Aval throwpathi alla – 29

அவர்களின் திருமணம்

அமலாவும் நதியாவும் அந்த புத்தம்புது வண்ணமயமான ஆடைகளை வெகு ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்தனர். அதே நேரம் அந்த உடை எதற்காக என்ற குழப்பமும் அவர்கள் மனதில் தோன்றியிருந்தது.

“எதுக்கு க்கா இம்மா விலையில எங்களுக்கு டிரஸு…. நிஜமாவே இது எங்களுக்குத்தானா ?” என்று அவர்கள் சந்தேகமாய் கேட்க,

வீரா சிரத்தையின்றி, “ஹ்ம்ம்” என்று தலையசைக்க,

அவள் பார்வையும் எண்ணமும் அங்கே இல்லை. முகத்தில் ஒருவித சோர்வு. கிட்டதட்ட உணர்வற்ற நிலையில் அவள் அமர்ந்திருந்தாள்.

“அக்கா” என்று சின்னவள் வீரா தோள்களை குலுக்க,

தூக்கத்திலிருந்து விழித்தவள் போல இருவரையும் அதிர்ந்து பார்த்தாள் வீரா!

“என்னாச்சு க்கா உனக்கு?!” என்று இரு சகோதரிகளும் அஞ்சிய தோரணையில் அவளிடம் வினவ,

அவளால் உடனடியாய் பதிலுரைக்க முடியவில்லை.

அவள் இன்றல்ல. கிட்டதட்ட ஒரு வாரமாய் அப்படித்தான் இருந்தாள். ஆனாலும் தங்கைகளிடம் மட்டும் ரொம்பவும் இயல்பாக இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் அவர்கள் இல்லாத சமயங்களில் எதையாவது வெறித்துப் பார்த்து கொண்டிருப்பாள். சாரதியிடம் சம்மதம் தெரிவித்ததைக் குறித்து அவளுக்குள் பெரிய போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

ஆனாலும் அந்த முடிவை மறுக்கவோ மாற்றவோ அவள் யோசிக்கவில்லை. தீர்க்கமாய் யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருந்தாள்.

அதுவும் சாரதியின் குணநலன் பற்றியும் அவன் பிடிவாதம் குறித்தும் இத்தனை நாளில் அவள் நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள்.

அவன் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வரவும் மாட்டான். விட்டு கொடுக்கவும்மாட்டான்.

அதேநேரம் அவனை எதிர்த்துக் கொண்டாள், அது தன் தங்கைகளுக்கும் பிரச்சனையாய் முடிந்துவிடுமோ என்ற அச்சமே அவளைச் சம்மதிக்க வைத்தது. அதுவும் அரவிந்த் பேசியதை கேட்ட மறுகணமே,

தான் பிறரின் தயவில் அடைக்கலமாக வாழ்வதை காட்டிலும் சாரதியின் உறவை ஏற்று கொள்வதே உசிதமென்று தோன்ற,

உடனடியாய் ஒரு ஆவேசத்தில் அவனிடம் சம்மதம் சொல்லிவிட்டாள்.

ஆனால் இப்போது அவனைப் போன்ற ஒருவனைக் கணவன் என்ற உறவுமுறையில் பார்ப்பதை பற்றி யோசிக்கும் போதே குலைநடுங்கியது அவளுக்கு!

அதுவும் மறுநாள் திருமணம் என்ற பட்சத்தில் அவளால் அதற்கு மேல் இயல்பாக இருப்பது போன்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்க முடியவில்லை. அதுவும் தங்கைகளின் கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்லியே தீர வேண்டிய கட்டாயம். என்ன செய்வாள் அவள் ?

தன் சகோதரிகளை ஆழ்ந்து பார்த்து,

“டிரஸ் உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிகிதா?” என்று வினவினாள்.

“அதல்லாம் நல்லாதான் இருக்கு” என்று நதியா சொல்லிவிட்டு

“நீ இன்னாத்துக்கு ஒரு மாறிகீற… அத முதல சொல்லு ?” என்று கேட்கவும், “நல்லாதான் டி கீறன்” என்று வீரா பதிலளிக்க,

“பொய்” என்றாள் அம்மு அழுத்தமாக!

