Aval throwpathi alla – 7

ஆணிவேரே சாய்ந்தது

ஐ பி எல் இருபது இருபது ஓவர் மேட்ச்…

பரபரப்பாய் அந்த தொலைக்காட்சியில் சூடு பறக்க ஓடி கொண்டிருக்க,

நதியா, அமலா, வீரா மூவரும் தீவிரமாக நகத்தை தின்று கொண்டு அந்த தொலைக்காட்சியில் ஆழமாய் தங்கள் விழிகளை பதித்திருந்தனர்.

அவர்கள் அதனை பார்த்து கொண்டிருந்தனர் என்று சொல்வதை விட அந்த போட்டிக்குள்ளேயே மூழ்கி  போய்விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

“அய்யோ டென்ஷனை ஏத்திறாங்களே! இன்னும் இரண்டே ஓவர்தானே இருக்கு” என்று நதியா சொல்ல,

“சே! ஆரம்பித்திலேயே பாலையெல்லாம் வேஸ்ட் பண்ணிட்டு… இப்படி லாஸ்ட் ஓவர் வரைக்கும் இழுத்துன்னு வந்து பிபியை ஏத்திறானுங்க… அய்யோ சொர்ணம் வர்ற டைம் வேறாயிடுச்சு… ” என்று அமலா படபடக்க ,

“வாயை வைச்சுக்கின்னு சும்மா இரேன்… எதுக்கு இப்போ அம்மாவை ஞாபகப்படுத்திற” என்று தன் தங்கையை தலையில் இடித்தாள் வீரா!

“பாருக்கா இந்த ஒவரும் டொக்கா வைக்கிறானுங்க… இன்னும் முப்பத்திரண்டு ரன்னு… போச்சு போச்சு… கப்பு நமக்கில்ல” நதியா அழும் நிலைக்கு போய்விட,

“வாய மூடுறி… கடைசி ஓவர்ல என் ஆளு தோனி சிக்ஸ் சிக்ஸா அடிச்சி சென்னையை ஜெயிக்க வைக்கலன்னா… என் பேரை மாத்தி வைச்சுக்கிறேன்” என்றாள் வீரா நகத்தை கடித்து கொண்டு!

“எது… வீராமாக்காளியை பத்ரகாளின்னு மாத்திக்க போறியா?!” என்று கேட்டு அமலா சிரிக்க,

“ப்பே” என்று வீரா முகத்தை சுளிக்கினாள்.

“அதுக்கெல்லாம் சேன்ஸே இல்ல… முப்பத்திரண்டு ரன்… வரிசையா ஒரு ஓவர் முழுக்க சிக்ஸடிக்கனும்” என்றாள் நதியா!

“இது டூவன்டி டூவன்டி…  லாஸ்ட் மினிட்ல கூட இன்னா வோணா நடக்கலாம்!” என்று வீரா சொல்லிவிட்டு நடிகர் பிரபு குரலில் தன் குரலை மாற்றி

“நம்பிக்கை… அதானே எல்லாம்” என்று சொல்ல அந்த மூன்று சகோதிரிகளும்  டென்ஷன் குறைந்து சிரித்தனர்.

அவர்கள் சிரிப்பொலியை பொறுக்க முடியாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த இடத்தை இருள் கவ்வி கொள்ள,

“அய்யோ… லாஸ்ட் ஓவர்… இப்படி கரண்ட்டை கட் பண்ணிட்டேன்னு… சோமாரி கஸுமாலம்” என்று வீரா சென்னை தமிழில் சரமாரியாய் திட்ட,

அமலாவும் நதியாவும், “எருமை பன்னி… பிசாசு” என்று தங்கள் பங்குக்கு மின்சார ஊழியனை பாரப்பட்சம் பார்க்காமல் மிருக ஜாதிகளோடு ஓப்பிட்டு கொண்டிருந்தனர்.

