Aval throwpathi alla – 27

 

பூதாகரமாய்

சாரதியின் பார்வை வீராவின் புறமிருக்க அவளோ சாலையை பார்த்தபடியே வண்டி ஓட்டிக் கொண்டு வந்தாள். 

எனினும் அவள் உதடுகள், ‘ஆல் இஸ் வெல்’ சொல்லியபடி முனகி கொண்டிருக்க,

தன் படபடப்பை அவனிடம் அவள் காட்டிக் கொள்ளாமல் மறைக்க முற்பட்டாலும்,

அது அவளின் முகத்தில் தெள்ளத்தெளிவாக பிரதிபலித்தது.

அதே நேரம் அவனிடமும் தான் நினைத்ததை எப்படி அவளிடம் சொல்ல போகிறோம் என்ற பதட்டம் இருந்தது.

ஆதலாலேயே அவர்களுக்கு இடையில் சில நிமிடங்கள் மௌனங்களாவே கடந்து சென்றன.

முதல்முறையாய் எந்த பெண்ணிடம் கேட்காத ஒன்றை அவளிடம் கேட்க போகிறானே. அந்த தயக்கம்தான் அவனுக்கு!

அவளோ அவன் என்னதான் பேசப் போகிறான்?

அவள் தனக்குத்தானே இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டு பதில் தேடிக் கொண்டிருந்தாள்

‘ஏன் இப்படி கம்னு வர்றான்… ?அப்படி இன்னாத்தை பேச போறான்’ நேரம் ஆக ஆக அவளின் பதட்டமும் சரி பயணிக்கும் தூரமும் சரி அதிகரித்துக்கொண்டே போனது.

‘ஏதாச்சும் ஏடாகூடாம கேட்பானோ?!’
படபடப்பில் அவள் மனம் ஏதேதோ கற்பனை செய்து உள்ளூர பயந்து கொண்டிருந்தது.

சாரதி தொண்டையை கனைக்கவும்,

அவளின் இதயத்துடிப்பு மத்தாளமாய் கொட்ட தொடங்கியது.

அவனோ நிறுத்தி நிதானமாய் பேச ஆரம்பித்தான்.

“நீ என்கிட்ட ஒருதடவை என் பேமிஃலி பத்தி கேட்ட… ஞாபகம் இருக்கா? நான் அப்போ உன்கிட்ட சரியா பதில் சொல்லல… இப்போ சொல்றேன்”

“எதுக்கு சார் இப்போ அதபத்திலாம்”

“குறுக்க பேசாதன்னு சொன்னேன் இல்ல” அவன் அதிகார தோரணையில் சொல்ல
அவள் மௌனமானாள்.

அதே நேரம் அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்கவும் ஆர்வமாய் அவள் காத்திருக்க,

“எங்க அப்பா ப்ராமின்… அம்மா கிரிஸ்டியன்… படிக்கும் போதே இரண்டு பேருக்கும் காதல்… காதலிச்ச ஜோர்ல குடும்பத்து எதிர்த்துக்கிட்டு கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க… “

“காதல் பண்ணும் போது எதார்த்தத்தை மறந்து கற்பனையில மிதந்தவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் அந்த மயக்கம்  தெளிஞ்சி… யதார்த்ததில காதல் கறைஞ்சி போயிடுச்சு… அப்புறம் இரண்டு பேருக்கும் ஒத்து போகல… எப்பப்பாரு சண்டை சச்சரவு”

“என் துரதிஷ்டம்… அவங்களுக்கு போய் நான் மகனா பிறந்து தொலைச்சிட்டேன்… என்னை அநாதரவா விட்டுட்டு இரண்டு பேரும் அவங்க அவங்க சந்தோஷத்தை தேடி போயிட்டாங்க”

“போனவங்க என்னை ஒரு அனாதை ஆசிரமத்தில விட்டுட்டு போயிருந்தா நல்லா இருந்திருக்கும்… ஆனா என்னை பெத்த நல்லவரு ரொம்ப பெருந்தன்மையா என்னை கொண்ட போய் அவர் தம்பிக்கிட்ட கொடுத்திட்டு போயிட்டாரு… இப்ப அவுட் ஹவுஸ்ல இருக்காங்களே அவங்கதான் என் சித்தி சித்தப்பா…” ஒரு அலட்சிய புன்னகையோடு அவன் மேலும் தொடர்ந்தான்.