“ஆமா க்கா உனக்கு இன்னாவோ பிரச்சனை… எங்ககிட்ட சொல்லாம மறைக்கிற” என்றாள் நதியாவும்!

வீரா இருவரின் முகத்தையும் சற்றே தயக்கமாய் நோக்கி,

“பிரச்சனைனு எல்லாம் ஒண்ணும் இல்ல … ஆனா உங்க ரெண்டு பேர்கிட்டையும் ஒரு மேட்டர் சொல்லனும்…. அதான் எப்படி ” என்று இழுத்துக் கொண்டிருந்தாள்.

“இன்னா மேட்டரு… எங்க கிட்ட சொல்லறதுக்கு உனக்கு இன்னா தயக்கம்” என்று நதியா பார்வையாலேயே அவளை முற்றுகையிட்டாள்.

“நான் சொல்றேன்… ஆனா நீங்க என்ன தப்பா எடுத்துக்க கூடாது” என்றதும்,

“அய்யோ !! கடுப்பாக்காத க்கா… மேட்டரை சொல்லு” என்று இருவரும் ஆர்வமாய் தன் தமக்கையின் முகத்தை உற்று பார்த்து கொண்டிருந்தனர்.

அப்படி என்னதான் அவள் சொல்ல போகிறாள் என்று!

“அது… எனக்கும் சாரதி சாருக்கும்…” எச்சிலை விழுங்கியபடி, “நாளைக்கு கல்யாணம்” என்று சொல்லி முடித்து அவர்கள் இருவரின் முகத்தில் தென்பட்ட உணர்ச்சிகளை வீரா ஆராய்ந்து பார்க்க,

அவர்களோ அவள் சொன்னதை கேட்ட மறுகணமே ஷாக்கடித்த நிலையில் அப்படியே உறைந்திருந்தனர்.

அதேநேரம் அவர்களுக்கு இடையில் நடந்து கொண்டிருந்த சம்பாஷனையைக் கதவு வழியாக ஆர்வகோளாறில் ஒட்டுகேட்டு கொண்டிருந்த தெய்வானை கையில் வைத்திருந்த பாத்திரத்தை அதிர்ச்சியில் படாரென்று கீழே போட்டுவிட்டார்.

அந்த நொடி வீரா என்னவோ ஏதோவொன்று பதறிக் கொண்டு கதவைத் திறக்க,

“ஏன்ன்ன்ன்னா… இந்த கர்மத்தை கேட்டேளா?!!” என்று ஆரம்பித்து சாரங்கபாணியின் காதில் விஷயத்தை கடகடவென தெய்வானை ஓத,

அவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்!

வீராவை இருவரும் துச்சமாய் ஒரு பார்வை பார்க்க, அந்தப் பார்வையின் அர்த்தம் அவளுக்குப் புரியாமல் இல்லை.

தெய்வானை மேலும் தன் கணவனிடம்,

“உங்க அண்ணன் மவனுக்கு சுத்தமா மூளையே இல்லயான்னா? என்ன ஜாதியோ… குலமோ… இவளை போய் கட்டிக்க போறானாம்… கர்மம் கர்மம்… எல்லாம் ரத்தம்… புத்தி… அப்படியே இருக்கு” என்று புலம்பி தீர்க்க,

வீரா எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் வெறுமையாய் பார்த்து கொண்டு நின்றாள்.

ஆனால் நதியாவும் அமலாவும், “அந்த மாமி… ஓவரா பேசுது க்கா” என்று பொறும,

“ப்ச்… விடுங்கடி” என்றவள் கண்ணசைத்து அவர்களை உள்ளே வர சொன்னாள்.

அப்போது, “என்ன பத்திதான் ஏதோ பேசிட்டு இருந்த மாறி இருந்துச்சு” என்று சாரதி கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய

“கடன்காரன்! மூக்கில வேர்த்த மாறி வந்துட்டானே!”

தெய்வானை பதட்டத்தோடு தன் கணவனின் அருகாமையில் சென்று மறைந்து கொண்டுவிட்டார்.

அமலாவும் நதியாவும் வாயை மூடி சிரித்து கொண்டே, “மாமி சாரை பார்த்ததும் அப்படியே பம்முது” என்றாள்.

