Aval throwpathi alla – 9

Aval throwpathi alla – 9

பயங்கர காட்சி

இரவு நடந்த விஷயங்களை ஜீரணித்து கொள்ள முடியாமல் வீரா வேதனையில் உழன்று கொண்டிருந்தாள். எந்த பெண்ணுக்கும் நேர்ந்துவிட கூடாது ஒன்று.

அவள் தேகத்தில் ஒவ்வொரு அங்கத்தையும் வெட்டி துண்டு துண்டாய் போட்டிருந்தால் கூட இந்தளவுக்கு வலித்திருக்காது அவளுக்கு!

எந்நிலையில் உடைந்துவிட கூடாதென்று உணர்வுகளையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தவள் தன் தங்கைளிடம், “வூட்டூல நடந்த விஷயத்தை பத்தி யார்கிட்டயும் மூச்சுவிட கூடாது… புரிஞ்சிதா?!” என்றவள் அறிவுறுத்த,

“சரி க்கா” என்று ஒரு சேர தலையசைத்தனர் இருவரும்!

“சரி கிளம்புங்க” வீரா சொல்ல,

“இன்னைக்கு வேணா நாங்க உன் கூடல வீட்டில இருக்கட்டுமா?”  நதியா தன் அக்காவின் வேதனை நிரம்பிய முகத்தை பார்த்து கேட்க,

“ஆமாக்கா” என்று அமலாவும் வீராவின் கரத்தை பிடித்து கொண்டாள்.

“இதான் சாக்குன்னு ஸ்கூல்லுக்கு மட்டம் போட பார்க்கிறீங்களாடி” என்று வீரா முறைக்க,

“இல்லக்கா” என்று அமலா தயங்க,

“இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னிங்க… நான் பேச மாட்டேன்… விளக்குமாறுதான் பேசும்” என்றாள் வீரா!

“ரைட்டு விடு” என்று அமலா வடிவேல் பாணியில் சொல்லிவிட்டு புறப்பட,

நதியாவும் தன் தமக்கைக்கு கையசைத்துவிட்டு புறப்பட்டு சென்றாள்.

அந்த நொடியே வீடு முழுக்க ஒர் மயான அமைதியும் தனிமையும் பீடித்து கொள்ள வீராவின் முகத்தில் மேலோட்டமாய் ஓட்டியிருந்த புன்னகை தொலைந்து போனது.

அவளுக்கு அந்த தனிமை அப்போது தேவையாயிருந்தது.

தங்கைகள் முன்னிலையில் முடிந்தளவு தைரியமாய் அவள் காட்டி கொண்டாலும்  உள்ளூர அவள் உடைந்து நொறுங்கியிருந்தது அவளுக்கு மட்டுமே தெரியும்.

வீட்டின் கதவை தாளிட்டு கொண்டவள், எத்தனை நேரம் அழுதிருப்பால் என்று அவளுக்கே தெரியாது. வீரய்யன் எத்தனை மோசமானவனாக இருந்தாலும் தந்தை என்ற உறவின் மீது மதிப்பும் அன்பும் வைத்திருந்தாள்.

சிறு வயதிலிருந்து அப்பா என்ற எத்தனையோ அன்போடும் ஆசையோடும் விளித்திருக்கிறாள்.

ஆனால் அவையெல்லாம் ஒரே நொடியில் கொச்சைப்படுத்தபடுத்தப்பட்டுவிட்டது. அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. உடலெல்லாம் கூசி போக,  தன்னைத்தானே அருவருப்பாய் உணர்ந்தாள். தான் பெண்ணென்று காரணத்தினால்தான் இத்தனையும் என்று
தன் அழகையையும் பெண்மையையும் கூட வெறுக்க தொடங்கியிருந்தாள்.

எந்த அங்கங்களெல்லாம் அவளை பெண்ணாய் காட்டுகிறதோ அந்த அங்கங்களையெல்லாம்  துண்டித்துவிட்டால் கூட பரவாயில்லை என்றளவுக்கு அவள் மனநொந்து போயிருக்க,

விதி இன்னும் மிச்சம் மீதியாய்  அவளுக்கு  என்னவெல்லாம் யோசித்து வைத்திருக்கிறதோ?!