“ஹ்ம்ம்…என் சித்திக்கு என்னை காண்டாலே ஆகாது… நான் வேற ஜாதியாம் குளமாம்… பசிக்கு ஒரு வேளை சாப்பாட போட்ட நாளில்ல… சாப்பிட்டியான்னு கேட்கவும் ஆளில்ல… நேரத்தோட எழுந்து கோவில சுத்தம் பண்ணி கூட்டி பெருக்கி… வேலையெல்லாம் முடிச்சி… கொலை பசில இருப்பேன்… ஒரே ஒரு தொன்னை பிரசாதம்… அதை சாப்பிடிட்டு ஸ்கூலுக்கு ஓடுவேன்… “

“படிக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை…. ஆனா என் ஆசை யாருக்கும் முக்கயமில்லயே… யாருக்கும் நான் தேவைப்படல… என்னுடைய தேவையை பத்தி யாருக்கும் கவலையும் இல்ல… அப்பதான் நான் ஒரு முடிவு பண்ணனேன்… யாருக்கும் நான் முக்கியமில்லன்னா என்ன… எனக்கு நான் முக்கியம்… எனக்கான தேவையை நான்தான் பூர்த்தி செஞ்சிக்கனும்… என்னுடைய ஆசையை நான்தான் நிறைவேத்திக்கனும்…  ஆனா படிச்சா மட்டும் இதெல்லாம் நடக்குமா? … பணம் வேணும் இல்ல… எல்லாத்துக்கும் பணம் வேணும்…  படிப்பை விட கோவில்ல நான் கேட்ட உபந்யாசங்கள் எனக்கு நிறைய சொல்லி தந்துச்சு… ஏகலயவன் மாறி நேர்மையா இருந்தா இந்த உலகம் நம்ம திறமையை காவு வாங்கிடும்… கர்ணன் மாறி குரு விசுவாசத்தோட இருந்தா… நம்ம கத்துக்கினது கூட நமக்கு பயண்படாம போயிடும்… உண்மையா நேர்மையா இருக்கிறவனை விட… சூட்சமமா புத்திசாலித்தனமா எல்லாத்தையும் கையாள தெரிஞ்சவன்தான் இந்த உலகத்தில ஜெயிக்க முடியும்னு புரிஞ்சிக்கிட்டேன்… 

பதினாலு பதினைஞ்சி வயசில ஓடி ஓடி  சம்பாதிக்க ஆரம்பிச்சேன்… டி நகர் தெருவுல வெயில் மழையெல்லாம் பார்க்காம  வியாபாரம் பண்ணியிருக்கேன்…  கொஞ்ச நாள் மங்களம் சில்க்ஸ்ல நாராயணசுவாமி சார்கிட்ட வேலை பார்த்து பிஸின்ஸ் டீலிங்ஸ்லாம் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்… என்னோட இருபதாவது வயசில படாதபாடுபட்டு என்னுடைய சொந்த கடையை ஆரம்பிச்சேன்… இன்னைக்கு” என்று சொல்லி அவன் உதடுகள் உதிர்த்த வஞ்சமான புன்னகையை பார்த்து அவளுக்கு உண்மையிலேயே உதறலெடுத்தது.

பணத்தின் மீதான அவனின் வெறியும் அதனால் அவன் அடைந்த அபரிமிதமான வளர்ச்சியும் அவளுக்கு ஆச்சர்யத்தை விட மிரட்சியை உண்டாக்கியது.

“சார்” என்றவள் ஆரம்பிக்க,

“இன்னும் நான் பேசி முடிக்கல” என்று சொல்லியபடி அவன் சிகரெட்டை பற்ற வைக்க, அவன் இன்னும் என்ன சொல்ல காத்திருக்கிறான் என்று அவளுக்குள் யூகிக்க முடியாத கற்பனைகள் கரைபுரண்டு ஓடத் தொடங்கியிருந்தன.