“ஏதோ ரத்தம்… புத்தினெல்லாம்… கேட்டுச்சு… யார பத்தி” என்றான்.

தெய்வானை சாரங்கபாணி இருவரின் முகத்திலும் பதட்டம் குடிகொள்ள,

சாரதி விடாமல் அவர்களை கூர்ந்து பார்த்தான்.

“ஒண்ணுமில்ல சார்… சும்மாதான் மாமி பேசிற்றுந்தாங்க” என்று வீரா பின்னிருந்து பதிலளிக்க,

அவன் பார்வை அவர்களை விடுத்து அந்த மூன்று சகோதரிகளின் புறம் திரும்பியது.

அவர்களை ஆழ்ந்து பார்த்தவன், “சரி அது போகட்டும்… நான் சொல்ல வந்தத சொல்லிடிறேன்….நாளைக்கு மோர்னிங்… ஷார்ப் டெனோ கிளார்க் ரெடியா இருங்க… ரெஜிஸ்டர் ஆபீஸ் போகனும்… ரைட்” என்க,

வீரா பதிலேதும் அளிக்காமல் தலையை மட்டும் அசைத்தாள்.

பின்னர் சாரதி அமலாவையும் நதியாவையும் பார்த்து,

“உங்க ரெண்டு பேருக்கும் டிரஸ் பிடிச்சிருக்கா? இல்லன்னா சொல்லுங்க… உடனே மாத்திடலாம்… நான் உங்க அக்காகிட்ட சொன்னேன்… உங்களையும் கூட்டிட்டு போய் எடுக்கலாம்னு… அவதான் வேண்டாம்னு சொல்லிட்டா” என்றதும் இருவரும் வீராவை பார்க்க,

அவள் தவிப்போடு தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

“வாட்… பிடிச்சிருக்கா இல்லையா?” என்று சாரதி அவர்களை நோக்கி அழுத்தமாய் கேட்கவும்,

“ஆன் பிடிச்சிருக்கு சார் ” என்று இருவரும் ஒரு சேர அச்சத்தோடு பதிலளித்தனர்.

“தட்ஸ் குட்… அன் ஒன் மோர் திங்… உங்களுக்கு தேவையான திங்க்ஸ் மட்டும் எடுத்துக்கோங்க… மேல என் பெட் ரூம் ஆப்போசிட்ல இருக்கிற ரூமை கிளீன் பன்ன சொல்லிருக்கேன்… அங்க ஷிப்ட் ஆயிடுங்க” என்றதும் வீரா பதறி கொண்டு,

“இல்ல சார்… இன்னைக்கு வேணாம்… நாளைக்கு” என்றாள்.

“ப்ச்… மார்னிங் ரெடியாகனும்ல… சொல்றதை கேளு… அங்க ஷிப்ட் ஆயிடுங்க” என்றவன் சொல்லிவிட்டு வெளியேற

அவன் பின்னோடு சென்ற சாரங்கபாணி,

“பார்த்தா” என்று சற்றே சீற்றமாக அழைத்தார்.

தெய்வானை கணவனின் கரங்களை பிடித்து தடுத்து,

‘ஏன்னா போற சனியனை வான்னு கூப்பிடிறேள்” என்று மெலிதாக சொல்ல,

சாரதி முறைத்தபடி, “பார்த்தா னு கூப்பிடாதிங்கனு எத்தனை தடவை சொல்றது” என்று கேட்டான்.

“அது இருக்கட்டும்… நீ முதல… நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு” என்றதும்,

“வேணா ன்னா… அவன் எதாச்சும் எடக்கு முடக்கா பேசுவான்” என்று தெய்வானை சாரங்கபாணியிடம் எச்சரிக்க,

“நீ சத்த நேரம் சும்மா இரு… நான் அவனான்ட கொஞ்சம் பேசனும்” என்றார்.

‘எப்படியோ வாங்கி கட்டிக்கட்டும், நமகென்னதுக்கு’ என்றபடி தெய்வானை நொடித்துக் கொண்டு ஒதுங்க

சாரங்கபாணியோ,

“ஏன்டா ? … நம்மவாளேயே… அழகா லட்சணமா ஒரு பொண்ணு கூட கிடைகலையாடா நோக்கு… போயும் போயும்” என்றவர் மேலே பேசாமல் உள்ளூர ஏதோ முனகினார்.