அது அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்!

ஆனால் இந்த வலியும் வேதனையும் வீராவை மொத்தமாய் மூழ்கடித்துவிடவில்லை. அப்படி அவளை எதுவும் அத்தனை சீக்கிரத்தில் மூழ்கடித்துவிடவும் முடியாது.

அதே நேரம் நடந்த மோசமான சம்பவங்கள் ஆறாத வடுவாய் அவள் மனதை நொடிக்கு நொடி அறுத்து கொண்டுதான் இருந்தது.

இருப்பினும் அதை அவள் முகத்திலும் நடவடிக்கையிலும் பிரதிபலிக்கவிடாமல் பார்த்து கொண்டாள்.

தன் வேதனை எந்த விதத்திலும் அமலா நதியாவின் மனநிலையை பாதிப்பதை அவள் விரும்பவில்லை. அவளின் மனதைரியம்தான் அவர்களின் பலம். அதை அவள் எந்தவிதத்திலும் தகர்க்கவிட கூடாது என்று தீர்க்கமாய் இருந்தாள்.

நாட்கள் மெல்ல மெல்ல நகர,

எப்போதும் போல் வேலை தேடும் படலத்தை அவள் தொடரலாம் என்று பார்த்தால், அதற்குமே பணம் தேவையாயிருந்தது. 

தன் அம்மாவின் சில்லறை சேமிப்புகளும் கூட கரைந்து கொண்டே போனது.

இனி எப்படி சமாளிக்க போகிறோம் என்றூ மனதில் யோசித்தபடியே தெரு குழாவில் தண்ணீரை பிடித்து கொண்டு அவள் வீட்டிற்குள் நுழைய,

அவளை பின்தொடர்ந்து ஒரு குரல் அழைத்து கொண்டே வந்தது.

அதனை அவள் கவனியாமல் நடக்க,
“வீரா” என்று இன்னும் சத்தமாய் அந்த  குரல் அழைக்கவும் துணுக்குற்று திரும்பினாள்.

அவளை பார்த்தாலே பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும் சுகுமார் நின்றிருக்க அவனை ஆச்சர்யமாய்  பார்த்தவள்,

“என்ன சுகுமாரு? என்னை பார்த்தாலே தெறிச்சி ஓடுவ… இன்னைக்கு நின்னு என் பேரை சொல்லி கூப்பிடிற” என்று கேட்க,

அவன் முகம் சட்டென்று சுணங்கியது.

“ஒரு விஷயம் கேட்கலாம்னு கூப்பிட்டேன்… ஏன் கூப்பிட கூடாதா?” இறங்கிய தொனியில் தயக்கமாய் அவன் கேட்க,

“ஹ்ம்ம்… கூப்பிடலாமே… இனிமே யார் வேணா எப்படி வேணா என்னை கூப்பிடலாம்… இனி யாரு உன்னை  கேட்க போறா… கூப்பிடு” பேசிக் கொண்டே குடத்தை வீட்டிற்குள் சென்று வைத்துவிட்டு திரும்பியவள்,

“ஆமா என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

அவள் பேசும் தோரணையில் அத்தனை விரக்தியும் வெறுமையும் பார்த்தவன்,

“எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு… ப்ச் உங்கம்மாவுக்கு இப்படி ஆயிருக்க வேண்டாம்” என்று சொல்லி அவன் வருத்தப்பட,

“இதான் நீ பேச வந்த விஷயமா?!” சலிப்புற்றது அவள் முகம்!

“அதில்ல… உன் அப்பாவை ஆளேயே காணோமே… அதான் கேட்கலாம்னு” அவன் தயங்கியபடியே கேட்கவும் அவள் விழிகள் கோபத்தில் பெரிதாகன.