வீரா அப்போது தன் கூர்மையான செவியை தீட்டிவிட்டு, “யாரு வூட்டிலயோ டிவி ஓடிற சத்தம் கேட்குது… இல்ல?!” என்க,

“ஆமா க்கா… எனக்கும் கேட்குது” என்றாள் நதியா!

“வாங்கடி யார் வூட்டிலன்னு போய் பார்க்கலாம்” என்று மூன்று சகோதிரிகளும் மற்ற குடித்தன வீடுகளை அத்துமீறி எட்டி பார்க்க,

“ஏ… நம்ம சுகுமார் வூட்டிலதான்” என்று வீரா சொன்னதுதான் தாமதம்.

மூவரும் உடனடியாய் அவன் வீட்டிற்குள் படையெடுக்க சுகுமார் அதிர்ச்சியடைந்தான். 

“கலக்கிற சுகுமாரு… போஃன்லயே டிவியா?!” என்று வீரா சொல்ல மற்ற மூவரும் மேஜை மீதிருந்த பேசிக்கு இலகுவாய் அமர்ந்து கொண்டனர்.

“ஏ… ஏ… ஏ வெளியே போங்கடி” என்று சுகுமாரு நடுநடுக்கமாய் வாசலை எட்டி பார்த்து கொண்டு சொல்ல,

“இரு சுகுமார்… கடைசி ஓவரு மட்டும் பார்த்துட்டு போயிடுறோம்… ” என்றாள் வீரா!

“அதெல்லாம் வேண்டாம்… உங்கம்மா வந்தா என்னை ஒரு வழி பண்ணிடும்… ஒழுங்கா ஓடி போயிடுங்க” என்று சுகுமார் பதட்டப்பட,

“போவ முடியாது… என்னடா பண்ணுவ?!” என்றாள் வீரா துடுக்காக!

அவன் அதிர்ந்து நிற்க, “மவனே! நீ கம்னு கிடக்கல… அப்புறம் அம்மாகிட்ட நீ என் கையை பிடிச்சி இழுத்தன்னு சொல்லிடுவேன்” என்று வீரா சொல்லிவிட்டு தன் சகோதிரிகளை திரும்பி பார்க்க,

“ஆமா சொல்லிடுவோம்” என்று அவர்களும் ஒத்து ஊதினர்.

“அடிபாவிகளா! அப்படியெல்லாம் செஞ்சிடுதாங்கடி… உங்கம்மா என்னை வெலுத்து வாங்கிறோம்” என்றபடி சுகுமாரின் முகம் பதட்டமாய் மாற,

“அந்த பயம் இருக்கட்டும்” என்றவள் மேலும்

“போ… போய் வாசலில் நின்னு… எங்க அம்மா வர்றாங்களன்னு பாரு” என்றதும் அவன் முகம் கடுகடுவென மாறியது.

“நேரம்டா” என்று தலையில் அடித்து கொண்டு வாசலில் சென்று நின்றான் சுகுமார்!

அதற்குள் நதியா கூச்சலிட்டு, “அக்கா  சிக்ஸ்” என்று கத்த,

“ரொம்ப சந்தோஷப்படாதே… அடுத்த அடுத்த பால் சிக்ஸ் அடிக்கட்டும்” என்று வீரா முகத்தை தீவிரமாய் வைத்து கொண்டு அந்த பேசியை ஆழ்ந்து பார்த்தாள்.

“கடவுளே!!! சிக்ஸ் சிக்ஸ் சிக்ஸ்” என்று அம்மு வாய்க்குள்ளேயே முனக, அவர்கள் எண்ணம் போல அடுத்த அடுத்த பந்தெல்லாம் சிக்ஸாக பறந்தது.

ஓவரின் நாலாவது பந்தில் எதிரணி அந்த பந்தை தாமதித்து கொண்டிருக்க,

“வீரா” என்று சொர்ணத்தின் அழைப்பு கேட்டதும் மூவரும் பதட்டமடைந்தனர்.