சாரதி அவரை ஆழ்ந்து பார்த்தான். சில நொடிகள் நிதானித்து,

“சித்தப்பா… அழகா லட்சனமான்னா… நம்மவா இல்ல… நிறையவாள்ள நான் கட்டிக்குவேன்… ஆனா நேக்கு பிடிச்சவா… வீரா மட்டும்தான்… உங்க அவாக்காக எல்லாம் நான் அவாள விட்டு தர முடியாது… நம்ம பாஷையில சொல்லனும்னா அவாதான் என் ஆம்படையாள்” என்று படபடவென பொறிந்தவன்,

“இதுக்கு மேலே வீராவை பத்தி நீங்க ரெண்டு பெரும் தரைகுறைவாபேசனீங்க… அப்புறம்” என்று நிறுத்தி அவன் பார்த்த பார்வையில் இருவரும் கப்சிப்பென்று வாயைமூடி கொண்டு உள்ளே சென்றுவிட்டனர்.

வாசலில் ஓரமாய் நின்று இந்த காட்சியை பார்த்த நதியாவும் அமலாவும் பூரித்து போய் அவசரமாய் அறைக்குள் நுழைந்து,

தனியே யோசனையில் அமர்ந்திருந்த வீராவிடம்,

“அக்கா… சாரதி சார் கெத்துனா கெத்து செம்ம கெத்து… எங்களுக்கு டபுள் ஓகே” என்றபடி இருவரும் போட்டி போட்டு வீராவின் கழுத்தை கட்டி கொண்டு அவளை மூச்சுதிணற வைத்தனர்.

அவர்களின் சந்தோஷத்தை பார்த்தவளுக்கு ஒரு பக்கம் நிம்மதி உண்டானாலும் அது நீடிக்குமா என்ற கலக்கமும் இருந்தது.

சாரதி புறப்பட்டு தயாராகி சோபாவில் அமர்ந்து பேசியை காதோடு வைத்து அளவளாவிக் கொண்டிருக்க,

அமலாவும் நதியாவும் புது உடையில் தயாராகி இறங்கி வந்தனர்.

அவன் உடனே அழைப்பைத் துண்டித்துவிட்டு,

“ரெடியா போலாமா?” என்று எழுந்து கொண்டு வினவ,

“ரெடி மாமா… போலாம்” என்றனர்.

முன்னே நடந்தவன் சட்டென்று அவர்கள் புறம் திரும்பி,

“என்னன்னு கூப்டீங்க ?” என்று கேள்வி எழுப்ப,

அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அச்சம் கொண்டனர்.

நதியா தயங்கி தயங்கி, “இல்ல… அக்கா வூட்டுகாரை மாமான்னு” என்றவள் இழுக்கவும் அவர்களைப் பார்த்து அவன் முறுவலித்தான்.

அவர்கள் இருவரின் முகத்திலும் புன்னகை அரும்ப சாரதி அவர்கள் தோள்களை தட்டி,

“சரி சரி… போய் கார்ல உட்காருங்க…” என்றான்.

அவர்கள் சென்றதும் சாரதியின் மனம் ஏதோ செய்தது. புதிதாய் ஓர் உணர்வு அவனை ஆட்கொள்ள, விழியோரம் துளியளவில் கண்ணீர் ஒதுங்கி நின்றது.

அதனைத் துடைத்து கொண்டிருக்கும் போது வீராவும் இறங்கி வந்தாள்.

தங்க நிற சரிகை தரித்த சிவப்பு வண்ண சேலையை அவள் உடுத்தி வர, அவள் மேனியும் அதனோடு சேர்ந்து தங்கமென மின்னி கொண்டிருந்தது.

அவள் வதனத்தில் அளவான அலங்கரிப்பும், தேகத்தில் ஆடம்பரமில்லாமல் சிற்சில தேவைக்குரிய ஆபரணங்களை மட்டுமே பூட்டி… திருத்தமான அழகு பாவையாய் வந்து நின்றவளை விழி எடுக்காமல் அவன் வியபுகுறியோடு பார்த்திருக்க,

“போலாமா சார்” என்று கேட்டபடி அழகு பதுமையாய் அவன் முன்னே வந்து நின்றாள் வீரா!