“உனக்கு எதுக்குய்யா அந்த ஆளை பத்தி.. போயா வேலையை பார்த்துட்டு… பெரிசா வந்துட்டான் கேட்க” என்றவள் படபடவென பொறிந்து தள்ள,

“இப்ப எதுக்கு காண்டாவுர… நாளைக்கு ஒரு கட்சி மீட்டிங்… பத்து ஆள் தேவைப்பட்டுச்சு… அதான் உன் அப்பாவை கூட்டிட்டு போலாம்னு… சும்மா ஒண்ணு இல்ல… தலைக்கு இருநூறு ரூபா… ஒரு பிரியாணி பொட்டலம்… ஒரு குவேட்டரு” என்றதும் அவள் கடுப்பாகி,

“த்தூ… இதெல்லாம் ஒரு பொழப்பு… இதுக்கு வேற ஆள் சேர்க்க வந்துட்டான்… போயா” என்று சொல்லி கதவை படாரென மூடிவிட்டாள்.

அதன் பின்னர் சுகுமாரும் அவளை தொந்தரவு செய்யாமல் சென்றுவிட மாலையை எட்டிய சமயம் நதியாவும் அமலாவும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

நதியா அப்போது வீராவை தனியே அழைத்து வர,

“என்னடி? வந்ததும் வராததுமா?!” வீரா புரியாமல் வினவினாள்.

“நாளன்னைக்கு அம்முவோட பிறந்த நாளு” என்க,

“ஆமா இல்ல” என்று வீராவின் முகம் யோசனையாய் மாறியது.

“ஒவ்வொரு பிறந்த நாளைக்கும் என்ன கஷ்டம் இருந்தாலும் அம்மா புது துணி மணியெல்லாம் வாங்கி கொடுத்திரும்” என்று நதியா தயக்கத்தோடு சொல்ல,

“என்ன நதி? இப்போ நம்ம இருக்கிற நிலைமையில அதெல்லாம் முடியுமா?!” வீரா தவிப்புற கேட்டாள்.

“துணிமணியெல்லாம் விடுக்கா… சின்னதாவாச்சும் ஏதாச்சும் செய்யலாமே… இல்லாட்டி அம்மு அம்மாவை நினைச்சுக்கிட்டு வருத்தப்பட ஆரம்பிச்சிருவா” என்று நதியா சொல்ல,

“ப்ச்… நீ சொல்றதும் சரிதான்?!” என்றபடி

வீரா சில விநாடிகள் யோசித்துவிட்டு, என்ன நினைத்தாலோ?

“ஒரே நிமிஷம் தோ வந்திரேன்” என்று வெளியே ஓடினாள்.

“அக்கா எங்க போற?” என்று கேட்கும் போதே வீரா வெளியேறி சுகுமாறின் வீட்டின் கதவை தட்டியபடி,

“சுகுமாரு” என்று அழைக்க,

கதவை திறந்தவன் அவளை  அதிர்ச்சியாய் அளவெடுத்தபடி பார்த்தான்.

அவள் பேசுவதற்கு முன்னதாக அவன் முந்தி கொண்டு,

“அந்த திட்டு திடடிட்டு… இப்ப இன்னாத்துக்கு என் வீட்டு வாசலில் வந்து நிக்கிற” என்றவன் முறைப்பாக கேட்க,

“என்ன சுகுமாரு? சும்மா இரண்டு வார்த்தை சொல்லிட்டேன்… அதுக்கு போய்
கோச்சிக்கிறியே என்னவோ?!… என்னதான் இருந்தாலும் நம்மெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு இல்லையா?!” அவள் புன்னகையித்தபடி பேச,

“இது எப்போ?” அதிர்ச்சியாய் கேட்டான் அவன்!

“என்ன சுகுமாரு… நம்மெல்லாம் ஒரே ஏரியா… ஓரே தெரு… ஓரே வூடு” என்றவள் வார்த்தைகளை அடுக்க,

“இப்போ இன்னா வேணும் உனக்கு?” குழப்பமாய் கேட்டான்.

“அதான்… ஏதோ கட்சி மீட்டீங்… இருநூறு ரூபா பிரியாணி பொட்டலம்னு சொன்னியே”

“ஆமா… அதுக்கென்ன?”

“நான் வர்றேனே என்னையும் கூட்டினு போயேன்”

அவளை மேலும் கீழுமாய் பார்த்து, “உன்னையா?!” என்று ஏளனமாய் கேட்க,

“ஏன் நான் வர கூடாதா?!”