அவன் சில நொடிகள் மௌனத்திற்கு பின் மீண்டும் தொடர்ந்தான்.

“இந்த நிமிஷம் நான் நினைச்சதெல்லாம் அடைஞ்சிட்டேன்… போதும் போதுங்கிறளவுக்கு பணம் இருக்கு… ஆனா எனக்கு இன்னும் திருப்தியே ஏற்படமாட்டேங்குது… ஏதோ பெரிய குறை இருக்க மாறி” என்று அவன் தன் வாக்கியத்தை முடிப்பதற்கு முன்னதாக வீரா முந்தி கொண்டு,

“குறுக்கால பேசிறன்னு கோசிக்காத சார்…  எனக்கும் அதான் தோணுது… பணம் மட்டும் போதுமா… சொந்தம் பந்தம்னு கூட யாராச்சும் வேணாமா” என்று இழுத்தவள்,

“பேசாம ஒரு நல்லா பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க சார்… எல்லாம் சரியாயிடும்” என்றாள்.

மனதில் எண்ணியதை அவனிடம் சொல்லிவிட்டாலே ஒழிய அவன் திட்ட போகிறானோ என்று அவன் முகத்தை பார்க்காமல் தன் பார்வையை சாலை மீது பதித்து கொண்டாள்.

அவன் புன்னகை ததும்ப,

“எக்ஸேக்டா நானும் அதான் நினைச்சேன்” என்றவன் சொல்ல அவள் முகம் மலர்ந்தது.

“சூப்பர் சார்… அப்படின்னா சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பார்த்து” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“பார்க்க எல்லாம் வேண்டாம்… நான் ஆல்ரெடி டிசைட் பண்ணிட்டேன்” என்றான்.

“யாரு சார்?” அவள் ஆவல்ததும்ப கேட்கவும்,

“வேற யாரு…நீதான்… உன்னை விட ஒரு பெட்டர்… பெட்டர் ஹாஃப் எனக்கு எங்க தேடினாலும் கிடைக்கமாட்டா” என்றான் சிகரெட்டை புகைத்தபடி!

அவன் பளிச்சென்று சொல்லிவிட, அவள் அதிர்ச்சியும் குழப்பமாய் சில விநாடிகள் யோசித்தவள்,

“அன்னைக்கு மாறி இன்னைக்கும் என்கிட்ட விளையாடிறியா சார்” என்றதும் முறுவலித்தவன்,

“அன்னைக்கு நான் விளையாட்டுக்கு செஞ்சதை சீர்யஸா எடுத்துக்கிட்ட… இன்னைக்கு சீர்யஸா சொல்லிட்டிருக்கேன்… விளையாடிறியான்னு கேட்கிற” என்றான்.

அவள் குழப்பத்திலிருந்து விடுபடாமல், “என்கிட்ட போய் ஏன் சார் இப்படியெல்லாம் கேட்கிற… உனக்கென்ன சார் பொண்ணா கிடைக்காது” என்க,

“ஏன்? நீ பொண்ணு இல்லயா?

ஓ! நீ இன்னும் பொண்ணுங்கிற மென்டாலிட்டிக்கே வரலயோ?!” என்று சொல்லி கேலியாய் அவன் சிரிக்க அவள் முகம் கோபமாய் மாற

நமட்டு சிரிப்போடு அவளை பார்த்தவன்,

“ஸீர்யஸ்லி நீ பேன்ட் சட்டையில அசல் பையன் மாதிரியே இருந்த… உன் ஹேட்டிட்டியூட் பாடி லேங்குவேஜ் கூட அப்படியே இருந்துச்சு… அங்கதான் நான் கொஞ்சம் ஏமாந்திட்டேன்… பட் இந்த காஸ்ட்யூம்ல… சும்மா சொல்ல கூடாது…  செம ப்ஃகரா இருக்க” என்றதும், “சார்”  என்று தவிப்போடு அவன் புறம் திரும்ப,

“உன்னை என் கடை மாடலாவே போடலாம் போல” என்றான் மேலும்!

