறக்க,
அதிலிருந்து புகையாய் கிளம்பியது.
‘இன்னாது இது… தலையும் புரியல வாலும் புரியல… இதுல நம்ம இன்னத்த பார்க்கிறது’ என்றவள் புலம்பி கொண்டே எதிலோ கைவைத்து அது சுட்டுவிட வலி தாங்காமல்,
“ஆ” என்று அவளின் குரலிலேயே அலறிவிட்டாள்.
அவள் தன் காயப்பட் விரலை பிடித்து கொண்டு, ‘ஸ்ஸ்ஸ் உ ஆ’ என்று வலியோடு முனக,
சாரதி புரியாமல், “ஆமா யார் கத்தினது?” என்று கேட்டு எட்டி பார்த்தான்.
‘அய்யய்யோ’ என்று தலையிலடித்து கொண்டவள்
“யாரு சார்?” என்று பதட்டத்தோடு கேட்டு எச்சிலை கூட்டிவிழுங்கினாள்.
“இல்ல வீரா! யாரோ ஒரு பொண்ணு ஆன்னு கத்திற மாறி கேட்டுச்சே” அவன் காரிலிருந்தபடியே யோசனையாய் வினவ,
“பொண்ணு குரலா… அப்படி எனக்கொன்னும் கேட்கலேயே சார்” என்று சமாளித்தாள்.
“இல்ல கேட்டுச்சு…”
“தெரியல சார்… பக்கத்தில எங்கேயாச்சும் கேட்டிருக்கும்”
“இல்ல வீரா… இங்கதான் கேட்டுச்சு” அவன் தீர்க்கமாய் சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கிவந்து தேடலாய் சுற்றுமுற்றும் பார்வையிட,’இவன் விடமாட்டேன் போல இருக்கே’ என்று தீவிரமாய் யோசித்தவள்,
“நான் கண்டுபிடிச்சிட்டேன் சார்!” என்றாள்.
“என்ன?”
“ஹைவேஸ் ரோடு… நல்ல போயிட்டிருந்த கார் வேற திடீர்னு நின்னு போச்சா. “
“அதுக்கு”
“இந்த இடத்தில வேற ஆள் நடமாட்டமே இல்லாம பயங்கர இருட்டா இருக்கு… உங்களுக்கு வேற ஏதோ பொண்ணு கத்திற சத்தம் கேட்டிருக்கு… இதெல்லாம் வைச்சி பார்த்தா”
“பார்த்தா” என்று கைகளைகட்டி கொண்டு அவளை அவன் கூர்ந்து பார்க்க,
“பேய் மோகினி பிசாசு… இப்படி ஏதாச்சும் இருக்கும் சார்… நீங்க வேற ஆள் பார்க்க வாட்டசாட்டமா இருக்கீங்களா… அதான் உங்களை டார்கட் பண்ணியிருக்கும்” என்று படுதீவிரமாய் அவள் பேய் கதை சொல்வது போல உணர்ச்சிமயமாய் சொல்லி கொண்டிருக்க,
சாரதிக்கு சிரிப்பு தாங்கவில்லை.
அவன் சிரிப்பு மெல்ல ஓய்ந்த நிலையில் அவளை ஏற இறங்க கேலி புன்னகையோடு பார்த்தவன்,
“எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிற நீ?என்னால முடியல” என்றவன் சொல்லி கொண்டே மேலும் சிரிக்க,
அவள் அப்போதைக்கு தப்பித்தோம் என்று பெருமூச்செறிந்தாள்.
அவன் இயல்பு நிலைக்கு திரும்பி,
“அது சரி! கார்ல என்ன பிராப்ளம்” என்று கேட்க,
“ஏதோ பெரிய பிராப்ளம் போல சார்… அதான் நின்னுடுச்சு” என்றாள்.
“அதான் என்ன பிராப்ளம்?”
‘அது தெரிஞ்சா நான் சொல்லி இருக்க மாட்டேனா?!’ என்றவள் எண்ணி கொள்ள,
“வாயில என்னத்தை வைச்சிருக்க… பதில் சொல்லு” என்றவன் அழுத்தம் கொடுத்தான்.
“தெரியல சார்”
“உனக்கு தெரியல… அதானே!” என்றவன் முறைக்க அவள் முகத்தை தொங்க போட்டு மௌனமாய் நின்றாள்.
அவன் சலிப்போடு மூச்சை இழுத்துவிட்டு கொண்டு அவனே காரின் முன்புறத்தில் தலையை நுழைத்தி பார்க்கலானான்.
அவன் தீவிரமாய் காரின் மூளக்கூறுகளை ஆராய்ந்து அலசி கொண்டிருக்க,
“உங்களுக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் கூட தெரியுமா சார்?” என்றவள் ஆச்சர்யமாய் வினவ,
“தெரியும்…போய் டூல்ஸ் எடுத்துட்டு வா” என்றவன் அதிகார தொனியில் சொல்லவும் விரைவாய் அவளும் சென்று டூல்ஸ் பாக்ஸை எடுத்து வந்து முன்னே வைத்தாள்.
அந்த டூல்ஸ் பாக்ஸில் அவன் கேட்டவற்றையெல்லாம் எடுத்து தர அவள் தட்டுத்தடுமாற,
பாரபட்சம் பார்க்காமல் அவளை திட்டி தீர்த்தவன் வேலைகளை முடித்து,
“போய் இப்போ காரை ஸ்டார்ட் பண்ணு” என்றான்.
அவளும் சென்று காரை இயக்க அது முதல் முயற்சியிலேயே இயங்க ஆரம்பிக்கவும்,
“சூப்பர் சார், செம” என்றவள் குதூகலமாய் பாராட்டினாள்.