“ஆம்பிளையாளுங்க மட்டும்தான் தேவை” என்று சொல்லிவிட்டு, “வேணா உன் அப்பன் வந்தா?!” என்றவன் சொல்லும் போதே,

“அந்த ஆள பத்தி பேசாதே… என்னை கூட்டின்னு போவியா மாட்டியா?!” என்று அவள் தீர்க்கமாக கேட்டாள்.

“லூசா நீ… ஆம்பிளைங்க மட்டும்தான்னு சொல்றேன்”

“நான் ஆம்பிளையா மாறி வர்றேன்” என்றவள் சொன்னதை கேட்டு கலீரென்று சிரித்தவன்,

“அதெப்படி முடியும்… இதென்ன விட்டலாச்சாரியார் படமா?! நீ திடீர்னு ஆம்பிளையா மாறதுக்கு” என்க,

“அதெல்லாம் உனக்கு எதுக்கு? நாளைக்கு நான் வர்றேன்… நீ என்னை கூட்டிட்டு போற… இல்ல உன் மூஞ்ச பேத்திருவேன் ஆமா” என்று கையசைவோடு அவள் மிரட்டிவிட்டு செல்ல,

‘இவ என்ன லூசாயிட்டாளா?!’ என்ற பாவனையில் அவள் சென்ற திசையில் பார்த்திருந்தான்.

ஆனால் அவள் உண்மையிலேயே சொன்னதை செய்தாள். மொத்தமாய் ஆணாய் மாறிதான் வந்திருந்தாள்.

ஆண் போல் உடை நடை அதோடு மெலிதாய் அவள் முகத்தோடு பொருந்திய மீசையென தலை முதல் கால் வரை சந்தேகத்துக்கு இடமில்லாமல்

இளம் ஆணழகனாக!

வியப்பு அடங்காமல் சுகுமாரு மௌனநிலையில் அவளையே பார்த்திருக்க,

“என்ன சுகுமாரு போலாமா?!” என்றவள் ஆண் குரலில் கேட்க

அதிர்ச்சியாய் அவளை பார்த்தவன்,

“ஏ எப்படி?!” என்று வாயை பிளந்து கொண்டு வினவினான்.

“வீராவை நீ என்னன்னு நினைச்சே” என்று காலரை தூக்கிவிட்டு கொண்டாள் பெருமிதத்தோடு!

அவள் தலையை உற்று பார்த்தவன், “அந்த தொப்பியை கழட்டினா உன் புட்டு வெளிப்பட்டுறுமுடி” என்க,

“அதெல்லாம் வெளிப்படாது” என்று சொல்லி தொப்பியை கழட்டினாள்.

“இன்ன டோப்பா மாட்டினிக்கிறியா?!” அதிர்ச்சியாய் அவன் வினவ,

“வெட்டிட்டேன்” என்றதும் சுகுமாறின் முகத்தில் பேரதிர்ச்சி!

“லூசா நீ.. இருநூறு ரூபா பணத்துக்கோசரம் யாராச்சும் முடியை வெட்டிப்பாங்களா?!” அவன் அதிர்ச்சி மாறாமல் கேட்க,

இதே கேள்வியைதான் அவள் வெட்டும் போது நதியாவும் கேட்டாள்.

“காசுக்காக இல்ல… எனக்கே பிடிக்கல… என்னை அழகா காட்டிற எதையும் எனக்கு பிடிக்கல” என்றவள் இறுக்கமாக பதிலுரைக்க, சுகுமாருக்கு அந்த வார்த்தைகளில் இருந்து ஆழமான வலி பிடிபடவேயில்லை.

அந்த கட்சி மீட்டிங் நடந்த இடத்தை அவர்கள் சென்றடைந்ததும் அவசரமாய் முன் வரிசையில் சென்று வீரா அமர,

“இப்ப எதுக்கு முன்னாடி வந்து உட்கார்ந்த… நீ மாட்டிறதில்லாம என்னையும் சேர்த்து மாட்ட வைச்சிருவ போலயே” என்று சுகுமாரு பதறினான்.