“சார் போதும்” என்றவள் உரக்க சொல்ல,

“கூல் பேபி… நீ மாடலாலாம் வர வேண்டாம்… என் மனைவியா இரு… ” என்றான்.

“சார்! நான் உன் மேல ரொம்ப மரியாதை வைச்சிருக்கேன்… ஆனா நீயும் அந்த பொறுக்கிங்க மாறி” அவள் இறங்கிய தொனியில் பொறுமையாகவே சொல்ல,

“ஸ்டாப் இட்… நான் ஒண்ணும் மத்தவங்க மாறி உன்னை யூஸ் பண்ணிக்க பார்க்கல…  நான் உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்னுதானே சொல்றேன்… நீ மட்டும் புத்திசாலித்தனமா முடிவெடுத்தினா… உன் பிரச்சனைக்கெல்லாம் பெட்டர் சொல்யூஷன் கிடைக்கும்… உன் சிஸ்டர்ஸுக்கும் நல்ல ப்யூச்சர் கிடைக்கும்… எனக்கும் ஒரு பேஃம்லி சர்கம்ஸ்டென்ஸஸ் கிடைச்ச மாறி இருக்கும்” என்றான்.

அவள் மௌனமாய் சிலவிநாடிகள் யோசித்துவிட்டு அவன் புறம் திரும்பியவள்,

“ஏன் சார்? நான் முடியாதுன்னு சொன்னா… என்னை வேலையை விட்டு தூக்கிட்டு… என் தங்கச்சிங்களையும் என்னையும் வீட்டை விட்டு போன்னு சொல்லுவ… அப்படிதானே?!” என்றாள்

“நீயும் முடியாதுன்னு சொல்ல மாட்ட… நானும் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்” என்றவன் சொல்ல,

அவனை ஏறஇறங்க அவள் குழப்பமாய் பார்த்தாள்.

அவன் மேலும்,

“பிகாஸ் முடியாதுன்னு சொல்ற ஆப்ஷனே நான் உனக்கு கொடுக்கல… நீ ஒத்துக்கிட்டுதான் ஆகனும்” அவன் தீர்க்கமாய் சொல்ல அவளுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. இன்னும் அவன் பேசும் எதையும் நம்ப முடியாமல் பார்த்தவள்,

“சார்! நான் உன்கிட்ட சம்பளம் வாங்கிட்டிருக்கேன்… அதானாலதான் இவ்வளவு பொறுமையா பேசிட்டிருக்கேன்” என்ற போதே அவள் விழிகள் கோபத்தை கக்கி கொண்டிருந்தது.

“இல்லன்னா மேடம் என்ன பண்ணுவீங்க?!” என்று எகத்தாளமாய் அவன் கேட்கவும்

அவள் சீற்றத்தோடு,

“இப்படியே ஏடாகூடாம பேசினிருந்தன்னா எங்காயாச்சும் போய் காரை மோதிவுட்டிருவன்” என்று மிரட்டினாள்.

அவனோ சிரித்த முகத்தோடு,

“கோஹெட்… எனக்கு ஏதாச்சும் ஆனா பெரிசா நஷ்டமில்ல… ஆனா உனக்குதான் இரண்டு சிஸ்டர்ஸ் இருக்காங்க வீரா… தைரியாமான பொண்ணுங்கதானாலும்… சமுதாயத்தில தனியா வாழ்றளவுக்கு மெச்சுரிட்டி இல்லாத பசங்க… யோசிச்சிக்கோ” அவன் வார்த்தைகள் சரியாய் அவள் பலவீனத்தை தாக்க, அவள் கடுப்பாய் ஸ்டியரிங்கில் குத்தினாள்.

அப்போது அவள் பேச்சுக்கு சொன்னது அவளே எதிர்பாராவிதமாய் நடந்தேறியது. அவள் கவனம் சிதறிய சமயம் முன்னாடி கம்பிகளை சுமந்த சென்ற லாரியில் கார் மோதிக் கொள்ள பார்க்க அவள் பதட்டத்தில் சடன்பிரேக் போட்டு நிறுத்தினாள்.