“யோவ் கதவை மூடுயா?!” என்று வீரா  சுகுமாரை விரட்டிவிட்டு மூவரும் கிடைத்த இடத்தில் எல்லாம் ஒளிந்து கொள்ள,

சுகுமாருக்கு சொர்ணத்தை பார்த்த நொடி பீதியானது.

அவனுக்கு வியர்த்து கொட்ட சொர்ணம் தன் வீட்டில் தேடியபடி,

“ஒரு விளக்கு கூட ஏத்தி வைக்காம  எங்க போனாளுங்க… எனக்குன்னு வந்து வாச்சுக்குதுங்க பாரு… பெரிசில இருந்து சின்னது வரைக்கும்

ஒண்ணுக்கு கூட பொறுப்பேயில்ல” என்று புலம்பியபடி வெளியேறிவிட,

“ஏ லூசுங்களா! உங்க அம்மா உங்களை எல்லாம் தேடிட்டு வெளியே போயிட்டாங்க” என்று சுகுமாரு சொல்ல மூவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டு கொண்டு ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தனர்.

“தேடட்டும் தேடட்டும்… அவங்க தேடிட்டு திரும்பி வர்றதுக்குள்ள மேட்ச் முடிஞ்சிரும்” என்று சொல்லி கொண்டே வீரா வசதியாய் அமர,

(1 ball 4 run) ஒன் பால் போஃர் ரன் என்றிருந்தது.

“அக்கா நீ சொன்ன மாறியே நடந்திடுச்சுக்கா” என்று நதியா சொல்ல,

“இப்ப பாரு… என் தோனி ஒரு ஹெலிக்காஃப்ட்ர் ஷாட் அடிப்பான்” என்று வீரா பெருமிதமாய் சொல்லும் போதே பந்து மட்டையில்பட்டு ஸ்டேடியத்திற்கு மேலே பறக்க,

“ஏ அடிச்சிட்டான்… யாரு என் ஆளுல்ல?!” என்று தன் சுடிதார் காலரை தூக்கிவிட்டு கொண்டு வீரா பயங்கரமாய் விசிலடிக்க ஆரம்பித்தாள்.

அந்த சத்தம் அந்த இடத்தின் நிசப்தத்தை கிழித்தது.

“அய்யோ அக்கா அம்மா வந்திர போறாங்க”  என்று நதியாவும் அமலாவும் டென்ஷாக,

“அய்யோ ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்… உங்க அம்மா வந்திர போறாங்க” என்று சுகுமாரும் பதறினான்.

“போங்கடி… அம்மா வந்தாலும் பரவாயில்ல” என்று வீரா ஆர்ப்பரித்து விசிலடித்து எகிறி குதிக்க சுகுமாறு தலையிலடித்து கொள்ள,

அந்த நொடி சாலையில் பயங்கரமாய் ஓர் சத்தம் எழுந்தது.

சட்டென்று வீரா தன் ஆர்ப்பட்டத்தை நிறுத்தி கொள்ள,

வெளியே எழுந்த ஓல சத்தத்தில் சுகுமாரோடு சேர்ந்து மூவரும் வெளியே வந்தனர்.

அங்கே வீரா பார்த்த காட்சி அவளின் சப்தநாடிகளையும் ஓடுங்கி போக செய்தது. அவளின் இரத்த நாளங்களெல்லாம் இரத்த ஓட்டத்தை  உறைய செய்துவிட்டதோ என்றளவுக்கு இருந்தது அவள் மனநிலை!

இப்படி ஒரு காட்சியை பார்க்க கூடும் என்று இதுவரை கனவிலும் அவள் எண்ணியதில்லை.

சொர்ணம் அந்த சாலையில்…

குருதி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்.