“அதெல்லாம் மாட்ட மாட்டோம்… நீ சும்மா உட்காரு” என்றவள் அவனுக்கு தைரியம் சொல்ல அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“நீ எப்படி சொச்சமா ஆம்பிள குரலில் பேசிற” வியப்பு குறியோடு கேட்க,

“அதெல்லாம் நான் பல குரலில் பேசுவேன்… இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல” என்றாள்.

அவர்கள் உரையாடி கொண்டிருக்கும் போதே மீட்டிங் ஆரம்பிக்க,

மேடையில் இருந்த கட்சியின் பெருந்தலைகள் அவர்களுக்கே புரிந்தும் புரியாமலும் மைக்கை பிடித்து ஆவேசமாய் கத்தி கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த கத்தலுக்கு துளியளவும் மதிப்பளிக்காமல் பின்னாடி இருக்கும் குடிமக்கள் குடித்துவிட்டு அறை போதையில் கிடந்தனர். அதுவும் முக்கால்வாசி கூட்டம் தூங்கி வழிய வீரா சும்மா இராமல்,

விசலடித்து பெரும் சத்தத்தை எழுப்ப மேடையில் இருப்பவர் உட்பட எல்லோரும் அவளை கவனித்தனர்.

உறக்கத்திலிருந்த சுகுமாரு பதறி துடித்து எழுந்து, “ஏய்… இப்ப எதுக்கு விசலடிச்சி வம்பை வாலன்டியிரா நீ விலைக்கு வாங்கிற” என்று கேட்டவன் முறைக்க,

“தலைவர் பேசிறாருபா… அதான்” என்று கேலி புன்னகையோடு அவள் சொல்ல சுகுமாரால் அவளை முறைக்கத்தான் முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

அவன் கடுப்பாய் அமர்ந்திருக்க,  மீட்டிங் எப்படியோ சில கத்தல்கள் ஆவேசங்கள் குமுறல்களுக்கு பின் முடிவுரைக்கு வந்திருந்தது

“கரெக்ட்டா காசெல்லாம் கொடுத்திருவாங்க இல்ல”  வீரா அப்போது சுகுமாரை கேட்டு கொண்டே மீட்டிங் ஹாலை விட்டு வெளியே நடக்க,

“அதெல்லாம் கொடுத்திருவாங்க கொடுத்திருவாங்க” சுகுமாரு சலித்து கொண்டே பதிலளித்தான்.

“குவேட்டர் பாட்டிலுக்கு பதிலா காசு வாங்கி கொடுத்திரு” என்று வீரா சொல்ல அவளை கடுப்பாய் முறைத்து கொண்டே  சுகுமார் நடக்க,

அந்த சமயம் அவர்கள் முன்னிலையில் வந்து நின்ற ஒருவன், “தலைவர் உன்னை கூப்பிடிறாரு” என்று படுதீவிரமாய் சொல்ல,

“அப்பவே சொன்னேன்… கேட்டியா?!” என்று சுகுமாரு அவள் காதோரம் கிசுகிசுக்க அவள் முகம் யோசனையாய் மாறியது.

“என்னையா?” என்று குழப்பமாய் எதிரே நிற்பவனிடம் வினவினாள்.

“நீதானே சிவப்பு சட்டை… உன்னைதான்” என்க,

“ஏன் இந்த கூட்டத்தில நான் மட்டும்தான் சிவப்பு சட்டையா என்ன?” அவள் எகத்தாளமாய் கேட்க,

“என்ன நக்கலா? உன்னைதான்” என்றான் அவன்!

“போ போ… உன்னை நல்லா கும்ம போறாங்க” என்று சுகுமார் சொல்ல,

வீரா எதிரே நிற்பவனிடம், “இவரும் என் கூட வந்தவர்… இவரையும் நான் தலைவரை பார்க்க கூட்டிட்டு  போலாம்ல” என்றதும், “அடிப்பாவி” என்று சுகுமாரு அதிர்ச்சியானான்.