இருவரும் அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

வீரா படபடவென  துடித்த இதயத்தின் மீது கை வைத்து பெருமூச்செறிய,

“உனக்கு டிரைவிங்தான் வரல… ஒரு ஆக்ஸிடென்ட் கூடவா சரியா பண்ண வரல… ” என்றவன் தீவிரமான முகபாவனையோடு சொல்லிவிட்டு பின் அவளை பார்த்து எள்ளிநகைத்து கொண்டிருக்க, அவள் எரிச்சலானாள்.

அப்போது பின்னோடு வந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர் அவள் போட்ட சடன்பிரேக்கில் மிரண்டு போயிருந்தான்.

அவள் மீது படுகோபமாக முன்னே வந்து ஆட்டோவை நிறுத்தி,

“அறிவில்ல…பின்னாடி வண்டி வருது தெரியல… இம்மா பெரிய ரோட்ல நீ பாட்டுக்கு இப்படி சடன் பிரேக்கை போடுற… இன்னாத்திக்கே சொருவிருப்பேன்… ஆள பாரு… என்ன ? புதுசா ஓட்ட கத்துக்கிறியா ?!” என்றவன் சரமாரியாய் அவள் மீது ஏறி கொண்டிருக்க,

“இப்ப இன்னாத்துக்குயா மூச்சை பிடிச்சிக்கின்னு திட்டிட்டிருக்க… அதான் சொருவுல இல்ல… போயா வேலையை பார்த்துக்கிட்டு” என்றாள் அவளும் அதே அளவு கோபத்தோடு!

“சொருவிருந்தேன்னா தெரிஞ்சிருக்கும்”

“அப்படியா? சொருவுவியா… எங்க சொருவுய்யா பார்ப்போம்… சொருவுட்டு நீ எப்படி வூடு போய் சேரன்னு நானும் பார்க்கிறேன்” என்று சாரதி மீதிருந்த கோபத்தை அவனிடம் காட்டினாள்.

“வீரா” என்று சாரதி அதட்ட

அதே சமயம் அந்த ஆட்டோக்காரன் தலையிலடித்து கொண்டு, “காருதான் பந்தா… படுலோக்கலா பேசுது…” என்க,

“ஆமாய்யா லோக்கல்தான்… தரைலோக்கல்… இன்னாங்கிற… போயா வேலை பார்த்துக்கின்னு” என்றாள்.

“சரியான சாவுகிராக்கி” என்றவன் சொல்லிவிட்டு ஆட்டோவை எடுக்க

“நீதான்யா சாவுகிராக்கி” என்று உரக்க கத்தினாள்.

“வீரா வண்டியை எடுக்கிறியா?!” என்று சாரதி டென்ஷனாக அவளும் காரை இயக்க ஆரம்பித்தாள்.

“இப்ப எதுக்கு தேவையில்லாம அந்த ஆட்டோக்காரன்கிட்ட வம்பு வளர்த்திட்டு நின்ன… தப்பு உன் பேர்லதானே” என்றவன் முறைத்தபடியே கேட்டான்.

“அதுக்கு…  ஓவரா பேசிறான் சார்… அவனுக்குதான் பேச தெரியுங்கிற மாதிரி…  அவன் இன்னாவேணா பேசிக்குவான்… நம்ம அதை கம்முன்னு கேட்டுக்கின்னு போயிடனுமா… அதான் அவனுக்கு நான் யாருன்னு காண்பிச்சிக்கினேன்” என்றவள் சீற்றமாய் சொல்ல சாரதியின் முகத்தில் புன்னகை ஒளிர்ந்தது.

“இதெல்லாம் நீ அந்த ஆட்டோடிரைவருக்காக பேசினியா… இல்ல எனக்காவா?!” கூர்மையான பார்வையோடு அவன் கேட்கவும் அவள் பதறி கொண்டு,

“இன்னா சார்? உன்னை போய் அப்படிலாம் சொல்லுவேனா… நீ என் முதலாளியாச்சே சார்… நான் அந்த ஆட்டோ டிரைவர் சோமாரியைதான் சொன்னேன்” என்றவள் சொல்ல,

சாரதிக்கு அவள் காட்டிய கோபமும் வேகமும் அவனை குறி வைத்து பாய்ந்தது என்பது புரியாமல் இல்லை.