அவளை அவன் விழிகள் சுருக்கி முறைத்து கொண்டே முன்புறம் மூடியை மூட, அவள் தன் ஆர்வ கோளாறை எண்ணி உதட்டை கடித்து கொண்டாள்.
அவன் பின்னர் தன் கரத்தை துடைத்து சுத்தம் செய்து கொண்டு வந்தமர்ந்தவன்,
“நீ ஒழுங்கா காரை மெய்ன்டையின் பண்ணியிருந்த இந்த பிரச்சனையே வந்திருக்காது இல்ல” என்றவன் சொல்லி அவளை கோபமாய் பார்க்க,
“இல்ல சார்! நான் ஒழுங்காதா மெய்ன்டையின் பண்ணிக்கினேன்” என்றாள்.
“கிழிச்ச… காரை கழுவி துடைக்கிறதில்ல மெய்ன்டையின் பன்றது… புஃய்வல் செக் பண்ணனும்… ஆயில் செக் பண்ணனும்… ரேடியட்டர்ல தண்ணி இருக்கான்னு பார்க்கனும்… அப்புறம் எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்குன்னு பார்த்து டைமுக்கு ஸர்வீஸ் விடனும்… இதுல ஒண்ணயாவது நீ செஞ்சிருக்கியா?!” என்றவன் கேள்விகளை அடுக்க,
அவள் குற்றவுணர்வோடு அவன் முகத்தை ஏறிட்டு பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.
“மத்ததுக்கெல்லாம் மட்டும் வாய் கிழியுது… ஆனா வேலை மட்டும் ஒழுங்கா செய்றதில்ல”
“சாரி சார்!இனிமே இதெல்லாம் கரெக்ட்டா பார்த்து மெயின்டையின் பண்ணிக்கிறேன்”
“இனிமே” அவளை இளக்காரமாய் கேட்டு முகத்தை திருப்பியவன்,
“எதுவும் தெரியல… ஆனா டிரைவ் பண்ண மட்டும் கத்துக்கிட்ட… உனக்கெல்லாம் யார் டிரைவ் பண்ண கத்து கொடுத்தா” என்று படபடவென வெடித்தான் கோபத்தோடு!
அந்த கேள்வியை கேட்டதும் அவள் முகம் சுணங்கியது.
பழைய நினைவுகள் யாவும் அவள் கண்முன்னே விரிய,
அவள் விழிகள் கலங்கி கண்ணீர் பெருகி ஊற்றியது.
அதனை அவசரமாய் அவன் துடைத்து கொள்ள, “டே! நான் இப்போ என்ன சொல்லிட்டேன் அழற” என்றவன் வினவ,
“நீங்க சொன்னதுக்காக எல்லாம் இல்ல சார்… கண்ணில தூசி பட்டிருச்சு… அதான்” என்று சமாளித்தாள்.
கார் ஜன்னல்கள் யாவும் மூடியிருக்க எப்படி தூசி பட்டிருக்க கூடும் என்று சந்தேகமாய் அவளை அவன் பார்க்க,
அவள் முகம் பிரதிபலித்த வேதனை குறிகள் அவனை குழப்பமுற செய்தன. ஆனால் மேலே அவளிடம் அது குறித்து எந்த கேள்வியும் அவன் வினவவில்லை.
கார் ரிஸார்ட்டை அடைந்ததும் எப்போதும் போல் அவள் பேகை எடுத்துவந்து அவள் அறையில் வைக்க,
அவன் தன் பேசியில், “விஜி ஐம் வெயிட்டிங்… சீக்கிரம் வா” என்றான்.
இந்த வார்த்தைகளை கேட்ட நொடி வீராவுக்கு கோபம் ஏகபோகமாய் பொங்கி கொண்டு வர,
அப்போது “வீரா” என்று சாரதி அழைத்தான்.
“இன்னா சார்?” என்று கேட்டு அவனை வேண்டா வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்தாள்.
“வெளியே வாசலில் பிளேக் கலர் ஸ்வவ்ட்… விஜின்னு ஒரு பொண்ணு வருவாங்க… அவங்கள கைட் பண்ணி இங்கு அழைச்சிட்டு வா” என்க,
‘த்தூ… இதெல்லாம் ஒரு பொழப்பு’ என்று வாய்க்குள்ளேயே முனகி கொண்டாள்.
அவள் சொன்ன வார்த்தை அவன் காதில் விழவில்லை எனினும் அவளின் எண்ணத்தை அவள் முகம் அப்பட்டமாய் பிரதிபலிக்க,
“இப்ப நீ என்ன சொன்ன?!” என்று அவளை கூர்மையாய் பார்த்து வினவினான்.
“ஒண்ணும் சொல்லல சார்”
“நீ சொன்ன… எனக்கு கேட்டுச்சு”
‘மைன்ட் வாய்ல பேசிறதா நினைச்சி சத்தமா பேசிட்டோமோ’ என்று அவள் சந்தேகித்து கொள்ள அவனோ,
“இப்ப நீ என்ன சொன்னன்னு எனக்கு தெரிஞ்சாகனும்” என்று அவளை நோக்கி அடியெடுத்து வைத்து வர,
“எதுவும் சொல்லல சார்” என்றபடி அவள் பதட்டமாய் பின்னோடு நகர்ந்தாள்.
“நீ சொன்ன” என்றபடி அவன் மேலும் அவளை நெருங்கி வர அவளுக்கு மூச்சு காற்றெல்லாம் ஏற்ற இறக்கமாய் மாறியது.
‘இன்னாத்துக்கு இவன் கிட்ட கிட்ட வர்றான்… நம்மல அடையாளம் கண்டுக்கின்னு இருப்பானோ?!’ அவளின் பதட்டம் அதிகரிக்க அவனின் பார்வை கூர்மையாய் அவளை அளவெடுத்தது.