“கூட்டிட்டு போ” என்று முறைப்பாய் பதில் வர,

“வாடி இரண்டு பேரும் ஒண்ணா போவோம்” என்று சுகுமாரையும் அழைத்து கொண்டு சென்றாள் வீரா!

“உன்னைய கூட்டிட்டு வந்ததுக்கு என்னை செருப்பாலயே அடிச்சிக்கனும்” என்று சொல்லி கொண்டே அவன் நடக்க,

“வேணா கழட்டி தரவா” என்று வீரா சொல்ல அவன் பார்வையாலேயே வெறுப்பை உமிழ்ந்தான்.

அவர்கள் இருவரும் ரவுடிகள் பந்தோபஸ்த்தோடு நிற்கும் ஓர் வெள்ளை கார் அருகில் வர அதனுள் வெள்ளை வேட்டி சட்டையுடன் அமர்ந்திருந்த ஒருவர் வீராவை முறைப்பாய் பார்த்து,

“எதுக்கு மேடையில பேசிட்டிருக்கும் போது.. அப்படி விசிலடிச்ச… என்ன திமிரா?!” என்று மிரட்டலாய் அவர் கேட்ட நொடி சுகுமாருக்கு கதிகலங்கியது.

ஆனால் வீரா அசராமல், “என்ன தலைவா?! இப்படி கேட்ட… நீ இன்னாம கருத்தா பேசின… ஆனா இந்த புறம்போக்குங்கெல்லாம்” என்று குறிப்பிட்டு சுகுமாரை காண்பித்தவள்,

“பிரியாணி துன்னுட்டு தூங்கிட்டிருந்தானுங்க… அதான் எழுப்பி விட்டேன்… தலைவன் பேசும் போது தொண்டன் தூங்கலாமா?!” என்று வீரா மீண்டும் சுகுமாரை பார்க்க அவனுக்கு உள்ளூர நடுங்கியது.

ஆனால் அந்த வெள்ளைவேட்டிக்காரர் முகத்தில் புன்னகை அரும்ப,

“ஆமா எந்த ஏரியா என்ன?” என்று கேட்டார் வீராவை பார்த்து!

“என்ன தலைவா இப்படி கேட்டுட்ட… நம்ம ஏரியாதான்” என்று அவள் பதிலளிக்க,

அவளை குழப்பமாய் அவர் மேலும் கீழும் பார்த்து யோசிக்க சுகுமாரத்திற்குதான் குலை நடுங்கியது.

வீரா சற்றும் அலட்டி கொள்ளாமல்,

“என்ன தலைவா? அப்படி பார்க்கிற… உன் மீட்டிங்கெல்லாம் நான் ஒண்ணும் விடாம வந்திருவேன்… தெரியுமா?” என்று அவள் சொல்ல அவருக்கு உச்சிகுளிர்ந்து போனது.

‘இது உலக மகா நடிப்புடா சாமி’ என்று சுகுமார் மனதிற்குள் எண்ணி கொண்டிருக்க,

வீராவின் வெகுளியான முகபாவனைகளை பார்த்தவர் அவளை அதற்கு மேல் கேள்வி எழுப்பாமல்,

“நல்லா பேசிற தம்பி… நாளைக்கு நம்ம கட்சி ஆபிஸ் பக்கம் வா” என்று சொல்லியபடி ஐநூறு ரூபாய் பணத்தோடு ஒரு கார்டையும் நீட்டினார்.

“உனக்கு பெரிய மனசு தலைவா… ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லி வீரா சலாம் போட அவர் அவளை பார்த்து புன்னகையித்த மறுகணம்

அந்த கார் புழுதியை கிளப்பி கொண்டு அங்கிருந்து மறைந்தது.

சுகுமார் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

வீரா அந்த ஐந்நூறு ரூபாய் நோட்டை அவன் முகத்துக்கு நேராய் காட்டி,

“காசு பணம் துட்டு மணி மணி
காசு பணம் துட்டு மணி மணி” என்று பாவமாய் பாட அப்போதே இயல்பு நிலைக்கு திரும்பியவன்,

“ஏ வீரா… நீ செம… ” என்று வியப்பாய் சொல்லி அந்த ஐநூறு ரூபாய் நோட்டை ஏக்கபெருமூச்சோடு அவன் பார்க்க,

“பின்ன இந்த வீரான்னா சும்மாவா? நான்தான் என் காலேஜ்ல ஆக்டிங் மிமிக்ரி எல்லாத்திலயும் கிங்கு” என்று தற்பெருமை பேசி கொண்டே  நடந்தாள்.