அதுவும் உயிரற்ற நிலையில்…

பூமி அந்த நொடி தன் சுழற்சியை நிறுத்திவிட்ட நிலையில் நின்றவள் அடுத்த விநாடியே உயிர் பெற்று உச்சஸ்ததியில் கத்தினாள்.

“அம்ம்ம்ம்ம்ம்ம்மா” என்று!

அவள் கதறி கொண்டு அவரின் உடலை நோக்கி பாய்ந்து வர,

“ம்ம்ம்ம்மா… ம்மா” என்று மற்ற இரு சகோதிரிகளும் தன் தமக்கையோடு அழுது கொண்டு ஓடி வந்தனர்.

அவர்களின் ஓல சத்தத்தில் அந்த தெரு மக்களே மிரண்டு போயினர். 

சென்னையில் பல உயிர்களை காவு வாங்கிய தண்ணீர் லாரி எமதூதுவனாய் அன்று சொர்ணத்திற்கு வந்து சேர்ந்தது.

இருளடர்ந்த அந்த தெருவில் வேகமாய் வந்த அந்த தண்ணீர் லாரியை கவனிக்காமல் முன்னே வந்து சொர்ணத்தின் மீது மோதிவிட உடல் நசுங்கி அந்த இடத்திலேயே மரணித்தது அந்த பாவப்பட்ட ஜீவன்!

அத்தனை நேரம் ஆனந்தமாய் ஆரவாரித்து கொண்டிருந்த அந்த மூன்று சகோதிரிகளும் தன் தாயின் உயிரற்ற உடலுக்கருகில், “யம்மா யம்மா… எழுந்திறிம்மா… யம்மா… நீ இல்லாம எங்களுக்கு யாரும்மா” என்றவர்கள் கதறி துடித்து அழ ஆரம்பிக்க

அந்த குடித்தன வாசலில் இருந்த எல்லோரும் பச்சதாபத்தோடு, “அய்யோ பாவம்!” என்று வருத்தப்பட்டனர்.

“பாவி பையன்… இப்படி கண்ணுமுன்னு தெரியாம ஓட்டின்னு வந்து மோதிட்டானே!”

“இந்த பிள்ளைங்களுக்கு இனிமே யாரு”

“பொண்ணுங்கள எப்படியெல்லாம் பொத்தி பொத்தி வளர்த்துது சொர்ணம்… பாவம் இதுக்கு போய் இப்படி ஒரு முடிவு வரனுமா?!” இப்படியாக அங்கே சூழ்ந்திருந்தவர்கள் பேசி கவலைப்பட,

சில நிமிடங்களில் இந்த செய்தி அந்த தெருவின் முழுக்க பரவி

அந்த இடமே வேதனையில் மூழ்கி திளைத்தது.

அழுது அழுது தேம்பி கொண்டிருந்த அந்த மூன்று சகோதிரிகளை  அக்கம்பக்கத்தில் உள்ள எல்லோரும் தேற்ற முயல,

அது அத்தனை சுலபமான காரியம் அல்லவே!

சொர்ணத்தின் இழப்பு அத்தனை சாதாரணமாதா என்ன?

  அக்கம்பக்கத்தினராலேயே அந்த இழப்பினை லேசாய் எடுத்து கொள்ள முடியாத போது அவர்கள் மூவரால் எப்படி முடியும்?

அவர்களின் ஆணிவேரே சாய்ந்து போனதே!

உயிர் கொடுத்து… எல்லா உறவுமாக இருந்து பொத்தி பொத்தி பாதுகாத்த அந்த ஜீவன் இப்போது இல்லாமல் போனதே!

வீரய்யனும் விஷயம் தெரிந்து பதறி துடித்துதான் வந்தான். ஆனால் மொத்தமாய் குடித்துவிட்டு!

“சொர்ணா… என்னை விட்டுட்டு போயிட்டியே” என்றவர் கண்ணீர் வடிக்க எல்லோருமே அவனின் போதை நிலையை பார்த்து அருவருப்பாகினர்.