அவன் சிரமப்பட்டு தன்னிலை மீட்டுக் கொண்டு,

“யா போலாம்” என்று முன்னே சென்று

காரை ஸ்டார்ட் செய்ய வீராவும் அவன் தங்கைகளோடு பின்னிருந்த இருக்கையில் அமர முற்பட்டாள்.

“நீ முன்னாடி உட்காரு க்கா” என்றனர் இருவரும்!

வீரா அவர்களிடம் சமிஞ்சையால் மிரட்டி முடியாது என்று சொல்ல

“வீரா… கம் இன் ப்ரென்ட்” என்றான் சாரதி!

அவள் தவிப்போடும் கொஞ்சம் கடுப்போடும் மூச்சை இழ்த்துவிட்டு கொண்டு முன்னே சென்று அமர,

அவனோ அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவளை ஆரதீர ரசித்தபடி காரை இயக்கி கொண்டு வந்தான்.

அவன் பார்வையை உணர்ந்தவள், தவிப்போடு ஜன்னலைத் துளைத்து வெளியே பார்த்து கொண்டு வந்தாள்.

கார் ரெஜிஸ்டர் ஆபீஸில் சென்று நிற்க அங்கே சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தயார் நிலையில் கணேஷ் காத்திருந்தான். சாரதி காரை நிறுத்திவிட்டு அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

வீராவிற்கு பதட்டம் கூட சாரதியிடமோ திருமணத்திற்கு உண்டான எந்தவித அறிகுறியும் இல்லை. உடைபாணியில் கூட ரொம்பவும் இயல்பாகவே பேன்ட் ஷர்ட் அணிந்திருக்க,

“என்ன சார்? பார்மல்ஸ்ல வந்த்ருகீங்க… கொஞ்சம் டிரெடிஷ்னலா வந்திருக்கலாமே” என்றான் கணேஷ் !

“எதுக்கு ? முடிச்சிட்டு மீட்டிங் போகனும்ல… சீக்கிரம் பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்க சொல்லு… டைம் இல்ல… கிளம்பனும்” என்றான்.

அதற்கு பிறகு ஏற்பாடுகள் துரிதமாய் நடக்க,

அவர்களின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஏதோ முடிந்தது.

இருவரும் கையெழுத்திட,

அங்கிருந்த பதிவாளர், “ஓகே… இப்போ மாலையை மாத்திகோங்க…” என்றார்.

“அதெல்லாம் நெஸஸ்ஸரியா என்ன? சைன் போட்டா போதாதா?” என்று கேட்க பதிவாளர் தொடங்கி வீரா வரை எல்லோரும் அதிர்ச்சியாக கணேஷ் சாரதியின் காதோரம்,

“நான் அதுக்குதான் அப்பவே மாலை தாலி எல்லாம் வாங்கிட்டு வரன்னு சொன்னேன் சார்” என்றான்.

“ப்ச்… அதெல்லாம் தேவையில்ல கணேஷ்… இட்ஸ் ஜஸ்ட் பார் பார்மலிடீஸ்… சைன் போட்டா போதும்… மேரேஜ் ஓவர்” என்றவன் மேலும் பதிவாளரை பார்த்து, “அப்படித்தானே சார்” என்று கேட்க,

அவர் முகம் சுணங்கியது. “விளங்கிடும்” என்று வாயிற்குள் முனகிவிட்டு,

“அதெல்லாம் உங்க இஷ்டம் தம்பி” என்றதும்

சாரதி வீராவை பார்த்து புறப்படலாம் எனத் தலையசைக்க, அவளால் நடப்பவை எதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, அவளின் முகம் அதற்கான எந்தவித அறிகுறியையும் காட்டி கொள்ளாமல் மறுத்த நிலையில் இருந்தது.

சாரதி வெளியே வந்ததும் வீராவை பார்த்து, “எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு… நான் கணேஷோட ஆபீஸ் கார்ல போய்டிரேன்… நீ காரை எடுத்துட்டு தங்கச்சிகளை கூட்டிட்டு வீட்டுக்கு போயிடு” என்றவன் சாவியை அவளிடம் கொடுக்க அதனைப் பெற்று கொண்டவள்,

தீயாய் கனன்று கொண்டிருந்த கோபத்தை அவளுக்குள் மறைத்துக் கொண்டு தங்கைகளை அழைத்து கொண்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டாள்.