“சத்தியமா… நீ மட்டும் ஆம்பிளையா பிறந்திருந்த… எங்கேயோ இருந்திருப்ப” என்று சுகுமார் சொல்லவும்,

“அந்த கொடுப்பனைதான் எனக்கில்லையே” என்று விரக்தியுற்றவள்,

பின்னர், “அதை விடு… நேரமாச்சு… தங்கச்சிங்க தனியா இருப்பாங்க… சீக்கிரம் காசை வாங்கிட்டு கிளம்பலாம்” என்று வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

தெரு விளக்குகள் அந்த சாலையை ஓளியூட்டி கொண்டிருக்க

அந்த வெளிச்சத்தில் வீராவும் சுகுமாரும் பேசி கொண்டே நடந்து வந்தனர்.

அவள் தன் தங்கை பிறந்த நாளுக்கு என்ன செய்யலாம் என்று ஆர்வமாய் விவரித்து கொண்டே வர,

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்…  இப்ப சீக்கிரம் நட…  போலீஸ்காரன் எவனாச்சும் இப்படி நடுராத்திரில நம்ம நடந்து போறத பார்த்தான்… அப்புறம் இருக்கிற காசையெல்லாம் புடுங்கிட்டு உட்டிருவானுங்க” என்று  சுகுமார் சொல்லி அவளுக்கும் பீதியை கிளப்ப,

இருவரும் அதன் பின்னர் வேகமாய் நடக்க தொடங்கினர். 

அந்த சமயத்தில்தான் அவர்கள் அந்த சாலையில் நடந்து கொண்டிருந்த  பயங்கர காட்சியை பார்த்து சிலையாய் சமைந்து நிற்க,

முதலில் விழிப்படைந்த சுகுமார்,

“இங்கே ஏதோ சம்பவம் நடக்க போகுது… வா திரும்பி வந்த வழியே போயிடலாம்” என்று உரைத்தான்.

ஆனால் வீரா கண்இமைக்காமல் அந்த காட்சியை பார்த்து கொண்டிருக்க,

“ஏ வீரா போலாம்” என்று சுகுமார் அவள் கரத்தை பற்றி இழுக்க,

“பாரு சுகுமாரு…. ஒத்த ஆளு சும்மா பத்து பேரை அசால்ட்டா சமாளிக்கிறான்… படத்திலதான் இந்த மாதிரியெல்லாம் நான் பார்த்திருக்கேன்… மெய்யாலுமே இவன் ஹீரோ போலயே” என்று தன்னை மறந்து அவள் வியந்து கொண்டிருந்தாள்.  அப்படி அவள் வியந்து கொண்டிருந்தவன் வேறுயாருமல்ல.
சாரதிதான்!

“ஏ வீரா… அவனுங்க எல்லாம் ரவுடி பசங்க… அவனுங்க நம்ம பக்கம் திரும்பிறதுக்கு முன்னாடி நம்ம எஸ்ஸாயிடலாம்” என்று சுகுமார் பதட்டத்தோடு சொல்ல,

வீராவும் நிலைமை உணர்ந்து  போய்விடலாம் என்று திரும்பிய சமயம் பார்த்து,

சாரதி பின்மண்டையில் தாக்கப்பட்டு, “அம்ம்ம்ம்ம்ம்மா” என்று கதறி கொண்டே தரையில் சரிந்தான்.

அவனின் அந்த கதறலை கேட்டவளுக்கு மனமெல்லாம் ஏதோ செய்தது.

ஏனென்று தெரியாமல் அவள் உள்ளம் பதிறி துடிக்க,  விவரிக்க முடியாத ஓர் உள்ளார்ந்த உணர்வு அவளை போகவிடாமல் தடைசெய்து நிறுத்தியது.

error: Content is protected !!