“ரொம்ப பவ்யமா எல்லாம் நடிக்காதே… உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்”

“தெரிஞ்சும் என்னை போய் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிற பார்த்தியா சார்…  உனக்கு செம தில்லு”

அவளை புரியாமல் பார்த்தவன், “இப்ப என்ன சொல்ல வர்ற நீ?” என்க,

அவனை ஆழ்ந்து பார்த்தவள்,

“நீ என் முதலாளியா இருக்கிற வரைக்கும்தான் சார் நான் பவ்யமா நடிச்சிக்கின்னு நீ செய்ற அக்கப்போரெல்லாம் கம்முன்னு பாத்துக்கின்னு இருப்பேன்… இதுவே கல்யாணம் பண்ணி பொண்டாட்டியாயிட்டேன்… அப்புறம் கஷ்டம் உனக்குதான் சார்… நோண்டி நொங்கிடுத்திருவேன்…நல்லா யோசிச்சிக்கோ” என்றவள் கோபத் தொனியில் சற்றே மிரட்டலாய் சொல்லி முடிக்க,

சாரதி முகமெல்லாம் புன்னகை வழிந்தோடியது.

“இஸ் இட்… இதுக்காகவே உன்னை எப்படா கல்யாணம் பண்ணிப்போம்னு எனக்கு ரொம்ப ஈகரா இருக்கு…?” என்றவன் சொல்ல

அவள் ரொம்பவும் கடுப்பானாள்.

‘அடப்பாவி டேய்! எப்படி பாலை போட்டாலும் இவன் சிக்ஸரா அடிக்கிறானே… இவன் கூட முடியலயே… நேத்து கூட நல்லாத்தானே இருந்தான்… திடீர்னு ஏன் இவன் இப்படியெல்லாம் பேசி கடுப்படிக்கிறான்… அவசரப்பட்டு தங்கச்சிங்கள வேற கூட்டின்னு வந்து அவுட் ஹவுஸ்ல வைச்சிட்டோம்… இப்ப இன்னா பன்றது’ தீவிரமான சிந்தனையோடு இவள் காரை இயக்கி கொண்டு வர,

“ரொம்பல்லாம் யோசிக்காதே… யூ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்” என்றான்.

‘நாம மனசில நினைச்சது கூட இவன் கண்டுபிடிச்சிரானே… கடைசியில நம்மதான் சரண்டர் ஆகனுமோ?!’  இப்படியாக அவள் மனம் யோசித்து யோசித்து களைத்து போயிருக்க,

“வீரா காரை ஓரமாய் நிறுத்து” என்றான். அவள் காரை நிறுத்தியதும் அவள் புறம் இறங்கிவந்தவன், “சாவியை கொடு… நான் டிரைவ் பன்றேன்… நீ ரொம்ப டென்ஷனா இருக்க” என்றான்.

அவள் அவனிடம் வாக்குவாதம் ஏதும் புரியாமல் சாவியை கொடுத்துவிட்டு இறங்கி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அவன் காரை ரொம்பவும் மிதமான வேகத்தில் ஓட்டி கொண்டு வந்தான்.

அப்போது அவன் மனதில் ஓடி கொண்டிருக்கும் எண்ணத்தை அவளும், அவள் மனதை வாட்டி கொண்டிருக்கும் வேதனையை அவனும் அருகிலேயே இருந்தும் மனதளவில் புரிந்து கொள்ள முடியாத தூரத்தில் இருந்தனர்.

ஆனால் ஒருவரின் மனநிலையை இன்னொருவர் புரிந்து கொள்ளும் ஓரு நாள வரும். அப்போது இருவருமே நெருங்க முடியாத தூரத்தில் நிற்பர்.

அவளோ வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை.

அவனோ அவனின் மௌனத்தை அவ்வப்போது பார்த்து யோசித்தபடி வந்தவன் வீட்டிற்குள் காரை நுழைத்தி அதனை நிறுத்திவிட்டு இறங்க

“வீரா ஒரு நிமிஷம்” என்றபடி அவள் முன்னே வந்து நிற்க,
அவனை முறைத்து பார்த்து கொண்டு நின்றாள் அவள்!