வீராவின் முகத்தில் அத்தனை கோபம்!

“சே! இப்ப கூட குடிச்சிட்டு வந்திருக்கியா?!” என்றவள் கேட்க,

“விஷயம் தெரிஞ்சி மனசு தாங்கலம்மா” என்று கண்ணீரோடு அவர் பதிலுரைக்க,

அவள் பார்வை வெறுப்பை உமிழ்ந்தது.

தன் மனைவியின் இறுதி சடங்கை கூட செய்ய முடியாமல் வீரய்யன் மொத்தமாய் போதையில் மூழ்கி கிடக்க,

சுற்றத்தார் எல்லாரும் அவனை கடிந்து கொண்டபடி, “சொர்ணத்திற்கு ஒரூ மகன் இருந்திருந்தா” என்று சொல்ல,

“அதான் நான் இருக்கேன் இல்ல… எங்கம்மாவுக்கு எல்லாம் நான் செய்றேன்” என்று தன் கண்ணீரை துடைத்து கொண்டு வந்து முன்னே நின்றாள் வீரா!

அங்கிருந்தவர்கள் சிலர் இந்த முடிவை ஏற்று கொள்ள முடியாமல், “நீயெல்லாம் செய்ய கூடாதாம்மா” என்க,

“ஏன் நான் செய்ய கூடாது ?!” என்றவள் விழிகள் சிவப்பேற கேட்க,

“இந்த மாதிரி சடங்கு எல்லாம் ஆம்பிள பையன்தான் செய்யனும்” என்றார் ஒருவர்!

“நான்தான் எங்கம்மாவுக்கு மகன் மக எல்லாம்… நான்தான் செய்வேன்” என்று வீரா தீர்க்கமாய் சொல்ல,

அவளின் வாதத்தையும் சிலர் ஏற்று கொண்டு அவளுக்கு ஆதரவாய் பேசினர்.

“எந்த காலத்தில இருக்கீங்க… இன்னைக்கு மவனுங்களுக்கு இருக்கிற உரிமை பொண்ணுங்களுக்கும் இருக்கு… வீராவை விட வேற யாரு சொர்ணத்துக்கு செய்ய முடியும்… நீ செய்யுடா கண்ணு” என்று பக்கத்து வீட்டுக்காரம்மா கமலம் சொல்ல அதற்கு மேல் யாரும் எதுவும் பேசவில்லை.

வீராவே முன் நின்று அத்தனை சடங்கையும் தன் தாயிற்காக செய்தாள். முழுமையாய் மனபூர்வமாய் செய்தாள். இப்போதைக்கு அவளால் தன் அம்மாவிற்கு அதை தவிர வேறென்ன செய்ய முடியும்?!

தன் மகள்களை எல்லாம் உயர்ந்த நிலையில் கொண்டு வர வேண்டும் என்ற கனவுகளை நிறைவேற்றி கொள்ளாமலே மறித்து போனது அந்த பாவப்பட்ட அத்மா!

எல்லாம் விதியின் செயல் என்று நொந்து கொள்வதை தவிர வேறுவழியே இல்லை.

சொர்ணம் தனக்கு வர போகும் மரணத்தை எதிர்பார்க்காமல்… சுலபமாய் உயிரை விட்டுவிட்டார்.

தன் மூன்று மகள்களுக்கும் பாதுகாப்பு கவசமாய் நின்றவர் இப்போது இல்லாமலே போய்விட,

இனி அந்த பெண்கள் மூவரு. இந்த சமூகத்தின் கோரப்பிடியில்தான் வாழ்ந்தாக வேண்டும்.

இங்கிருந்து வீராவின் வாழ்க்கை மொத்தமாய் தலைகீழாக மாற,

இதற்கு பிறகு அவள் வாழ்வில் எடுக்க போகும் ஒவ்வொரு முடிவுகளும் அவளின் விதியை நிர்ணயிக்க காத்திருக்கிறது.