“ஓகே நம்ம போலாமா ?” என்று சாரதி கணேஷிடம் சொல்லி கொண்டிருக்கும் போது,

அரவிந்த் சீற்றமாய் அவன் சட்டையை பிடித்து கொண்டு,

“எங்கடா என் வீரா?” என்றான்.

கணேஷ் உடனடியாய் உள்புகுந்து அரவிந்தை விலக்கிவிட,

“ப்ச்… என்ன அரவிந்த் நீ?… கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா எங்க கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்தாவது போட்டிருக்கலாம்ல” என்று சொல்லி சாரதி அவனை பார்த்து எகத்தாளமாய் புன்னகையித்தான்.

அரவிந்த் அந்த நொடியே நொறுங்கிப் போனான். அவன் அதிர்ச்சியில் ஊமையாகிட சாரதி மேலும்,

“விடு தம்பி… வீரா இல்லன்னா மீரா… இவளை விட பெட்டரா வேற ஒரு பெட்டர்மாஸ் உனக்கு கிடைக்கும்… சியர் அப் மேன்” என்றபடி அவன் தோள்களை தட்டிக் கொடுத்தான்.

அரவிந்த் அவன் கரத்தை உதறித் தள்ளி ஆக்ரோஷமான நிலையில், “ஐ வில் கில் யூ” என்க,

“முடிஞ்சா ட்ரை பன்னு… ஆல் தி பெஸ்ட்” என்று அலாட்சியமாய் உரைத்துவிட்டு,

“கணேஷ் கிளம்பலாம்” என்றான்.

“மாட்டேன்டா. உஹும் .. நான் உன்னை கொல்ல மாட்டேன்… நீ உயிரோட இருந்து கதறனும்… கதற வைக்கிறேன்… மரணத்த விட கொடூரமான வலியை கொடுக்கிறேன் டா உனக்கு” என்றவன் சுடக்கிட்டு ஆவேசமாய் சவால்விட,

“டே… நீ இப்படி சவால் விடற நேரத்தில… கொஞ்சமாச்சும் உன் பிசினஸ பார்த்தனா உறுப்புடுவ” என்று சாரதி அலட்சிய தொனியில் சொல்லிவிட்டு, “வா கணேஷ்” என்று சொல்லி அங்கிருந்து புறபட்டுவிட்டான்.

ஆனால் அரவிந்தால் அங்கிருந்து ஓரடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. என்றாவது ஒரு நாள் வீரா தனக்கு உரித்தவளாகி விடுவாள் என்ற எண்ணம் இன்றோடு சாரதியால் மண்ணோடு மண்ணாய் போனதே!

அந்த தோல்வியை ஜீரணத்திக் கொள்ளுமளவுக்கான சக்தி அவனுக்கில்லை. அவன் உலகம் அங்கே அந்த நொடி தன் சுழற்சியை நிறுத்தி கொண்டுவிட்டது.

*****

சாரதியின் அலுவலகம்.

அவன் வேலையில் படுமும்முரமாய் முழ்கியிருக்க,

“சார் ரொம்ப லேட்டாயிடுச்சு” என்றான் கணேஷ்!

சாரதி தன் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு,”ப்ச்… இட்ஸ் ஜஸ்ட் நைன்” என்று அலட்சியமாய் சொல்ல,

“சார் இன்னைக்கு உங்களுக்கு… ப்ர்ஸ்ட் நைட்” என்று தயங்கி தயங்கி சொல்லி முடித்தான் கணேஷ்!

சாரதி அப்போது ஆர்வமாய் லேப்டாபில் இருந்து தலையை நிமர்த்தி, “ஓ !! அப்படி ஒன்னு இருக்கோ?” என்று முகவாயைத் தடவி யோசித்தவனுக்கு வீராவின் முகம் மின்னலடித்தது போல் கண்முன்னே தோன்றி மறைய,

அவனின் வேலைகள் யாவும் அவன் எண்ணங்களைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டன.

அந்த நொடி அவள் மட்டுமே முழுமையாய் அவன் கருத்திலும் நினைப்பிலும் நின்றாள். 

error: Content is protected !!