அவன் சற்றும் அலட்டி கொள்ளாமல்,

“நீ கோபப்பட்டாலும் டென்ஷனானாலும் எதுவும் மாற போறதில்ல… நீயே இதை அக்ச்ப்ட் பண்ணிக்கிட்டா பெட்டர்… அப்புறம்… ஏதோ நோண்டி நொங்கெடுத்திருவேன்னு சொன்னேன் இல்ல… பார்க்கிறேன் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உன் திறமையை” என்றவன் சொல்லி அவளை பார்த்து விஷமமாய் புன்னகையித்துவிட்டு அகன்றுவிட,

அவன் சென்ற திசையை பார்த்து கொண்டே நின்றவள் அப்படியே சிலையாய் சில நொடிகள் நின்றுவிட்டாள். 

அவள் முகத்தில் சொல்லவொண்ணா துயரம். வாழ்கையில் இப்படியும் ஓர் சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை

இதுவரை கடந்துவந்த பிரச்சனையில் இது கொஞ்சம் பூதாகரமாய் இருந்தது. இதனை சமாளிக்கும் அளவிற்கான தெம்பும் தைரியமும் இல்லையென்பது போல அவள் மனம் பலவீனமாய் உணர தொடங்கியிருந்தது.

துவண்டபடியே அவள் வீட்டிற்குள் நுழைய, அதற்குள் தெய்வானை அவள் கவனிக்காமல் கோட்டை தாண்டிவிட்டதை பார்த்து பெரிய களேபரத்தையே உண்டாக்கிவிட்டார்.

வீராவோ அவர் பேச்சை துளியும் காதில் வாங்கி கொள்ளாமல் மௌனமாய் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அமலாவும் நதியாவும் இதனை கவனித்து, விழுந்து விழுந்து சிரித்தபடி, “சவுண்டு சரோஜாவே மேலு போல… இந்த மாமிக்கு” என்றபடி அறை கதவை மூட

அப்போதும் தெய்வானையின் குரல் நிற்காமல் கேட்டது.

“இந்த கொசு தொல்லை தாங்க முடியலக்கா ?!” என்று அமலா சொல்லி சிரிக்க

குறும்புத்தனமாய் பேசி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த தன் தங்கைளின் நிம்மதியை கெடுக்க விரும்பாமல் அவர்களிடம் எதை சொல்லாமல் மறைத்தவள்

இயல்பாய் இருப்பது போல பேசி சிரித்தாள். ஆனால் மனமோ சாரதியின் இந்த முடிவுக்கு பிண்ணனியில் எத்தகைய ஆபத்து ஒளிந்திருக்கிறதென்று தீவிரமாய் யோசித்து கொண்டிருந்தது. 

அதே நேரம் வீராவின் இந்த நிலைக்கு முக்கிய காரணகர்த்தாவான அரவிந்த் தன் படுக்கையறையில் தலையை அழுந்திபிடித்து கொண்டு அமர்ந்திருந்தான். விண்ணுவிண்ணென்று தலை வலித்து கொண்டிருந்தது. போதையின் தாக்கம்.

என்றாவது ஒருநாள் ஆபூர்வமாய் குடித்தால் இப்படிதான்! அதுவும் அளவுக்கதிகமாய்!

எல்லாமே வீராவை பற்றிய சிந்தனைதான். அதை தவிர வேறெந்த விஷயமும் அவனை பலவீனமாக்கிவிட முடியாது.

போதையில் முழுவதுமாய் ஒரு நாள் மயக்கத்தில் கிடந்தவனுக்கு இப்போது லேசாய் அந்த போதை தெளிய ஆரம்பிக்க,

கடைசியாய் சாரதியிடம் அலைபேசியில் பேசியதை நினைவுப்படுத்தி பார்த்தவனுக்கு பகீரென்றது. போதையில் தான் அவனிடம் பேச கூடாதவற்றையெல்லாம் பேசி தொலைத்திருக்கிறோம் என்று வெகுதாமதமாகவே அவனுக்கு உறைத்தது.